சென்ற பதிவின் நீட்சியாகவே இதை எழுதுகிறேன். முந்தைய நிலையில் எந்த மாற்றமுமில்லை. ராஜன் விடுவிக்கப்பட வேண்டுமென்பதில் எந்த நிபந்தனையும், ஐயமுமில்லை. இன்னும் வினவு கட்டுரை ஏன் வெளியிடவில்லை என்பது தெரியவில்லை. ராஜன் அதிகப்படியான தண்டனையை அனுபவித்துக் கொண்டிருக்கிறார். நிரூபிக்கப் படாத குற்றத்திற்காக. அதனால் அவர் விடுதலையாக வேண்டுமென்பது குறித்து எந்தத் தயக்கமுமில்லாமல் நாம் கோர முடியும். குழலி, விமாலாதித்த மாமல்லன், சவுக்கு ஆகியோரின் கட்டுரைகள் நேர்மையாகத் தெரிகிறது நான் படித்தவைகளில்.
இதில் பல தவறான கருத்துக்கள், தகவல்கள் இடம்பெறவும் வாய்ப்புண்டு, அதற்கு என் அறியாமைதான் காரணம் விருப்பு வெறுப்பு எதுவுமிருக்காது.
மற்றபடி ஃபேஸ்புக் விவாதத்தில் லீனா மணிமேகலை, ஷோபா சக்தி, ஜெயமோகன், சாருநிவேதிதா ஆகியோர் சின்மயிக்கு ஆதரவாகக் கருத்துக் கூறியதிலிருந்து இது இன்னும் வேறு வழியில் போய் அவர்கள் அணி எதிரணியும் கருத்து மோதலில் இறங்கியுள்ளன. லீனா மணிமேகலை-ஷோபா சக்தி கூட்டணி அவர்கள் எதிர்ப்பவர்கள் அரசியல் கருத்து வேறுபாடுகள் குறித்து என் சிற்றறிவுக்கு எட்ட வில்லை. ஜெயமோகன் பற்றியும் எனக்குத் தெரியவில்லை. அவர் இந்துத்துவாவை தத்துவ ஞானம் என்று எழுதுகிறார். அதற்கு பதிவர்கள் சிலர் கடுமையான எதிர் வினையை வைப்பார்கள் என்பது மட்டுமே எனது புரிதல். சின்மயி பார்ப்பனப் பெண் என்பதால் அவர் ஆதரவு தெரிவித்திருக்கலாம். நியாயமாக எழுதிய சில கருத்துக்களோடும் தொடர்பில்லாமல் 15 இலட்ச ரூபாய் கைதானவர்களைக் காக்க வசூலித்திருக்கிறார் என்று அவதூறு செய்திருக்கிறார். அடுத்து சாருநிவேதிதா ஏன் இக்கைதை ஆதரித்தார் என்றால், ராஜன் எப்போதும் அவரது பதிவை எடுத்து வரிக்கு வரி கீழ்த்தரமாக நக்கலடித்து வெளியிடுவார் எப்போது அந்தக் கடுப்பில் எதிர்வினையை வைத்திருக்கிறார். இதை சின்மயி ட்விட்டரில் பகிர்ந்திருக்கிறார். தமிழச்சி எழுதிய சாரு ஆன்லைன் - பெண்கள் ஜாக்கிரதை என்ற கட்டுரை சின்மயி அறிந்திருக்க வில்லை போல.
சின்மயி பல பொய்களைச் சொல்லியிருக்கிறார். அவர் பூர்விகம் உட்பட. அவர் மொத்தம் மூன்று வகையான வழக்குகளைப்போட்டிருக்கிறார். மந்திர மூர்த்தி என்பவர் திருமணம் செய்ய மறுத்ததால் ஆபாசப் படங்களை இணையத்தில் வெளியிட்டது, ட்விட்டரில் ஆபாசமாகப் பேசிய ஆறு பேர்கள் மீது, வேறொரு தயாரிப்பாளர் பணம் கொடுக்காதது குறித்து என. இதில் ட்விட்டரில் ஆபாசமாகப் பேசிய இரண்டு பேரை மட்டும் கைது செய்திருக்கிறார்கள்.
இது இப்போதைய நிலவரம். ராஜன் சில பதிவுகளைப் படித்திருக்கிறேன். தமிழ் வளம் மிக்க கவிதைகள் பார்ப்பன எதிர்ப்பு, ஜாதி எதிர்ப்பு, மத எதிர்ப்பு, சாமியார்கள் எதிர்ப்பு, அன்னா ஹஸாரே போராட்டத்தில் பங்கெடுத்தது, மேலும் தமிழ்நாட்டின் முக்கியப் பிரச்சனையாக இருந்த மீனவர் படுகொலை எதிர்ப்பு, மே 18 போராட்டம் இது குறித்தெல்லாம் எழுதியுள்ளார். இது அனைத்து பொதுநலம் சார்ந்து எழுதப்பட்டது. மற்றபடி திரைப்பட விமர்சனம், கிண்டல் பதிவுகள், சாருநிவேதிதாவைத் தழுவி எழுதப்பட்ட நக்கல்கள். அவ்வளவே அவர் பின்னூட்டங்களில் நக்கல் இருக்கும், சில அபத்தமாகவும் அருவருப்பாகவும் இருக்கும். குறிப்பாக இஸ்லாம் குறித்த விமர்சனங்கள் கீழ்த்தரமானவை. விமர்சனம் செய்யலாம் இந்த மொழி வெறுப்பை வளர்க்கும். சிபி செந்தில் குமார் மனைவியிடம் பேட்டி எடுப்பது போல ஒரு பதிவு ஒரு சிலருக்கு அது ஆபாசமாகத் தெரியும். ஆனால் அது அவரது மனைவியைக் கிண்டல் செய்வது போல எழுதப்பட்டதல்ல அவர் மனைவி சிபி செந்தில் குமாரை திட்டும் பாணியில் எழுதப்பட்ட நக்கல். ஆனாலும் சிலர் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்திருந்தனர். நண்டு நொரண்டு, ருத்ரன் போன்றவர்களின் தளத்தில் மரியாதையாகவும், பின்னூட்டமிட்டிருக்கிறார். பல பேரை மரியாதையின்றி நக்கலடித்திருக்கிறார். உதாரணமாக ஏதோ ஒரு பார்ப்பன எதிர்ப்பு பின்னூட்டத்திற்கு பெரியார் சரியாகத்தான் சொல்லியிருக்கிறார் என்பதை இப்படிச் சொன்னார். பெருசு சரியாத்தாஞ் சொல்லிருக்கு. என்று. இப்படி. சுருக்கமாக மிகுந்த பண்புடனும், மொழியாளுமையுடனும் பேசுவார், எடுத்தெறிந்தும் பேசுவார் கோயம்புத்தூர் குறும்பு எனும் பொருள்பட.
முக்கியமாக பதிவுலகில் அதிகமாக விவாதிக்கப்பட்ட, சந்தனமுல்லை விவகாரத்திலும், சாருநிவேதிதா விவகாரத்திலும் பாதிக்கப்பட்ட பெண்களுக்காகப் பதிவெழுதியவர் ராஜன். அதனால் அவரை செக்ஸிஸ்ட் என்றோ ஆணாதிக்க வாதி என்றோ சொல்ல முடியாது. பொது வாழ்க்கையில் இருப்பவர்களை வரம்பு மீறி வசவியதன் மூலமாக ராஜனின் மேற்கண்ட இயல்புகளை ஏற்றுக் கொள்ள, அந்த ட்வீட்களைப் பார்ப்பவர்கள் நம்ப மாட்டார்கள்.
இதனால் ராஜன் சின்மயி என்ற ஒரு பெண் மீது பாலியல் ரீதியில் பேசியிருக்க மாட்டார் என்று 99% நம்பலாம். அந்த 1 % ஜெயலலிதா உட்பட மற்ற பெண்கள் மீதான கருத்துக்களுக்காக. சின்மயி மீது ராஜனின் பாலியல் வசை தொடர்பான ட்வீட் ஒன்றும் இதுவரை இல்லை. இருக்கவும் முடியாது.
மேலும் பெண்கள் மீது சென்டிமென்ட் அதிகமென்பதால், ரேவதி, ஆதிரை (ராஜனின் மனைவி, குழந்தை) என்ற இரு பெண்களுக்காக ராஜன் விடுவிக்கப்பட வேண்டுமென்பது சின்மயி என்ற பெண்மணியின் மனசாட்சிக்கு விட்டு விடுவோம்.
மேலும் குழந்தையைக் குதறிக் கொன்ற கொலைகாரன் காவல்துறையால் சுட்டுக் கொல்லப்பட்டதையே எதிர்த்த நாம் இந்த அபத்தமான குற்றச்சாட்டிற்காக தனிப்பட்ட உத்தரவின் பேரில் சென்று கடமையைச் செய்ததைக் கடுமையாகக் கண்டிக்க வேண்டும்.
சின்மயி தரப்புப் பொய்கள்:
சின்மயி சொல்வது போலி ஐடிகள் மூலம் இழிவு செய்கிறார்கள் அதை எனக்கு டாக் செய்து ராஜனுடைய ட்விட்டருக்கும் அனுப்பி வைத்தார்கள் என்று கூறுகிறார். இதை ராஜன் என்று எப்படி முடிவு செய்தார் இதைத்தான் ராஜனும் தனது பதிவில் கேட்டிருந்தார். அவர்கள் செய்த அவதூறுக்காக ராஜனை ஏன் குறிக்க வேண்டும் என்பது புரியவில்லை.
இதற்கு சின்மயி பதிலெதிவும் சொன்னதாகத் தெரியவில்லை.
ராஜனின் பணி பறிபோகுமளவிற்கு அவர் என்னவகை மன ரீதியான உளைச்சலுக்கு சின்மயியை உண்டாக்கினார் என்பது கேள்விக்குறி.
அதிகாரம் அவருக்கு ஆதரவாகச் செயல்பட்டு அரை நாளில் கைது செய்யப்பட்டது குறித்து சொல்லத் தேவையில்லை. செய்யாத குற்றத்துக்கு பணி பறிப்பு, மன உளைச்சல் உட்பட சமூகத்தில் அவர் எதிர்காலம் உட்பட சின்மயி உலை வைத்திருக்கிறார். என்ன ஒரு கொடிய மனப்பான்மை.
ராஜனது குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாவிடில் வரதட்சணை வழக்கு, பாலியல் வன்கொடுமை வழக்குக்களைப் பயன்படுத்தி அப்பாவி ஆண்களைப் பழிவாங்கும் பெண்களில் ஒருவராகப் போகிறார் சின்மயி.
முதலில் நடந்த ட்விட்டர் உரையாடலில் சோகால்ட் தாழ்த்தப்பட்டவர்கள் என்று சொன்ன சின்மயிக்கு மீனா கந்தசாமி, தியாகு, ஏழர ஆகியோர் எடுத்துச் சொல்கின்றனர். மீனா தாழ்ந்தவர்களல்ல தாழ்த்தப்பட்டவர்கள் என்று சொல்லிக் கொடுக்கிறார். ஏழர அமெரிக்காவிலும், ஸ்ரீலங்காவிலும் போய் சோகால்ட் ரேஸிசம் என்று சொல்ல முடியுமா என்று கேட்கிறார். இதன் மூலம் சின்மயி புரிந்து கொண்டிருக்க முடியும்.
