இரண்டு காணொளிகளையும் கண்டிருந்தால் யார் மீது தவறு என்று புரியும் . நான் பொதுவாக இது போன்ற நிகழ்ச்சிகளைக் காண்பதில்லை. இஸ்லாமியப் பெண்மணியில் ஒரு இடுகையை பதிந்திருந்தார்கள். அதில் இக்காணொளியை மையப்படுத்தி இருந்தது. அதில் பின்னூட்டமிட்டிருந்த சிலர் இதனால் இஸ்லாமிய சமூகத்திற்குத் தலை குனிவு என்று பொருள்படும்படி எழுதியிருந்தார்கள். நான் அதை மறுக்கிறேன்.
இந்த நிகழ்ச்சியின் இக்குறிப்பிட்ட பெண் பங்கு கொண்ட இரு காணொளிகளையும் கண்டேன். ஸீ தமிழ் தொலைக்காட்சி மிகச் சிறப்பாக பிரச்சனைகளை வைத்து நிகழ்ச்சியைத் தயாரித்து அடுத்தவன் பிரச்சனையைப் பற்றிப் பேசித் தனது ஆற்றாமையைத் தீர்த்துக் கொள்ளும் நபர்களின் தினவெடுத்த மூளைக்குத் தீனி போடவும், கலாச்சாரக் காவலர்கள் கரித்து கொட்டவும் ஏற்ற் வகையில் எரிச்சலைக் கிளப்பும் பின்னணி இசையுடன் ஒளிபரப்புகிறார்கள்.
இதில் இருப்பது என்னவென்று எல்லோர்க்கும் புரிந்திருக்கும். முஸ்லிம் பெண் இந்து ஆண் இருவரும் காதலித்திருக்கிறார்கள். இப்போது பெண் கருவுற்றிருக்கிறாள். ஆணோ அவளை ஏற்க முடியாது சிறைக்குச் சென்றாலும் பரவாயில்லை புகார் கொடுத்துக் கொள் என்கிறான். அவள் அழுது கெஞ்சுகிறாள். அவன் மீது புகார் கொடுப்பதற்கல்ல, சேர்ந்து வாழத்தான் இங்கு வந்தேன், அவனை வரவைத்தேன் என்கிறாள். அவனோ அவள் இவ்வளவு அவமானப்படுத்திய பிறகு சேர்ந்து வாழமுடியாது என்கிறான். அவன் திருமணம் செய்துகொள்வதுதான் தீர்வு, இல்லையெனில் அவன் மீது புகார் அந்தப் பெண் கொடுத்தால் அதை ஆதரிப்போம் என்கிறார் லட்சுமி.
உண்மையில் தலைகுனிந்து அமர்ந்திருப்பது அந்த ஆண்தான். ஆண்கள்தான் இதற்குத் தலை குனியவேண்டும். அந்தப் பெண் தலை நிமிர்ந்துதான் நிற்கிறாள். தனக்கு நிகழ்ந்த அநீதிக்கு நீதி கேட்டுத் தலை நிமிர்ந்துதானே நிற்கிறாள். இதில் என்ன தவறு ? இதை ஏன் அப்பெண்ணுக்குத் தலை குனிவு என்று சொல்ல வேண்டும். அவனிடம் கெஞ்சிக் கேட்டதாலா ? அவனைப் போன்றவனிடம் போய்க் கெஞ்சுவது பெண்ணுக்குத் தலை குனிவுதான். அவள் கேட்ட கேள்விகளுக்கு எதுவுமே சரியான பதில் அவனிடமிருந்து வரவில்லை, அவமானப்படுத்திவிட்டாள் என்கிறான். அவளோ அவனது அண்ணன் இருப்பதால்தான் புகாரளிக்க துணிச்சலாகச் சொல்கிறான் என்கிறாள். அவன் பேந்தப் பேந்த முழிப்பதும் அவளது கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் மழுப்புவதும் அவன் பொய் சொல்கிறான் என்பதற்குப் போதுமானதாக இருக்கிறது.
ஆக மொத்தம் இவனுக்குக் கசந்து விட்டதால் மொன்னைக் காரணத்தைச் சொல்லி இவளை வேண்டாமென்கிறான். அவள் அவனுடன் வாழ்வதுதான் வேண்டும், புகாரளிக்க விருப்பமில்லை என்கிறாள். அவன் பொய் பேசுகிறவன் என்பதை ஏற்கெனவே தெரிந்துதான் காதலித்தேன் என்கிறாள். என்னை கேட்டால் இவனிடமெல்லாம் கெஞ்சுவது அவளது தன்மானத்திற்கும், பண்புக்கு இழுக்கு என்றுதான் கூறுவேன். அவன் வந்து கெஞ்சினால் கூட இவள் ஒத்துக் கொள்ளக் கூடாது. இவனைத் தூக்கியெறிந்து விட்டு வாழவேண்டும். வாழ்க்கை விரைவில் அவளுக்கோர் நல்வழிகாட்டும். அவளைப் பார்த்தால் பக்குவப்பட்டவளாகவே தெரிகிறது.
பெண்கள் என்றாலே காதலித்து ஏமாற்றுகிறவர்கள் என்று குறுந்தகவல் அனுப்புகிறவர்கள், ஒரே சமயத்தில் இரண்டு மூன்று ஃபிகர்களுடன் சாட்டிங் செய்து கொண்டே "வேணாம் மச்சா வேணாம் இந்தப் பொண்ணுங்க காதலு" என்று நிலைத்தகவல்கள் போட்டு "லைக்"கள் வாங்கும் அறிவாளிகளுக்கு இந்தப் பெண்ணின் காதல் சமர்ப்பணம். இது பெண்களின் காதலுக்கு ஒரு உதாரணம்.
பெண் காதலிக்க மறுத்ததற்காக அமிலத்தை ஊற்றுவது, பாலியல் வன்முறையை ஏவுவது, கொலை செய்வது என்று வெறியாட்டம் போடும் ஆண்களுக்கு நடுவில் காதலுக்காக இரந்து நிற்கும் இவள் பெண்களின் காதலுக்கு ஒரு உதாரணம்.
ஆண்கள் எல்லாம் தியாகிகள் என்பது போலவும் பெண்கள் என்பவர்கள் பொழுது போக்கவும், பணத்துக்காகவும், ஊர்சுற்றுவதற்காகவும் மட்டுமே காதலிப்பதாக நடிக்கிறார்கள் என்று அயோக்கிய நடிகன் பேசும் குப்பை வசனத்துக்காகவும் காது வரை சிரித்து மகிழும் ஆண்களுக்கும் இது சமர்ப்பணம்.
இதை வைத்து காதலிக்கும் பெண்களுக்கு எச்சரிக்கை செய்வோர்க்கும் சமர்ப்பணம்.
ஆண்கள் தங்களுக்குள் பேசிக்கொள்ளும்போது மேட்டர் முடிச்சியா, கை வச்சிட்டியா என்று சர்வ சாதாரணமாகக் கேட்டுக் கொள்வார்கள். அதே ஒரு பெண்ணைப் பற்றிப் பேசினால் அவளே ஒரு மேட்டர், கெட்டுப் போனவள், சோரம் போனவள் என்று சொல்வார்கள். பழி ஓரிடம் பாவம் ஓரிடம். பெண்களைக் குற்றவாளியாக்கும் ஆண்களின் இரட்டை நாக்கு. ஆண்கள் கலவி செய்தால் அது வெற்றி, அதையே பெண்கள் செய்தால் அது தோல்வி. நல்ல மதிப்பீடு.
ஆண்கள் தாங்கள் அயோக்கியர்களாக இருப்பது பற்றிக் கவலைப்பட மாட்டார்கள். பெண்கள் ஏன் அயோக்கியனையே காதலிக்கிறார்கள், அவர்களையே விரும்புகிறார்கள் என்று எரிச்சல்படுவார்கள்.
இப்போது இந்தப் பெண்ணுக்கு இந்த சமூகத்திடம் கெட்ட பெயர், அல்லது இந்த சமூகமே காறித் துப்புகிறது என்ற கருத்தை எடுத்துக் கொள்வோம். இந்த நிகழ்ச்சியின் போது இந்தப் பெண்ணுடைய தங்கையும் யாரையோ காதலிப்பதாக அவன் சொல்லி விட்டான். இதனால் அந்தப் பெண்ணுக்கும் கெட்ட பெயர். இங்கு இந்த சமூகம் என்ன சொல்கிறதென்றால், ஒரு பெண் காதலித்தால் அவள் களங்கப்பட்டவள். இதெல்லாம் இந்த சமூகம் வைத்திருக்கும் மதிப்பீடுகள்.
நான் மனித உணர்வுகளுக்குத்தான் மதிப்பளிக்க வேண்டும் என்று சொல்கிறேன். ஜாதி, மதம் போன்ற மாயக் காரணங்களுக்கல்ல. மனிதனுக்குத்தான் மதமே தவிர, மதத்துக்காக மனிதனல்ல. அந்த வகையில் காதல் என்பது மனித உணர்வுகளில் ஒன்று. நான் காதலை ஆதரிக்கிறேன். அதுதான் பெரிய சவால். இதில்தான் ஆபத்தும் அதிகம், அதிக கேள்விகளுக்கும் பதிலளிக்க வேண்டும்
ஒன்று சமூகத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டது என்பதாலேயே அது சரியானது என்றாகிவிடுமா ? இல்லை ஒன்றை இந்தச் சமூகம் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதாலேயே அது தவறானதாகிவிடுமா? நான் அநீதியான இந்த சமூகத்தையே ஏற்றுக் கொள்ளவில்லை. அது வைக்கும் அளவுகோலையும் மதிப்பதில்லை. இந்த சமூகம் எதை மதிக்கிறது என்று சொன்னால் ஒரு பெண் படிக்கிறாள், வேலைக்குப் போகிறாள். திருமணம் செய்யும் வயது வருகிறது. பின்பு வேலையையும் விட்டு விட்டு பிறந்த வீட்டிலிருந்து இன்னொரு வீட்டிற்குச் சென்று கணவனுக்கும் அவன் வீட்டினர்க்கும் பணிவிடை செய்து வாழ வேண்டும்.
எத்தனை பவுன் நகை, எத்தனை பணம், சீதனமாக என்னென்ன கொடுத்தார்கள். என்பதைப் பற்றி சமூகத்தினர் தமக்குள் பேசிக்கொள்வர். பொண்ணு மாப்பிள்ளை பொருத்தம் எப்படி, அழகு எப்படி குடும்பம் எப்படி என்றெல்லாம் கருத்துப் பரிமாற்றங்கள் நடக்கும். இதுதான் இந்த சமூகம் மெச்சத்தக்க குணம் என்று எதைச் சொல்கிறார்கள். இந்த மாதிரிதான் பெண்கள் இருக்க வேண்டும். வேறு ஜாதிக்காரனுடன் திருமணம் கூடாது. நடந்தால் கொலை கூட நடக்கும். இப்படி ஜாதிவாரியாக சீதனம், நகை என்று என்ற தலையை அடகு வைத்து கடன் வாங்கி வணிகத்தைத்தான் நடக்கும் திருமணம் சமூகம் கொண்டாடுகிறது. ஜாதிக்காரன் என்பதற்காக கொஞ்ச நஞ்சம் சீதனம் கொடுக்கல் வாங்கலில் குறைந்தால் கூட திருமணம் நடப்பது பிரச்சனை ஆகிறது. இப்படிப் பெரும்பான்மையான திருமணங்கள் நடந்தாலும், சீதனத்திற்காக மருமகளைக் கொடுமை, கொலை செய்வது வரை நடக்கிறது. இப்படி நடக்கும் திருமணங்கள் கூட சில நேரம் தோல்வியில் முடிகின்றன. இதையெல்லாம் எதற்குச் சொல்கிறேன் என்றால் இத்தனை பிரச்சனைகள் இருந்தாலும், திருமணமே தவறு திருமணமே வேண்டாம் என்று கூட வேண்டாம் சீதனம் தருவது தவறு என்று கூட பெரிய அளவில் மாற்றத்தைக் காணோம். திருமணம் என்ற சடங்கு அல்லது வணிகம் சமூகத்தின் முழு ஆதரவுடன் ஆரவாரமாக நடந்து வருகிறது.
அனைவரது ஆதரவு, பொருளாதாரச் சிக்கலின்றி நடக்கும் திருமணங்களிலேயே இத்தனை பிரச்சனையிருக்கும்போது, பக்குவமும், அனுபவமும் இல்லாத இரண்டு பேர் எல்லோரையும் எதிர்த்து நடக்கும் காதல் திருமணங்களில் இன்னும் சிக்கல்களும், சவால்களும், போராட்டமும் அதிகம் தோல்வியடையும் வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. ஒழுக்கங்கெட்டவர்கள், ஓடுகாலிகள், குடும்ப மானத்தை வாங்கியவர்கள் என்ற பட்டப்பெயர்கள் சமூகத்திடமிருந்து இலவசமாகக் கிடைக்கும். இப்படி இருக்கிறது நிலைமை. காதலிப்பவர்களெல்லாம் பெற்றோரை ஏமாற்றுகிறவர்கள், மானத்தை வாங்குகிறவர்கள் என்றெல்லாம் ஏசுகிறார்கள். பெற்றோர் நடத்தி வைக்கும் வணிகத் திருமணங்களை ஏற்றுக் கொள்ளும் ஆணும் பெண்ணும் தன்மானமற்றவர், உணர்ச்சியற்றவர்கள் என்று கருதலாமா ?
யாரும் நம்மை 20 வருடம் பெற்று வளர்த்துக் காப்பாற்றும் பெற்றோரை ஏமாற்றியே ஆகவேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு தெரியாமல் ஊர் சுற்றுவதில்லை, வேறு மத, ஜாதிக்காரனைக் கட்டிக் கொண்டு ஓடுவதில்லை. நான் இன்னாரைக் காதலிக்கிறேன் என்று வீட்டில் சொல்லுமளவுக்கு பக்குவப்பட்டவர்களாகவா பெற்றோர் இருக்கிறார்கள். குறைந்தபட்சம் உயிருக்காவது உத்தரவாதமிருக்கிறதா ? காதலென்றாலே கல்லைப் போட்டுக் கொல்லுமளவிற்கு ஜாதி வெறியும், மதவெறியும் பிடித்து இருக்கிறார்கள். தலையை வெட்டிக் கொல்கிறார்கள்., கழுத்தை நெரிக்கிறார்கள், நஞ்சை ஊட்டுகிறார்கள். எரித்தும் கொல்கிறார்கள். கட்டாயத் திருமணம் விருப்பமில்லாம செய்விக்கிறார்கள். காதலை ஏற்றுக் கொள்வது போல் நடித்து வீட்டுக்கு வரவைத்துக் கொல்கிறார்கள். இல்லாததும் பொல்லாததும் சொல்லிப் பிரித்து விட முயற்சிக்கிறார்கள். இப்படி எழவெடுத்த எதற்கும் பயனில்லாத ஜாதியைக் கட்டிக் கொண்டுதான் வெறிகொண்டு அலையும் பெற்றோர்கள் எதற்கும் வெட்கப்பட மாட்டார்கள். காதலிப்பவர்கள் தவறு செய்கிறார்களாம், பெற்றோரை ஏமாற்றுகிறார்களாம்.
தனிப்பட்ட மனிதர்களின் திருமணத்தில் கூட மதமும், ஜாதியும்தான் போலி கௌரவம், குடும்பமானம் என்ற பெயரில் மூக்கை நுழைக்கிறது. அதற்காக பெற்ற பிள்ளைகளின் விருப்பத்தையும் நிராகரிக்கிறார்கள் பெற்றோர். ஒரு வேளை பெற்றோர் சம்மதித்தாலும் கூறுகெட்ட ஜாதி, மத, பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்ட கூறு கெட்ட சமூகம் அதை தடுக்கிறது.
எல்லோரும் முகம் சுளிக்கும் இன்னொன்று, இவர்கள் வீட்டிலேயே திருமணத்திற்கு முன்பு உறவு கொண்டார்கள், அவள் கருவுற்றாள் என்பது. இது தவறாகவே இருக்கட்டும். நானும் இதைத் தவிர்க்கவே சொல்கிறேன். இருப்பினும் இதை ஒரு உலக மகாக் குற்றமாகச் சொல்வதால் இந்தப்புனிதத்தையும் கேள்வி கேட்க வேண்டும். வீட்டிலேயே இக்கூத்தைச் செய்திருக்கிறார்கள் என்றால் எவ்வளவு மோசமானவர்களாக இருந்திருக்க வேண்டும் என்பார்கள். இதே வெளியில் போய் செய்திருந்தாலும் வெளியே போய்க் கூத்தடித்திருக்கிறார்கள் என்பார்கள். சரி இப்போது திருமணத்தில் என்ன நடக்கிறது ? யாரென்றே பேசிப் பழகாத ஆணும் பெண்ணும் திருமணம் செய்கிறார்கள். இப்போது அலைபேசியின் புண்ணியத்தால் பேசிப் பழக வாய்ப்புக் கிடைக்கிறது. அதே 10 வருடங்கள் முன்னால் என்ன நடந்தது ? யாரென்று தெரியாத ஒருவருடன் திருமணம் செய்த பிறகு அன்றிரவு உடலுறவு கொள்ள வேண்டும். அதற்குப் பிறகு அவருடன் குடும்பம் நடத்த வேண்டும். அந்த நபருக்கு எய்ட்ஸ் இருக்கிறதா என்று கூட சந்தேகப்படத் தேவையில்லை. ஏனெனில் இது பெற்றோர் உற்றார் பணம் செய்து ஊரைக் கூட்டி செலவு செய்து வைத்த திருமணம், புனிதமானது. பேசாமல் கொள்ளாமல் உடலுறவு கொண்டுவிட்டு அடுத்த நாளிலிருந்து பேசிப் பழகிக் கொள்ளலாம். வாழ்ந்து கொள்ளலாம். இந்த அசிங்கத்தை ஒன்றும் உறுத்தலில்லாமல் ஏற்றுக் கொள்பவர்கள் 7 வருடங்கள் நன்கு பழகி புரிந்து காதலித்தவர்கள் செய்தால் அதைக் காறித் துப்புகிறார்கள். நன்றாக இருக்கிறது.
என்ன இருந்தாலும் பெண் இதை ஒத்துக் கொள்ளலாமா ? இப்போது அவள்தானே அவமானப்பட்டு நிற்கிறாள். பெண் பலவீனமானவள் என்பதால் தானே ஒரு ஆண் அவளிடம் அன்பைக் காட்டி தேனொழுகப் பேசி உடலுறவுக்கும் சம்மதிக்க வைக்கலாம். இதுவும் பெண்களின் பலவீனம்
பெற்றோரும் சமூகமும் சேர்ந்து, திருமணம் செய்து கொண்டு கணவனுக்கு ஒத்தாசையாய் வாழ்வதே சிறந்த வாழ்க்கை கலாச்சாரம் என்றும் நம்ப வைக்கலாம். இதுவும் பெண்களின் பலவீனம்.
இதை மட்டும் பெண் இதை எப்படி ஏற்றுக் கொள்ளலாம் என்று கேட்கிறீர்களா ? இல்லையே அதுதான் பெண்களுக்கு நல்லது என்றுதானே போதிக்கிறார்கள். இரண்டையும் நம்பித்தான் அவள் செயல்படுகிறாள். இதில் ஒன்றை மட்டும் குறை சொன்னால் எப்படி?
ஒரு பெண் கருவுற்றால் அது அவளது "தவறோ" அல்லது அவளுக்கு மட்டுமே "பொறுப்பு" என்று ஆகாது. அதை செய்த ஆணுக்கும் அதில் பாதி பங்கு உண்டும். ஒரு பெண் தான் பெற்ற குழந்தையை குப்பைத் தொட்டியில் போடுகிறாள் என்றால் அது அவள் மட்டும் செய்யும் தவறல்ல. அதற்குக் காரணமான அந்த ஆணும்தான் அதற்குப் பொறுப்பாவான். அது போலத்தான் இதுவும். குழந்தை பெண்ணின் வயிற்றில் இருப்பதால் மட்டும் அவள் களங்கமானவள், தன்னையே இழந்து விட்டாள், கற்பு போச்சு, கண்ணியம் போனது என்று சொல்வதெல்லாம் வெறும் கண்துடைப்புகளே. அவைகள் சொற்பிழைகள், கருத்துப் பிழைகள். பாதிக்கப்பட்டவரையே குறை சொல்லும் தந்திரம்.
5 வயது சிறுமி கற்பழிக்கப்பட்டாள் என்று செய்தி வருகிறது. 5 வயது சிறுமிக்கு கற்பு எங்கே இருக்கிறது என்று தோண வேண்டாமா ? அது மாதிரிதான் இதுவும் பெண்ணுக்கு மட்டும் எப்படி கண்ணியம் கற்பு எல்லாம் அழிகிறது, மானம் போகிறது இந்தப் போலிக் கற்பித்தத்தைச் செய்த சமூகத்தை நாம் ஏன் மதிக்க வேண்டும். பெண்களின் உணர்வை மதிக்காத இந்த சமூகத்தை ஏன் நாம் மதிக்க வேண்டும். கற்பு, கண்ணியம், பாதுக்காப்பு, குடும்ப மானம் என்று எல்லா எழவையும் பெண்களின் மீது சுமத்தி அவர்களை அலைக்கழிக்கும் சமூகத்தின் தூற்றுதலுக்கு ஏன் செவிசாய்க்க வேண்டும்.
இந்தக் கற்பு, ஆணாதிக்கம் பற்றித் தெரிந்தவரே அதை எதிர்க்காமல், பாதிக்கப்பட்ட பெண்ணைக் காரணம் காட்டி, நான் அப்பவே சொன்னேனே கேட்டியா, இப்படி ஆயிட்டியே, மானம் போச்சே, வாழ்க்கை போச்சே என்கிற பாணியில் பேசுகிறார்கள்.
பாதிக்கப்பட்ட இந்தப் பெண் என்ன செய்ய வேண்டுமோ அதைத்தான் செய்கிறாள். இதில் அவளது மானமோ, கண்ணியமோ எதுவும் போகவில்லை. காதலிக்கும் பெண்களை இழிவாகப் பேசுகிறவர்கள்தான் கண்ணியமில்லாதவர்கள். அப்படி மானம் போனது என்று சொல்கிறவர்கள் இன்னும் கொஞ்சம் சிந்திக்கட்டும். அவள் தலைகுனியவில்லை. தேவையுமில்லை.
காதலிக்கும் பெண்களே !!
ஆண்கள் எச்சரிக்கை
சமூகம் எச்சரிக்கை
கண்ணியம் எச்சரிக்கை
தூற்றுதல் எச்சரிக்கை
கற்பிதங்கள் எச்சரிக்கை
தலை குனிய வேண்டியது அந்த ஆண். மதவெறி பிடித்தவர்களுக்கும் ஜாதியை காப்பாற்றி பிழைப்பு கட்சி நடத்துபவர்களுக்கும் உதவி செய்ததிற்காகவும் சேர்த்து அவன் தலை குனிய வேண்டும்.
பதிலளிநீக்குவேக நரி நன்றி !!
நீக்குமதவெறி என்று சொல்லுமளவுக்கு அந்தக் கட்டுரை எழுதவில்லை. அவர்களின் அக்கறையை மதிக்கிறேன். இது போன்ற பிரச்சனைகளில் பெண்கள் மீது குற்றம் சொல்லி அடக்கக் கூடாது என்று சொல்ல வருகிறேன். ஆம் தலை குனியவேண்டியது அந்த ஆணே.