விஸ்வரூபம் - கமல் : இஸ்லாமியர்கள் எதிர்ப்பு சரியா ?

விஸ்வரூபம் இவ்வளவு பெரிய பிரச்சனைக்கு உள்ளாகும் என்று எதிர்பார்க்கவில்லை. படம் தொடங்கியதிலிருந்தே பிரச்சனைகள். இறுதியாக இந்த எதிர்ப்பும் அதைத் தொடர்ந்த விவாதங்களும். எல்லோரையும் எழுதவோ அல்லது கருத்து சொல்லவோ வேண்டிய அளவுக்கு பிரச்சனை ஆகியுள்ளது.

மத நம்பிக்கை, மனதை புண்படுத்தும் காட்சிகளுக்காக போராடினால் அது எதிர்க்கப்பட வேண்டியதுதான்.  ஆனால் ஒரு தரப்பை குற்ற உணர்வுக்குள்ளாக்கும் சித்தரிப்புக்கள் எதிர்க்கப்பட வேண்டியவை. அதற்காக படம் தடை செய்யப்பட வேண்டும் என்ற பொருளில்லை. இஸ்லாமியர்கள் ஏன் இதை எதிர்க்கின்றனர் என்பதும் மற்றவருக்குப் புரியவில்லை. அவர்கள் எதிர்ப்பு தெரிவிப்பது முஸ்லிம்கள் திரைப்படங்களில், எவ்விதம் சித்தரிக்கப்படுகின்றனர் அதனால் சமூகத்தில் ஏற்பட்ட விளைவுகள் குறித்தது.

இப்போது படமே தடை செய்யப்பட்டதில் அனைவரது ஆத்திரமும் அவர்களுக்கு எதிரானதாக மாறிவிட்டது. முஸ்லிம்கள் சிலர் இதை ஒரு வெற்றியாகக் கொண்டாடுகின்றனர். இவர்கள் போட்ட போடில் இன்று பலர் இஸ்லாமியர் மீது கடும் வெறுப்புக் கொண்டதைக் காணமுடிகிறது.  கமலின் உன்னைப் போல் ஒருவன் வெளிவந்த போது பல இணைய விமர்சகர்கள் படம் பச்சையான இந்துப் பாசிசம் என்று கடுமையாக விமர்சித்தனர்.

இவர்கள் போன்ற இருக்கும் கொஞ்ச நஞ்ச நடுநிலைகளையும் இந்துத்வ மனநிலைக்கு மாற்றியதற்கு வலைப்பூக்கள், ஃபேஸ்புக்கில் இருக்கும் சவூதி ஆதரவாளர்களே காரணம்.

இது வரை படம் பார்க்காதவர்கள் திரையரங்கம் போகாதவர்களெல்லாம் இந்தத் தடைக்கு எதிராக திரையரங்கம் போய் எதிர்ப்புக் காட்டுகிறார்கள். விஸ்வரூபம் தடை செய்யப்பட்டது மிகவும் எதிர்க்கப்படவேண்டியதே.

முஸ்லிம்களுக்கு சகிப்புத்தன்மை இல்லை போன்ற விமர்சனங்கள் வருகின்றன. இந்தப் பிரச்சனை அது குறித்ததல்ல.

# இஸ்லாமியருக்கு எதிரான மனநிலை சமூகத்தில் எப்படி இருக்கிறது என்பதற்கு உதாரணமாக, ஒரு வாரத்திற்கு முன்பு சென்னையில் ஏதோ ஒரு பகுதியில் இருக்கும் ஒருவர் வீட்டில் சிலிண்டர் வெடித்து விட்டது. அதை தினகரனில் வெளியிட்ட விதம் வேறுமாதிரியாக இருந்தது. சிலிண்டர் வெடித்தது, வெடிகுண்டு தயாரிப்பின்போது விபத்தா என்று காவல்துறை விசாரணை. இதுதான் அந்த செய்தியின் சாரம். காரணம் அந்த சிலிண்டர் வெடித்தது ஒரு முஸ்லிமின் வீட்டில் என்பதால்தான். சிலிண்டர் வெடிப்பது என்பது அங்கங்கே இயல்பாக நடக்கும் விபத்துக்கள்தான் ஆனால் இது இஸ்லாமியன் வீட்டில் நடப்பதால் இப்படி ஆகியிருக்கிறதே இந்த நிலைக்குக் காரணம் என்ன ?

# குண்டு வெடித்தாலே குல்லாவும், தாடியும் நினைவுக்கு வருவதன் மர்மம் என்ன ?

ஊடகங்கள் திரைப்படங்கள் சித்தரிப்புதான். அதற்குத்தான் இந்த எதிர்ப்பு. பல ஹிந்திப்படங்கள், தமிழ் தெலுங்குப்படங்கள் தீவிரவாதத்தை எதிர்ப்பது போலவும், நாட்டுப்பற்றை ஆதரிப்பது போலவும் வெளிவந்தன. வருகின்றன. ஹாலிவுட் படங்கள் என்றால், ரஷ்யாவை எதிரியாக சித்தரித்து அமெரிக்காவை நாயகனாகக் காட்டும். உலகையே காப்பது போலவும் கதையமைப்பு இருக்கும். அதே நம்ம ஊர்ப்படங்களோ பாகிஸ்தான் தீவிரவாதிகளை வில்லனாகவும் நம்மை நாயகனாகவும் காட்டுகின்றவை. பாகிஸ்தானியருக்கு உதவுவதாக நம்ம ஊர் ஆட்களைக் காட்டுகின்றனர். இந்தியாவில் நிலவும் அரசியல் சூழலும், நிகழ்வுகளும் முஸ்லிம்களுக்கு எதிரான மனநிலையை நன்கு கட்டமைத்து விட்டன.

இது இஸ்லாமியர் மட்டுமல்ல பல சமூகங்களுக்கும் பொருந்தும் உண்மைதான்.

# சில வருடங்கள் முன்பு வரை விடுதலைப்புலிகள் குறித்துப் பீதிகள் கிளப்பப்பட்டு வந்தது, காங்கிரஸ், அதிமுக காரர்கள் அதிகம் செய்வார்கள். இலங்கைக்கு ஏதாவது சட்டவிரோதமாக கடத்தப்பட்டு, யாராவது பிடிபட்டால் விடுதலைப்புலி உளவாளியா, புலிகள் ஊடுருவல், ஆயுதக் கடத்தலா என்று பீதியைக் கிளப்புவார்கள். இன்று வரை ஈழ அகதிகள் எப்படித் தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள் விடுதலைப்புலிகள் இல்லாத நிலையிலும்.

ராஜீவ் படுகொலையைப் பயன்படுத்தி இந்திய அரசால் உருவாக்கப்பட்ட விடுதலைப்புலிகள், பயங்கரவாத எதிர்ப்பு என்ற காரணத்தைப் பயன்படுத்தி உருவான மனநிலையால் 40000 பேர்கள் படுகொலை செய்யப்பட்ட போதும் தமிழகம் தவிர பிற மாநிலங்களில் எந்த ஒரு சலசலப்பும் எழவில்லை.

 #தற்போது வட இந்தியத் தொழிலாளர்கள் கட்டுமானப் பணிக்காக தமிழகத்திற்குப் பெருமளவில் இடம் பெயர்ந்துள்ளனர். இவர்கள் சிலர் திருட்டு உட்பட சில குற்றங்களில் ஈடுபட்டுக் கைதான பின்பு இவர்கள் மீது அனைவரும் வெறுப்படைந்து விட்டனர். இவர்கள் அனைவரும் தமது அடையாளங்களைக் காவல்துறையிடம் பதிவு செய்ய வேண்டும் கண்காணிப்பில் இருக்க வேண்டும் என்ற நிலை. வேளச்சேரியில் காவல்துறை நிகழ்த்திய மோதல் கொலையில் பீஹாரிகள் 5 பேர் கோரமாகக் கொல்லப்பட்டதற்கு பெரிய அளவிலான ஆதரவும் தமிழகத்தில் இருந்தது. இது ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் மீதான வெறுப்புணர்வு, சந்தேகம் ஆகியவற்றின் பேரில் வருவதுதான்.


# ஏறக்குறைய 30 வருடங்கள் முன்பு இந்திராகாந்தி பிரதமராக இருந்த போது பஞ்சாப்பில் காலிஸ்தானிகள் பிரச்சனையின் காரணமாக இந்திய அளவில் பொதுமக்கள் பஞ்சாப்பியர், சீக்கியர் மீது வெறுப்பில் இருந்தனர். இந்திரா காந்தி கொல்லப்பட்ட பின்னர். 3000 சீக்கியர்கள் டெல்லியில் கொன்று வீசப்பட்டனர்.  அனுதாப அலையும் சீக்கியப் படுகொலையின் மீதான அங்கீகாரமும், சீக்கிய எதிர்ப்பு மனநிலையும் கொண்டு தொடர்ந்த தேர்தலில் காங்கிரஸ் மிகப்பெரும் வெற்றி பெற்றது.

இப்படிப் பலவும் சொல்லிக்கொண்டே போகலாம். ஒரு சிலரோ அல்லது அச்சமூகத்தின் அரசியல்வாதிகளோ செய்யும் செயலுக்கு மொத்த சமூகத்தின் மீதும் வெறுப்பைக் கற்றுத் தருவது தவிர்க்கப்பட வேண்டும்.

மேலும் இது போன்று படத்தைத் தடை செய்யக் கோருவது, போராட்டம் நடத்துவது இஸ்லாமிய அமைப்புக்கள் மட்டுமல்ல. இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி, பாமக, நாம் தமிழர் என தமிழகம் சார் கட்சிகளும், ராம்சேனா, ஆர் எஸ் எஸ், பஜ்ரங்தள், சிவசேனை ஆகிய இந்திய அளவிலான கட்சிகளும் இதில் அடக்கம். விஸ்வரூபம் தவிர இதற்கு முன்பு பல படங்களுக்கும் நடந்துள்ளது. சிறிய அளவிலும் பெரிய அளவிலும். இதில் சில நியாயமானவை, முக்கால்வாசி கேலிக்கூத்துதான்.

கமல்ஹாசனின் இலட்சியப் படைப்பான மருதநாயகம் நிறுத்தப்பட்டதும் ஒரு ஜாதிக்கட்சி போராட்டத்தினால்தான். கண்ணோடு கண்ணை என்ற மன்மதன் அம்பு படப்பாடல் இந்துக்களை புண்படுத்துகிறது என்று கூறி நீக்கப்பட்டது, திடீர் தமிழ்க்காவலர்களாக உருமாறி தமிழ்ப்பாதுகாப்பு இயக்கம் தொடங்கி மூன்றாம் மொழிப்போர் நடத்திய திருமா-ராமதாஸ் கூட்டணி மும்பை எக்ஸ்பிரஸ் படத்திற்குத் தமிழ்ப்பெயர் சூட்ட வேண்டும் என்று எதிர்ப்புதெரிவித்து திரையரங்கம் வரை பிரச்சனை செய்தனர். சண்டியர் பெயர் விருமாண்டியாக மாற்றப்பட்டது உபயம் தலித் போராளி கிருஸ்ணசாமி. படப்பிடிப்பு நடத்த விடமாட்டோம் என்றெல்லாம் பிரச்சனை பண்ணினார்கள். வசூல்ராஜா என்ற பெயர் மருத்துவர்கள் குறித்து தவறான எண்ணத்தை ஏற்படுத்துகிறது என்று பிரச்சனை செய்தார்கள் இதுவும் மருத்துவர் கிருஸ்ணசாமி தலைமையில் என்று நினைக்கிறேன். தெய்வத்திருமகன் படத்தின் பெயர் தெய்வத் திருமகளானது. சிவகாசி படம் வழக்கறிஞர்களை இழிவு படுத்துகிறது என்று சொல்லி விஜய், அசின், பேரரசு ஆகியோரின் மீது வழக்கு போடப்பட்டது. (ஷகிலா மீது கூட ஒரு வழக்கு நடந்தது சரியாக நினைவில்லை) நடிகர் விஜய்  கீதை என்ற படம் தொடங்கினார், திருச்சியில் அவரது ரசிகர்கள் அதைக் கொண்டாடும் வகையில் அதற்கு முன்பு நடித்த பகவதி படம், வெளிவரப் போகின்ற கீதையையும் இணைத்து பகவத் கீதை என்றும் விஜயை கிருஷ்ணனைப் போலவும் சுவரொட்டிகளை ஒட்டினார்கள். பிறகு இந்து முன்னணி கோதாவில் இறங்கி கீதையின் பெயர் புதிய கீதை என்றானது. தனுஷின் உத்தமபுத்திரன் படம் கொங்கு வேளாளர்கள் சமூகத்தை இழிவு செய்வதாக கவுண்டர்கள் போராட சில காட்சிகள் நீக்கப்பட்டன.

இதெல்லாம் பார்த்துவிட்டு, நான் இனிமேல் ரவுடிகள் கூட தங்களைப் புண்படுத்தும் காட்சிகளை நீக்கச் சொல்லிப் போராடக் கிளம்பிடுவானுக போல என்று நக்கலடித்துக் கொண்டிருந்தேன்.

தீபா மேத்தாவின் வாட்டர் படம் எதிர்க்கப்பட்டது, தடை செய்யப்பட்டது. குழந்தை விதவைகள் குறித்த படம் எனவே இந்துக்களைப் புண்படுத்துகிறது என்று எதிர்த்தவர்கள் சொன்னார்கள்.

சரிகா நடித்த பர்சானியா குஜராத்தில் திரையிடப்படவில்லை. அது குஜராத் கலவரத்தில் தொலைந்த ஒரு சிறுவன் குறித்த மனிதாபிமானப்படம் மட்டுமே.

மேலே சொன்னது போலவே இப்போதைய எதிர்ப்பையும் புரிந்து கொள்ளலாம். மேலே சொன்னது போலவோ அல்லது விஸ்வரூபம் போலவோ திரைப்படங்களின் மூலமாக ஒரு குறிப்பிட்ட சமூகத்தைத் தவறாக எண்ணுவதற்கு அந்தத் திரைப்படங்களைக் காணும் சராசரி ரசிகனால் சிந்திக்க முடியாது என்பது சரிதான். இஸ்லாமியர் எதிர்ப்பை மிக எளிதாக எள்ளி நகையாடி இவனுகளுக்கெல்லாம் வேலையெ இல்லையா என்று நம்மால் புறந்தள்ள முடியும். திரைப்படம் என்பதால் அதிக விளம்பரத்தின் காரணமாக அதை எதிர்ப்பவர்கள் மற்றவர்களால் அதிகமாக வெறுக்கப்படுவர்.

அதே நேரம் திரைப்படங்கள் அடிப்படைக் காரணங்களை மறக்கச் செய்து விட்டு, வெறும் பரபரப்பான செய்திகளை வைத்து மட்டும் காட்சிகள் திரைக்கதைகளை அமைக்கிறார்கள். அதை நாம் கேள்விகளின்றி ஏற்றுக் கொள்ளக் கூடாது. அதற்காக படத்தை ஓட விடக்கூடாது வெளியிடக்கூடாது என்பது பாசிசம்.

ஜேம்ஸ்பாண்ட் என்பவன் இங்கிலாந்து உளவாளி, அவன் மற்ற நாடுகளுக்குச் சென்று சகட்டு மேனிக்கு சுட்டுத் தள்ளி நாச வேலைகளைச் செய்கிறார். அதை இங்கிலாந்துக் காரர்கள் ரசிக்கலாம் நாம் ஏன் ரசிக்கிறோம்.

காஷ்மீர் என்றாலே தீவிரவாதம் என்ற சொல்லும் இலவச இணைப்பாகவே விவேக்கின் நகைச்சுவை வசனம் வரை சாதாரணமாகக் கையாளப்படுகிறது. இதற்கு அடித்தளமிட்ட படம் ரோஜா. அது பலவருடங்களாக குடியரசு நாளில் தூர்தர்ஷனில் ஒளிபரப்பட்டது.

பம்பாய் படத்தில் இஸ்லாமியர்-இந்துக்கள் கலவரம் என்று சண்டை போலக் காட்டப்பட்டது. ஆனால் நடந்தது இஸ்லாமியர் மீதான கலவரம் மட்டுமே. அந்தப் படத்தைப் பாராட்டியவர் கலவரத்தைக் காவல்துறையின் உதவியுடன் நடத்திய சிவசேனாவின் தலைவர் பால்தாக்கரே.

விஜயகாந்த், அர்ஜுன் படங்கள் பற்றி சொல்லவே தேவையில்லை.

சரி இஸ்லாமியர்கள் தீவிரவாதத்தில் ஈடுபடுவதே இல்லையா ? மதவெறியர்கள் இல்லையா ? அவர்களுக்கு மட்டும்தான் கருத்து சுதந்திரமா ? இந்துக்கள் திரைப்படங்களில் இழிவு செய்யப்பட வில்லையா ? தீவிரவாதிகளா இந்துக்கள் காட்டப்படவில்லையா ? எல்லாவற்றுக்கும் பதில் ஆம்.

இஸ்லாமியத் தீவிரவாதம் நிகழ்த்திய குண்டுவெடிப்புகள் மும்பை, கோவை ஆகியவை. அதற்குக் காரணம் அவர்கள் மீது நடத்தப்பட்ட கலவரம் அதற்குப் பின்னும் அவர்களுக்கு நீதி கிடைக்காமல் அலைக்கழிக்கப்பட்டதுதான். தூக்கு தண்டனை தரவேண்டிய மும்பைக் கலவரக் குற்றவாளிகளுக்கு, தூக்கு கூட வேண்டாம் ஆயுள் தண்டனை கிடைத்திருந்தால் கூட குண்டு வெடித்திருக்காது. அது போலவே பாபர் மசூதி இடிப்பும் அதைத் தொடர்ந்த வன்முறையும். அதற்குப் பின்பும் பல குண்டு வெடிப்புகள் நிகழ்ந்தன. அவை எதுவும் இஸ்லாமியரால்தான் வைக்கப்பட்டன என்பதற்கு உரிய ஆதாரங்கள் இல்லை. மாலெகானில் மசூதியில் வைக்கப்பட்ட குண்டுகள் கூட இஸ்லாமியத் தீவிரவாதிகளால் வைக்கப்பட்டடது என்ற ஊகமும் உண்மை வெளிப்படுவதற்கு முன்பு வெளிப்பட்டது. பின்பு இந்து இயக்கங்கள் பலவும் இது குண்டு வெடிப்பில் ஈடுபட்ட உண்மை தெரியவந்தது. பெண் சாமியார் ஒருவர் கைது செய்யப்பட்டது வரை பலவும் நடந்தன. செய்திகள் தொலைக்காட்சிகள் என அனைத்து ஊடகங்களும் வெளியிட்டன. ஆனால் யாரும் இந்துக்கள் என்ற சமூகத்தின் மீதோ, இந்து இயக்கங்கள் மீதோ இந்து அடையாளங்கள் மீதோ பயங்கரவாத பிம்பம் விழுந்துவிடவில்லை. காவல்துறையின் வன்முறை அவர்கள் மீது பாய்வதில்லை. சிறுபான்மை பயங்கரவாதமும் பெரும்பான்மை பயங்கரவாதமும் ஒன்றல்ல ஏன் என்றால் பெரும்பான்மையாக இருப்பதே இந்துக்கள்தான். நாமே நம்மை பயங்கரவாதிகள் என்று எண்ணிக் கொள்ளப் போவதில்லை. தானல்லாத அடுத்த குழுவினரை குற்றம் சொல்வது மிக எளிதல்லவா ? இஸ்லாம் இல்லாத பல இடங்களிலும் நீதி கிடைக்காத நிலையில் பயங்கரவாதம் தலைதூக்குவது இயல்பல்லவா ? குஜராத் கலவரத்தில் கூட முஸ்லிம்கள் முதலில் எரித்துக் கொன்றார்கள் என்றுதான் சொல்கின்றனர். பாஜக ஆளும் மாநிலத்தில் என்ன எதிர்வினை வரும் என்று கூடத் தெரியாமல் 50 இந்துக்களை எரித்துக் கொல்லும் அளவிற்கு முஸ்லிம்கள் துணிச்சல்காரர்கள் என்று கூட சிந்திக்க முடியாத அளவிற்கு வெறுப்பு. குஜராத் கலவரம், பாபர் மசூதி இடிப்பு என்றாலே எல்லோருக்கும் கொட்டாவி வருகிறது, குண்டு வெடிப்பு என்றால் மட்டும் கோபம் வருகிறது.

உலக அளவில் 2011 ஆம் ஆண்டில்தான் இஸ்லாமோஃபோபியா உருவானது. ஆனால் இந்தியாவிலோ அதற்கு பல ஆண்டுகள் முன்பே உருவானதையும் கணக்கில் கொள்ள வேண்டும்.

விஸ்வரூபம்

நான் படங்கள் பார்ப்பதை நிறுத்தி விட்டேன். விஸ்வரூபமும் பார்ப்பேனா என்று தெரியவில்லை. இருந்தாலும் படம் பார்த்தவர்கள் சொல்வதைக் கொண்டு ஓரளவுக்கு கணிக்க முடிகிறது. படத்தில் கமலே ஒரு முஸ்லிம். ஆப்கன் மக்கள் தாலிபன் போராளிகள் வாழ்க்கையை அழகாகக் காட்டியிருக்கிறார். அமெரிக்கன் கூட ஆயில் கிடைத்தால் அல்லாஹூ அக்பர் என்பான் என்று  வசனம் இருக்கிறது. அமெரிக்கர்களையும் கிண்டல், விமர்சனம் செய்கிறார். இது ஒரு ஆப்கன் அமெரிக்கப் படை குறித்த விறுவிறுப்புப் படம். இதில் இஸ்லாமியரைப் புண்படுத்துவதெல்லாம் ஒன்றும் இல்லை. சராசரி ரசிகன் இதைத்தாண்டி சிந்திக்கப் போவதில்லை. ஹாலிவுட் பாணி சண்டைப்படம். பரவால்லை பாக்கலாம் என்பதுடன் அவனுடன் முடியும். 

குரானைப் படித்து விட்டுப் போய் குண்டு வைக்கிறான். குண்டுவெடித்த பின்பு தொழுவதைக் காட்டுகிறார்கள், சிறுவன் ஆயுதங்களை எடுத்துச் செல்கிறான். மசூதியில் ஆயுதங்களை வைத்திருக்கிறார்கள், முஸ்லிம் மனைவியைக் கூட்டிக் கொடுக்கிறான்.  இவையெல்லாம் இஸ்லாமியர் வைக்கும் குற்றச்சாட்டுக்களில் சில.

இதெல்லாம் ஒரு தடை செய்ய ஒரு காரணமாக முடியாது. தாலிபான்களின் வாழ்க்கையில் இதெல்லாம் அன்றாட நிகழ்வுகள்தான். அதை அப்படித்தான் காட்ட முடியும். இதற்கெல்லாம் மனம் வருந்தினால் ஒன்றும் செய்ய இயலாது. எதிர்ப்பின் காரணமே வேறு


இங்கு என்ன பிரச்சனை என்றால், அமெரிக்காவை குண்டு வெடிப்பிலிருந்து காக்கிறார் எஃபிஐ அதிகாரி கமல். ஆப்கனை படையெடுத்து ஆக்ரமித்திருக்கும், அமெரிக்கா அமெரிக்காவாகவே இருக்கிறது, ஆப்கனின் விடுதலைக்குப்போராடும் தாலிபன் தீவிரவாதிகள் வில்லன்கள் என்பது சரியா ?. தாலிபன் ஆதரவெல்லாம் இல்லை. அவர்கள் கொடூரமானவர்கள் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் அநியாயமாக ஒரு நாட்டை இன்னொரு நாடு ஆக்ரமித்திருக்கிறது. அந்த நாட்டில் நடக்கும் பயங்கரவாதத் தாக்குதலை ஒருவர் தடுக்கிறார். இதில் யார் குற்றவாளி ? அமெரிக்கா ஆப்கன் மட்டுமல்லாமல் பாகிஸ்தான் எல்லையைத் தாண்டியும் தாக்குகிறது. இங்கிலாந்து இளவரசர் ஹாரி தற்போது ஆப்கனில் ராணுவப்பயிற்சியில் ஈடுபட்டபோது வீடியோகேமில் வருவது போல் தாலிபன்களை வானூரிதியிலிருந்து சுட்டேன் என்று சொல்லி சர்ச்சையில் சிக்கியிருக்கிறார். ஆப்கனில் தாலிபன்களை விடக் கொடியவர்கள் இவர்கள்தான் என்பது படம் பார்ப்பவனுக்குப் புரியுமா ? தாலிபன் உருவானதற்கும் (ரஷ்யாவும்)அமெரிக்காதானே காரணம் என்பதையெல்லாம் படம் பார்க்கிறவர்களுக்குப் புரியுமா ? அதையெல்லாம் யோசிக்கப் போகிறார்களா ? வில்லன்களான தாலிபன்களை தீவிரவாதிகள் என்றுதானே அவன் எடுத்துக் கொள்வான். ஹாலிவுட் படங்கள் போலவே இதுவும் ஒரு அமெரிக்கா சார்பு படம்தானே ?

(நான் முதன்முறையாக தாலிபன்கள் பாமியன் புத்தர் சிலைகளை இடித்ததைத் தொலைக்காட்சியில் கண்டபோது அவர்களை வெறுத்தும், அமெரிக்கா ஆப்கானில் படையெடுத்த போது மகிழ்ச்சியும் அடைந்தவன். போர் என்றால் மக்கள் அடையும் துன்பங்கள் குறித்து கூட நான் சிந்திக்க வில்லை. தாலிபான்கள் அழிய வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே மேலோங்கியிருந்தது. கூடவே இரட்டைக் கோபுரத் தகர்ப்பின் காரணமாக எழுந்த பயங்கரவாத எதிர்ப்புணர்வும்.

2008 - இல் ஈழப்போர் உச்சத்தை அடைந்து கொண்டிருந்த போது, நான் மிகவும் நொந்து போயிருந்தேன். அப்போதுதான் இணையத் தமிழ் ஊடகங்கள் படிக்கத் தொடங்கியிருந்தேன். ஈழப் போரின் செய்திகள் உடனடியாகக் கிடைத்துக் கொண்டிருந்த காலம். என்னிடம் ஒரு மலையாளி நண்பன் கூறினான். பிரபாகரனை சுட்டுக் கொல்ல வேண்டும். நம்ம பிரதமர் ராஜீவைக் கொன்றவன், அவன் ஒரு பயங்கரவாதி என்றான். மேலும் இந்தப் போரில் புலிகள் உறுதியாகத் தோற்று விடுவார்கள் என்றான். நான் புலிகள் ஆதரவாளனோ பிரபாகரனைத் தலைவனாக ஏற்றுக் கொண்டவனோ இல்லை இருப்பினும் அன்று நான் அடைந்த ஆத்திரத்திற்கு அவனை அடித்தே கொல்லலாமா என்று ஆகிவிட்டது. ஈழம் குறித்த மற்றவர்களது பார்வை அவ்வளவுதான். இந்த முரண்பாட்டின் காரணமாகவே இதை எழுத நேர்ந்தது)

சரி இப்போது கற்பனையாக, விஸ்வரூபம் படத்திற்கு பதிலாக மலையாள இயக்குநரின் ஒரு பாலிவுட் படம் கமலுக்குப் பதிலாக சல்மானும் அமெரிக்க இராணுவத்திற்குப் பதிலாக இந்திய அமைதிகாக்கும் ராணுவம், தாலிபனுக்கு பதிலாக புலிகள், ஆப்கனுக்குப் பதிலாக ஈழத்தை ஆகிரமிக்கிற கதைக்களன், "இந்திய ராணுவம் பெண்களை பாலியல் வன்முறை செய்யாது" என்று ஒரு ஈழத்தமிழன் பேசுகிற மாதிரி வசனமும் வைத்து இருந்தால் நாம் எதிர்ப்போமா மாட்டோமா ? நாம் எதிர்த்தால் அதை மற்ற மாநிலத்தவர் எப்படி எதிர்கொள்வர் ? அவர்களைப் பொறுத்தவரை பின்லேடனுக்கும் பிரபாகரனுக்கும் பெரிய வேறுபாடு காணமாட்டார்கள். நம்மைப் போன்றவர்க்கு மட்டும்தானே ஈழ வரலாறு தெரிந்தவர்க்குத்தானே தீவிரவாதம், பிரபாகரன் பின்னுள்ள காரணம் நியாயம் புரியும் ? 

தென் ஆஃப்ரிக்க கிரிக்கெட் வீரர் ஹஷிம் ஆம்லா வை ஆஸி வரணனையாளர் டீன் ஜோன்ஸ் "பயங்கரவாதி மற்றுமொரு விக்கெட்டை எடுத்து விட்டார்" என்று கூறி பின்னர் மன்னிப்புக் கேட்டார். ஆம்லாவின் நீளமான தாடியும் காரணாமாக இருந்திருக்கும்.

நடிகை ஷபானா ஆஸ்மி தான் ஒரு முஸ்லிம் என்பதாலேயே மும்பையில் எனக்கு வீடு கிடைக்கவில்லை என்றார். அதற்கு முன்பு இம்ரான் ஹாஸ்மியும் சொன்னார்.

அப்துல் கலாம் ஷாரூக் கான் ஆகியோர்க்கு அமெரிக்காவில் அவர்களது பெயரால் மட்டுமே நடந்த கெடுபிடிகள்

இப்படியாக சொல்லிக் கொண்டே போகலாம். இந்து முஸ்லிம் கலப்பு மணம் செய்து கொண்டவருகளும் மிகவும் பிரபலமானவர்களுக்கே இந்த நிலமையென்றால் சராசரி குடிமகன்களுக்கு நடப்பதைப் பற்றிக் கேட்கவே வேண்டாம். சமூகப் புறக்கணிப்பின் வேதனை கொடுமையானது. நம்மால் அதை உணர முடியாது.

எனவே ஊடகங்களில் அவர்கள் சித்தரிக்கப்படுவதற்கெதிரான ஜனநாயக கருத்தியல் ரீதியான எதிர்ப்புக்கள் முன்னெடுக்கப்படுவது தேவையானதும் நியாயமானதும் ஆகும்.

இது மதவாதத்தை ஆதரிப்பதாகக் கருதத் தேவையில்லை. மத அடிப்படைவாதத்தை விமர்சிப்பது, எதிர்ப்பது இதில் வராதது. அதற்கும் இதற்கும் தொடர்பில்லை. மத அடிப்படைவாத எதிர்ப்பு, விமர்சனம், விவாதங்களை நான் வரவேற்கிறேன். 


வஹாபி, சௌதி, பிஜே, பர்தா, ஷரியா, தலைவெட்டிகளின் ஆதரவுக் கருத்துக்கள் இவைகளையெல்லாம் இடது கையால் ஒதுக்கி வைக்கிறேன். இதற்கெல்லாம் நான் ஆதரவாளன் இல்லை. மனிதனை கொன்று மதம் வளர்ப்பதை எதிர்ப்போம். மதம் கொன்று மனிதம் வளர்ப்போம் என்பதே என் கொள்கை. 

இக்காரணங்களைக் கொண்டு சிறுபான்மையினர் மீதான வெறுப்பை விளைவிக்கும் சித்தரிப்புகளை எதிர்ப்பதை புரிந்து கொள்வோம்.

விஸ்வரூபம் படம் தடை செய்யப்பட்டதும் மிகக் கடுமையாக எதிர்க்கப்பட வேண்டியதுமாகும். அது கருத்துரிமைக்கு எதிரான நடவடிக்கையே.

அதன் பின்னால் திமுக, அதிமுக என்று வேறு அரசியல் இருக்கிறது. சவுக்கில் படிக்கவும். 

தொடர்பான இன்னொரு பதிவு

விஸ்வரூபமும் என் ரிஷிமூலமும்
Download As PDF
Bookmark and Share
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment