மோதல் கொலை - மனித உரிமை மீறல் - கேரள காவல் துறையும் தமிழகக் காவல் துறையும் !!

நான் ஒரு மனித உரிமைவாதி, மனிதாபிமானி இதில் எனக்கு எந்த வெட்கமும் இல்லை. அதனால் இந்த என்கவுன்டரை கடுமையான கண்டனத்துடன் எதிர்க்கிறேன். தற்போது நடைபெற்ற மோதல் கொலையும் அது போலியானது என்றுதான் தெரிகிறது. குற்றம் நிரூபிக்கப்படாமலே தண்டனை அதுவும் கொலைத் தண்டனை. இந்த எழவை எதிர்க்காமல் என்ன செய்வது ? அதுவும் மனித உரிமைக் காவலர்களால் நிகழ்த்தப்பட்டுள்ளது. ஏற்கெனவே பல விளக்கங்கள் விவாதங்கள், என்கவுன்டருக்கு எதிராகவும், ஆதரவாகவும். அதில் நான் எதிரானவர்கள் பக்கம் நிற்கவே விரும்புகிறேன். ஏனென்றால் இதை ஆதரிப்பவர்கள் இரண்டு நாள் கத்தி விட்டு மறந்து விடுவார்கள். அடுத்த என்கவுன்டர் நடந்து அதை எதிர்த்தால் மட்டுமே வருவார்கள்.

கடந்த முறை நடந்த கோவை மோகன்ராஜ் என்கவுன்டரும் சரி இந்த என்கவுன்டரும் சரி ஒரு ஒற்றுமை உள்ளது. அந்தந்த நாளின் அரசுகள் கடும் நெருக்கடிக்கு உள்ளாகியிருந்தன, அப்போதைய கருணாநிதி அரசும், தற்போதைய ஜெயலலிதா அரசும். அதை திசை திருப்பவே இத்தகு கொலைகள் நிகழ்த்தப்பட்டுள்ளன. சரி இலட்சக் கணக்கில் கொள்ளையடித்தவர்கள், சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டது என்ற பொதுக்கருத்தில் தமிழக அரசின், தமிழகக் காவல்துறையின் பெயர் கெட்டு விட்டதால், இப்படி 5 பேரைக் கொன்று தனது நாயகத்தனத்தை நிலைநாட்டியுள்ளது கொடிய வெறி பிடித்த காவல்துறை. நன்று. இதற்கு மக்களின் உளவியல் ஆதரிக்கிறது. மனித உரிமையை காலில் போட்டு மிதிப்பதற்கு ஆதரவை அள்ளி வழங்குகிறது. மனித உரிமை பேசவருபவர்களை ஆத்திரத்துடன் எதிர்க்கிறது, எள்ளி நகையாடுகிறது. முடிந்தால்  இவர்களையும் என்கவுன்ட்டரில் போடக் கோருகிறது. அவர்கள் கொள்ளையடிக்கும் போது, கொலைசெய்யும் போது, வன்கலவி செய்யும் போது, குண்டு வைக்கும் போது மனித உரிமைக் கும்பல் மயிரைப் புடுங்கியதா என்ற பாணியில் கேட்பதன் மூலம் மனித உரிமை ஆர்வலர்கள் என்றாலே குற்றவாளிக்கு சொம்பு தூக்கத்தான் வருவார்கள் என்ற கொச்சைப் படுத்தும்  போக்கைக் கடுமையாகக் கண்டிக்கிறேன்.

மேற்படி இந்த மாதிரியான மோதல் கொலையை ஆதரிக்கும் மனநிலையில் இருப்பவர்கள், ஏன் அவைகளையெல்லாம் அதாவது குற்றவாளியின் குற்றங்களையெல்லாம் கண்டிப்பதில்லை என்று கேட்டு மடக்கி விடமுடியும். மனித உரிமையை விரும்புகிறவர்கள் இன்னும் எத்தனையோ தனிமனித சீர்கேடுகளால் விளையும் குற்றங்களை கண்டித்ததில்லை என்பதற்காக அதை ஆதரிக்கிறார்கள் என்று பொருள் கொள்ளமுடியாது. இது போன்று சூடேற்றப்பட்ட, ஊடகங்களில் வெளிச்சம் கொடுக்கப்படாத, பொது மக்களின் கவனம் பெறாத எத்தனையோ சமாச்சாரங்கள் மனித உரிமை ஆர்வலர்களால் விவாதிக்கப்பட்டும், போராட்டங்கள், பரப்புரைகள் மூலமாக முன்னெடுக்கப்பட்டும் வந்திருக்கின்றன. அப்போதெல்லாம் இந்த மனித உரிம எதிர்ப்பாளர்கள், என்கவுன்டர்கள் ஆதரவாளர்கள் அதை ஆர்வத்துடன் கவனிப்பதில்லை அது அவர்களுக்கொரு பொருட்டாகவும் இருந்ததில்லை.  இப்போது மட்டும்தான் மனித உரிமை பேசுகிறவர்கள், காவல்துறையின் கொடும் போக்கை எதிர்ப்பவர்கள் இவர்கள் கண்ணுக்குத் தெரிகிறார்கள் போலும்.

இதில் அதிர்ச்சி ஒன்றுமில்லை, மிகப்பரவலாக ஜாதி வெறி, தேசிய வெறி, இனவெறி வகையிலான் சமூக வன்முறைகளை சலனமில்லாம ஏற்றுக் கொண்டுள்ள மனோபாவம் இதை ஆதரிப்பதில் ஒன்றும் பெரிய அதிர்ச்சியில்லை. இந்த அறச்சீற்றம் நிலையில்லாதது. பாகுபாடானது. இதை விட பெரிய குற்றங்கள் தெரிந்திருந்தாலும் இதற்கு மட்டும் இப்படி முட்டுக் கொடுத்து ஆதரிப்பது ஊடகங்களின் பரப்புரைகளுக்கு பலியான மனசாட்சிகள் மட்டுமே. காக்க காக்க அன்புச் செல்வன், நான் மகான் அல்ல கார்த்தி வகை உளவியல்தான் இப்படியொரு தற்காலிகமான முட்டாள்தனமான, கொடிய முடிவை விரும்புகிறது. இதனால் நேரப்போகும் பின்விளைவுகளை அறியாமல்.

இங்கு எதிர்ப்பதன் முதல்நோக்கமே குற்றவாளிகளைக் காப்பதோ அவர்கள் மீதான மொன்னையான பரிதாபத்திலோ, அல்லது சமூகமே அனைத்துக் குற்றங்களுக்குக் காரணம் என்ற விவாதமோ அல்ல. காவல்துறையின் வரம்பற்ற அதிகாரம், அல்லது ஆட்சியாளர்களுக்கு அவர்கள் அனுசரனையாக இருந்து அவர்கள் ஏவலைச் செய்து முடிப்பது, பொதுமக்கள் மீது காவல்துறையினர், அதிகாரவர்க்கத்தினர் காட்டும் அலட்சியம் பலம், வன்முறை இவற்றுக்கெதிரான ஜனநாயகக் கோரிக்கை மட்டுமே தகுந்த விசாரணைகளின் அடிப்படையில் தண்டனை வழங்கப்படவேண்டுமென்பது.

தற்போது கொள்ளையர்கள், என்ற குற்றத்தின் அடிப்படையில் 5 பேர் கொலைகளை நீங்கள் ஆதரிப்பதாக இருந்தால்,

1. சிங்களர்களின் மனநிலையிலிர்ந்து பார்த்தால் இனப்படுகொலையுடன் சேர்த்து நடத்தப்பட்ட புலியழிப்பை நியாயமென ஏற்க வேண்டும். அவர்களுக்கு தமிழர்கள் பிரச்சனையோ, இராணுவத்தின் இயல்போ தெரியாது. குண்டுவைக்கும் புலிப்பயங்கரவாதிகள் அழிய வேண்டும், அவர்களை ஆதரிக்கும் அல்லது ஆதரிக்காவிட்டாலும் அங்கிருக்கும் தமிழர்களை அழித்தாவது அவர்களை அழிக்க வேண்டும் என்ற சிங்கள மன உளவியலும் சரியானது.

2. இராஜீவ் கொலையில் குற்றம் சாட்டப்பட்டுள்ள மூவரின் தண்டனையும் செயல்படுத்தப்பட வேண்டும். ஏனென்றால் பெரும்பான்மையான இந்தியர்கள் அதை நம்புகிறார்கள். முடிந்தால் சுட்டோ அடித்தோ கொல்ல வேண்டுமென்று கூட விரும்புகிறார்கள்.

3. என்கவுன்டருக்குக் கொடுக்கப்படும் சன்மானம், பதவியுயர்வு போன்றவற்றிற்காக காஷ்மீரில் நிகழும் அனைத்துக் கொலைகளும் ஆதரிக்கப்படவேண்டும் ஏன்னா காஷ்மீர் என்றால் தீவிரவாதி, தீவிரவாதி என்றால் காஷ்மீர் இந்தியர்களின் அகராதியில்.

அல்லது ஒருவனை கொல்லவேண்டுமென நினைத்தால் ஊடக பலத்தைக் கொண்டு அவன்மீதான தொடர்ந்து அவதூறுகளின் மூலமே அதற்கான மனநிலையை உருவாக்கியும் விடலாம்.

சவூதி அரேபியாவைப் போல் கடும் தண்டனை கொடுப்பதால், அல்லது இது போன்ற மோதல் கொலைகளால் குற்றங்கள் குறையும் என்பதெல்லாம் ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல உண்மையுமல்ல. தற்போது என்கவுன்ட்டர் நடக்கும் போதுள்ள மக்களின் மனநிலை சில நாட்களில் மாறிவிடும் போது, குற்றம் செய்யத் துணிகின்றவரின் மனநிலையும் மாறாதா ? ஒன்றுமில்லை கனவான்களே ! கோவையில் ஒருவருடத்திற்கு முன்பு நடந்த மோகன்ராஜ் கொலைக்குப் பின்பு இரு மாதங்களுக்குப் பின் என நினைவு, எனக்குத் தெரிந்தே செய்திகளில்  ஒரு சிறுமி 6 வயதுடையவள் வன்புணர்ச்சி செய்து கொல்லப்பட்டு விட்டாள், மேலும் ஒரு வன்புணர்ச்சிக் கொலை அது நினைவில்லை, மற்றபடி கொலையில்லாமல் சிறுமி வன்கலவியான செய்திகளுக்குக் குறைவில்லை இந்நாள்வரை.

கொலைத்தண்டனைகளால் குற்றம் குறையாது என்பதற்கு உதாரணம்தான் சீனா, அமெரிக்கா. சீனாவில் மனித உரிமைகள் என்பதே கிடையாது, அதே சமயம் குற்றங்களுக்கும் குறைவில்லை. சாவுத்தண்டனைகளும் அதிகமாக நிறைவேற்றப்படுவது சீனாவில்தான். அமெரிக்காவில் மனித உரிமை இருந்தாலும், குற்றவாளிகள் அதிகமுள்ள நாடு மக்கள் தொகையுடனான ஒப்பீட்டளவில் அதிகம் பேர் சிறையிலுள்ள நாடு அமெரிக்காதான். ஆனாலும் குற்றம் குறையவில்லை. ஈரான், சௌதி நாடுகளில் பொதுவெளியில் கொடிய முறையில் கொலைத்தண்டனைகள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. குற்றம் செய்ய பயமிருந்தாலும், ஓரளவு குறைந்தாலும் இத்தனை கொலைத்த்தண்டனைகள் காலம் காலமாக நிறைவேற்றப்பட்டும் இன்னும் மறையவில்லையே இது போன்ற குற்றங்கள். ஏன் ? இதற்கான சமூகக் காரணிகள் தீர்க்கப்படும் வரையில் இது போன்ற குற்றங்கள் தொடரும். தனிமனிதக் கொலைகள் மூலமாக மக்களின் கோபத்தை தற்காலிகமாகத் தணிக்கவே இது போன்ற கொலைகளை நடத்துகிறார்கள். இவைகளை இடைக்காலத் தீர்வுகள் என்று கூட சொல்ல முடியாது.

இன்னொரு விடயம் ஒரு குற்றவாளியைத் தண்டிப்பவர் குற்றவாளியை விட யோக்கியமானவராக இருக்க வேண்டும். ஆனால் காவல் துறை நிகழ்த்திய அட்டூழியங்களுக்குக் கணக்கேதுமுண்டோ ? எடுத்துக்காட்டாக மோகன்ராஜ் என்ற "காமுகனை" சுட்டு வீழ்த்திய காவல்துறையை (மோகன்ராஜைப் போட்டுத்தள்ள ஜெயின் சங்கத்திலிருந்து பணம் கைமாற்றப்பட்டதாக செவிவழிச் செய்தியொன்று கோவைப் பகுதிகளில் இருக்கிறது.) போற்றியவர்கள் வாச்சாத்தியில் கொடுஞ்செயல்கள் பல புரிந்த பல காவல்துறையினர் பெரிய தண்டனைகளின்றித் தப்பியபோது பெரிய அளவில் எதிர்ப்பில்லை, மனித உரிமை ஆர்வலர்கள் தவிர மற்ற யாவரும் கவலைப்படவில்லை. தற்போது விழுப்புரம் அருகே காவல்துறையினரால், இருளர் பெண்கள் வன்புணர்ச்சி செய்யப்பட்ட வழக்கில் இன்னும் காவல்துறையால் இழுத்தடிக்கப்பட்டு குற்றவாளிகளைத் தப்பவிடும் முயற்சிதான் நடக்கிறது. இது போன்ற காவல்துறையின் அட்டூழியங்களுக்குக்கும் சமூக ஆதரவு காவல்துறைக்கு வரம்பற்ற அதிகாரத்தை வழங்கும், பின்பொருநாள் அது அப்பாவிகளெனப்படுபவர்கள் மீது பாயும்போது வருத்தப்பட்டு பயனில்லை. அதிகாரத்திற்கு அப்பாவியும், குற்றவாளியும் சமம்தான் ஏறக்குறைய அவர்களைத் தொல்லை செய்யாத வரை. சராசரிக் குற்றவாளிகளின் மீதான வெறுப்பு கூட மனித உரிமைகளை மதிக்காத அதிகார வர்க்கத்தின் மீதும், காவல்துறையின் மீதும் மக்களுக்கு இல்லாமல் இருப்பதுதான் அவர்களின் வெற்றியும் மனிதத்தின் தோல்வியும்.

தமிழக கேரள காவல்துறையினரின் செயல்பாடுகள் :

தமிழகக் காவல்துறை மோகன்ராஜைப் என்கவுன்டரில் போட்டது. கேரள காவல்துறை சௌம்யா என்ற இளம் பெண்ணை துடிக்கத் துடிக்க சாகும் தறுவாயிலும் வன்புணர்ச்சி செய்த கோவிந்த ராஜனை சிறையில் இட்டு நீதிமன்றத்தின் மூலம் சாவுத் தண்டனை வாங்கிக்கொடுத்துள்ளது. தற்போது கேரளத் தமிழ்மீனவர்களைக் கொன்ற இத்தாலியக் கடற்படையினரையும் நீதிமன்றத்தில் நிறுத்தியுள்ளது. தமிழகக் காவல் துறை ? இதில் அவர்களை மட்டும் குறை சொல்லவில்லை. இந்திய தமிழக அரசுகளைத் தாண்டி அவர்கள் ஒன்றும் செய்ய முடியாதுதான். சரி போராடும் மீனவர்களை அடிக்க லத்திக்கம்பு தயாராகிறது எப்போதும் அது மட்டும் குறைவில்லை. மலையாளிகள் சில இடங்களில் இன்னும் நம்மை விட உயர்ந்தவர்கள். நம்மவர்கள் கையாலாகாத்தனத்தால் கோவிலுக்குச் சாமி கும்பிட வரும் ராஜபக்சேவின் மச்சானையும், சிங்கள எழுத்துப் பொறித்த உடையணிந்த காரணத்தால் சாதாரண சிங்களப் பொது மனிதனையும் அடித்து தம் கோழைத் தனத்தை நிரூபித்துள்ளனர். மரண தண்டனைக்கு எதிரான போராட்டம் நடக்கும் தமிழக்த்தில் இந்த மோதல் கொலைகளுக்கு அசத்தலான ஆதரவு

வாழ்க இனமானம். வாழ்க மரண தண்டனை.
Download As PDF
Bookmark and Share
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

0 பின்னூட்டங்கள்:

கருத்துரையிடுக

நான் படைப்பாளியோ, விமர்சகனோ அல்லன். வாசகன் மட்டுமே. எனவே உங்கள் கருத்தின்றி எனது இடுகை முழுமை பெறாது. நிறைகளை விடவும் குறைகள் அதிகம் எதிர்பார்க்கிறேன்