ஈழம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஈழம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

மே 18 ஈழத்தமிழ் இன அழிப்பு நினைவு நாள்

இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான போர் முடிந்து 10 வருடங்கள் கழித்து, இன்று இன்னொரு சிறுபான்மையினரான தமிழ் முஸ்லிம்கள் மேல் கலவரங்கள் தொடங்கியிருக்கும் நிலையில்,

பத்து வருடங்களுக்கு முன்னர் நினைத்துப் பார்த்தால் இன்னும் வேதனையாக இருக்கிறது. அப்போதுதான் இணையம் பயன்படுத்துவது அறிமுகமாயிருந்தது. பணிக்குச் சேர்ந்த புதிதில் வேலையை முடிக்க முடியாமல், ஈழப்போரின் செய்திகளைக் காண ஆர்வம் மிகுதியால் இடையிடையே தமிழ்மணம், புதினம், பதிவு, தமிழரங்கம், வினவு உட்பட பல இணையத் தளங்களில் படித்து நொந்து போய் இருந்த காலம். 

போர் நின்றால் போதும் என்ற நல்ல செய்திக்காக ஏங்கி ஏங்கி பல்வேறு வகையான போரின் பேரழிவைக் காட்டும் புகைப்படங்களும் மக்களின் துயரங்களும் இடம்பெயர்வுகளும் கையறு நிலையும் தமிழ்நாட்டில் இருந்த நம்மைப் போன்றவர்களின் நிம்மதியையே பறித்தன. மிகப்பெரிய குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்கின. புலிகள் ஏதேனும் திருப்பு முனையை ஏற்படுத்த மாட்டார்களா என்று எதிர்பார்த்துக்கொண்டிருந்த மனம் மாறி ஏதாவது அதிசயம் நிகழ்ந்தால் ஒழிய நடக்காது என்று தெரிந்து போனது. 

வரலாறும், அவர்களின் நடவடிக்கைகள் மீதான விமர்சனங்களும் ஏற்றுக் கொள்ளும்படியாக இருந்ததால், உணர்ச்சிவயப்பட்ட விடுதலைப் புலி ஆதரவாளனாக/எதிர்ப்பாளனாக இல்லாத போதும், புலிகளை அழிக்க முடியாது என்ற பெரும் நம்பிக்கை இருந்த போதே, போரின் போக்கானது புலிகள் இல்லாமல் ஆக்கப்படுவார்கள் என்று உள்ளுணர்வு மூலம் சொல்லிக்கொண்டே இருந்தது.  இதை என்னுடைய பாமரத் தமிழ் மனம் ஏற்காமல் இறைஞ்சிக் கொண்டிருந்தது. சிங்களப் பேரினவாதத்திற்கு எதிரான தமிழ்ப் பெருமிதமாகவே அவர்களின் குற்றங்களைத் தாண்டி ஏற்றி வைத்து இருந்தேன். 

பொதுமக்களின் அழுகையும், குழந்தைகளின் குதறப்பட்ட உடல்களும், படுகாயமடைந்த மனிதர்களும், பெண்கள் மீதான பாலியல் கொடுமைகளும், புலிகளின் படுதோல்வியும் விரக்தியின் உச்சத்துக்கு இட்டுச் சென்றன. இனி ஈழம் என்னவாகுமே என்ற கேள்வியும் வாட்டியது. 

போரின் கொடுந்துயரை நமக்குக் கொடுத்தன. ஈழப்போர் முடிந்தும், 6 மாத காலம் வரை அரைப் பைத்தியம் பிடித்த நிலைதான் இருந்தது. அதற்குப் பிறகும் மேன் மேலும் வந்து கொண்டிருந்த மோசமான செய்திகள் இராணுவத்தால் கொலை செய்யப்படும் வீடியோக்கள் என துயரம் அதிகரிக்கச் செய்யும் நிகழ்வுகளாகவே இருந்தன. 

                                           

ஆர்க்குட் இல் இருந்து சேமித்த சில புகைப்படங்களைப் பகிரத் தோன்றியது.      

                                            

ஈழப்போரின் இறுதி நாட்களில் முல்லைத் தீவுக்குள் தோல்வியின் விளிம்பிலிருந்த புலிகளை அழிக்கும் போர்த் திட்டத்தைப் பற்றிப் பார்வையிட வந்திருந்த வேற்று நாடுகளின் (அமெரிக்கா, இங்கிலாந்து, ஜப்பான், வங்கதேசம், மாலத்தீவுகள், இந்தியா, பாகிஸ்தான்) பாதுகாப்பு ஆலோசகர்கள். இதில் இந்தியா பாகிஸ்தான் இராணுவ அதிகாரிகள் அனைவரும் ஒன்றாக சிங்கள இராணுவத்தினரின் திட்டத்தை கவனிக்கின்றனர். 

புலிகளும் மக்களும் உடல் சிதறிச் செத்த பல புகைப்படங்களால் நான் அடைந்த அதிர்ச்சியைக் காட்டிலும், இந்தியா பாகிஸ்தான் வங்கதேசம் என்று பகைவர்களாக இருக்கும் நாடுகள் எப்படியெல்லாம் ஒன்றாகின்றனர் என்று அதிர்ச்சியடைந்தேன். 2008 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வெளியான இந்தப் இப்புகைப்படங்கள் என்னை இன்னும் வியப்பில் ஆழ்த்துகின்றன.
#Justice4TamilGenocide
Download As PDF
Bookmark and Share

Post Comment

சீமானுக்கு ஒரு சலாம் - சீமான் பாராட்டப்பட வேண்டியவரே !


எனக்கு சீமானின் இந்த நடவடிக்கை இன்ப அதிர்ச்சியாக இருக்கிறது. ஆனால் இது மிகவும் துணிச்சலான நடவடிக்கையாகும். நேர்மையானதும் கூட. இதை வைத்து சீமான் கைது செய்யப்படக் கூடும், பலவித அடக்கு முறைகளை எதிர்கொள்ளக் கூடும். கலைஞர் ஆட்சியில் மட்டுமே எல்லாரும் வீரம் பேசுகிறார்கள் ஜெவிடம் பம்மி விடுகிறார்கள் என்று பொதுவாக நம்புகிறோம். ஆனால் ஜெவின் ஆட்சி நடக்கும் போது இப்படி ஒரு தலைவரை வரவைத்து பேச வைத்திருப்பது துணிச்சலான செயலே.

அதே நேரம் யாசின் மாலிக் என்ற தாடி வைத்த முஸ்லிம் மனிதனைப் பார்த்தவுடன் இஸ்லாமோஃபோபியா விஸ்வரூபம் எடுத்துவிட்டதைப் பலரிடம் காண முடிகிறது. இது ஈழத்துக்கு எதிராக இந்தியாவைத் திருப்பி விடும் என்றும் அஞ்சுகிறார்கள். இதற்கு மேலும் இந்தியா ஈழத்துக்கு செய்வதற்கு ஏதாவது இருக்கிறதா என்ன ?

யாசின் மாலிக் ஒரு "தீவிரவாதியோ" தீவிரவாத இயக்கத் தலைவரோ கிடையாது. ஜம்மு காஷ்மீர் விடுதலை இயக்கம் ஒரு ஜனநாயக இயக்கம் மட்டுமே. அங்கு இருக்கும் ராணுவ அடக்கு முறைகளுக்கு எதிராகவும், அரசியல் உரிமைக்காகவும் போராடுகிற இயக்கம் மட்டுமே. தமிழ்நாட்டில் கூட தனித் தமிழ்நாடு என்ற கோரிக்கையை அறிவித்துக் கொண்டு சிறு சிறு இயக்கங்கள் இயங்குகின்றன. இந்தியா ஒரு ஜனநாயக நாடு என்பதை தேசிய வியாதிகள் நினைவூட்டிக் கொள்ளவும்.

யாசின் மாலிக்
இந்திய இறையாண்மைக்கு எதிரானவர்கள் என்று பீதியைக் கிளப்பி, சீமானை குற்றவாளிக் கூண்டில் தள்ள முனைகிறவர்கள், சிங்கள ராணுவமே இந்திய இறையாண்மைய மதிப்பதில்லை என்பதையும் நினைவூட்டிக்கொள்ளவும். அந்த சிங்கள ராணுவம் இந்திய இறையாண்மையை மதிக்காத போதும் அவர்களுக்கு இறையாண்மையுடைய இந்தியா பயிற்சி அளிக்கிறது என்பதையும் நினைவூட்டிக் கொள்ளவும். இறையாண்மையுடைய இலங்கையின் உள் விவகாரங்களில் இந்தியா தலையிடாது என்று சொல்லிக் கொண்டதையும் நினைவூட்டிக் கொள்ளவும். தற்போது சீன ராணுவம் இந்திய எல்லைக்குள் நுழைந்து விட்டதாக தேசபக்தர்கள் சிலிர்த்து எழுந்த போதும், சீனப் பிரதமர் இந்தியாவிற்கு மிகவும் சாதாரணமாகவே வந்து போகிறார்.

காஷ்மீருக்கு சீனா தனி விசா கொடுத்ததை எதிர்ப்பவர்கள், சீனாவின் எதிரியான தலாய் லாமாவுக்கு இந்தியா அடைக்கலம் கொடுப்பதையும் எதிர்க்க வேண்டும், வங்கதேசப் பிரிவினை பாகிஸ்தானின் இறையாண்மைக்கு எதிரானது, திபெத் சீனாவின் இறையாண்மைக்கு எதிரானது. ஈழம் இலங்கையின் இறையாண்மைக்கு எதிரானது. இந்தியாவுக்கு மட்டும்தான் இறையாண்மையா ? இல்லை இந்தியர் என்பதால் இந்த பாரபட்சமா ? அவரவர்க்கு அவரவர் இறையாண்மை. இதில் இந்தியர்கள் மற்ற நாடுகளின் இறையாண்மைக்கு எதிராக மட்டும் நடக்கலாமா? அங்கெல்லாம் அடக்கு முறை நடக்கிறது என்பது பதிலென்றால் காஷ்மீரிலும் அதுதானே நடக்கிறது. மற்ற நாடுகளின் அடக்குமுறைகளை எதிர்ப்பேன், அதே அடக்குமுறை இந்தியாவில் நடந்தால் தேசப்பற்றின் பெயரால் ஆதரிப்பேன். இதுதான் இங்கே நிலைப்பாடு. 

இந்திராவின் படுகொலையைத் தொடர்ந்து காங்கிரஸ் கொலைகாரர்களால் டெல்லியில் வாழ்ந்த 3000 சீக்கியர்கள் கொல்லப்பட்டனர். அந்த இனப்படுகொலைக்கு நீதி கேட்கும் சீக்கியர் அமைப்புகள் இலண்டனில் தமிழினப்படுகொலையைக் கண்டித்து நடத்திய ஆர்ப்பாட்டம். சீக்கியர்களின் ஆதரவாவது தமிழர்கள் ஏற்கிறார்களா  இல்லை இந்திரா காந்தியைக் கொன்ற பிரிவினைவாத காலிஸ்தான் சீக்கிய பயங்கரவாதிகளின் ஆதரவு எமக்கு வேண்டாம் என்கிறீரா ?
இங்கு இந்திய இறையாண்மைக்கு எதிரானவர்கள், பிரிவினைவாதிகள், தேசப்பாதுகாப்புக்கு எதிரானவர்கள் என்றெல்லாம் சொல்லப்படுவதற்கு ஒருவர் தீவிரவாதியாக இருக்க வேண்டியதில்லை. ஈ காக்காவுக்குக் கூட துரோகம் செய்யாத கூடங்குளம் உதயகுமார் கூட கிறித்தவர் என்ற காரணத்தை வைத்து அவரைக் கொல்ல வேண்டும் என்று வெறியேறிப் பேசும் தேசபக்தர்கள் இருக்கிறார்கள்.

இதை எதிர்ப்பவர்கள் யார் யாரென்றால் பாரதிய ஜனதா, காங்கிரஸ், இந்து மக்கள் கட்சியினர். இந்தியாவையே அந்நியனுக்குக் கூட்டிக் கொடுக்கும் இவர்கள் இந்திய இறையாண்மையைப் பற்றிப் பேசுவது வேடிக்கை. இந்து மக்கள் கட்சியின் கொள்கை தெரிந்ததுதான், அவர்கள் தனது கடமையைச் செய்கிறார்கள் அவர்களை நான் விமர்சிக்க மாட்டேன்.

எனக்கு என்ன கசப்பென்றால் இதை விமர்சிக்கும் ஈழ ஆதரவாளர்கள். ஈழத் தமிழர்கள் அடைய வேண்டிய உரிமைகளின் நியாயத்தை அறிந்த இவர்களுக்கு காஷ்மீர் அடைய வேண்டிய நியாயம் தெரியவில்லை. ஈழத் தமிழர் உரிமை பற்றிப் பேசும் போது புலிகளால் துரத்தப்பட்ட முஸ்லிம்களைப் பேசாத வாய்கள், காஷ்மீர் என்று வந்து விட்டால் அங்கிருந்து விரட்டப்பட்ட இந்து பண்டிட்களைப் பற்றிச் சொல்லி, தீவிரவாதப் பட்டம் கட்டி கொச்சைப்படுத்துகிறார்கள். இந்து- முஸ்லிம் நல்லிணக்கத்தின் இலக்கணமாய் விளங்கிய காஷ்மீர் நடக்கக் கூடாததெல்லாம் நடந்து இஸ்லாமியர்-பிரிவினைவாதம்-தீவிரவாதம் என்று செல்லரித்துப் போன காரணங்களைச் சொல்லி எதிர்க்கிறார்கள்.

இதில் கொடுமை என்னவென்றால் இவர்கள் உலகத்தின் மிக மோசமான தீவிரவாத இயக்கம் என்று உலகத்தால் வர்ணிக்கப்பட்ட புலிகளையும் ஆதரிக்கிறார்கள். அது எப்படி ஒருவர் ஈழத்தை ஆதரித்துக் கொண்டு காஷ்மீரை எதிர்க்க முடியும். நான் இரண்டும் ஒரே பிரச்சனை என்று சொல்லவில்லை. ஆனால் போர், நில ஆக்ரமிப்பு என்பதைத் தவிர இரு பக்க மக்களுமே ராணுவ அடக்கு முறைகளை நாளும் எதிர்கொள்கிறவர்கள்தானே. தமிழனுக்கு வந்தால் குருதி காஷ்மீரிக்கு வந்தால் தக்காளி சட்னியா ? ஏன் ஈழத்தமிழர்கள் தங்களை யூதர்களுடன் ஒப்பிட்டுக் கொள்ளவில்லையா ?

தமிழ்நாட்டிலிருக்கும் பெரும்பான்மைத் தமிழர்கள், தமிழரல்லாத மற்ற இந்தியர்கள் ஈழத் தமிழர் பிரச்சனையை எப்படிப் பார்ப்பார்கள். இங்கிருந்து போய் இன்னொருவனிடம் தனிநாடு கேட்டால் அவன் சும்மா இருப்பானா? ஈழத் தமிழர்கள் மண்ணின் மைந்தர்கள் என்பதைக் கூடத் தெரியாத மண்டைகளுக்கு இதுதான் உண்மை என்று சொல்லிப் புரிய வைப்பதற்குள் உயிரே போய்விடுகிறது. அதே போல் பொதுப் புத்தியில், காஷ்மீர் என்பது எப்படிப் புரிந்து கொள்ளப்படுகிறது  காஷ்மீர் இந்தியாவைச் சார்ந்தது, பாகிஸ்தான் துண்டாட நினைக்கிறது, காஷ்மீரிகள் பிரிவினைவாதிகள், இஸ்லாமியத் தீவிரவாதிகள். இதைத் தாண்டி உண்மை என்னவென்று அறிய எவரும் விரும்புவதில்லை. காஷ்மீர் முதல் கன்யாகுமரி வரை என்று எதுகை மோனையாகப் பேசுமளவிற்கு வரலாறு திரிந்துள்ளது. உண்மையை விளக்கினால் தேசத் துரோகியாக்கி விடுகிறார்கள். அவர்கள் ஏன் நம்மைப் போல அமைதியாக வாழ்ந்து கிரிக்கெட்டை ரசிக்காமல் தெருவில் ராணுவத்திற்கு எதிராக உயிரைப் பணயம் வைத்துப் போராடுகிறார்கள் என்று சிந்திப்பதே இல்லை.  


தமிழர்கள் இனப்படுகொலையை சந்தித்தவர்கள் சம உரிமை மறுக்கப்பட்டவர்கள், ஆனால் காஷ்மீரிகள் சிறப்பு அதிகாரமுடையவர்கள் என்று சொல்கிறார்கள். ஆனால் மற்ற மாநிலங்களுக்கு இல்லாத சிறப்பு உரிமை காஷ்மீர்க்கு மட்டும் ஏன் இருக்கிறது என்று கேட்க வேண்டுமல்லவா ? அதில்தான் காஷ்மீர் ஏமாற்றப்பட்ட வரலாறே இருக்கிறது. பாகிஸ்தான் படைகள் நுழைந்த போது காஷ்மீரைக் காக்க இந்தியாவின் உதவி நாடப்பட்டது. இந்தியா ஆக்ரமிப்பு நோக்கத்துடன் காஷ்மீரை தன்னுடன் இணைத்துக் கொள்ளப்படாது என்றும், அவர்கள் ஆளும் அதிகாரம் அவர்களிடமே இருக்கும் என்றும் உறுதிமொழியுடன்தான் இணைத்துக் கொள்ளப்பட்டது.

காஷ்மீரிகள் ஜம்முவின் குடிகள், நாம் இந்தியக் குடிகள் என்பது போல

காஷ்மீருக்கு தனிக் கொடி உண்டு

தனி அரசமைப்புச் சட்டம் உண்டு
காஷ்மீர் கொடி
இப்படிப் பல உரிமைகள் 1957 இல் இந்திய அரசாலேயே ஏற்றுக் கொள்ளப்பட்டவையே. பல வருடங்கள் முடிந்த பின்னரும், வாக்கெடுப்பு நடத்தப்படாமல் இழுத்தடித்தாலேயே அவர்கள் போராட வேண்டியதாயிற்று. மேலும் ராணுவம், துணை ராணுவம், ஊர்க்காவல் படை என ராணுவத்தின் மூஞ்சியிலேயே 20 வருடங்களுக்கும் மேலாக வாழ வேண்டிய நிர்பந்தம்.

பின்பு உரிமைகளின்றி அடக்குமுறையும், புறக்கணிப்பும் தொடர்ந்த பின்னரே விடுதலைப் போராட்டம் தொடங்கியது 1980களின் பிற்பகுதிகளில். ராணுவ நடவடிக்கைகள் காரணமாக 70000 க்கும் மேற்பட்டவர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள், வீதியில் சோதனைகள், கைதுகள், கடத்தல், காணாமல் போதல் என்ற ராணுவத்தின் கொடுமைகள் நாளும் நடக்கின்றன.

அமர்நாத் பனிலிங்கத்தை வணங்குவதற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் செல்கிறார்களே அந்தக் குகையைக் கண்டு பிடித்தவரே ஒரு முஸ்லிம். யாத்திரை செல்கிறவர்களுக்கு வேண்டிய அடிப்படை உதவிகளைச் செய்கிறவர்களும் முஸ்லிம்களே. எனவே அவர்கள் இந்துக்களுக்கு எதிரானவர்கள் அல்ல. அப்படி இருப்பவர்கள் ஏன் இந்தியாவை எதிர்க்கிறார்கள் என்று எண்ண வேண்டாமா ? போராட்டம் நடக்கும் இடங்களில் அதை சிதைக்க இனவாதம், மதவாதம் தூண்டப்படுவது எல்லா அரசுகளும் செய்வதுதான். காஷ்மீரிலும் அதுதான் நடந்தது.

சிறுவர்கள், முதியவர்கள், பெண்கள் என அனைத்துத் தரப்பினரும் ராணுவத்தினர் மீது கல்லை விட்டு எறிகிறார்களே ஏன் அப்படி ஆனார்கள் என்று சிந்திக்க வேண்டாமா ? இராணுவத்தின் கண்காணிப்பில் வாழும் கொடுமையைப் புரிந்து கொள்ள வேண்டாமா ?

காஷ்மீர் மட்டுமல்ல வடகிழக்கு மாநிலங்கள் பலவும் இந்நிலைதான் நிலவுகின்றன. மணிப்பூர் பெண்கள் நடத்திய நிர்வாணப் போராட்டம் ஒன்று போதும் இந்திய ராணுவத்தின் யோக்கியதைக்கு, ஈழத்திற்கு இசைப்பிரியா என்றால், மணிப்பூரில் மனோரமா தேவி, காஷ்மீரில் நிலோஃபர் ஜான் என எல்லா இடத்திலும் ஒரே வகையான வன்முறைகள்.

