கொங்கு வேளாளக் கவுண்டர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கொங்கு வேளாளக் கவுண்டர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஜாதியத்தின் போலிப் பெருமை

கட்செவி அஞ்சலில் எனக்கு ஒரு படம் வந்திருந்தது. அதில் கவுண்டர்கள் குறித்து எழுத்தாளர் ஜெயமோகன் தனது கட்டுரையில் சொல்லியிருந்ததை திரைச்சொட்டு(screenshot) எடுத்து உருவாக்கப்பட்டிருந்தது. அதில் அவர் சொல்லியிருக்கும் கருத்து அபத்தத்தின் உச்சம். அதை பரப்புகிறவர்கள் ஜாதிப்பிரியர்கள், ஜாதிவெறியர்கள், ஜாதிவிரும்பிகள், ஜாதித்துதிபாடிகள் மொத்தத்தில் ஜாதிகள். தங்களது ஜாதியை ஒருவர் பெருமையாகச் சொன்னால் எந்த ஜாதிக்குதான் இனிக்காது சொல்லுங்கள்.  இதுதான் எனக்கு வந்த புகைப்படச் செய்தி. இதில் ஏதாவது அடிப்படை உண்மை இருக்கிறதா ? இதைப் பரப்புகிறவர்கள் நோக்கம் என்ன ? இதில் இருப்பதை எப்படி நம்புகிறார்கள். இதை நம்புவது அவர்களின் நம்பிக்கைக்கே எதிரானது அன்றோ ? ஜாதி என்றாலே தன்னைச் சார்ந்த கூட்டத்தை மட்டுமே நம்மவர்கள், நம்ம சனம், நம்மாளுங்க என்றெல்லாம் குழுவாகச் சிந்திப்பது மட்டுமல்லாமல் பிற ஜாதிகளை கீழாகப் பார்ப்பதுதான் ஜாதியம். அவர்களில் சில ஜாதிகளை இழிவாக அடிமைகளைப் போல் நடத்துவதுதான் ஜாதியம்.

                               

கொங்கு பகுதியில் இருப்பவர்களுக்கு ஒரு தனிப்பெருமிதம் உண்டு. ஜாதிப் பெருமிதம்தான். கோவை மரியாதைக்குப் பெயர் பெற்றது என்ற பொய்யும் அப்படி வந்ததுதான். கோயம்பத்தூரில் சந்திப்பவர்களில் என் ஜாதியையும் குலத்தையும் கேட்காதவர்கள் குறைவு. அங்கே ஆண்கள் பெண்கள் குழந்தைகள் கூட ஜாதிய மனநிலையில்தான் இருக்கிறார்கள். இளைஞர்களைப் பற்றி சொல்லவே தேவையில்லை. எங்கோ பெருநகரங்களில் தகவல் தொழில்நுட்பம் போன்ற உயர்ந்த பணிகளில் இருப்பவர் முதல் தமது விவசாயத் தொழிலில் ஈடுபடுகிற இளைஞர்கள் வரை எல்லாரும் கவுண்டன், கொங்கு, இதுமாதிரியான பெயருடைய கட்செவி அஞ்சல்(வாட்ஸப்) குழுவில் இருப்பார்கள். மற்ற ஜாதியினரைக் இவர்களுக்குள் குறிப்பிட்டுப் பேசுகிற போது, அந்தக் குறிப்பிட்ட நபரின் பெயரைச் சொல்லிக் குறிப்பிடுவதை விட அவர்களின் ஜாதிப் பெயரைத்தான் சொல்வார்கள். தேவர் சொன்னார், நாடார் கேட்டார், முதலியார் வரக் காணமே, செட்டியார் எங்கே இப்படியெல்லாம் சொல்வார்கள்.  கோவையைத் தாண்டிய பகுதிகளில் இவையெல்லாம் மிகவும் சாதாரணம். ஏன் கோவையைச் சொல்கிறேனென்றால் கோயம்பத்தூரை வைத்துத்தான் மரியாதையை அடையாளப்படுத்துகிறார்கள்.

கொங்கு பகுதி மட்டும்தான் திராவிடக் கட்சிகளின் ஆட்சியினால் இல்லாமல் உழைப்பால் உயர்ந்த பகுதியாம். அதாவது கவுண்டர்கள் கடுமையாக உழைத்ததால்தான் கொங்கு பகுதி முன்னேறியதாம். அங்கே இருக்கும் மற்ற ஜாதியினர் கூடத்தான் கடுமையாக உழைத்தார்கள். கவுண்டர்களின் தோட்டங்களில் கூலிக்கு வேலை செய்து அவர்களின் முன்னேற்றத்திற்குக் காரணமானவர்கள் கூட வேறு ஜாதியைச் சேர்ந்தவர்கள். அதில்லாமல் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டத்திலிருந்தும், முன்னேறாத பகுதிகளிலிருந்து வந்தும் பலர் (திருப்பூர் போன்ற பகுதிகள்) கொங்கு பகுதியை தமது உழைப்பினால் உயர்த்திக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் பெருமையை மட்டும் ஒரு பிரிவினர் எடுத்துக் கொள்கிறார்கள். இவர்கள் கட்டும் வரியை இவர்களுக்கு இல்லாமல் மற்ற மாவட்டங்களுக்கும் ஒதுக்குவதால் இவர்கள் தனி மாநிலம் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஏன் ஆண்டபரம்பரை தனிநாடு கேட்கவில்லை என்பதுதன் காரணம் தனி. அப்படி ஒரு தனிமாநிலம் ஜாதியின் பேரில் அமைந்தால் அது எத்தகு கொடுமையாக இருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள்.

