ஸ்டாலின்கிராட் போர்க்களத்தில் ஒரு திரைப்படம்

Enemy At The Gates

இத்திரைப்படம் முழுவதும் போர், துயரக் காட்சிகளைக் கொண்டதல்ல. ஸ்டாலின்கிராட் போர்க்களத்தில் சிறப்பாக போர் புரிந்த வஸிலி ஸெய்த்செவ் என்பவரைப்  பற்றியது. யுராஸ் பகுதியைச் சேர்ந்த இவர் குதிரை தளவாட பட்டறையில் வேலை செய்தவர். குறி பார்த்து சுடுவதில் நிபுணத்துவம் பெற்றவர். ருஸ்யாவின் இராணுவத்தில் sniper Forces (மறைவிடத்திலிருந்து அதிக தொலைவிலிருக்கும் எதிரியை சுடும் வீரர்களைக் கொண்டது) - படைப்பிரிவில் போரிட்ட இவரால் கொல்லப்பட்ட நாஸி வீரர்களின் எண்ணிக்கை என்று கணக்கிடப்பட்டிருக்கிறது. உண்மையில் இது இன்னும் அதிகமானது. இவரால் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி மாஸ்கோ அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது. வெற்றியின் விளிம்பிலிருந்த ஜெர்மனி இவரைப் போன்ற வீரர்களீன் வீரத்தினாலும், ஈகத்தினாலும் ருஸ்யாவால் தோற்கடிக்கப்பட்டது.  இவர் போர் புரிந்த நுட்பமான விதம், நட்பு, காதல், துயரம், துரோகம் இவற்றைச் சொல்வதே இப்படம். இதில் பல ஆயிரம் விரர்கள் ஓருவருக்கொருவர் போர் புரிவதாக இல்லாமல், இடிந்த கட்டிடங்களின் இடையில் மறைந்து எதிரியைச் சுடும் காட்சிகளைக் கொண்ட படமாக உள்ளது



   கிழக்கு ஐரோப்பா முழுவதையும் ஆக்கிரமித்த நாஸி இராணுவம் ஏறக்குறைய பாதி ருஸ்யாவையும் கைப்பற்றி தாக்குதல் நடத்துகிறது. உலகின் தலைவிதியை முடிவு செய்யும் கடைசிக் களமான ஸ்டாலின்கிராட் ஜெர்மனியின் முற்றுகையில் சிக்கியிருக்கிறது. படம் போர்க்களத்தில் தொடங்குகிறது. பெரும் கட்டிடங்கள் நொறுங்கிக் கிடக்கின்றன.ஜெர்மனி விமானங்கள் குண்டுகளைப் பொழிந்து செல்கின்றன. அப்பகுதி முழுவதும் கருமையாகக் காட்சியளிக்கிறது. போர் வீரர்களை இரயிலில் கொண்டு வருகிறார்கள். "மேன்மை மிகு ஸ்டாலினுடைய வீரர்களே தாய்நாட்டைக் காக்க வாருங்கள்" என்று முழக்கமிடுகிறார்கள். ஒரு படகின் மூலமாக செல்லும்போது சில வீரர்கள் தப்ப முயல்கிறார்கள்.கோழைகளுக்கு அவசியம் இல்லை என அவர்கள் சுட்டுத் தள்ளப்படுகிறார்கள். 


போர் வீரர்கள் இரண்டிரண்டு பேராக வரவைக்கப்பட்டு ஒருவரிடம் துப்பாக்கியும் மற்றவரிடம் தோட்டாக்களும் தரப்படுகின்றன. ஒருவர் இறக்க நேரிட்டால், மற்றவர் இறந்தவரின் துப்பாக்கியை எடுத்துக்கொண்டு போராட வேண்டும் என்று உத்தரவிடப்படுகிறது. இங்கு வஸிலியிடம் தோட்டாக்களே கிடைக்கின்றன. அன்றைய போரின் முடிவில் அப்பகுதியில் போர்வீரர்களின் பிணங்கள் பரவிக் கிடக்கின்றன. அங்கு வரும் ருசிய அதிகாரி கொமிசர் (commissar - பொதுவுடமைவாத அரசியல் கல்வியின் பொறுப்பாளர்) அவ்விடத்தில் உள்ள நாஸி இராணுவத்தினரை மறைந்திருந்து சுட முயல்கிறான். பிணங்களுடன் மயங்கிய நிலையில் இருந்த வஸிலி இதைக் காண்கிறான்.அவனிடம் கொடுக்கப்பட்ட தோட்டாக்கள் அப்படியே இருக்கின்றன. அதிகாரியைத் தடுக்கும் வஸிலி அவன் அனுமதியுடன் அவனிடமிருந்த துப்பாக்கியை வாங்கி 5 நாஸிக்களையும் குறி தவறாமல் சுட்டுக் கொல்கிறான்.


குருச்சேவ் தளபதிகளுடன் நிலவரம் குறித்து பேசுகிறார்.அனைவரும் பதட்டத்துடன் இருக்கின்றனர்.ஒரு தளபதி ஜெர்மனியர் பீரங்கிகள், கனரகக் கருவிகள், விமானங்கள் வைத்திருக்கிறார்கள். நம்மிடம் என்ன உள்ளது? என்று கூறித் தற்கொலை செய்துகொள்கிறார். தளபதிகள் நடுங்கியபடி போரை முன்னெடுக்க சில யோசனைகளை தெரிவிக்கின்றனர். கொமிசர் குருச்சேவிடம் போரில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையை மக்கள் பெற வேண்டும் அதன் மூலம் அவர்கள் பெருமளவில் படையில் சேருவார்கள். இதற்காக சிறந்த வீரர்கள் பற்றிய செய்திகளை நாம் அறியச் செய்யவேண்டும் என்கிறான். நான் அப்படிப்பட்ட ஒரு வீரனை அறிவேன் என்றும் கூறுகிறான்.


 பின்பு அவனால் வஸிலி, அவனது திறமையைப் பற்றியும் பிரசுரங்கள் தொடர்ந்து வெளியிடப் படுகின்றன. வஸிலி அனைவராலும் அறியப்படுகிறான்.ஸ்டாலினுடன் விருந்துண்ணவும் வாய்ப்பு கிடைக்கிறது. இதற்கிடையில் போர்க்களம், டானியா என்ற போரில் பணியாற்றும் யூத நங்கையின் அறிமுகம், காதல் என்று கதை செல்கிறது. கொமிசரும் டானியா தன்னைப் போலவே யூதனாகவும், படித்த அறிவாளியாகவும் உள்ள  டானியாவிடம் காதல் கொள்கிறான். நாஸிக்கள், மேஜர் கோனிக் என்பவன் மூலம் வஸிலியை குறி வைக்கிறார்கள். வஸிலியும் கோனிக் பற்றி அறிகிறான். இருவரும் ஒருவருக்கொருவர் தக்க தருணத்திற்காக குறி வைக்கின்றனர். இதில் டானியாவின் உதவியால் சாதுரியமாக தப்பும் வசிலி, இரண்டாவது முறையில் தனது நண்பன் லுத்மினாவை எதிர்பாராவிதமாக பலிகொடுக்கிறான். ஒருகட்டத்தில் நம்பிக்கையிழக்கும் வஸிலி அவனிடம் தன்னைப் பற்றி உண்மையை மிகைப்படுத்தி, ஒரு எதிர்பார்ப்பை உண்டாக்கி விட்டாய். என்னால் போரில் வெற்றியைப் பெற்றுத்தர இயலாது என்கிறான். 


கோனிக்கை சுடும் வாய்ப்பை களத்திலேயே ஒரு கணம் அறியாமல் உறங்கியதால் தவற விடுகிறான் வஸிலி. டானியாவை போர்க்களத்திற்கு போகவேண்டாமென்று அறிவுறுத்துகிறான். அவள் படிப்பறிவுடையவளாகவும், ஜெர்மன் மொழியும் அறிந்திருப்பதால் வேறு வகையில் பணியாற்றினால் நிறைய ருசியர்களைக் காக்கவும், ஜெர்மனியர்களை அழிக்கவும் இயலும் என்கிறான். இந்நிலையில் வஸிலி கொல்லப்பட்டதாக நாஸிக்கள் பொய்ச்செய்தியைப் பரப்புகின்றனர்.


தன் காதலைத் தெரிவிக்க முனைகையில் அலட்சியப்படுத்தியதாலும், டானியாவும் வஸிலியை நேசிப்பதாலும் எரிச்சலடையும் அவன் கோனிக்கிடம் வஸிலியின் போர்க்கள மறைவிடத்தை அறியச்செய்கிறான். போர் இறுதிக்கட்டத்தை எட்டுகிறது. அடுத்த நாள் போர் நடக்கும் அப்பகுதியை உலகமே நோக்கிக் கொண்டிருக்கிறது. அவன் டானியாவிடம் மறுநாள் களத்திற்கு போக வேண்டாம் ஜெர்மனியின் தாக்குதல் உச்சகட்டத்தில் இருக்கும், ஜெர்மனியினர் நம் மீது எதை வேண்டுமானாலும் வீசக் கூடும் என்கிறான். வஸிலியைப் போன்ற படை வீரரகள் இறந்தால் வேறு யாராவது வருவார்கள். ஆனால் நம்மைப் போன்றவர்கள் நாட்டிற்கு தேவை என்றும் கூறுகிறான். இருப்பினும் அவள் செல்கிறாள். களத்தில் டானியா கொல்லப்பட்டதாக தகவல் கிடைத்தால் கொமிசர் வேதனையடைகிறான்.



போர்க்களத்தில் வஸிலியின் இருப்பிடத்தை அடைகிறான்.தான் நிறைய தவறுகள் செய்துவிட்டதாகவும் வருந்துகிறான். டானியா இறந்துவிட்டாள் என்று தெரிவித்து விட்டு தன் உயிரை முன்வந்து கோனிக்கின் தோட்டாவிற்கு பலியாக்குகிறான். வஸிலியை சுட்டு விட்டதாக நினைத்து மறைவிடத்திலிருந்து வரும் கோனிக்கை வஸிலி சுட்டுக்கொல்கிறான். இதற்கு 2 மாதங்களுக்குப் பிறகு போரில் ருஸ்யாவின் வெற்றிச் செய்தி வானொலியில் அறிவிக்கப்படுகிறது. ஒரு மருத்துவ முகாமில் டானியாவைக் கண்டு அவளுடன் இணைகிறான் வஸிலி.


Download As PDF
Bookmark and Share
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment