பரியேறும் பெருமாள்

பார்க்க வேண்டிய படம், கொண்டாடப்பட வேண்டிய படம். ரஞ்சித் தயாரிப்பில் இயக்குநர் ராமின் உதவி இயக்குநராக இருந்த மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் முதல் படம். தரமான படம். மிக எளிமையான வழக்கமான கதையிலேயே ஜாதி எதிர்ப்பை சொல்லும் படம். படத்தின் தொடக்கத்தில் போடப்படும் மேற்கோள் "ஜாதியும் மதமும் மனித வாழ்விற்கே விரோதமானது". இதுவே மிகப்பெரிய பரவசத்தினை உண்டாக்கியது. வழக்கமாக புகைபிடிப்பது புற்று நோயை உண்டாக்கும், மது அருந்துவது உடல் நலத்துக்கு கேடு விளைவிப்பது என்ற எச்சரிக்கையும், இப்படத்தில் விலங்குகள் பறவைகள் துன்புறுத்தப்படவில்லை என்ற வாசகங்களுமே எல்லாப் படங்களின் தொடக்கத்தில் காட்டப்படும். அதனுடன் ஜாதி, மத எதிர்ப்பையும் ஒரு எச்சரிக்கையாக வைத்திருப்பது பெருஞ்சிறப்பாம். இன்னும் ஓர் சிறப்பு, இத்திரைப்படம் வணிக ரீதியிலும் வெற்றியை ஈட்டியுள்ளது மாரி செல்வராஜ் போன்ற படைப்பாளிகளுக்கு ஊக்கமளிக்கும் நிகழ்வாகும். இவரைப் போன்ற இன்னும் பல இயக்குநர்களுக்கு கதவைத் திறந்து விடும். 


எப்படி படத்தின் தொடக்கத்தில் போடப்படும் எச்சரிக்கையைக் கண்டு குடிப்பவர்களும் புகைப்பவர்களும் திருந்தப் போவதில்லையோ அது போலவே இந்த ஜாதி மத எதிர்ப்பைச் சொல்லும் மேற்கோளைக் கண்டு ஜாதிமதவெறியர்களும் திருந்தப் போவதில்லை. எனினும் ஒரு பண்பட்ட சமத்துவ சமுதாயத்தின் அடையாளமாக குடி/புகை எதிர்ப்பு இருப்பதைப் போலவே இதைப் போன்ற ஜாதிமத எதிர்ப்பும் இருக்க வேண்டும். இது போல் எல்லாத் திரைப்படத்தின் தொடக்கத்திலும் போட வேண்டும். 

நெறியாள்கை, காட்சிப் படிமங்கள், இசை இம்மாதிரியான தொழில்நுட்பம், நேர்த்திகள் பற்றியெல்லாம் எனக்கு எதுவும் தெரியாது. படம் பார்ப்பதால் ஏற்படும் உணர்வுகள், நினைவுகள் பற்றி மட்டும் எழுத விரும்புகிறேன். இந்தப் படத்தில் எந்த ஜாதியின் பெயரும் குறிப்பிடாமல் ஜாதியின் புறக்கணிப்பு அது நிகழ்த்தும் வன்முறைகளப் பற்றி ஜாதியத்தின் கொடுமை தெரியாதவர்களுக்கு உணர்த்த முயற்சிக்கிறது. ஜாதியின் கொடுமை தெரியாதவர்கள் யார் ? ஜாதியெல்லாம் இப்போது இல்லை என்பவர்கள், அல்லது ஜாதிக் கொடுமையை நிகழ்த்துகிறவர்கள், அதைக் கண்டு கொள்ளாதவர்கள், அதை மறைமுகமாக அல்லது நேரடியாக ஆதரிப்பவர்கள் அல்லது ஜாதி சமூகத்தில் நிகழ்த்தும் வன்முறைகள், புறக்கணிப்புகள் போன்றவற்றைக் கண்டு கொள்ளாமல் அது தரும் சலுகைகளை அனுபவிப்பவர்கள் என ஜாதியத்தை எதிர்க்காதவர்களுடன் உரையாட முயற்சி செய்கிறான் பரியேறும் பெருமாள் என்ற தலித்.(தலித் என்றால் ஜாதி அன்று. ஜாதியத்தை எதிர்க்கும் ஒரு நிலைப்பாடு).

ஜாதி எங்கு இருக்கிறது ? சரியாகக் கேட்டால் ஜாதி எங்குதான் இல்லாமல் இருக்கிறது ? எல்லா இடத்திலும் இருக்கிறது. ஜாதியை ஆதரிப்பவனிடம் மட்டுமல்ல ஜாதியை எதிர்ப்பவனிடம் கூட ஒளிந்து கொண்டிருக்கிறது. நமக்கே தெரியாமல் நம்மிடம் இருப்பதுதான் ஜாதி. நீங்களே மறந்தாலும் வேறு யாரோ ஒருவர் வந்து உங்களிடம் நினைவூட்டுவார்.10 வயதுச் சிறுவனிடமிருந்து நாளை சாகப் போகின்ற கிழவன் வரை ஆண் பெண் பேதமின்றி எல்லோரிடமும் பரவிக் கிடக்கிறது. இப்படி இருக்கும்போது ஜாதியத்திற்கு எதிரான படத்தை நெஞ்சார வரவேற்க வேண்டியது நமது கடமை.

இதில் பரியனாக நடித்த கதிரின் முதல் படம் மதயானைக் கூட்டம். அப்படம் ஒரு ஜாதிப்பெருமையை போற்றூம் படம் என்று கேட்டிருக்கிறேன். அந்தப் படத்தின் இயக்குநர் பிறன்மலைக் கள்ளர் வாழ்வியலைக் காட்டியவர் என்று ஜாதியவாதிகள் ஃபேஸ்புக்கில் பெருமிதமாகப் பதிவு செய்திருந்தனர்.

பரியேறும் பெருமாள்

படம் எனக்கு ஓரளவுக்குத்தான் பிடித்திருந்தது. ஜாதி என்ற சமூக மனநோய்க்கு எதிராக இன்னும் காரமாக இருந்திருக்க வேண்டும் என்று தோன்றியது. இந்தத் திரைப்படத்தைப் பார்த்த எந்த ஜாதிவெறியனும், அல்லது ஜாதியை உள்ளுக்குள்ளே ஆதரிப்பவனும் குற்ற உணர்வு கொள்ள மாட்டான். தமிழ்த்திரையுலகின் வணிகத்திரைப்படங்களுக்குரிய எல்லைகளை பரியேறும் பெருமாள் தாண்டாமலேயே நின்றுவிட்டான். ஜாதியை வாழ்க்கையாகக் கொண்டவர்கள் இப்படத்தில் காட்டப்படுவதைப் போல இருக்க மாட்டார்கள். இரண்டு மடங்கு கொடியவர்களாகவும் தான் தீண்டத்தாகாதவர்களாகக் கருதுகிறவர்களிடம் அருவருப்பு உடையவர்களாகவும் இருப்பார்கள்.

படம் தொடங்கும்போது பரியனும் அவனது நண்பர்களும் ஒரு கலங்கிய சிறிய குட்டையில் ஊர்ப் பெருமையைப் பாடிக் கொண்டே தமது வேட்டை நாய்களைக் கழுவிக் கொண்டிருக்கின்றனர். ஆனால் புளியங்குளம் என்ற அவர்களது ஊர் அவர்கள் பாடியதைப் போல் இல்லாமல் பொட்டல்காடாக இருக்கிறது. அப்போது இன்னொரு வேட்டைக் குழுவினர் வருகின்றனர். பரியன் தாங்கள் வேட்டையாடுவது அவர்களுக்கு ஏற்கெனவே பிடிக்காமல் இருப்பதாலும் அவர்கள் வருவதாலும் அங்கிருந்து கிளம்பி விடலாம் என்று சொல்லி அவனது நண்பர்களிடம் வற்புறுத்தி அனைவரும் வேண்டா வெறுப்பாகக் கிளம்புகின்றனர். இன்னும் எத்தனை நாளுக்கு இவர்களிடம் பயந்து போவது என்றும், அவங்ககிட்ட வயலும் வரப்பும் நம்மகிட்ட வாயும் வயிறும் இருப்பதாலும், உங்கப்பனும் ஆத்தாளும் அவங்க தோட்டத்துக்கு உழவுக்கு போவதை நிறுத்தும் வரையில் நாம் இப்படித்தான் இருக்க வேண்டும் என்றும் பேசிக் கொள்கிறார்கள். 

அங்கே வரும் இன்னொரு வேட்டைக் குழு எங்க வந்து எவ்ளவ் திமிரா நாய வச்சு வேட்டையாட்றானுங்க பாரேன். இதுக்கு இன்னைக்கே ஒரு முடிவு கட்டணும் என்று சொல்லியவாரே அவர்கள் பயன்படுத்திய குட்டையில் அனைவரும் சிறுநீர் கழிக்கின்றனர். அந்த இடத்திலிருந்து சிறிது தொலைவு சென்ற பிறகு பரியன் தனது ""கருப்பி" (நாய்)யைக் காணவில்லை என்று உணர்கிறான். இன்னொருவன் அந்தப் பயலுக மேலதான் சந்தேகமாக இருக்கு என்று கூறுகிறான். அப்போது ரயில் சத்தம் கேட்க அனைவரும் ரயில் தண்டவாளத்தை நோக்கி ஓடுகிறார்கள். அங்கே தண்டவாளத்தில் கருப்பியைக் கட்டி வைத்திருக்கிறார்கள். பரியன் அதை நெருங்குமுன் ரயில் வந்து கருப்பியை சிதைத்து விட்டுப் போகிறது. ஜாதியின் வன்மத்தைக் காட்டும் ஒரு காட்சி இது. கருப்பியைப் பாடும் பாடலில் வரும் ஒரு வரி. உன்னைக் கொன்னது யாருன்னு எனக்குத் தெரியும். அங்க செத்தது யாருன்னு அவனுக்கு மட்டும்தா தெரியும். 


கருப்பி கொலையுண்டபோது
பரியேறும் பெருமாள் என்பது வினைச்சொல் என்று நினைத்திருந்தேன். அது வெறும் அந்தக் கதாபாத்திரத்தின் பெயராக மட்டும் இருந்தது ஏமாற்றமாக இருந்தது. பரியேறும் பெருமாள் BABAL மேல ஒரு கோடு என்று திரைப்படத்தில் இடையிடையே சொல்கிறார்கள். 13 வருடங்களுக்கு முந்தைய (2005) கல்லூரிக் காலத்தில் நடப்பது போல் படம் எடுக்கப் பட்டிருக்கிறது. திருநெல்வேலி நகரில் சட்டக் கல்லூரிக்கு படிக்க வரும் பரியேறும் பெருமாள் தான் படித்து விட்டு டாக்டராக விரும்புகிறேன் என்று சொல்கிறான். BABAL படித்தால் டாக்டராக முடியாது என்று கல்லூரியின் முதல்வர் கூற, நான் டாக்டர். அம்பேத்கர் மாதிரி ஆகணும்னு சொன்னேன் சார் என்று சொல்கிறான். 
இப்படி அண்ணலின் பெயரைச் சொல்லுமளவிற்கு தெளிவானவனாக இருப்பவன் படிப்பதில் மிகவும் ஆர்வமுடையவனாக இருக்க வேண்டும். ஆனால் பரியன் அப்படியொன்றும் ஆர்வமுடையவனாகக் காட்டப்படவில்லை. ஆங்கிலம் தெரியாமல் சிரமப்படுவது எல்லா தமிழ் வழி மாணவர்களுக்கும் ஏற்படும் இன்னலே ஆகும். வகுப்பில் பரியனும் ஆனந்தும் பேராசிரியர் வகுப்பெடுக்கும் போது குறிப்புகளை எழுதத் தெரியாமல் வெறும் முட்டையாக போட்டுத்தள்ளி மாட்டுகிறார்கள்.



பரியனுக்கு ஆங்கிலமே வராது. காப்பியடித்துத்தான் தேறியதாகவும் கூறுகிறான். அப்படி இருப்பவன் ஜோ இவனுக்கு ஆங்கிலம் சொல்லிக் கொடுத்து இவன் தேர்வில் தேறுவது எல்லாம் நம்ப முடியாதவகையில் இருக்கிறது. கல்லூரிக் காட்சிகள் எல்லாமே மற்ற படங்களில் வருவது போல்தான் இருந்தது. 

ஜோவின் பெரியப்பா பையனாக வரும் ஒருவனும் இவர்களது வகுப்பிலேயே இருக்கிறான். அவன் இவர்களிருவரும் பழகுவதை காணாமல் இருந்து விட்டு திடீரென்று இடையில் மட்டும் வம்பு செய்கிறான். பரியனைக் கொல்ல வேண்டும் என்றும் ஜோவின் அப்பாவிடம் கூறுகிறான். இன்னொரு காட்சியில் பரியன் தேவையே இல்லாமல் வகுப்பில் இவனுடைய இடத்தில் அமர்ந்து கொண்டு சண்டையை இழுக்கிறான். எதற்காக என்பதே புரியவில்லை. 

ஜோ தன்னுடைய சொந்த அக்காவின் திருமணத்திற்கு வகுப்பில் யாரையுமே அழைக்காமல் பரியனை மட்டுமே அழைக்கிறாள். அங்கே இவன் மீது ஜாதி சமூகத்தின் தாக்குதல் நிகழ்கிறது. அதனால் நொறுங்கும் பரியன் ஜோவிடமிருந்து விலகியே செல்கிறான். பரியன் ஜோவின் மீது காதல் இல்லை என்று சொல்லாமல் சொல்லி விடுகிறான். ஜோவும் இவனைக் காதலிப்பதாக உறுதியாகக் காட்டப்படவில்லை. இதை ஒரு குழப்பமாகவே விட்டிருப்பதும் இனிமையாக இருக்கிறது. 

படத்தில் பிடித்தவை

இரண்டு பேர் படத்தின் மிகவும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியவர்கள். ஒருவர் குலதெய்வத்துக்குச் செய்வதாக நம்பிக் கொண்டு ஆணவக் கொலை செய்யும் முதியவர். ஜாதிவெறிக் கொலை செய்பவர்கள் கொம்பு வைத்துக் கொண்டு இருப்பவர்கள் அல்ல. நம்மிடையே வாழ்ந்து வரும் சராசரியான மனிதர்கள்தான் என்பதைக் காட்டும் சித்தரிப்பு. அதே நேரம் அவர்கள் எப்பேர்ப்பட்ட அயோக்கியத்தனமான எண்ணமும் மூட நம்பிக்கையும், வறட்டு தம்பட்டமும் உடையவர்கள் என்பதையும் எளிமையாகக் காட்டுகிறார்.



இன்னொருவர் பரியனின் அப்பாவாக வருகிறவர். இவரைப் பற்றி நினைத்தால் அழுகை வராத குறைதான். மிகவும். இவர் பேசும் காட்சிகள். வருகின்ற காட்சிகள். அழுகையை வரவைக்கும்.

நான் யார் என்ற பாடலில் பட்டியலினத்தவர் மீதான ஜாதிய சமூகத்தின் சமீப கால வன்முறை ஆணவக் கொலைகள் நினைவுபடுத்தப்படுகின்றன. இது தவிர படத்தில் ஆங்காங்கே நீங்க நாங்க என்று வேறுபாடு காட்டும் சமூகத்தினை நோக்கியும் வசனங்கள் வருகின்றன.


பிடிக்காதவை

எனக்கு அறவே பிடிக்காத இடம் பரியன் பகடிவதை (Ragging) செய்வதாகக் காட்டும் இடம்தான். பகடி வதை செய்பவன் என்னைப் பொறுத்தவரை ஒரு கொடிய மனநோயாளிதான். ஜாதி எதிர்ப்பை பதிய வைக்க நினைத்த இயக்குநர் இக்காட்சியை வைத்தது என்னைப் பொறுத்த வரையில் மன்னிக்கவே முடியாது. Ragging என்பது கல்லூரி மாணவர்கள் ஜாலிக்காக செய்வது என்று சாதாரணமாக எடுத்துக் கொள்ளலாம் என்றால், அதையெல்லாம் மனித உரிமை மீறலாகக் கருத முடியாது என்று சமூக நீதி பேசும் புரட்சிக்காரர்களுக்கே உறைக்க வில்லை என்றால் ஜாதித் தீண்டாமையைக் கடைப்பிடிப்பவர்கள் மட்டும் ஜாதியைத் தவறென்று ஒத்துக் கொள்வார்கள் என்று எதிர்பார்ப்பது என்ன நியாயம். ஏன் பரியன் ஒரு பெண்ணை கேலி (Eve Teasing) செய்வது போல் ஒரு காட்சியும், பாடலும் இல்லை. அதையும் பல கதாநாயகர்கள் செய்வது போல் செய்திருக்கலாமே? செய்திருந்தால் மொத்தப் படத்திற்கான மரியாதையும் கெட்டிருக்கும். அது போன்ற ஒரு செயலாகவே Ragging கருதப்பட வேண்டும். Ragging, Eve Teasing ஆகிய இரண்டுமே மனிதநேயத்திற்கு எதிரானது. 

பரியனைக் கொலை செய்ய முற்படும் ஜோவின் அப்பாவிடம் பரியன் சொல்வது, என்னய்யா பெரிய கௌரவம், உங்களின் ஜாதிவெறியை நான் தான் ஜோவிடம் சொல்லாமல் மறைத்து உங்கள் மரியாதையைக் காப்பாற்றினேன். இப்படிச் சொல்வதன் மூலம் ஜோ தனது குடும்பத்தினரின் ஜாதி வெறியைப் பற்றித் தெரியாத அப்பாவியாகவே இருப்பது போலவும், இப்படி ஜாதியத்திற்கு எதிரான ஒரு வசனம் வெறும் திரைப்படத்தின் கதையில் வருவது போலவும் சுருங்கி விடுகிறது. 



ஆக மொத்தத்தில் ஜாதியத்திற்கு எதிராக எடுக்கப்பட்டிருக்கும் இப்படம் வெற்றியடைந்தது மகிழ்ச்சி. ஆனால் இந்தத் திரைப்படம் நிறையப் பேருக்குப் பிடித்திருப்பதால் கொஞ்சம் யோசிக்க வேண்டியிருக்கிறது. நீங்கதான் சார் மாறணும் என்று பரியன் கேட்பதாக முடியும் இப்படம், ஜாதியைக் கடைப்பிடிப்பவர்களுக்கு எந்த உறுத்தலையும் தரவில்லை என்பது கவலைப்பட வேண்டிய செய்தி. 

இயக்குநர் மாரி செல்வராஜ், தயாரிப்பாளர் பா. ரஞ்சித் ஆகிய இருவருக்கும் அன்புகளும் வாழ்த்துகளும்



Download As PDF
Bookmark and Share
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

#Metoo எதிர்ப்புப் புரட்சியாளர்கள்

ஒருவர் தனக்கு நடந்த கொடுமையை வெளியே சொன்னால் எப்படி எடுத்துக் கொள்கிறார்கள் அதற்கு என்ன எதிர்வினை ஆற்றுகிறார்கள் என்று பாருங்கள். 

இப்படிப்பட்ட நகைப்படங்களை உருவாக்கியவர்கள்தான் சமூக வலைத்தளங்களில் அரசியல்வாதிகளுக்கு எதிராக கருத்து சொல்கிறவர்கள்.

மனநோய் முற்றிய அறிவாளிகள்








Download As PDF
Bookmark and Share
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

ராட்சசன்

காதல் காட்சிகள், பாடல்கள், நம்ப முடியாத சண்டைக்காட்சிகள் அதிகம் இல்லாத தொய்வில்லாத விறுவிறுப்பான திரைப்படம். படம் பார்க்காதவர்கள், விறுவிறுப்புடன் கதை தெரியாமல் படத்தை சுவைக்க நினைப்பவர்கள் மேற்கொண்டு இதைப் படிக்க வேண்டாம்.

இருந்தாலும் தமிழ்ப்படங்களில் தொடர்ந்து வரும் அபத்தங்களை காண முடிந்தது. 

விஜியிடம்(அமலா பால்) இருக்கும் குழந்தை அவருடையது இல்லை. அவளுடைய அக்காவுடைய குழந்தை. இதன் மூலம் நாயகியின் கன்னித்தன்மை உறுதி செய்யப்பட்டு, தமிழ்ப்படநாயகன்/தமிழ் ரசிகர்களின் மனம் கோணாமல் கதை செய்யப்பட்டுள்ளது.

பள்ளியில் சரியாக படிக்காத மாணவிகளை அச்சுறுத்தித் துய்க்கும் கணக்கு வாத்தி இன்பராஜ் பள்ளிக்கூடத்தின் வகுப்பறைலேயே வகுப்பு முடிந்ததும் அதுவும் பகலிலேயே செய்வானாம். நம்ப முடியாத காட்சியமைப்பு. இந்த வாத்தியால் பாதிப்புக்குள்ளான மாணவி ஷர்மி அவன் அழைக்கும்போதே எதிர்க்காமல் 11வது தேர்ச்சி அடைய வேண்டும் என்ற தந்நலத்துக்காக பணிந்து விட்டு இன்னொரு மாணவியைத் தேடி காவல்துறை வந்தபோதுதான் தன்னை வற்புறுத்தித் துய்த்தவனைக் காட்டிக் கொடுக்கிறாள். எனவே ஷர்மி ஒரு விபச்சாரி என்றுதான் கருத முடியும். (#metoo எதிர்ப்பாளர்களின் கருத்துக்கு நன்றி). ஷர்மி என்ற அந்த மாணவியைப் போலவே வேறு வழியில்லாமல்தான் பாலியல் சுரண்டலை  ஏற்றுக் கொள்ளும் பெண்கள் தான் பாதுகாப்பான வாழ்க்கையில் இருக்கும்போதுதான் #Metoo என்று தனக்கு ஏற்பட்ட அனுபவத்தைச் சொல்ல முடியும். அதைக் கூடப் புரிந்து கொள்ள மாட்டார்கள்.  ஆனால் படத்தில் இது மாதிரி நடந்தால் பரிதாபப்படுவார்கள். 



ஷர்மியை மருட்டி அனுபவித்தது போல் நம்ம கதாநாயகன் அருணின் மாமா மகளான அம்முவையும் அனுபவிக்க நினைக்கிறான் இன்பராஜ். கதாநாயகனின் மாமா மகள் என்பதற்காக கதவைச் சாத்தியவுடன் தொடங்காமல் அச்சிறுமி அழுவதையும் சம்மதிக்கவும் 1 லிருந்து 5 வரை எண்ணுகிறான். அப்பதானே நாயகன் வந்து மாமா மகளின் கற்பைக் காக்க முடியும்.  அதே போல் நாயகன் வந்து காப்பாற்றியும் விடுகிறார். 

கொலையாளியின் ஃப்ளாஷ்பேக்கில், தொடர்கொலைகளுக்கான காரணம் பிடிபடவேயில்லை. கிறிஸ்டோபர் ஹார்மோன் குறைபாட்டினால் ஏற்பட்ட தனது அழகற்ற தோற்றத்தினால் பள்ளியில் அனைவராலும் ஒதுக்கப்பட்டாலும், தன்னை நட்புடன் ஆதரிக்கும் சோஃபியா என்ற பெண்ணிடம் காதல் வயப்படுகிறான். அதை அவளிடம் சொல்ல அவள் மறுக்கிறாள். அவனிடமிருந்து விலகுகிறாள். அவன் திரும்பத் திரும்ப அவளிடம் வற்புறுத்த பொறுமையை இழக்கும் அவள் கிறிஸ்டோபர் ஆண்மையற்றவன், திருமணம் செய்ய தகுதி இல்லாதவன் என்று அழுது கொண்டே ஆத்திரத்தின் உச்சியில் கூறிவிடுகிறாள். 

அவன் வீட்டில் தனது உடலைக் கண்ணாடியில் கண்டு அழுகிறான். அவனது அம்மா மேரி அவனைத் தேற்றி பள்ளிக்கு அனுப்புகிறார். பள்ளியில் அவனது வகுப்பு மாணவர்கள் சுவரிலும் கரும்பலகையிலும் அவனைக் கேலியாக வரைந்து அவனை மொட்டை (ஆண்மையற்றவன்) என்று பரிகசித்துக் கைகொட்டிச் சிரித்து அவனை அவமானப்படுத்தி துரத்துகின்றனர். இப்படி எல்லா ஆண்களும் பெண்களும் ஒன்று கூடி நின்று ஒரு உடல் குறைபாடுடையவனைக் கிண்டல் செய்வார்கள் என்று நம்ப முடியவில்லை.


                                   
அந்த மனநோயாளி கிறிஸ்டோபர் எதற்கு பள்ளி மாணவிகளைக் கொலை செய்கிறான் என்பதே புரியவில்லை. அவனை அவமானப்படுத்தியவர்கள் அவனுடம் படித்த மாணவ மாணவிகளே. அவர்களைத் தேடிப்போய்க் கொல்லாமல் இந்தச் சிறுமிகளைக் கொல்வது ஏன் என்றுதான் புரியவில்லை. ஆறாது சினம் படத்தில் கொலையாளி தனக்குக் கேடு செய்தவர்களின் இணையர்களைக் கொல்வான். அதிலாவது ஒரு சிறிய "அடிப்படை (அ)நியாயம்" இருந்தது. இவனை ஆண்மையற்றவன் என்று கேலி செய்தவர்கள் மாணவிகள் மட்டுமல்ல மாணவர்களும் கூடத்தான். மாணவர்கள்தான் இவனை அவமானப்படுத்தி உடையை உருவி ஓட விடுவார்கள். அதற்கு சிறுவர்களைத்தானே கடத்த வேண்டும், கொல்ல வேண்டும். 

                            

சிறுமிகள் என்றால்தானே அதிக பதட்டத்தையும் ஆத்திரத்தையும் பார்ப்பவர்களுக்கு ஏற்படுத்த முடியும் என்பதற்காக இருக்கலாம். 

மேரி ஏன் அந்தச் சிறுமியைக் கொல்வதற்கு மகனைத் தூண்டினார் என்பதும் இவனும் இவளுடைய அம்மாவும் ஒரு சிறுமியைக் கொன்ற குற்றத்திலிருந்து எப்படி வெளியே வந்தார்கள் என்பதும் புரியவில்லை.  இவன் காதலை மறுத்த அந்த சோபியாவை கொலை செய்வதற்கு இவனது அம்மா மேரியும் உதவுகிறார். அவன் கொல்வதை ரசிக்கிறாள். என்ன அம்மாவோ ? பள்ளியில் மற்றவர்கள் கிறிஸ்டோபரை அவமானப்படுத்தியதற்கு சோஃபியா காரணம் என்பதாகவும் தெரியவில்லை. இத்தனைக்கும் அந்த சோபியா தான் ஆத்திரத்தில் பேசிவிட்டதாகவும், அடுத்த நாள் காய்ச்சல் காரணமாகத்தான் பள்ளிக்கு வரவில்லை என்றும் கூறுகிறாள். இருப்பினும் மேரியும், கிறிஸ்டோபரும் அவளைக் கொல்கின்றனர். ஆண்களின் கோபத்திற்கும், புறக்கணிப்புக்கும் இப்படியெல்லாம் பெண்களைக் கொல்ல வேண்டுமென்றால் எத்தனை பெண்கள் சாக வேண்டுமோ ? 

அந்த மேஜிக் நடத்தும் மேரியைப் பாக்க ரெமோ படத்தில் வரும் நர்சைப் போலவே இருக்கிறார்இன்னும் எத்தனை ஃப்ளாஷ்பேக்-களில்தான் ஊட்டி கான்வென்ட் பள்ளியைக் காட்டப் போகிறார்களோ ?

அருண் (விஷ்ணு விஷால்) வெங்கட்டின் துப்பாக்கி முனையில் கொலையாளி சிக்கி இருக்கும்போது யோசிக்காமல் சுடச் சொல்கிறான். ஆனால் அவனே கையில் துப்பாக்கி வைத்துக்கொண்டே அந்தக் கொலையாளிடம் பேச்சு நடத்துகிறான் அருண். அப்பதான க்ளைமாக்ஸ் சண்டை வைக்க முடியும் என்று தோன்றுகிறது.

இவன் மேஜிக் செய்பவன் பியானோ வாசிப்பவன் என்றெல்லாம் திறமை வாய்ந்த கலைஞனாக இருந்தாலும், ஆறாத சிறுவயது அவமானங்களை அனுபவித்திருந்தாலும் சிறுமிகளைக் கொடூரமாக கொலை செய்வதால் இவன் மீது கரிசனமே கொள்ள முடியாத கதை மாந்தனாக இருக்கிறான் ராட்சசன் கிறிஸ்டோபர். 
Download As PDF
Bookmark and Share
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

#எனக்கும் என்ற #Metoo இயக்கம் - முற்போக்குவாதிகளின் முரட்டுப் பிடிவாதம்


இந்த #Metoo இயக்கம் அதன் ஹாஸ்டாக் மூலம் ஃபேஸ்புக், வாட்ஸ்ஆப் ஆகிய நண்பர்களின் மனப்போக்கு குறித்து ஒரு தெளிவு கிடைத்தது. இன்னும் 500 ஆண்டுகளுக்கு தமிழ் நாட்டில் ஜாதி ஒழிய வாய்ப்பில்லை என்று சொல்கிறார்கள். 500 ஆண்டுகளுக்குப் பின் ஜாதி ஒழிந்து சமத்துவம் கிடைத்தாலும் பெண்களின் நிலையில் மாற்றம் ஏற்பட வாய்ப்பில்லை போல் தெரிகிறது. இன்னும் ஆயிரம் வருடங்கள் ஆனாலும் பெண்களின் பாலியல் வன்முறைக்கான புரிதலை ஆண்களுக்கு ஏற்படுத்த முடியாது என்பது தெரிகிறது. 

சமூக வலைத்தளங்களிலும் சரி, சமூகத்திலும் சரி ஏதாவது ஒரு விவகாரமோ விவாதமோ பொதுத்தளத்தில் வருகிறது என்றால் மிக மோசமான வகையில் கிண்டலடிக்கப்படுகிறது. இது ஜனநாயகத்தில் அடக்கம் என்றாலும் கூட அதன் விளைவுகளை நோக்குகையில் அது தவிர்க்கப்பட வேண்டியதே என்று தோன்றுகிறது. ஏனெனில் விதவிதமான கருத்துக்கள் மோதும்போதுதான் நியாய அநியாயங்கள் அறியப்பட்டு உண்மை புலப்படும். ஆனால் வெறுமனே போன்மிகள்(Memes) உருவாக்குகிறேன் பேர்வழி என்று வடிவேலு, கவுண்டமணியின் படங்களைப் போட்டு எதுகை மோனையாக ஒரு பிரச்சனையை நக்கலடிப்பதால் என்ன விளைகிறது. பொழுதுபோக்குக்காக சமூக வலைத்தளங்களில் இருப்பவர்கள் உண்மையான சமூகப் பிரச்சனையை உணராமல் அதை நக்கலடித்து அதன் அடிப்படையையே மாற்றுகின்றனர். அதை ஒரு பிரச்சனையாகவே அவர்கள் பார்க்க மறுக்கின்றனர். 

பாலியல் வன்முறைக்கு எதிரான #Metoo ஏன் இந்தளவுக்கு கிண்டலடிக்கப்படுகிறது. சில சமாச்சாரங்கள் உணர்வுப்பூர்வமாகவே அணுகப்பட வேண்டும். ஆனால் இந்தளவுக்குக் கிண்டலும் நக்கலும்?.  ஒருவர் ஏன் இறைமறுப்பாளராகிறார் ? மதம் மனிதன் மீதான கொடுமையைச் செய்வதால்தானே ? முற்போக்குவாதம், இறைமறுப்பு போன்ற பிறப்பினால் அல்லாமல், தானாக விரும்பி ஏற்றுப் பின்பற்றும் கொள்கைகளைக் கொண்டவர்கள் முதலில் மனிதநேயராக இருக்க வேண்டும். ஆனால் முற்போக்குவாதியாக இருந்து கொண்டே ஜாதிவெறியர்களும் மதவெறியர்களும் முற்போக்குவாதம் பேசும் பெண்களை கேவலப்படுத்துவது போல் செய்கின்றனர். பாலின அடிப்படையில் அடக்கு முறையை அனுபவிப்பவர்கள் ஆண்களை விடவும் பெண்களே. பெண்கள் ஒரு நிலைக்குச் செல்ல வேண்டுமானால் ஆண்களை விட அதிகமான சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடுகிறது. அதில் பாலியல் ரீதியிலான சுரண்டல்கள், கேலிகள், புறக்கணிப்புகள் மிகவும் சாதாரணம். இதெல்லாம் அறிந்தும் கூட முற்போக்குவாதிகள் #நானும்கூட (#Metoo) என்ற பாலியல் வன்முறைக்கு எதிரான பெண்களின் போராட்டத்தை ஏற்றுக் கொள்ள மறுக்கின்றனர். 

பெண்கள் பாலியல் வன்முறைக்கு எதிராக #Metoo சொன்னால் அதை ஆதரிக்க மாட்டேன் என்கின்றனர். ஆனால் பெண்கள் சபரி மலைக்குப்போவதை நான் ஆதரிப்பேன் என்கிறார்கள். ஏன்  அவர்கள் சமத்துவ, சமூக நீதி ஆதரவாளர்கள். ஆக பெண்கள் முட்டாள்தனத்திற்கு வேண்டுமானால் சமத்துவம் என்று ஆதரவு தரலாம். ஆனால் பெண்கள் பாலியல் வன்முறைக்கு எதிராக விழிப்புணர்வுக்காக ஒரு போராட்டம் நடத்தினால் அதை நக்கல் செய்யலாம். நல்லவேளை பழக்க தோஷத்தில் இத்தனை வருடங்களாக ஐயப்பன் கோயிலுக்குப் போகாத பெண்கள் இப்போது மட்டும் ஏன் போக வேண்டும் என்கிறார்கள் என்று யாரும் கேட்கவில்லை.