ஒரு கொங்கு இளைஞனின் குமுறல்
இவர்கள் மற்ற ஜாதிகளுக்கு இணக்கமானவர்களாம், ஒற்றுமையைப் பேணுகிறவர்களாம். அவர்களே சொல்லிக் கொள்கிறார்கள். இணக்கமும் பண்பானவர்களாயும் இருப்பவர்களாக ஜெயமோகன் போன்றவர்களும்   சொல்வார்கள். ஆமாம் ரொம்ப இணக்கமானவர்கள், கவுண்டர்களும் அவர்கள் வீட்டு குழந்தைகள், பெண்கள், இளைஞர்கள் தாழ்த்தப்பட்ட ஜாதியினர் பெரியப்பா, தாத்தா வயது பெரியவர்களாக இருந்தாலும் பெயர் சொல்லியும் வாடா போடா என்றுதான் அழைப்பார்கள். தங்கள் தோட்டங்களில் வேலை செய்ய வருபவர்களுக்கு கொட்டாங்கச்சி (அ) தேங்காத்தொட்டியில் தண்ணீர்/தேநீர் கொடுப்பார்கள். அதை எருமை மாடு கட்டப்படும் கட்டித்தாரையின் கூரையில் சொருகி வைத்திருப்பார்கள். இல்லையென்றால் இவர்கள் ஊற்றுவதை இரண்டு கைகளால் ஏந்தி வாயில் வைத்துக் கொண்டே தண்ணீரைக் குடிக்க வேண்டும். வீட்டுக்கு வெளியில் வாசலில்/கட்டாந்தரையில் உட்கார வைத்துத்தான் சோறு போடுவார்கள். அவர்கள் வீட்டில் சாவு நடந்தால் தாழ்த்தப்பட்டவர்கள் வந்து இழவு வீட்டுக்காரர்களின் காலில் விழுந்து எழவு கேட்க வேண்டும். தாழ்த்தப்பட்டவர் வீட்டில் எழவானால் அதற்கும் தாழ்த்தப் பட்டவர்களே சென்று துண்டை ஏந்தி அவர்கள் தருவதை வாங்க வேண்டும். புழங்கற ஜாதியில்லையென்றால் இதுதான் இன்றும் கொங்கில் நடந்து வருகின்றது. இவர்களின் வட்டார வழக்குதான் தமிழிலேயே சிறந்தது போலவும், மரியாதைக்குரியது என்றும் எல்லோரும் நம்புவது என்னவொரு முரண்நகை. ஏனுங்க என்று இனிமையாக விளித்ததால் மட்டுமே அவர்கள் பண்பாளர் என்று நம்பிவிடாதீர்கள். ஜாதி என்ற அடையாள நம்பிக்கைதானே இதையெல்லாம் நியாயப்படுத்துகிறது.

ஜாதிக்குப் புதுப்புது விளக்கங்கள் கொடுக்கப்படும் காலம் இது. ஜாதியை இனம் என்பது, இனக்குழு என்பது, ஜாதியே பண்பாடு என்பது, ஜாதியை இனமீட்பு என்பது முதல், ஜாதிக்குத் தனி மாநிலங்கள், தனி நாடுகள் கேட்கும் காலம் இது. அதனால்தான் ஜெயமோகனும் இப்படி அடித்து விடுகிறார். இதை அந்த ஜாதியைச் சேர்ந்தவர்கள் பெருமையாகக் கருதுகின்றனர். கவுண்டர்கள் மட்டும்தான் மற்ற ஜாதிக்கு இணக்கமானவர்களா ? மற்ற ஜாதியினர்கள் இணக்கமானவர்கள் இல்லையா என்ற கேள்வி ஒருபுறமிருந்தாலும், இதைக் கவுண்டர்களே நம்ப மாட்டார்கள். இணக்கமானவர்கள் என்றால், இவர்கள் பட்டியல் ஜாதியினர்க்கு இணக்கமானவர்களா ? அவர்களை சமமாக நடத்துவார்களா ? மனிதர்களாக மதிப்பவர்களா ? என்பதற்கு ஒரிரு வருடங்களுக்கு முன்பு எடுக்கப்பட்ட இன்னொரு திரைச்சொட்டு பதில் சொல்லும். இதைக் கூறியவர் ஒரு கல்லூரி மாணவர். இதன் வாயிலாக ஒரு ஜாதியைக் குறித்து அவர்களின் பழக்கவழக்கங்கள், பண்பாடு, பிற ஜாதியிடம் காட்டும் ஜெயமோகன் சொல்லும் அந்த "இணக்கம்" என்பதைப் புரிந்து கொள்ளலாம். எனக்கு வந்த ஒரு புகைப்படத்தையும், கிடைத்த ஒரு புகைப்படத்தையும் இணைத்துள்ளேன் இதைக் காண்பவர்கள் ஜாதியைக் குறித்து ஒரு முடிவுக்கு வாருங்கள். 

                               

Download As PDF
Bookmark and Share

Post Comment

ஜாதி



இந்துக்களே இந்துவைக் கொன்றிருக்கிறார்கள்
தமிழர்களே தமிழனைக் கொன்றிருக்கிறார்கள்
திராவிடர்களே திராவிடனைக் கொன்றிருக்கிறார்கள்

எந்த சித்தாந்தத்தையும் ஏற்றுக் கொள்ளுங்கள்
எவனையும் தலைவனாகக் கொள்ளுங்கள்
மதத்தையும் மாற்றிக் கொள்ளுங்கள்
எவ்விறையையும் வழிபடுங்கள்
எக்கேடும் கெட்டுப்போங்கள்
ஜாதி மட்டும் மாறாதீர்கள்
மாறினாலும் மாற முயன்றாலும்
மரணிப்பீர்கள்

எத்தகு தீயதும் ஜாதியால் அரவணைக்கப்படும்
எத்தகு புனிதமும் ஜாதிமாறினால் அழிக்கப்படும்

எனது விந்து எங்கும் ஊர்மேயலாம்
எந்த ஜாதியின் பிறப்புறுப்பிலும்
நீந்த்திச் செல்லலாம் கருமுட்டையுடனும்
வினைபுரியலாம் ஆயினும்
அது எனது ஜாதியின் மகவையே தரும்

உனது கருப்பை பிறனின் விந்தை சுமக்கலாகாது
அது எனது ஜாதியின் விந்தை மட்டும்
சுமக்கவே பணிக்கப்பட்டது
இப்புனித நியமங்களின் படியே வாழ உனக்குண்டு உரிமை
இதற்குள்ளாக நீ மகிழ்ந்து கொள்ளவும்
உமிழ்ந்து கொள்ளவும்

இதிலிருந்து வெளியே சென்று நீ காதல் கொண்டால்
நாங்கள் அவன் உயிர் கொல்வோம் உன்னை மீளவும் கொள்வோம் அன்றேல்
உன்னையும் கொல்வோம்
நீ என் வித்துதான்
அதனாலென்ன
நான் வாழ்வது ஜாதியால்
ஜாதி வாழ்வது என்னால்

Download As PDF
Bookmark and Share

Post Comment

எழவூடு

ஜாதி என்பது எப்படி இயங்குகிறது. ஒரே ஜாதியில்தான் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்பது முதல் விதி. பிறகு, சில ஜாதிகளுடன் குறிப்பிட்ட எல்லை வரை பழகலாம், இயங்கலாம், உண்ணலாம் உறங்கலாம் என்று நீளும். ஜாதி பல வகையில் வெளிப்படும். அதில் ஒன்றுதான் இறப்பு வீட்டில் தாழ்த்தப் பட்டவர்கள் துக்கம் கேட்கும் விதம்.

எழவு வீடு என்றால், வயதாகி இறந்தவர் என்றால் பெரிய அளவில் துக்கம் வழிந்தோடாது. வீட்டிற்குள் மட்டும் பெண்களின் அழுகைச் சத்தம் கேட்கும். ஆண்கள் யாரும் வரும் உறவினர்களிடம் கட்டிப் பிடித்து அழுவதில்லை. வெளியே உட்கார்ந்து கொண்டு அன்றைய சூடான அரசியல் விவாதங்களையும், வேறு ஏதாவதும் பேசிக் கொண்டிருப்பார்கள்.

துக்கம் விசாரிக்க யாரேனும் வந்தால், இறந்தவரின் மகனோ அல்லது அவரது உடன் பிறந்தவரின் மகனோ, தம்பியோ முன்னால் அமர்ந்து வருபவருக்கு வணக்கம் சொல்லி விசாரிப்பார்கள். வணக்கம் சொல்வது எப்படியென்றால், இழவு கேட்க வருபவர், இழவு வீட்டாரின் கையைத் தொட்டு வணங்கிக் கொள்வார்கள். அவர் கையைத் தொடும்போது இவர் (இறப்பு வீட்டுக்காரர்) கையை ஏந்தியவாறு வைப்பார் (துக்கம் கேட்க) வருபவர் அதைத் தொட்டுக் கும்பிடுவார்கள். பின்பு இருவரும் அருகருகே அமர்ந்து என்ன ஏது எப்படி நடந்தது, இறந்தவர் எத்தனை நாட்களாகப் படுக்கையில் இருந்தார், எந்தெந்த மருத்துவமனைக்குச் சென்றீர்கள், எத்தனை செலவாச்சு என்றெல்லாம் பேசிக் கொள்வார்கள். பின்பு பேச்சு அவரவர்களின் சொந்தப் பிரச்சனை குறித்தோ, அல்லது தொழில் குறித்தோ திரும்பி விடும். முதல் நாள் இழவு வீட்டில் இருக்கும் துக்கம் இரண்டாவது நாள் இருக்காது. வெறுமனே ஒரு திருமண வரவேற்பு முடிந்த பின்னர் இருப்பது போல்தான் இருக்கும்.

இப்படி ஒரு நாளில்தான் நானும் சென்றேன். கெக்கே பிக்கே என்று அரட்டையடித்துக் கொண்டும் சிரித்துக் கொண்டும் இருந்தார்கள். இறந்தவரின் தம்பிதான் துக்கம் கேட்க வருகிறவர்களை வரவேற்றுக் கொண்டிருந்தார். அப்போது ஒரு பெண் வந்தார். வந்தவர் அழுகையுடன் இறந்தவரின் தம்பியின் காலில் விழுந்து அழுதார்.

"அந்த மகராசன் எங்களுக்கு எத்தனை பண்ணினார், கேக்கறப்பெல்லாம் எத்தனை தடவை எங்களுக்குக் காசு குடுத்தார்"  என்றெல்லாம் என்று என்னென்னவோ சொல்லி, இழுத்து இழுத்து  அழுதார். (காலில் விழுந்தவாறேதான்). அதற்கு அந்த மனிதரோ,  "சரி சரி விடு விடு, வயசாயிடுச்சு போயிட்டார். எல்லாரும் ஒரு நாளு சாகறதுதானே. எல்லாரும் ஒரு நாள் போய்த்தானே ஆகணும்' என்றார். பின்பு அதே போல் இன்னும் ஒரு மொக்கையான வசனத்தைப் பேச அதையும் நகைச்சுவையென்று ஆதரித்து இரண்டொருவர் சிரித்து வைத்தனர். பின்னர் அந்தப் பெண் போய் அந்த வீட்டின் மாட்டுத் தொழுவத்தைக் கூட்டிப் பெருக்கத் தொடங்கினார்.

நான் என்ன சொல்ல வருகிறேன் என்று புரிகிறதா ? அந்த வீடு ஒரு மேல்ஜாதிக்கார (கொங்கு வேளாளக்கவுண்டர்கள்) வீடு. அந்தப் பெண் தாழ்த்தப்பட்ட ஜாதியைச் சேர்ந்தவர். இப்படி இழவு வீட்டிலும் அந்தப் பெண் வந்து செத்துப் போனவனின் சொந்தக்காரன் காலில் விழுந்துதான் "துக்கம் கேட்க" வேண்டியிருக்கிறது.  என்ன கேவலம். இப்படி துக்கம் கேட்க வருவோரே காலில் விழுந்துதான் எழவேண்டும் என்பது என்ன வகை உணர்வு ? சடங்கு சம்பிரதாயம் ? ஆண்ட பரம்பரைக் கனவில் மிதப்பவர்கள் இது போன்ற இழிசெயல்களை எப்படி நியாயப்படுத்துகிறார்கள். இந்த மேல் ஜாதி உணர்வு என்பது ? இப்படி அடுத்த மனிதனை பிறப்பிலிருந்து இறப்பு வரைக்கும் தள்ளி வைத்து, அவனை அவமானப்படுத்து உணர்வே ஜாதி. 

நன்றி - புகைப்படம்  ஃபேஸ்புக்கில் சங்ககிரி ராஜ்குமார் (திரைப்பட இயக்குநர்) பகிர்ந்தது. இந்தப்படத்திற்கும் நான் எழுதியிருக்கும் கருத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. ஆனால் ஜாதி என்பது எப்படி இருக்கும் என்பதற்கு இது ஒரு உதாரணம். ஏனென்றால் பலரும் ஜாதியை ஏன் எதிர்க்கிறார்கள், அது வெறும் அடையாளம்தானே இருந்துவிட்டுப் போகட்டுமே என்றும் நினைக்கக்கூடும். ஆனால் அது எந்த வகையிலும் ஏற்கத் தக்கதல்ல என்பதற்கு இந்தப் படமே உதாரணம். கிராமங்களில் மேல்ஜாதிக்காரர்களின் தேநீர் கடையோ வீடோ, இன்றும் இப்படித்தான் தாழ்த்தப்பட்டவர்கள், தண்ணீர் குடிக்க வேண்டுமெனில் இப்படித்தான் இரு கைகளாலும் வாயில் வைத்துக் குடிக்க வேண்டும். மேல்ஜாதிக்காரர்களின் பாத்திரத்தில் குடிக்கக் கூடாது. இல்லையெனில் அவர்களுக்கென்று கொட்டாங்குச்சியையோ, தனிக் குவளையோ தனியாக எடுத்து வைத்திருப்பார்கள். யூஸ் அன்ட் த்ரோ காகிதக் குவளைகள் வந்ததால் இது அதிகமாக வெளியே தெரியாமல் நடக்கிறது. எங்கள் ஜாதிக்காரர்கள் இப்படி ஒரு மனிதனை நடத்த மாட்டார்கள் என்று எந்த ஆண்ட பரம்பரை ஜாதி வெறியனாவது சொல்ல முடியுமா ? இல்லை இது எங்கள் ஊரில் இல்லை என்று மறுக்கத்தான் முடியுமா ?
இதற்கெல்லாம் என்ன மரியாதை வேண்டிக் கிடக்கிறது. இந்த இழிபிறவிகளின் வக்கிர உணர்வே ஆண்ட பரம்பரைப் பெருமையெல்லாம். இல்லாதப் பட்டவர்களை அதிகாரம் செய்து திரியும் இவர்கள் தங்களை மேல் ஜாதியினர் என்று பீற்றீக் கொள்கிறார்கள். எல்லா மேல் ஜாதிகளின் உணர்வும் இப்படித்தான் இருக்கிறது. இந்த "உணர்வு"க்குப் பேரும் "உணர்வுதான்". இதையெல்லாம் வேடிக்கை மட்டும் பார்க்கும் என்னையும் சேர்த்துத்தான் சொல்கிறேன். ஜாதி என்பது எந்தக் கோணத்திலும் மன்னிக்க இயலாதது. இவர்களுடன்தான் நானும் வாழ்ந்து இறக்கவேண்டும் என்பது எனக்கொரு தண்டனை.

ஆனால் எந்தக் கவுண்டரும் (மற்றெல்லா மேல் ஜாதிக்காரர்களும்தான்), கீழ்ஜாதிக்காரன் விவசாய வேலை செய்து விளைந்த காய்கறிகளை நான் உண்ண மாட்டேன், அவன் தொட்ட பணத்தை
தொட மாட்டேன் என்று சொல்ல மாட்டான். தனக்கு சாத்தியமான எல்லா விதங்களிலும் முற்போக்காக நடப்பான். ஆனால் தாழ்த்தப்பட்ட ஜாதியில் பிறந்த மனிதனை மட்டும் மனிதனாகவே மதிக்க மாட்டான்.

Download As PDF
Bookmark and Share

Post Comment

"ஜி" போடுது கொங்குநாடு

தலைப்பைப் படித்து பெரிதாக யாரும் குழப்பிக் கொள்ளத் தேவையில்லை. ஓ போடுவது ஜே போடுவது ஜால்ரா போடுவது, ஆமாஞ் சாமி போடுவது, சோப்புப் போடுவது, கடலை போடுவது, அறுவை போடுது, ரம்பம் போடுவது, மொக்கை போடுவது, சீன்(scene) போடுவது என்றெல்லாம் கேள்விப்பட்டிருப்போம் இல்லையா. அது போலவே டீ போட்டுப் பேசுவது, டா போட்டுப் பேசுவது, சார்(sir) போட்டுப் பேசுவது என்பனவும் நமக்குத் தெரியும். தற்காலத்தில் தமிழ்நாட்டில் பலர் ஒன்றைப் போட்டுப் பேசுகின்றனர். அது என்னவென்பதைத்தான் தலைப்பாகக் குறிப்பிட்டிருக்கிறேன்.

கொங்கு நாடு கேள்விப்பட்டிருப்பீர்கள். கோவை, திருப்பூர், கரூர், ஈரோடு, போன்ற சில மாவட்டங்களை சேர்த்து கொங்கு நாடு என்று குறிப்பிடுவார்கள். அந்தப் பகுதிகளில் வழங்கும் தமிழ் வட்டார வழக்கும் கொங்கு தமிழ் என்றே வழங்கப்படுகிறது. "ஏனுங்" "சரிங்" "வாங்" "போங்" "ஙோவ்" அந்த க என்ற எழுத்தைச் சொல்கிறார்களா இல்லையா என்ற குழப்பம் வருகிற மாதிரி உச்சரிப்பார்கள். அதுவே கொங்கு தமிழின் அழகு எனலாம். இதை கிண்டல் செய்கிறேன் பேர்வழி என்று பண்பலை வானொலி நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குகிறவர்கள், சில திரைப்படங்கள் ஏனுங்கோ வாங்கோ போங்கோ என்று ஏற்றிச் சொல்லி அப்படிப் பேசுவதுதான் கோயமுத்தூர் தமிழ் என்று உயிரை வாங்கோ வாங்கென்று வாங்குவார்கள்.

என்னுடையது உன்னுடையது, என்பதை என்றது, உன்றது என்றும் சொல்வர். "என்றா கண்ணு சொல்லிப்போட்ட நீயி" என்ற குடும்பம், உன்ற புருசன் என்றெல்லாம் கே.எஸ். ரவிக்குமார் படங்களில் வரும் பெரிய மனுசன்மார்களின் வசனத்தையும் கேட்டிருக்கிறோம். என் + தன் = எந்தன் உன் + தன் = உந்தன் என்றுதான் கவிஞர்கள் பலரும் குறிப்பிடுகிறார்கள். ஆனால் உண்மையில் என்+தன் என்பது என்றன் உன்+தன் என்பது உன்றன் என்றுதான் குறிப்பிட வேண்டுமாம்.  (நன்றி - கவிஞர் மகுடேஸ்வரன்) சரி அது கிடக்கட்டும். எல்லாரும் ஒரு விடயம் சொல்வார்கள். கோயமுத்தூர்காரர்கள் மரியாதை உள்ளவர்கள். கோயமுத்தூர் மரியாதைக்குப் பெயர் பெற்ற ஊர் என்றெல்லாம் கூறுவார். மற்ற ஊர்க்காரர்கள் எல்லாம் மரியாதை தெரியாதவர்களா என்ன ? அவர்கள் மொழி நடை, வட்டார வழக்கு அடுத்தவர்களுக்கு மரியாதை தருவதாகத் தெரிகிறது. அவ்வளவே கேட்பதற்கு நன்றாக இருக்கிறது என்பது தாண்டி கோவை மரியாதை தரும் ஊர் என்பதெல்லாம் "தமிழ் உலகின் மொழி", "கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே முன்தோன்றிய" போன்ற பழமொழிகளைப் போன்றே வெறும் கேட்பதற்கினிய வதந்தி தான் .

கோவையைத் தாண்டி சற்று ஊர்களுக்குச் சென்று பார்த்தான் தெரியும். பேரன் வயது மேல்ஜாதிச் சிறுவனை தாத்தா வயது கீழ்ஜாதிக்காரர் வாங்க போங்கவென்றுதான் அழைக்க வேண்டும். பேரன் வயது மேல்ஜாதிச் சிறுவன் அப்பா வயது கீழ் ஜாதிக்காரரை பெயர் சொல்லியும், சமயத்தில் வாடா போடாவென்றும் அழைக்கும் அளவுக்கு மரியாதை உள்ள ஊர். அந்தப் பெருமையைச் சொல்லி சிலிர்ப்பவர்கள் இதையும் சொல்ல வேண்டும் அல்லவா ? நமக்கு நடப்பை விட கனவுலகில் இருக்கும் மணித்திருநாடுதானே வேண்டும் போலிப்பெருமை கொள்ள ? ஆனால் கொங்கு நாடு என்பது உண்மையில் மணித்திருநாடாக (utopia)  இல்லாமல் (ஜாதிப்) பிணிமிகு நாடாக (dystopia) அன்றோ இருக்கிறது.

தலைப்புக்கு வருகிறேன். நாம் எல்லோரும் மரியாதையா ஒருவரை விழிப்பதென்றால் எப்படி விளிப்போம். வாங்க போங்க என்றும் நபரின் பெயர் சொல்லியும் அல்லவா ? தற்போது கோவையில் பலரும் பெயருக்குப் பின்னால் ஜி போட்டுத்தான் அழைக்கிறார்கள். 20 வயது கூட நிரம்பாதவர்கள் கூட இப்படிப் பேசிப் பழகியிருக்கின்றனர். என்னய்யா இது ஒரு வசதிக்காக மரியாதைக்காகவும் "ஜி" போட்டுப் பேசுவது தவறா என்று சிலர் எண்ணக் கூடும். நாம் எல்லோரையும் சார் போட்டு அழைக்கிறோமே அதுவே என்ன ஒரு இழிவு தெரியுமா நான் மேற்சொன்ன ஜாதி இழிவைப் போலத்தான். ஆங்கிலேயர் நம்மை ஆண்ட போது அவர்களை அண்டிப் பிழைத்தவர்கள் எல்லாம் இந்த "சார்" என்ற சொல்லைப் பயன்படுத்தித்தான் அவர்களிடம் இளித்து நின்றனர். ஆங்கிலேயர் போன பின்னரும் இந்த "சார்" நம்மை விடவில்லை. நமது எஜமானர்களை அழைக்கப் பயன்படுத்தி வருகிறோம். சார் என்றால் என்ன "Slave I Remain" என்று பொருளாம். ("Servant I Remain"  என்றும் பொருள்)

அவ்வப்போது என்னுடைய உறவினர் ஒருவர் மற்றவர்களை பேச்சினைடையே இப்படி அழைப்பார். அவர் பேசிக்கொண்டிருக்கும் நபரின் பெயர் மணி என்றால் " மணி "ங்க" இங்க பாருங்க. அதெல்லாம் சரிதாங்க" இது எனக்கு ரொம்பவும் விநோதமாகத் தெரிந்தது. இது மாதிரி வேறு யாரும் அழைத்ததாகத் தெரியவில்லை.

தேவையில்லாத இடங்களில் கூட, வேண்டுமென்றே ஜி ஜீ என்று பெயருக்கு முன்னரும் பின்னரும் சேர்த்துப் பேசத் துணிகின்றனர்.  திரைப்பட விழாக்களில் நடிகர்கள் மாற்றி மாற்றி அந்த சார் இந்த சார் என்று அறுத்தெடுக்கிறார்கள். அது போலவே இப்போது ஜி போட்டு விளிப்பது மிகவும் சர்வசாதரணமாகி வருகிறது.

இல்லீங்ஜி
ஆமாஞ்ஜி
ஜி என்ன இது
சரிங் ஜீ
வரட்டுமா ஜி
பாய்ஜி

ஆரம்பிக்கும்போதும் "ஜி"ல ஆரம்பித்து முடிக்கும்போதும் "ஜி" யிலேயே முடிக்கிறார்கள். ஒருவரை பெயர் சொல்லிக் கூட அழைப்பதில்லை, ஜீ மட்டுமே போதுமாயிருக்கிறது. பத்துப் பதினைந்து வருடங்களுக்கு முன்பெல்லாம் நம்மை விட மூத்த பெண்களை நாம் என்னவென்று அழைப்போம். அக்கா என்றுதானே ? ஆனால் தற்போது பாருங்கள் எல்லாரும் 30 வயது நடிகைகள், கொஞ்சம் மூத்த பெண்கள், திருமணமான பெண்களைக் கூட "ஆன்ட்டி" என்றே அழைக்கின்றனர். ஆன்ட்டி என்பது பெண்களை வயதானவர்கள் என்று சொல்லாமல் சொல்லும் கேலிக்குரிய பெயராகிவிட்டது.

முஸ்லிம்களைக் குறிப்பிடும்போது பாய் என்கிறோமே ஏன் ? ஹிந்தியில் பய்யா என்றால் அண்ணா என்று பொருள். முஸ்லிம் என்றாலே உருதுவில் பாய் என்றழைத்து அதுவே அவர்களின் அடையாளமுமாகிவிட்டது. தமிழ் முஸ்லிம்களைக் கூட பாய் என்றே அழைக்கிறோம். முஸ்லிம்களே கூட அவர்களிடையே பாய் என்று அழைத்துக் கொள்வதுமுண்டு. இதே போல் இந்த ஜீ என்பதும் வளர்ந்து வருகிறது. முதலில் வட இந்தியர்கள் மட்டும் பயன்படுத்தியது போய், வட இந்தியர்களிடம் பேசும்போது மட்டும் நாம் பயன்படுத்திய ஜி, தற்போது தமிழர்களிடையேயும் பரவிவருகிறது. நானும் கூட இப்படிப் பேச வேண்டி இருக்கிறது சமயத்தில். இணையத்தமிழர்களும் கூட ஜி போட்டு எழுதுகின்றனர்.

இதன் முக்கியக் குற்றவாளிகளாக இந்துத்துவா இயக்கத்தையே நான் குற்றம் சாட்டுகிறேன். ஏனென்றால் இவர்கள்தான் மொழிவாரி மாநிலம் என்பதையே ஏற்காதவர்கள். நம் பிரதமர் உட்பட. இந்தி, செங்கிருதம் போன்ற மொழிகளைக் கற்பிப்பது கட்டாயமாக்கப்பட வேண்டும் என்பவர்கள். மாநாடுகள், பாராட்டு அறிக்கைகள், போராட்ட முழக்கங்கள் உட்பட அனைத்திலும் கூட ஜீ என்ற எழுத்தைப் போட்டுத்தான் சுவரொட்டிகள் அச்சடித்து ஒட்டுகின்றனர். சுவரெழுத்துக்களிலும் கூட ஜி என்பது சேர்ந்து விட்டது. ஏன் இவர்கள் அறிவிப்பு முழுவதையும் ஹிந்தியிலேயே எழுதியிருக்கலாமே. அவற்றையெல்லாம் படிக்கும் கொடுமை மற்றவர்களுக்கிருக்காதல்லவா ? இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் என்று எழுதுவார்கள் எப்போதாம் ? சித்திரை ஒன்றாம் நாளுக்கு. அதிலும் அந்த ஓம் என்ற (வடமொழிக்)குறியீட்டை பெரியதாக தமிழெழுத்துக்களினிடையே திணித்து தமிழ் வாக்கியத்தைப் பிளந்து வைப்பார்கள். (இவர்களைக் கண்டால்தான் எனக்கு இப்படியெல்லாம் தோன்றுகிறது)

தமிழெழுத்தைப் பயன்படுத்தி ஹிந்தியை வளர்க்கும் இவர்களை போலத்தான் இந்தியா முழுதும் ஹிந்தி பேசாத மாநிலங்களிலும் ஆங்கில எழுத்துக்களின் மூலம் ஹிந்தியத் திணித்து வருகின்றனர். நிகாலோ, சலோ, பச்சோ என்றெல்லாம் ஹிந்திச் சொற்களை ஆங்கிலத்தின் மூலம் எழுதுகின்றனர். விற்பனை பொருட்களின்  பெயர்கள், திட்டங்களின் பெயர்கள்தான் ஹிந்தித் திணிப்பின் வாகனம். இதில் அரசு அல்லாத தனியார் நிறுவனங்களும் அடக்கம்.

இவர்களைப் போலவே இன்னொரு தேசியக் கட்சியான காங்கிரஸ் காரர்கள், இவ்வாறு ஜி சேர்த்து எழுதுவதில்லை. அன்னை சோனியா, அன்னை இந்திரா, தலைவி சோனியா அவர்கள்,  தலைவர் ராகுல், அமரர் ராஜீவ் என்றுதான் எழுதியும் பயன்படுத்தியும், பேசியும் வருகின்றனர். தமிழகத்திலுள்ள திராவிடக் கட்சிகள், ஜாதிக் கட்சிகள் கூட தமிழில்தான் பெயரையும் தலைவர் பெயருக்குப் பின்னர் அவர்கள் என்பதையும் எழுதி வருகின்றனர். கலைஞர் அவர்கள், மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்கள் இப்படியெல்லாம் பார்த்திருப்போம்.  என்ன எரிச்சலென்றால் பெயருக்கு முன்னர் அடைமொழி எரிமலை, தானைத் தலைவர், இனமானக்காவலர் வைத்து சிரிப்பு மூட்டுவார்கள். பொதுவுடமைக்காரர்களோ தோழர் என்று சொல்லிக் கொள்வர்.

பாரதிய ஜனதாவின் ஆதரவாளர்கள்தான் மோடிஜீ மோடிஜீ என்று பேசியும் எழுதியும் வந்தனர். இது அப்படியே மற்ற தமிழகத் தலைகளையும் குறிப்பிடத் தொடங்கிவிட்டனர். ராமகோபாலன்ஜீ, அர்ஜூன் சம்பத் ஜீ, முருகானந்தம் ஜீ என்று மாறுகிறது. இன்னொரு எரிச்சல் என்னவென்றால் தமிழகம் சாராத தலைவர்களனைவருக்கும் ஜாதிப்பெயரையே தங்களது இரண்டாவது பெயராக வைத்துள்ளனர். பெரும்பான்மையாக இவர்களைக் குறிப்பிட இந்த ஜாதிப்பெயரே பயன்படுத்தப்படுகிறது. மோடி, நாயுடு, ரெட்டி,  பிரகாஷ் காரத், மம்தா பானர்ஜி, பாண்டே, பென், மேனன், நாயர், சாட்டர்ஜி, இப்படியெல்லாம் இருக்கின்ற பெயர்களையே அவர்களைக் குறிப்பிடுகின்றனர். இந்த ஜாதிப்பெயரின் பின்னால்தான் ஜீ போடுகிறார்கள். ஆந்திராவில் பெரியாரை ராமசாமி நாயக்கர் என்றுதான் அறிந்து வைத்துள்ளனர்.

தமிழ்நாட்டில் ஜாதிப்பெயரை சேர்த்துக்கொள்வது மட்டும்தான் இல்லை. மற்றபடிக்கு ஜாதி உணர்வெல்லாம் ஆகாவென்றுதான் இருக்கிறது. ஜாதிப்பெயர் பின்னால் இருக்கும் மற்ற மாநிலத்தில் ஜாதி உணர்வே இல்லாமல் இருப்பவர்களும் உள்ளனர். இருப்பினும் மற்ற மாநிலத்தவரைப் போல் ஜாதிப்பெயரை சேர்க்காமல் இருப்பதை நாம் பெருமையாகவே கருத வேண்டும். ஆனால் கெடுவாய்ப்பாக இப்போது தமிழ்நாட்டிலும் ஜாதிப்பெயரைப் பின்னால் சேர்த்துக் கொள்வதை ஃபேஸ்புக்கில் தொடங்கியுள்ளனர். ஜாதியை இனமென்றும் சொல்லிக் கொள்வதால் அதன் பெயரில் அழைத்துக் கொள்வதையே விரும்புகிறார்கள் சிலர். நாளை இவர்கள் பெரிய தலைவர்களாக வளரும் போது இவர்களைப் பார்த்து எல்லா ஜாதிக்காரர்களும் தங்களது பெயரைப் பின்னால் இணைத்துக் கொள்வர். அப்போது இந்த "ஜீ"யும் சேர்ந்து கொள்ளும். அன்றைய நாளினைக் கற்பனை செய்து கொண்டால் இப்படி இருக்கும். "முத்தரையர் ஜி யின் கருத்துக்கு கவுண்டர் "ஜி" அவர்கள் கண்டனம்",  "நாளை தேவர்ஜி பேசுகிறார்" "மதிப்புக்குரிய செட்டியார்ஜி இறந்தார்", "ஐயர் ஜி அவர்களுக்கு பத்மஸ்ரீ விருது" அறிவிக்கப்பட்டது" "மள்ளர்ஜி நாளை மதுரை வருகிறார்", "கள்ளர்ஜி அவர்கள் தேர்தலில் வெற்றி பெற்றார்" "நாடார்ஜீ மாலை அணிவித்து வரவேற்றார்". 

இதையெல்லாம் கேட்க உங்களுக்கு ஆவலாக இருக்கிறதா ? "நமஸ்காரம்" என்பதே தமிழ்நாட்டில் பரவலாக இருந்தது. அதைத் தமிழில் வணக்கம் என்று மாறுவதற்கு தெருவில் நின்று போவோர் வருவோரிடமெல்லாம் வணக்கம் சொல்லி அதை மாற்றியிருக்கிறார்கள் நமது (திராவிட இயக்கத்தவர்)முன்னோர்கள். இதெல்லாம் இனி நிலைக்குமா ? ஏனென்றால் உலகத்திலேயே பேபி ஷாலினி என்று குழந்தைக்குப் பெயர் வைத்தது தமிழனன்றி வேறு யார் என்று எனக்குத் தெரியவில்லை.
Download As PDF
Bookmark and Share

Post Comment

சிற்றரசு, இளவரசன் மற்றும் பலர் :((

இப்போது இளவரசன் தற்கொலை செய்துவிட்டதால் எனக்கு பெரிய துக்கமோ, அதிர்ச்சியோ ஏற்படவில்லை. ஒவ்வொரு நாளும் ஜாதியப்பேச்சுக்களையும், சடங்குகளையும் இன்ன பிற எழவுகளையும் வேறு வழியின்றி சகித்துக் கொள்ளாமல் ஏற்றுக் கொண்டு நடக்க வேண்டிய கட்டாயத்திலிருப்பவன். ஜாதிக்கு எதிராக எதையும் இது வரையில் செய்ததில்லை. அதனால் இது போன்ற நிகழ்வுகள் இப்படியும் இருப்பார்களா ஜாதி வெறிபிடித்த மனிதர்கள் என்று அதிர்வதில்லை. ஜாதி வெறி பிடித்தவர்கள் நினைப்பதை விடவும் மோசமானவர்கள்.

அவர்களுக்கு பெற்ற மகளின் உயிரை விடவும் ஜாதிக் பெருமிதம் மேன்மையானது. ஜாதியப் பெருமை என்று இல்லாதவொன்றைக் காப்பாற்றுவதாகக் கருதிக் கொண்டு கொலைகாரனாக மாறவும் துணிவு தருவதே ஜாதியம். மகள் தாலியறுத்தாலும் வாழ்க்கையே போனாலும், பரவாயில்லை என்று கருதுகிறார்கள்.

ஆதிக்க ஜாதிக்காரப் பெண் தலித்தை மணந்தால் கொலை, அதே தலித் சமூகத்தைச் சேர்ந்த பெண் அருந்ததிய ஆணைத் திருமணம் செய்தாலும் கொலை இப்படிப்போகிறது ஜாதியத்தின் கதை. 


2008 ஆம் ஆண்டு சோமனூர் அருகே ஒரு கிராமத்தைச் சேர்ந்த சிற்றரசு என்பவர் தன்னுடன் வேலை பார்த்த தொழிலாளியான கவுண்டர் ஜாதியைச் சேர்ந்த கோமதி என்ற பெண்ணை காதலித்து எதிர்ப்புக்களுக்கிடையில் திருமணம் செய்து கொண்டார். பின்பு சில முறை அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டு, இறுதியாக தலை நசுக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்டார் சிற்றரசு. அவரது மனைவியிடம் அப்போது கைக்குழந்தையும் இருந்தது. அந்தப் பெண்ணின், குழந்தையின் எதிர்கால வாழ்க்கையைக் கூட நினைத்துப் பாராமல் கொலை செய்தனர் கொங்கு வேளாளக் கவுண்டர் ஜாதிக்காரர்கள். 


இப்போது இளவரசன்  பல்வேறு பிரச்சனைகளால் மன அழுத்தத்திற்குள்ளாக்கப்பட்டு தற்கொலைக்குத் தள்ளப்பட்டுள்ளார். (இது தற்கொலை என்று இன்னும் நான் நம்பவில்லை என்ற போதிலும்) இவருக்கும் திருமணமாகிவிட்டது என்ற போதிலும் காதலர்களைப் பிரிப்பதில் ஜாதி வென்று விட்டது. ஜாதியத்தால் கொலையுண்டவர்களில் இவர்களிருவரும் அதிகமான குற்றவுணர்ச்சியையும், பாதிப்பையும் ஏற்படுத்தினர். 


 தற்கொலையாகட்டும், கொலையாகட்டும் ஜாதியம்தான் காரணமாக இருக்கிறது. ஆதிக்க ஜாதிக் கட்சிகளுக்கு இருக்கும் தலித்களுக்கு எதிராக குற்றம் சாட்டுவது இரண்டு காரணங்களுக்காக.

வன்கொடுமை சட்டத்தை தவறாகப் பயன்படுத்துவது. (எதிர்த்தரப்பினர் ஆதிக்க ஜாதியாக இருக்கும் பட்சத்தில் வேறு பிரச்சனைகளுக்காக தன் மீது ஆதிக்க ஜாதிக்காரர் வன்கொடுமை செய்தார் என்று புகாரளிப்பது)

பெண்களை காதலித்து விட்டுச் சென்று, பின்பு பெற்றோரிடம் பேரம் பேசி பணம் பறிப்பது.

இது இரண்டும் உண்மைகள். இந்தக் கட்டப் பஞ்சாயத்துக்குத் துணை நிற்பது விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர். இக்காரணங்களைக் கொண்டே வன்கொடுமை சட்டத்தை நீக்க வேண்டும் என்று ஆதிக்க ஜாதிக் கட்சியினர் கோருகின்றனர். கலப்புத் திருமணங்களை எதிர்க்க வேண்டும் சட்டம் போட வேண்டும் என்று சொல்கின்றனர். ஒரு படி மேலே போய் பெண்களுக்கு சொத்துரிமை கூடாது என்கின்றனர். இதை வைத்து ஜாதிய உணர்வைத் தூண்டி வாக்கு வங்கி அரசியலுக்கு ஆதாயம் தேடுகின்றனர். எனவே நாம் ஆதிக்க ஜாதிக் கட்சிகளையும் ஆதரிக்கக் கூடாது இந்த தலித் அடையாள அரசியல் செய்யும் தலித்  கட்சிகளையும் ஆதரிக்கக் கூடாது.

முன்பொரு முறை இதே போல் இரண்டு பேர் கொல்லப்பட்டனர்.  வன்னிய பெண், தலித் ஆண் கலப்புமண தம்பதியர் வலுக்கட்டாயமாக நஞ்சு ஊட்டப்பட்டுக் கொல்லப்பட்டனர். பாமக அன்புமணி அப்போதைய நடுவண் அமைச்சராக இருந்தார். விடுதலைச் சிறுத்தைகள், பாமக ஒரே கூட்டணியில் இருந்தனர். கொல்லப்பட்ட தலித் ஆணின் தந்தை தனது மகன் கொல்லப்பட்டதற்காக வன்னியர் ஜாதி வெறியர்கள் மீது வழக்குத் தொடர்ந்தார். அந்த வழக்கைத் திரும்பப் பெறுமாறு வழக்குக் கொடுத்தவரை வற்புறுத்தினர் விசி கட்சியினர். காரணம் அவர்களிருவரும் ஒரே கூட்டணியிலிருந்தனர். இக்கொலையை முதன்முதலில் வெளிச்சத்துக்குக் கொண்டுவந்ததும் விடுதலைச் சிறுத்தைகள்தான். அவர்களே அதை திரும்பப் பெறக் கோரினர். இதுதான் தலித் கட்சிகளின் உண்மை முகம். (கடலூர் மாவட்டம் கண்ணகி - முருகேசன் கொலை வழக்கு)
 
தற்கொலை செய்து கொண்டதன் மூலம், நாடகத் திருமணம் என்ற அவதூறுகளுக்கு முற்றுப் புள்ளி வைத்துள்ளார் இளவரசன் என்ற இளைஞன்.

காதல் என்பது பொய், பெற்றோரை ஏமாற்றும் பிள்ளைகள் என்று சாடும் பெற்றோர்களுக்கு, பெற்றோருக்கு பயந்துதானே காதலர்கள் ஓடிப்போய்த் திருமணமும், திருட்டுக் கல்யாணமும் செய்துகொள்ள வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது. பெற்றோர்களிடமிருந்து உயிருக்குப் பயந்தும் ஓடிப் போக வேண்டியுள்ளது.

காதலுக்காக காதலித்தவர்கள் தற்கொலை செய்கிறார்கள். காதலித்து ஜாதிப் பெருமையைக் குலைத்த காரணத்திற்காக பெற்றோர்களே பெற்ற பிள்ளையைக் கொலை செய்கிறார்கள். எது உயர்ந்தது காதலா ?  ஜாதியா ?
Download As PDF
Bookmark and Share

Post Comment