கிரிக்கெட் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கிரிக்கெட் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

கிரிக்கெட் மதம்

மதங்களை எதிர்ப்பவர்கள் கூட கிரிக்கெட் மயக்கமும் திரைப்பட மயக்கமும் உடையவர்களாக இருக்கின்றனர். ஊடகங்கள்தான் கிரிக்கெட்டர்களையும் நடிகர்களையும் கடவுளாகவும் அந்தத் துறைகளை கவர்ச்சிகரமாகவும், உணர்ச்சியைத் தூண்டியும், வெறியூட்டியும் மதமாகவும் வளர்த்து வருகின்றனர் என்றால் மாற்று/மக்கள் ஊடகங்களாகக் கருதப்படும் சமூக வலைத்தளங்களும் ஊடகங்களையே விஞ்சும் வகையில் திரைப்பட + கிரிக்கெட் துதிபாடிகளாக விளங்குகின்றன. 

கிரிக்கெட் பார்ப்பன ஆதிக்கம் நிறைந்த துறையெனில் அதை எதிர்த்து பார்ப்பனரல்லாதவர் பங்கு பெறும் ஹாக்கி, கால்பந்து போன்ற விளையாட்டுக்களை ஆதரிப்பதும், புகழ்வதும்தானே பார்ப்பன எதிர்ப்பின் அரசியலாக இருக்க வேண்டும் ? நான்கு வருடங்களுக்கு ஒரு முறை நடக்கும் ஆசியப் போட்டிகள், காமன்வெல்த் போட்டிகள், போட்டிகளில்தான் பார்ப்பனர் அல்லாதவர் பங்கு பெறுகின்றனர். குறிப்பிடத்தக்க அளவு வெற்றியும் பெறுகின்றனர். அந்த ஒரிரு மாதங்கள் மட்டும் ஏதாவது பதக்கம் வாங்கிய அவர்கள் இந்திய தேசியப் பெருமைக்கும், அவர்கள் சார்ந்த இனப்பெருமைக்கும் தோதாக ஊறுகாய் செலிபிரிட்டி ஆக்கப்படுவர். 

கடும் வறுமைக்கும் ஆதரிக்காத அரசுக்கும்  இடையே போராடி ஒரு ஸ்பான்சரின் உதவியால் வென்ற அவர்களது  கதைகள் பரப்பப்பட்டு, ஏதாவது பொருளின் விளம்பரத் தூதுவராக மாறுவர். இல்லையெனில் திரைப்படங்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் வருவர். அவ்வளவுதான் அவர்களின் உச்சம். சில நாட்களில் எல்லோரும் கிரிக்கெட் பற்றிய செய்திகளுக்குத் திரும்பி விடுவார்கள். 

ஏனெனில் வருடம் முழுக்க இந்தக் கிரிக்கெட் மதமும், கடவுளர்கள் மட்டும் வெவ்வேறு வடிவங்களில் இடைவிடாமல் திணிக்கப்பட்டுக் கொண்டேயிருக்கும். கிரிக்கெட்டில் தோற்றுப்போனால் என்னவோ இவர்கள் சோறு போட்டு அவர்கள் துரோகம் செய்தது போன்று ஒட்டு மொத்த கிரிக்கெட் அணிக்கோ அல்லது ஒரு சில தனி நபர்களுக்கொ மிகப்பெரிய திட்டு விழும். 

அரசியல் கட்சித் தலைவர்களைத் துதி பாடுவதிலாவது ஒரு அறம் இருக்கிறது. ஆனால் இந்த அட்டைக்கத்தி வீரர்களுக்குத் தரப்படும் வெளிச்சம் மிகவும் அதிகம். இப்படி ஒன்றுமில்லாததை மாய்ந்து மாய்ந்து புகழ்ந்துரைப்பவர்களுக்கு மத நம்பிக்கைகளை எதிர்ப்பதற்கும் குற்றம் சொல்வதற்கும் என்ன தகுதி இருக்கிறது ?
Download As PDF
Bookmark and Share

Post Comment

கண்டு கொள்ளப்படாத மகளிர் கிரிக்கெட்


தற்போது மகளிர்க்கான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடந்து முடிந்து விட்டன. அது பெரிய அளவில் பேசப்படவில்லை. ஏனோ ? கிரிக்கெட் நடிகர்கள் ஆடினால் கூட கொஞ்ச பேர் பார்க்கிறார்கள், ஏன் நடிகைகள் கூட ஆடினால் பார்க்கிறார்கள். பெண்கள் கிரிக்கெட் மட்டும் இன்னும் பெரிய அளவில் பிரபலமாகவில்லை. அதுவும் கிரிக்கெட்டின் மிகப்பெரும் சந்தையான தெற்காசியாவில் கூட பெண்கள் கிரிக்கெட் மிகப்பெருமளவில் போணியாகவில்லை.

இந்த நிலையில் இப்போது ஆண்களும் பெண்களும் கலந்து விளையாடும் கிரிக்கெட் போட்டிகளைத் தொடங்கப்போகிறார்கள். ஏன் அப்படியாவது பிரபலப்படுத்தலாமென்றா ? சும்மா கிளுகிளுப்பாகவாவது பார்க்க வைத்துவிடமுடியுமென்றா ?

பெண்கள் கிரிக்கெட் கொஞ்ச நேரம் பார்த்தேன், ஆண்கள் அளவுக்கு துடிப்பாக இல்லையென்றாலும், பெண்கள் ஒரு வித நளினத்துடனும், மிதமான பரபரப்புடனும் நன்றாகவே விளையாடினார்கள். சிலருக்கு இன்னும் பேட்டிங் வரவில்லை. இறங்கி ( ஓரடி முன் வைத்து) அடிக்கும் போது முழங்கை வளைந்து, மண்வெட்டியில் வெட்டுவது போல் அடித்தார்கள் சிலர்.

பெண்கள் விளையாடும் விளையாட்டிலேயே கிரிக்கெட் மட்டுமே விளம்பரத்திற்கு உதவாத உடைகளை அணிந்து விளையாடுகிறார்கள். மினி ஸ்கர்ட், மினி ட்ரொஸர் மாதிரியான உடைகளை அணிந்து இதை விளையாட முடியாது என்பதால்தான் ரசிகர்கள் இவர்களைக் கண்டு கொள்ளவில்லையா ?

ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் ஒரு போட்டியில் தனிநபராக ஓட்டங்கள் அதிகம் அடித்தது ஒரு பெண் - பெலிண்டா கிளார்க் 229*


ஒரு நாள் போட்டியில் அதிக ஓட்டங்கள் அடித்த அணி நியூஸிலாந்து - 459

இதில் எதிராக ஆடிய பாகிஸ்தான் 47 ஓட்டங்கள் மட்டுமே பதிலுக்கு எடுக்க முடிந்தது, 408 ஓட்டங்கள்  வித்தியாசத்தில் பாகிஸ்தான் தோல்வி. அல்லது நியூஸி வெற்றி.

இது இரண்டுமே ஆண்கள் கிரிக்கெட் "சாதனை"யை விட அதிகம். இது இரண்டுமே 1997 இல் செய்யப்பட்ட சாதனைகள்.

ஆஸி பெண்கள் அணி 6 முறை உலகக் கோப்பையை வென்றிருக்கிறது. இதையெல்லாம் ஆண்கள் கிரிக்கெட்டில் எப்போதுமே முறியடிக்க முடியாது. பார்ப்போம்.

எல்லிஸ் அலெக்ஸாண்ட்ரா பெர்ரி

இந்தச் சிறுமி ஆஸ்திரேலிய பெண்கள் கிரிக்கெட் அணியில் இருப்பவர் கால்பந்து அணியிலும் இருப்பவர். தமது 16 ஆம் அகவையில் நுழைந்தார் ஆஸ்திரேலியாவின் கால்பந்து அணியிலும், கிரிக்கெட் அணியிலும் ஒரு சேர. கால்பந்து உலகக் கோப்பையிலும் பங்கெடுத்திருக்கிறார், கிரிக்கெட் உலகக்கோப்பையை வென்ற ஆஸ்திரேலிய அணியிலும் இருக்கிறார். இந்த மாதிரி கிரிக்கெட், கால்பந்து உலகக்கோப்பைப் போட்டிகளில் ஒரு சேரக் கலந்து கொண்டவரென இதுவரை கேள்விப்பட்டதேயில்லை. கிரிக்கெட் உலகக் கோப்பையைக் கடந்த முறை ஆஸி வென்ற போது இவரது பங்கு குறிப்பிடத் தகுந்தது. 


(தற்போது குத்துச் சண்டைப் போட்டிகளில் பங்கேற்கிறார், இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் ஆண்ட்ரூ ஃபிளிண்டாஃப். அவர் எந்தளவுக்கு வெற்றி பெறுகிறார் என்று பார்ப்போம்)

மைக்கேல் பெல்ப்ஸ் என்ற நீச்சல் வீரர் அதிக பதக்கங்களை ஒலிம்பிக்கில் வென்றவர் என்ற பெருமையப் பெற்றதோடு, அரை நூற்றாண்டு காலம் அதிக பதக்கங்களை வென்ற சாதனையை வைத்திருந்த ரஷ்யாவின் (முன்னாள் சோவியத் ஒன்றியத்தின்) ஜிம்னாஸ்டிக் வீராங்கனை லாரிஸ் லாட்டினினாவின் சாதனையையும் முறியடித்தார். இதில் லாரிஸ் லாட்டினினா இரு ஒலிம்பிக் போட்டிகளில் மட்டுமெ பங்கேற்றவர், அதிலும் ஒரு போட்டியில் பங்கேற்ற போது அவர் கர்ப்பமாக இருந்தார். மைக்கேல் பெல்ப்ஸ் மூன்று ஒலிம்பிக்கில் பங்கேற்றவர்.

இது மாதிரி சாதனைகள் எல்லாம் கண்டுகொள்ளப்படாமலே போகின்றன.

இப்படி மிகப்பெரும் சாதனைகளைப் பெண்கள் படைக்குமளவிற்கு திறமை இருக்கும்போது அவர்களை எப்படிப் பயன்படுத்துகிறார்கள் அவர்களுக்கு என்ன மாதிரியான அங்கீகாரம் வழங்கப்படுகிறது. இந்த டென்னிஸ் போட்டிகளுக்கும் அதிகமான முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. பிரபல டென்னிஸ் வீராங்கனைகள் மாடலாகவும் இருக்கின்றனர். ஷரபோவா வருடத்திற்கு 70 கோடிகள் வரை விளம்பர மாடலாகவே சம்பாதிக்க முடிகிறது. விளையாட்டுப் போட்டிகளை நடத்தும் பெரிய நிறுவனங்கள் இவர்களின் பிரபலத்தைப் பயன்படுத்திக் கொள்கின்றன. அதற்காகவே புதுப் புது பிரபலங்களை உருவாக்குகின்றனர்.


அதே நேரம் ஆண்களின் கிரிக்கெட் எவ்வளவு மெனக்கெட்டு பரப்பப் படுகிறது. கிரிக்கெட் வீரர்கள் பெரிய நடிகர்களுக்கு இணையான செலிபிரிட்டிகளாக இருக்கிறார்கள். எல்லா விளம்பரங்களிலும் வருகிறார்கள். நடிகைகளுடன் கிசு கிசு எழுதுமளவிற்கு பிரபலமானவர்களாக இருக்கிறார்கள். இவர்களுக்கு இருக்கும் தகுதி கிரிக்கெட் வீரர்கள் என்பது மட்டுமே.

இவர்கள் தேசத்தின் மானத்தைக் காப்பவர்கள் போல சித்தரிக்கப்படுகிறார்கள். கிரிக்கெட் போட்டியைப் பார்ப்பதே தேசபக்தி என்ற அளவிற்கு கட்டமைக்கப்பட்டுள்ளது.

கிரிக்கெட் பற்றிய செய்திகளுக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுத்துப் பரப்பப் படுகிறது என்று பார்த்தால்,

வரும் போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது, இன்னார் நீக்கப்பட்டார், இன்னார் தேர்வு செய்யப்பட்டார், இன்னாருக்கு வாய்ப்பில்லை

இந்திய அணி நாளை போட்டி நடக்கு இடத்திற்குப் போய் சேருகிறது.

இந்திய வீரர்கள் இன்று பெங்களூரு வந்தனர், அவர்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

போட்டிக்கு முன்பாக இந்திய வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டனர். வலைப்பயிற்சியில் ஈடுபட்டனர்.

இந்திய அணி இன்று வெற்றி பெறுமா ?

வெற்றி பெறுவோம் கேப்டன் நம்பிக்கை.

கிரிக்கெட் போட்டியை வர்ணிப்பதுதற்குத்தான் தொலைக்காட்சிச்செய்திகள் அதிகமான நேரத்தை எடுத்துக்கொள்கின்றனர்.

போட்டி முடிந்தவுடன் வெற்றிக்குக் காரணம், தோல்விக்குக் காரணம் குறித்த அலசல்கள்.

இவையெல்லாம் நாளிதழ்களின் முதல் பக்கத்தில் கூட வெளிவருகின்றன. 



கிரிக்கெட் சாதனைகள் என்று சொல்லப்படுகின்றவை எல்லாம் நல்ல நகைச்சுவைகளே.

"அதிக ஓட்டங்கள் எடுத்து சாதனை" என்பதற்கு முன்னால் எவையெவையெல்லாம் இணைக்கப்பட முடியும் பாருங்கள்.

இந்த வருடத்தில் "அதிக ஓட்டங்கள் எடுத்து சாதனை"

இந்த அணிக்கு எதிராக "அதிக ஓட்டங்கள் எடுத்து சாதனை"

இத்தனாவது விக்கெட்டிற்கு "அதிக ஓட்டங்கள் எடுத்து சாதனை"

ஒரே நாளில் "அதிக ஓட்டங்கள் எடுத்து சாதனை"

இத்தனாவது இன்னிங்க்ஸில் "அதிக ஓட்டங்கள் எடுத்து சாதனை"

ஃபாலோ ஆன் பெற்றும் "அதிக ஓட்டங்கள் எடுத்து சாதனை"

இரண்டாவது பேட்டிங்கில் "அதிக ஓட்டங்கள் எடுத்து சாதனை"

குறைந்த நேரத்தில் அல்லது பந்துகளில் "அதிக ஓட்டங்கள் எடுத்து சாதனை"

அணித்தலைவராக "அதிக ஓட்டங்கள் எடுத்து சாதனை"

விக்கெட் கீப்பராக "அதிக ஓட்டங்கள் எடுத்து சாதனை"

பந்து வீச்சாளராக "அதிக ஓட்டங்கள் எடுத்து சாதனை"

இப்படியாக நகைச்சுவைகள் தொடரும் நீளம் கருதி நிறுத்துகிறேன். இவயெல்லாம் போட்டித் துளிகள் அல்லது ஹைலைட்ஸ் என்று பெட்டிச் செய்தியில் போட்டு விளையாட்டுச் செய்தியின் பக்கங்களை நிரப்புவார்கள்


கிரிக்கெட் ஒரு மதமாக போற்றப்படும் அதே நேரம்  இன்னொரு புறத்தில் மற்ற விளையாட்டுக்களுக்கு முன்னுரிமை தரப்படுவதில்லை. வெறும் பெட்டிச் செய்திகளில் மட்டும் வெளிப்படுகின்றன. சொந்தக் காசையும், முயற்சியும் செய்து உயிரைக் கொடுத்துப் பயிற்சி எடுத்து ஒலிம்பிக்கில் எவனாவது பதக்கம் வாங்கினால் அந்த ஒரு மாதத்திற்கு மட்டும் "இந்தியர்கள்" பெருமைப்பட்டுக் கொண்டு மீண்டும் அவர்களை மறந்து விடுவார்கள். ஏன் இந்தியா ஒலிம்பிக்கில் பதக்கங்கள் வாங்க முடியவில்லை என்று விவாதிப்பார்கள். கிரிக்கெட்டைக் கொண்டாடத் தொடங்கி விடுவார்கள். ஐபிஎல்லை வழிபடத் தொடங்கி விடுவார்கள்.

ஆளுக்குப் பத்துக்கும் மேற்பட்ட கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்ற போதும், மகேஷ் பூபதியும், லியாண்டரும் பெரிய அளவில் கொண்டாடப் படவில்லை. சானியா மட்டுமே டென்னிசின் அடையாளமாக இருக்கிறார். அவர் பிரபலமானதும் டென்னிஸ் என்ற விளையாட்டின் காரணமாக அல்ல. ஏதாவது ஒரு (வெப்பமான பெண் - அதாவது) ஹாட் கேர்ள் கிடைக்க வேண்டு ஊடகங்களுக்கு ஊதிப் பெருக்கிவிடுவார்கள். அதே நேரம் உயிரைக் கொடுத்து விளையாடும் சாய்னா நேவாலை பெரிய அளவில் ரசிகர்கள் யாரும் கண்டு கொள்ளவில்லை.

விளையாட்டாக இருந்தாலும், அழகு + செக்ஸி மட்டுமே முக்கியத்துவம் பெறுகிறது போலும். சமீபத்தில் இலங்கையில் நடைபெற்ற 20/20 கிரிக்கெட் உலகக் கோப்பைப் போட்டிகளில் ஸ்ரீலங்காவின் சியர் லீடர்ஸ் பற்றி கிரிக்கெட்+தேச பக்தர்கள் பலரும் தமது சங்கடத்தைத் தெரிவித்தனர். அவர்கள் அழகாக இல்லை. பாமர ரசிகர்கள் மொக்கை ஃபிகரெல்லாம் எவன்டா சீர்லீடர்ஸா போட்டான் என்று அலுத்துக் கொண்டனர். நிலைத்தகவல் போட்டு எதிர்ப்பைக் காட்டினர்.

விளையாட்டுபோட்டிகளில் எதற்கு சீர் லீடர்ஸ்கள் வந்து குட்டைப்பாவாடையில் ஆட வேண்டும், கேமராக்கள் பாவாடைக்குக் கீழிருந்து படம் பிடிக்க வேண்டும். கிரிக்கெட் போட்டிகளே தேசபக்தர்கள் பார்ப்பது, தேசபக்தி பொங்கி வழிந்தோடும் போது, எதற்கு இந்தக் கிளுகிளுப்பு வேண்டிக் கிடக்கிறது. தேசபக்தி பேசும் அர்ஜுன் படங்களில் குத்தாட்டம் இருப்பது போல என்று கொள்வோம்.

டிடி ஸ்போர்ட்ஸில் உயரம் தாண்டும் போட்டிகள் போட்டிருந்தார்கள். ஒரு ஈரானியப் பெண்ணைக் காட்டினார்கள். அவர் பர்தா போன்றதொரு ஆடையை அணிந்து அது தலையிலிருந்து விழாமல் இருக்க ஒரு பேன்டையும் கட்டியிருந்தார். கை முழுவதும் மறைக்கும் ஆடை. அதே நேரம் இன்னொரு ஐரோப்பியப் பெண் ஏறக்குறைய இரு துண்டு ஆடை அல்லது பிகினி என்ற அளவிற்கு அணிந்திருந்தார். உடலை மறைப்பது ஒத்துக் கொள்ளக்கூடியது, மணிக்கட்டுவரையும், தலையையும் மறைக்க வேண்டுமெனக் கட்டாயப்படுத்துவதெல்லாம் என்னளவில் ஒத்துக் கொள்ள முடியாது. என்னைக் கேட்டால் இந்த பர்தா, பிகினி இரண்டுமே விளையாட்டு வீராங்கனைகளுக்கு ஒத்து வராதது.

மத்திய கிழக்கு அல்லது இஸ்லாமிய நாட்டுப்பெண்கள் பெரும்பாலும் இதை அணிந்துதான் விளையாட வேண்டியிருக்கிறது. மற்ற நாட்டினர் நீச்சலுடை மாதிரி, அல்லது பிகினி மாதிரி அணிகிறார்கள். இதற்குத் தயங்கியே இந்தியா மற்றும் முஸ்லிம் நாடுகளின் பெண்கள் இது போன்ற போட்டிகளில் சேரத் தயங்குவார்கள் போல் தெரிகிறது.

நன்றி : ஹஃபிங்க்டன் போஸ்ட்
இந்த உடைகளை வடிவமைப்பவர்கள், விதிமுறையாளர்கள் எல்லாம் வணிக நோக்கத்துடன் நடத்தப்படும் போட்டிகளில் பெண்களுக்கு வசதிப்படி வடிவமைப்பார்களா அல்லது ஆண்கள் ரசிக்கும்படி வடிவமைப்பார்களா என்று சொல்ல வேண்டியதில்லை. சில நாட்களுக்கு முன்பு, ஸ்குவாஷ் போட்டிகளில் பங்கேற்பவர்கள் குட்டைப் பாவாடை மட்டுமே அணிய வேண்டும் என்று விதியை மாற்றினார்கள். அதற்கு பாகிஸ்தான், எகிப்து நாடுகள் எதிர்ப்புத் தெரிவித்தனர். இதெல்லாம் எதற்கு ? ஏன் ட்ரௌசர் அணிந்து விளையாடினால் என்ன கெட்டு விடும்.

ஆண்கள் விளையாட்டு வீரர்களாக இருக்கும்போது அணியும் ஆடைகளுக்கும் பெண்களுக்கும் எத்தனை வேறுபாடுகள் பாருங்கள். ஆண்கள் உடைகளால் அவர்கள் சிரமப்படுவதேயில்லை. அதே நேரம் பெண்களைக்கவனித்தால் ?? அதென்ன விளையாட்டுப் போட்டிகளில் ஆண்கள் அணியும் உடைகள் முழங்கால் வரையில் அல்லது தொடை வரையாவது மூடியிருக்கும்படியும், பெண்கள் என்றால் புட்டத்தில் பாதியை மட்டும் மறைக்கும்படியும் இருந்தால் அதன் காரணம் என்ன ?

எந்த உடை பற்றியும் நான் அவ்வளவாக அலட்டிக் கொள்வதில்லை. இதையெல்லாம் சொல்லக் கூடாதுதான். ஆனால் விளையாட்டுப் போட்டிகள் என்ற பெயரில்தான் சீர்லீடர்ஸ், கடற்கரைக் கைபந்து போன்ற போட்டிகளில் வேண்டுமென்றே பெண்களை ஆடை அவிழ்ப்பு செய்விக்கின்றனர். இதையெல்லாம் பார்த்து ஆண்கள் அள்ளித் தெளிக்கும் கருத்துக்களுக்காகத்தான், திரைப்படங்கள், விளம்பரங்கள், இசைக் காட்சிகள், நடனக் காட்சிகள் இவைகளில் பெண்கள் காட்டப்படும் விதத்திலிருந்தே இந்த விளையாட்டுப் போட்டிகளில் காட்டப்படுவதையும் இணைத்துப் பார்க்க நேரிடுவதால் இதையெல்லாம் எதிர்க்க வேண்டியிருக்கிறது.  பெண்கள் உடை பற்றிப் பெரிய விவாதத்திற்கெல்லாம் கூட போக வேண்டியதில்லை. ஆண் வீரர்கள் அணிந்து விளையாடுவதையே பெண்கள் அணிந்தால் வேலை முடிந்தது. அதற்காகத்தான் பெண்கள் கிரிக்கெட் பற்றிச் சொல்ல வந்தேன்.

இன்னொன்றையும் சொல்ல மறந்தேன். சானியாவாகட்டும், சாய்னாவாகட்டும் அல்லது ஷரபோவாவாக இருக்கட்டும். பந்தை ஆக்ரோஷமாகத் திருப்பி அனுப்புகிறார் என்ற விவரிப்புடன் தினமணி, தினமலர், தினத்தந்தி உட்பட பெரும்பான்மை நாளிதழ்கள் வெளியிடும் புகைப்படங்களில் அவர்களது மேலுடை சற்றே உயர்ந்து தொப்புள் தெரிகிற மாதிரிதான் இருக்கிறது. இல்லையென்றால் பாவாடை பறக்கிற மாதிரித்தான் இருக்கிறது. இதை பல முறை நான் கவனித்திருக்கிறேன். இது இயல்பாக நடக்கிறதா ? வேறு போஸே கிடைக்கவில்லையா ? பாவாடை பறப்பதை ஸ்னாப் ஷாட் எடுத்துத்தான் போட வேண்டுமா கனவான்களே ?  பெண்களை செக்ஸியாகத்தான் உடை அணிய வேண்டும் என்று திணிப்பதாலேயே இதையெல்லாம் சொல்ல வேண்டியிருக்கிறது.

இதைப் பார்ப்பதற்கென்றே பலரும் இப்போட்டிகளைக் காண்கின்றனர். பெண்கள் பங்கேற்கும் உலக அழகிப் போட்டியளவிற்கு, உலக அழகன் போட்டி பிரபலமாகவில்லை. கடற்கரைக் கைப்பந்துப் போட்டிகளில் பெண்கள் அளவுக்கு ஆண்கள் போட்டி பிரபலமாகவில்லை. இதெல்லாம் அதன் எதிர் விளைவுகள்தான். ஒவ்வொரு முறையும் உலக அழகிப் போட்டியும், பிரபஞ்ச அழகிப் போட்டியும் நடக்கும் போதெல்லாம், செய்திகளில் சொல்லப்படுவது என்னவென்றால், இந்திய அழகிக்கு இத்தனாம் இடமே கிடைத்தது, இந்திய அழகி ஏமாற்றம். இதற்கெல்லாம் இந்தியர்கள் வருத்தப்பட வேண்டுமாம்.




இப்படியாக பெண்கள் என்றால் ரசிப்பதற்கே என்ற நிலை இருக்கும் வரை, அதை வணிகத்திற்காகப் பயன்படுத்தப்படும் வரை திறமையைக் காட்டி வென்ற பெண்களை விட உடலைக் காட்டிய பெண்களே வெற்றி பெற்ற பெண்களாக வலம் வருவர்.

சன்னி லியோன், பூனம் பாண்டே, ஷெர்லின் சோப்ரா, வீணா மாலிக் இவர்களெல்லாம் என்ன செய்தார்கள் என்று நமக்கு நாளும் நினைவூட்டப்பட்டுக் கொண்டேயிருக்கிறார்கள்.
Download As PDF
Bookmark and Share

Post Comment

இந்தியான்னா இந்தியாதான் !! - 2 - ஹாக்கியை தேசிய விளையாட்டாக்கினால்தான் என்ன ?


எப்படா ஏதாவது பதக்கம் கிடைக்கும் என்று கொட்டாவி விட்டுக் கொண்டு காத்திருக்க வேண்டிய நிலையில் இருக்கிறது இந்தியர்களின் நிலை. அதே நேரம் சீனர்கள் அமெரிக்காவை விஞ்ச முடியாதே என நகத்தைக் கடித்துக் கொண்டிருக்கிறார்கள். இங்கு ஏன் சீனாவையும் இந்தியாவையும் ஒப்பிடுகிறேன் என்றால் இவைகளிரண்டும்தான் வருங்கால வல்லரசு என்கிறார்கள். இரண்டு பேருமே தம்மை வல்லரசு என்று காட்டுவதற்கு ஆங்காங்கே படம் காட்டி வருகிறார்கள். இந்நிலையில் சீனா கிட்டத்தட்ட விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவால் எட்ட முடியாத இடத்தை எட்டியிருக்கிறது. உலகிலேயே முதலிடம் ஏறக்குறைய. இந்தியாவால் ஏன் வெல்ல முடியவில்லை என்று புரியாதது போலவே கேட்கிறார்கள். அல்லது அரசியல் வாதிகளைச் சாடுகிறார்கள். ஏன் வாங்க முடியவில்லை அல்லது என்ன காரணம் என்றால் அதுதான் இந்தியா. நாட்டை ரஸ்யாக்காரனுக்கும், அமெரிக்காக்காரனுக்கும் விற்பதில் இந்தியாதான் தங்கப்பதக்கம் வாங்கியிருக்கும். ஆனால் விளையாட்டில்தான் பாவமாக இருக்கிறது.

நேற்றைய செய்திகளில் ஹாக்கி இந்தியாவின் தேசிய விளையாட்டாக அங்கீகரிக்கப்பட வில்லை என்று வெளியாகியிருந்தது. இத்தனை வருடங்களாக இதைக்கூட செய்யாமல் இருப்பவர்களால் வேறு என்னவெல்லாம் செய்திருப்பார்கள் என்பதைத்தான் கற்பனை செய்ய முடியவில்லை.  ஹிந்தியை தேசிய மொழி என்றே பலரும் நினைத்திருந்தார்கள். ஆனால் அப்படி ஒரு குறிப்பும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் இல்லாத போதும், ஒரு அலுவல் மொழியையே தேசிய மொழி போலப் பாவித்து அதைத் திணித்து வருகின்றது நடுவண் அரசு. ஆனால் 60 வருடங்களுக்கு முன்பே இந்தியாவின் பெருமையை உயர்த்திய ஹாக்கியை இன்னும் மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் அணுகி வருகின்றது.

1928-முதல் 1956 வரையிலான 18 வருடங்களில் இந்தியாவின் புகழ் ஹாக்கியில் உயரத்தில் இருந்தது 6 தங்கப்பதக்கங்களை வாங்கியிருந்தது. 24 ஒலிம்பிக் போட்டிகளில் ஒரு முறை கூட தோற்காமலிருந்தது. அதே இங்கிலாந்துக் காரர்கள் அறிமுகப் படுத்திய கிரிக்கெ இன்று எங்கிருக்கிறது என்பதைப் பார்க்கவும்.

எழவெடுத்த கிரிக்கெட்டுக்கு வாரி வாரி வழங்கும் பணத்தைக் கொஞ்சமாவது இந்த ஹாக்கியை வளர்ப்பதற்குப் பயன்படுத்தினால்தான் என்ன. இது நாள் வரையில் ஊர்பேர் தெரியாத வீரர்களெல்லாம் ஒலிம்பிக்கில் பதக்கம் வாங்கிய பின்னர்தான் ஊடகங்களில் தெரிய வருகிறார்கள். கிரிக்கேட்டுக்கு மட்டும் விளையாடும் முன்பே அணியில் சேர்க்கப்பட்டுள்ள விவரம் நாடு முழுவது செய்தியாக்கப்படுகிறது. ஹாக்கியைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். உண்ணாநிலைப் போராட்டம் நடத்தினார்கள். ஆசியக் கோப்பையை வென்ற போது ஊக்கத்தொகையாக 25000 ரூபாயை அளித்து அவமானப்படுத்தினார்கள். வில்வித்தையில் சாதனை செய்த பெண் வயிற்றைக் கழுவ தனது பயிற்சியாளரால் பரிசளிக்கப்பட்ட வில்லை விற்றுப் பிழைக்க வேண்டிய நிலை. இன்னொருவர் தன்னைப் பெண்ணாக நிரூபிக்க வேண்டிய நிலை. கபடியில் வென்றவர்களுக்கு மாற்றுடையில்லாமல், அவர்கள் தங்கியிருந்த விடுதியின் பணத்தைக் கூட கட்டாத நிலையில் இந்திய விளையாட்டுத் துறை இருக்கிறது.

இவையெல்லாம் ஒரு "ஏழை" நாட்டின் சாபக்கேடாகவோ சாதாரணமாகவோ இருந்துவிட்டுப் போகட்டும் என விட்டு விடலாம். ஆனால் கிரிக்கெட்காரனுக்கு கொடுக்கப்படும் சலுகைகளைக் கேட்டால்தான் பற்றிக் கொண்டு வருகிறது.

தொடர்புடைய பதிவு

இந்தியான்னா இந்தியாதான் !!
Download As PDF
Bookmark and Share

Post Comment

நாட்டுப்பற்று எனப்படுவது யாதெனில் ??

நாட்டுப்பற்று என்றால், டெண்டுல்கரின் சாதனைகளைப் பகிர்ந்து கொள்வது, அப்துல்கலாமின் பொன்மொழிகளைப் பகிர்வது, மைக்ரோ சாஃப்ட் நிறுவனத்தில் அதிக இந்தியர்கள் பணிபுர்வது, இந்திய ராணுவத்தின் புகைப்படங்களைப் பகிர்ந்து கொள்வது, இந்தியா பல்லாயிரம் கோடி செலவில் செயற்கைக் கோளை ஏவினால் பெருமை கொள்வது, கிரிக்கெட்டில் வென்றால் பெருமை கொள்வது, அவ்வப்போது ஜெய் ஹிந்த் போடுவது இவைகளா ?


ஒரு புகைப்படத்தை ஃபேஸ்புக்கில் காண நேர்ந்தது. ஒலிம்பிக் அணிவகுப்பின் போது இந்திய அணியினர் நடந்து செல்வது போல இருந்த அதில் சானியா சிரித்தபடி சென்று கொண்டிருந்தார். அதில் நடந்து சென்ற அனைவரின் கையிலும் இந்தியக் கொடி இருந்தது. சானியாவின் கையில் அது இல்லை. இதை வைத்து சானியாவைச் சாடி இருந்தனர். முதலில் இது போட்டோஷாப்பில் வைத்து மாற்றப்பட்ட படம் என்பதால் இது ஒரு பொருட்டாகவே கருதப்பட வேண்டியதில்லை. அப்படியே அவர் கையில் கொடி இல்லாவிட்டால் என்ன குடியா முழுகிப் போய்விடும் ?


தற்போது ஒலிம்பிக் போட்டிகள் நடை பெற்று வருவதால் நாட்டுப்பற்றுணர்வு தூசிதட்டப்பட்டுக் கிளப்பப் பட்டுள்ளது. தற்போதைய நிலையில் பதக்கம் பெறும் நபர் கொண்டாடப் படுவார். போட்டிகள் முடிந்தவுடன் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு கண்டுகொள்ளப்பட மாட்டார். அவருக்குத் திறமையிருந்தால் ஏதாவது நிறுவனத்தின் விளம்பரத் தூதுவராக மாறினால் ஊடகங்களிலும் அந்நிறுவனத்தின் பொருட்கள் விற்கும்  அங்காடிகளிலும் அங்கங்கே அவரது முகத்தைக் காட்டுவார்கள். ஏனென்றால் நாட்டுப் பற்றை வணிகம் செய்யத் தோதானவர்கள் கிரிக்கெட் வீரர்கள்தான்.

இந்த நாட்டுப்பற்றுதான் என்னவென்று எனக்குப் புரியவில்லை. இந்தியாவின் நாட்டுப்பற்று எனப்படுவது என்னவென்றால் முதலில் வருவது பாகிஸ்தானை வெறுப்பது(அதே போர்வையில் முஸ்லிம் வெறுப்பு), சீனாவை வெறுப்பது. அதே பாகிஸ்தானியாக இருந்தால் இந்தியாவை வெறுப்பது பாகிஸ்தானிய தேசப்பற்றாக இருக்கும். (அமெரிக்க தேசபக்தி என்றால் ரஸ்யாவை வெறுப்பது. இலங்கை தேசபக்தி என்றால் தமிழர்களை வெறுப்பது.) சொந்த நாட்டை நேசிப்பதை விட எதிரி எனக் கருதப்படும் நாட்டை வெறுப்பது, சாடுவது, நக்கலடிப்பது நாட்டுப்பற்றாக இருக்கிறது. பிறகு பொத்தாம் பொதுவாக அரசியல்வாதிகளை வெறுப்பார்கள். அதே சமயம் அம்பானியைப் போற்றுவார்கள். ஏனென்றால் அவர் இந்தியாவின் பெருமையை உயர்த்தியவர் என்பார்கள். இது போன்ற பெரும் பணக்காரர்கள் என்றாலே அவர்கள் தாமிருக்கும் நாட்டின் ஏழை பாழைகளை சுரண்டித்தான் சொத்து சேர்க்க முடியும். அரசாங்கத்தையே ஆட்டிப் படைப்பவர்கள் இவர்கள். அமெரிக்காவின் வால்மார்ட் என்றால் சிறிய வணிகர்கள் எத்தனையோ பேரின்  வயிற்றலடித்துத்தான் அவர்கள் ஆதிக்கம் செய்ய முடிகிறது. வால் மார்ட் இந்தியாவிற்கு வந்தால் பல வணிகர்கள் தூக்கில்தான் தொங்க வேண்டும்.

அதே போல்தான் ரிலையன்ஸ் ஃப்ரெஷ் வந்த பிறகு எத்தனை தள்ளுவண்டிக்காரர்களுக்கு பிழைப்பு போனது என்பது தெரியாது. ஆனால் இவர்கள்தான் முன்மாதிரிகளாகக் கொண்டாடப்படுகிறார்கள். இந்தியப்பொருளாதாரத்தைக் கையில் வைத்திருக்கும் இவர்கள் இந்தியப் பொருளாதாரத்தை உயர்த்தியவர்களாகக் கொண்டாடப் படுகிறார்கள்.

அடுத்ததாக கிரிக்கெட் காரர்கள் நாட்டுப் பற்றின் அடையாளமாகக் கொண்டாடப் படுகிறார்கள். முதலில் விளையாட்டுப் போட்டிகள் என்பவையே நட்புணர்வை வளர்ப்பதற்காகத்தான் நடத்தப்படுகின்றன. ஆனால் உண்மையில் எதிரி நாட்டுடன் நடக்கும் போரைப் போலவே சித்தரிக்கப்படுகின்றன. வணிக நோக்கில் திட்டமிட்டு விளம்பரப்படுத்தப்படுகின்றன. நாடுகளுக்கிடையே நடக்கும் போட்டிகளை விட ஐபிஎல் போட்டிகள் பிரபலமாக இருப்பதே இப்போலி நாட்டுப்பற்றின் முகத்திரையைக் கிழிக்கிறது. மேற்கத்திய நாடுகளில் கிரிக்கெட்டுக்குப் பதிலாக கால்பந்துப் போட்டிகள். கிரிக்கெட்டில் வெற்றி பெற்றால் ஏதோ இந்தியாவே வென்று விட்டது என்கிறார்கள். ஒவ்வொரு முறையும் உலக அழகிப் போட்டிகள், பிரபஞ்ச அழகிப்போட்டிகள் தவறாமல் வெளிச்சம் கொடுக்கப்பட்டு காட்டப்படுகின்றன. இந்திய அழகிக்கு இம்முறை இத்தனாவாது இடமே கிடைத்தது என்று உச் கொட்டுகிறார்கள். இதில் தோற்றதற்கெல்லாம் இந்தியர்களை வருத்தப்பட வைக்கிறார்கள். வென்று விட்டாலோ பெருமைப்படச் சொல்கிறார்கள்.

கிரிக்கெட் பற்றி சொல்லும் போதெல்லாம் எதற்கெடுத்தாலும் உலகிலேயே என்ற சொல்லை முன்னால் போட்டுக் கொள்கிறார்கள். உலகிலேயே யாரும் செய்யாத சாதனையைச் செய்து விட்டார் பெருமைப்படுங்கள் என்கிறார்கள். டெண்டுலகர் சொன்னார். எனது சாதனையை ஒரு இந்தியர் முறியடிக்க வேண்டும். இப்படிச் சொல்வதன் மூலம் தனது இந்தியப் பற்றைக் காட்டிக் கொள்கிறார். ஆனால் இவரே ஐபிஎல் போட்டிகளில் கலந்து கொள்கிறார். நான் இந்தியாவிற்காக மட்டுமே விளையாடுவேன் என்று சொல்லவில்லை. எல்லா நாட்டின் நிறுவங்களின் தயாரிப்புக்களையும் விளம்பரம் செய்கிறார். ஒப்பந்தம் செய்கிறார். ஆனால் இவரையே ஒருமுறை இந்தியக் கொடியின் நிறத்திலிருந்த கேக்கை வெட்டியதால் இந்தியக் கொடியை அவமானப்படுத்தி விட்டார் என்று பிரச்சனை செய்தார்கள். இரண்டு நடிகர்களை எதிர் துருவங்களாக நிறுத்தி தொடர்ந்து விளம்பரப்படுத்துவதன் மூலம் அவர்களுக்கான சந்தையை திரைப்பட முதலாளிகள், ஊடகங்கள் அதிகமாக்கி அதன் மூலம் தானும் இலாபமீட்டுகிறார்கள். ஒரு நடிகனின் படம் தோல்வியடைந்தால் எதிர்நடிகனின் ரசிகர்கள் மகிழ்வதும், தன்னுடைய விருப்ப நடிகனின் படம் வென்றால் மகிழ்வதும் அடிப்படையே எந்த ஒரு இல்லாவிட்டாலும் தொடர்ந்து நடக்கிறது.

இந்த நாடுகள் எனப்படுகின்றவையே பிரிட்டிஷ் காரனால் பிரித்தும், சேத்தும் வைக்கப்பட்டுக் கீறப்பட்டக் கோடுகள்தான். இந்த எல்லைகள்தான் நாடுகளாக அறியப்படுகின்றன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு பெருமை பேசிக்கொள்கிறார்கள். ஒரு முறை பாகிஸ்தானிய இணையதளமொன்றில் பார்த்தது நினைவிருக்கிறது. சிந்து சம்வெளி நாகரிகம் கண்டறியப்பட்ட பகுதி தற்போது பாகிஸ்தானியர் வசமிருப்பதால், பாகிஸ்தான் நாகரிகம்தான் உலகிலேயே சிறந்தது, பழமையானது என்ற வகையில் எழுதியிருந்தார்கள். இதுமாதிரியான கதைகளை தமிழ்த் தேசியம், இந்துத்துவம் ஆகியவற்றைப் பரப்புகிறவர்களும் தங்கள் நோக்கத்திற்கேறப் வளைத்தும் திரித்தும் பயன்படுத்தி வருகின்றனர். நானும் கொஞ்ச காலம் இந்தப் போலி நாட்டுப் பற்றில்தான் மூழ்கிக் கிடந்தேன். அதாவது ஒரு போட்டியில் பாகிஸ்தானும், ஆஸ்திரேலியாவும் விளையாடும் போது, ஒரு இந்தியன் பாகிஸ்தான் தோற்க வேண்டுமென நினைத்தால் அது இந்திய தேசபக்தியாகாது, அது பாகிஸ்தான் வெறுப்பு மட்டுமே.

இந்த நாட்டுப்பற்று உண்மையில் கடைப்பிடிக்க முடியாதது. எல்லா நாடுகளுமே பிறரைச் சார்ந்துதான் இருக்கின்றன. இவ்வகையான நாட்டுப்பற்றைப் பின்பற்றுகிறவர்களின்படி பார்த்தால், வெளிநாடுகளுக்குப் பிழைக்கச் செல்கிறவர்கள், படிக்கச் செல்கிறவர்கள், வேலை கிடைத்துச் செல்கிறவர்கள் தேசத்துரோகிகள்தான். ஃபேஸ்புக்கில் இன்னொரு பகிர்வும் உலா வருகிறது, இது 1950 காலத்து ஏகாதிபாத்திய எதிர்ப்பு பாணியிலிருந்தது. அதாவது இந்தியத் தயாரிப்புகளை வாங்குங்கள், வெளிநாட்டு தயாரிப்புக்களை வாங்காதீர்கள் என்று. எடுத்துக்காட்டாக பாரதி ஏர்டெல்லை ஆதரியுங்கள், வோடஃபோனைப் புறக்கணியுங்கள் என்று. சரி அப்படியே இந்தியத் தயாரிப்புக்களை ஆதரித்தாலும், அந்த நிறுவனம், அதன் முதலாளி பணக்காரனாகலாம். சராசரி இந்தியனுக்கு ஒரு நன்மையுமில்லை. இந்தியாவின் பொருளாதாரத்துக்கும் வளர்ச்சியில்லை. அதிருக்கட்டும், இதை அப்படியே வெளிநாட்டில் இருப்பவர்கள் இந்தியத் தயாரிப்புக்களுக்கு எதிராகச் செய்தால் இந்திய தேசபக்தர்கள் என்ன செய்வார்கள்.

ஒரு பொருள் தேவை கருதித்தான் ஏற்றுக் கொள்வதா நிராகரிப்பதா என்று பார்க்க வேண்டுமே தவிர எந்த நாட்டிலிருந்து வருகிறதா என்றா பார்க்க முடியும். புற்று நோய்க்கான மருந்து அமெரிக்காவிலிருந்து வருகிறது. அதை ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் வால்மார்ட்டையோ, கோக், பெப்சி மற்றும் நொறுக்குத்தீனி ஆகிய வற்றை ஏற்றுக் கொள்ளாம எதிர்க்க வேண்டும். ஏனென்றால் ஒரு மருந்து கிடைக்காத பட்சத்தில் ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் பின்னைய பொருட்கள், இங்கு ஏற்கெனவே பல பேருக்கு வாழ்வளித்து வரும் தொழில்களை அழித்து, அதைனைச் சார்ந்தவர்களையும் அழித்து, ஒரு புதிய நுகர்வுக் கலாச்சாரத்தை நிறுவி, இயற்கையையும் பாழாக்கும். பல ஆண்டுகளுக்கு முன்பு தேநீரை பிரிட்டிஷார் அறிமுகப்படுத்தியபோது அவை போதைப் பொருட்கள் என்று கருதி எதிர்க்கப்பட்டன.

எல்லா நாட்டு அரசும் பணக்காரனுக்கு ஆதரவாகவும் ஏழைகளுக்கு எதிராகவும்தான் இருக்கின்றனர். எல்லா நாட்டிலும் ஏழைகள்தான் சிரமப்படுகின்றனர். பட்டினியால் வாடுகின்றனர். எல்லைக் கோடுகள்தான் அவர்களைப் பிரிக்கிறது. நம் நாட்டு ஏழைகள் சிரமப்படக் கூடாது என எந்த நாட்டுப் பணக்காரனும் நினைப்பதில்லை.

நிலைமை இப்படி இருக்க ஒரு கொடியை வைத்து இதைப் பிரச்சனையாக்குகிறவரைப் பார்த்தால் எரிச்சல் வருகிறது. நம் நாட்டின் தேசிய கீதம் என்று ஒரு பாடல் இருக்கிறது. அதன் பொருள் என்ன தெரியுமா ? அதில் வரும் சில பகுதிகளின் பெயர்கள் இருக்கிறதல்லவா, விந்திய மலை திராவிட குஜராத்தி மராத்தி என்வெல்லாம் வருகின்றன. ஐந்தாம் ஜார்ஜ் மன்னர் இந்தியா வந்த போது அவரை இந்த (விந்திய மலை திராவிட குஜராத்தி மராத்தி) பகுதிகளெல்லாம் வாழ்த்துகின்றன என்ற பொருளில் பாடப்பட்டதுதான் அந்த பாடல், அதுதான் இன்னமும் தேசிய கீதமாக இருக்கிறது.

இந்தப் புகைப்படத்தை வைத்து அவர் இந்தியாவை மதிக்காமல் பாகிஸ்தானியாகிவிட்டார், என்று சொல்ல முனைகிறார்கள். அவர் முஸ்லிம் என்பதால் இந்த வெறுப்பை விதைக்கிறார்கள். சானியா குட்டைப்பாவாடையும், இறுக்கமான பனியனும் அணிந்ததால்தான் பிரபலமானார் என்று சொல்கிறவனுக்கும், சானியாவை போர்ன் புகைப்படங்களில் மார்ஃபிங் செய்தவனும் இந்த நாட்டுப்பற்றுப் புரளியைக் கிளப்புகிறவனும் ஒரே வகையானவர்கள்தான். இந்தக் குப்பையெல்லாம் நாம் புறந்தள்ளுவோம். இந்த மாதிரியான நாட்டுப்பற்றுதான் பாகிஸ்தானில் குண்டு வெடித்தால் மகிழ்ச்சியடையச் செய்கிறது. நமக்கு அவ்வளவு நாட்டுப்பற்றெல்லாம் கிடையாது. குண்டு எங்கு வெடித்தாலும் கவலைப்படும் தேசத்துரோகம்தான் என் கட்சி.

அண்ணா ஹஸாரே, அப்துல் கலாம் வகையில் அடுத்த நாட்டுப்பற்றில் முக்கியமான ஒரு பிரபலம், சத்யமேவ ஜயதே அமீர்கான். இவர் பல உண்மைகளைப் பேசினார் தனது நிகழ்ச்சியில், இல்லையென்று சொல்ல வில்லை. அதற்கு ஒரு மிகப்பெரிய வணிக விளம்பர நோக்கங்கள் நிறைந்த நிகழ்ச்சி என்பது சந்தேகமில்லை. இவர் பேசியவற்றில் இரண்டு, குழந்தைகள் பாலியல் வன்முறை, இன்னொன்று தண்ணீர் வளப்பாதுகாப்பு மாதிரியான ஒன்று. அமீர்கான் நினைத்தால் பாலிவுட் காரர்களை துகிலுரிப்பு நடனங்களைக் கைவிடுமாறு கேட்டிருக்க வேண்டும். ஏனென்றால் அவையும் பாலியல் வன்முறையைத் தூண்டுவதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. அடுத்து தண்ணீர் குறித்தது. இவருக்கெல்லாம் எந்தத் தகுதியும் இல்லை தண்ணீர் குறித்து பேச. காரணம் இந்தியா பாலைவனம் ஆனால் அதற்கு முக்கியக் காரண்மாக இருக்கப்போவது கோக்கும், பெப்சியும்தான் இவர் கோக்கின் தூதுவர் இவருக்கு தண்ணீர் பாதுகாப்பு குறித்துப் பேச என்ன அருகதை இருக்கிறது. லகான் என்ற படத்தில் இது போன்ற போலி தேசபக்தியை, வெறியை, உணர்ச்சியைத் தூண்டிக் கல்லாக் கட்டினார். இன்னொரு போலி தேசபக்திப் படம், ரங்தே பசந்தி, பகத் சிங்காக நடித்து தமது செல்வாக்கை உயர்த்திக் கொண்டார் அந்தப் படத்தில் அங்கங்கே கோக்கின் மறைமுக விளம்பரங்கள். இவர் நிகழ்ச்சியில் பேசும் பிரச்சனைகளுக்காக பலர் தமது வாழ்க்கையே அர்ப்பணித்துப் பேசியும், போராடியும் இருக்கிறார்கள். ஆனால் இவர் போன்ற நடிகர்கள் பேசினால்தான் கேட்பேன் பீல் பண்ணுவேன் என்று மக்கள் இருக்கிறார்கள். பிரபல நடிகர்கள் சூரியன் கிழக்கில் உதிக்கிறது என்று சொன்னால் கூட கன்னத்தில் போட்டுக் கொள்ளும் திரைப்பட பக்தர்கள் இருக்கும் வரை இவர்கள் கொடி பறக்கும்.

அடுத்தவர் ஷாரூக். சக் தே படத்தில் இது போன்ற போலி தேசபக்தி உணர்வைத் தூண்டி பணம் பார்த்தார். கோக் பெப்சி தடை செய்யப்பட்ட பின்பு இவர்தான் அமெரிக்க பெப்சிக்கு ஆதரவாகப் பேசினார். ஆனா அதே அமெரிக்கா இவர் முஸ்லிம் பெயரை வைத்து இவரை அவமானப் படுத்தியது. அதற்காக இவருக்கு உதவி செய்யச் சென்றது யார் ? பெப்சிக்காக இவர்  எதிர்த்து பேசிய இந்திய அரசு. இதுதான் அரசு. இவர்கள் சொல்கிறார்கள் எது நாட்டுப்பற்று எது துரோகம் என்று.  இப்போது நாட்டுப் பற்று என்றால் அது அணு உலையை எதிர்ப்பதுதான். அதை யார் ஆதரிக்கிறார்கள் யார் எதிர்க்கிறார்கள் என்று பார்த்தால் தெரியும்.

Download As PDF
Bookmark and Share

Post Comment

இந்தியான்னா இந்தியாதான் !!

இதை எதற்கு எழுதுகிறேனென்றால் நேற்று முதல் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் ஆரம்பமாகி விட்டன. அந்தக் கொடுமையை எதிர்க்க வேண்டும். எந்தக் கேவலமான சிறிய மொன்னைக் காரணம் கிடைத்தாலும் கூட அதை வைத்து கிரிக்கெட்டை விமர்சிக்க வேண்டும் அல்லது எதிர்க்க வேண்டும் என்ற கொள்கை வைத்திருக்கிறேன். அதற்காகத்தான் இதை எழுதுகிறேன். தற்போது முகநூலில் ஒரு புகைப்படமானது பகிரப்பட்டு வருகிறது. 


இதுதான் அது. ஒரு வில்வித்தை வீராங்கனை நிஷா ராணி தத்தா என்பது அவரது பெயர். அவர் இந்தியாவிற்காக உலக அளவிலான வில்வித்தைப்  போட்டிகளில் சில பட்டங்களையும் வென்றவர். 

நிஷா ராணி தத்தா
அவர் வென்ற பட்டங்கள்

*  2006 - இல் ஓவரால் சிக்கிம் சாம்பியன்
*  தெற்காசிய சாம்பியன் போட்டியில் வெள்ளிப்பதக்கம்
* 2006 பாங்காக்கில் நடந்த கிராண்ட் பிரிக்ஸ் போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்ற இந்திய அணியிலும் இடம் பிடித்திருந்தார்.
*  2007 - இல் தைவானில் நடந்த ஆசிய கிராண்ட் பிரிக்ஸ் போட்டியில் சிறந்த வீரருக்கான விருதும் பெற்றார்

இவரையெல்லாம் நாம் கொண்டாடவோ அல்லது நினைவு கொள்ளவோ முடியுமா ? இல்லை நமது அரசுதான் இவர்களுக்கு உதவ முடியுமா ? இவருக்கேன் இந்த வேண்டாத வேலை ? போய் கல்யாணங்கட்டிக் கொண்டு புள்ளையைப் பெத்து உப்புமாவைக் கிண்டிவிட்டு காலத்தை ஓட்டுவதை விட்டு இந்தியாவுக்காக விளையாடுகிறாராம். இவருக்கெல்லாம் இது தேவையா ?

தற்போது வறுமையின் காரணமாக தனது பொக்கிஷமாய்ப் பாதுகாத்த உலகத்தரம் வாய்ந்த அம்பையும் வில்லையும் விற்று விட்டாராம். 4 இலட்சம் ரூபாய் மதிப்புள்ள அதை எப்படி அவரால் வாங்க முடிந்தது. விளையாட்டுத் துறை கொடுத்ததா இல்லை இல்லை, அவரது திறமையைக் கண்டு அவரை ஊக்கப்படுத்தும் விதமாக அவரது பயிற்சியாளர் கொடுத்தது. 4 இலட்சம் ரூபாய் பெறுமானமுள்ள அதை வெறும் 50000 க்கு விற்றிருக்கிறார். அவர் கொரியர். நல்லவேளை இந்தியாவில் பிறக்கவில்லை அவர். கூடவே அவரது வில்வித்தையில் செய்ய விரும்பிய சாதனைகளையும். ஏன் தெரியுமா களிமண்ணால் கட்டப்பட்ட அவரது வீடு இடிந்து விட்டதாம். அதை சரி செய்ய அவருக்குக் காசு இல்லையாம். எடுபட்ட ரவீந்திர ஜடேஜா என்னும் வீராதி வீரர் 9 கோடி ரூபாய்க்கு ஏலம் போன திருநாட்டில் நிஷாவுக்கு ஒரு வீடும், வேலையும், ஊக்கத் தொகையும், பயிற்சியும் கொடுப்பது நம் அரசாங்கத்தால் இயலாது அல்லவா ? அதற்கு நாமெப்படி கிரிக்கெட்டையும், அரசையும் குறை சொல்வது ?

அவரது தங்கை திருமணம் செய்து கொண்ட போதும் சாதனை செய்ய வேண்டுமென்ற வேட்கையினால் மட்டுமே இன்னும் திருமணம் செய்யாமல் (21 வயது) அரசை நம்பிக் கொண்டிருக்கிறார். இவரது செயல் துரதிருஷ்டவசமானது என, விளையாட்டுத்துறை அமைச்சர் அஜய் மேகன் தெரிவித்தார். இல்லை இந்தியாவில் இதுதான் நியாயமானது. 





அடுத்ததாக கபடியில் உலக சாம்பியன் மகளிர், ஆடவர் என இரு பிரிவிலும் இந்தியாதான் சாம்பியன். ஆனால் அவர்களுக்கு நடந்ததைப் பார்ப்போமா ? 12 நாடுகள் விளையாடிய உலக மகா சோம்பேறி மொக்கை விளையாட்டிற்கு சாம்பியன் பட்டம் வென்ற சோதாவிற்கு எத்தனை ஆர்ப்பாட்டங்கள் !!(கபடியும் நிறைய நாடுகள் விளையாடவில்லைதான்). உலக சாம்பியன் பட்டம் வென்ற கையோடு அப்பெண்கள், அவர்கள் தங்கள் கோப்பைகளையும், பதக்கங்களையும், விளையாட்டுச் சான்றிதழ்களையும் ஏந்திக் கொண்டு ரிக்ஷாவிற்காகக் காத்திருந்தார்கள். சிலர் நடந்து சென்றனர். அவர்களுக்கு மகிழுந்து பரிசாகத் தரவேண்டுமென்பதல்ல, போட்டியில் வாகை சூடியதற்காகவாவது ஒரு நாளுக்கு அவர்களுக்கு அந்த வசதியைச் செய்து தந்திருக்கக் கூடாதா ? 

உலக சாம்பியனான இந்தியப் பெண்கள் கபடி அணி
அவர்கள் தங்கியிருந்த விடுதியின் காசைக்கூட போட்டி நிர்வாகிகள் செலுத்தவில்லை. அவர்கள் விடுதியின் பணியாளர்களால் ரூ 22,000 பணம் செலுத்தாததற்காகத் 2 மணி நேரங்களாகத் தடுத்து நிறுத்தப்பட்டிருந்தனர்.

ஒரு சிறிய தீ விபத்தின் காரணமாக அவர்களது சீருடைகள் எரிந்து விட்டன. இது அரை இறுதிப் போட்டிக்கு முன்பாகவே நிகழ்ந்து விட்டது. போட்டி நடந்தது இந்தியாவின் பஞ்சாப்தான் என்றாலும் ஒரு வாரமாக அவர்கள் ஒரே சீருடையை வைத்து சமாளிக்க வேண்டியிருந்தது. இதுதான் இந்தியாவில் விளையாட்டுப் போட்டிகளில் சாதனை செய்தவர்கள் நடத்தப்படும் விதம்.

இதே கிரிக்கெட் என்றால் இந்த மூஞ்சிகளைத்தான் நாம் ஆணுறை விளம்பரத்தைத் தவிர அனைத்திலும் பார்க்க வேண்டியிருக்கிறது. சச்சின், டோனி சகாப்தம் முடிந்து இனி கோலி கோடி கோடியாக அள்ளப் போகிறார். 10 வருடங்கள் முன்பு மேற்கிந்தியத் தீவுகள், தற்போது ஆஸ்திரேலியா என பெரிய அணிகளெல்லாம் போண்டியான நிலையில் இனி இந்தியாதான் வெற்றிகளைக் குவிக்கப் போகிறது. இதில் பரவசமடையும் இந்திய தேசபக்தர்கள் எப்படி ஐபிஎல்லையும் அதே பரவச மாநில உணர்வுடன் ரசிக்கிறார்கள் என்பதுதான் தெரியவில்லை. எப்படியோ தேசபக்தி ஒழிந்தால் சரி.

இந்தியா பாகிஸ்தான் போட்டிகளை நடத்தி வருமானத்தை அள்ள முடியாமல் அதை விட பல மடங்கு அள்ளும் ஐபிஎல் போட்டியை நடத்தி வெற்றியும் பெற்று விட்ட போட்டியை நடத்தும் முதலாளிகள், வெளிநாடுகள் போலவே இன்னும் cheerleaders - களின் பாவாடையின் உயரத்தைக் இன்னும் மேலே குறைக்க முடியாமல் கையைப் பிசைந்து கொண்டிருக்கிறார்கள். அதையும் குறைத்து விட்டால் அவர்களது போர்னோகிராபிக் கலாச்சாரத்தை இந்தியாவில் நிறுவிய பெருமையும் சேரும். அது சரி இப்போது மட்டும் என்ன வாழுதாம் ?

மாணவர்களின் தேர்வை முன்னிட்டும், தமிழகத்தின் மின்பற்றாக்குறையை முன்னிட்டும் இதை தடை செய்ய வேண்டுமென்கிறார்கள். பிராந்திய உணர்வை வளர்த்து தேசத்திலேயே பிரிவினைவாத உணர்வை வளர்க்கும் இந்த ஐபிஎல் போட்டிகளை தடை செய்ய வேண்டும் என்று ராம கோபாலன் மாதிரி யாராவது தேசபக்தரகள் குரல் கொடுத்தால் தேவலை.
Download As PDF
Bookmark and Share

Post Comment

கிரிக்கெட் எனும் தேசியப் புற்று நோய்


கிரிக்கெட் திருவிழா தொடங்கியாச்சு. இனி வரவிருக்கும் இரு மாதங்களிலும் நாட்டிலுள்ள பிரச்சனைகளையெல்லாம் புறந்தள்ளி நேத்தைக்கு எவன் ஜெயிச்சான், நாளைக்கு எவன் தோப்பான் என்ற அனல் பறக்கும் உரையாடல்களைக் கேட்டுத் தொலைக்கவேண்டும். முன்பு போல ஸ்கோர் எவ்வளவு எனத்தெரிந்து கொள்ள அதிகம் மெனக்கெடவேண்டியதில்லை. எடுபட்ட தூர்தர்ஷனை வைத்துக் கொண்டு ஒரு போட்டியைக் காண்பதற்குள் பைத்தியம் பிடித்துவிடும், 5 வது பந்தை வீசியவுடன் தொடங்கும் விளம்பரங்கள், அடுத்த ஓவரின் முதல் பந்தை வீசியபின்புதான் முடியும். அதாவது விளம்பரங்களுக்கிடையிலேதான் கிரிக்கெட் பார்க்க முடியும், மேலும், செய்திகள், மற்ற வழக்கமான நிகழ்ச்சிகள் தொடங்கும்போது கிரிக்கெட்டை மாற்றி விடுவார்கள். ஆனால் இப்போதோ வானொலியில் தொடர்ந்து அறிவிப்புகள், தொலைக்காட்சி, இணையம் அலைப்பேசி குறுந்தகவல், இதல்லாமல் திரையரங்கங்களில் வேறு போட்டிகளை ஒளிபரப்பப் போகிறார்களாம். இவ்வாறு பலவகையிலும் நமக்குத் தகவல்களை அள்ளித் தரும் வசதிகள். பரபரப்புச் செய்திகள் இல்லாமல் திண்டாடும் ஊடகங்கள் வண்டியை ஓட்டுவதற்கு கிரிக்கெட் துணை புரியும். தற்போதைய நிலவரத்தின்படி இந்தியாதான் உலகிலேயே மிகச் சிறந்த அணியென்றும், உலகக்கோப்பையை வெல்லத் தகுதிபடைத்த ஒரே அணியென்றும் கிரிக்கெட் இரசிகர்களிடம் ஊடகங்களால் வெறியேற்றி வைக்கப்பட்டுள்ளது. இங்கு உலகம் என்று நான் சொன்னது கிரிக்கெட் போட்டிகளில் விளையாடத் தகுதி பெற்ற 16 நாடுகளை மட்டுமே. ஒருவேளை இந்திய அணி தோற்றுப்போனால் துவண்டு போன இரசிகர்களுக்குத்தீனி போடுவதற்கும் தேற்றி மீண்டும் கிரிக்கெட் போதையில் வீழ்த்துவதற்கும் ஏப்ரல் மாதத்திலேயே ஐபிஎல் போட்டிகள் வரவிருக்கிறன. மூன்று மாதங்களாக இந்திய தேசிய உணர்வுடன் மூவண்ணங்களை முகரையில் பூசிகொண்டு இந்திய அணிக்கு ஆதரவளித்த ரசிகர்கள், சில நாட்களுக்குள் கூச்சமில்லாமல் தமது மாநில அணிக்காக இன உணர்வுகளுடன் பதட்டப்படவும், சீர்லீடர்ஸ் அழகிகளைக் காணவும் ஆயத்தமாகிவிடுவார்கள். ஆக இது நாட்டுப்பற்றுக்காக கிரிக்கெட் பார்ப்பது என்பதில்லை எனத் தெளிவாகத் தெரிகிறது. நிற்க! முதலிலேயே சொல்லிவிடுகிறேன், நானும் ஒரு உலகமகா கிரிக்கெட் பித்தனாக இருந்தவன். சிறுவனாக இருந்தபோது சூயிங்கங்கள் வாங்கினால் இலவசமாகக் கிடைக்கும், கிரிக்கெட் வீரர்களின் விபரங்களடங்கிய அட்டைகளைக் கட்டுக்கட்டாக வைத்திருக்கிறேன். எனக்குப் பிடித்ததே டெஸ்ட் போட்டிகள்தானென்றால் எவ்வளவு கொடூரமான இரசிகன் என்று கற்பனை செய்து கொள்ளவும். அதற்காக இதன் பேரால் நடக்கும் பித்தலாட்டங்களையெல்லாம ஆதரிக்க முடியுமா?



சோம்பேறி விளையாட்டு

முதலில் இந்தக் கிரிக்கெட் என்பதே சோம்பேறி விளையாட்டு என்பது அனைவருக்கும் தெரியும், இதற்கு பெரிய திறமையும், உடல் வலிமையும் தேவைப்படாதது, இதனால் உடல் வலுவும் கூடாது. ஆனால் மற்ற விளையாட்டுக்களுக்கு அப்படியல்ல. கைப்பந்து, கால்பந்து, ஹாக்கி, கூடைப்பந்த், ரக்பி போன்ற குழு விளையாட்டுக்களிலிருந்து டென்னிஸ், இறகுப்பந்து போன்ற தனிநபர் விளையாட்டுக்கள் வரையிலும் மிகவும் கடுமையாக உழைக்கவேண்டியிருக்கிறது. ஆனால் கிரிக்கெட் அப்படிப்பட்டதல்ல. அதனால்தான் விளையாட்டு வீர்ர்களுக்குரிய உடல் வலு இல்லாத நோஞ்சான்கள் முதல் தொப்பையை வைத்தே விளையாடிய இரணதுங்க வரை இதில் விளையாட முடிகிறது. வெறும் சாம்பார்சாதம் உண்ணும் நம்மாட்கள் அடிபின்னியெடுக்கிறார்கள், மலமாடுகள் போலிருக்கும் மற்ற நாட்டவர்கள் சொங்கித்தனமாக ஆடுவதேனோ என்றுதான் தெரியவில்லை. மேலும் இதில் அதிகமாக சிரமப்படுவது பந்து வீசுபவர்கள்தான், ஆனால் அதிகம் புகழடைவது என்னவோ மட்டையாளர்கள்தான். ஆரம்பகாலங்களில் மற்ற நாடுகளில் நேரத்தைக் கொல்லும் ஆட்டமாகவும், எந்தவித் உற்சாகமின்றியும் இருந்ததால் அதிகம் புகழ்பெறவில்லை. பிரிட்டனின் குடியேற்ற நாடுகளில் மட்டும் அவர்களால் விளையாடப்பட்டுக் கொண்டிருந்தது. முதலில் இந்தியாவிலும் ஹாக்கிதான் புகழ் பெற்று விளங்கியது, பிற்பாடுகளில் கிரிக்கெட் அதை விழுங்கியதோடல்லாமல், மற்ற புத்துணர்வூட்டும் விளையாட்டுகள் உட்பட அனைத்து விளையாட்டுக்களையும் விஞ்சி ஏகாதிப்பத்தியமாகி விட்டது இந்தக் கிரிக்கெட். குறிப்பாக கடைசி 20 வருடங்களுக்குள் இது நிகழ்ந்து விட்டது. இந்தியத் துணைக்கண்டத்தில்தான் கிரிக்கெட் வணிகம் சிறந்து விளங்குகிறது, அதற்கடுத்து வளைகுடா நாடுகளாக இருக்கலாம். ஆஸ்திரேலியாவிலும் ஓரளவிற்கு புகழ்பெற்றது இருப்பினும் பத்தோடு பதினொன்றாகத்தான் இருக்கிறது. இந்தியாவில் மட்டும்தான் இதற்கு இத்தனை புகழ். இதை விளையாடுபவர்கள் கடவுளுக்கு நிகராக புகழப்படுகிறார். ஒருவர் கடவுள் என்றே அழைக்கப்படுகிறார்.

வணிகமயமாக்கப்பட்ட விளையாட்டுக்கள்

விளையாட்டுபோட்டிகள் தொடங்கப்பட்டதே நாடுகளுக்கிடையேயான நல்லுறவுகள் வலுப்படவேண்டும் என்ற நோக்கம் இருந்தது. அந்நோக்கம் எப்படி நிறைவேறும் என்பதும் தெரியவில்லை. ஒலிம்பிக், கால்பந்து , என அனைத்தும் பெருந்தொழில் பன்னாட்டு நிறுவனங்களின் விளம்பரங்கள் மூலமாகத்தான் நடத்தப்படும் அளவுக்கு அவர்களின் கட்டுப்பாட்டிற்குச் சென்றுவிட்டது. விளம்பரங்கள் மூலமாகவும் முதலாளிகள் போட்டிகளை நடத்தியும் கோடி கோடியாக அள்ளுவதும், விளையாட்டுவீரர்கள் அவர்களின் விளம்பரத்தூதுவர்களாக மாறுவதும்தான் தொடர்ந்து நடக்கிறது. அவர்களுக்கு விளையாட்டுக்கள் மூலமாகக் கிடைக்கும் வரும் பணத்தை விடவும் விளம்பரங்கள் மூலம்தான் அதிகம் கிடைக்கிறது. மேலை நாடுகளில் கால்பந்தும், டென்னிஸும் இது போன்ற வீரர்களுக்கு வாய்ப்பளிக்கின்றன. இந்தியாவில் கிரிக்கெட். அதுவும் ஐபிஎல் என்ற பெயரில் வீரர்கள் ஏலத்திற்கு விடுவதை பெருமையாக வேறு செய்திப்படுத்துவது. எத்தனை ஊழல்கள், மேட்ச் பிக்ஸிங், சூதாட்டம் எனப்பல வழக்குகள் வெளிவந்த பின்னும், (கடந்த உலகக்கோப்பைப் போட்டியின்போது பாகிஸ்தான் பயிற்சியாளராக இருந்த பாப் உல்மர் கொல்லப்பட்டார்.) இன்னும் எந்த மாற்றமும் இல்லை. ரசிகனுக்குக் கிரிக்கெட் இருந்தால் போதும் முதலாளிகளுக்கு கல்லாக் கட்டினால் போதும். ரசிகனோ அவர்கள்  விரும்பியபடி உலகக் கோப்பையில் இந்தியனாகவும், ஐபிஎல் போட்டிகளில் பிராந்திய அணிகளுக்காகவும் கைதட்டிக்கொண்டிருப்பான். சக்தே இன்டியா ! ஜெய் ஹோ! என்றெல்லாம் படம் காட்டிவிட்டு அப்படியே மாறி மும்பை இண்டியன்ஸ் கமான் என்பான். 

கிரிக்கெட் ஊடகங்களால் ஊதிப்பெருக்கப்பட்ட விதம்

கிரிக்கெட் சோம்பேறித்தனமாக விளையாடப்படும் விளையாட்டு எனினும் அது பலமுறையான வழிமுறைகளைப் புகுத்தியும் வெறியேற்றப்பட்டும் இந்தியர்களின் நாடித்துடிப்பாக மாற்றப்பட்டுள்ளது. நாட்டில் அதிகம்பேர் கவலைப்படும் பிரச்சனையாக ஊதிப்பெருக்கப்பட்டுள்ளது. 1983 - ல் இந்தியா உலகக் கோப்பையை வென்றபோது வெறும் பெட்டிச் செய்தியளவுக்குத்தான் செய்திகள் வெளியிடப்பட்டதாம். தற்போது தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவர் கேரம் போட்டியில் வென்றால் எந்த அளவுக்கு வருமோ அந்தளவுக்குத்தான். ஆனால் தற்போது பள்ளிச் சிறுவர்கள் விளையாடும் போட்டிகள் கூட பெரிதாக வரும் பாருங்கள் புரியும். தொலைக்காட்சிகள் பெருகி நேரடி ஒளிபரப்புகள் வந்த பின்பு இன்னும் அதிகமாகி விட்டன. 

எந்த மொழியாகட்டும் 3 நிமிடங்களே வாசிக்கப்படும் தலைப்புச் செய்திகளில் கிரிக்கெட் பற்றி ஒரு செய்தியிருக்கும், உலகக்கோப்பைதான் என்றில்லை, ஏதாவதொரு நாட்டிற்கு சுற்றுப்பயணம் செல்வதாக இருந்தாலும், புதிதாக ஒருவர் இடம் பெற்றிருந்தாலும் அதை குறிப்பாக சொல்வார்கள்.

கிரிக்கெட் மேட்ச் பிக்ஸிங், ஐபிஎல் ஊழல்கள் பற்றித் தலையங்கங்கள் எழுதும் நாளிதழ்கள், வார இதழ்கள் கிரிக்கெட் வீரர்களின் மட்டையை உயர்த்தும் புகைப்படங்களைத் தவறாமல் வெளியிடுகின்றன. 

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு செய்திகளை கவனமாக நம் மண்டையில் திணிப்பார்கள். இன்று இந்திய அணி ஒரு குறிப்பிட்ட  நாட்டிற்குப் பயணம், இன்று இந்திய அணி போய்ச் சேர்ந்தது, இன்று மாலையில் இந்திய வீரர்கள் வலைப்பயிற்சியில் ஈடுபட்டனர், டெஸ்ட் போட்டிகள் நாளை துவக்கம், ஒருநாள் போட்டிகள் அடுத்த மாதம் தொடக்கம், இத்தனை ஒருநாள் போட்டிகள், இத்தனை 5 நாள் போட்டிகள், 20/20 போட்டிகள் இப்படியாக இவர்கள் தேடித்தேடிச் சொல்வார்கள்.

ஒரு போட்டி முடிந்ததும் வெற்றி, அல்லது தோல்விக்கான காரணங்களை அணித்தலைவர் விளக்குவார்

 அன்றைய போட்டியில் ஆட்ட நாயகனின் படம் அன்றைய நாளிதழ்களின் முதல் பக்கத்தில் கால்வாசிப்பகுதியை ஆக்கிரமித்திருப்பார். வெற்றி பெற்றால் வீரர்களை மிதமிஞ்சிப் புகழ்வதும், தோற்றால் அவர்களின் பரம்பரையையே திட்டி இவனெல்லாம் எதுக்கு விளையாடறான் ? என்று கேவலமாகத் திட்டுவதும் நடக்கும்.


சென்ற முறை உலகக் கோப்பையில் தோற்றவுடன் இந்திய கிரிக்கெட் வீரர்களின் படங்களெல்லாம் மீன் விற்பது போலவும், பால் விற்பது, காய்கறிகள் கொண்டு செல்வது போலவும் மாற்றம் செய்து வெளியிடப்பட்டன. அவர்களைக் கேவலப்படுத்துவதற்காம். மீன்விற்பவனும், பால்காரனும், கீரைவிற்பவளும் கேவலமானவர்கள்தானே கிரிக்கெட் கடவுள்களுடன் ஒப்பிடுகையில். 

ஏதாவது தவறான முடிவுகளை நடுவர்கள் அறிவித்து விட்டால் போது ஒப்பாரி வைத்து விடுவார்கள், ஏதோ இந்தியாவுக்கே அவமதிப்பு நிகழ்ந்து விட்டது போல. 

இரு வருடங்களுக்கு முன்பு ஆஸி வீரர் சைமண்ட்சுக்கும், ஹரபஜனுக்கும்  ஆடுகளத்தில்  நடந்த வாக்குவாதத்தை வைத்து இணையத்தில் வந்த நகைச்சுவைத்துணுக்குகள் சைமண்ட்சின் உருவமைப்பைக் கேலி செய்து இருந்தன, பத்தாயிரம் ஜாதிகளை வைத்துக்கொண்டு ஆஸ்திரேலியனின் இனவெறியையும் இவர்கள் எதிர்த்தது கேவலமான நகைச்சுவை.

கிரிக்கெட் வீரர்கள் மிகவும் பிரபலமாக இருப்பதால் விளம்பரங்களில் அதிகம் வருகின்றனர். ஆணுறையைத் தவிர அத்தனையும் மாட்டிக் கொண்டு விளம்பரத் தூதுவர்களாக பல்லை இளிக்கின்றனர், முக்கியமாக கோக் பெப்ஸி போன்ற கொடூரமான மென்பானங்கள் தொடங்கி, பல்வேறு அழகு சாதனப் பொருட்கள் வரை பாலிவுட் அழகிகளுடன் திரையிலும் தோன்றி வாங்கச் சொல்கிறார்கள்.

ஏதாவது நிறுவனத்துடன் இத்தனை கோடிகளுக்கு ஒப்பந்தம் செய்திருக்கிறார் என்பது முக்கியச்செய்தியாக வெளியிடுகிறார்கள்.

இன்னும் சில துணுக்குச் செய்திகள்:

ஒரு முறை சென்னையில் ஏதோ பள்ளிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டியில் இரு 12 வயதுச் சிறுவர்கள் 500 ரன்களுக்கு மேல்  அடித்து விட்டார்கள், அந்த உலக சாதனைதான் அன்றைய வாரத்தின் ஆனந்த விகடனின் அட்டைப்படச் செய்தி.

தமிழ்நாட்டின் நச்சுக்கிருமியான சன் தொலைக்காட்சியில் ஒரு முறை விளையாட்டுச் செய்தியில் ஒரே ஒரு செய்தி சொன்னார்கள். அது என்னவென்றால் வி.வி.எஸ். லக்ஸ்மணின் திருமணம். 

டைம்ஸ் நவ் என்று நினைவு, அதில் டோனி தன்னுடைய நீளமான தலைமுடியை வெட்டிக்கொண்டதை தனிச் செய்தியாகப் போட்டு குழந்தைகளிடம் கருத்துக் கேட்டார்கள். அதில் ஒரு பாப்பா "தீபிகா ஆன்ட்டி கே லியே " என்றது. 

மற்றபடி கிரிக்கெட் வீரர்களுடன் ஏதாவதொரு நடிகையை இணைத்துக் கிசுகிசுவை பரப்புவது எப்போதும் நடக்கும். தீபிகா படுகோன், யுவராஜ் சிங்கிற்கு அல்வா கொடுத்ததற்காகவும் நாம் கவலைப்படவேண்டுமல்லவா! மொத்தமாகப் பார்த்தால் திரை நட்சத்திரங்களைவிடவும் கிரிக்கெட் வீரர்களை பிரபலமாக்குவதில் ஊடகங்கள் முனைப்புடன் உள்ளன. அவர்கள் உச்சத்திலிருக்கும் சில வருடங்களில்தான் தமது விளம்பரங்களில் கொடிகட்டிப் பறப்பார்கள். அவர்களுக்கும் மவுசு போனால் மீண்டுமொருவரை கடவுளாக்குவார்கள் இந்த முதலாளிகள்.

இந்த பில்ட் அப்கள் போதாதென்று போட்டி நடக்கும் போதும் பல சுவாரசியங்கள், பந்து வீசிவிட்டுத் திரும்பி வருவதற்குள் பலகோணங்களில் ரீப்ளேக்கள், இருவர் முறைத்துக் கொண்டால், நமது திரைப்பட நாயகர்கள் முறைத்துக் கொள்வது போல வீர சாகசமாகக் காட்டுவது இவர்கள் பேசும் கேவலமான திட்டுக்களைத் திரும்பத் திரும்பக் காட்டுவது இதைத்தான் கிரிக்கெட் ரசிகர்கள் திரும்பத் திரும்பப் பேசி மகிழ்வது. சரி நாட்டுக்காக விளையாடும்போதுதான் இவ்வளவு உணர்ச்சிவசப்பட்டுக் குதிக்கிறானுங்க அப்படின்னு பாத்தா ஐபிஎல் போட்டிக்கும் அதே ரியாக்சன்தான் குடுக்கிறானுங்க(ஹர்பஜன், ஸ்ரீசாந்த் என்ற இரண்டு கருமாந்தரங்கள் செய்யும் சேட்டைகள் கொலவெறியை வரவழைக்கும், இன்னொண்ணு ஆண்ட்ரே நெல்.)

போட்டி நடக்கும் போது வர்ணனை செய்யும் முன்னாள் வீரர்கள் ஏதாவது,  ஆடும் வீரர்களின் பழைய ஆட்டங்களின் பெருமைகளைப் பேசிக்கொண்டே இருப்பார்கள், இடையிடையே great shot, tremendous, superb, fantastic bowl, good to watch, sensational எனப்பல உசுப்பேத்தும் சொற்களைச் சொல்லிக்கொண்டேயிருப்பார்கள்,இவர்களின் பாராட்டுரைகள் கலைஞரின் பாராட்டு விழாக்களுக்கு நிகரானது.  இடையிடையே ரசிகர்கள் ஆர்ப்பரிப்பதையும் காட்டி கொஞ்சம் சத்தம் அதிகமாகவும் வைப்பது தொலைக்காட்சியில்  பார்ப்பவர்களுக்கு உற்சாகமளிக்கும்.

20 வது ஒவரிலிருந்து 40 வரை சலிப்புத் தட்டும் நேரம், கேமராக்கள் அழகிய இளைஞிகளைத் தேடித் தேடி படம்பிடிக்கும்.

என்னவென்று தெரியாமலே பாகிஸ்தானை வெறுப்பதற்கு இந்தியர்களும், இந்தியர்களை வெறுப்பதற்கு பாகிஸ்தானியரும் பயிற்றுவிக்கப்பட்டுள்ளனர். பாகிஸ்தானை ஜெயித்தால் போதும், உலகக்கோப்பையே தேவையில்ல என்றும் சில வீர வசனங்கள், இந்திய அணிக்காக நடத்தப்படும் யாகங்கள், பாகிஸ்தானுக்காக நடத்தப்படும் தொழுகைகள் என பலவகைகள்.

இருப்பதிலேயே "ரொம்ப அதிகம்" எனப்படுவது கிரிக்கெட்டின் சாதனைகள்தான்

அதாகப்பட்டது, மற்ற விளையாட்டுக்களில் எத்தனை கோல்கள், வெற்றிகள், பட்டங்கள், பதக்கங்கள், தரவரிசை என சிலவற்றை மட்டுமே சாதனைகளாகக் குறிப்பிடுவார்கள் ஆனால் கிரிக்கெட்டில் மட்டும்தான் என்ன செய்தாலும் சாதனை, சாதனை என்பது ஊடகங்களில் முக்கியச் செய்தியாவதற்கும், நாளிதழ்களில் முதல் பக்கங்களில் மூஞ்சி வருவதற்குமுரியது.

அதிலிருந்து சில துளிகள்

5 விக்கெட், 100 ஓட்டங்கள், இந்த வருடத்தில் அதிக ஓட்டங்கள், சிறந்த துவக்க ஆட்டக்காரர், பந்து வீச்சாளர், அதிக ஆட்டநாயகன் விருதுகள், அதிக முறை ஆட்டமிழக்காமல் இருந்தது, குறிப்பிட்ட அணியுடன் அதிக ஓட்டங்கள், அதிக விக்கெட்கள், இந்த ஆடுகளத்தில் அதிக ஓட்டங்கள், வெளிநாட்டில் அதிக விக்கெட் எடுப்பது, வெளிநாட்டில் அதிக சதங்கள், ஒரு தொடரில் அதிக சதங்கள், ஒரே அணியுடன் அதிக சராசரிகள் இத்தனாவது விக்கெட்டிற்கு அதிக ஒட்டங்கள் பார்டனர்ஷிப், என்று இன்னும் பல வகையில் "சாதனைகள்" பெட்டிச் செய்தியில் சிறப்பாக வெளியிடப்படும், இதற்கு முன் விளையாடிய போட்டிகள் வெற்றி தோல்வி சராசரி என என திகட்டத் திகட்ட வெளியிடப்படும் செய்திகள்

மேலே சொன்ன அனைத்திற்கும் முன்பும் "உலகத்திலேயே" என்பதை சேர்த்துக் கொள்ளவும், கிரிக்கெட் விளையாடும் முக்கியமான 10 நாடுகள்தான் உலகம். உலகத்திலேயே கொம்பர்களான அமெரிக்கா, சீனா, ஜப்பான், ருஸ்யா, ஐரோப்பிய நாடுகள், லத்தீன் அமெரிக்க நாடுகள் என முக்கால்வாசிப்பேர் கண்டுகொள்ளாத, இல்லாத கிரிக்கெட்டில் எல்லாமே உலக சாதனைகள்தான்.

இதனால்தான் டோனிக்குக் கோவில் கட்டும் செய்திகளும், டெண்டுல்கரின் நூல் 35 இலட்சத்திற்கு விற்பனை செய்ய்ப்படுவதும், இந்தியாவின் "தேசிய" விளையாட்டான ஹாக்கியின்  வீரர்கள கிரிக்கெட் போலன்றி தாங்கள் மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்தப்படுவதாகப் பட்டினிப்போராட்டம் நடத்தியதும் தொடரும்.

சென்றமுறை இந்தியாவும் பாகிஸ்தானும் முதல் சுற்றுக்களில் வெளியேறியதால் மிகப்பெரும் விளம்பரங்கள் சரிந்திருக்கும், அதை மூன்று வருடங்களாக ஐ பி எல் போட்டிகளை நடத்தி பல மடங்கு அள்ளியிருப்பார்கள் வீரர்களும், முதலாளிகளும். போகிறபோக்கைப் பார்த்தால் இந்தியா உலகக்கோப்பையை வாங்கிவிட்டால் இவர்களின் லோலாய் தாங்கமுடியாதே! 4 தலைமுறைக்குச் சேர்த்து அள்ளிவிடுவார்கள். 

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் எல்லா கிரிக்கெட் நாடுகளையும் அச்சுறுத்தும் அளவு வளர்ந்துள்ளது, பிற்கென்ன இந்தியா கிரிக்கெட் வல்லரசுதானே !

மீனவர் ,தேர்தல், விலைவாசி உயர்வு, 50 கோடிபேர் பட்டினி, விவசாயம், ஈழம், வேலையில்லாத் திண்டாட்டம், ..................... வழக்கம்போலவே மறந்து விடவேண்டும்!  உலகப்போர் நடக்கும்போது உள்ளூர் பிரச்சனைகள் எதற்கு ? இது நமது தன்மானப் பிரச்சனை , பிள்ளைகளின் படிப்பு நாசமாகட்டும். இல்லத்தரசிகளுக்கு நெடுந்தொடர்கள் பறிபோகும், தங்கச்சிகளுக்கு புதுப்பாடல்கள் பார்க்க முடியாது, குழந்தைகளுக்கு சுட்டி டீவி பார்க்க முடியாது, கிரிக்கெட் பார்த்தால்தான் மோட்சம் கிடைக்கும்.  


Download As PDF
Bookmark and Share

Post Comment