ஐரோம் ஷர்மிளா ஏன் 12 வருடங்களாக பட்டினிப் போராட்டம் நடத்துகிறார் ? என்றெல்லாம் யோசிக்காமல் காஷ்மீர் பிரிவினைவாதத் தலைவர் என்று ஒரே அடியில் கொச்சைப் படுத்துகிறார்கள். இது எப்படி இருக்கிறதென்றால் ?

இந்தக் கமல்ஹாசன் இருக்கிறாரே அவர் இஸ்லாமோஃபோபியாவுக்கு எதிரானவர், கமல் ஹாசன் என்ற தனது பெயர் தான் எந்த மதத்தைச் சார்ந்தவன் (இந்துவா அல்லது முஸ்லிமா) என்ற குழப்பத்தை மற்றவர்க்க்கு ஏற்படுத்துவதை பெருமையாகக் கருதிகிறவர். ஷாருக் கான் தனது இஸ்லாமியப் பெயரால் அமெரிக்க விமானத்துறை அதிகாரிகளால் அவமானப் படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, தனது பெயரை அரபி ஒலியுடன் இருக்குமாறு மாற்றிக் கொள்வதாகக் கூறினார். அவ்வளவு மனிதாபிமானமுடையவர் தனது விஸ்வரூபம் படத்தில் அமெரிக்காவினால் ஆக்ரமிக்கப்பட்ட ஆஃப்கானிஸ்தான் தாலிபான்களிடமிருந்து அமெரிக்காவைக் காக்கும் இந்தியனாக நடித்தார் என்பது எத்தகைய முரண்நகை. அப்படித்தான் இருக்கிறது சிலருடைய கருத்து. நான் இந்தியன் எனவே இந்தியா என்ன செய்தாலும் அது தவறில்லை நான் தேசபக்தியின் காரண்மாக ஆதரிப்பேன். நான் தமிழன் எனவே புலிகள் என்ன செய்தாலும் ஆதரிப்பேன் என்ற கொள்கையெல்லாம் எனக்கில்லை.

அது போலவே ஈழத் தமிழர்களின் துன்பத்தைக் கண்டு இரங்குகிறவர்கள், யாசின் மாலிக்கின் வருகையை எதிர்ப்பது எந்த வகையில் சேர்த்தி ? இவருக்காக ஆதரவு தரும் முஸ்லிம்களைக் கண்டு இவர்கள் முகம் சுளிக்கிறார்கள். முஸ்லிம்கள் என்றால் தீவிரவாத, பிரிவினைவாத, இறையாண்மைக்கு எதிரானவர்களை ஆதரிக்கிறார்கள். இது எப்படி இருக்கிறதென்றால் ஈழத் தமிழர் துன்பம் பற்றிப் பேசினால் புலி பயங்கரவாதம் பற்றிப் பேசும் சோ வைப் போலவே நடந்து கொள்கிறார்கள். காஷ்மீரிகள் துன்பம் என்பது மற்ந்து பிரிவினைவாதம் மட்டுமே முன் தெரிகிறது.
 

புலிகளை நாம் ஆதரிப்பதை மற்ற மாநிலத்தவர்கள் எப்படிப் பார்க்கிறார்கள் என்று சிந்தித்துப் பாருங்கள். பிரதமர் ராஜீவைக் கொன்ற பயங்கரவாதிகளை ஆதரிக்கிறார்கள் தமிழர்கள்  என்றுதானே நினைப்பார்கள்.

யாசின் மாலிக்கை அழைத்து வருவது இந்தியாவை ஈழத்துக்கு எதிராகத் திருப்பாதா ? இப்போது இந்தியா ஈழத்தை எப்படிப்பார்க்கிறது ? இந்தியாவின் இறையாண்மை மேல் மதிப்புடையவர்கள் ஈழம் பற்றியே பேசக் கூடாது என்றுதான் இந்தியா சொல்கிறது, கருணாநிதி டெசோ மாநாடு அறிவித்தவுடன் சிதம்பரம் ஓடி வந்து ஈழம் என்ற சொல்லையே பயன்படுத்தக்கூடாது என்றும் அது இந்திய இறையாண்மைக்கு எதிரானது என்றும் சொல்லவில்லையா ? ஈழ அகதிகள் தமிழகத்தில் எப்படி நடத்தப் படுகின்றனர் ?

5 வருடங்களுக்கு முன்பு இயக்குநர் சீமான் போர் நிறுத்தம் கோரி, தமிழ்த் திரை இயக்குநர்கள் கலந்து கொண்ட பட்டினி போராட்டத்தில் உரையாற்றினார். அவரது உரை பரந்த வரவேற்பைப் பெற்றது. அவரது கருத்துக்களை காங்கிரஸ், பாஜகவினர் பலரும் எதிர்த்தனர். அதற்குப் பின்பு அவர் பல முறை தேசியப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சிறை சென்றார். பலரது ஆதரவையும் பெற்றார். ஈழ ஆதரவுப் போராட்டங்களினாலேயே அவர் பலருக்கும் பிடித்தவரானார். பின்பு ஜெயா தொலைக்காட்சியில் பேட்டி கொடுத்த போது பலத்த விமர்சனத்துக்குள்ளானார். பின்பு திமுகவை மட்டுமே எதிர்த்து வந்தார். நாம் தமிழர் கட்சியின் கொள்கை ஆவணம் வெளியிடப்பட்ட போது இந்திய இறையாண்மையைக் காக்க செயல் படுவோம் என்ற வரிகளுக்கும், திராவிட எதிர்ப்புக்கும் கடுமையாக விமர்சிக்கப் பட்டார். இஸ்லாமியர்களையும் எச்சரிக்கையுடன் கையாளவேண்டும் என்றும் குறிப்பிட்டு அவர்கள் தனிமைப்படுத்தப் பட்டிருந்தனர். பின்னும் ஜாதிக் கூட்டங்கள்லெல்லாம் கலந்து கொண்டார். இனவெறியனாக நடந்து கொண்டார்.
அதற்கெல்லாம் பதிலாக இது அமைந்துள்ளது இவ்வளவு நாட்களுக்குப் பின்னர் ஒரு நேர்மையான செயலைச் செய்திருக்கிறார். இதற்கு தனக்கு பலத்த எதிர்ப்பு வரும், சிறை செல்லவும் நேரிடும் என்று தெரிந்தே செய்திருக்கிறார்.

வழக்கமாக ஈழத் தமிழர்க்காக முஸ்லிம்கள் குரல் கொடுப்பதில்லை என்று குறை கூறிக் கொண்டிருப்பார்கள், இங்கு காஷ்மீரிலிருந்து முஸ்லிம்கள் தலைவர் ஒருவர் ஆதரவு சொல்கிறார். இவர்கள் பிரிவினைவாதியின் ஆதரவு தேவையில்லை என்கிறார்கள். எங்கள் மீது குண்டு வீசிய இந்தியாவின் ஆதரவும், போருக்கு பணம் வழங்கிய மேற்கு நாடுகளின் ஆதரவும் மட்டுமே வேண்டும் என்கிறார்கள். 

இந்தியத் தலைவர்கள் இறையாண்மையுள்ள நாட்டில் தலையிட முடியாது என்கிறார்கள் ஆனால் காஷ்மீரின் இறையாண்மையில் மட்டும் தலையிடுகிறார்கள். காஷ்மீரிகள் இந்தியா பாகிஸ்தான் ஆகிய இருநாடுகளாலும் ஆக்ரமிக்கப்பட்டவர்கள். 5 இலட்சத்திற்கும் மேலான ராணுவத்தினர் காஷ்மீரைக் காவல் காத்து வருகின்றனர். இதை வைத்து காஷ்மீர் மக்களை போலி என்கவுன்டரில் கொல்லவும், பெண்களை வன்புணரவும் செய்ய பல நூறு கோடிகள் செலவிடப் படுகின்றன. அதே நேரம் அடிப்படை உரிமைகள் வாழ்வாதாரம், வேலை என அனைத்தும் புறக்கணிக்கப்படுகின்றன. அதை எதிர்த்து அவர்கள் போராடினால் அது தேசபக்தர்களுக்கு பொறுக்கவில்லை.
Download As PDF
Bookmark and Share

Post Comment

ஃபேஸ்புக்கில் பகிரப்படும் போலியான புகைப்படங்கள்


ஃபேஸ்புக்கில் தமிழ் உணர்வுக் குழுக்களும், இஸ்லாமியக் குழுக்களும் அறிந்தோ அறியாமலோ சில புகைப்படங்களைப் பகிர்ந்து வருகின்றன. அவை போலியானவை என்பதைச் சொல்லவே இதை எழுதுகிறேன். அது ஒரிரு வருடங்களுக்கு முன்பே தெரிந்ததுதான் என்றாலும் அது இன்னும் புதிதான புகைப்படம் போல பல நூறு பேர்களால் பகிரப்படுகிறது

ஒரிரு புகைப்படம் ஈழ ஆதரவு குழுக்கள் மூலம் தமிழர்களிடையே பரப்பப் படுகிறது இதில் பல பிணங்கள் எரிந்து கரிக்கட்டையாகக் கிடக்கின்றன. இது ஈழப்போரில் நடந்த இனஅழிப்புப் போரின் தடயமல்ல. காங்கோவில் நடைபெற்ற ஒரு எரிவாயு வாகன விபத்தில் இறந்தவர்களுடையது இந்தப் புகைப்படத்தில் நின்று கொண்டிருப்பவர்களை உற்று நோக்கினால் அவர்கள் ஆப்ரிக்கர்கள் என்று புரியும்.

வெளிநாட்டுக் கிறித்தவ அமைப்புகள் சில முஸ்லிம் தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட கிறித்தவர்கள் என்றும் தகவலைப் பரப்பி வந்திருக்கின்றனர்.



இன்னொரு புகைப்படம் இறந்து கிடக்கும் ஒரு பெண்ணின் மார்பகத்திலிருந்து பாலருந்தும் குழந்தை. இதுவும் ஈழத்திலிருந்து எடுக்கப்பட்டதில்லை என்பது அந்தப் பெண்ணின் மங்கோலிய முகமே காட்டி விடுகிறது. இது நேபாளத்தைச் சேர்ந்த ஒரு திரைப்படத்தின் புகைப்படம்.

இந்தப் புகைப்படங்களைப் பகிர்பவர்கள் புகைப்படத்தின் மீதோ அல்லது அதற்கு மேலே ஏதாவது உணர்ச்சியூட்டும் கவிதைகளையோ அல்லது கருத்துக்களையோ எழுதி பகிர பார்ப்பவரும் உணர்ச்சி வயப்பட்டு உண்மையினை அறியாமலேயே பரப்பி விடுகின்றனர். இது போன்ற போலிகளை நம்பாதீர்கள்.

இந்தப் புகைப்படம்  பர்மா (அ) மியான்மர் புத்த பிக்குகளால் கொல்லப்பட்ட முஸ்லிம்கள் பிணங்கள் என்று பகிரப்படுகிறது. ஆனால் இது உண்மையில் 2010 இல் சைனாவில் நடந்த புவி அதிர்ச்சியின் மாண்டவர்களில் உடல்களை திபெத்திய புத்தத் துறவிகள் அடக்கம் செய்யும் போது எடுக்கப்பட்டது. இது போன்று முழுக்கை சட்டை அணிந்திருப்பவர்கள் திபெத்தியர்களே. பர்மியத் துறவிகள் இலங்கைத் துறவிகளைப் போல துணியை உடல் முழுக்கச் சுற்றி அணிந்திருப்பார்கள். .மேலும் பர்மிய முஸ்லிம்கள் வெள்ளை நிறத்தவர்களும் அல்ல.


இந்தப் புகைப்படம், 2006 இல் ஈழத்தில் சிங்கள ராணுவம் நடத்திய படுகொலைகளில் ஒன்று. இது தமிழ்நெட்டில் வெளியானது. இது பர்மிய முஸ்லிம்கள் படுகொலை என்று பரப்பப்படுகிறது. அந்தப் புகைப்படத்தின் மேல் வலது மூலையில் பாருங்கள். Like My Page  "Love Islam" - என்று தனது குழுவை இஸ்லாமியரிடம் ஃபேஸ்புக்கில்  பரப்புவதற்கு இஸ்லாமிய உணர்வை ஒரு கருவியாகப் பயன்படுத்துகின்றனர். இது ஈழத்து பிணத்தை விற்கும் நக்கீரனுக்கு ஒப்பானது.




இது போன்ற தவறான தகவல்களைப் பரப்புகிறவர்களின் நோக்கம் இறந்தவர்களையும் போராடுகிறவர்களையும் கேவலப்படுத்துவதாகும். தற்போது போராடி வரும் மாணவர்கள் கையில் வைத்திருந்த பதாகைகளில் சில படங்களை வைத்து வட இந்திய ஊடகங்களும், இலஙகை அரசின் ஊடகங்களும் மாணவர் போராட்டத்தின் நேர்மையையே கேள்விக் குறியாக்கி விட்டன. மாணவர்கள் போராட்டத்தின் போது வைத்திருந்த பதாகைகளில் இறந்த மக்களின் புகைப்படங்களை அச்சடிக்க்கப்பட்டிருந்தன. அதில் புலிகளின் தாக்குதலில் கொல்லப்பட்ட சிங்கள மக்களின் உடல்களும் இடம் பெற்றிருந்திருக்கின்றன. புலிகளால் கொல்லப்பட்ட சிங்கள மக்களை, புலி ஆதர்வாளர்கள் தவ்றாக சித்தரிக்கின்றனர் என்று கிழித்து விட்டார்கள்.இது மாணவர்களின் போராட்டத்தை எந்தளவுக்கு கேள்விக்குட்படுத்தும் என்பது புரிகிறதா ? உண்மையிலேயே இந்தப் போலிகளது நோக்கம் படுகொலைகளை விற்று உணர்ச்சியைத் தூண்டி வெறுப்பை வளர்ப்பதன்றி வேறில்லை.
 
Download As PDF
Bookmark and Share

Post Comment

விடுதலைப்புலிகளின் துரோகம் ??

தற்போது எரிக் சோல்ஹைம் வெளியிட்டிருந்த கருத்தின் மூலம் பிரபாகரனின் தவறான முடிவு முள்ளிவாய்க்கால் பேரவலத்திற்கு வழிவகுத்தது என்று தெரியவருகிறது. ஆனால் எரிக் சோல்ஹைம் புலித் தலைவர்கள் சரணடையும் போதும் உடனிருந்தவர். அதன் பின்பும் அவர்கள் கொல்லப்பட்டார்களே. அதனால் இவர் சொன்னது முழுவதும் உண்மை என்றும் சொல்ல முடியாது.

2009 ஆம் ஆண்டில் போர் உச்ச நிலையை எட்டியிருந்தது. ஜனவரி மாதம் புலிகளின் தலைநகரான  கிளிநொச்சி வீழ்கிறது சிங்கள ராணுவத்திடம். அங்கிருந்து புலிகள் முல்லைத்தீவுக்கு இடம் பெயர்ந்தனர். புலிகளின் தோல்வியானது கிளிநொச்சியின் வீழ்ச்சியின்போதே ஏறக்குறைய முடிவானது. அதுவரையிலும் தற்காப்பு தாக்குதல் நடத்தி வருகிறோம். கிளிநொச்சியை விட்டுக் கொடுக்க மாட்டோம் என்று கூறி வந்த புலிகள், 2008 - நவம்பர் மாதம் மாவீரர் நாள் உரையை பிரபாகரன் நிகழ்த்தினார். அதன் பின்பு ஒரு மாதம் வரை கிளிநொச்சியைத் தன் பிடிக்குள் வைத்திருக்க புலிகளால் முடிந்தது.

முல்லைத்தீவில் புலிகள் முடங்கியதும், இராணுவத்தின் தாக்குதல் மிகவும் உச்சத்தில் இருந்தது. உலக அளவில் இலங்கை அரசுக்கு அழுத்தம் அதிகரித்தது. புலிகள் மக்களை கேடயமாகப் பயன்படுத்தாமல் அவர்களை வெளியிட வேண்டும் என்றும் இலங்கை அரசு வற்புறுத்தி வந்தது. தமிழகத்திலும் எதிர்ப்பு வலுத்து வந்தது. தீக்குளிப்புகள் நடந்தன. அமெரிக்கா போர்க்கப்பலை அனுப்பும் என்றெல்லாம் செய்திகள் வந்திருந்தன. மனித அழிவுகளை நிறுத்த ஏதாவது செய்யப்படும் என்பது போன்ற  நிலைப்பாடு மேற்கு நாடுகளில் நிலவியது.

இந்நிலையில் எரிக் சோல்ஹைமின் இவ்வாறு கூறியுள்ளார்.

//ஜப்பான், அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் நார்வே ஆகிய நாடுகள் இணைந்து 2009 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஒரு யோசனையை முன்வைத்தன. ஐநா மன்றமும் இதன் பின்னணியில் இருந்தது. அன்றைய நிலைமையில் போரின் முடிவு இலங்கை அரசுக்கு ராணுவ ரீதியிலான வெற்றியாக அமையும் என்பது எல்லோருக்கும் தெரிந்த நிலையில், போரின் முடிவில் ஆயிரக்கணக்கானவர்கள் கொல்லப்படும் பேரழிவை தடுக்கும் வகையில் போரை முறையாக முடிவுக்கு கொண்டுவரவேண்டும் என்கிற யோசனையை நாங்கள் முன்வைத்தோம். அந்த திட்டத்தின் முழுமையான இறுதி வடிவமும் விடுதலைப்புலிகளும் இலங்கை அரசும் ஒப்புக்கொண்டபிறகு தான் முடிவுசெய்யப்பட்டிருக்கும்.

 ஆனால் அதற்கு அடிப்படையாக நாங்கள் தெரிவித்த நடைமுறை யோசனை என்னவென்றால், சர்வதேச அமைப்பு, உதாரணமாக அமெரிக்கா, இந்தியா அல்லது வேறு ஒரு நாடு இலங்கையின் வடக்கு-கிழக்குப் பகுதிக்கு ஒரு பெரிய கப்பலை அனுப்பிவைப்பது என்றும், அதில் ஐநா மன்ற அதிகாரிகளோ அல்லது மற்ற சர்வதேச அமைப்பை சேர்ந்தவர்களோ இருந்து, போரின் இறுதியில் எஞ்சியிருந்த அனைத்து விடுதலைப்புலிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரையும் ஒருவர் விடாமல் கணக்கெடுத்து புகைப்படத்துடன் பதிவு செய்வது என்றும் தெரிவித்திருந்தோம். அவர்கள் அனைவரும் கொழும்பு கொண்டு செல்லப்பட்டு அவர்களிடமிருந்த ஆயுதங்களை ஒப்படைத்த பிறகு, விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் மற்றும் பொட்டு அம்மான் ஆகிய இருவர் தவிர்த்த மற்ற அனைவருக்கும் பொதுமன்னிப்பு வழங்கப்படும்.

அப்படி நடந்திருந்தால், சர்வதேச சமூகத்தின் முன்னிலையில் சர்வதேச அமைப்புக்களால் பதிவு செய்யப்பட்டவர்களை இலங்கை அரசால் நினைத்த மாத்திரத்தில் கொல்லமுடிந்திருக்காது. எங்களின் இந்த யோசனை மட்டும் ஏற்கப்பட்டிருந்தால், இறுதிகட்டத்தில் கொல்லப்பட்ட விடுதலைப்புலிகள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பேர் இன்று நம்மிடையே உயிருடன் இருந்திருப்பார்கள். ஏப்ரல் மாதம் இந்த திட்டத்தின் இறுதிவடிவத்தை முடிவு செய்வதற்காக விடுதலைப்புலிகள் அமைப்பின் சர்வதேச பேச்சாளர் குமரன் பத்மநாதன் ஒஸ்லோவுக்கு வருவதாக திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் கடைசி நிமிடத்தில் பிரபாகரன் அவரை தடுத்துவிட்டார். எங்களின் பாதுகாப்பு அதிகாரிகள் அவரை பத்திரமாக அழைத்து வருவதற்காக கோலாலம்பூருக்கே சென்றிருந்தனர். ஆனால் இந்தத் திட்டம் தங்களுக்கு ஏற்படையதல்ல என்று எங்களுக்கு செய்தி சொல்லப்பட்டது. எங்களால் ஒன்றும் செய்யமுடியவில்லை.

விடுதலைப்புலிகள் இந்த திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கியிருந்தால் இலங்கை அரசுக்கு அதற்கு சம்மதிப்பதைத் தவிர வேறு வழி இருந்திருக்காது. காரணம் இந்தியாவும் அமெரிக்காவும் மற்றவர்களும் இதில் உறுதி காட்டியிருப்பார்கள், ஒட்டுமொத்த சர்வதேச சமூகத்தினரும் இதில் ஒன்றாகவும் உறுதியாகவும் குரல் கொடுத்திருப்பார்கள்.
//


இப்படியெல்லாம் கூறியிருக்கிறார். ஆனால் அப்படி சரணடைந்திருந்தால் கொல்லப்படாமலிருந்திருப்பார்களா ? உறுதியாகக் கூறமுடியாது. இறுதியில் அனைவரும் வெள்ளைக்கொடியுடன் சரணடந்தவர்கள்தான் கொல்லப்பட்டார்கள். புலிகள் தலைவர்கள் மட்டுமல்ல, இவர்கள் மன்னிப்புக்குரியவர்களாகக் கூறப்பட்ட பல பொதுமக்கள், போரில் ஈடுபடாத புலிகள் எடுத்துக்காட்டாக இசைப்பிரியா போன்றவர்கள் கூட கொல்லப்பட்டார்கள்.

