கவிதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கவிதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சீதையின் நிலை

சீதையைக் கவர்ந்து சென்றதற்காக 

இராவணனைத் திட்டுகிறவர்கள்

சீதையைத் தீயில் இறக்கியதற்காக

இராமனைத் திட்டுவதில்லை

Download As PDF
Bookmark and Share

Post Comment

மீண்டும் ஒரு கடைசிக் கவிதை

கடைசியாக ஒரு முறை அழுது விட வேண்டும் 
கடைசியாக ஒரு முறை உன்னுடன் என் காதலுடன் பேசிட வேண்டும் 
பின்பு இயல்பான வாழ்க்கையில் கரைந்து போய்விட வேண்டும்
கடைசியாக ஒரு முறை நம்முடைய காதல் பற்றிக்
கவிதையில் எழுதி விட வேண்டும்

என்னுடைய கடைசி ஆயுதமாக கவிதையைத் தேர்ந்தெடுத்தேன்
அதில் உன் நினைவினை நிரந்தரமாகப் புதைத்து விடத் துணிந்தேன்
அக்கவிதை முடிவது போலவே நீயும் உன் நினைவுகளும்
என்னிடமிருந்து அகல வேண்டும் என்று வேண்டியும் கொண்டேன்

ஒரே ஒரு கவிதையில் நீ என்னில் செலுத்திக் கொண்டிருக்கும் 
வேதனைகளை எல்லாம் சொற்களில் வடித்து இறக்கி வைத்து 
விடலாம் என்றெண்ணி எழுத முயன்று கொண்டிருந்தேன்

அந்தக் கவிதையோ முடியாமல் நீண்டு கொண்டே சென்றது
நான் இதுவரை எழுதிய கவிதைகளில் அழகானதாகவும் இருந்தது 
அந்த உணர்வுகளைக் கொடுத்த உனது நினைவுகள் மீண்டும்
எய்ந்தவனையே பதம் பார்க்கும் அம்பாக என் மீதே பாய்கின்றன

அக்கவிதையின் வாயிலாக நான் என்னுடைய காதல்
புது பரிமாணம் கிடைக்கப் பெற்றதாக உணர்கிறேன் 
இதோ இன்னொரு சாக்குக் கிடைத்து விட்டது 
உன்னை நினைத்துக் கொண்டிருக்க

இத்தகைய உணர்வினைக் கொடுத்தவள் இவள் என்றே 
உன் மீது மீண்டும் காதல் கணக்கில்லாமல் ஏறுகிறது
என்னையும் கவிஞனாக்கி விட்டாளிவள் என்று ஏற்றத் தோன்றுகிறது
அட இவள் இல்லாமல் போனால்தான் என்ன ?
இவள் தந்த காதல் இல்லை இவளை நினைத்ததால் வந்த காதல்
அது கொடுத்த பேரின்பத் திளைப்புகள்தான் போதாதா வாழ்நாள் முழுதும்

எதிர்காலத்தில் உன் கணவன் உன்னைக் கண்டுகொள்ளாத பொழுதில்
ஒரு காலத்தில் என்னை ஒருவன் எப்படியெல்லாம் காதலித்தான்
தெரியுமா என்று வெறுப்பேற்றக் கூட நானும் என் காதலும் பயன்படலாம் 

உன் மீதான இந்தக் காதல் இருக்கிறதே இல்லை இல்லை
உன் மீதான போதை இருக்கிறதே 

ஏன் இப்படி கொஞ்சம் கூட வெட்கமில்லாமல் இருக்கிறது ?
ஏன் கொஞ்சம் கூடக் குறையவே மாட்டேன் என்கிறது ?
ஏன் என்னை நிம்மதியாய் இருக்க விடாமல் செய்கிறது ?
ஏன் கற்பனையின் உச்சத்தில் என்னை ஏந்திச் செல்கிறது ?

இந்தக் காதல் ஏன் எனது மற்றக் காதல்களைப் போலக் காலத்தால்
காணாமல் போக முடியவில்லை ?
ஏன் என்னுடைய மற்ற மையல்களைப் போல உன் மேல் கொண்ட மையல்
மட்டும் மறைந்து போகவில்லை ? 

மற்றவை எனது உடலுணர்ச்சியின் விளைவாய வந்திருக்கக் கூடும்
உன் மீதான மையலோ என் உயிரிலிந்தே வந்திருக்க வேண்டும்

அப்படி என்னதான் உன்னிடம் கண்டு விட்டேன் நான் 
என்னால் விண்டு விடவே முடியவில்லையே !
தயவு செய்து என்னை விட்டு விடக் கூடாதா
நான் பிழைத்துப் போகிறேன்

இல்லாத கடவுளிடம் வேண்டுவதைப் போல உனக்குத் தெரியாத
உன்னிடமே கேட்டுக் கொண்டிருக்கிறேன் நான்

Download As PDF
Bookmark and Share

Post Comment

அன்பில்லா கணவா

அப்படியென்னதான் உன்னிடம் கேட்டுவிட்டேன்
முகம் கொடுத்தாவது பேசேன் என்றுதானே
அதற்கும் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டால்
நானெங்கே போவது இல்லை என்னை என்ன செய்வது ?
உனக்கோ எனதன்பின் பதிலாக எரிச்சலேன் வருகிறது
கொஞ்சிப் பேச மாட்டாயாவென கெஞ்சியே கேட்கிறேன்
உன்னிடம் நான் கேட்பது அன்பைத் தவிர வேறென்ன

உன்னைப் போலவே நானும் வேலைக்குச் செல்கிறேன்
உன்னைப் போலவே வெளியில் எனக்கும் தொல்லைகள்
மனத்தின் அழுத்தத்துடன்தான் வீட்டிற்கு வருகிறேன்
உன்னைப் போல் உண்ணும் உணவுக்குக் காத்திருப்பதில்லை
நீ உண்ணும் உணவை உண்டாக்கிக் காத்திருக்கிறேன்
உன்னைக் காணும் ஆசையில் அழுத்தம் ஆனந்தமாகிறது
உன்னைக் கண்டதும் களைப்பு களிப்பாகிறது
ஊனெங்கும் உற்சாகமாகி காதல் களைகட்டுகிறது
உனக்கோ களைப்புதான் பெரிதாகத் தெரிகிறது

உன்னை அனைவரும் நல்லவன் என்கிறார்கள்
நான் கொடுப்பினை செய்தவளென்று உனைக்காட்டி ஊரார் சொல்ல
என்பதில் எனக்கு மகிழ்ச்சிதான் குறையில்லை
அதனால்தானென்னவோ எனக்கு உன்மேல்
அன்பு குறைவில்லாம் ஊற்றெடுக்கிறது
குறை எனதன்பிலா உன் புரிதலா உன் மனநிலையா
எதுவாயினும் மிகத்துயரம் என் நிலை
என் மீது சாய்வு கொள்ளுமோ உன் நிலை ?
அள்ளித் தராவிட்டாலும் தாழ்வில்லை
என் ஏக்கத்திற்கு ஏனென்ற கேள்வி கூட இல்லையா ?
இப்படி என் துக்கத்திற்கு அடித்தளமாகிறாயே ?

நீ எல்லோருடனும் அன்பாய் இருக்கிறாயாம்
எனக்கும் பெருமைதான் கசக்கவா செய்யும் கணவனின் நற்பெயர்
ஆனால் என்னிடம் மட்டும் ஏன் அப்படி இல்லை ?
எனக்கு மட்டும் நீ ஏன் அப்படித் தோன்றவில்லை
என்னிடம்தானே எரிந்து விழுகிறாய்
எரிசொற்களை வீசுகிறாய்
கேள்விக்கணைகளைத் தொடுக்கிறாய்
சிறுதவறுகளையும் பொருட்படுத்துகிறாய் குற்றம் காண்கிறாய்
என்னை ஏசுகிறாய் குறை சொல்கிறாய்
எனக்குத்தானே தெரிகிறது நீ எத்தனை நல்லவனென்று ?
உன் கோபக்கொடுக்கை அறிந்தவள் யானே
நான்கு சுவர்களுக்கு நடுவிலும் நான்கு பேருக்கு அருகிலும்
என்னிடம் அன்பாக பேசமாட்டாய் புன்னகை பூக்க மாட்டாய்
இத்தனையும் தெரிந்தும் உன்னை நல்லவனென 
ஊரார் சொல்வது எனக்கு உவப்பாகவே இருக்கிறதே
இதுதான் நான் என்று புரிகிறதா ?
என் அன்பு எத்தகையதென்று தெரிகிறதா
உன்னிலும் சிறந்தவள் நானன்றோ ?

 உனது நீதியும் நேர்மையும் எனக்குத் தேவையில்லை
உனது சாக்குகளும் போக்குகளும் நான் பொருட்படுத்துவதில்லை
உனது கொள்கையும் கோட்பாடும் எனக்குக் குப்பைகள்
உனது மனநிலையும் தோல்வியும் எனக்கு புரளிகள்
உனது இன்பமும் துன்பமும் மட்டுமே நான் காண்பவை
உனது தீண்டல் மட்டுமே
உனது அணைப்பு மட்டுமே
உனது முத்தம் மட்டுமே
உனது ஆசைப்பேச்சு மட்டுமே
என்னைக் கொஞ்சுவது மட்டுமே
அவை அனைத்தும் எனக்கு மட்டுமே
நான் வேண்டுவது இவை மட்டுமே
அன்புக்கு ஏங்குவதே என் பிறவிக்குணம்

அன்பு செய்வதெப்படியென
சமையல் செய்வதெப்படியென
சமர்த்தாக நடந்து கொள்வதெப்படியென
சினந்து பேசாமல் சிரித்து பேசுவதெப்படியென
பொங்கியெழாமல் பொறுமை காப்பதெப்படியென
என்பதெல்லாம் கற்றுக்கொள் என்னிடம்

திருமணமான ஆண்களுக்குக் காதல் சற்றே கடினம்தான்
மனைவியைக் காதலிப்பது என்னவோர் சாதனை பாரேன் கணவா
உனக்கு வேறுவழியில்லையே என்ன செய்ய ?
என்னை நேசிக்கக் கொஞ்சம் முயன்றுதான் பாரேன்
அதில் கிடைக்கும் தெவிட்டாத இன்பம் நான் உத்தரவாதம்
இயலாத காலத்தில் இன்பம் அனுபவிக்காது போனோமே
என்றெண்ணி ஏங்கி வாடும் நிலை உனது முதுமைக்கு
வேண்டாமே என் கணவா புரிந்து கொள்வாய் என் கணவா
அன்றேல் என் வாழ்க்கை போய்விடும் வெறும் கனவா
Download As PDF
Bookmark and Share

Post Comment

மீண்டும் நானாக

உனது ஊர் எனக்கும் உறவாக இருந்தது
எனது உறவு உனக்கு ஊராக இருந்தது
நாம் இயங்கும் இடம் நமக்கான பாலமாய் இருந்தது
இருந்தும் எனக்கில்லை அந்தக் கொடுப்பினை
உனது இயல்பே எனது அன்பானது
உனது புறக்கணிப்பே பதிலானது
நீயோ எனது உலகமாக இருக்கிறாய்
நானோ உனதுலகத்தில் கூட இல்லாதவனாய்
எனது சொற்களில் அன்பை நிறைத்து அனுப்புகிறேன் 
நீயோ உன் பதில்களில் சலிப்பைக் காட்டுகிறாய்
உன்னைக் கண்டு புன்னகைக்கவே காத்திருக்கிறேன்
என்னைக் கண்டதால் வேறுவழியின்றி புன்னகைக்கிறாய்
நீ எனக்கு மற்றவரில் ஒருவரல்ல என்று நிறுவ முனைகிறேன்
நான் உனக்கு மற்றவராகக் கூட இல்லை என்று நிறுவுகிறாய்
எதிர்ப்பட்டால் கூட ஏறெடுத்தும் பார்க்காத நீ
எப்பொழுதும் ஏங்கிக் கொண்டிருக்கும் நான்
எதற்காக நம் சந்திப்பு நிகழ வேண்டும்
உன் அலட்சியம் உன்னையே இலட்சியமான
எனை ஏன் இகழ வேண்டும்
என்ன விந்தை இது ?
என்ன கொடுமை இது ?
ஓர் உயிர் இன்னோர் உயிரை ஓயாது நினைக்க
இன்னோர் உயிர்க்கோ இப்படியோர் உயிர் இருப்பதே
அறியாமல் இருக்க நம்பிக்கையற்ற ஒன்றிற்காக
கிடைக்காத ஒரு வரத்திற்காக 
இல்லாத கடவுளிடம் தவமெதற்கு
விரும்பாத ஒருவரைக் கூட நான் இப்படி விட்டதில்லை
ஆம் இப்படியே செல்லட்டும் என் காலம்
இப்படியெல்லாம் நினைந்திருந்தவன் மாறிவிட்டேன்
உனது நீண்ட கூந்தல் ஈர்ப்பு தரவில்லை
உனது வடிவான உடல் சிலிர்க்க வைக்கவில்லை
கூரிய புருவங்களும் கண்களும் கலக்கம் தரவில்லை
உனது கொலுசொலி இதயத்துடிப்பை அதிகரிக்கவில்லை
உனது உடைகளின் நேர்த்தியில் அதிசயிக்கவில்லை
உன்னுடன் பேசும் தருணத்திற்கு ஏங்கவில்லை
உன்னுடைய பேச்சுக்களை அசைபோட்டு களிக்கவில்லை
உன்னுடைய சிரிப்பின் அழகை நினைத்துப்பார்க்கவில்லை
உன்னை சிரிக்க வைத்தேன் என்று பெருமிதப்படவில்லை
உன்னுடன் பழகிவிட்டேனே என்று பெருமைப்படவில்லை
உன்னை வெல்லவில்லை என வருத்தப்படவில்லை
முன்பு போல் உனது வருகையும் செல்கையும் சலனப்படுத்தவில்லை
நீ யாரோவாக மாறி விட்டாய்
நான் நானாகவே திரும்பி விட்டேன்
உன்னைப் போலவே இயல்பானவனாக மாறிவிட்டேன்

Download As PDF
Bookmark and Share

Post Comment

நானானவள் - ஆம் ! அவள் நான் என்று ஆனவள்


நம் வாழ்க்கையின் ஏதோ ஒரு நாளில்
உன் வாழ்க்கையில் ஒரு நாளில்
என் வாழ்க்கையில் ஒரு நாளில்
அந்த சில நிமிடங்கள் நீயும் நானும் மட்டும்
நமது மொழிகள் மட்டும்
நமது குரல்கள் மட்டும்

நமது செவிகள் மட்டும்
நமது இதயங்கள் மட்டும்

நம்மைப் பற்றியவை மட்டும்
நம்மைச் சேர்ந்தவர்கள் குறித்தவை மட்டும்
நம்முடைய நிகழ்கால நிகழ்வுகள் மட்டும்
நம்முடைய உள்ளங்கள் மட்டும் பேசின
பொன்னான நிமிடங்கள் அவை மட்டும்
நீ எனக்கு மிகவும் உறவாகவிருந்தாய்
நான் உனக்கு மிகவும் வேண்டியவனாயிருந்தேன்

என்னுடைய குரல் உன்னுடைய செவிப்பறையில் மட்டும் மோதித் திரும்பியது
உன்னுடைய குரலோ எனது இதயத்தில் சென்று மஞ்சத்தில் அமர்ந்து கொண்டது
காலம் நம்மைப் பிரித்துவிட்டது எனினும்
பட்டும் படாமல் நீ பதில் பேசியதும்
விட்டு விடாமல் நான் கேட்டுத் தொடர்ந்ததும்
என் சொற்கள் ஒட்டிவிடாமல் நீ தட்டி விட்டதும்
நீ தட்டி விட்டதை நான் சேமித்து வைத்ததும்
அவ்வப்போது அதை தூசுதட்டி நான் அசைபோடுவதும்
வாழ்வு உன் மீதான ஈர்ப்பைக் குறைத்து விட்டாலும்
அந்நினைவுகள் எனக்கு சுவையூட்டும் இன்றும் என்றென்றும்
உன்னில் நான் மறந்தும் போயிருக்கலாம்
உன்னில் நீ மாறியிருந்தாலும் 
என்னில் நீ இன்னும் மாறாமலிருக்கிறாய்

ஏனெனில் நீ, நான் என்று ஆனவள்
ஆம் அவள் நான் என்று ஆகினாள்
அவள் என்னவள்

Download As PDF
Bookmark and Share

Post Comment

உன் அண்மையில் உன் இன்மை


ஒற்றைச்  சொல்லேனும்  உதிர்த்து  விடாமல்
கடக்கும்  கல்மனம்  உனது
புற்றைப்  போல  வளரும்  பெருந்துயரில்
உழலும்  உள்மனம்  எனது
எனக்கென்று  ஏற்கெனவே  வரிசையில்
நிற்கின்றன  கவலைகள்
அவற்றைத்  தோற்கடித்து  முதலிடம்
பிடிக்கின்றன  உன்  நினைவுகள்
என்  துன்பங்களை  மறக்கடிக்கும்  இன்பமும்  நீ
என்  நிம்மதியைக்  கவரும்  துன்பமும்  நீ
உன்  நினைவுக்கும்  உன்  நினைவுக்கும்
இடையேயான  இடைவெளிகளையெல்லாம்
வந்து  நிரப்புகின்றவை  உன்  நினைவுகளே
என்  அன்பின்  மீதான  உன்  புறக்கணிப்பு
உன்  அலட்சியத்தின்  கொக்கரிப்பு
விடாதே  என்கிறது  என்னுள்ளத்தின்  நச்சரிப்பு
உனதன்பைப்  பெறாமல்  நான்  ஏழையைப்  போல
இரந்து  நிற்கிறேன்  இறைஞ்சிக்  கேட்கிறேன்
உன்னிடம்தான்  எனக்குள்ளேயேதான்
உன்னுடனேயே  பேசிக்  கொண்டிருக்கிறேன்
நீ  என்ன  பதில்  சொல்லக்கூடும்  என்று
அனுமானிக்க  முடியாதவனாய்
கொஞ்சம்  பேசிப்  போனால்தான்  என்ன
குறைந்தா  போய்விடுவாய்  ?
இன்னும்  கொஞ்சம்  சிரித்தால்தான்  என்ன
இறங்கியா  போய்விடுவாய்  ?
என்  நேசத்தைப்  பொருள்  கொள்ளாமல்
என்னை  பொருட்படுத்தாமல்  இயங்கும்
உன்  இருப்பு  எனக்கு  ஏற்படுத்தும்  வெறுப்பு
நீ  எனது  அண்மையில்  இருந்த  போதும்
உனது  இன்மையையே  உணர்கிறேன்
உனது  அண்மையை  இழந்து  தவிக்கிறேன்
உனது  தன்மையை  வெறுக்கிறேன்  அன்பே  !
உன்றன்  மீதான  அன்பே  உன்றன்  மேல்
வெறுப்பையும்  ஆக்குகிறது  அன்பே  !
வேறு  கோணத்தில்  உனைக்  கண்டு  நீ  
ஒரு  அழகி  இல்லை என்று  உறுதிபடுத்திக்  கொள்கிறேன்
நான்  கொண்ட  நேசத்திற்கு  உனதழகு  
ஒரு  காரணமாகாது  என்று  ஆறுதல்பட்டுக்  கொள்கிறேன்
உனை  மறந்து  விட்டு  இயல்பாக  இருக்கலாமென்ற  
உன்னுடனான  போட்டியைத்  தொடங்கினேன்
உனது  கொலுசொலி  நீ  வரும்  முன்னே
நீதான்  வருகிறாய்  என்று  என்னை
நினைவூட்டியே  தோற்கடித்தது  எனக்குள்
தூங்கியது  போல்  நடிக்கும்  உன்னைத்
தட்டி  எழுப்பியது  எள்ளி  நகையாடியது
எனது  தோல்வியைத்  துள்ளிக்  கொண்டாடியது
நீ  எனக்குள்  இருப்பதை  நானோ  நீயோ  நினைத்தால்
மாற்ற  முடியாது  என்று  பறைசாற்றியது
இதயத்துடிப்பின்  இடையிடையே  வந்து
என்னைத்  துடிக்க  வைக்கும்  உன்னையெப்படி
என்  இதயத்திலிருந்து  நீக்குவது
துடித்து  விடாதோ  இதயம்  இல்லை
துடிக்க  மறந்து  விடாதோ  இதயம்
பறிபோகிறது  எனது  தூக்கம்
பறித்தது  உன்மேலானாதென்றன்  ஏக்கம்
நீ  கடந்து  போகும்  அத்தருணமா
எப்போதாவது  நீ  பேசும்  நிமிடங்களா
எனக்குள்ளே  நாம்  பேசுகிறோமே  அந்த
இனிய  நினைவுகளா  இவற்றில்  எது  இனிமை  ?
நீ  எனது  வாழ்க்கைநூலின்  இனிய  பக்கங்கள்
நான்  மட்டுமே  அறிந்த  கதையில்..

உன் பார்வை பட்டால் ஊனெங்கும் உதறல் எடுக்க
உன்னுடன் பேசும் போது எப்பாடு பட்டேனும்
உன்னை சிரித்து விட வைக்கவேண்டும் எத்தனிக்க
இதிலுமே எனக்கு தோல்வியா வாய்க்க வேண்டும் ?
உனைச் சுற்றிப் பலபத்துப்பேர்களிருந்தாலும் உனை 
நோக்கியே  என் ஓர்மை குவிய தனியனாய்  
நான் இருந்தாலும் எனை பொருட்படுத்தாத நீ
இப்படி ஓர் கொடுமையை யாரிடம் சொல்ல
காலம் ஆற்றிடும் இக்காயத்தினை மெல்ல

Download As PDF
Bookmark and Share

Post Comment

தாய்மை

மகளைப் பிரசவிக்கும்போது ஏற்பட்ட வலியைத் 
தாங்கிக் கொண்ட அம்மாவால்
மகள் பிரசவிக்கும்போது ஏற்படும் வலியைத் தாங்கிக்
கொள்ள முடிவதில்லை

தம்பியோ தங்கையோ பிறக்கையில் அரைத்தாயாக
மாறும் அம்மா தம் சொந்த வயிற்றில் 
சுமந்து பிறப்பிக்கும்போது முழுத்தாயாகிறார்

தம் பிள்ளைகளின் பிள்ளைகளை வளர்க்கும்போதில்
தாய்மையை விஞ்சும் பெருந்தாய்மையை அடைகிறார்
அதற்கான பெருந்தன்மையுடனேயே பிறக்கிறார் அம்மா

அடுத்தவரிடம்  அடக்கமும் அமைதியும் உருவானவராகப் 
பெயர் பெற்ற பிள்ளைகளும் ஆத்திரத்தை தீர்த்துக் கொள்ளும் 
வடிகால்தான் அம்மா

அம்மா பேசினாலே சலித்துக் கொள்ளும்
அலுத்துக் கொள்ளும்  பிள்ளைகளுக்குத் தெரிவதில்லை 
அம்மாவின் மொக்கைத்தனமே கடிந்து கொள்வதையும் 
காயப்படுத்துவதையும் சகித்துக் கொள்கிறது
தொடர்ந்து அம்மாவை அம்மாவாகவே நீடிக்கச் செய்கிறது
நாம் நல்லவரென்று நம்மையும் கருதச் செய்கிறது
Download As PDF
Bookmark and Share

Post Comment

எமனின் வாகனங்கள்


வளர்ந்து விட்டது மனித இனம்
வகையின்றிப் பெருகின வாகனங்கள்
வரையறையின்றிப் போகின்றன விற்பனையகங்கள்
வன்முறையை நினைவுறுத்துகின்றன வேகங்கள்
உடல்வலியின்றிக் கொண்டு சேர்க்கின்றன மனிதனை
வழியின்றி தவிக்கின்றன வழித்தடங்கள்
வழிமாறித் தவிக்கின்றன வனஇனங்கள்
வழிகொடுக்காமல் செல்கின்றன சிலஇனங்கள்
சமிக்ஞையை சட்டை செய்யாத சாகசங்கள்



எங்கெங்கு காணினும் வாகனமே
அதன் மேலே செல்லுது எல்லாக் கணமுமே
சாலையில் செல்பவனுக்கு எப்போதும் வரும் திவசம்
இருப்பினும் அணியான் தலைக்கவசம்


பேருந்துகளில் பிதுங்கித் தொங்குகின்றனர்
வல்லுந்துகள் வர்ரென்று போகின்றன
சர்ரென்று போகின்றன சரக்குந்துகள்
சீரற்றுப் போகும் சீருந்துகள்
மளமளவென்று மறையும் மகிழுந்துகள்

மாதமொரு மாதிரிகள் மன்றத்திலே
மகிழ்வுடன் அறிமுகப்படுத்தும் மாதர்கள்
மனமயக்கத்தில் வாங்கித் தள்ளும் மானிடர்கள்

நடப்பதெல்லாம் முற்காலம்
தடுக்கிவிழும் தூரமும் வண்டியிற்
கடப்பதெல்லாம் இக்காலம்

குளிர் மோர் குடித்தே முப்பாட்டன்
கலைப்பையுடன் களமாடிய காட்டினை
கண்டமாக்கி விற்றுக் காசாக்கி
குளிரூட்டி மகிழுந்து வாங்கி ஆயாசத்
தற்படமெடுக்கும் தற்காலத் தலைமுறை

அமெரிக்க தயாரிப்பை அம்மன் துணையும்
ஜப்பானின் தயாரிப்பை ஜாதிக்கொடியும்
ஜெர்மனியின் தயாரிப்பை கட்சிக் கொடியும்
அழகூட்டி உலாச் செல்லும் அழகும்
விபத்து இயற்கையின் முடிவுபோல்
எதிலும் முடியும் யாருடைய விதி
இன்று இதுதான் நீதி

நடப்பன ஊர்வன பறப்பன
உயிர்களின் உயிரில்லா உடல்களும்
சாலையில் நசுங்கிக் கிடக்கின்றன
என்னை எச்சரித்து
உச் கொட்டியபடியே
என் நாள் எந்நாளோ என்று இதயம்
உடைந்து கடந்து கொண்டிருக்கிறேன்
எல்லா இறப்புகளையும்

ஆம் எருமையில் மட்டுமல்ல
எமன் எல்லா வாகனங்களிலும்
கண்ணுக்குத் தெரியாமல்
அமர்ந்திருக்கிறான்





Download As PDF
Bookmark and Share

Post Comment

ஜாதி



இந்துக்களே இந்துவைக் கொன்றிருக்கிறார்கள்
தமிழர்களே தமிழனைக் கொன்றிருக்கிறார்கள்
திராவிடர்களே திராவிடனைக் கொன்றிருக்கிறார்கள்

எந்த சித்தாந்தத்தையும் ஏற்றுக் கொள்ளுங்கள்
எவனையும் தலைவனாகக் கொள்ளுங்கள்
மதத்தையும் மாற்றிக் கொள்ளுங்கள்
எவ்விறையையும் வழிபடுங்கள்
எக்கேடும் கெட்டுப்போங்கள்
ஜாதி மட்டும் மாறாதீர்கள்
மாறினாலும் மாற முயன்றாலும்
மரணிப்பீர்கள்

எத்தகு தீயதும் ஜாதியால் அரவணைக்கப்படும்
எத்தகு புனிதமும் ஜாதிமாறினால் அழிக்கப்படும்

எனது விந்து எங்கும் ஊர்மேயலாம்
எந்த ஜாதியின் பிறப்புறுப்பிலும்
நீந்த்திச் செல்லலாம் கருமுட்டையுடனும்
வினைபுரியலாம் ஆயினும்
அது எனது ஜாதியின் மகவையே தரும்

உனது கருப்பை பிறனின் விந்தை சுமக்கலாகாது
அது எனது ஜாதியின் விந்தை மட்டும்
சுமக்கவே பணிக்கப்பட்டது
இப்புனித நியமங்களின் படியே வாழ உனக்குண்டு உரிமை
இதற்குள்ளாக நீ மகிழ்ந்து கொள்ளவும்
உமிழ்ந்து கொள்ளவும்

இதிலிருந்து வெளியே சென்று நீ காதல் கொண்டால்
நாங்கள் அவன் உயிர் கொல்வோம் உன்னை மீளவும் கொள்வோம் அன்றேல்
உன்னையும் கொல்வோம்
நீ என் வித்துதான்
அதனாலென்ன
நான் வாழ்வது ஜாதியால்
ஜாதி வாழ்வது என்னால்

Download As PDF
Bookmark and Share

Post Comment

உலக அன்னையர் நாள்

என்னிடம் ஒரு நண்பர்(பெண்) கூறினார். "என்ன இருந்தாலும் எனக்கு ஜெயலலிதாவை ஒரு விசயத்தில் பிடிக்கும்." எத்தனை ஆம்பளைகளை கால்ல விழ வைக்கிறா !. அதுக்கு எத்தனை கெத்து இருக்கணும் என்றார்.  அது தவறு என்று சொல்ல நினைத்து பின்பு அமைதியாகி விட்டேன். அவர் ஒரு கோணத்தில் சொல்கிறார். அது சரியாகவே தோன்றியது. எல்லா இடத்திலும் அவர்கள்தான் வளைந்து கொடுக்க வேண்டியிருக்கிறது. ஜெயலலிதாவின் மூலம் அவர்கள் தங்கள் "எதிரிகளை" பழிவாங்கிவிட்டதாக நினைத்துக் கொள்கின்றனர் போலும், நாமெல்லாம் திரைப்பட நடிகனை நாமாகக் கற்பனை செய்து கொண்டு மகிழ்கிறோமே அது போல. இதற்கும் அன்னையர் தினத்துக்கும் எந்தத் தொடர்புமில்லை. ஆனால் உண்மையில் அன்னையர்களை அடிமைகளைப் போலத்தான் நடத்தி வருகிறோம். இதில் ஆண் பெண் பேதமில்லை. அம்மா என்றால் நாம் என்ன வேண்டுமானாலும் சொல்லலாம், ஆத்திரத்தையும் காட்டலாம். அவர்கள் அருகாமையை நாம் இழக்கும் போதுதான் தெரிகிறது. நாமெல்லாம் எதற்கும் உதவாதவர்கள் என்று. வீட்டில் ஒரு பொருளை நம்மால் தேடி எடுக்க முடிகிறதா ?

ஒரு முறை ஜக்கி வாசுதேவ் கூறினார். நான் பல பெண்மணிகளிடம், "நீங்கள் என்ன செய்கிறீர்கள் ? என்று கேட்டிருக்கிறேன். அதற்கு அவர்கள், "ஓ, நான் வெறும் குடும்பத் தலைவிதான்" (just housewife) என்பார்கள். "ஏன் நீங்கள் வெறும் இல்லத்தரசிதான் என்று சொல்கிறீர்கள் ?!" என்று நான் கேட்பேன். இரண்டு அல்லது மூன்று புதிய உயிர்களை ஊட்டி வளர்ப்பதன் முக்கியத்துவன் அவர்களுக்குப் புரிவது போலத் தோன்றவில்லை. இது ஒரு மிக முக்கியமான வேலை. என் தாயார் என்னிடம் ஒரு போதும் "எனக்கு உன்மேல் கொள்ளை பிரியம்" என்றெல்லாம் எதுவும் சொன்னதில்லை. அவர் சும்மா வாழ்ந்தார். அவருக்கு எங்கள் மேல் பிரியம் இருக்கிறதா இல்லையா என்றெல்லாம் எங்களுக்குத் தோன்றியதே இல்லை. அவர் வாழ்க்கை முழுவதையும் எங்களுக்காக அர்ப்பணித்திருந்ததால் எங்களுக்குள் அந்தக் கேள்வியே எழுந்ததில்லை. அவர் எங்களுக்காகவே வாழ்ந்தார் என்பது எங்களுக்குத் தெரியும். அவர் என்னுடன் வாழ்ந்த காலகட்டத்தில் இல்லாத ஒரு வாழ்க்கையை என்னால் நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை. நான் இப்போது இருக்கும் நிலைக்கு என் தாயாரின் நேரடியான பங்களிப்பு எதுவும் இல்லை. ஆனால் எனக்காக அவர் உருவாக்கிய சூழ்நிலை இல்லாமல், நான் இப்போது இந்த நிலையில் இருந்திருக்க மாட்டேன். இது ஏதோ ஒரு கட்டத்தில் வெளிப்படும் என்பதை நன்கு உணர்ந்து, அந்த சூழ்நிலையை உருவாக்க அவர் தன் உயிரையே கொடுத்தார். அதுதான் அவர் எனக்காகச் செய்திருப்பதில் முக்கியமானது. இது முக்கியமானதல்ல என்று எவரும் ஏன் நினைக்கப் போகிறார்கள் ? வாழ்வின் ஆரம்பக் கட்டத்தில், எதைப் பற்றியும் நாங்கள் நினைக்க வேண்டிய தேவை எங்களுக்கு இருந்ததில்லை. சரியான பின்னணி எப்போதும் இருப்பதை அவர் உறுதி செய்தார். எங்களைச் சுற்றி என்ன நடக்கிறது என்பது குறித்த கவலையே இல்லாமல் நாங்கள் வாழ்ந்தோம். பல நாட்களுக்குத் தொடர்ந்து கண்மூடி அமர்ந்திருக்கும் சாத்தியத்தையும் எனக்கு இதுவே அளித்தது.

இதிலிருந்து அவர் என்ன சொல்ல வருகிறார் என்பது புரிந்திருக்கும். அவர்கள் (அம்மாக்கள்தான்) என்ன செய்கிறார்கள் என்பதையே நாம் கவனிக்கத் தேவையில்லை. அம்மா செய்யும் எல்லாச் செயல்களுமே குடும்பத்துக்காக அன்றி அவளுக்காக இல்லை. இன்னும் சோறாகலையா என்று கேட்கத்தான் நமக்குத் தெரியும். ஒரு நாள் அம்மா வீட்டில் இல்லையென்றால் என்ன பாடு பட வேண்டியிருக்கிறது ?

அன்னைகளுக்குத் தெரியவில்லை
நமக்கான நாளை "உலகமே" கொண்டாடுகிறது
மற்றவர்க்கான தினங்களைப் போல மற்றவர்களைப் போல
இன்றும் அவர்களுக்கு விடுமுறை கிடையாது
அன்றாட வேலைகளையே இன்றும் செய்கிறார்கள்
அன்னையர்களின் புதல்வர்களோ
அன்னையர் தினமென்று தொலைக்காட்சிகளில் வாழ்த்துகிறோம்
வெட்கச்சிரிப்புடைய அம்மாவுடன் எடுத்த கைப்படத்தையும் பகிர்கிறோம்
நிலைத்தகவல் போடுகிறோம்
கவிதை புனைகிறோம்
அடுக்களையில் இருக்கும் அம்மாவிடம்
அலட்டலாக ஒரு தேநீரும் கேட்கிறோம்
Download As PDF
Bookmark and Share

Post Comment

பிகே - உங்கள் உள்ளத்தை அள்ளாமல் விட மாட்டான்


பிகே - ஆடையில்லாமல் வந்தவன்
அனைத்தையும் கற்றுக் கொண்டவன்
எளிய கேள்விகளால் எள்ளி நகையாடியவன்
கிறுக்குத்தனங்கள் பலவும் செய்தே
கீழ்மைத் தனங்களை எதிர்த்தவன்
சேட்டைகள் செய்தே சேதிகள் பல சொன்னவன்
கடவுள் இல்லை என்று சொல்லாதவன்
மனிதர் படைத்ததே கடவுள்தான் இல்லை என்றவன்
கடவுளைக் கண்டவன்
கண்டபிறகும் விண்டவன்
கடவுளையே மடக்கியவன்
மாற்றுமதத்தானை நேசிக்கச் செய்தவன்
மாற்றுமதத்தையும் விமர்சனம் செய்தவன்
மதமாற்றாமல் மதத்தையே மாற்றியவன்
நம்மையும் காதலிக்கக் கற்பித்தவன்
காதலியின் காதலுக்காகத் தன் காதலை மறைத்தவன்
இறுதி வரை சிரிக்க வைப்பான்
இறுதியில் அழ வைப்பான்
இதயத்தை இதமாக்குவான்
ஆறாம் அறிவை அணைத்துவிட்டு
கொஞ்சம் அவனைப் பாருங்கள்
உங்கள் ஏழாம் அறிவைத் திறந்து வைப்பான்
உங்கள் உறக்கத்தையும் கெடுப்பான்
உள்ளத்தை அள்ளாமல் விட மாட்டான்

Download As PDF
Bookmark and Share

Post Comment

நினைவோடையில் நிலையான தடம் பதித்தவளுக்கு

நேற்றைக்கு என் கண்ணில் பட்டுவிட்ட உன்
பழைய புகைப்படம் என் மீண்டும் அசைத்து விட்டது

இன்று போலவே அன்றும் நான் இயல்பாக இருப்பதாகவே நம்பினேன் அன்று என் நடிப்பை பொய்யென்றுணர்த்த நீயிருந்தாய் 
இன்று என் கண்ணீர் இருக்கிறது

உன்னைக் கடக்கும் சில விநாடிகளில் வழிப்போக்கனாய் சென்றிடவே முயன்றேன் 
உனக்காகவே வழியை மாற்றிவிட்ட வாடிக்கையாளனானேன்

ஒருவர் காணாத போது மற்றவரை இருவரும் பார்த்துக் கொண்டோம் 

பார்வைகள் மோதி நீ என்னிடமும் நான் உன்னிடமும் பிடிபட்டோம் வலிந்து புன்னகைத்தோம் 

தோள்குலுக்கி மழுப்பினோம் வெட்கினோம் மகிழ்ந்தும் கொண்டோம்

நீ அழகாக இல்லாமலிருந்தது எனக்குப் பிடித்திருந்தது
அப்போதுதானே நானுனக்குப் பொருந்துவேனென்றோர் மனக்கணக்கு

பின்பு நீ மட்டுமே அழகென்று நினைக்கத் தொடங்கியதில் ஆச்சரியமில்லை புதுமையுமில்லை

நாளும் பேசவேண்டியதை ஒத்திகை பார்ப்பதும்
ஒரு முறையாவது உன்னை சிரிக்க வைப்பதும் இலட்சியமானது

நீ பேசியதை தனிமையில் பலமுறை பேசிப்பார்ப்பது கடமையானது

காற்றின் புண்ணியத்தால் எனது வெள்ளை முடிகளைக் கண்டுபிடித்து விட்டாய் !  பிடிக்க வில்லை என்றாய்
தாடியும் வெளுத்ததைக் காணாததை எண்ணி சிறு நிம்மதியடைந்தேன்

உன் முதல் காதல் தோல்வியை என்னிடம் பகிர்ந்து கொண்டபோது

உன்னிடம் அதிகம் நெருங்கி விட்டதாய் உணர்ந்தேன்
உன்னால் நேசிக்கப்பட்டவன் மேல் பொறாமை கொண்டேன்

உன் கண்ணீருக்குக் காரணமென ஆற்றாமை கொண்டேன்
அவன் விலகியதாலேயே நீ எனக்குக் கிடைத்தாய் என அமைதியானேன்

மனம் வானில் கோட்டை கட்டிக் கொண்டிருக்க
எதார்த்தமோ மாறாக 

எல்லாக் காதலும் பிரியக் காரணமான அதே காரணத்தை எதிர் கொள்ளத் தலைப்பட்டோம்

சொல்ல முடியாத நிலையில் நானிருந்ததை நீயும்
ஏற்க முடியாத நிலையில் நீயிருந்ததை நானும்
உணர்ந்தேயிருந்தோம்

உனக்குமெனக்குமிடையில் நினைவுகளின் துணையுடன் இடைவெளிகளிட்டு நிரப்பினோம்

இன்றும் நம்மை அது இணைத்தும் வைத்திருக்கிறது
சிறு இடைவெளியுடன்

எழுதும்போதும் நினைக்கும்போதும் ஊற்றெடுக்கும் கண்ணீர் உன் நினைவுகளை கழுவிச் செல்லாது என்று நம்பிக்கையுடன்

கண்ணீரின் வெப்பத்தை ரசிக்கிறேன்
அது எனக்குப் பிடித்திருக்கிறது
Download As PDF
Bookmark and Share

Post Comment

நீ என் நிறைவேறாத கனவு


உன் புகைப்படத்தைக் காண்கின்ற போதெல்லாம் 
ரசிக்க முடியாத கவிதை ஒன்றை எழுதி வைக்கிறேன்
ஓவியமாக உன்னை தீட்ட முனைந்து தோல்வியுறுகிறேன்
உன்னுடன் இருந்த சில விநாடிகளை பலமுறை நினைத்து
மீண்டும் வாழ்வதாக நினைத்துக் கொள்கிறேன்
அந்த தருணங்களின் இனிமையில் மூழ்குகிறேன்
உன் நினைவூட்டும் அழகிய வெறுமை உணர்வை 

மீண்டும் எதிர்நோக்கியே எனது தனிமையைக் கொண்டாடுகிறேன்
ஒரு முறை அழுது தீர்த்துவிட்டு மறக்கலாம் என்று நினைக்கிறேன்
மறந்து விடலாம் என்று மீண்டும் நினைக்கிறேன்
மீண்டும்
மீண்டும் உன்னையே நினைக்கிறேன்
 நீ என் நிறைவேறாத கனவு 
நினைத்து  மட்டும் பார்க்க முடிந்த நினைவு 

Download As PDF
Bookmark and Share

Post Comment

கடந்து சென்ற போது ............


மறக்க எத்தனித்துக் கொண்டிருக்கும் என்னிடம்
இத்தனை நாட்களுக்குப் பின் நீ ஏன் என் பார்வையில் மோத வேண்டும்
என் ஊழ்வினை
விநாடிகளில்  தொலைவில் கடந்து போய்விட்ட உன்னைக் காணத்தான் நான் 
காரணமின்றி அனிச்சையாய்த் திரும்பியது
ஆலயம் சென்று கொண்டிருந்த
உன் தரிசனத்தை
பெரிய அதிர்வுகளின்றி என் மனம் ஏற்றுக் கொண்டது
ஆயினும் என்னென்னவோ சொல்லி நச்சரிக்கிறது
பேருந்திருலிருந்து இறங்கி ஓடி உன்னிடம் வந்திருக்கலாம்
நம்மிடையே இடைவெளியும் உறவுகளும்
தடுப்பணைகளாய் இல்லாவிடில்
அல்லது உன் குரல் பழைய நேசத்துடனில்லை என்று
என் பேராசை சொல்லும்
பின்பெனது நிம்மதி கொல்லும்
உண்மை மறந்து உரிமை மறந்து எனது அறம் மாறும்
நினைவில் மட்டும் உன் சஞ்சாரம் போதும்
இன்றைக்கொரு கவி மட்டும் போதும்

Download As PDF
Bookmark and Share

Post Comment

ஆகையினால் பெண்ணுடலை சிதைக்கிறோம்


உன்னை வன்புணர்ந்தது என் குற்றமல்ல
நீ இரவில் சுற்றுவது எனக்கு உறுத்துகிறது
நீ உடலைக் காட்டுவது எனக்கு விறைக்கிறது

உன்னை இடிப்பதென்னுரிமை
இரவு விடுதிக்குச் செல்வது உனதுரிமை என்றால்
உன்னை உரசுவது எனதுரிமை
ஊர்சுற்றுவது உனதுரிமை என்றால்


உன்னை வன்புணர்ந்தது என் குற்றமல்ல
நீ எதிர்த்துப் பேசியதால் எனக்குக் கோபம் வந்தது
உன்மேல் அமிலம் ஊற்றியது என் குற்றமல்ல
நீ காதலை மறுத்ததால் எனக்கு எனக்கு வெறி வந்தது
மகளாய் இருந்தாலும் உன்னை வெட்டுவது என் குற்றமல்ல
நீ மாற்றானை காதலித்ததால் என் மானம் போனது

நீ ஏமாந்ததற்கு நான் பொறுப்பல்ல
இசைந்ததால் உன்னை மென்புணர்ந்தேன்
மறுத்தால் வன்புணர்வேன்

என் கண்கள் உன்னை மேய்வதற்கு நான் காரணமல்ல
நீ தெருவில் நடப்பதே காரணம்
நீ வயதுக்கு வராத சிறுமியாய் இருப்பது என் குற்றமல்ல
மதுவில் மயங்கியிருந்த என்னிடம் சிக்கியதே உன் குற்றம்

நாங்கள் இச்சை தீர்க்க உங்களைப் புணரவும்
மானம் காக்க உங்களைக் கொல்லவும்
வரம் பெற்றவர்கள்

எங்கள் கொண்டாட்டத்தை காஸநோவா 
என்று சிறுமைப்படுத்திக் கொண்டோம்
உங்கள் திண்டாட்டத்தையோ தேவடியா
என்று பெருமைப்படுத்தினோம்

நீங்கள் பாதுகாப்பாய் இருக்க கற்பை உங்களுக்காக
விட்டுக் கொடுத்திருக்கிறோம் நாங்கள்
கால்களுக்கிடையில் வைத்து காத்துக் கொள்ளுங்கள்
என்றாவதொருநாள் என்னினத்தைச் சார்ந்த ஒருவன்
உங்கள் உயிரை எடுத்தாவது அதை அழிக்கும் வரையில்

யான் கற்றதன் சாரம் இதுவே
எங்களால் மாற்றவியலாததாகும்
ஆம் இயற்கையாக
நீங்கள் பெண்கள் நாங்கள் ஆண்கள் 

ஆகையினால் வன்கலவி செய்கிறோம்
எம்மைப் பிறப்பித்த உம் உறுப்பை சிதைப்பதில்
உம்மீதான எம் உரிமையை
நாங்கள் உயிர்ப்பிக்கிறோம்


Download As PDF
Bookmark and Share

Post Comment

உயர்த்தப்பட்டவன்


அவன் கால்கள் பதிந்ததால் அந்த மண்ணை நான் விலக்கி வைக்கவில்லை
அவன் கைகள் களை பறித்ததால் அந்தத் தாவரத்தை நான் சமைத்துண்ணாமல் இருக்கவில்லை
எங்கோ அவன் கைகள் பட்டு வரும் பணத்தைத் தொடுவதற்கும் நான் கூச்சப்படவில்லை
அவன் அறுத்து வெட்டித் தந்த ஆட்டை தின்பதற்கும் எனக்கு கசக்கவில்லை
அவன் நுரையீரல் தொட்டதால் காற்றை நான் சுவாசிக்க மாட்டேன் என்று பிடிவாதம் பிடிக்கவில்லை
அவன் உழைப்பில் விளைந்ததை நான் ஏற்றுக் கொள்ள மறுத்ததில்லை
இருப்பினும் அவனை நான் மனிதனாக மதித்ததில்லை
வீட்டிற்கு அருகில் அனுமதித்ததில்லை
பெரியப்பா வயது மனிதனாகிலும் அவனை டேய் என்றேயழைப்பேன்
அதட்டும் தொனியிலேயே நலம் விசாரிப்பேன்
ஏனென்றால் நான் உயர்த்தப்பட்டவன்
காட்டை விற்றுக் கள்ளைக் குடித்தாலும்
நான் குடியானவனே, குடிகாரனில்லை
ஏர் பிடித்த பரம்பரையைச் சார்ந்தவன் ஏற்றம் பெற வேண்டும்
ஏரைப் பிடிக்காமலேயே !
அவன் மட்டும் எனக்கு குடைபிடிக்க வேண்டும்
ஏனென்றால் நான் உயர்த்தப்பட்டவன்

Download As PDF
Bookmark and Share

Post Comment

கையாலாகாதவன்

                        
                                                   இணையப் புரட்சி

தோட்டத்தில் உழைத்துக் களைத்தபின் நீ குளிப்பதற்குப் பயன்படுத்தும் நீரைக்
கொட்டாங்குச்சியில்  பருகி வாசலில் உன் செருப்பிடும் வழக்கமான
இடத்திற்கு சற்றுத் தள்ளி இலைபோட்டு பசியாறி  வெளியே
நிறுத்தப்பட்ட மனிதனைக் கண்ட பிறகும்
வீட்டில் முகப்பில் ஜாதியை எதிர்க்கத் துப்பில்லையாம் !
முகநூலின் முகப்பில் பெரியாராம் !
நட்புக்களின் திருவாயிலிருந்து புறப்படும் பெண் மீதான வசைகளை
சகித்துக் கொண்டு மௌனச் சாமியாராய் நடந்திடு !
பெண்ணியவாதியின் நிலைத்தகவலுக்கு மட்டும் பின்னூட்டம் இட்டிடு !
புரட்சி செய்திட இருக்கவே இருக்கின்றன முத்தொழில்கள்
விரும்பல் பகிர்தல்  கூட்டல்
மூன்றையும் செய்திடு வலைப்பூவில் பதிந்திடு
உள்ளத்தின் அரிப்பைச் சொரிந்திடு
மறக்காமல் நன்றியும் நவின்றிடு

                             முற்போக்குத் தோல்வியின் முனகல்

ஐந்திலக்க ஊதியமில்ல அரசாங்க வேலையுமில்லை
கொள்கைக்கு மட்டும் குறைவில்லை !
பின்பற்றவும் துப்பில்லை உதறிவிடவும் இயலவில்லை
படுத்தால் உறக்கம் வர மறுக்க  உண்டாலும் உடல் ஏற்க மறுக்க
அமெரிக்க கடிகாரத்திற்கு உடல் இயங்க மறுக்க
அன்னமிடும் அன்னையின் அன்பும் உடன்பிறப்பின் உரையாடலும்
விருந்தினர் வருகையும் உறவினனின்  உபசரிப்பும் கூட அச்சம் தருகிறது
அவைகளின் இறுதி நோக்கம் ஊதிய உயர்வைக குறித்து கேட்பதால் !
நண்பா நானும் உனைப்போலவே இருந்திருக்கலாமோ
பார்வையால் சொல்லால் புணர்ந்து கொண்டும்
வாரம் தவறாமல் ஊற்றிக் கொண்டும்  திரையரங்கை மொய்த்துக் கொண்டும்
எப்போதாவது கடவுளிடம் சென்றுவிட்டும்
பாழாய்ப்போனவைகளைப் படிக்காமல் நினைக்காமல் வருந்தாமல்
வண்ணத்திரையுடன்  நிறுத்தியிருக்கலாம்
போராளியாக நினைத்து கோமாளி ஆகியிருக்க மாட்டேன் பாவியாய்
உணர்ந்திருக்கமாட்டேன்
துவண்டிருக்க மாட்டேன்
மனசாட்சியிடம் தப்பியிருப்பேன்


Download As PDF
Bookmark and Share

Post Comment

உலகின் மிக அழகான பெண்


10 வருடங்களாக தனது தாய்மண்ணுக்காக, கொள்கைக்காக உண்ணாநிலையில் உறுதியுடன் இருப்பவரை உலகின் மிக அழகான பெண் என்று சொல்வதைத் தவிர்த்து வேறு எப்படி அவருக்கு மரியாதை செலுத்த முடியும் என்பது தெரியவில்லை.


அவர் எழுதிய கவிதை கீழே 

When life comes to its end
You, please transport
My lifeless body
Place it on the soil of Father Koubru

To reduce my dead body
To cinders amidst the flames
Chopping it with axe and spade
Fills my mind with revulsion

The outer cover is sure to dry out
Let it rot under the ground
Let it be of some use to future generations
Let it transform into ore in the mine

I'll spread the fragrance of peace
From Kanglei, my birthplace
In the ages to come
It will spread all over the world.

-lrom Sharmila

ஒரு கவிஞர் தனது தான் எழுதிய கவிதையைப் போன்றே வாழ்ந்து காட்டுவது நடைமுறையில் குறைவு. இரோம் ஷர்மிளா சானுவின்  போராட்டம் நிச்சயமாக அவரது கவிதையைக்காட்டிலும் அழகானது. 

உலகின் மிகப்பெரும் ஜனநாயகம் என்று சொல்லிக்கொள்ளும் நாடு எவ்வாறு தனது மக்கள் மீது வன்முறையைக் கொடூரமாக ஏவுகிறது என்பதறகு மணிப்பூர் ஒரு உதாரணம். இந்தியா விடுதலை பெற்ற பின்பு வலுக்கட்டாயமாக பத்துக்கணக்கான தேசிய இனங்கள் இந்திய ஒன்றியத்துடன் இணைக்கப் பட்டன. அதில் பழங்குடியின மக்கள் அதிகம் வசிக்கும் வடகிழக்கு மாநிலங்கள், இந்திய துணைக்கண்டத்தின் பொதுவான பண்பாட்டுடனும், வரலாற்றுப் பழக்க வழக்கங்களுடன் எந்தவொரு ஒற்றுமையுமற்ற இவர்களும் வலுக்கட்டாயமாக இந்திய தேசிய ஒருமைப்பாடு எனும் தேசிய இனங்களின் சிறையில் அடைக்கப்பட்டனர். பின்பு "விடுதலை" பெற்ற இந்தியாவிடமிருந்து இவர்கள் விடுதலை கோரும்  போராட்டத்தைத்  தொடங்கினார்கள். பிறகு வரலாற்றின் வழக்கத்தின்படி காட்டிக்கொடுப்புகள், அரசியல்தலைவர்களின் சதி, ஆயுதக் குழுக்களின் தவறுகள்,  என்ற அனைத்தும் அரங்கேறின. பின்பு அரசுகள் வழக்கமான நடத்தும் செய்யும் பிரிவினைவாதம், பயங்கரவாதம் , தேசத்துரோகம் பொன்றவற்றைச் சொல்லி அவைகளைத் தடுக்க இராணுவத்தை நிறுத்தியுள்ளது.

ஆயுதப்படை சிறப்பு அதிகாரச்சட்டம் (The Armed Forces (Special Powers) Act (AFSPA) 1958) என்ற சட்டம் ஆங்கிலேய அரசு இந்திய விடுதலைப் போராளிகளை ஒடுக்க பிறப்பித்த சட்டத்தின் மறுபதிப்பு. காசுமீர் உட்பட வடகிழக்கு மாநிலங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டது. வடகிழக்கு மாநிலங்களில் 1980 களிலும் காஷ்மீரில் 1990 களிலும் இது நடைமுறைப்படுத்தப்பட்டது. இதை நீக்கும் வரையில் தமது போராட்டம் நடைபெறும் என்று 10 வருடங்களாகக் கூறிவருகிறார் ஷர்மிளா. ஆனால் இவரது போராட்டம் தொடங்கிய பின்புதான் பிறகுதான் மனோரமா தேவி என்ற பெண்ணின் படுகொலையும், மணிப்பூர் பெண்கள் நிர்வாணப் போராட்டம் நடத்தி இராணுவத்தின் கொடூர முகத்தை உலகிற்கு அம்பலப்படுத்தியதும் நடந்தது. இவர் இறந்தால் கூட இது திரும்பப் பெறப்படாது என்பதே இந்தியா அரசின் கொள்கையாக இருக்கும் போல் தெரிகிறது.   இவர் தனது பட்டினிப் போராட்டத்தைத்துவக்கியது நவ 2, 2000ம் ஆண்டு. இதுநாள் பத்து வருடங்களாக வரையிலும் குழாயின் மூலமாக சத்துக்கள் அடங்கிய திரவ  உணவு செலுத்தப்பட்டு வருகின்றது. இல்லையெனில் இவரும் திலீபனைப் போலவே இறந்திருப்பார்.தற்கொலை முயற்சிக்கு ஓரிரு வருட சிறைத்தண்டனை தான் அளிக்க முடியும் என்பதால் கைது செய்யப்படுவதும், விடுவித்த பின்பு மீண்டும் போராட்டத்தைத் தொடர்வதும் வழக்கமாக இருக்கிறது.  


                                           இரோம் சானு ஷர்மிளா  
200 வருடங்களாக உலகையே கொள்ளயடித்தவன் ஒரு தலைவரின் அஹிம்சைப் போராட்டத்தில் தோற்றுப்போய் மனமிரங்கி இந்தியாவுக்கு விடுதலையைக் கொடுத்துவிட்டுப் போய்விடுவானா ?   அப்படிக் கிடைத்த விடுதலை எத்தகையது என்பதை அஹிமசைப் போராட்டத்தின் தலைவரை , இந்திய தேசத்தின் தந்தை எனப்புகழப்படுபவரையே தேசபக்தர்கள் எனப்படுவோர் கொன்று நிரூபித்தார்கள். அது கிடக்கட்டும். காந்திய தேசம் எனப்படும் ஒரு நாடு காந்திய வழியில் போராடுவோர்க்கு என்ன பதிலை வைத்திருக்கிறது கைது, சிறையிலடைப்பு என்பதைத்தவிர. இவரது போராட்டத்தைத் தற்கொலை முயற்சி என்று சிறுமைப்படுத்தியும், குற்றம் சாட்டியும் சிறையில் அடைக்கப்பட்டார்.

காஷ்மீர் என்றால் பாகிஸ்தான் சதி, பயங்கரவாதிகள் சதி, பிரிவினைவாதம், மதவாதம் என்று சொல்லிட முடிகிறது. மணிப்பூருக்கு என்ன காரணங்கள் சொல்ல வருகிறார்கள்? இவரொன்றும்  தனிநாடு கேட்டுப் போராட வில்லையே, இராணுவத்தின் வரம்பற்ற அதிகாரச் சட்டத்தை நீக்கச் சொல்லித்தானே போராடுகிறார். 

2006 - ம் ஆண்டில் ஒரு பேட்டியில் குறிப்பிடுகிறார்.

" நான் செய்தித் தாள்களின் முதல் பக்கத்தில், பொது மக்களின் ரத்தம் சிதறிய பிணங்களைப் பார்த்தேன். இதுதான் என்னை இந்த மரணப் போராட்டத்தின் பக்கம் திசை திருப்பியது. ஒன்றுமறியாத மக்கள் மீது ஆயுதப் படையினர் ஏவும் வன்முறைகளைத் தடுத்து நிறுத்த, எனக்கு வேறு வழி தெரியவில்லை. அமைதிப் பேரணி என்பது எனக்கு அர்த்தமற்றதாகத் தோன்றியது. நிலைமையை மாற்ற, ஏதாவது செய்தாக வேண்டிய கட்டாயம் எனக்கு உருவானது. எனக்கிருக்கும் ஒரே வழி அதுதான். ஏனென்றால், பட்டினிப் போராட்டம் என்பது என் உணர்வு சார்ந்தது. இதில் உடலை வருத்திக் கொள்வது என்பதே கிடையாது. இது நான் செய்தே ஆகவேண்டிய கடமை. எனக்கு தற்கொலை எண்ணம் துளிகூட கிடையாது. அப்படி இருந்தால், உங்களுடன் இத்தனை இயல்பாகப் பேசிக் கொண்டிருப்பேனா? எனக்கு நம்பிக்கை இருக்கிறது. உண்மைக்காக நான் போராடுகிறேன். கடைசியில் உண்மைதான் வெல்லும்"




39 வயதாகும் அவருக்கு தொடர்நது உண்ணாமல் இருப்பதால் மாதவிடாய் சுழற்சி நின்றுவிட்டது.வலுவிழந்து  உடல் நிலையும் அபாயமாக இருப்பதாகவே தெரிகிறது. அவர் நாள்தோறும் செய்யும் யோகாப் பயிற்சியும், அவருடைய ஆன்மிக நம்பிக்கையின் காரணமாகவும் எப்படியோ உயிர் வாழ்கிறார். இவரது கோரிக்கையை இந்திய அரசு நிறைவேற்றி சர்மிளாவையும், தன்னையும் காக்க வேண்டும் என்பதுதான்  இவரது ஆதரவாளர்களின் வேண்டுகோள் . பத்தாவது ஆண்டை நிறைவு செய்துள்ள போராளிக்கு சிரம் தாழ்ந்த வணக்கங்களும் வாழ்த்துக்களும்!




Download As PDF
Bookmark and Share

Post Comment

நிறம்


திருமணத்தரகர் கொடுத்த புகைப்படம் பார்த்த அம்மா
வேண்டாம் பையன் கருப்பு என்றாள்
சிவப்பான தனது மகளுக்காக

பின்னொருவருடத்தில் 
திருமணத்தரகர் கொடுத்த புகைப்படம் பார்த்த அம்மா
வேண்டாம் பொண்ணு கருப்பு என்றாள்
கருப்பான தனது மகனுக்காக
Download As PDF
Bookmark and Share

Post Comment