"ஜி" போடுது கொங்குநாடு

தலைப்பைப் படித்து பெரிதாக யாரும் குழப்பிக் கொள்ளத் தேவையில்லை. ஓ போடுவது ஜே போடுவது ஜால்ரா போடுவது, ஆமாஞ் சாமி போடுவது, சோப்புப் போடுவது, கடலை போடுவது, அறுவை போடுது, ரம்பம் போடுவது, மொக்கை போடுவது, சீன்(scene) போடுவது என்றெல்லாம் கேள்விப்பட்டிருப்போம் இல்லையா. அது போலவே டீ போட்டுப் பேசுவது, டா போட்டுப் பேசுவது, சார்(sir) போட்டுப் பேசுவது என்பனவும் நமக்குத் தெரியும். தற்காலத்தில் தமிழ்நாட்டில் பலர் ஒன்றைப் போட்டுப் பேசுகின்றனர். அது என்னவென்பதைத்தான் தலைப்பாகக் குறிப்பிட்டிருக்கிறேன்.

கொங்கு நாடு கேள்விப்பட்டிருப்பீர்கள். கோவை, திருப்பூர், கரூர், ஈரோடு, போன்ற சில மாவட்டங்களை சேர்த்து கொங்கு நாடு என்று குறிப்பிடுவார்கள். அந்தப் பகுதிகளில் வழங்கும் தமிழ் வட்டார வழக்கும் கொங்கு தமிழ் என்றே வழங்கப்படுகிறது. "ஏனுங்" "சரிங்" "வாங்" "போங்" "ஙோவ்" அந்த க என்ற எழுத்தைச் சொல்கிறார்களா இல்லையா என்ற குழப்பம் வருகிற மாதிரி உச்சரிப்பார்கள். அதுவே கொங்கு தமிழின் அழகு எனலாம். இதை கிண்டல் செய்கிறேன் பேர்வழி என்று பண்பலை வானொலி நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குகிறவர்கள், சில திரைப்படங்கள் ஏனுங்கோ வாங்கோ போங்கோ என்று ஏற்றிச் சொல்லி அப்படிப் பேசுவதுதான் கோயமுத்தூர் தமிழ் என்று உயிரை வாங்கோ வாங்கென்று வாங்குவார்கள்.

என்னுடையது உன்னுடையது, என்பதை என்றது, உன்றது என்றும் சொல்வர். "என்றா கண்ணு சொல்லிப்போட்ட நீயி" என்ற குடும்பம், உன்ற புருசன் என்றெல்லாம் கே.எஸ். ரவிக்குமார் படங்களில் வரும் பெரிய மனுசன்மார்களின் வசனத்தையும் கேட்டிருக்கிறோம். என் + தன் = எந்தன் உன் + தன் = உந்தன் என்றுதான் கவிஞர்கள் பலரும் குறிப்பிடுகிறார்கள். ஆனால் உண்மையில் என்+தன் என்பது என்றன் உன்+தன் என்பது உன்றன் என்றுதான் குறிப்பிட வேண்டுமாம்.  (நன்றி - கவிஞர் மகுடேஸ்வரன்) சரி அது கிடக்கட்டும். எல்லாரும் ஒரு விடயம் சொல்வார்கள். கோயமுத்தூர்காரர்கள் மரியாதை உள்ளவர்கள். கோயமுத்தூர் மரியாதைக்குப் பெயர் பெற்ற ஊர் என்றெல்லாம் கூறுவார். மற்ற ஊர்க்காரர்கள் எல்லாம் மரியாதை தெரியாதவர்களா என்ன ? அவர்கள் மொழி நடை, வட்டார வழக்கு அடுத்தவர்களுக்கு மரியாதை தருவதாகத் தெரிகிறது. அவ்வளவே கேட்பதற்கு நன்றாக இருக்கிறது என்பது தாண்டி கோவை மரியாதை தரும் ஊர் என்பதெல்லாம் "தமிழ் உலகின் மொழி", "கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே முன்தோன்றிய" போன்ற பழமொழிகளைப் போன்றே வெறும் கேட்பதற்கினிய வதந்தி தான் .

கோவையைத் தாண்டி சற்று ஊர்களுக்குச் சென்று பார்த்தான் தெரியும். பேரன் வயது மேல்ஜாதிச் சிறுவனை தாத்தா வயது கீழ்ஜாதிக்காரர் வாங்க போங்கவென்றுதான் அழைக்க வேண்டும். பேரன் வயது மேல்ஜாதிச் சிறுவன் அப்பா வயது கீழ் ஜாதிக்காரரை பெயர் சொல்லியும், சமயத்தில் வாடா போடாவென்றும் அழைக்கும் அளவுக்கு மரியாதை உள்ள ஊர். அந்தப் பெருமையைச் சொல்லி சிலிர்ப்பவர்கள் இதையும் சொல்ல வேண்டும் அல்லவா ? நமக்கு நடப்பை விட கனவுலகில் இருக்கும் மணித்திருநாடுதானே வேண்டும் போலிப்பெருமை கொள்ள ? ஆனால் கொங்கு நாடு என்பது உண்மையில் மணித்திருநாடாக (utopia)  இல்லாமல் (ஜாதிப்) பிணிமிகு நாடாக (dystopia) அன்றோ இருக்கிறது.

தலைப்புக்கு வருகிறேன். நாம் எல்லோரும் மரியாதையா ஒருவரை விழிப்பதென்றால் எப்படி விளிப்போம். வாங்க போங்க என்றும் நபரின் பெயர் சொல்லியும் அல்லவா ? தற்போது கோவையில் பலரும் பெயருக்குப் பின்னால் ஜி போட்டுத்தான் அழைக்கிறார்கள். 20 வயது கூட நிரம்பாதவர்கள் கூட இப்படிப் பேசிப் பழகியிருக்கின்றனர். என்னய்யா இது ஒரு வசதிக்காக மரியாதைக்காகவும் "ஜி" போட்டுப் பேசுவது தவறா என்று சிலர் எண்ணக் கூடும். நாம் எல்லோரையும் சார் போட்டு அழைக்கிறோமே அதுவே என்ன ஒரு இழிவு தெரியுமா நான் மேற்சொன்ன ஜாதி இழிவைப் போலத்தான். ஆங்கிலேயர் நம்மை ஆண்ட போது அவர்களை அண்டிப் பிழைத்தவர்கள் எல்லாம் இந்த "சார்" என்ற சொல்லைப் பயன்படுத்தித்தான் அவர்களிடம் இளித்து நின்றனர். ஆங்கிலேயர் போன பின்னரும் இந்த "சார்" நம்மை விடவில்லை. நமது எஜமானர்களை அழைக்கப் பயன்படுத்தி வருகிறோம். சார் என்றால் என்ன "Slave I Remain" என்று பொருளாம். ("Servant I Remain"  என்றும் பொருள்)

அவ்வப்போது என்னுடைய உறவினர் ஒருவர் மற்றவர்களை பேச்சினைடையே இப்படி அழைப்பார். அவர் பேசிக்கொண்டிருக்கும் நபரின் பெயர் மணி என்றால் " மணி "ங்க" இங்க பாருங்க. அதெல்லாம் சரிதாங்க" இது எனக்கு ரொம்பவும் விநோதமாகத் தெரிந்தது. இது மாதிரி வேறு யாரும் அழைத்ததாகத் தெரியவில்லை.

தேவையில்லாத இடங்களில் கூட, வேண்டுமென்றே ஜி ஜீ என்று பெயருக்கு முன்னரும் பின்னரும் சேர்த்துப் பேசத் துணிகின்றனர்.  திரைப்பட விழாக்களில் நடிகர்கள் மாற்றி மாற்றி அந்த சார் இந்த சார் என்று அறுத்தெடுக்கிறார்கள். அது போலவே இப்போது ஜி போட்டு விளிப்பது மிகவும் சர்வசாதரணமாகி வருகிறது.

இல்லீங்ஜி
ஆமாஞ்ஜி
ஜி என்ன இது
சரிங் ஜீ
வரட்டுமா ஜி
பாய்ஜி

ஆரம்பிக்கும்போதும் "ஜி"ல ஆரம்பித்து முடிக்கும்போதும் "ஜி" யிலேயே முடிக்கிறார்கள். ஒருவரை பெயர் சொல்லிக் கூட அழைப்பதில்லை, ஜீ மட்டுமே போதுமாயிருக்கிறது. பத்துப் பதினைந்து வருடங்களுக்கு முன்பெல்லாம் நம்மை விட மூத்த பெண்களை நாம் என்னவென்று அழைப்போம். அக்கா என்றுதானே ? ஆனால் தற்போது பாருங்கள் எல்லாரும் 30 வயது நடிகைகள், கொஞ்சம் மூத்த பெண்கள், திருமணமான பெண்களைக் கூட "ஆன்ட்டி" என்றே அழைக்கின்றனர். ஆன்ட்டி என்பது பெண்களை வயதானவர்கள் என்று சொல்லாமல் சொல்லும் கேலிக்குரிய பெயராகிவிட்டது.

முஸ்லிம்களைக் குறிப்பிடும்போது பாய் என்கிறோமே ஏன் ? ஹிந்தியில் பய்யா என்றால் அண்ணா என்று பொருள். முஸ்லிம் என்றாலே உருதுவில் பாய் என்றழைத்து அதுவே அவர்களின் அடையாளமுமாகிவிட்டது. தமிழ் முஸ்லிம்களைக் கூட பாய் என்றே அழைக்கிறோம். முஸ்லிம்களே கூட அவர்களிடையே பாய் என்று அழைத்துக் கொள்வதுமுண்டு. இதே போல் இந்த ஜீ என்பதும் வளர்ந்து வருகிறது. முதலில் வட இந்தியர்கள் மட்டும் பயன்படுத்தியது போய், வட இந்தியர்களிடம் பேசும்போது மட்டும் நாம் பயன்படுத்திய ஜி, தற்போது தமிழர்களிடையேயும் பரவிவருகிறது. நானும் கூட இப்படிப் பேச வேண்டி இருக்கிறது சமயத்தில். இணையத்தமிழர்களும் கூட ஜி போட்டு எழுதுகின்றனர்.

இதன் முக்கியக் குற்றவாளிகளாக இந்துத்துவா இயக்கத்தையே நான் குற்றம் சாட்டுகிறேன். ஏனென்றால் இவர்கள்தான் மொழிவாரி மாநிலம் என்பதையே ஏற்காதவர்கள். நம் பிரதமர் உட்பட. இந்தி, செங்கிருதம் போன்ற மொழிகளைக் கற்பிப்பது கட்டாயமாக்கப்பட வேண்டும் என்பவர்கள். மாநாடுகள், பாராட்டு அறிக்கைகள், போராட்ட முழக்கங்கள் உட்பட அனைத்திலும் கூட ஜீ என்ற எழுத்தைப் போட்டுத்தான் சுவரொட்டிகள் அச்சடித்து ஒட்டுகின்றனர். சுவரெழுத்துக்களிலும் கூட ஜி என்பது சேர்ந்து விட்டது. ஏன் இவர்கள் அறிவிப்பு முழுவதையும் ஹிந்தியிலேயே எழுதியிருக்கலாமே. அவற்றையெல்லாம் படிக்கும் கொடுமை மற்றவர்களுக்கிருக்காதல்லவா ? இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் என்று எழுதுவார்கள் எப்போதாம் ? சித்திரை ஒன்றாம் நாளுக்கு. அதிலும் அந்த ஓம் என்ற (வடமொழிக்)குறியீட்டை பெரியதாக தமிழெழுத்துக்களினிடையே திணித்து தமிழ் வாக்கியத்தைப் பிளந்து வைப்பார்கள். (இவர்களைக் கண்டால்தான் எனக்கு இப்படியெல்லாம் தோன்றுகிறது)

தமிழெழுத்தைப் பயன்படுத்தி ஹிந்தியை வளர்க்கும் இவர்களை போலத்தான் இந்தியா முழுதும் ஹிந்தி பேசாத மாநிலங்களிலும் ஆங்கில எழுத்துக்களின் மூலம் ஹிந்தியத் திணித்து வருகின்றனர். நிகாலோ, சலோ, பச்சோ என்றெல்லாம் ஹிந்திச் சொற்களை ஆங்கிலத்தின் மூலம் எழுதுகின்றனர். விற்பனை பொருட்களின்  பெயர்கள், திட்டங்களின் பெயர்கள்தான் ஹிந்தித் திணிப்பின் வாகனம். இதில் அரசு அல்லாத தனியார் நிறுவனங்களும் அடக்கம்.

இவர்களைப் போலவே இன்னொரு தேசியக் கட்சியான காங்கிரஸ் காரர்கள், இவ்வாறு ஜி சேர்த்து எழுதுவதில்லை. அன்னை சோனியா, அன்னை இந்திரா, தலைவி சோனியா அவர்கள்,  தலைவர் ராகுல், அமரர் ராஜீவ் என்றுதான் எழுதியும் பயன்படுத்தியும், பேசியும் வருகின்றனர். தமிழகத்திலுள்ள திராவிடக் கட்சிகள், ஜாதிக் கட்சிகள் கூட தமிழில்தான் பெயரையும் தலைவர் பெயருக்குப் பின்னர் அவர்கள் என்பதையும் எழுதி வருகின்றனர். கலைஞர் அவர்கள், மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்கள் இப்படியெல்லாம் பார்த்திருப்போம்.  என்ன எரிச்சலென்றால் பெயருக்கு முன்னர் அடைமொழி எரிமலை, தானைத் தலைவர், இனமானக்காவலர் வைத்து சிரிப்பு மூட்டுவார்கள். பொதுவுடமைக்காரர்களோ தோழர் என்று சொல்லிக் கொள்வர்.

பாரதிய ஜனதாவின் ஆதரவாளர்கள்தான் மோடிஜீ மோடிஜீ என்று பேசியும் எழுதியும் வந்தனர். இது அப்படியே மற்ற தமிழகத் தலைகளையும் குறிப்பிடத் தொடங்கிவிட்டனர். ராமகோபாலன்ஜீ, அர்ஜூன் சம்பத் ஜீ, முருகானந்தம் ஜீ என்று மாறுகிறது. இன்னொரு எரிச்சல் என்னவென்றால் தமிழகம் சாராத தலைவர்களனைவருக்கும் ஜாதிப்பெயரையே தங்களது இரண்டாவது பெயராக வைத்துள்ளனர். பெரும்பான்மையாக இவர்களைக் குறிப்பிட இந்த ஜாதிப்பெயரே பயன்படுத்தப்படுகிறது. மோடி, நாயுடு, ரெட்டி,  பிரகாஷ் காரத், மம்தா பானர்ஜி, பாண்டே, பென், மேனன், நாயர், சாட்டர்ஜி, இப்படியெல்லாம் இருக்கின்ற பெயர்களையே அவர்களைக் குறிப்பிடுகின்றனர். இந்த ஜாதிப்பெயரின் பின்னால்தான் ஜீ போடுகிறார்கள். ஆந்திராவில் பெரியாரை ராமசாமி நாயக்கர் என்றுதான் அறிந்து வைத்துள்ளனர்.

தமிழ்நாட்டில் ஜாதிப்பெயரை சேர்த்துக்கொள்வது மட்டும்தான் இல்லை. மற்றபடிக்கு ஜாதி உணர்வெல்லாம் ஆகாவென்றுதான் இருக்கிறது. ஜாதிப்பெயர் பின்னால் இருக்கும் மற்ற மாநிலத்தில் ஜாதி உணர்வே இல்லாமல் இருப்பவர்களும் உள்ளனர். இருப்பினும் மற்ற மாநிலத்தவரைப் போல் ஜாதிப்பெயரை சேர்க்காமல் இருப்பதை நாம் பெருமையாகவே கருத வேண்டும். ஆனால் கெடுவாய்ப்பாக இப்போது தமிழ்நாட்டிலும் ஜாதிப்பெயரைப் பின்னால் சேர்த்துக் கொள்வதை ஃபேஸ்புக்கில் தொடங்கியுள்ளனர். ஜாதியை இனமென்றும் சொல்லிக் கொள்வதால் அதன் பெயரில் அழைத்துக் கொள்வதையே விரும்புகிறார்கள் சிலர். நாளை இவர்கள் பெரிய தலைவர்களாக வளரும் போது இவர்களைப் பார்த்து எல்லா ஜாதிக்காரர்களும் தங்களது பெயரைப் பின்னால் இணைத்துக் கொள்வர். அப்போது இந்த "ஜீ"யும் சேர்ந்து கொள்ளும். அன்றைய நாளினைக் கற்பனை செய்து கொண்டால் இப்படி இருக்கும். "முத்தரையர் ஜி யின் கருத்துக்கு கவுண்டர் "ஜி" அவர்கள் கண்டனம்",  "நாளை தேவர்ஜி பேசுகிறார்" "மதிப்புக்குரிய செட்டியார்ஜி இறந்தார்", "ஐயர் ஜி அவர்களுக்கு பத்மஸ்ரீ விருது" அறிவிக்கப்பட்டது" "மள்ளர்ஜி நாளை மதுரை வருகிறார்", "கள்ளர்ஜி அவர்கள் தேர்தலில் வெற்றி பெற்றார்" "நாடார்ஜீ மாலை அணிவித்து வரவேற்றார்". 

இதையெல்லாம் கேட்க உங்களுக்கு ஆவலாக இருக்கிறதா ? "நமஸ்காரம்" என்பதே தமிழ்நாட்டில் பரவலாக இருந்தது. அதைத் தமிழில் வணக்கம் என்று மாறுவதற்கு தெருவில் நின்று போவோர் வருவோரிடமெல்லாம் வணக்கம் சொல்லி அதை மாற்றியிருக்கிறார்கள் நமது (திராவிட இயக்கத்தவர்)முன்னோர்கள். இதெல்லாம் இனி நிலைக்குமா ? ஏனென்றால் உலகத்திலேயே பேபி ஷாலினி என்று குழந்தைக்குப் பெயர் வைத்தது தமிழனன்றி வேறு யார் என்று எனக்குத் தெரியவில்லை.
Download As PDF
Bookmark and Share
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

6 கருத்துகள்:

 1. ஜீ போட்டு பேசுறவனையும், எழுதறவனையும் அவன் மூஞ்ஜீயில நச்சு நச்சுனு குத்தினா திருந்திப்புடுவானுங்க.. இந்துத்வாக்கு சாமரம் வீசும் சில இயக்கங்கள் கொங்கு நாட்டில் இயங்கிக் கொண்டிருக்கின்றன. அதாவது தமிழ் உடம்பில் கொங்குப் பகுதியில் தான் புற்றுநோய் தாக்கத் தொடங்கியிருக்கு, இப்பவே அங்கு கீமோதெராபி கொடுத்தால் மற்ற பகுதிகளும் பிழைத்துக் கொள்ளும், இல்லை என்றால் தமிழ் நாடே காலியாகி தமிழ் நாடு ஜீ நாடு, ஸ்ரீநாடு, ஸ்ரீஜி, 3ஜி நாடு என்றெல்லாம் மாற்றப்படலாம்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கொங்கு நாட்டுக் காவலர்கள் பாரதிய ஜனதா அனாமத்தாகக் கிடந்தே காலந்தொட்டே ஆதரித்து வந்துள்ளனர். இப்போது தனிக்கட்சி தொடங்கி, பல கட்சிகளாகப் பிரிந்த போதும் பாஜக விசுவாசம் தொடர்கிறது. இவர்களுக்கு தமிழ்சார்ந்த இன உணர்வு எல்லாம் கிஞ்சித்தும் இல்லை. பெரும்பான்மை இந்துக்களாகவே தங்களை அடையாளப்படுத்திக் கொள்கின்றனர். வெட்டிப் பெருமை பேசும் ஆண்ட பரம்பரைக் கதையடிக்கும் ஜாதி. தங்களுக்கான கூட்டாளி பாஜகவே என்று தெளிவாகக் கண்டுள்ளனர். அடுத்த குமரி கொங்குநாடுதான்.

   நீக்கு
 2. People in kongu area should wake up from deep sleep of hindutuva pothai (mayakkam).

  பதிலளிநீக்கு
 3. பெயரில்லா23/5/15 3:43 பிற்பகல்

  பேச்சு வழக்கில் இந்த ஜி நச்சைப் பரப்பியவர்கள் திரைத்துறையினர். சரியாகச் சொன்னால் அஜீத் நடித்த ஜீ என்ற படத்துக்குப் பின்னர் அவரை ஜீ என்று சொம்படித்து வந்த திரையுலகம் அதை மெல்ல பல நடிகர்களுக்கும் விரிவாக்கி தங்கள் விசுவாசத்தை வெளிக்காட்டியது. அந்த காலகட்டத்தில்(2003-2010) வெளிவந்த திரைத்துறையினர் பேட்டிகளை யூடியூபில் கவனியுங்கள். மேலும் பத்திரிகைப் பேட்டியிலும் அவ்வாறு கூறியதாக நிருகர்கள் எழுதினர். பின்னர் சுந்தரபாண்டியன், வருத்தப்படாத வாலிபர் சங்கம் போன்ற படங்களில் பொதுமக்கள் பேசுவது போல (சூரி, சிவகார்த்திகேயன்) காட்சிகள் வைத்து பரவலாக்கினர். இதையே தமிழ் கூறும் நல்லுலகம் பேஷனாக வரித்துக்கொண்டது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //சுந்தரபாண்டியன், வருத்தப்படாத வாலிபர் சங்கம் போன்ற படங்களில் பொதுமக்கள் பேசுவது போல (சூரி, சிவகார்த்திகேயன்) காட்சிகள் வைத்து பரவலாக்கினர். இதையே தமிழ் கூறும் நல்லுலகம் பேஷனாக வரித்துக்கொண்டது.//

   ஆம். இப்படியும் ஒரு கோணம் இருக்கிறது. திரைப்படங்கள் பெரிய தாக்கம் செலுத்துகின்றன என்பது உண்மை. ஜி படம் வந்து பத்து வருடம் இருக்கும். அப்போதெல்லாம் யாரும் இவ்வளவு பேசியதாகத் தெரியவில்லை. அதுவும் ஒரு தோல்விப்படம், ஏற்படுத்திய தாக்கம் குறைவு என்று தோன்றுகிறது. இப்போது தலைவா படம் வந்த பிறகு சிலர் ப்ரோ ப்ரோ என்று பேசித் திரிந்தார்கள். ஆனால் ப்ரோ என்றழைக்கும் பழக்கம் பரவவேயில்லை. இந்த ஜியை மட்டும் பிடித்துக் கொண்டு தொங்குகிறார்கள். அண்ணன் என்று அழைத்தவனெல்லாம் ஜிக்கு மாறிவிட்டான்.

   நன்றி

   நீக்கு

நான் படைப்பாளியோ, விமர்சகனோ அல்லன். வாசகன் மட்டுமே. எனவே உங்கள் கருத்தின்றி எனது இடுகை முழுமை பெறாது. நிறைகளை விடவும் குறைகள் அதிகம் எதிர்பார்க்கிறேன்