தோல்வியைத் திணிக்கும் கல்வியும் சமூகமும்

பன்னிரண்டாம் தேர்வு முடிவுகள் வெளியானதிலிருந்து நடப்பவை, அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்கள் மகிழ்ச்சி பொங்க பேட்டி கொடுக்கின்றனர். தமது இலட்சியத்தைப் பற்றிக் கூறுகின்றனர். வழக்கம் போலவே இவ்வருடமும் மாணவர்களை விட மாணவிகளே அதிகத் தேர்ச்சி என்ற வசனத்தை பதினைந்து வருடங்களாகக்(!!?) கேட்கிறேன். ஒவ்வொரு வருடமும் என்ன நடக்கிறதோ அதுதான் இப்போதும் நடக்கிறது, இனி வரும் வருடங்களிலும் இதுதான் எந்த மாற்றமுமின்றி நடக்கப்போகிறது. ஊடகங்களுக்கு இதை வைத்து எவ்வளவு செய்திகளை உருவாக்க முடியுமோ அந்தளவுக்கு செய்திகள் குவிந்து கிடைக்கின்றன. சாதனையாளர்களின் பேட்டிகள், பள்ளிகளின் பெருமைகள், மாணவர்கள், ஆசிரியரின் உழைப்பு, அர்ப்பணிப்பு வெற்றி இரகசியம், தோல்வியடைந்த மாணவர்களின் தற்கொலைகள், வயது, வறுமை உடல் ஊனத்தை வென்று அதிக மதிப்பெண் குவித்த மாணவர்கள் என இதைச் சுற்றிய செய்திகள் ஏராளம்.

இதற்கு ஏன் இவ்வளவு ஆர்ப்பாட்டம் என்பதுதான் புரியவில்லை. இதே அளவு பரபரப்பு 10 வகுப்புத் தேர்வு முடிவுக்கும் கொடுக்கப்படுகிறது. மாணவர்களின் வாழ்க்கையிலேயே இதுதான் மிகப்பெரியது போலவும் இது முடிந்தால் போதும் வாழ்க்கையிலேயே வெற்றி பெற்றது போலவும் ஊதிப் பெருக்கி வெளியிடுகிறார்கள். ஒவ்வொரு வட்டாரத்திலும், நகரத்திலும் பள்ளிகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களின் படத்தை பத்திரிக்கைகளில் வெளியிடுகிறார்கள். சரி அவர்களுக்கு அங்கீகாரமும் பாராட்டும் தேவைதான். அதற்காக இப்படி அதகளப்படுத்தினால் ?? இது தோல்வியடைந்த மாணவர்கள் மீது எவ்வகையான அழுத்தத்தை உண்டாக்குகிறது என்பது குறித்து பில்டப் காரர்கள் கவலை கொள்வதேயில்லை.

இப்படி மாய்ந்து மாய்ந்து பேட்டி எடுப்பவர்கள், இது போன்ற அதிக மதிப்பெண் பெற்றவர்கள் அடுத்த 5 அல்லது 6 ஆண்டுகள் கழித்து என்னவாகிறார்கள் என்று கவலைப்படுகிறார்களா ?  அதிக மதிப்பெண் வாங்கியவர்கள் சிலர் கல்லூரிப் படிப்பே தேற முடியாமல் போகிறார்கள் என்பதெல்லாம் இவர்களுக்குத் தெரியுமா ? தெரியாதா ? தேர்வு முடிவு வெளியானவுடன் கல்வியாளர்கள் அது இது என்று யோசனை சொல்கிறார்கள். இப்படி மாய்ந்து மாய்ந்து படித்தவர்கள் எத்தனை பேர் கல்லூரி முடித்து வேலைக்குச் சென்றார்கள் என்பது தெரியுமா ? அல்லது தற்போது பேட்டி கொடுத்தது போல கலெக்டரானவர்கள், மருத்துவரானவர்கள் எத்தனை பேர். இந்த பில்டப் பற்றிச் சொல்லப்போனால் ஐபிஎல் போட்டிகளுக்குக் கிடைக்கும் போலி விளம்பரத்திற்கு ஒப்பானது.

ஒரு சில குறிப்பிட்ட பள்ளிகளில் மட்டும் நல்ல கற்பித்தலுக்கும் "திறமையான மாணவர்களை" தயாரித்து அனுப்புவதிலும் முன்னணியில் இருக்கின்றன. ஊத்தங்கைரையில் ஒரு பள்ளி இருக்கிறது. அது நல்ல பெயரெடுத்த பள்ளியாம். 10 வகுப்பு முடிவு வெளியான அன்று அதிகாலையிலேயே பெற்றோர்கள் அப்பள்ளியில் விண்ணப்பம் வாங்கக் காத்துக் கிடப்பார்களாம். அதில் சேரவும் பத்தாம் வகுப்பில் மிகப்பிரமாதமான மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும் என்பது விதி. அதாவது பெயர் பெற்ற பள்ளிகள் என்றால் ஏற்கெனவே நல்ல மதிப்பெண் பெற்ற மாணவர்களை எடுத்து அவர்களை சக்கையாகப் பிழிந்து அதிக மதிப்பெண் வாங்க வைப்பது அவர்களின் "திறமையாம்." நாமக்கல் மாவட்டம் கல்விக்குப் பெயர் போனது, அங்குள்ள வித்யா விகாஸ் ((கல்வி நிலையம் என்பதன் சம்ஸ்கிருதம்தான் வித்யாவிகாஸ்) (பெரிய வித்யாசமான பேரெல்லாம் கிடையாது)). அங்கும் இப்படித்தான் பள்ளியின் வெளியே 11 ஆம் வகுப்பு விண்ணப்பம் வாங்குவதற்கு வரும் பெற்றோர்களால் கொண்டுவரப்பட்டு சாலையோரங்களில் அனைத்து ரகமான பெரிய விலையுயர்ந்த கார்களைக் காண முடியும். 

இது போன்ற பள்ளிகளில் கற்பித்தல் என்பது உயர்ந்த தரத்தில் இருக்கும் என்பது உண்மைதான். ஆனால் பணம் வேண்டுமே படிப்பதற்கு, இல்லையெனில் 90 % மதிப்பெண்கள் வேண்டும் எத்தனை பேரால் முடியும். இந்த மனப்பாடக் கல்வி மீதே நமக்கு நூறு விமர்சனங்கள் உள்ளன. இந்தியனை அடிமைப்படுத்த மெக்காலே செயல்படுத்திய கல்வித்திட்டம், போதாக்குறைக்கு சிபிஎஸி, சமச்சீர் ஆங்கிலோ இந்தியன் என பலவகையான பாடங்கள். இதில் அரசுப் பள்ளிகள் தனியார் பள்ளிகள், ஆங்கில வழி தமிழ் வழி என இத்தனை முரண்பாடுகள். தனியார் பள்ளிகள் பெருகிய பின்பு இப்போதெல்லாம் 9 வகுப்பும், 11 ம் வகுப்பும் அந்த பாடத்தின் தேர்வுகளும் செல்லாக் காசுகளாகிவிட்டன. ஏறக்குறைய ஒன்றைரை வருடங்கள் படித்த பின்புதான் 10 ம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு தேர்வுகளும் நடக்கின்றன. இதில் பல பள்ளிகளில் மாணவர்கள் பிட்டடித்துத்தான் மதிப்பெண் பெறுகிறார்கள்.

பிட்டடிக்க முடியாதவர்கள் தோல்வியடைகிறார்கள். பெரும் மன உளைச்சலுக்கும் ஆளாகின்றார்கள். பெற்றோர்களால்தான் இவர்கள் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள். தம் பிள்ளை தேர்வில் தோல்வியடைந்து விட்டாலோ குறைந்து விட்டாலோ தமது மரியாதை கெட்டுவிட்டதைப் போலவும், குடி முழுகிவிட்டதைப் போலவும் கருதிக் கொள்கிறார்கள். இந்தப் படிப்பு என்பது எல்லோருக்கும் வராது என்பதுதான் எதார்த்தம். கடும் முயற்சி செய்தால் ஓரளவு மாறும், அதுவும் எல்லோருக்கும் சாத்தியம் என்பதில்லை. என்னதான் முக்கினாலும் சிலருக்கு வரவே வராது. எனக்கு கணிதம் என்றால் வேப்பங்காய், பள்ளிப் படிப்பை முடிக்கும் வரை எனக்கு மாரடைப்பு வருமளவுக்கு மன அழுத்ததைக் கொடுத்தது. இந்த நிலையை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். இல்லை படித்தால்தான்  நல்ல வேலை கிடைக்கும் என்று மூட நம்பிக்கை வைத்திருப்பவர்கள் கொஞ்சம் அங்கங்கே வேலை வாய்ப்பு முகாம்கள் நடைபெற்றால் அங்கே காத்துக் கிடக்கும், ஆயிரக்கணக்கானவர்களைக் கண்டால் கொஞ்சம் தெளிவு பிறக்கும். அப்படியே வேலை கிடைத்தாலும் எல்லோருக்கும் 5 இலக்க ஊதியம் கிடைக்காது. இத்தனை படிச்சிட்டும் இவ்வளவு குறைச்சலாத்தான் சம்பளம் குடுக்கிறானா ? அப்பறமெதுக்கு அந்த வேலைக்குப் போற ? என்று வக்கனை பேசவும் சொந்தக் காரரும், நண்பரும் வருவார்கள்.

பல பெற்றோர்க்கு வேறென்ன ஆசையென்றால், பையன் படித்து பட்டம் வாங்கினால் அதை வைத்து நிறைய சீதனம் பெறலாம் என்ற கணக்கில் இருக்கிறார்கள். பையன் இத்தனை படித்திருக்கிறான் பெண்ணுக்கு இத்தனை செய்ய வேண்டும் என்று கேட்க திட்டம் வைத்திருக்கிறார்கள். இதை ஏன் பையனின் பெற்றோரை மட்டும் சொல்கிறேனென்றால் பெரும்பான்மையாக பெண்கள் தேறிவிடுகிறார்கள். ஆண்கள் அப்படியில்லை அவர்களுக்குத்தான் இப்பிரச்சனை. எனக்குத் தெரிந்து பல பேர் சீதனம் பெறுவதற்காகவே இரு பட்டங்களைப் படித்து முடிக்க வேண்டும் என திட்டம் போட்டு படிக்கிறார்கள். எம்பிஏ என்பது கவர்ச்சிகரமான பட்டமாக திருமணச்சந்தையில் இருக்கிறது. கன்யாகுமரியைச் சேர்ந்த என் நண்பனொருவன் BSc, MSc, MBA, என மூன்று பட்டங்களைப் படித்து விட்டான். அவனுக்கு படிப்பெல்லாம் வராது எல்லாம் பேப்பர் சேஸிங்தான். ஒரு கோடி ரூபாய்க்கு மேல் சீதனமாகக் கிடைக்கும் என்கிறான். அதற்குப் புகழ்பெற்றதுதான் கன்யாகுமரி மாவட்டம் !!

திருமண அழைப்பிதழில் போடுவதற்கென்றே சிலர் அஞ்சல் வழியில் படிக்கிறார்கள். எப்படியென்றால் ஒரு விண்ணப்பத்தை வாங்கிவிட வேண்டியது அதை ஊரெல்லாம் தம்பட்டம் அடிக்க வேண்டியது. அவ்வளவுதான் டிகிரி வாங்கியாச்சு. மாப்பிள்ளை என்ன படிச்சிருக்காருன்னு கேட்டால் சொல்லிக்கலாம். எல்லோரும் சான்றிதழைக் கேட்க மாட்டார்கள். அப்படியில்லையென்றால் இருக்கவே இருக்கிறது அண்ணாமலைப் பல்கலைக் கழகம் கொஞ்சம் காசு கொடுத்தால் டிகிரியை வாங்கிவிடலாம். பல தடைகளைக் கடந்து நேர்மையாகத் தேர்வு எழுதும் மனிதர்கள் இருக்கும் ஊரில்தான் இதெல்லாம் நடக்கிறது. இதற்கெல்லாம் காரணம் பட்டம், படிப்பு என்ற போலித்தனத்திற்கு இருக்கும் பகட்டுதான் காரணம். ஜாதிப்பெருமை போல பெரிய படிப்பு படித்தவர்க்கு திருமணச் சந்தையில் இருக்கும் வணிக மதிப்புத்தான் காரணம். நடுத்தர, பணக்காரர்களின் போலித்தனமான வெட்டி பந்தாதான் இதன் மூலம்.

பெற்றோர்களின் பேராசைக்கு ஒரு அளவேயில்லை. என்னுடைய சித்தி மகள் 1150 - க்கும் மேல் வாங்கிவிட்டாள். இருப்பினும் அவளது பெற்றோர்க்கு இன்னும் 20 மதிப்பெண்கள் கூட வாங்கியிருக்கலாம் என்று அங்கலாய்த்தார்களாம். எதற்கு வெளியே பேசி பெருமையடித்துக் கொள்ளத்தான். அவள் 1195 வாங்கினால் கூட கலெக்டருக்கோ அல்லது மேற்படிப்போ படிக்க வைக்கப் போவதில்லை திருமணந்தான் செய்து வைக்கப்போகிறார்கள் இருந்தாலும் இப்படி ஒரு நப்பாசை. இப்படித்தான் ஒவ்வொரு பெற்றோருக்கும் மதிப்பெண் மீதான் மோகம் இருக்கிறது.

இப்படியிருக்கையில் தேர்வில் தோல்வியடைந்தவர்களைத் தேற்றுகிறேன் என்று அதிக மதிப்பெண் வாங்கியவர்களை சிறுமைப்படுத்துவதும் கண்டிக்கத் தக்கது. வருடக்கணக்காக உயிரைக் கொடுத்துப் படித்து மதிப்பெண் வாங்கியவர்களை மனப்பாடம் பண்ணி வாந்தியெடுப்பவர்கள், சொந்தமாக சிந்திக்கத் தெரியாதவர்கள் என்றெல்லாம் சொல்வது அறிவீனமானது. இதற்கு அவர்களைக் குற்றம் சொல்ல முடியாது, பாராட்டாமலும் இருக்க முடியாது.

கல்வி என்பது நல்ல வியாபாரமாக இருக்கிறது. இதனால் கருப்புப் பணத்தை அறக்கட்டளைகளின் பேரால் கொட்டி பெரும் பணக்காரர்களால் கல்வி நிலையங்களை நடத்த முடிகிறது. பள்ளிகளாகட்டும், கல்லூரிகளாகட்டும் இதுதான் நிலை. எத்தனை மதிப்பெண் பெற்றாலும் பணம் கட்டாமல் படிக்க முடியாது. சிலரைத் தவிர்த்து. எங்கள் கல்லூரியிலிருந்து இத்தனை பேரை வேலைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று ஒரு சில கல்லூரிகள் பன்னாட்டு தொழில்நுட்ப நிறுவங்களுடன் ஒப்பதம் போட்டுக் கொள்கிறார்கள். இதனடிப்படையில் பெயருக்கு வளாகத்தேர்வை நடத்துவார்கள், அனைவருக்கும் வேலை கிடைக்கும், அல்லது யாரையும் எடுக்காமலும் போகலாம். அல்லது அனைவரையும் வேலைக்கு எடுத்துவிட்டு சில மாதங்களில் பர்ஃபார்மன்ஸ் சரியில்லை என்ற காரணத்தைச் சொல்லி.  வெளியேற்றிவிடலாம் ஆனால் கல்லூரிகள் விளம்பரம் செய்து கொள்ளும் எங்கள் கல்லூரியில் சென்ற வருடம் இத்தனை பேருக்கு வேலைக்கு இடம்(placement) பெற்றுத் தந்தோம் என்று. எப்படி எல்லோருக்கும் வேலை தருவார்கள் என்றா கேட்கிறீர்கள், படிப்புக்கும் வேலைக்கும் பெரிய தொடர்புகள் இருப்பதில்லை என்ன படித்தாலும் 6 மாதப் பயிற்சி பின்பு வேலை அவ்வளவுதான். நாடகம் முடிந்தது. இப்படித்தான் இருக்கிறது நிலவரம் இந்த ஆட்டத்தில் திறமைக்கு நிச்சயம் மதிப்புண்டு, நல்வாய்ப்புக்கும்(Luck) இடம் உண்டு ஆனால் எல்லா இடத்திலும் இது நடக்காது சிலருக்கு கிடைக்காது சிலருக்குக் கிடைக்கும் இதுதான் இந்த சமத்துவ உலகில் நடப்பது.

அதனால் புதிதாக எதுவும் நான் சொல்வதற்கில்லை. தேர்வில் வெற்றி பெற்றால் வேலை கிடைத்தால் மகிழ்ச்சி. இல்லையா ரொம்ப நல்லது, நாம் யாருக்கும் அடிமை வேலை பார்க்கத் தேவையில்லை என்று எண்ணிக் கொள்ளுங்கள், உலகம் இன்னும்  பெரியது. தாழ்வு மனப்பான்மையில் உழல வேண்டாம். நமது தோல்விக்கு நாம் மட்டுமே காரணமல்ல. நாம் குற்றவாளியோ மற்றவர்கள் புண்ணியவான்களோ இல்லை.
Download As PDF
Bookmark and Share
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

0 பின்னூட்டங்கள்:

கருத்துரையிடுக

நான் படைப்பாளியோ, விமர்சகனோ அல்லன். வாசகன் மட்டுமே. எனவே உங்கள் கருத்தின்றி எனது இடுகை முழுமை பெறாது. நிறைகளை விடவும் குறைகள் அதிகம் எதிர்பார்க்கிறேன்