அரசியல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அரசியல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஆன்மிக அரசியல் மதவாதமே

அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துகள் !

இந்தாண்டும் புதியன பலவும் கற்போம். மத, ஜாதி, இன பேதங்களை இடைவிடாது எதிர்ப்போம். நம்மையும் திருத்திக் கொள்வோம் நாளும்.

நடிகர் ரஜினிகாந்த் தான் அரசியலுக்கு வரப்போவதாகக் கூறியிருக்கிறார். விரைவில் தனிக்கட்சி துவங்கப்போவதாக சொல்லியிருக்கிறார். இதுவரை எந்தக் கொள்கையும் இல்லை என்றாலும் ஆன்மிக அரசியலாக இருக்கும் என்றும் சொல்லியிருக்கிறார். சில நாட்களுக்கு முன் ஏதோ ஒரு விழாவில் என் வழி பெரியார் வழி என்று சொன்னார். இப்போது ஆன்மிக அரசியல் என்கிறார். 

அறிக்கை விடுவதற்கும், போராட்டம் நடத்துவதற்கும் ஒரு கூட்டம் இருக்கிறது. அதை நாம் செய்ய வேண்டாம் என்கிறார். அறிக்கை விடுவதும் போராட்டம் நடத்துவதும்தான் அரசியல் அதில்லாமல் என்ன அரசியல் செய்யப் போகிறார். இப்படி போராடுகிறவர்கள் வெறும் கூட்டமாகப் பார்ப்பது வெறும் தந்நலவாத நடுத்தரக் கண்ணோட்டம். போராடுகிறவர்கள் தனக்காக மட்டுமன்றி பிறருக்கும் சேர்த்துத்தான் போராடுகிறார்கள். 

இந்த ஆன்மிக அரசியல் என்பது மதவாதமாக மாறுவதற்குத்தான் வழிவகுக்கும். எப்படி என்றால் ரஜினி தனது ஆன்மிக அரசியல் என்று சொன்னதை வரவேற்றவர்கள் யாரென்று பாருங்கள். பாஜகவின் எச். ராஜா, துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி. இவர்களுக்கும் ஆன்மிகத்துக்கும் ஏதாவது தொடர்பிருக்கிறதா ? இவர்கள் இருவருமே மதவெறியர்கள். பாஜகவுக்காக தொலைக்காட்சி விவாதங்களில் பங்கு பெறும் நாராயணன் இதை மோடி அமித்ஷாவின் அதிரடி என்று தனது ட்விட்டரில் தெரிவித்திருக்கிறார். பாஜகவின் தலைவர் தமிழிசை 2019 தேர்தலில் ரஜினி பாஜகவை ஆதரிப்பார் என்கிறார்.


ரஜினி தன்னுடைய வழிகாட்டியாக மறைந்த துக்ளக் ஆசிரியர் சோ வைக் குறிப்பிடுகிறார். அவர் உயிரோடு இருந்தால் தனக்கு 10 யானைகளின் பலம் இருந்திருக்கும் என்று கூறுகிறார். சோ ராமசாமி என்பவர் தான் இறக்கும் தறுவாயில் கூட திமுக அழிய வேண்டும் என்கிறார். நான் திமுக இல்லை. ஆனால் திமுக வை எதிர்க்கும் சோ திமுக வை விட சிறந்த கட்சியைத்தான் ஆதரிக்க வேண்டும். ஆனால் என்ன செய்வார் திமுக வை விட எல்லா வகையிலும் பல மடங்கு மோசமான பாஜகவின் ஆதரவாளர். இவர் இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும் ரஜினியை மூளைச் சளவை செய்து மோடியின் முன்னர் பாஜகவில் இணைய வைத்திருப்பார். 

ஆன்மிகம் வேறு மதம் வேறு என்று நம்பும் ஆன்மிக வாதிகளுக்கு, ரஜினியின் ஆன்மிகத்துக்கு ஏன் மதவாதிகள் ஆதரிக்கிறார்கள் என்று பதில் சொல்ல முடியுமா ? இங்கே இருப்பவர்கள் பெரும்பாலாலான ஆன்மிக வாதிகள் வெறும் மதவாதிகளே ! மதவெறியர்களே ! ஆன்மிகம் என்றால் ஹிந்துத்துவா, பாஜகவை ஆதரிப்பதே அவர்கள் மேற்கொள்ளும் ஆன்மிகம். 

மதவெறியை கக்கும் ஹெச். ராஜா பாராட்டுகிறார். குருமூர்த்தி 60 ஆண்டுகால திராவிடத்துக்கு மாற்றம் வரும் என்கிறார். ஆன்மிகம் என்று ரஜினி நம்பும் ஒன்று உண்மையில் நடைமுறைக்கு ஒத்து வராதது. அதாவது அரசியலில் ஆன்மிகம் என்பது இது போன்று மதவாதிகளுக்கே சாதகமாகும். உண்மையான ஆன்மிகவாதிகள் என்று சொல்லப்படுகிறவர்கள் மதத்தை கடந்தவர்களாக இருக்க வேண்டும். அப்படியிருக்க டிடிவி தினகரன், ஸ்டாலின் போன்றவர்கள் ஜனநாயக முறையில் ரஜினியை வரவேற்க, பாஜகவினர் ஆன்மிகம் என்றவுடன் பாராட்டுகின்றனர். 

மகாபாரதப் போரில் எதிரிகளைக் கொல்றதுக்கு அர்ஜுனன் தயங்க, எதிர்ல இருக்கறவங்க எல்லாம் என்னோட உறவினர்கள். அங்காளி பங்காளிகள், மாமன் மச்சான்கள். அவர்களை கொல்வதற்கு என்னோட மனம் அஞ்சுது அப்படின்னு தயங்குகிறான். இது சராசரி மனிதனுக்கோ அல்லது பக்தனுக்கோ வரும் சராசரியான உணர்ச்சி இது.

கிருஷ்ணர் என்ன சொல்கிறார் "அவர்களெல்லாம் வெறும் உடல்கள். அவர்களின் ஆன்மாவை எப்போதோ நான் கொன்று விட்டேன். நீ கொல்லப்போவது அவர்களின் ஆன்மாவை அல்ல வெறும் உடல்களைத்தான். நீ அவர்களுடன் போர் புரிந்து அவர்களைக் கொல்லத்தான் வேண்டும். அதுவே உன் கடமை இல்லையென்றால் கோழை என்று உலகம் உன்னை ஏசும் என்றெல்லாம் சொற்ச்சிலம்பம் ஆடி அவனைப் போர் புரியத் தூண்டுகிறார்.

சுருக்கமாக ஆன்மிகம் என்பது எந்த வித தவறுகளையும் புரிய இயலாத தத்துவப்பூர்வமாக இறைவனின் பெயரால், ஞானத்தின் பெயரால், கர்மாவின் பெயரால் நியாயப்படுத்தும். அதை தனிமனிதர்கள் தமது சொந்த வாழ்வில் நடக்கும் நிகழ்வுகளுக்கு பொருத்திப் பார்த்து அதிலிருந்து பாடம் பெறவோ அல்லது சரியாக நடந்து கொள்ளவோ சரியாக இருக்கலாம். ஆனால் மக்களை வழிநடத்தும் அரசியலுக்கு ஒத்து வராது. அதுவும் இன்றைய நிலவரத்தில் அரசியலுக்கு வரும் கொள்கையில்லா அறிவிலி ஆன்மிகம் பேராபத்து. கொள்கையே தனக்கு இல்லை என்று வெளிப்படையாக ஒத்துக் கொள்ளும் ரஜினியை எளிதாக மதவாதிகள் பயன்படுத்திக் கொள்ளும் வாய்ப்புகள் அதிகம். ஆன்மிகம் மதம் எல்லாம் தனி மனிதர்களுக்கு மட்டுமாக இருக்க வேண்டும். அரசியலுக்கான சித்தாந்தமாக இருக்க தகுதியில்லாதது.  ஆன்மிகம் மதமாக மாறி மதவெறி அரசியலாக மாறும். ஏற்கெனவே அப்படித்தான் இருக்கிறது. 

நானும் சில வருடங்கள் ஆன்மிக வாதியாக வாழ்ந்திருக்கிறேன். அந்த சில வருடங்கள் என்னை மிகவும் பண்படுத்தியதாகவும் உணர்கிறேன். ஆனால் அதை மற்றவருக்கு என்னால் பரிந்துரைக்க முடியாது. என்னைப் போல் மற்றவருக்கும் அது பலனளிக்கும் என்று என்னால் உறுதி கூற இயலாது. ஒவ்வொரு மனிதனையும் ஏதாவது ஒரு சிந்தாந்தமோ, மதமோ, தத்துவமோ, நூலோ கூட சிறந்த இயல்புடைய மனிதனாக மாற்றலாம். அது எல்லாருக்கும் பொருந்தாது. அரசியலுக்கு அது பொருந்தவே பொருந்தாது. எந்த சிந்தாந்தவாதியாக இருந்தாலும், மதவாதியாக இருந்தாலும் அடிப்படை அறவுணர்ச்சி, மனிதநேயம் இருக்க வேண்டும். மத, ஜாதிய, இன அடையாளத்தை, கலாச்சாரத்தைக் காப்பாற்றப் புறப்பட்ட கட்சிகளிடம் அதைக் காணவே முடியவில்லை. 

நாம் ஒரு மனிதனை அவனது ஜாதியைக் கொண்டு கீழ்மைப் படுத்துகிறோமே என்று ஒருவனை சிந்திக்க வைக்குமா ஆன்மிகம், உத்தரவாதமில்லை. ஆனால் அவனது கர்மா அது அதை அவன் செய்வது அவனது கடமை. இறைவன் எல்லாம் அறிந்தவன் எனவே அவனை சாக்கடை அள்ளவோ மலம் அள்ளவோ பணித்திருக்கிறான். அதில் ஒரு காரணகாரியம் இல்லாமலா இருக்கும் என்று நியாயப்படுத்தும் மனநிலையே ஆன்மிகம். கொலை செய்தவனையும் கொலைகாரனையும் இறைவனின் உருவங்களாக லீலைகளாக சமத்துவமாக பார்ப்பதே ஆன்மிகம்.

பௌத்த மதக் கோட்பாடுகளுக்கும், இலங்கையின் இனவாத அரசியலில் ஆதிக்கம் செலுத்தும் பௌத்த பிக்குகளுக்கு எத்தனை வேறுபாடுகள் இருக்கும் என்று பாருங்கள். புத்தரின் கோட்பாடுகளில் பற்றுக் கொண்டு பின்பற்றி வாழாமல் வெறுமனே புத்தரை கடவுளாக்கி பௌத்தத்தை மதமாக்கி வணங்கி வெறும் சடங்குகளில் மூழ்கினால் அது இனமாக, மதமாக, மொழியாக அடையாள அரசியலாகும். பின்பு அடையாள வெறியாகி வெறுப்புக்கும் கலவரத்துக்கும் இனப்படுகொலைக்கும் வழிவகுக்கும். ஏற்கெனவே அதையெல்லாம் நடத்தி முடித்து வெற்றிகரமாக ஆட்சியிலும் அமர்ந்திருக்கும் ஒரு கூட்டம் ரஜினியை அனுப்பி வெள்ளோட்டம் பார்க்கிறது. 
x
Download As PDF
Bookmark and Share

Post Comment

இந்த வார குமுதத்தின் பாஜக-இந்தி ஜால்ரா


வாரமானால் ஏதோ ஒரு பாஜக தலைவரைப் பற்றி ஒரு ஜால்ரா கட்டுரை எழுதாவிட்டால் குமுத்திற்கு அடங்காது. இல்லையென்றால் பாஜக பட்டையைக் கிளப்பும் ஒரு திட்டத்தைப் பற்றி உச்சி முகர்ந்து பாராட்டி எழுதாவிட்டால் குமுதத்தின் ஊடக நேர்மை தாங்காது. சமூக வலைத்தளங்களில் வரும் மீம்ஸில் இருந்து தேர்வு செய்து போடப்படும் படங்களில் கூட பாஜக வராது. மற்ற கட்சித் தலைவர்கள்தான் வருவார்கள்.

ஜால்ரா 1

அன்னையர் தின சிறப்பிதழான இந்த வார குமுதத்தில் அன்னையர் தினத்தைப் பற்றி அதாவது மறைந்த தனாது தாயாரைப் பற்றி பேட்டி கொடுத்திருப்பவர் உத்தமர் பொன்னார். காவிரி மேலாண்மை வாரியம் அமைவதைத் தடுத்தும், கர்நாடகாவை விட வறட்சி அதிகமான தமிழகத்தை விட்டு கர்நாடகத்தை வறட்சி பாதித்த மாநிலமாக அறிவித்த மோடியை புகழ்ந்த பொன்.ராதாகிருஷ்ணன். தமிழகத்தின் சாலைகளெங்கும் இத்துப் போன இந்தியைத் திணித்து வரும் நெடுஞ்சாலைத்துறையின் சாலைப் போக்குவரத்து மற்றும் கப்பல்துறை அமைச்சர் உத்தமசிகாமணி பொன். ராதகிருஷ்ணன். அன்னையர் தினத்தின் புகழ்பாட வேறு யாரும் கிடைக்கவில்லை போலிருக்கிறது.



ஜால்ரா 2

அடுத்து ஒரு பக்கம் முழுவதும் மோடியின் படம். அதன் கீழே இந்தியத் தமிழன் என்று கொட்டை எழுத்துக்களில். கட்டுரையின் தலைப்பு மோடியின் ஏக் இந்தியா. என்ன கருமமோ ? என்ன எழவோ ?? இப்போது இந்தியா 500 துண்டுகளாகவா இருக்கிறது ? இனிமேல் ஏக் இந்தியா என்று உருவாக்க வேண்டுமோ ? தமிழ் தொன்மையான மொழி. இந்தியாவின் மொழி வளமைக்குச் சான்றாக பெருமையுடன் அதைக் குறிப்பிடலாம். என்று மோடி ராஷ்ட்ரபதிபவனில் அனைத்து மாநிலங்களின் முதலமைச்சர் உயரதிகாரிகளின் மத்தியில் பேசினாராம். ஒவ்வொரு இந்தியனையும் பெருமைப்பட வைக்கப் போகும் மோடியின் கனவுத் திட்டத்தின் வெளிப்பாடே இந்தப் பேச்சாம்.
                                     
                                        
மோடியின் படத்தை ஏக் இந்தியா கட்டுரைக்குப் போட்டு அவரை நாயகனாக்கியுள்ளது
                           
தமிழ்நாட்டில் பாஜக இந்தியைத் திணிப்பதாக அரசியல் செய்கிறார்களாம். இவர்கள் இந்தியைத் திணிக்கவே இல்லையாம். தார் சட்டியுடன் இந்தியை அழிப்பவர்கள் தமிழுக்கு ஒன்றுமே செய்யவில்லையாம். இவர்கள்தான் கிழிக்கப் போகிறார்களாம். சொல்பவர்கள் பாஜகவின் கலை கலாசார அணியினர்.

ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒவ்வொரு மொழி கலாச்சாரம் இருக்கிறதாம் அதைத் தாண்டி இந்தியா என்று ஒற்றுமையாக நிற்கவேண்டுமாம். இதெல்லாம் இப்போது மட்டும் இந்தியா ஒற்றுமையாக இல்லையா என்று யாராவது  இவர்களிடம் சொல்லவேண்டும். அதாவது மாநிலங்களுக்கு இடையே குறுகிய கால புரிந்துணர்வு ஒப்பந்தம் போடுவது, மாநிலங்களுக்கு இடையே கல்வி, கலாச்சாரச் சுற்றுலா, விளையாட்டுப் போட்டிகள், திரைப்பட விழாக்கள் நடத்துவது இதெல்லாம் மத்திய மாநில அரசுகளின் உதவியுடன் இதை நடத்தலாமாம். பிரதமர் தான் பதவியேற்ற வருடமான 2014 லேயே இதைத் தொடங்கி விட்டாராம் இப்போது ஹரியானா, மேற்குவங்கம், தெலுங்கானா, சட்டீஸ்கர், குஜராத் போன்ற மாநிலங்களில் செயல்படுத்தத் தொடங்கியாயிற்றாம். 


இதற்கு மேல் ஜால்ராவின் சத்தம் வேண்டுமென்பதால் தமிழருவி மணியனின் ஜால்ராவின் சத்தத்தையும் சேர்த்து ஒலிக்க விட்டிருக்கிறது குமுதம். ஏக் இந்தியா திட்டத்தில் தமிழகமும் இணையவேண்டும். தமிழக்த்தில் இருக்கும் அனைவரும் இந்தியத் தமிழர்கள்தான். பழைய மும்மொழித் திட்டத்தை மத்திய அரசு கொண்டுவரவேண்டுமாம். அதென்ன மும்மொழித்திட்டம் ? வட இந்தியா இந்தி ஆங்கிலம் அல்லாது வேறொரு தென்னிந்திய மொழியைக் கற்க வேண்டும். அப்போது இங்கே இந்தியை விருப்பப் பாடமாக ஏற்கலாமாம். கேட்கவே புல்லரிக்கிறது. என்ன அழகான எதிர்கால சிந்தனை. என்ன ஒரு நாய்த்தனம் தமிழருவி மணியனுக்கு ? அய்யா இந்திக்காரர்கள் ஆங்கிலம் படிக்காததால்தானே மற்ற மாநிலங்களிலும் இந்தியைத் திணித்து வருகிறார்கள். இந்திக்காரர்கள் இந்தி ஆங்கிலம் தவிர ஒரு தென்னிந்திய மொழியைப் படிப்பார்களாம் நாமும் இந்தியைப் படிக்க வேண்டுமாம். இது நடந்தால் மழை கீழிருந்து மேலே பொழியும். அடி செருப்பால !

இம்மாதிரி வெவ்வேறு மொழிகளைப் படித்து விடுவதால் மாநிலங்களுக்கிடையேயான பிணக்குகள், தண்ணீர் பிரச்சனை தீர்ந்து, சக இனங்களின் சகிப்புத் தன்மை பெருகி மாநிலங்களின் பொருளாதாரம உயரும் அதன் மூலம் தேசமும் உயருமாம். இதெல்லாம் தமிழருவி மணியன் உதிர்த்தவை. இவர் மோடியை பிரதமர் வேட்பாளராக ஆதரித்தவர். ஆட்சிக்கு வந்த பின்னர் மோடி அரசுக்கு ஆதரவில்லை என்று தாவியவர். இந்த உத்தமர் இப்போது கறிக்குதவாத மும்மொழிக்கொள்கைக்கு வால்பிடிக்கிறார்.

ஏன் மோடி அரசு இந்தித் திணிப்பை கைவிட்டு இதுமாதிரியான நாட்டின் வளர்ச்சிக்குத் தேவையான திட்டங்களைப் போட்டால் யார் எதிர்க்கப் போகிறார்கள். இந்தியையும் திணித்து விட்டு இது மாதிரி மொக்கைத் திட்டங்களைப் போட்டதைக் கணக்குக் காட்டி இவர்கள் தேசத்திற்காகத்தான் அனைத்தையும் செய்கிறார்கள் என்று தூக்கிப்பிடிக்கிறது குமுதம்.
 

இதே குமுதத்தில் தமிழக மாணவர்களுக்கு பெருங்கேடு விளைவிக்கும் நீட் தேர்வை ஓரளவுக்கு மிதமாக விமர்சித்து கட்டுரை தீட்டியிருக்கிறது குமுதம். ஆனால் அதில் நீட் தேர்வைக் கொண்டு வந்து இந்திய ஒற்றுமையை நிலைநாட்டிய மாவீரன் என்று மோடியின் படம் அச்சிடப்படவில்லை. மாறாக அழகிய கல்லூரி மாணவிகளின் படத்தை அந்தக் கட்டுரைக்கு அச்சிட்டுள்ளது. ஏன் நீட் தேர்வுக்கு வழிவகுத்து தமிழக மாணவர்களை புதைகுழிக்கு அனுப்பியது பாஜக மோடிதான் என்பது பார்த்தவுடனே விளங்கி விடும். கட்டுரை படிப்பவர்களுக்கு அப்படித் தெரியக்கூடாது, அவர்கள் கோபம் பாஜகவின் மீது போகக்கூடாது என்பதற்காகத்தான் தேர்வு குறித்த கட்டுரை என்ற போர்வையில் மாணவிகளின் புகைப்படம். 


ஆனால் மோடியின் அழகிய படத்தை ஏக் இந்தியா கட்டுரைக்குப் போட்டு அவரை நாயகனாக்கியுள்ளது. பிள்ளையைக் கிள்ளி விட்ட மாதிரியும் ஆச்சு, தொட்டிலை ஆட்டி விட்டமாதிரியும் ஆச்சு. இந்தியை எதிர்ப்பவர்களை விமர்சித்த மாதிரியும் ஆச்சு மத்திய அரசு இந்தியைத் திணிக்கவில்லை என்று சொன்ன மாதிரியும் ஆச்சு, மத்திய அரசு ஒன்றுபட்ட இந்தியாவுக்கு உழைக்கிறது என்று சொன்னமாதிரியும் ஆச்சு.

Download As PDF
Bookmark and Share

Post Comment

விவசாயிகளை இழிவு செய்த விஜய பாரதம்

டெல்லியில் கடந்த ஒரு மாதமாக தமிழக விவசாயிகளின் போராட்டம் நடந்து வருகிறது. அவர்கள் தங்களை எந்தளவு தாழ்த்திக் கொள்ள முடியுமோ அதைவிடக் கீழான நிலைக்கும் சென்று போராடுகிறார்கள். அவர்கள் செய்யும் போராட்டங்களையெல்லாம் நம்மால் நினைத்துக் கூட பார்க்க முடிவதில்லை.ஆயினும் அவர்கள் கோரிக்கைகள் செவிமடுக்கப் பட்டு விடவில்லை. இந்த நிலையில் அவர்களைக் கேவலப்படுத்தி நடிகர்கள் என்று கிண்டலடித்து கேலிச்சித்திரம் வெளியிட்டுள்ளது, R.S.S. - இன் இதழான விஜயபாரதம். இவர்களின் மனநிலையை எதனுடன் ஒப்பிடுவது என்று யாராவது சொல்ல முடியுமா ?

 படம் உதவி - ஃபேஸ்புக்

.

Download As PDF
Bookmark and Share

Post Comment

திஷாவும், பார்வதியும் நம்ம ரங்கராஜும் பின்னே ஜாதிப் பெயரும்

திஷா பாண்டே என்ற நடிகையை நினைவிருக்கிறதா ? தமிழ்படம் என்ற படத்தில் அறிமுகமானவர். கீரிப்புள்ள என்ற படத்திலும் நடித்திருந்தார். அவர் தனது ஜாதிப்பெயரைத் துறந்து திஷா என்ற பெயரிலேயே தொடர்வதாகக் கூறியிருக்கிறார். இது 2013 லேயே வெளியான செய்தி. ஒரு நடிகை தனது பெயரை மாற்றிக் கொள்வதெல்லாம் ஒரு பொருட்படுத்தக் கூடிய செய்தியா என்ன ? ஆம். இது பொருட்படுத்திச் சொல்லக்கூடிய செய்திதான். அதுவும் தமிழ்நாட்டில் சொல்ல வேண்டிய செய்திதான். ஒரு நடிகை பெயரை மாற்றிக் கொள்வது அதிசயமான செய்தி இல்லைதான். 

தமிழ்நாட்டில் லக்ஷ்மி ராய் என்ற நடிகை ராய் லக்ஷ்மி என்று மாற்றிக் கொண்டார். அனுஷா ஐயர், ஜனனி ஐயர் என்று பெயரை வைத்துக் கொண்டு நடிகைகள் இருக்கின்றனர். இவையல்லாமல் மேனன், நாயர், ரெட்டி, முகர்ஜி, சாட்டர்ஜி, என்றெல்லாம் கூட பெயரை வைத்துக் கொண்டு நடிகைகள் இருந்தனர், இருக்கின்றனர். இவர்களை மன்னித்து விடலாம். ஆனால் ஜாதிப் பெயரைப் பின்னால் போடும் பழக்கமே இல்லாமல் இருக்கும் தமிழ்நாட்டிலிருந்து வந்து அனுஜா ஐயர், ஜனனி ஐயர் என்று ஜாதியைப் பின்னால் பிதுக்கிக் காட்டும் பிறவிகளை என்ன சொல்ல. தொலைகிறது நான் சொல்ல வந்தது இந்த நடிகைகளைப் பற்றியதல்ல. திஷா பாண்டே பெயரை மாற்றிக் கொண்டாரல்லவா ? அதற்கு அவர் சொன்ன காரணம்தான் இன்றியமையாததாக இருக்கிறது.

திஷா
பெயருக்குப் பின்னால் ஜாதிப்பெயரே போடாத தமிழ்நாட்டில் இருந்து கொண்டு, என்னென்னவோ சித்தாந்தங்களைத் துணைக்கழைத்தும், குறிப்பிட்ட சித்தாந்தங்களை எதிர்த்துக்கொண்டும் சிலர் ஜாதியைப் பெயருக்குப் பின்னால் வேண்டுமென்றே போட்டு ஜாதிப்பெருமையைப் பறை சாற்றிக் கொண்டிருக்கும் நிலையில், ஜாதிப்பெயரைப் பின்னால் போடுவதை எந்தவித உறுத்தலுமின்றி செய்து கொண்டிருக்கும் வட இந்தியாவிலிருந்து வந்திருக்கும் ஒருவர், அதுவும் நடிகை அதுவும் ஒரு இளம்பெண் செய்திருப்பது பாராட்ட வேண்டிய செயலன்றோ ! அதுவும் தான் திஷா பாண்டே என்றழைக்கப்படுவதைக் காட்டிலும் திஷா என்றழைக்கப்படுவதை, ஏன் விரும்பினார் என்று கூறுகிறார். "நான் ஜாதியின் பெயரால் அறியப்படுவதைக் காட்டிலும், இந்தியர் என்றழைக்கப்படுவதையே விரும்புகிறேன்". இதன் மூலம் ஜாதியைப் பெயராகச் சுமப்பதை அவமதித்து அதை மாற்றியிருக்கிறார். இதன் மூலம் ஜாதியை வெறுத்துக் கொண்டே ஜாதிப்பெயரைச் வேறு வழியில்லாமல் சுமப்பவர்கள் இருக்கிறார்கள் என்றும் தெரிகிறது. எல்லோராலும் அதை இவர்களைப் போல் துறந்து விட முடிவதில்லை.

பார்வதி
அடுத்து இன்னொரு நடிகையைப் பற்றியும் சில மாதங்களுக்கு முன்னர் கேள்விப்பட்டோம். அவர் ஒரு முறை ஊடகத்திற்களித்த பேட்டியில் கூறினார். தான் ஜாதிப்பெயருடன் அடையாளப்படுத்தப்படுவதை விரும்பவில்லை என்றும், ஜாதிப்பெயருடன் தனது பெயர் அறியப்படுவது குறித்து தான் வருந்துவதாகவும், ஜாதிய அடையாளம் தனக்குத் தேவையில்லை எனவும், அதனை விரும்பவில்லை எனவும், ஒருவரின் அடையாளத்தின் மூலமாக ஜாதிதான் அறியப்படுகிறது எனில் அது தனக்குத் தேவையில்லை எனவும் குறிப்பிட்டிருந்தார். ஏற்கெனவே பார்வதி நாயர் என்று இன்னொரு நடிகை இருப்பதால்தான் ஊடகங்கள் இருவரையும் வேறுபடுத்திக்காட்ட ஜாதிப்பெயரைப் பயன்படுத்தியதால் இப்படி ஆகிவிட்டது என்றும் செய்தியில் குறிப்பிட்டிருந்தனர். 

ஒரு நடிகைக்கு இவ்வளவு நேர்மையாக சிந்திக்க வருமா ? வந்திருக்கிறது. தமிழ்நாட்டிலிருந்து வந்த நடிகைகள் தனக்குப் பின்னால் ஐயர் என்று கொடுக்கை சேர்த்துக் கொண்டு கொக்கரிக்கும்போது இவர்களைப் பார்த்தால் அதிசயமாகத்தான் இருக்கிறது. சரி இவர்களிருவரையும் விடுவோம். நம் தமிழ்நாட்டில் பிரபலமான ஒருவர் இருக்கிறார். 

ரங்கராஜ் பாண்டேதான் அவர். இவரது பூர்வீகம் என்ன ? பிஹார் மாநிலத்தைச் சார்ந்தவராம். தமிழ்நாட்டிலேயே பிறந்து வளர்ந்த இந்த நேர்மையான "நடுநிலை" விவாதி, (சமீப வருடங்களின் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் தயவினால் நடுநிலை என்றால் அதிமுக கட்சியை விமர்சனம் செய்யாத ஜென் நிலை; சமூக ஆர்வலர் என்றால் RSS காரர் என்றும் தமிழ் பேசும் இணையம் பொருள் கண்டறிந்துள்ளது) பதினொன்றாம் வகுப்பில் படிக்கும்போதே 32 பக்கக் கையெழுத்து இதழை நடத்தினாராம். மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தில் தமிழில் முதுகலைக் பட்டம் பெற்றாராம். 1999 ஆம் ஆண்டு முதலே, தினமலர் என்ற ஒப்பற்ற நேர்மையான நாளிதழில் சேர்ந்து விட்டாராம். நாளிதழில் வரும் டவுட் தனபாலு என்ற பகுதியிலும் எழுதியவராம், அவ்வப்போது உரத்த சிந்தனையும் எழுதுவாராம். தன்னுடன் விவாதம் செய்பவர்களை பொறுமை இழக்க வைத்து, இவரை திரு. பாண்டே அவர்களே என்று கூறவைத்து இன்பம் கண்டு வருகிறார். தூக்கு தண்டனை எதிர்நோக்கியிருக்கும் மூவர் (பேரறிவாளன், முருகன், சாந்தன்) விடுதலையை வேண்டி தீக்குளித்து வீரச்சாவடைந்த செங்கொடி என்ற பெண் காதல் தோல்வியால் தற்கொலை செய்ததாக எழுதியவர் இவர்தான் என்றும் கேள்விப்பட்டேன்.

ரங்கராஜ்
என்னுடைய ஐயம் என்னவென்றால்,  வேறு மாநிலத்தவர்கள் ஜாதிப்பெயரை வைத்திருப்பது இப்போதும் கூட வாடிக்கையாகத்தானே இருக்கிறது என்றாலும், தமிழ்நாட்டிலேயே பிறந்து வளர்ந்து, இங்கு அரசியல்வாதிகளை வெளுத்து வாங்கும் இந்த நபர், இங்கே இருக்கும் பண்பாட்டை அறிந்து கொள்ளாமலா இருப்பார். ஜாதிப் பெயரைப்பின்னால் சேர்த்துக் கொள்ளாத தமிழ்நாட்டில் வாழ்ந்தாலும் தனது ஜாதிப் பெயரை இன்னும் பின்னால் ஒட்ட வைத்துக் கொண்டிருக்கிறார். வட இந்திய உடைகளை அணிந்துதான் தனது நிகழ்ச்சிகளில் தோன்றுகிறார். இவரைப் பார்த்து இன்னும் சிலரும் இதையே பின்பற்றுகின்றனர். ஜாதிப் பெயரைத் துறக்க வேண்டும் என்று ஒரு நடிகைக்கு இருக்கும் சிறிய பொறுப்பு, நேர்மை கூட இல்லாத இவருக்கு எதற்கு இந்த புரட்சி வேடம்.  

Download As PDF
Bookmark and Share

Post Comment

ஜால்ரா மணி கலாச்சிட்டாராம்

தினமணிக்கு அம்மாவின் புகழ் பாட முடியவில்லை. அதனால் இந்தத் தீர்ப்பு தவறானது என்று ஜாடை மாடையாகச் சொல்லும் கட்டுரைகள் நடுப்பக்கத்தில் வருகின்றன. அம்மா சிறையில் வாடுகிறார். அதனால் துன்பத்தில் வாடும் தினமணி ஆசிரியர், இரண்டாம் பக்கத்தில் அதிமுக காரர்கள் மொட்டயடிப்பது, காவடி எடுப்பது, காது குத்துவது, சிறப்பு யாகம் நடத்துவது, பட்டினிப் போராட்டம் நடத்துவது, நடைப் பயணம் போவது, வேலை நிறுத்தம் செய்வது என்று பலவாரியானா போராட்டங்கள் மூலம் தமிழகத்தையே ஒரு புரட்சிகரமான சூழலில் வைத்திருக்கிறார்.

அவருக்கு இருக்கும் மிகப்பெரிய பலம், நிம்மதி என்னவெனில் நடுவணரசாக வீற்றிருக்கும் பாஜகதான். அதனால் பிரதமர் என்ன செய்தாலும் அதை ஏற்றிப் போற்றுவார்.

இன்றைக்கு தினமணியில் வந்த அடடே மதி கேலிச்சித்திரத்தைப் பாருங்கள். முன்னாள் அரசை கலாச்சிட்டாராம். கலாய்ப்பதற்கு ஒரு தகுதி வேண்டாமா தினமணி ? தற்போதைய சூழலில் கருணாநிதியை நொட்டுவதற்கு ஒன்றும் கிடைக்க வில்லை போலும் அதனால் மன்மோகனைக் கலாய்க்கிறது தினமும் ஜால்ரா அடிக்கும் மணி.


தினமணி ஆசிரியர் வைத்திய நாதன் அகில உலக புரட்சியான "தூய்மை இந்தியா" திட்டத்தைப் போற்றியும் ஏற்றியும் கடந்த வாரத்தில் ஒரு தலையங்கம் எழுதியுனார். கடைசியில் அவரது விதியின்படி (காந்தி அல்லது பாரதியார் பற்றி) ஒரு செய்தியைச் சொல்லி) உச் கொட்டியிருக்கிறார். விளம்பர மன்னனான பாரதப் பிரதமர் என்னவொரு திட்டமோ, செய்தியோ , அறிவிப்போ சொன்னால் அதை ஆமோதித்து நைசாக மிகப்பெரும் சிந்தனை போல் சித்தரித்து அதை ஏற்றி விடுவதை செவ்வனே செய்வார்.

ஒன்று தலையங்கத்தில் மிகப்பெரும் சிந்தனை செயல் வடிவம் பெற்றது எதிர்காலத்தில் பட்டையக் கிளப்பப் போகும் திட்டம் என்று அடக்கமான மொழியில் எழுதுவார். இல்லையெனில் "அடடே மதி" யை விட்டு கேலிச்சித்திரத்தின் மூலம் மறைமுகமாகப் புகழ்வார்.

எடுத்துக்காட்டாக, சமஸ்கிருத, ஹிந்தித் திணிப்பு வெறி பிடித்த பாஜக அரசு ஆசிரியர் தினத்தை "குரு உத்சவ்" என்று சம்ஸ்கிருதப் பெயரில்தான் கொண்டாட வேண்டும் என அறிவித்தது. அதற்கு பல தரப்பிலிருந்து எதிர்ப்பு வந்தது. ஏற்கெனவே இளைஞர்களின் முதன்மை ஆளுமையாக பிம்பமேற்றப்பட்டிருக்கும் பிரதமருக்கு அப்துல் கலாம் (குழந்தைகளின் நாயகன்) பிம்பத்தை உருவாக்கும் முகமாக பள்ளிக் குழந்தைகள் விடுமுறை நாளன்று மாலை வரை இருத்தி வைக்கப்பட்டு பாரதப் பிரதமர் ஹிந்தியில் அறுத்துத் தள்ளியதை செவியில் சீழ் வடியக் கேட்டு வாடினர். ஆங்கிலத்தில் கேள்வி கேட்டாலும் ஹிந்தியிலேயே "பாத் கர்த்தே ஹோ" செய்தார் பிரதமர்.

அப்பேர்ப்பட்ட நன்னாளன்று அடடே மதி வெளியிட்டிருந்த சித்திரம் - ஒரு மாணவன் ஆசிரியரிடம் சொல்கிறான். "ஆசிரியர் தினம், டீச்சர்ஸ் டே, குரு உத்சவ் வாழ்த்துக்கள் சார்." இதில் என்ன பிரச்சனையிருக்கிறது என்று நினைத்தால் உங்களுக்குப் புரியவில்லை என்று பொருள். தினமணி ஜால்ரா அடிக்கும் அரசு ஒரு சர்ச்சைக்குரிய அறிவிப்பை விடுகிறது. அதைக் கண்டிக்காமல் எதிர்க்காமல், குரு உத்சவ் என்பதையும் சேர்த்து ஒரு மாணவன் சொல்வதாக இருந்தது அந்தச் சித்திரம். அரசு ஹிந்தி, சமஸ்கிருதத்தைத் திணித்தால், அதை எதிர்க்காமல் அதைப் பரப்பி சேவை செய்கிறது தினமணி. பிரச்சனை வரக்கூடாது என்பதற்காக "ஆசிரியர் நாள்"  என்று தமிழில் முதலில் சொல்லி, கடைசியில் குரு உத்சவ் - ஐ வாலை ஒட்டி விடுகிறது. இனி அடுத்த வருடத்திலிருந்து குரு உத்சவ் இந்தியாவில் மூவாயிரம் ஆண்டுகளாக பின்பற்றப்படும் கலாச்சாரம் என்றெல்லாம் கட்டுக் கதைகள் அவிழ்த்து விடப்படும் பாருங்கள்.

போன வாரமே எழுத நினைத்து முடியாமல் போனது இது.

இந்தியா ஏன் சுத்தமில்லாமல் இருக்கிறது என்றால் மாலையில் வீட்டைப் பெருக்கி கோலமிட்டு விளக்கேற்றும் பண்பாடு மறைந்து விட்டது, மேல் நாடுகளைப் போல் இந்தியாவில் குப்பை அது சேர வேண்டிய இடத்தில் சரியாகச் சேர்வதில்லை. வீடுகளில் கூட கழிவறைகள் சரியாக பராமரிக்கப்படுவதில்லை. எல்லாவற்றுக்கும் மனிதர்களே காரணம், நவீன வாழ்வில் பெருகிவிட்ட ஞெகிழி உட்பட பல குப்பைகள். எல்லாம் சரிதான் பாராட்டக் கூடியதுதான்.

புறத்தூய்மை நீரான் அமையும் என்கிறது வள்ளுவம். அதாவது புறத்தூய்மைக்கு நீங்கள்தான் அடிப்படை என்று தலையங்கம் முடிகிறது. நாமனைவரும் பொறுப்புதான் என்கிறார். எனவே நாமனைவரும் பொறுப்பு எனில் அதில் அன்னார் வைத்தியநாதரும் அடக்கம்தானன்றோ !

ஆகவே இவருக்கு மனசாட்சியிருந்தால், விநாயகர் சதுர்த்தி என்ற பெயரில், மக்களின் கடவுள் நம்பிக்கைக்குள் புகுந்து மதவெறியாட்டம் போடும் பயங்கரவாத இயக்கங்களுக்கு இலவச விளம்பரம் தருவதை நிறுத்துவாரா ?

கண்ட இடங்களிலெல்லாம் சிலைகளை வைத்து சுற்றுச் சூழல் மாசுக்களை அதிகப்படுத்தும் விநாயகன் சிலைகளை நீர் நிலைகளில் கரைத்து நீரை நாசப்படுத்துவதை எதிர்ப்பாரா ?

இல்லை காட்டுக்கூச்சல் போட்டுக் கொண்டு போவதை, வன்முறையைத் தூண்டுவதை, தெருவெங்கும் குப்பை போடுவதை எதிர்ப்பாரா ?

உத்தமரின் "தூய்மை இந்தியா" திட்டத்தில் முதலில் இணைக்க வேண்டியது இந்தத் திட்டத்தை அல்லவா !

இல்லை இந்தியாவையே குப்பை மேடாக்கும் கூறு கெட்ட தீபாவளி என்ற பண்டிகையின் பேரில் பட்டாசு வெடிப்பதை எதிர்ப்பாரா ?

செய்யவே மாட்டார்.  இந்து முண்ணனியும், இந்து மக்கள் கட்சியும், பாரதிய ஜனதாக் கட்சியும் தெருவுக்குத் தெரு, ஊருக்கு ஊர் விநாயகர் சிலை பிரதிஷ்டை என்று விளம்பரம் கொடுப்பார்.

இன உணர்வு என்றால் சும்மாவா ??

தீபாவளி விளம்பரங்கள், பட்டாசு கடைகள், எதையும் எதிர்க்க மாட்டார். ஆனால் இந்த தீபாவளியின் புது வரவான சீனப் பட்டாசு தீமைகள் பற்றி, இந்தியப் பொருளாதாரம் பாதிக்கப்படும் என்று கட்டுரை வெளியிடுவார். அதனால் தூய்மை இந்தியா திட்டத்தில் இணைந்துவிட்டதால் மட்டும் தினமணி இனிமேல் தனது குப்பைக் கட்டுரைகள் வெளியிடாது என்று நம்ப இடமில்லை.

Download As PDF
Bookmark and Share

Post Comment

தொகுப்புகள்

எழுதுவதன் தொடர்ச்சி விட்டுவிடக்கூடாது என்பதற்காக ஏதாவது எழுத வேண்டியிருக்கிறது. எழுதவதில் கிடைக்கும் உணர்வும் ஒரு இன்றியமையாத காரணம். பணிச்சுமையும், வாசிப்பே இல்லாத நிலையும், அயர்ச்சியும் இணைந்து வலைப்பூவின் பக்கமே வரவிடுவதில்லை. முடிந்தவரையில் இணைய வாசிப்பு மட்டுமே தொடர்ந்து இருக்குமாறு பார்த்துக் கொண்டிருக்கிறேன். அதனால் இந்தப் பதிவில் பிற இடங்களில் வாசித்தவை மட்டும். 

நீண்ட நாட்களுக்குப் பிறகு தட்டத்தின் மராயத்து என்றொரு மலையாளப்படம் பார்த்தேன். தமிழ்த்திரைப்படம் போல் இருந்து விடுமோ என்று தொடக்கத்தில் திரைக்காட்சிகள் அச்சத்தைத் தந்தாலும் போகப் போக மலையாளத் திரைப்படத்தின் இயல்பு வந்து விடுகிறது. சின்னச் சின்னத் திருப்பங்கள், மெலிதான நகைச்சுவை, நெகிழ்ச்சிகள், சுவாரஸ்யம், வசனம் என்று எல்லாவகையிலும் நன்றாக இருந்தது.  மலையாளத் திரையுலகைப் பொறுத்தவரையில் மிகச்சிறப்பான அல்லது புதுமையான திரைப்படம் இல்லையெனினும் காணக்கூடியதே. இதுவரை எந்த மலையாளப்படமும் என்னை ஏமாற்றாமல் மனநிறைவைத் தந்துள்ளன. இதுவும் கூட.

பாலியல் வன்முறை பிற குற்றங்களும் தண்டனைகளும் :

தருண் தேஜ்பால் அல்லது நரேந்திர மோடி உளவு பார்த்தது மாதிரியான விவகாரங்களில் பாலியல் வன்முறையை எதிர்ப்பது என்பதைக் காட்டிலும் தத்தமது எதிரிகள் பாலியல் வன்முறையில் ஈடுபட்டால் மட்டுமே பெண்களுக்கு ஆதரவாகப் பேசுவதும் தான் போற்றும் தலைவரோ அல்லது தன்னைச் சார்ந்தவர்களோ ஈடுபட்டால் கள்ள மௌனம் காப்பதுதான் தெரிகிறது. பாலியல் ரீதியான வன்முறைகள், அணுகுமுறைகள் தவறு என்பதைக் காட்டிலும் யார் செய்கிறார்கள் என்பதில்தான் எதிர்ப்பும் ஆதரவும் வெளிவருகிறது. மாட்டியது தெஹல்கா ஆசிரியர் என்றதும்தான் பல பேர் பெண்ணியவாதிகள் என்பதே தெரியவருகிறது. 

பெண்களைக் கிண்டல் செய்ததற்காக. என்னுடைய அலுவலகத்தில் மூன்று பேர் பணிநீக்கம் செய்யப்பட்டார்கள்  மூன்றில் ஒருவர் Team Lead. அவர் தனது கீழே இருப்பவர்களைக் கண்டிக்காத குற்றத்துக்காகவும் அவர்களை காப்பாற்றும் நோக்கில் பேசியதாலும் அவரும் நீக்கப்பட்டார். அவர் அச்செயலில் ஈடுபடாத போதும் அவரை நீக்குவதற்கான கெடுவாய்ப்புகள் ஏற்கெனவே அவரது முந்தைய நடவடிக்கைகளிலிருந்து  இருந்தன. 

அலுவலகம் முழுவதும் இதைப் பற்றிப் பேசினார்கள். அவர்கள் செய்தது தவறு என்ற ரீதியில் சிலர் மட்டுமே பேசினார்கள் மற்றவர்கள் யாருக்கும் தெரியாமல் செய்திருக்கலாம் என்ற ரீதியில்தான் பேசிக் கொண்டிருந்தார்கள். ஆக இவர்களுக்கெல்லாம் இது தவறு என்று புரியப்போவதுமில்லை. அதனால் தண்டனைகள் இது போன்ற செயல்களுக்காவது உடனடியாக நிறைவேற்றப்படுவது குறைந்தபட்சம் அச்சத்தையாவது வரவழைக்கும். Eve Teasing  என்பது ஆண்கள் எல்லோராலும் அங்கீகரிக்கப்பட்ட இயல்பான செயலாகவே பேசப்படுகிறது. அது தவறே இல்லை என்பது போல்தான் எல்லாரும் நடந்து கொள்கிறார்கள். ஒருவர் அதனை செய்யாதவராயினும் கூட இருப்பவர்களால் அவரும் சேர்ந்து பாதிக்கப்படுவது நடக்கிறது.  பாலியன் வன்முறையும் கிட்டத்தட்ட அதே போலத்தான். தருண் தெஜ்பால், ஏ. கே கங்குலி என பெரிய கண்ணியவான்கள், கனவான்கள் எல்லோரும் கை நனைத்தவர்களாகவே இருப்பதைப் பார்த்தால் ஒரு ஆண் கூட நம்பத்தக்கவன் அல்ல என்றே தோன்றும்.

