உனது ஊர் எனக்கும் உறவாக இருந்தது
எனது உறவு உனக்கு ஊராக இருந்தது
நாம் இயங்கும் இடம் நமக்கான பாலமாய் இருந்தது
இருந்தும் எனக்கில்லை அந்தக் கொடுப்பினை
உனது இயல்பே எனது அன்பானது
உனது புறக்கணிப்பே பதிலானது
நீயோ எனது உலகமாக இருக்கிறாய்
நானோ உனதுலகத்தில் கூட இல்லாதவனாய்
எனது சொற்களில் அன்பை நிறைத்து அனுப்புகிறேன்
நீயோ உன் பதில்களில் சலிப்பைக் காட்டுகிறாய்
உன்னைக் கண்டு புன்னகைக்கவே காத்திருக்கிறேன்
என்னைக் கண்டதால் வேறுவழியின்றி புன்னகைக்கிறாய்
நீ எனக்கு மற்றவரில் ஒருவரல்ல என்று நிறுவ முனைகிறேன்
நான் உனக்கு மற்றவராகக் கூட இல்லை என்று நிறுவுகிறாய்
எதிர்ப்பட்டால் கூட ஏறெடுத்தும் பார்க்காத நீ
எப்பொழுதும் ஏங்கிக் கொண்டிருக்கும் நான்
எதற்காக நம் சந்திப்பு நிகழ வேண்டும்
உன் அலட்சியம் உன்னையே இலட்சியமான
எனை ஏன் இகழ வேண்டும்
என்ன விந்தை இது ?
என்ன கொடுமை இது ?
ஓர் உயிர் இன்னோர் உயிரை ஓயாது நினைக்க
இன்னோர் உயிர்க்கோ இப்படியோர் உயிர் இருப்பதே
அறியாமல் இருக்க நம்பிக்கையற்ற ஒன்றிற்காக
கிடைக்காத ஒரு வரத்திற்காக
இல்லாத கடவுளிடம் தவமெதற்கு
விரும்பாத ஒருவரைக் கூட நான் இப்படி விட்டதில்லை
ஆம் இப்படியே செல்லட்டும் என் காலம்
இப்படியெல்லாம் நினைந்திருந்தவன் மாறிவிட்டேன்
உனது நீண்ட கூந்தல் ஈர்ப்பு தரவில்லை
உனது வடிவான உடல் சிலிர்க்க வைக்கவில்லை
கூரிய புருவங்களும் கண்களும் கலக்கம் தரவில்லை
உனது கொலுசொலி இதயத்துடிப்பை அதிகரிக்கவில்லை
உனது உடைகளின் நேர்த்தியில் அதிசயிக்கவில்லை
உன்னுடன் பேசும் தருணத்திற்கு ஏங்கவில்லை
உன்னுடைய பேச்சுக்களை அசைபோட்டு களிக்கவில்லை
உன்னுடைய சிரிப்பின் அழகை நினைத்துப்பார்க்கவில்லை
உன்னை சிரிக்க வைத்தேன் என்று பெருமிதப்படவில்லை
உன்னுடன் பழகிவிட்டேனே என்று பெருமைப்படவில்லை
உன்னை வெல்லவில்லை என வருத்தப்படவில்லை
முன்பு போல் உனது வருகையும் செல்கையும் சலனப்படுத்தவில்லை
நீ யாரோவாக மாறி விட்டாய்
நான் நானாகவே திரும்பி விட்டேன்
உன்னைப் போலவே இயல்பானவனாக மாறிவிட்டேன்
செம! ரொம்ப அழகா சொல்லிட்டீங்க!!! ஆனால் ஏனோ இறுதியில் மனதில் ஒரு சோகம் அப்பியது! ஒரு வெறுமை!!
பதிலளிநீக்குஅருமை!!
துளசி, கீதா
சோகத்தில எழுதினதுதான். மிக்க நன்றிங்க
நீக்குகடைசி வரிகள் நெஞ்சை கனக்க செய்தது
பதிலளிநீக்குநானும் நெஞ்சு கனத்துதான் போயிருந்தேன் ராஜி. அதை அப்படியே இறக்கி வச்சுடேன். நன்றி
நீக்கு