கிரிக்கெட் திருவிழா தொடங்கியாச்சு. இனி வரவிருக்கும் இரு மாதங்களிலும் நாட்டிலுள்ள பிரச்சனைகளையெல்லாம் புறந்தள்ளி நேத்தைக்கு எவன் ஜெயிச்சான், நாளைக்கு எவன் தோப்பான் என்ற அனல் பறக்கும் உரையாடல்களைக் கேட்டுத் தொலைக்கவேண்டும். முன்பு போல ஸ்கோர் எவ்வளவு எனத்தெரிந்து கொள்ள அதிகம் மெனக்கெடவேண்டியதில்லை. எடுபட்ட தூர்தர்ஷனை வைத்துக் கொண்டு ஒரு போட்டியைக் காண்பதற்குள் பைத்தியம் பிடித்துவிடும், 5 வது பந்தை வீசியவுடன் தொடங்கும் விளம்பரங்கள், அடுத்த ஓவரின் முதல் பந்தை வீசியபின்புதான் முடியும். அதாவது விளம்பரங்களுக்கிடையிலேதான் கிரிக்கெட் பார்க்க முடியும், மேலும், செய்திகள், மற்ற வழக்கமான நிகழ்ச்சிகள் தொடங்கும்போது கிரிக்கெட்டை மாற்றி விடுவார்கள். ஆனால் இப்போதோ வானொலியில் தொடர்ந்து அறிவிப்புகள், தொலைக்காட்சி, இணையம் அலைப்பேசி குறுந்தகவல், இதல்லாமல் திரையரங்கங்களில் வேறு போட்டிகளை ஒளிபரப்பப் போகிறார்களாம். இவ்வாறு பலவகையிலும் நமக்குத் தகவல்களை அள்ளித் தரும் வசதிகள். பரபரப்புச் செய்திகள் இல்லாமல் திண்டாடும் ஊடகங்கள் வண்டியை ஓட்டுவதற்கு கிரிக்கெட் துணை புரியும். தற்போதைய நிலவரத்தின்படி இந்தியாதான் உலகிலேயே மிகச் சிறந்த அணியென்றும், உலகக்கோப்பையை வெல்லத் தகுதிபடைத்த ஒரே அணியென்றும் கிரிக்கெட் இரசிகர்களிடம் ஊடகங்களால் வெறியேற்றி வைக்கப்பட்டுள்ளது. இங்கு உலகம் என்று நான் சொன்னது கிரிக்கெட் போட்டிகளில் விளையாடத் தகுதி பெற்ற 16 நாடுகளை மட்டுமே. ஒருவேளை இந்திய அணி தோற்றுப்போனால் துவண்டு போன இரசிகர்களுக்குத்தீனி போடுவதற்கும் தேற்றி மீண்டும் கிரிக்கெட் போதையில் வீழ்த்துவதற்கும் ஏப்ரல் மாதத்திலேயே ஐபிஎல் போட்டிகள் வரவிருக்கிறன. மூன்று மாதங்களாக இந்திய தேசிய உணர்வுடன் மூவண்ணங்களை முகரையில் பூசிகொண்டு இந்திய அணிக்கு ஆதரவளித்த ரசிகர்கள், சில நாட்களுக்குள் கூச்சமில்லாமல் தமது மாநில அணிக்காக இன உணர்வுகளுடன் பதட்டப்படவும், சீர்லீடர்ஸ் அழகிகளைக் காணவும் ஆயத்தமாகிவிடுவார்கள். ஆக இது நாட்டுப்பற்றுக்காக கிரிக்கெட் பார்ப்பது என்பதில்லை எனத் தெளிவாகத் தெரிகிறது. நிற்க! முதலிலேயே சொல்லிவிடுகிறேன், நானும் ஒரு உலகமகா கிரிக்கெட் பித்தனாக இருந்தவன். சிறுவனாக இருந்தபோது சூயிங்கங்கள் வாங்கினால் இலவசமாகக் கிடைக்கும், கிரிக்கெட் வீரர்களின் விபரங்களடங்கிய அட்டைகளைக் கட்டுக்கட்டாக வைத்திருக்கிறேன். எனக்குப் பிடித்ததே டெஸ்ட் போட்டிகள்தானென்றால் எவ்வளவு கொடூரமான இரசிகன் என்று கற்பனை செய்து கொள்ளவும். அதற்காக இதன் பேரால் நடக்கும் பித்தலாட்டங்களையெல்லாம ஆதரிக்க முடியுமா?
சோம்பேறி விளையாட்டு
முதலில் இந்தக் கிரிக்கெட் என்பதே சோம்பேறி விளையாட்டு என்பது அனைவருக்கும் தெரியும், இதற்கு பெரிய திறமையும், உடல் வலிமையும் தேவைப்படாதது, இதனால் உடல் வலுவும் கூடாது. ஆனால் மற்ற விளையாட்டுக்களுக்கு அப்படியல்ல. கைப்பந்து, கால்பந்து, ஹாக்கி, கூடைப்பந்த், ரக்பி போன்ற குழு விளையாட்டுக்களிலிருந்து டென்னிஸ், இறகுப்பந்து போன்ற தனிநபர் விளையாட்டுக்கள் வரையிலும் மிகவும் கடுமையாக உழைக்கவேண்டியிருக்கிறது. ஆனால் கிரிக்கெட் அப்படிப்பட்டதல்ல. அதனால்தான் விளையாட்டு வீர்ர்களுக்குரிய உடல் வலு இல்லாத நோஞ்சான்கள் முதல் தொப்பையை வைத்தே விளையாடிய இரணதுங்க வரை இதில் விளையாட முடிகிறது. வெறும் சாம்பார்சாதம் உண்ணும் நம்மாட்கள் அடிபின்னியெடுக்கிறார்கள், மலமாடுகள் போலிருக்கும் மற்ற நாட்டவர்கள் சொங்கித்தனமாக ஆடுவதேனோ என்றுதான் தெரியவில்லை. மேலும் இதில் அதிகமாக சிரமப்படுவது பந்து வீசுபவர்கள்தான், ஆனால் அதிகம் புகழடைவது என்னவோ மட்டையாளர்கள்தான். ஆரம்பகாலங்களில் மற்ற நாடுகளில் நேரத்தைக் கொல்லும் ஆட்டமாகவும், எந்தவித் உற்சாகமின்றியும் இருந்ததால் அதிகம் புகழ்பெறவில்லை. பிரிட்டனின் குடியேற்ற நாடுகளில் மட்டும் அவர்களால் விளையாடப்பட்டுக் கொண்டிருந்தது. முதலில் இந்தியாவிலும் ஹாக்கிதான் புகழ் பெற்று விளங்கியது, பிற்பாடுகளில் கிரிக்கெட் அதை விழுங்கியதோடல்லாமல், மற்ற புத்துணர்வூட்டும் விளையாட்டுகள் உட்பட அனைத்து விளையாட்டுக்களையும் விஞ்சி ஏகாதிப்பத்தியமாகி விட்டது இந்தக் கிரிக்கெட். குறிப்பாக கடைசி 20 வருடங்களுக்குள் இது நிகழ்ந்து விட்டது. இந்தியத் துணைக்கண்டத்தில்தான் கிரிக்கெட் வணிகம் சிறந்து விளங்குகிறது, அதற்கடுத்து வளைகுடா நாடுகளாக இருக்கலாம். ஆஸ்திரேலியாவிலும் ஓரளவிற்கு புகழ்பெற்றது இருப்பினும் பத்தோடு பதினொன்றாகத்தான் இருக்கிறது. இந்தியாவில் மட்டும்தான் இதற்கு இத்தனை புகழ். இதை விளையாடுபவர்கள் கடவுளுக்கு நிகராக புகழப்படுகிறார். ஒருவர் கடவுள் என்றே அழைக்கப்படுகிறார்.
வணிகமயமாக்கப்பட்ட விளையாட்டுக்கள்
விளையாட்டுபோட்டிகள் தொடங்கப்பட்டதே நாடுகளுக்கிடையேயான நல்லுறவுகள் வலுப்படவேண்டும் என்ற நோக்கம் இருந்தது. அந்நோக்கம் எப்படி நிறைவேறும் என்பதும் தெரியவில்லை. ஒலிம்பிக், கால்பந்து , என அனைத்தும் பெருந்தொழில் பன்னாட்டு நிறுவனங்களின் விளம்பரங்கள் மூலமாகத்தான் நடத்தப்படும் அளவுக்கு அவர்களின் கட்டுப்பாட்டிற்குச் சென்றுவிட்டது. விளம்பரங்கள் மூலமாகவும் முதலாளிகள் போட்டிகளை நடத்தியும் கோடி கோடியாக அள்ளுவதும், விளையாட்டுவீரர்கள் அவர்களின் விளம்பரத்தூதுவர்களாக மாறுவதும்தான் தொடர்ந்து நடக்கிறது. அவர்களுக்கு விளையாட்டுக்கள் மூலமாகக் கிடைக்கும் வரும் பணத்தை விடவும் விளம்பரங்கள் மூலம்தான் அதிகம் கிடைக்கிறது. மேலை நாடுகளில் கால்பந்தும், டென்னிஸும் இது போன்ற வீரர்களுக்கு வாய்ப்பளிக்கின்றன. இந்தியாவில் கிரிக்கெட். அதுவும் ஐபிஎல் என்ற பெயரில் வீரர்கள் ஏலத்திற்கு விடுவதை பெருமையாக வேறு செய்திப்படுத்துவது. எத்தனை ஊழல்கள், மேட்ச் பிக்ஸிங், சூதாட்டம் எனப்பல வழக்குகள் வெளிவந்த பின்னும், (கடந்த உலகக்கோப்பைப் போட்டியின்போது பாகிஸ்தான் பயிற்சியாளராக இருந்த பாப் உல்மர் கொல்லப்பட்டார்.) இன்னும் எந்த மாற்றமும் இல்லை. ரசிகனுக்குக் கிரிக்கெட் இருந்தால் போதும் முதலாளிகளுக்கு கல்லாக் கட்டினால் போதும். ரசிகனோ அவர்கள் விரும்பியபடி உலகக் கோப்பையில் இந்தியனாகவும், ஐபிஎல் போட்டிகளில் பிராந்திய அணிகளுக்காகவும் கைதட்டிக்கொண்டிருப்பான். சக்தே இன்டியா ! ஜெய் ஹோ! என்றெல்லாம் படம் காட்டிவிட்டு அப்படியே மாறி மும்பை இண்டியன்ஸ் கமான் என்பான்.
கிரிக்கெட் ஊடகங்களால் ஊதிப்பெருக்கப்பட்ட விதம்
கிரிக்கெட் சோம்பேறித்தனமாக விளையாடப்படும் விளையாட்டு எனினும் அது பலமுறையான வழிமுறைகளைப் புகுத்தியும் வெறியேற்றப்பட்டும் இந்தியர்களின் நாடித்துடிப்பாக மாற்றப்பட்டுள்ளது. நாட்டில் அதிகம்பேர் கவலைப்படும் பிரச்சனையாக ஊதிப்பெருக்கப்பட்டுள்ளது. 1983 - ல் இந்தியா உலகக் கோப்பையை வென்றபோது வெறும் பெட்டிச் செய்தியளவுக்குத்தான் செய்திகள் வெளியிடப்பட்டதாம். தற்போது தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவர் கேரம் போட்டியில் வென்றால் எந்த அளவுக்கு வருமோ அந்தளவுக்குத்தான். ஆனால் தற்போது பள்ளிச் சிறுவர்கள் விளையாடும் போட்டிகள் கூட பெரிதாக வரும் பாருங்கள் புரியும். தொலைக்காட்சிகள் பெருகி நேரடி ஒளிபரப்புகள் வந்த பின்பு இன்னும் அதிகமாகி விட்டன.
எந்த மொழியாகட்டும் 3 நிமிடங்களே வாசிக்கப்படும் தலைப்புச் செய்திகளில் கிரிக்கெட் பற்றி ஒரு செய்தியிருக்கும், உலகக்கோப்பைதான் என்றில்லை, ஏதாவதொரு நாட்டிற்கு சுற்றுப்பயணம் செல்வதாக இருந்தாலும், புதிதாக ஒருவர் இடம் பெற்றிருந்தாலும் அதை குறிப்பாக சொல்வார்கள்.
கிரிக்கெட் மேட்ச் பிக்ஸிங், ஐபிஎல் ஊழல்கள் பற்றித் தலையங்கங்கள் எழுதும் நாளிதழ்கள், வார இதழ்கள் கிரிக்கெட் வீரர்களின் மட்டையை உயர்த்தும் புகைப்படங்களைத் தவறாமல் வெளியிடுகின்றன.
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு செய்திகளை கவனமாக நம் மண்டையில் திணிப்பார்கள். இன்று இந்திய அணி ஒரு குறிப்பிட்ட நாட்டிற்குப் பயணம், இன்று இந்திய அணி போய்ச் சேர்ந்தது, இன்று மாலையில் இந்திய வீரர்கள் வலைப்பயிற்சியில் ஈடுபட்டனர், டெஸ்ட் போட்டிகள் நாளை துவக்கம், ஒருநாள் போட்டிகள் அடுத்த மாதம் தொடக்கம், இத்தனை ஒருநாள் போட்டிகள், இத்தனை 5 நாள் போட்டிகள், 20/20 போட்டிகள் இப்படியாக இவர்கள் தேடித்தேடிச் சொல்வார்கள்.
ஒரு போட்டி முடிந்ததும் வெற்றி, அல்லது தோல்விக்கான காரணங்களை அணித்தலைவர் விளக்குவார்
அன்றைய போட்டியில் ஆட்ட நாயகனின் படம் அன்றைய நாளிதழ்களின் முதல் பக்கத்தில் கால்வாசிப்பகுதியை ஆக்கிரமித்திருப்பார். வெற்றி பெற்றால் வீரர்களை மிதமிஞ்சிப் புகழ்வதும், தோற்றால் அவர்களின் பரம்பரையையே திட்டி இவனெல்லாம் எதுக்கு விளையாடறான் ? என்று கேவலமாகத் திட்டுவதும் நடக்கும்.
சென்ற முறை உலகக் கோப்பையில் தோற்றவுடன் இந்திய கிரிக்கெட் வீரர்களின் படங்களெல்லாம் மீன் விற்பது போலவும், பால் விற்பது, காய்கறிகள் கொண்டு செல்வது போலவும் மாற்றம் செய்து வெளியிடப்பட்டன. அவர்களைக் கேவலப்படுத்துவதற்காம். மீன்விற்பவனும், பால்காரனும், கீரைவிற்பவளும் கேவலமானவர்கள்தானே கிரிக்கெட் கடவுள்களுடன் ஒப்பிடுகையில்.
ஏதாவது தவறான முடிவுகளை நடுவர்கள் அறிவித்து விட்டால் போது ஒப்பாரி வைத்து விடுவார்கள், ஏதோ இந்தியாவுக்கே அவமதிப்பு நிகழ்ந்து விட்டது போல.
இரு வருடங்களுக்கு முன்பு ஆஸி வீரர் சைமண்ட்சுக்கும், ஹரபஜனுக்கும் ஆடுகளத்தில் நடந்த வாக்குவாதத்தை வைத்து இணையத்தில் வந்த நகைச்சுவைத்துணுக்குகள் சைமண்ட்சின் உருவமைப்பைக் கேலி செய்து இருந்தன, பத்தாயிரம் ஜாதிகளை வைத்துக்கொண்டு ஆஸ்திரேலியனின் இனவெறியையும் இவர்கள் எதிர்த்தது கேவலமான நகைச்சுவை.
கிரிக்கெட் வீரர்கள் மிகவும் பிரபலமாக இருப்பதால் விளம்பரங்களில் அதிகம் வருகின்றனர். ஆணுறையைத் தவிர அத்தனையும் மாட்டிக் கொண்டு விளம்பரத் தூதுவர்களாக பல்லை இளிக்கின்றனர், முக்கியமாக கோக் பெப்ஸி போன்ற கொடூரமான மென்பானங்கள் தொடங்கி, பல்வேறு அழகு சாதனப் பொருட்கள் வரை பாலிவுட் அழகிகளுடன் திரையிலும் தோன்றி வாங்கச் சொல்கிறார்கள்.
ஏதாவது நிறுவனத்துடன் இத்தனை கோடிகளுக்கு ஒப்பந்தம் செய்திருக்கிறார் என்பது முக்கியச்செய்தியாக வெளியிடுகிறார்கள்.
இன்னும் சில துணுக்குச் செய்திகள்:
ஒரு முறை சென்னையில் ஏதோ பள்ளிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டியில் இரு 12 வயதுச் சிறுவர்கள் 500 ரன்களுக்கு மேல் அடித்து விட்டார்கள், அந்த உலக சாதனைதான் அன்றைய வாரத்தின் ஆனந்த விகடனின் அட்டைப்படச் செய்தி.
தமிழ்நாட்டின் நச்சுக்கிருமியான சன் தொலைக்காட்சியில் ஒரு முறை விளையாட்டுச் செய்தியில் ஒரே ஒரு செய்தி சொன்னார்கள். அது என்னவென்றால் வி.வி.எஸ். லக்ஸ்மணின் திருமணம்.
டைம்ஸ் நவ் என்று நினைவு, அதில் டோனி தன்னுடைய நீளமான தலைமுடியை வெட்டிக்கொண்டதை தனிச் செய்தியாகப் போட்டு குழந்தைகளிடம் கருத்துக் கேட்டார்கள். அதில் ஒரு பாப்பா "தீபிகா ஆன்ட்டி கே லியே " என்றது.
மற்றபடி கிரிக்கெட் வீரர்களுடன் ஏதாவதொரு நடிகையை இணைத்துக் கிசுகிசுவை பரப்புவது எப்போதும் நடக்கும். தீபிகா படுகோன், யுவராஜ் சிங்கிற்கு அல்வா கொடுத்ததற்காகவும் நாம் கவலைப்படவேண்டுமல்லவா! மொத்தமாகப் பார்த்தால் திரை நட்சத்திரங்களைவிடவும் கிரிக்கெட் வீரர்களை பிரபலமாக்குவதில் ஊடகங்கள் முனைப்புடன் உள்ளன. அவர்கள் உச்சத்திலிருக்கும் சில வருடங்களில்தான் தமது விளம்பரங்களில் கொடிகட்டிப் பறப்பார்கள். அவர்களுக்கும் மவுசு போனால் மீண்டுமொருவரை கடவுளாக்குவார்கள் இந்த முதலாளிகள்.
இந்த பில்ட் அப்கள் போதாதென்று போட்டி நடக்கும் போதும் பல சுவாரசியங்கள், பந்து வீசிவிட்டுத் திரும்பி வருவதற்குள் பலகோணங்களில் ரீப்ளேக்கள், இருவர் முறைத்துக் கொண்டால், நமது திரைப்பட நாயகர்கள் முறைத்துக் கொள்வது போல வீர சாகசமாகக் காட்டுவது இவர்கள் பேசும் கேவலமான திட்டுக்களைத் திரும்பத் திரும்பக் காட்டுவது இதைத்தான் கிரிக்கெட் ரசிகர்கள் திரும்பத் திரும்பப் பேசி மகிழ்வது. சரி நாட்டுக்காக விளையாடும்போதுதான் இவ்வளவு உணர்ச்சிவசப்பட்டுக் குதிக்கிறானுங்க அப்படின்னு பாத்தா ஐபிஎல் போட்டிக்கும் அதே ரியாக்சன்தான் குடுக்கிறானுங்க(ஹர்பஜன், ஸ்ரீசாந்த் என்ற இரண்டு கருமாந்தரங்கள் செய்யும் சேட்டைகள் கொலவெறியை வரவழைக்கும், இன்னொண்ணு ஆண்ட்ரே நெல்.)
போட்டி நடக்கும் போது வர்ணனை செய்யும் முன்னாள் வீரர்கள் ஏதாவது, ஆடும் வீரர்களின் பழைய ஆட்டங்களின் பெருமைகளைப் பேசிக்கொண்டே இருப்பார்கள், இடையிடையே great shot, tremendous, superb, fantastic bowl, good to watch, sensational எனப்பல உசுப்பேத்தும் சொற்களைச் சொல்லிக்கொண்டேயிருப்பார்கள்,இவர்களின் பாராட்டுரைகள் கலைஞரின் பாராட்டு விழாக்களுக்கு நிகரானது. இடையிடையே ரசிகர்கள் ஆர்ப்பரிப்பதையும் காட்டி கொஞ்சம் சத்தம் அதிகமாகவும் வைப்பது தொலைக்காட்சியில் பார்ப்பவர்களுக்கு உற்சாகமளிக்கும்.
20 வது ஒவரிலிருந்து 40 வரை சலிப்புத் தட்டும் நேரம், கேமராக்கள் அழகிய இளைஞிகளைத் தேடித் தேடி படம்பிடிக்கும்.
என்னவென்று தெரியாமலே பாகிஸ்தானை வெறுப்பதற்கு இந்தியர்களும், இந்தியர்களை வெறுப்பதற்கு பாகிஸ்தானியரும் பயிற்றுவிக்கப்பட்டுள்ளனர். பாகிஸ்தானை ஜெயித்தால் போதும், உலகக்கோப்பையே தேவையில்ல என்றும் சில வீர வசனங்கள், இந்திய அணிக்காக நடத்தப்படும் யாகங்கள், பாகிஸ்தானுக்காக நடத்தப்படும் தொழுகைகள் என பலவகைகள்.
இருப்பதிலேயே "ரொம்ப அதிகம்" எனப்படுவது கிரிக்கெட்டின் சாதனைகள்தான்
அதாகப்பட்டது, மற்ற விளையாட்டுக்களில் எத்தனை கோல்கள், வெற்றிகள், பட்டங்கள், பதக்கங்கள், தரவரிசை என சிலவற்றை மட்டுமே சாதனைகளாகக் குறிப்பிடுவார்கள் ஆனால் கிரிக்கெட்டில் மட்டும்தான் என்ன செய்தாலும் சாதனை, சாதனை என்பது ஊடகங்களில் முக்கியச் செய்தியாவதற்கும், நாளிதழ்களில் முதல் பக்கங்களில் மூஞ்சி வருவதற்குமுரியது.
அதிலிருந்து சில துளிகள்
5 விக்கெட், 100 ஓட்டங்கள், இந்த வருடத்தில் அதிக ஓட்டங்கள், சிறந்த துவக்க ஆட்டக்காரர், பந்து வீச்சாளர், அதிக ஆட்டநாயகன் விருதுகள், அதிக முறை ஆட்டமிழக்காமல் இருந்தது, குறிப்பிட்ட அணியுடன் அதிக ஓட்டங்கள், அதிக விக்கெட்கள், இந்த ஆடுகளத்தில் அதிக ஓட்டங்கள், வெளிநாட்டில் அதிக விக்கெட் எடுப்பது, வெளிநாட்டில் அதிக சதங்கள், ஒரு தொடரில் அதிக சதங்கள், ஒரே அணியுடன் அதிக சராசரிகள் இத்தனாவது விக்கெட்டிற்கு அதிக ஒட்டங்கள் பார்டனர்ஷிப், என்று இன்னும் பல வகையில் "சாதனைகள்" பெட்டிச் செய்தியில் சிறப்பாக வெளியிடப்படும், இதற்கு முன் விளையாடிய போட்டிகள் வெற்றி தோல்வி சராசரி என என திகட்டத் திகட்ட வெளியிடப்படும் செய்திகள்
மேலே சொன்ன அனைத்திற்கும் முன்பும் "உலகத்திலேயே" என்பதை சேர்த்துக் கொள்ளவும், கிரிக்கெட் விளையாடும் முக்கியமான 10 நாடுகள்தான் உலகம். உலகத்திலேயே கொம்பர்களான அமெரிக்கா, சீனா, ஜப்பான், ருஸ்யா, ஐரோப்பிய நாடுகள், லத்தீன் அமெரிக்க நாடுகள் என முக்கால்வாசிப்பேர் கண்டுகொள்ளாத, இல்லாத கிரிக்கெட்டில் எல்லாமே உலக சாதனைகள்தான்.
இதனால்தான் டோனிக்குக் கோவில் கட்டும் செய்திகளும், டெண்டுல்கரின் நூல் 35 இலட்சத்திற்கு விற்பனை செய்ய்ப்படுவதும், இந்தியாவின் "தேசிய" விளையாட்டான ஹாக்கியின் வீரர்கள கிரிக்கெட் போலன்றி தாங்கள் மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்தப்படுவதாகப் பட்டினிப்போராட்டம் நடத்தியதும் தொடரும்.
சென்றமுறை இந்தியாவும் பாகிஸ்தானும் முதல் சுற்றுக்களில் வெளியேறியதால் மிகப்பெரும் விளம்பரங்கள் சரிந்திருக்கும், அதை மூன்று வருடங்களாக ஐ பி எல் போட்டிகளை நடத்தி பல மடங்கு அள்ளியிருப்பார்கள் வீரர்களும், முதலாளிகளும். போகிறபோக்கைப் பார்த்தால் இந்தியா உலகக்கோப்பையை வாங்கிவிட்டால் இவர்களின் லோலாய் தாங்கமுடியாதே! 4 தலைமுறைக்குச் சேர்த்து அள்ளிவிடுவார்கள்.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் எல்லா கிரிக்கெட் நாடுகளையும் அச்சுறுத்தும் அளவு வளர்ந்துள்ளது, பிற்கென்ன இந்தியா கிரிக்கெட் வல்லரசுதானே !
மீனவர் ,தேர்தல், விலைவாசி உயர்வு, 50 கோடிபேர் பட்டினி, விவசாயம், ஈழம், வேலையில்லாத் திண்டாட்டம், ..................... வழக்கம்போலவே மறந்து விடவேண்டும்! உலகப்போர் நடக்கும்போது உள்ளூர் பிரச்சனைகள் எதற்கு ? இது நமது தன்மானப் பிரச்சனை , பிள்ளைகளின் படிப்பு நாசமாகட்டும். இல்லத்தரசிகளுக்கு நெடுந்தொடர்கள் பறிபோகும், தங்கச்சிகளுக்கு புதுப்பாடல்கள் பார்க்க முடியாது, குழந்தைகளுக்கு சுட்டி டீவி பார்க்க முடியாது, கிரிக்கெட் பார்த்தால்தான் மோட்சம் கிடைக்கும்.
reflecting my thoughts.........
பதிலளிநீக்குமிக்க நன்றி சுரேஷ்
பதிலளிநீக்குதாமதமாக வருவதர்க்கு மனம் பொருக்கவும்.
பதிலளிநீக்குஎனக்கு கிரிக்கெட்டைப் பற்றி ஒன்னுமே தெரியாது உங்களின் கட்டுரை மிக அருமையாக இருந்தது வாழ்த்துக்கள் சகோ.
//மீனவர் ,தேர்தல், விலைவாசி உயர்வு, 50 கோடிபேர் பட்டினி, விவசாயம், ஈழம், வேலையில்லாத் திண்டாட்டம், ..................... வழக்கம்போலவே மறந்து விடவேண்டும்! உலகப்போர் நடக்கும்போது உள்ளூர் பிரச்சனைகள் எதற்கு ? இது நமது தன்மானப் பிரச்சனை , பிள்ளைகளின் படிப்பு நாசமாகட்டும். இல்லத்தரசிகளுக்கு நெடுந்தொடர்கள் பறிபோகும், தங்கச்சிகளுக்கு புதுப்பாடல்கள் பார்க்க முடியாது, குழந்தைகளுக்கு சுட்டி டீவி பார்க்க முடியாது, கிரிக்கெட் பார்த்தால்தான் மோட்சம் கிடைக்கும். //
பதிலளிநீக்குவழி மொழிகிறேன் !!!
மக்கள் இப்போது மந்தைகள் போல் இதில் இருக்க நாட்டில் சத்தமில்லாமல் சகலபிரச்சனையும் பின் தள்ளப்படும் இதுதான் ஆசியாவின் நோய்.
பதிலளிநீக்குsari sari, innum 12 mani neram thaan irukku, match paathuttu adutha pathivu poduppaa :)
பதிலளிநீக்குமிக்க நன்றி இக்பால் செல்வன்.
பதிலளிநீக்குமிக்க நன்றி நேசன்
மற்றும் பின்னூட்டமிட்ட நண்பருக்கும்
நன்றி
//இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் எல்லா கிரிக்கெட் நாடுகளையும் அச்சுறுத்தும் அளவு வளர்ந்துள்ளது, பிற்கென்ன இந்தியா கிரிக்கெட் வல்லரசுதானே//
பதிலளிநீக்குசவுக்கடி!!
தன் ரத்தத்தை தானே சுவைக்கும் நாயிடம் ,அறிவாளி ஒருவர், அட , அது காய்ந்துபோன எலும்பு. நீ சுவைக்கும் ரத்தம் எலும்பிலிருந்து வெளிப்படும் ரத்தம் இல்லை. உன் வாயிலிருந்தே கசியும் ரத்தம் என்று சொல்ல. வழிப்போக்கரைப் பார்த்து நாய் ஏளனமாகச் சிரித்துவிட்டுச் சென்றது..
பதிலளிநீக்குஅதே நிலைதான் கிரிக்கெட்டும் , அதை பார்த்து ரசித்து ஆரவாரம் செய்யும் நாமும்..
மிகச்சிறப்பான எண்ணங்கள்..
What else to say. =((
பதிலளிநீக்குமிக்க நன்றி சாந்தி
பதிலளிநீக்குமிக்க நன்றி அனாமிகா