கோவையில் தன் மனைவி இறந்து விட்டதாகக் காட்ட தன்னிடம் வந்த ஒரு பெண்ணைக் கொலை செய்த வழக்கறிஞர் ஒருவரை கோவளத்தில் வைத்துப் பிடித்திருக்கிறார்கள். அதைப்பற்றி ஒரு நண்பரிடம் பேசிக் கொண்டிருந்தேன். அவருக்குத் தெரிந்த ஒருவன் பேசியதாகக் கூறினார். சில பத்தாயிரங்கள் தந்தால் கொலை செய்வதற்குத் தயாராக இருப்பதாக ஒருவன் சர்வ சாதரணமாகப் பேசினான், பணத்தைக் கொடு நான் போட்டுத் தள்ளிட்டு கொஞ்ச நாள் தலை மறைவாக இருந்து விட்டு பின்பு சரணடந்து விடுகிறேன். நீ ஜாமீனில் எடுத்து விடு என்றானாம். சட்டத்தின் மீது குடிமகனுக்கு எவ்வளவு அச்சமும் மதிப்பும் என்று அதிர்ச்சியாக இருந்தது. இப்படி பணத்துக்காக ஒவ்வொருவனும் கொலை செய்ய ஆயத்தமானால் என்னவாகும் இந்த  நாடு என்று தோன்றியது. :((((

தமிழகத்தின் மீதான ஓர வஞ்சனை:

ஒரிரு மாதங்களுக்கு முன்பு குங்குமத்தில் ஒரு கட்டுரையை வாசித்தேன். ஒரு செயற்கைக்கோள் ஆய்வு நிலையம் அமைக்கும்படியான இடம் தமிழகத்தில் இருப்பதாகவும், அதன் மூலம் குறிப்பிடத்தக்க வேலை வாய்ப்புக்கள் உருவாக்கும்படியுமான திட்டம் எனினும் அது இந்திய வானியல் ஆராய்ச்சி மையத்தின் மலையாளிகள் ஆதிக்கத்தின் காரணமாக தமிழ்நாட்டுக்கு வருவது தடுக்கப்பட்டது என்பதாகவும் படித்தேன். 


கெயில் என்ற நிறுவனத்தின் பங்குகள் 57% நடுவண் அரசினுடையவை என்று இத்தகவல் கூறுகிறது. இதன் மூலம் இந்திய அரசு எத்தகையது என்பதை முடிவு செய்து கொள்ளலாம். 

https://www.facebook.com/photo.php?fbid=667286226636854&set=a.320897871275693.79991.236784116353736&type=1&relevant_count=1



அடுத்தது தமிழ் நாட்டிற்கான வளர்ச்சித் திட்டத்தைப் பாருங்கள். 



https://www.facebook.com/photo.php?fbid=314274975379746&set=a.278920168915227.1073741825.278864095587501&type=1

https://www.facebook.com/deltamethane
Download As PDF
Bookmark and Share

Post Comment

அமெரிக்க முகமூடி அம்பலமானது

அமெரிக்க எப்பேர்ப்பெற்ற குடிநாயக நாடு என்று அனைவருக்கும் தெரியும். ஜனநாயகமா இல்லை பணநாயகமா என்று தற்போது தெளிவாக அம்பலமாகி வருகிறது, இந்தியாவிலும் சிலர் இது போன்ற இணையத்தில் வெளியிட்ட கருத்துக்களுக்குக்காக கைது செய்யப்பட்டனர், ஆனால் அது அரசு என்றளவில் இல்லாமல் செல்வாக்குடைய அரசியல்வாதிகளின் அதிகார துஷ்பிரயோகத்தைப் பயன்படுத்தித்தான் கைது செய்துள்ளனர். ஆனால் அமெரிக்காவிலோ அரசே முன்னின்று இந்த இழிசெயலை நடத்தியுள்ளது. தனிநபர் உரிமைகளில் சாதனை படைத்த நாடு, யாரும் விருப்பம் போலச் செயல்பட எவ்விதத் தடையும் செய்யாத நாடு. ஆனால் கடந்த சில ஆண்டுகளில் அப்படியான நம்பிக்கை மூட நம்பிக்கையே என்று நிரூபணமாகியுள்ளது.

அமெரிக்கா என்பது ஒரு நாடு அல்ல அது ஒரு வணிகம் ( USA is not a country it's a business ) என்று ஓர் சொல் உண்டு. அதுதான் எவ்வளவு உண்மை. அமெரிக்கா ஒரு மக்கள் அதிகாரமற்ற நாடு என்பது மீண்டுமொரு முறை நிரூபணமாகியுள்ளது. அதற்குக் காரணமானவர் எட்வர்ட் ஸ்னோடன் என்ற அமெரிக்க உளவுத்துறை ஊழியர். தனது மனசாட்சி உறுத்தலின் காரணமாக இவர் வெளியிட்ட தகவல் அமெரிக்கர்களின் கண்களைத் திறந்துள்ளது.

அமெரிக்காவின் உண்மை முகத்தை அறிந்தவர்களுக்கு இது ஒன்றும் பெரிய ஆச்சரியமாக இராது. ஆனால் அமெரிக்கக் குடிமக்கள் அல்லது அமெரிக்க குடிமக்களல்லாத அமெரிக்க ஆதரவாளர்களுக்குத்தான் இது அதிர்ச்சியாக இருந்திருக்கும். அமெரிக்காவை எதிர்ப்பது என்றால் அமெரிக்காவின் 30 கோடிப்பேரை வெறுப்பது என்று பொருள் கொள்வதெல்லாம் அவரவர் விருப்பம்.
எட்வர்ட் ஸ்னோடன்
அமெரிக்கா குறித்த எளிய உண்மை. அமெரிக்கா என்பது என்ன ? அம்மண்ணின் மைந்தர்களை ஐரோப்பிய வந்தேறிகள் இனக்கொலை செய்து ஆக்ரமித்துக் கொண்ட நிலம். அங்கே ஆப்ரிக்க அடிமைகளின் குருதியில்தான் வளர்ந்து நிற்கிறது வானுயர் கட்டிடங்கள். இதல்லாமல் இரண்டாம் உலகப்போர் தொடங்கி 50 க்கும் மேற்பட்ட நாடுகளில் நேரடியாகவும் மறைமுகமாகவும் இராணுவ ஆக்ரமிப்பை நிகழ்த்தியுள்ளது. ரஷ்யா பால்டிக் நாடுகளை அச்சுறுத்த நேட்டோ என்ற ராணுவ அமைப்பையும் வைத்திருக்கிறது. 50 உலகின் பல்வேறு நாடுகளில் தனது ராணுவத் தளத்தையும் நிறுவியுள்ளது.  தனது உளவு அமைப்பின் மூலமாக பல நாடுகளின் அரசுகளைக் கவிழ்க்கவும் தனது கைப்பாவை அரசுகளைக் காக்கவும் தனது ராணுவ, தொழில்நுட்ப வலிமைகளைக் கையாள்கிறது.

ஒரு நாட்டின் அரசுக்கு எதிராக பயங்கரவாதிகளை உருவாக்கவும், அல்லது ஒரு நாட்டையே பயங்கரவாதம் என்று சொல்லி ஆக்ரமிக்கவும் செய்யும். தற்போது ஒரு எடுத்துக் காட்டு தான் ஆக்ரமித்துள்ள ஆப்கானிஸ்தான், ஈராக் நாடுகளில் இஸ்லாமியத் தீவிரவாதிகளை எதிர்த்துப் போராடுவதாகச் சொல்லும் அமெரிக்கா உள்நாட்டுப்போர் நடக்கும் சிரியாவில் இஸ்லாமியத் தீவிரவாதிகளை ஆதரிக்கிறது. 21 ஆம் நூற்றாண்டிலும் இரண்டு நாடுகளை ராணுவ ரீதியாக ஆக்ரமித்து நிற்கிறது. 

பிராட்லி மானிங்
இப்பேர்ப்பட்ட கொடிய வெறிபிடித்த சர்வாதிகார நாட்டை ஏன் பலரும் ஆதரிக்கின்றனர். அமெரிக்காவில் இருக்கும் ஜனநாயகம் வேறெந்த நாட்டிலும் இல்லை. இது நிச்சயம் உண்மைதான். பல விடயங்களில் உலகில் வேறு எந்த நாட்டிலும் இல்லாத உரிமைகள் அமெரிக்கக் குடிமக்களுக்கு வாய்த்திருக்கிறது.

ஆனால் அதுவும் பொய்யென நிருபித்திருக்கிறார் ஸ்னோடன். யார் இவர் ? அமெரிக்க உளவுத்துறையான CIA - இன் ஊழியர். சொந்த அமெரிக்க மக்களையே அமெரிக்க அரசு வேவு பார்த்திருக்கிறது. சமூக வலைத்தளங்கள், இணையதளங்கள், மின்னஞ்சல் முகவரிகள்  என அனைத்தையும் வேவு பார்த்திருக்கிறது. இதைக் காணச் சகிக்காத ஸ்னோடன், இதை அம்பலப்படுத்தினார். இந்த CIA - என்பது என்ன ? அமெரிக்க உளவுத்துறை, உலகில் மற்ற நாடுகளில் நடக்கும் ஒவ்வொரு அரசியல் நகர்வுகளையும் கவனிப்பது, அமெரிக்க நலனுக்கு எதிரான அரசியல் போக்கு உலகின் எந்த நாட்டிலாவது தென்பட்டால் அங்கே மூக்கை நுழைப்பது, உளவாளிகளை அனுப்புவது, இலஞ்சம் கொடுப்பது, கூலிப்படையை அனுப்புவது, தேவைப்பட்டால் ஆட்சிக் கவிழ்ப்புகள், படையெடுப்புகள் வரை நடக்கும். இதில் இருப்பவர்கள் மனசாட்சியை அடக்கம் செய்து விட்டுத்தான் வேலை பார்க்க வேண்டும். அடுத்தவன் பிழைப்பில் மண்ணள்ளிப் போடும் இந்த வேலையைத்தான் அமெரிக்க ஹாலிவுட் திரைப்படங்கள் நாயகர்களாகவும், தேசபற்றாகவும் சித்தரிக்கின்றன. ஹாலிவுட் படங்கள் சொல்வது உலகத்திலேயே தியாகி அமெரிக்க ராணுவ வீரன், உலகத்திலேயே சிறந்த தேசபக்தன் CIA, FBI உளவாளி.  

ஹாலிவுட் திரைப்படங்களில் பார்த்தால் மிகவும் பிரபலமான படங்களான, ஜேம்ஸ்பாண்ட் (இங்கிலாந்து உளவாளி), ராம்போ, மிசன் இம்பாஸிபிள் மாதிரியான உளவாளிகள் அல்லது ராணுவ வீரர்களை வியந்து போற்ற வைக்கும். இவர்கள் வெவ்வேறு நாடுகளில் போய் போரிடுவது அந்நாட்டுக்கு எதிராக செயல்படுவதும் வீரமாகவும், திறமையாகவும் புத்திசாலித்தனமாகவும், நாயகத்தனமாகவும் சித்தரிக்கப்படும். ராணுவ நடவடிக்கையை நியாயப்படுத்தும் படங்கள் தொடர்ந்து வெளிவருகின்றன. ஈராக்கிலும், ஆப்கானிலும் அமெரிக்க ராணுவ வீரர்களின் துயரத்தை அலசும் படங்கள் (ஹார்ட் லாக்கர்) , அமெரிக்காவின் பிறநாட்டு ஆட்சிக் கவிழ்ப்பை நியாயப்படுத்தும் ஆர்கோ போன்ற படங்கள் ஆஸ்கர் விருதுகளை வெல்கின்றன. இது போன்ற படங்களை ரசிக்கும் நாமும் அறிந்தோ அறியாமலோ அமெரிக்காவின் அயோக்கியத்தனத்தை ரசித்து அதை ஆதரிக்கிறோம்.

அமெரிக்கா ஈராக்கில் நடத்திய கொடுமைகளை அம்பலமாக்கியது முதன் முதலில் விக்கிலீக்ஸ் என்ற இணையம். அதன் நிறுவனர் அமெரிக்க பயங்கரவாதத்தை அம்பலப்படுத்தியதால், அமெரிக்க அரசால் இன்னும் துரத்தப்பட்டு ஆபத்தான நிலையில்தான் ஈக்வடார் நாட்டு தூதரகத்தில் தஞ்சமடைந்து வாழ்கிறார். இன்னொருவர் ப்ரோட்லி மானிங் இவரும் விக்கிலீக்ஸ் க்கு தகவல்கள் - இராணுவ ரகசியத்தை வழங்கியதற்காக சிறையிலடைக்கப்பட்டுள்ளார். இருவரும் அமெரிக்க பயங்கரவாதத்தை அம்பலப்படுத்தியதற்காக தண்டனை அனுபவிக்கின்றனர். தற்போது எட்வர்ட ஸ்னோடனும் அது போலவே அமெரிக்க சராசரி மக்களைக் கண்காணிக்கும் படு கீழ்த்தரமான அமெரிக்க அரசின் செயலை அம்பலப்படுத்தியுள்ளார். அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு நிறுவனம் (NSA - National Security Agency) இணையக் கண்காணிப்பின் மூலம் பல்வேறு நாடுகளின் ரகசிய ஆவணங்களைத் திருடியுள்ளது. அமெரிக்கர்களின் அசைவுகளையும் கண்காணித்து வருகின்றது என்பதை அம்பலப்படுத்தி உள்ளார் எட்வர்ட்.

ஹாங்காங்கில் தஞ்சமடைந்து இதை வெளியிட்டுள்ளார். அமெரிக்காவுக்கு பயந்து ஓடிக் கொண்டிருக்கும் எட்வர்ட் தற்போது ரஷ்யாவில் தஞ்சமடைந்துள்ளார். அமெரிக்க அதிபரோ உலக நாடுகளையெல்லாம்  யாரும் எட்வர்ட் ஸ்னோடனுக்கு தஞ்சமளிக்கக் கூடாது என்று எச்சரித்துக் கொண்டிருக்கிறார். பலநூறு கோடிக்கணக்கான தகவல்கள் பல்வேறு நாடுகளிடமிருந்து திருடப்பட்டுள்ளன. அதிகமாகக் கண்காணிக்கப்பட்ட நாடுகளில் ஐந்தாமிடத்தில் இந்தியாவும் இருக்கிறது என்பது அதிர்ச்சி. என்ன தேசபக்தி அதிர்ச்சியெல்லாம் ஒன்றுமில்லை. இந்தியா அமெரிக்காவின் எந்த ஒரு நிலைப்பாட்டிலும் எதிர்ப்புத் தெரிவிக்காத நாடு என்று அனைவருக்கும் தெரியும் அப்படி இருந்தும் இந்தியாவையும் கண்காணித்திருக்கிறது என்பது என்ன நியாயமோ.

