வகையின்றிப் பெருகின வாகனங்கள்
வரையறையின்றிப் போகின்றன விற்பனையகங்கள்
வன்முறையை நினைவுறுத்துகின்றன வேகங்கள்
உடல்வலியின்றிக் கொண்டு சேர்க்கின்றன மனிதனை
வழியின்றி தவிக்கின்றன வழித்தடங்கள்
வழிமாறித் தவிக்கின்றன வனஇனங்கள்
வழிகொடுக்காமல் செல்கின்றன சிலஇனங்கள்
சமிக்ஞையை சட்டை செய்யாத சாகசங்கள்
எங்கெங்கு காணினும் வாகனமே
அதன் மேலே செல்லுது எல்லாக் கணமுமே
சாலையில் செல்பவனுக்கு எப்போதும் வரும் திவசம்
இருப்பினும் அணியான் தலைக்கவசம்
பேருந்துகளில் பிதுங்கித் தொங்குகின்றனர்
வல்லுந்துகள் வர்ரென்று போகின்றன
சர்ரென்று போகின்றன சரக்குந்துகள்
சீரற்றுப் போகும் சீருந்துகள்
மளமளவென்று மறையும் மகிழுந்துகள்
மாதமொரு மாதிரிகள் மன்றத்திலே
மகிழ்வுடன் அறிமுகப்படுத்தும் மாதர்கள்
மனமயக்கத்தில் வாங்கித் தள்ளும் மானிடர்கள்
நடப்பதெல்லாம் முற்காலம்
தடுக்கிவிழும் தூரமும் வண்டியிற்
கடப்பதெல்லாம் இக்காலம்
குளிர் மோர் குடித்தே முப்பாட்டன்
கலைப்பையுடன் களமாடிய காட்டினை
கண்டமாக்கி விற்றுக் காசாக்கி
குளிரூட்டி மகிழுந்து வாங்கி ஆயாசத்
தற்படமெடுக்கும் தற்காலத் தலைமுறை
அமெரிக்க தயாரிப்பை அம்மன் துணையும்
ஜப்பானின் தயாரிப்பை ஜாதிக்கொடியும்
ஜெர்மனியின் தயாரிப்பை கட்சிக் கொடியும்
அழகூட்டி உலாச் செல்லும் அழகும்
விபத்து இயற்கையின் முடிவுபோல்
எதிலும் முடியும் யாருடைய விதி
இன்று இதுதான் நீதி
நடப்பன ஊர்வன பறப்பன
உயிர்களின் உயிரில்லா உடல்களும்
சாலையில் நசுங்கிக் கிடக்கின்றன
என்னை எச்சரித்து
உச் கொட்டியபடியே
என் நாள் எந்நாளோ என்று இதயம்
உடைந்து கடந்து கொண்டிருக்கிறேன்
எல்லா இறப்புகளையும்
ஆம் எருமையில் மட்டுமல்ல
எமன் எல்லா வாகனங்களிலும்
கண்ணுக்குத் தெரியாமல்
அமர்ந்திருக்கிறான்
வணக்கம்,
பதிலளிநீக்குஎருமை மட்டும் அல்ல,,,
அருமை, வாழ்த்துக்கள். நன்றி.
நன்றி
நீக்குஅருமை! எருமை மட்டுமல்ல எமன்....எல்லா வடிவங்களிலும் கண்ணுக்குத் தெரியாமல் செம வரிகள்...உண்மையும் அதுதானே!
பதிலளிநீக்குஆம். மிக்க நன்றி
நீக்கு