எப்படா ஏதாவது பதக்கம் கிடைக்கும் என்று கொட்டாவி விட்டுக் கொண்டு காத்திருக்க வேண்டிய நிலையில் இருக்கிறது இந்தியர்களின் நிலை. அதே நேரம் சீனர்கள் அமெரிக்காவை விஞ்ச முடியாதே என நகத்தைக் கடித்துக் கொண்டிருக்கிறார்கள். இங்கு ஏன் சீனாவையும் இந்தியாவையும் ஒப்பிடுகிறேன் என்றால் இவைகளிரண்டும்தான் வருங்கால வல்லரசு என்கிறார்கள். இரண்டு பேருமே தம்மை வல்லரசு என்று காட்டுவதற்கு ஆங்காங்கே படம் காட்டி வருகிறார்கள். இந்நிலையில் சீனா கிட்டத்தட்ட விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவால் எட்ட முடியாத இடத்தை எட்டியிருக்கிறது. உலகிலேயே முதலிடம் ஏறக்குறைய. இந்தியாவால் ஏன் வெல்ல முடியவில்லை என்று புரியாதது போலவே கேட்கிறார்கள். அல்லது அரசியல் வாதிகளைச் சாடுகிறார்கள். ஏன் வாங்க முடியவில்லை அல்லது என்ன காரணம் என்றால் அதுதான் இந்தியா. நாட்டை ரஸ்யாக்காரனுக்கும், அமெரிக்காக்காரனுக்கும் விற்பதில் இந்தியாதான் தங்கப்பதக்கம் வாங்கியிருக்கும். ஆனால் விளையாட்டில்தான் பாவமாக இருக்கிறது.
நேற்றைய செய்திகளில் ஹாக்கி இந்தியாவின் தேசிய விளையாட்டாக அங்கீகரிக்கப்பட வில்லை என்று வெளியாகியிருந்தது. இத்தனை வருடங்களாக இதைக்கூட செய்யாமல் இருப்பவர்களால் வேறு என்னவெல்லாம் செய்திருப்பார்கள் என்பதைத்தான் கற்பனை செய்ய முடியவில்லை. ஹிந்தியை தேசிய மொழி என்றே பலரும் நினைத்திருந்தார்கள். ஆனால் அப்படி ஒரு குறிப்பும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் இல்லாத போதும், ஒரு அலுவல் மொழியையே தேசிய மொழி போலப் பாவித்து அதைத் திணித்து வருகின்றது நடுவண் அரசு. ஆனால் 60 வருடங்களுக்கு முன்பே இந்தியாவின் பெருமையை உயர்த்திய ஹாக்கியை இன்னும் மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் அணுகி வருகின்றது.
1928-முதல் 1956 வரையிலான 18 வருடங்களில் இந்தியாவின் புகழ் ஹாக்கியில் உயரத்தில் இருந்தது 6 தங்கப்பதக்கங்களை வாங்கியிருந்தது. 24 ஒலிம்பிக் போட்டிகளில் ஒரு முறை கூட தோற்காமலிருந்தது. அதே இங்கிலாந்துக் காரர்கள் அறிமுகப் படுத்திய கிரிக்கெ இன்று எங்கிருக்கிறது என்பதைப் பார்க்கவும்.
எழவெடுத்த கிரிக்கெட்டுக்கு வாரி வாரி வழங்கும் பணத்தைக் கொஞ்சமாவது இந்த ஹாக்கியை வளர்ப்பதற்குப் பயன்படுத்தினால்தான் என்ன. இது நாள் வரையில் ஊர்பேர் தெரியாத வீரர்களெல்லாம் ஒலிம்பிக்கில் பதக்கம் வாங்கிய பின்னர்தான் ஊடகங்களில் தெரிய வருகிறார்கள். கிரிக்கேட்டுக்கு மட்டும் விளையாடும் முன்பே அணியில் சேர்க்கப்பட்டுள்ள விவரம் நாடு முழுவது செய்தியாக்கப்படுகிறது. ஹாக்கியைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். உண்ணாநிலைப் போராட்டம் நடத்தினார்கள். ஆசியக் கோப்பையை வென்ற போது ஊக்கத்தொகையாக 25000 ரூபாயை அளித்து அவமானப்படுத்தினார்கள். வில்வித்தையில் சாதனை செய்த பெண் வயிற்றைக் கழுவ தனது பயிற்சியாளரால் பரிசளிக்கப்பட்ட வில்லை விற்றுப் பிழைக்க வேண்டிய நிலை. இன்னொருவர் தன்னைப் பெண்ணாக நிரூபிக்க வேண்டிய நிலை. கபடியில் வென்றவர்களுக்கு மாற்றுடையில்லாமல், அவர்கள் தங்கியிருந்த விடுதியின் பணத்தைக் கூட கட்டாத நிலையில் இந்திய விளையாட்டுத் துறை இருக்கிறது.
இவையெல்லாம் ஒரு "ஏழை" நாட்டின் சாபக்கேடாகவோ சாதாரணமாகவோ இருந்துவிட்டுப் போகட்டும் என விட்டு விடலாம். ஆனால் கிரிக்கெட்காரனுக்கு கொடுக்கப்படும் சலுகைகளைக் கேட்டால்தான் பற்றிக் கொண்டு வருகிறது.
தொடர்புடைய பதிவு
இந்தியான்னா இந்தியாதான் !!
யாரு ஜெயிச்சா நமக்கு என்ன? நாம் தமிழர்கள் இந்தியர்கள் கிடையாது
பதிலளிநீக்குஅதுவும் சரிதான். தமிழர்களும் இந்தியா சார்பாகத்தானே விளையாட வேண்டியிருக்கிறது. தமிழ்நாட்டின் சார்பில் விளையாட முடியாது. இந்தியா எடுக்கும் நடவடிக்கைகள் தமிழ்நாட்டையும் சேர்த்துத்தான் பாதிக்கிறது.
நீக்கு