இதற்கு முன்பு உலகையே அதிரவைத்த அமெரிக்க போர்க்குற்றங்களை வெளியிட்ட விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அஸான்ஞ்சே இன்னும் ஈக்வடார் தூதரகத்தில்தான் தஞ்சமடைந்து வாழ்கிறார். எட்வர்ட் ஸ்னோடன் ரஷ்யாவின் வானூர்தி நிலையத்திலிருக்கிறார்.

இப்படி அமெரிக்கா சொந்த மக்களையும் நட்பு நாடுகளையும் கூட கண்காணித்துக் கொண்டிருக்கும் வேளையில், அமெரிக்காவை ஏதோ ரட்சகனைப் போலவும் சிலர் நம்புகின்றனர். அமெரிக்க உளவுத்துறையோ பாதுகாப்புத் துறையோ பல்வேறு கண்ணுக்கு தெரியாத மென்பொருட்களை வைத்து பல்வேறு தனிநபர்கள், அரசுகள், நிறுவனங்களிடமிருந்தும் தகவல்களை ஒட்டுக் கேட்பது ஏற்கெனவே அரசல் புரசலாக வெளியான செய்திகள்தான். அரபு வசந்தம், துருக்கி வசந்தம், கிரீஸ்போராட்டம் போன்றவற்றின் தாக்கத்திற்கு முக்கியத் தூண்டுதலாய் இருந்தது சமூக வலைத்தளங்களே என்பதால் அதையும் கண்காணித்து வருகிறது என்ற செய்தியும் ஏற்கெனவே வெளியானது. இதை ஏன் சொல்கிறேன் என்றால் அமெரிக்கா தனிநபர் சுதந்திரத்தில் தலையிடாது என்று மூட நம்பிக்கை உடையவர்களின் கவனத்திற்கு,

சமூக வலைத்தளங்களை வெவ்வேறு போலி முகவரிகளில் வந்து விவாதங்களில் கூட பங்கெடுக்கும் பாமரர்களைப் போலவும் உளவுத் துறையினர் கண்காணிக்கின்றனர். உலகப் புகழ் பெற்ற நிறுவனங்களான மைக்ரோசாஃப்ட், ஃபேஸ்புக், யாஹூ ஆகியோரும் தனிநபர்களின் தகவல் பரிமாற்றங்களை வழங்கி  உதவியிருக்கின்றன.

சிவலிங்கம் சிவானந்தம் என்ற தமிழர் ஒசாமா பின்லேடனைக் கண்டுபிடித்துக் கொல்லும் ஒரு தொழில்நுட்பத்தை உருவாக்கியதற்காக வெள்ளை மாளிகையின் விருது பெற்றிருக்கிறார். இதைத் தமிழர்கள் கொண்டாடுகின்றனர். பின்லேடனை உருவாக்கியதே அமெரிக்காவின் சிஐஏ அவரை பயங்கரவாதி என்று அறிவித்து தேடியும், இரு நாடுகளின் மீது படையெடுத்தும், பல மில்லியன் டாலர் செல்வாக்கி அமெரிக்கப் பொருளாதாரமே நாசமாக்கியது. லேடனைத் தேடிக் கொல்வதற்கெல்லாம் தொழில் நுட்பத்தை உருவாக்கியவரெல்லாம் தமிழருக்குப் பெருமை சேர்த்தவராம். இந்த பின்லேடன் பற்றிய கட்டுக்கதையெல்லாம் இன்னும் நம்புவதற்கு ஆளிருக்கிறது. .சரி ஈழப்போர் நடந்த போது இலங்கை அரசுக்கு புலிகளின் நடவடிக்கைகள் பற்றி உளவுத் தகவல்கள் வழங்கிய இரு நாடுகள் இந்தியாவும் அமெரிக்காவுமே. இந்தியா எட்டி உதைத்தாலு ஈழத் தமிழர்களுக்கு இந்தியா மீதான மூட நம்பிக்கை மாறாது. அதே போலத்தான் அமெரிக்காவின் மீதான் நம்பிக்கையும். புலிகளின் நடவடிக்கைகளை எப்படி அமெரிக்க உளவுத்துறை வேவுபார்த்திருக்கும், அவர்கள் உரையாடல்களைக் கேட்டிருக்கும், சிவலிங்கம் போன்ற தமிழர்கள்தானே உதவியிருப்பார்கள். அவர்களையும் கொண்டாடுவார்களா தமிழர்கள் ? சரி புலிகளின் தகவல்களை அறிய அமெரிக்க, இந்திய, இலங்கை அரசுகளுக்கு உதவிய ஒரு முஸ்லிம் என்று ஒரு செய்தி வருகிறது அதை எப்படி எதிர்கொள்வார்கள் இத் தமிழர்கள்.

எட்வர்ட் ஸ்னோடன், பிராட்லி மானிங்க் போன்றவர்கள் அமெரிக்கனாக இருந்தபோதும் மன்சாட்சியுடன் போலித்தனமான தேசபக்தியையெல்லாம் பற்றிக் கவலைப்படாமல், அரசின் கொடியமுகத்தை அம்பலப்படுத்தினர். சிலர் அமெரிக்கனாக இல்லாதபோதும் உளவுத்துறைக்குத் துதிபாடுகின்றனர்.    
Download As PDF
Bookmark and Share

Post Comment

சீமானுக்கு ஒரு சலாம் - சீமான் பாராட்டப்பட வேண்டியவரே !


எனக்கு சீமானின் இந்த நடவடிக்கை இன்ப அதிர்ச்சியாக இருக்கிறது. ஆனால் இது மிகவும் துணிச்சலான நடவடிக்கையாகும். நேர்மையானதும் கூட. இதை வைத்து சீமான் கைது செய்யப்படக் கூடும், பலவித அடக்கு முறைகளை எதிர்கொள்ளக் கூடும். கலைஞர் ஆட்சியில் மட்டுமே எல்லாரும் வீரம் பேசுகிறார்கள் ஜெவிடம் பம்மி விடுகிறார்கள் என்று பொதுவாக நம்புகிறோம். ஆனால் ஜெவின் ஆட்சி நடக்கும் போது இப்படி ஒரு தலைவரை வரவைத்து பேச வைத்திருப்பது துணிச்சலான செயலே.

அதே நேரம் யாசின் மாலிக் என்ற தாடி வைத்த முஸ்லிம் மனிதனைப் பார்த்தவுடன் இஸ்லாமோஃபோபியா விஸ்வரூபம் எடுத்துவிட்டதைப் பலரிடம் காண முடிகிறது. இது ஈழத்துக்கு எதிராக இந்தியாவைத் திருப்பி விடும் என்றும் அஞ்சுகிறார்கள். இதற்கு மேலும் இந்தியா ஈழத்துக்கு செய்வதற்கு ஏதாவது இருக்கிறதா என்ன ?

யாசின் மாலிக் ஒரு "தீவிரவாதியோ" தீவிரவாத இயக்கத் தலைவரோ கிடையாது. ஜம்மு காஷ்மீர் விடுதலை இயக்கம் ஒரு ஜனநாயக இயக்கம் மட்டுமே. அங்கு இருக்கும் ராணுவ அடக்கு முறைகளுக்கு எதிராகவும், அரசியல் உரிமைக்காகவும் போராடுகிற இயக்கம் மட்டுமே. தமிழ்நாட்டில் கூட தனித் தமிழ்நாடு என்ற கோரிக்கையை அறிவித்துக் கொண்டு சிறு சிறு இயக்கங்கள் இயங்குகின்றன. இந்தியா ஒரு ஜனநாயக நாடு என்பதை தேசிய வியாதிகள் நினைவூட்டிக் கொள்ளவும்.

யாசின் மாலிக்
இந்திய இறையாண்மைக்கு எதிரானவர்கள் என்று பீதியைக் கிளப்பி, சீமானை குற்றவாளிக் கூண்டில் தள்ள முனைகிறவர்கள், சிங்கள ராணுவமே இந்திய இறையாண்மைய மதிப்பதில்லை என்பதையும் நினைவூட்டிக்கொள்ளவும். அந்த சிங்கள ராணுவம் இந்திய இறையாண்மையை மதிக்காத போதும் அவர்களுக்கு இறையாண்மையுடைய இந்தியா பயிற்சி அளிக்கிறது என்பதையும் நினைவூட்டிக் கொள்ளவும். இறையாண்மையுடைய இலங்கையின் உள் விவகாரங்களில் இந்தியா தலையிடாது என்று சொல்லிக் கொண்டதையும் நினைவூட்டிக் கொள்ளவும். தற்போது சீன ராணுவம் இந்திய எல்லைக்குள் நுழைந்து விட்டதாக தேசபக்தர்கள் சிலிர்த்து எழுந்த போதும், சீனப் பிரதமர் இந்தியாவிற்கு மிகவும் சாதாரணமாகவே வந்து போகிறார்.

காஷ்மீருக்கு சீனா தனி விசா கொடுத்ததை எதிர்ப்பவர்கள், சீனாவின் எதிரியான தலாய் லாமாவுக்கு இந்தியா அடைக்கலம் கொடுப்பதையும் எதிர்க்க வேண்டும், வங்கதேசப் பிரிவினை பாகிஸ்தானின் இறையாண்மைக்கு எதிரானது, திபெத் சீனாவின் இறையாண்மைக்கு எதிரானது. ஈழம் இலங்கையின் இறையாண்மைக்கு எதிரானது. இந்தியாவுக்கு மட்டும்தான் இறையாண்மையா ? இல்லை இந்தியர் என்பதால் இந்த பாரபட்சமா ? அவரவர்க்கு அவரவர் இறையாண்மை. இதில் இந்தியர்கள் மற்ற நாடுகளின் இறையாண்மைக்கு எதிராக மட்டும் நடக்கலாமா? அங்கெல்லாம் அடக்கு முறை நடக்கிறது என்பது பதிலென்றால் காஷ்மீரிலும் அதுதானே நடக்கிறது. மற்ற நாடுகளின் அடக்குமுறைகளை எதிர்ப்பேன், அதே அடக்குமுறை இந்தியாவில் நடந்தால் தேசப்பற்றின் பெயரால் ஆதரிப்பேன். இதுதான் இங்கே நிலைப்பாடு. 

இந்திராவின் படுகொலையைத் தொடர்ந்து காங்கிரஸ் கொலைகாரர்களால் டெல்லியில் வாழ்ந்த 3000 சீக்கியர்கள் கொல்லப்பட்டனர். அந்த இனப்படுகொலைக்கு நீதி கேட்கும் சீக்கியர் அமைப்புகள் இலண்டனில் தமிழினப்படுகொலையைக் கண்டித்து நடத்திய ஆர்ப்பாட்டம். சீக்கியர்களின் ஆதரவாவது தமிழர்கள் ஏற்கிறார்களா  இல்லை இந்திரா காந்தியைக் கொன்ற பிரிவினைவாத காலிஸ்தான் சீக்கிய பயங்கரவாதிகளின் ஆதரவு எமக்கு வேண்டாம் என்கிறீரா ?
இங்கு இந்திய இறையாண்மைக்கு எதிரானவர்கள், பிரிவினைவாதிகள், தேசப்பாதுகாப்புக்கு எதிரானவர்கள் என்றெல்லாம் சொல்லப்படுவதற்கு ஒருவர் தீவிரவாதியாக இருக்க வேண்டியதில்லை. ஈ காக்காவுக்குக் கூட துரோகம் செய்யாத கூடங்குளம் உதயகுமார் கூட கிறித்தவர் என்ற காரணத்தை வைத்து அவரைக் கொல்ல வேண்டும் என்று வெறியேறிப் பேசும் தேசபக்தர்கள் இருக்கிறார்கள்.

இதை எதிர்ப்பவர்கள் யார் யாரென்றால் பாரதிய ஜனதா, காங்கிரஸ், இந்து மக்கள் கட்சியினர். இந்தியாவையே அந்நியனுக்குக் கூட்டிக் கொடுக்கும் இவர்கள் இந்திய இறையாண்மையைப் பற்றிப் பேசுவது வேடிக்கை. இந்து மக்கள் கட்சியின் கொள்கை தெரிந்ததுதான், அவர்கள் தனது கடமையைச் செய்கிறார்கள் அவர்களை நான் விமர்சிக்க மாட்டேன்.

எனக்கு என்ன கசப்பென்றால் இதை விமர்சிக்கும் ஈழ ஆதரவாளர்கள். ஈழத் தமிழர்கள் அடைய வேண்டிய உரிமைகளின் நியாயத்தை அறிந்த இவர்களுக்கு காஷ்மீர் அடைய வேண்டிய நியாயம் தெரியவில்லை. ஈழத் தமிழர் உரிமை பற்றிப் பேசும் போது புலிகளால் துரத்தப்பட்ட முஸ்லிம்களைப் பேசாத வாய்கள், காஷ்மீர் என்று வந்து விட்டால் அங்கிருந்து விரட்டப்பட்ட இந்து பண்டிட்களைப் பற்றிச் சொல்லி, தீவிரவாதப் பட்டம் கட்டி கொச்சைப்படுத்துகிறார்கள். இந்து- முஸ்லிம் நல்லிணக்கத்தின் இலக்கணமாய் விளங்கிய காஷ்மீர் நடக்கக் கூடாததெல்லாம் நடந்து இஸ்லாமியர்-பிரிவினைவாதம்-தீவிரவாதம் என்று செல்லரித்துப் போன காரணங்களைச் சொல்லி எதிர்க்கிறார்கள்.

இதில் கொடுமை என்னவென்றால் இவர்கள் உலகத்தின் மிக மோசமான தீவிரவாத இயக்கம் என்று உலகத்தால் வர்ணிக்கப்பட்ட புலிகளையும் ஆதரிக்கிறார்கள். அது எப்படி ஒருவர் ஈழத்தை ஆதரித்துக் கொண்டு காஷ்மீரை எதிர்க்க முடியும். நான் இரண்டும் ஒரே பிரச்சனை என்று சொல்லவில்லை. ஆனால் போர், நில ஆக்ரமிப்பு என்பதைத் தவிர இரு பக்க மக்களுமே ராணுவ அடக்கு முறைகளை நாளும் எதிர்கொள்கிறவர்கள்தானே. தமிழனுக்கு வந்தால் குருதி காஷ்மீரிக்கு வந்தால் தக்காளி சட்னியா ? ஏன் ஈழத்தமிழர்கள் தங்களை யூதர்களுடன் ஒப்பிட்டுக் கொள்ளவில்லையா ?

தமிழ்நாட்டிலிருக்கும் பெரும்பான்மைத் தமிழர்கள், தமிழரல்லாத மற்ற இந்தியர்கள் ஈழத் தமிழர் பிரச்சனையை எப்படிப் பார்ப்பார்கள். இங்கிருந்து போய் இன்னொருவனிடம் தனிநாடு கேட்டால் அவன் சும்மா இருப்பானா? ஈழத் தமிழர்கள் மண்ணின் மைந்தர்கள் என்பதைக் கூடத் தெரியாத மண்டைகளுக்கு இதுதான் உண்மை என்று சொல்லிப் புரிய வைப்பதற்குள் உயிரே போய்விடுகிறது. அதே போல் பொதுப் புத்தியில், காஷ்மீர் என்பது எப்படிப் புரிந்து கொள்ளப்படுகிறது  காஷ்மீர் இந்தியாவைச் சார்ந்தது, பாகிஸ்தான் துண்டாட நினைக்கிறது, காஷ்மீரிகள் பிரிவினைவாதிகள், இஸ்லாமியத் தீவிரவாதிகள். இதைத் தாண்டி உண்மை என்னவென்று அறிய எவரும் விரும்புவதில்லை. காஷ்மீர் முதல் கன்யாகுமரி வரை என்று எதுகை மோனையாகப் பேசுமளவிற்கு வரலாறு திரிந்துள்ளது. உண்மையை விளக்கினால் தேசத் துரோகியாக்கி விடுகிறார்கள். அவர்கள் ஏன் நம்மைப் போல அமைதியாக வாழ்ந்து கிரிக்கெட்டை ரசிக்காமல் தெருவில் ராணுவத்திற்கு எதிராக உயிரைப் பணயம் வைத்துப் போராடுகிறார்கள் என்று சிந்திப்பதே இல்லை.  


தமிழர்கள் இனப்படுகொலையை சந்தித்தவர்கள் சம உரிமை மறுக்கப்பட்டவர்கள், ஆனால் காஷ்மீரிகள் சிறப்பு அதிகாரமுடையவர்கள் என்று சொல்கிறார்கள். ஆனால் மற்ற மாநிலங்களுக்கு இல்லாத சிறப்பு உரிமை காஷ்மீர்க்கு மட்டும் ஏன் இருக்கிறது என்று கேட்க வேண்டுமல்லவா ? அதில்தான் காஷ்மீர் ஏமாற்றப்பட்ட வரலாறே இருக்கிறது. பாகிஸ்தான் படைகள் நுழைந்த போது காஷ்மீரைக் காக்க இந்தியாவின் உதவி நாடப்பட்டது. இந்தியா ஆக்ரமிப்பு நோக்கத்துடன் காஷ்மீரை தன்னுடன் இணைத்துக் கொள்ளப்படாது என்றும், அவர்கள் ஆளும் அதிகாரம் அவர்களிடமே இருக்கும் என்றும் உறுதிமொழியுடன்தான் இணைத்துக் கொள்ளப்பட்டது.

காஷ்மீரிகள் ஜம்முவின் குடிகள், நாம் இந்தியக் குடிகள் என்பது போல

காஷ்மீருக்கு தனிக் கொடி உண்டு

தனி அரசமைப்புச் சட்டம் உண்டு
காஷ்மீர் கொடி
இப்படிப் பல உரிமைகள் 1957 இல் இந்திய அரசாலேயே ஏற்றுக் கொள்ளப்பட்டவையே. பல வருடங்கள் முடிந்த பின்னரும், வாக்கெடுப்பு நடத்தப்படாமல் இழுத்தடித்தாலேயே அவர்கள் போராட வேண்டியதாயிற்று. மேலும் ராணுவம், துணை ராணுவம், ஊர்க்காவல் படை என ராணுவத்தின் மூஞ்சியிலேயே 20 வருடங்களுக்கும் மேலாக வாழ வேண்டிய நிர்பந்தம்.

பின்பு உரிமைகளின்றி அடக்குமுறையும், புறக்கணிப்பும் தொடர்ந்த பின்னரே விடுதலைப் போராட்டம் தொடங்கியது 1980களின் பிற்பகுதிகளில். ராணுவ நடவடிக்கைகள் காரணமாக 70000 க்கும் மேற்பட்டவர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள், வீதியில் சோதனைகள், கைதுகள், கடத்தல், காணாமல் போதல் என்ற ராணுவத்தின் கொடுமைகள் நாளும் நடக்கின்றன.

அமர்நாத் பனிலிங்கத்தை வணங்குவதற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் செல்கிறார்களே அந்தக் குகையைக் கண்டு பிடித்தவரே ஒரு முஸ்லிம். யாத்திரை செல்கிறவர்களுக்கு வேண்டிய அடிப்படை உதவிகளைச் செய்கிறவர்களும் முஸ்லிம்களே. எனவே அவர்கள் இந்துக்களுக்கு எதிரானவர்கள் அல்ல. அப்படி இருப்பவர்கள் ஏன் இந்தியாவை எதிர்க்கிறார்கள் என்று எண்ண வேண்டாமா ? போராட்டம் நடக்கும் இடங்களில் அதை சிதைக்க இனவாதம், மதவாதம் தூண்டப்படுவது எல்லா அரசுகளும் செய்வதுதான். காஷ்மீரிலும் அதுதான் நடந்தது.

சிறுவர்கள், முதியவர்கள், பெண்கள் என அனைத்துத் தரப்பினரும் ராணுவத்தினர் மீது கல்லை விட்டு எறிகிறார்களே ஏன் அப்படி ஆனார்கள் என்று சிந்திக்க வேண்டாமா ? இராணுவத்தின் கண்காணிப்பில் வாழும் கொடுமையைப் புரிந்து கொள்ள வேண்டாமா ?

காஷ்மீர் மட்டுமல்ல வடகிழக்கு மாநிலங்கள் பலவும் இந்நிலைதான் நிலவுகின்றன. மணிப்பூர் பெண்கள் நடத்திய நிர்வாணப் போராட்டம் ஒன்று போதும் இந்திய ராணுவத்தின் யோக்கியதைக்கு, ஈழத்திற்கு இசைப்பிரியா என்றால், மணிப்பூரில் மனோரமா தேவி, காஷ்மீரில் நிலோஃபர் ஜான் என எல்லா இடத்திலும் ஒரே வகையான வன்முறைகள்.

ஐரோம் ஷர்மிளா ஏன் 12 வருடங்களாக பட்டினிப் போராட்டம் நடத்துகிறார் ? என்றெல்லாம் யோசிக்காமல் காஷ்மீர் பிரிவினைவாதத் தலைவர் என்று ஒரே அடியில் கொச்சைப் படுத்துகிறார்கள். இது எப்படி இருக்கிறதென்றால் ?

இந்தக் கமல்ஹாசன் இருக்கிறாரே அவர் இஸ்லாமோஃபோபியாவுக்கு எதிரானவர், கமல் ஹாசன் என்ற தனது பெயர் தான் எந்த மதத்தைச் சார்ந்தவன் (இந்துவா அல்லது முஸ்லிமா) என்ற குழப்பத்தை மற்றவர்க்க்கு ஏற்படுத்துவதை பெருமையாகக் கருதிகிறவர். ஷாருக் கான் தனது இஸ்லாமியப் பெயரால் அமெரிக்க விமானத்துறை அதிகாரிகளால் அவமானப் படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, தனது பெயரை அரபி ஒலியுடன் இருக்குமாறு மாற்றிக் கொள்வதாகக் கூறினார். அவ்வளவு மனிதாபிமானமுடையவர் தனது விஸ்வரூபம் படத்தில் அமெரிக்காவினால் ஆக்ரமிக்கப்பட்ட ஆஃப்கானிஸ்தான் தாலிபான்களிடமிருந்து அமெரிக்காவைக் காக்கும் இந்தியனாக நடித்தார் என்பது எத்தகைய முரண்நகை. அப்படித்தான் இருக்கிறது சிலருடைய கருத்து. நான் இந்தியன் எனவே இந்தியா என்ன செய்தாலும் அது தவறில்லை நான் தேசபக்தியின் காரண்மாக ஆதரிப்பேன். நான் தமிழன் எனவே புலிகள் என்ன செய்தாலும் ஆதரிப்பேன் என்ற கொள்கையெல்லாம் எனக்கில்லை.

அது போலவே ஈழத் தமிழர்களின் துன்பத்தைக் கண்டு இரங்குகிறவர்கள், யாசின் மாலிக்கின் வருகையை எதிர்ப்பது எந்த வகையில் சேர்த்தி ? இவருக்காக ஆதரவு தரும் முஸ்லிம்களைக் கண்டு இவர்கள் முகம் சுளிக்கிறார்கள். முஸ்லிம்கள் என்றால் தீவிரவாத, பிரிவினைவாத, இறையாண்மைக்கு எதிரானவர்களை ஆதரிக்கிறார்கள். இது எப்படி இருக்கிறதென்றால் ஈழத் தமிழர் துன்பம் பற்றிப் பேசினால் புலி பயங்கரவாதம் பற்றிப் பேசும் சோ வைப் போலவே நடந்து கொள்கிறார்கள். காஷ்மீரிகள் துன்பம் என்பது மற்ந்து பிரிவினைவாதம் மட்டுமே முன் தெரிகிறது.
 

புலிகளை நாம் ஆதரிப்பதை மற்ற மாநிலத்தவர்கள் எப்படிப் பார்க்கிறார்கள் என்று சிந்தித்துப் பாருங்கள். பிரதமர் ராஜீவைக் கொன்ற பயங்கரவாதிகளை ஆதரிக்கிறார்கள் தமிழர்கள்  என்றுதானே நினைப்பார்கள்.

யாசின் மாலிக்கை அழைத்து வருவது இந்தியாவை ஈழத்துக்கு எதிராகத் திருப்பாதா ? இப்போது இந்தியா ஈழத்தை எப்படிப்பார்க்கிறது ? இந்தியாவின் இறையாண்மை மேல் மதிப்புடையவர்கள் ஈழம் பற்றியே பேசக் கூடாது என்றுதான் இந்தியா சொல்கிறது, கருணாநிதி டெசோ மாநாடு அறிவித்தவுடன் சிதம்பரம் ஓடி வந்து ஈழம் என்ற சொல்லையே பயன்படுத்தக்கூடாது என்றும் அது இந்திய இறையாண்மைக்கு எதிரானது என்றும் சொல்லவில்லையா ? ஈழ அகதிகள் தமிழகத்தில் எப்படி நடத்தப் படுகின்றனர் ?

5 வருடங்களுக்கு முன்பு இயக்குநர் சீமான் போர் நிறுத்தம் கோரி, தமிழ்த் திரை இயக்குநர்கள் கலந்து கொண்ட பட்டினி போராட்டத்தில் உரையாற்றினார். அவரது உரை பரந்த வரவேற்பைப் பெற்றது. அவரது கருத்துக்களை காங்கிரஸ், பாஜகவினர் பலரும் எதிர்த்தனர். அதற்குப் பின்பு அவர் பல முறை தேசியப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சிறை சென்றார். பலரது ஆதரவையும் பெற்றார். ஈழ ஆதரவுப் போராட்டங்களினாலேயே அவர் பலருக்கும் பிடித்தவரானார். பின்பு ஜெயா தொலைக்காட்சியில் பேட்டி கொடுத்த போது பலத்த விமர்சனத்துக்குள்ளானார். பின்பு திமுகவை மட்டுமே எதிர்த்து வந்தார். நாம் தமிழர் கட்சியின் கொள்கை ஆவணம் வெளியிடப்பட்ட போது இந்திய இறையாண்மையைக் காக்க செயல் படுவோம் என்ற வரிகளுக்கும், திராவிட எதிர்ப்புக்கும் கடுமையாக விமர்சிக்கப் பட்டார். இஸ்லாமியர்களையும் எச்சரிக்கையுடன் கையாளவேண்டும் என்றும் குறிப்பிட்டு அவர்கள் தனிமைப்படுத்தப் பட்டிருந்தனர். பின்னும் ஜாதிக் கூட்டங்கள்லெல்லாம் கலந்து கொண்டார். இனவெறியனாக நடந்து கொண்டார்.
அதற்கெல்லாம் பதிலாக இது அமைந்துள்ளது இவ்வளவு நாட்களுக்குப் பின்னர் ஒரு நேர்மையான செயலைச் செய்திருக்கிறார். இதற்கு தனக்கு பலத்த எதிர்ப்பு வரும், சிறை செல்லவும் நேரிடும் என்று தெரிந்தே செய்திருக்கிறார்.

வழக்கமாக ஈழத் தமிழர்க்காக முஸ்லிம்கள் குரல் கொடுப்பதில்லை என்று குறை கூறிக் கொண்டிருப்பார்கள், இங்கு காஷ்மீரிலிருந்து முஸ்லிம்கள் தலைவர் ஒருவர் ஆதரவு சொல்கிறார். இவர்கள் பிரிவினைவாதியின் ஆதரவு தேவையில்லை என்கிறார்கள். எங்கள் மீது குண்டு வீசிய இந்தியாவின் ஆதரவும், போருக்கு பணம் வழங்கிய மேற்கு நாடுகளின் ஆதரவும் மட்டுமே வேண்டும் என்கிறார்கள். 

இந்தியத் தலைவர்கள் இறையாண்மையுள்ள நாட்டில் தலையிட முடியாது என்கிறார்கள் ஆனால் காஷ்மீரின் இறையாண்மையில் மட்டும் தலையிடுகிறார்கள். காஷ்மீரிகள் இந்தியா பாகிஸ்தான் ஆகிய இருநாடுகளாலும் ஆக்ரமிக்கப்பட்டவர்கள். 5 இலட்சத்திற்கும் மேலான ராணுவத்தினர் காஷ்மீரைக் காவல் காத்து வருகின்றனர். இதை வைத்து காஷ்மீர் மக்களை போலி என்கவுன்டரில் கொல்லவும், பெண்களை வன்புணரவும் செய்ய பல நூறு கோடிகள் செலவிடப் படுகின்றன. அதே நேரம் அடிப்படை உரிமைகள் வாழ்வாதாரம், வேலை என அனைத்தும் புறக்கணிக்கப்படுகின்றன. அதை எதிர்த்து அவர்கள் போராடினால் அது தேசபக்தர்களுக்கு பொறுக்கவில்லை.
Download As PDF
Bookmark and Share

Post Comment

தென் அமெரிக்கத் தலைவர்களுக்கு புற்று நோயைப் பரப்பியது சிஐஏ ?


இது ரஷ்யாவைச் சேர்ந்த இணையத்தளமொன்றில் ஒரு வருடத்திற்கு முன்பு வெளியான கட்டுரை. இரண்டு நாட்களுக்கு முன்னர்தான் இதைப்படித்தேன். சாவேஸின் இறப்பும் அதைத்தொடர்ந்து நிகழ்ந்து விட்டதால் இதை மொழிபெயர்க்க வேண்டும் என்று தோன்றியது. இதை நம்புவது சிலருக்குக் கடினமாக இருக்கலாம். அதற்கு முன்பு உலகில் எய்ட்ஸ் பரவியது என்பது எப்படி என்பதையும் படித்து விட்டால் இதை நம்புவது அவ்வளவு சுலபம். இது உண்மையாக இருக்கலாம் இல்லாமலும் போகலாம். ஆனால் நடந்திருக்கவே முடியாது என்று மட்டும் சொல்ல முடியாது.

கடந்த 18 மாதங்களில் லத்தீன் அமெரிக்காவைச் சேர்ந்த 4 (முன்னேற்றத்தை விரும்பும்) முற்போக்குவாதத் தலைவர்களும் மக்களும் மருத்துவர்களால் வெளியிடப்பட்ட தகவலைக் கேட்டு அதிர்ந்து போயினர். மருத்துவர்கள் சொன்ன தகவல் புற்று நோய். 


ஃபெர்னாண்டோ லூகோ (Fernando Lugo) - பராகுவே

லூயிஸ் இனாசியோ லூலா ட சில்வா (Luis Inacio Lula da Silva) மற்றும் டில்மா ரௌஸஃப் (Dilma Rousseff) - பிரேஸில்

ஹியூகோ சாவேஸ் - வெனிசுலாவோ

சமீபத்தில் கிறிஸ்டினா ஃபெர்னாண்டஸ் டி கிரிஸ்னர் - அர்ஜென்டைனா

ஆகியோரிடம் புற்றுநோய் கண்டறியப்பட்டுள்ளது. இவர்களின் இனிமேல் உயிர்வாழ்வதும் கேள்விக்குறியாகியுள்ளது.


சாவேஸ் "தனக்குத் தேவையில்லாத தலைவர்களை அழிக்கும் அமெரிக்காவின் ஆயுதமே இந்த நோயாக இருக்கலாம்" என்று கூறினார். ஆனால் முரணாக இந்தத் தலைவர்கள் தமது பதவிகளிலிருந்தோ பொறுப்புக்களிலிருந்தோ விலகவில்லை. தமது ஆதரவைப் பெருக்கிக் கொண்டதுடன் தமது ஆதரவாளர்களிடம் ஊர்வலமும் சென்றார்கள்.

முதன் முதலாக 2010 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பராகுவே அதிபர் ஃபெர்னாண்டோ லூகோவின் நிணநீர் மண்டலத்தில் (lymphatic system) புற்றுநோய்க் கட்டிகள் கண்டறியப்பட்டன. சாஓ பௌலோவிலும் (Sao Paulo)  அசன்சனிலும் (Asuncion) ஆறு முறை வேதிச்சிகிச்சை (chemotherapy) எடுத்துக் கொண்ட பிறகு புற்றுநோய்க்கட்டிகள் மறைந்தன. இவர் 2008 - இல் தேர்ந்தெடுக்கப்பட்டவர், தனது தேவாலய பதவியை (ecclesiastical rank)  விட்டு விலகியவர், பராகுவே நாட்டின்  இரண்டாவது இடதுசாரியத் தலைவர்.
66 வயதான பிரேஸிலின் முன்னாள் அதிபரான லூயிஸ் இனாசியோ லூலா ட சில்வா வுக்கு அக்டோபர் 2011 இல் தொண்டைப் புற்றுநோய் (larynx cancer) கண்டறியப்பட்டது. ஆனால் அதற்கு முன்பே தில்மா ருஸ்ஸஃப் - இடம் பதவி மாறியிருந்தது. லூயிஸ் இனாசியோ சிகிச்சை மேற்கொள்ளும்பட்சத்தில் அவர் நிரந்தரமாகவே பேசும் ஆற்றலை இழந்து விடக்கூடும் என்பதால் மருத்துவர்கள் அவருக்கு அறுவை சிகிச்சை அளிக்கவில்லை.

அவர் பல முறை எடுத்துக்கொண்ட வேதிச்சிகிச்சையின் காரணமாக அவருக்கு இருந்த புற்று நோய் 75% குணமாகி விட்டது. அவர் அரசியலுக்குத் திரும்ப வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். 2003 -லிருந்து 2010 வரை பிரேஸிலின் அதிபராக இருந்த லூலா வறுமையைக் குறைத்தார், லத்தின் அமெரிக்க நாடுகளின் ஒருங்கிணைத்தார், பிரேஸிலின் பொருளாதாரத்தை உலகின் பெரிய நாடுகளின் அளவுக்கு உயர்த்தினார்.
நெஸ்டர் கிர்ச்னர் உடன் சாவேஸ், ஃபெர்னாண்டோ லூகோ
57 வயதான வெனிசுவேலாவின் அதிபர் 2011 ஆம் ஆண்டு ஜூன் மாத இறுதியிலிருந்து சிகிச்சை எடுத்துக் கொள்ளத் துவங்கினார். அவர் எந்தவகைப் புற்று நோயால் பீடிக்கப்பட்டுள்ளார் என்பதற்கான தரவுகள் இதுவரை இல்லை. ஹவானாவில் ஜூலை 20 ஆம் நாள் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. நான்கு முறை வேதிச் சிகிச்சையும், பல ஆய்வுகளும் செய்யப்பட்ட பின்பு அவருக்கு நோய் குறைந்தது. அவர் 1999 - லிருந்து, 2012 வரையில் அதிபராக இருந்தார். தற்போது மூன்றாம் முறையாகப் போட்டியிடவிருக்கிறார்.

இறுதியாக டிசம்பர் 2011 இல் 58 வயதான அர்ஜென்டினா அதிபர் கிறிஸ்டினா ஃபெர்னாண்டஸ் டி கிரிஸ்னர் 2012 ஜனவரி மாத தொடக்கத்தில் தைராய்டு சுரப்பியில் ஏற்பட்ட புற்றுநோய்க்காக அறுவை சிகிச்சை மேற்கொள்ளவிருக்கிறார், உடல் நிலையில் முன்னேற்றமும் காண்பார் என்று ஊடகங்கள் கணித்தன. கிறிஸ்டினா ஃபெர்னாண்டஸ் டி கிரிஸ்னர் 2011 டிசம்பரில் மீண்டும் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார், தீவிரமான அமெரிக்க எதிர்ப்பாளராகவும் இருக்கிறார்.

முதன்முதலாக இது குறித்து ஐயத்தை வெளியிட்டவர் ஹியூகோ சாவேஸ். "நான் குறிவைக்கப்படுவதினால் அன்சுகிறவனல்ல ஆனால் தனக்கு எதிரான தலைவர்களை நீக்குவது என்பது பேரரசின் (அமெரிக்கா) நீண்டகால வழமையாக இருக்கிறது. என்னிடம் ஆதாரமில்லை ஆனால் நிச்சயமாக ஏதோ ஒரு புதுமையான காரணம் லத்தீன் அமெரிக்க முற்போக்குத் தலைவர்கள் விசயத்தில் இருக்கிறது" என்று கூறினார் சாவேஸ்.

அவர் சரியாகச் சொல்லியிருக்கிறார் என்பதை ஃபிடல் காஸ்ட்ரோ மீது பலமுறை கொலை முயற்சி மேற்கொள்ளப்பட்டது என்பதிலிருந்து அறியலாம். வெனிசுலாவின் எழுத்தாளர் லூயிஸ் ப்ரிட்டோ கார்சியா என்பவர் கருத்துப்படி அமெரிக்க உளவுத்துறை (CIA) 900 முறைகளுக்கும் மேலாக காஸ்ட்ரோவைக் கொலை செய்ய முயன்றுள்ளது. லத்தீன் அமெரிக்க நாடுகள் அமெரிக்க ஐக்கிய நாடுகள் மட்டுமல்ல, இஸ்ரேலுக்கு எதிராகவும் ஒன்றிணைந்துள்ளன. ஏனென்றால் ஏறக்குறைய அனைத்து லத்தீன் அமெரிக்க நாடுகளும் பாலஸ்தீன விடுதலையை அங்கீகரித்துள்ளன. எனவே சிஐஏ மட்டுமல்லாது மொசாத்தின் பங்கு குறித்து ஆராய வேண்டும். இன்னொரு விசித்திரம்  என்னவென்றால் சாவேஸ் நோய்வாய்ப்பட்டதையும், அவரது விந்துப்பை (Prostate) புற்றுநோய் பற்றிய தகவலை முதன் முதலில் வெளியிட்டது, சிஐஏவினைச் சார்ந்த ஊடகம், நூவோ ஹெரால்ட், இது அமெரிக்க அரசாங்கத்தின் உதவியால் வெளியாகும் செய்தி நாளிதழாகும்.

புற்றுநோய் என்பது உளவுத்துறையால் பயன்படுத்தப்படும் ஆயுதங்களின் பக்க விளைவுகளா ? இல்லை வெறும் தற்செயல் நிகழ்வுகள் எதிரிகளான லத்தீன் அமெரிக்க அரசுகளை சுற்றி நடக்கின்றனவா? இந்த சதிக்குப் பல முன்தேவைக் காரணங்கள் இருக்கலாம். மிகவும் இன்றியமையாத  ஒன்று, 


தென் அமெரிக்க நிகரமைவாதம் (சோஷலிசம்) உருவாவதைத் தடுப்பது.

இரண்டு, methods of operation have been developed, and the most unsuccessful ones are   discussed by the entire world என்று குறிப்பிட்டுள்ளார்கள் எனக்குப் புரியவில்லை. ஒரு வேளை நேரடியான போர் நடவடிக்கைகள் தோல்வியுற்றும் உலகத்தால் பேசப்படுகின்றதைச் சுட்டலாம்.

மூன்றாவதாக அறிவியல் கண்டுபிடிப்புகளின் சாத்தியப்பாட்டின் மூலம் உயிரியல், வேதியியல், மின்னணு ஆயுதங்களை பயன்படுத்தி இது போன்ற மறைமுகமான உள்நாட்டுப் போர்கள் நடத்த முடியும்
 
இங்கே கவனத்தில் கொள்ளப்பட வேண்டியது என்னவென்றால், யாருடைய கொள்கைகளெல்லாம்  அமெரிக்காவின் ஆதிக்கத்துக்கு எதிரானதாக இருந்ததோ அவர்களுக்கு மட்டுமே இந்நோய்கள் கண்டறியப்பட்டுள்ளன.  எல்லாவற்றுக்கும் முன்பாக, குருதிப் புற்றுநோயால் அவதிப்பட்ட பாலஸ்தீன அதிபர் யாசர் அராஃபத் 2004 இல்  விசித்திரமான முறையில் இறந்தார். ஃப்ரான்ஸ் நிபுணர்களின் கருத்துப்படி, அவர் குருதியோட்ட ஒழுங்கு சிதைந்து குருதிக்கசிவு மூளையில் ஏற்பட்டதன் காரணமாக இறந்தார். குருதியோட்டம் மாறக் காரணமாக இருந்தது பெயரிடப்படாத ஒரு தொற்றுக் கிருமிதான். இதனால் நோயாளியின் குருதிச்சிறுதட்டுக்கள் (blood platelet) எண்ணிக்கை குறைந்தும், வெள்ளை அணுக்கள் அதிக எண்ணிக்கையிலும் இருக்கும். இதே போன்ற அறிகுறிகள் புற்றுநோய், நுரையீரல் அழற்சி (inflammation of the lungs) மற்றும் சில வகை குருதிக் குறைபாடு உட்பட பலவகையான பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டவர்க்கும் காண முடியும்.

போலோனியம் - 210 மூலம் ரசாயன நச்சூட்டப்பட்டதால் மர்மமான முறையில் 2004 இல் இலண்டனில் இறந்தவர் அலெக்ஸாண்டர் லிட்வினென்கோ (ருஷ்ய உளவாளி பின்னர் இங்கிலாந்து உளவாளி).  எந்த சிறப்புப் படை இதை செய்தது என்று தெரியவில்லை எனினும், இவர் உடலின் முக்கிய உள் உறுப்புக்களைத் தாக்கும் புற்றுநோயால் இறந்தார். இதே மாதிரியாக உக்ரேனின் முன்னாள் அதிபரான விக்டர் யுஸ்சென்கோ அதிதூய டையாக்ஸின் (dioxin of high purity) மூலம் நஞ்சூட்டப்பட்டார். இந்த ரசாயனம் ருஷ்யாவுக்கு வெளியே எங்கோ ஒரு ஆய்வகத்தில் தயாரானது. இது மூக்கு - மூச்சுக் குழாயில் புற்றுநோயை உருவாக்கும் திறனுடையது.

அமெரிக்கா தனது, ஆப்கான், ஈராக் படையெடுப்புக்களின்போது பல புதுவிதமான ஆயுதங்களையும் போரில் பயன்படுத்தி ஆய்வு செய்தது. உதாரணத்திற்கு நுண்ணலைத் துப்பாக்கிகள் எனப்படுகின்ற ஆயுதங்கள்,  நுண்ணலை அடுப்பு (conventional microwave oven)  செயல்படும் விதியின் படி இயங்குகின்றவை, அவை குறுங்கிய பீம் - ல் (narrow beam) அடைக்கப்பட்டிருந்தாலும் அதன் பாதிப்புக்கள் பரவலாக இருக்கும். புற்று நோயை பரப்புவதுடன் அவை அதற்குச் சற்றும் குறையாத இன்னொரு தன்மையும் வைத்திருக்கின்றன. தோல்களிலும் செல்களின் இடைவெளிகளிலுமுள்ள (intercellular space) நீரை வெப்பமாக்கிவிடும் தன்மையுடையவை, உயிரைக் கொல்லாது என்றபோதும், தீக்காயத்துக்கு இணையான வேதனையை உண்டாக்கும். இது போன்ற அறிகுறிகளுடன் இறந்த ஒருவர்
அர்ஜென்டைனா அதிபர் நெஸ்டர் கிர்ச்னர். 2011 ஆம் ஆண்டுக்கான அதிபர் தேர்தல் போட்டிக்கு வேட்புமனுவை விண்ணப்பித்த பின்னர்   அதிபர் நெஸ்டர் கிர்ச்னர் திடீரென 27 அக்டோபர் 2010 இல் இறந்தார்.

விக்கிலீக்ஸ் கூறிய தகவல், 2008 இல் சிஐஏ தனது பராகுவே தூதரகத்திடம் கேட்ட தகவல்கள் என்னவென்றால் பராகுவே நாட்டின் அதிபர் தேர்தலில் போட்டியிடும் நான்கு பேர்களின் டிஎன்ஏ குறியீடு உள்ளிட்ட உயிரிபுள்ளியல் தரவுகள் (biometric data). புற்று நோயால் பாதிக்கப்பட்ட பராகுவே அதிபர் ஃபெர்னாண்டோ லூகோவை நினைவில் கொள்க ஒருவரின் டிஎன்ஏ குறியீட்டைப் பயன்படுத்தி ஆன்கோஜீன்கள் அல்லது புற்றணுக்கள் (oncogene) எனப்படும் புற்றுநோயினை உண்டாக்கும் அணுக்களை உருவாக்கிட முடியும். இதே  நிகழ்வை பிரேஸிலின் தேர்தலுக்கு முன்பு நடந்ததாகக் கருதினால்  பிரேஸில் அதிபர் தில்மா ருஸ்ஸஃப் புற்று நோயால் பாதிக்கப்பட்டது எப்படி என்றும், இது  போலவும் நடந்திருக்கலாமென  ஐயப்படுவதற்கும் இடமுண்டு.

தனது செல்வாக்கின் ஒரு பகுதியை லத்தீன் அமெரிக்காவில் இழந்து விட்டது அமெரிக்கா. எனவே தனக்கு வேண்டாத தலைவர்களைச் சமாளிக்க மிகவும் சுலபமானதும், செலவில்லாததுமான வழியைத் தேர்ந்தெடுத்துள்ளது. அதிக காலம் ஆல்பா கதிர்வீச்சுக்குட்படுத்தல், மின்காந்த அலைகள், அல்லது ரசாயன ஆயுதங்கள் மூலமாக உடனடியாக புற்றுநோயையும் பரப்ப இயலும். இந்த வகையான அனுபவங்களை பயன்படுத்தி, சிஐஏ தனது ஆயுதங்களை முற்போக்குவாத, புரட்சிகர லத்தீன் அமெரிக்கத் தலைவர்களிடம் ஆய்வு செய்கிறது.

அமெரிக்கப் பொருளாதாரமும் கிரீஸுக்கு இணையான தோல்வியைத்தான் சந்தித்துள்ளது. பணத்தை அச்சடிக்கும் இயந்திரத்தினைக் கொண்டுதான் இன்னும் கடனில் மூழ்காமலிருக்கிறது. இருப்பினும், அமெரிக்க அரசு இராணுவத்தை பயன்படுத்தி, எல்லோரையும் ஆதிக்கம் செய்ய பணம் அதிகமாகுமென்பதால்  அதை விரும்பவில்லை. எனவே எதார்த்தத்திற்கேற்ப செலவில்லாத, உடனே செயல்டுத்தக் கூடிய முறைகளைப் பயன்படுத்தி எதிரிகளை அழிக்கிறது. இதில் இன்றியமையாத முன்னேற்றம் என்னவெனில் இந்த முறையிலான ஆயுதங்கள் எவ்வித தடயங்களுமில்லாமல், நேரடியாகவும் தாக்காமல் யாருக்கும் பொறுப்பேற்க வேண்டிய சுமையே இல்லாமல் மறைமுகமாகவே தாக்குபவை.
Download As PDF
Bookmark and Share

Post Comment

குமுதம் திருந்தாது !!


ஒரு நடிகையின் படத்தைப் போடுவதற்கு ஏதாவது ஒரு கருத்தோ அல்லது கிசு கிசுவோ அல்லது பயோடேட்டாவோ போடுவார்கள்.

ஆனால் ஒரு பொம்பள இறந்தால் கூட அவள் சின்ன வயசுல ஜட்டியுடன் இருக்கும் படத்தைப் போடுமளவிற்கு தரம் தாழ்ந்த அச்சு இதழ்கள் தமிழ்நாட்டில் இருக்கின்றன. ஒரு வேளை பிணம் நிர்வாணமாக இருந்து விட்டால் அதையும் வெளியிடத் தயங்குவதில்லை இவர்கள்.

இவர்கள் வெளியிடும் செய்திகள் திரைப்பட நடிகர்களைக் குறித்ததாக இருப்பின் முடிக்கும் போது ஆம் ஆம் என்றுதான் முடிப்பார்கள். சொல்லிவிட்டாராம், பேசிவிட்டாராம், முடித்துவிட்டாராம் என்று ஒரே ராம் புராணாமாக இருக்கும். இப்படிச் சொன்னால்தான் கிசு கிசு பரவும்.

அதற்கு தற்போதைய உதாரணம்; தோழர் காஜல் அகர்வால் அவர்கள் தமிழ் படத்தை விடவும் தெலுங்குப் படத்தில்தான் பெண்களுக்கு மரியாதை கொடுக்கிறார்கள் என்று சொல்லிவிட்டார். பாரதிராஜா உணர்ச்சி வசப்பட்டு, காஜலை அறிமுகப்படுத்தியதற்காக வெட்கப்படுகிறேன் என்று அவரது எதிர்வினையை வெளியிட்டிருக்கிறார்கள்.

இந்தச் செய்தியில் பாரதிராஜா வின் படத்தையும், கூடவே ஒரு நடுநிலை கருத்துச் சொன்ன ஜனனியின் புகைப்படத்தையு சிறிய அளவில், பிரசுரித்து விட்டு, காஜலின் சேலை விலகி வயிறு தெரியுமாறு இருக்கும் செக்ஸியான படத்தையும் போட்டிருக்கிறார்கள். நான் படம் பாடல்கள் பார்ப்பதை ஏறக்குறைய நிறுத்தி விட்டதால், எது எந்தப் படம் என்பது குறித்த பொது அறிவு குறைவு. ஆனால் காஜலின் அந்தப்புகைப்படம் தெலுங்குப் படத்தில் வருவதாக இருக்கலாம். ஒரு வேளை இதைத்தான் தெலுங்குப் படத்தில் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் என்றும் சொல்லியிருக்கலாம்.

எனக்கு என்ன ஐயமென்றால், இங்கே தமிழர்களைக் கேவலப்படுத்திய காஜல் மீது ஆத்திரம் வரவேண்டுமா அல்லது காஜலின் புகைப்படத்தைப் பார்த்து வேறெதாவது உணர்ச்சி வர வேண்டுமா? அந்த உணர்ச்சி வந்த பின் ஏதாவது நடக்க வேண்டுமா? என்ன விரும்புகிறது குமுதம்.

இதே பதிவு கொஞ்ச நாளுக்கு முன்புதான் எழுதினேன் எந்த மாற்றமுமில்லாமல். குமுதம் அப்படியேதான் இருக்கும். எனக்கு மீண்டும் பல முறை இதே பதிவை எழுதவைக்கும். 

குமுதம் ரிப்போர்ட்டர் என்ற புலனாய்வு வார இதழ் குஷ்புவையும், முகவையும் பெரியார் மணியம்மையாகச் சித்தரித்து நூறாவது தடவையாக தனது இயல்பை வெளிப்படுத்தியிருக்கிறது. அப்படியெல்லா
ம் யோசிப்பதற்கு, வெளியிடுவதற்கு, இது போன்ற நடிகைகளின் செக்ஸியான படங்களைப் போட்டு இல்லாததும் பொல்லாததுமான செய்திகளை நாட்டு நடப்புக்கு இணையான செய்திகளாக்குவதும்தான் காரணம். இறுதியில் அஃசல் குருவின் தூக்குத் தண்டனையை ஆதரித்து தனது பொது மனசாட்சியைக் காட்டியிருக்கிறது.

இது மட்டுமல்ல, ஆர்யா தமிழ் ரசிகர்களைக் கேவலப்படுத்தியது மாதிரியான தமிழகத்தின் மானம் காக்கும் முக்கியமான செய்திகளைச்சொல்வது பிரச்சனையைக் கிளப்புவது. இப்படியாக குமுதம் கிளப்பிய பிரச்சனைதான் ஜெயராம் கருத்த தமிழ்ப் பொண்ணு என்று தனது பணிப்பெண்ணை வர்ணித்ததை, தமிழர்களைக் கேவலப்படுத்தி விட்டதாகத் திரித்து பிரச்சனையாக்கியது.

ஆனால் இது வெளியிடும் பெண்கள் யாரும் தமிழ்ப் பெண்களாக இருக்க மாட்டார்கள், வட இந்திய, மலையாளப் பெண்களின் படங்களை மட்டுமே வெளியிடும் ஏனென்றால் அவர்கள்தான் பெருந்தன்மையாக உடையணிபவர்கள், குமுதத்திற்கு அந்த மாதிரியான படங்கள்தான் தேவை. என்னதான் ஃபாரின் பிகர்ஸ் பார்த்தாலும், நம்ம ஊரு ஃபிகருகளை சைட்டடிப்பதுதான் சுகமே என்று கருதும் வாசகர்களும் இருப்பதால், அப்பப்ப ஏதாவதொரு கல்லூரியில் சென்று 10 கல்லூரி மாணவிகளின் கருத்துக்கள் என்று இந்தியா முன்னேற்றமோ அல்லது, பிடித்த நடிகர்கள் குறித்த கருத்துக்களை விவாதங்கள் என்று போட வேண்டியது வெறும் படங்களைப் போடக்கூடாதல்லவா இதென்ன வலைப்பூவா இல்லை ஃபேஸ்புக்கா வெறும் பொம்பளப் படங்களை பகிரவும், வெளியிடவும் ஒரு நியாயம் வேண்டாமா. ஏதாவது மாடலிங், மிஸ் சென்னை, மிஸ் ஆசியா, அல்லது ஏதாவதொரு விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற பெண் தமிழகத்திற்கும், தமிழர்களுக்கும் பெருமை சேர்த்திருக்கிறார், அவர் சென்னையைச் சேர்ந்த சுத்தத் தமிழ்ப் பெண் என்று பல பேரைப் போட்டிருக்கிறார்கள். அதில் எத்தனை பேர் தமிழ்ப் பெண்கள் என்றுதான் தெரியவில்லை.

சிறுகதையில் கூட வரையப்படும் படங்களில், முந்தானை நூல் மாதிரிதான் சுருண்டு கிடக்கும், ரவிக்கை தாழ்வாகவும் இருக்கும் நடுவில் ஒரு கோட்டை தவறாமல் வரைந்திருப்பார்கள். தொப்புளையும் வரைந்திருப்பார்கள், யார்தான் உலகத்தில் அப்படியெல்லாம் சேலை கட்டுவார்களோ தெரியவில்லை. சுடிதாராக இருந்தால் நன்றாக உடலைக் கவ்விப் பிடித்து வடிவைக் காட்டும்படி இறுக்கமாக இருக்கும். க்லீவேஜ் நிச்சயம்.

விளையாட்டு வீராங்கனகளின் படங்களைப் போடுகிறார்கள். அவர்கள் ஸ்போர்டி அல்லது மினி ட்ரொசர் மாதிரியான உடைகளுடன் இருக்கும் படங்கள் போடுகிறார்கள். இதை தவறானதாக சொல்ல வில்லை. குமுதத்தின் வாசகர்களாக இருப்பவர்களுக்கு குமுதம் எதனைப் பழக்கப்படுத்தி வைத்திருக்கிறது. நடிகைகளின் அந்தரங்க வாழ்க்கை குறித்து கிசுகிசுக்களை மானாவாரியாகப் பரவவிடுவது, ஏதாவதொரு படத்தில் பிகினியில் நடித்தைப் படமாகப் போடுவது, இல்லை செய்தியாக முடியாவிட்டால் இரு அனுமானமாகவாவது போடுவது. இதையெல்லாம் படிக்கும் காணும் குமுதம் வாசகனுக்குப் பெண்ணைப் பார்த்தாலே சைட்டடிக்கவும், மார்க் போடவும், அளவெடுக்கவும், கேலி செய்யவும், கமெண்ட் அடிக்கவும்தான் கற்றுக் கொடுக்கிறது. அந்த மன்நிலையுள்ளவன் சானியாவையோ சாய்னாவையோ, தீபிகா பல்லிகலையோ அல்லது வேறு யாராவது விளையாட்டு வீராங்கனையையோ பற்றிய செய்திகளையும், புகைப்படத்தையும் வெளியிடும்போது அவைகளை என்ன கோணத்தில் பார்ப்பான் என்று குமுதம்தான் சொல்ல வேண்டும்.

இன்னொரு பிரச்சனையை சில நாட்களுக்கு முன்பு கிளப்ப முயன்றது குமுதம். நடிகை சுஹாசினி சொன்னார். கதாநாயகன் முடிவெட்டாமல், சவரம் பண்ணாமல் எப்படி இருந்தாலும் கதாநாயகி மட்டும் அனுஷ்கா மாதிரி அழகாக இருக்கிறார்கள். எங்களுக்கு மட்டும் அழகான ஹீரோக்களைப் பார்க்கணுன்னு ஆசையிருக்காதா ? எம்ஜிஆர், கமல், அரவிந்த் சாமிக்கு அப்பறம் ஹேண்ட்சம் ஆன ஹீரோக்களையே பாக்க முடியல என்று சொல்லியிருந்தாராம். அதை அப்படியே தமிழ்ப்படங்களில் அவர் சொன்னதையே செய்து கொண்டிருக்கும் சில் இயக்குநர்கள், நடிகர்களிடம் சொல்லி அவர்களின் கருத்தை வாங்கி அதை, சுஹாசினிக்கு எதிராகப் பொங்கும் தமிழ் ஹீரோக்கள் என்று ஒரு பிரச்சனையாக சித்தரிக்க முயன்றது. அப்புக் குட்டி, தருண்கோபி, விதார்த், இன்னும் யாரோ இருவர். இவர்களெல்லாம் சொன்னது சுஹாசினி அப்படியெல்லாம் சொல்லியிருக்கக்கூடாது, தமிழ்நாட்டில் இருக்கும் பெரும்பான்மையான ஆண்கள் சராசரியான தோற்றம் கொண்டவர்கள்தான் என்ற பொருளில் என்று சொல்லி வருத்தப்பட்டிருந்தார்கள். இதில் யார் சொன்னது சரி தமிழ் திரை ரசிகர்கள் எல்லாரும் சொல்வதைத்தான் சுஹாசினி சொன்னார். இந்த நடிகர்கள் எல்லாம் சராசரியான ஆணின் தோற்றம் அல்லது பொறுக்கியாக இருக்கும் ஒருவன் அந்த வட்டாரத்திலேயே அழகான கதாநாயகியைக் காதலிப்பதாக அல்லது ஆசைபடுவதாகக் காட்டி அந்தக் காதலை வெற்றி பெற வைத்து ஆண்களை பரவசப்படுத்தும் கதைகளை எடுப்பவர்கள் அல்லது நடிப்பவர்கள். இதை என்னவோ பெரிய சண்டையாக கோர்த்து விட முயன்றது குமுதம்.

குமுதம் கிளப்பி விட்டு கதையெழுத நினைத்த பல கிசுகிசுக்கள் பிசுபிசுத்துப் போயின. காஜல் - கார்த்தி காதல், விஷால்- ரீமா காதல், மாதவன் - பூஜா காதல், சித்தார்த்- ஷ்ருதி காதல், இருப்பதிலேயே மிகவும் மோசமாக எழுதப்பட்ட கிசு கிசு கமல் - சிம்ரன் காதல்தான். குமுதம் மட்டுமல்லா எல்லா இதழ்களும் செய்தன.. அதை விடவும் கேவலமாக எழுதப்பட்டது ஷ்ருதி ஹாசன் - தனுஸ் காதல்தான். அதற்கு ஷ்ருதி மறுப்பு வெளியிட்டு அதையே குமுதம் வெளியிடுமளவுக்கு கீழ்த்தரமாக இறங்கியது குமுதம். நன்கு காசு பார்த்த கிசுகிசுக்கள் நயன் - பிரபுதேவா, நித்யானந்தா - ரஞ்சிதா.

ரஜினி படையப்பா படம் முடிந்து 5 வருடங்கள் கழித்து நடித்த பாபா படம் தோல்வி அடைந்திருந்த நிலையில் ரஜினி படத்தில் மீண்டும் நடிப்பாரா அல்லது நிறுத்தி விடுவாரா என்ற சந்தேகம் இருந்தது, ரஜினி இமயமலைக்குக் கீது சென்று விட்டால் ஏதாவது கதை கிதை எழுதி காசுபாக்க முடியாது, எனவே அடுத்த சூப்பர் ஸ்டார் யார் விஜய்யா விக்ரமா,தனுசா என்ற முக்கியமான பிரச்சனையை எழுப்பியது. இப்படியாக குமுதத்தின் சேவை தமிழ்நாட்டுக்குத் தேவை.

அரசியல் ரீதியான விமர்சனத்தில், இப்படி பாலியல் ரீதியாக விமர்சிப்பது எந்த வகை நியாயமென்று தெரியவில்லை. இதற்கு முன்பு கனிமொழி-ராசாவை இணைத்து நகைச்சுவைக்காகக் பேசப்படும் கிசுகிசுக்கள், மன்மோகச் சோனியாவை இணைத்துப் பேசப்படும் கிசுகிசுக்கள் என்று சொல்லிக் கொண்டே போகலாம்.

குமுதம் மட்டுமல்ல தினகரன், நக்கீரன், தினத் தந்தி, தினமலர் என்ற எதுவும் இதற்கு விதி விலக்கல்ல. இதில் முதலிடம் தினகரனுக்கே. கடந்த திமுக ஆட்சியின் போது தினகரனில் ஜெயலலிதாவின் தனிப்பட்ட வாழ்க்கையை சோபனுடன் இணைந்து வாழ்ந்த (Living together) ஜெயலலிதாவின் யோக்கியதையைப் பாரீர் என்று திராவிட அறிவாளிகளுக்கே உரிய தரத்துடன் வெளியிட்டிருந்தது. இதுதான் இவர்களின் யோக்கியதையே.
Download As PDF
Bookmark and Share

Post Comment