"ஜி" போடாதீங்க "ஜி"

நான் சில நாட்களுக்கு முன்னர் எழுதிய இடுகை - ஜி போடுது கொங்கு நாடு - அதில் தமிழ்நாட்டில் வேகமாகப் பரவி வரும் நச்சுக் கலாச்சாரமான "ஜி" போட்டுப் பேசுவது பற்றி எழுதியிருந்தேன். ஜி போடுது கொங்கு நாடு என்பதற்குப் பதிலாக ஜி போடுது தமிழ் நாடு என்று தலைப்பு வைத்திருக்க வேண்டும். ஏனெனில் அது கோவைப் பகுதிகளில் மட்டும்தான் இருப்பதாக எண்ணியிருந்தேன். நாம் இருக்கும் பகுதிதானே நம் உலகம். ஆனால் தமிழகம் முழுவதுமே இப்படித்தான் பேசத் துவங்கியிருக்கிறார்கள். இனி நானும் வெட்கப்படாமல் ஜி போட்டுப் பேசும் ஒவ்வொருவருடனும்  ஜி போட்டுப் பேசாதீங்க (டா போட்டுப் பேசாதே என்பதைப் போல்) என்று கூறியாக வேண்டும் போல் இருக்கிறது. 

நான் ஈரோட்டில்தான் கல்லூரிப் படிப்பை முடித்தேன். அங்கே இருக்கும் வரை நண்பர்களை அழைப்பதும், நண்பர்கள் என்னை அழைப்பதும் "மாப்ள", "மாப்பி" என்றுதான் இருந்தது. நாங்கள் முடித்த பின்னர் வேலை தேடியலையும் படலம் வந்துவிட முக்கால்வாசிப் பேர் சென்னைக்குப் பொட்டியைக் கட்டினோம். அங்கே போய் இருந்த சில வருடங்களில் இந்த "மாப்பிள்ளை" என விளிப்பது போய் "மச்சான்" என்று அழைத்துக் கொள்ள ஆரம்பித்திருந்தோம். அதற்குப் பிறகு என்னாலும் இந்த மாப்பி என்றழைக்கும் பண்பாட்டை மீட்டெடுக்க முடியவில்லை.

வெள்ளுடை மேன்மக்கள் தொடங்கி அம்மா, ஆத்தா, ஆயா என்பவற்றை மாற்றி மூன்றெழுத்துக்  கெட்ட வார்த்தைகளாக அன்றாடம் பயன்படுத்தும் கீழ்மக்கள் வரை வரையறை இல்லாமல் ஜி போட்டுத் தாளிக்கிறார்கள். கேட்டாலே பற்றிக் கொண்டு வருகிறது. திரைப்படம், நாளிதழ்கள், வார இதழ்கள், நெடுந்தொடர்கள், நேர்காணல்கள் என எல்லா மக்கள் திரள் ஊடகங்களிலும் இந்தப் பண்பாடு படுவிரைவாகப் பரவி வருகிறது. குறிப்பாக தமிழை தமிழாக எழுத முனையும் இணையத் தமிழர்கள், தமிழை சரியாகப் பேசாதவர்கள், தமிங்கில தத்திகள், தமிழை சரியாக பேச முயலாதவர்கள், இடையிடையே தமிழில் பேசுகிறவர்கள் இப்படி எல்லாத் தரப்பினரும் ஜி போடுகின்றனர். 


ஃபேஸ்புக் - ஐ முகநூல் என்று அழைப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. ஆனால் அது தவறாயிற்றே. என்ன செய்ய ? இது வரை எத்தனையோ ஆங்கிலச் சொற்களுக்கு இனிய தமிழாக மொழிபெயர்த்துள்ளார்கள். ஆனால் அதையெல்லாம் பயன்படுத்தத் தொடங்கவில்லை தமிழ்நாட்டினர். வானத்துக்கும் பூமிக்கும் இடையே உள்ள யாவற்றையும் கிண்டலடித்து மகிழும் தமிழர்கள், கொஞ்ச வருடங்களுக்கு முன்பு வரை குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவரான நடிகை நமீதா தமிழில் பேசுவதை கண்டமேனிக்குக் கிண்டலடித்தவர்கள், நடிகர் ரஜினிகாந்த் கலைஞர்ஜி என்று அழைத்ததையும் கிண்டலடித்தவர்கள். அதாவது தமிழ் தெரியாதவர்கள் தமிழில் பேச முயற்சி செய்தால் அதையும் கிண்டல் செய்வார்கள். ஆனால் இவர்கள் மட்டும் ஒழுங்காகப் பேச மாட்டார்கள். வெட்டி பந்தாவுக்காக சார் போட்டும், ஜி போட்டும் பேசுவார்கள். ஆனால் தமிழ்த் திரையில் பாருங்கள் அரைவாசி நடிகர்களின் தாய்மொழி தெலுங்காகவோ, மலையாளமாகவோ இருக்கும். அவர்கள் எவ்வளவு சரளமாகத் தமிழ் பேசுகிறார்கள். ஆனால் தமிழ் நடிகர்களில் மற்ற மொழி பேசத் தெரிந்தவர்கள் எத்தனை பேர் ? மற்ற மொழிப் படங்களில் நடிப்பவர்கள் எத்தனை பேர் ? நமக்கு அடுத்தவர்களை ஓட்டுவதுதான் பிடிக்கும். நமது மொழியையே ஒழுங்காகப் பேசத் தெரியாமல் அடுத்த மொழியை எங்கே கற்பதாம் ?

அணு உலை எதிர்ப்பாளரும், தமிழ்தேசியவாதியுமான சுப. உதயகுமார் அவர்களும் ஃபேஸ்புக் - இல் "ஜி" குறித்துப் பதிந்த நிலைக் கூற்று

 
அடுத்ததாக நமது முதன்மை எதிரிகளான இந்துத்துவவாதிகள் சமீபத்தில் திறந்து வைத்த கொள்கை முழக்கங்கள் பொறிக்கப்பட்ட சுவர்(பெரியாருக்குப் பதிலடியாம்). இதில் இந்து மக்கள் கட்சியின் தலைவர் தமிழ் திரு. அர்ஜூன் சம்பத் என்று எழுதியிருப்பதை மனதாராப் பாராட்டுகிறேன். ஏனென்றால் இவர்கள்தான் சுவரொட்டிகளில் கூட பெயருக்குப் பின்னால் "ஜி"யைச் சேர்த்து எழுதுகிறவர்கள். அந்த "ஜி" யை இங்கே பொறிக்காமல் தமிழ் திரு என்று போட்டிருப்பது பாராட்டத்தக்கது. ஆனால் அதற்கு மேலே ஒரு சின்னம் வைத்திருக்கிறார்கள் பாருங்கள் ஒரு இந்தி "ஓம்". தமிழில் கூட ஓம் என்பதை எழுதலாம் என்று இவர்களுக்கு யாரும் சொல்லித் தரவில்லையா ? அல்லது ஹிந்திதான் "மேல்"  என்று "குறி"ப்பால் உணர்த்த விரும்புகிறார்களா ? 


இவரது பங்காளியான இந்து முன்னணித் தலைவர் ராம கோபாலன் "கோபால்ஜி ஹிந்து முன்னணி" என்றுதான் ஃபேஸ்புக்கில் வைத்திருக்கிறார்.  இது என்ன கேலிக் கூத்து ? கருணாநிதியின் ஃபேஸ்புக் பெயர் "கலைஞர் கருணாநிதி அவர்கள்" என்று எழுதியிருந்தால் எப்படி சிரித்திருப்பார்கள் ? அவரே அவரை அவர்கள் என்று அழைத்துக் கொள்வாரா என்று கேட்பது போல் ராம கோபாலன்"ஜி" - யே ராமகோபாலன்"ஜி" - யை ராமகோபாலன்"ஜி" என்று அழைத்துக் கொள்வாரா என்று கேட்கலாம். ஜி ! என்ன ஜி நீங்க இப்படிப் பண்றீங்களே ஜி !

வெளி மாநிலத்தார் யாரேனும் தமிழ்செல்வன் என்றோ தேன்மொழி என்றோ பெயர் வைக்கிறார்களா ? இல்லை டெல்லியில் யாரேனும் அர்விந்த் கேஜ்ரிவால் அவர்கள், அண்ணன் அமித் ஷா என்றோ அழைக்கிறார்களா ? தமிழர்களுக்கு மட்டும் என்னத்துக்கு இந்தப் பிழைப்பு ? "அக்கா தமிழிசை அவர்கள்" என்றுதான் வட மாநிலத்தலைவர்களும் கூப்பிட வேண்டும் என்று உங்க தேசியச் செயற்குழுவில் தீர்மானம் போடுங்கள் பார்ப்போம். இல்லை அக்காவையும் உங்கள் வடமாநிலப் பங்காளிகளைப் போல அக்கா"ஜி" என்றோ, தமிழிசை"ஜி" என்றோ அழைக்கப் போகிறீர்களா ? 

அடுத்ததாக நமது மதிப்பு மிக்க "நிமிர்ந்த நன்னடையும் நேர்கொண்ட பார்வையும்" கொண்ட தினமணி ஆசிரியர் ராகுல்"ஜி" என்று தலைப்பிட்டு தலையங்கமே எழுதி விட்டார். தனது நாளிதழில் எப்படி தமிழ் எழுத்தின் மூலமாகவே ஹிந்தித் திணிப்பை பணிவாகப் பரப்பி வருகிறார் என்பதைப் பாருங்கள். 

தினமணி கடைசிப்பக்கம்  - 09- 05 - 2015
 இப்படியே விட்டால் தமிழை ஹிந்திக்கும் ஆங்கிலத்துக்கும், தமிங்கிலத்துக்கும் இடையே தேடிப்பார்த்தாலும் கிடைக்காது போகும். தயவு செய்து ஜி போட்டுப் பேசாதீர்கள், பேசாதீர்கள். இதையெல்லாம் நம் போன்ற இணையப் போராளிகள்தான் முன்னின்று செய்ய வேண்டும்.

Download As PDF
Bookmark and Share
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

0 பின்னூட்டங்கள்:

கருத்துரையிடுக

நான் படைப்பாளியோ, விமர்சகனோ அல்லன். வாசகன் மட்டுமே. எனவே உங்கள் கருத்தின்றி எனது இடுகை முழுமை பெறாது. நிறைகளை விடவும் குறைகள் அதிகம் எதிர்பார்க்கிறேன்