உருவம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
உருவம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புற அழகைப் பழிப்போரின் அக அழகு


இப்போது, யார் வேண்டுமானாலும் ஓர் புகைப்படத்தை போட்டோஷாப்பில் எடிட் பண்ண கற்றுக் கொள்ள முடியும். தமிழிலும் அதன் மீது எழுதிவிடலாம். இதனால் சகட்டு மேனிக்கு இணையத்தில் புகைப்படங்களைப் புழங்க விடுகிறார்கள். அது ஒவ்வொன்றும் அருவருப்பாக இருக்கிறது. இதில் அதிகமாக இருப்பவை பெண்களைக் கிண்டல் செய்பவை.

அடுத்ததாக திரைப்பட நடிக நடிகையரின் படங்களைப் போட்டு திரையரங்கில் படம் ஓடும்போது என்னவெல்லாம் சொல்லிக் கத்திக் கூச்சலிடுவார்களோ அதையெல்லாம் வசனமாகப்போட்டு புகைப்படங்களை ஃபேஸ்புக்கிலும் கூகிள் ப்ளஸ்சிலும் பகிர்கிறார்கள்.

இது சற்றும் மனிதாபிமானமில்லாமலும், சக மனிதர்களை இழிபிறவிகளாகவும் சித்தரிக்கின்றன. இதைப்பார்த்து சிரிக்கும் அளவுக்கு அனைவருக்கும் மனசாட்சி மரத்துப் போய்விட்டது. இதில் திரைப்பட நடிக நடிகையர்கள் மட்டுமல்லாமல் அரசியல்வாதிகளையும் சகட்டு மேனிக்கு இழிவு செய்கிறார்கள். கருத்து சுதந்திரம் இருக்கிறது என்ற ஒரு காரணத்திற்காக ரொம்பவும் தறிகெட்டு ஆடிக் கொண்டிருக்கிறார்கள். இவை மிகச் சாதாரணமாக ஃபேஸ்புக்கில் பகிரப்படுகின்றன. நக்கலடிக்கப்படுகின்றன. இது போன்ற சில பன்னாடைகளைக் கொண்டே ஃபேஸ்புக் போன்ற ஊடக சுதந்திரம் பறிக்கப்படலாம். 

அரசியல்வாதிகளில் கருணாநிதியை அதிகமாக கேவலப்படுத்துகிறார்கள். அதுபோல நடிகர்களில் விஜயை படுகண்றாவியாக சித்தரித்து வைத்திருக்கிறார்கள் இந்த போட்டோஷாப் நிபுணர்கள். யாரும் இதுவரை இது குறித்துப் புகாரளிக்காதது அதிசயமாக இருக்கிறது.


இது ஒன்றும் அமெரிக்கா அல்ல என்பதையும் நினைவூட்டிக் கொள்ளவும். 

அடுத்ததாக திரைப்படப் பைத்தியங்கள். திரைப்பட நடிகர்கள் மிகை மனிதர்களாகவே ஊடகங்களால் சித்தரிக்கப்படுகின்றனர். அவர்கள் என்ன செய்தாலும் செய்தியாகிறது. அவர்கள் ஊருக்குப் போவதை, திரைப்படம் பார்த்ததை, கருத்து சொல்வதை ஃபேஸ்புக்கில், ட்விட்டரில் கூட போட மாட்டார்கள் ஆனால் அது நாளிதழ், வார இதழ்களில் துணுக்குகளாக வெளிவருகின்றன. இந்த விளம்பரங்களைக் கொண்டுதான் அவர்களின் செல்வாக்கு சராசரி மனிதர்களிலிருந்து உயர்த்தி வைக்கப்பட்டு அவர்கள் மீதான செய்திகளை ஆர்வமூட்டப்பட்டு அவர்கள் கைகழுவும் செய்தியைக் கூட பெரிய செய்தியாக்குகிறார்கள்.

அதனால் அவர்கள் நடித்து வெளியாகும் படங்களுக்கு பெரிய பரபரப்பை உண்டாக்கி காசு பாக்க முடிகிறது. இதன் மூலம்தான் இந்த நட்சத்திர அந்தஸ்தைப் பயன்படுத்தி அவர்களும் பெரிய அளவில் பணம் சம்பாதிக்க முடிகிறது. இதே எதிர்வினையாக ஒரு குறிப்பிட்ட நடிகை, அல்லது நடிகர்களைப் பற்றி படுகேவலமான தொனியில் விமர்சிப்பதும், அதைத் தொடர்ந்து செய்வதுமாக இருக்கின்றனர். இதைத் திரையரங்கில் ஏதோ குடிகாரப் பொறுக்கிகள் மட்டும்தான் செய்வார்களில்லை. 

இதில் சில உதாரணங்கள் 

விஜயின் மனைவியுடன் விஜயின் தந்தையை இணைத்து சஞ்சயின் அப்பா அம்மா என்று எழுதியிருந்தார்கள். அங்கங்கே தல வாழ்க என்ற அஜீத்
புராணமும் இருந்தது.

ஏதே இரு மேல்நாட்டு ஜோடிகளின் டிஸ்கோதே கிளப்பில் கட்டிப்பிடித்துக் கொண்டு இருப்பதை, சோனியா- மன்மோகன், மாயாவதி-ப்ராணாப் முகங்களை ஒட்டி வைத்திருந்தார்கள்,

மன்மோகனும் சோனியாவும், மன்மோகனும் காதோடு பேசுவது போன்ற புகைப்படத்தில் இருவரும் முத்தம் கொடுப்பது போன்ற விளக்கத்துடன் பகிரப்பட்டிருந்தது.

காந்தி நேரு ஆகியோர் வெள்ளைக்காரப் பெண்மணிகளுடன் இருப்பதைப் போன்ற புகைப்படங்களும் அதன் விளக்கங்களும். விமர்சிப்பதற்கும் ஒரு தரம் வேண்டும்.

இப்படிப்பலவாறு இருக்கின்றன. 

நடிகர் விஜயின் முகத்தை ஆப்ரிக்கர்களின் உடலிலோ அல்லது மனநிலை சரியில்லாத ஒரு பிச்சைக்காரரின் உடலில் ஒட்டி விட்டால் அது "கலாய்த்து விட்டதாகக்" கருதப்படுகிறது. இது என்ன ஒரு வக்கிரமான மகிழ்ச்சி !! ஏன்னா ஆப்ரிக்காக் காரன் கருப்பாக அசிங்கமாக இருப்பான் என்ற எண்ணம் உயர்வு மனப்பான்மை,  கூலி வேலை செய்பவனின் மீதான ஏளனப் பார்வைதான். 


இந்த நடிகர்களின் ரசிகர்கள் ஒரு மன்நோயாளிகள் என்பதில் எந்த ஐயமும் வேண்டியதில்லை. எந்த நடிகனுமே இயக்குநர் சொல்லி, நடன இயக்குநர் சொல்லித்தான் ஆடுகிறார்கள், பாடுகிறார்கள். யாருக்கும் எந்த மேனமையும் கீழ்மையும் கிடையாது. ஆனால் எந்த ரசிகர்கள் ஒரு நடிகனை கடவுளைப் போல ஏற்றி வைக்கிறார்கள், தனக்குப்பிடிக்காத இன்னொரு நடிகனை படு கீழ்த்தரமாக கேவலப்படுத்துகிறார்கள். 

விஜயை மற்ற எல்லோரும் கிண்டல் பண்ணுகிறார்கள் என்றால், இன்னும் சிலர் சூர்யாவை கிண்டல் செய்வதாக நினைத்து அவரது உயரத்தைக் கிண்டல் செய்கிறார்கள். இந்த மன்நோயாளிகளின் அடிப்படையெல்லாம் ஒன்றுதான். உருவத்தைக் கிண்டல் செய்தல், இதை அதிகமாக பெண்களின் மீது ஏவப்படும் வன்முறை அவ்வப்போது ஆண்களின் மீதும் ஏவப்படுகிறது.