ஆனாலும் தொடர்ந்து இட ஒதுக்கீடு எதிர்ப்பு டிவீட்டுகிறார். இது உணர்ச்சி வசப்பட்டதாக வைத்துக் கொள்வோம். ராஜ்மௌலியின் தாழ்த்தப்பட்ட ஜாதித் தலைவர்கள் குறித்து டிவீட்டுகிறார்.. இதற்காக எதிர்ப்பு வருகிறது என்று முன்பே அறிந்திருந்தும் தொடர்ந்து இட ஒதுக்கீடு எதிர்ப்புக்காக பல டிவீட்டுகளை பகிர்ந்திருக்கிறார். இதைப் பார்ப்பன வெறியாகவே கருத முடியும் சின்மயி.
பல ட்வீட்களை சின்மயி அழித்து விட்டதாகக் கூறுகிறார்கள். அதையெல்லாம் சைபர் கிரைம் காரர்கள் நேர்மையுடன் தேடி எடுத்து விசாரித்து ஒரு முடிவுக்கு வர வேண்டும். இதில்தான் சின்மயியின் நேர்மையை நம்மால் அறவிட முடியும்.
மேலும் வேறொரு பத்திரிக்கையாளர் ராம் இவர் மீது வழக்குத் தொடரப்போவதாக அறிவித்திருக்கிறார்.
ஜனவரியிலிருந்து தமிழில் தன்னைத் தாக்கி தமிழில் பல ட்வீட்கள் வந்ததாகச் சொல்லும் சின்மயி ஏன் வந்தது என்று சொல்ல வில்லை. ஒரு வேளை தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிரான கருத்துக்களால் வந்திருக்கலாம்
ஹையங்கார் என்பது நீங்கள் நகைச்சுவைக்குப் போட்டதாக உங்கள் மற்ற டிவீட்களுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் ஏற்க முடியவில்லை.
மேலே நான் எனக்குத் தெரிந்த வரையிலெல்லாம் ராஜன் மீதான் நியாயத்தைச் சொல்லிவிட்டேன். உடனடியாக ராஜன் விடுவிக்கப்பட வேண்டுமென்பதில், அவர் பணியும் திரும்ப வழங்கப்பட வேண்டுமென்பதில் (வேலையில்லாமையின் சுமையை நன்கு அறிந்தவன் நான்) எனக்கு எந்த மாற்றுக் கருத்துமில்லை.
ராஜன் தரப்புப் பொய்கள்:
தன்மீது வந்த அவதூறு ட்விட்டர்களை ப்ளாக் செய்திருக்கிறார். வெவேறு ஐடிக்களில் வந்து தொல்லை கொடுப்பதாகவும் சொல்லியிருக்கிறார்.
சின்மயி #TNFisherman இல் சேராததற்குக் காரணத்தை சொல்லியிருக்கிறார். அதில் அவரால் ப்ளாக் செய்யப்பட்டவர்கள் இருப்பது மட்டுமல்லாமல், பல தலைவர்கள் கேவலமான முறையில் விமர்சிக்கப்பட்டிருந்ததால் அதில் தன் பெயரும் இணைக்க விருப்பமில்லை எனவும் தனிப்பட்ட முறையில் ஆதரவைத் தெரிவித்துக் கொள்வதாகவும் சொல்லியிருக்கிறார். இதற்கு தமிழர்களுக்கு எதிரானவள் சின்மயி என்று தன்னை இழிவு செய்தார்கள் என்கிறார். சின்மயி.
#அசிங்கப்பட்டாள்சின்மயி
வந்த காரணம்: சின்மயி ராஜன் மீது வன்மம் கொண்டதற்காக ராஜனும் மற்றவர்களும் சொல்லும் ஒரு காரணம் மஹேஸ்மூர்த்தி என்ற ஹிந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழின் நிருபர் பிரபலங்கள் குறித்து ஒரு கட்டுரையை எழுதியிருந்தார். அதில் மக்களைக் கவர்ந்த பொழுதுபோக்காளர்கள் என்ற பட்டியலில் நான்காவாதாக சின்மயியும், ஐந்தாவதாக ராஜன் லீக்ஸ் - ஐயும் குறிப்பிட்டிருந்தார். இதனால் சின்மயி ராஜனின் பெயரை நீக்கச் சொல்லி மகேஸிடம் சண்டை போட்டார் என்கிறார்கள். இது முழுவதும் உண்மையல்ல.
சின்மயி அவருடன் சண்டையிடக் காரணம் வேறு. அதில் ஷ்ரேயா கோஷல், சின்மயி ஆகியோரை (ப்ளாக், ட்விட்டர் முகவரிகளை) ப்ளாக்கர்கள், ட்விட்டர்கள் வகையில் வரிசைப்படுத்தியிருந்தார் மகேஸ்மூர்த்தி. ஷ்ரேயா கோஷல் தனது பெயரில் இருந்த இணையத்தளம் தன்னுடைய சொந்தத்தளமல்ல தனது ரசிகர்களால் நடத்தப்படுகிறது என்று மகேஸ் மூர்த்திக்கு மென்கடிதம் எழுதினார். பின்பு ஷ்ரேயாவின் ப்ளாக்கை அந்தக்கட்டுரையிலிருந்து மகேஸ் நீக்கிவிட்டார். சின்மயிக்குக் கொடுத்திருந்த வரையரறையில் சின்மயி பாடகர் எனற முறையில் பிரபலமானவர் என்பதை விட ட்விட்டரில் எழுதி பிரபலமானவர் என்று எழுதியிருந்தார். இதைத்தான் சின்மயி எதிர்த்தார். அதே போல் ராஜனை விட 10 மடங்கு அதிகம் வாசிக்கப்படும் மதன் கார்க்கி, வைரமுத்து ஆகியோரின் தளத்தை ஏன் குறிப்பிடவில்லை என்று கேட்டிருக்கிறார். மகேஸ் அது என்னுடைய சொந்தக் கட்டுரை அதனால் நீக்க முடியாது என்று சொல்லியிருக்கிறார். (ராஜனை நீக்கும்படி தன்னிடம் கேட்டதாகவும், பல ட்வீட்களை சின்மயி அழித்து விட்டதாகவும் மகேஸ் சொல்கிறா. சின்மயி அழிக்க வில்லை என்கிறார்.) அந்தக் கட்டுரையின் கருத்துரைகளைப்படித்தால் தெரியும் அது ஒரு தவறாக எழுதப்பட்ட கட்டுரை, ராஜனே சொல்லியிருக்கிறார் 7 படங்களுக்கு மட்டுமே விமர்சனம் எழுதியிருக்கும் தன்னை எப்படி சேர்த்தார் என்று தெரியவில்லை என.
தன்னைப் பற்றி பாடகராக இல்லாமல் ப்ளாக்கில் பிரபலமானவர் என்பதை சின்மயி ஏன் எதிர்க்கக் கூடாது ? இதில் சின்மயியின் வன்மம், பிரபலம் என்ற திமிர் இருக்கிறதா ? இதில் சின்மயியின் பேச்சைக் கேட்டு அதை நீக்காததால் #அசிங்கப்பட்டாள்சின்மயி என்று அவரைக் கிண்டலடித்திருக்கிறார்கள் இங்கே ராஜன் சின்மயி தன் மீது வெறுப்புடன் இருப்பதால்தான் அதை எதிர்த்ததாகத் தவறாகப்புரிந்து கொண்டிருக்க வேண்டும். அதற்கு அசிங்கப்பட்டாள்சின்மயி# என்று டாக் தொடங்கி கிண்டலடித்திருக்க வேண்டும். அந்த டாக் உடன் ராஜனுட மற்றவர்களின் சின்மயி மீது தொடுத்த ஆபாச ட்வீட்களுக்கும் சேர்த்து ராஜன் மீது சின்மயிக்கு ஐயம் வந்திருக்க வேண்டும். இது என் கணிப்பு. ராஜன் தெரிந்து செய்தாலும் தெரியாமல் செய்திருந்தாலும் இது பெண் மீதான தாக்குதல்தான்.
