பெற்றோர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பெற்றோர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

இந்தப் பெண் தலை குனியவில்லை !!

 

இரண்டு காணொளிகளையும் கண்டிருந்தால் யார் மீது தவறு என்று புரியும் . நான் பொதுவாக இது போன்ற நிகழ்ச்சிகளைக் காண்பதில்லை. இஸ்லாமியப் பெண்மணியில் ஒரு இடுகையை பதிந்திருந்தார்கள். அதில் இக்காணொளியை மையப்படுத்தி இருந்தது. அதில் பின்னூட்டமிட்டிருந்த சிலர் இதனால் இஸ்லாமிய சமூகத்திற்குத் தலை குனிவு என்று பொருள்படும்படி எழுதியிருந்தார்கள். நான் அதை மறுக்கிறேன்.



இந்த நிகழ்ச்சியின் இக்குறிப்பிட்ட பெண் பங்கு கொண்ட இரு காணொளிகளையும் கண்டேன். ஸீ தமிழ் தொலைக்காட்சி மிகச் சிறப்பாக பிரச்சனைகளை வைத்து நிகழ்ச்சியைத் தயாரித்து அடுத்தவன் பிரச்சனையைப் பற்றிப் பேசித் தனது ஆற்றாமையைத் தீர்த்துக் கொள்ளும் நபர்களின் தினவெடுத்த மூளைக்குத் தீனி போடவும், கலாச்சாரக் காவலர்கள் கரித்து கொட்டவும் ஏற்ற் வகையில் எரிச்சலைக் கிளப்பும் பின்னணி இசையுடன் ஒளிபரப்புகிறார்கள். 

இதில் இருப்பது என்னவென்று எல்லோர்க்கும் புரிந்திருக்கும். முஸ்லிம் பெண் இந்து ஆண் இருவரும் காதலித்திருக்கிறார்கள். இப்போது பெண் கருவுற்றிருக்கிறாள். ஆணோ அவளை ஏற்க முடியாது சிறைக்குச் சென்றாலும் பரவாயில்லை புகார் கொடுத்துக் கொள் என்கிறான். அவள் அழுது கெஞ்சுகிறாள். அவன் மீது புகார் கொடுப்பதற்கல்ல, சேர்ந்து வாழத்தான் இங்கு வந்தேன், அவனை வரவைத்தேன் என்கிறாள். அவனோ அவள் இவ்வளவு அவமானப்படுத்திய பிறகு சேர்ந்து வாழமுடியாது என்கிறான். அவன் திருமணம் செய்துகொள்வதுதான் தீர்வு, இல்லையெனில் அவன் மீது புகார் அந்தப் பெண் கொடுத்தால் அதை ஆதரிப்போம் என்கிறார் லட்சுமி.

உண்மையில் தலைகுனிந்து அமர்ந்திருப்பது அந்த ஆண்தான். ஆண்கள்தான் இதற்குத் தலை குனியவேண்டும். அந்தப் பெண் தலை நிமிர்ந்துதான் நிற்கிறாள். தனக்கு நிகழ்ந்த அநீதிக்கு நீதி கேட்டுத் தலை நிமிர்ந்துதானே நிற்கிறாள். இதில் என்ன தவறு ?  இதை ஏன் அப்பெண்ணுக்குத் தலை குனிவு என்று சொல்ல வேண்டும். அவனிடம் கெஞ்சிக் கேட்டதாலா ? அவனைப் போன்றவனிடம் போய்க் கெஞ்சுவது பெண்ணுக்குத் தலை குனிவுதான். அவள் கேட்ட கேள்விகளுக்கு எதுவுமே சரியான பதில் அவனிடமிருந்து வரவில்லை, அவமானப்படுத்திவிட்டாள் என்கிறான். அவளோ அவனது அண்ணன் இருப்பதால்தான் புகாரளிக்க துணிச்சலாகச் சொல்கிறான் என்கிறாள். அவன் பேந்தப் பேந்த முழிப்பதும் அவளது கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் மழுப்புவதும் அவன் பொய் சொல்கிறான் என்பதற்குப் போதுமானதாக இருக்கிறது.

ஆக மொத்தம் இவனுக்குக் கசந்து விட்டதால் மொன்னைக் காரணத்தைச் சொல்லி இவளை வேண்டாமென்கிறான். அவள் அவனுடன் வாழ்வதுதான் வேண்டும், புகாரளிக்க விருப்பமில்லை என்கிறாள். அவன் பொய் பேசுகிறவன் என்பதை ஏற்கெனவே தெரிந்துதான் காதலித்தேன் என்கிறாள். என்னை கேட்டால் இவனிடமெல்லாம் கெஞ்சுவது அவளது தன்மானத்திற்கும், பண்புக்கு இழுக்கு என்றுதான் கூறுவேன். அவன் வந்து  கெஞ்சினால் கூட இவள் ஒத்துக் கொள்ளக் கூடாது. இவனைத் தூக்கியெறிந்து விட்டு வாழவேண்டும். வாழ்க்கை விரைவில் அவளுக்கோர் நல்வழிகாட்டும். அவளைப் பார்த்தால் பக்குவப்பட்டவளாகவே தெரிகிறது.

பெண்கள் என்றாலே காதலித்து ஏமாற்றுகிறவர்கள் என்று குறுந்தகவல் அனுப்புகிறவர்கள், ஒரே சமயத்தில் இரண்டு மூன்று ஃபிகர்களுடன் சாட்டிங் செய்து கொண்டே "வேணாம் மச்சா வேணாம் இந்தப் பொண்ணுங்க காதலு" என்று நிலைத்தகவல்கள் போட்டு "லைக்"கள் வாங்கும் அறிவாளிகளுக்கு இந்தப் பெண்ணின் காதல் சமர்ப்பணம். இது பெண்களின் காதலுக்கு ஒரு உதாரணம்.

பெண் காதலிக்க மறுத்ததற்காக அமிலத்தை ஊற்றுவது, பாலியல் வன்முறையை ஏவுவது, கொலை செய்வது என்று வெறியாட்டம் போடும் ஆண்களுக்கு நடுவில் காதலுக்காக இரந்து நிற்கும் இவள் பெண்களின் காதலுக்கு ஒரு உதாரணம்.

ஆண்கள் எல்லாம் தியாகிகள் என்பது போலவும் பெண்கள் என்பவர்கள் பொழுது போக்கவும், பணத்துக்காகவும், ஊர்சுற்றுவதற்காகவும்  மட்டுமே காதலிப்பதாக நடிக்கிறார்கள் என்று அயோக்கிய நடிகன் பேசும் குப்பை வசனத்துக்காகவும் காது வரை சிரித்து மகிழும் ஆண்களுக்கும் இது சமர்ப்பணம்.

இதை வைத்து காதலிக்கும் பெண்களுக்கு எச்சரிக்கை செய்வோர்க்கும் சமர்ப்பணம்.

ஆண்கள் தங்களுக்குள் பேசிக்கொள்ளும்போது மேட்டர் முடிச்சியா, கை வச்சிட்டியா என்று சர்வ சாதாரணமாகக் கேட்டுக் கொள்வார்கள். அதே ஒரு பெண்ணைப் பற்றிப் பேசினால் அவளே ஒரு மேட்டர், கெட்டுப் போனவள், சோரம் போனவள் என்று சொல்வார்கள். பழி ஓரிடம் பாவம் ஓரிடம். பெண்களைக் குற்றவாளியாக்கும் ஆண்களின் இரட்டை நாக்கு. ஆண்கள் கலவி செய்தால் அது வெற்றி, அதையே பெண்கள் செய்தால் அது தோல்வி. நல்ல மதிப்பீடு.

ஆண்கள் தாங்கள் அயோக்கியர்களாக இருப்பது பற்றிக் கவலைப்பட மாட்டார்கள். பெண்கள் ஏன் அயோக்கியனையே காதலிக்கிறார்கள், அவர்களையே விரும்புகிறார்கள் என்று எரிச்சல்படுவார்கள்.
இப்போது இந்தப் பெண்ணுக்கு  இந்த சமூகத்திடம் கெட்ட பெயர், அல்லது இந்த சமூகமே காறித் துப்புகிறது என்ற கருத்தை எடுத்துக் கொள்வோம். இந்த நிகழ்ச்சியின் போது இந்தப் பெண்ணுடைய தங்கையும் யாரையோ காதலிப்பதாக அவன் சொல்லி விட்டான். இதனால் அந்தப் பெண்ணுக்கும் கெட்ட பெயர். இங்கு இந்த சமூகம் என்ன சொல்கிறதென்றால், ஒரு பெண் காதலித்தால் அவள் களங்கப்பட்டவள். இதெல்லாம் இந்த சமூகம் வைத்திருக்கும் மதிப்பீடுகள்.

நான் மனித உணர்வுகளுக்குத்தான் மதிப்பளிக்க வேண்டும் என்று சொல்கிறேன். ஜாதி, மதம் போன்ற மாயக் காரணங்களுக்கல்ல. மனிதனுக்குத்தான் மதமே தவிர, மதத்துக்காக மனிதனல்ல. அந்த வகையில் காதல் என்பது மனித உணர்வுகளில் ஒன்று. நான் காதலை ஆதரிக்கிறேன். அதுதான் பெரிய சவால். இதில்தான் ஆபத்தும் அதிகம், அதிக கேள்விகளுக்கும் பதிலளிக்க வேண்டும்

ஒன்று சமூகத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டது என்பதாலேயே அது சரியானது என்றாகிவிடுமா ? இல்லை ஒன்றை இந்தச் சமூகம் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதாலேயே அது தவறானதாகிவிடுமா? நான் அநீதியான இந்த சமூகத்தையே ஏற்றுக் கொள்ளவில்லை. அது வைக்கும் அளவுகோலையும் மதிப்பதில்லை. இந்த சமூகம் எதை மதிக்கிறது என்று சொன்னால் ஒரு பெண் படிக்கிறாள், வேலைக்குப் போகிறாள். திருமணம் செய்யும் வயது வருகிறது. பின்பு வேலையையும் விட்டு விட்டு பிறந்த வீட்டிலிருந்து இன்னொரு வீட்டிற்குச் சென்று கணவனுக்கும்  அவன் வீட்டினர்க்கும் பணிவிடை செய்து வாழ வேண்டும். 


எத்தனை பவுன் நகை, எத்தனை பணம், சீதனமாக என்னென்ன கொடுத்தார்கள். என்பதைப் பற்றி சமூகத்தினர் தமக்குள் பேசிக்கொள்வர். பொண்ணு மாப்பிள்ளை பொருத்தம் எப்படி, அழகு எப்படி குடும்பம் எப்படி என்றெல்லாம் கருத்துப் பரிமாற்றங்கள் நடக்கும்.  இதுதான் இந்த சமூகம் மெச்சத்தக்க குணம் என்று எதைச் சொல்கிறார்கள். இந்த மாதிரிதான் பெண்கள் இருக்க வேண்டும். வேறு ஜாதிக்காரனுடன் திருமணம் கூடாது. நடந்தால் கொலை கூட நடக்கும்.  இப்படி ஜாதிவாரியாக சீதனம், நகை என்று என்ற தலையை அடகு வைத்து கடன் வாங்கி வணிகத்தைத்தான் நடக்கும் திருமணம் சமூகம் கொண்டாடுகிறது. ஜாதிக்காரன் என்பதற்காக கொஞ்ச நஞ்சம் சீதனம் கொடுக்கல் வாங்கலில் குறைந்தால் கூட திருமணம் நடப்பது பிரச்சனை ஆகிறது. இப்படிப் பெரும்பான்மையான திருமணங்கள் நடந்தாலும், சீதனத்திற்காக மருமகளைக் கொடுமை, கொலை செய்வது வரை நடக்கிறது. இப்படி நடக்கும் திருமணங்கள் கூட சில நேரம் தோல்வியில் முடிகின்றன. இதையெல்லாம் எதற்குச் சொல்கிறேன் என்றால் இத்தனை பிரச்சனைகள் இருந்தாலும், திருமணமே தவறு திருமணமே வேண்டாம் என்று கூட வேண்டாம் சீதனம் தருவது தவறு என்று கூட பெரிய அளவில் மாற்றத்தைக் காணோம். திருமணம் என்ற சடங்கு அல்லது வணிகம் சமூகத்தின் முழு ஆதரவுடன் ஆரவாரமாக நடந்து வருகிறது.

அனைவரது ஆதரவு, பொருளாதாரச் சிக்கலின்றி நடக்கும் திருமணங்களிலேயே இத்தனை பிரச்சனையிருக்கும்போது, பக்குவமும், அனுபவமும் இல்லாத இரண்டு பேர் எல்லோரையும் எதிர்த்து நடக்கும் காதல் திருமணங்களில் இன்னும் சிக்கல்களும், சவால்களும், போராட்டமும் அதிகம் தோல்வியடையும் வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. ஒழுக்கங்கெட்டவர்கள், ஓடுகாலிகள், குடும்ப மானத்தை வாங்கியவர்கள் என்ற பட்டப்பெயர்கள் சமூகத்திடமிருந்து இலவசமாகக் கிடைக்கும். இப்படி இருக்கிறது நிலைமை. காதலிப்பவர்களெல்லாம் பெற்றோரை ஏமாற்றுகிறவர்கள், மானத்தை வாங்குகிறவர்கள் என்றெல்லாம் ஏசுகிறார்கள். பெற்றோர் நடத்தி வைக்கும் வணிகத் திருமணங்களை ஏற்றுக் கொள்ளும் ஆணும் பெண்ணும் தன்மானமற்றவர், உணர்ச்சியற்றவர்கள் என்று கருதலாமா ?

யாரும் நம்மை 20 வருடம் பெற்று வளர்த்துக் காப்பாற்றும் பெற்றோரை ஏமாற்றியே ஆகவேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு தெரியாமல் ஊர் சுற்றுவதில்லை,  வேறு மத, ஜாதிக்காரனைக் கட்டிக் கொண்டு ஓடுவதில்லை. நான் இன்னாரைக் காதலிக்கிறேன் என்று வீட்டில் சொல்லுமளவுக்கு பக்குவப்பட்டவர்களாகவா பெற்றோர் இருக்கிறார்கள். குறைந்தபட்சம் உயிருக்காவது உத்தரவாதமிருக்கிறதா ? காதலென்றாலே கல்லைப் போட்டுக் கொல்லுமளவிற்கு ஜாதி வெறியும், மதவெறியும் பிடித்து இருக்கிறார்கள். தலையை வெட்டிக் கொல்கிறார்கள்., கழுத்தை நெரிக்கிறார்கள், நஞ்சை ஊட்டுகிறார்கள். எரித்தும் கொல்கிறார்கள். கட்டாயத் திருமணம் விருப்பமில்லாம செய்விக்கிறார்கள். காதலை ஏற்றுக் கொள்வது போல் நடித்து வீட்டுக்கு வரவைத்துக் கொல்கிறார்கள். இல்லாததும் பொல்லாததும் சொல்லிப் பிரித்து விட முயற்சிக்கிறார்கள். இப்படி எழவெடுத்த எதற்கும் பயனில்லாத ஜாதியைக் கட்டிக் கொண்டுதான் வெறிகொண்டு அலையும் பெற்றோர்கள் எதற்கும் வெட்கப்பட மாட்டார்கள். காதலிப்பவர்கள் தவறு செய்கிறார்களாம், பெற்றோரை ஏமாற்றுகிறார்களாம்.

தனிப்பட்ட மனிதர்களின் திருமணத்தில் கூட மதமும், ஜாதியும்தான் போலி கௌரவம், குடும்பமானம் என்ற பெயரில் மூக்கை நுழைக்கிறது. அதற்காக பெற்ற பிள்ளைகளின் விருப்பத்தையும் நிராகரிக்கிறார்கள் பெற்றோர். ஒரு வேளை பெற்றோர் சம்மதித்தாலும் கூறுகெட்ட ஜாதி, மத, பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்ட கூறு கெட்ட சமூகம் அதை தடுக்கிறது.

எல்லோரும் முகம் சுளிக்கும் இன்னொன்று, இவர்கள் வீட்டிலேயே திருமணத்திற்கு முன்பு உறவு கொண்டார்கள், அவள் கருவுற்றாள் என்பது. இது தவறாகவே இருக்கட்டும். நானும் இதைத் தவிர்க்கவே சொல்கிறேன். இருப்பினும் இதை ஒரு உலக மகாக் குற்றமாகச் சொல்வதால் இந்தப்புனிதத்தையும் கேள்வி கேட்க வேண்டும்.  வீட்டிலேயே இக்கூத்தைச் செய்திருக்கிறார்கள் என்றால் எவ்வளவு மோசமானவர்களாக இருந்திருக்க வேண்டும் என்பார்கள். இதே வெளியில் போய் செய்திருந்தாலும் வெளியே போய்க் கூத்தடித்திருக்கிறார்கள் என்பார்கள். சரி இப்போது திருமணத்தில் என்ன நடக்கிறது ? யாரென்றே பேசிப் பழகாத ஆணும் பெண்ணும் திருமணம் செய்கிறார்கள். இப்போது அலைபேசியின் புண்ணியத்தால் பேசிப் பழக வாய்ப்புக் கிடைக்கிறது. அதே 10 வருடங்கள் முன்னால் என்ன நடந்தது ? யாரென்று தெரியாத ஒருவருடன் திருமணம் செய்த பிறகு அன்றிரவு உடலுறவு கொள்ள வேண்டும். அதற்குப் பிறகு அவருடன் குடும்பம் நடத்த வேண்டும். அந்த நபருக்கு எய்ட்ஸ் இருக்கிறதா என்று கூட சந்தேகப்படத் தேவையில்லை. ஏனெனில் இது பெற்றோர் உற்றார் பணம் செய்து ஊரைக் கூட்டி செலவு செய்து வைத்த திருமணம், புனிதமானது. பேசாமல் கொள்ளாமல் உடலுறவு கொண்டுவிட்டு அடுத்த நாளிலிருந்து பேசிப் பழகிக் கொள்ளலாம். வாழ்ந்து கொள்ளலாம். இந்த அசிங்கத்தை ஒன்றும் உறுத்தலில்லாமல் ஏற்றுக் கொள்பவர்கள் 7 வருடங்கள் நன்கு பழகி புரிந்து காதலித்தவர்கள் செய்தால் அதைக் காறித் துப்புகிறார்கள். நன்றாக இருக்கிறது.

என்ன இருந்தாலும் பெண் இதை ஒத்துக் கொள்ளலாமா ? இப்போது அவள்தானே அவமானப்பட்டு நிற்கிறாள். பெண் பலவீனமானவள் என்பதால் தானே ஒரு ஆண் அவளிடம் அன்பைக் காட்டி தேனொழுகப் பேசி உடலுறவுக்கும் சம்மதிக்க வைக்கலாம். இதுவும் பெண்களின் பலவீனம் 


பெற்றோரும் சமூகமும் சேர்ந்து, திருமணம் செய்து கொண்டு கணவனுக்கு ஒத்தாசையாய் வாழ்வதே சிறந்த வாழ்க்கை கலாச்சாரம் என்றும் நம்ப வைக்கலாம். இதுவும் பெண்களின் பலவீனம். 

இதை மட்டும் பெண் இதை எப்படி ஏற்றுக் கொள்ளலாம் என்று கேட்கிறீர்களா ?  இல்லையே அதுதான் பெண்களுக்கு நல்லது என்றுதானே போதிக்கிறார்கள். இரண்டையும் நம்பித்தான் அவள் செயல்படுகிறாள். இதில் ஒன்றை மட்டும் குறை சொன்னால் எப்படி?

ஒரு பெண் கருவுற்றால் அது அவளது "தவறோ" அல்லது அவளுக்கு மட்டுமே "பொறுப்பு" என்று ஆகாது. அதை செய்த ஆணுக்கும் அதில் பாதி பங்கு உண்டும். ஒரு பெண் தான் பெற்ற குழந்தையை குப்பைத் தொட்டியில் போடுகிறாள் என்றால் அது அவள் மட்டும் செய்யும் தவறல்ல. அதற்குக் காரணமான அந்த ஆணும்தான் அதற்குப் பொறுப்பாவான். அது போலத்தான் இதுவும். குழந்தை பெண்ணின் வயிற்றில் இருப்பதால் மட்டும் அவள் களங்கமானவள், தன்னையே இழந்து விட்டாள், கற்பு போச்சு, கண்ணியம் போனது என்று சொல்வதெல்லாம் வெறும் கண்துடைப்புகளே. அவைகள் சொற்பிழைகள், கருத்துப் பிழைகள். பாதிக்கப்பட்டவரையே குறை சொல்லும் தந்திரம்.

5 வயது சிறுமி கற்பழிக்கப்பட்டாள் என்று செய்தி வருகிறது. 5 வயது சிறுமிக்கு கற்பு எங்கே இருக்கிறது என்று தோண வேண்டாமா ? அது மாதிரிதான் இதுவும் பெண்ணுக்கு மட்டும் எப்படி கண்ணியம் கற்பு எல்லாம் அழிகிறது, மானம் போகிறது இந்தப் போலிக் கற்பித்தத்தைச் செய்த சமூகத்தை நாம் ஏன் மதிக்க வேண்டும். பெண்களின் உணர்வை மதிக்காத இந்த சமூகத்தை ஏன் நாம் மதிக்க வேண்டும். கற்பு, கண்ணியம், பாதுக்காப்பு, குடும்ப மானம் என்று எல்லா எழவையும் பெண்களின் மீது சுமத்தி அவர்களை அலைக்கழிக்கும் சமூகத்தின் தூற்றுதலுக்கு ஏன் செவிசாய்க்க வேண்டும்.

இந்தக் கற்பு, ஆணாதிக்கம் பற்றித் தெரிந்தவரே அதை எதிர்க்காமல், பாதிக்கப்பட்ட பெண்ணைக் காரணம் காட்டி, நான் அப்பவே சொன்னேனே கேட்டியா, இப்படி ஆயிட்டியே, மானம் போச்சே, வாழ்க்கை போச்சே என்கிற பாணியில் பேசுகிறார்கள்.

பாதிக்கப்பட்ட இந்தப் பெண் என்ன செய்ய வேண்டுமோ அதைத்தான் செய்கிறாள். இதில் அவளது மானமோ, கண்ணியமோ எதுவும் போகவில்லை. காதலிக்கும் பெண்களை இழிவாகப் பேசுகிறவர்கள்தான் கண்ணியமில்லாதவர்கள். அப்படி மானம் போனது என்று சொல்கிறவர்கள் இன்னும் கொஞ்சம் சிந்திக்கட்டும். அவள் தலைகுனியவில்லை. தேவையுமில்லை.

காதலிக்கும் பெண்களே !!

ஆண்கள் எச்சரிக்கை
சமூகம் எச்சரிக்கை
கண்ணியம் எச்சரிக்கை
தூற்றுதல் எச்சரிக்கை
கற்பிதங்கள் எச்சரிக்கை
Download As PDF
Bookmark and Share

Post Comment

விநோதினிக்கு அஞ்சலி - ஆணாதிக்கத்துக்கு எப்போது அஞ்சலி செலுத்துவது ?

விநோதினி இறந்து விட்டாள். கொல்லப்பட்டுவிட்டாள். மிகவும் கொடிய வதையை அனுபவித்துவிட்டு இறந்து விட்டாள். தன்னை இந்நிலைக்கு ஆளாக்கியவனும் தன்னைப்போலவே துன்பத்த்தை அனுபவிக்க வேண்டும் என்ற இறுதி ஆசையுடன் உயிரை விட்டு விட்டாள். 


டெல்லி கொடூரத்தால் இறந்த ஜோதியைப் போலவே விநோதினியும் நான் வாழவேண்டும், தன்னை இந்த நிலைக்கு ஆளாக்கியவர்கள் வாழக்கூடாது என்ற ஆசையை வெளிப்படுத்தினார்கள். தாம் அனுபவித்த கொடிய இன்னலிலிருந்து வெடித்த ஆத்திரம்தான் அது.

ஒரு வேளை ஜோதி உயிர் பிழைத்திருந்தாலோ, அவளது சிறுகுடல் பாதிக்கப்பட்டதால், நீர் ஆகாரம் மட்டுமே அருந்தி உயிர் வாழ்ந்திருக்க முடியும். விநோதினிக்கோ பார்வையே பறிபோய் விட்டது. வன்முறையை எதிர்கொண்ட போதே அவர்கள் பாதி செத்து விட்டார்கள். மீதியும் மருத்துவர்களின் தோல்வியில் போனது.

இந்த கேடுகெட்ட வெறிபிடித்த உலகத்தில் பிறந்ததால் ஆயிரமாயிரம் பெண்கள் அனுபவிக்கும் துன்பங்களின் எடுத்துக் காட்டுகள்தான் ஜோதி சிங் பாண்டேக்களும், விநோதினிகளும்.

பாலியல் வன்முறையும், ஆணாதிக்க வெறியும் சேர்ந்து பழிவாங்கிய உயிர்கள், ஆணாகப் பிறந்ததற்காக எத்தனை முறைதான் வெட்கப்படுவதும், வேதனைப்படுவதும் ?

இனிமேல் மரண தண்டனை எதிர்த்துப் பேசவும் வெட்கமாயிருக்கிறது. அதைத் தவிர்த்து விட்டு, இனி விநோதினிகள், ஜோதிகள் பாதிக்கப்படாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்று மட்டுமே கவலைப் பட வேண்டும் என்று நினைக்கிறேன்.

பெண்கள் மீதான வன்முறைகளுக்குக் காரணமாக இருப்பது, அவர்களை உணர்வுடையவர்களாகக் கருதாததே ஆகும். அவர்களை வெறும் பொருளாகவே காண்கிறார்கள் ஆண்கள். இதற்கு ஆணாதிக்க சிந்தனையே முதற்காரணமாகும். இதை போற்றி வளர்க்கும் சமூகமும் அதை ஊற்றி வளர்க்கும் ஊடகங்கள், வணிகங்கள், சடங்குகள் என அனைத்துமே இதற்கான காரணிகளே ஆகும்.

 ஒரு ஆணின் அல்லது ஒரு பெண்ணின் அன்பு, ஆசை, காதல், காமம், நட்பு, நேசம், மோகம், விரகம் முதலாகியவைகளைப்பற்றி மற்றொரு பெண்ணோ, ஆணோ மற்ற மூன்றாமவர்கள் யாராவதோ பேசுவதற்கோ, நிர்ணயிப்பதற்கோ, நிர்பந்திப்பதற்கோ - சிறிதுகூட உரிமையே கிடையாது என்று சொல்லுகிறோம்.
-பெரியார் (குடிஅரசு, 18.1.1931)


பாலியல் வன்முறையாகட்டும், அமிலம் ஊற்றுவதாகட்டும், அல்லது கருணைக் கொலையாகட்டும் எல்லாவற்றுக்கும் அடிப்படை ஆணாதிக்க உணர்வு மட்டுமே. பாலியல் வன்முறை என்பது கலவி அல்லது உடலுறவு என்பதை மட்டும் கொண்டு உடைதான் காரணம் நடத்தை தான் காரணம் என்று அளவிடக் கூடாது. அது ஆதிக்க உணர்வு வன்முறை ஆகியவற்றையும் உள்ளடக்கியது.

இவை வெவ்வேறு மத கலாச்சார சமூகங்களிலும் நீக்கமற நிறைந்துள்ளன. ஒரு ஆண் தன் மகள் கீழ்ஜாதிக்காரனை மணந்து கொண்டதால் பெற்ற மகளென்றும் பாராமல் கொல்கிறான். அவளது உயிரை விட தனது, கௌரவம் என்று தான் நம்பும் ஜாதிப்பெருமை அவன் கண்ணை மறைக்கிறது. அதற்காக மகளைக் கொன்ற தந்தை என்ற பட்டத்தை சுமக்கவும் பெருமிதத்துடன் கொல்கிறான். ஜாதிகள் நிறைந்த இந்து மதத்தில் மட்டுமல்ல, பாகிஸ்தான், ஈராக், வங்கதேசம் போன்ற முஸ்லிம்கள் சமூகத்திலும், சீக்கிய சமூகத்திலும் கேள்விப்படுகிறோம். இதில் பெண் ஒருவனை மணக்க் விரும்புவது அவர்கள் குடும்பத்திற்கு இழுக்கு என்று கருத வைப்பது எது ? தான் சொன்னவனை, தகுதிக்கு உட்பட்டவனாகக்கருதும் ஒருவனை மட்டுமே மணமுடிக்க வேண்டும் என்று பெண்ணின் உரிமையை மறுக்கும் ஆணாதிக்கம். அதற்காக பெற்றவளென்றும் பாராமல் கொலை செய்யக் கூடத் தயங்குவதில்லை.

அடுத்து அமிலம் ஊற்றும் அசிங்கம் பிடித்த எண்ணங்கள் ஏன் வருகின்றன. இது போன்று அமிலத் தாக்குதலுக்குப் பெரும்பாலும் பெண்களே ஆளாகின்றனர். பெரும்பாலும் திருமணமாகாத இளம்பெண்கள். செய்கிறவர்கள் இளைஞர்கள். இவர்களிருவருக்கும் என்ன கொடுக்கல் வாங்கல் தகராறா இருக்கப்போகிறது, காதல், பாலியல் உறவு, திருமணம் உறவுச் சிக்கல் அரிதாக வேறு பிரச்சனைகள். இதில் முக்கியமானது காதல், ஒரு பெண் காதலிக்கும் உரிமைக்கு அப்பா என்ற ஆண் குடும்பம், கௌரவம் என்ற ஆணாதிக்கக் கருத்தியல்களால் எதிர்க்கும் அதே நிலையில், ஒரு ஆண் தன்னைக் காதலிக்காத பெண் அடுத்தவனுக்குக் கிடைக்கக் கூடாது என்ற வெறியில் அவள் மீது அமிலத்தை ஊற்றுகிறான். அவளுக்குத் தன்னை ஏற்றுக் கொள்ளவோ, நிராகரிக்கவோ கூட உரிமை இருப்பதாக எண்ணிப் பார்ப்பதில்லை. அல்லது ஆணாதிக்கம் அதை ஏற்றுக் கொள்வதில்லை. கொலை செய்வதில் இருக்கும் வக்கிரத்தை விடப் பல மடங்கு கொடூரமானதும், கேவலமானதுமான  பெண்ணின் முகத்தில் அமிலத்தை ஊற்றி அவள் தனது தன்னம்பிக்கையாகக் கருதும் அழகைச் சிதைப்பதில் இன்பமடைகிறது இந்து கருமாந்தரங்கள்.

தெருவில் போகும் தனக்கு தொடர்பில்லாத உரிமையில்லாத ஒரு பெண் தனியாளாக இருப்பதால் சீக்கியடிப்பதும், கேலி பேசுவதும் உரிமை நினைக்கும் ஆணாதிக்க ஓநாய்கள், இரவு நேரமென்றால் அவளை வன்புணர்ந்து கூடப் பாடம் கற்பிக்க தனக்கு அதிகாரமிருப்பதாய் நினைப்பது எத்தகைய கேவலமான மனநோய்.

சமூகத்தின் தாக்கமின்றி வெளியில் வாழும் ஒரு மனிதனுக்குப் பெண் மீது எத்தகைய கண்ணோட்டம் இருக்கிறதோ அதே கண்ணோட்டம்தான் ஒரு சிறந்த பண்பட்ட குடும்பத்தில் பிறந்து வளரும் ஒவ்வொரு ஆணுக்கும் இருக்கிறது. ஒரு இளைஞனோ, சிறுவனோ பெண்கள், பாலியல் குறித்த கருத்துக்களை சமூகத்திலிருந்தே, ஊடகங்கள், திரைப்படங்கள் மூலமே கற்கிறான். அவை என்ன கற்பிக்கின்றனவென்று நமக்குத் தெரியும். பாலியல் குறித்த அறிவியல் கண்ணோட்டமின்றி அவை வெறும் கிளுகிளுப்பாகவும், அருவருப்பானதாகவும், பெண்களுக்கு ஒழுக்கக் கேடாகவும், ஆண்கள் மறைவாக அன்பவித்துக் கொள்ளவும் ஏற்றவாறே இருக்கிறது.

திரைப்படங்களை இதற்கு ஒரு முக்கியமான காரணமாகச் சொல்லலாம். திரைப்படங்கள் நம்மை நேரடியாகத் தாக்குவதில்ல. அதை நாம் அப்படியே பின்பற்றுவதில்லை. ஆனால் எல்லா வகையிலும் நம்மை ஆக்ரமித்திருக்கிறது. ஏன் தமிழ்மணத்திலேயே பெருமாலும் திரைப்படம், அதனைச் சார்ந்த செய்திகள்தான்.

திரைப்படப் பாடல்கள், நடிகர்கள், வசனங்கள், பட்டப் பெயர்கள் எல்லா இடத்திலும் மக்களால் பயன்படுத்தப்படுகின்றன.

திரைப்படத்தில் என்னத்தைக் காட்டுகிறார்கள் பெண்களைப் பற்றி.

பெண்கள் திரைப்படத்தில் வருவதே ஆண்கள்/ நாயகர்களால் காதலிக்கப்படுவதற்குத்தான், அவர்கள் செய்யும் அனைத்துச் செயல்களும், அழுவதும், சிரிப்பதும், துடிப்பதும், ஓடுவதும் காதலுக்காகவே/காதலனுக்காகவே/

காதலன் என்பவன் அயோக்கியனாக இருந்தாலும், அவனிடமிருந்து ஒரு நல்ல காரணத்தைக் கண்டுபிடித்து அவனைக் காதலிப்பாள்

அவளைக்கவர்வதற்காக நாயகன்/ என்ன பொறுக்கித்தனம் செய்தாலும் அது நாயகத்தனமாகவே சித்தரிக்கப்படுகிறது. அவன் அவளைத் துரத்தலாம், கடத்தலாம், துன்புறுத்தலாம், புணரலாம், ஏன் கொலை செய்யக் கூட முயலலாம். இது பருத்தி வீரன், பாலாவின் அனைத்துப் படங்களும், தனுஸ், சிம்பு, கார்த்தி படங்கள். புதிய பாதை மூவேந்தர்.

பெண்களைக் கேலி செய்யும் ஈவ் டீஸிங், உடலைக் கிண்டல் செய்வது என்பது போல பெண்களைக் கிண்டல் செய்வது, மேலும் கீழும் தொட்டு விளையாடுவது, உரசுவது, இடிப்பது, உடைகளை பிடித்து இழுப்பது போன்ற பாடல்கள் சிவாஜி, மகோராமச்சந்திரன் காலத்திலிருந்து மாஸ்டர் மகேந்திரன் காலம் வரை தொடரும் பாரம்பரியம். அது நகைச்சுவையாம். பெண்கள் மீது ஒழுக்கத்தை வலியுறுத்தவும் தயங்குவதில்லை.

பாடல் காட்சிகள் பாதி செமிபோர்ன். இடுப்பில் முத்தம் கொடுப்பது, மார்பில் முகத்தை மோதுவது, மொத்த உடலையும் மோப்பம் பிடிப்பது தடவுவது இன்னும் பலதும்.

விவேக், விஜய், சிம்பு, தனுஷ், சந்தானம் வகையறாக்கள் சொல்லும் பெண்களுக்கான வியாக்கியானங்களை எல்லாம் ஆண்களுக்கு தம் ஆணாதிக்க அரிப்பை சொறிந்து கொள்ள நல்ல சந்தர்ப்பம் கொடுக்கின்றன. பீயை மிதிச்சது போல முகத்தைச் சுளித்துக் கொண்டு சந்தானம் "மச்சா இந்தப் பொண்ணுங்க இருக்காளுங்களே" என்று தொடங்கினான் என்றால் பெண்கள் உட்பட அனைவரும் சிரிக்கத் தொடங்கினால் அந்தக் கருத்தைக் கேள்விகளின்றி நாம் ஏற்றுக் கொண்டோமென்றுதானே பொருள்.

கொல்றா அவள, வெட்றா அவள, கொலவெறி வகைப் பாடல்களெல்லாம் ஆண்களைத் தியாகியாகவும் பெண்களுக்கு எதிரான வன்முறையையும், வெறுப்பையும் எவ்வளவு அழகாகச் சொல்கின்றன. காதல் தோல்விப் பாடல்கள் என்றால் காதலியை நோக்கிப் பாடுவதாக இல்லாமல் "பெண்கள் என்றால் பொய்யா" என்று மொத்தப் பெண்களையே கேள்வி கேட்கிறதே. வெறுப்பைக் காட்டுகிறதே

அதே நேரம் ஆண்களின் பொறுக்கித் தனத்தைக் கொண்டாடுகிறது.

பெண்களிடமிருது ஒதுங்கியிருக்கும் ஆண் சமூகம் இது போன்ற திரைப்படங்களிலிருந்து எதைக் கற்கும் ? பெண்கள் என்றால் காதலிக்க, செக்ஸ், ஒழுக்கம் என்பதைத்தவிர வேறு என்னதான் இவை சொல்கின்றன.

பாலியலிலிருந்து எல்லாவற்றையும் தேவைப்படும் ஏற்ற இறக்கங்களுடன் வெளிப்படையாக விவாதிப்பதே ஒரே வழியாக இருக்கும். பெற்றோர்க்கு தனது மகன் தம்மடிப்பதோ, தண்ணியடிப்பதோ எப்படித் தெரிவதில்லையோ அது போலவே அவன் பொது இடங்களில் பெண்ணிடம் எப்படி நடந்து கொள்கிறான் என்பதையும் அவர்கள் அறிவதில்லை.

என் மகன் ஒரு போதும் திருட மாட்டான், கொலை செய்ய மாட்டான் என்பது எல்லாப் பெற்றோரின் நம்பிக்கை. அது பெரும்பான்மையாக உண்மையாக இருக்கலாம். ஆனால் பெண்கள் பற்றி என்ன நினைக்கிறான், தன் தங்கை, அக்கா, அம்மா வயதிலிர்க்கும் பிற பெண்கள் மீது அவன் நடவடிக்கை எப்படி இருக்கிறது என்று எண்ணிப்பார்த்தால், ஒவ்வொரு அம்மாவும் நொந்து போவாள்.

பெண்கள் மீதான ஆண்கள் கொண்டிருக்கும் கருத்துகளே வன்முறைகளுக்கு மூலமாகக் கருதுகிறேன். பெண்குழ்ந்தைகளை வளர்ப்பது போல் ஆண் குழந்தைகளையும் ஒழுக்கமுடன் வளர்க்க வேண்டும். பெண்களை மதிக்கக் கற்றுக் கொடுக்க வேண்டும். இதையும் பெண்களால் மட்டுமே செய்ய முடியும். என் மகனால் எந்தப் பெண்ணுக்கும் துன்பம் நேராது என்று நம்பிக்கையுடன் சொல்லும்படி வளர்க்க வேண்டும்.

இந்த விநோதினி காதலிக்க மறுத்ததால் மட்டுமல்ல, ஏற்கெனவே இவர்களிருவரும் காதலர்களாக இருந்தவர்கள்தான் என்றும் சொல்கிறார்கள். காதலர்களாக இருந்தாலும் ஒரு நபருக்குப் பிடிக்க வில்லை என்றால் விலகிவிடுவதுதான் முறை அது கசப்பாக இருந்தாலும். விநோதினி செய்தது தவறில்லையா என்றால், எத்தனையோ ஆண்கள் வயிற்றில் புள்ளையைக் கொடுத்து விட்டு கம்பி நீட்டுகிறார்கள். பெண்கள் என்ன அமிலத்தையா ஊற்றிக் கொண்டிருக்கிறார்கள். அப்படி ஊற்றுவதென்றால் எத்தனை ஆண்கள் மீது ஊற்ற வேண்டும்.

டெல்லி வன்புணர்வுக்காக வாழ்க்கையிலேயே முதன்முறையாக பாலியல் வன்முறைக்கு எதிராக வாயைத் திறந்தவர்கள், உச் கொட்டி விட்டுப் பின்னர் இவளுங்க ஒழுங்கா இருந்தாத்தான ? என்று வெறியேற்றுகிறார்கள். கணவனாக இருந்தாலும் பெண் விருப்பமின்றி உடலுறவு கூடாது என்பதுதான் நியாயம். பெண் ஆபாசமாய் உடையணிந்தால் வன்முறை செய்யலாம் என்று உரிமை கோரும் மனநோயாளிகளுக்கு இதுதான் பதில்.

பெண்களுக்கு எதிரான எல்லா வகையான கருத்துக்களையும் இயன்ற வழியிலெல்லாம் எதிர்க்க வேண்டும். ஒரு கருத்து சமூக அளவில் ஏற்றுக் கொள்ளப்படும்பொது ஏனென்றால் அது வன்முறைகளையும் குற்றங்களையும் நியாயப்படுத்தும்.
Download As PDF
Bookmark and Share

Post Comment

திருமணச் சந்தையின் நிலவரம் அச்சமாக இருக்கிறது - இவர்கள் இப்படித்தான் - 3

என்னவாகப் போகிறது தெரியவில்லை. எதிர்காலத்தில் திருமணத்திற்கான சடங்குகளும் செலவுகளும் மிகப் பெரிய அளவில் பரிணமிக்கப்போகின்றன என்பது  மட்டும் தெளிவாகத் தெரிகிறது. மாப்பிள்ளை வீட்டினரின் பேராசை தெரிந்த்த கதைதான். தற்போது அது முன்னேறி பெண் வீட்டுக்காரர்கள் ஆட்டம் போடத் துவங்கியுள்ளனர்.

பெரும்பான்மையான பெண்கள் இன்னும் 50 வருடம் பின்னோக்கியே வாழவேண்டிய சூழலில் வசதியும் வாய்ப்பும் ஓரளவு வாய்க்கப் பெற்றவர்களோ, தமக்குக் கிடைத்த வாய்ப்பை வேறுவழியில் பயன்படுத்தி வருகின்றனர். வரதட்சணைக் கொடுமைக்கு எதிரான வழக்குகளை தவறாகப் பயன்படுத்துகிறவர்கள், பாலியல் வன்முறை வழக்குகளைத் தவறாகப் பயன்படுத்துகிறவர்கள் என பட்டையைக் கிளப்புகின்றனர். இதே போல் தீண்டாமை வன்கொடுமை வழக்குகளையயும் சிலர் தவறாகப் பயன்படுத்துகின்றனர். இதையே சாக்காக வைத்து இது போன்ற வரதட்சிணைக் கொடுமை, தீண்டாமை, பாலியல் வன்முறை வழக்குகளெல்லாமே பொய்யாக சித்தரிக்கப்படுபவை என்று சொல்லி வருவதையும் நாம் காண்கிறோம்.

தற்போது கணவர் சங்கம் வைத்து ஆண்கள் உரிமைக்காகப் போராடும் நிலைக்கு வந்திருக்கிறார்கள். இதில் நான் சொல்ல வந்தது திருமணம் அதன் செலவு குறித்து. இப்போது நடுத்தரக் குடும்பங்களில் மாப்பிள்ளை பார்ப்பவர்கள் மிகப் பெரிய தகுதிகளை எதிர்பார்க்கின்றனர். பெண்கள் குறைந்த பட்சம் இரண்டு பட்டங்கள் பெற்றவர்களாக இருக்கின்றனர். வேலைக்குச் செல்லும் பெண்களின் கணக்கு வேறு. இவர்கள் திருமணம் செய்து வைப்பதற்காகவே வளர்க்கப்படுகின்றனர். திருமணம் நடக்கும் வரை சும்மாயிருக்க வேண்டாமே என்று படிக்க வைக்க அனுப்பப்படுகின்றனர்.

படித்த முடித்தவுடன், ஏற்ற துணை கிடைக்காமல் அவதிப்படுகின்றனர். இவர்கள் படித்ததைக் கொண்டு ஒரு பணியைத் தேடிக்கொள்ளவும் முடியாது. கல்யாணம் ஆகப்போற பொண்ணு வேலைக்கு ஏன் போக வேண்டும் என்றுதான். இவர்களுக்குப் படிப்புச் செலவு, திருமணம், நகை, சீதனம், இன்ன பிற பொருட்கள், சீமந்தம், குழந்தை பிறந்தால் ஆகும் செலவு என ஏகப்பட்ட சடங்குகள். செலவுகள். இதையெல்லாம் செய்து முடிக்க ஆகும் செலவு நிச்சயம் கடன் வாங்காமல் முடியாது அதை அடைக்க ஆகும் பல வருடங்கள் இல்லையென்றால் பரம்பரை சொத்து கொஞ்சம் விற்க வேண்டும். இதெல்லாம் பெண்கள் பக்கப் பிரசச்சனைகள்.

ஆண்களுக்கு வேறு பிரச்சனை. பாதிப்பேருக்கு நிரந்தர வேலையே தொழிலோ இல்லை. எல்லா நடுத்தரப் பெற்றோரும் அதிகமாக எதிர்ப்பார்க்கத் தொடங்கி விட்டனர். முன்பெல்லாம் வரதட்சணை என்ற சொல் எல்லாரையும் அச்சுறுத்தும். தற்போது பெண் வீட்டுக்காரர்களின் விதிமுறைகள் மூச்சு முட்ட வைக்கிறது. 

50000 சம்பளம், சொந்த வீடு, சொத்து என அவர்களின் நிலைக்கேற்ப கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். யாரோ ஒருவர் நிலைத்தகவல் போட்டிருந்தார்கள் இப்படி, வரதட்சணை கேட்பது தவறு ! ஆனால் சொந்த வீடு கார், ஒரு இலட்சம் சம்பளம் உள்ள பையன் வேண்டும் என கேட்பது தவறில்லையா என. அது உண்மைதான் கிட்டத்தட்ட.

போதாக்குறைக்கு ஜாதகம் என்ற ஒன்றைப் பார்க்கிறார்கள். ஜோதிடர்களுக்கும், தரகர்களுக்கும் செமயான வணிகம் அது. யார் இது வேண்டுமென்று ஒற்றைக் காலில் நிற்கிறார்கள் என்று பார்த்தால், 25 அல்லது 30 வருடங்களுக்கு முன்பு ஜாதகம் பார்க்காமலே திருமணம் செய்து வாழ்ந்து காட்டிய இன்றைய பெற்றோர்தான். பல நவீன சடங்குகளை ஏற்றுக் கொண்டு விட்டார்கள். ஆனால் ஒழித்துக் கட்ட வேண்டிய ஜாதகம், சீதனம் என தேவையில்லாத காலத்திற்கொப்பாத பெண்ணடிமைச் சடங்குகளையெல்லாம் இன்னும் கட்டிக் கொண்டு அழுகின்றனர்.  படித்த பெண்களே இது குறித்து பெரிதாக அலட்டிக் கொள்வதில்லை. அலட்டிக் கொண்டாலும் யாரும் கேட்பதாயில்லை. அதை நினைக்காமலிருந்தால் மனச்சுமை படத் தேவையில்லை அவ்வளவே.

முன்பு இலையில் அருந்தியது போய் பஃபே முறைக்கு மாறிவிட்டார்கள். பிளாஸ்டிக் டம்ளருக்கு மாறியாகிவிட்டது. இனி இலை மட்டும்தான் மிச்சம். அதற்கும் பிளாஸ்டிக் பயன்படுத்தத் தொடங்கினாலும் இன்னும் நவீனமாகிவிடும். ஆனாலும் ஜாதிக்குள் திருமணம், தாலிகட்டுவது, காரை சீதனமாகக் கொடுப்பது, அதை திருமண வரவேற்பிலேயே முன்னாடி நிற்க வைத்து ஒரு காட்டு காட்டுவது என்று நடந்து கொண்டிருக்கிறது.

அதே நேரம் சொந்த ஜாதியில் பெண் கிடைக்காவிட்டால் வேறு ஜாதியில் பெண் எடுப்பதும் நடக்கிறது. மேலே போய் மலையாள நாட்டில் போய் வெள்ளைத் தோல் பெண்கள் எடுத்து வரும் மறத் தமிழர்கள் இருக்கிறார்கள். அதே போல், ஜாதகம் பொருந்தவில்லை எனினும், இரண்டு வீட்டினருக்கும் பிடித்துப் போய்விட்டால் திருமணம் நடந்து விடுகிறது. ஜாதகத்தைக் கண்டுகொள்வதில்லை. இல்லையென்றால் இன்னொரு ஜோசியத்தைப் பார்த்து ஏதாவது ஒரு பரிகார பூஜையை நடத்தி விட்டால் போச்சு. ஜாதகம் என்பதை தமக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வதற்கே. இன்னும் சில ஜோதிடர்கள் இரண்டு பேரை சேர்க்க வேண்டுமென்றால் அதற்குத் தக்கபடி மாற்றியும் கொடுத்து விடுகிறார்கள். இப்படித் தேவைப்பட்டால் எந்த சம்பிரதாயத்தையும் சடங்கையும் மாறி செய்கின்றனர். ஆனால் அதே ஒரு பருவமடைந்த வேறு ஜாதியில் ஆணும் பெண்ணும் தனிப்பட்ட முறையில் மனமொன்றித் திருமணம் செய்வதை மட்டும் எதிர்க்கின்றனர்.

3 என்ற படத்தில் பாடல் பார்த்தேன். அதில் நாயகன் நாயகிக்கு சாராயக் கடையில் வைத்து தாலிகட்டுவான். இது  போன்றதுதான் சடங்குகளும். காதலனும், காதலும் ஒன்றாக மதுக்கடைக்குச் செல்வது வரை ஜாலி, என்டெர்டெயின்மென்ட் என்று எடுத்துக்கொள்வார்கள், அதே திருமணம் என்றால் தாலியைத்தான் கட்ட வேண்டும் என்ற கற்பிதம் இருக்கிறதே அதுதான், நம்மாளுகள் தேவையில்லாத சடங்கை விடுவதில்லை ஆனால் நாகரீகம் என்ற பெயரில் சீரழிவை மட்டும் ஏற்றுக் கொள்வார்கள்.

என்து உறவினர் சொன்ன ஒரு செய்தியைக் கேட்ட பின்னர்தான் இதை எழுதத் தோன்றியது. தெரிந்த இரு குடும்பத்தினர் பற்றிச் சொன்னார். ஒரு குடும்பத்தில் பெண் குழந்தை ஒன்று இப்போதுதான் 4 -வது படிக்கிறது. அதற்கு இப்போதே 80 பவுன் தங்கநகை வாங்கி வைத்து விட்டார்கள். அந்தப் பெண்ணுக்குத் திருமணமாகும்போது, 200 சவரன் போட வேண்டுமென்பதினை இலக்காக வைத்திருக்கிறார்களாம். இன்னொருவரின் வீட்டில் இதே கதைதான் ஆனால் பெண் குழந்தை பிறந்த உடனே வாங்கிச் சேர்க்க ஆரம்பித்து விட்டார்களாம்.

தங்கம் விற்கும் விலைக்கு யாரும் அடிபட்டதாகத் தெரியவில்லை. மேலும் மேலும் ஆட்டம்தான் போடுகிறார்கள். ஆமா சீதனம் வாங்கிறது தப்பா இல்லையா என்ற விவாதமெல்லாம் போயே போச்சு. பெண்ணடிமைத்தனம் என்று அதிகமாகப் பேசுகிறோம். ஆணுக்கு மட்டும் என்ன உரிமை இருக்கிறது திருமணத்தில். ஒரு ஆண் தான் விரும்பியபடி வேறு ஜாதியில் உள்ள பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள சம்மதம் பெற்றோரிடம் வாங்கிவிட முடிகிறதா ? இன்னும் முக்கால்வாசிப்பேர் ஜாதியை விட மாட்டார்கள். எனக்கு வரதட்சணை வாங்க விருப்பமில்லை என்று சொன்னால் விட்டு விடுவார்களா ?

பொண்ணப் பெத்தவனெல்லாம் இனித் துண்டப் போட்டுட்டு போக வேண்டியதுதான் -

இனியெல்லாம் பசங்களுக்குப் பொண்ணு கிடைக்கிறது ரொம்பக் கஷ்டம்தான் -

இவையிரண்டும் திருமணச் சந்தையின் இருவேறு துருவங்கள்

என்னவோ புலம்பனும்னு தோணியது அவ்வளவுதான்.
 
Download As PDF
Bookmark and Share

Post Comment

தோல்வியைத் திணிக்கும் கல்வியும் சமூகமும்

பன்னிரண்டாம் தேர்வு முடிவுகள் வெளியானதிலிருந்து நடப்பவை, அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்கள் மகிழ்ச்சி பொங்க பேட்டி கொடுக்கின்றனர். தமது இலட்சியத்தைப் பற்றிக் கூறுகின்றனர். வழக்கம் போலவே இவ்வருடமும் மாணவர்களை விட மாணவிகளே அதிகத் தேர்ச்சி என்ற வசனத்தை பதினைந்து வருடங்களாகக்(!!?) கேட்கிறேன். ஒவ்வொரு வருடமும் என்ன நடக்கிறதோ அதுதான் இப்போதும் நடக்கிறது, இனி வரும் வருடங்களிலும் இதுதான் எந்த மாற்றமுமின்றி நடக்கப்போகிறது. ஊடகங்களுக்கு இதை வைத்து எவ்வளவு செய்திகளை உருவாக்க முடியுமோ அந்தளவுக்கு செய்திகள் குவிந்து கிடைக்கின்றன. சாதனையாளர்களின் பேட்டிகள், பள்ளிகளின் பெருமைகள், மாணவர்கள், ஆசிரியரின் உழைப்பு, அர்ப்பணிப்பு வெற்றி இரகசியம், தோல்வியடைந்த மாணவர்களின் தற்கொலைகள், வயது, வறுமை உடல் ஊனத்தை வென்று அதிக மதிப்பெண் குவித்த மாணவர்கள் என இதைச் சுற்றிய செய்திகள் ஏராளம்.

இதற்கு ஏன் இவ்வளவு ஆர்ப்பாட்டம் என்பதுதான் புரியவில்லை. இதே அளவு பரபரப்பு 10 வகுப்புத் தேர்வு முடிவுக்கும் கொடுக்கப்படுகிறது. மாணவர்களின் வாழ்க்கையிலேயே இதுதான் மிகப்பெரியது போலவும் இது முடிந்தால் போதும் வாழ்க்கையிலேயே வெற்றி பெற்றது போலவும் ஊதிப் பெருக்கி வெளியிடுகிறார்கள். ஒவ்வொரு வட்டாரத்திலும், நகரத்திலும் பள்ளிகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களின் படத்தை பத்திரிக்கைகளில் வெளியிடுகிறார்கள். சரி அவர்களுக்கு அங்கீகாரமும் பாராட்டும் தேவைதான். அதற்காக இப்படி அதகளப்படுத்தினால் ?? இது தோல்வியடைந்த மாணவர்கள் மீது எவ்வகையான அழுத்தத்தை உண்டாக்குகிறது என்பது குறித்து பில்டப் காரர்கள் கவலை கொள்வதேயில்லை.

இப்படி மாய்ந்து மாய்ந்து பேட்டி எடுப்பவர்கள், இது போன்ற அதிக மதிப்பெண் பெற்றவர்கள் அடுத்த 5 அல்லது 6 ஆண்டுகள் கழித்து என்னவாகிறார்கள் என்று கவலைப்படுகிறார்களா ?  அதிக மதிப்பெண் வாங்கியவர்கள் சிலர் கல்லூரிப் படிப்பே தேற முடியாமல் போகிறார்கள் என்பதெல்லாம் இவர்களுக்குத் தெரியுமா ? தெரியாதா ? தேர்வு முடிவு வெளியானவுடன் கல்வியாளர்கள் அது இது என்று யோசனை சொல்கிறார்கள். இப்படி மாய்ந்து மாய்ந்து படித்தவர்கள் எத்தனை பேர் கல்லூரி முடித்து வேலைக்குச் சென்றார்கள் என்பது தெரியுமா ? அல்லது தற்போது பேட்டி கொடுத்தது போல கலெக்டரானவர்கள், மருத்துவரானவர்கள் எத்தனை பேர். இந்த பில்டப் பற்றிச் சொல்லப்போனால் ஐபிஎல் போட்டிகளுக்குக் கிடைக்கும் போலி விளம்பரத்திற்கு ஒப்பானது.

ஒரு சில குறிப்பிட்ட பள்ளிகளில் மட்டும் நல்ல கற்பித்தலுக்கும் "திறமையான மாணவர்களை" தயாரித்து அனுப்புவதிலும் முன்னணியில் இருக்கின்றன. ஊத்தங்கைரையில் ஒரு பள்ளி இருக்கிறது. அது நல்ல பெயரெடுத்த பள்ளியாம். 10 வகுப்பு முடிவு வெளியான அன்று அதிகாலையிலேயே பெற்றோர்கள் அப்பள்ளியில் விண்ணப்பம் வாங்கக் காத்துக் கிடப்பார்களாம். அதில் சேரவும் பத்தாம் வகுப்பில் மிகப்பிரமாதமான மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும் என்பது விதி. அதாவது பெயர் பெற்ற பள்ளிகள் என்றால் ஏற்கெனவே நல்ல மதிப்பெண் பெற்ற மாணவர்களை எடுத்து அவர்களை சக்கையாகப் பிழிந்து அதிக மதிப்பெண் வாங்க வைப்பது அவர்களின் "திறமையாம்." நாமக்கல் மாவட்டம் கல்விக்குப் பெயர் போனது, அங்குள்ள வித்யா விகாஸ் ((கல்வி நிலையம் என்பதன் சம்ஸ்கிருதம்தான் வித்யாவிகாஸ்) (பெரிய வித்யாசமான பேரெல்லாம் கிடையாது)). அங்கும் இப்படித்தான் பள்ளியின் வெளியே 11 ஆம் வகுப்பு விண்ணப்பம் வாங்குவதற்கு வரும் பெற்றோர்களால் கொண்டுவரப்பட்டு சாலையோரங்களில் அனைத்து ரகமான பெரிய விலையுயர்ந்த கார்களைக் காண முடியும். 

இது போன்ற பள்ளிகளில் கற்பித்தல் என்பது உயர்ந்த தரத்தில் இருக்கும் என்பது உண்மைதான். ஆனால் பணம் வேண்டுமே படிப்பதற்கு, இல்லையெனில் 90 % மதிப்பெண்கள் வேண்டும் எத்தனை பேரால் முடியும். இந்த மனப்பாடக் கல்வி மீதே நமக்கு நூறு விமர்சனங்கள் உள்ளன. இந்தியனை அடிமைப்படுத்த மெக்காலே செயல்படுத்திய கல்வித்திட்டம், போதாக்குறைக்கு சிபிஎஸி, சமச்சீர் ஆங்கிலோ இந்தியன் என பலவகையான பாடங்கள். இதில் அரசுப் பள்ளிகள் தனியார் பள்ளிகள், ஆங்கில வழி தமிழ் வழி என இத்தனை முரண்பாடுகள். தனியார் பள்ளிகள் பெருகிய பின்பு இப்போதெல்லாம் 9 வகுப்பும், 11 ம் வகுப்பும் அந்த பாடத்தின் தேர்வுகளும் செல்லாக் காசுகளாகிவிட்டன. ஏறக்குறைய ஒன்றைரை வருடங்கள் படித்த பின்புதான் 10 ம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு தேர்வுகளும் நடக்கின்றன. இதில் பல பள்ளிகளில் மாணவர்கள் பிட்டடித்துத்தான் மதிப்பெண் பெறுகிறார்கள்.

பிட்டடிக்க முடியாதவர்கள் தோல்வியடைகிறார்கள். பெரும் மன உளைச்சலுக்கும் ஆளாகின்றார்கள். பெற்றோர்களால்தான் இவர்கள் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள். தம் பிள்ளை தேர்வில் தோல்வியடைந்து விட்டாலோ குறைந்து விட்டாலோ தமது மரியாதை கெட்டுவிட்டதைப் போலவும், குடி முழுகிவிட்டதைப் போலவும் கருதிக் கொள்கிறார்கள். இந்தப் படிப்பு என்பது எல்லோருக்கும் வராது என்பதுதான் எதார்த்தம். கடும் முயற்சி செய்தால் ஓரளவு மாறும், அதுவும் எல்லோருக்கும் சாத்தியம் என்பதில்லை. என்னதான் முக்கினாலும் சிலருக்கு வரவே வராது. எனக்கு கணிதம் என்றால் வேப்பங்காய், பள்ளிப் படிப்பை முடிக்கும் வரை எனக்கு மாரடைப்பு வருமளவுக்கு மன அழுத்ததைக் கொடுத்தது. இந்த நிலையை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். இல்லை படித்தால்தான்  நல்ல வேலை கிடைக்கும் என்று மூட நம்பிக்கை வைத்திருப்பவர்கள் கொஞ்சம் அங்கங்கே வேலை வாய்ப்பு முகாம்கள் நடைபெற்றால் அங்கே காத்துக் கிடக்கும், ஆயிரக்கணக்கானவர்களைக் கண்டால் கொஞ்சம் தெளிவு பிறக்கும். அப்படியே வேலை கிடைத்தாலும் எல்லோருக்கும் 5 இலக்க ஊதியம் கிடைக்காது. இத்தனை படிச்சிட்டும் இவ்வளவு குறைச்சலாத்தான் சம்பளம் குடுக்கிறானா ? அப்பறமெதுக்கு அந்த வேலைக்குப் போற ? என்று வக்கனை பேசவும் சொந்தக் காரரும், நண்பரும் வருவார்கள்.

பல பெற்றோர்க்கு வேறென்ன ஆசையென்றால், பையன் படித்து பட்டம் வாங்கினால் அதை வைத்து நிறைய சீதனம் பெறலாம் என்ற கணக்கில் இருக்கிறார்கள். பையன் இத்தனை படித்திருக்கிறான் பெண்ணுக்கு இத்தனை செய்ய வேண்டும் என்று கேட்க திட்டம் வைத்திருக்கிறார்கள். இதை ஏன் பையனின் பெற்றோரை மட்டும் சொல்கிறேனென்றால் பெரும்பான்மையாக பெண்கள் தேறிவிடுகிறார்கள். ஆண்கள் அப்படியில்லை அவர்களுக்குத்தான் இப்பிரச்சனை. எனக்குத் தெரிந்து பல பேர் சீதனம் பெறுவதற்காகவே இரு பட்டங்களைப் படித்து முடிக்க வேண்டும் என திட்டம் போட்டு படிக்கிறார்கள். எம்பிஏ என்பது கவர்ச்சிகரமான பட்டமாக திருமணச்சந்தையில் இருக்கிறது. கன்யாகுமரியைச் சேர்ந்த என் நண்பனொருவன் BSc, MSc, MBA, என மூன்று பட்டங்களைப் படித்து விட்டான். அவனுக்கு படிப்பெல்லாம் வராது எல்லாம் பேப்பர் சேஸிங்தான். ஒரு கோடி ரூபாய்க்கு மேல் சீதனமாகக் கிடைக்கும் என்கிறான். அதற்குப் புகழ்பெற்றதுதான் கன்யாகுமரி மாவட்டம் !!

திருமண அழைப்பிதழில் போடுவதற்கென்றே சிலர் அஞ்சல் வழியில் படிக்கிறார்கள். எப்படியென்றால் ஒரு விண்ணப்பத்தை வாங்கிவிட வேண்டியது அதை ஊரெல்லாம் தம்பட்டம் அடிக்க வேண்டியது. அவ்வளவுதான் டிகிரி வாங்கியாச்சு. மாப்பிள்ளை என்ன படிச்சிருக்காருன்னு கேட்டால் சொல்லிக்கலாம். எல்லோரும் சான்றிதழைக் கேட்க மாட்டார்கள். அப்படியில்லையென்றால் இருக்கவே இருக்கிறது அண்ணாமலைப் பல்கலைக் கழகம் கொஞ்சம் காசு கொடுத்தால் டிகிரியை வாங்கிவிடலாம். பல தடைகளைக் கடந்து நேர்மையாகத் தேர்வு எழுதும் மனிதர்கள் இருக்கும் ஊரில்தான் இதெல்லாம் நடக்கிறது. இதற்கெல்லாம் காரணம் பட்டம், படிப்பு என்ற போலித்தனத்திற்கு இருக்கும் பகட்டுதான் காரணம். ஜாதிப்பெருமை போல பெரிய படிப்பு படித்தவர்க்கு திருமணச் சந்தையில் இருக்கும் வணிக மதிப்புத்தான் காரணம். நடுத்தர, பணக்காரர்களின் போலித்தனமான வெட்டி பந்தாதான் இதன் மூலம்.

பெற்றோர்களின் பேராசைக்கு ஒரு அளவேயில்லை. என்னுடைய சித்தி மகள் 1150 - க்கும் மேல் வாங்கிவிட்டாள். இருப்பினும் அவளது பெற்றோர்க்கு இன்னும் 20 மதிப்பெண்கள் கூட வாங்கியிருக்கலாம் என்று அங்கலாய்த்தார்களாம். எதற்கு வெளியே பேசி பெருமையடித்துக் கொள்ளத்தான். அவள் 1195 வாங்கினால் கூட கலெக்டருக்கோ அல்லது மேற்படிப்போ படிக்க வைக்கப் போவதில்லை திருமணந்தான் செய்து வைக்கப்போகிறார்கள் இருந்தாலும் இப்படி ஒரு நப்பாசை. இப்படித்தான் ஒவ்வொரு பெற்றோருக்கும் மதிப்பெண் மீதான் மோகம் இருக்கிறது.

இப்படியிருக்கையில் தேர்வில் தோல்வியடைந்தவர்களைத் தேற்றுகிறேன் என்று அதிக மதிப்பெண் வாங்கியவர்களை சிறுமைப்படுத்துவதும் கண்டிக்கத் தக்கது. வருடக்கணக்காக உயிரைக் கொடுத்துப் படித்து மதிப்பெண் வாங்கியவர்களை மனப்பாடம் பண்ணி வாந்தியெடுப்பவர்கள், சொந்தமாக சிந்திக்கத் தெரியாதவர்கள் என்றெல்லாம் சொல்வது அறிவீனமானது. இதற்கு அவர்களைக் குற்றம் சொல்ல முடியாது, பாராட்டாமலும் இருக்க முடியாது.

கல்வி என்பது நல்ல வியாபாரமாக இருக்கிறது. இதனால் கருப்புப் பணத்தை அறக்கட்டளைகளின் பேரால் கொட்டி பெரும் பணக்காரர்களால் கல்வி நிலையங்களை நடத்த முடிகிறது. பள்ளிகளாகட்டும், கல்லூரிகளாகட்டும் இதுதான் நிலை. எத்தனை மதிப்பெண் பெற்றாலும் பணம் கட்டாமல் படிக்க முடியாது. சிலரைத் தவிர்த்து. எங்கள் கல்லூரியிலிருந்து இத்தனை பேரை வேலைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று ஒரு சில கல்லூரிகள் பன்னாட்டு தொழில்நுட்ப நிறுவங்களுடன் ஒப்பதம் போட்டுக் கொள்கிறார்கள். இதனடிப்படையில் பெயருக்கு வளாகத்தேர்வை நடத்துவார்கள், அனைவருக்கும் வேலை கிடைக்கும், அல்லது யாரையும் எடுக்காமலும் போகலாம். அல்லது அனைவரையும் வேலைக்கு எடுத்துவிட்டு சில மாதங்களில் பர்ஃபார்மன்ஸ் சரியில்லை என்ற காரணத்தைச் சொல்லி.  வெளியேற்றிவிடலாம் ஆனால் கல்லூரிகள் விளம்பரம் செய்து கொள்ளும் எங்கள் கல்லூரியில் சென்ற வருடம் இத்தனை பேருக்கு வேலைக்கு இடம்(placement) பெற்றுத் தந்தோம் என்று. எப்படி எல்லோருக்கும் வேலை தருவார்கள் என்றா கேட்கிறீர்கள், படிப்புக்கும் வேலைக்கும் பெரிய தொடர்புகள் இருப்பதில்லை என்ன படித்தாலும் 6 மாதப் பயிற்சி பின்பு வேலை அவ்வளவுதான். நாடகம் முடிந்தது. இப்படித்தான் இருக்கிறது நிலவரம் இந்த ஆட்டத்தில் திறமைக்கு நிச்சயம் மதிப்புண்டு, நல்வாய்ப்புக்கும்(Luck) இடம் உண்டு ஆனால் எல்லா இடத்திலும் இது நடக்காது சிலருக்கு கிடைக்காது சிலருக்குக் கிடைக்கும் இதுதான் இந்த சமத்துவ உலகில் நடப்பது.

அதனால் புதிதாக எதுவும் நான் சொல்வதற்கில்லை. தேர்வில் வெற்றி பெற்றால் வேலை கிடைத்தால் மகிழ்ச்சி. இல்லையா ரொம்ப நல்லது, நாம் யாருக்கும் அடிமை வேலை பார்க்கத் தேவையில்லை என்று எண்ணிக் கொள்ளுங்கள், உலகம் இன்னும்  பெரியது. தாழ்வு மனப்பான்மையில் உழல வேண்டாம். நமது தோல்விக்கு நாம் மட்டுமே காரணமல்ல. நாம் குற்றவாளியோ மற்றவர்கள் புண்ணியவான்களோ இல்லை.
Download As PDF
Bookmark and Share

Post Comment

பேராசையா அபத்தமா வாழ்க்கை ! - இவர்கள் இப்படித்தான் - 1

இந்த நடுத்தர வர்க்கத்தின் வாழ்க்கையில்தான் எத்தனை பரவசம் அடுத்தவனைப்போல் பாவனை செய்வதற்கு ? இவர்களுக்கு தெரியும் எல்லோரது குழந்தைகளும் முதல் மதிப்பெண் வாங்க முடியாது என்று. ஆனாலும் குழந்தைகளுக்கு இவர்கள் கொடுக்கும் அழுத்தம் அவன் மட்டும் நல்லாப் படிக்கிறான் உன்னால மட்டும் ஏன் முடியல என்று ஆயிரம் கிலோ தாழ்வு மனப்பானமையை கொண்டு போய் பிஞ்சுகளிடம் ஏற்றி வைப்பார்கள்.

இது பள்ளிக்கூடம் முடியும் வரை தொடரும். நல்ல வேளையாக எனக்கு அப்பேர்ப்பட்ட கொடியவர்கள் பெற்றோர்களாக வாய்க்க வில்லை. என் அப்பா எனக்கு நினைவு தெரிந்து என்னுடைய பதினைந்து வயதிற்கு மேல் திட்டியதோ அதிர்ந்து பேசியதோ இல்லை. நான் கொஞ்சம் முன்கோபக்காரன், எனவே எனக்குக் கோபம் வந்து விடக்கூடாது எனவும், மனம் வருந்திடக் கூடாதெனவும் மிகவும் எச்சரிக்கையுடனே என் அப்பா என்னிடம் நடந்து கொள்வார். ஆனாலும் அவருக்கு மற்ற எல்லாப் பெற்றோர்க்கும் இருக்கும் சராசரியான ஆசைகள் இருந்தது, மகன் முதல் மதிப்பெண் வாங்க வேண்டும் என்றெல்லாம், இருந்தும் குழந்தையாக இருந்ததிலிருந்துஅதை மிகவும் அலட்டலுடனோ, எரிச்சலுடனோ சொன்னதில்லை.

ஆனால் என்னுடைய நண்பர்களின் தந்தைமார்களோ மிகவும் அலட்டல்காரர்கள், அவர்கள் தம் சொந்த மகனிடம் பேசுவது போலப்பேசவே மாட்டார்கள். என்னவோ குற்றவாளியிடம் பேசும் ஒரு காவலரின் தோரணைதான். படிப்பிற்கு இத்தன பணம் கஷ்டப்பட்டுக் கட்டியிருக்கிறோம் நீ என்ன மார்க் வாங்கற ? பேசாம மாடு மேய்க்கப் போக வேண்டியதுதான ? என்கிற பாணியில் பொளந்து கட்டுவார்கள். இவர்களைப் பார்த்தால் எனக்குப் பற்றிக் கொண்டு வரும்.  நீ மட்டும் ஏன் அம்பானி மாதிரி பணக்காரனாகல ? என்று கேட்பது எத்தனை அபத்தமோ அது போலத்தான் இவர்கள் பேசுவதும் இருக்கும். பணத்தைக் கட்டினால் மார்க்கு வாங்கிட வேண்டும். தந்தைமார்கள் இங்கனம் பேசுவதை நண்பர்கள் அவ்வளவாகக் கண்டு கொண்டதில்லலை அவர்களுக்கு இது பழக்கமானதுதான். எனக்குத்தான் மனம் கிடந்து தவிக்கும். இது படிக்கும் காலத்தில் நடந்தது.

அதே பாணியில் இப்போது வேலைக்குச் செல்லும் அல்லது வேலை தேடியலையும் பருவத்திலும் அவர்கள் பேராசைக்காரர்களாக இருக்கிறார்கள். எல்லோருக்கும் தகவல் தொழில் நுட்பத்துறையில் ஐந்திலக்க ஊதியத்தில் வேலை கிடைக்காது. வெளிநாட்டுக்கும் போக முடியாது என்பது எதார்த்தமான உண்மை. வேலை கிடைப்பது என்பதே எதார்த்தமில்லாத உண்மை. ஆனால் இவர்கள் விடும் ரவுசுதான் தாங்க முடிவதேயில்லை. இன்னுமா வேலை கிடைக்கல என்று ஆரம்பிப்பார்கள். அவர்களுக்கு தெரிந்தவரோ அல்லது உறவினரின் மகனோ இன்ன இடத்தில் படித்தார் இன்ன இடத்தில் வேலை கிடத்திருக்கிறது இத்தனை சம்பளம் என்று பற்ற வைக்க வேண்டியது. போகும் போது ம்ஹூம் எல்லாருக்குமா வேலை கிடைக்குது என்று உச் கொட்டிவிட்டுப் போக வேண்டியது. இது இவர்களுக்குத் தேவையில்லாத வேலைதானே ?

என்னுடைய அலுவலத்தில் வேலை பார்க்கும் இளைஞன் ஒருவனுக்கு உறவினர்களால் இத்தொல்லை ஏற்படுவதாகச் சொன்னான். அவனது உறவினரின் மகளுக்கு அக்சென்ஞ்சர் நிறுவனத்தில் வேலை கிடைத்து விட்டது. அவள் பொறியியல் இவனும் பொறியியல், வழக்கம் போலவே பெண்கள் நன்றாகப் படிக்ககூடியவர்கள், சிலருக்கு மட்டுமே வாய்க்கும் வளாகத்தேர்வு என்ற விதிகளின்படி அவளுக்கு வேலை கிடைத்து  விட்டது, இவனுக்கு இன்னும் அரியர் இருக்கிறது. 2 பட்டம் வாங்கியும் வேலை கிடைக்காத உலகில் அரியர் வைத்தும் ஒரு வேலை கிடைத்து விட்டது. ஒரு சுமாரான நிறுவனத்தில் 9000 ஊதியத்தில் அட்மினாக வேலை. இவன் பெற்றோர்களுக்கு வேறொரு கவலை. இவனுக்கு பெற்றோரிடமிருந்து கிடைக்கும் ஆலோசனை என்னவென்றால் இவன் தகவல் தொழில்நுட்ப வல்லுநராகாவிட்டாலும் பரவாயில்லை அக்சென்ஞ்சர் நிறுவனத்திலாவது அட்மினாக வேலை பார்க்க வேண்டும். இல்லையெனின் இலண்டன் சென்று ஒரு வருடமாவது இருந்து விட்டு வர வேண்டும்.

இந்த மாதிரியான எண்ணங்கள் உருவாவதற்கு பெற்றோர்கள் உற்றார் உறவினர்கள் அவர்களின் நண்பர்கள்தான் காரணம். நடுத்தரவர்க்க ஜாதிக்காரர்களுக்கு இந்த போலி கௌரவம் பெரிய பிரச்சனையாக இருக்கிறது. மற்றவர்கள் முன்னர் தான் ஒரு அங்குலம் கூடத் தாழ்ந்து போகக்கூடாது என்பதில். எப்படியாவது கெத்துக் காட்ட வேண்டும். இன்னொரு பிரச்சனை பையனுக்குப் பெண் தேடுவதுதான். பெண்கள் இப்போதெல்லாம் ரொம்பவும் கிராக்கி பண்ணுகிறார்கள். அவர்களின் பெற்றோர்கள் அதற்கும் மேலே இருக்கிறார்கள். பெண்கள் கிடைப்பது ரொம்பவும் சிரமமாகி விட்டது. (பெற்றோர் நிச்சயிக்கும் திருமணமென்றாலே சொந்த ஜாதிக்குள்தானென்பதை சொல்லத் தேவையில்லை). பெண்கள் எல்லோரும் படித்தும் விடுவதால் பெரிய வேலையிலிருக்கும் ஆணைக் கேட்கிறார்கள். எஞ்சிய ஆண்கள் இது போன்ற பிரச்சனைகளை எதிர்கொள்ள நேர்கிறது. அதனால்தான் சென்னையில் ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் வேலையோ அல்லது வெளிநாட்டில் இருந்து விட்டு வந்திருக்கிறான் என்ற பெயரை எடுக்கவோ பெற்றோரை இது போல எண்ண வைத்திருக்கிறது. என்ன வேலையாக இருந்தாலும் சிங்கியடிப்பது அவரவர்க்குத்தான் தெரியும். பெற்றோர்க்கு அங்கலாய்க்க மட்டும் தெரியும். கள நிலவரமே அவர்களுக்குத் தெரிவதில்லை தம்முடைய தம்பட்டத்தை நிறுத்தவே அவர்களும் விரும்பவில்லை
Download As PDF
Bookmark and Share

Post Comment