இஸ்லாமோஃபோபியா வேறு இஸ்லாமிய மதவாத எதிர்ப்பு வேறு

இஸ்லாமோபோபியாவை எதிர்ப்பது வேறு. இஸ்லாமிய மதத்தை விமர்சிப்பதை எதிர்ப்பது வேறு. அதைக் காரணம் காட்டி இதை ஆதரிக்க முடியாது.

                                         

பகுத்தறிவுவாதிகள் என்பவர்கள் இஸ்லாமிய மதவாதத்தை விமர்சிக்காததால்தான் இப்பிரச்சனை வருகிறது. விமர்சிக்காவிட்டாலும் தாழ்வில்லை ஆனால் மதவாதத்தை ஆதரிப்பதுதான் எரிச்சலை ஏற்படுத்துகிறது.

ஒரு இந்துத்துவர் என்பதாலே அவர் சொல்வதெல்லாம் தவறானது ஆகாது. சில நியாயமான விசயங்களை வைத்துத்தான் அவர்கள் தனது தவறுகளையும் நியாயப்படுத்த முடிகிறது.

இந்த பாடகர் சோனு நிகம் காவியா ?

காவியாக இருந்தாலும் ஒரு தவறுக்கு இன்னொரு தவறு சரியாகாது.

இவர் ட்விட்டரில் கேட்ட இரு கேள்விகள் என்ன ?

பள்ளிவாசல் ஒலிப்பெருக்கிகளைக் குறிக்கும்விதமாக,

"முகமது காலத்தில் மின்சாரம் இல்லை. எடிசனுக்குப் பின்னர் ஏன் இந்த இரைச்சல் ? "

"நான் முஸ்லிம் இல்லை. நான் ஏன் பாங்கு ஒலித்து காலையில் எழ வேண்டும். இந்தியாவில் எப்போது இந்த மதத்தன்மை திணிக்கப்படுவது ஒழியும் ?"

இக்கேள்விகளில்என்ன தவறு இருக்கிறது. இரண்டுமே நியாயமான கேள்விகளே. இதற்கு நியாயமான பதில்கள் இருக்கலாம்.

ஆனால் இந்த இரு கேள்விகளை ஒரு பெரிய இஸ்லாமோபோபியா ஆதாரமாக திரையடி (screenshot) களை எடுத்துக் கொண்டு திரிவது நீ எப்படி எங்களைப் பற்றிப் பேசலாம் என்ற இஸ்லாமிய மதவெறி.

இதை எப்படி பகுத்தறிவுவாதிகளோ, மத எதிர்ப்பாளர்களோ ஆதரிக்கிறார்கள். ? மிகவும் தவறு.

நாம் இஸ்லாமோஃபோபியாவைத்தான் எதிர்க்க வேண்டுமே தவிர முஸ்லிம் மதத்தை, முஸ்லிம்களை மத நம்பிக்கைகளை ஒருவர் விமர்சிப்பதை எப்படி எதிர்க்க முடியும் ? இதையெல்லாம் எதிர்த்தால் அவர் இஸ்லாமோபோபியாதான் சரி என்று முடிவெடுப்பார்.

முஸ்லிம்கள் மீது வெறுப்பைத் தூண்டுவதைத்தான் கண்டிக்க வேண்டுமே தவிர முஸ்லிம் மதத்தைப் பற்றிப் பேசியதால் ஒருவர் தனது ட்விட்டரை முடக்கினால் அது அவருக்கு சிறுமையாகாது, மாறாக மதத்தைப் பற்றிப் பேசுவதற்கு தண்டனை கொடுக்கும் முஸ்லிம் மதவாதத்துக்குத்தான் இழுக்கு.

இஸ்லாமோஃபோபியா உருவாவது முஸ்லிம்களின் மதத்தைப் பற்றிப்பிறர் பேச முடியாது பேசுவதும் இல்லை என்ற காரணத்தை முக்கியமாகக் காட்டித்தான். முஸ்லிம் மதநாடுகள் தங்கள் நாடுகளில் முஸ்லிம்கள் மதம் மாறுவதை கடும் தண்டனைக்குரிய குற்றமாக்கி சட்டங்கள் வைத்துக் கொண்டு மதத் தேர்வு சுதந்திரமுள்ள மற்ற நாடுகளில் இஸ்லாமைப் பரப்ப பணத்தை வாரியிறைக்கின்றனர்.

முகமது நபியைப் பற்றிப் பேசுவதோ, முஸ்லிம் மதத்தைப் பற்றிப் பேசுவதையோ முஸ்லிம் நாடுகளில் சாத்தியமில்லை. ஆனால் ஜனநாயக நாடுகளில் முஸ்லிம்கள் மதப்பரப்புரை நிகழ்த்தும் சுதந்திரம் உண்டு.

அதுவும் எப்படி ?

நீங்கள் வணங்குவது கடவுள் (சிலைகள் - முஸ்லிம்கள் தவிர மற்ற மதத்தவர் யாவரும் சிலைகளை வணங்குகிறவர்களே) இல்லை, நாங்கள் சொல்வதுதான் கடவுள் என்று மற்ற நாடுகளின் பெரும்பான்மை நம்பிக்கையைப் புண்படுத்தித்தான் மதத்தையே பரப்ப முடியும் என்பதுதான் வாடிக்கை.

அப்படியிருக்க முஸ்லிம் மதவாதம்தான் கடுமையான கேள்விகளுக்குள்ளாக்கப்பட வேண்டியது.

எப்படி இந்துமத நம்பிக்கையுடன் இருந்து கொண்டே பாஜகவை எதிர்க்கும் இந்துக்களைப் போல, முஸ்லிம் மத நம்பிக்கைகளை ஏற்றுக் கொண்டே முஸ்லிம் மதவாதத்தை எதிர்க்கும் முஸ்லிம்கள் உண்டு தானே ? ஒரு பகுத்தறிவுவாதியோ ஜனநாயகத்துக்காகப் போராடுகிறவரோ யாராக இருந்தாலும் இஸ்லாமோபோபியாவை எதிர்ப்பது போல இஸ்லாமிய மதவாதத்தையும் எதிர்க்க வேண்டும்.

Download As PDF
Bookmark and Share
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment