அவதூறு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அவதூறு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சின்மயி - ராஜன் வழக்கு ஆதரவு எதிர்ப்பு மற்றும் சில குழப்பங்கள்


சென்ற பதிவின் நீட்சியாகவே இதை எழுதுகிறேன். முந்தைய நிலையில் எந்த மாற்றமுமில்லை. ராஜன் விடுவிக்கப்பட வேண்டுமென்பதில் எந்த நிபந்தனையும், ஐயமுமில்லை. இன்னும் வினவு கட்டுரை ஏன் வெளியிடவில்லை என்பது தெரியவில்லை. ராஜன் அதிகப்படியான தண்டனையை அனுபவித்துக் கொண்டிருக்கிறார். நிரூபிக்கப் படாத குற்றத்திற்காக. அதனால் அவர் விடுதலையாக வேண்டுமென்பது குறித்து எந்தத் தயக்கமுமில்லாமல் நாம் கோர முடியும். குழலி, விமாலாதித்த மாமல்லன், சவுக்கு ஆகியோரின் கட்டுரைகள் நேர்மையாகத் தெரிகிறது நான் படித்தவைகளில். 


இதில் பல தவறான கருத்துக்கள், தகவல்கள் இடம்பெறவும் வாய்ப்புண்டு, அதற்கு என் அறியாமைதான் காரணம் விருப்பு வெறுப்பு எதுவுமிருக்காது. 


மற்றபடி ஃபேஸ்புக் விவாதத்தில் லீனா மணிமேகலை, ஷோபா சக்தி, ஜெயமோகன், சாருநிவேதிதா ஆகியோர் சின்மயிக்கு ஆதரவாகக் கருத்துக் கூறியதிலிருந்து இது இன்னும் வேறு வழியில் போய் அவர்கள் அணி எதிரணியும் கருத்து மோதலில் இறங்கியுள்ளன. லீனா மணிமேகலை-ஷோபா சக்தி கூட்டணி அவர்கள் எதிர்ப்பவர்கள் அரசியல் கருத்து வேறுபாடுகள் குறித்து என் சிற்றறிவுக்கு எட்ட வில்லை. ஜெயமோகன் பற்றியும் எனக்குத் தெரியவில்லை. அவர் இந்துத்துவாவை தத்துவ ஞானம் என்று எழுதுகிறார். அதற்கு பதிவர்கள் சிலர் கடுமையான எதிர் வினையை வைப்பார்கள் என்பது மட்டுமே எனது புரிதல். சின்மயி பார்ப்பனப் பெண் என்பதால் அவர் ஆதரவு தெரிவித்திருக்கலாம். நியாயமாக எழுதிய சில கருத்துக்களோடும் தொடர்பில்லாமல் 15 இலட்ச ரூபாய் கைதானவர்களைக் காக்க வசூலித்திருக்கிறார் என்று அவதூறு செய்திருக்கிறார். அடுத்து சாருநிவேதிதா ஏன் இக்கைதை ஆதரித்தார் என்றால், ராஜன் எப்போது
ம் அவரது பதிவை எடுத்து வரிக்கு வரி கீழ்த்தரமாக நக்கலடித்து வெளியிடுவார் எப்போது அந்தக் கடுப்பில் எதிர்வினையை வைத்திருக்கிறார். இதை சின்மயி ட்விட்டரில் பகிர்ந்திருக்கிறார். தமிழச்சி எழுதிய சாரு ஆன்லைன் - பெண்கள் ஜாக்கிரதை என்ற கட்டுரை சின்மயி அறிந்திருக்க வில்லை போல.

சின்மயி பல பொய்களைச் சொல்லியிருக்கிறார். அவர் பூர்விகம் உட்பட. அவர் மொத்தம் மூன்று வகையான வழக்குகளைப்போட்டிருக்கிறார். மந்திர மூர்த்தி என்பவர் திருமணம் செய்ய மறுத்ததால் ஆபாசப் படங்களை இணையத்தில் வெளியிட்டது, ட்விட்டரில் ஆபாசமாகப் பேசிய ஆறு பேர்கள் மீது, வேறொரு தயாரிப்பாளர் பணம் கொடுக்காதது குறித்து என. இதில் ட்விட்டரில் ஆபாசமாகப் பேசிய இரண்டு பேரை மட்டும் கைது செய்திருக்கிறார்கள்.

இது இப்போதைய நிலவரம். ராஜன் சில பதிவுகளைப் படித்திருக்கிறேன். தமிழ் வளம் மிக்க கவிதைகள் பார்ப்பன எதிர்ப்பு, ஜாதி எதிர்ப்பு, மத எதிர்ப்பு, சாமியார்கள் எதிர்ப்பு, அன்னா ஹஸாரே போராட்டத்தில் பங்கெடுத்தது, மேலும் தமிழ்நாட்டின் முக்கியப் பிரச்சனையாக இருந்த மீனவர் படுகொலை எதிர்ப்பு, மே 18 போராட்டம் இது குறித்தெல்லாம் எழுதியுள்ளார். இது அனைத்து பொதுநலம் சார்ந்து எழுதப்பட்டது. மற்றபடி திரைப்பட விமர்சனம், கிண்டல் பதிவுகள், சாருநிவேதிதாவைத் தழுவி எழுதப்பட்ட நக்கல்கள். அவ்வளவே அவர் பின்னூட்டங்களில் நக்கல் இருக்கும், சில அபத்தமாகவும் அருவருப்பாகவும் இருக்கும். குறிப்பாக இஸ்லாம் குறித்த விமர்சனங்கள் கீழ்த்தரமானவை. விமர்சனம் செய்யலாம் இந்த மொழி வெறுப்பை வளர்க்கும். சிபி செந்தில் குமார் மனைவியிடம் பேட்டி எடுப்பது போல ஒரு பதிவு ஒரு சிலருக்கு அது ஆபாசமாகத் தெரியும். ஆனால் அது அவரது மனைவியைக் கிண்டல் செய்வது போல எழுதப்பட்டதல்ல அவர் மனைவி சிபி செந்தில் குமாரை திட்டும் பாணியில் எழுதப்பட்ட நக்கல். ஆனாலும் சிலர் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்திருந்தனர். நண்டு நொரண்டு, ருத்ரன் போன்றவர்களின் தளத்தில் மரியாதையாகவும், பின்னூட்டமிட்டிருக்கிறார். பல பேரை மரியாதையின்றி நக்கலடித்திருக்கிறார். உதாரணமாக ஏதோ ஒரு பார்ப்பன எதிர்ப்பு பின்னூட்டத்திற்கு பெரியார் சரியாகத்தான் சொல்லியிருக்கிறார் என்பதை இப்படிச் சொன்னார். பெருசு சரியாத்தாஞ் சொல்லிருக்கு. என்று. இப்படி. சுருக்கமாக மிகுந்த பண்புடனும், மொழியாளுமையுடனும் பேசுவார், எடுத்தெறிந்தும் பேசுவார் கோயம்புத்தூர் குறும்பு எனும் பொருள்பட.

