மே 18 ஈழத்தமிழ் இன அழிப்பு நினைவு நாள்

இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான போர் முடிந்து 10 வருடங்கள் கழித்து, இன்று இன்னொரு சிறுபான்மையினரான தமிழ் முஸ்லிம்கள் மேல் கலவரங்கள் தொடங்கியிருக்கும் நிலையில்,

த்து வருடங்களுக்கு முன்னர் நினைத்துப் பார்த்தால் இன்னும் வேதனையாக இருக்கிறது. அப்போதுதான் இணையம் பயன்படுத்துவது அறிமுகமாயிருந்தது. பணிக்குச் சேர்ந்த புதிதில் வேலையை முடிக்க முடியாமல், ஈழப்போரின் செய்திகளைக் காண ஆர்வம் மிகுதியால் இடையிடையே தமிழ்மணம், புதினம், பதிவு, தமிழரங்கம், வினவு உட்பட பல இணையத் தளங்களில் படித்து நொந்து போய் இருந்த காலம். 

போர் நின்றால் போதும் என்ற நல்ல செய்திக்காக ஏங்கி ஏங்கி பல்வேறு வகையான போரின் பேரழிவைக் காட்டும் புகைப்படங்களும் மக்களின் துயரங்களும் இடம்பெயர்வுகளும் கையறு நிலையும் தமிழ்நாட்டில் இருந்த நம்மைப் போன்றவர்களின் நிம்மதியையே பறித்தன. மிகப்பெரிய குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்கின. புலிகள் ஏதேனும் திருப்பு முனையை ஏற்படுத்த மாட்டார்களா என்று எதிர்பார்த்துக்கொண்டிருந்த மனம் மாறி ஏதாவது அதிசயம் நிகழ்ந்தால் ஒழிய நடக்காது என்று தெரிந்து போனது. 

வரலாறும், அவர்களின் நடவடிக்கைகள் மீதான விமர்சனங்களும் ஏற்றுக் கொள்ளும்படியாக இருந்ததால், உணர்ச்சிவயப்பட்ட விடுதலைப் புலி ஆதரவாளனாக/எதிர்ப்பாளனாக இல்லாத போதும், புலிகளை அழிக்க முடியாது என்ற பெரும் நம்பிக்கை இருந்த போதே, போரின் போக்கானது புலிகள் இல்லாமல் ஆக்கப்படுவார்கள் என்று உள்ளுணர்வு மூலம் சொல்லிக்கொண்டே இருந்தது.  இதை என்னுடைய பாமரத் தமிழ் மனம் ஏற்காமல் இறைஞ்சிக் கொண்டிருந்தது. சிங்களப் பேரினவாதத்திற்கு எதிரான தமிழ்ப் பெருமிதமாகவே அவர்களின் குற்றங்களைத் தாண்டி ஏற்றி வைத்து இருந்தேன். 

பொதுமக்களின் அழுகையும், குழந்தைகளின் குதறப்பட்ட உடல்களும், படுகாயமடைந்த மனிதர்களும், பெண்கள் மீதான பாலியல் கொடுமைகளும், புலிகளின் படுதோல்வியும் விரக்தியின் உச்சத்துக்கு இட்டுச் சென்றன. இனி ஈழம் என்னவாகுமே என்ற கேள்வியும் வாட்டியது. 

போரின் கொடுந்துயரை நமக்குக் கொடுத்தன. ஈழப்போர் முடிந்தும், 6 மாத காலம் வரை அரைப் பைத்தியம் பிடித்த நிலைதான் இருந்தது. அதற்குப் பிறகும் மேன் மேலும் வந்து கொண்டிருந்த மோசமான செய்திகள் இராணுவத்தால் கொலை செய்யப்படும் வீடியோக்கள் என துயரம் அதிகரிக்கச் செய்யும் நிகழ்வுகளாகவே இருந்தன. 

                                           

ஆர்க்குட் இல் இருந்து சேமித்த சில புகைப்படங்களைப் பகிரத் தோன்றியது.      

                                            

ஈழப்போரின் இறுதி நாட்களில் முல்லைத் தீவுக்குள் தோல்வியின் விளிம்பிலிருந்த புலிகளை அழிக்கும் போர்த் திட்டத்தைப் பற்றிப் பார்வையிட வந்திருந்த வேற்று நாடுகளின் (அமெரிக்கா, இங்கிலாந்து, ஜப்பான், வங்கதேசம், மாலத்தீவுகள், இந்தியா, பாகிஸ்தான்) பாதுகாப்பு ஆலோசகர்கள். இதில் இந்தியா பாகிஸ்தான் இராணுவ அதிகாரிகள் அனைவரும் ஒன்றாக சிங்கள இராணுவத்தினரின் திட்டத்தை கவனிக்கின்றனர். 

புலிகளும் மக்களும் உடல் சிதறிச் செத்த பல புகைப்படங்களால் நான் அடைந்த அதிர்ச்சியைக் காட்டிலும், இந்தியா பாகிஸ்தான் வங்கதேசம் என்று பகைவர்களாக இருக்கும் நாடுகள் எப்படியெல்லாம் ஒன்றாகின்றனர் என்று அதிர்ச்சியடைந்தேன். 2008 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வெளியான இந்தப் இப்புகைப்படங்கள் என்னை இன்னும் வியப்பில் ஆழ்த்துகின்றன.
#Justice4TamilGenocide
Download As PDF
Bookmark and Share
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

தமிழக வேலை தமிழருக்கே

தமிழக வேலை தமிழர்க்கே என்ற முழக்கம் ஏன் எழுப்பப் படுகிறது ? தொடர்ந்து நடுவணரசு நிறுவனங்களில் தமிழர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள் என்ற குற்றச்சாட்டுக்கள் எப்போதும் உண்டு. அதை மெய்ப்பிக்கும் விதமாக பொன்மலையில் இந்திய ரயில்வே யின் தொழிற்பழகுநர் பணியிடங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட 1765 க்கு 1600 பேர் வட இந்தியர்கள். இதைத் தொடர்ந்து  தி.மு.க., தமிழக வாழ்வுரிமைக் கட்சி, தமிழ் தேசியப் பேரியக்கம் ஆகியோர் இதனைக் கண்டித்தன. தமிழ்தேசியப் பேரியக்கம் ஆர்ப்பாட்டம் ஒன்றையும் நடத்தியது. அதைத் தொடர்ந்து நடைபெற்ற விவாதமே இது. 

                      


இதைத் தொடங்கியவுடனே இதை ஒரு இனவெறிக் கருத்தாக மாற்றி நஞ்சைக் கக்கத் துவங்கினார்கள் காவிகள். தமிழ்நாட்டில் யாருமே வரக் கூடாது என்று சொன்னது போலவும், தமிழ்நாட்டுக்காரர்கள் வெளிமாநிலங்களில் இருந்து வேலை பார்க்கலாமா என்று அறிவாளித்தனமாகக் கேட்டனர். தனியார் வேலைக்கு வருவதும், நடுவணரசுப் பணிகளில் தேர்வு எழுதித் தேர்வாவதும் ஒன்றா ? இப்பிரச்சனையை அடிப்படையையே மாற்றி தமிழ் இனவெறி என்று பூச்சாண்டி காட்டினர். தமிழ்நாட்டில் எந்த போராட்டம் நடந்தாலும் அதை குற்றம் சொல்வதில் அவ்வளவு ஆவல். 

நடுவில் இரண்டு பேர். அவர்களின் ஒருவர் பத்திரிக்கையாளர், இன்னொருவர் பொருளாதார நிபுணர். இவர்களுக்கு அடித்துப் பேசவென்று எந்த வலுவான பதில்களோ கருத்துக்களோ இல்லை. நேராக தேசபக்தர்கள் என்றே போட்டிருக்கலாம். அவர்களுக்கு இது ஒரு பிரச்சனையே இல்லை. 

பத்திரிக்கையாளர் விஜயகுமாரின் கருத்துக்கள்,

தமிழ்நாட்டு மாணவர்களுக்கு திறமை தகுதி எல்லாமே இருக்கின்றன என தொடக்கத்திலேயே தடவிக்கொடுத்து விடுகிறார்.

1.  இது வெறும் நிர்வாகத் தவறுதான். 
2. சில தமிழ் முதலாளிகள் முழுக்க வட இந்தியர்களையே வேலைக்கு வைத்திருக்கிறார்கள் என்று தனியார் வேலையை இங்கே கொண்டு வந்து என்னவோ பெரிய கருத்து சொன்னதைப்போல புன்னகையுடன் அமர்ந்திருக்கிறார் பத்திரிக்கையாளர்.

பொருளாதார நிபுணரின் சத்யகுமாரின் கருத்துக்கள்.

1. பிரிவினை பேசக்கூடாது.
2. தமிழக அரசின் தவறு.
3. மாணவர்களுக்கு தேர்வுகள் பற்றிய விழிப்புணர்வு இல்லை.
4. தமிழ்நாட்டின் உரிமையைப் பற்றிப் பேசும்போது உடனே மாவட்டவாரியாக பிரச்சனை செய்தால் என்ன     செய்வது ?என்று கேட்டு மடக்குகிறார். 
5. சென்னையைச் சார்ந்தவர்கள் அதிக இடங்களைப் பெறுவதாக இவரிடம் மற்ற மாவட்ட மாணவர்கள் குறை சொன்னார்களாம்.

101% ஐயமின்றிச் சொல்லலாம் காவிகளின் சிந்தனை நஞ்சு மட்டுமே. எப்போதும் நிரூபிக்கிறார்கள். மனதிலே காவிக் கறை படியாத மேன்மக்கள் அனைவருக்கும் இவ்விவாதத்தின் நியாயம் புரியும்.

90% தமிழ்நாட்டிலுள்ள நடுவணரசுக்கு சொந்தமான நிறுவனப் பணிகளில்
#தமிழகவேலைதமிழருக்கே
#TamilnaduJobsForTamils

என்று கேட்பது இனவெறியன்று. டெல்லியின் இந்திவெறிக்கு எதிரான இன உரிமையே. 

தமிழகத்தின் கல்வித் தரத்தால் மருத்துவப் படிப்பில் தரமற்றவர்கள் சேர முடிகிறார்கள் என்று சொல்லி NEET தேர்வைத் திணித்தார்கள். இப்போது இம்மாதிரியான தேர்வுகளில் கூட சேர முடியாத அளவுக்கு தமிழ்நாட்டு மாணவர்கள் இருக்கிறார்கள் ?

ஒரு வேளை இது தவறான போராட்டமாக இருப்பினும்இவர்கள் சொல்வது போல் தமிழக அரசின் தவறாகவோ, மாணவர்களுக்கு போதிய தேர்வு வழிகாட்டிகள் இன்மையோ, போதுமான பயிற்சி மையங்கள் இல்லாமையோதான் காரணமாக இருந்தாலும், கோரிக்கை நியாயமான கோரிக்கைதான். அது தமிழகத்தின் மீதான வன்மத்தின் எதிர்வினையாகவே கொள்ள வேண்டும். 

தமிழ்நாட்டில் கல்வியில் தரமில்லை, திராவிடக் கட்சிகளால் எதுவும் முன்னேறவில்லை என்றெல்லாம் சொல்லி, NEET தேர்வு திணிப்பு, ஹிந்தித் திணிப்பு உட்பட பல்வேறு விசயங்களில் தமிழ்நாட்டின் இறையாண்மைக்கு எதிராக செயல்படும் டெல்லி அரசின் இந்தி வெறி அதிகாரத்திமிருக்கு எதிர்ப்பாகவே பொருள் கொள்ள வேண்டும்.  

#தமிழகவேலைதமிழருக்கே
#TamilnaduJobsForTamils
Download As PDF
Bookmark and Share
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment