ஹிந்தித் திணிப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஹிந்தித் திணிப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

இந்த வார குமுதத்தின் பாஜக-இந்தி ஜால்ரா


வாரமானால் ஏதோ ஒரு பாஜக தலைவரைப் பற்றி ஒரு ஜால்ரா கட்டுரை எழுதாவிட்டால் குமுத்திற்கு அடங்காது. இல்லையென்றால் பாஜக பட்டையைக் கிளப்பும் ஒரு திட்டத்தைப் பற்றி உச்சி முகர்ந்து பாராட்டி எழுதாவிட்டால் குமுதத்தின் ஊடக நேர்மை தாங்காது. சமூக வலைத்தளங்களில் வரும் மீம்ஸில் இருந்து தேர்வு செய்து போடப்படும் படங்களில் கூட பாஜக வராது. மற்ற கட்சித் தலைவர்கள்தான் வருவார்கள்.

ஜால்ரா 1

அன்னையர் தின சிறப்பிதழான இந்த வார குமுதத்தில் அன்னையர் தினத்தைப் பற்றி அதாவது மறைந்த தனாது தாயாரைப் பற்றி பேட்டி கொடுத்திருப்பவர் உத்தமர் பொன்னார். காவிரி மேலாண்மை வாரியம் அமைவதைத் தடுத்தும், கர்நாடகாவை விட வறட்சி அதிகமான தமிழகத்தை விட்டு கர்நாடகத்தை வறட்சி பாதித்த மாநிலமாக அறிவித்த மோடியை புகழ்ந்த பொன்.ராதாகிருஷ்ணன். தமிழகத்தின் சாலைகளெங்கும் இத்துப் போன இந்தியைத் திணித்து வரும் நெடுஞ்சாலைத்துறையின் சாலைப் போக்குவரத்து மற்றும் கப்பல்துறை அமைச்சர் உத்தமசிகாமணி பொன். ராதகிருஷ்ணன். அன்னையர் தினத்தின் புகழ்பாட வேறு யாரும் கிடைக்கவில்லை போலிருக்கிறது.



ஜால்ரா 2

அடுத்து ஒரு பக்கம் முழுவதும் மோடியின் படம். அதன் கீழே இந்தியத் தமிழன் என்று கொட்டை எழுத்துக்களில். கட்டுரையின் தலைப்பு மோடியின் ஏக் இந்தியா. என்ன கருமமோ ? என்ன எழவோ ?? இப்போது இந்தியா 500 துண்டுகளாகவா இருக்கிறது ? இனிமேல் ஏக் இந்தியா என்று உருவாக்க வேண்டுமோ ? தமிழ் தொன்மையான மொழி. இந்தியாவின் மொழி வளமைக்குச் சான்றாக பெருமையுடன் அதைக் குறிப்பிடலாம். என்று மோடி ராஷ்ட்ரபதிபவனில் அனைத்து மாநிலங்களின் முதலமைச்சர் உயரதிகாரிகளின் மத்தியில் பேசினாராம். ஒவ்வொரு இந்தியனையும் பெருமைப்பட வைக்கப் போகும் மோடியின் கனவுத் திட்டத்தின் வெளிப்பாடே இந்தப் பேச்சாம்.
                                     
                                        
மோடியின் படத்தை ஏக் இந்தியா கட்டுரைக்குப் போட்டு அவரை நாயகனாக்கியுள்ளது
                           
தமிழ்நாட்டில் பாஜக இந்தியைத் திணிப்பதாக அரசியல் செய்கிறார்களாம். இவர்கள் இந்தியைத் திணிக்கவே இல்லையாம். தார் சட்டியுடன் இந்தியை அழிப்பவர்கள் தமிழுக்கு ஒன்றுமே செய்யவில்லையாம். இவர்கள்தான் கிழிக்கப் போகிறார்களாம். சொல்பவர்கள் பாஜகவின் கலை கலாசார அணியினர்.

ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒவ்வொரு மொழி கலாச்சாரம் இருக்கிறதாம் அதைத் தாண்டி இந்தியா என்று ஒற்றுமையாக நிற்கவேண்டுமாம். இதெல்லாம் இப்போது மட்டும் இந்தியா ஒற்றுமையாக இல்லையா என்று யாராவது  இவர்களிடம் சொல்லவேண்டும். அதாவது மாநிலங்களுக்கு இடையே குறுகிய கால புரிந்துணர்வு ஒப்பந்தம் போடுவது, மாநிலங்களுக்கு இடையே கல்வி, கலாச்சாரச் சுற்றுலா, விளையாட்டுப் போட்டிகள், திரைப்பட விழாக்கள் நடத்துவது இதெல்லாம் மத்திய மாநில அரசுகளின் உதவியுடன் இதை நடத்தலாமாம். பிரதமர் தான் பதவியேற்ற வருடமான 2014 லேயே இதைத் தொடங்கி விட்டாராம் இப்போது ஹரியானா, மேற்குவங்கம், தெலுங்கானா, சட்டீஸ்கர், குஜராத் போன்ற மாநிலங்களில் செயல்படுத்தத் தொடங்கியாயிற்றாம். 


இதற்கு மேல் ஜால்ராவின் சத்தம் வேண்டுமென்பதால் தமிழருவி மணியனின் ஜால்ராவின் சத்தத்தையும் சேர்த்து ஒலிக்க விட்டிருக்கிறது குமுதம். ஏக் இந்தியா திட்டத்தில் தமிழகமும் இணையவேண்டும். தமிழக்த்தில் இருக்கும் அனைவரும் இந்தியத் தமிழர்கள்தான். பழைய மும்மொழித் திட்டத்தை மத்திய அரசு கொண்டுவரவேண்டுமாம். அதென்ன மும்மொழித்திட்டம் ? வட இந்தியா இந்தி ஆங்கிலம் அல்லாது வேறொரு தென்னிந்திய மொழியைக் கற்க வேண்டும். அப்போது இங்கே இந்தியை விருப்பப் பாடமாக ஏற்கலாமாம். கேட்கவே புல்லரிக்கிறது. என்ன அழகான எதிர்கால சிந்தனை. என்ன ஒரு நாய்த்தனம் தமிழருவி மணியனுக்கு ? அய்யா இந்திக்காரர்கள் ஆங்கிலம் படிக்காததால்தானே மற்ற மாநிலங்களிலும் இந்தியைத் திணித்து வருகிறார்கள். இந்திக்காரர்கள் இந்தி ஆங்கிலம் தவிர ஒரு தென்னிந்திய மொழியைப் படிப்பார்களாம் நாமும் இந்தியைப் படிக்க வேண்டுமாம். இது நடந்தால் மழை கீழிருந்து மேலே பொழியும். அடி செருப்பால !

இம்மாதிரி வெவ்வேறு மொழிகளைப் படித்து விடுவதால் மாநிலங்களுக்கிடையேயான பிணக்குகள், தண்ணீர் பிரச்சனை தீர்ந்து, சக இனங்களின் சகிப்புத் தன்மை பெருகி மாநிலங்களின் பொருளாதாரம உயரும் அதன் மூலம் தேசமும் உயருமாம். இதெல்லாம் தமிழருவி மணியன் உதிர்த்தவை. இவர் மோடியை பிரதமர் வேட்பாளராக ஆதரித்தவர். ஆட்சிக்கு வந்த பின்னர் மோடி அரசுக்கு ஆதரவில்லை என்று தாவியவர். இந்த உத்தமர் இப்போது கறிக்குதவாத மும்மொழிக்கொள்கைக்கு வால்பிடிக்கிறார்.

ஏன் மோடி அரசு இந்தித் திணிப்பை கைவிட்டு இதுமாதிரியான நாட்டின் வளர்ச்சிக்குத் தேவையான திட்டங்களைப் போட்டால் யார் எதிர்க்கப் போகிறார்கள். இந்தியையும் திணித்து விட்டு இது மாதிரி மொக்கைத் திட்டங்களைப் போட்டதைக் கணக்குக் காட்டி இவர்கள் தேசத்திற்காகத்தான் அனைத்தையும் செய்கிறார்கள் என்று தூக்கிப்பிடிக்கிறது குமுதம்.
 

இதே குமுதத்தில் தமிழக மாணவர்களுக்கு பெருங்கேடு விளைவிக்கும் நீட் தேர்வை ஓரளவுக்கு மிதமாக விமர்சித்து கட்டுரை தீட்டியிருக்கிறது குமுதம். ஆனால் அதில் நீட் தேர்வைக் கொண்டு வந்து இந்திய ஒற்றுமையை நிலைநாட்டிய மாவீரன் என்று மோடியின் படம் அச்சிடப்படவில்லை. மாறாக அழகிய கல்லூரி மாணவிகளின் படத்தை அந்தக் கட்டுரைக்கு அச்சிட்டுள்ளது. ஏன் நீட் தேர்வுக்கு வழிவகுத்து தமிழக மாணவர்களை புதைகுழிக்கு அனுப்பியது பாஜக மோடிதான் என்பது பார்த்தவுடனே விளங்கி விடும். கட்டுரை படிப்பவர்களுக்கு அப்படித் தெரியக்கூடாது, அவர்கள் கோபம் பாஜகவின் மீது போகக்கூடாது என்பதற்காகத்தான் தேர்வு குறித்த கட்டுரை என்ற போர்வையில் மாணவிகளின் புகைப்படம். 


ஆனால் மோடியின் அழகிய படத்தை ஏக் இந்தியா கட்டுரைக்குப் போட்டு அவரை நாயகனாக்கியுள்ளது. பிள்ளையைக் கிள்ளி விட்ட மாதிரியும் ஆச்சு, தொட்டிலை ஆட்டி விட்டமாதிரியும் ஆச்சு. இந்தியை எதிர்ப்பவர்களை விமர்சித்த மாதிரியும் ஆச்சு மத்திய அரசு இந்தியைத் திணிக்கவில்லை என்று சொன்ன மாதிரியும் ஆச்சு, மத்திய அரசு ஒன்றுபட்ட இந்தியாவுக்கு உழைக்கிறது என்று சொன்னமாதிரியும் ஆச்சு.

Download As PDF
Bookmark and Share

Post Comment

இந்திய விடுதலை நாளில் - இந்தியிடமிருந்து விடுதலை வேண்டி - ‪#‎StopHindiImposition‬

நேற்று இந்தியாவின் விடுதலை நாள் இந்தியா முழுவதும், இந்தியர் வாழும் பல்வேறு நாடுகளிலும் கொண்டாடப்பட்டது. அதே நேரம் ட்விட்டரில்  ஹிந்தித் திணிப்புக்கு எதிரான கருத்துக்களைத் தாங்கிய சுட்டுரைகள்/கீச்சுகள்/ட்விட்டுகள் ‪#‎StopHindiImposition‬ என்ற ஹாஷ்டாக் மூலமாக தொடர்ந்து பகிரப்பட்டு, அது ட்விட்டர் ட்ரென்டில் முதல் பத்து இடங்களுக்குள் இருக்கும் "பரபரப்பான" தலைப்பாக வைக்கப்பட்டது. பலமொழிகளிலும் வெளியிடப்பட்ட ட்விட்கள், வெளியிடுவதற்கென்றே சேமித்து வைக்கப்பட்டு பின்பு பகிரப்பட்டன. சிலர்  சொந்தக் கருத்துக்களையும் பகிர்ந்தனர்.


இதன் மூலம் மக்கள் தொடர்பு ஊடகங்களில் செய்தியாகவும் எதிர்பார்த்தபடி வந்தது. இதன் மூலம் ஹிந்தி தேசிய மொழி, இந்தியா முழுவதும் ஹிந்தி கட்டாயமாக்கப் பட வேண்டும், அனைவரும் ஹிந்தி படிக்க வேண்டும், இதன் மூலம்தான் இந்தியா ஒற்றுமையாக இருக்கும், கலாச்சாரம் காக்கப்படும் என்றெல்லாம் உளறி வரும் அனைத்து மொழி/அனைத்து வர்க்க/அனைத்து இன/அறிவிலிகள் முதல் அனைத்து மொழி/அனைத்து வர்க்க/அனைத்து இன/அறிவாளிகள் வரை எல்லாரிடமும் சிறு சலனத்தை ஏற்படுத்த முடிந்தது.


இன்னொரு முக்கியமான சேதி, இந்த இத்துப்போன தமிழன்தான் இந்தி எதிர்ப்பு பேசி நாசமானான், மற்றவர்கள் (தமிழல்லாத மற்ற தென்னிந்திய மாநிலங்கள்) எல்லாம் ஹிந்தி படித்து வளமாக வாழ்கிறார்கள் என்றெண்ணிக் கொண்டிருப்பவர்களுக்கு - இந்தி ட்விட்டரில் அதிகமாக பங்கெடுத்தவர்கள் கன்னட ட்விட்டர்கள். இவர்கள்தான்  ஹிந்தித் திணிப்பால் அதிகமான பாதிப்படைந்த மாநிலக்காரர்கள். பெரும்பாலும் படித்த இளைஞர்கள்தான் இந்த ஹிந்தித் திணிப்பு எதிர்ப்பில் ட்விட்டியவர்கள்.

Promote Linguistic Equality: Hindi is Not the National language of India - மொழிச் சமத்துவத்தை பரப்பு - ஹிந்தி இந்தியாவின் தேசிய மொழி அன்று என்பதே இந்த ஃபேஸ்புக் குழுவின் பெயர். இதில் இந்தியா முழுவதுமிருந்தும் சில ஆயிரக்கணக்கான ஃபேஸ்புக் பயனர்கள் இணைந்துள்ளனர். இதில்தான் ஹிந்தித் திணிப்பு குறித்தும், "இந்தி"ய அரசின் நடவடிக்கைகள், ஊடகங்களின் நடவடிக்கைகள் குறித்தும் விமரசனங்களும், விவாதங்களும் நடக்கின்றனர். பிராந்திய மொழிகளின் வளர்ச்சி குறித்தும் கருத்துக்கள் பரிமாறப்படுகின்றன.  இது ஹிந்தி மொழியின் மீது வெறுப்பை வளர்ப்பதற்காகவோ, ஹிந்தி பேசும் மக்களின் மீதான இனவெறியை வளர்ப்பதற்காகவோ இல்லை. தாய்மொழியைக் காக்கும் தற்சார்பு, தற்காப்பு உணர்வின் காரணமாகவே ஹிந்தி மொழி பல்வேறு துறைகளில் பல்வேறு வகைகளில் திணிப்பதை எதிர்க்க வேண்டும் என்ற எண்ணத்திலும் அனைத்து மொழிகளையும் அலுவலக மொழியாக அறிவிக்கப்பட வேண்டும். ஹிந்தி பேசுவோர்க்கு மட்டும் இருக்கும் சிறப்புரிமை ஆகியவை டிவிட்டரில் வந்த கருத்துக்களில் முதன்மையாக இருந்தன.

பஞ்சாபியர்கள் எப்படி ஹிந்தி பேசியதால் மொழியினை இழப்பார்கள் என்று விளக்கும் படம். நாமே சீக்கியர்களை ஹிந்தி பேசுவோர் என்றுதானே நினைக்கிறோம்.



ஊடகங்களில் இது குறித்து வந்த செய்திகள்

தி ஹிந்து வில் வந்த செய்தி

ஐபிஎன்லைவ் - இல் வந்த செய்தி

பலமொழிகளிலும் வெளியிடப்பட்ட ட்விட்கள் அனைத்தும் இங்கே உள்ளன. இதில் ஆங்கிலம் தவிர மற்ற மொழிகளில் (கன்னடம், தெலுங்கு, மராத்தி) வெளியிட்டவை அடங்கும். 

(படங்கள் அனைத்தும் ஃபேஸ்புக்-லிருந்து எடுக்கப்பட்டவை)
Download As PDF
Bookmark and Share

Post Comment

"ஜி" போடாதீங்க "ஜி"

நான் சில நாட்களுக்கு முன்னர் எழுதிய இடுகை - ஜி போடுது கொங்கு நாடு - அதில் தமிழ்நாட்டில் வேகமாகப் பரவி வரும் நச்சுக் கலாச்சாரமான "ஜி" போட்டுப் பேசுவது பற்றி எழுதியிருந்தேன். ஜி போடுது கொங்கு நாடு என்பதற்குப் பதிலாக ஜி போடுது தமிழ் நாடு என்று தலைப்பு வைத்திருக்க வேண்டும். ஏனெனில் அது கோவைப் பகுதிகளில் மட்டும்தான் இருப்பதாக எண்ணியிருந்தேன். நாம் இருக்கும் பகுதிதானே நம் உலகம். ஆனால் தமிழகம் முழுவதுமே இப்படித்தான் பேசத் துவங்கியிருக்கிறார்கள். இனி நானும் வெட்கப்படாமல் ஜி போட்டுப் பேசும் ஒவ்வொருவருடனும்  ஜி போட்டுப் பேசாதீங்க (டா போட்டுப் பேசாதே என்பதைப் போல்) என்று கூறியாக வேண்டும் போல் இருக்கிறது. 

நான் ஈரோட்டில்தான் கல்லூரிப் படிப்பை முடித்தேன். அங்கே இருக்கும் வரை நண்பர்களை அழைப்பதும், நண்பர்கள் என்னை அழைப்பதும் "மாப்ள", "மாப்பி" என்றுதான் இருந்தது. நாங்கள் முடித்த பின்னர் வேலை தேடியலையும் படலம் வந்துவிட முக்கால்வாசிப் பேர் சென்னைக்குப் பொட்டியைக் கட்டினோம். அங்கே போய் இருந்த சில வருடங்களில் இந்த "மாப்பிள்ளை" என விளிப்பது போய் "மச்சான்" என்று அழைத்துக் கொள்ள ஆரம்பித்திருந்தோம். அதற்குப் பிறகு என்னாலும் இந்த மாப்பி என்றழைக்கும் பண்பாட்டை மீட்டெடுக்க முடியவில்லை.

வெள்ளுடை மேன்மக்கள் தொடங்கி அம்மா, ஆத்தா, ஆயா என்பவற்றை மாற்றி மூன்றெழுத்துக்  கெட்ட வார்த்தைகளாக அன்றாடம் பயன்படுத்தும் கீழ்மக்கள் வரை வரையறை இல்லாமல் ஜி போட்டுத் தாளிக்கிறார்கள். கேட்டாலே பற்றிக் கொண்டு வருகிறது. திரைப்படம், நாளிதழ்கள், வார இதழ்கள், நெடுந்தொடர்கள், நேர்காணல்கள் என எல்லா மக்கள் திரள் ஊடகங்களிலும் இந்தப் பண்பாடு படுவிரைவாகப் பரவி வருகிறது. குறிப்பாக தமிழை தமிழாக எழுத முனையும் இணையத் தமிழர்கள், தமிழை சரியாகப் பேசாதவர்கள், தமிங்கில தத்திகள், தமிழை சரியாக பேச முயலாதவர்கள், இடையிடையே தமிழில் பேசுகிறவர்கள் இப்படி எல்லாத் தரப்பினரும் ஜி போடுகின்றனர். 


ஃபேஸ்புக் - ஐ முகநூல் என்று அழைப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. ஆனால் அது தவறாயிற்றே. என்ன செய்ய ? இது வரை எத்தனையோ ஆங்கிலச் சொற்களுக்கு இனிய தமிழாக மொழிபெயர்த்துள்ளார்கள். ஆனால் அதையெல்லாம் பயன்படுத்தத் தொடங்கவில்லை தமிழ்நாட்டினர். வானத்துக்கும் பூமிக்கும் இடையே உள்ள யாவற்றையும் கிண்டலடித்து மகிழும் தமிழர்கள், கொஞ்ச வருடங்களுக்கு முன்பு வரை குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவரான நடிகை நமீதா தமிழில் பேசுவதை கண்டமேனிக்குக் கிண்டலடித்தவர்கள், நடிகர் ரஜினிகாந்த் கலைஞர்ஜி என்று அழைத்ததையும் கிண்டலடித்தவர்கள். அதாவது தமிழ் தெரியாதவர்கள் தமிழில் பேச முயற்சி செய்தால் அதையும் கிண்டல் செய்வார்கள். ஆனால் இவர்கள் மட்டும் ஒழுங்காகப் பேச மாட்டார்கள். வெட்டி பந்தாவுக்காக சார் போட்டும், ஜி போட்டும் பேசுவார்கள். ஆனால் தமிழ்த் திரையில் பாருங்கள் அரைவாசி நடிகர்களின் தாய்மொழி தெலுங்காகவோ, மலையாளமாகவோ இருக்கும். அவர்கள் எவ்வளவு சரளமாகத் தமிழ் பேசுகிறார்கள். ஆனால் தமிழ் நடிகர்களில் மற்ற மொழி பேசத் தெரிந்தவர்கள் எத்தனை பேர் ? மற்ற மொழிப் படங்களில் நடிப்பவர்கள் எத்தனை பேர் ? நமக்கு அடுத்தவர்களை ஓட்டுவதுதான் பிடிக்கும். நமது மொழியையே ஒழுங்காகப் பேசத் தெரியாமல் அடுத்த மொழியை எங்கே கற்பதாம் ?

அணு உலை எதிர்ப்பாளரும், தமிழ்தேசியவாதியுமான சுப. உதயகுமார் அவர்களும் ஃபேஸ்புக் - இல் "ஜி" குறித்துப் பதிந்த நிலைக் கூற்று

 
அடுத்ததாக நமது முதன்மை எதிரிகளான இந்துத்துவவாதிகள் சமீபத்தில் திறந்து வைத்த கொள்கை முழக்கங்கள் பொறிக்கப்பட்ட சுவர்(பெரியாருக்குப் பதிலடியாம்). இதில் இந்து மக்கள் கட்சியின் தலைவர் தமிழ் திரு. அர்ஜூன் சம்பத் என்று எழுதியிருப்பதை மனதாராப் பாராட்டுகிறேன். ஏனென்றால் இவர்கள்தான் சுவரொட்டிகளில் கூட பெயருக்குப் பின்னால் "ஜி"யைச் சேர்த்து எழுதுகிறவர்கள். அந்த "ஜி" யை இங்கே பொறிக்காமல் தமிழ் திரு என்று போட்டிருப்பது பாராட்டத்தக்கது. ஆனால் அதற்கு மேலே ஒரு சின்னம் வைத்திருக்கிறார்கள் பாருங்கள் ஒரு இந்தி "ஓம்". தமிழில் கூட ஓம் என்பதை எழுதலாம் என்று இவர்களுக்கு யாரும் சொல்லித் தரவில்லையா ? அல்லது ஹிந்திதான் "மேல்"  என்று "குறி"ப்பால் உணர்த்த விரும்புகிறார்களா ? 


இவரது பங்காளியான இந்து முன்னணித் தலைவர் ராம கோபாலன் "கோபால்ஜி ஹிந்து முன்னணி" என்றுதான் ஃபேஸ்புக்கில் வைத்திருக்கிறார்.  இது என்ன கேலிக் கூத்து ? கருணாநிதியின் ஃபேஸ்புக் பெயர் "கலைஞர் கருணாநிதி அவர்கள்" என்று எழுதியிருந்தால் எப்படி சிரித்திருப்பார்கள் ? அவரே அவரை அவர்கள் என்று அழைத்துக் கொள்வாரா என்று கேட்பது போல் ராம கோபாலன்"ஜி" - யே ராமகோபாலன்"ஜி" - யை ராமகோபாலன்"ஜி" என்று அழைத்துக் கொள்வாரா என்று கேட்கலாம். ஜி ! என்ன ஜி நீங்க இப்படிப் பண்றீங்களே ஜி !

வெளி மாநிலத்தார் யாரேனும் தமிழ்செல்வன் என்றோ தேன்மொழி என்றோ பெயர் வைக்கிறார்களா ? இல்லை டெல்லியில் யாரேனும் அர்விந்த் கேஜ்ரிவால் அவர்கள், அண்ணன் அமித் ஷா என்றோ அழைக்கிறார்களா ? தமிழர்களுக்கு மட்டும் என்னத்துக்கு இந்தப் பிழைப்பு ? "அக்கா தமிழிசை அவர்கள்" என்றுதான் வட மாநிலத்தலைவர்களும் கூப்பிட வேண்டும் என்று உங்க தேசியச் செயற்குழுவில் தீர்மானம் போடுங்கள் பார்ப்போம். இல்லை அக்காவையும் உங்கள் வடமாநிலப் பங்காளிகளைப் போல அக்கா"ஜி" என்றோ, தமிழிசை"ஜி" என்றோ அழைக்கப் போகிறீர்களா ? 

அடுத்ததாக நமது மதிப்பு மிக்க "நிமிர்ந்த நன்னடையும் நேர்கொண்ட பார்வையும்" கொண்ட தினமணி ஆசிரியர் ராகுல்"ஜி" என்று தலைப்பிட்டு தலையங்கமே எழுதி விட்டார். தனது நாளிதழில் எப்படி தமிழ் எழுத்தின் மூலமாகவே ஹிந்தித் திணிப்பை பணிவாகப் பரப்பி வருகிறார் என்பதைப் பாருங்கள். 

தினமணி கடைசிப்பக்கம்  - 09- 05 - 2015
 இப்படியே விட்டால் தமிழை ஹிந்திக்கும் ஆங்கிலத்துக்கும், தமிங்கிலத்துக்கும் இடையே தேடிப்பார்த்தாலும் கிடைக்காது போகும். தயவு செய்து ஜி போட்டுப் பேசாதீர்கள், பேசாதீர்கள். இதையெல்லாம் நம் போன்ற இணையப் போராளிகள்தான் முன்னின்று செய்ய வேண்டும்.

Download As PDF
Bookmark and Share

Post Comment

ஹிந்தித் திணிப்பு எதிர்ப்பில் கோவை அதிர்ந்த போது


தி நியூ இன்டியன் எக்ஸ்பிரஸ் - இல் வெளியான ஒரு சிறு கட்டுரை. கோயமுத்தூரைச் சேர்ந்த ஒரு ஹிந்தி எதிர்ப்பு மொழிபோராளியைக் குறித்து சிறு கட்டுரை வெளியிட்டிருந்தது.  அறியப்படாத கொங்கு நாட்டு மொழிப்போர் வீரர்கள் - ஈகியர்கள் குறித்து ஒரு சிறு பதிவாக இருக்கும் என்று மொழிபெயர்த்தேன். பிழை நேர்ந்திருப்பின் வருந்துகிறேன்.

இளங்கீரன் - படம் நன்றி - தி நியூ இன்டியன் எக்ஸ்பிரஸ்


தமிழகத்தில் ஹிந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம் முடிந்து 50 வருடங்கள் கடந்த பின்னரும், போராட்டக் காரர்களால் ஒரு காவலர் தீ வைத்து எரிக்கப்பட்டதை உலகம் நினைவில் வைத்திருக்கிறது. ஆனால் கோவையைச் சார்ந்த ஒரு காவலர், தான் ஒடுக்கும் சக்தியாக இருப்பதாக வருந்தி தனது சீருடையையே (காவலர் பதவியைத்) துறந்தார் என்பதை பலர் அறியவில்லை.

மனசாட்சி உறுத்திய அக்காவலர் காளிமுத்து, போராட்டக்காரர்களை நோக்கித் துப்பாக்கியால் சுடும்போது தன் கண்களை மூடிக் கொண்டவர். "அவர் ஹிந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்தின் மாணவர் இயக்கத்தின் இரகசிய ஆதரவாளர். அந்நிகழ்வின் பின்னர் தனது பணியை உதறிவிட்டு ஒரு தனியார் பேருந்தில் நடத்துனராக வாழ்க்கையை நடத்தினார் என்று நினைவு கூர்கிறார் இளங்கீரன் எனும் கோவையைச் சேர்ந்த பிரபலமான ஹிந்தித் திணிப்பு எதிர்ப்பு மாணவர் இயக்கத் தலைவர். இவர் பேரூரிலுள்ள தவத்திரு சாந்தலிங்க அடிகளார் கல்லூரியில் தமிழாசிரியர் பட்டம் படித்துக் கொண்டிருந்தவர். அந்நாளில் நகரமே தீவிரமாக பாதிக்கப்பட்டிருந்தது, அரசு இறந்தவர்களின் எண்ணிக்கையை குறைத்துக் காட்டியிருந்தது என்கிறார். பூலைமேடு (இன்று பீளமேடு என்றழைக்கப்படுகிறது) தண்டபாணி என்ற பிஎஸ்ஜி தொழில்நுட்பக்கல்லூரியைச் சேர்ந்த மாணவர் நஞ்சுண்டு இறந்தார். மொழிப்போராட்டத்தில் எண்ணிறந்த மாணவர்கள் இறந்ததால் மனமுடைந்த அவர் இம்முடிவைத் தேடிக் கொண்டார்.

ஏ துரைக்கண்ணு என்று அரசுக் கல்லூரி மாணவர் தலைவர், கோவை நகர ஹிந்தி எதிர்ப்பியக்கத்தின் செயலாளராகவும், இளங்கீரன் தலைவராகவும் இருந்தனர். தலைமறைவாக இயங்கிய மாணவர்களைக் காவல்துறையினர் தேடிக் கொண்டிருந்த போது, நாங்கள் உப்பிலிபாளையத்திலுள்ள காவலர் குடியிருப்பிலேயே பதுங்கியிருந்தோம். காவலர் காளிமுத்து தனது இல்லத்தில் அவர்களுக்குத் தஞ்சம் அளித்தார்.

தலைமை அஞ்சல் அலுவலகம் அமைந்திருக்கும் சாலையில் மறியல் போராட்டம் செய்த போது மைசூரிலிருந்து வந்திருந்த ஆயுதப் படைக் காவலர் எனது முடியைப் பிடித்து அடித்து, நான்தான் ரிங் லீடரா என்று கேட்டார். ரிங் லீடர் என்பது அந்நாட்களில் குழுத் தலைவர் என்று பொருள்படும். கோவையில் இராணுவமே வந்திறங்கிய போதும் மாணவர்கள் அஞ்சவில்லை என்று குறிப்பிடுகிறார் இளங்கீரன். அந்நாளில் வெளிவந்த தமிழ் நாளிதழ் ஒன்று இப்படித் தலைப்புச் செய்தி வெளியிட்டதாம். "சுட்டுத் தள்ளினார்கள்... சப்பாத்தியை ! "(யாரையும் சுடவில்லை என்பதை அப்படிக் கிண்டலடித்ததாம்).

இளங்கீரன் ஒரு கவிதைத் தொகுப்பைக் காட்டினார். அது பல்வேறு கல்லூரிகளைச் சார்ந்த மாணவர்களால் எழுதப்பட்ட ஹிந்தித் திணிப்பு-எதிர்ப்பு கவிதைகளின் தொகுப்பாகும். அதன் விலை 25 பைசா. அதன் தலைப்பு "ஜனவரி 26 இல் மானம் கெடும் தமிழர்க்கு"

அந்நூலின் தொகுப்பாசிரியர், துரைக்கண்ணு கீழ்க்கண்டவாறு அணிந்துரை எழுதினார். "எப்போது தோன்றியது என்று கண்டறிய முடியாத பழம்பெருமை வாய்ந்த தமிழ் என்ற மொழி, இந்நாளில் (26.1.1965) இறந்து விடும்". இந்தச் சிறு கவிதைத் தொகுப்பு என்பது கோவை கல்லூரி மாணவர்களின் கூட்டு முயற்சியாகும். நாங்கள் ஹிந்தி மொழிக்கு எதிரானவர்கள் இல்லை ஆனால் ஹிந்தியை ஆட்சி மொழியாக்குவதற்கு எதிர்க்கிறோம். என்பதே அதன் சாரமாக இருந்தது.

ஹிந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்தில் தீவிரமாக இயங்கிய ஏ ராமசாமி என்பவர், இந்திய மொழிகளின் சுதந்திரப் போராட்டம் என்ற தனது நூலில் சொல்கிறார். துரைக்கண்ணுவால் தலைமை தாங்கப்பட்ட ஒரு போராட்டத்தில் காவல்துறை தடியடி நடத்தியது. அதில் நான்கு மாணவர்கள் படுகாயமுற்றனர். அதனால் ஆத்திரமுற்ற மாணவர்கள், அதே நாள் மாலை 6 மணியளவில்
Aya Toofan என்ற ஹிந்திப்படம் திரையிடப்பட்ட நாஸ் திரையரங்கத்தை தீவைத்துக் கொளுத்தினர். அங்கே விரைந்த காவல்துறையினர் துப்பாக்கியால் சுட்டதில் 4 மாணவர்கள் உயிரிழந்தனர்.
Download As PDF
Bookmark and Share

Post Comment

என்னது பாஜக தமிழை ஏற்றுக் கொண்டதா ?

அய்யடா !! இந்திய மக்கள் கட்சி (பிஜேபி) தமிழைப் பெருமைப்படுத்தறாங்களாம். ஏன் இப்போதுதான் தமிழின் பெருமையை புரிந்து கொண்டீங்களாக்கும். சரி இருக்கட்டும். இந்த அறிவிப்பில் ஏதாவது நேர்மை இருக்கிறதா ?

இதுவரை ஹிந்தியை, செங்கிருதத்தை திணித்த போதும், பொய்களை அவிழ்த்து விட்ட போதும் ஒன்றுமே நடக்காதது போன்று கள்ள மௌனம் காத்தவர்களும், தமிழ் வெறியர்களும் சேர்த்து இதை "பாத்தியா பாத்தியா இப்ப என்ன சொல்வ? என்று  கொட்டி முழக்கலாம்.

ஹிந்தி மொழியையே திணிப்பதற்கும், திருக்குறளைக் கற்றுக் கொடுப்பதற்கும் வேறுபாடு இல்லையா ? 

ஹிந்தி மொழியை நாம் கற்க வேண்டும். பதிலுக்கு அவர்கள் திருக்குறள் பாடமும் திருவள்ளுவர் நாள் விழாவும். நீ அரிசி கொண்டு வா நான் உமி கொண்டு வரேன் ஊதி ஊதி ரெண்டு பேருந்திங்கலாம்.

இப்படிச் சொன்னால் புரியும், நீங்கள் தமிழ் மொழியைக் கற்றுக் கொள்ளுங்கள். நாங்கள் ஹிந்தியில் ஒரு பெரிய அறிஞரின் இலக்கியத்தின் ஒரு பகுதியை பாடமாக வைத்துக் கொள்கிறோம். எப்படி வசதி ?

சரி தமிழல்லாத மற்ற மாநிலங்களில் இது போல் அவர்கள் மொழிக்கும் மொழிசார்ந்த இலக்கியங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்குமா நடுவணரசு ?

ஹிந்தித் திணிப்புக்கு இந்த திருவள்ளுவர் விழாவும் டேலியாகாது என்ற போதும், இது தவறே.

அட ராமா !! இனி இங்க நம்ம இந்தியைத் திட்ற மாதிரி அங்க தமிழையும் வள்ளுவனையும் திட்டுவார்கள். தேவை எல்லா மொழிகளுக்கும் சமத்துவமே.

தமிழைப் புகழ்வதாலோ அடுத்தவன கொண்டாடச் சொல்வதையோ, படிக்கச் சொல்வதையோ ஏற்க  முடியாது. ஒரு மொழி பேசுவோர் மற்றதை கற்பது இயல்பாக நடக்க வேண்டும். நடக்கும். எப்போது ? எல்லா மொழிகளும் சமமாக நடத்தப்படும்போது.

இங்க இந்தித் திணிப்பும் வேண்டாம் அங்க தமிழ் வள்ளுவத் திணிப்பும் வேண்டாம். சம்பந்த சம்பந்தமில்லாமல் எதற்கெடுத்தாலும் அப்படிக் கொண்டாட வேண்டும் இதைக்கொண்டாட வேண்டும் என்று அறிவிப்பு.

முதலில் உங்கள் ஹிந்தி, சம்ஸ்கிருத  வெறியைக் கைவிடத் தயாரா  ?

ஹிந்தி விசயத்தில் காங்கிரசுக்கு எதிராக நிலைப்பாடு எடுங்களேன் பார்ப்போம்.

ஹிந்திதான் நாட்டின் முக்காவாசிப் பேர் பேசுகிறார் என்றெல்லாம், செங்கிருதம்தான் எல்லாவற்றுக்கும் மேல் என்று நம்பிக்கையுடையவர்களிடம் எல்லா மொழியும் சமமென்று சொல்லுங்களேன். திருந்த வேண்டியது நீங்கதான்.

கால் நூற்றாண்டாக விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடத்தி பெரிய அளவில் கூட்டம் சேர்க்க இயலவில்லை. தமிழ் இந்துக்கள் வந்தமா சாமி கும்பிட்டமா என்று போனார்கள். இவர்களுடன் இணைந்து ராமன் கோயில் வேண்டுமென்று கலவரத்தில் ஈடுபடவில்லை. இவர்களுக்கு இவர்களே குண்டு வைத்தும் பார்த்தார்கள். வெறுப்பை விதைக்க முயன்று பார்த்தார்கள். கடைசியாக மோடி அலையில் அள்ளிவிடலாம் என்று நினைத்தார்கள். அதிலும் எதிர்பார்த்தளவு இல்லை. தூய இந்தியா என்ற இவர்களது நகைச்சுவை சுய விளம்பரக் கைப்படம்(செல்ஃபி) எடுத்து ரஜினி கமல் என்று அனைவரையும் டாக் செய்து பார்த்தார்கள். இப்போது ஆண்ட பரம்பரைக் கனவில் திளைக்கும் மேல்ஜாதி வெறிக் கூட்டத்தை வளைக்க ராஜ ராஜ சோழனைக் கொண்டாடி உள்ளே புகப் பார்க்கிறார்கள். அதன் அடுத்த முயற்சியாகத்தான் திருவள்ளுவரைப் புகழ்ந்து தமிழனின் நெஞ்சை நக்கி நஞ்சை விதைக்கப் பார்க்கிறார்கள்.
Download As PDF
Bookmark and Share

Post Comment

ஹிந்தித் திணிப்பு - பாஜகவின் நாடித்துடிப்பு - பின்பு நடிப்பு

மீண்டும் முதலில் இருந்து தொடங்க வேண்டுமல்லவா ? தமிழ்நாட்டில் நாம் சொல்வது தமிழர்கள் உட்பட ஹிந்தி பேசாத மக்களின் மீதான ஹிந்தித் திணிப்பு எதிர்ப்பேயன்றி, தமிழர்கள் இந்தி மொழி கற்பதை எதிர்ப்பதன்று.


நாட்டின் இருக்கு பிரச்சனைகளுக்கு எல்லாம் தீர்வாக ஒரு இரட்சகர் வருவார் என்றெண்ணிக் காத்திருந்த இந்தியர்கள், நரேந்திர மோடி என்று பெருமாளாக்கப்பட்ட ஈறை நம்பி வாக்களித்து எக்காலத்திலுமில்லாத அளவுக்கு அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சியில் அமரவைத்தனர்.

அன்னார் ஆட்சிப் பொறுப்பில் அமர்ந்ததும் உத்தமபுத்திரர் மஹிந்தரையும் மற்ற நாட்டு அதிபருடன் அழைத்து வந்து ஈழத்தை வைத்து படம் காட்டிக் கொண்டிருக்கும் பத்தாம்பசலிகளுக்கும், அறிவிலிகளுக்கும் அதிர்ச்சியளித்தார். பாஜகவின் உண்மை முகத்தை அறிந்தவர்களுக்கு அது பெரிய ஏமாற்றமோ அதிர்ச்சியோ அளிக்காது. ஆனால் தூங்குவது போல் நடிப்பவர்களுக்கும், வேறு உள்நோக்கங்களுடன் ஆதரித்தவர்களுக்கும் (ஜாதிவெறி/ இந்துத்துவா + ஈழ ஆதரவு என கலந்து கலக்கும் நபர்கள்) அது கசப்பாக இருந்தது. அவர் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக இருப்பார் என்ற அளவுக்கெல்லாம் நம்பும் ஆட்களும் இருக்கிறார்கள்.

அடுத்து ரயில்வே துறையை தனியார் மயமாக்கம், ரயில் கட்டண உயர்வு என்று அதிரடியாக முதல் மாதங்களிலேயே இந்தியாவையே குஜராத் பாணி "வளர்ச்சியை" நோக்கி நகர்த்தி வருகிறது பாஜக-மோடி அரசு. அதன் தொடர்ச்சியாக, RSS - கிளை இயக்கங்கள் படுகொலைகள்(புனே), கலவரங்கள் (சென்னை- பூந்தமல்லி இந்து முன்னணித் தலைவரின் இறுதி ஊர்வலம்) என தங்கள் பாணியில் செயல்பட்டு வருகின்றன.

அடுத்ததாக இந்தியாவிலிருக்கும் அனைத்து நடுவண் அரசு ஊழியர்களும் சமூக வலைத்தளங்களில் தமது கருத்துக்களை ஆங்கிலத்தில்தான் வெளியிட வேண்டும் என்று ஆணை பிறப்பிக்கப்பட்டது. பின்பு அது தமிழ்நாடு தவிர்த்து பிற மாநிலங்களில் என்று மாற்றி அறிவிக்கப்பட்டது. பின்பு ஹிந்தி பேசும் மாநிலங்களில் மட்டுமே என்று அடக்கி வாசிக்கப்பட்டது.

இதற்கு முன்பாகவே டைம்ஸ் நவ் செய்தித் தொலைக்காட்சி தமிழ்நாட்டில் ஒரு பள்ளியில் சென்று சிறுவர்களிடம் பேட்டி கண்டு தமிழர்கள் "We want HIndi" என்று வேண்டுவதாகக் கருத்தை உருவாக்கியது. (அது உண்மைதான் எல்லோருக்கும் தேசிய மொழியைக் கற்கவில்லை, இன்னொரு மொழியைக் கற்கவில்லை என்ற வருத்தம்தான்) அதாவது அரசு சட்டமோ அறிவிப்போ கொண்டு வரும் முன்பு இது கருத்தைத் திணித்து அதைப் பொதுக் கருத்து போலவும், தேவை போலவும் ஆக்குவார்கள். ஊடகங்கள் கருத்தைத் திணிப்பார்கள், ஊழல் மன்னர்கள் ஹிந்தியைத் திணிப்பார்கள்.

ஹிந்தியல்லாத மாநிலங்களிலிருந்து எதிர்ப்பு கிளம்பியவுடன் தாளத்தை மாற்றி வாசிக்கத் தொடங்கினர்,

கிரண் ரிஜிஜூ, இந்தியை அனைத்துத் துறைகளிலும் முன்னிறுத்துவதும் மேம்படுத்துவதுமே தங்களது அரசின் முதன்மையான பணி என்றும் மீண்டும் குறிப்பிட்டார்.

.“இந்தி என்பது தேசிய மொழி, இந்த நாட்டின் இதயமாக இருக்கும் மொழி. எனவே இந்திக்கு முதன்மை முக்கியத்துவம் அளிப்பது என்பது ஆங்கிலத்தை அவதூறு செய்வதாகாது. எனவே இந்தி மொழிக்கு முக்கியத்துவம் அளிப்பது என முடிவு செய்து அரசாங்கம் முன்னுரிமை அளித்திருப்பது வரவேற்கக்கூடிய நடவடிக்கையே. மேலும், இந்தி மொழி என்பதே தமிழ், தெலுங்கு, மலையாளம், குஜராத்தி, வங்காளி, அசாமி, உருது மற்றும் இதர பல்வேறு பிராந்திய மொழிகளின் கூட்டுக்கலவையே என்பதை புரிந்துகொள்ள வேண்டும்” இந்தி மொழியை அனைத்து இடத்திலும் பரப்ப காந்தி, நேரு, தீனதயாளன் உபாத்யாயா, ராம்மனோகர் லோகியா போன்ற தலைவர்கள் முயற்சி செய்ததாகவும், தங்களது அரசுக்குமுந்தைய அரசுகள் போதுமான நடவடிக்கைகள் மேற்கொள்ள வில்லை என்றும் குறிப்பிட்ட அவர், தற்போது இந்தியை மேம்படுத்த வாய்ப்புள்ள அனைத்து நடவடிக்கைகளையும் அரசாங்கம் மேற்கொள்வதற்கான தருணமாகும் என்று முக்தார் அப்பாஸ் நக்பி தில்லியில் வெள்ளியன்று கூறினார்.

பாஜகவினர். வெங்கையா நாயுடு குட்டிகரணமடித்து இது மார்ச் 10 நாளே ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் அறிவித்ததாகும் அதை ஏன் சர்ச்சையாக்குகிறார்கள் என்றார்.

இவர்கள் இப்படி நாட்டியமாடிக் கொண்டிருக்கு தொலைக்காட்சி விவாதங்களிலோ பாஜக இன்ன பிற ஹிந்தித் திணிப்பு வெறியர்கள், ஹிந்தி வேண்டுமென்ற அறிவுத் தாகமுடையவர்கள் எல்லாம் 1940 களின் வாதங்களயும், இந்துத்துவ-ஹிந்தி வெறியுடனும் கத்திக் கொண்டிருந்தார்கள். வழக்கம் போலவே, தொலைக்காட்சியைக் கண்டு தனது அறிவை வளர்க்கும் பாமரத் தமிழர்கள், தமிழை வளர்க்கறானுகளாம் என்று ஹிந்தித் திணிப்பு எதிர்ப்பாளர்களையும், கருணாநிதியையும் திட்டிக் கொண்டிருந்தனர்.

தேர்தலுக்கு முன்பாக திருச்சியில் நடைபெற்ற இளந்தாமரை மாநாட்டில் ஹிந்தி மொழியில் உரையாற்றிய மோடி மொழி வாரி மாநிலங்களில் தனக்கு நம்பிக்கை இல்லை என்று சொன்னார். பாரதிய ஜனதாவின் கொள்கையும் அதுதான். இந்நிலையில் இவர்கள் இப்படி கிளப்பியிருப்பது வெறும் அரசு அலுவலகங்களுக்கு மட்டும் என்று சமாதானாம் சொல்கிறார்கள். ஹிந்தியை ஆங்கிலம் இரண்டாம் மொழியாக்கி விட்டது, ஆகவே அந்நிய ஆங்கிலத்திலிருந்து இந்தியாவின் கலாச்சாரத்தைக் காக்க ஹிந்தியை வளர்க்கிறார்களாம். ஹிந்தியை வளர்ப்பதென்றால் ஹிந்தி பேசுகிறவர்களிடமல்லவா செய்ய வேண்டும். ஹிந்தியைத் தாய்மொழியாகக் கொள்ளாத பல கோடிப் பேர்களிடமுமல்லவா இவர்கள் திணிக்கிறார்கள். வளர்ப்பு வேறு திணிப்பு வேறு. இவர்கள் promotion என்கிறார்கள். ஆனால் அது  imposition மட்டுமே.

சரி பாகிஸ்தானிகள் பேசும் உருது கூட இவர்கள் பேசும் ஹிந்தி மாதிரியல்லவா இருக்கிறது. எல்லோரும் ஒன்றாகிவிட்டார்களா ? இல்லை இந்திய தேசபக்தர்கள் வந்தேறி முகலாயரின் வழி வந்த மொழியினை ஏன் உயர்த்திப் பிடிக்கிறார்கள்.

சரி இப்போது தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் அல்லது நீறு பூத்த நெருப்பாக இருக்கும் ஹிந்தி தாகம்/மோகம் என்றோர் மாயையைக் கலைப்பதுதான் எனது நோக்கம்.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்/ பதில்கள்

ஹிந்தியை ஏன் வெறுக்கிறீர்கள்

ஹிந்தியை வெறுக்க வில்லை. ஹிந்தித் திணிப்பைத்தான் எதிர்க்கிறோம். ஒருவரிடம் போய் ஏர்டெல் வாங்கிக்கொள்ளுங்கள் என்கிறீர்கள். அவர் என்னிடம் ஏற்கெனவே ஏர்செல் இருக்கிறது என்கிறார். நீங்கள் வந்து அவர் ஏர்டெல்லை ஏன் வெறுக்கிறார் என்று கேட்கிறீர்கள்


கருணாநிதியைக் கலாய்ப்பதாக நினைத்துக் கொண்டு இந்தப் புகைப்படத்தினை ஹிந்தி ஆதரவாளர்கள் பகிர்கிறார்கள். இதில் என்ன தவறு இருக்கிறது. தமிழகத்தில் இருக்கும் வேறு மொழியினரிடம் அவர்கள் மொழியில் வாக்குப்பிச்சை எடுப்பது எந்த வகையில் தவறு. இதன் மூலம் மக்களுக்கு ஹிந்திக் கல்வியைத் தடை செய்து விட்டு அவர்கள் கற்றுக் கொண்டார்கள் என்று விமர்சனம் செய்கிறார்கள். இது ஒன்று தமிழ் வெறியாக இருக்க வேண்டும் இல்லை இந்தி வெறியாக இருக்க வேண்டும். இங்கே நடந்தது கட்டாய ஹிந்தித் திணிப்புக்கு எதிரான போராட்டமேயன்றி, ஹிந்திக் காரர்களைக் கல்லெறிந்து தாக்க வேண்டும் என்ற இனவெறிக் கலவரமல்ல. இதன் மூலம் ஹிந்தித் திணிப்பு எதிர்ப்பாளர்கள் ஹிந்தியை வெறுக்க வில்லை என்று தெரிந்து கொள்ளுங்கள். கருணாநிதியை எதற்குத் திட்ட வேண்டுமோ அதற்கு மட்டும் திட்டுங்கள்

தேசிய மொழியை ஏன் கற்க வேண்டாம் எனக் கூப்பாடு ?

ஹிந்தி தேசிய மொழி இல்லை என்பது மீண்டும் மீண்டும் நினைவூட்ட வேண்டியிருக்கிறது. ஹிந்தி அலுவல் மொழி மட்டுமே, மற்ற பிராந்திய மொழிகள் போலத்தான். அரசில் நிறைந்திருக்கும் ஹிந்தி மாநிலத்தவர்களின் ஆதிக்க வெறி காரணமாகத்தான் மற்ற மொழிகள் புறக்கணிக்கப்படுகின்றன.

இந்தியா முழுதும் பெரும்பான்மையினர் பேசும் மொழியை ஏன் நாம் கற்கக் கூடாது நமக்கு நன்மை பயக்கும்தானே ?


ஹிந்தி பெரும்பான்மையினர் பேசும் மொழியும் கிடையாது. இந்தியா முழுதும் பேசப்படும் மொழியும் கிடையாது. மாறாக ஹிந்தியைத் தாய்மொழியாகக் கொள்ளாத மற்ற மொழியினரே பெரும்பான்மையாக உள்ளனர். பேசப்படும் ஹிந்தி பேசுகிறவர்களும் ஒரே மாதிரியான ஹிந்தியைப் பேசுவதில்லை. கொஞ்சம் விரிவாக வாசிக்க இங்கு செல்க. 


வெளிமாநிலங்களுக்குச் செல்லும்போது ஹிந்தி தெரியாமல் சிரமப்படுவோம்தானே ?


தமிழ் நாட்டில் வந்து வேலை செய்யும், குடிவரும் வெளி/வட மாநிலத்தவர் தமக்குத் தமிழ் தெரியவில்லை, பள்ளியிலேயே தமிழ் கற்கவில்லை என்று கவலைப்படுகின்றனரா ?

நான் இங்கெல்லாம் பயணித்திருக்கிறேன். வட இந்தியாவில் பல மாநிலங்களில் ஹிந்தி ஒரு பாடமாக இருக்கிறது என்கிறார்கள். அதெப்படி ஒரிரு நாட்கள் சுற்றுலா சென்றவர்கள் வட இந்தியாவின் பல மாநிலங்களில் ஹிந்தியை பாடமாக வழங்குவதை புள்ளி விவரமாகச் சொல்கிறார்கள். அப்படி சுற்றுலா செல்கிறவர்களுக்காக ஹிந்தியைக் கற்க வேண்டுமெனச் சொன்னால் தமிழ் நாட்டில் பெரும்பான்மையானவர்கள் செல்லும் சுற்றுலாத்தளமாக ஊட்டி இருக்கிறது, அடுத்து கேரளா இருக்கிறது, கர்நாடகா இருக்கிறது, கோவா இருக்கிறது. எனவே தமிழர்கள் படுகு, மலையாள, கொங்கணி, துளு மொழிகளையும் பாடமாக வைக்கச் சொல்லிக் கேட்கலாம்.

ஒரு மொழியாக அரசே வழங்கும்போது கற்கலாமே ?

பல நூறு மொழிகள் பேசப்படும் நாட்டில், நடுவண் அரசு ஒரு மொழிக்கு மட்டும் முகவராக செயல்படுவது ஏற்க முடியாதது. மக்களின் வரிப்பணத்தை வைத்து மொழியை அடுத்தவனிடம் திணிக்கிறது.  ஹிந்தி பேசுகிறவர்கள் வேறு மொழிகளைக் கற்க வேண்டும் என்று நடுவணரசு எல்லா மொழிகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்து வட இந்தியாவில் பரப்புமா ?

ஒரு மொழியைக் கற்காமல் இருப்பது நமக்கு இழப்புதானே ? ஆம் இழப்புதான். எப்படி ஹிந்திக் காரர்கள் தமிழ் கற்காமல் இருப்பது நமது இழப்போ அது மாதிரிதான் இதுவும். அதற்கு எவ்வளவு கவலைப்பட வேண்டுமோ அது போலத்தான் இதற்கும் கவலைப்படவேண்டும். தகவல் தொழில் நுட்ப துறையில் குறிப்பிடத்தகுந்த இடத்தில் இருக்கும் தமிழ்நாட்டிலிருந்து கொண்டு 2014 ஆம் ஆண்டில் ஹிந்திக்கு ஏன் மெனக்கெட்டு வருத்தப்பட வேண்டும். ஜாவா, பெர்ல், C, C++  என்பதையெல்லாம் கற்றுக்கொண்டு வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்று எண்ணுங்கள்.

ஏன் தமிழ்நாட்டைத் தவிர வேறு மாநிலத்தவர் எதிர்க்க வில்லை.

தவறு. பல்வேறு மாநிலங்கள் எதிர்க்கின்றன. முத்தாய்ப்பாக ஹிந்தி பேசும் மாநிலங்களில் ஒன்றான உத்தரப் பிரதேசத்தின் மாயாவதி எதிர்க்கிறார். கர்நாடகா, தமிழகத்திற்கு அடுத்தபடியாக எதிர்ப்பில் இருக்கிறது. தமிழகத்தின் இரு முதன்மைக்கட்சிகளும் ஹிந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட திராவிட இயக்கத்தின் வழி வந்தவை என்பதால் தமிழகம் முதன்மையில் இருக்கிறது. மேலும் சமஸ்கிருதத்திற்கு ஈடான பழமையும், வளமும் அதன் கலப்பு அதிகமில்லாத தனித்துவமான மொழி தமிழ் மட்டுமே. ஆனால் இந்தியாவின் மற்ற மொழிகளில் சமஸ்கிருத/ஹிந்தி கலப்பு அதிகம். ஆயிரம் வருட காலமாக சமஸ்கிருத ஆதிக்கத்தை எதிர்த்துப் போராடிய வரலாறுடைய தமிழ் மொழியைப் பேசும் நான் இன்னும் அதிகமாக எதிர்க்க வேண்டும்.

வெளி மாநிலங்களுக்குச் சென்றால் ஹிந்தி தெரியாதா என்று அவமானப்படுத்துகிறார்கள் வெட்கமாக இருக்கிறது

அது காட்டுமிராண்டிகளின் இழிசெயல். நீங்கள் கறுப்பாக இருக்கிறீர்கள் என்று சொல்கிறார்கள். அதற்காக வெள்ளையாக வேண்டும் அழகாக வேண்டும் அப்படியில்லாதது நம் தவறு என்பீர்களா ? மெட்ராஸி என்கிறார்கள், மலையாளிகள் பாண்டிகள் என்கிறார்களல்லவா அது போன்ற இனவெறிதான் அப்படிப் பேசவைக்கிறது. மேலும் ஹிந்தி பேசிகளின் ஆண்டைத்தனம், வட இந்தியனின் தென்னிந்தியா மீதான் இழிவான பார்வை. அதற்கு நீங்கள் குற்ற உணர்வு அடையத் தேவையில்லை. நீ தமிழகம் வரும் போது ஏன் தமிழ் தெரியவில்லை என்று நான் கேட்டால் என்ன சொல்வாயோ அதுதான் இதற்கும் பதில் என்று சொல்வோம். (தென்னிந்தியாவில் மூன்று மொழிகள் செம்மொழியாகியிருக்கிறது என்பதெல்லாம் அவர்களுக்குத் தெரியுமா ? அட செம்மொழிகள் என்று கூட வேண்டாம் நான்கு மொழிகள் கோடிக்கணக்கானவர்களால் பேசப்படுவதாவது தெரியுமா)

தமிழ் பேசாத பல மாநிலத்தவர்கள் தமிழகத்தில் வாழும்போது அவர்கள் மீதும் தமிழகத்தில்  கட்டாயத் தமிழ் சட்டம் என்பது தமிழ்த் திணிப்பு ஆகாதா ?

தமிழகத்தில் கட்டாயத் தமிழ் என்றால் எல்லோர்க்குமே மொழியுரிமை நினைவுக்கு வந்து விடும் என்பது மகிழ்ச்சி. தமிழகத்தில் மட்டுமல்ல எல்லா மாநிலங்களுமே அவரவர் மொழியைக் கட்டாயப்பாடமாகவும், பிறமொழியினர்க்கும் சேர்த்து வைப்பது நியாயமான செயலே. இதன் மூலம் அம்மாநிலத்தில் இருக்கும் பிறமொழியினர் ஒரு மொழியைக் கற்க முடியும். அங்கேயே வசிப்பவர்கள் அம்மொழியைக் கற்பதில் என்ன தவறு, இது பிற மாநிலங்களில் வாழும் தமிழர்களுக்கும் சேர்த்துத்தான். ஆனால் ஹிந்தியை, ஹிந்தி பேசாத பிற மாநிலங்களின் மீது திணிப்பது வேறு, அந்தந்த மாநிலங்களில் கட்டாயப் பாடமாக வைப்பது வேறு. இதன் மூலம் மட்டுமே பிராந்திய மொழிகளின் பாதுகாப்பும், வளர்ச்சியும் உறுதி செய்யப்படும்.

Download As PDF
Bookmark and Share

Post Comment

வடகிழக்கு மாநில மாணவர்கள் கட்டாய ஹிந்தி/ இந்திய மொழிகள் திணிப்புக்கு எதிராக போராட்டம்


ஒரு பொய்யை ஏறக்குறைய அரை நூற்றாண்டாகச் சொல்லி வருகிறார்கள். ஹிந்தி படிக்காததால் தமிழர்கள் முன்னேற முடியவில்லை. கழிவறையில் நீர் வராது போனால் கூட கருணாநிதியை கடிந்து கொள்ளும் இன்றைய நிலையில் இந்த எழவெடுத்த ஹிந்தித் திணிப்பை எதிர்த்து தமிழர்களின் வாழ்க்கையில் மண்ணைப் போட்டு விட்டதாகவும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இன்று வரையில் தினமலரின் பின்னூட்டங்களில் இதைக் காண முடிகிறது. ஹிந்தி படிக்காததால் நாம் எதை இழந்திருப்போம் என்று யோசித்தால் பெரிதாக ஒன்றும் புலப்படவில்லை. ஹிந்திக்காரர்களுடன் உரையாட முடியவில்லை, அங்கே சுற்றுலா சென்றால் லோல்படுவது, எடுபட்ட பாலிவுட் குப்பைகளுக்கு இருக்க வேண்டிய சந்தை இல்லாமல் போனது தவிர்த்து வேறொன்றுமில்லை. மேலும் ஹிந்தி இந்தியாவின் தேசிய மொழி இல்லை ஆங்கிலம் போலவே வெறும் அலுவல் மொழிதான் என்பதை ஆயிரமாவது தடவையாகச் சொல்லிக் கொள்ளவும் வேண்டும். ஹிந்தி பேசும் மாநிலத்தவர்கள் இங்கு தமிழகத்தில் கொத்தடிமைகளாக அவதியுறும் இக்காலத்திலும் இந்தப் பொய் இன்னும் உயிருடன் இருக்கிறது.

ஹிந்தித் திணிப்பு எதிர்ப்பு என்பதை "ஹிந்தி எதிர்ப்பு" என்று ஹிந்தி மொழியையே வெறுப்பதாகவும் எதிர்ப்பதாகவும் தேசியமொழியான இந்தியைக் கற்க மறுக்கிறார்கள் மொழிவெறியர்கள் என்றும் காதில் பூ சுற்றுவதை எப்போதுதான் நிறுத்துவார்களோ ஹிந்தி வெறியர்கள்.

ஹிந்தி மட்டுமல்ல வேறெந்த மொழியும் மற்ற மொழியினர் மீது திணிக்கப்படக்கூடாது என்பதே நேர்மையானதாகும். அதற்கான தற்போதைய உதாரணம் டெல்லி பல்கலைக் கழகத்தின் வடகிழக்கு மாணவர்கள் போராட்டம். 


படங்கள் நன்றி ஃபேஸ்புக்
டெல்லி பல்கலைக் கழகத்தின் ஹிந்தி/இந்தியாவின் நவீன மொழிகள் திணிப்பு:

வரும் 2013/14 ஆம் கல்வி ஆண்டுக்கான பாடத்திட்டத்தில் எல்லாப் பிரிவு முதலாண்டு மாணவர்களும் ஹிந்தி அல்லது இந்தியாவின் நவீன மொழிகளில் (Modern Indian Language) ஒன்றை அடிப்படையாக (foundational course) கற்றுக் கொள்ள வேண்டும் என்பதைக் கட்டாயமாக்கியுள்ளது. அதாவது மாணவர்கள் ஒரு பாடமாக ஹிந்தியைப் படிக்க வேண்டும். அல்லது அல்லது 8 வது அரசியலமைப்பு சட்டத்தின் படி வரையறுக்கப்பட்ட நவீன இந்திய மொழிகளான அஸ்ஸாமி, வங்கம் (பெங்காலி), போடோ, டோக்ரி, குஜராத்தி, கன்னடம், காஷ்மீரி, கொங்கணி, மைத்திலி, மலையாளம் மற்றும் மணிப்புரி ஆகியவற்றில் ஒன்றைக் கற்க வேண்டும். இதில் ஹிந்தியையோ அல்லது மேற்கண்ட மொழிகளுல் ஒன்றைத் தமது மொழியாகக் கொள்ளாத பல வடகிழக்கு மாநில மாணவர்களுக்கும் மிகுந்த சுமையைக் கொடுப்பதாகும்.

நாங்கள் இது பற்றி விவாதிக்க கோரிக்கை வைத்தும் நிர்வாகம் அதற்கு முன்வரவில்லை. நாங்கள் அலுவலகத்திற்கு வெளியே காவலர்களால் தள்ளப்பட்டோம், மாணவியர் மீது பாலின ரீதியான மொழியில் ஏசினார்கள்.

நவீன இந்திய மொழிகளைப் பேசும் மாணவர்களுக்கும் இந்தப் பாடத்திட்டம் கடினமானதுதான். ஏனென்றால் பல்கலைக் கழகத்திலுள்ள துறை, விரிவுரையாளர்கள் மிகக் குறைவான அளவே உள்ளதால் பல்கலைக் கழகத்தின் மொத்தப் பொறுப்பையும் மேற்பார்வையிடுவது இயலாது.

உலக நல்லிணக்கத்திற்கான வடகிழக்கு மாநிலங்கள் குழுமம் (The North-East Forum for International Solidarity (NEFIS)) - இதற்கான போராட்டங்களை மார்ச் 22, 25 ஆம் தேதிகளில் நடத்தியுள்ளது.

ஆசிய மனித உரிமை நடுவம், தேசிய மனித உரிமை ஆணையத்திடம் ஹிந்தி/இந்தியாவின் நவீன மொழிகள் திணிப்புக்கு எதிரான ஒரு புகாரை அளித்துள்ளது. 

வடகிழக்கு மாணவர்களின் கூடுதல் தேவைகள் புறக்கணிக்கப்படுவது அலட்சியப்படுத்தப்படுவதும் புதிதல்ல. பல்கலைக்கழகத்தின் கொள்கைகள் விதிகள் செயல்படுத்தப் படும்போதெல்லாம் வடகிழக்கு மாணவர்களின் விருப்பத்துக்கு எதிராகவே இருப்பதை நாங்கள் கவனித்து வந்துள்ளோம். ஆகவே இப்போது அதற்கு எதிராக நாங்கள் செயல்பட வேண்டியிருக்கிறது.

போராட்டம்

மார்ச் 22 ஆம் நாள் நண்பகல் 2 மணியளவில் டெல்லிப் பல்கலைக்கழகத்தின் கலைத் துறையின் (Faculty of Arts) வாயிலில், விவேகானந்தர் சிலையருகில் ஒன்று கூடலை நிகழ்த்தினார்கள். வட இந்திய மாநிலங்களைச் சேர்ந்த பல்வேறு பேச்சாளர்கள் டெல்லி பல்கலைக் கழகத்தின் பண்பாட்டு மீறலைக் கண்டித்துப் பேசினர். முழக்கங்கள் எழுப்பட்டதைத் தொடர்ந்து வாகனத்தில் வந்த காவல் துறையினரால் கூட்டம் தடுக்கப்பட்டது, டீனும், ப்ரோக்டரும் வந்து கூட்டத்தைக் கலைக்க முயன்றனர். டெப்டி டீன் அங்கே கூடியிருந்தவர்கள் மீது இனவெறிக் கருத்தை வெளியிட்ட பின்பு கைகலப்பு ஏற்பட்டது. மன்னிப்புக் கேட்கும் வரை கோரிக்கை மனுவைக் கொடுக்க மாட்டோம், பிரதிநிதிகளை அனுப்ப மாட்டோம் என்று கூறினார்கள் மாணவர்கள். இரண்டும் மணிநேர தொடர் முழக்கங்களுக்குப் பின்னர் டெப்டி டீன் வந்து மன்னிப்புக் கேட்டார். பின்பு பேச்சுவார்த்தைக்கு அஸ்ஸாமி, நாகா, மைத்தீஸ் (Meities), குகிஸ் (Kukis), டாங்குள்ஸ் (Tangkhuls), ஆஸ் (Aos) மற்றும் தமிழ் பிரதிநிதிகள் அனுப்பப்பட்டனர்.  அவர்களிடம் மீண்டும் திங்களன்று வருமாறும் அவர்கள் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படுமென்றும் உறுதியளிக்கப்பட்டது. போராட்டக்குழுமம் கோரிக்கை நிறைவேற்றாவிடில் திங்களன்று மீண்டும் போராட்டத்திற்கு ஒன்று கூடுமாறு அறிவித்தது. ஒற்றுமையுடன் இருப்பவர்கள் நிச்சயம் வெல்வார்கள் என்ற முழக்கத்துடன் கலைந்து சென்றார்கள் போராட்டக்காரர்கள்.

நவீன இந்திய மொழிகள் :

நவீன இந்திய மொழிகள் என்று வரையறுக்கப்பட்ட மொழிகள் 8 வது அரசியலமைப்புச் சட்டத்தின் படி அஸ்ஸாமி, பெங்காலி, போடோ, டோக்ரி, குஜராத்தி, ஹிந்தி, கன்னடம், காஷ்மீரி, கொங்கணி, மைத்திலி, மலையாளம், மணிப்புரி, மராத்தி, நேபாளி, ஒரியா, பஞ்சாபி, சமஸ்கிருதம், சந்தாலி, சிந்தி, தமிழ், தெலுங்கு மற்றும் உருது ஆகியன. இந்த மொழிகளுக்காகவும் டெல்லி பல்கலைக் கழகம் குறைவான விரிவுரையாளர்களையே கொண்டுள்ளது. வடகிழக்கிலிருக்கும் சிறுபான்மை/விளிம்பு நிலை குழுக்கள் சார்ந்த மொழிகளுக்கு விரிவுரையாளர்கள் இல்லை. மொழிகள் அங்கீகரிக்கப்படவில்லை.

எனவே இம்மொழி சாரா வடகிழக்கு மாணவர்கள் குறைந்த மதிப்பெண்கள் பெற்று தேற முடியும், இல்லையெனில் தோல்வியடைவார்கள். இது மாணவர்களின் கல்வித் தரத்தையும், வேலைவாய்ப்புக்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். ஏனெனில் இவர்களில் பெரும்பான்மையினர் பள்ளியில் ஹிந்தியைக் கற்றவர்களல்ல. இந்தியா டுடேவுக்கு பேட்டி அளித்த டீன் வெறும் 40% மதிப்பெண்கள் இடைநிலைத் தேர்வில் (semester) வெற்றியடையப் போதுமானது எனவே மாணவர்களின் கோரிக்கை அடிப்படையற்றது. எனவே கட்டாய மொழியில் நாங்கள் 0 எடுத்தால் கூடப் போதுமானது என்றும் கூறியிருக்கிறார். இதற்காக நாங்கள் படிக்க வரவில்லை. நாங்கள் சிறந்த மதிப்பெண்கள் எடுத்து நல்ல வேலையில் அமரவே விரும்புகிறோம்.

மேலும் வட கிழக்கு மாணவர்கள் பாரபட்சத்துடனேயே நடத்தப் படுகின்றனர். கடந்த வருடங்களில் நூற்றுக் கணக்கான மாணவர்கள் தேர்வில் தோல்வியடைந்துள்ளனர்.

கோரிக்கையின் சாரம்: 

 கட்டாய ஹிந்தி/ இந்திய நவீன மொழிகள் கற்றலை தனிப்பட்டவர் விருப்பத்திற்குரியதாக (optional) மாற்ற வேண்டும்.

நவீன இந்திய மொழிகளுக்கான பாடத்திட்டங்கள், பேராசிரியர்கள் நியமித்தலை உடனடியாக மேம்படுத்த வேண்டும்.

சட்டத்திற்கு புறம்பான முறையில் பழைய பாடத்திட்டத்தின்படி இந்தி கற்க வேண்டிய நிலையில், அதன் காரணமாக தேர்வுகளில் தோல்வியடையும் மாணவர்களின் நிலையைக் கவனத்தில் எடுக்க வேண்டும்.

மேலும் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு உதவும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

இப்போராட்டத்திற்கு நமது ஆதரவை அளிப்போம்.
Download As PDF
Bookmark and Share

Post Comment

குமுதம் அரசுவின் அக்கப்போர் !!


மீண்டும் வேதாளம் முருங்கை மரத்தில் ஏறிய கதையாக ஒரு கேள்வி பதிலை குமுதம் அரசு பதில்கள் பிரிவில் வெளியிட்டுள்ளனர். தற்போதைய திருவாய் மலர்ந்தருளிய செய்தி - வேறென்ன ஹிந்தியைப் படிக்க விடாமல் திராவிட இயக்கத்தின் துரோகம் குறித்துத்தான். தமிழர்களைப் படிக்கவிடாமல் செய்தது திராவிட இயக்கங்களின்  துரோகம்தானே என்று ஒரு வாசகி கேட்க, அவர்கள் வீட்டுப் பிள்ளைகள் மட்டும் ஹிந்தி கற்கும்படி பார்த்துக் கொண்டார்கள் அதுதான் துரோகம் என்று பதிலளித்து இருக்கிறார். திராவிட இயக்கங்களைக் குறை சொல்ல வேறு 100 காரணங்கள் இருக்கின்றன. 

ஹிந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம் தமிழர்களுக்கு எதிரானது என்பதாகவும்,  ஹிந்தியைப் படிப்பது துரோகம் என்றும் சித்தரிக்கப்பட்டுள்ளது. அடடா என்ன கைங்கரியம். ஹிந்தி திணிப்பதை எதிர்ப்பதும், அல்லது ஹிந்தியைக் கற்பதும் துரோகமாம். தேவைப்படுபவன் கற்றுக் கொள்வதில் யாரும் எதிர்ப்புத் தெரிவிப்பதில்லை, அதே நேரம் கட்டாயத் திணிப்பை எதிர்ப்பதில் நியாயமிருந்தது. இப்போது ஆங்கிலத் தாக்கத்தினால் தமிழ் மொழி குறித்து கவலைப்படும் நாம் ஆங்கிலம் கற்றுக் கொள்வது துரோகம் என்று சித்தரிப்பதில் என்ன நேர்மையிருக்கிறதோ அது போலத்தான் இதுவும்.

எத்தனை முறை கரடியைப் போல் கத்தினாலும் தேசிய மொழி ஹிந்தியைக் கற்க விடாமல் செய்தது திராவிட இயக்கம் என்று திரும்பத் திரும்ப முதலிலிருந்த தொடங்குகிறார்கள். இதைப்பார்த்தால்தான் கொதிக்கிறது.

ஹிந்தி தேசிய மொழி இல்லை, அதைக் கற்காததால் என்ன இழப்பு ஏற்பட்டு விட்டது, ஹிந்தியல்லாத வெறொரு மொழி தெரியாததால் ஏற்படும் தொல்லைகள்தானே ஒழிய வேறொன்றும் தனிச் சிறப்பாக ஏற்படவில்லை. சில இணைப்புகள் தருகிறேன். வேறு ஏதேனும் சிறப்பான கட்டுரைகள் ஹிந்தி திணிப்பு குறித்து இருந்தால் தெரியப்படுத்தவும்





வெட்கம் கெட்டவர்களுக்காக !   (கோவி கண்ணனின் பதிவில் சில இணைப்புக்களும் உள்ளன. )



என்னுடைய பதிவு


Download As PDF
Bookmark and Share

Post Comment

ஹிந்தி இந்தியாவின் தேசிய மொழி இல்லை இல்லை இல்லவே இல்லை !!


எங்கேயாவது யாராவது திராவிட இயக்கத்தினர் அல்லது தமிழர்கள், தமிழகத் தலைவர்கள் தமிழரை ஹிந்தி கற்பதிலிருந்து தடுத்து விட்டனர் என்று சொன்னால் சுர்ரென்று கொதிப்பு தலைக்கு ஏறிவிடுகிறது. இதே போல் வெறியேற்றும் இன்னொன்று இங்கிருந்து இலங்கைக்குப் போய் நாடு கேட்டால் அவனெப்படிக் கொடுப்பான் ? அவர்கள் தெரியாமல் சொன்னாலும் சரி தெரிந்து சொன்னாலும் சரி. எல்லா இடத்திலும் போய் சொல்லிக் கொண்டிருக்கவா முடியும். என்றாலும் சிலரிடம் புரிந்து கொள்ளும் தன்மையுடையவரிடம் மட்டும், தோன்றுகிறவரிடம் மட்டும் சொல்லிக் கொண்டுதான் இருக்கிறேன், இருக்கிறோம். இருந்தாலும் பெரிய ஞானமுடையவரெல்லாம் இதை சொல்வதுதான் செரிக்க முடியாததாக இருக்கிறது.

அது என்ன எழவோ தெரியவில்லை. ஹிந்தி வெறுப்பு, ஹிந்தி எதிர்ப்பு என்கிறார்கள்.  இந்த ஒரு சொல்லில் வரலாற்றைத் திரிப்பது என்று சொல்வது போல இந்த ஒரு வரியில் அத்தனை போராட்டத்தையும் கொச்சைப்படுத்தி, காக்கையைக் குயிலாக்கி, குயிலை கழுகாக்கி விடுகிறார்கள். 


காந்தி இந்தியாவிற்கு சுதந்திரம் வாங்கிக் கொடுத்தார்

ஆரியர் வருகை முகலாயர் படையெடுப்பு

கொலம்பஸ் அமெரிக்காவைக் கண்டுபிடித்தார்

பெரியார் தமிழைக் காட்டுமிராண்டி மொழி என்று சொன்னார்

பாரதியார் தமிழை உயர்த்திப் பாடினார்.

இது போன்ற ஒரு வரியில் வரலாற்றைத் தவறாகப் பரப்புவது போலத்தான் ஹிந்தி தேசிய மொழி என்ற பொய் திரும்பத் திரும்பப் பரப்படுகிறது.

தேசிய மொழியாகிய ஹிந்தியைத் தமிழர்கள் கற்பதை அரசியல் வாதிகளும் மொழி வெறியர்களும் தடுத்து விட்டார்கள் அதனால்தான் தமிழர்கள் முன்னேற முடியவில்லை அல்லது ஹிந்தி தெரியாமல் சிரமப்படுகிறார்கள்.

நான் அங்கே போனேன், ஹிந்தி தெரியாமல் தொல்லையாக இருந்தது, இன்னார் கேட்டார் அவமானமாக இருந்தது. அரசியல்வாதிகளை நினைத்து ஆத்திரமாக வந்தது.

இது மாதிரியான பேச்சுக்களை அவ்வப்போது அடிக்கடி கேட்கவும் வேண்டியிருக்கிறது. இதிலெது உண்மை ? இந்தியாவுக்கு தேசிய மொழியே கிடையாது. ஹிந்திக்கு அலுவல் மொழி அந்தஸ்து கொடுக்கப்பட்டிருக்கிறது. அதுவும் ஹிந்தி அரசியல்வாதிகளின் ஆதிக்கத்தின் காரணமாகவும் ஹிந்தி மற்ற மொழிகளைக் காட்டிலும் பெரும்பான்மை மொழியாக இருப்பதன் காரணமாகவும்தான். இதில் நடுவண் அரசின் பலதுறைகளில் தனிப்பட்ட முறையில் ஹிந்தி வளர்ப்பு அல்லது திணிப்பதற்கெ அரசே முகவராக செயல்படுகிறது.

மொழி வெறி என்னவென்று பார்ப்போம். தமிழ் வெறியர்கள் ஹிந்தியை கற்பதைத் தடுத்து விட்டார்கள் என்பது குற்றச்சாட்டு. எது மொழி வெறி. இந்தியா உட்பட பல மூன்றாம் உலக நாடுகள் 1950 களுக்கு முன்பு இல்லை. அவர்கள் வசதிக்கேற்ப சிலவற்றை பிரித்துக் கொடுத்தும், சேர்த்து விட்டும் சென்றனர். இந்தியாவில் பல தேசிய இனங்கள் ஒற்றுமையுடன் வாழ்வதும், ஆப்ரிக்க கண்டத்தில் ஆடை கூட அணியாத மனிதர்கள், ஏகே 47 துப்பாக்கியை எடுத்துக் கொண்டு மற்ற இனங்களுடன் போராடிக் கொண்டிருக்கின்றன. இரண்டு கண்டங்களிலும் வளங்கள் சுரண்டப்படுகின்றன. இந்தியத் துணைக்கண்டம் 500க்கும் மேற்பட்ட சிற்றரசுகளாக இருந்தது. தொடர்ந்து படையெடுப்புக்கள், இறுதியாக முகலாயர், பின்பு ஆங்கிலேயர் ஆகியோர் மொத்தமாக இந்தியத் துணைக்கண்டப் பகுதிகளை ஒன்றாக ஒற்றையாட்சியின் கீழ் கொண்டு வந்தனர்.

பின்பு 1947 - இல் பிரிட்டிஸ் வெளியேற இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்தது. இந்துக்களும் முஸ்லிம்களும் இரண்டாகப் பிரித்துக் கொண்டனர். இந்தத் தலைமையின் கீழ் பல தேசிய இனங்கள் அடிமையாயின. 2 டஜன்க்கும் மேலான மொழிகள் இந்தியத் துணைக்கண்டத்திலிருந்தன. ஆங்கிலேயர் ஆதிக்கம் காரணமாக ஆங்கிலமும் இருந்தது. ஆங்கில அறிவின் காரணமாகத்தான் பல நாட்டு தத்துவங்களும் சித்தாந்தங்களும் அறிமுகமாயின. ஹிந்தியைத் திணிப்பதன் மூலம் பல மொழிகள் பேசியவர்கள் நிறைந்த நாட்டை ஒரு தேசியத்தில் அடைக்க முயன்றார்கள். மற்ற சிறுபான்மை மொழிகளின் அடையாளங்களை அழிக்க முயன்றார்கள். அன்றைக்கு ஆங்கிலம் இருக்கும் நிலைக்கு பதிலாக ஹிந்தியைத் திணிக்க எத்தனித்தார்கள்.

நாட்டுக்கு "சுதந்திரம்" வாங்கித் தந்த காங்கிரஸில் இருந்தவர்கள் பெரும்பான்மையான தலைவர்கள் ஹிந்தியை தேசிய மொழியாகக் கொண்டவர்கள். ஹிந்தி வெறியர்கள். ஹிந்தியை தாய்மொழியாகக் கொள்ளாத பல கோடி இந்தியர்களுக்கு தேசிய மொழியின் பெயரால் ஹிந்தியைத் திணிக்க முயன்றனர். அதை மற்றவர்கள் எதிர்த்தார்கள். தமிழர்கள் அதிகமாக கடுமையாக எதிர்த்தார்கள். இது போன்ற பிரச்சனைதான் கிழக்கு பாகிஸ்தானில் உருதுவைத் திணித்த போது வங்காளிகள் அதை எதிர்த்தனர், வங்கதேசம் உருவானது.

ஹிந்தித் திணிப்பைத்தான் ஹிந்தி எதிர்ப்பு என்றும் ஹிந்தி வெறுப்பு என்றும் திரித்து பயன்படுத்துகின்றனர். மற்றவர்கள் மீது தம் மொழியைத் திணித்து அவர்களை அடிமைப்படுத்த நினைப்பவன் மொழி வெறியனா அல்லது தம் மொழிக்காக போராடுகிறவன் மொழிவெறியனா ? ஹிந்தி வெறியர்கள் என்று யாருமே சொல்லக் காணோம். ஹிந்தி வெறியர்கள்தான் போராட்டத்தை அடக்க மத்திய ரிசர்வ் படைய அனுப்பினார்கள். போராடியவர்களை சுட்டுக் கொன்றார்கள். ஹிந்தி வெறியன் என்று யாருமில்லையாம். ஆனால் நமக்கு மட்டும் ஹிந்தி வெறுப்பாளன் பட்டம். சரி இப்படி வைத்துக் கொள்வோம், ஒரு வேளை காங்கிரஸில் தமிழர்கள் அல்லது தமிழ் வெறியர்கள் அதிகமாக இருந்து, தமிழை இந்தியாவின் தேசிய மொழியாக அறிவித்திருந்தால் அதை மற்றவர்கள் எதிர்த்திருந்தால் என்ன நிலை எடுப்பார்களோ அது போலத்தான் இதுவும்

ஹிந்தி கற்றுக் கொள்வதை யாரும் எதிர்க்கவுமில்லை, வெறுக்கவுமில்லை. அந்தக் காலத்தில் வட இந்தியர் ஆதிக்கமிருந்ததன் காரணமாக பல அரசுத் தொழில் நிறுவனங்கள் வட இந்தியப் பகுதிகளில் தொடங்கப்பட்டன. அங்கே செல்ல வேண்டிய தேவை தென்னிந்தியர்களுக்கு இருந்தது. அதை வைத்து அக்காலத்தில் ஹிந்தி தெரியாதவர்களை குற்ற உணர்வுக்குள்ளாக்கினர். இந்த உலக மயக் காலத்தில் வட இந்தியர்கள் தென்னிந்தியா நோக்கி பிழைக்க வரும் நிலை இருக்கிறது. இன்னும் வந்து பழைய பாட்டையே பாடிக்கொண்டிருப்பது ஒன்று அறியாமை இல்லையென்றால் அயோக்கியத்தனம்.

மலையாளம், கன்னடம், தெலுங்கு தெரியவில்லை என்று அந்தந்த மாநிலத்திற்குச் செல்லும்போது எவ்வளவு வருத்தப்படுவோமோ அவ்வளவு வருத்தப்பட்டால் போதுமானது. தேசிய மொழியைக் கற்கவில்லை என்று யாரும் வருத்தப்படத் தேவையில்லை.

ஹிந்திக்குப் பதிலாக ஆங்கிலம், ஃப்ரெஞ்ச், மாண்டரின், உருது அரபி ஆகியவை தெரியவில்லை என்றும் வருத்தப்படலாம் தவறில்லை. ஹிந்தி தெரிந்தவர்கள் ரொம்பவும் பீற்றிக் கொள்ளத் தேவையில்லை. வட இந்தியத் தொழிலாளர்கள் இங்கே படும் அவலங்களைக் கண்ட பிறகும் ஹிந்தி தேசிய மொழியைக் கற்காமல் ஏமாந்து விட்டோம் என்று கூறிக் கொண்டு தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்ள வேண்டாம். 

படம் - ஃபேஸ்புக்
இன்னொன்று, ஹிந்தித் திணிப்பை தமிழ்நாடு மட்டும் எதிர்க்கவில்லை என்பது வரலாறு. தமிழர்களைப் போலவே மொழி உணர்வுடையவர்கள் வங்காளிகளும் கன்னடர்களும். தற்போது ஸ்ரீதேவி நடித்து இங்கிலீஷ் விங்கிலீஷ் என்ற படம் வெளியாகவுள்ளது. அதில் அமெரிக்கக் குடிவரவு அதிகாரிகள் ஆங்கிலம் தெரியாமல், அமெரிக்காவில் எப்படி இருப்பீர்கள் என்று கேட்கிறார்கள். அதற்கு ஹிந்தி தெரியாமல் அமெரிக்கர்கள் இந்தியாவில் எப்படி சமாளிப்பார்களோ அது போலத்தான் என்கிற பாணியில் பதிலளிப்பது போலவும் திரைப்படத்தின் முன்னோட்டத்தில் காட்டியிருக்கிறார்கள். ஹிந்தி பேசும் ரசிகர்களிடம் கைத்தட்டலை எதிர்ப்பார்த்தோ அல்லது தமது அறிவின் அடிப்படையிலோ இக்காட்சியை வசனத்தை இயக்குனர் வைத்திருக்கலாம். இது ஹிந்தியைத் தாய் மொழியாகக் கொள்ளாத பல கோடி இந்தியர்களை இழிவு செய்வதாகக் கூறியும், அவ்வசனத்தை நீக்கக் கூறியும், ஹிந்தி இந்தியாவின் தேசிய மொழியன்று எனவும் ஃபேஸ்புக்கில் ஒரு கையெழுத்துக்கள் மூலமாக எதிர்ப்புக்குரல் Change - தளத்தில் தொடங்கப்பட்டது.

இதைத் தொடங்கியவர்கள் தமிழ்நாட்டுக்காரர்கள் இல்லை. கன்னடர்கள். அதனால் தமிழர்களைப் போல மொழிவெறியர்கள், திராவிட இயக்கம் தடுத்து விட்டது என்ற வாதமெல்லாம் இங்கு செல்லுபடியாகாது.

அந்த இணைப்புக்கள் :- 


இந்தியாவிற்கு தேசிய மொழி இல்லை என்பதற்கான  ஆவணம்
Download As PDF
Bookmark and Share

Post Comment