நாட்டுப்பற்று என்றால், டெண்டுல்கரின் சாதனைகளைப் பகிர்ந்து கொள்வது, அப்துல்கலாமின் பொன்மொழிகளைப் பகிர்வது, மைக்ரோ சாஃப்ட் நிறுவனத்தில் அதிக இந்தியர்கள் பணிபுர்வது, இந்திய ராணுவத்தின் புகைப்படங்களைப் பகிர்ந்து கொள்வது, இந்தியா பல்லாயிரம் கோடி செலவில் செயற்கைக் கோளை ஏவினால் பெருமை கொள்வது, கிரிக்கெட்டில் வென்றால் பெருமை கொள்வது, அவ்வப்போது ஜெய் ஹிந்த் போடுவது இவைகளா ?
ஒரு புகைப்படத்தை ஃபேஸ்புக்கில் காண நேர்ந்தது. ஒலிம்பிக் அணிவகுப்பின் போது இந்திய அணியினர் நடந்து செல்வது போல இருந்த அதில் சானியா சிரித்தபடி சென்று கொண்டிருந்தார். அதில் நடந்து சென்ற அனைவரின் கையிலும் இந்தியக் கொடி இருந்தது. சானியாவின் கையில் அது இல்லை. இதை வைத்து சானியாவைச் சாடி இருந்தனர். முதலில் இது போட்டோஷாப்பில் வைத்து மாற்றப்பட்ட படம் என்பதால் இது ஒரு பொருட்டாகவே கருதப்பட வேண்டியதில்லை. அப்படியே அவர் கையில் கொடி இல்லாவிட்டால் என்ன குடியா முழுகிப் போய்விடும் ?
ஒரு புகைப்படத்தை ஃபேஸ்புக்கில் காண நேர்ந்தது. ஒலிம்பிக் அணிவகுப்பின் போது இந்திய அணியினர் நடந்து செல்வது போல இருந்த அதில் சானியா சிரித்தபடி சென்று கொண்டிருந்தார். அதில் நடந்து சென்ற அனைவரின் கையிலும் இந்தியக் கொடி இருந்தது. சானியாவின் கையில் அது இல்லை. இதை வைத்து சானியாவைச் சாடி இருந்தனர். முதலில் இது போட்டோஷாப்பில் வைத்து மாற்றப்பட்ட படம் என்பதால் இது ஒரு பொருட்டாகவே கருதப்பட வேண்டியதில்லை. அப்படியே அவர் கையில் கொடி இல்லாவிட்டால் என்ன குடியா முழுகிப் போய்விடும் ?
தற்போது ஒலிம்பிக் போட்டிகள் நடை பெற்று வருவதால் நாட்டுப்பற்றுணர்வு தூசிதட்டப்பட்டுக் கிளப்பப் பட்டுள்ளது. தற்போதைய நிலையில் பதக்கம் பெறும் நபர் கொண்டாடப் படுவார். போட்டிகள் முடிந்தவுடன் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு கண்டுகொள்ளப்பட மாட்டார். அவருக்குத் திறமையிருந்தால் ஏதாவது நிறுவனத்தின் விளம்பரத் தூதுவராக மாறினால் ஊடகங்களிலும் அந்நிறுவனத்தின் பொருட்கள் விற்கும் அங்காடிகளிலும் அங்கங்கே அவரது முகத்தைக் காட்டுவார்கள். ஏனென்றால் நாட்டுப் பற்றை வணிகம் செய்யத் தோதானவர்கள் கிரிக்கெட் வீரர்கள்தான்.
இந்த நாட்டுப்பற்றுதான் என்னவென்று எனக்குப் புரியவில்லை. இந்தியாவின் நாட்டுப்பற்று எனப்படுவது என்னவென்றால் முதலில் வருவது பாகிஸ்தானை வெறுப்பது(அதே போர்வையில் முஸ்லிம் வெறுப்பு), சீனாவை வெறுப்பது. அதே பாகிஸ்தானியாக இருந்தால் இந்தியாவை வெறுப்பது பாகிஸ்தானிய தேசப்பற்றாக இருக்கும். (அமெரிக்க தேசபக்தி என்றால் ரஸ்யாவை வெறுப்பது. இலங்கை தேசபக்தி என்றால் தமிழர்களை வெறுப்பது.) சொந்த நாட்டை நேசிப்பதை விட எதிரி எனக் கருதப்படும் நாட்டை வெறுப்பது, சாடுவது, நக்கலடிப்பது நாட்டுப்பற்றாக இருக்கிறது. பிறகு பொத்தாம் பொதுவாக அரசியல்வாதிகளை வெறுப்பார்கள். அதே சமயம் அம்பானியைப் போற்றுவார்கள். ஏனென்றால் அவர் இந்தியாவின் பெருமையை உயர்த்தியவர் என்பார்கள். இது போன்ற பெரும் பணக்காரர்கள் என்றாலே அவர்கள் தாமிருக்கும் நாட்டின் ஏழை பாழைகளை சுரண்டித்தான் சொத்து சேர்க்க முடியும். அரசாங்கத்தையே ஆட்டிப் படைப்பவர்கள் இவர்கள். அமெரிக்காவின் வால்மார்ட் என்றால் சிறிய வணிகர்கள் எத்தனையோ பேரின் வயிற்றலடித்துத்தான் அவர்கள் ஆதிக்கம் செய்ய முடிகிறது. வால் மார்ட் இந்தியாவிற்கு வந்தால் பல வணிகர்கள் தூக்கில்தான் தொங்க வேண்டும்.
அதே போல்தான் ரிலையன்ஸ் ஃப்ரெஷ் வந்த பிறகு எத்தனை தள்ளுவண்டிக்காரர்களுக்கு பிழைப்பு போனது என்பது தெரியாது. ஆனால் இவர்கள்தான் முன்மாதிரிகளாகக் கொண்டாடப்படுகிறார்கள். இந்தியப்பொருளாதாரத்தைக் கையில் வைத்திருக்கும் இவர்கள் இந்தியப் பொருளாதாரத்தை உயர்த்தியவர்களாகக் கொண்டாடப் படுகிறார்கள்.
அடுத்ததாக கிரிக்கெட் காரர்கள் நாட்டுப் பற்றின் அடையாளமாகக் கொண்டாடப் படுகிறார்கள். முதலில் விளையாட்டுப் போட்டிகள் என்பவையே நட்புணர்வை வளர்ப்பதற்காகத்தான் நடத்தப்படுகின்றன. ஆனால் உண்மையில் எதிரி நாட்டுடன் நடக்கும் போரைப் போலவே சித்தரிக்கப்படுகின்றன. வணிக நோக்கில் திட்டமிட்டு விளம்பரப்படுத்தப்படுகின்றன. நாடுகளுக்கிடையே நடக்கும் போட்டிகளை விட ஐபிஎல் போட்டிகள் பிரபலமாக இருப்பதே இப்போலி நாட்டுப்பற்றின் முகத்திரையைக் கிழிக்கிறது. மேற்கத்திய நாடுகளில் கிரிக்கெட்டுக்குப் பதிலாக கால்பந்துப் போட்டிகள். கிரிக்கெட்டில் வெற்றி பெற்றால் ஏதோ இந்தியாவே வென்று விட்டது என்கிறார்கள். ஒவ்வொரு முறையும் உலக அழகிப் போட்டிகள், பிரபஞ்ச அழகிப்போட்டிகள் தவறாமல் வெளிச்சம் கொடுக்கப்பட்டு காட்டப்படுகின்றன. இந்திய அழகிக்கு இம்முறை இத்தனாவாது இடமே கிடைத்தது என்று உச் கொட்டுகிறார்கள். இதில் தோற்றதற்கெல்லாம் இந்தியர்களை வருத்தப்பட வைக்கிறார்கள். வென்று விட்டாலோ பெருமைப்படச் சொல்கிறார்கள்.
கிரிக்கெட் பற்றி சொல்லும் போதெல்லாம் எதற்கெடுத்தாலும் உலகிலேயே என்ற சொல்லை முன்னால் போட்டுக் கொள்கிறார்கள். உலகிலேயே யாரும் செய்யாத சாதனையைச் செய்து விட்டார் பெருமைப்படுங்கள் என்கிறார்கள். டெண்டுலகர் சொன்னார். எனது சாதனையை ஒரு இந்தியர் முறியடிக்க வேண்டும். இப்படிச் சொல்வதன் மூலம் தனது இந்தியப் பற்றைக் காட்டிக் கொள்கிறார். ஆனால் இவரே ஐபிஎல் போட்டிகளில் கலந்து கொள்கிறார். நான் இந்தியாவிற்காக மட்டுமே விளையாடுவேன் என்று சொல்லவில்லை. எல்லா நாட்டின் நிறுவங்களின் தயாரிப்புக்களையும் விளம்பரம் செய்கிறார். ஒப்பந்தம் செய்கிறார். ஆனால் இவரையே ஒருமுறை இந்தியக் கொடியின் நிறத்திலிருந்த கேக்கை வெட்டியதால் இந்தியக் கொடியை அவமானப்படுத்தி விட்டார் என்று பிரச்சனை செய்தார்கள். இரண்டு நடிகர்களை எதிர் துருவங்களாக நிறுத்தி தொடர்ந்து விளம்பரப்படுத்துவதன் மூலம் அவர்களுக்கான சந்தையை திரைப்பட முதலாளிகள், ஊடகங்கள் அதிகமாக்கி அதன் மூலம் தானும் இலாபமீட்டுகிறார்கள். ஒரு நடிகனின் படம் தோல்வியடைந்தால் எதிர்நடிகனின் ரசிகர்கள் மகிழ்வதும், தன்னுடைய விருப்ப நடிகனின் படம் வென்றால் மகிழ்வதும் அடிப்படையே எந்த ஒரு இல்லாவிட்டாலும் தொடர்ந்து நடக்கிறது.
இந்த நாடுகள் எனப்படுகின்றவையே பிரிட்டிஷ் காரனால் பிரித்தும், சேத்தும் வைக்கப்பட்டுக் கீறப்பட்டக் கோடுகள்தான். இந்த எல்லைகள்தான் நாடுகளாக அறியப்படுகின்றன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு பெருமை பேசிக்கொள்கிறார்கள். ஒரு முறை பாகிஸ்தானிய இணையதளமொன்றில் பார்த்தது நினைவிருக்கிறது. சிந்து சம்வெளி நாகரிகம் கண்டறியப்பட்ட பகுதி தற்போது பாகிஸ்தானியர் வசமிருப்பதால், பாகிஸ்தான் நாகரிகம்தான் உலகிலேயே சிறந்தது, பழமையானது என்ற வகையில் எழுதியிருந்தார்கள். இதுமாதிரியான கதைகளை தமிழ்த் தேசியம், இந்துத்துவம் ஆகியவற்றைப் பரப்புகிறவர்களும் தங்கள் நோக்கத்திற்கேறப் வளைத்தும் திரித்தும் பயன்படுத்தி வருகின்றனர். நானும் கொஞ்ச காலம் இந்தப் போலி நாட்டுப் பற்றில்தான் மூழ்கிக் கிடந்தேன். அதாவது ஒரு போட்டியில் பாகிஸ்தானும், ஆஸ்திரேலியாவும் விளையாடும் போது, ஒரு இந்தியன் பாகிஸ்தான் தோற்க வேண்டுமென நினைத்தால் அது இந்திய தேசபக்தியாகாது, அது பாகிஸ்தான் வெறுப்பு மட்டுமே.
இந்த நாட்டுப்பற்று உண்மையில் கடைப்பிடிக்க முடியாதது. எல்லா நாடுகளுமே பிறரைச் சார்ந்துதான் இருக்கின்றன. இவ்வகையான நாட்டுப்பற்றைப் பின்பற்றுகிறவர்களின்படி பார்த்தால், வெளிநாடுகளுக்குப் பிழைக்கச் செல்கிறவர்கள், படிக்கச் செல்கிறவர்கள், வேலை கிடைத்துச் செல்கிறவர்கள் தேசத்துரோகிகள்தான். ஃபேஸ்புக்கில் இன்னொரு பகிர்வும் உலா வருகிறது, இது 1950 காலத்து ஏகாதிபாத்திய எதிர்ப்பு பாணியிலிருந்தது. அதாவது இந்தியத் தயாரிப்புகளை வாங்குங்கள், வெளிநாட்டு தயாரிப்புக்களை வாங்காதீர்கள் என்று. எடுத்துக்காட்டாக பாரதி ஏர்டெல்லை ஆதரியுங்கள், வோடஃபோனைப் புறக்கணியுங்கள் என்று. சரி அப்படியே இந்தியத் தயாரிப்புக்களை ஆதரித்தாலும், அந்த நிறுவனம், அதன் முதலாளி பணக்காரனாகலாம். சராசரி இந்தியனுக்கு ஒரு நன்மையுமில்லை. இந்தியாவின் பொருளாதாரத்துக்கும் வளர்ச்சியில்லை. அதிருக்கட்டும், இதை அப்படியே வெளிநாட்டில் இருப்பவர்கள் இந்தியத் தயாரிப்புக்களுக்கு எதிராகச் செய்தால் இந்திய தேசபக்தர்கள் என்ன செய்வார்கள்.
ஒரு பொருள் தேவை கருதித்தான் ஏற்றுக் கொள்வதா நிராகரிப்பதா என்று பார்க்க வேண்டுமே தவிர எந்த நாட்டிலிருந்து வருகிறதா என்றா பார்க்க முடியும். புற்று நோய்க்கான மருந்து அமெரிக்காவிலிருந்து வருகிறது. அதை ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் வால்மார்ட்டையோ, கோக், பெப்சி மற்றும் நொறுக்குத்தீனி ஆகிய வற்றை ஏற்றுக் கொள்ளாம எதிர்க்க வேண்டும். ஏனென்றால் ஒரு மருந்து கிடைக்காத பட்சத்தில் ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் பின்னைய பொருட்கள், இங்கு ஏற்கெனவே பல பேருக்கு வாழ்வளித்து வரும் தொழில்களை அழித்து, அதைனைச் சார்ந்தவர்களையும் அழித்து, ஒரு புதிய நுகர்வுக் கலாச்சாரத்தை நிறுவி, இயற்கையையும் பாழாக்கும். பல ஆண்டுகளுக்கு முன்பு தேநீரை பிரிட்டிஷார் அறிமுகப்படுத்தியபோது அவை போதைப் பொருட்கள் என்று கருதி எதிர்க்கப்பட்டன.
எல்லா நாட்டு அரசும் பணக்காரனுக்கு ஆதரவாகவும் ஏழைகளுக்கு எதிராகவும்தான் இருக்கின்றனர். எல்லா நாட்டிலும் ஏழைகள்தான் சிரமப்படுகின்றனர். பட்டினியால் வாடுகின்றனர். எல்லைக் கோடுகள்தான் அவர்களைப் பிரிக்கிறது. நம் நாட்டு ஏழைகள் சிரமப்படக் கூடாது என எந்த நாட்டுப் பணக்காரனும் நினைப்பதில்லை.
நிலைமை இப்படி இருக்க ஒரு கொடியை வைத்து இதைப் பிரச்சனையாக்குகிறவரைப் பார்த்தால் எரிச்சல் வருகிறது. நம் நாட்டின் தேசிய கீதம் என்று ஒரு பாடல் இருக்கிறது. அதன் பொருள் என்ன தெரியுமா ? அதில் வரும் சில பகுதிகளின் பெயர்கள் இருக்கிறதல்லவா, விந்திய மலை திராவிட குஜராத்தி மராத்தி என்வெல்லாம் வருகின்றன. ஐந்தாம் ஜார்ஜ் மன்னர் இந்தியா வந்த போது அவரை இந்த (விந்திய மலை திராவிட குஜராத்தி மராத்தி) பகுதிகளெல்லாம் வாழ்த்துகின்றன என்ற பொருளில் பாடப்பட்டதுதான் அந்த பாடல், அதுதான் இன்னமும் தேசிய கீதமாக இருக்கிறது.
இந்தப் புகைப்படத்தை வைத்து அவர் இந்தியாவை மதிக்காமல் பாகிஸ்தானியாகிவிட்டார், என்று சொல்ல முனைகிறார்கள். அவர் முஸ்லிம் என்பதால் இந்த வெறுப்பை விதைக்கிறார்கள். சானியா குட்டைப்பாவாடையும், இறுக்கமான பனியனும் அணிந்ததால்தான் பிரபலமானார் என்று சொல்கிறவனுக்கும், சானியாவை போர்ன் புகைப்படங்களில் மார்ஃபிங் செய்தவனும் இந்த நாட்டுப்பற்றுப் புரளியைக் கிளப்புகிறவனும் ஒரே வகையானவர்கள்தான். இந்தக் குப்பையெல்லாம் நாம் புறந்தள்ளுவோம். இந்த மாதிரியான நாட்டுப்பற்றுதான் பாகிஸ்தானில் குண்டு வெடித்தால் மகிழ்ச்சியடையச் செய்கிறது. நமக்கு அவ்வளவு நாட்டுப்பற்றெல்லாம் கிடையாது. குண்டு எங்கு வெடித்தாலும் கவலைப்படும் தேசத்துரோகம்தான் என் கட்சி.
அண்ணா ஹஸாரே, அப்துல் கலாம் வகையில் அடுத்த நாட்டுப்பற்றில் முக்கியமான ஒரு பிரபலம், சத்யமேவ ஜயதே அமீர்கான். இவர் பல உண்மைகளைப் பேசினார் தனது நிகழ்ச்சியில், இல்லையென்று சொல்ல வில்லை. அதற்கு ஒரு மிகப்பெரிய வணிக விளம்பர நோக்கங்கள் நிறைந்த நிகழ்ச்சி என்பது சந்தேகமில்லை. இவர் பேசியவற்றில் இரண்டு, குழந்தைகள் பாலியல் வன்முறை, இன்னொன்று தண்ணீர் வளப்பாதுகாப்பு மாதிரியான ஒன்று. அமீர்கான் நினைத்தால் பாலிவுட் காரர்களை துகிலுரிப்பு நடனங்களைக் கைவிடுமாறு கேட்டிருக்க வேண்டும். ஏனென்றால் அவையும் பாலியல் வன்முறையைத் தூண்டுவதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. அடுத்து தண்ணீர் குறித்தது. இவருக்கெல்லாம் எந்தத் தகுதியும் இல்லை தண்ணீர் குறித்து பேச. காரணம் இந்தியா பாலைவனம் ஆனால் அதற்கு முக்கியக் காரண்மாக இருக்கப்போவது கோக்கும், பெப்சியும்தான் இவர் கோக்கின் தூதுவர் இவருக்கு தண்ணீர் பாதுகாப்பு குறித்துப் பேச என்ன அருகதை இருக்கிறது. லகான் என்ற படத்தில் இது போன்ற போலி தேசபக்தியை, வெறியை, உணர்ச்சியைத் தூண்டிக் கல்லாக் கட்டினார். இன்னொரு போலி தேசபக்திப் படம், ரங்தே பசந்தி, பகத் சிங்காக நடித்து தமது செல்வாக்கை உயர்த்திக் கொண்டார் அந்தப் படத்தில் அங்கங்கே கோக்கின் மறைமுக விளம்பரங்கள். இவர் நிகழ்ச்சியில் பேசும் பிரச்சனைகளுக்காக பலர் தமது வாழ்க்கையே அர்ப்பணித்துப் பேசியும், போராடியும் இருக்கிறார்கள். ஆனால் இவர் போன்ற நடிகர்கள் பேசினால்தான் கேட்பேன் பீல் பண்ணுவேன் என்று மக்கள் இருக்கிறார்கள். பிரபல நடிகர்கள் சூரியன் கிழக்கில் உதிக்கிறது என்று சொன்னால் கூட கன்னத்தில் போட்டுக் கொள்ளும் திரைப்பட பக்தர்கள் இருக்கும் வரை இவர்கள் கொடி பறக்கும்.
அடுத்தவர் ஷாரூக். சக் தே படத்தில் இது போன்ற போலி தேசபக்தி உணர்வைத் தூண்டி பணம் பார்த்தார். கோக் பெப்சி தடை செய்யப்பட்ட பின்பு இவர்தான் அமெரிக்க பெப்சிக்கு ஆதரவாகப் பேசினார். ஆனா அதே அமெரிக்கா இவர் முஸ்லிம் பெயரை வைத்து இவரை அவமானப் படுத்தியது. அதற்காக இவருக்கு உதவி செய்யச் சென்றது யார் ? பெப்சிக்காக இவர் எதிர்த்து பேசிய இந்திய அரசு. இதுதான் அரசு. இவர்கள் சொல்கிறார்கள் எது நாட்டுப்பற்று எது துரோகம் என்று. இப்போது நாட்டுப் பற்று என்றால் அது அணு உலையை எதிர்ப்பதுதான். அதை யார் ஆதரிக்கிறார்கள் யார் எதிர்க்கிறார்கள் என்று பார்த்தால் தெரியும்.
0 பின்னூட்டங்கள்:
கருத்துரையிடுக
நான் படைப்பாளியோ, விமர்சகனோ அல்லன். வாசகன் மட்டுமே. எனவே உங்கள் கருத்தின்றி எனது இடுகை முழுமை பெறாது. நிறைகளை விடவும் குறைகள் அதிகம் எதிர்பார்க்கிறேன்