இன்னொன்று சின்மயி மீனவர்கள் மீனைக் கொல்வதால், சிங்கள ராணுவம் மீனவர்களைக் கொல்லலாம் என்று சொன்னார் என்பது மிகப்பெரிய பொய். வேறொரு சந்தர்ப்பத்தில் சின்மயி மீன்களைக் கொல்றது மட்டும் பாவமில்லையா என்று கேட்டதை ராஜன் சும்மா கிண்டலுக்கு டிவிட்டியதே "மீனவர்கள் மீன்வர்களைக் கொல்கிறார்கள். அதனால் சிங்கள ராணுவம் மீனவர்களைக் கொல்கிறது" என்ற அந்த டிவிட். அது உண்மையல்ல. ஆனால் அதை ஃபோட்டோ ஷாப் செய்து உண்மை என்று பரப்பி விட்டார்கள். அதை இங்கே விமலாதித்த மாமல்லன் பதிவில் காணலாம். என்ன வக்கிரமான எண்ணம் இது ? இதை இன்னும் பலர் நம்புகின்றனர். பரப்புகின்றனர்.
கார்ட்டூனிஸ்ட் பாலா அது உண்மையா இல்லையா என்று கேட்காமலேயே தமிழர்கள் முகத்தில் காறித்துப்பிய சின்மயியை கண்டிக்கிறேன் என்று போட்டு விட்டார். இப்படி சின்மயி தமிழர்களுக்கு எதிரானவர் என்று கருத்து பரப்பப்பட்டது.
இன்னொன்று அதை உண்மையா என்பதை தமிழ் மான் என்பவர் கேட்க, (இல்லை என்பதை ஒவ்வொருத்தருக்கும் தனித்தனியா பதில் சொல்லணுமா என்ற பொருள்பட) உங்களுக்கு தனியா டாக் பண்ணி சொல்லணுமா என்று கேட்டிருக்கிறார். தன் மீது தவறான கருத்து பரப்பப்படுகிறது என்று ஒரு சின்மயி போட்டிருந்த போஸ்ட்டின் கீழே இதை அவர் கேட்டார். இல்லை என்பதைத்தான் சின்மயி அப்படிச் சொல்லியிருக்கிறார். அவர் பல இடங்களில் இதைக் கேட்டதாகவும் சொல்லியிருக்கிறார். இதைத் தவறாகப்புரிந்து கொண்டு சின்மயி ஆமாம் என்று சொன்னாதாக ஒரு ஸ்க்ரீன்ஷாட் எடுத்து பல பேருக்கு டாக் பண்ணி விட்டார் அவர். அவர் புகாரளித்ததே தான் மீனவர்கள், தமிழர்கள், ஈழத்தமிழர்களுக்கு எதிரானவர்கள் என்று சிலர் சித்தரிக்கிறார்கள் என்றுதான். அதைத்தானே இன்னும் செய்கிறார்கள்.
தாழ்த்தப்பட்டவர்கள் குறித்து இவர் சொன்னது உண்மை, ஆனால் மீனவர்கள் குறித்து சொல்லப்பட்டது முழுப்பொய். ஒரு கொலை செய்தவன் மீது 3 கொலை செய்ததாகச் சொல்வது போல.. ராஜன் மீது சொல்லப்பட்ட அவதூறு போன்றதே இதுவும். இருப்பினும் இருவரும் சமமல்ல என்பதும் சரிதான். எப்படி ராஜனின் சில ட்வீட்களை மட்டும் வைத்து அவரது இயல்பைத் தீர்மானிக்க முடியாதோ அது போலத்தான் சின்மயிக்கும். இணைய ஊடகங்களும், தினத்தந்தி போலத்தான் இது போன்ற பொய்ப்பரப்புரைகள் சின்மயி மனிதநேயமற்றவர் என்ற பிம்பத்தை காலத்திற்கும் ஊன்றி விடும். அதனால் இந்தப் பொய்யை நம்பக்கூடாது
பெண்கள் மீதான வன்மம்
அதே நேரம் இன்னொன்றையும் நான் முக்கியமாகப் சொல்ல வேண்டியுள்ளது. ராஜனுக்கு ஆதரவு பெருகி இருப்பதால், அரசாங்கத்தை எதிர்ப்பவர்கள் மட்டுமல்லாமல், பெண்களை இழிவு செய்கிறவர்கள், பெண்ணியம் பேசுகிறவர்களைக் கிண்டல் செய்கிறவர்கள், கற்பு வேண்டும் இல்லையென்றால் நீதி கிடைக்காது, பெண்கள் கிண்டல் செய்வது என்னுரிமை, அவள் மட்டும் யோக்கியமா என்ற கருத்துக் கொண்டவர்களெல்லாம் கிடைத்த சந்தில் சின்மயி மீது வன்மத்துடன் ராஜனை ஆதரிக்கிறேன் என்று கூட்டத்தில் சேர்ந்திருக்கிறார்கள். இவர்களின் கருத்துக்கள் சின்மயியின் பின்புலம், அவரது பழிவாங்கும் வெறி, பொய் ஆகியவைகளைத் தவிர்த்து, சின்மயி ஒரு பெண் என்ற ரீதியில் மட்டும் இழிவு செய்கிறார்கள். இது சின்மயி அல்லாத வேறு எந்தப்பெண் பாலியல் வன்கொடுமைக்கு எதிராக காவல்துறையை நாடி இருந்தாலும் எதிர்கொள்ள வேண்டியவையாகும். சின்மயி ஓவரா சீன்போடறா என்பது போலவும், கற்பில்லாதவள் நீதி கேட்கக்கூடாது என்ற கருத்துக்களை இவர்கள் சொல்கிறார்கள்.
ஆண்களால் பாலியல் ரீதியாகப் பெண்களைக் கொச்சைப்படுத்துவதற்கு பெண்களின் தவறான கருத்தே காரணம் என்ற ஆபத்தான கருத்து முன் வைக்கப்பட்டிருக்கிறது. இது போன்ற கருத்துள்ள பேர்வழிகளை ராஜனே எதிர்த்திருப்பார். என் அம்மா, சகோதரிகள், உறவினர் பெண்கள் அனைவருமே இது போன்ற கருத்துக்களை வெளியிடக்கூடியவர்கள். கிராமத்திலிருக்கும் உயர்த்தப்பட்ட ஜாதிப் பெண்கள் அனைவரின் இயல்பும் இது. இது தவறுதான் என்றாலும் பாலியல் தாக்குதலுக்கு இது ஒரு நியாயமான காரணமாக ஏற்றுக் கொள்ள முடியாது. எனது நண்பனொருவனின் தந்தையார் திகவில் இருந்தவர் அவன் வீட்டிலும் இதே நிலைதான்.
மீனா பார்ப்பனீய எதிர்ப்பு பேசியதால் பாலியல் ரீதியான மொழியில் தாக்கப்பட்டார், சின்மயி பார்ப்பனியம் பேசியதால் தாக்கப்பட்டார். இதே போல் ஃபேஸ்புக்கில் நிலவுமொழி செந்தாமரை என்ற பெண்ணும் ஜாதி எதிர்ப்புக்காகத் தாக்க்ப்பட்டார். இப்படிப் பல பேர் காரணங்கள் வேறு வேறாக இருந்தாலும் அவர்கள் பெண் என்பதால் மட்டுமே இதை எதிர்கொள்ள நேர்ந்தது. மேலும் இங்கே சின்மயியை இழித்தவர்கள் கோபத்தில் கொந்தளித்ததாகத் தெரியவில்லை, அவரைக் கிண்டல் செய்ய ஒரு டாக் ஆரம்பித்து அதில் கண்டபடி செய்திருக்கிறார்கள். இதில் தாழ்த்தப்பட்ட, அறியாதோரின் அடித்தட்டு மக்களின் வசவு மொழியன்று நான் கண்டது, முற்போக்குவாதிகளின் ஆணாதிக்க வன்மம் மட்டுமே.
