கட்செவி அஞ்சலில் எனக்கு ஒரு படம் வந்திருந்தது. அதில் கவுண்டர்கள் குறித்து எழுத்தாளர் ஜெயமோகன் தனது கட்டுரையில் சொல்லியிருந்ததை திரைச்சொட்டு(screenshot) எடுத்து உருவாக்கப்பட்டிருந்தது. அதில் அவர் சொல்லியிருக்கும் கருத்து அபத்தத்தின் உச்சம். அதை பரப்புகிறவர்கள் ஜாதிப்பிரியர்கள், ஜாதிவெறியர்கள், ஜாதிவிரும்பிகள், ஜாதித்துதிபாடிகள் மொத்தத்தில் ஜாதிகள். தங்களது ஜாதியை ஒருவர் பெருமையாகச் சொன்னால் எந்த ஜாதிக்குதான் இனிக்காது சொல்லுங்கள். இதுதான் எனக்கு வந்த புகைப்படச் செய்தி. இதில் ஏதாவது அடிப்படை உண்மை இருக்கிறதா ? இதைப் பரப்புகிறவர்கள் நோக்கம் என்ன ? இதில் இருப்பதை எப்படி நம்புகிறார்கள். இதை நம்புவது அவர்களின் நம்பிக்கைக்கே எதிரானது அன்றோ ? ஜாதி என்றாலே தன்னைச் சார்ந்த கூட்டத்தை மட்டுமே நம்மவர்கள், நம்ம சனம், நம்மாளுங்க என்றெல்லாம் குழுவாகச் சிந்திப்பது மட்டுமல்லாமல் பிற ஜாதிகளை கீழாகப் பார்ப்பதுதான் ஜாதியம். அவர்களில் சில ஜாதிகளை இழிவாக அடிமைகளைப் போல் நடத்துவதுதான் ஜாதியம்.
கொங்கு பகுதியில் இருப்பவர்களுக்கு ஒரு தனிப்பெருமிதம் உண்டு. ஜாதிப் பெருமிதம்தான். கோவை மரியாதைக்குப் பெயர் பெற்றது என்ற பொய்யும் அப்படி வந்ததுதான். கோயம்பத்தூரில் சந்திப்பவர்களில் என் ஜாதியையும் குலத்தையும் கேட்காதவர்கள் குறைவு. அங்கே ஆண்கள் பெண்கள் குழந்தைகள் கூட ஜாதிய மனநிலையில்தான் இருக்கிறார்கள். இளைஞர்களைப் பற்றி சொல்லவே தேவையில்லை. எங்கோ பெருநகரங்களில் தகவல் தொழில்நுட்பம் போன்ற உயர்ந்த பணிகளில் இருப்பவர் முதல் தமது விவசாயத் தொழிலில் ஈடுபடுகிற இளைஞர்கள் வரை எல்லாரும் கவுண்டன், கொங்கு, இதுமாதிரியான பெயருடைய கட்செவி அஞ்சல்(வாட்ஸப்) குழுவில் இருப்பார்கள். மற்ற ஜாதியினரைக் இவர்களுக்குள் குறிப்பிட்டுப் பேசுகிற போது, அந்தக் குறிப்பிட்ட நபரின் பெயரைச் சொல்லிக் குறிப்பிடுவதை விட அவர்களின் ஜாதிப் பெயரைத்தான் சொல்வார்கள். தேவர் சொன்னார், நாடார் கேட்டார், முதலியார் வரக் காணமே, செட்டியார் எங்கே இப்படியெல்லாம் சொல்வார்கள். கோவையைத் தாண்டிய பகுதிகளில் இவையெல்லாம் மிகவும் சாதாரணம். ஏன் கோவையைச் சொல்கிறேனென்றால் கோயம்பத்தூரை வைத்துத்தான் மரியாதையை அடையாளப்படுத்துகிறார்கள்.
கொங்கு பகுதி மட்டும்தான் திராவிடக் கட்சிகளின் ஆட்சியினால் இல்லாமல் உழைப்பால் உயர்ந்த பகுதியாம். அதாவது கவுண்டர்கள் கடுமையாக உழைத்ததால்தான் கொங்கு பகுதி முன்னேறியதாம். அங்கே இருக்கும் மற்ற ஜாதியினர் கூடத்தான் கடுமையாக உழைத்தார்கள். கவுண்டர்களின் தோட்டங்களில் கூலிக்கு வேலை செய்து அவர்களின் முன்னேற்றத்திற்குக் காரணமானவர்கள் கூட வேறு ஜாதியைச் சேர்ந்தவர்கள். அதில்லாமல் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டத்திலிருந்தும், முன்னேறாத பகுதிகளிலிருந்து வந்தும் பலர் (திருப்பூர் போன்ற பகுதிகள்) கொங்கு பகுதியை தமது உழைப்பினால் உயர்த்திக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் பெருமையை மட்டும் ஒரு பிரிவினர் எடுத்துக் கொள்கிறார்கள். இவர்கள் கட்டும் வரியை இவர்களுக்கு இல்லாமல் மற்ற மாவட்டங்களுக்கும் ஒதுக்குவதால் இவர்கள் தனி மாநிலம் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஏன் ஆண்டபரம்பரை தனிநாடு கேட்கவில்லை என்பதுதன் காரணம் தனி. அப்படி ஒரு தனிமாநிலம் ஜாதியின் பேரில் அமைந்தால் அது எத்தகு கொடுமையாக இருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள்.
ஒரு கொங்கு இளைஞனின் குமுறல் |
இவர்கள் மற்ற ஜாதிகளுக்கு இணக்கமானவர்களாம், ஒற்றுமையைப் பேணுகிறவர்களாம். அவர்களே சொல்லிக் கொள்கிறார்கள். இணக்கமும் பண்பானவர்களாயும் இருப்பவர்களாக ஜெயமோகன் போன்றவர்களும் சொல்வார்கள். ஆமாம் ரொம்ப இணக்கமானவர்கள், கவுண்டர்களும் அவர்கள் வீட்டு குழந்தைகள், பெண்கள், இளைஞர்கள் தாழ்த்தப்பட்ட ஜாதியினர் பெரியப்பா, தாத்தா வயது பெரியவர்களாக இருந்தாலும் பெயர் சொல்லியும் வாடா போடா என்றுதான் அழைப்பார்கள். தங்கள் தோட்டங்களில் வேலை செய்ய வருபவர்களுக்கு கொட்டாங்கச்சி (அ) தேங்காத்தொட்டியில் தண்ணீர்/தேநீர் கொடுப்பார்கள். அதை எருமை மாடு கட்டப்படும் கட்டித்தாரையின் கூரையில் சொருகி வைத்திருப்பார்கள். இல்லையென்றால் இவர்கள் ஊற்றுவதை இரண்டு கைகளால் ஏந்தி வாயில் வைத்துக் கொண்டே தண்ணீரைக் குடிக்க வேண்டும். வீட்டுக்கு வெளியில் வாசலில்/கட்டாந்தரையில் உட்கார வைத்துத்தான் சோறு போடுவார்கள். அவர்கள் வீட்டில் சாவு நடந்தால் தாழ்த்தப்பட்டவர்கள் வந்து இழவு வீட்டுக்காரர்களின் காலில் விழுந்து எழவு கேட்க வேண்டும். தாழ்த்தப்பட்டவர் வீட்டில் எழவானால் அதற்கும் தாழ்த்தப் பட்டவர்களே சென்று துண்டை ஏந்தி அவர்கள் தருவதை வாங்க வேண்டும். புழங்கற ஜாதியில்லையென்றால் இதுதான் இன்றும் கொங்கில் நடந்து வருகின்றது. இவர்களின் வட்டார வழக்குதான் தமிழிலேயே சிறந்தது போலவும், மரியாதைக்குரியது என்றும் எல்லோரும் நம்புவது என்னவொரு முரண்நகை. ஏனுங்க என்று இனிமையாக விளித்ததால் மட்டுமே அவர்கள் பண்பாளர் என்று நம்பிவிடாதீர்கள். ஜாதி என்ற அடையாள நம்பிக்கைதானே இதையெல்லாம் நியாயப்படுத்துகிறது.
ஜாதிக்குப் புதுப்புது விளக்கங்கள் கொடுக்கப்படும் காலம் இது. ஜாதியை இனம் என்பது, இனக்குழு என்பது, ஜாதியே பண்பாடு என்பது, ஜாதியை இனமீட்பு என்பது முதல், ஜாதிக்குத் தனி மாநிலங்கள், தனி நாடுகள் கேட்கும் காலம் இது. அதனால்தான் ஜெயமோகனும் இப்படி அடித்து விடுகிறார். இதை அந்த ஜாதியைச் சேர்ந்தவர்கள் பெருமையாகக் கருதுகின்றனர். கவுண்டர்கள் மட்டும்தான் மற்ற ஜாதிக்கு இணக்கமானவர்களா ? மற்ற ஜாதியினர்கள் இணக்கமானவர்கள் இல்லையா என்ற கேள்வி ஒருபுறமிருந்தாலும், இதைக் கவுண்டர்களே நம்ப மாட்டார்கள். இணக்கமானவர்கள் என்றால், இவர்கள் பட்டியல் ஜாதியினர்க்கு இணக்கமானவர்களா ? அவர்களை சமமாக நடத்துவார்களா ? மனிதர்களாக மதிப்பவர்களா ? என்பதற்கு ஒரிரு வருடங்களுக்கு முன்பு எடுக்கப்பட்ட இன்னொரு திரைச்சொட்டு பதில் சொல்லும். இதைக் கூறியவர் ஒரு கல்லூரி மாணவர். இதன் வாயிலாக ஒரு ஜாதியைக் குறித்து அவர்களின் பழக்கவழக்கங்கள், பண்பாடு, பிற ஜாதியிடம் காட்டும் ஜெயமோகன் சொல்லும் அந்த "இணக்கம்" என்பதைப் புரிந்து கொள்ளலாம். எனக்கு வந்த ஒரு புகைப்படத்தையும், கிடைத்த ஒரு புகைப்படத்தையும் இணைத்துள்ளேன் இதைக் காண்பவர்கள் ஜாதியைக் குறித்து ஒரு முடிவுக்கு வாருங்கள்.
குமரியில் இருக்கும் ஜெயமோகன் உண்மை அறியமாட்டார்.மேற்கு மாவட்டத்தில் பிறந்து வளர்ந்த என்னை போன்ற வேறு சாதியினர் உண்மை அறிவோம்.போர்வெல் .பிராய்லர் பள்ளிக்கூடங்கள்,தனியார் பேருந்து அட்டகாசங்கள் இவையெல்லாம் இவர்கள் தமிழுக்கு கொடுத்த கொடைகள்,பணத்திற்காக ,சாதிக்காக எதைவேண்டுமானாலும் செய்யும் கூட்டம்.விஜயன்.
பதிலளிநீக்குதெரியாமல் சொல்லுமளவுக்கு அவர் அப்பாவியெல்லாம் கிடையாது. இந்தக் கருத்தின் மூலம் அவர் எத்தனை பேரைச் சென்றடைந்திருப்பார் என்று எண்ணிப்பாருங்கள். எத்தனை வாசகர்கள் கிடைத்திருப்பார்கள். ஜாதியைப் புகழ்ந்து அதன் மூலம் ஜாதியத்தை, மதத்தை, மதவெறியை தனது எழுத்தாற்றலால் நிகழ்த்த வல்லவர் ஜெயமோகன். அவர்கள் ஜாதிக்கென்று தனியான பள்ளிக்கூடங்கள் வேண்டும் என்று கோரிக்கை அவர்களின் கட்சி மாநாட்டு மலரில் இருக்கிறது.குமரியைப் போன்றே ஜாதிவெறி, மதவெறி மிகுந்த பகுதிதான் கொங்கு, அதனால்தான் ஜெயமோகன் சொறிந்து விடுகிறார்
நீக்கு
பதிலளிநீக்குஜாதிக்குப் புதுப்புது விளக்கங்கள் கொடுக்கப்படும் காலம் இது. Unmai
நல்லதொரு பதிவு.ஜாதி அசிங்கத்தை பெருமை வேறு கொள்கிறார்களே!
பதிலளிநீக்குஉங்க பதிவு பதிவேறுவதற்கு நீண்ட நேரம் எடுக்கிறது. இவற்கு முன்பும் பின்னேட்டமிட முயற்சித்து முடியவில்லை.