திஷாவும், பார்வதியும் நம்ம ரங்கராஜும் பின்னே ஜாதிப் பெயரும்

திஷா பாண்டே என்ற நடிகையை நினைவிருக்கிறதா ? தமிழ்படம் என்ற படத்தில் அறிமுகமானவர். கீரிப்புள்ள என்ற படத்திலும் நடித்திருந்தார். அவர் தனது ஜாதிப்பெயரைத் துறந்து திஷா என்ற பெயரிலேயே தொடர்வதாகக் கூறியிருக்கிறார். இது 2013 லேயே வெளியான செய்தி. ஒரு நடிகை தனது பெயரை மாற்றிக் கொள்வதெல்லாம் ஒரு பொருட்படுத்தக் கூடிய செய்தியா என்ன ? ஆம். இது பொருட்படுத்திச் சொல்லக்கூடிய செய்திதான். அதுவும் தமிழ்நாட்டில் சொல்ல வேண்டிய செய்திதான். ஒரு நடிகை பெயரை மாற்றிக் கொள்வது அதிசயமான செய்தி இல்லைதான். 

தமிழ்நாட்டில் லக்ஷ்மி ராய் என்ற நடிகை ராய் லக்ஷ்மி என்று மாற்றிக் கொண்டார். அனுஷா ஐயர், ஜனனி ஐயர் என்று பெயரை வைத்துக் கொண்டு நடிகைகள் இருக்கின்றனர். இவையல்லாமல் மேனன், நாயர், ரெட்டி, முகர்ஜி, சாட்டர்ஜி, என்றெல்லாம் கூட பெயரை வைத்துக் கொண்டு நடிகைகள் இருந்தனர், இருக்கின்றனர். இவர்களை மன்னித்து விடலாம். ஆனால் ஜாதிப் பெயரைப் பின்னால் போடும் பழக்கமே இல்லாமல் இருக்கும் தமிழ்நாட்டிலிருந்து வந்து அனுஜா ஐயர், ஜனனி ஐயர் என்று ஜாதியைப் பின்னால் பிதுக்கிக் காட்டும் பிறவிகளை என்ன சொல்ல. தொலைகிறது நான் சொல்ல வந்தது இந்த நடிகைகளைப் பற்றியதல்ல. திஷா பாண்டே பெயரை மாற்றிக் கொண்டாரல்லவா ? அதற்கு அவர் சொன்ன காரணம்தான் இன்றியமையாததாக இருக்கிறது.

திஷா
பெயருக்குப் பின்னால் ஜாதிப்பெயரே போடாத தமிழ்நாட்டில் இருந்து கொண்டு, என்னென்னவோ சித்தாந்தங்களைத் துணைக்கழைத்தும், குறிப்பிட்ட சித்தாந்தங்களை எதிர்த்துக்கொண்டும் சிலர் ஜாதியைப் பெயருக்குப் பின்னால் வேண்டுமென்றே போட்டு ஜாதிப்பெருமையைப் பறை சாற்றிக் கொண்டிருக்கும் நிலையில், ஜாதிப்பெயரைப் பின்னால் போடுவதை எந்தவித உறுத்தலுமின்றி செய்து கொண்டிருக்கும் வட இந்தியாவிலிருந்து வந்திருக்கும் ஒருவர், அதுவும் நடிகை அதுவும் ஒரு இளம்பெண் செய்திருப்பது பாராட்ட வேண்டிய செயலன்றோ ! அதுவும் தான் திஷா பாண்டே என்றழைக்கப்படுவதைக் காட்டிலும் திஷா என்றழைக்கப்படுவதை, ஏன் விரும்பினார் என்று கூறுகிறார். "நான் ஜாதியின் பெயரால் அறியப்படுவதைக் காட்டிலும், இந்தியர் என்றழைக்கப்படுவதையே விரும்புகிறேன்". இதன் மூலம் ஜாதியைப் பெயராகச் சுமப்பதை அவமதித்து அதை மாற்றியிருக்கிறார். இதன் மூலம் ஜாதியை வெறுத்துக் கொண்டே ஜாதிப்பெயரைச் வேறு வழியில்லாமல் சுமப்பவர்கள் இருக்கிறார்கள் என்றும் தெரிகிறது. எல்லோராலும் அதை இவர்களைப் போல் துறந்து விட முடிவதில்லை.

பார்வதி
அடுத்து இன்னொரு நடிகையைப் பற்றியும் சில மாதங்களுக்கு முன்னர் கேள்விப்பட்டோம். அவர் ஒரு முறை ஊடகத்திற்களித்த பேட்டியில் கூறினார். தான் ஜாதிப்பெயருடன் அடையாளப்படுத்தப்படுவதை விரும்பவில்லை என்றும், ஜாதிப்பெயருடன் தனது பெயர் அறியப்படுவது குறித்து தான் வருந்துவதாகவும், ஜாதிய அடையாளம் தனக்குத் தேவையில்லை எனவும், அதனை விரும்பவில்லை எனவும், ஒருவரின் அடையாளத்தின் மூலமாக ஜாதிதான் அறியப்படுகிறது எனில் அது தனக்குத் தேவையில்லை எனவும் குறிப்பிட்டிருந்தார். ஏற்கெனவே பார்வதி நாயர் என்று இன்னொரு நடிகை இருப்பதால்தான் ஊடகங்கள் இருவரையும் வேறுபடுத்திக்காட்ட ஜாதிப்பெயரைப் பயன்படுத்தியதால் இப்படி ஆகிவிட்டது என்றும் செய்தியில் குறிப்பிட்டிருந்தனர். 

ஒரு நடிகைக்கு இவ்வளவு நேர்மையாக சிந்திக்க வருமா ? வந்திருக்கிறது. தமிழ்நாட்டிலிருந்து வந்த நடிகைகள் தனக்குப் பின்னால் ஐயர் என்று கொடுக்கை சேர்த்துக் கொண்டு கொக்கரிக்கும்போது இவர்களைப் பார்த்தால் அதிசயமாகத்தான் இருக்கிறது. சரி இவர்களிருவரையும் விடுவோம். நம் தமிழ்நாட்டில் பிரபலமான ஒருவர் இருக்கிறார். 

ரங்கராஜ் பாண்டேதான் அவர். இவரது பூர்வீகம் என்ன ? பிஹார் மாநிலத்தைச் சார்ந்தவராம். தமிழ்நாட்டிலேயே பிறந்து வளர்ந்த இந்த நேர்மையான "நடுநிலை" விவாதி, (சமீப வருடங்களின் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் தயவினால் நடுநிலை என்றால் அதிமுக கட்சியை விமர்சனம் செய்யாத ஜென் நிலை; சமூக ஆர்வலர் என்றால் RSS காரர் என்றும் தமிழ் பேசும் இணையம் பொருள் கண்டறிந்துள்ளது) பதினொன்றாம் வகுப்பில் படிக்கும்போதே 32 பக்கக் கையெழுத்து இதழை நடத்தினாராம். மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தில் தமிழில் முதுகலைக் பட்டம் பெற்றாராம். 1999 ஆம் ஆண்டு முதலே, தினமலர் என்ற ஒப்பற்ற நேர்மையான நாளிதழில் சேர்ந்து விட்டாராம். நாளிதழில் வரும் டவுட் தனபாலு என்ற பகுதியிலும் எழுதியவராம், அவ்வப்போது உரத்த சிந்தனையும் எழுதுவாராம். தன்னுடன் விவாதம் செய்பவர்களை பொறுமை இழக்க வைத்து, இவரை திரு. பாண்டே அவர்களே என்று கூறவைத்து இன்பம் கண்டு வருகிறார். தூக்கு தண்டனை எதிர்நோக்கியிருக்கும் மூவர் (பேரறிவாளன், முருகன், சாந்தன்) விடுதலையை வேண்டி தீக்குளித்து வீரச்சாவடைந்த செங்கொடி என்ற பெண் காதல் தோல்வியால் தற்கொலை செய்ததாக எழுதியவர் இவர்தான் என்றும் கேள்விப்பட்டேன்.

ரங்கராஜ்
என்னுடைய ஐயம் என்னவென்றால்,  வேறு மாநிலத்தவர்கள் ஜாதிப்பெயரை வைத்திருப்பது இப்போதும் கூட வாடிக்கையாகத்தானே இருக்கிறது என்றாலும், தமிழ்நாட்டிலேயே பிறந்து வளர்ந்து, இங்கு அரசியல்வாதிகளை வெளுத்து வாங்கும் இந்த நபர், இங்கே இருக்கும் பண்பாட்டை அறிந்து கொள்ளாமலா இருப்பார். ஜாதிப் பெயரைப்பின்னால் சேர்த்துக் கொள்ளாத தமிழ்நாட்டில் வாழ்ந்தாலும் தனது ஜாதிப் பெயரை இன்னும் பின்னால் ஒட்ட வைத்துக் கொண்டிருக்கிறார். வட இந்திய உடைகளை அணிந்துதான் தனது நிகழ்ச்சிகளில் தோன்றுகிறார். இவரைப் பார்த்து இன்னும் சிலரும் இதையே பின்பற்றுகின்றனர். ஜாதிப் பெயரைத் துறக்க வேண்டும் என்று ஒரு நடிகைக்கு இருக்கும் சிறிய பொறுப்பு, நேர்மை கூட இல்லாத இவருக்கு எதற்கு இந்த புரட்சி வேடம்.  

Download As PDF
Bookmark and Share
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment