நேற்றைக்கு என் கண்ணில் பட்டுவிட்ட உன்
பழைய புகைப்படம் என் மீண்டும் அசைத்து விட்டது
இன்று போலவே அன்றும் நான் இயல்பாக இருப்பதாகவே நம்பினேன் அன்று என் நடிப்பை பொய்யென்றுணர்த்த நீயிருந்தாய்
இன்று என் கண்ணீர் இருக்கிறது
உன்னைக் கடக்கும் சில விநாடிகளில் வழிப்போக்கனாய் சென்றிடவே முயன்றேன்
உனக்காகவே வழியை மாற்றிவிட்ட வாடிக்கையாளனானேன்
ஒருவர் காணாத போது மற்றவரை இருவரும் பார்த்துக் கொண்டோம்
பார்வைகள் மோதி நீ என்னிடமும் நான் உன்னிடமும் பிடிபட்டோம் வலிந்து புன்னகைத்தோம்
தோள்குலுக்கி மழுப்பினோம் வெட்கினோம் மகிழ்ந்தும் கொண்டோம்
நீ அழகாக இல்லாமலிருந்தது எனக்குப் பிடித்திருந்தது
அப்போதுதானே நானுனக்குப் பொருந்துவேனென்றோர் மனக்கணக்கு
பின்பு நீ மட்டுமே அழகென்று நினைக்கத் தொடங்கியதில் ஆச்சரியமில்லை புதுமையுமில்லை
நாளும் பேசவேண்டியதை ஒத்திகை பார்ப்பதும்
ஒரு முறையாவது உன்னை சிரிக்க வைப்பதும் இலட்சியமானது
நீ பேசியதை தனிமையில் பலமுறை பேசிப்பார்ப்பது கடமையானது
காற்றின் புண்ணியத்தால் எனது வெள்ளை முடிகளைக் கண்டுபிடித்து விட்டாய் ! பிடிக்க வில்லை என்றாய்
தாடியும் வெளுத்ததைக் காணாததை எண்ணி சிறு நிம்மதியடைந்தேன்
உன் முதல் காதல் தோல்வியை என்னிடம் பகிர்ந்து கொண்டபோது
உன்னிடம் அதிகம் நெருங்கி விட்டதாய் உணர்ந்தேன்
உன்னால் நேசிக்கப்பட்டவன் மேல் பொறாமை கொண்டேன்
உன் கண்ணீருக்குக் காரணமென ஆற்றாமை கொண்டேன்
அவன் விலகியதாலேயே நீ எனக்குக் கிடைத்தாய் என அமைதியானேன்
மனம் வானில் கோட்டை கட்டிக் கொண்டிருக்க
எதார்த்தமோ மாறாக
எல்லாக் காதலும் பிரியக் காரணமான அதே காரணத்தை எதிர் கொள்ளத் தலைப்பட்டோம்
சொல்ல முடியாத நிலையில் நானிருந்ததை நீயும்
ஏற்க முடியாத நிலையில் நீயிருந்ததை நானும்
உணர்ந்தேயிருந்தோம்
உனக்குமெனக்குமிடையில் நினைவுகளின் துணையுடன் இடைவெளிகளிட்டு நிரப்பினோம்
இன்றும் நம்மை அது இணைத்தும் வைத்திருக்கிறது
சிறு இடைவெளியுடன்
எழுதும்போதும் நினைக்கும்போதும் ஊற்றெடுக்கும் கண்ணீர் உன் நினைவுகளை கழுவிச் செல்லாது என்று நம்பிக்கையுடன்
கண்ணீரின் வெப்பத்தை ரசிக்கிறேன்
அது எனக்குப் பிடித்திருக்கிறது
0 பின்னூட்டங்கள்:
கருத்துரையிடுக
நான் படைப்பாளியோ, விமர்சகனோ அல்லன். வாசகன் மட்டுமே. எனவே உங்கள் கருத்தின்றி எனது இடுகை முழுமை பெறாது. நிறைகளை விடவும் குறைகள் அதிகம் எதிர்பார்க்கிறேன்