மதங்களை எதிர்ப்பவர்கள் கூட கிரிக்கெட் மயக்கமும் திரைப்பட மயக்கமும் உடையவர்களாக இருக்கின்றனர். ஊடகங்கள்தான் கிரிக்கெட்டர்களையும் நடிகர்களையும் கடவுளாகவும் அந்தத் துறைகளை கவர்ச்சிகரமாகவும், உணர்ச்சியைத் தூண்டியும், வெறியூட்டியும் மதமாகவும் வளர்த்து வருகின்றனர் என்றால் மாற்று/மக்கள் ஊடகங்களாகக் கருதப்படும் சமூக வலைத்தளங்களும் ஊடகங்களையே விஞ்சும் வகையில் திரைப்பட + கிரிக்கெட் துதிபாடிகளாக விளங்குகின்றன.
கிரிக்கெட் பார்ப்பன ஆதிக்கம் நிறைந்த துறையெனில் அதை எதிர்த்து பார்ப்பனரல்லாதவர் பங்கு பெறும் ஹாக்கி, கால்பந்து போன்ற விளையாட்டுக்களை ஆதரிப்பதும், புகழ்வதும்தானே பார்ப்பன எதிர்ப்பின் அரசியலாக இருக்க வேண்டும் ? நான்கு வருடங்களுக்கு ஒரு முறை நடக்கும் ஆசியப் போட்டிகள், காமன்வெல்த் போட்டிகள், போட்டிகளில்தான் பார்ப்பனர் அல்லாதவர் பங்கு பெறுகின்றனர். குறிப்பிடத்தக்க அளவு வெற்றியும் பெறுகின்றனர். அந்த ஒரிரு மாதங்கள் மட்டும் ஏதாவது பதக்கம் வாங்கிய அவர்கள் இந்திய தேசியப் பெருமைக்கும், அவர்கள் சார்ந்த இனப்பெருமைக்கும் தோதாக ஊறுகாய் செலிபிரிட்டி ஆக்கப்படுவர்.
கடும் வறுமைக்கும் ஆதரிக்காத அரசுக்கும் இடையே போராடி ஒரு ஸ்பான்சரின் உதவியால் வென்ற அவர்களது கதைகள் பரப்பப்பட்டு, ஏதாவது பொருளின் விளம்பரத் தூதுவராக மாறுவர். இல்லையெனில் திரைப்படங்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் வருவர். அவ்வளவுதான் அவர்களின் உச்சம். சில நாட்களில் எல்லோரும் கிரிக்கெட் பற்றிய செய்திகளுக்குத் திரும்பி விடுவார்கள்.
ஏனெனில் வருடம் முழுக்க இந்தக் கிரிக்கெட் மதமும், கடவுளர்கள் மட்டும் வெவ்வேறு வடிவங்களில் இடைவிடாமல் திணிக்கப்பட்டுக் கொண்டேயிருக்கும். கிரிக்கெட்டில் தோற்றுப்போனால் என்னவோ இவர்கள் சோறு போட்டு அவர்கள் துரோகம் செய்தது போன்று ஒட்டு மொத்த கிரிக்கெட் அணிக்கோ அல்லது ஒரு சில தனி நபர்களுக்கொ மிகப்பெரிய திட்டு விழும்.
அரசியல் கட்சித் தலைவர்களைத் துதி பாடுவதிலாவது ஒரு அறம் இருக்கிறது. ஆனால் இந்த அட்டைக்கத்தி வீரர்களுக்குத் தரப்படும் வெளிச்சம் மிகவும் அதிகம். இப்படி ஒன்றுமில்லாததை மாய்ந்து மாய்ந்து புகழ்ந்துரைப்பவர்களுக்கு மத நம்பிக்கைகளை எதிர்ப்பதற்கும் குற்றம் சொல்வதற்கும் என்ன தகுதி இருக்கிறது ?
Download As PDF
0 பின்னூட்டங்கள்:
கருத்துரையிடுக
நான் படைப்பாளியோ, விமர்சகனோ அல்லன். வாசகன் மட்டுமே. எனவே உங்கள் கருத்தின்றி எனது இடுகை முழுமை பெறாது. நிறைகளை விடவும் குறைகள் அதிகம் எதிர்பார்க்கிறேன்