அப்படிப்பார்த்தால், சிங்கள மாணவர்களைத் திருப்பி அனுப்பிய ஜெவைக் கண்டித்து வரைந்த கார்ட்டூன் சரி. கனிமொழி ஊழல் செய்ததால் அவர் மீதான கருத்துக்கள் சரி என்றெல்லாம் சொல்லிக் கொண்டே போகலாம். போர் நடந்தால் மக்கள் சாவது இயற்கைதான் என்று சொன்ன ஜெயலலிதா ஈழ்த்தாயாக மாற்றப்பட்டார். எல்லோரிடமிருந்து பெரிய பாலியல் ரீதியான தாக்குதல் வரவில்லை. அது போல ஆபாசமாக சின்மயியை ஏசாமல் இருந்திருந்தால் அவருக்கு எதிராக கேட்டிருக்கலாம். ஆபாசமாகப் பேசிவிட்டு அதை நியாயப்படுத்த தலித், தமிழ் என உணர்ச்சி அரசியலின் பின்னர் ஒளியக்கூடாது.
ராஜன் மட்டுமே சின்மயி மீது பாலியல் மொழியில் தாக்குதல் செய்யவில்லை தவிர மற்றவர்கள் செய்திருக்கிறார்கள். ராஜனின் நண்பர்களாக இருந்தவர்கள் இது போலப்பேசியதற்கான ட்விட்டுகள் இருக்கின்றன. இதற்காக ராஜனைக் குற்றவாளியாக்கியது மன்னிக்க முடியாதுதான்.
அவரது பதிவிலும் இது போல் சிலர் பின்னூட்டமிடுவார்கள். அதுபோலவே ட்விட்டரிலும் சிலர் இருப்பார்கள் போலத் தெரிகிறது. இவைகளெல்லாம் கோபத்தில் வெளிப்பட்ட உணர்ச்சியில் தெரியாமல் வெளிவந்த கெட்ட வார்த்தைகள் அல்ல. பெண்கள் மீது ஆண்களுக்கு இருக்கும் மதிப்பீட்டில் வருகின்றவை. அதனால்தானே அம்மாவை கடலைக்கு யூஸ் பண்ணிக்கலாம் என்று பேச வைக்கிறது. திரைப்படங்களில் பார்த்தால், நாயகனின் அம்மாவைப் பற்றித் தவறாகப் பேசினால் அவன் கொந்தளித்து சண்டை போடுவது போலவும், நாயகியின் தங்கையையோ, அம்மாவையோ பற்றிப் பேசுவது நகைச்சுவையாகவும் எடுத்துக் கொள்ளப்படுகிறது. (எ.கா ஃபிகரோட சேர்ந்து அவ அம்மாவையும் உசார் பண்ணிருப்பேன் வகையில்)
இது போன்றவர்களைச் சிரிக்க வைப்பதற்காக ராஜன் எழுதியிருக்கிறார் என்பது என்ன முரண் நகை. ஜெயலலிதாவின் கார்ட்டூனைக் கண்டித்த கையோடு அதை நையாண்டி செய்தது மட்டுமே உலகிற்குத் தெரிந்திருக்கிறது என்பது வேதனை.
இந்த வழக்கு மிகவும் சிக்கலாக எந்தப்பக்கம் சாய்வது என்ற குழப்பத்தை ஏற்படுத்துகிறது. இதில் பெண்ணின் மீதான பாலியல் தாக்குதல் என்பதற்காக பெண்ணை ஆதரிப்பதா இல்லை அதிகார வர்க்கத்தினால், பழிவாங்கப்பட்ட பாமரனா என்றால் அப்பாவியின் பக்கம்தான் நிற்கத் தோன்றுகிறது. I support Rajan (with conditions apply). ராஜனின் விடுதலையை மட்டும் தீவிரமாக ஆதரிக்கிறேன். அவர் ஆதரவாளரின் கருத்துக்களை எதிர்க்கிறேன்.
இருப்பினும் சின்மயி ஒரு பாதிக்கப்பட்ட பெண் என்ற நிலையில் அவர் மீதும் கரிசனம் உண்டு.