புலிகள் ஆயுதத்தைக் கீழே போட வேண்டுமென இந்தியா உட்பட பலரும் வலியுறுத்தி வந்தனர். ஆனால் புலித்தலைவர்கள் தமக்கு ஆபத்து வரும்வரை சரணடையும் முடிவை எடுக்க வில்லை. சில கிலோமீட்டர் சுற்றளவுக்குள் முடக்கப்பட்ட பின்னர்தான் போர் ஒரிரு நாளில் பெரும் மக்கள் கூட்டத்தின் பிணங்களின் குவியலுக்குப் பின்னர் முடியும் தறுவாயிலிருந்தது. ஆனால் இந்நிலை ஏற்படும் முன்னரே புலிகள் சரணடைந்தனர், ஆனாலும் அதன் பின்னும் பெரிய அளவிலான படுகொலைகள் நடைபெற்றது. இன்று வரையில் அரசியல் கைதிகள் கொலைகள் நடந்தேறி வருகின்றன.

இந்தப் போர் புலிகளை முற்றிலும் அழிப்பதற்காகவே நடைபெற்றது. இருப்பினும் அமெரிக்காவும் சில ஐரோப்பிய நாடுகள் புலிகளை காப்பாற்றவும் முயற்சிகள் எடுத்தது போலக் காட்டிக் கொண்டனர். அவர்கள் உண்மையில் புலிகளைக்காக்க விரும்பினார்களா என்பது கேள்விக்குறி. புலிகளைக் காக்க விரும்பினாலும், அது அவர்களுக்குத் தேவையானவரையில்தான். ஒரு வேளை இலங்கை அரசுடன் ஒரு ஒப்புதலுக்கு இவர்கள் வந்த பிறகு அவர்களுக்கு அதோ கதிதான்.  இவர்கள் சொல்லும்படி சரணடைந்திருந்தாலும் புலித்தலைவர் பிரபாகரனுக்கும், பொட்டு அம்மனுக்கும் தூக்குதண்டனைதான் கொடுப்பார்கள். இல்லை அப்படியே கொன்றாலும் கொன்றிருப்பார்கள்.

இப்போது எரிக் சோல்ஹைம் புலிகள் நினைத்திருந்தால் பேரழிவைத் தடுத்திருக்கலாம் என்கிறார். இவர் சொன்னது ஜனவரி மாதம் இந்த திட்டம் ஆலோசனையில் இருந்தது என்பது. 2009 ஜனவரி மாதத்தில்தான் கிளிநொச்சி வீழ்ந்தது. புலிகள் முல்லைத் தீவுக்கு இடம் பெயர்ந்திருந்தார்கள். புலிகள் முழுமையாகத் தோற்கடிக்கப்பட்டிருக்கவில்லை. தோல்வியை நோக்கியிருந்தாலும் அப்போதும் போராடி மீளும் வாய்ப்பு இருந்தது. மேலும் அமெரிக்க ஐரோப்பிய நாடுகளோ, இந்தியாவோ போரை நிறுத்தும் என்றும் எல்லோரும் நம்பிக் கொண்டிருந்தார்கள்.

புலிகளின் துரோகம்;

புலிகள் இறுதிப்போரில் மக்களைக் கேடயமாகப் பயன்படுத்தினர். இறுதியில் முல்லைத்தீவில் முடங்கிய போது இது அதிகமாக இருந்தது. தப்பிச் சென்றவர்களையும், செல்ல முயன்றவர்களையும் கொன்றனர். குழந்தைகளைப் பிடித்துக் கட்டாயமாக போருக்கு அனுப்பினர். இறுதியில் தம் உயிரைக் காக்கவே சரணடைந்தனர். இவையெல்லாம் உண்மை.

புலிகள் ஆரம்பம் முதலே உலகக் கொலைகாரன்களுடன் நட்பு பாராட்டியே வந்துள்ளனர். இந்தியாவிடம்தான் பயிற்சி பெற்றனர். இஸ்ரேலிடமும் பயிற்சி பெற்றனர். சர்வதேசம் என்று இவர்கள் நட்பு பாராட்டிய நாடுகள்தான் உலகின் பலநாடுகளின் மீது படையெடுத்தும், தேசிய இன விடுதலைப் போராட்டங்களை நசுக்கியும் வந்துள்ளனர். குறிப்பிட்ட நாட்டின் அரசுகள் தன்னுடன் ஒத்துழைக்காத போது அந்நாட்டு  அரசுக்கு எதிரான போராளிகளுக்கு ஆதரவும் அளிப்பவைதான் இந்த சர்வதேசம் எனப்படும் ஏகாதிபத்திய வல்லரசுகள்.

புலிகள் இனவிடுதலைக்குப் போராடியதாகச் சொல்லிக் கொண்டாலும் மற்ற பயங்கரவாத இயக்கங்கள் நிகழ்த்திய அத்தனை இழிசெயலையும் பயங்கரவாதத் தாக்குதலையும் நடத்தினார்கள் 25 வருடங்களாக, பாசிஸ இயக்கமாகவே நடந்து கொண்டார்கள்

மற்ற இயக்கத் தலைவர்கள் போராளிகள் கொல்லப்பட்டது.

இந்திய உளவுத்துறையிடம் 50 கோடியை வாங்கிக் கொண்டு, அநுராதபுரத்தில், 146 சிங்கள அப்பாவிகளைக் கொன்று குவித்தனர். இதை சிங்களக் குடியேற்றத்தைத் தடுப்பதற்காகவும், அரசைப் பேச்சுவார்த்தைக்குப் பணிய வைப்பதற்காகவும் எனவும் நியாயப்படுத்தினர். அப்பாவிகளின் மீதான புலிகளின் முதல் பயங்கரவாதத் தாக்குதல் இது.

பல பத்தாயிரம் இஸ்லாமியர்களை விரட்டி அவர்கள் சொத்தைக் கொள்ளையடித்தது. தமிழ் இஸ்லாமியப் பிரிவினையை அதிகமாக்கியது இந்த நிகழ்வு.

அரசியல் தலைவர்களைக் கொன்றது, ராஜீவ், ப்ரேமதாஸா, லட்சுமண் கதிர்காமர் போன்றோர் இதன் மூலம் மிகப்பரவலான வெறுப்பை மக்களிடம் ஏற்படுத்திக் கொண்டனர், இதை எதிரிகள் பயன்படுத்திக் கொண்டனர்.

