படுகொலை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
படுகொலை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

இலங்கை பயங்கரவாதத் தாக்குதல்

நமக்கு ஈரக்குலையே நடுங்குகிறது. 207 பேர் படுகொலை. இன்னும் படுகாயத்தால் எத்தனை பேர் இறப்பார்களோ என்று தெரியவில்லை. போரின் வடுக்கள் ஆறியிருந்தாலும், இன்னும் மீளாத் துயரில் இருக்கும் தமிழ் சமூகத்திடம் அச்சம் மேலிடுகிறது.
இந்த பயங்கரவாத இயக்கங்கள், இராணுவம் என்பவையெல்லாம் பொதுமக்களின் குருதியை ஓட வைப்பதிலேயே தனது தகுதியை என்னவென்று காட்டி விடுகின்றன.
இனிமேல் என்ன நடக்கும் என்று நினைத்தால் பேரச்சமாக இருக்கிறது
இப்படி வரிசையாகத் தொடர்ந்து தாக்குதல் நடத்துமளவுக்கு அங்கு எந்த ஒரு இயக்கமும் இயங்குவதாக செய்திகள் இதற்கு முன்னர் வந்ததில்லை.
சென்ற வாரம்தான் இனப்படுகொலையில் குற்றம் சாட்டப்பட்ட போர்க்குற்றவாளியும் மகிந்த ராஜபக்சேவின் தம்பியுமான கோத்தபாய தனது அமெரிக்கக் குடியுரிமையை துறந்து விட்டு இங்கே அதிபர் தேர்தலில் போட்டியிடப் போவதாகவும் வதந்திகள் உலவின.
30 வருடங்களுக்கு மேலாக இரு இனங்களுக்கு இடையேயான போரில் தமிழ் மக்களிடையே அதிகமான பிளவுகள்தான் ஏற்பட்டன. யாழ்ப்பாணத் தமிழர்கள், மலையகத் தமிழர்கள், கிழக்குப் பகுதியினர், முஸ்லிம்கள் என்றெல்லாம் பிரிந்து இருந்தனர். இலங்கையில் நான்கு முதன்மையான மதங்களிடையே பெரிய ஒற்றுமை இருப்பதாகவும் தெரியவில்லை.
புலிகளின் முஸ்லிம்கள் மீதான நடவடிக்கைகளும் (மூதூர், காத்தான்குடி) காரணமாக, சிங்கள அரசு முஸ்லிம் அரசியல் தலைகளை தம்முடன் வைத்துக் கொண்டு தமிழர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை செயல்படுத்துவதும் (சத்துருகொண்டான்) நடக்க பொது மக்களும் (முஸ்லிம்கள்) தங்களை தனித்தே அடையாளப்படுத்திக் கொள்கின்றனர்.
இந்துக்கள் கிறித்தவர்களிடையே பெரிய பிணக்குகள் இருக்கவில்லை எனினும் புலிகள் அழிந்த பின்னர் அங்கே ஈழத் தமிழர்களிடம் இந்தியாவிலிருந்து சென்ற காவிப் பிரிவினைவாதிகள், சிவசேனை இயங்கி வருகின்றனர். எனவே சைவ-கிறித்தவ மத ரீதியாக பிரிக்கப்படுவதும் இனி நடக்கும்.
சிங்களர்களிடையே பொதுபலசேனா (BSS) என்ற இலங்கை RSS இனவெறி அமைப்பு சிங்கள பேரினவாத நெருப்பு அணையாமல் காத்துக் கொண்டு இருக்கிறது. 2009 - க்குப் பிறகு சில பள்ளிவாசல் இடிப்புகள் முஸ்லிம்கள் மீது வன்முறைகள் நிகழந்துள்ளன.
ராணுவத்திடமிருந்து தங்களது நிலங்களை மீட்கப் போராடி வரும் தமிழ் மக்களைப் பற்றியோ, காணாமல் போன உறவினர்களுக்காகப் போராடும் மக்களைப் பற்றியோ, வானூர்த்தித் தாக்குதலால் சேதமான கோயில்களுக்காகவோ வாய் திறக்காத தமிழ் நாட்டுக் காவிகள், ஈழத்தில் ஒரு இடத்தில் சமீபத்தில் நடந்த கிறித்தவ-சைவர்கள் (கிறித்தவர்கள் நிகழ்த்திய திருக்கேதீச்சர ஆலய முகப்பு வளைவு உடைப்பு) மோதலைப் பெரிதுபடுத்தி இங்கே கூவினர்.
இப்படி இருக்கும்போது இப்போது கிறித்தவர்கள் மீதும், அவர்கள் ஆலயங்களின் மீதும், அவர்களின் கொண்டாட்ட நாளில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் மிகப்பெரிய கவலையயும் அச்சத்தையும் ஒரு சேரத் தருகின்றது.
இனி அரசாங்கம் தமது அடக்குமுறையை அவிழ்த்து விட, பெரும்பான்மை சிங்கள மக்களை தமது பேரினவாத அரசியலுக்குள் சிக்க வைக்க இது போன்ற குண்டுவெடிப்பு பயங்கரவாதத் தாக்குதல்கள் தேவையாய் இருக்கின்றன என்று எண்ணத் தோன்றுகிறது. மக்கள் மொழி ரீதியாக மத ரீதியாக இன ரீதியாக இட ரீதியாக பிரிந்திருப்பது அரசுக்குத் தேவையாய் இருக்கிறது.
இந்தியாவில் தேர்தல், அரசியல் காரணங்களுக்காக இங்கே நடத்தப்படும் மத ஜாதிக் கலவரங்களையும் அதைத் தொடர்ந்து பரவும் வெறுப்பும் எப்படி இருக்கும் என்பதையும் இச்சூழ்நிலையில் நாம் பொருத்திப் பார்க்க இயலும்
x
Download As PDF
Bookmark and Share

Post Comment

வினை செய்த விநாயகர் சதுர்த்தி

சற்றே நானும் தினமலர் பாணியில் ஒரு தலைப்பை முயன்று பார்த்தேன். விநாயகர் சதுர்த்தியை வைத்து வினை விதைக்க முயன்றவர்களுக்கு வினை தீர்க்கப்பட்டிருக்கிறது. விநாயகர் வினை தீர்ப்பாரா ? அதாவது கொலைகாரனை காவல்துறையிடம் சிக்க வைப்பாரா ? 

பரவலாக ஒரு சொல்வடை உண்டு. எதிரியை விட துரோகிதான் தீயவன். விநாயகர் சதுர்த்தியை வைத்து தமிழகத்தில் நடத்தப்படும் அரசியல். எப்போதும் இந்து மதத்தையே விமர்சிக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு உண்டு. இந்து மதத்தை விமர்சிப்பது என்பது மதவாதத்திற்கும், மூட நம்பிக்கைக்கும் எதிரான குரல். இது எல்லா நாட்டிலும் அந்தந்த நாட்டில் நிலவும் மூடத்தனத்திற்கு எதிரான குரல். இங்கே பெரும்பான்மை மதமான இந்து மதத்திற்கு எதிராக எழுகிறது, ஏனெனில் பெரும்பான்மை இந்து மதத்திலிருந்தே இறைமறுப்பாளர்கள் உருவாகின்றனர் அவர்கள் தமது மதத்தால் பாதிக்கப்படுவாலும், தமது மதத்தவர் மூடத்தனத்திலிருந்து விடுபட வேண்டும் என்ற முனைப்பிலிருந்தும் உருவாகிறது. ஏன் என் மதத்தை மட்டும் விமர்சிக்கிறாய் என்பது எவ்வளவு அபத்தமான கேள்வியென்றால், நீ ஏன் உன் மதக் கடவுளை மட்டும் வணங்குகிறாய் என்ற கேள்வியே இதன் பதில். சரி உங்கள் நம்பிக்கையை எதிர்ப்பவர்கள் உங்கள் எதிரியாகவே இருக்கட்டும். உங்கள் மதத்தை காக்கிறோம், கலாச்சாரத்தைக் காக்கிறோம் என்பவர்களின் அருகதையைப் பார்க்கலாம். 

குறிப்பாக விநாயகர் சதுர்த்தியை எதிர்த்து குரல் எழுப்பப்படும்போதெல்லாம் அது அதிகமாகக் கேட்கும் குற்றச்சாட்டு. என்னவோ இந்துக்கள் பன்னிரண்டு வருடங்களுக்கு ஒரு முறைதான் விநாயகர் சதுர்த்தி கொண்டாடுவது போலவும், தமது வீடுகளில் விநாயகர் படத்தை வைத்து வணங்குவதற்குக் கூட அரசு தடை செய்வது போலவும் மதவெறி ஏற்றி விடப்படுகிறது. 

இவ்வருடத்தில் விநாயகர் சதுர்த்தியின்போது கிடைத்த இரண்டு நெகிழ்ச்சியான புகைப்படங்கள். 

யாரை எதிர்த்து ஊர்வலம் நடக்கிறதோ அவர்களே தன்முனைப்பாக கலந்து கொண்டது கலவர வெறியர்களுக்கு தொண்டையைக் கவ்வியிருக்கும். இனி அடுத்தது என்ன கேட்பார்கள் ? ஏன் முஸ்லிம்கள் சும்மாதான் வருவார்களா ஆட மாட்டார்களா மோளம் அடிக்க மாட்டார்களா ? சிலையை தூக்க மாட்டார்களா ? வணங்க மாட்டார்களா ? அதானே ?

அவசரத்துக்கு வேற வண்டி கிடைக்கல. பாய் வண்டிதான் கிடைச்சது என்று கொண்டு போகிறார்கள். இவர்களுக்கோ இல்லை இந்த வாடகை வண்டிக்கார்களுக்கோ இன்னும் கலவர நஞ்சு பாயவில்லை என்று நிம்மதியடையலாம்

மற்ற மதத்தை வம்புக்கு இழுத்து கலவரம் செய்யும் நோக்கம் ஒன்றையே குறியாகக் கொண்டு நடத்தப்படும் விநாயகர் சதுர்த்தியின் நோக்கம் பல்வேறு வீடியோக்களால் அவ்வப்போது அம்பலப்படுகிறது.  பதினைந்து வயது கூட நிரம்பாத சிறுவர்கள் காவல்துறையின் முன்னிலையிலேயே கற்களால் கடைகளைத் தாக்குவது, விநாயகர் சிலையின் அடியிலே அமர்ந்து மது அருந்துவது ஆகிய வீடியோக்கள் இவ்வருட விநாயகர் சதுர்த்தியின் சிறப்பம்சங்கள். ஒரிரு வருடங்களுக்கு முன்னர் சிலை வைக்கும் தகராறில் ஒருவர் கொல்லப்பட்டார் அது பெரிய அளவில் பரபரப்பாகவில்லை. ஊரும் மறந்து விட்டது. 



தமிழகத்தில் எல்லா ஊர்களிலும் விநாயகர் சதுர்த்தி என்ற பெயரில் உள்ளூர் வேலையில்லா உத்தமர்கள் அனைவரும் வெவ்வேறு குழுக்களாக அல்லது RSS- இன் ஏதாவது ஒரு பெயரில் ஒரு குறிப்பேட்டை எடுத்துக் கொண்டு வீடு வீடாகவும் கடை கடையாகவும் சென்று எல்லாருடைய உயிரையும் வாங்கி பணம் வசூலிப்பர். சில இடங்களில் மிரட்டல் செய்தும் "நன்கொடை" பெறப்படும். பணம் தராத கடை உரிமையாளர்கள் குறித்து வைத்துக் கொள்ளப்பட்டுப் பின்னர் ஏதாவது ஊர்வலத்தின் போது கல்வீசித் தாக்கப்படும் இல்லையெனில் சூறையாடப்படும் அபாயமும் உண்டு. இவர்களுக்குள் போட்டி மோதல் இருக்கும். எந்தக் குழு எவ்வளவு பெரிய சிலை வைக்கிறது என்கிற போட்டி எப்போதும் இருக்கும். இதற்கு பெயர் இந்துக்களின் எழுச்சி விழா. கடைசி நாளில் விநாயகர் சிலை கரைப்பு என்ற பெயரில் பல பத்து வாகனங்களில் போக்குவரத்து இடையூறு ஏற்படுத்திக் கொண்டு ஊரே மலம் கழித்து சாக்கடை நீரால் நிரம்பியிருக்கும் குளங்களில் கொண்டு போய் விநாயகர் சிலைகளைக் கரைப்பார்கள். இதற்கு காவல்துறை காவல்காத்து நிற்கும். 

இவர்களின் நோக்கமே மதக் கலவரத்தினைத் தூண்ட வேண்டும் என்பதால் காவல்துறை பல்வேறு கெடுபிடிகளை விதிக்கிறது. தொடர்ந்து காவலுக்கு ஆட்களை நிறுத்துகிறது. எனவே இவர்களின் மதக்கலவரத்தைத் தூண்டும் திட்டம் தோல்வியடைகிறது. நீதிமன்றமும் இவர்களுக்கு சில இடங்களில் மற்ற மத்தவர் செறிந்து வாழும் இடங்களில் ஊர்வலம் செல்வதை மறுக்கிறது. இதன் காரணமாகத்தான் ஹெச். ராஜா என்ற மகாத்மா ஹைக்கோர்ட்டாவது மயிராவது என்று பொங்கினார். 

எடுத்துக்காட்டாக தற்போது கோவையில் நடந்த ஒரு கொலை பற்றிப் பார்ப்போம். விநாயகர் சதுர்த்திக்கு வசூலான தொகையில் கிடா விருந்து வைத்து இருக்கிறார்கள் அதில் நடந்து வரவு செலவுத் தகராறில் ஒருவர் கண்ணாடி புட்டியால் குத்தி இன்னொருவர் இறந்து விட்டார். விநாயகர் சதுர்த்திக்கி இவர்கள் இந்துக்களிடம் பெற்ற பணத்தில் இவர்கள் கறியும் மதுவும் உண்டு களிக்கின்றனர் என்றால், விநாயகர் சிலை வைக்க என்று நம்பி காசைக் கொடுத்து இதைக் கொண்டாடும் இந்துக்கள்தான் இளிச்சவாயர்களா ? இப்படித்தால் எல்லா ஊர்களிலும் விநாயகர் சதுர்த்தி வசூல் ராஜாக்கள் கும்மியடிக்கிறார்கள் போலும். 


//கோவை நல்லாம்பாளையம் பகுதியை சார்ந்த இளைஞகள் விநாயகர் சதுர்த்திக்காக பல இடங்களில் பணம் வசூல் செய்து விழாவை கொண்டாடியுள்ளனர். பின்னர் விநாயகர் சதுர்த்தி முடிந்தவுடன், ஆலாந்துறை பகுதியில் விநாயகர் சதுர்த்தியின் போது வசூலான மீதி பணத்தில் கடந்த 30ம் தேதி பாஜக வினர் மதுவுடன் கிடா விருந்து வைத்துள்ளனர். விருந்தின் போது விநாயகர் சதுர்த்தி வரவு செலவு கணக்கு பார்ப்பதில் ஏற்பட்ட தகராறில் பாஜக உறுப்பினர் நாகராஜ் என்பவரை, குடி போதையில் இருந்த  பாஜக இளைஞர் அணி  நல்லாம்பாளையம் பகுதி தலைவர் குட்டி (எ) கந்தசாமி பாட்டிலால் குத்தியதில் நாகராஜ் படுகாயம் அடைந்துள்ளார். பின்னர் அவரை சக நண்பர்கள் மீட்டு கோவையில் உள்ள  கே.ஜி.மருத்துவமனையில்  சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்நிலையில் தொடர் சிகிச்சையில் இருந்த  நாகராஜ் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு உயிரிழந்தார். இதனையடுத்து ஆலாந்துறை போலிசார் கொலை முயற்சி வழக்கை கொலை வழக்காக மாற்றினர். மேலும், தலைமறைவான பாஜக மாவட்ட இளைஞரணி தலைவர் கந்தசாமிக்கு ஆலாந்துறை போலீசார் தேடி வருகின்றனர்.//

இன்னும் ஒரு செய்தி.

பாஜகவின் தேசியச் செயலாளர் அமித் ஷா கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் ராஜஸ்தானில் சமூக வலைத்தள உறுப்பினர்களுக்கான கூட்டத்தில் பேசும் போது பொய்த்தகவலைகளைப் பரப்புவதை வெளிப்படையாகவே (எதிர்ப்பதைப் போல் பேசி ஜாடைமாடையாக அதை வரவேற்றுள்ளார்). வரும் தேர்தலில் சமூக வலைத்தளங்களை வைத்தே வெற்றி பெற வேண்டும் என்று கூறியுள்ளார். இவர் இவர் கட்சியினர் இப்படிச் செய்வது அதிசயமோ ஆச்சரியமோ பட வைப்பதில்லை. அறியாத மக்களை இவர்கள் எப்படியெல்லாம் ஏமாற்றுகின்றனர் பாருங்கள். 

ஆதார இணைப்பு
https://www.thequint.com/news/politics/amit-shah-real-fake-can-make-messages-viral

இன்னுமோர் முக்கியமான செய்தி

சபரி மலைக்கு பக்தர்கள் சென்ற பேருந்தின் மீது செங்கோட்டை அருகே கல் எரிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கல் எரிந்தவர்களை விரட்டி பிடித்து விசாரித்ததில் அவர்கள் இந்து முன்னணியினர் என்பதும், செங்கோட்டையில் விநாயகர் சிலை மீதும் கல் எரிந்தவர்கள் அவர்கள் தான் என்பதும் தற்போது தெரிய வந்துள்ளது.

http://goodnewstamil.com/hindu-munnai-people-arrested-for-stone-throwing-to-vijayanagar-statue/


இந்த வருடம் விநாயகர் சதுர்த்தியின் நோக்கத்தை அப்பட்டமாகக் காட்டியுள்ளது ஒரு கொலை. அது என்ன நோக்கம் விநாயகர் சதுர்த்திக்கு அந்தந்த வட்டாரங்களில் பிள்ளையார் சிலை வைக்க வேண்டி பணத்தை வசூல் செய்து, ஒரு சிலையை வைத்து விட்டு மீதிக்காசில் கும்பல் கும்பலாக குடித்து கூத்தடிப்பதுதான். அதுவும் வசூல் அதிகமாக இருந்தால் கிடா வெட்டி கறியும் மதுவுமாக வெறியாட்டம். அற்புதமான வளர்ச்சி.

இங்கே இரண்டு பாஜகவினர் இடையேயான மோதலால் எதுவும் நிகழவில்லை. இதுவே கொலை செய்தவர் ஒரு முஸ்லிமாக இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும் ? இக்கொலைக்குக் காரணம் மதப்பிரச்சனை இல்லை வெறும் பணப் பிரச்சனை என்றாலும் கொன்றவர் முஸ்லிமாக இருந்தால் அது மதப்பிரச்சனை ஆக்கப்பட்டிருக்கும். இதனால்தான் விநாயகர் சதுர்த்தி என்ற அயோக்கியத்தனம் தொடர்ந்து கடுமையாக எதிர்க்கப்படுகிறது. இதை தங்கள் நம்பிக்கையின் பெயரால் பயங்கரவாத்தை வளர்க்கும் ஒரு தீயவர் கூட்டம் என்பதை இந்துக்கள் புரிந்து கொள்வார்களா ? 

Download As PDF
Bookmark and Share

Post Comment

ஜாதி



இந்துக்களே இந்துவைக் கொன்றிருக்கிறார்கள்
தமிழர்களே தமிழனைக் கொன்றிருக்கிறார்கள்
திராவிடர்களே திராவிடனைக் கொன்றிருக்கிறார்கள்

எந்த சித்தாந்தத்தையும் ஏற்றுக் கொள்ளுங்கள்
எவனையும் தலைவனாகக் கொள்ளுங்கள்
மதத்தையும் மாற்றிக் கொள்ளுங்கள்
எவ்விறையையும் வழிபடுங்கள்
எக்கேடும் கெட்டுப்போங்கள்
ஜாதி மட்டும் மாறாதீர்கள்
மாறினாலும் மாற முயன்றாலும்
மரணிப்பீர்கள்

எத்தகு தீயதும் ஜாதியால் அரவணைக்கப்படும்
எத்தகு புனிதமும் ஜாதிமாறினால் அழிக்கப்படும்

எனது விந்து எங்கும் ஊர்மேயலாம்
எந்த ஜாதியின் பிறப்புறுப்பிலும்
நீந்த்திச் செல்லலாம் கருமுட்டையுடனும்
வினைபுரியலாம் ஆயினும்
அது எனது ஜாதியின் மகவையே தரும்

உனது கருப்பை பிறனின் விந்தை சுமக்கலாகாது
அது எனது ஜாதியின் விந்தை மட்டும்
சுமக்கவே பணிக்கப்பட்டது
இப்புனித நியமங்களின் படியே வாழ உனக்குண்டு உரிமை
இதற்குள்ளாக நீ மகிழ்ந்து கொள்ளவும்
உமிழ்ந்து கொள்ளவும்

இதிலிருந்து வெளியே சென்று நீ காதல் கொண்டால்
நாங்கள் அவன் உயிர் கொல்வோம் உன்னை மீளவும் கொள்வோம் அன்றேல்
உன்னையும் கொல்வோம்
நீ என் வித்துதான்
அதனாலென்ன
நான் வாழ்வது ஜாதியால்
ஜாதி வாழ்வது என்னால்

Download As PDF
Bookmark and Share

Post Comment

கறுப்பு ஜூலை - நிமலரூபனின் வடிவில் இன்னும் தொடரும் ஈழத்தின் சோகம்

நான் பிறந்ததிலிருந்தே இதுவரையிலும் எந்த ஒரு நல்ல செய்தியும் கேள்விப்பட வில்லை. போர் முடிந்த மூன்று வருடங்களிலோ ஒரே வகையான செய்திகளை மட்டுமே கேட்க இயலுகிறது.

தமிழ்மக்களுக்குத் தீர்வு வழங்கப்படும்.

இந்தியா வலியுறுத்தும்.

தமிழர் பகுதியிலிருந்து இராணுவம் திரும்பப் பெற மாட்டாது.

சிங்களர் குடியேற்றம்

சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர்கள் குறித்து விளக்கம் கோரி மக்கள் போராட்டம்

வெள்ளை வாகனத்தில் அடையாளம் தெரியாதவரால் கடத்தல்

இராணுவக் கட்டுப்பாடு

இந்தியாவிலிருந்து ஏதாவது ஒரு கெழடு இலங்கைக்குப் பயணம், தமிழ்மக்களுக்குத் தீர்வு வழங்க வலியுறுத்தல்

போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்தியா நலத்திட்ட உதவி

மேற்கண்ட செய்திகள்தானே திரும்பத் திரும்பக் காண முடிகிறது. போர்க்குற்றம் ஆ ஊ எனப் பூச்சாண்டி காட்டியவர்கள், ஆவணப்படம் எடுத்தவர்கள், ஐநாவில் முறையிட்டவர்கள் மகிந்தவை விருந்தினராக அழைக்கின்றனர்.

29 வருடங்களுக்கு முன்பு இந்த நாளில்தான் சிங்களப் பேரினவாதத்தின் கோரமுகத்தில் உச்சத்தை ஈழம் சந்தித்தது. போர் முடிந்து 3 வருடங்கள் கடந்த பின்னும் இன்னும் அவர்களது வாழ்வில் எந்த ஒரு வசந்தமும் வரவில்லை. சொல்லப்போனால் 29 வருடங்களுக்கு முன்பு அல்லது கலவரத்தின் பின் போர் தொடங்கிய பின்பு நடந்த கைதுகள் காட்டிக் கொடுப்புகள், சித்ரவதைகள், கொட்டடிக் கொலைகள் இன்னும் தொடருகின்றன. போர் மட்டும் இல்லை. சிங்களப் பேரினவாதம் இன்னும் வளர்ந்து தமது கோரப்பசிக்கு சிறுபான்மையினரை விழுங்கி வருகிறது.

எங்கும் இராணுவ ஆட்சியே நடக்கிறது. கடந்த ஆறு மாதத்தில் மட்டும் 650 பேர்கள் கடத்தப்பட்டுக் காணாமல் போயுள்ளனர். இதில் லலித், குகன் முக்கியமானவர்கள். சிங்கள இராணுவமே இதில் ஈடுபடுகிறது. ஆக்ரமிக்கப்பட்ட தமிழ் நிலங்களில் புதிது புதிதாக புத்தர் சிலைகளும், சிங்கள ராணுவமும் குடியேற்றப்படுகின்றனர். இஸ்லாமியரின் பள்ளிவாசல்கள் புத்த பிக்குகளின் தலைமையில் இடிக்கப்படுகின்றன.


தற்போது புலி என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு சித்ரவதைக்குப் பின் படுகொலை செய்யப்பட்ட நிமலரூபன் என்ற இளைஞனின் கதை குட்டிமணி, ஜெகனின் கொலைகளை நினைவூட்டுகிறது. இந்த நிலையில் சிங்களர் தரப்பிலிருந்தும் சிலர் இனவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டு வருகின்றனர் என்பது மட்டுமே நம்பிக்கை அளிக்கும் செய்தியாகும். 
இத்தனை பிரச்சனைகளை சிறுபான்மையினர் எதிர்கொண்டு வருகின்ற நிலையில் இந்தியா தமிழீழம் என்ற கோரிக்கையை, விடுதலைப் புலிகளின் பேரால் தடை செய்திருப்பது என்ன வகை நியாயம் என்பது நன்றாகவே புரிகிறது. இதற்குக் கருணாநிதியைச் சாடிப் பயனில்லை. 


Download As PDF
Bookmark and Share

Post Comment

மோதல் கொலை - மனித உரிமை மீறல் - கேரள காவல் துறையும் தமிழகக் காவல் துறையும் !!

நான் ஒரு மனித உரிமைவாதி, மனிதாபிமானி இதில் எனக்கு எந்த வெட்கமும் இல்லை. அதனால் இந்த என்கவுன்டரை கடுமையான கண்டனத்துடன் எதிர்க்கிறேன். தற்போது நடைபெற்ற மோதல் கொலையும் அது போலியானது என்றுதான் தெரிகிறது. குற்றம் நிரூபிக்கப்படாமலே தண்டனை அதுவும் கொலைத் தண்டனை. இந்த எழவை எதிர்க்காமல் என்ன செய்வது ? அதுவும் மனித உரிமைக் காவலர்களால் நிகழ்த்தப்பட்டுள்ளது. ஏற்கெனவே பல விளக்கங்கள் விவாதங்கள், என்கவுன்டருக்கு எதிராகவும், ஆதரவாகவும். அதில் நான் எதிரானவர்கள் பக்கம் நிற்கவே விரும்புகிறேன். ஏனென்றால் இதை ஆதரிப்பவர்கள் இரண்டு நாள் கத்தி விட்டு மறந்து விடுவார்கள். அடுத்த என்கவுன்டர் நடந்து அதை எதிர்த்தால் மட்டுமே வருவார்கள்.

கடந்த முறை நடந்த கோவை மோகன்ராஜ் என்கவுன்டரும் சரி இந்த என்கவுன்டரும் சரி ஒரு ஒற்றுமை உள்ளது. அந்தந்த நாளின் அரசுகள் கடும் நெருக்கடிக்கு உள்ளாகியிருந்தன, அப்போதைய கருணாநிதி அரசும், தற்போதைய ஜெயலலிதா அரசும். அதை திசை திருப்பவே இத்தகு கொலைகள் நிகழ்த்தப்பட்டுள்ளன. சரி இலட்சக் கணக்கில் கொள்ளையடித்தவர்கள், சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டது என்ற பொதுக்கருத்தில் தமிழக அரசின், தமிழகக் காவல்துறையின் பெயர் கெட்டு விட்டதால், இப்படி 5 பேரைக் கொன்று தனது நாயகத்தனத்தை நிலைநாட்டியுள்ளது கொடிய வெறி பிடித்த காவல்துறை. நன்று. இதற்கு மக்களின் உளவியல் ஆதரிக்கிறது. மனித உரிமையை காலில் போட்டு மிதிப்பதற்கு ஆதரவை அள்ளி வழங்குகிறது. மனித உரிமை பேசவருபவர்களை ஆத்திரத்துடன் எதிர்க்கிறது, எள்ளி நகையாடுகிறது. முடிந்தால்  இவர்களையும் என்கவுன்ட்டரில் போடக் கோருகிறது. அவர்கள் கொள்ளையடிக்கும் போது, கொலைசெய்யும் போது, வன்கலவி செய்யும் போது, குண்டு வைக்கும் போது மனித உரிமைக் கும்பல் மயிரைப் புடுங்கியதா என்ற பாணியில் கேட்பதன் மூலம் மனித உரிமை ஆர்வலர்கள் என்றாலே குற்றவாளிக்கு சொம்பு தூக்கத்தான் வருவார்கள் என்ற கொச்சைப் படுத்தும்  போக்கைக் கடுமையாகக் கண்டிக்கிறேன்.

மேற்படி இந்த மாதிரியான மோதல் கொலையை ஆதரிக்கும் மனநிலையில் இருப்பவர்கள், ஏன் அவைகளையெல்லாம் அதாவது குற்றவாளியின் குற்றங்களையெல்லாம் கண்டிப்பதில்லை என்று கேட்டு மடக்கி விடமுடியும். மனித உரிமையை விரும்புகிறவர்கள் இன்னும் எத்தனையோ தனிமனித சீர்கேடுகளால் விளையும் குற்றங்களை கண்டித்ததில்லை என்பதற்காக அதை ஆதரிக்கிறார்கள் என்று பொருள் கொள்ளமுடியாது. இது போன்று சூடேற்றப்பட்ட, ஊடகங்களில் வெளிச்சம் கொடுக்கப்படாத, பொது மக்களின் கவனம் பெறாத எத்தனையோ சமாச்சாரங்கள் மனித உரிமை ஆர்வலர்களால் விவாதிக்கப்பட்டும், போராட்டங்கள், பரப்புரைகள் மூலமாக முன்னெடுக்கப்பட்டும் வந்திருக்கின்றன. அப்போதெல்லாம் இந்த மனித உரிம எதிர்ப்பாளர்கள், என்கவுன்டர்கள் ஆதரவாளர்கள் அதை ஆர்வத்துடன் கவனிப்பதில்லை அது அவர்களுக்கொரு பொருட்டாகவும் இருந்ததில்லை.  இப்போது மட்டும்தான் மனித உரிமை பேசுகிறவர்கள், காவல்துறையின் கொடும் போக்கை எதிர்ப்பவர்கள் இவர்கள் கண்ணுக்குத் தெரிகிறார்கள் போலும்.

இதில் அதிர்ச்சி ஒன்றுமில்லை, மிகப்பரவலாக ஜாதி வெறி, தேசிய வெறி, இனவெறி வகையிலான் சமூக வன்முறைகளை சலனமில்லாம ஏற்றுக் கொண்டுள்ள மனோபாவம் இதை ஆதரிப்பதில் ஒன்றும் பெரிய அதிர்ச்சியில்லை. இந்த அறச்சீற்றம் நிலையில்லாதது. பாகுபாடானது. இதை விட பெரிய குற்றங்கள் தெரிந்திருந்தாலும் இதற்கு மட்டும் இப்படி முட்டுக் கொடுத்து ஆதரிப்பது ஊடகங்களின் பரப்புரைகளுக்கு பலியான மனசாட்சிகள் மட்டுமே. காக்க காக்க அன்புச் செல்வன், நான் மகான் அல்ல கார்த்தி வகை உளவியல்தான் இப்படியொரு தற்காலிகமான முட்டாள்தனமான, கொடிய முடிவை விரும்புகிறது. இதனால் நேரப்போகும் பின்விளைவுகளை அறியாமல்.

இங்கு எதிர்ப்பதன் முதல்நோக்கமே குற்றவாளிகளைக் காப்பதோ அவர்கள் மீதான மொன்னையான பரிதாபத்திலோ, அல்லது சமூகமே அனைத்துக் குற்றங்களுக்குக் காரணம் என்ற விவாதமோ அல்ல. காவல்துறையின் வரம்பற்ற அதிகாரம், அல்லது ஆட்சியாளர்களுக்கு அவர்கள் அனுசரனையாக இருந்து அவர்கள் ஏவலைச் செய்து முடிப்பது, பொதுமக்கள் மீது காவல்துறையினர், அதிகாரவர்க்கத்தினர் காட்டும் அலட்சியம் பலம், வன்முறை இவற்றுக்கெதிரான ஜனநாயகக் கோரிக்கை மட்டுமே தகுந்த விசாரணைகளின் அடிப்படையில் தண்டனை வழங்கப்படவேண்டுமென்பது.

தற்போது கொள்ளையர்கள், என்ற குற்றத்தின் அடிப்படையில் 5 பேர் கொலைகளை நீங்கள் ஆதரிப்பதாக இருந்தால்,

1. சிங்களர்களின் மனநிலையிலிர்ந்து பார்த்தால் இனப்படுகொலையுடன் சேர்த்து நடத்தப்பட்ட புலியழிப்பை நியாயமென ஏற்க வேண்டும். அவர்களுக்கு தமிழர்கள் பிரச்சனையோ, இராணுவத்தின் இயல்போ தெரியாது. குண்டுவைக்கும் புலிப்பயங்கரவாதிகள் அழிய வேண்டும், அவர்களை ஆதரிக்கும் அல்லது ஆதரிக்காவிட்டாலும் அங்கிருக்கும் தமிழர்களை அழித்தாவது அவர்களை அழிக்க வேண்டும் என்ற சிங்கள மன உளவியலும் சரியானது.

2. இராஜீவ் கொலையில் குற்றம் சாட்டப்பட்டுள்ள மூவரின் தண்டனையும் செயல்படுத்தப்பட வேண்டும். ஏனென்றால் பெரும்பான்மையான இந்தியர்கள் அதை நம்புகிறார்கள். முடிந்தால் சுட்டோ அடித்தோ கொல்ல வேண்டுமென்று கூட விரும்புகிறார்கள்.

3. என்கவுன்டருக்குக் கொடுக்கப்படும் சன்மானம், பதவியுயர்வு போன்றவற்றிற்காக காஷ்மீரில் நிகழும் அனைத்துக் கொலைகளும் ஆதரிக்கப்படவேண்டும் ஏன்னா காஷ்மீர் என்றால் தீவிரவாதி, தீவிரவாதி என்றால் காஷ்மீர் இந்தியர்களின் அகராதியில்.

அல்லது ஒருவனை கொல்லவேண்டுமென நினைத்தால் ஊடக பலத்தைக் கொண்டு அவன்மீதான தொடர்ந்து அவதூறுகளின் மூலமே அதற்கான மனநிலையை உருவாக்கியும் விடலாம்.

சவூதி அரேபியாவைப் போல் கடும் தண்டனை கொடுப்பதால், அல்லது இது போன்ற மோதல் கொலைகளால் குற்றங்கள் குறையும் என்பதெல்லாம் ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல உண்மையுமல்ல. தற்போது என்கவுன்ட்டர் நடக்கும் போதுள்ள மக்களின் மனநிலை சில நாட்களில் மாறிவிடும் போது, குற்றம் செய்யத் துணிகின்றவரின் மனநிலையும் மாறாதா ? ஒன்றுமில்லை கனவான்களே ! கோவையில் ஒருவருடத்திற்கு முன்பு நடந்த மோகன்ராஜ் கொலைக்குப் பின்பு இரு மாதங்களுக்குப் பின் என நினைவு, எனக்குத் தெரிந்தே செய்திகளில்  ஒரு சிறுமி 6 வயதுடையவள் வன்புணர்ச்சி செய்து கொல்லப்பட்டு விட்டாள், மேலும் ஒரு வன்புணர்ச்சிக் கொலை அது நினைவில்லை, மற்றபடி கொலையில்லாமல் சிறுமி வன்கலவியான செய்திகளுக்குக் குறைவில்லை இந்நாள்வரை.

கொலைத்தண்டனைகளால் குற்றம் குறையாது என்பதற்கு உதாரணம்தான் சீனா, அமெரிக்கா. சீனாவில் மனித உரிமைகள் என்பதே கிடையாது, அதே சமயம் குற்றங்களுக்கும் குறைவில்லை. சாவுத்தண்டனைகளும் அதிகமாக நிறைவேற்றப்படுவது சீனாவில்தான். அமெரிக்காவில் மனித உரிமை இருந்தாலும், குற்றவாளிகள் அதிகமுள்ள நாடு மக்கள் தொகையுடனான ஒப்பீட்டளவில் அதிகம் பேர் சிறையிலுள்ள நாடு அமெரிக்காதான். ஆனாலும் குற்றம் குறையவில்லை. ஈரான், சௌதி நாடுகளில் பொதுவெளியில் கொடிய முறையில் கொலைத்தண்டனைகள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. குற்றம் செய்ய பயமிருந்தாலும், ஓரளவு குறைந்தாலும் இத்தனை கொலைத்த்தண்டனைகள் காலம் காலமாக நிறைவேற்றப்பட்டும் இன்னும் மறையவில்லையே இது போன்ற குற்றங்கள். ஏன் ? இதற்கான சமூகக் காரணிகள் தீர்க்கப்படும் வரையில் இது போன்ற குற்றங்கள் தொடரும். தனிமனிதக் கொலைகள் மூலமாக மக்களின் கோபத்தை தற்காலிகமாகத் தணிக்கவே இது போன்ற கொலைகளை நடத்துகிறார்கள். இவைகளை இடைக்காலத் தீர்வுகள் என்று கூட சொல்ல முடியாது.

இன்னொரு விடயம் ஒரு குற்றவாளியைத் தண்டிப்பவர் குற்றவாளியை விட யோக்கியமானவராக இருக்க வேண்டும். ஆனால் காவல் துறை நிகழ்த்திய அட்டூழியங்களுக்குக் கணக்கேதுமுண்டோ ? எடுத்துக்காட்டாக மோகன்ராஜ் என்ற "காமுகனை" சுட்டு வீழ்த்திய காவல்துறையை (மோகன்ராஜைப் போட்டுத்தள்ள ஜெயின் சங்கத்திலிருந்து பணம் கைமாற்றப்பட்டதாக செவிவழிச் செய்தியொன்று கோவைப் பகுதிகளில் இருக்கிறது.) போற்றியவர்கள் வாச்சாத்தியில் கொடுஞ்செயல்கள் பல புரிந்த பல காவல்துறையினர் பெரிய தண்டனைகளின்றித் தப்பியபோது பெரிய அளவில் எதிர்ப்பில்லை, மனித உரிமை ஆர்வலர்கள் தவிர மற்ற யாவரும் கவலைப்படவில்லை. தற்போது விழுப்புரம் அருகே காவல்துறையினரால், இருளர் பெண்கள் வன்புணர்ச்சி செய்யப்பட்ட வழக்கில் இன்னும் காவல்துறையால் இழுத்தடிக்கப்பட்டு குற்றவாளிகளைத் தப்பவிடும் முயற்சிதான் நடக்கிறது. இது போன்ற காவல்துறையின் அட்டூழியங்களுக்குக்கும் சமூக ஆதரவு காவல்துறைக்கு வரம்பற்ற அதிகாரத்தை வழங்கும், பின்பொருநாள் அது அப்பாவிகளெனப்படுபவர்கள் மீது பாயும்போது வருத்தப்பட்டு பயனில்லை. அதிகாரத்திற்கு அப்பாவியும், குற்றவாளியும் சமம்தான் ஏறக்குறைய அவர்களைத் தொல்லை செய்யாத வரை. சராசரிக் குற்றவாளிகளின் மீதான வெறுப்பு கூட மனித உரிமைகளை மதிக்காத அதிகார வர்க்கத்தின் மீதும், காவல்துறையின் மீதும் மக்களுக்கு இல்லாமல் இருப்பதுதான் அவர்களின் வெற்றியும் மனிதத்தின் தோல்வியும்.

தமிழக கேரள காவல்துறையினரின் செயல்பாடுகள் :

தமிழகக் காவல்துறை மோகன்ராஜைப் என்கவுன்டரில் போட்டது. கேரள காவல்துறை சௌம்யா என்ற இளம் பெண்ணை துடிக்கத் துடிக்க சாகும் தறுவாயிலும் வன்புணர்ச்சி செய்த கோவிந்த ராஜனை சிறையில் இட்டு நீதிமன்றத்தின் மூலம் சாவுத் தண்டனை வாங்கிக்கொடுத்துள்ளது. தற்போது கேரளத் தமிழ்மீனவர்களைக் கொன்ற இத்தாலியக் கடற்படையினரையும் நீதிமன்றத்தில் நிறுத்தியுள்ளது. தமிழகக் காவல் துறை ? இதில் அவர்களை மட்டும் குறை சொல்லவில்லை. இந்திய தமிழக அரசுகளைத் தாண்டி அவர்கள் ஒன்றும் செய்ய முடியாதுதான். சரி போராடும் மீனவர்களை அடிக்க லத்திக்கம்பு தயாராகிறது எப்போதும் அது மட்டும் குறைவில்லை. மலையாளிகள் சில இடங்களில் இன்னும் நம்மை விட உயர்ந்தவர்கள். நம்மவர்கள் கையாலாகாத்தனத்தால் கோவிலுக்குச் சாமி கும்பிட வரும் ராஜபக்சேவின் மச்சானையும், சிங்கள எழுத்துப் பொறித்த உடையணிந்த காரணத்தால் சாதாரண சிங்களப் பொது மனிதனையும் அடித்து தம் கோழைத் தனத்தை நிரூபித்துள்ளனர். மரண தண்டனைக்கு எதிரான போராட்டம் நடக்கும் தமிழக்த்தில் இந்த மோதல் கொலைகளுக்கு அசத்தலான ஆதரவு

வாழ்க இனமானம். வாழ்க மரண தண்டனை.
Download As PDF
Bookmark and Share

Post Comment

பிரபாகரன் படுகொலையும் தமிழர்களின் கள்ள மௌனமும்

 இந்த  வருடத்துடன்  4ம்  ஈழப்போர்  முடிந்து  இரு  வருடங்கள்  முடிந்தும்  விட்டன.  இதுவரையில்  பிரபாகரன்  படுகொலையைப்  பற்றி  பிரபாகரனை  ஆதரித்தவர்கள்  எனப்படுபவர்கள்  ஒரு  மூச்சையும்  விடவில்லை.  மாறாக  பிரபாகரன்  உயிருடன்  இருப்பதாகவும்  திரும்பவும்   வருவார்கள்  என்றெல்லாம்  கூறியவர்கள்  மக்களின்  மறதியை  மனதில்  கொண்டே  சொல்லியிருக்கக்  கூடும்.  ஈழப்படுகொலைகளை  நினைவு  கூரும்  வேளையில்  புலித்தலைவர்கள்  படுகொலைகளை  மட்டும்  பேச  மறுக்கிறார்கள்.  பொத்தாம்  பொதுவாக  இனப்படுகொலைகளை  பற்றிப்  பேசி  உணர்ச்சிவயப்படுத்தி  பிரபாகரன்  கொலை  செய்யப்பட்டதை  மட்டும்  சாதுரியமாக  பேசாமல்  தவிர்த்து  விட்டு  அவரைப்  புகழ்ந்து  பேசி  கைதட்டல்  வாங்கிக்  கொள்கிறார்கள்.

இருவருடங்களுக்கு  முன்பு  போர்  முடிந்த  மாதங்களில்  இருந்த  மனநிலையின்  காரணமாக  ஒரு  வகையான  ஆறுதல்  செய்தியாக  அதை  நம்பும்  நிலையில்தான்  அனைவருமிருந்தனர்.  மிகப்பெரும்  தோல்வியின்,  இனப்படுகொலையின்  மாற்றாக  தேசியத்தலைவர்  உயிருடன்  இருக்கிறார்  என்ற  செய்தி  பெருமூச்சு  விடும்  வகையில்  நம்பிக்கையின்  ஒளிக்கீற்றாக  அனைவருக்கும்  இருந்தது.  ஆனால்  அவர்கள்  கொல்லப்படக்  காரணமாக  இருந்தவர்களுக்கோ  பிரபாகரனை  உயிருடன்  இருப்பதாக  ஒரு  கருத்தினை  பரப்பி  அதை  உயிருடன்  வைத்திருப்பது தமது  பிழைப்பிற்கான  அரசியல்  தேவையாக  இருந்தது.  புலத்தில்  இருந்த  புலித்தலைவரான  கேபி  முதலில்  பிரபாகரன்  நலமாக  இருப்பதாகவும்  தாம்  அவருடன்  பேசியதாகவும்  தெரிவித்திருந்தார்.  பின்பு  அவரே  நிகரற்ற  தலைவர்  தலைவர்  பிரபாகரன்  வீரச்சாவடைந்து  விட்டதாகக்  கூறினார்.  புலிகளின்  தலைவராகவும்  தம்மை  அறிவித்துக்  கொண்டார்  கேபி.  பின்பு  இலங்கை  உளவுத்துறையால்  கடத்தப்பட்டாரா  அல்லது  பாதுகாப்பாகக்  கொண்டு  செல்லப்பட்டாரா  என்று  தெரியவில்லை,  தற்போது  நம்பிக்கைதான்  முக்கியமென்று  போரில்  பாதிக்கப்பட்ட  மக்களிடம்  நம்பிக்கையாக  பேசி 
வந்தார் பின்பு ஒரு தகவலுமில்லை.

மாறாக  இன்னொரு  குழுவினரோ  பிரபாகரன்  உயிருடன்  இருப்பதாகவும்  வன்னிக்காட்டுக்குள்  சில  ஆயிரம்  புலிகளுடன்  பதுங்கியிருந்து  போருக்குத்  தயாராவதாகவும்  கதையளந்தனர்.  இன்னும்  சிலரோ  அவர்  ஏற்கெவே  தப்பிச்  சென்றுவிட்டாரென்றும்  கனடாவிலோ  இந்தோனேசியாவிலோ  இருப்பதாகவும்  செய்திகளோ  உலவின.  தமிழ்நாட்டுப்  புலி  ஆதரவத்  தலைவர்கள்  பிரபாகரன்  உயிருடன்  இருப்பதாக  உறுதியளித்தும்  5  வது  ஈழப்போர்  குறித்தும்  ஈவு  இரக்கமின்றியும்  பேசியும்  வந்தனர்.  பிரபாகரனின்  உடலை  இரண்டாவது  நாளிலேயே  இலங்கை  அரசு  வெளியிட்டு  விட்டது.  ஆனால்  அது  போலி  என்றும்  சிங்கள  அரசு  தமிழர்களை  ஏமாற்ற  செய்யும்  சதி  என்றும்  கூறினார்கள்.  ஏனெனில்  பிரபாகரன்  போன்ற  தோற்றமுடைய  ஒரு  உடலைக்  காட்டியும்  தந்திரமாக  புலித்தலைவர்  இறந்துவிட்டதாகக்  கூறுவதன்  மூலமாக  தமிழர்களின்  போராட்டத்தை  சீர்குலைக்கும்  ஒரு  திட்டமாகவும்  சித்தரிக்கப்பட்டது.  தொலைக்காட்சியில்  காட்டப்பட்ட  உடல்  பிரபாகரனுடையது  இல்லையென்றும்,  அவர்  பத்திரமாகவும்  நலமாகவும்  இருப்பதாகவும்  அனைவரும்  நம்ப  வைக்கப்பட்டார்கள்.  அவர்  இறந்து  விட்டார்  என்று  கூறுவதே  தமிழினத்திற்குச்  செய்யும்  துரோகம்  என்ற   கருத்தும்  பரவலாக  இருந்தது. 

மே  மாதம்  2009  ம்  ஆண்டு  15  லிருந்து  17  வரையிலான  நாட்களுள்  ஏதோ  ஒரு  நாளில்தான்  மிகப்பெரும்  இனப்படுகொலையில்  வாயிலாகவே  புலித்தலைவர்களின்  படுகொலையும்  நிகழ்ந்திருக்கிறது.  போரில்  சிக்கிக்கொண்ட  இலட்சக்கணக்காணவர்கள்  மீது  தாக்குதல்  நடத்திப்  இனப்படுகொலையை  நடத்தி  முடித்த  பேரினவாத  பாசிச  பயங்கரவாதிகள்  சரணடைந்தவர்களையும்  கொடும்  சித்ரவதைகளின்  பின்னால்  கொன்றனர்.  பெண்கள்  மீது  பாலியல்  வன்முறையை  ஏவிய  பின்பு  கொன்றனர்.  இவர்கள்  கொல்வதையும்,  இன்ன  பிற  சித்ரவதைகள்  செய்வதையும்  இரசனையுடன்  கைபேசிகள்,  கேமராக்கள்  மூலமாகவும்  பதிவு  செய்தனர்.  கொல்லப்பட்ட  பின்பும்  பிணங்களின்  அருகில்  நின்று  பல்லைக்  காட்டியபடி  படமெடுத்துக்  கொண்டனர்.  இவைகளை  தம்மைச்  சேர்ந்தவர்களிடம்  காட்டி  பெருமை  பேசுவதற்காகவும்,  வக்கிர  உணர்வுக்கான  வடிகாலாகவும்  செய்தவைகளாக  இருந்தன.  இவ்வாறு  இவர்கள்  பரிமாறிக்கொண்ட  சில  புகைப்படங்களும்,  வீடியோக்களும்  மனசாட்சி  உறுத்திய  சிங்களர்களின்  உதவியால்  வெளிவந்திருக்கக்  கூடும்.  இவ்வாறு  வெளிவந்த  சில  போரின்  காட்சிகளை  ஓரளவிற்கு  வெளிக்கொண்டுவந்தன.  குறிப்பாக  நிர்வாணப்படுத்தப்பட்டும்,  கைகள்  பின்புறமாகக்  கட்டப்பட்ட  நிலையிலும்  சுட்டுக்  கொல்லப்பட்ட  காட்சிகள்,  இசைப்பிரியாவின்  பிணத்திலிருந்து  துணியை  விலக்கி  படம்பிடிக்கும்  ஆணாதிக்கப்  பாலியல்  பயங்கரவாதமும்  அதிர்ச்சியை  உண்டாக்கின.  இவையெல்லாம்  போர்  உச்சமாக  நடந்த  கடைசி  மாதங்களின்  சாதாரணமான  நிகழ்வுகளாகவே  இருந்திருக்கும்.  ஆனால்  இவையெல்லாம்  சிங்களப்  பேரினவாதப்  பயங்கரவாதிகளை  ஒன்றும்  செய்யவில்லை.  மாறாக  இவையெல்லாம்  ஒரு  பொருட்டாகவே  கருதவில்லை.  புலிகளே  செய்ததாகவும்,  இது  போன்ற  போர்க்குற்றக்  காட்சிகளைப்  பற்றி  பேசுவது  போரில்  ஈடுபட்டு  தேசத்தைக்  காத்த  வீரர்களை  அவமானப்  படுத்துவதாகவும்  கூறியது  சிங்கள  அரசு. 

இது  போன்ற  கொடிய  போர்க்குற்றமாகிய  தம்மிடம்  உயிருக்குப்  பாதுகாப்பு  கிடைக்குமென்ற  உறுதியின்  பேரில்  சரணடைந்த  புலித்தலைவர்களைக்  கொடும்  சித்ரவதைக்குட்படுத்திக்  கொலை  செய்தது,  மேலும்  புலிகள்  மட்டுமல்லாது  போரில்  ஈடுபடாமல்  இருந்த  புலிகளின்  குடும்ப  உறுப்பினர்களையும்  கொலை  செய்திருக்கிறார்கள்.  வெள்ளைக்  கொடியுடன்  சரணடைந்தவர்களில்  எத்தனை  பேர்  கொல்லப்பட்டார்கள்,  எத்தனை  பேர்  உயிருடன்  இருக்கிறார்கள்  என்பதும்  தெரியவில்லை.  தமிழ்செல்வனின்  மனைவி  மட்டும்  சில  மாதங்களுக்கு  முன்பு  விடுதலை  செய்யப்பட்டார்.  மற்ற  உலக  நாடுகளும்  பொத்தாம்  பொதுவாக  சரணடைந்தவர்களை  கொன்றது  குற்றம்  என்றும்  குற்றம்  சாட்டி  வந்தன.  ஏனென்றால்  அவர்களும்  அதற்கு  (புலித்தலைவர்கள்  சரணடைவதற்கு  உத்தரவாதமளித்த  சில  மேற்கத்திய  தூதுவர்கள்  உதாரணத்திற்கு  எரிக்  சோல்கைம்)  உடந்தையாக  இருந்ததால்  முழுவதும்  சொல்லாமல்  போர்க்குற்ற  விசாரணை  என்ற  பெயரில்  இலங்கையை  அச்சுறுத்தும்  ஒரு  துருப்புச்  சீட்டாகவே  வைத்திருக்கிறார்கள்.


பிரபாகரன்  படுகொலைக்கு  வருவோம்.  பிரபாகரன்  சாகவில்லை  என்பவர்கள்  என்னதான்  சொல்ல  வருகிறார்கள்  என்றால்,  அது  சிங்கள  அரசின்  பொய்ப்பரப்புரை,  தமிழர்களின்  போராட்டத்தை  சீர்குலைக்கச்  செய்யும்  சதி  என்கின்றனர்.  அந்தப்  பொய்யை  உடைக்க  பிரபாகரன்  உயிருடன்  இருக்கிறார்  என்று  ஆதாரமில்லாமல்  கூறி   வருகின்றனர்.  ஒரு  வேளை  அவர்  உயிருடன்  இருந்திருந்தால்  ஒரிரு  நாட்களிலேயே  அவர்  உரை  நிகழ்த்தும்  ஒரு  வீடியோவை  வெளியிட்டிருப்பார்கள்.  அது  கூட  நடக்கவில்லை.  கொஞ்சமும்  கூச்சப்படாமல்  இன்னும்  அதே  பொய்யைச்  சொல்கிறார்கள்.  பிரபாகனைப்  பிடிக்கவே  முடியாது,  அப்படியே  பிடித்தாலும்  அவரது  பிணம்  மட்டுமே  கிடைக்கும்  அல்லது  பிணத்தைக்  கூடப்  பிடிக்க  முடியாது  என்றெல்லாம்  பிரபாகரனைப்  பற்றிய  கருத்துக்கள்  இருந்தன.  பிரபாகரன்  மட்டுமன்றி  மற்ற  புலிததலைவர்களும்  எதிரிகளிடம்  சரணடைய  மாட்டார்கள்  என்றே  அனைவரும்  நினைத்திருந்தார்கள்.  ஆனால்  அரசியல்  பிரிவினரான  நடேசன்,  புலித்தேவன்  ஆகியோர்  வெள்ளைக்  கொடியுடன்  சரணடந்தனர்  அதன்  பின்பு  சித்ரவதை  செய்யப்பட்டுக்  கொல்லப்பட்டனர்  என்பதை  மட்டும்  ஒத்துக்  கொள்கின்றனர்.  ஏன்  அவர்கள்  மட்டும்  புலிகள்  இல்லையா  ?  இவர்கள்  சரணடைந்ததால்  புலிகளின்  மீதான  கௌரவம்   குறைந்து  விடாதா  ?வெறும்  அரசியல்  தலைமை(நடேசன்,  புலித்தேவன்)  மட்டும்  சரணடைந்தது,  இராணுவத்  தலைமை(பிரபாகரன்,  பொட்டம்மன்,  சொர்ணம்,  சூசை  பொன்றவர்கள்)  தப்பி  விட்டது  என்றும்  சொன்னார்கள்.  2009  ம்  ஆண்டு  மே  மாதம்  இரண்டாவது  வாரத்தில்  புலிகளும்,  3  இலட்சம்  மக்களும்  ஒரிரு  கிலோமீட்டர்  சுற்றளவுக்குள்  முடக்கப்பட்டு  விட்டார்கள்.  பின்பு  புலிகள்  "ஆயுதங்களை  மௌனிப்பதாக"  அறிவித்தனர்.  இதற்குப்  பின்பு  சிங்கள  அரசிடமிருந்து  போரில்  இலங்கை  அரசு  வெற்றி  பெற்றது,  புலித்  தலைவர்கள்  கூட்டாகத்  தற்கொலை  செய்து  கொண்டார்கள்  முதலில்  செய்தி  வந்தது  (சிஎனென்  ஐபிஎன்  தொலைக்காட்சியில்  இவ்வாறு  சொன்னார்கள்). 

பின்பு  பிரபாகரன்  ஆம்புலன்ஸ்  வண்டியில்  தப்பிச்  செல்ல  முயன்றபோது  சுட்டுக்  கொல்லப்பட்டார்  என்று  அறிவித்தது.  இதன் மூலம் அவரை அவமானப்படுத்தும் விதமாக தப்பியபோது கொல்லப்பட்டார் என்று வெளியிடக் காரணம் என்னவென்றால் இதை வெளியிடாமல், சரணடைந்து கொல்லப்பட்டார் என்று கூறியிருந்தால் தமது போர்க்குற்றத்தை தாமே ஒத்துக் கொண்டதாகி விடுமென்பதால்தான். இச்செய்தியில்தான்  பிரபாகரன்  உடல்  காட்டப்பட்டது.  அவரது  மகன்  சார்லஸ்  ஆண்டனி  சீலன்,  பிரபாகரன்  ஆகியோரது  தலையில்  ஆழமான  காயங்கள்  இருந்ததைக்  கொண்டே  அவர்கள்  எப்படிக்  கொல்லப்பட்டிருக்கலாம்  என்பதையும்  யூகிக்கலாம்.  இந்த  நிலையில்  ஜோர்டானுக்கு  போயிருந்த  அதிபர்  மகிந்த  "பயங்கரவாதம்  முற்றிலும்  ஒழிக்கப்பட்ட"  தனது  நாட்டுக்குத்  திரும்புவதாகக்  கூறி,  தனது  பயணத்தை  பாதியிலேயே  முடித்துக்  கொண்டு  விமானத்தில்  வந்திறங்கியவுடன்  இலங்கை  மண்ணை  முத்தமிட்டார்.  இத்தனைக்குப்  பிறகு  விடுதலைப்புலிகளின்  இணையதளங்கள்  பிரபாகரனும்  சூசையும்  முற்றுகையை  ஊடறுத்துத்  தப்பிவிட்டதாகக்  கூறத்  தொடங்கின.  பின்பு  பாதிப்பேர்  பிரபாகரன்  உயிருடன்  இருக்கிறார்  என்று  நம்பினர்.  (உண்மையில்  பிரபாகரன்  இறந்துவிட்ட  செய்தியை  எதிர்கொள்ளுமளவுக்கு  அந்நாளில்  யாருக்குமே  மன  வலிமை  இருந்திருக்காது.  இரு  வருடங்களுக்கு  முன்பு  போர்  நடந்த  போது  இருந்த  மனநிலையை  நம்  வாழ்வில்  நாம்  இனி  சந்திக்கவே  போவதில்லை  எனுமளவிற்கு  போரின்  வெப்பமும்,  நமது  தலைவரகளின்  கையாலாகாத்தனமும்  நம்மை  பாதித்திருந்தது.)  பின்பு  நிறையப்  பேர்  பிரபாகரன்  உயிருடன்  இருக்கிறார்  என்பது  போலவே  பேசவும்,  எழுதவும்  அறிவிக்கவும்  தொடங்கினர்.  பல  மாதங்களாக  "புலித்தலைவர்கள்  கொல்லப்பட்டதாகக்  கூறப்படும்  சம்பவங்களை"  என்று  அதை  கிண்டலடித்தே  பேசினார்கள்.  அச்சு  ஊடகத்திலிருந்து  இணையத்தில்  எழுதியவர்கள்  வரை.  வைகோ,  சீமான்,  நெடுமாறன்,  திருமாவளவன்  ஆகியோர்  அடித்துச்  சொன்னார்கள்  இன்றுவரையிலும்  மறுக்கவில்லை. 


இதன்  பின்போ  புலத்தில்  புலிகள்  இரண்டாகப்  பிளவுற்றனர்.  கேபி  தலைமையிலான  குழுவினரொ  பிரபாகரன்  வீரச்சாவடைந்து  விட்டதாகக்  கூறி,  இனி  நாம்  ஜனநாயக  வழியில்  போராட்டத்தினைத்  தொடர்வோம்  என்றனர்.  இன்னொரு  குழுவினரோ  பிரபாகரன்  இறந்துவிட்டாரென்பது  தமிழினத்துரோகம்  என்றும்  உயிருடன்  இருக்கிறார்  என்றும்  கூறத்  தொடங்கினர்.  புலித்தலைவர்கள்  சரணடைந்தனர்  பின்பு  கொல்லப்பட்டனர்  என்பதை  மறுப்பவர்கள்,  மக்களின்  உணர்வைப்  பயன்படுத்தி  ஆதாயமடைந்த  புலத்துப்  புலிகள்.  இவர்கள்தான்  நாடுகடந்த  தமிழீழம்  வரை  வந்தவர்கள்.  பிரபாகரன்  இறந்துவிட்டதைச்  சொன்னால்  தமிழர்களை  ஏமாற்றி  அரசியல்  செய்வ்தெல்லாம்  நடக்குமா?  ஈழத்தமிழர்களின்  உணர்வைப்  பயன்படுத்தியும்,  விடுதலைப்புலிகளின்  பேரிலும்  சொத்துக்களை  வைத்து  வசதியுடன்  வாழும்  புலத்து அரசியல்வாதிகளைக்காட்டிலும்  புலிகளை  மிகத்தீவிரமாக  ஆதரித்த  ஈழ  ஆதரவாளர்கள்,  பிரபலங்கள்,  மக்கள்  இயக்கங்கள்,  தமிழார்வலர்கள்,  இன  உணர்வாளர்கள்  போன்றவர்களும்  பிரபாகரன்  படுகொலை  குறித்தும்  பேசவில்லை.  இதில்  எவருமே  தாம்  நேசித்த  தலைவருக்காக  ஒரு  மெழுகுவர்த்தியைக்  கூட  ஏற்றவில்லை.  ஏனென்றால்  பிரபாகரன்  இறக்கவில்லை  என்று  முதலில்  நம்பினார்கள்,  பின்பு  காலப்போக்கில்  பிரபாகரன்  வரப்போவதில்லை  என்று  உணர்ந்த  போதும்  பிரபாகரனுக்காக  என்ன  செய்வதென்று  தெரியவில்லை.  எல்லாவற்றிற்கும்  மேலாக  பிரபாகரன்  இறந்துவிட்டார்  என்று  கூறுகிறவர்கள்  "புலி  எதிர்ப்பாளர்கள்"  எனப்படுபவர்களாக  இருக்கின்றனர்.  அவர்கள்  புலிகள்  இருந்தவரையிலும்  அவர்கள்  அழிந்த  பின்னும்  புலிகளையும்  புலிகளின்  அரசியலை  கடுமையாக  எதிர்த்தவர்களாக,  எதிர்ப்பவர்களாக  இருக்கின்றனர்.  இதில்  சிலர்  இந்திய  இலங்கை  அர்சின்  ஆதர்வாளர்களாகவும்  இருக்கின்றனர்.  நடுநிலையாளர்களும்  இருக்கின்றனர்.  இவர்களின்  புலிகளின்  மீதான  விமர்சங்களையெல்லாம்,  புலி எதிர்ப்பு,  தமிழினத்  துரோகம்,  சிங்கள  விசுவாசம்,  அவதூறு  என்ற  வகையிலேயே  புலி  ஆதரவாளர்கள்  எதிர்கொண்டு  வந்திருக்கின்றனர்.  அதே  பார்வையில்தான்  பிரபாகரன்  சரணடைந்து   கொல்லப்பட்டார்  என்ற  கருத்தையும்  பார்க்கிறார்கள்.  இதை  பிரபாகரன்  மீதான  அவதூறாகக்  கருதுகிறார்கள்.  பிரபாகரன்  சரணடைந்து  கொல்லப்பட்டார்  என்பதற்காக  அவர்கள்  சிங்களனிடம்  உயிர்ப்பிச்சை  கேட்டுப்போனார்  என்பதல்ல,  வரலாறு  முழுவதும்  நடந்தது  போலவே  அவர்களிடம்  துரோகிகளால்  காட்டிக்  கொடுக்கப்பட்டார்  எனபதுதான்.  புலிகள்  இந்தியாவையும்,  மேற்குலகையும்,  ஐநாவையும்  பெரிதும்  மதிப்பவர்களாக  இருந்தார்கள்.  இந்தியா  போரை  நடத்திக்  கொண்டிருக்க  புலிகளோ  இந்தியாவின்  உண்மையான  நண்பன்  தாங்கள்தானென்றும்  சிங்கள  அரசை  நம்பவேண்டாமென்றும்  இந்தியாவைக்  கெஞ்சிக்  கொண்டிருந்தார்கள்.  இவர்கள்  கொடுத்த  உறுதிமொழியை  நம்பித்தான்  உயிருக்குப்  பாதுக்காப்பளிக்கப்படுமென்றுதான்  அவர்கள்  வெள்ளைக்கொடியுடன்  வந்தார்கள்.  வந்தவர்கள்  பேரினவாதப்  பயங்கரவாதிகளிடம்  சிக்க  வைக்கப்பட்டார்கள்.  இதில்  இந்திய  உளவுத்துறை  அதிகாரிகள்  வரை  இருந்திருக்கிறார்கள்.  இந்தப்  போரை  நடத்தியதே  இந்தியாதான்  என்றிருக்கையில்  போரின்  இறுதிக்காட்சியையும்  இவர்கள்தான்  தீர்மானித்தார்கள்.  இந்தியாவைச்  சார்ந்த  ஐநா  அதிகாரியான  விஜய  நம்பியார்  வந்த  பிறகுதான்  ஆயுதங்கள்  புலிகளால்  மௌனிக்கப்பட்டன.  இந்தப்  போரில்  இலங்கை  இராணுவம்  நேரடியாக்  ஈடுபட்டாலும்  போர்த்திட்டங்கள்,  ஆயுதங்கள்  என  இந்தியாவின்  போராகவே  இது  நடைபெற்றது.  இதனால்  இந்திய  உளவுத்துறை  அதிகாரிகள்  இராஜிவ்  கொலையில்  குற்றம்  சாட்டப்பட்டிருந்த  பிரபாகரனையும்,  பொட்டு  அம்மனையும்  விசாரித்திருக்கவும்  கூடும்.  எந்த  ஒரு  புலித்தலைவரையும்  சிறையில்  வைத்திருப்பதுமோ  அல்லது  உயிருடன்  இருப்பதாலோ  உலகெங்கும்  வாழும்  தமிழர்களிடம்  மிகப்பெருமளவில்  ஒன்றினைத்துவிடும்  போராட்டம்  வெடிக்கும்  என்பதாலும்  அவர்கள்  கைது  செய்யப்பட்டும்  வெளியில்  யாருக்கும்  தெரிவிக்கப்படாமல்  போர்க்களத்திலேயே  வைத்துக்  கொல்லப்பட்டனர்.  முப்பதாண்டுகளாகக்  காத்திருந்த  வெறியை  புலித்தலைவர்களைக்  கொடூரமாகக்  கொன்றதன்  மூலமாகப்  பழி  தீர்த்துக்கொண்டனர்  சிங்கள்ப்  பேரினவாதக்  கொலைகாரர்கள்.  எல்லாவற்றிற்கும்  மேலாக  தாம்  செய்யும்  கொலைகளையெல்லாம்  படம்பிடித்துப்  பரவசமடைந்த  இராணுவத்தினர்  பிரபாகரனை  மட்டும்  சும்மா  விட்டிருப்பார்களா  என்ன  ? சீரான  இடைவெளியில்  இலங்கையிலிருந்து  போர்க்குற்றம்  தொடர்பான  வீடியோக்களும்,  புகைப்படங்களும்  கசிந்து  கொண்டேயிருக்கின்றன. 

புலித்தலைவர்களுள்  ஒருவரான  இரமேஷ்  சிங்கள  இராணுவத்தினரால்  விசாரணை  செய்யப்படுவதையும்  அருகிலிருந்த  மற்ற  சில  வீரர்களும்  அதனை  தமது  கைப்பேசிக்  கேமராவினால்  படம்பிடிப்பது  போலவும்  வெளியாகியிருந்தது.  மற்றொரு  புகைப்படத்தில்  அவர்  கொலை  செய்யப்பட்டுக்  கிடக்கும்  காட்சியிருந்தது.  இதிலிருந்தே  அறியலாம்,  புலித்தலைவர்கள்  விசாரணையின்  பின்புதான்  கொலை  செய்யப்பட்டார்கள்  என்று.  நடேசன்,  பிரபாகரன்  போன்றவர்கள்  சித்ரவதை  செய்யப்ப்ட்டுத்தான்  கொல்லப்பட்டார்கள்  என்ப்தும்  அவர்க்ளின்  உடலிலிருந்த  காயங்கள்  மூலமாகவே  புரிந்து  கொள்ள  முடியும்.  இதெல்லாம்  அப்போதே  அரசல்  புரசலாக  வெளிவந்திருந்தன.  பிரபாகரனின்  இளைய  மகன்  பாலச்சந்திரனை  பிரபாகரன்  கண்முன்னேயே  தரையிலடித்துக்  கொன்றதும்,  கருணா  உட்பட  தமிழ்  ஆயுதக்குழுவினர்  இதற்கு  உடனிருந்ததும்  உறுதிப்படுத்தப்  படாத  செய்தியாக  வெளியாகியிருந்தது.  பிணங்களை  அடுக்கிவைப்பது  முதல்,  பெண்போராளிகளின்  இறந்த  உடலில்  துணியை  விலக்கிவிட்டு  அதனருகில்  நின்று  புகைப்படமெடுததுக்  கொள்வது  போன்ற  பல  வகையில்  போர்க்குற்ற  ஆவணங்கள்  வெளியாகி  வருகின்றன.  சில  நாட்களுக்கு  முன்பு  இலங்கை  புலத்து  புலிகள்  மீது  ஒரு  குற்றம்  சாட்டியிருந்தது.  பொதுவாக  இது  போன்ற  போர்க்குற்ற  ஆவணஙகள்  வெளியாகும்  போதெல்லாம்  அது  பொய்யென்றும்  புலிகளின்  சதியென்றும்  கூறும்.  அதே  போல்  இம்முறையும்  பிரபாகரன்  கொல்லப்படுவது  போன்ற  வீடியோவை  புலிகள்  தயாரித்து  வருகின்றனரென்றும்  அதனால்  இலங்கையரசின்  பெயரைக்  கெடுக்க  எத்தனிப்பதாகவும்  கூறியிருந்தது.  இதிலிருந்து  ஏதாவது  புரிகிறது  இல்லையா?  இது  போன்ற  பல  ஆதாரங்கள்  அரசினால்  அழிக்கப்பட்டிருக்கின்றன.  மேலும்  புலித்தலைவர்  உயிருடன்  இருக்கிறார்  என்ற  கருத்தினால்  ஆதாயமடைபவர்கள்  யாரோ  அவர்களினாலும்  அழிக்கப்பட்டுள்ளன.  மேலும்  போர்க்குற்றங்கள்  குறித்து  பெரிதாகக்  கவலைப்படுவது  போல்  நடிக்கும்  மேற்குலக  நாடுகளும்  இந்த  சித்து  விளையாட்டில்  ஈடுபட்டுள்ளன.  இறுதிப்போரில்  முள்ளிவாய்க்கால்  வரை  சென்று  உயிர்பிழைத்த  சிலரை  நார்வேயிலிருந்து  வந்த  சில  அதிகாரிகள்  இலங்கை  அரசுக்கு  டிமிக்கி  கொடுத்துவிட்டு  தம்முடன்  கூட்டிச்  சென்று  விட்டனர்.  அவர்களை  தமது  நாட்டில்  வைத்து  போர்க்குற்ற  ஆதாரங்களைப்  பெற்று  அதன்  மூலமாக  இலங்கையரசை  தமது  நலனுக்கேற்ப  ஒத்துழைக்க  வைப்பதாகவும்  ஒரு  செய்தி  வெளியாகியிருந்தது.  இதற்கெல்லாம்  மேலாக  தற்போது  லிபிய  அதிபர்  கடாபி  கொல்லப்பட்டதை  நினைத்துப்  பாருங்கள்  ஒரு  நாட்டின்  அதிபரைக்  கொலை  செய்வதை  வீடியோவாக  ஊடகங்கள்  செய்தி  வெளியிடுகிறது  அவர்  சர்வாதிகாரியாகவே  இருக்கட்டுமே.  அதே  போல்தான்  சதாம்  ஹுசைனும்  தூக்கிலிடப்படுவதற்கான  முந்தைய  நிமிடம்  வரையிலான  காட்சிகளையும்  வெளியிட்டார்கள்.  இதன்  மூலம்  சர்வாதிகாரம்  ஒழிக்கப்பட்டு  குடிநாயகம்  நிலைநாட்டப்பட்டது  என்றார்கள்.  இதை  செய்தவர்கள்  யாரென்றால்  அமெரிக்க  ஐரோப்பிய  ஏகாதிபத்தியங்கள்  அந்தந்த  நாட்டிலுள்ள  தமது  அடிமைகள்  மூலம்  செய்தார்கள்.  நிற்க  இதை  ஏன்  சொல்கிறேனென்றால்  ஒரு  நாட்டின்  அதிபரைக்  கொலை  செய்து  அதையே  ஜனநாயகம்  மீண்டது  என்ற  பெயரில்  துணிச்சலாக  வெளியிட்டார்கள்.  இங்கோ  புலிகள்  உலக  நாடுகளால்  பயங்கரவாதிகள்  என்று  தடை  செய்யப்பட்டவர்கள்,  மேலும்  இந்தியப்  பிரதமரைக்  கொன்றதற்காகவும்  குற்றம்  சாட்டப்பட்டவர்கள்.  இவர்களைக்  கொன்றால்  யாருமெதுவும்  கேட்க  முடியாது.  இந்தியா  சீனா  உட்பட  அனைத்து  நாடுகளுக்கும்  புலிகள்  தேவையில்லாதவர்களாக  இருந்தார்கள்.  இந்தியா  ஆயுதங்களைக்  கீழே  போடுமாறு  புலிகளைத்  தொடர்ந்து  வலியுறுத்தி  வந்தது.  புலிகள்  மேற்குலகின்  ஆதரவையும்  எப்போதோ  இழந்து  விட்டிருந்தனர்.  இந்தியாவின்  நண்பனென்றுதான்  புலிகள்  தம்மை  அழைத்துக்  கொண்டாலும்  இந்தியாவின்  முழு  அடிமையாக  இருக்காததாலும்  இந்தியாவிற்கும்  புலிகள்  அழிக்கப்படவேண்டியவர்களாகவே  இருந்தார்கள்.  புலிகளின்  அரசியல்  என்பது  இந்தியாவிற்கு  எல்லாவகையிலும்  இடைஞ்சலாகவே  இருந்தது.  இந்தியா  என்பதே  வெள்ளைக்காரர்கள்  வெளியிலிருந்து  வசதியாக  ஆள்வதற்காக  மூன்று  டஜன்  தெசிய  இனங்களைக்  கட்டி  உருவாக்கப்பட்ட  ஒரு  போலித்  தேசியம்,  வடகிழக்கில்  இதற்கெதிராக  இன்னும்  குருதி  சிந்தப்படுகிறது.  இதற்கும்  மேலாக  காஷ்மீர்  என்ற  தனக்கு  உரிமையில்லாத  பகுதியில்  இராணுவத்தை  வைத்து  அடக்கியாள்கிறது.  இந்த  இலட்சணத்தில்  ஈழத்தினைப்  பிரித்துக்  கொடுப்பது  தனது  முந்தானையில்  தானே  தீ  வைத்துக்  கொள்வதற்குச்  சமமென்று  பாரதமாதாவுக்குத்  தெரியாதா  ?  பாகிசுதானிடமிருந்து  வங்காளதேசத்தைப்  பிரித்துக்  கொடுத்தது  போல  இந்தியா  இலங்கைக்குச்  செய்யாது.  பாக்,  சீனா  ஆகியவை  சம  அல்லது  வலுமிகுந்த  எதிரி  நாடுகள்  என்பதால்  வங்காள  தேசம்,  திபெத்  என்று  விடுதலை  கேட்கிறது.  ஆனால்  இலங்கையோ  மிகச்  சிறிய  நாடு  இந்தியாவின்  (பொருளாதார,  அரசியல்  ரீதியாக)  அடிமை  நாடு.  அதை  ஒன்றாக  வைத்திருப்பதுதான்  இந்தியாவிற்கு  வசதியானது.  இப்படி  தேசிய  இனங்களைக்  இரும்புப்பிடிக்குள்  வைத்து,  தலையில்  எரிமலையாகிய  காசுமீரையும்  வைத்துக்  கொண்டிருக்கையில்  தனது  காலுக்குக்  கீழே  ஒரு  சில  இலட்சம்  பேர்களைக்  கொண்ட  ஒரு  தேசிய  இனத்தைச்  சார்ந்த  போராளிகள்  வான்படை  வைத்துக்  கொண்டு  தாங்கள்  எதிர்த்துப்  போராடும்  நாட்டின்  தலைநகரத்திலேயே  வானவேடிக்கை  நடத்தி  வருவதை  இந்தியா  எப்படிச்  சகித்துக்  கொள்ளும்  ?.  புலிகளின்  அரசியலின்படி  இலங்கை  சீனாவிற்கு  ஆதரவானது,  தாங்கள்தான்  இந்தியாவிற்கு  ஆதரவானவர்கள்  என்று  சொல்கிறார்கள்,  அதன்படியே  பார்த்தாலும்,  சீனாவின்பக்கம்  இலங்கை  சாயாமல்  இருப்பதற்குத்  தமிழர்களை  ஆதரிப்பதற்குப்  பதில்  தமிழர்களைப்  பலி  கொடுத்து  இலங்கைக்கு  உதவி  அதை  தன்  கட்டுக்குள்  வைத்திருப்பதுதானே  இந்தியாவிற்கு  வசதியானது.


எல்லோர்க்கும்  புரியாத  புதிர்,  அனைவரது  மண்டையிலும்  குடைந்தெடுக்கும்  விடை  தெரியாத  கேள்வி  ஒன்று (எனக்கு  அப்படித்தான்),  இறுதிப்போரின்  போது  புலிகள்  ஏன்  கரந்தடிப்  போரில்  (Guerilla  war) இறங்கவில்லை  என்பது.  விடுதலைப்புலிகளின்  பட்டப்பெயரே  உலகின்  தலைசிறந்த  கொரில்லா  இயக்கம்  என்பது.  ஆனால்  அவர்களோ  தாம்  தோல்வியுறும்  தருணத்தில்  கூட  கரந்தடிப்  போருக்கு  மாறாமல்  இறுதிவரை  தற்காப்புப்  போரென்ற  பெயரில்  இருந்த  இடத்திலிருந்தே  போரிட்டார்கள்.  மேலும்  மக்களைத்  தம்முடன்  கட்டாயப்படுத்தி  வைத்திருந்து  அவர்களின்  பிணங்களைக்  காட்டிப்  போர்நிறுத்தம்  கோரினார்கள்.  எல்லைகள்  சுருங்க  சுருங்க  ஊடறுப்புத்  தாக்குதல்  நடத்தாமலும்,  தப்பிச்  செல்லாமலும்  சிறு  மூலையில்  ஒதுங்கி  தாமாகவே  பொறியில்  சிக்கிக்  கொண்டார்கள்.  இதன்  மூலம்  தமிழர்களுக்குத்  துன்ப  அதிர்ச்சியையும்,  எதிரிகளுக்கு  இன்ப  அதிர்ச்சியையும்  கொடுத்தார்கள்  புலிகள்.  மஹிந்தவே  நக்கலடித்தார்,  நானாக  இருந்திருந்தால்  கொரில்லாப்  போருக்கு  மாறியிருப்பேன்  என்றார்.  கொரில்லாப்  போரில்  உலகம்  காணாத  வகையில்  தம்  எதிரிகளை  வென்றும்  (மரபு  வழிப்போரிலும்  கூட  இலங்கை  இராணுவத்தால்  புலிகளை  வென்றிருக்க  முடியாது  தனியாக  வந்திருந்தால்)  அசைக்கமுடியாத  இயக்கமாக  இருந்த  புலிகள்,  எதிரி  உலக  ஆதரவுடனும்  இந்திய  இராணுவ  உதவியுடனும்  மிகப்பலமாக  முன்னேறிவருகையில்   ஏன்  அரைகுறையான  தமது  மரபு  வழிப்போரில்  ஈடுபட்டார்கள்  என்பது  பிரபாகரனைக்  காட்டிக்  கொடுத்தவர்களுக்கு  மட்டுமே  தெரிந்த  சேதி.  தனது  கடைசி  மாவீரர்  உரையிலும்  பிரபாகரன்  "சிங்களம்  உலக  ஆதரவுடன்  பேரழிவுப்பாதையில்  வருவதாகவும்,  இது  (போர்)  தமக்குப்  புதியனவோ  அல்லது  பெரியனவோ  இல்லையென்றும்  வாசித்தார்."  இது  வழக்கமான  போர்தானென்று  புலிகள்  நினைத்துவிட்டார்களா  ?  அல்லது  முன்பு  நடந்தது  போல்  யாராவது  காப்பாற்றுவார்கள்  என்று  நினைத்துக்  கொண்டார்களா?  1980  களில்  ஜெயவர்த்தனா  காலத்தில் 
வடமராச்சியை சுற்றி வளைத்து  இலங்கைப்  படைகள்  பிரபாகரனை  நெருங்கியிருந்த  போது  இந்திய  மிராஜ்  போர்விமானங்கள்  எல்லை  தாண்டிவந்து  இலங்கையை உணவுப்  பொட்டலங்களை  வீசுவது  என்ற  போர்வையில் ஜெயவர்த்தனவை அச்சுறுத்தின.  இந்திய  இராணுவம்  ஈழத்தை  ஆக்ரமித்திருந்த  போது  சமாதானத்திற்காக  பேச  வந்த  பிரபாகரனைக்  கொன்று  விடுமாறு  இராஜிவ்  இரகசியமாக  உத்தரவிட்டிருந்தார்.  ஒரு  நேர்மையான  இராணுவ  அதிகாரி  ஒருவரால்  அது  நடக்காமல்  தவிர்க்கப்பட்டது.  இந்திய  ராணுவத்திற்குமிடையே  போர்  மூண்டிருந்த  வேளையில்,  பிரபாகரனை  இந்தியப்  படைகள்  நெருங்கியிருந்தன,  அப்போதைய  அதிபர்  பிரேமதாசாவின்  அழுத்தம்  காரணமாகவும்,  இந்தியப்  பிரதமர்  விபிசிங்  முடிவினாலும்  இலங்கையிலிருந்து  இந்திய  இராணுவம்  விலக்கப்பட்டது.  இப்படியாக  சில  முறை  புலித்தலைவர்கள்  காப்பாற்றப்பட்டார்கள்.  இதற்கு  நேர்மாறாக  2000  இல்  என்று  நினைக்கிறேன்.  யாழ்குடாவில்  ஏறக்குறைய  20000  இலங்கை  இராணுவத்தினர்  புலிகளால்  சுற்றி  வளைக்கப்பட்டனர்.  பின்பு  இந்தியாவின்  தலையீட்டின்  பின்னர்  அவர்கள்  தாக்கப்படாமல்  புலிகளால்  விடப்பட்டனர்.  இதுபோல்  இம்முறையும்  யாராவது  தலையிட்டுக்  காப்பார்கள்  என்று  நம்பினார்களா  புலிகள்?   இதைவிடக்கொடுமை  இந்தியாவில்  நடந்த  தேர்தலை  நம்பித்தான்  மே  மாதம்  வரை  தாக்குப்பிடித்தார்களா  ?  மே  13  இல்  இந்தியத்  தேர்தலின்  முடிவுகள்  வெளியான  பின்பு  புலிகள்  ஆயுதத்தை  மௌனித்தார்கள்.  காங்கிரசின்  ஆட்சி  கவிழ்ந்து  பாஜக  ஆட்சியைப்  பிடிக்கும்  பின்பு  போரை  நிறுத்திவிடும்  என்றெல்லாம்  புலிகள்  நம்பியிருக்கிறார்கள்.  அல்லது  அமெரிக்காவோ  ஐநாவோ  தலையிட்டுப்  போர்நிறுத்தம்  செய்யும்  என்றே  புலித்தலைகள்  நம்பியிருக்கிறார்கள்.  சில  மாதங்களுக்கு  முன்னர்  சிறையிலிருக்கும்  முன்னாள்  இராணுவத்தளபதி  பொன்சேகா  "புலிகளிடமிருந்து  கைப்பற்றப்பட்ட  200  கிலோ  தங்கம்  எங்கே  என்று  கேட்டிருந்தார்"  இலங்கை  அரசுக்கு  எதிராக.  ஆக  இதுபோல்  புலிகளிடம்ருந்து  பல  செல்வங்கள்  கொள்ளையிடப்பட்டிருக்கின்றன.  போரின்  இறுதிக்கட்டத்தின்  போதும்  புலிகளால்  மறைத்தும்,  புதைத்தும்  வைக்கப்பட்டிருந்த  போர்க்கருவிகள்  சிங்களப்படைகள்  கைப்பற்றின.  அவையனைத்தும்  பல  கோடிகளுக்கும்  பெறுமானமுடையவை.  இவை  மஹிந்த  கூட்டம்  விற்றுக்  கொள்ளக்காசை  கல்லாக்  கட்டிவிட்டது.  பெயருக்கு  சில  துப்பாக்கிகளையும்,  வெடிகுண்டுகளையும்  காட்டிவிட்டு  அனைத்தையும்  விற்றுக்  காசாக்கியிருக்கிறார்கள்.  இத்தனை  பணத்தையும்,  ஆயுதங்களையும்,  தங்கத்தையும்  மற்றும்  ஆவணங்களையும்  (புலிகளால்  தமிழிலேயே  அச்சிடப்பட்ட  போர்,  போர்க்கருவிகள்,  தந்திரங்கள்  தொடர்பான  நூல்கள்  உட்பட  பலவும்  சிங்களனிடம்  சிக்கின,  இவைகளெல்லாம்  பழைய  தமிழிலக்கியங்கள்  அழிந்தது  போல  வெளிவராமலே  அழிக்கப்படும்)  காப்பாற்றத்தான்  கொரில்லாப்  போருக்கும்  மாறாமல்  உயிரைப்  பணயம்  வைத்து  தற்காப்புப்  போரை  நடத்தினார்களா  புலிகள்  ?.  இப்படி  இவர்களை  அழித்துத்தான்  தற்போது  புலத்திலிருக்கும்  புலியின்  சொத்துக்காக  வெட்டுக்  குத்தை  நடத்திக்  கொண்டிருக்கிறார்கள்  தற்போதைய  புலிக்குழுக்கள்.  யாரின்  வழிகாட்டுதலால்  புலிகள்  இறுதிவரை  கொரில்லாத்  தாக்குதல்  நடத்தாமல்  இருந்த  இடத்திலேயே  இருந்து  போரிட்டு  எதிரிக்கு  வேலையை  எளிதாக்கினார்கள். 


புலிகளை  இப்படி  முட்டுச்சந்தில்  சிக்கவைத்துவிட்டு,  இணையங்கள்  மூலமாக  புலிகளைத்  தோற்கடிக்கவே  முடியாதென்றும்,  அவர்கள்  தற்காப்புத்  தாக்குதல்  நடத்திவருகிறார்கள்  சிங்கள  இராணுவத்தை  உள்ளே  விட்டு  அடித்துவிடுவார்கள்,  பின்வாங்கித்  தாக்கப்போகிறார்கள்  என்றெல்லாம்  கட்டுரைகளை  எழுதித்  தள்ளினார்கள்.  உண்மையில்  புலிகள்  தாக்குப்பிடிக்க  முடியாமல்தான்  பின்வாங்கிக்  கொண்டிருந்தார்கள்.  புலிகள்  தமது  கட்டுப்பாட்டுப்  பகுதிகளிலிருந்து  அப்புறப்படுத்தப்பட்டு  பின்பு  கிளிநொச்சிக்குள்  முடக்கப்படும்  வரை  இந்தக்  கதைகளையே  சொன்னார்கள்.  பின்பு  ஜனவரியில்  கிளிநொச்சி  வீழ்கிறது.  அங்கிருந்த  அனைவரும்  புலிகளுடன்  முல்லைத்தீவுக்குள்  முடங்கினர்.  புலிகள்  "ஆளில்லாத  நகரத்தைத்தான்(கிளிநொச்சி)  இலங்கை  இராணுவம்  கைப்பற்றியிருக்கிறது,  சேதத்தைத்  தவிர்க்கவே  கிளிநொச்சியிலிருந்து  பின்வாங்கியதாகவும்"  கூறினார்கள்.  பின்பு  முல்லைத்தீவு,  புதுக்குடியிருப்பு  என  வரிசையாக  வீழத்தொடங்கின,  அப்போதும்  புலிகள்  கொரில்லாப்  போரில்  ஈடுபடாமல்,  விமானத்திலேயே  தற்கொலைத்தாக்குதலை  நடத்தினர்.  இப்படி  ஒவ்வொன்றாக  இழந்தபின்பு  சில  கிலோமீட்டர்களுக்குள்  வளைக்கப்பட்ட  புலிகள்  சரணடந்தனர்,  பலர்  கொல்லப்பட்டனர்.  முதலில்  சிங்களனால்  புலிகளை  வெல்லவே  முடியாது  என்றனர்,  புலிகள்  தாக்குப்பிடிக்கமுடியாது  பின்வாங்கியபோதும்,  அதை  தந்திரோபாயப்  பின்வாங்கல்  என்றனர்,  புலிகள்  பெருமளவு  சேதத்தைக்  கண்டபின்னர்,  புலிகளை  அழிக்கமுடியாது  என்றனர்,  கிட்டத்தட்ட  அழிவின்  விளிம்பிற்கு  வந்தபின்னர்  பிரபாகரனைப்  பிடிக்கமுடியாது  என்றனர்,  பிரபாகரன்  கொல்லப்பட்ட  பின்னரோ  பிரபாகரன்  தப்பி  விட்டார்,  இனி  வந்து  ஈழம்  பெற்றுக்  கொடுப்பாரென்றனர்.  இப்படியாக  புலிகளை  வெல்லமுடியாது  என்பதிலிருந்தை   பிரபாகரன்  தப்பிவிட்டாரென்பது  வரை  எப்படி  தமிழர்களின்  உளவியல்ரீதியாக  நம்பவைத்துள்ளனர்.  தமிழர்களால்  அதிகம்  நேசிக்கப்பட்ட  ஒரு  தலைவனுக்கு  தமிழர்கள்  தமது  ஒரு  சொட்டுக்  கண்ணீரைக்  கூட 
சிந்தாமல்  போனதுதான்  வரலாற்றின்  விந்தை.  சென்ற இருபத்தைந்து வருடங்களில் கொல்லப்பட்ட, அல்லது வீரச்சாவடைந்த புலிகள்,  தலைவர்கள் எடுத்துக்காட்டாக திலீபன், குட்டிமணி, ஜெகன், கிட்டு, தமிழ்செல்வன் போன்றவர்களின்  முடிவுகள் தமிழர்களிடம் விளக்கமாக எடுத்துரைக்கப்படுகின்றன, அதே நேரம் பெரும்பான்மைத் தமிழர்களால் அதிகம் மதிப்புடன் நேசிக்கப்பட்ட பிரபாகரன் (மற்ற தலைவரகளும்),  எதிரிகளின் முற்றுகையில் சிக்கவைக்கப்பட்டு நயவஞ்சகமாகவும், கொடூரமாகவும் குடும்பத்துடன் கொலை செய்யப்பட்டதை மறைப்பதன் நோக்கம்தானென்ன ? அவர் பெயரைச் சொல்லிப் பிழைப்பது அன்றி வேறென்ன இருக்கமுடியும் ? தாமிருந்த வரை புலிகள் மற்றவர்களுக்கு நிகழ்த்திய கொடுஞ்செயல்களை மறைத்தவர்கள், நியாயப்படுத்தியவர்கள், விமர்சனம் செய்யாதவர்கள், பாராமுகமாக இருந்தவர்கள் இப்போது அதே போல் புலிகளுக்கு நிகழ்ந்த கொடுமையை மறைப்பதில் என்ன ஆச்சரியம் இருக்க முடியும். 


பிரபாகரன் உடல் பரிசோதனை (இளகிய மனமுடையவர்கள் பார்க்க வேண்டாம் )


Download As PDF
Bookmark and Share

Post Comment