இதில் அதிகமாக செய்வது,

கருப்பாக இருப்பவர்கள் - இவர்கள் கேவலமானவர்கள் இவர்களைப்பார்த்தாலே சிரிக்க வேண்டும், கருப்பு என்றால் சிரிக்க வேண்டும். ரஜினி கருப்பு என்பதை ரஜினையைப் பிடிக்காதவர்கள் சொல்வார்கள். அதே நேரம் ரஜினியைப் பிடித்தவர்களெல்லாம்  கருப்பு நிறத்தைப் பழிக்காதவர்களல்ல.

குண்டாக இருப்பவர்கள்

அடுத்தது சூர்யாவைப்பிடிக்காதவர்கள் சொல்வது குள்ளமாக இருக்கிறார் என்பது.

அஜீத்தைப் பிடிக்காதவர்களுக்கு உள்ள பிடி, நடனமாடத் தெரியாது, தொப்பை இருக்கிறது என்பது போல இருக்கும்,

விஜய டி, ராஜேந்தர், பவர் ஸ்டார் இவர்களையெல்லாம் குரங்கு, கழுதை படங்களுடன் ஒப்பிட்டு கிண்டல் செய்திருக்கிறார்கள்.

கனிமொழியையும் ராசாவையும் இணைத்து பேசி இன்பம் காண்பவர்கள்

நயன்தாரா, ரஞ்சிதா ஆகியோரெல்லாம் இவர்களுக்குக் கிடைத்த புளியங்கொம்புகள், பெண்களாக இருந்தும் விட்டால் போதும் பொங்கல் வைத்து விடுகிறார்கள்.

இவர்களின் அரிப்புக்குத் தோதாக அவ்வப்போது சிவகாசி ஜெயலட்சுமி, சஹானாஸ் என ஒரு தீனி கிடைத்து விடுகிறது.

இதில் தற்போது ஹினா ரப்பானி கர் நல்ல வேளை அவர் இந்தியாவில் இல்லை.

இந்தப் பன்னாடைகளையெல்லாம் என்ன சொல்லித் திருத்துவது. ஒரு குறிப்பிட்ட உருவம் இருப்பவர் தனக்கு வேண்டப்பட்டவர் என்றால் அதை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்வதில்லை அதே நேரம் அவர் தனக்கு வேண்டப்படாதவராகவோ ஒரு  பொது வாழ்வில் இருப்பவர்களாகவோ இருந்து விட்டால் அவ்வளவுதான் தனது கழிசடைத்தனத்தையெல்லாம் காட்டி விடுவார்கள்.

இதையே ஒரு கருத்தாக வைத்துத்தான் வடிவேலு, கவுண்டமணி,விவேக், சந்தானம் ஆகியோரும் சிரிக்க வைக்கிறார்கள். அதனால் இதற்கும் படத்தில் இது போன்ற காட்சிகளை வைக்கும், புண்ணியவான்கள்தான் பதில் சொல்ல வேண்டும். கருப்பாக இருப்பது, குள்ளமாக இருப்பதையெல்லாம் நகைச்சுவையாக சித்தரித்து படமெடுப்பவர்கள், கவிதை, கதை, நிலைத்தகவல், பதிவு எழுதுகிறவர்களின் மனசாட்சியைப் பொறுத்தது.

இதையெல்லாம் செய்பவர்களுக்கு - உமக்கொரு நிலை வரும்வரை ஆடுங்கள்.

Download As PDF
Bookmark and Share

Post Comment

உலகின் மிக அழகான பெண் - 2


தன்மானம் ஊட்டிய காரிகை, தறுதலைகளுக்கு தக்க பதில் தந்த தாரகை என்றெல்லாம் தலைப்பு வைக்கலாமா என்றும் யோசித்தேன். இவரைப் பற்றி எழுதியாவது எனது பாவத்தைக் கொஞ்சம் கழுவிக்க் கொள்ளலாம் என்ற நப்பாசையில்தான் இதை எழுதுகிறேன். அனைவருக்குமே இருக்கும் ஒரு மோசமான சமூகத் தொற்று நோய் என்ன உருவத்தை வைத்து எடை போடுதல், எள்ளி நகையாடுதல், எகத்தாளம் செய்தல், ஏற்றிப் பேசுவது என அனைத்தும் அடங்கும். இதை பல பேர் கருத்தளவில் ஏற்றுக் கொண்டாலும் ஏதாவதொருவகையில் அதே நோய்த்தன்மையுடன் நாம் நடந்து கொண்டு விடுகிறோம். பல பேர் இதை ஒரு தொழிலாகவே வைத்துக் கொண்டுள்ளார்கள்.

நான் இதிலிருந்து முக்கால்வாசி வெளி வந்து விட்டாலும் எனது தோற்றம் குறித்து தாழ்வு மனப்பான்மை இன்னும் முழுவதுமாகப் போய்விடவில்லை. கறுப்பு நிறம், பூ விழுந்த பற்கள், நரைக்கத் தொடங்கிய முடிகள், தாடி, லேசான சொட்டை என சராசரி ஆண்களிடம் காணப்படும் "குறைகள்" அது குறித்த கவலைகள் எனக்குண்டு. பலருக்கும் உண்டு. அதை ஏற்றுக் கொள்ள முழுவதும் நம்மால் முடியவில்லை ஏன். அடுத்தவர்கள் நம்மைப் பார்த்து என்ன நினைப்பார்கள் என்ற எண்ணம். ஏனென்றால் இப்படி நினைப்பவர்கள்தான் அடுத்தவரை இது மாதிரி எடை போடுவார்கள். இது போன்ற அசிங்கமான மனப்பான்மையை மிகச் சிலர் எளிதில் உதறித்தள்ளி நம்மை வெட்கப்பட வைத்து விடுகிறார்கள்.

பெண்களும் தமது உருவம் குறித்து மிகவும் கவலை கொள்கிறார்கள். இதற்கு அவர்கள் மட்டுமே காரணமல்ல. சமூகம் ஊடகம் என அனைத்துமே அவர்களை அது குறித்துத்தான் கவலை கொள்ள வைக்கிறார்கள். சிலர் மட்டுமே இதிலிருந்து வெளியே வருகிறார்கள். பெண்கள் முகத்தில் முடி இருந்தால் அதை அவர்கள் எப்படி எதிர்கொள்வார்கள், அதை நீக்கவே ஆணும் சரி பெண்ணும் சரி விரும்புவார்கள்.

தன்னை இழிவு செய்தவனை செய்ய நினைத்தவனை மன்னித்து அவனுடன் நகைச்சுவையாகப் பேச எத்தனை பேருக்கு சாத்தியம். ஒரு பெண் செய்திருக்கிறார். அவர் பெயர் பல்பிரீத் கவுர். இவர் ஒரு சீக்கியப் பெண். இவருக்கு ஆண்களைப்போல முகத்தில் லேசான மீசையும் தாடியும் வளர்ந்திருக்கிறது. இப்படி ஒருவரைப் பார்த்தால் நம்மாட்கள் என்ன செய்வார்கள், அவரை ஏற இறங்கப் பார்த்தே கொன்று தள்ளிவிடுவார்கள். ஏண்டா பிறந்தோம் என்று அவரை வேதனைப்படுத்தி விடுவார்கள். அதே போலத்தான் ஒரு நல்ல உள்ளம் இவரைப்பார்த்து இவருக்குத் தெரியாமல் புகைப்படம் எடுத்து ஒரு தளத்தில் வெளியிட்டு விட்டார். அதற்கு இவர் விட்டிருந்த கருத்து - இப்படத்தைக் குறித்து என்னால் எந்த முடிவுக்கும் வர முடியவில்லை ("I'm not quite sure what to conclude from this") (ஆணா இல்லை பெண்ண எனத் தெரியவில்லை). பல ஆண் உத்தமர்கள் தெருவில் போகும் நிற்கும் பெண்களைப் படமெடுத்து அதை இணையத்தில் பகிர்ந்து கைமைதுனம் செய்பவர்கள். அது குடித்து விட்டுக் கிடக்கும் பெண்களாக இருக்கலாம், எதுவும் செய்யாமல் வெறும் அழகான பெண்ணாக இருக்கலாம், அல்லது அசிங்கமாக இருக்கும் பெண்ணாக இருக்கலாம், அல்லது குட்டைப் பாவாடை அணிந்திருக்கலாம் அல்லது குனிந்தவாறு நின்றிருக்கலாம் இப்படி எந்த மாதிரி இருந்தாலும் அதைப் படம் பிடித்து இணையத்தில் பரவவிடுவதில் இவர்களுக்கு ஆனந்தம். இவர்களை விட போர்னோகிராபி எடுப்பவன் 10 மடங்கு மேலானவன்.

இது போன்ற ஒரு மன நோயாளி எடுத்து இவரின் படத்தை வெளியிட அது ஃபேஸ்புக் வரை பரவி பின்பு அக்குறிப்பிட்ட பெண்ணுக்கும் செய்தி சேர்ந்து விட்டது. அதற்கு இவர் வெளியிட்ட கருத்து இவரின் மீதான மதிப்பை அதிகப்படுத்தி இப்படத்தினைப் பகிர்ந்தவனுக்கு மன்னிப்பையும் கேட்க வைத்து விட்டது. 

பல்ப்ரீத்  கௌர்
அவர் வெளியிட்டிருந்த கருத்து இதுதான், "ஹாய் நான் பல்ப்ரீத்  கௌர், ஃபேஸ்புக்கில் ஒரு நண்பர் சொல்லும்வரை இப்படம் குறித்து எனக்கு எதுவும் தெரியவில்லை. இதை எடுத்தவர், என்னைப் புகைப்படம் எடுக்க வேண்டும் என்று என்னிடம் கேட்டிருந்தால் நான் புன்னைகைத்திருப்பேன் :). எப்படியாகினும் இப்புகைப்படம் வெளியானதால் அல்லது நேர்மாறான கவனத்தை இப்புகைப்படம் பெற்றதாலோ நான் அவமானமோ, துன்பமோ அடைந்ததாகக் கருதவில்லை ஏனென்றால் புகைப்படத்தில் இருப்பது நான் மட்டுமே. நானொரு ரோமத்துடன் கூடிய திருமுழுக்குப்(ஞானஸ்நானம்) பெற்றசீக்கியப் பெண். ஆம் எனது பாலினம் பல நேரங்களில் குழப்பம் தருகிறது நான் மற்ற பெண்களிடமிருந்து வேறுபட்டுத் தெரிகிறேன். திருமுழுக்குப்பெற்ற சீக்கியரின் நம்பிக்கைப்படி, புனிதமான இவ்வுடல் பாலின வேறுபாடற்ற தெய்வத்தினால் அருளப்பட்டது, இதை அப்படியே கெடாமல் தெய்வத்தின் விருப்பமாக வைத்திருக்க வேண்டியது, ஒரு குழந்தை தனது பெற்றோரின் பரிசை எப்படி நிராகரிக்காமல் வைத்திருக்கிறதோ அது போல சீக்கியர்கள் தமக்குக் கொடுக்கப்பட்ட உடலை நிராகரிக்கக் கூடாது. என்னுடைய உடல் என்று அழுதுவாறே உடலை மாற்றிக் கொள்வதன் மூலமாக நாம் அகம்பாவத்தில் வாழ்வதால் நமக்கும் நமக்குள் வாழும் தெய்வத்திற்கும் இடையே இடைவெளியை உருவாக்கிக் கொள்கிறோம். சமூகத்தில் அழகை மேம்படுத்திக் காட்ட நான் எனது செயல்களின் மீதே கவனம் செலுத்துவேன். என்னுடைய அணுகுமுறை, சிந்தனைகள் மற்றும் செயல்கள் மட்டுமே மதிப்புக் கொள்ளும் என்னுடல் இறுதியில் சாம்பலாகப் போவதால் நான் ஏன் உடலினைப் பற்றி அலட்டிக் கொள்ள வேண்டும் ?நான் இறந்த பிறகு என் தோற்றம் எப்படி என்பதை யாரும் நினைவு கொள்ளப் போவதில்லை என் குழந்தைகள் எனது குரலை மறந்து விடுவார்கள். பௌதீக நினைவுகள் மெதுவாக மங்கிவிடும். எனினும் என்னுடைய தாக்கமும் பாரம்பரியமும் நிலைத்திருக்கும். நான் என்னுடைய தோற்றத்தைக் கவனம் செலுத்துவதை விட்டு, உள்நிலை சார்ந்த பண்புகளையும் நம்பிக்கைகளையும் வளர்த்து, இவ்வுலகிற்காக எனது வாழ்க்கை முறையை மாற்றுவதில் எனது நேரத்தை செலவிடுவேன். எனவே எனக்கு முகமல்ல அதன் பின்னுள்ள புன்னகையும் மகிழ்ச்சியும் மட்டுமே இன்றியமையாதது :-) எனவே என்னை யாராவது ஒஹியோ மாநில பல்கலைக்கழகத்தில் கண்டால் வந்து ஹலோ சொல்லுங்கள். நான் இங்கே எனது புகைப்படத்தில் கண்ட அனைத்து நேர் எதிர்மறைக் கருத்துக்கள் அனைத்தையும் ஏற்றுக் கொள்கிறேன். ஏனெனில் இவ்விசயத்தில் நான் என்னையும் மற்றவரையும் தெளிவாகவே புரிந்து கொண்டுள்ளேன். அனைத்து சமய இளையஞர் மையம் (Interfaith Youth Core) கொடுத்த பேண்ட்டும், டீஷர்டும் வசதியாக உள்ளது. இந்த விளக்கம் தேவைக்கு அதிகமாக இருக்கும் என நம்புகிறேன், ஏற்பட்ட குழப்பத்திற்கும், நான் யாரையாவது புண்படுத்தியிருந்தாலும் மன்னிக்கவும் வேண்டுகிறேன்."


அதற்கு அந்தப் புகைப்படத்தை பகிர்ந்தவரின் மன்னிப்பு கேட்டுள்ளார். அந்தப் பெண்ணிடமும், சீக்கியரிடமும் அந்த படத்தை வெளியிட்டு அவப்பெயர் தேடித்தந்ததற்காக அந்த இணையத்தளத்திடமும் மன்னிப்புக் கேட்டுள்ளார்.

பெண்களின் உருவத்தைக் கிண்டல் செய்யும் அனைத்து உள்ளங்களுக்கும் இது அர்ப்பணம். 

இன்னும் பல பேர் தெரிவித்த கருத்துக்கள் இங்கே,

பல்ப்ரீத்தின் ட்விட்டர்
 
 சில வருடங்களுக்கு முன்பு உத்தரப் பிரதேசத்தைச் சார்ந்த சபீனா பேகம் என்ற பெண் தாடியுடன் இருப்பதைப் போன்ற புகைப்படமொன்று தினகரனில் வெளியாகியிருந்தது அதனால் எனக்குக் கவலையெதுவுமில்லை என்றும் அந்தப் பெண் கூறியிருந்தார். என்பதும் நினைவுக்கு வருகிறது.
ஐரோம் ஷர்மிளா குறித்து எழுதியபோது வைத்த தலைப்பே இதற்கும் வைத்து விட்டேன்
 உலகின் மிக அழகான பெண்
Download As PDF
Bookmark and Share

Post Comment