வலையுலகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வலையுலகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

தொகுப்புகள்

எழுதுவதன் தொடர்ச்சி விட்டுவிடக்கூடாது என்பதற்காக ஏதாவது எழுத வேண்டியிருக்கிறது. எழுதவதில் கிடைக்கும் உணர்வும் ஒரு இன்றியமையாத காரணம். பணிச்சுமையும், வாசிப்பே இல்லாத நிலையும், அயர்ச்சியும் இணைந்து வலைப்பூவின் பக்கமே வரவிடுவதில்லை. முடிந்தவரையில் இணைய வாசிப்பு மட்டுமே தொடர்ந்து இருக்குமாறு பார்த்துக் கொண்டிருக்கிறேன். அதனால் இந்தப் பதிவில் பிற இடங்களில் வாசித்தவை மட்டும். 

நீண்ட நாட்களுக்குப் பிறகு தட்டத்தின் மராயத்து என்றொரு மலையாளப்படம் பார்த்தேன். தமிழ்த்திரைப்படம் போல் இருந்து விடுமோ என்று தொடக்கத்தில் திரைக்காட்சிகள் அச்சத்தைத் தந்தாலும் போகப் போக மலையாளத் திரைப்படத்தின் இயல்பு வந்து விடுகிறது. சின்னச் சின்னத் திருப்பங்கள், மெலிதான நகைச்சுவை, நெகிழ்ச்சிகள், சுவாரஸ்யம், வசனம் என்று எல்லாவகையிலும் நன்றாக இருந்தது.  மலையாளத் திரையுலகைப் பொறுத்தவரையில் மிகச்சிறப்பான அல்லது புதுமையான திரைப்படம் இல்லையெனினும் காணக்கூடியதே. இதுவரை எந்த மலையாளப்படமும் என்னை ஏமாற்றாமல் மனநிறைவைத் தந்துள்ளன. இதுவும் கூட.

பாலியல் வன்முறை பிற குற்றங்களும் தண்டனைகளும் :

தருண் தேஜ்பால் அல்லது நரேந்திர மோடி உளவு பார்த்தது மாதிரியான விவகாரங்களில் பாலியல் வன்முறையை எதிர்ப்பது என்பதைக் காட்டிலும் தத்தமது எதிரிகள் பாலியல் வன்முறையில் ஈடுபட்டால் மட்டுமே பெண்களுக்கு ஆதரவாகப் பேசுவதும் தான் போற்றும் தலைவரோ அல்லது தன்னைச் சார்ந்தவர்களோ ஈடுபட்டால் கள்ள மௌனம் காப்பதுதான் தெரிகிறது. பாலியல் ரீதியான வன்முறைகள், அணுகுமுறைகள் தவறு என்பதைக் காட்டிலும் யார் செய்கிறார்கள் என்பதில்தான் எதிர்ப்பும் ஆதரவும் வெளிவருகிறது. மாட்டியது தெஹல்கா ஆசிரியர் என்றதும்தான் பல பேர் பெண்ணியவாதிகள் என்பதே தெரியவருகிறது. 

பெண்களைக் கிண்டல் செய்ததற்காக. என்னுடைய அலுவலகத்தில் மூன்று பேர் பணிநீக்கம் செய்யப்பட்டார்கள்  மூன்றில் ஒருவர் Team Lead. அவர் தனது கீழே இருப்பவர்களைக் கண்டிக்காத குற்றத்துக்காகவும் அவர்களை காப்பாற்றும் நோக்கில் பேசியதாலும் அவரும் நீக்கப்பட்டார். அவர் அச்செயலில் ஈடுபடாத போதும் அவரை நீக்குவதற்கான கெடுவாய்ப்புகள் ஏற்கெனவே அவரது முந்தைய நடவடிக்கைகளிலிருந்து  இருந்தன. 

அலுவலகம் முழுவதும் இதைப் பற்றிப் பேசினார்கள். அவர்கள் செய்தது தவறு என்ற ரீதியில் சிலர் மட்டுமே பேசினார்கள் மற்றவர்கள் யாருக்கும் தெரியாமல் செய்திருக்கலாம் என்ற ரீதியில்தான் பேசிக் கொண்டிருந்தார்கள். ஆக இவர்களுக்கெல்லாம் இது தவறு என்று புரியப்போவதுமில்லை. அதனால் தண்டனைகள் இது போன்ற செயல்களுக்காவது உடனடியாக நிறைவேற்றப்படுவது குறைந்தபட்சம் அச்சத்தையாவது வரவழைக்கும். Eve Teasing  என்பது ஆண்கள் எல்லோராலும் அங்கீகரிக்கப்பட்ட இயல்பான செயலாகவே பேசப்படுகிறது. அது தவறே இல்லை என்பது போல்தான் எல்லாரும் நடந்து கொள்கிறார்கள். ஒருவர் அதனை செய்யாதவராயினும் கூட இருப்பவர்களால் அவரும் சேர்ந்து பாதிக்கப்படுவது நடக்கிறது.  பாலியன் வன்முறையும் கிட்டத்தட்ட அதே போலத்தான். தருண் தெஜ்பால், ஏ. கே கங்குலி என பெரிய கண்ணியவான்கள், கனவான்கள் எல்லோரும் கை நனைத்தவர்களாகவே இருப்பதைப் பார்த்தால் ஒரு ஆண் கூட நம்பத்தக்கவன் அல்ல என்றே தோன்றும்.

கோவையில் தன் மனைவி இறந்து விட்டதாகக் காட்ட தன்னிடம் வந்த ஒரு பெண்ணைக் கொலை செய்த வழக்கறிஞர் ஒருவரை கோவளத்தில் வைத்துப் பிடித்திருக்கிறார்கள். அதைப்பற்றி ஒரு நண்பரிடம் பேசிக் கொண்டிருந்தேன். அவருக்குத் தெரிந்த ஒருவன் பேசியதாகக் கூறினார். சில பத்தாயிரங்கள் தந்தால் கொலை செய்வதற்குத் தயாராக இருப்பதாக ஒருவன் சர்வ சாதரணமாகப் பேசினான், பணத்தைக் கொடு நான் போட்டுத் தள்ளிட்டு கொஞ்ச நாள் தலை மறைவாக இருந்து விட்டு பின்பு சரணடந்து விடுகிறேன். நீ ஜாமீனில் எடுத்து விடு என்றானாம். சட்டத்தின் மீது குடிமகனுக்கு எவ்வளவு அச்சமும் மதிப்பும் என்று அதிர்ச்சியாக இருந்தது. இப்படி பணத்துக்காக ஒவ்வொருவனும் கொலை செய்ய ஆயத்தமானால் என்னவாகும் இந்த  நாடு என்று தோன்றியது. :((((

தமிழகத்தின் மீதான ஓர வஞ்சனை:

ஒரிரு மாதங்களுக்கு முன்பு குங்குமத்தில் ஒரு கட்டுரையை வாசித்தேன். ஒரு செயற்கைக்கோள் ஆய்வு நிலையம் அமைக்கும்படியான இடம் தமிழகத்தில் இருப்பதாகவும், அதன் மூலம் குறிப்பிடத்தக்க வேலை வாய்ப்புக்கள் உருவாக்கும்படியுமான திட்டம் எனினும் அது இந்திய வானியல் ஆராய்ச்சி மையத்தின் மலையாளிகள் ஆதிக்கத்தின் காரணமாக தமிழ்நாட்டுக்கு வருவது தடுக்கப்பட்டது என்பதாகவும் படித்தேன். 


கெயில் என்ற நிறுவனத்தின் பங்குகள் 57% நடுவண் அரசினுடையவை என்று இத்தகவல் கூறுகிறது. இதன் மூலம் இந்திய அரசு எத்தகையது என்பதை முடிவு செய்து கொள்ளலாம். 

https://www.facebook.com/photo.php?fbid=667286226636854&set=a.320897871275693.79991.236784116353736&type=1&relevant_count=1



அடுத்தது தமிழ் நாட்டிற்கான வளர்ச்சித் திட்டத்தைப் பாருங்கள். 



https://www.facebook.com/photo.php?fbid=314274975379746&set=a.278920168915227.1073741825.278864095587501&type=1

https://www.facebook.com/deltamethane
Download As PDF
Bookmark and Share

Post Comment

வலையுலகம் ஏன் காற்று வாங்கிக் கொண்டிருக்கிறது ?

தற்போது வலையுலகில் ஒருவித மந்த நிலை நிலவுவது போல் தோன்றுகிறது. இணையத்தில் எழுத்தார்வமும், வாசிப்பார்வமும், தமிழார்வமும் கொண்டோர்க்கு இது மிகவும் கவலை கொள்ளக்கூடியதாகும். இப்போது நிறையப் பேர் புதியதாக எழுத வருகிறார்கள் வந்து கொண்டேயிருக்கிறார்கள். அவர்கள் தொடர்ந்து எழுதுவார்களா என்பதுதான் பிரச்சனையாக இருக்கிறது. அது மட்டுமல்ல ஏற்கெனவே எழுதிக்கொண்டிருந்தவர்கள் நிறையப் பேர்களை இப்போது காணவில்லை. அவர்கள் வலைப்பதிவில் எழுதுவதை நிறுத்திவிட்டார்களா என்றும் தெரியவில்லை. சிலர் ஃபேஸ்புக், ட்விட்டர், ரீடர், பஸ் போன்றவற்றில் மட்டுமே எழுதிவருவதாகவும் கேள்விப்படுகிறோம். இதன் மூலம் அவர்கள் குறிப்பிட்ட வட்டத்தைத் தாண்டி சென்றடைய முடியாது என்ற நிலையில் ஏன் அவ்வாறு செய்கிறார்கள், சுருக்கிக் கொள்கிறார்கள் என்பது தெரியவில்லை.

திரட்டிகளில் தங்கள் பதிவுகளையும் வலைப்பூக்களையும் இணைத்துக் கொள்ளாதவர்கள் கூட இருக்கிறார்கள். இது ஏன் என்றுதான் தெரியவில்லை. இது போன்று இணைய வாசிப்புக்காக ஏங்கியவர்களின் பசியைப் போக்கியவைதான் திரட்டிகள். எல்லோருக்கும் எல்லா இணையத்தளங்களின் பெயரையும் முகவரியையும் அறிந்து வைத்திருப்பது சாத்தியமற்றது என்பது தெரிந்ததே. எனக்கு ஆனந்த விகடன் மூலமாகவே தமிழ்மணம் அறிமுகமானது. ஏறக்குறைய நான்கு வருடங்களுக்கு முன்பாகத்தான் அறிந்தேன். அப்போது திரட்டிகள் வலைப்பூக்கள் என எதுவும் தெரியாது. வெறுமனே இணைப்புகளை சொடுக்குவதன் மூலமே படித்தேன் சில நாட்களாக.

இது போன்று இணையமும் நேரமும் கைவரப்பெற்றும் வலைப்பூக்கள் பற்றி அறியாதவர்கள் திரட்டிகள் மூலமே பல வலைப்பூக்களையும் வாசிக்க இயலும். எல்லாத் தகவல்களையும் பெற்றிட முடியும். மேலும் அவர்கள் எழுதுவதற்கான ஒரு தூண்டுகோலாகவும் அது அமையும் என்பதே இதன் சிறப்பம்சம். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் எனக்கு நேரம் என்பது இருந்ததேயில்லை. அதிகம் வாசிப்பதற்கு நேரமில்லை என்ற நிலையிலெல்லாம், தமிழ்மணம் உட்பட எல்லாத் திரட்டிகளிலும் சூடான பதிவுகள் குறையாமல் வந்து கொண்டேயிருந்தன. கவிதை, கதை, அரசியல், இலக்கியம், நகைச்சுவை, விமர்சனம், மதம் என அனைத்துத் வகைகளிலும் அல்லது ஒரு சிலவற்றில் மட்டுமாவது மிகவும் பரபரப்பாக இயங்கிய பதிவர்கள் எல்லாம் என்னவானார்கள் என்றே தெரியவில்லை. மிகவும் அரிதாக எழுதுகிறார்கள். அல்லது எழுதுவதேயில்லை.

புதிதாக வரும் வலைஞர்களுக்கு போதிய ஆதரவும் ஊக்கமும் கிடைப்பதில்லை என்பது பரவலாகக் காணப்படக் கூடியதாகும். ஏதாவதொரு இணைப்பையோ அல்லது புகைப்படத்தையோ பகிர்ந்து கொண்டவுடன் பத்துப்பேர்கள் வந்து "Like" செய்யவும், அல்லது கருத்துச்சொல்லவும் இது ஒன்றும் ஃபேஸ்புக் அல்ல. எழுதுவது எவ்வளவு சிரமமோ அதே அளவு சிரமமானதுதான் பின்னூட்டமிடுவதும். தமிழில் பதிவு எழுதுவதே அதிகப்படியான சுமை என்னும் நிலையில் நேரமொதுக்கி அடுத்தவர் பதிவைப் படிப்பதற்கும், அதற்கு கைவலிக்க பின்னூட்டம் போடுவதற்கு எல்லோருமே சோம்பேறித்தனம்தான் படுவார்கள். எதைப்பற்றியும் கவலைப்படாமல் தொடர்ந்து எழுதுவதன் மூலமே நம்மை நாமே வளர்த்துக் கொள்ளமுடியும் என்பது என் கருத்து. எல்லாவற்றிற்கும் மேலாக மிகவும் சிறப்பாக எழுதுகிறவர்கள் நிறையப்பேர்களுக்கு எந்தவொரு பின்னூட்டமும் வருவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இன்னும் சிலரோ ஏற்கெனவே பதிவுலகில் இருந்தவர்கள், அவர்கள் ஏன் அதிகம் பங்களிப்பது இல்லை என்றால் திரைப்படம் சார்ந்த பதிவுகளோ, செய்திகளோ, அச்சு மாறாமல் படியெடுக்கப்பட்டவையோ, நகைச்சுவைக் கும்மிப் பதிவுகளோ மதம் சார்ந்த பதிவுகளோ மட்டுமே எப்போதும் தமிழ்மணத்தின் முகப்பில் முன்னணியில் தெரிகின்றன படிப்பதற்கே விருப்பமில்லை என்கிறார்கள். எல்லாவகையினரும் கலந்து இருப்பதன் மூலமாகத்தான் நிறைய வாசகர்களைச் சென்றடைய முடியும். இது சார்ந்த பதிவுகள் மட்டுமே எழுத வேண்டும் இதை எழுதக் கூடாது என்றெல்லாம் சொல்லவது நியாயமுமில்லை. அவரவர்க்கு அவரவர் கொள்கைகளுக்காக எழுதுகிறார்கள். எதற்கு எதிராகவும் ஆதரவாகவும் நம்மால் மாற்றுக் கருத்தை வைப்பதற்கு இதுதானே வழிசெய்கிறது. உண்மையிலேயே இது போன்று கவலைப்படுகிறவர்கள் தாங்கள் விரும்பிப் படித்த நல்ல பதிவுகளுக்கு பின்னூட்டமும், வாக்கும் தவறாமல் போட்டதுண்டா என்பது அவரவர் மனசாட்சிக்குத்தான் தெரியும்.

வலைப்பூக்கள் எழுதும்போதும், படிக்கும்போதும் நம்மையறியாமல் நிறையக் கற்றுக் கொள்கிறோம் தெரிந்தும் கொள்கிறோம். கருத்துக்களில் கொள்கைகளில் நிறைய மாறிவிடுகிறோம். இதன் பொருள் இந்துவாக இருந்து முஸ்லிமாகவோ, முஸ்லிமாக இருந்து கிறித்தவனாகவோ என்ற அள்விற்கு மாற்றம் வந்து விடும் என்பதல்ல. மாறாக சிறு சிறு மாற்றங்கள் நமது பொது அறிவிலும் கேள்வி அறிவுலும் எழுத்திலும் என்று சொல்ல வருகிறேன். மக்கள்திரள் ஊடகங்கள் வெளியிடும் கருத்துக்கும் நம் வலையுலகில் இருக்கும் கருத்துக்கும் எந்தளவு ஒற்றுமையிருக்கிறது என்பதைப் பார்த்தாலே தெரியும். அதில் கிடைக்காத செய்திகள் எத்தனையோ இதன் மூலம் அறிந்து கொள்கிறோம். இன்னோரு வகையில் பார்த்தால் சமூகத்தில் ஒன்றாயிருப்பது, ஒத்த கருத்துக்கள் கொண்ட வேவ்வேறிடங்களிலுள்ள புதியவர்களின் அறிமுகமும் கிடைக்கிறது. இது போன்ற பல நன்மைகள் வலை உலகில் மட்டுமே சாத்தியம்.

ஆகவே எழுத்தார்வமும், ஆற்றலும் உடையவர்கள் தொடந்து எழுத வேண்டுமென்பதே எனது அவா. நம்ம எழுதி என்னவாகப் போகுது ?, நேரமில்ல ? என்பது போன்ற எண்ணங்கள், வெறுமை, மனச்சோர்வு, இடைவெளி, தேக்கநிலை, வெற்றிடம் என்பது மாதிரியான மனநிலைகள் தோன்றினாலும் தொடர்ந்து சோர்வடையாமல் எழுதுங்கள். எதுவும் எழுதாமல் இருப்பதைவிட எழுதுவது எவ்வளவோ மேலானது.
Download As PDF
Bookmark and Share

Post Comment