குறிப்பாக ராஜீவ் காந்தியை தமிழ்நாட்டிலேயே தற்கொலைத் தாக்குதல் நடத்திக் கொன்றதன் மூலம் புலிகள் எதிர்களுக்கு தங்கத்தட்டில் வைத்து ஒரு வாய்ப்பை வழங்கிவிட்டனர். தனக்கான ஆதரவையும் இழந்தனர். இதனால் ஈழத்தின் மீதான் அனுதாபம் மறைந்து, இந்திய ராணுவத்தின், ராஜீவின் கொடூர முகம் மறைக்கப்பட்டு புலிகளின் மீதான வெறுப்பு அதிகரித்தது. பயங்கரவாத முத்திரை ஆழமாக விழுந்தது.

இதெல்லாம் போக சிங்களப் பொதுமக்கள் மீதும் பயங்கரவாதத் தாக்குதல் நிகழ்த்தினர். பேருந்து, இரயில், பொது இடங்களில் குண்டு வைத்தல், தற்கொலைத் தாக்குதல், மசூதி, புத்த விகாரைகளின் மீதான தாக்குதல் என எல்லாவற்றையும் செய்தனர். இது போன்ற எல்லாத் தாக்குதலையும் புலிகள்தான் செய்தார்கள் என்று கொள்ள முடியாது.

இறுதியாக நடைபெற்ற தேர்தலில் தமிழ்மக்களை வாக்களிக்க முடியாமல் தேர்தல் புறக்கணிப்பை நிகழ்த்தினர். இதன் மூலமாக சிங்கள இனவெறியர்களை ஆட்சியில் அமர வைத்தனர். ராஜபக்சேவிடம்  பணம் பெற்றுக் கொண்டு தேர்தலைப் புறக்கணித்தனர் புலிகள் என்ற செய்தியும் உண்டு.

போர் தொடங்கிய பின்பு, கோத்தபாய, சரத் பொன்சேகா ஆகியோரின் மீது நடத்தப்பட்ட (தோல்வியடைந்த)தற்கொலைத்தாக்குதல்.

இதெல்லாமே தமிழீழ விடுதலைக்கு உரம் சேர்ப்பதா அல்லது குழி வெட்டுவதா ?

அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஐரோப்பிய ஒன்றியம் போன்றவை புலிகளுக்கு பல கடுமையான எச்சரிக்ககளை விடுத்தனர், சமாதான வழியில் தீர்வுகாண வலியுறுத்தினர். பின்பு புலிகளின் இவ்வகையான பயங்கரவாதத் தாக்குதலை வைத்து பயங்கரவாத இயக்கமாக அறிவித்தனர். இலங்கை அரசுக்கு ஆயுதமும் நிதியும் வழங்கினர்.

இதற்குப்பின்னரும் புலிகள் இவர்களை நம்பி இருந்தனர். இந்தியாவுடன் போரை நடத்தியும், ராஜீவைக் கொன்றபிறகும் புலிகள் இந்தியாவின் நண்பர்கள் என்றே கூறி வந்தனர். இன்னும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

கொழும்பின் மீது விமானத் தாக்குதல் நடத்துமளவிற்கு பலம் பெற்றிருந்த புலிகள், இந்திய ராணுவத்தையே எதிர்த்த புலிகள், சிங்கள ராணுவத்திடம் எப்படித் தோற்றுப் போனார்கள் என்பது பெரிய கேள்வி. இலங்கை அரசுக்கு உலக ஆதரவு ஆயுதம் படைகள் இருந்தது உண்மை. ஆனாலும் மிகவும் வலுவான புலிகளுக்கு அதை சமாளிப்பது என்பது முடியாத காரியம் இல்லை.

மரபுச் சமரில் முடியாது என்று தெரிந்த பின்னரும் தொடர்ந்து அதே வழியில் போரிட்டனர். கிளிநொச்சி வீழ்ந்த பிறகும் கரந்தடிப்போர் (கொரில்லாப் போர்) முறைக்கு மாறாமல் தந்திரோபாயப் பின்வாங்கல், தற்காப்புத் தாக்குலை நடத்திக் கொண்டிருந்தனர். கொரில்லாப் போருக்கு மாறாமல், தாக்குதலை நடத்தாமல் யாரோ இழுத்துப்பிடித்து வைத்துக் கொண்டிருந்தனர் போலத் தோன்றியது. இதோ தாக்குவார்கள், அதோ தாக்குவார்கள் புலிகள் என்று அனைவரும் எதிர்பார்த்து ஏமாந்ததுதான் மிச்சம். நூற்றுக்கணக்கான புலிகள் கொல்லப்பட்டுக் கொண்டேயிருந்தார்கள். இறுதிவரையிலும் இருந்த இடத்திலிருந்தே போராடி, தானாகவே தோற்று சிங்கள ராணுவத்தின் வேலையை எளிதாக்கினர்.

இதையெல்லாம் புலித்தலைவர்கள் சிந்திக்காமலா இருந்த இடத்திலிருந்தே போரிட்டிருப்பார்கள்.

பிரபாகரனுக்கு அவ்வளவு அதிகாரம் இருந்ததா என்பது குறித்து, மேற்கண்ட செயல்களெல்லாம் பிரபாகரனால் தனிப்பட்ட முறையில் எடுக்கப்பட்டவைதானா ?  அல்லது வேறு யாருடையே யோசனை அல்லது உத்தரவின் பேரில் இதை செய்தனர் என்பது விடை தெரியாத கேள்வி. பிரபாகரனுக்குப் பின்னாலிருந்த அவரை ஆட்டுவித்தவர்கள் யார் இதெல்லாம் இன்னும் வெளிவராத ரகசியங்கள். இதனால்தான் பிரபாகரன் அதிகமாக முன்னிறுத்தப்படுவதும் ஐயத்தை ஏற்படுத்துகிறது. பிரபாகரன் பிம்பத்தின் ஒளியில் பல துரோகிகள் ஒளிந்திருக்கிறார்கள். கருணாவை விட இவர்களின் பங்குதான் புலிகளின் தோல்வியை நிர்ணயித்திருக்கும்.

எரிக் சொல்வது போல் சரணடைந்திருந்தாலும் இப்போது நடப்பதுதான் நடந்திருக்கும். எரிக் யாருடைய பேராளராக இருக்கிறார். உலகம் முழுதும் போரை நடத்தும் வல்லரசுகளின் பேராளர். இவர்கள் கண்ணீர் வடிப்பது பாதிக்கப்பட்டவர்களுக்காக அல்ல. 30 வருடப் போர் பல பேருக்கு வணிகமாகியிருக்கிறது. ஆயுதம் வழங்குவதிலிருந்து, அபிவிருத்தித் திட்டங்கள் வரைக்கும். தமிழர்கள், சிங்களர்கள் இந்தியா சீனா அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், நார்வே எனப் பலர் இவர்கள் யாரென்று நமக்குத் தெரியாது. நமக்குக் காட்டப்படுவதெல்லாம் பிரபாகரன், ராஜபக்சே இவர்களிருவர்தான். இவர்களின் கைகளால் ஆட்டுவிக்கப்பட்டவர்கள்தான் (புலத்து) புலிகள். இதற்கு பலி கொடுக்கப்பட்டவர்கள் புலித்தலைவர்கள், போராளிகள் மற்றும் மக்கள்.
Download As PDF
Bookmark and Share

Post Comment