முக்கியமாக பதிவுலகில் அதிகமாக விவாதிக்கப்பட்ட, சந்தனமுல்லை விவகாரத்திலும், சாருநிவேதிதா விவகாரத்திலும் பாதிக்கப்பட்ட பெண்களுக்காகப் பதிவெழுதியவர் ராஜன். அதனால் அவரை செக்ஸிஸ்ட் என்றோ ஆணாதிக்க வாதி என்றோ சொல்ல முடியாது. பொது வாழ்க்கையில் இருப்பவர்களை வரம்பு மீறி வசவியதன் மூலமாக ராஜனின் மேற்கண்ட இயல்புகளை ஏற்றுக் கொள்ள, அந்த ட்வீட்களைப் பார்ப்பவர்கள் நம்ப மாட்டார்கள்.

இதனால் ராஜன் சின்மயி என்ற ஒரு பெண் மீது பாலியல் ரீதியில் பேசியிருக்க மாட்டார் என்று 99% நம்பலாம். அந்த 1 % ஜெயலலிதா உட்பட மற்ற பெண்கள் மீதான கருத்துக்களுக்காக. சின்மயி மீது ராஜனின் பாலியல் வசை தொடர்பான ட்வீட் ஒன்றும் இதுவரை இல்லை. இருக்கவும் முடியாது.

மேலும் பெண்கள் மீது சென்டிமென்ட் அதிகமென்பதால், ரேவதி, ஆதிரை (ராஜனின் மனைவி, குழந்தை) என்ற இரு பெண்களுக்காக ராஜன் விடுவிக்கப்பட வேண்டுமென்பது சின்மயி என்ற பெண்மணியின் மனசாட்சிக்கு விட்டு விடுவோம்.

மேலும் குழந்தையைக் குதறிக் கொன்ற கொலைகாரன் காவல்துறையால் சுட்டுக் கொல்லப்பட்டதையே எதிர்த்த நாம் இந்த அபத்தமான குற்றச்சாட்டிற்காக தனிப்பட்ட உத்தரவின் பேரில் சென்று கடமையைச் செய்ததைக் கடுமையாகக் கண்டிக்க வேண்டும்.

சின்மயி தரப்புப் பொய்கள்:

சின்மயி சொல்வது போலி ஐடிகள் மூலம் இழிவு செய்கிறார்கள் அதை எனக்கு டாக் செய்து ராஜனுடைய ட்விட்டருக்கும் அனுப்பி வைத்தார்கள் என்று கூறுகிறார். இதை ராஜன் என்று எப்படி முடிவு செய்தார் இதைத்தான் ராஜனும் தனது பதிவில் கேட்டிருந்தார். அவர்கள் செய்த அவதூறுக்காக ராஜனை ஏன் குறிக்க வேண்டும் என்பது புரியவில்லை.

இதற்கு சின்மயி பதிலெதிவும் சொன்னதாகத் தெரியவில்லை.

ராஜனின் பணி பறிபோகுமளவிற்கு அவர் என்னவகை மன ரீதியான உளைச்சலுக்கு சின்மயியை உண்டாக்கினார் என்பது கேள்விக்குறி.

அதிகாரம் அவருக்கு ஆதரவாகச் செயல்பட்டு அரை நாளில் கைது செய்யப்பட்டது குறித்து சொல்லத் தேவையில்லை. செய்யாத குற்றத்துக்கு பணி பறிப்பு, மன உளைச்சல் உட்பட சமூகத்தில் அவர் எதிர்காலம் உட்பட சின்மயி உலை வைத்திருக்கிறார். என்ன ஒரு கொடிய மனப்பான்மை.

ராஜனது குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாவிடில் வரதட்சணை வழக்கு, பாலியல் வன்கொடுமை வழக்குக்களைப் பயன்படுத்தி அப்பாவி ஆண்களைப் பழிவாங்கும் பெண்களில் ஒருவராகப் போகிறார் சின்மயி.

முதலில் நடந்த ட்விட்டர் உரையாடலில் சோகால்ட் தாழ்த்தப்பட்டவர்கள் என்று சொன்ன சின்மயிக்கு மீனா கந்தசாமி, தியாகு, ஏழர ஆகியோர் எடுத்துச் சொல்கின்றனர். மீனா தாழ்ந்தவர்களல்ல தாழ்த்தப்பட்டவர்கள் என்று சொல்லிக் கொடுக்கிறார். ஏழர அமெரிக்காவிலும், ஸ்ரீலங்காவிலும் போய் சோகால்ட் ரேஸிசம் என்று சொல்ல முடியுமா என்று கேட்கிறார். இதன் மூலம் சின்மயி  புரிந்து கொண்டிருக்க முடியும்.

ஆனாலும் தொடர்ந்து இட ஒதுக்கீடு எதிர்ப்பு டிவீட்டுகிறார். இது உணர்ச்சி வசப்பட்டதாக வைத்துக் கொள்வோம். ராஜ்மௌலியின் தாழ்த்தப்பட்ட ஜாதித் தலைவர்கள் குறித்து டிவீட்டுகிறார்.. இதற்காக எதிர்ப்பு வருகிறது என்று முன்பே அறிந்திருந்தும் தொடர்ந்து இட ஒதுக்கீடு எதிர்ப்புக்காக பல டிவீட்டுகளை பகிர்ந்திருக்கிறார். இதைப் பார்ப்பன வெறியாகவே கருத முடியும் சின்மயி.

பல ட்வீட்களை சின்மயி அழித்து விட்டதாகக் கூறுகிறார்கள். அதையெல்லாம் சைபர் கிரைம் காரர்கள் நேர்மையுடன் தேடி எடுத்து விசாரித்து ஒரு முடிவுக்கு வர வேண்டும். இதில்தான் சின்மயியின் நேர்மையை நம்மால் அறவிட முடியும்.

மேலும் வேறொரு பத்திரிக்கையாளர் ராம் இவர் மீது வழக்குத் தொடரப்போவதாக அறிவித்திருக்கிறார்.

ஜனவரியிலிருந்து தமிழில் தன்னைத் தாக்கி தமிழில் பல ட்வீட்கள் வந்ததாகச் சொல்லும் சின்மயி ஏன் வந்தது என்று சொல்ல வில்லை. ஒரு வேளை தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிரான கருத்துக்களால் வந்திருக்கலாம்

ஹையங்கார் என்பது நீங்கள் நகைச்சுவைக்குப் போட்டதாக உங்கள் மற்ற டிவீட்களுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் ஏற்க முடியவில்லை.

மேலே நான் எனக்குத் தெரிந்த வரையிலெல்லாம் ராஜன் மீதான் நியாயத்தைச் சொல்லிவிட்டேன். உடனடியாக ராஜன் விடுவிக்கப்பட வேண்டுமென்பதில், அவர் பணியும் திரும்ப வழங்கப்பட வேண்டுமென்பதில் (வேலையில்லாமையின் சுமையை நன்கு அறிந்தவன் நான்) எனக்கு எந்த மாற்றுக் கருத்துமில்லை.

ராஜன் தரப்புப் பொய்கள்:

தன்மீது வந்த அவதூறு ட்விட்டர்களை ப்ளாக் செய்திருக்கிறார். வெவேறு ஐடிக்களில் வந்து தொல்லை கொடுப்பதாகவும் சொல்லியிருக்கிறார்.

சின்மயி #TNFisherman இல் சேராததற்குக் காரணத்தை சொல்லியிருக்கிறார். அதில் அவரால் ப்ளாக் செய்யப்பட்டவர்கள் இருப்பது மட்டுமல்லாமல், பல தலைவர்கள் கேவலமான முறையில்  விமர்சிக்கப்பட்டிருந்ததால் அதில் தன் பெயரும் இணைக்க விருப்பமில்லை எனவும் தனிப்பட்ட முறையில் ஆதரவைத் தெரிவித்துக் கொள்வதாகவும் சொல்லியிருக்கிறார். இதற்கு தமிழர்களுக்கு எதிரானவள் சின்மயி என்று தன்னை இழிவு செய்தார்கள் என்கிறார். சின்மயி.

#அசிங்கப்பட்டாள்சின்மயி

வந்த காரணம்: சின்மயி ராஜன் மீது வன்மம் கொண்டதற்காக ராஜனும் மற்றவர்களும் சொல்லும் ஒரு காரணம் மஹேஸ்மூர்த்தி என்ற ஹிந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழின் நிருபர் பிரபலங்கள் குறித்து ஒரு கட்டுரையை எழுதியிருந்தார். அதில் மக்களைக் கவர்ந்த பொழுதுபோக்காளர்கள் என்ற பட்டியலில் நான்காவாதாக சின்மயியும், ஐந்தாவதாக ராஜன் லீக்ஸ் - ஐயும் குறிப்பிட்டிருந்தார். இதனால் சின்மயி ராஜனின் பெயரை நீக்கச் சொல்லி மகேஸிடம் சண்டை போட்டார் என்கிறார்கள். இது முழுவதும் உண்மையல்ல.

சின்மயி அவருடன் சண்டையிடக் காரணம் வேறு. அதில் ஷ்ரேயா கோஷல், சின்மயி ஆகியோரை (ப்ளாக், ட்விட்டர் முகவரிகளை) ப்ளாக்கர்கள், ட்விட்டர்கள் வகையில் வரிசைப்படுத்தியிருந்தார் மகேஸ்மூர்த்தி. ஷ்ரேயா கோஷல் தனது பெயரில் இருந்த இணையத்தளம் தன்னுடைய சொந்தத்தளமல்ல தனது ரசிகர்களால் நடத்தப்படுகிறது என்று மகேஸ் மூர்த்திக்கு மென்கடிதம் எழுதினார். பின்பு ஷ்ரேயாவின் ப்ளாக்கை அந்தக்கட்டுரையிலிருந்து மகேஸ் நீக்கிவிட்டார். சின்மயிக்குக் கொடுத்திருந்த வரையரறையில் சின்மயி பாடகர் எனற முறையில் பிரபலமானவர் என்பதை விட ட்விட்டரில் எழுதி பிரபலமானவர் என்று எழுதியிருந்தார். இதைத்தான் சின்மயி எதிர்த்தார். அதே போல் ராஜனை விட 10 மடங்கு அதிகம் வாசிக்கப்படும் மதன் கார்க்கி, வைரமுத்து ஆகியோரின் தளத்தை ஏன் குறிப்பிடவில்லை என்று கேட்டிருக்கிறார். மகேஸ் அது என்னுடைய சொந்தக் கட்டுரை அதனால் நீக்க முடியாது என்று சொல்லியிருக்கிறார். (ராஜனை நீக்கும்படி தன்னிடம் கேட்டதாகவும், பல ட்வீட்களை சின்மயி அழித்து விட்டதாகவும் மகேஸ் சொல்கிறா. சின்மயி அழிக்க வில்லை என்கிறார்.) அந்தக் கட்டுரையின் கருத்துரைகளைப்படித்தால் தெரியும் அது ஒரு தவறாக எழுதப்பட்ட கட்டுரை, ராஜனே சொல்லியிருக்கிறார் 7 படங்களுக்கு மட்டுமே விமர்சனம் எழுதியிருக்கும் தன்னை எப்படி சேர்த்தார் என்று தெரியவில்லை என.

தன்னைப் பற்றி பாடகராக இல்லாமல் ப்ளாக்கில் பிரபலமானவர் என்பதை சின்மயி ஏன் எதிர்க்கக் கூடாது ? இதில் சின்மயியின் வன்மம், பிரபலம் என்ற திமிர் இருக்கிறதா ? இதில் சின்மயியின் பேச்சைக் கேட்டு அதை நீக்காததால் #அசிங்கப்பட்டாள்சின்மயி என்று அவரைக் கிண்டலடித்திருக்கிறார்கள் இங்கே ராஜன் சின்மயி தன் மீது வெறுப்புடன் இருப்பதால்தான் அதை எதிர்த்ததாகத் தவறாகப்புரிந்து கொண்டிருக்க வேண்டும். அதற்கு அசிங்கப்பட்டாள்சின்மயி# என்று டாக் தொடங்கி கிண்டலடித்திருக்க வேண்டும். அந்த டாக் உடன் ராஜனுட மற்றவர்களின் சின்மயி மீது தொடுத்த ஆபாச ட்வீட்களுக்கும் சேர்த்து ராஜன் மீது சின்மயிக்கு ஐயம் வந்திருக்க வேண்டும். இது என் கணிப்பு. ராஜன் தெரிந்து செய்தாலும் தெரியாமல் செய்திருந்தாலும் இது பெண் மீதான தாக்குதல்தான்.

இன்னொன்று சின்மயி மீனவர்கள் மீனைக் கொல்வதால், சிங்கள ராணுவம் மீனவர்களைக் கொல்லலாம் என்று சொன்னார் என்பது மிகப்பெரிய பொய். வேறொரு சந்தர்ப்பத்தில் சின்மயி மீன்களைக் கொல்றது மட்டும் பாவமில்லையா என்று கேட்டதை ராஜன் சும்மா கிண்டலுக்கு டிவிட்டியதே "மீனவர்கள் மீன்வர்களைக் கொல்கிறார்கள். அதனால் சிங்கள ராணுவம் மீனவர்களைக் கொல்கிறது" என்ற அந்த டிவிட். அது உண்மையல்ல. ஆனால் அதை ஃபோட்டோ ஷாப் செய்து உண்மை என்று பரப்பி விட்டார்கள். அதை இங்கே விமலாதித்த மாமல்லன் பதிவில் காணலாம். என்ன வக்கிரமான எண்ணம் இது ? இதை இன்னும் பலர் நம்புகின்றனர். பரப்புகின்றனர்.

கார்ட்டூனிஸ்ட் பாலா அது உண்மையா இல்லையா என்று கேட்காமலேயே தமிழர்கள் முகத்தில் காறித்துப்பிய சின்மயியை கண்டிக்கிறேன் என்று போட்டு விட்டார். இப்படி சின்மயி தமிழர்களுக்கு எதிரானவர் என்று கருத்து பரப்பப்பட்டது.

இன்னொன்று அதை உண்மையா என்பதை தமிழ் மான் என்பவர் கேட்க, (இல்லை என்பதை ஒவ்வொருத்தருக்கும் தனித்தனியா பதில் சொல்லணுமா என்ற பொருள்பட) உங்களுக்கு தனியா டாக் பண்ணி சொல்லணுமா என்று கேட்டிருக்கிறார். தன் மீது தவறான கருத்து பரப்பப்படுகிறது என்று ஒரு  சின்மயி போட்டிருந்த போஸ்ட்டின் கீழே இதை அவர் கேட்டார். இல்லை என்பதைத்தான் சின்மயி அப்படிச் சொல்லியிருக்கிறார். அவர் பல இடங்களில் இதைக் கேட்டதாகவும் சொல்லியிருக்கிறார். இதைத் தவறாகப்புரிந்து கொண்டு சின்மயி ஆமாம் என்று சொன்னாதாக ஒரு ஸ்க்ரீன்ஷாட் எடுத்து பல பேருக்கு டாக் பண்ணி விட்டார் அவர். அவர் புகாரளித்ததே தான் மீனவர்கள், தமிழர்கள், ஈழத்தமிழர்களுக்கு எதிரானவர்கள் என்று சிலர் சித்தரிக்கிறார்கள் என்றுதான். அதைத்தானே இன்னும் செய்கிறார்கள்.

தாழ்த்தப்பட்டவர்கள் குறித்து இவர் சொன்னது உண்மை, ஆனால் மீனவர்கள் குறித்து சொல்லப்பட்டது முழுப்பொய். ஒரு கொலை செய்தவன் மீது 3 கொலை செய்ததாகச் சொல்வது போல.. ராஜன் மீது சொல்லப்பட்ட அவதூறு போன்றதே இதுவும். இருப்பினும் இருவரும் சமமல்ல என்பதும் சரிதான்.  எப்படி ராஜனின் சில ட்வீட்களை மட்டும் வைத்து அவரது இயல்பைத் தீர்மானிக்க முடியாதோ அது போலத்தான் சின்மயிக்கும். இணைய ஊடகங்களும், தினத்தந்தி போலத்தான் இது போன்ற பொய்ப்பரப்புரைகள் சின்மயி மனிதநேயமற்றவர் என்ற பிம்பத்தை காலத்திற்கும் ஊன்றி விடும். அதனால் இந்தப் பொய்யை நம்பக்கூடாது

பெண்கள் மீதான வன்மம்

அதே நேரம் இன்னொன்றையும் நான் முக்கியமாகப் சொல்ல வேண்டியுள்ளது. ராஜனுக்கு ஆதரவு பெருகி இருப்பதால், அரசாங்கத்தை எதிர்ப்பவர்கள் மட்டுமல்லாமல், பெண்களை இழிவு செய்கிறவர்கள், பெண்ணியம் பேசுகிறவர்களைக் கிண்டல் செய்கிறவர்கள், கற்பு வேண்டும் இல்லையென்றால் நீதி கிடைக்காது, பெண்கள் கிண்டல் செய்வது என்னுரிமை, அவள் மட்டும் யோக்கியமா என்ற கருத்துக் கொண்டவர்களெல்லாம் கிடைத்த சந்தில் சின்மயி மீது வன்மத்துடன்  ராஜனை ஆதரிக்கிறேன் என்று கூட்டத்தில் சேர்ந்திருக்கிறார்கள். இவர்களின் கருத்துக்கள் சின்மயியின் பின்புலம், அவரது பழிவாங்கும் வெறி, பொய் ஆகியவைகளைத் தவிர்த்து, சின்மயி ஒரு பெண் என்ற ரீதியில் மட்டும் இழிவு செய்கிறார்கள். இது சின்மயி அல்லாத வேறு எந்தப்பெண் பாலியல் வன்கொடுமைக்கு எதிராக காவல்துறையை நாடி இருந்தாலும் எதிர்கொள்ள வேண்டியவையாகும். சின்மயி ஓவரா சீன்போடறா என்பது போலவும், கற்பில்லாதவள் நீதி கேட்கக்கூடாது என்ற கருத்துக்களை இவர்கள் சொல்கிறார்கள்.

ஆண்களால் பாலியல் ரீதியாகப் பெண்களைக் கொச்சைப்படுத்துவதற்கு பெண்களின் தவறான கருத்தே காரணம் என்ற ஆபத்தான கருத்து முன் வைக்கப்பட்டிருக்கிறது. இது போன்ற கருத்துள்ள பேர்வழிகளை ராஜனே எதிர்த்திருப்பார். என் அம்மா, சகோதரிகள், உறவினர் பெண்கள் அனைவருமே இது போன்ற கருத்துக்களை வெளியிடக்கூடியவர்கள். கிராமத்திலிருக்கும் உயர்த்தப்பட்ட ஜாதிப் பெண்கள் அனைவரின் இயல்பும் இது. இது தவறுதான் என்றாலும் பாலியல் தாக்குதலுக்கு இது ஒரு நியாயமான காரணமாக ஏற்றுக் கொள்ள முடியாது. எனது நண்பனொருவனின் தந்தையார் திகவில் இருந்தவர் அவன் வீட்டிலும் இதே நிலைதான்.

மீனா பார்ப்பனீய எதிர்ப்பு பேசியதால் பாலியல் ரீதியான மொழியில் தாக்கப்பட்டார், சின்மயி பார்ப்பனியம் பேசியதால் தாக்கப்பட்டார். இதே போல் ஃபேஸ்புக்கில் நிலவுமொழி செந்தாமரை என்ற பெண்ணும் ஜாதி எதிர்ப்புக்காகத் தாக்க்ப்பட்டார். இப்படிப் பல பேர் காரணங்கள் வேறு வேறாக இருந்தாலும் அவர்கள் பெண் என்பதால் மட்டுமே இதை எதிர்கொள்ள நேர்ந்தது. மேலும் இங்கே சின்மயியை இழித்தவர்கள் கோபத்தில் கொந்தளித்ததாகத் தெரியவில்லை, அவரைக் கிண்டல் செய்ய ஒரு டாக் ஆரம்பித்து அதில் கண்டபடி செய்திருக்கிறார்கள். இதில் தாழ்த்தப்பட்ட, அறியாதோரின் அடித்தட்டு மக்களின் வசவு மொழியன்று நான் கண்டது, முற்போக்குவாதிகளின் ஆணாதிக்க வன்மம் மட்டுமே.

அப்படிப்பார்த்தால், சிங்கள மாணவர்களைத் திருப்பி அனுப்பிய ஜெவைக் கண்டித்து வரைந்த கார்ட்டூன் சரி. கனிமொழி ஊழல் செய்ததால் அவர் மீதான கருத்துக்கள் சரி என்றெல்லாம் சொல்லிக் கொண்டே போகலாம். போர் நடந்தால் மக்கள் சாவது இயற்கைதான் என்று சொன்ன ஜெயலலிதா ஈழ்த்தாயாக மாற்றப்பட்டார்.
எல்லோரிடமிருந்து பெரிய பாலியல் ரீதியான தாக்குதல் வரவில்லை. அது போல ஆபாசமாக சின்மயியை ஏசாமல் இருந்திருந்தால் அவருக்கு எதிராக கேட்டிருக்கலாம். ஆபாசமாகப் பேசிவிட்டு அதை நியாயப்படுத்த தலித், தமிழ் என உணர்ச்சி அரசியலின் பின்னர் ஒளியக்கூடாது.

ராஜன் மட்டுமே சின்மயி மீது பாலியல் மொழியில் தாக்குதல் செய்யவில்லை தவிர மற்றவர்கள் செய்திருக்கிறார்கள். ராஜனின் நண்பர்களாக இருந்தவர்கள் இது போலப்பேசியதற்கான ட்விட்டுகள் இருக்கின்றன. இதற்காக ராஜனைக் குற்றவாளியாக்கியது மன்னிக்க முடியாதுதான்.

அவரது பதிவிலும் இது போல் சிலர் பின்னூட்டமிடுவார்கள். அதுபோலவே ட்விட்டரிலும் சிலர் இருப்பார்கள் போலத் தெரிகிறது. இவைகளெல்லாம் கோபத்தில் வெளிப்பட்ட உணர்ச்சியில் தெரியாமல் வெளிவந்த கெட்ட வார்த்தைகள் அல்ல. பெண்கள் மீது ஆண்களுக்கு இருக்கும் மதிப்பீட்டில் வருகின்றவை. அதனால்தானே அம்மாவை கடலைக்கு யூஸ் பண்ணிக்கலாம் என்று பேச வைக்கிறது. திரைப்படங்களில் பார்த்தால், நாயகனின் அம்மாவைப் பற்றித் தவறாகப் பேசினால் அவன் கொந்தளித்து சண்டை போடுவது போலவும், நாயகியின் தங்கையையோ, அம்மாவையோ பற்றிப் பேசுவது நகைச்சுவையாகவும் எடுத்துக் கொள்ளப்படுகிறது. (எ.கா ஃபிகரோட சேர்ந்து அவ அம்மாவையும் உசார் பண்ணிருப்பேன் வகையில்)

இது போன்றவர்களைச் சிரிக்க வைப்பதற்காக ராஜன் எழுதியிருக்கிறார் என்பது என்ன முரண் நகை. ஜெயலலிதாவின் கார்ட்டூனைக் கண்டித்த கையோடு அதை நையாண்டி செய்தது மட்டுமே உலகிற்குத் தெரிந்திருக்கிறது என்பது வேதனை.

இந்த வழக்கு மிகவும் சிக்கலாக எந்தப்பக்கம் சாய்வது என்ற குழப்பத்தை ஏற்படுத்துகிறது. இதில் பெண்ணின் மீதான பாலியல் தாக்குதல் என்பதற்காக பெண்ணை ஆதரிப்பதா இல்லை அதிகார வர்க்கத்தினால், பழிவாங்கப்பட்ட பாமரனா என்றால் அப்பாவியின் பக்கம்தான் நிற்கத் தோன்றுகிறது. I support Rajan (with conditions apply). ராஜனின் விடுதலையை மட்டும் தீவிரமாக ஆதரிக்கிறேன். அவர் ஆதரவாளரின் கருத்துக்களை எதிர்க்கிறேன்.

இருப்பினும் சின்மயி ஒரு பாதிக்கப்பட்ட பெண் என்ற நிலையில் அவர் மீதும் கரிசனம் உண்டு.
Download As PDF
Bookmark and Share

Post Comment

கூடங்குளம் அணு உலை - நடுநிலை கருத்துக்களின் உண்மை நிலை !!


தற்போது நடந்து கொண்டிருக்கும் கூடங்குளம் அணு உலை எதிர்ப்புப் போராட்டத்தில் பல தரப்பிலிருந்து எதிர்ப்புக்களும் ஆதரவுகளும் வருகின்றன. நான் அணு உலைக்கு எப்போதுமே எங்குமே எதிரான நிலைதான். இயற்கை சாராத இயற்கைக்கு எதிரான, சுற்றுப்புறச் சூழலுக்கு எதிரான, மனிதர்க்கு எதிரான, அழிவு தரக்கூடிய, அல்லது அழிக்க முடியாத கழிவுகளை உருவாக்கும் எவ்வகையான திட்டமுமே என்னால் ஆதரிக்கப்படாது. எந்த ஒரு இயற்கை ஆர்வலரும் ஆதரிக்க மாட்டார்கள். இயற்கைக்கு எதிரான எல்லாவற்றையும் எதிர்ப்பார்கள். இதை  இயன்ற வழிகளிலெல்லாம் சொல்லி விட்டாயிற்று. எதிர்ப்பாளர்களின் கருத்துக்கள் என்னை பெரியதாக ஒன்றும் கவரவில்லை, எனது நிலையை மாற்றிடவில்லை. சில இடங்களில் பதில் சொல்ல இயலாத விடை தெரியாத விஞ்ஞான விளக்கங்கள் என்னை மௌனமாக்கிய போதும் கூட.

அணு உலை என்பது அணு குண்டு தயாரிக்கும் தொழிற்சாலையைப் போல என்று நான் கற்பனை செய்து கொள்ள வில்லை. ஆனால் ஒரு சிறு விபத்து என்ன விளைவுகளை ஏற்படுத்தும் என்று படித்ததன் விளைவே அதன் மீது கடுமையான வெறுப்பையும் எதிர்ப்பையும் ஏற்படுத்தி விடுகிறது.  அணு உலை விபத்துக்களினால் இறந்தவர்கள்  போகட்டும், அதனால் பாதிப்படைந்தவர்கள் எதிர்கொள்ளும் விளைவுகள், அவர்களுக்குக் கிடைக்கவிருக்கும் உதவிகள் இது குறித்த விபரங்கள்தான் இன்னும் அச்சுறுத்துகின்றன. ஒரு வேளை ஒரு வேளைதான், ஏதாவது நடந்து விட்டால் அரசின் உதவிகள் இன்ன பிறவும் கிடைப்பதற்கான சாத்தியக்கூறுகள் பற்றி வரலாறு ஏற்கெனவே பல பாடங்களை கற்றுத் தந்திருக்கிறது.

இன்னொன்று இந்த வளர்ச்சி என்பதையெல்லாம் நான் ஏற்றுக் கொள்வதேயில்லை. இந்த வளர்ச்சியினால்தான் சிலருக்கு வசதிகள் கிடைத்திருக்கலாம். ஆனால் முப்போகம் விளையும் விவசாய நிலத்தைப் பறித்து அதில் செல்பேசி நிறுவனத்தையோ, மகிழுந்து தயாரிக்கும் நிறுவனத்தையோ கட்ட வேண்டும் என்று அரசு காவல்துறையையும், இராணுவத்தையும் வைத்து விவசாயிகளை அச்சுறுத்தும் திட்டங்களைத்தான் செயல்படுத்தி வருகிறது. இது போன்றதொரு திட்டம்தான் அணு உலை மின்சாரம். வளரும் நாட்டுக்குத் தேவை. இது இல்லாவிட்டால் நாட்டிற்கு மின்சாரம் கிடைக்காது, இந்தியா வல்லரசாவது தடைப்படும் இது மாதிரியான கதைகளெல்லாம் நம்ப முடியாது. 100 செயற்கைக்கோள்கைளை ஏவுவதை விட எல்லோருக்கும் சோறு கிடைக்க வேண்டும், இருப்பவனிடம் வளர்ச்சியின் பேரால் இருப்பவை பிடுங்கப்படக் கூடாது என்பதையே விரும்புகிறேன்.

நடுநிலையாளர்களின் கருத்துக்கள்

எல்லா இடங்களிலும் நடுநிலை எடுக்க முடியாது. ஒன்று வேண்டு அல்லது வேண்டாம் என்பதே இங்கு நிலைப்பாடாக இருக்க முடியும். அதிமுக அல்லது திமுக, விடுதலைப்புலிகள் அல்லது இலங்கை அரசு, அமெரிக்கா, ரஷ்யா இது போன்ற இடங்களில் இரண்டையும் எதிர்த்து நடுநிலை எடுக்கலாம், ஒரு கருத்தையோ அல்லது தீர்வையோ சொல்லலாம். ஆனால் சில இடங்களில் ஏதாவது ஒன்று மட்டுமே இருக்க முடியும். இடது சாரியா வலது சாரியா என்றால் நான் நடுநிலை என்று சொன்னால் அது வலதுசாரிக்கு ஆதரவாகவே முடியும். அது போல இங்கே அணு உலைக்கு எதிர்ப்பும் இல்லாமல் ஆதரவும் இல்லாமல் நடுநிலைக் கருத்து என்று சிலவற்றைக் காண நேர்கிறது. நடுநிலை என்ற பார்வை அல்லது போர்வையில் என்ன சொல்கிறார்கள் என்றால் அணு உலை வேண்டும் என்கிறார்கள்.

நடுநிலை பார்வையின் படி,

அணு உலை எதிர்ப்பாளர்கள் பல நாடுகளில் அணு உலை பாதுகாப்புடன் இயங்கி வருவதை மறைக்கிறார்கள், எல்லா அணு உலையும் ஆபத்தானதில்லை

எல்லா நாடும் அணு உலைகளைக் கைவிட்டு விட விருப்பமில்லாமல் இருக்கின்றன.

தற்போதைய நிலையில் இதை விட்டால் வேறு வழியே இல்லை

அல்லது

தமிழனுக்கு உணர்ச்சி வசப்பட மட்டுமே தெரியும், கேட்டுப்புரிந்து கொள்ளும் பொறுமை கிடையாது.

வழக்கமான போராட்டக்காரர்கள் மீதான குற்றச்சாட்டுக்கள், உதயகுமார் மீதான அவதூறுகள்

பாமரர்களை ஏமாற்றும் சில அறிவிலிகள்

மக்களுக்கு அச்சத்தைப் போக்க வேண்டும் அணு உலை திறக்க வேண்டும்

இந்த வகைகளில் இருக்கின்றன. இவை அனைத்தும் அணு உலை ஆதரவாளர்களின் கருத்துத்தான். பல நாடுகளில் இருந்தாலும் இயங்கினாலும் அவை எதிர்க்கப்படும், எல்லாப் போராட்டமும் எதிர்ப்புக்களும், ஆதரவும் சூழல் ஆர்வலர்களின் கருத்துக்களும் கூடங்குளம் அளவுக்கு பெரிய அளவில் கவனமும், ஆதரவும், ஊடக வெளிச்சமும் படாமலே போயிருக்கலாம். சிறிய அளவில் இருந்திருக்கலாம். ஃபுகுஷிமா விபத்து வரை உதயகுமாரையே கூடங்குளத்திலேயே பல பேர் நம்பவில்லை.

உதயகுமார், தனிநாடு கேட்கவில்லை, தடை செய்த இயக்கங்களை ஆதரிக்க வில்லை, யாரையும்  கொல்லவுமில்லை, வன்முறையில் ஈடுபடவில்லை. பின்பே இத்தனை அவதூறுகள் ? இத்தனை நாளாக நல்லவர்கள், அறிவாளிகள் நடுநிலையாளர்கள் என்று சொல்கிறவர்கள் கூட அவதூறு மழை பொழிகிறார்கள். தினமலரைப் போல உருமாறுகிறார்கள், திரைக்கதை எழுதிகிறார்கள். அணு உலை வேண்டாமென்று சொல்ல இத்தனை தரவுகளும், ஆதாரங்களும் உலகெங்கும் கண்டுமா இன்னும் தூங்குவது போல நடிக்கிறார்கள். 

படம் - நன்றி : ஃபேஸ்புக்

தமிழ்நாட்டு தமிழனின் மின்சாரத் தேவைக்குத்தான் தினமலரும் தினகரனும் செய்தியை வெளியிடுகிறார்கள் போல. எதிர்ப்பவர்கள் தேசத்துரோகிகள் போல.

சிந்திப்பவர்களுக்கு அத்தாட்சிகள் உண்டு. மனசாட்சி இருந்தால் !!!
Download As PDF
Bookmark and Share

Post Comment

அணு உலைக்கு ஆதரவாக அவதூறுகளே ஆயுதம் !!

கூடங்குளம் போராட்டத்தின் ஆரம்பத்திலிருந்தே கவனித்தால் ஒன்று புலனாகிறது. அணு உலை பாதுகாப்பானது என்று கருத்து நம்பவைக்கப்படுவதை விட உதயகுமாரை தேசத்துரோகியாக்குவது மட்டுமே ஒரே வழி என்ற கருத்துகள் அதிகமாக வைக்கப்படுகின்

திரும்பவும் ஆரம்பத்தில் கேட்கப்பட்ட கேள்விகள் அவதூறுகள்மட்டுமே இன்னும் பரவலாக வெவ்வேறு வகையில் வைக்கப்படுகின்றன. காலம் எல்லாவற்றையும் மறக்கடித்துவிடுமல்லவா அதனால்தான்.

அணு உலை பாதுகாப்பானது நாட்டுற்கு மிகவும் இன்றியமையாதது என்றெல்லாம் விளக்க முயன்று அதில் பெரிய வெற்றி பெற முடியாத நிலையில் உதயகுமாரையும் அவரது போராட்டத்தையும் கொச்சைப்படுத்துவது அவதூறு செய்வது மட்டுமே இப்போது அணு உலை ஆதரவாளர்களின் போராட்டமாகியுள்ளது.

கடந்த ஒரு வருடமாக வன்முறையின்றிப் போராடி வந்த போதும், தற்போது உயர்நீதிமன்ற தீர்ப்பின் பின்னரே காவல்துறையினருக்கும் மக்களுக்கும் இடையே அடிதடிகள் நடந்தன தூத்துக்குடியில் ஒரு மீனவர், அணு உலை எதிர்ப்புப் போராட்டத்தில் முதல் பலி ஆவார். இது போக போராட்டக்காரர்களின் ஒரு குழந்தையும் பலியாகியுள்ளது. காவல்துறை உள்ளே இறங்கிய பின்னர்தான் இந்த வன்முறையும் நிகழ்ந்தது. உயிர்கள் பலியானதும் இதனால்தான்.

இதன் போராட்டத்தின் ஆரம்பத்திலிருந்தே பார்த்தால் புரியும். உதயகுமாரை அவதூறு செய்வதன் மூலமே அணு உலைக்கு எதிரான போராட்டத்திற்கு எதிரான மனநிலையை வளர்த்து வந்துள்ளார்கள். கருணாநிதியும், ஜெயாவும் ஒரே நிலைப்பாடு எடுத்த  விவகாரம், கம்யூனிஸ்டுகளும், பாஜகவும், காங்கிரஸும் ஒரே நிலைப்பாடு, வீரமணியும், இந்து முண்ணனியும் ஒரே நிலைப்பாடு. எல்லாவற்றுக்கும் மேலாக தமிழுக்கு உயிரையை கொடுக்கும் தமிழ்ப் போராளிகள் பலர் லேசான முனகல் மட்டுமே செய்தார்கள்.


நடுவண் அமைச்சர் நாராயண சாமி இதில் நக்சல்களின் தொடர்பு என்றார். பிரதமர் மன்மோகன் சிங் நக்சலைட்டுகளை விட ஒரு அடி மேலே போய் அமெரிக்காவின் பணம் இப்போராட்டத்தில் இருக்கிறது என்றார்.

அடுத்து தனிநபர் அவதூறுகள். கிறித்துவ நிறுவனங்களின் சதி என்கிறார்கள். ரஷ்யா இந்து நாடோ, முஸ்லிம் நாடோ, கம்யூனிஸ நாடோ  இல்லை. கிட்டத்தட்ட கிறித்தவ மதவாதிகள் ஆதிக்கம் செய்யும் நாடுதான். கிறித்தவ நாடுகளின் திட்டங்கள்தான் இந்தியாவில் பலதும் நிறைவேற்றப்படுகின்றன. அதற்குத்தான் இந்திய அரசியல்வாதிகளே முகவர்களாக செயல்படுகின்றனர். பிடி பருத்தி, பிடி கத்தரிக்காய், மேலும் சில்லறை வர்த்தகத்தில் வால் மார்ட் என்ற கிறித்த நாட்டு நிறுவனம்தான் வரப்போகிறது.

அமெரிக்காவுடன்தான் இந்தியா ராணுவ ஒப்பந்தம், அணு சக்தி ஒப்பந்தம் போட்டுள்ளது. இதெல்லாம் கிறித்தவ நாடுகளோ, மிசனரிகளோ இல்லையா ? இந்தியாவிற்கு எதிரான பொதுமக்களுக்கு எதிரான இதில்தான் வெளிநாட்டுப்பணமும், தொண்டு நிறுவனங்களும் பணத்தைக் கொடுத்து அரசியல் வாதிகளைச் சரிக்கட்டி, இத்திட்டத்தை நாட்டு மக்களை ஏற்றுக் கொள்ள வைக்கிறார்கள்.

இந்தியாவில் மின்சாரம் பற்றாக்குறை என்கிறார்கள். கூடங்குளம் தொடங்கினால் அது தீர்க்கப்படும் என்கிறார்கள். அதே வாயால்தான் பாகிஸ்தானுக்கும், இலங்கைக்கும் மின்சாரம் இந்தியாவிலிருந்து வழங்கப்படும் என்கிறார் பிரதமர். இந்தியாவிற்கே பற்றாக்குறையான மின்சாரத்தை அண்டை நாடுகளுக்கு ஏனப்பா வழங்க வேண்டும்.

அணு உலை ஆதரவாளர்களின் மிகப்பெரியா தேசபக்திக் கோரிக்கை என்ன வென்றால், கூடங்குளம் மின்சாரம் முழுவதையும் தமிழகத்திற்கே வழங்க வேண்டுமாம். இது ஒரு பெரிய கோரிக்கையாம். அது நடக்காது என்பது எல்லோருக்குமே தெரியும்.

அணு உலையை நம்பித்தான் இந்தியாவே இருப்பது போல இல்லையென்றால் இந்தியாவின் வளர்ச்சியே நின்று விடுமாம். இந்த வளர்ச்சிக்குத்தான் தினமலரும் இதற்காகத்தான் இத்தனை அவதூறுகள் செய்கிறது போல. காவல்துறையும், விமானத்துறையும் மீனவர்கள் கொல்லப்படுவதை வேடிக்கை பார்த்துவிட்டு, இவர்களை வேவு பார்ப்பதும் நாடு வளர்வதற்கா இல்லை அணு நிறுவங்களின் வளர்ச்சிக்கா ? புல்லரிக்கிறது. 




ஜெய்தாபூர் அணு மின்நிலையத்தை எதிர்க்கும், கம்யூனிஸ்டுகள், கூடங்குளம் அணு மின்நிலையத்தை ஆதரிக்கிறார்கள். கேரள சிபிஎம் தலைவர் அச்சுதானந்தன் கூடங்குளம் திட்டத்தை எதிர்க்கிறார். ஆனால் காங்கிரஸின் உம்மன் சண்டி, கேரளத்திற்கு 500 மெகாவாட் கேட்டு நடுவண் அரசுக்குக் கடிதம் எழுதுகிறார்.

இதை மற்ற மாநிலத்தவர் எதிர்க்கவில்லையா ? இது பொய் கேரளத்தைச் சேர்ந்தவர்கள் எதிர்க்கிறார்கள். கேரளத்தவரும் இணைந்துதான் போரட்டத்தில் இருந்தார்கள். முல்லைப் பெரியாறு பிரச்சனையினால்தான் கேரள அறிவாளர்களின் எண்ணிக்கை குறைந்து போனதாக போராட்டக்காரர்கள் சொல்லி வந்தனர். இந்தியா முழுவதும் சிறு அளவிலான போராட்டங்கள் அணு உலைக்கு எதிராகவும், கூடங்குளம் போராட்டத்திற்கு ஆதரவாகவும் நடந்துள்ளன.

எல்லாக் கட்சிகளும் எதிர்க்கின்றன, எந்தக் கட்சியும் ஆதரிக்கவில்லை ஏன் ?

தமிழகத்தில் எல்லா மக்களும் போராட்டத்தில் ஈடுபடவில்லை ஏன் ? 

உதயகுமார் நாட்டுப்பற்றுள்ளவர் எனில், ஏன் இத்தனை நாள் அமெரிக்காவிலிருந்தார் ?

அவர் ஏன் அமெரிக்காவில் இயங்கும் அணு உலைகளை எதிர்க்கவில்லை ?

குழந்தைகளையும் பெண்களையும் அனுப்பி விட்டு, படகில் ஏறித்தப்பினார் ?
சோனியா காந்தியை ஏன் எதிர்க்கவில்லை ?

என்றெல்லாம் அடித்து விடுகிறார்கள். இதெல்லாம் வயித்தெரிச்சலின் விளைவுகள் தவிர வேறொன்றுமில்லை.

வெளிநாட்டிலிருந்தால் அவர்களுக்கு நாட்டுப்பற்று இல்லையாம். வெளிநாட்டு அணு உலையை ஆதரிப்பவர்களை தேசத்துரோகிகள் என நாம் சொல்லலாமா ?

அமெரிக்காவிலிருக்கும் அணு உலையை எதிர்ப்பது குறித்து இந்தியர்கள் ஏனப்பா கவலைப்பட வேண்டும். இந்தியாவிலிருந்து எதிர்த்தாலே அவதூறுகள் வருகின்றன. இதில் அமெரிக்காவிலிருப்பதை எதிர்க்க வேண்டுமாம்.

அவர் காவல்துறையின் காட்டு மிராண்டித்தனத்துக்கு அஞ்சி, சரணடையவே முன்வந்த அப்பாவி என்பது நமக்குத் தெரியும். போரட்டத்தை வலுவிலக்கச்செய்யத்தான் தேசத்துரோக வழக்குகள், அவர் மீதான அவதூறுகள், என அனைத்தும் நடக்கின்றன. அவர் நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு முன்னால் வந்தால் கைது செய்து விடலாம் அல்லது கொன்று விடலாம் என்பது போலத்தானே திட்டம் போட்டிருக்கிறாரக்ள்

கிறித்தவரான சோனியா காந்தியை எதிர்க்கவில்லையாம் ? இதற்கெல்லாம் பதிலில்லை என்னிடம். ஏன் மற்றவர்கள் கேட்கலாமே கிறித்தவ சோனியா அணு உலைக்கு எதிரானவரா என்று ? ஏன் உதயகுமார், அமெரிக்காவின் இஸ்லாமிய எதிர்ப்புத் திரைப்படத்தைக் குறித்து விமர்சிக்கவில்லை அதனால் அவர் அமெரிக்க ஆதரவாளர், அவர் ஜப்பானில் அணு குண்டு வீசியதைக் கூட கண்டிக்க வில்லை அதனால் அவர் அமெரிக்கக் கைக்கூலி. இப்படியே சொல்லிக் கொண்டே போகலாம்.

சீனா இலங்கையின் ஹம்பாந்தோட்டையில் பணிகளைத் தொடங்கியபோது, தினமலர்-இந்தியர்கள் என்ன சொன்னார்கள் சீனாக்காரன் வந்துவிட்டான் இந்தியாவின் பாதுகாப்பு கேள்விக்குறியாகிவிட்டது, தென்மாவட்டங்கள் தாக்குதலுக்கு உள்ளாகும். உளவு பார்க்கிறது சீனா. எனறெல்லாம் அடித்து விட்டாரகள். அவர்கள் அணு உலையை எதிர்க்கவேண்டுமென்றால் எப்படி எதிர்த்திருக்கலாம் தெரியுமா ? இலங்கையிலிருந்து சீனா இந்தியாவைத் தாக்க வேண்டுமென்றால் கூடங்குளம் அணு மின்நிலையத்தை தாக்கி விடும் என்று பீதியைக் கிளப்பியிருக்கலாம். ஆனால் செய்யவில்லை. சீனாக்காரன் இலங்கையிலிருந்து அல்ல சீனாவிலிருந்தே அடிக்கும் வல்லமை பெற்றவன் என்பது அவர்களுக்குத் தெரியும். அதனால் அலட்டிக் கொள்ளவில்லை போலிருக்கிறது. போரில் அணு ஆயுதங்களைத்தான் பயன்படுத்தக் கூடாது, ஆனால் அண் மின் நிலையங்களைத் தாக்குவது குறித்து யாரும் பிரச்சனை செய்ய மாட்டாரகள்.

எந்தப் பிரச்சனையாகட்டும் எல்லா மக்களுமே எப்போதும் போராடியதில்லை. கொஞ்சப்பேர்கள் மட்டுமே பாதிக்கப்பட்டவர்கள், எதிர்நோக்கியிருப்பவர்கள் மட்டுமே போராடுவார்கள், சிலர் எதிர்ப்பார்கள் சிலர் ஆதரிப்பார்கள். முக்கால்வாசிப்பேர்கள் கண்டுகொள்ள மாட்டார்கள், அல்லது அவதூறு செய்வார்கள்.

இன்னொரு பெரிய வியாக்கியானம் தொடங்கிய போது யாரும் எதிர்க்கவில்லையாம். 13000 கோடி செலவழித்த பின்னர் எதிர்க்கிறார்களாம்.  அய்யா திட்டம் தொடங்கப்பட்ட போது யாருக்கும் தினத்தந்தி படிக்கும் அறிவு கூட இல்லை. போபால் குற்றவாளி ஆண்டர்சனை தனி விமானம் மூலம் தப்ப வைத்த ராஜீவ் காந்தி இந்தத் திட்டத்தை அறிவித்த போது அக்கால நிலையை நினைத்தல் நலம். பின்தங்கிய மாவட்டதிலிருக்கும் படிப்பறிவில்லாத ஏழைகளிடம் மின் நிலையம் வந்தால், அனைவருக்கும் வேலை கிடைக்கும் என்று சொன்னால் யார் அதை எதிர்ப்பார்கள். இதுதான் நிலை. செர்னோபில் விபத்து பற்றி எத்தனை பேருக்கு விழிப்புணர்வு இருந்திருக்கும்.

செர்னோபில் அணு உலை வெடித்த போது மொத்தம் 50 பேர் கூட சாகவில்லை. விபத்து நடந்த அன்று 2 பேரும், விபத்து நடந்த வாரத்தில் 28 பேர்கள் மட்டுமே கொல்லப்பட்டனர். ஆனால் இன்று வரை அதிகம் பேரைப் பலிகொண்ட, புற்று நோய் பாதிப்புகளுடன் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்திய விபத்து அதுதான். அது போல அணு உலை விபத்து என்றால் வெடிகுண்டு வெடித்து பெரிய பாதிப்பு ஏற்படுவது போல, அல்லது சிவகாசி விபத்து போலவோ, ஹிரோஷிமா போலவோ, போபால் போலவோ அதிக எண்ணிக்கையில் இறப்புக்களோ ஏற்படாது. அது நிலம், நீர், காற்றை நச்சாக்கி மெதுவாக பல உயிர்களைப் பலிவாங்கும். அதனால் விபத்தைக் கண்டு நமக்கு உச் கொட்டக் கூட தேவையிருக்காது. 20 பேர்கள் விபத்தில் செத்தால் 2 நாளைக்கு அதைப் பேசுவார்கள், ஆனால் நாளுக்கு நாள் நடக்கும் விவசாயிகளின் தற்கொலைகளை அது இலட்சத்தைத் தாண்டி விட்ட போதும் கூட யாரும் கண்டு கொள்வதில்லை, அது அவர்களை பாதிப்பதுமில்லை என்பது போல அணு விபத்து நடந்தால் பாதிப்பின் அளவு நமக்குத் தெரியாது. அந்தத் துணிச்சலில்தான் பாதுகாப்பான அணு உலை என்கிறார்கள்.

எதிர்க்கவில்லை என்பவர்களுக்குத் தெரியும். வைக்கோ எதிர்த்துப்பேசியிருக்கிறார். இலங்கையிலிருப்பவர்களும் எதிர்த்தார்கள். தமிழீழப்பிரச்சனையின் காரணமாக அக்குரல் அதிகமாகக் கேட்கவில்லை. இந்தியாவின் பல அறிவாளர்களின் எதிர்ப்பு, ஆராய்ச்சிக் கட்டுரைகள் வந்திருக்கின்றன. தற்போது கூட ஃபுகிஷிமா வெடிப்பின் பின்னர்தான் அச்சம் பன்மடங்கு உயர்ந்தது என்பதும் கவனிக்கத்தக்கது. தொழில்நுட்பத்தில் உச்சம் கண்ட ஜப்பானியரே கையைப் பிசைந்து கொண்டிருக்க, இந்தியர்கள் எல்லாம் அணு விஞ்ஞானிகளே சொல்ல முடியாத அணு உலை பாதுகாப்பானது என்று சொல்கிறார்கள்.
Download As PDF
Bookmark and Share

Post Comment