வடகிழக்கு மாநில மாணவர்கள் கட்டாய ஹிந்தி/ இந்திய மொழிகள் திணிப்புக்கு எதிராக போராட்டம்


ஒரு பொய்யை ஏறக்குறைய அரை நூற்றாண்டாகச் சொல்லி வருகிறார்கள். ஹிந்தி படிக்காததால் தமிழர்கள் முன்னேற முடியவில்லை. கழிவறையில் நீர் வராது போனால் கூட கருணாநிதியை கடிந்து கொள்ளும் இன்றைய நிலையில் இந்த எழவெடுத்த ஹிந்தித் திணிப்பை எதிர்த்து தமிழர்களின் வாழ்க்கையில் மண்ணைப் போட்டு விட்டதாகவும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இன்று வரையில் தினமலரின் பின்னூட்டங்களில் இதைக் காண முடிகிறது. ஹிந்தி படிக்காததால் நாம் எதை இழந்திருப்போம் என்று யோசித்தால் பெரிதாக ஒன்றும் புலப்படவில்லை. ஹிந்திக்காரர்களுடன் உரையாட முடியவில்லை, அங்கே சுற்றுலா சென்றால் லோல்படுவது, எடுபட்ட பாலிவுட் குப்பைகளுக்கு இருக்க வேண்டிய சந்தை இல்லாமல் போனது தவிர்த்து வேறொன்றுமில்லை. மேலும் ஹிந்தி இந்தியாவின் தேசிய மொழி இல்லை ஆங்கிலம் போலவே வெறும் அலுவல் மொழிதான் என்பதை ஆயிரமாவது தடவையாகச் சொல்லிக் கொள்ளவும் வேண்டும். ஹிந்தி பேசும் மாநிலத்தவர்கள் இங்கு தமிழகத்தில் கொத்தடிமைகளாக அவதியுறும் இக்காலத்திலும் இந்தப் பொய் இன்னும் உயிருடன் இருக்கிறது.

ஹிந்தித் திணிப்பு எதிர்ப்பு என்பதை "ஹிந்தி எதிர்ப்பு" என்று ஹிந்தி மொழியையே வெறுப்பதாகவும் எதிர்ப்பதாகவும் தேசியமொழியான இந்தியைக் கற்க மறுக்கிறார்கள் மொழிவெறியர்கள் என்றும் காதில் பூ சுற்றுவதை எப்போதுதான் நிறுத்துவார்களோ ஹிந்தி வெறியர்கள்.

ஹிந்தி மட்டுமல்ல வேறெந்த மொழியும் மற்ற மொழியினர் மீது திணிக்கப்படக்கூடாது என்பதே நேர்மையானதாகும். அதற்கான தற்போதைய உதாரணம் டெல்லி பல்கலைக் கழகத்தின் வடகிழக்கு மாணவர்கள் போராட்டம். 


படங்கள் நன்றி ஃபேஸ்புக்
டெல்லி பல்கலைக் கழகத்தின் ஹிந்தி/இந்தியாவின் நவீன மொழிகள் திணிப்பு:

வரும் 2013/14 ஆம் கல்வி ஆண்டுக்கான பாடத்திட்டத்தில் எல்லாப் பிரிவு முதலாண்டு மாணவர்களும் ஹிந்தி அல்லது இந்தியாவின் நவீன மொழிகளில் (Modern Indian Language) ஒன்றை அடிப்படையாக (foundational course) கற்றுக் கொள்ள வேண்டும் என்பதைக் கட்டாயமாக்கியுள்ளது. அதாவது மாணவர்கள் ஒரு பாடமாக ஹிந்தியைப் படிக்க வேண்டும். அல்லது அல்லது 8 வது அரசியலமைப்பு சட்டத்தின் படி வரையறுக்கப்பட்ட நவீன இந்திய மொழிகளான அஸ்ஸாமி, வங்கம் (பெங்காலி), போடோ, டோக்ரி, குஜராத்தி, கன்னடம், காஷ்மீரி, கொங்கணி, மைத்திலி, மலையாளம் மற்றும் மணிப்புரி ஆகியவற்றில் ஒன்றைக் கற்க வேண்டும். இதில் ஹிந்தியையோ அல்லது மேற்கண்ட மொழிகளுல் ஒன்றைத் தமது மொழியாகக் கொள்ளாத பல வடகிழக்கு மாநில மாணவர்களுக்கும் மிகுந்த சுமையைக் கொடுப்பதாகும்.

நாங்கள் இது பற்றி விவாதிக்க கோரிக்கை வைத்தும் நிர்வாகம் அதற்கு முன்வரவில்லை. நாங்கள் அலுவலகத்திற்கு வெளியே காவலர்களால் தள்ளப்பட்டோம், மாணவியர் மீது பாலின ரீதியான மொழியில் ஏசினார்கள்.

நவீன இந்திய மொழிகளைப் பேசும் மாணவர்களுக்கும் இந்தப் பாடத்திட்டம் கடினமானதுதான். ஏனென்றால் பல்கலைக் கழகத்திலுள்ள துறை, விரிவுரையாளர்கள் மிகக் குறைவான அளவே உள்ளதால் பல்கலைக் கழகத்தின் மொத்தப் பொறுப்பையும் மேற்பார்வையிடுவது இயலாது.

உலக நல்லிணக்கத்திற்கான வடகிழக்கு மாநிலங்கள் குழுமம் (The North-East Forum for International Solidarity (NEFIS)) - இதற்கான போராட்டங்களை மார்ச் 22, 25 ஆம் தேதிகளில் நடத்தியுள்ளது.

ஆசிய மனித உரிமை நடுவம், தேசிய மனித உரிமை ஆணையத்திடம் ஹிந்தி/இந்தியாவின் நவீன மொழிகள் திணிப்புக்கு எதிரான ஒரு புகாரை அளித்துள்ளது. 

வடகிழக்கு மாணவர்களின் கூடுதல் தேவைகள் புறக்கணிக்கப்படுவது அலட்சியப்படுத்தப்படுவதும் புதிதல்ல. பல்கலைக்கழகத்தின் கொள்கைகள் விதிகள் செயல்படுத்தப் படும்போதெல்லாம் வடகிழக்கு மாணவர்களின் விருப்பத்துக்கு எதிராகவே இருப்பதை நாங்கள் கவனித்து வந்துள்ளோம். ஆகவே இப்போது அதற்கு எதிராக நாங்கள் செயல்பட வேண்டியிருக்கிறது.

போராட்டம்

மார்ச் 22 ஆம் நாள் நண்பகல் 2 மணியளவில் டெல்லிப் பல்கலைக்கழகத்தின் கலைத் துறையின் (Faculty of Arts) வாயிலில், விவேகானந்தர் சிலையருகில் ஒன்று கூடலை நிகழ்த்தினார்கள். வட இந்திய மாநிலங்களைச் சேர்ந்த பல்வேறு பேச்சாளர்கள் டெல்லி பல்கலைக் கழகத்தின் பண்பாட்டு மீறலைக் கண்டித்துப் பேசினர். முழக்கங்கள் எழுப்பட்டதைத் தொடர்ந்து வாகனத்தில் வந்த காவல் துறையினரால் கூட்டம் தடுக்கப்பட்டது, டீனும், ப்ரோக்டரும் வந்து கூட்டத்தைக் கலைக்க முயன்றனர். டெப்டி டீன் அங்கே கூடியிருந்தவர்கள் மீது இனவெறிக் கருத்தை வெளியிட்ட பின்பு கைகலப்பு ஏற்பட்டது. மன்னிப்புக் கேட்கும் வரை கோரிக்கை மனுவைக் கொடுக்க மாட்டோம், பிரதிநிதிகளை அனுப்ப மாட்டோம் என்று கூறினார்கள் மாணவர்கள். இரண்டும் மணிநேர தொடர் முழக்கங்களுக்குப் பின்னர் டெப்டி டீன் வந்து மன்னிப்புக் கேட்டார். பின்பு பேச்சுவார்த்தைக்கு அஸ்ஸாமி, நாகா, மைத்தீஸ் (Meities), குகிஸ் (Kukis), டாங்குள்ஸ் (Tangkhuls), ஆஸ் (Aos) மற்றும் தமிழ் பிரதிநிதிகள் அனுப்பப்பட்டனர்.  அவர்களிடம் மீண்டும் திங்களன்று வருமாறும் அவர்கள் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படுமென்றும் உறுதியளிக்கப்பட்டது. போராட்டக்குழுமம் கோரிக்கை நிறைவேற்றாவிடில் திங்களன்று மீண்டும் போராட்டத்திற்கு ஒன்று கூடுமாறு அறிவித்தது. ஒற்றுமையுடன் இருப்பவர்கள் நிச்சயம் வெல்வார்கள் என்ற முழக்கத்துடன் கலைந்து சென்றார்கள் போராட்டக்காரர்கள்.

நவீன இந்திய மொழிகள் :

நவீன இந்திய மொழிகள் என்று வரையறுக்கப்பட்ட மொழிகள் 8 வது அரசியலமைப்புச் சட்டத்தின் படி அஸ்ஸாமி, பெங்காலி, போடோ, டோக்ரி, குஜராத்தி, ஹிந்தி, கன்னடம், காஷ்மீரி, கொங்கணி, மைத்திலி, மலையாளம், மணிப்புரி, மராத்தி, நேபாளி, ஒரியா, பஞ்சாபி, சமஸ்கிருதம், சந்தாலி, சிந்தி, தமிழ், தெலுங்கு மற்றும் உருது ஆகியன. இந்த மொழிகளுக்காகவும் டெல்லி பல்கலைக் கழகம் குறைவான விரிவுரையாளர்களையே கொண்டுள்ளது. வடகிழக்கிலிருக்கும் சிறுபான்மை/விளிம்பு நிலை குழுக்கள் சார்ந்த மொழிகளுக்கு விரிவுரையாளர்கள் இல்லை. மொழிகள் அங்கீகரிக்கப்படவில்லை.

எனவே இம்மொழி சாரா வடகிழக்கு மாணவர்கள் குறைந்த மதிப்பெண்கள் பெற்று தேற முடியும், இல்லையெனில் தோல்வியடைவார்கள். இது மாணவர்களின் கல்வித் தரத்தையும், வேலைவாய்ப்புக்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். ஏனெனில் இவர்களில் பெரும்பான்மையினர் பள்ளியில் ஹிந்தியைக் கற்றவர்களல்ல. இந்தியா டுடேவுக்கு பேட்டி அளித்த டீன் வெறும் 40% மதிப்பெண்கள் இடைநிலைத் தேர்வில் (semester) வெற்றியடையப் போதுமானது எனவே மாணவர்களின் கோரிக்கை அடிப்படையற்றது. எனவே கட்டாய மொழியில் நாங்கள் 0 எடுத்தால் கூடப் போதுமானது என்றும் கூறியிருக்கிறார். இதற்காக நாங்கள் படிக்க வரவில்லை. நாங்கள் சிறந்த மதிப்பெண்கள் எடுத்து நல்ல வேலையில் அமரவே விரும்புகிறோம்.

மேலும் வட கிழக்கு மாணவர்கள் பாரபட்சத்துடனேயே நடத்தப் படுகின்றனர். கடந்த வருடங்களில் நூற்றுக் கணக்கான மாணவர்கள் தேர்வில் தோல்வியடைந்துள்ளனர்.

கோரிக்கையின் சாரம்: 

 கட்டாய ஹிந்தி/ இந்திய நவீன மொழிகள் கற்றலை தனிப்பட்டவர் விருப்பத்திற்குரியதாக (optional) மாற்ற வேண்டும்.

நவீன இந்திய மொழிகளுக்கான பாடத்திட்டங்கள், பேராசிரியர்கள் நியமித்தலை உடனடியாக மேம்படுத்த வேண்டும்.

சட்டத்திற்கு புறம்பான முறையில் பழைய பாடத்திட்டத்தின்படி இந்தி கற்க வேண்டிய நிலையில், அதன் காரணமாக தேர்வுகளில் தோல்வியடையும் மாணவர்களின் நிலையைக் கவனத்தில் எடுக்க வேண்டும்.

மேலும் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு உதவும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

இப்போராட்டத்திற்கு நமது ஆதரவை அளிப்போம்.
Download As PDF
Bookmark and Share
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

1 கருத்து:

நான் படைப்பாளியோ, விமர்சகனோ அல்லன். வாசகன் மட்டுமே. எனவே உங்கள் கருத்தின்றி எனது இடுகை முழுமை பெறாது. நிறைகளை விடவும் குறைகள் அதிகம் எதிர்பார்க்கிறேன்