பாலின வேறுபாடு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பாலின வேறுபாடு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

கண்டு கொள்ளப்படாத மகளிர் கிரிக்கெட்


தற்போது மகளிர்க்கான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடந்து முடிந்து விட்டன. அது பெரிய அளவில் பேசப்படவில்லை. ஏனோ ? கிரிக்கெட் நடிகர்கள் ஆடினால் கூட கொஞ்ச பேர் பார்க்கிறார்கள், ஏன் நடிகைகள் கூட ஆடினால் பார்க்கிறார்கள். பெண்கள் கிரிக்கெட் மட்டும் இன்னும் பெரிய அளவில் பிரபலமாகவில்லை. அதுவும் கிரிக்கெட்டின் மிகப்பெரும் சந்தையான தெற்காசியாவில் கூட பெண்கள் கிரிக்கெட் மிகப்பெருமளவில் போணியாகவில்லை.

இந்த நிலையில் இப்போது ஆண்களும் பெண்களும் கலந்து விளையாடும் கிரிக்கெட் போட்டிகளைத் தொடங்கப்போகிறார்கள். ஏன் அப்படியாவது பிரபலப்படுத்தலாமென்றா ? சும்மா கிளுகிளுப்பாகவாவது பார்க்க வைத்துவிடமுடியுமென்றா ?

பெண்கள் கிரிக்கெட் கொஞ்ச நேரம் பார்த்தேன், ஆண்கள் அளவுக்கு துடிப்பாக இல்லையென்றாலும், பெண்கள் ஒரு வித நளினத்துடனும், மிதமான பரபரப்புடனும் நன்றாகவே விளையாடினார்கள். சிலருக்கு இன்னும் பேட்டிங் வரவில்லை. இறங்கி ( ஓரடி முன் வைத்து) அடிக்கும் போது முழங்கை வளைந்து, மண்வெட்டியில் வெட்டுவது போல் அடித்தார்கள் சிலர்.

பெண்கள் விளையாடும் விளையாட்டிலேயே கிரிக்கெட் மட்டுமே விளம்பரத்திற்கு உதவாத உடைகளை அணிந்து விளையாடுகிறார்கள். மினி ஸ்கர்ட், மினி ட்ரொஸர் மாதிரியான உடைகளை அணிந்து இதை விளையாட முடியாது என்பதால்தான் ரசிகர்கள் இவர்களைக் கண்டு கொள்ளவில்லையா ?

ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் ஒரு போட்டியில் தனிநபராக ஓட்டங்கள் அதிகம் அடித்தது ஒரு பெண் - பெலிண்டா கிளார்க் 229*


ஒரு நாள் போட்டியில் அதிக ஓட்டங்கள் அடித்த அணி நியூஸிலாந்து - 459

இதில் எதிராக ஆடிய பாகிஸ்தான் 47 ஓட்டங்கள் மட்டுமே பதிலுக்கு எடுக்க முடிந்தது, 408 ஓட்டங்கள்  வித்தியாசத்தில் பாகிஸ்தான் தோல்வி. அல்லது நியூஸி வெற்றி.

இது இரண்டுமே ஆண்கள் கிரிக்கெட் "சாதனை"யை விட அதிகம். இது இரண்டுமே 1997 இல் செய்யப்பட்ட சாதனைகள்.

ஆஸி பெண்கள் அணி 6 முறை உலகக் கோப்பையை வென்றிருக்கிறது. இதையெல்லாம் ஆண்கள் கிரிக்கெட்டில் எப்போதுமே முறியடிக்க முடியாது. பார்ப்போம்.

எல்லிஸ் அலெக்ஸாண்ட்ரா பெர்ரி

இந்தச் சிறுமி ஆஸ்திரேலிய பெண்கள் கிரிக்கெட் அணியில் இருப்பவர் கால்பந்து அணியிலும் இருப்பவர். தமது 16 ஆம் அகவையில் நுழைந்தார் ஆஸ்திரேலியாவின் கால்பந்து அணியிலும், கிரிக்கெட் அணியிலும் ஒரு சேர. கால்பந்து உலகக் கோப்பையிலும் பங்கெடுத்திருக்கிறார், கிரிக்கெட் உலகக்கோப்பையை வென்ற ஆஸ்திரேலிய அணியிலும் இருக்கிறார். இந்த மாதிரி கிரிக்கெட், கால்பந்து உலகக்கோப்பைப் போட்டிகளில் ஒரு சேரக் கலந்து கொண்டவரென இதுவரை கேள்விப்பட்டதேயில்லை. கிரிக்கெட் உலகக் கோப்பையைக் கடந்த முறை ஆஸி வென்ற போது இவரது பங்கு குறிப்பிடத் தகுந்தது. 


(தற்போது குத்துச் சண்டைப் போட்டிகளில் பங்கேற்கிறார், இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் ஆண்ட்ரூ ஃபிளிண்டாஃப். அவர் எந்தளவுக்கு வெற்றி பெறுகிறார் என்று பார்ப்போம்)

மைக்கேல் பெல்ப்ஸ் என்ற நீச்சல் வீரர் அதிக பதக்கங்களை ஒலிம்பிக்கில் வென்றவர் என்ற பெருமையப் பெற்றதோடு, அரை நூற்றாண்டு காலம் அதிக பதக்கங்களை வென்ற சாதனையை வைத்திருந்த ரஷ்யாவின் (முன்னாள் சோவியத் ஒன்றியத்தின்) ஜிம்னாஸ்டிக் வீராங்கனை லாரிஸ் லாட்டினினாவின் சாதனையையும் முறியடித்தார். இதில் லாரிஸ் லாட்டினினா இரு ஒலிம்பிக் போட்டிகளில் மட்டுமெ பங்கேற்றவர், அதிலும் ஒரு போட்டியில் பங்கேற்ற போது அவர் கர்ப்பமாக இருந்தார். மைக்கேல் பெல்ப்ஸ் மூன்று ஒலிம்பிக்கில் பங்கேற்றவர்.

இது மாதிரி சாதனைகள் எல்லாம் கண்டுகொள்ளப்படாமலே போகின்றன.

இப்படி மிகப்பெரும் சாதனைகளைப் பெண்கள் படைக்குமளவிற்கு திறமை இருக்கும்போது அவர்களை எப்படிப் பயன்படுத்துகிறார்கள் அவர்களுக்கு என்ன மாதிரியான அங்கீகாரம் வழங்கப்படுகிறது. இந்த டென்னிஸ் போட்டிகளுக்கும் அதிகமான முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. பிரபல டென்னிஸ் வீராங்கனைகள் மாடலாகவும் இருக்கின்றனர். ஷரபோவா வருடத்திற்கு 70 கோடிகள் வரை விளம்பர மாடலாகவே சம்பாதிக்க முடிகிறது. விளையாட்டுப் போட்டிகளை நடத்தும் பெரிய நிறுவனங்கள் இவர்களின் பிரபலத்தைப் பயன்படுத்திக் கொள்கின்றன. அதற்காகவே புதுப் புது பிரபலங்களை உருவாக்குகின்றனர்.


அதே நேரம் ஆண்களின் கிரிக்கெட் எவ்வளவு மெனக்கெட்டு பரப்பப் படுகிறது. கிரிக்கெட் வீரர்கள் பெரிய நடிகர்களுக்கு இணையான செலிபிரிட்டிகளாக இருக்கிறார்கள். எல்லா விளம்பரங்களிலும் வருகிறார்கள். நடிகைகளுடன் கிசு கிசு எழுதுமளவிற்கு பிரபலமானவர்களாக இருக்கிறார்கள். இவர்களுக்கு இருக்கும் தகுதி கிரிக்கெட் வீரர்கள் என்பது மட்டுமே.

இவர்கள் தேசத்தின் மானத்தைக் காப்பவர்கள் போல சித்தரிக்கப்படுகிறார்கள். கிரிக்கெட் போட்டியைப் பார்ப்பதே தேசபக்தி என்ற அளவிற்கு கட்டமைக்கப்பட்டுள்ளது.

கிரிக்கெட் பற்றிய செய்திகளுக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுத்துப் பரப்பப் படுகிறது என்று பார்த்தால்,

வரும் போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது, இன்னார் நீக்கப்பட்டார், இன்னார் தேர்வு செய்யப்பட்டார், இன்னாருக்கு வாய்ப்பில்லை

இந்திய அணி நாளை போட்டி நடக்கு இடத்திற்குப் போய் சேருகிறது.

இந்திய வீரர்கள் இன்று பெங்களூரு வந்தனர், அவர்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

போட்டிக்கு முன்பாக இந்திய வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டனர். வலைப்பயிற்சியில் ஈடுபட்டனர்.

இந்திய அணி இன்று வெற்றி பெறுமா ?

வெற்றி பெறுவோம் கேப்டன் நம்பிக்கை.

கிரிக்கெட் போட்டியை வர்ணிப்பதுதற்குத்தான் தொலைக்காட்சிச்செய்திகள் அதிகமான நேரத்தை எடுத்துக்கொள்கின்றனர்.

போட்டி முடிந்தவுடன் வெற்றிக்குக் காரணம், தோல்விக்குக் காரணம் குறித்த அலசல்கள்.

இவையெல்லாம் நாளிதழ்களின் முதல் பக்கத்தில் கூட வெளிவருகின்றன. 



கிரிக்கெட் சாதனைகள் என்று சொல்லப்படுகின்றவை எல்லாம் நல்ல நகைச்சுவைகளே.

"அதிக ஓட்டங்கள் எடுத்து சாதனை" என்பதற்கு முன்னால் எவையெவையெல்லாம் இணைக்கப்பட முடியும் பாருங்கள்.

இந்த வருடத்தில் "அதிக ஓட்டங்கள் எடுத்து சாதனை"

இந்த அணிக்கு எதிராக "அதிக ஓட்டங்கள் எடுத்து சாதனை"

இத்தனாவது விக்கெட்டிற்கு "அதிக ஓட்டங்கள் எடுத்து சாதனை"

ஒரே நாளில் "அதிக ஓட்டங்கள் எடுத்து சாதனை"

இத்தனாவது இன்னிங்க்ஸில் "அதிக ஓட்டங்கள் எடுத்து சாதனை"

ஃபாலோ ஆன் பெற்றும் "அதிக ஓட்டங்கள் எடுத்து சாதனை"

இரண்டாவது பேட்டிங்கில் "அதிக ஓட்டங்கள் எடுத்து சாதனை"

குறைந்த நேரத்தில் அல்லது பந்துகளில் "அதிக ஓட்டங்கள் எடுத்து சாதனை"

அணித்தலைவராக "அதிக ஓட்டங்கள் எடுத்து சாதனை"

விக்கெட் கீப்பராக "அதிக ஓட்டங்கள் எடுத்து சாதனை"

பந்து வீச்சாளராக "அதிக ஓட்டங்கள் எடுத்து சாதனை"

இப்படியாக நகைச்சுவைகள் தொடரும் நீளம் கருதி நிறுத்துகிறேன். இவயெல்லாம் போட்டித் துளிகள் அல்லது ஹைலைட்ஸ் என்று பெட்டிச் செய்தியில் போட்டு விளையாட்டுச் செய்தியின் பக்கங்களை நிரப்புவார்கள்


கிரிக்கெட் ஒரு மதமாக போற்றப்படும் அதே நேரம்  இன்னொரு புறத்தில் மற்ற விளையாட்டுக்களுக்கு முன்னுரிமை தரப்படுவதில்லை. வெறும் பெட்டிச் செய்திகளில் மட்டும் வெளிப்படுகின்றன. சொந்தக் காசையும், முயற்சியும் செய்து உயிரைக் கொடுத்துப் பயிற்சி எடுத்து ஒலிம்பிக்கில் எவனாவது பதக்கம் வாங்கினால் அந்த ஒரு மாதத்திற்கு மட்டும் "இந்தியர்கள்" பெருமைப்பட்டுக் கொண்டு மீண்டும் அவர்களை மறந்து விடுவார்கள். ஏன் இந்தியா ஒலிம்பிக்கில் பதக்கங்கள் வாங்க முடியவில்லை என்று விவாதிப்பார்கள். கிரிக்கெட்டைக் கொண்டாடத் தொடங்கி விடுவார்கள். ஐபிஎல்லை வழிபடத் தொடங்கி விடுவார்கள்.

ஆளுக்குப் பத்துக்கும் மேற்பட்ட கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்ற போதும், மகேஷ் பூபதியும், லியாண்டரும் பெரிய அளவில் கொண்டாடப் படவில்லை. சானியா மட்டுமே டென்னிசின் அடையாளமாக இருக்கிறார். அவர் பிரபலமானதும் டென்னிஸ் என்ற விளையாட்டின் காரணமாக அல்ல. ஏதாவது ஒரு (வெப்பமான பெண் - அதாவது) ஹாட் கேர்ள் கிடைக்க வேண்டு ஊடகங்களுக்கு ஊதிப் பெருக்கிவிடுவார்கள். அதே நேரம் உயிரைக் கொடுத்து விளையாடும் சாய்னா நேவாலை பெரிய அளவில் ரசிகர்கள் யாரும் கண்டு கொள்ளவில்லை.

விளையாட்டாக இருந்தாலும், அழகு + செக்ஸி மட்டுமே முக்கியத்துவம் பெறுகிறது போலும். சமீபத்தில் இலங்கையில் நடைபெற்ற 20/20 கிரிக்கெட் உலகக் கோப்பைப் போட்டிகளில் ஸ்ரீலங்காவின் சியர் லீடர்ஸ் பற்றி கிரிக்கெட்+தேச பக்தர்கள் பலரும் தமது சங்கடத்தைத் தெரிவித்தனர். அவர்கள் அழகாக இல்லை. பாமர ரசிகர்கள் மொக்கை ஃபிகரெல்லாம் எவன்டா சீர்லீடர்ஸா போட்டான் என்று அலுத்துக் கொண்டனர். நிலைத்தகவல் போட்டு எதிர்ப்பைக் காட்டினர்.

விளையாட்டுபோட்டிகளில் எதற்கு சீர் லீடர்ஸ்கள் வந்து குட்டைப்பாவாடையில் ஆட வேண்டும், கேமராக்கள் பாவாடைக்குக் கீழிருந்து படம் பிடிக்க வேண்டும். கிரிக்கெட் போட்டிகளே தேசபக்தர்கள் பார்ப்பது, தேசபக்தி பொங்கி வழிந்தோடும் போது, எதற்கு இந்தக் கிளுகிளுப்பு வேண்டிக் கிடக்கிறது. தேசபக்தி பேசும் அர்ஜுன் படங்களில் குத்தாட்டம் இருப்பது போல என்று கொள்வோம்.

டிடி ஸ்போர்ட்ஸில் உயரம் தாண்டும் போட்டிகள் போட்டிருந்தார்கள். ஒரு ஈரானியப் பெண்ணைக் காட்டினார்கள். அவர் பர்தா போன்றதொரு ஆடையை அணிந்து அது தலையிலிருந்து விழாமல் இருக்க ஒரு பேன்டையும் கட்டியிருந்தார். கை முழுவதும் மறைக்கும் ஆடை. அதே நேரம் இன்னொரு ஐரோப்பியப் பெண் ஏறக்குறைய இரு துண்டு ஆடை அல்லது பிகினி என்ற அளவிற்கு அணிந்திருந்தார். உடலை மறைப்பது ஒத்துக் கொள்ளக்கூடியது, மணிக்கட்டுவரையும், தலையையும் மறைக்க வேண்டுமெனக் கட்டாயப்படுத்துவதெல்லாம் என்னளவில் ஒத்துக் கொள்ள முடியாது. என்னைக் கேட்டால் இந்த பர்தா, பிகினி இரண்டுமே விளையாட்டு வீராங்கனைகளுக்கு ஒத்து வராதது.

மத்திய கிழக்கு அல்லது இஸ்லாமிய நாட்டுப்பெண்கள் பெரும்பாலும் இதை அணிந்துதான் விளையாட வேண்டியிருக்கிறது. மற்ற நாட்டினர் நீச்சலுடை மாதிரி, அல்லது பிகினி மாதிரி அணிகிறார்கள். இதற்குத் தயங்கியே இந்தியா மற்றும் முஸ்லிம் நாடுகளின் பெண்கள் இது போன்ற போட்டிகளில் சேரத் தயங்குவார்கள் போல் தெரிகிறது.

நன்றி : ஹஃபிங்க்டன் போஸ்ட்
இந்த உடைகளை வடிவமைப்பவர்கள், விதிமுறையாளர்கள் எல்லாம் வணிக நோக்கத்துடன் நடத்தப்படும் போட்டிகளில் பெண்களுக்கு வசதிப்படி வடிவமைப்பார்களா அல்லது ஆண்கள் ரசிக்கும்படி வடிவமைப்பார்களா என்று சொல்ல வேண்டியதில்லை. சில நாட்களுக்கு முன்பு, ஸ்குவாஷ் போட்டிகளில் பங்கேற்பவர்கள் குட்டைப் பாவாடை மட்டுமே அணிய வேண்டும் என்று விதியை மாற்றினார்கள். அதற்கு பாகிஸ்தான், எகிப்து நாடுகள் எதிர்ப்புத் தெரிவித்தனர். இதெல்லாம் எதற்கு ? ஏன் ட்ரௌசர் அணிந்து விளையாடினால் என்ன கெட்டு விடும்.

ஆண்கள் விளையாட்டு வீரர்களாக இருக்கும்போது அணியும் ஆடைகளுக்கும் பெண்களுக்கும் எத்தனை வேறுபாடுகள் பாருங்கள். ஆண்கள் உடைகளால் அவர்கள் சிரமப்படுவதேயில்லை. அதே நேரம் பெண்களைக்கவனித்தால் ?? அதென்ன விளையாட்டுப் போட்டிகளில் ஆண்கள் அணியும் உடைகள் முழங்கால் வரையில் அல்லது தொடை வரையாவது மூடியிருக்கும்படியும், பெண்கள் என்றால் புட்டத்தில் பாதியை மட்டும் மறைக்கும்படியும் இருந்தால் அதன் காரணம் என்ன ?

எந்த உடை பற்றியும் நான் அவ்வளவாக அலட்டிக் கொள்வதில்லை. இதையெல்லாம் சொல்லக் கூடாதுதான். ஆனால் விளையாட்டுப் போட்டிகள் என்ற பெயரில்தான் சீர்லீடர்ஸ், கடற்கரைக் கைபந்து போன்ற போட்டிகளில் வேண்டுமென்றே பெண்களை ஆடை அவிழ்ப்பு செய்விக்கின்றனர். இதையெல்லாம் பார்த்து ஆண்கள் அள்ளித் தெளிக்கும் கருத்துக்களுக்காகத்தான், திரைப்படங்கள், விளம்பரங்கள், இசைக் காட்சிகள், நடனக் காட்சிகள் இவைகளில் பெண்கள் காட்டப்படும் விதத்திலிருந்தே இந்த விளையாட்டுப் போட்டிகளில் காட்டப்படுவதையும் இணைத்துப் பார்க்க நேரிடுவதால் இதையெல்லாம் எதிர்க்க வேண்டியிருக்கிறது.  பெண்கள் உடை பற்றிப் பெரிய விவாதத்திற்கெல்லாம் கூட போக வேண்டியதில்லை. ஆண் வீரர்கள் அணிந்து விளையாடுவதையே பெண்கள் அணிந்தால் வேலை முடிந்தது. அதற்காகத்தான் பெண்கள் கிரிக்கெட் பற்றிச் சொல்ல வந்தேன்.

இன்னொன்றையும் சொல்ல மறந்தேன். சானியாவாகட்டும், சாய்னாவாகட்டும் அல்லது ஷரபோவாவாக இருக்கட்டும். பந்தை ஆக்ரோஷமாகத் திருப்பி அனுப்புகிறார் என்ற விவரிப்புடன் தினமணி, தினமலர், தினத்தந்தி உட்பட பெரும்பான்மை நாளிதழ்கள் வெளியிடும் புகைப்படங்களில் அவர்களது மேலுடை சற்றே உயர்ந்து தொப்புள் தெரிகிற மாதிரிதான் இருக்கிறது. இல்லையென்றால் பாவாடை பறக்கிற மாதிரித்தான் இருக்கிறது. இதை பல முறை நான் கவனித்திருக்கிறேன். இது இயல்பாக நடக்கிறதா ? வேறு போஸே கிடைக்கவில்லையா ? பாவாடை பறப்பதை ஸ்னாப் ஷாட் எடுத்துத்தான் போட வேண்டுமா கனவான்களே ?  பெண்களை செக்ஸியாகத்தான் உடை அணிய வேண்டும் என்று திணிப்பதாலேயே இதையெல்லாம் சொல்ல வேண்டியிருக்கிறது.

இதைப் பார்ப்பதற்கென்றே பலரும் இப்போட்டிகளைக் காண்கின்றனர். பெண்கள் பங்கேற்கும் உலக அழகிப் போட்டியளவிற்கு, உலக அழகன் போட்டி பிரபலமாகவில்லை. கடற்கரைக் கைப்பந்துப் போட்டிகளில் பெண்கள் அளவுக்கு ஆண்கள் போட்டி பிரபலமாகவில்லை. இதெல்லாம் அதன் எதிர் விளைவுகள்தான். ஒவ்வொரு முறையும் உலக அழகிப் போட்டியும், பிரபஞ்ச அழகிப் போட்டியும் நடக்கும் போதெல்லாம், செய்திகளில் சொல்லப்படுவது என்னவென்றால், இந்திய அழகிக்கு இத்தனாம் இடமே கிடைத்தது, இந்திய அழகி ஏமாற்றம். இதற்கெல்லாம் இந்தியர்கள் வருத்தப்பட வேண்டுமாம்.




இப்படியாக பெண்கள் என்றால் ரசிப்பதற்கே என்ற நிலை இருக்கும் வரை, அதை வணிகத்திற்காகப் பயன்படுத்தப்படும் வரை திறமையைக் காட்டி வென்ற பெண்களை விட உடலைக் காட்டிய பெண்களே வெற்றி பெற்ற பெண்களாக வலம் வருவர்.

சன்னி லியோன், பூனம் பாண்டே, ஷெர்லின் சோப்ரா, வீணா மாலிக் இவர்களெல்லாம் என்ன செய்தார்கள் என்று நமக்கு நாளும் நினைவூட்டப்பட்டுக் கொண்டேயிருக்கிறார்கள்.
Download As PDF
Bookmark and Share

Post Comment

உலகின் மிக அழகான பெண் - 2


தன்மானம் ஊட்டிய காரிகை, தறுதலைகளுக்கு தக்க பதில் தந்த தாரகை என்றெல்லாம் தலைப்பு வைக்கலாமா என்றும் யோசித்தேன். இவரைப் பற்றி எழுதியாவது எனது பாவத்தைக் கொஞ்சம் கழுவிக்க் கொள்ளலாம் என்ற நப்பாசையில்தான் இதை எழுதுகிறேன். அனைவருக்குமே இருக்கும் ஒரு மோசமான சமூகத் தொற்று நோய் என்ன உருவத்தை வைத்து எடை போடுதல், எள்ளி நகையாடுதல், எகத்தாளம் செய்தல், ஏற்றிப் பேசுவது என அனைத்தும் அடங்கும். இதை பல பேர் கருத்தளவில் ஏற்றுக் கொண்டாலும் ஏதாவதொருவகையில் அதே நோய்த்தன்மையுடன் நாம் நடந்து கொண்டு விடுகிறோம். பல பேர் இதை ஒரு தொழிலாகவே வைத்துக் கொண்டுள்ளார்கள்.

நான் இதிலிருந்து முக்கால்வாசி வெளி வந்து விட்டாலும் எனது தோற்றம் குறித்து தாழ்வு மனப்பான்மை இன்னும் முழுவதுமாகப் போய்விடவில்லை. கறுப்பு நிறம், பூ விழுந்த பற்கள், நரைக்கத் தொடங்கிய முடிகள், தாடி, லேசான சொட்டை என சராசரி ஆண்களிடம் காணப்படும் "குறைகள்" அது குறித்த கவலைகள் எனக்குண்டு. பலருக்கும் உண்டு. அதை ஏற்றுக் கொள்ள முழுவதும் நம்மால் முடியவில்லை ஏன். அடுத்தவர்கள் நம்மைப் பார்த்து என்ன நினைப்பார்கள் என்ற எண்ணம். ஏனென்றால் இப்படி நினைப்பவர்கள்தான் அடுத்தவரை இது மாதிரி எடை போடுவார்கள். இது போன்ற அசிங்கமான மனப்பான்மையை மிகச் சிலர் எளிதில் உதறித்தள்ளி நம்மை வெட்கப்பட வைத்து விடுகிறார்கள்.

பெண்களும் தமது உருவம் குறித்து மிகவும் கவலை கொள்கிறார்கள். இதற்கு அவர்கள் மட்டுமே காரணமல்ல. சமூகம் ஊடகம் என அனைத்துமே அவர்களை அது குறித்துத்தான் கவலை கொள்ள வைக்கிறார்கள். சிலர் மட்டுமே இதிலிருந்து வெளியே வருகிறார்கள். பெண்கள் முகத்தில் முடி இருந்தால் அதை அவர்கள் எப்படி எதிர்கொள்வார்கள், அதை நீக்கவே ஆணும் சரி பெண்ணும் சரி விரும்புவார்கள்.

தன்னை இழிவு செய்தவனை செய்ய நினைத்தவனை மன்னித்து அவனுடன் நகைச்சுவையாகப் பேச எத்தனை பேருக்கு சாத்தியம். ஒரு பெண் செய்திருக்கிறார். அவர் பெயர் பல்பிரீத் கவுர். இவர் ஒரு சீக்கியப் பெண். இவருக்கு ஆண்களைப்போல முகத்தில் லேசான மீசையும் தாடியும் வளர்ந்திருக்கிறது. இப்படி ஒருவரைப் பார்த்தால் நம்மாட்கள் என்ன செய்வார்கள், அவரை ஏற இறங்கப் பார்த்தே கொன்று தள்ளிவிடுவார்கள். ஏண்டா பிறந்தோம் என்று அவரை வேதனைப்படுத்தி விடுவார்கள். அதே போலத்தான் ஒரு நல்ல உள்ளம் இவரைப்பார்த்து இவருக்குத் தெரியாமல் புகைப்படம் எடுத்து ஒரு தளத்தில் வெளியிட்டு விட்டார். அதற்கு இவர் விட்டிருந்த கருத்து - இப்படத்தைக் குறித்து என்னால் எந்த முடிவுக்கும் வர முடியவில்லை ("I'm not quite sure what to conclude from this") (ஆணா இல்லை பெண்ண எனத் தெரியவில்லை). பல ஆண் உத்தமர்கள் தெருவில் போகும் நிற்கும் பெண்களைப் படமெடுத்து அதை இணையத்தில் பகிர்ந்து கைமைதுனம் செய்பவர்கள். அது குடித்து விட்டுக் கிடக்கும் பெண்களாக இருக்கலாம், எதுவும் செய்யாமல் வெறும் அழகான பெண்ணாக இருக்கலாம், அல்லது அசிங்கமாக இருக்கும் பெண்ணாக இருக்கலாம், அல்லது குட்டைப் பாவாடை அணிந்திருக்கலாம் அல்லது குனிந்தவாறு நின்றிருக்கலாம் இப்படி எந்த மாதிரி இருந்தாலும் அதைப் படம் பிடித்து இணையத்தில் பரவவிடுவதில் இவர்களுக்கு ஆனந்தம். இவர்களை விட போர்னோகிராபி எடுப்பவன் 10 மடங்கு மேலானவன்.

இது போன்ற ஒரு மன நோயாளி எடுத்து இவரின் படத்தை வெளியிட அது ஃபேஸ்புக் வரை பரவி பின்பு அக்குறிப்பிட்ட பெண்ணுக்கும் செய்தி சேர்ந்து விட்டது. அதற்கு இவர் வெளியிட்ட கருத்து இவரின் மீதான மதிப்பை அதிகப்படுத்தி இப்படத்தினைப் பகிர்ந்தவனுக்கு மன்னிப்பையும் கேட்க வைத்து விட்டது. 

பல்ப்ரீத்  கௌர்
அவர் வெளியிட்டிருந்த கருத்து இதுதான், "ஹாய் நான் பல்ப்ரீத்  கௌர், ஃபேஸ்புக்கில் ஒரு நண்பர் சொல்லும்வரை இப்படம் குறித்து எனக்கு எதுவும் தெரியவில்லை. இதை எடுத்தவர், என்னைப் புகைப்படம் எடுக்க வேண்டும் என்று என்னிடம் கேட்டிருந்தால் நான் புன்னைகைத்திருப்பேன் :). எப்படியாகினும் இப்புகைப்படம் வெளியானதால் அல்லது நேர்மாறான கவனத்தை இப்புகைப்படம் பெற்றதாலோ நான் அவமானமோ, துன்பமோ அடைந்ததாகக் கருதவில்லை ஏனென்றால் புகைப்படத்தில் இருப்பது நான் மட்டுமே. நானொரு ரோமத்துடன் கூடிய திருமுழுக்குப்(ஞானஸ்நானம்) பெற்றசீக்கியப் பெண். ஆம் எனது பாலினம் பல நேரங்களில் குழப்பம் தருகிறது நான் மற்ற பெண்களிடமிருந்து வேறுபட்டுத் தெரிகிறேன். திருமுழுக்குப்பெற்ற சீக்கியரின் நம்பிக்கைப்படி, புனிதமான இவ்வுடல் பாலின வேறுபாடற்ற தெய்வத்தினால் அருளப்பட்டது, இதை அப்படியே கெடாமல் தெய்வத்தின் விருப்பமாக வைத்திருக்க வேண்டியது, ஒரு குழந்தை தனது பெற்றோரின் பரிசை எப்படி நிராகரிக்காமல் வைத்திருக்கிறதோ அது போல சீக்கியர்கள் தமக்குக் கொடுக்கப்பட்ட உடலை நிராகரிக்கக் கூடாது. என்னுடைய உடல் என்று அழுதுவாறே உடலை மாற்றிக் கொள்வதன் மூலமாக நாம் அகம்பாவத்தில் வாழ்வதால் நமக்கும் நமக்குள் வாழும் தெய்வத்திற்கும் இடையே இடைவெளியை உருவாக்கிக் கொள்கிறோம். சமூகத்தில் அழகை மேம்படுத்திக் காட்ட நான் எனது செயல்களின் மீதே கவனம் செலுத்துவேன். என்னுடைய அணுகுமுறை, சிந்தனைகள் மற்றும் செயல்கள் மட்டுமே மதிப்புக் கொள்ளும் என்னுடல் இறுதியில் சாம்பலாகப் போவதால் நான் ஏன் உடலினைப் பற்றி அலட்டிக் கொள்ள வேண்டும் ?நான் இறந்த பிறகு என் தோற்றம் எப்படி என்பதை யாரும் நினைவு கொள்ளப் போவதில்லை என் குழந்தைகள் எனது குரலை மறந்து விடுவார்கள். பௌதீக நினைவுகள் மெதுவாக மங்கிவிடும். எனினும் என்னுடைய தாக்கமும் பாரம்பரியமும் நிலைத்திருக்கும். நான் என்னுடைய தோற்றத்தைக் கவனம் செலுத்துவதை விட்டு, உள்நிலை சார்ந்த பண்புகளையும் நம்பிக்கைகளையும் வளர்த்து, இவ்வுலகிற்காக எனது வாழ்க்கை முறையை மாற்றுவதில் எனது நேரத்தை செலவிடுவேன். எனவே எனக்கு முகமல்ல அதன் பின்னுள்ள புன்னகையும் மகிழ்ச்சியும் மட்டுமே இன்றியமையாதது :-) எனவே என்னை யாராவது ஒஹியோ மாநில பல்கலைக்கழகத்தில் கண்டால் வந்து ஹலோ சொல்லுங்கள். நான் இங்கே எனது புகைப்படத்தில் கண்ட அனைத்து நேர் எதிர்மறைக் கருத்துக்கள் அனைத்தையும் ஏற்றுக் கொள்கிறேன். ஏனெனில் இவ்விசயத்தில் நான் என்னையும் மற்றவரையும் தெளிவாகவே புரிந்து கொண்டுள்ளேன். அனைத்து சமய இளையஞர் மையம் (Interfaith Youth Core) கொடுத்த பேண்ட்டும், டீஷர்டும் வசதியாக உள்ளது. இந்த விளக்கம் தேவைக்கு அதிகமாக இருக்கும் என நம்புகிறேன், ஏற்பட்ட குழப்பத்திற்கும், நான் யாரையாவது புண்படுத்தியிருந்தாலும் மன்னிக்கவும் வேண்டுகிறேன்."


அதற்கு அந்தப் புகைப்படத்தை பகிர்ந்தவரின் மன்னிப்பு கேட்டுள்ளார். அந்தப் பெண்ணிடமும், சீக்கியரிடமும் அந்த படத்தை வெளியிட்டு அவப்பெயர் தேடித்தந்ததற்காக அந்த இணையத்தளத்திடமும் மன்னிப்புக் கேட்டுள்ளார்.

பெண்களின் உருவத்தைக் கிண்டல் செய்யும் அனைத்து உள்ளங்களுக்கும் இது அர்ப்பணம். 

இன்னும் பல பேர் தெரிவித்த கருத்துக்கள் இங்கே,

பல்ப்ரீத்தின் ட்விட்டர்
 
 சில வருடங்களுக்கு முன்பு உத்தரப் பிரதேசத்தைச் சார்ந்த சபீனா பேகம் என்ற பெண் தாடியுடன் இருப்பதைப் போன்ற புகைப்படமொன்று தினகரனில் வெளியாகியிருந்தது அதனால் எனக்குக் கவலையெதுவுமில்லை என்றும் அந்தப் பெண் கூறியிருந்தார். என்பதும் நினைவுக்கு வருகிறது.
ஐரோம் ஷர்மிளா குறித்து எழுதியபோது வைத்த தலைப்பே இதற்கும் வைத்து விட்டேன்
 உலகின் மிக அழகான பெண்
Download As PDF
Bookmark and Share

Post Comment

மூன்றாம் பாலினம் எத்தனை வகைகள் ?

சிருஷ்டி ஜான் உடன் ஒரு உரையாடல் ! இது ஃபேஸ்புக் நண்பர்களால் மாசெஸ் என்ற குழுமத்திற்காக எடுக்கப்பட்ட நேர்காணல். இதில் மூன்றாம் பாலினத்திற்காக செயல்படும் அமைப்பு சிருஷ்டி, இதன் கோவை பிரிவின் நிறுவனர் ஜான் என்பவரின் நேர்காணல் இடம்பெறுகிறது. மூன்றாம் பாலினத்தவர்கள் குறித்த விழிப்புணர்வுக்காக இது எடுக்கப்பட்டது. (இதில் சில சொற்கள் புரியாததால் அப்படியே விட்டு விட்டேன். அதை காணொளியில் சரியாகக் கேட்டுக் கொள்ளவும்)
 
முதல பாகம் 
 

செல்லா:வணக்கம் நேயர்களே நான் ஓசை செல்லா பேசுகிறேன். இன்று நம்முடன் நம் ஸ்டுடியோவுக்கு வந்திருப்பவர் ஜான். வணக்கம் ஜான். ஓசை நேயர்களுக்கு உங்களைப்பற்றிக் கொஞ்சம் சொல்லுங்கள்.

ஜான்: ஓசை நேயர்களுக்கு என் வணக்கம். நான் ஜான். நான் ஷ்ருஷ்டி மதுரை ஷ்ருஷ்டி கோயம்பத்தூர் என்ற LGBT organization ஒன்று இருக்கிறது. LGBT என்றால் Lesbians Gays Bisesexuals Transgenders. இந்த மூன்றாம் பாலினத்தவர் என்று சொல்றோமில்லையா அவர்களுக்காகப் போராடும் இயக்கம். அதில் நான் உறுப்பினர். I am the Director for Shrushti Coimbatore. ஷ்ருஷ்டி மதுரை என்னுடைய நண்பர் கோபியால் நடத்தப்படுகிறது.

செல்லா: தற்போது மக்களுக்கு ஆண் பெண் என்ற எண்ணம் இருக்கிறது. பின் லிவிங் ஸ்மைல் வித்யா போன்றவர்கள் எழுத ஆரம்பித்த பின்னர்தான் திருநங்கைகள் என்ற சொல்லாடல் தமிழ்ச்சமூகத்தில் வந்திருக்கிறது.  நீங்கள் இது குறித்து நிறைய ஆராய்ச்சி செய்திருக்கிறீர்கள் என்று உங்களுடன் பேசியதிருந்து தெரிந்தது. தற்போது இரண்டுவிதமான செய்திகளைத் தமிழ் மக்களுக்குக்  கொண்டு போகிறோம். முதலாவது பேசவேண்டியது Gender அல்லது பாலினம். அதில் என்னென்ன வகையெல்லாமிருக்கிறது ?. அதைப்பற்றி முதலில் சொல்லி விடுங்கள்.

ஜான் :  கண்டிப்பாக. Gender என்றால் முதலில் நமக்குத் தெரிவது முதலில் ஆண் இன்னொன்று பெண்.  இன்னொன்று சொன்ன மாதிரி திருநங்கைகள் பற்றி நல்ல விழிப்புணர்வு இருக்கிறது.  ஆனால் இதையும் தாண்டி நிறைய பாலின வேறுபாடுகள் இருக்கின்றன என்று உங்களுக்கு சுட்டிக் காட்ட விரும்புகிறேன். எடுத்துக்காட்டாக பார்த்தீர்களானால் திருநங்கைகள் என்போர் ஆணாக இருந்து பெண்ணாக மாறியவர்கள், பிறப்பிலே ஆணாக இருந்து தங்களைப் பெண்ணாக மாற்றிக் கொள்பவர்கள். ஆனால் பெண்ணாகப் பிறந்து ஆணாக மாற்றிக் கொள்வார்கள் சிலர். இவர்களைத் "திருநம்பிகள்" என்றழைக்கலாம். இவர்களைப் பற்றி அதிகமாகத் தெரிவதில்லை. ஆனால் இப்படிப்பட்ட மக்கள் நிறைய இருக்கிறார்கள். இதைத் தாண்டி Transsexuals, Transgenders இவைகளுக்கிடையேயான வேறுபாட்டை உங்களுக்குச் சொல்ல வேண்டும். Transgenders இந்த gender என்ற சொல்  ஒரு ஆண் அல்லது ஒரு பெண் அவர்களது இனப்பெருக்க உறுப்புக்களினடிப்படையில் வகைப்படுத்தப்படுவது. ஆணென்றால் இப்படி பெண்ணென்றால் இப்படி மாதிரியான விடயங்கள் gender - இல் இருக்கும். Transgenders என்பவர்கள் இப்படியாக சமூகம் வழங்கிய இனப்பெருக்க உறுப்புக்களினடிப்படையிலான ஒரு பாலினத்திலிருந்து மற்றொரு பாலினத்திற்கு மாறியவர்கள். Transsexuals என்பவர்கள் ஆணாகப் பிறந்து பெண்ணாக முழுமையாக மாறுகின்றவர்கள். இனப்பெருக்க உறுப்புக்கள் மட்டுமன்றி முழுவதுமே பெண்ணாக மாறுவது. இப்படி Transsexualism, Transgendersim என்பவைகளைத் தாண்டி நிறைய பிரிவுகள் இவைகளின் கீழ் உள்ளன. முக்கியமாகக் குறிப்பிட வேண்டியவர்கள் Anderogenous people இவர்களை "பால்நடுநர்கள்" என்று அழைக்கலாம். இவர்கள் ஆணாக இருக்கலாம். பெண்ணாக இருக்கலாம். எதுவாகவும் இருக்கலாம். ஆனால் அவர்கள் தம்மை எந்த ஒரு பாலினமாகவும் நினைக்க மாட்டார்கள். திருநங்கைகள் தம்மை பெண் என அழைக்கப்பட விரும்புவார்கள். ஆனால் இவர்கள் தம்மை பாலினத்தின் அடிப்படையில் அழைக்கப்பட விரும்புவதில்லை. Gender Neutral என்ற வகையில் அழைக்கப்பட விரும்புவார்கள். அடுத்தவர்கள் Genderless people  அல்லது Agender - பாலினமற்றவர்கள். Gender என்பதையே ஏற்க மறுப்பவர்கள். பாலினம் என்பது மனித ஆளுமையை அளவிட ஏற்றதல்ல பாலினத்தைத் தாண்டிய காரணகாரியங்கள் உண்டு என்று கருதுகிறவர்கள். இன்னொரு பிரிவினர் Bigenders தம்மை ஆணாகவும் பெண்ணாகவும் நினைத்துக் கொள்பவர்கள். Trigenders  என்பவர்கள் தம்மை ஆணாகவும், பெண்ணாகவும்,  திருநங்கையாகவும் எண்ணிக் கொள்பவர்கள். Gender Fluid என்பவர்கள் ஒரு நாள் தம்மை ஆணாகவும் மற்றொரு நாளில் பெண்ணாகவும் கருதிக் கொள்பவர்கள். இவர்கள் தொகுப்பாக Queer People என்போம். இன்னும் Gender non confirmates, Demigirls, Demiboys என்றெல்லாம் இருக்கிறார்கள்.

செல்லா : Genders பற்றிப் பார்த்தோம். அடுத்து Sexuality எனும் போது Straight என்பது மட்டுமே பரவலாக உள்ளது.  அடுத்ததாக Gay என்பது அறியப்படுகிறது. தீபா மேத்தாவின் Fire-க்குப் பின் Lesbian  என்பதும் பரவலாக அறியப்பட்டுள்ளது. இதைப்பற்றிச் சொல்லுங்கள். இன்னும் பல வகைகள் இருப்பதாகக் கூறினீர்கள். ஒவ்வொன்றைப் பற்றியும் சொல்லுங்கள்.

ஜான் : Genders-க்கும் Sexuality-க்கும் உள்ள வேறுபாடு; பாலினம் என்பது நீங்கள் உங்களை எப்படிக் கருதிக் கொள்கிறீர்கள் என்பதே. Sexuality என்பது யாரிடம் அல்லது எந்த பாலினத்தவரிடம் நீங்கள் பாலியல் நாட்டம் கொள்கிறீர்கள் அல்லது கவரப்படுகிறீர்கள், யாருடன் உங்கள் பாலியல் எண்ணங்கள் உள்ளது  என்பது. Sexual orientation-க்கும் Gender Orientation-க்கும் உள்ள வேறுபாடு Hetero Sexuals என்ற  Straight எனப்படுவது பாலியல் ரீதியாக ஆண் பெண்ணிடமும், பெண் ஆண்களிடமும் கவரப்படுவது. இதைத் தாண்டி Gay, Lesbian பற்றிப் பரவலாக அறிந்திருக்கலாம். ஆணிடம் ஈர்ப்புக் கொள்ளும் ஆண்களை Gay என்றும் தமிழிழ் "நம்பிகள்" என்றும் சொல்லலாம். இவர்கள் Hetero Sexuals தமது இணையிடம் எதிர்பார்க்கும் அன்பு, காதல், பாலியல் என அனைத்து உணர்வுகளையும் இன்னொரு ஆணிடம் எதிர்ப்பார்ப்பவர்கள்தான் இந்த நம்பிகள். இதே இரு பெண்களிடையேயான உறவை Lesbian எனலாம். அடுத்ததாக BiSexuals இவர்கள் ஆண்களிடமும் கவரப்படுவார்கள் பெண்களிடமும் கவரப்படுவார்கள். இவர்கள் ஆணாகவும் இருக்கலாம் பெண்ணாகவும் இருக்கலாம். இவை போன்று பரவலாக அறிந்தவர்கள் தவிர்த்து, PolySexuals, Asexuals, Pansexuals என்ற வகையில் நிறையப் பேர் இருக்கிறார்கள்.

Asexuals -  எவ்வகைப்பாலினத்தவருடனும் பாலியல் நாட்டமில்லாதவர்கள். மக்கள் தொகையில் 1% இவர்கள் இருப்பதாக கின்ஸே (Kinsey) அறிக்கை கூறுகிறது.

PolySexuals - ஆண், பெண் தவிர திருநங்கைகள், திருநம்பிகள் என நான்கு வகையினருடனும் பாலியல் கவர்ச்சி உடையவர்கள்.

Pansexuals - அனைத்துத் தரப்பினரிடமும் ஈர்ப்புடைய பாலினத்தவர்கள். இவர்கள் தாம் நாட்டம் கொள்ளும் நபர் குறித்த பாலியல் வேறுபாடுகளைப் பற்றிக் கண்டுகொள்ளாதவரகள். அந்நபர் ஆணாகவோ, பெண்ணாகவோ, திருநங்கையாகவோ, திருநம்பியாகவோ, Bigenders, Trigenders போன்ற எத்தகைய தன்மையுடையவரிடமும் இவர்கள் ஈர்க்கப்படுவார்கள்.

Girl Fads, Boy Dytes இவர்கள் Straight - வகையில் சேர்ந்த ஆண் பெண்கள்தான். இவர்களின் பாலியல் நாட்டமானது,

Girl Fads - வகைப் பெண்கள் Gay, Bisexual ஆண்களிடம் ஈர்ப்புக் கொள்வார்கள்

Boy Dytes - வகை ஆண்கள்  Lesbian, Bisexual பெண்களிடம் ஈர்ப்புக் கொள்வார்கள்.

Androphilia, Gynophilia  என்பது Gay & Lesbian - க்கு மாற்றாக வருகின்ற வகைப்பாட்டியலாகும். Intersex என்பவர்கள் ஆணாகவோ பெண்ணாகவோ கருதப்பட முடியாதவர்கள் பிறப்பின் போதே ஆண் பெண் பாலுறுப்புக்களுடன் பிறந்தவர்கள். ஆணின் இனப்பெருக்க உறுப்புடனும், பெண்ணின் இனப்பெருக்க பால் சுரப்பி உறுப்புடனும்  Intersex என்று சொல்லலாம். தமிழில் இடையிலங்கம் எனலாம். ஆண் பெண் உறுப்புகளை ஒருங்கே கொண்டவர்களை  True hermophrodites எனலாம். இவர்களை ஆணாகவோ பெண்ணாகவோ கருத முடியாது. இந்நிலையில் Gays, Lesbians, Bisexuals  போன்ற பதங்களுக்கு பொருளில்லாமல் போய்விடுகிறது.  இந்நிலையில் ,

Androphilia -  ஆண்களிடம் பாலியல் நாட்டம் கொள்பவர்கள்

Gynophilia - பெண்களிடம் பாலியல் நாட்டம் கொள்பவர்கள்.

என்று வகைப்படுத்தலாம். அடுத்ததாக எதிர்பால் உடையினர் அல்லது Crossdressers அல்லது Transvesters. இவர்களை (ஆண்கள்) பொதுவாக gays என்றே அடையாளப்படுத்துவார்கள். ஆனால் இவர்கள் உடையணிவதுதான் பெண்கள் போலவேயன்றி இவர்களின் பாலியல் கவர்ச்சிக்கும் உடையணிவதற்கும் எந்தத் தொடர்புமில்லை. இவரகள் ஆண்களிடம் நாட்டம் கொள்பவர்களல்ல, இவர்களது பாலியல் விருப்பும் பெண்களே. இவர்களை Straight Crossdressers எனலாம். இவர்களுள் Gay - ஆகவும் சிலர் இருக்கலாம். அனைவரும் Gay என்ற கட்டாயமில்லை. இன்னொரு பிரிவினர் Sissy - கள்.  இவர்கள் பெண்கள் போன்று பாவனைகள் சிலவற்றைச் செய்யும் ஆண்கள். கிராமங்களில் சொல்வார்கள் "ஏன் பொண்ணு மாதிரி பண்ற" என்று. ஆண்கள் பெண்மையுடன் இருப்பது (girlish-ஆக). அவர்களும் Gay என்ற கட்டாயமில்லை. யாரிடமும் ஈர்க்கப்படும் வாய்ப்புண்டு. மாவீரன் அலெக்ஸாண்டர் ஒரு Gay. ஆனால் அவர் Girlish - ஆக இல்லாமல் முழுமையான masculine figure ஆகவே அறியப்படுகிறார். இருப்பினும் அவர் பாலியல் நாட்டம் கொண்டிருந்தது ஒரு ஆணிடம். அது போல்தான் இந்த Sissy - கள். இவர்களைக் கண்டு பயப்படும் அல்லது எதிரான மனநிலையை Sissy - Sissyphobia, Transgenders - களுக்கெதிரான மனநிலையை  Transphobia, Bisexuals - களுக்கெதிரான மனநிலையை Biphobia என்று வகைப்படுத்தலாம்.

செல்லா : Tomboys குறித்து ?

ஜான் : Tomboys என்பவர்கள் masculine girls. ஆண்கள் போல் தோற்றமுடைய பெண்கள் இவர்களின் சில செய்கைகல் ஆண்களை ஒத்திருக்கும். ஆனால் அவர்கள் பெண்களே.

இரண்டாம் பாகம் 

செல்லா : ஜான் இப்பொழுது நாம் பாலினத்தின் நிறங்கள் குறித்துப் பார்த்தோம். Sexuality - க்கு வந்திருக்கிறோம். என்னுடைய அடுத்த கேள்வி திருநங்கைகள், திருநம்பிகள் சமூகத்தில் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் என்னென்ன ?

ஜான் : திருநங்கைகளும் திருநம்பிகளும் சமூகத்தில் அனுபவிக்கும் நிலை குறித்து முக்கியமாகச் சொல்லியாக வேண்டும். உங்களுக்கு அது நிறையத் தெரிந்திருக்கும். திருநங்கைகள் அவர்களை அவர்களே ஏற்றுக்கொள்வது முதல் விடயம். அவர்கள் ஏற்றுக் கொண்ட பிறகு அவர்களுடைய குடும்பத்தினர் எத்தனை விழுக்காடுகள் ஏற்றுக் கொள்கின்றனர் என்பதைப் பொறுத்துத்தான் அவர்களின் வாழ்க்கையே இருக்கிறது. திருநம்பிகள் பெண்ணாக இருந்து ஆணாக வரும்போது சமூகம் அவர்கள் மீது செலுத்தும் அழுத்தத்தை பின்பு பேசுவோம். திருநங்கைகளை எடுத்துக் கொண்டால் அவர்களுக்கு வீட்டினரிடமிருந்து கிடைக்கும் அழுத்தங்கள் முதலான பிரச்சனைகள், அவர்களின் மாற்றங்கள் அறிந்த பிறகு வீட்டிலிருந்து துரத்தப்படுதல் வரை.  தங்கள் குழந்தை இப்படி வளர்ந்திருக்கிறது என்று தெரிந்தவுடன் பெற்றோர்கள் அரவணைத்திருந்தால் அவர்களுக்கு அந்தளவுக்கு சிரமங்கள் இருந்திருக்காது. அவர்களை வீட்டை விட்டு வெளியே விரட்டுவது, என்றான பின்பு அவர்கள் வயிற்றுப்பிழைப்புக்காக அவர்களின் வாழ்க்கையை எப்படி அமைத்துக் கொள்ள வேண்டுமென்ற தெரிவு அவர்களிடம் மட்டுமே இருக்கிறது. உண்மையச் சொன்னால் சமூகத்தின் தெருவோரத்தில்தான் அவர்கள் நிறுத்தப்பட்டுள்ளார்கள். திருநங்கை என்று சொன்னால் வெறும் விபச்சாரத்திக்கானவர்கள்தான் என்றுதான் சொல்வார்கள். ஆனால் அதற்குப் பின்னால் அவர்களின் அழுகுரலை எத்தனை பேர் யோசித்துப் பார்த்திருப்போம். எத்தனையோ பேரிடம் அவர்கள் பாலியல் அத்து மீறலை எதிர்க் கொண்டிருப்பார்கள். கண்டிப்பாக அனுபவித்திருப்பார்கள். நான் ஒரு கதையில் கூட படித்தேன். திருநங்கையின் கதைதான். வன்கலவி அவர்கள் மீது கட்டவிழ்த்து விடப்படுகிறது. காவல்துறை இவர்களை அடிக்கும் போது அவர்களுக்கு சிரமமாக இருக்கிறது.

செல்லா : பாலியல் தொழில் இல்லை பிச்சையெடுப்பது, இவை தவிர வேறு தொழில் இல்லை ?

ஜான் : ஆம். இப்படியாகி விட்டது. இன்னொரு சிரமமான சூழ்நிலை வேலைக்குப் போனாலும் எத்தனை பேர் அவர்களை ஏற்றுக் கொள்கின்றனர் ? முதலில் அவர்களுக்குக் கல்வியறிவு இருக்கிறதா ? கல்வியே அவர்களுக்கு மறுக்கப்படுகிறது. பள்ளியில் படிக்கும்போது அந்த வளரிளம் பருவத்தில் (adolacent) உடலில் ஏற்படும் மாற்றங்களால் தன்னைத்தானே வெறுத்து வாழ வேண்டிய நிலை. தன்னுடலைத் தானே வெறுத்து வாழ்வதுதான் உலகத்திலேயே கொடுமையான விடயம் என்பேன். கொலை செய்வதும் கூட கொடுமையானதுதான். ஆனால் தானிருக்கும் உடலையே தானே வெறுத்து வாழ்வதை ஒரு நிமிடம் எல்லோரும் நினைத்துப் பார்க்க வேண்டும். சாலையில் போகும்போது திருநங்கைகளை வெறுப்புடன் பார்க்கும் நாம் இது பற்றி ஒரு நிமிடம் சிந்திக்க வேண்டும். இன்னொன்று திருநம்பிகளைப் பற்றிச் சொல்ல வேண்டும். அவர்கள் பெண்ணாக இருந்து ஆணாக மாறியவர்கள். இவர்கள் குறித்த விழிப்புணர்ச்சி குறைவு. திருநம்பிகளை பெண் சமபால் விருப்புக் கொண்டவர்கள் (Lesbians) எனத் தவறாகப் புரிந்து கொள்கிறார்கள். பெண்களிடம் ஈர்க்கப்படும் பெண்களையே Lesbians என்று சொல்கிறோம். பெண்ணாக இருந்து ஆணாக மாறும் பெண்களே திருநம்பிகள் ஆவர். இந்த திருநம்பிகள் பெண்களிடம் ஈர்ப்புக் கொள்ளும்போது அவர்களை Transmen என்று அழைக்கலாம். பெண் வளர்கையில் அவளுக்குத் திருமணம் செய்து கொடுப்பதற்கே குடும்பத்தினர் முன்னுரிமை கொடுப்பர். அக்குழந்தை என்னவாக விரும்புகிறது என்பதைக் காட்டிலும் திருமணம் செய்து கொடுப்பதே சமூகச் சுழற்சியாக இருக்கிறது. இந்நிலையில் அவர்கள் உடலை வெறுத்து வாழ வேண்டும். வீட்டினரின் விருப்பத்தையும் திருமணம் செய்து கொள்ள வலியுறுத்துவது மாதிரியான அழுத்தங்களை எதிகொள்ள வேண்டும். இப்படியாக அவர்களது சிரமங்கள் இருக்கின்றன. அவர்கள் வெளியேறினாலும் சமூகம் அவர்களை எவ்வளவு ஏற்றுக் கொள்கிறது ? பாலியல் வன்முறை எல்லா இடங்களிலும் இருக்கிறது.  திருநங்கைகள், திருநம்பிகள் என எல்லா வகை மூன்றாம் பாலினத்தவரும் சமூகத்தால் ஒதுக்கப்படுபவர்களாக, பந்தாடப்படுபவர்களாக, விளையாட்டுப்பொருளாகப் பார்க்கப்படுபவர்களாக இருக்கும் நிலை இருக்கிறது என்பதை வருத்தத்துடன் சொல்லிக் கொள்கிறேன். ஒரு நிமிடம் உங்கள் உடலை வெறுத்து வாழ்ந்து பாருங்கள் என்று உங்களிடம் கேட்டுக் கொள்கிறேன். அப்பேர்ப்பட்டவர்களை சமூகம் எப்படி வன்கலவி செய்கிறது என்பதையும் நீங்கள் நினைத்துப் பார்க்க வேண்டுகிறேன்.

செல்லா : இப்போது பாலியல் விருப்பம் - Sexuality Gays, Lesbians  குறித்து இதே போல் சொன்னால் நன்றாக இருக்கும். சமுதாயத்தைப் பற்றி அவர்கள் பார்வை என்ன  ? அவர்களைப் பற்றி சமுதாயத்தின் பார்வை என்ன ? இருவரிடையே உரையாடல் இல்லாததால் பிரச்சனை இருக்கிறது. அதை நீங்கள்தான் சிருஷ்டி சார்பாக ஆராய்ச்சி செய்து சொல்ல வேண்டும்.

ஜான் : கண்டிப்பாக. Gays, Lesbians, Bisexuals  என்பவர்கள் எப்படி உணர்வார்கள் என்று பார்க்கிறேன். அவர்களிடமுள்ள பிரச்சனை தங்களைத் தாங்களே அடையாளம் கண்டு கொள்வது. தங்களின் உணர்வுகள் மற்றவர்களின் உணர்வுகளுடன் எப்படி வேறுபட்டுள்ளது என்பதை அறிவது. என்னுடைய நண்பன் ஒரு பெண்ணை ரசிக்கிறான். ஆனால் நானோ ஒரு ஆண் அழகாக இருக்கிறான் என்று நினைக்கிறேன். இப்படித்தான் Gay - இன் நிலை இருக்கும். இப்படியான பாலியல் விருப்பத்தின் வேறுபாடுகள் இருக்கும்போது, பல வகையின(பாலின) மக்களை பார்க்கின்ற சமுதாயம் அவர்களை வெறும் உடல் ரீதியான இன்பத்துக்காக இணைந்தவர்கள் என்றே கருதுகிறது. ஆனால் உண்மையில் சமூகம் அவர்களைப் புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறது. அவர்களுக்குள்ளே என்னென்ன விதமான அழுத்தமிருக்கிறதென்றால், வெளியிலிருக்கும் சமூகத்தைப் பார்த்து, நான் இப்படியில்லை நானொரு Straight - தான் என்ற தூண்டலும், அதேவேளை தன்னுடலும் உணர்வும் விரும்பும் சமபாலுணர்வுத்தன்மையும் (Gay & Lesbianism ) இருக்கும். இவ்விரு எண்ண முரண்பாட்டில் அவர்களது குழப்பம் இருக்கிறது. எல்லா விடயங்களுக்கும் வழிகாட்டிகள் உண்டு. எத்தனையோ இயந்திரங்கள் குறித்துப் பேசுகிறோம். ஆனால் ஒரு மனிதனின் அடிப்படை உணர்ச்சியைப் புரிந்து கொள்ள இந்த சமுதாயம் ஒரு நல்ல பார்வையை கொடுத்ததில்லை. அவர்களை உடலுறவு இன்பத்தை நாடுபவர்கள், பெண்ணை (இழிவாக) நடத்துவது  போல நடத்துவது, பகடி செய்வது மாதிரியிலான பிரச்சனைகள் சமுதாயம் அளிக்கிறது. இதனால் அவர்களுக்குள் இரட்டை வாழ்க்கை (Double Life) வாழ வேண்டியிருக்கிறது. ஆணாக இருந்தால் தாய், தந்தை, தங்கையைக் கவனிக்கும் பொறுப்புடனும், பெண்ணாக இருந்தால் புகுந்த வீட்டிற்கு செல்லும் வகையில் நடந்து கொள்ளவும் வேண்டும். இது போன்ற செய்கைகளை மீறுவதாகத்தான் இந்த மூன்றாம் பாலினர் நடந்து கொள்வார்கள். இவர்களது உணர்வு வெளிப்படும் போது இன்னொரு ஆணைத்தான் இவர்கள் தமது அனைத்து வகை உணர்வுகளையும் பகிர்ந்து கொள்வதற்காக தேடுவார்கள். பெண் சமபால் விருப்புக் கொண்டோர் பெண்ணைத்தான் தேடுவார்கள்.  அதுதான் Gays, Lesbians.

செல்லா : இது பாலுணர்வை மட்டுமே சார்ந்தது இல்லை என்று கூறுகிறீர்கள் ?

ஜான் : இல்லை. Straight - இல் உள்ள அதே காதல் அதே ஏக்கம், காதல்ன் தன்னுடனிருக்க வேண்டும், தோளில் சாய்ந்து கொள்ள வேண்டும், உணர்வுகளை, இன்ப துன்பங்களை பகிர்ந்து கொள்ள வேண்டும் இந்த மாதிரியான உணர்வுகளைத்தான் அவரகள் கொண்டிருக்கிறார்கள் எதிர்பார்க்கிறார்கள். ஆனால் இந்த மாதிரியான உணர்வுகள் எப்படி சிதறடிக்கப்படுகிறதென்றால், முக்கியமாக இரட்டை வாழ்க்கையினால் உள்ளுணர்வை விடமுடியாமலும் வெறும் பாலின்பத்தை நாடுவதில் மூலம் வடிகால் தேடுகிறது. நாம் (ஆண்) ஒரு பெண்ணிடம் ஈர்க்கப்படுகிறோம். ஆனால் நாம் அவர்களைப் ( சமபால் விருப்புடையோர்) போல் பூங்காக்களில் மட்டுமா உட்கார்ந்து இருக்கிறோம் ? (இணையாக எல்லா இடத்திலும் சுதந்திரமாகப் போய் வர முடிகிறது). ஏனிவர்கள் இப்படியிருக்கிறார்கள் ? அரசியலமைப்பு இன்னும் அவர்களை ஏற்றுக் கொள்ள வில்லை. 2009 - இல் சட்டப்பூர்வமாக்கினார்கள். இப்போது தவறான உறவு என்கிறார்கள். இது எங்களை அதிகமாக பாதித்தது. எங்களை ஏற்கெனவே சமூகத்தில் ஏற்றுக் கொள்ளாத நிலையில் அரசே ஏற்றுக்கொள்ளாத போது, எங்களின் உரிமைகள் எப்படியிருக்கும் ? எங்களை யார் புரிந்து கொள்வர் என்கிற ரீதியிலான கவலைகள் எங்களனைவருக்கும் இருக்கும்.  வெளிப்படுத்துதல் - coming out என்பது தன்னுடைய உறவினரிடமோ, நண்பரிடமோ, குடும்பத்தினரிடமோ வேறு யாரிடமோ தங்கள் உணர்வுகளைப் பகிர்ந்து கொள்வது, தங்கள் எப்படி மாறுபடுகிறோம் என்பதைப் பகிர்ந்து கொள்வது. இப்படிப்பட்ட பகிர்ந்தல் நம் சமூகத்தில் இல்லை. அதற்கான வடிகால்களை சமூகம் ஏறடுத்தவுமில்லை. இந்த மாதிரியான செயல்களை அங்கீகரிக்கணும். அரசியல் ரீதியாக அங்கீகரிக்க வேண்டும்.  என்பதுதான் எங்களின் முக்கியமான வேண்டுகோள்.

மூன்றாம் பாகம் 


செல்லா :  இந்த மூன்றாம் பாலினம் என்கிறோம்.  மேற்கத்திய சூழலில் தம்மை இந்த மாதிரி வெளிப்படுத்திக் கொண்டவர்கள் யார் ? தெரிந்த பெயர் ஏதாவது சொல்ல முடியுமா ? Historical Figure யாராவது சொல்ல முடியுமா ?

ஜான் : ப்ளேட்டொ ஒரு சமபால் விருப்புடையவர் (Gay) என வரலாற்றாய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். அடுத்து லியானார்டோ டாவின்சி, கடவுளும் மனிதனும் தொட்டுக் கொள்வது போல் ஓவியம் வரைந்த மைக்கேல் ஏஞ்சலோ ஆகியோர் சமபால் விருப்புடையோர். லியானார்டோ டாவின்சி ஒரு சமபாலின விருப்புக் கொண்டவர் என்பது வரலாற்றுப் பதிவுகள் மூலம் தெரிய  வந்தது.  ஃப்ராய்ட் உளப்பகுப்பாய்வு ரீதியாக ஆராய்ந்த போது, இயேசுவும், அவரது தாயும், திருமுழுக்கு யோவானும் உள்ள படத்தை வைத்து interplate பண்ணும் போது,  அவரிடமிருந்த சமபால் விருப்பை விளக்குகிறார். உயிரோட்டமுடைய சிற்பங்களை செதுக்கிய மைக்கேல் ஏஞ்சலோ ஒரு சமபால் விருப்புடையவராக இருந்திருக்கிறார். சமீபத்தில் ஆலன் ட்யூரின் கேள்விப்பட்டிருக்க மாட்டோம் ஆனால் கணிணியைக் கேள்விப்பட்டிருப்போம், அதில் உள்ள algorithms, codings ஆகியவற்றை உருவாக்கியவர். அவர் ஒரு சமபால் விருப்புடையவர். ரிக்கி மார்ட்டின், ஆடம் லாம்பர்ட், லேடி காகா ஒரு Bisexual- ஆண் பெண் என இருவரிடமும் ஈர்ப்புக் கொள்பவர். தமிழில் "ஈரர்" எனலாம். இதே போல் நிறையப்பேர் இருக்கிறார்கள். அமெரிக்காவிலிருந்த மிகப்பெரிய எழுத்தாளர் அல்டேர் ரோட், கறுப்பினத்தைச் சார்ந்த பெண்ணியலாளர் ஒரு Lesbian. டி. ஹெச். லாரன்ஸ் ஒரு புதின ஆசிரியர். அவர் ஒரு சமபால் விருப்புடையவர் என்று ஆராய்ந்து சொல்லியிருக்கிறார்கள். கிங் ஜேம்ஸ் என்ற பிரிட்டனைச் சேர்ந்த ஒருவரும் சமபால் விருப்புடையவர் என்பதற்கான ஆதாரங்கள் இருக்கின்றன. கிரேக்க சமூகத்தில் மிகச் சாதாரண விடயமாக இருந்ததுதான் இது. மக்களின் ஆதரவைப் பெற்ற விடயமாகவும் இருந்தது. ரோம சமூகத்திலுமிருந்தது. இதை எப்போது தவறாகப்பார்க்க ஆரம்பித்தார்களெனில், தாமஸ் அக்கியூரஸ் என்ற கிறித்தவ மறையியலாளர், இயற்கைக்கு ஏதுவான சேர்க்கை, இயற்கைக்கு மாறான சேர்க்கை என்று அவர்தான் முதன் முதலில் எழுதினார். இனப்பெருக்கம் செய்வதற்காக பெண்ணுறுப்பு வழியாக கலவி செய்வது மட்டும்தான் இயற்கையான சேர்க்கை அதாவது மிஷனரி நிலையில் இருந்து கலவி செய்வதுதான் சரியானது என்று அவர்தான் சொன்னார். குடியேற்றக்காரர்கள் (காலனியாளர்கள்) கொண்டுவந்ததாக பெண்ணியலாளர்கள் சுட்டிக் காட்டுவார்கள். அவர் அப்படி எழுதி வைத்தார், பின்பு வந்த குடியேற்றக்காரர்கள், ஆட்சியாளர்கள் கிறித்தவ மதத்தைப் பரப்பினார்கள். இப்படியாக பழைய கலாச்சாரங்களிலிருந்து சமபால் சேர்க்கையை அழித்தார்கள். ஆணுமில்லாமல் பெண்ணுமில்லாமல் இருக்கும் மக்களை தென் அமெரிக்காவில் Two sprit people என்று சொல்வார்கள். இவர்களின் கலாச்சாரம் தாக்கியழிக்கப்பட்டது. அதற்கு முன் இருந்த சமபால் சேர்க்கை குறித்த தடயங்களை மொத்தமாக அழித்தார்கள். இது மாதிரியான நிறைய சமபால் சேர்க்கைக்கெதிரான செயல்கள் தேவாலயங்களில் இருந்தன. 1880 - இல் மெக்காலே காலத்தில்தான் சமபால் சேர்க்கை இயற்கைக்கு மாறானது என அறிவிக்கப்பட்டது. அதை Victorian view on sex or victorian mentality எனலாம். அதற்கு முன்பு வரை சமபால் சேர்க்கை நம் கலாச்சாரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

செல்லா : அரவான் குறித்து ? அர்வானுக்குக் கோயில் கட்டிக் கும்பிடுகிறார்கள். அரவானே ஒரு திருநங்கையா ?

ஜான் : அரவான் அர்ச்சுனரின் மகன். அரவம் என்றால் தமிழில் பாம்பு என்று பொருள். அவருக்கு பாம்புக் குறியீடு உள்ளதை நிறைய இடங்களில் பார்க்கலாம். குருக்ஷேத்திரப் போர்க்காலங்களில் காளிக்கு பலி கொடுப்பதற்காக அர்ச்சுனரின் மகனைக் கேட்டார்கள். அதாவது வெட்டிப் பலி கொடுப்பது மாதிரி. அல்லது சில நேரம் அவரை அவரே வெட்டிக் கொண்டு சாகிறது மாதிரியும் இருக்கும். அரவான் தான் இதுவரை தாம்பத்ய இன்பமே அனுபவித்ததில்லை என்கிறார். திருமணத்திற்காக பெண்களைக் கேட்ட போது அடுத்த நாளே இறக்கப் போகிறவர் என்று மறுத்து விடுகிறார்கள். அதனால் விஷ்ணு மோகினி வேடத்தில் வந்து அவருக்கு மனைவியாக இருக்கிறார். பின்பு அரவான் பலி கொடுக்கப்படுகிறார். இந்த அரவான் நமது கலாச்சாரத்தில் ஆழமாக வேரூன்றியிருக்கிறார்.

செல்லா : LGBT collect மாதிரி எடுத்துக் காட்டாக ரோஸ் தொலைக்காட்சியில் வந்து விட்டார். கல்கி படத்தில் நடிக்கிறார். இப்படியாக அவர்கள் வெளிவரும்போது,  உங்கள் சார்பில் ஆற்றல் மிக்க குரல்கள் ஒலிக்கப்படும் என்று கருதுகிறீர்களா ?

ஜான் : கண்டிப்பாக. எங்கள் மக்கள் வெளிவரும்போதுதான் எங்கள் பிரச்சனைகள், குரல்கள், செய்திகள் மக்களுக்கு வெளிப்பட ஆரம்பிக்கும். திருநங்கைகள் ஊடக வெளிச்சம் படுவதற்கு முன்பிருந்ததற்கும், தற்போதிருக்கும் மக்கள் மனநிலைக்கும் வேறுபட்டுள்ளது. ஒவ்வொரு விடயமும் வெளிவரும்போதுதான், கலைத்துறையாகட்டும், இலக்கியத்துறையாகட்டும் சரி எங்களைப் பற்றித் தெரியவரும்.

செல்லா : இவர்களும் நம்மை மாதிரி மனிதர்களே! வேறு வகையில் இருக்கின்றனர் என்ற தெளிவு விழிப்புணர்வு வரும் ?

ஜான் : ஆம். பாலினத்தின் பல நிறங்கள், வானவில்லின் பல நிறங்கள் போல. நாங்கள் வானவில்லைத்தான் எங்கள் சின்னமாக வைத்திருக்கிறோம். LGBT - குழுவின் கொடி வானவில்தான். ஒரே நிறமாகத் தெரிந்தாலும் பல வண்ணங்களாகச் சிதறியிருக்கிறது.

செல்லா : உங்களுடன் பேசிய பின்புதான் இத்தனை இருக்கின்றன என்பதே எனக்குத் தெரியவருகிறது. உங்களுடன் பேசியதில் மகிழ்ச்சி. நன்றி ஜான்.

ஜான் : ரொம்ப மகிழ்ச்சி. நன்றி !
Download As PDF
Bookmark and Share

Post Comment