தமிழகத்தில் மராட்டிய பாணியில் பரவும் வட இந்தியர் வெறுப்பு மனோபாவம் !!

ற்போது தமிழகத்தில் வட இந்திய எதிர்ப்பு மனோபாவம் கொஞ்சம் கொஞ்சமாகப் பரவி வருகிறது. உதாரணமாக தற்போது நடந்த என்கவுன்டர் என்ற மோதல் கொலையின் பின்னால் அதற்குக் கிடைத்த பரவலான வரவேற்பு. இந்த கொலைகளுக்குக் கிடைத்த வரவேற்புக்கு என்ன காரணம் தமிழ்திரைப்பட நாயகத்தனமான ஒரு மனோபாவம் அதாவது தவறு செய்தால் தண்டனை கடுமையாக இருக்க வேண்டும் சட்டம், மனித உரிமை, முறையான விசாரணை இது போன்று நேரத்தை செல்வழிக்காமல் இருப்பதுதான் இது போன்ற குற்றங்கள் குறைய வழிவகுக்கும் என்ற பாணியிலானவை. இன்னொரு காரணம் என்னவெனில் அவர்கள் வட இந்தியர்கள் என்பது மட்டுமே. தற்போது தமிழகத்தில் வட இந்தியர்களுக்கு எதிரான வெறுப்புணர்வு அதிகமாகி வருகிறது.

வட இந்தியாவிலிருந்து அதிகமானவர்கள் இங்கு இடம்பெயர்ந்து கூலி வேலைகளில் ஈடுபட்டுள்ளனர். அதிகமானவர்கள் தமிழகத்தின் பெருநகரங்களில் நடைபெறும் கட்டிட வேலைகள், சாலைகள், பாலங்கள் அமைத்தல் ஆகிய பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களல்லாமல் கல்வி கற்க வந்தவர்கள், வேலை தேடி வந்தவர்கள், போர்வைகள் விற்பவர்கள் போன்ற வெவ்வேறு வகையிலான பொதுவாகவே அயலவர்கள் அந்நியர்களுக்கு எதிரானவர்களுக்கு இருக்கும் மனோநிலை தற்போது இந்த வட இந்தியர்களுக்கு எதிராக அதிகமாக இருக்கிறது. அங்கங்கே இவர்களால் நடத்தப்படும் சிறு சிறு குற்றங்கள் முதல் பெரிய குற்றங்கள் வரை இவர்களுக்கு எதிரான குற்றவாளி மனப்பான்மையை அதிகரிக்கச் செய்திருக்கிறது.

இவர்கள் பெரும்பாலும் படிப்பறிவில்லாத ஏழைகள் என்பதால் ஹிந்தியைத் தவிர வேறு மொழியை அறியாதவர்கள். தமிழகத்தில் யாருக்கும் இந்தி பெரிய அளவில் தெரியாததால் அங்கங்கே ஏற்படும் சங்கடங்கள், இடைஞ்சல்கள் என இவர்கள் மீது அனைவரும் எரிச்சலைக் காட்டுகிறார்கள். குறிப்பாக பேருந்து நடத்துனர்கள் சாதாரணமாகவே நம்மூர்களில் நடத்துனருடன் சண்டைபோடாமல் இறங்கவே வாய்ப்பிருக்காது. சில்லைறை கொடுக்கல் வாங்கலில் இருந்து சரியாக பேருந்து நிறுத்தத்தில் நிறுத்துவது அல்லது நிறுத்தாமல் போவது, வேகமாக இறங்க ஏற, எல்லோரையும் உள்ள போகச்சொல்லியே வாழ்க்கை வெறுத்துப்போவது, போதாக்குறைக்கு ஏற்றப்பட்ட பேருந்துக் கட்டணம் என ஏற்கெனவே உச்சகட்ட எரிச்சலில் இருக்கும் நடத்துனர்களுக்கு மந்தமாக எதிர்வினை புரியும் வட இந்தியர்கள், நன்கு வாங்கிக் கட்டிக் கொள்கிறார்கள். மொழியும் புரியாமல் பேசவும் தெரியாமல், பல  இடத்திலும் அவமானப்படுத்தப்படுகிறார்கள்.

முல்லைப் பெரியாறு போராட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்த போது, இங்கிருக்கும் மலையாளிகளின் மீது பொழியப்பட்ட வெறுப்புணர்வு வாசகங்கள், தாக்கப்பட்ட அவர்களது நிறுவங்கள் என தமது கையாலாகாத்தனத்துக்கும், கோழைத்தனத்துக்கும் எவனோ ஒரு அப்பாவியின் மீது வீரத்தைக் காட்டும் மொன்னைகள்தான் இது போன்ற பொதுவான அடிப்படையே இல்லாத ஒரு குறிப்பிட்ட குழுவினரின் மீது பொதுவான ஒரு குற்றச்சாட்டை சுமத்தி அவனுங்க அப்படித்தான் என்ற வெறுப்பை விதைக்கிறார்கள். அது போலத்தான் வட இந்தியர்கள் என்றாலே திருடர்கள் என்ற வகையில் இதுவும் பரவுகிறது. மற்றபடி மற்றவனை பகடி செய்யும் விதத்தில் தமிழ்நாட்டுக்காரர்கள் எவ்வகையில் குறைந்தவர்கள் இல்லைதான். கோவையின் பீளமேடு பகுதியில் வசிக்கும் நைஜீரிய இளைஞர்கள் அப்பகுதி மக்கள் தம்மை இனரீதியாகக் கிண்டல் செய்து வருவதாக ஒரு காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்துள்ளதாக சில மாதங்களுக்கும் முன்பு தினத்தந்தியில் படித்தேன்.

இவர்கள் செய்த சில செயல்கள் இதற்கு வலுவான அடித்தளம் அமைத்துக் கொடுக்கின்றன, கோவையின் புறநகர்ப்பகுதி ஒன்றில் 3 வட இந்தியர்கள் ஒரு மாட்டுக் கன்றை புணர முயற்சி செய்திருக்கிறார்கள். அது கத்தாமல் இருக்க மண்வெட்டியின் கைப்பிடியை அதன் வாயில் விட்டு அடைக்க முயற்சி செய்ய மரண் பீதியில் அது கத்தி மாட்டுகன்றின் சொந்தக்காரர் வந்து பார்த்து பின்பு ஊர்வலமாக அம்மூவரையும் கொண்டுபோய் காவல் நிலையத்தில் ஒப்படைத்திருக்கிறார்கள்.

இன்னொரு நிகழ்வில் இரு ராஜஸ்தானிகளிடையே ஏற்பட்ட குழுச்சண்டையில், ஒருவனை அடிக்க இன்னொருவன் ஆளை நியமித்திருந்தான், அவன் குறிப்பிட்ட இடத்தில் அடிக்கப்படவேண்டியவன் வந்து கொண்டிருப்பதை தகவல் தர அடியாள் தாக்குவதாகத் திட்டம், இது சொதப்பி திரைப்படங்களில் வருவது போல் நம்மவர் ஒருவர் அவ்வழியில் வந்திருக்கிறார். அவரை தவறுதலாகத் தாக்கிவிட்டான் பின்பு அவனை நையப்புடைத்துவிட்டார்கள்.

இப்படியாகப் பல நிகழ்வுகள் அங்கங்கே. தற்போது ஒரு நிகழ்வு திருடன் எனக் கருதி பள்ளிக்கரணையில் வட இந்தியனைப் போல் தோற்றமுடைய ஒரு இளைஞனை கும்பலாகக் கூடி அடித்து நொறுக்கியிருக்கிறார்கள், ஆனால் அவனோ மனநிலை சரியில்லாத ஆந்திராவைச் சேர்ந்தவன். இதற்கெல்லாம் என்ன செய்ய ?

முதலில் இந்த கும்பல் வன்முறையின் நோக்கம்தான் என்ன ஒருத்தன் சிக்கியவுடன் என்னவென்றே தெரியாமல் வந்து அடிப்பதுதான். அதிலும் சாலையில் ஏதாவது விபத்து நேர்ந்துவிட்டால் யார்மீது தவறு என்றெல்லாம் நின்று பேசவோ யோசிக்கவே எல்லாம் முயல்வதே இல்லை ஆ ஊ ன்னா கைவைக்க வேண்டியது. இது கொலைவரை நீள்கிறது. இதனால்தான் ஏதாவது விபத்து நேர்ந்து விட்டால் உயிருக்கும் அடிக்கும் பயந்தே ஓட்டுநர்கள் தப்பியோடிவிடுகிறார்கள். திருடன் என்ற ஐயத்தின் பேரில் இது போன்று கும்பலாக சேர்ந்து அடிப்பதால் பல அப்பாவிகள்தான் சாகிறார்கள். மன நிலை சரியில்லாதவர்கள் கொல்லப்படுகிறார்கள். இப்படிக் கும்பலாக அடிப்பதை, கொல்வதை வீடியோ எடுக்கிறார்கள் நூற்றுக் கணக்கானோர் வேடிக்கை பார்க்கிறார்கள் என்ன காட்டுமிராண்டித்தனமிது ?

சும்மாவாச்சுக்கும் இம்மாதிரி வட இந்தியர்களை வெறுப்பவர்கள் ஒன்றைப் புரிந்து கொள்ளவேண்டும். இது நம் மாநிலத்திலிருந்தும் எல்லா மாநிலங்களுக்கும் சென்று கூலி வேலை பார்க்கும் தமிழகத்தவர்கள் இருக்கிறார்கள். இதே போல் அம்மாநிலத்தவர்கள் வன்முறையில் இறங்கினால் என்னவாவது ? மலையாளிகள் ஆதிக்கம் பெருகிவிட்டது, வட இந்தியர் எண்ணிக்கை பெருகிவிட்டது என்பதற்காக கோபப்படுகிறவர்கள் வெளிநாடுகள், வெளிமாநிலங்களில் இருக்கும் நம்மவர்கள் நிலையையும் எண்ணிப்பார்க்க வேண்டும். இப்படி ஊரை விட்டுப் பிழைப்புத் தேடிப்போகக் காரணம் அவர்களின் தன்னலமல்ல. உலகமயம்தான் இப்படி எல்லோரையும் குடும்பத்தை விட்டு ஊரூராக அலைய வைத்துள்ளது. மேலும் அவர்கள் கொத்தடிமைகள் போல்தான் வேலை வாங்கப்படுகிறார்கள். குறைவான நேரமே உறங்குகிறார்கள். குறைவான ஊதியமே அவர்களுக்குக் கிடைக்கிறது. வேலையில்லாதவர்களும் உண்டு. இவர்களால்தான் பெரும்பாலான சமூக விரோதச் செயல்கள் நடக்கின்றன. போதாக்குறைக்கு திருப்பூர், சென்னை வங்கிக்கொள்ளைகளைத் தொடர்ந்து இவர்கள் மீதான குற்றப்பரம்பரை மனப்பான்மை காவல்துறைக்கும் அதிகரித்து இவர்களைத் தனியாக கணக்கெடுத்து சோதனை செய்வது என்ற நிலைவரை கொண்டு வந்து விட்டுள்ளது.

இது போன்ற நிலை தமிழகத்தில் தொடர்ந்தால் தமிழகமும் மகாராஷ்ட்ர, கர்நாடக மாநிலங்களைப் போல் சகிப்புத்தன்மையற்றவர்கள் பட்டியலில் இடம்பெறக்கூடும்.

Download As PDF
Bookmark and Share
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

மோதல் கொலை - மனித உரிமை மீறல் - கேரள காவல் துறையும் தமிழகக் காவல் துறையும் !!

நான் ஒரு மனித உரிமைவாதி, மனிதாபிமானி இதில் எனக்கு எந்த வெட்கமும் இல்லை. அதனால் இந்த என்கவுன்டரை கடுமையான கண்டனத்துடன் எதிர்க்கிறேன். தற்போது நடைபெற்ற மோதல் கொலையும் அது போலியானது என்றுதான் தெரிகிறது. குற்றம் நிரூபிக்கப்படாமலே தண்டனை அதுவும் கொலைத் தண்டனை. இந்த எழவை எதிர்க்காமல் என்ன செய்வது ? அதுவும் மனித உரிமைக் காவலர்களால் நிகழ்த்தப்பட்டுள்ளது. ஏற்கெனவே பல விளக்கங்கள் விவாதங்கள், என்கவுன்டருக்கு எதிராகவும், ஆதரவாகவும். அதில் நான் எதிரானவர்கள் பக்கம் நிற்கவே விரும்புகிறேன். ஏனென்றால் இதை ஆதரிப்பவர்கள் இரண்டு நாள் கத்தி விட்டு மறந்து விடுவார்கள். அடுத்த என்கவுன்டர் நடந்து அதை எதிர்த்தால் மட்டுமே வருவார்கள்.

கடந்த முறை நடந்த கோவை மோகன்ராஜ் என்கவுன்டரும் சரி இந்த என்கவுன்டரும் சரி ஒரு ஒற்றுமை உள்ளது. அந்தந்த நாளின் அரசுகள் கடும் நெருக்கடிக்கு உள்ளாகியிருந்தன, அப்போதைய கருணாநிதி அரசும், தற்போதைய ஜெயலலிதா அரசும். அதை திசை திருப்பவே இத்தகு கொலைகள் நிகழ்த்தப்பட்டுள்ளன. சரி இலட்சக் கணக்கில் கொள்ளையடித்தவர்கள், சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டது என்ற பொதுக்கருத்தில் தமிழக அரசின், தமிழகக் காவல்துறையின் பெயர் கெட்டு விட்டதால், இப்படி 5 பேரைக் கொன்று தனது நாயகத்தனத்தை நிலைநாட்டியுள்ளது கொடிய வெறி பிடித்த காவல்துறை. நன்று. இதற்கு மக்களின் உளவியல் ஆதரிக்கிறது. மனித உரிமையை காலில் போட்டு மிதிப்பதற்கு ஆதரவை அள்ளி வழங்குகிறது. மனித உரிமை பேசவருபவர்களை ஆத்திரத்துடன் எதிர்க்கிறது, எள்ளி நகையாடுகிறது. முடிந்தால்  இவர்களையும் என்கவுன்ட்டரில் போடக் கோருகிறது. அவர்கள் கொள்ளையடிக்கும் போது, கொலைசெய்யும் போது, வன்கலவி செய்யும் போது, குண்டு வைக்கும் போது மனித உரிமைக் கும்பல் மயிரைப் புடுங்கியதா என்ற பாணியில் கேட்பதன் மூலம் மனித உரிமை ஆர்வலர்கள் என்றாலே குற்றவாளிக்கு சொம்பு தூக்கத்தான் வருவார்கள் என்ற கொச்சைப் படுத்தும்  போக்கைக் கடுமையாகக் கண்டிக்கிறேன்.

மேற்படி இந்த மாதிரியான மோதல் கொலையை ஆதரிக்கும் மனநிலையில் இருப்பவர்கள், ஏன் அவைகளையெல்லாம் அதாவது குற்றவாளியின் குற்றங்களையெல்லாம் கண்டிப்பதில்லை என்று கேட்டு மடக்கி விடமுடியும். மனித உரிமையை விரும்புகிறவர்கள் இன்னும் எத்தனையோ தனிமனித சீர்கேடுகளால் விளையும் குற்றங்களை கண்டித்ததில்லை என்பதற்காக அதை ஆதரிக்கிறார்கள் என்று பொருள் கொள்ளமுடியாது. இது போன்று சூடேற்றப்பட்ட, ஊடகங்களில் வெளிச்சம் கொடுக்கப்படாத, பொது மக்களின் கவனம் பெறாத எத்தனையோ சமாச்சாரங்கள் மனித உரிமை ஆர்வலர்களால் விவாதிக்கப்பட்டும், போராட்டங்கள், பரப்புரைகள் மூலமாக முன்னெடுக்கப்பட்டும் வந்திருக்கின்றன. அப்போதெல்லாம் இந்த மனித உரிம எதிர்ப்பாளர்கள், என்கவுன்டர்கள் ஆதரவாளர்கள் அதை ஆர்வத்துடன் கவனிப்பதில்லை அது அவர்களுக்கொரு பொருட்டாகவும் இருந்ததில்லை.  இப்போது மட்டும்தான் மனித உரிமை பேசுகிறவர்கள், காவல்துறையின் கொடும் போக்கை எதிர்ப்பவர்கள் இவர்கள் கண்ணுக்குத் தெரிகிறார்கள் போலும்.

இதில் அதிர்ச்சி ஒன்றுமில்லை, மிகப்பரவலாக ஜாதி வெறி, தேசிய வெறி, இனவெறி வகையிலான் சமூக வன்முறைகளை சலனமில்லாம ஏற்றுக் கொண்டுள்ள மனோபாவம் இதை ஆதரிப்பதில் ஒன்றும் பெரிய அதிர்ச்சியில்லை. இந்த அறச்சீற்றம் நிலையில்லாதது. பாகுபாடானது. இதை விட பெரிய குற்றங்கள் தெரிந்திருந்தாலும் இதற்கு மட்டும் இப்படி முட்டுக் கொடுத்து ஆதரிப்பது ஊடகங்களின் பரப்புரைகளுக்கு பலியான மனசாட்சிகள் மட்டுமே. காக்க காக்க அன்புச் செல்வன், நான் மகான் அல்ல கார்த்தி வகை உளவியல்தான் இப்படியொரு தற்காலிகமான முட்டாள்தனமான, கொடிய முடிவை விரும்புகிறது. இதனால் நேரப்போகும் பின்விளைவுகளை அறியாமல்.

இங்கு எதிர்ப்பதன் முதல்நோக்கமே குற்றவாளிகளைக் காப்பதோ அவர்கள் மீதான மொன்னையான பரிதாபத்திலோ, அல்லது சமூகமே அனைத்துக் குற்றங்களுக்குக் காரணம் என்ற விவாதமோ அல்ல. காவல்துறையின் வரம்பற்ற அதிகாரம், அல்லது ஆட்சியாளர்களுக்கு அவர்கள் அனுசரனையாக இருந்து அவர்கள் ஏவலைச் செய்து முடிப்பது, பொதுமக்கள் மீது காவல்துறையினர், அதிகாரவர்க்கத்தினர் காட்டும் அலட்சியம் பலம், வன்முறை இவற்றுக்கெதிரான ஜனநாயகக் கோரிக்கை மட்டுமே தகுந்த விசாரணைகளின் அடிப்படையில் தண்டனை வழங்கப்படவேண்டுமென்பது.

தற்போது கொள்ளையர்கள், என்ற குற்றத்தின் அடிப்படையில் 5 பேர் கொலைகளை நீங்கள் ஆதரிப்பதாக இருந்தால்,

1. சிங்களர்களின் மனநிலையிலிர்ந்து பார்த்தால் இனப்படுகொலையுடன் சேர்த்து நடத்தப்பட்ட புலியழிப்பை நியாயமென ஏற்க வேண்டும். அவர்களுக்கு தமிழர்கள் பிரச்சனையோ, இராணுவத்தின் இயல்போ தெரியாது. குண்டுவைக்கும் புலிப்பயங்கரவாதிகள் அழிய வேண்டும், அவர்களை ஆதரிக்கும் அல்லது ஆதரிக்காவிட்டாலும் அங்கிருக்கும் தமிழர்களை அழித்தாவது அவர்களை அழிக்க வேண்டும் என்ற சிங்கள மன உளவியலும் சரியானது.

2. இராஜீவ் கொலையில் குற்றம் சாட்டப்பட்டுள்ள மூவரின் தண்டனையும் செயல்படுத்தப்பட வேண்டும். ஏனென்றால் பெரும்பான்மையான இந்தியர்கள் அதை நம்புகிறார்கள். முடிந்தால் சுட்டோ அடித்தோ கொல்ல வேண்டுமென்று கூட விரும்புகிறார்கள்.

3. என்கவுன்டருக்குக் கொடுக்கப்படும் சன்மானம், பதவியுயர்வு போன்றவற்றிற்காக காஷ்மீரில் நிகழும் அனைத்துக் கொலைகளும் ஆதரிக்கப்படவேண்டும் ஏன்னா காஷ்மீர் என்றால் தீவிரவாதி, தீவிரவாதி என்றால் காஷ்மீர் இந்தியர்களின் அகராதியில்.

அல்லது ஒருவனை கொல்லவேண்டுமென நினைத்தால் ஊடக பலத்தைக் கொண்டு அவன்மீதான தொடர்ந்து அவதூறுகளின் மூலமே அதற்கான மனநிலையை உருவாக்கியும் விடலாம்.

சவூதி அரேபியாவைப் போல் கடும் தண்டனை கொடுப்பதால், அல்லது இது போன்ற மோதல் கொலைகளால் குற்றங்கள் குறையும் என்பதெல்லாம் ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல உண்மையுமல்ல. தற்போது என்கவுன்ட்டர் நடக்கும் போதுள்ள மக்களின் மனநிலை சில நாட்களில் மாறிவிடும் போது, குற்றம் செய்யத் துணிகின்றவரின் மனநிலையும் மாறாதா ? ஒன்றுமில்லை கனவான்களே ! கோவையில் ஒருவருடத்திற்கு முன்பு நடந்த மோகன்ராஜ் கொலைக்குப் பின்பு இரு மாதங்களுக்குப் பின் என நினைவு, எனக்குத் தெரிந்தே செய்திகளில்  ஒரு சிறுமி 6 வயதுடையவள் வன்புணர்ச்சி செய்து கொல்லப்பட்டு விட்டாள், மேலும் ஒரு வன்புணர்ச்சிக் கொலை அது நினைவில்லை, மற்றபடி கொலையில்லாமல் சிறுமி வன்கலவியான செய்திகளுக்குக் குறைவில்லை இந்நாள்வரை.

கொலைத்தண்டனைகளால் குற்றம் குறையாது என்பதற்கு உதாரணம்தான் சீனா, அமெரிக்கா. சீனாவில் மனித உரிமைகள் என்பதே கிடையாது, அதே சமயம் குற்றங்களுக்கும் குறைவில்லை. சாவுத்தண்டனைகளும் அதிகமாக நிறைவேற்றப்படுவது சீனாவில்தான். அமெரிக்காவில் மனித உரிமை இருந்தாலும், குற்றவாளிகள் அதிகமுள்ள நாடு மக்கள் தொகையுடனான ஒப்பீட்டளவில் அதிகம் பேர் சிறையிலுள்ள நாடு அமெரிக்காதான். ஆனாலும் குற்றம் குறையவில்லை. ஈரான், சௌதி நாடுகளில் பொதுவெளியில் கொடிய முறையில் கொலைத்தண்டனைகள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. குற்றம் செய்ய பயமிருந்தாலும், ஓரளவு குறைந்தாலும் இத்தனை கொலைத்த்தண்டனைகள் காலம் காலமாக நிறைவேற்றப்பட்டும் இன்னும் மறையவில்லையே இது போன்ற குற்றங்கள். ஏன் ? இதற்கான சமூகக் காரணிகள் தீர்க்கப்படும் வரையில் இது போன்ற குற்றங்கள் தொடரும். தனிமனிதக் கொலைகள் மூலமாக மக்களின் கோபத்தை தற்காலிகமாகத் தணிக்கவே இது போன்ற கொலைகளை நடத்துகிறார்கள். இவைகளை இடைக்காலத் தீர்வுகள் என்று கூட சொல்ல முடியாது.

இன்னொரு விடயம் ஒரு குற்றவாளியைத் தண்டிப்பவர் குற்றவாளியை விட யோக்கியமானவராக இருக்க வேண்டும். ஆனால் காவல் துறை நிகழ்த்திய அட்டூழியங்களுக்குக் கணக்கேதுமுண்டோ ? எடுத்துக்காட்டாக மோகன்ராஜ் என்ற "காமுகனை" சுட்டு வீழ்த்திய காவல்துறையை (மோகன்ராஜைப் போட்டுத்தள்ள ஜெயின் சங்கத்திலிருந்து பணம் கைமாற்றப்பட்டதாக செவிவழிச் செய்தியொன்று கோவைப் பகுதிகளில் இருக்கிறது.) போற்றியவர்கள் வாச்சாத்தியில் கொடுஞ்செயல்கள் பல புரிந்த பல காவல்துறையினர் பெரிய தண்டனைகளின்றித் தப்பியபோது பெரிய அளவில் எதிர்ப்பில்லை, மனித உரிமை ஆர்வலர்கள் தவிர மற்ற யாவரும் கவலைப்படவில்லை. தற்போது விழுப்புரம் அருகே காவல்துறையினரால், இருளர் பெண்கள் வன்புணர்ச்சி செய்யப்பட்ட வழக்கில் இன்னும் காவல்துறையால் இழுத்தடிக்கப்பட்டு குற்றவாளிகளைத் தப்பவிடும் முயற்சிதான் நடக்கிறது. இது போன்ற காவல்துறையின் அட்டூழியங்களுக்குக்கும் சமூக ஆதரவு காவல்துறைக்கு வரம்பற்ற அதிகாரத்தை வழங்கும், பின்பொருநாள் அது அப்பாவிகளெனப்படுபவர்கள் மீது பாயும்போது வருத்தப்பட்டு பயனில்லை. அதிகாரத்திற்கு அப்பாவியும், குற்றவாளியும் சமம்தான் ஏறக்குறைய அவர்களைத் தொல்லை செய்யாத வரை. சராசரிக் குற்றவாளிகளின் மீதான வெறுப்பு கூட மனித உரிமைகளை மதிக்காத அதிகார வர்க்கத்தின் மீதும், காவல்துறையின் மீதும் மக்களுக்கு இல்லாமல் இருப்பதுதான் அவர்களின் வெற்றியும் மனிதத்தின் தோல்வியும்.

தமிழக கேரள காவல்துறையினரின் செயல்பாடுகள் :

தமிழகக் காவல்துறை மோகன்ராஜைப் என்கவுன்டரில் போட்டது. கேரள காவல்துறை சௌம்யா என்ற இளம் பெண்ணை துடிக்கத் துடிக்க சாகும் தறுவாயிலும் வன்புணர்ச்சி செய்த கோவிந்த ராஜனை சிறையில் இட்டு நீதிமன்றத்தின் மூலம் சாவுத் தண்டனை வாங்கிக்கொடுத்துள்ளது. தற்போது கேரளத் தமிழ்மீனவர்களைக் கொன்ற இத்தாலியக் கடற்படையினரையும் நீதிமன்றத்தில் நிறுத்தியுள்ளது. தமிழகக் காவல் துறை ? இதில் அவர்களை மட்டும் குறை சொல்லவில்லை. இந்திய தமிழக அரசுகளைத் தாண்டி அவர்கள் ஒன்றும் செய்ய முடியாதுதான். சரி போராடும் மீனவர்களை அடிக்க லத்திக்கம்பு தயாராகிறது எப்போதும் அது மட்டும் குறைவில்லை. மலையாளிகள் சில இடங்களில் இன்னும் நம்மை விட உயர்ந்தவர்கள். நம்மவர்கள் கையாலாகாத்தனத்தால் கோவிலுக்குச் சாமி கும்பிட வரும் ராஜபக்சேவின் மச்சானையும், சிங்கள எழுத்துப் பொறித்த உடையணிந்த காரணத்தால் சாதாரண சிங்களப் பொது மனிதனையும் அடித்து தம் கோழைத் தனத்தை நிரூபித்துள்ளனர். மரண தண்டனைக்கு எதிரான போராட்டம் நடக்கும் தமிழக்த்தில் இந்த மோதல் கொலைகளுக்கு அசத்தலான ஆதரவு

வாழ்க இனமானம். வாழ்க மரண தண்டனை.
Download As PDF
Bookmark and Share
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

திருப்பூர் நூல்கள் கண்காட்சி 2012 - என் கனவு நிறைவேறியது !!

கடந்த பத்து நாட்களாக நடந்த திருப்பூர் அறிவுத் திருவிழா இன்றுடன் முடிவடைந்தது. அடியேனின் பணிச்சூழல் காரணமாக கடந்த வாரத்தில் சனி, ஞாயிறு இரண்டு நாட்களாக பணி நிமித்தமாக அலுவலகத்திலேயே கிடக்க வேண்டியிருந்தது. அதனால் திருவிழா முடியுந் தருவாயில் நேற்றுத்தான் செல்ல முடிந்தது.

அதுவும் காலையில் 11 மணிவாக்கில் சென்றுவிட்டு 2 மணியளவில் திரும்பி வந்துவிட்டேன் முந்தைய நாள் இரவில் விழித்திருந்து அமெரிக்கத் துரைமார்களின் அலுவல்களை முடித்துவிட்டு உறங்காமல் வந்திருந்தேன். அதற்கு மேல் தாக்குப்பிடிக்க இயலாது. முகநூலில் திருப்பூர் கண்காட்சியைக் குறித்த செய்திகளைக் குறையாமல் வழங்கினார்கள். அதன் மூலம் ஒரு வித மன நிறைவு அடைந்திருந்தேன்.

அவ்வப்போது கிடைத்த செய்திகளைக் கொண்டு முன்கூட்டியே எந்தெந்த நூல்களை வாங்க வேண்டுமென்று கிட்டத்தட்ட முடிவு செய்தே வைத்திருந்தேன். இதுவரையில் நடந்த கண்காட்சிகளில் வாங்கியதைக் காட்டிலும் இம்முறையே அதிக அளவில் நூல்களை அள்ளிச் சென்றேன். சென்னையில் நான்கு வருடங்களுக்கும் மேல் இருந்த போதும் இரண்டு முறை கண்காட்சி குறித்து அறிந்த போதும் அதற்கு செல்ல முடியவில்லை. வேலை தேடும் படலத்தில் ஒரு முறையும், விடுமுறையில்லாமல் வேலை செய்த காலத்திலும் வந்திருந்த நூல்கள் கண்காட்சிக்குச் செல்ல முடியாமைக்கு பொருளாதாரமின்மையே முதன்மைக் காரணமாக இருந்தது.

ஆனால் தற்போது கையில் சில ஆயிரங்கள் வைத்திருந்ததால் துணிச்சலாக நூல்களை வாங்குவதற்கென்றே ஆயிரம் ரூபாய்க்கு மேலாக செலவு செய்ய முடிந்தது. உண்மையில் ஆயிரம் ரூபாய்க்கு வாங்குவது இது முதன் முறை பல வருடங்களாக நூல்களின் மேலிருந்த அடங்காத ஆர்வம்தான். 10 வருடங்களுக்கு முன்பென்றால் கூட வாங்கியிருப்பேன் காசு இல்லாததுதான் பிரச்சனை. நான் மனநிறைவு அடைந்தது எனக்குப் பிடித்த என்று சொன்னால் சரியாக இராது, நான் வாங்க வேண்டிய கடமையாக நினைத்த சில நூல்களை வாங்கினேன்.

தம்முடைய வணிக நோக்கங்களுக்காக அல்லாமல், மனிதகுல மேன்மைக்காகவும், ஒரு இலட்சியத்திற்காகவும் நடத்தும் வெளியீட்டகங்களின் பதிப்புகளை தவறாமல் வாங்க வேண்டுமென நினைப்பேன்.  இதில் புதிய ஜனநாயகம், புதிய கலாச்சாரம், பூவுலகின் நண்பர்கள் போன்ற மாத இதழ்கள் அவர்களின் வெளியீடுகள் போன்றவை. இவைகளுக்கு நான் சந்தாதாரராக இல்லாத காரணம் என்னுடைய ஊருக்கு அஞ்சல்காரர் வரவே மாட்டார். எங்கள் பகுதிக்கு நான்கு ஊர்களுக்கும் சேர்த்து ஒரே ஒருவர்தானிருக்கிறாராம். எப்போதாவது மட்டுமே வருவாராம். ஏற்கெனவே சில முறை அவருடைய கொண்டு சேர்க்கும் முறையை கண்டுணர்ந்து அனுபவித்தவன் என்பதால சந்தா செலுத்தவில்லை. முடிந்த வரையில் வெளியில் சென்று வாங்கி விடுவது வழக்கம். பூவுலகின் நண்பர்கள் எங்கு கிடைக்கிறது என்று தெரியவில்லை.

வெவ்வேறு பதிப்பகங்கள் இருந்தாலும் ஒரு சில கடைகளுக்குள் மட்டுமே நுழைவதற்கு விரும்புகிறார்கள். சில கடைகள் காற்று வாங்கின. சிலர் என்னவென்று தெரியாமல் வந்து சுற்றிப்பார்த்து விட்டுப் போனார்கள். நான் தேடும் கடைகள் அத்தகையவையே. முதலில் ஒரு பதிப்பகத்தில் சென்று பெயர் நினைவில்லை, தாண்டவக்கோன் என்பவர் இயக்கிய குழந்தைகளுக்கான ஐந்து குறும்படங்கள் கொண்ட டிவிடி ஒன்றை வாங்கினேன். பார்த்து விட்டுக் கருத்து சொல்லவேண்டுமென்றும் கேட்டுக் கொண்டார் அங்கிருந்தவர்.

இன்னும் பல்வேறு இடங்களில் போய் சில நூல்களை வாங்கினேன். வாங்காமல் விட்டதும் உண்டு. மறந்தததும் உண்டு தற்போதைக்கு  வேண்டாமென்றதும் உண்டு. வாங்காம விட்டவை என்று பார்த்தால்,

"ஈரான்" என்ற காமிக்ஸ் அது குறித்து இன்னும் கேள்விப்பட்டதில்லை ஆனாலும் விடியல் பதிப்பகத்தினரின் வெளியீடு என்பதால் மட்டும் ஒரு வித ஆர்வமிருந்தது. பின்பு வாங்கலாம் என்று வந்துவிட்டேன். அடுத்ததாக ஃபிடல் காஸ்ட்ரோவின் "என் வாழ்க்கை" என்ற விடியல் பதிப்பக நூலொன்று நானூற்றைம்பது ரூபாயென்பதால் அதையும் தள்ளிப் போட்டுவிட்டேன்.  இது மாதிரி பல நூல்களை எடுத்துப்பார்த்து விட்டு, "ம்ஹூம்", "ப்ச்" சரி பின்னாடி பார்க்கலாம் என்று வைத்து விட்டே செல்ல வேண்டியிருந்தது. ஷோபா சக்தியின் "குழந்தைப் போராளி" "கறுப்பு அடிமைகளின் கதை" (ஏற்கெனவே படித்துவிட்டேன் என்றாலும்), தமிழ் கணினி தொடர்பான நூல்கள், தமிழ் நாள்காட்டி மற்றும் சில தமிழுணர்வு சார்ந்த நூல்கள் போன்றவை  இவையில் சில. பெரியார் குறித்த எந்த நூலையும் இம்முறை வாங்கவில்லை. கலப்பை வெளியீட்டகத்தின் "கெட்ட வார்த்தை பேசுவோம்' என்ற நூலை வாங்க வேண்ட்மென்று நினைத்திருந்தேன் ஆனால் மறந்தே போனது.

ஒரே நூலை வெவ்வேறு வெளியீட்டகங்களின் கடைகளில் காணமுடிந்தது. பொதுவாகப் பார்த்தால் கார்ல் மார்க்ஸ். ஃபிடல், சேகுவேரா, பெரியார் குறித்த நூல்களை பல் இடங்களில் காணமுடிந்தது. இதற்கு மகிழ்வதா வருந்துவதா என்றே தெரியவில்லை. நிச்சயம் மகிழ முடியாது. சே இளைஞர்களின் நவீன உடைகளின் சின்னமானது போல் இது போன்ற புரட்சிக்காரர்களும் நூல் வணிகர்களிடம் சிக்கி விட்டார்கள் என்றே வருந்துகிறேன். அடுத்து பிரபாகரன் படம் போட்ட பல வகையான நூல்கள். ஆங்கிலப் புதினங்கள் நான்கு எடுத்தால் ரூ 200 என்று ஒரு கடையில் விளம்பரம், எனக்கும் ஆங்கிலம், ஆங்கிலப் புதினங்களுக்கும் ஏழாம் பொருத்தம், அது குறித்து அ னா ஆவண்ணா கூடத் தெரியாது. சில வருடங்களுக்கு முன் அய்ன் ரேண்ட்- இன் The Fountainedhead- ஐ படிக்க முயன்று படுதோல்வி அடைந்தேன். ஆங்கில புதினங்கள் வாசிக்க ஆங்கிலம் வேண்டும். நமக்குப் போதாது. மூன்று சொற்களுக்கொருமுறை அகராதியைப் புரட்டினால் அந்த புதினத்தைப்  படித்து முடித்த மாதிரிதான்.  ஒரு பத்தி முடித்து அடுத்ததைப் படிக்கத் துவங்கினால் மறந்து விடுகிறது முந்தைய பத்தி. அதனால்தான் ஆங்கிலம் எதுவும் வாங்கவில்லை.

நான் வாங்கியவை சில :

விடியல் பதிப்பகத்தில் -

 பெண்ணியம் வரலாறும் கோட்பாடுகளும்
உயிரிகள் தோன்றியவிதம் - சார்லஸ் டார்வின்
குணா பாசிசத்தின் தமிழ் வடிவம்
பெயரிடப்படாத நட்சத்திரங்கள்

தலித் முரசு -

நான் யார்க்கும் அடிமையில்லை - வே. மதிமாறன்
பாரதி பக்தர்களின் கள்ள மௌனம் - வே. மதிமாறன், மருதையன்
மற்றும் பாலை திரைப்படத்தின் டிவிடி.

பூவுலகின் நண்பர்கள் வெளியீடுகளைத்தான் அதிகம் வாங்கினேன். ஒரு மாத இதழை வேண்டாமென்று திருப்பிக் கொடுத்தேன். கடைக்காரர் பாதிவிலைக்கு எடுத்துக் கொள்ளச் சொன்னார்.  பூவுலகின் நண்பர்கள் வெளியீடுகளில் கூடங்குளம் போராட்டம் குறித்த அனைத்து நூல்களையும் வாங்கி விட்டேன்.

பாரதி புத்தகாலயத்தில் நிறைய வாங்கினேன். பட்டியல் நீளமானது.

"ஒரு பொருளாதார அடியாளின் வாக்குமூலம்" வாங்கினேன்.

"சோளகர் தொட்டி" வாங்கி விட்டேன்.

இவையனைத்தையும் படித்து முடித்தால் மீதி பாவமும் தீர்ந்து விடும்.
Download As PDF
Bookmark and Share
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment