சீமானுக்கு ஒரு சலாம் - சீமான் பாராட்டப்பட வேண்டியவரே !


எனக்கு சீமானின் இந்த நடவடிக்கை இன்ப அதிர்ச்சியாக இருக்கிறது. ஆனால் இது மிகவும் துணிச்சலான நடவடிக்கையாகும். நேர்மையானதும் கூட. இதை வைத்து சீமான் கைது செய்யப்படக் கூடும், பலவித அடக்கு முறைகளை எதிர்கொள்ளக் கூடும். கலைஞர் ஆட்சியில் மட்டுமே எல்லாரும் வீரம் பேசுகிறார்கள் ஜெவிடம் பம்மி விடுகிறார்கள் என்று பொதுவாக நம்புகிறோம். ஆனால் ஜெவின் ஆட்சி நடக்கும் போது இப்படி ஒரு தலைவரை வரவைத்து பேச வைத்திருப்பது துணிச்சலான செயலே.

அதே நேரம் யாசின் மாலிக் என்ற தாடி வைத்த முஸ்லிம் மனிதனைப் பார்த்தவுடன் இஸ்லாமோஃபோபியா விஸ்வரூபம் எடுத்துவிட்டதைப் பலரிடம் காண முடிகிறது. இது ஈழத்துக்கு எதிராக இந்தியாவைத் திருப்பி விடும் என்றும் அஞ்சுகிறார்கள். இதற்கு மேலும் இந்தியா ஈழத்துக்கு செய்வதற்கு ஏதாவது இருக்கிறதா என்ன ?

யாசின் மாலிக் ஒரு "தீவிரவாதியோ" தீவிரவாத இயக்கத் தலைவரோ கிடையாது. ஜம்மு காஷ்மீர் விடுதலை இயக்கம் ஒரு ஜனநாயக இயக்கம் மட்டுமே. அங்கு இருக்கும் ராணுவ அடக்கு முறைகளுக்கு எதிராகவும், அரசியல் உரிமைக்காகவும் போராடுகிற இயக்கம் மட்டுமே. தமிழ்நாட்டில் கூட தனித் தமிழ்நாடு என்ற கோரிக்கையை அறிவித்துக் கொண்டு சிறு சிறு இயக்கங்கள் இயங்குகின்றன. இந்தியா ஒரு ஜனநாயக நாடு என்பதை தேசிய வியாதிகள் நினைவூட்டிக் கொள்ளவும்.

யாசின் மாலிக்
இந்திய இறையாண்மைக்கு எதிரானவர்கள் என்று பீதியைக் கிளப்பி, சீமானை குற்றவாளிக் கூண்டில் தள்ள முனைகிறவர்கள், சிங்கள ராணுவமே இந்திய இறையாண்மைய மதிப்பதில்லை என்பதையும் நினைவூட்டிக்கொள்ளவும். அந்த சிங்கள ராணுவம் இந்திய இறையாண்மையை மதிக்காத போதும் அவர்களுக்கு இறையாண்மையுடைய இந்தியா பயிற்சி அளிக்கிறது என்பதையும் நினைவூட்டிக் கொள்ளவும். இறையாண்மையுடைய இலங்கையின் உள் விவகாரங்களில் இந்தியா தலையிடாது என்று சொல்லிக் கொண்டதையும் நினைவூட்டிக் கொள்ளவும். தற்போது சீன ராணுவம் இந்திய எல்லைக்குள் நுழைந்து விட்டதாக தேசபக்தர்கள் சிலிர்த்து எழுந்த போதும், சீனப் பிரதமர் இந்தியாவிற்கு மிகவும் சாதாரணமாகவே வந்து போகிறார்.

காஷ்மீருக்கு சீனா தனி விசா கொடுத்ததை எதிர்ப்பவர்கள், சீனாவின் எதிரியான தலாய் லாமாவுக்கு இந்தியா அடைக்கலம் கொடுப்பதையும் எதிர்க்க வேண்டும், வங்கதேசப் பிரிவினை பாகிஸ்தானின் இறையாண்மைக்கு எதிரானது, திபெத் சீனாவின் இறையாண்மைக்கு எதிரானது. ஈழம் இலங்கையின் இறையாண்மைக்கு எதிரானது. இந்தியாவுக்கு மட்டும்தான் இறையாண்மையா ? இல்லை இந்தியர் என்பதால் இந்த பாரபட்சமா ? அவரவர்க்கு அவரவர் இறையாண்மை. இதில் இந்தியர்கள் மற்ற நாடுகளின் இறையாண்மைக்கு எதிராக மட்டும் நடக்கலாமா? அங்கெல்லாம் அடக்கு முறை நடக்கிறது என்பது பதிலென்றால் காஷ்மீரிலும் அதுதானே நடக்கிறது. மற்ற நாடுகளின் அடக்குமுறைகளை எதிர்ப்பேன், அதே அடக்குமுறை இந்தியாவில் நடந்தால் தேசப்பற்றின் பெயரால் ஆதரிப்பேன். இதுதான் இங்கே நிலைப்பாடு. 

இந்திராவின் படுகொலையைத் தொடர்ந்து காங்கிரஸ் கொலைகாரர்களால் டெல்லியில் வாழ்ந்த 3000 சீக்கியர்கள் கொல்லப்பட்டனர். அந்த இனப்படுகொலைக்கு நீதி கேட்கும் சீக்கியர் அமைப்புகள் இலண்டனில் தமிழினப்படுகொலையைக் கண்டித்து நடத்திய ஆர்ப்பாட்டம். சீக்கியர்களின் ஆதரவாவது தமிழர்கள் ஏற்கிறார்களா  இல்லை இந்திரா காந்தியைக் கொன்ற பிரிவினைவாத காலிஸ்தான் சீக்கிய பயங்கரவாதிகளின் ஆதரவு எமக்கு வேண்டாம் என்கிறீரா ?
இங்கு இந்திய இறையாண்மைக்கு எதிரானவர்கள், பிரிவினைவாதிகள், தேசப்பாதுகாப்புக்கு எதிரானவர்கள் என்றெல்லாம் சொல்லப்படுவதற்கு ஒருவர் தீவிரவாதியாக இருக்க வேண்டியதில்லை. ஈ காக்காவுக்குக் கூட துரோகம் செய்யாத கூடங்குளம் உதயகுமார் கூட கிறித்தவர் என்ற காரணத்தை வைத்து அவரைக் கொல்ல வேண்டும் என்று வெறியேறிப் பேசும் தேசபக்தர்கள் இருக்கிறார்கள்.

இதை எதிர்ப்பவர்கள் யார் யாரென்றால் பாரதிய ஜனதா, காங்கிரஸ், இந்து மக்கள் கட்சியினர். இந்தியாவையே அந்நியனுக்குக் கூட்டிக் கொடுக்கும் இவர்கள் இந்திய இறையாண்மையைப் பற்றிப் பேசுவது வேடிக்கை. இந்து மக்கள் கட்சியின் கொள்கை தெரிந்ததுதான், அவர்கள் தனது கடமையைச் செய்கிறார்கள் அவர்களை நான் விமர்சிக்க மாட்டேன்.

எனக்கு என்ன கசப்பென்றால் இதை விமர்சிக்கும் ஈழ ஆதரவாளர்கள். ஈழத் தமிழர்கள் அடைய வேண்டிய உரிமைகளின் நியாயத்தை அறிந்த இவர்களுக்கு காஷ்மீர் அடைய வேண்டிய நியாயம் தெரியவில்லை. ஈழத் தமிழர் உரிமை பற்றிப் பேசும் போது புலிகளால் துரத்தப்பட்ட முஸ்லிம்களைப் பேசாத வாய்கள், காஷ்மீர் என்று வந்து விட்டால் அங்கிருந்து விரட்டப்பட்ட இந்து பண்டிட்களைப் பற்றிச் சொல்லி, தீவிரவாதப் பட்டம் கட்டி கொச்சைப்படுத்துகிறார்கள். இந்து- முஸ்லிம் நல்லிணக்கத்தின் இலக்கணமாய் விளங்கிய காஷ்மீர் நடக்கக் கூடாததெல்லாம் நடந்து இஸ்லாமியர்-பிரிவினைவாதம்-தீவிரவாதம் என்று செல்லரித்துப் போன காரணங்களைச் சொல்லி எதிர்க்கிறார்கள்.

இதில் கொடுமை என்னவென்றால் இவர்கள் உலகத்தின் மிக மோசமான தீவிரவாத இயக்கம் என்று உலகத்தால் வர்ணிக்கப்பட்ட புலிகளையும் ஆதரிக்கிறார்கள். அது எப்படி ஒருவர் ஈழத்தை ஆதரித்துக் கொண்டு காஷ்மீரை எதிர்க்க முடியும். நான் இரண்டும் ஒரே பிரச்சனை என்று சொல்லவில்லை. ஆனால் போர், நில ஆக்ரமிப்பு என்பதைத் தவிர இரு பக்க மக்களுமே ராணுவ அடக்கு முறைகளை நாளும் எதிர்கொள்கிறவர்கள்தானே. தமிழனுக்கு வந்தால் குருதி காஷ்மீரிக்கு வந்தால் தக்காளி சட்னியா ? ஏன் ஈழத்தமிழர்கள் தங்களை யூதர்களுடன் ஒப்பிட்டுக் கொள்ளவில்லையா ?

தமிழ்நாட்டிலிருக்கும் பெரும்பான்மைத் தமிழர்கள், தமிழரல்லாத மற்ற இந்தியர்கள் ஈழத் தமிழர் பிரச்சனையை எப்படிப் பார்ப்பார்கள். இங்கிருந்து போய் இன்னொருவனிடம் தனிநாடு கேட்டால் அவன் சும்மா இருப்பானா? ஈழத் தமிழர்கள் மண்ணின் மைந்தர்கள் என்பதைக் கூடத் தெரியாத மண்டைகளுக்கு இதுதான் உண்மை என்று சொல்லிப் புரிய வைப்பதற்குள் உயிரே போய்விடுகிறது. அதே போல் பொதுப் புத்தியில், காஷ்மீர் என்பது எப்படிப் புரிந்து கொள்ளப்படுகிறது  காஷ்மீர் இந்தியாவைச் சார்ந்தது, பாகிஸ்தான் துண்டாட நினைக்கிறது, காஷ்மீரிகள் பிரிவினைவாதிகள், இஸ்லாமியத் தீவிரவாதிகள். இதைத் தாண்டி உண்மை என்னவென்று அறிய எவரும் விரும்புவதில்லை. காஷ்மீர் முதல் கன்யாகுமரி வரை என்று எதுகை மோனையாகப் பேசுமளவிற்கு வரலாறு திரிந்துள்ளது. உண்மையை விளக்கினால் தேசத் துரோகியாக்கி விடுகிறார்கள். அவர்கள் ஏன் நம்மைப் போல அமைதியாக வாழ்ந்து கிரிக்கெட்டை ரசிக்காமல் தெருவில் ராணுவத்திற்கு எதிராக உயிரைப் பணயம் வைத்துப் போராடுகிறார்கள் என்று சிந்திப்பதே இல்லை.  


தமிழர்கள் இனப்படுகொலையை சந்தித்தவர்கள் சம உரிமை மறுக்கப்பட்டவர்கள், ஆனால் காஷ்மீரிகள் சிறப்பு அதிகாரமுடையவர்கள் என்று சொல்கிறார்கள். ஆனால் மற்ற மாநிலங்களுக்கு இல்லாத சிறப்பு உரிமை காஷ்மீர்க்கு மட்டும் ஏன் இருக்கிறது என்று கேட்க வேண்டுமல்லவா ? அதில்தான் காஷ்மீர் ஏமாற்றப்பட்ட வரலாறே இருக்கிறது. பாகிஸ்தான் படைகள் நுழைந்த போது காஷ்மீரைக் காக்க இந்தியாவின் உதவி நாடப்பட்டது. இந்தியா ஆக்ரமிப்பு நோக்கத்துடன் காஷ்மீரை தன்னுடன் இணைத்துக் கொள்ளப்படாது என்றும், அவர்கள் ஆளும் அதிகாரம் அவர்களிடமே இருக்கும் என்றும் உறுதிமொழியுடன்தான் இணைத்துக் கொள்ளப்பட்டது.

காஷ்மீரிகள் ஜம்முவின் குடிகள், நாம் இந்தியக் குடிகள் என்பது போல

காஷ்மீருக்கு தனிக் கொடி உண்டு

தனி அரசமைப்புச் சட்டம் உண்டு
காஷ்மீர் கொடி
இப்படிப் பல உரிமைகள் 1957 இல் இந்திய அரசாலேயே ஏற்றுக் கொள்ளப்பட்டவையே. பல வருடங்கள் முடிந்த பின்னரும், வாக்கெடுப்பு நடத்தப்படாமல் இழுத்தடித்தாலேயே அவர்கள் போராட வேண்டியதாயிற்று. மேலும் ராணுவம், துணை ராணுவம், ஊர்க்காவல் படை என ராணுவத்தின் மூஞ்சியிலேயே 20 வருடங்களுக்கும் மேலாக வாழ வேண்டிய நிர்பந்தம்.

பின்பு உரிமைகளின்றி அடக்குமுறையும், புறக்கணிப்பும் தொடர்ந்த பின்னரே விடுதலைப் போராட்டம் தொடங்கியது 1980களின் பிற்பகுதிகளில். ராணுவ நடவடிக்கைகள் காரணமாக 70000 க்கும் மேற்பட்டவர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள், வீதியில் சோதனைகள், கைதுகள், கடத்தல், காணாமல் போதல் என்ற ராணுவத்தின் கொடுமைகள் நாளும் நடக்கின்றன.

அமர்நாத் பனிலிங்கத்தை வணங்குவதற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் செல்கிறார்களே அந்தக் குகையைக் கண்டு பிடித்தவரே ஒரு முஸ்லிம். யாத்திரை செல்கிறவர்களுக்கு வேண்டிய அடிப்படை உதவிகளைச் செய்கிறவர்களும் முஸ்லிம்களே. எனவே அவர்கள் இந்துக்களுக்கு எதிரானவர்கள் அல்ல. அப்படி இருப்பவர்கள் ஏன் இந்தியாவை எதிர்க்கிறார்கள் என்று எண்ண வேண்டாமா ? போராட்டம் நடக்கும் இடங்களில் அதை சிதைக்க இனவாதம், மதவாதம் தூண்டப்படுவது எல்லா அரசுகளும் செய்வதுதான். காஷ்மீரிலும் அதுதான் நடந்தது.

சிறுவர்கள், முதியவர்கள், பெண்கள் என அனைத்துத் தரப்பினரும் ராணுவத்தினர் மீது கல்லை விட்டு எறிகிறார்களே ஏன் அப்படி ஆனார்கள் என்று சிந்திக்க வேண்டாமா ? இராணுவத்தின் கண்காணிப்பில் வாழும் கொடுமையைப் புரிந்து கொள்ள வேண்டாமா ?

காஷ்மீர் மட்டுமல்ல வடகிழக்கு மாநிலங்கள் பலவும் இந்நிலைதான் நிலவுகின்றன. மணிப்பூர் பெண்கள் நடத்திய நிர்வாணப் போராட்டம் ஒன்று போதும் இந்திய ராணுவத்தின் யோக்கியதைக்கு, ஈழத்திற்கு இசைப்பிரியா என்றால், மணிப்பூரில் மனோரமா தேவி, காஷ்மீரில் நிலோஃபர் ஜான் என எல்லா இடத்திலும் ஒரே வகையான வன்முறைகள்.

ஐரோம் ஷர்மிளா ஏன் 12 வருடங்களாக பட்டினிப் போராட்டம் நடத்துகிறார் ? என்றெல்லாம் யோசிக்காமல் காஷ்மீர் பிரிவினைவாதத் தலைவர் என்று ஒரே அடியில் கொச்சைப் படுத்துகிறார்கள். இது எப்படி இருக்கிறதென்றால் ?

இந்தக் கமல்ஹாசன் இருக்கிறாரே அவர் இஸ்லாமோஃபோபியாவுக்கு எதிரானவர், கமல் ஹாசன் என்ற தனது பெயர் தான் எந்த மதத்தைச் சார்ந்தவன் (இந்துவா அல்லது முஸ்லிமா) என்ற குழப்பத்தை மற்றவர்க்க்கு ஏற்படுத்துவதை பெருமையாகக் கருதிகிறவர். ஷாருக் கான் தனது இஸ்லாமியப் பெயரால் அமெரிக்க விமானத்துறை அதிகாரிகளால் அவமானப் படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, தனது பெயரை அரபி ஒலியுடன் இருக்குமாறு மாற்றிக் கொள்வதாகக் கூறினார். அவ்வளவு மனிதாபிமானமுடையவர் தனது விஸ்வரூபம் படத்தில் அமெரிக்காவினால் ஆக்ரமிக்கப்பட்ட ஆஃப்கானிஸ்தான் தாலிபான்களிடமிருந்து அமெரிக்காவைக் காக்கும் இந்தியனாக நடித்தார் என்பது எத்தகைய முரண்நகை. அப்படித்தான் இருக்கிறது சிலருடைய கருத்து. நான் இந்தியன் எனவே இந்தியா என்ன செய்தாலும் அது தவறில்லை நான் தேசபக்தியின் காரண்மாக ஆதரிப்பேன். நான் தமிழன் எனவே புலிகள் என்ன செய்தாலும் ஆதரிப்பேன் என்ற கொள்கையெல்லாம் எனக்கில்லை.

அது போலவே ஈழத் தமிழர்களின் துன்பத்தைக் கண்டு இரங்குகிறவர்கள், யாசின் மாலிக்கின் வருகையை எதிர்ப்பது எந்த வகையில் சேர்த்தி ? இவருக்காக ஆதரவு தரும் முஸ்லிம்களைக் கண்டு இவர்கள் முகம் சுளிக்கிறார்கள். முஸ்லிம்கள் என்றால் தீவிரவாத, பிரிவினைவாத, இறையாண்மைக்கு எதிரானவர்களை ஆதரிக்கிறார்கள். இது எப்படி இருக்கிறதென்றால் ஈழத் தமிழர் துன்பம் பற்றிப் பேசினால் புலி பயங்கரவாதம் பற்றிப் பேசும் சோ வைப் போலவே நடந்து கொள்கிறார்கள். காஷ்மீரிகள் துன்பம் என்பது மற்ந்து பிரிவினைவாதம் மட்டுமே முன் தெரிகிறது.
 

புலிகளை நாம் ஆதரிப்பதை மற்ற மாநிலத்தவர்கள் எப்படிப் பார்க்கிறார்கள் என்று சிந்தித்துப் பாருங்கள். பிரதமர் ராஜீவைக் கொன்ற பயங்கரவாதிகளை ஆதரிக்கிறார்கள் தமிழர்கள்  என்றுதானே நினைப்பார்கள்.

யாசின் மாலிக்கை அழைத்து வருவது இந்தியாவை ஈழத்துக்கு எதிராகத் திருப்பாதா ? இப்போது இந்தியா ஈழத்தை எப்படிப்பார்க்கிறது ? இந்தியாவின் இறையாண்மை மேல் மதிப்புடையவர்கள் ஈழம் பற்றியே பேசக் கூடாது என்றுதான் இந்தியா சொல்கிறது, கருணாநிதி டெசோ மாநாடு அறிவித்தவுடன் சிதம்பரம் ஓடி வந்து ஈழம் என்ற சொல்லையே பயன்படுத்தக்கூடாது என்றும் அது இந்திய இறையாண்மைக்கு எதிரானது என்றும் சொல்லவில்லையா ? ஈழ அகதிகள் தமிழகத்தில் எப்படி நடத்தப் படுகின்றனர் ?

5 வருடங்களுக்கு முன்பு இயக்குநர் சீமான் போர் நிறுத்தம் கோரி, தமிழ்த் திரை இயக்குநர்கள் கலந்து கொண்ட பட்டினி போராட்டத்தில் உரையாற்றினார். அவரது உரை பரந்த வரவேற்பைப் பெற்றது. அவரது கருத்துக்களை காங்கிரஸ், பாஜகவினர் பலரும் எதிர்த்தனர். அதற்குப் பின்பு அவர் பல முறை தேசியப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சிறை சென்றார். பலரது ஆதரவையும் பெற்றார். ஈழ ஆதரவுப் போராட்டங்களினாலேயே அவர் பலருக்கும் பிடித்தவரானார். பின்பு ஜெயா தொலைக்காட்சியில் பேட்டி கொடுத்த போது பலத்த விமர்சனத்துக்குள்ளானார். பின்பு திமுகவை மட்டுமே எதிர்த்து வந்தார். நாம் தமிழர் கட்சியின் கொள்கை ஆவணம் வெளியிடப்பட்ட போது இந்திய இறையாண்மையைக் காக்க செயல் படுவோம் என்ற வரிகளுக்கும், திராவிட எதிர்ப்புக்கும் கடுமையாக விமர்சிக்கப் பட்டார். இஸ்லாமியர்களையும் எச்சரிக்கையுடன் கையாளவேண்டும் என்றும் குறிப்பிட்டு அவர்கள் தனிமைப்படுத்தப் பட்டிருந்தனர். பின்னும் ஜாதிக் கூட்டங்கள்லெல்லாம் கலந்து கொண்டார். இனவெறியனாக நடந்து கொண்டார்.
அதற்கெல்லாம் பதிலாக இது அமைந்துள்ளது இவ்வளவு நாட்களுக்குப் பின்னர் ஒரு நேர்மையான செயலைச் செய்திருக்கிறார். இதற்கு தனக்கு பலத்த எதிர்ப்பு வரும், சிறை செல்லவும் நேரிடும் என்று தெரிந்தே செய்திருக்கிறார்.

வழக்கமாக ஈழத் தமிழர்க்காக முஸ்லிம்கள் குரல் கொடுப்பதில்லை என்று குறை கூறிக் கொண்டிருப்பார்கள், இங்கு காஷ்மீரிலிருந்து முஸ்லிம்கள் தலைவர் ஒருவர் ஆதரவு சொல்கிறார். இவர்கள் பிரிவினைவாதியின் ஆதரவு தேவையில்லை என்கிறார்கள். எங்கள் மீது குண்டு வீசிய இந்தியாவின் ஆதரவும், போருக்கு பணம் வழங்கிய மேற்கு நாடுகளின் ஆதரவும் மட்டுமே வேண்டும் என்கிறார்கள். 

இந்தியத் தலைவர்கள் இறையாண்மையுள்ள நாட்டில் தலையிட முடியாது என்கிறார்கள் ஆனால் காஷ்மீரின் இறையாண்மையில் மட்டும் தலையிடுகிறார்கள். காஷ்மீரிகள் இந்தியா பாகிஸ்தான் ஆகிய இருநாடுகளாலும் ஆக்ரமிக்கப்பட்டவர்கள். 5 இலட்சத்திற்கும் மேலான ராணுவத்தினர் காஷ்மீரைக் காவல் காத்து வருகின்றனர். இதை வைத்து காஷ்மீர் மக்களை போலி என்கவுன்டரில் கொல்லவும், பெண்களை வன்புணரவும் செய்ய பல நூறு கோடிகள் செலவிடப் படுகின்றன. அதே நேரம் அடிப்படை உரிமைகள் வாழ்வாதாரம், வேலை என அனைத்தும் புறக்கணிக்கப்படுகின்றன. அதை எதிர்த்து அவர்கள் போராடினால் அது தேசபக்தர்களுக்கு பொறுக்கவில்லை.
Download As PDF
Bookmark and Share
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

19 கருத்துகள்:

  1. //ஈழத் தமிழர்க்காக முஸ்லிம்கள் குரல் கொடுப்பதில்லை என்று குறை கூறிக் கொண்டிருப்பார்கள், இங்கு காஷ்மீரிலிருந்து முஸ்லிம்கள் தலைவர் ஒருவர் ஆதரவு சொல்கிறார். //
    இந்த‌ ஆத‌ர‌வு த‌மிழ்பேசும் முஸ்லீம்க‌ளிட‌மிருந்து வ‌ருவ‌து ஈழ‌விடுத‌லைப் போராட்ட‌த்துக்கு உத‌வுமே தவிர‌, இந்தியாவில் பிரிவினைவாத‌ம் பேசும் இஸ்லாமிய‌ இய‌க்க‌ங்களிட‌மிருந்து அல்ல‌. த‌மிழீழ‌ விடுத‌லை இப்ப‌டி ந‌சிக்க‌ப்ப‌ட்ட‌த‌ற்கு முக்கிய‌ கார‌ண‌ங்களிலொன்று அது இந்திய‌ ஒருமைப்பாட்டைக் குலைத்து விடும் என்று இந்திய அர‌சின் ஆலோச‌க‌ர்க‌ள் க‌ருதிய‌தும்/கருதுவ‌தும் தான். அத‌னால் இந்தியாவில் பிரிவினை கோருபவ‌ர்க‌ளுட‌ன் ஈழ‌விடுத‌லைப் போராட்ட‌ ஆத‌ர‌வாள‌ர்க‌ளின் கூட்ட‌ணி, எதிர்ம‌றைவான‌ விளைவுக‌ளை ஈழ‌விடுத‌லைப் போராட்ட‌த்துக்கு ஏற்ப‌டுத்தும். ஆனால் யாசீன் மாலிக் த‌மிழ்நாட்டுக்கோ அல்ல‌து இந்தியாவின் எந்த‌ப்ப‌குதிக்கும் சென்று அரசிய‌ல் பேச‌ அவ‌ருக்கு உரிமையுண்டு. அதை யாராலும் த‌டுக்க‌ முடியாது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவர் இஸ்லாமியப் பிரிவினைவாதி என்றால் தமிழர்கள் இந்துப் பிரிவினைவாதிகள் என்று சொல்ல வேண்டும். அவர் ஒன்றும் காஷ்மீர் முஸ்லிம்களுக்கெ என்று கேட்கவில்லையே. காஷ்மீரிகள் என்றுதானே சொல்கிறார்.

      தமிழ் முஸ்லிம்கள் ஆதரவு தருவது வேறு. அதுவும் நல்ல விசயமே. ஆனால் இன்னொரு நாட்டில் அடக்கப்படும் ஒரு இனத்தின் பிரதிநிதிக்கு ஈழத்தமிழர்கள் பிரச்சனை போய் சேர்ந்ததையும், அதை தன் இனத்தின் பிரச்சனையுடன் ஒப்பிட்டு ஆதரவு தருவதும் இன்னும் சிறந்தது. அவர் முஸ்லிம் என்பது இன்னும் தனித்துவமானது. அதற்காகத்தான் முஸ்லிம் தலைவர் என்று சொன்னேன்,

      ஈழ விடுதலை இந்தியாவின் நலனுக்குத் ஏன் எதிரானது என்று வெளிப்படையாகச் சொல்ல அவர்கள் முட்டாளில்லை. அதனால்தான் தேசபக்தியை திணித்து தருகிறார்கள் இந்திய ஒருமைப்பாட்டுக்கு எதிரானது என. தமிழ்நாட்டில் தனிநாட்டுக்கு ஆதரவு 10% கூட இருந்ததில்லை. போராட்டங்களின் போது மட்டும் எழுப்பப்படும் உணர்ச்சிக் கூச்சல் மட்டுமே

      தமிழகத்தையே ஈழத்தமிழர்கள் நம்பக் கூடாது என்கிறேன். நீங்கள் இன்னமும் இந்தியாவை நம்புகிறீர்கள். தமிழக அரசு, இந்திய அரசு, இலங்கை அரசு ஆகியவை ஏறக்குறைய ஈழத்தமிழர்களுக்கு இன்னலையே தந்துள்ளன. இந்தியாவின் உதவியுடன் தமிழீழம் என்ற அடிப்படையிலேயே நீங்கள் இதை அணுகுகிறீர்கள். உங்களைப் போலவே துயரத்திலிருக்கும் ஒரு இனமான காஷ்மீரை புரிய மறுக்கிறீர். அடக்கப் படுகிறவனுடன் கை கோர்ப்பதற்குப் பதில் அடக்குகிறவன் தயவை எதிர்பார்க்கிறீர். எவனோ எவனையோ அடக்கப்படுவது குறித்துப் பிரச்சனையில்லை, எனக்கு விடிவு கிடைத்தால் போதும். இதல்லாமல் இந்தியா செய்த கொடுமைகளுக்குப் பின்னரும் இந்தியாவை பார்த்து ஏங்குகிறீர்கள். ஈழ விடுதலைப் போராளிகள் இந்தியாவுடன் கூட்டணி வைத்துத்தான் முள்ளிவாய்க்காலில் முடிந்தது. அதை விட மோசமான முடிவை இந்தியப் பிரிவினைவாதிகளின் கூட்டணி தராது.

      30 வருடங்களாக இந்தியா, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளை நம்பி நடத்திய போராட்டம் என்னவானது. எனக்கு ஈழத்தமிழரிடம் பிடிக்காததே இதுதான். உலகமெங்கும் வெறியாட்டம் போடும் வல்லரசு பயங்கரவாத நாடுகள் எமக்கு விடியல் தரும் என்று நம்புவது. அவர்கள் கழுத்தை அறுத்தது தெரிந்தும் அதையே இன்னும் சொல்லிக்கொண்டிருப்பது. எனக்கு ஈழத்தில் இந்தியா செய்த செயல்களின் பின்னால் மிகப்பெரும் கசப்புணர்வு உண்டானது. இனப்படுகொலையை நடத்தியதே இந்தியா என்றான பின்னும் இன்னும் எப்படி இந்தியா உங்களுக்கு உதவும் ? 10 வருடங்களுக்கு முன்னரே புலிகள் தமிழீழத்தை அமைத்து விட்டனர். அங்கீகாரம் மட்டும் இல்லை. ஏன் அதை உலகம் தரவில்லை. நாங்கள் உங்கள் நண்பர்கள் என்றுதானே இந்தியாவிடமும், உலக நாடுகளிடமும் புலிகள் சொன்னார்கள். அவை ஏன் அங்கீகரிக்க மறுத்தன ? அவர்களுக்கு ஆதாயமிருந்தால் தேவையில்லாம் ஒரு நாடு உருவாகும், இல்லையெனில் இருக்கும் நாடுகளே கூட அழிக்கப்படும். புலிகளுக்கு பயிற்சி அளித்தது தமிழர்களுக்காக அல்ல. அங்கே பஞ்சாயத்து பண்ண வேண்டுமானால் போர் நடக்க வேண்டும் அவர்களின் நோக்கம் அதுவேயன்றி தமிழர் நலனல்ல.

      உங்களுக்கு இந்தக் கட்டுரையைப் பரிந்துரைக்கிறேன்.
      http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=23384&Itemid=139

      நீக்கு
    2. Satheeskumar28/5/13 2:29 AM

      தமிழானவன் என்ற பெயரில் ஆள் மாறாட்டம் செய்யாதீர். அனைவருக்கும் தெரியும் யாசின் மாலிக் ஒரு பாகிஸ்தான் கைகூளிஎன்று. அவன் காஸ்மீர் முஸ்லிம்களுக்கு சொந்தம் என்று சொல்லவில்லை என்பதை நான் ஒப்புகொள்கிறேன். ஆனால் இதில் ரூ பெரிய உள்நோக்கம் உள்ளது. அன்று பாகிஸ்தான் பிரிவினையை கேட்டவர்கல் கூட இப்படிதான் சொன்னார்கள். இன்று பாகிஸ்தானில் இந்துக்கள் படும் பாடு என்னவென்று உலகமே அறியும். இந்த மாலிக் நாளை காஸ்மீர் விடுதலை பெற்ற பின்பு இது முஸ்லிம்களுக்கு சொந்தம் என்று சொல்லி இந்துக்களை எல்லாம் கொன்று குவிப்பான். இது தெரிந்துதான் அவனை எல்லோரும் தேச விரோதி என்று கூறுகிறார்கள். இந்தியாவில் முஸ்லிம்களுக்கு இருக்கின்ற சுதந்திரதில் 100ல் ஒரு பங்கு கூட பாகிஸ்தானில் உள்ள இந்துக்களுக்கு கிடையாது. 1950ல் பாகிஸ்தானில் 15% இருந்த இந்துக்கள் இப்போது வெறும் 2% ஆகா குறைந்து விட்டார்கள். இதே கதைதான் நாளை காச்மீருக்கும் நடக்கும். எனவே உன் போன்ற எம்மற்று பேர்வழிகள் சொல்கிற பேச்சை கேட்டு உண்மை தமிழர்கள் ஏமாற மாட்டார்கள். Jaihind. பாரத்மாதகி ஜே!

      நீக்கு
  2. பெயரில்லா22/5/13 7:08 AM

    /// Gurunathan Sivaraman · Chennai, Tamil Nadu
    yes. Nice move by Seemaan. hats off to them.
    I support the freedom of Kashmir, I support the freedom of Tamil Eelam. ///

    Nice Pathivu. I am also support.

    பதிலளிநீக்கு
  3. தமிழ்வினை,
    // பாகிஸ்தான் படைகள் நுழைந்த போது காஷ்மீரைக் காக்க இந்தியாவின் உதவி நாடப்பட்டது.//

    இது உண்மை

    //இந்தியா ஆக்ரமிப்பு நோக்கத்துடன் காஷ்மீரை தன்னுடன் இணைத்துக் கொள்ளப்படாது என்றும், அவர்கள் ஆளும் அதிகாரம் அவர்களிடமே இருக்கும் என்றும் உறுதிமொழியுடன்தான் இணைத்துக் கொள்ளப்பட்டது. //

    இந்த கதையெல்லாம் வேண்டாம் . ஆதாரம் கொடுக்க முடியுமா?

    காஷ்மீர் அரசின் சம்மதத்தோடு காஷ்மீர் இந்தியாவுடன் இணைந்தது என்பதே உண்மை.

    //இப்படிப் பல உரிமைகள் 1957 இல் இந்திய அரசாலேயே ஏற்றுக் கொள்ளப்பட்டவையே.//
    இதுதான் இந்தியாவின் முட்டாள்தனமான செயல்.
    நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்

    1. Kashmir's
      accession to India was accepted by us at the request of Maharaja's
      Government and the most numerously represented popular organisation
      in the State which is predominantly Muslim. Even then it was accepted on
      the condition that as, soon as the invader has been driven from Kashmir
      soil, and law and order is restored; the people of Kashmir would decide
      the question of accession. It is open to them to accede to either Dominion
      then," He proceeded to say:" Our assurance that we shall withdraw our
      troops. from Kashmir as soon as peace and order are restored and leave
      the decision about the future of the State to the people of the State is not
      merely a pledge to your Government but also to the people of the
      Kashmir and to the world.//



      http://www.indiankanoon.org/doc/1977650/
      http://www.kashmirpage.com/2010/11/they-can-file-charge-against-jawaharlal.html
      http://blog.tamilsasi.com/2005/06/1.html

      புரட்சி மணி,

      காஷ்மீர் அரசின் சம்மதத்துடனேதான் இணைக்கப்பட்டது, பின்பு அமைதி திரும்பியவுடன் அவர்கள் சேர்ந்திருப்பதை வாக்கெடுப்பு மூலம் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம் என்ற வாக்குறுதியுடன். வெளியுறவு, பாதுகாப்பு, தகவல் தொடர்பு ஆகிய துறைகள் இந்தியா பார்த்துக் கொள்ளும் என்றும் ஒப்புக் கொள்ளப்பட்டது.

      //இந்தியாவின் முட்டாள்தனமான செயல்.// இல்லை அது நேர்மையான செயல்தான். இப்போது பல நூறு கோடிகள் செலவு செய்து, ராணுவத்தை வைத்து அடக்குவதுதான் முட்டாள்தனம். அதில் ஒரு சிறு பகுதியை அவர்களின் வளர்ச்சிக்குப் பயன்படுத்தினாலே எல்லாப் பிரச்சனையும் தீரும். ஆனால் செய்ய மாட்டார்கள்.

      நீக்கு
    2. தமிழானவன்,
      தங்களுடைய தொடுப்புகளுக்கு நன்றி.
      நேரு பாகிஸ்தான் பிரதமரிடம் கூறியதெல்லாம் ஆதாரமாகாது. அவர் வாய் மொழியாக கூறியதும் ஆதாரமாகாது.
      எது ஆதாரம் எனில் காஷ்மீருக்கும் இந்தியாவிற்கும் ஏற்ப்பட்ட எழுத்துப்பூர்வ உடன்படிக்கையே.
      காஷ்மீர் அரசர் இந்தியாவுடன் இணைக்க ஒப்புக்கொண்ட கோப்பில் காஷ்மீர் திருப்பி தரப்படும் என்றோ, இந்தியாவுடன் இருக்கலாமா வேண்டாமா என்று வாக்கெடுப்பு நடத்தலாம் என்றோ இல்லை.
      http://www.jammu-kashmir.com/documents/instrument_of_accession.html
      http://en.wikipedia.org/wiki/Instrument_of_Accession_%28Jammu_and_Kashmir%29

      நன்றி

      நீக்கு
    3. புரட்சி மணி ! இணைப்புக்கு நன்றி !

      பின்பு பிரச்சனைக்கு என்னதான் காரணம் ? நேரு ஏன் அப்படிக் கூறி வந்தார் ? பாகிஸ்தான் சதி (மட்டும்) காரணமில்லை. இந்தியாவுடன் இணைந்து விட்டதால் அது இந்தியாவுக்கு அடிமை என்று ஆகிவிடாது. ஒவ்வொரு இனத்தின் தன்னாட்சி அதிகாரம் அவர்களுக்கே உண்டு. அவர்கள் பிரச்சனை ஏன் தீர்க்கப்படவில்லை. அவர்கள் ஏன் இந்தியாவை வெறுக்கின்றனர். ஏன் வடகிழக்கு மாநிலங்கள் வளர்ச்சியில் பின்தங்கியிருக்கின்றன. நான் தேசபற்றின் பெயரால் ராணுவ அடக்கு முறையை ஆதரிக்க மாட்டேன்.

      நீக்கு
    4. தமிழானவன்
      //இந்தியாவுடன் இணைந்து விட்டதால் அது இந்தியாவுக்கு அடிமை என்று ஆகிவிடாது.//
      தமிழ்நாடு என்ன இந்தியாவுக்கு அடிமையா? அதுபோல காஷ்மீரும் இந்தியாவிற்கு அடிமையல்ல. ஒரு மாநிலம் அவ்வளவே.

      //அவர்கள் ஏன் இந்தியாவை வெறுக்கின்றனர்.//
      ஹைதரபாத்த்தில் வசிப்பவர்கள் அனைவரும் இந்தியாவை நேசிக்கின்றார்கள் என்று உங்களால் உறுதியாக சொல்ல முடியுமா?

      //நான் தேசபற்றின் பெயரால் ராணுவ அடக்கு முறையை ஆதரிக்க மாட்டேன். //
      நானும் அப்படியே. அதே நேரத்தில் தனி நாடு என்பதையும் அனுமதிக்க இயலாது.மற்றபடி காஷ்மீர் இந்திய ஒப்பந்தப்படி அவர்களுக்கு அனைத்து உரிமையும் தரப்படவேண்டும்.
      நன்றி

      நீக்கு
  4. பெயரில்லா22/5/13 5:54 PM

    எந்த முஸ்லிம் தலைவா்கள் ஆதரவு கொடுத்தலும் சீமான் BJP கைக்கூலிதான்

    பதிலளிநீக்கு
  5. பெயரில்லா22/5/13 7:11 PM

    Adei Vetti paiya,
    What is the point in supporting Eelam??
    It is a finished dream. Poi vera vela paaru.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தனி ஈழமோ தனி காஷ்மீரோ என்பதெல்லாம் தேவையில்லாதது, ராணுவ அடக்குமுறைகள் ஒழிய வேண்டும்

      நீக்கு
  6. உங்கள் பதிவுக்கு மாற்றுக்கருத்து கொண்டவனாக ஏற்கனவே பதிவிட்டுள்ளதால் இந்த பின்னூட்டமிடுகிறேன்.

    யாசின் மாலிக் காஷ்மீர் காஷ்மீரிகளுக்கே என்று மக்களோடு நின்று ஜனநாயக வழியில் போராடி வெற்றி பெறட்டும்.ஆனால் பாகிஸ்தான் தீவிரவாத அமைப்புக்களுடன் சேர்ந்து கொண்டு இந்திய பிரிவினை கோருவதும் பாகிஸ்தான் போய் விட்டு வந்தவுடன் அடுத்த விமானத்தில் தமிழகத்திற்கு டிக்கெட் எடுப்பது ஏற்கனவே எரியும் கொள்ளியில் இன்னும் கொள்ளி வைக்கவே உதவும்.

    முஸ்லீம்களின் ஆதரவு என்றால் இலங்கை முஸ்லீம்களின் ஆதரவும் கூடவே மொழி அடிப்படையில் தமிழன் என்ற தமிழக இஸ்லாமியர்கள் போன்ற உணர்வும் இதையெல்லாம் விட அரபிகளின் வாரிசுகள் என்ற மாய மனோபாவம் மாறவேண்டும்.

    ராஜிவ் காந்தியின் கொலை,இலங்கை தமிழர்களை துரத்தியது போன்றவை விடுதலைப்புலிகளின் வரலாற்றுப்பிழைகள் என்பதையும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.

    ஒரு வேளை மாற்று அரசியல் களநிலையில் காஷ்மீரி ஒருவர் இந்தியாவின் பிரதமராகவோ அல்லது ஜனாதிபதியாகவோ வந்து விட முடியும்.இலங்கையில் சாத்தியமா என்பதே காஷ்மீருக்கும் இலங்கைக்கும் உள்ள அடிப்படை வித்தியாசம்.

    தற்போதைய 9/11 உலக அரசியல் மாற்றங்களுக்கு முன்னும் பின்னும் நாடுகளை உருவாக்குவதிலும் பிரிப்பதிலும் அமெரிக்காவிற்கு முக்கிய பங்கு உண்டு.முந்தைய இந்தியாவிலிருந்து காஷ்மீரை பிரிப்பது என்ற வெளியுறவுக் கொள்கையிலிருந்து அமெரிக்கா வெளிவந்து விட்டது. ஒரு வேளை...ஒரு வேளை... அமெரிக்காவின் மண்டையில் ஈழம் தேவை என்ற நிலை வந்து விட்டால் அதனை இந்தியாவாலோ அல்லது சீனாவாலோ கூட கூட்டுக்களவாணித்தனம் செய்தாலும் மாற்றி விட முடியாது. இலங்கை வெறும் கைப்புள்ள மாத்திரமே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ராஜ நடராஜன் ! பின்னூட்டத்திற்கு நன்றிகள்

      //யாசின் மாலிக் காஷ்மீர் காஷ்மீரிகளுக்கே என்று மக்களோடு நின்று ஜனநாயக வழியில் போராடி வெற்றி பெறட்டும்./
      அதைத்தான் செய்கிறார். அதனால்தான் இதை நியாயப்படுத்துகிறேன். யாசின் மாலிக் இஸ்லாமிய அடிப்படைவாதி அல்ல. தேசியவாதி. இவர் 1995 இல் தனது ஆதரவாளர்களுடன் பலத்த எதிர்ப்புக்கு இடையே ஆயுதப் போராட்டத்திலிருந்து ஜனநாயகப் பாதைக்குத் திரும்பியவர். அவர் காஷ்மீரிலிருந்து துரத்தப்பட்டு, இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் வாழும் 4 இலட்சம் இந்துக்கள் திரும்பவும் வரவேண்டும் என்பவர். அவர் பாகிஸ்தானுக்கு தனது குடும்பத்தினரைப் பார்ப்பதற்குத்தான் சென்றார். காரணம் பாகிஸ்தானிலிருக்கும் அவரது மனைவிக்கும் குடும்பத்தினருக்கும் இங்கு வர இன்னும் விசா வழங்கப்படவில்லை. அங்கே நடந்த கூட்டத்தில் சயீத் உடன் ஒரே மேடையில் இருக்க வேண்டிய சந்தர்ப்பம் வந்தது. அவர் பாகிஸ்தானுக்கு எதிராகவும்தான் போராடுகிறார். பாகிஸ்தானும் சேர்ந்தல்லவா காஷ்மீரை ஆக்ரமித்துள்ளது ? பாகிஸ்தான் தீவிரவாதிகளுடன் இணைந்து இந்தியாவிடமிருந்து மட்டும் காஷ்மீரைப் பிரிப்பதற்கு அல்ல. ஜம்முகாஷ்மீர் விடுதலை முன்னணி இருநாடுகளிடமிருந்தும் விடுதலை கோருகிறது. அரசியல் ரீதியில் பாகிஸ்தான் தலைவர்களையும் சந்திக்கிறார். அது போலவே டெல்லியில் இருக்கும் இந்திய அரசியல் தலைவர்களையும் சந்திக்கிறார். பாகிஸ்தானில் போராட்டத்தில் கலந்து கொண்டது போலவே டெல்லியில் நடக்கும் உண்ணாநிலைப் போராட்டத்திலும் கடந்து கொள்கிறார். இதற்கு மேல் ஒரு போராளியிடம் வேறு என்ன எதிர்பார்க்க முடியும். இவர் பாகிஸ்தானுக்கு சென்றதை வைத்து இவர் ஒரு பாகிஸ்தான் ஆதரவு பிரிவினைவாதி என்று இந்துத்துவா இந்திய தேசியவாதிகள் அரசியல் செய்கின்றனர்.

      இவர் தற்போது தமிழ்நாட்டுக்கு வந்ததையும், டெல்லிக்குச் சென்றதையும் வைத்து பாகிஸ்தானிலிருக்கும் இஸ்லாமிய அடிப்படைவாதிகள் யாசின் மாலிக் ஒரு இந்திய ஆதரவாளர் என்று சொன்னால் எப்படியிருக்குமோ அது போல் இருக்கிறது இவர் ஒரு பாகிஸ்தான் ஆதரவாளர் என்று நாம் சொல்வதும்.

      அதாவது ஈழ முஸ்லிம்கள், தமிழர்களிடையே நிலவும் வேறுபாடு களையப்படவேண்டும் என்றுதான் விரும்புகிறேன். தமிழ், முஸ்லிம் அரசியல் தலைமைகள் செய்த தவறுகளுக்காக தமிழ்-இஸ்லாமியப் பொதுமக்கள் ஒருவரையொருவர் வெறுத்துக் கொண்டிருக்கிறார்கள். இஸ்லாமியர் அரபிமயமாவதற்கு எதிராக இஸ்லாமியரிடையிலும் எதிர்ப்புகள் இருந்து கொண்டுதானிருக்கின்றன.

      புலிகள் இஸ்லாமியருக்குச் செய்த கொடுமைக்குத் தமிழ் மக்கள் பொறுப்பாக மாட்டார்கள், அதே போல் முஸ்லிம் தலைவர்கள் பேரினவாதிகளுக்கு குடைபிடிப்பதற்கு முஸ்லிம் மக்கள் பொறுப்பாக மாட்டார்கள். இஸ்லாமியப் பயங்கரவாதிகளால் இந்துக்கள் துரத்தப்பட்டதற்கு காஷ்மீர் மக்களும் பொறுப்பாக மாட்டார்கள்.

      யாசின் தவறானவராகவே இருந்தாலும் காஷ்மீரிகள் ஈழத்தமிழர்களைப் போலவே ராணுவக் கண்காணிப்பின் கீழ் நரகவாழ்க்கை வாழ்வது உண்மைதானே, அதை மறுத்து காஷ்மீருக்கு சிறப்பு உரிமைகள் இருப்பது பற்றிப் பேசுவது நியாயமல்ல.

      ஈழம் என்ற கோரிக்கை தமிழர்கள் அல்லது தமிழ்மக்கள் நன்மைக்கு என்றளவில் இல்லாமல், ஈழம் அமைவது இந்தியாவுக்கு நல்லது என்ற சொல்வது சரியாக இல்லை. இது எப்படி இருக்கிறதென்றால் எட்டி உதைத்தவனை கீழே விழாமல் உதை என்று சொல்வது போல் இருக்கிறது.

      நன்றிகள்.

      நீக்கு
    2. //யாசின் தவறானவராகவே இருந்தாலும் காஷ்மீரிகள் ஈழத்தமிழர்களைப் போலவே ராணுவக் கண்காணிப்பின் கீழ் நரகவாழ்க்கை வாழ்வது உண்மைதானே,//
      நண்பர் தமிழானவன்,
      நீங்க புலிகள் அல்லது பிராபாகரன் கண்காணிப்பின் கீழ் இலங்கை தமிழர்கள் எப்படிபட்ட நரகவாழ்க்கை வாழ்ந்தார்கள் என்பதை 2009 முதல் அறிந்திருக்கிறீர்களா?
      2009 முதல் புலிகளினால் எப்படி கொடுமையா துன்புறதப்பட்டோம் என்று தங்க துன்பங்களை சொன்னதினாலே அவர்களுக்கு அரசியல் தஞ்சம் கிடைத்தது.

      நீக்கு
    3. வேகநரி, அது பற்றியும் கொஞ்சம் படித்திருக்கிறேன். புலிகளிடமாவது ஓரளவு சுதந்திரமாக இருந்தார்கள் இப்போது சிங்கள ராணுவத்தின் கீழ் வாழ்வது இன்னும் கொடுமையானது. சிங்களக் குடியேற்றங்கள் நடக்கின்றன. நில அபகரிப்பு, காணாமல் போதல் இப்படிப்பல கவலை தரும் செய்திகளையே நான்கு வருடங்களாகக் கேட்கிறேன்.

      நீக்கு
    4. //புலிகளிடமாவது ஓரளவு சுதந்திரமாக இருந்தார்கள்//

      யார்? தமிழர்கள்!!! புலிகள்? சுதந்திரம்? வருத்தமான நகைச்சுவை.

      நீக்கு
  7. //ஈழம் அமைவது இந்தியாவுக்கு நல்லது என்ற சொல்வது சரியாக இல்லை//
    ஈழம் அமைவது என்ற பகற் கனவு இந்தியாவுக்கு மட்டுமல்ல இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு ஒரு போதும் நல்லாவே இல்லை. அதுக்கப்புறம் உலகத்திற்கும்.

    பதிலளிநீக்கு

நான் படைப்பாளியோ, விமர்சகனோ அல்லன். வாசகன் மட்டுமே. எனவே உங்கள் கருத்தின்றி எனது இடுகை முழுமை பெறாது. நிறைகளை விடவும் குறைகள் அதிகம் எதிர்பார்க்கிறேன்