சபரி மலையில் பெண்கள் நுழைவுக்கு வழக்கு நடத்தி வென்ற காவிகள் பெண்களை வைத்தே பெண்கள் சபரிமலைக்குச் செல்வதை எதிர்த்து விளம்பரப் போராட்டம் நடத்துவதைப் போல் நான் பெண்களுக்கு ஆதரவானவன், பாலியல் வன்முறைக்கு எதிரானவன் என்று சொல்லிவிட்டு #Metoo க்கு எதிராக பெண்களே எழுதியவற்றை பகிர்ந்து தனது பாலியல் வன்முறைக்கு எதிராக பெண்களின் சிறிய முன்னெடுப்பைக் கூட எட்டி உதைத்து தனது வெறுப்பைக் காட்டுகின்றனர். பாப்பாத்திக்கு நடந்தது பாலியல் வன்முறை என்றால் கூட அதை ஏற்கமாட்டேன். குற்றச்சாட்டு சொன்னவரையே தேவடியா தேவடியா என்று திட்டுவது எல்லாம் என்ன வகை மனிதம் என்பது தெரியவில்லை. 

இப்படித் திட்டுகிறவர்கள் சிலர் ஃபேஸ்புக்கில், ட்விட்டரில் தனது அடையாளப்படமாக, சே குவேராவையும், அண்ணலையும், பெரியாரையும், கலைஞரையும், ஸ்டாலினையும், பிரபாகரனையும் வைத்துக் கொண்டிருந்தார்கள். எப்படி கொஞ்சமும் மனசாட்சியே இல்லாமல்? நீங்கள் திட்டுவதால் உங்கள் தலைவர்களுக்கல்லவா கெட்ட பெயர் ? முற்போக்குவாதிகள் மீதான மரியாதையே குறைந்து விட்டது. அண்ணல் பெண்களுக்கு செய்ததென்ன ? ஆ பெரியார் பேசாத பெண்ணியமா ? பெண்களுக்கு 33% என்று கலைஞர் கொண்டு வராத திட்டமா ? என்றெல்லாம் பெண்ணியத்தைப் புகழ்ந்து கொண்டு பெண்களே தங்களுக்காகப் பேசும்போது அதை ஆதரிக்காமல் பெண்களை இழிவு செய்வதில் ஜாதிவெறியர்களுக்கும் சங்கிகளுக்கும் சற்றும் இளைத்தவர்களல்ல இவர்களில் சிலர். 

பரியேறும் பெருமாள் படம் பார்த்தவர்களுக்குத் தெரியும், பரியனின் அப்பா பெண் வேடமிட்டு கரகாட்டம் ஆடும் கலைஞர். அவரை பரியனின் கல்லூரியில் வேட்டியை அவிழ்த்து ஓட விடுவார்கள். எல்லோரையும் கலங்கச் செய்யும் காட்சி இது. கரகாட்டத்தில் பெண்களுடன் ஆபாசமாக ஆடினாலும் அவரை அவமானப்படுத்தும் நோக்கில் வேட்டியை உருவினால் அதை அவமானமாகவே கருதுவோம். ஆபாசமாக ஆடுகிறவனுக்கு என்ன மான அவமானம் என்று யாருக்கும் தோன்றவில்லை. ஆனால் இதே இடத்தில் ஒரு பெண்ணை வைத்துப் பார்த்தால் எத்தனை பேர் அதை அவமானம் என்று ஏற்றுக் கொள்வர் ? 

#Metoo எதிர்ப்பாளர்களின் எதிர்ப்புக்கள்:

சின்மயி குற்றம் சாட்டுவது பார்ப்பன சதி. அவர் ஒரு பாப்பாத்தி. வைரமுத்து மீது அபாண்டமாக புகார் சொல்கிறார். ஆண்டாள் விவகாரத்தை வைத்து அவரைப் பழி வாங்குகின்றனர். அவர் ஏற்கெனவே பொய் குற்றச்சாட்டு கூறியவர். வைரமுத்துவை திருமணத்திற்கு அழைத்து அவர் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கியது ஏன் ?

அவர் இட ஒதுக்கீட்டுக்கு எதிராக கருத்து சொன்னது, Highyengar என்று ஜாதிப் பெருமை பேசியது, மீனவர்களைப் பற்றிக் கூறியது பற்றி ஏற்கெனவே சில வருடங்களுக்கு முன்னர் எழுதியிருக்கிறேன்.  2004 - இல் ஜெயலலிதா ஆட்சி. ஒரு வேளை அப்போது குற்றம் சுமத்தியிருந்தால் மட்டும் ஆதரித்திருக்கப்போகிறார்களா பார்ப்பன எதிர்ப்பாளர்கள். இதே வைரமுத்து அல்லாமல் எஸ்.வி. சேகர், எச். ராசா மீது குற்றம் சுமத்தியிருந்தால் கதை வேறாக இருந்திருக்கும். எனவே இதை எப்பாடு பட்டாவது பாஜகவுடன் முடிச்சுப் போட்டுவிடப் பார்க்கிறார்கள். அதைக் கொண்டே பார்ப்பன எதிர்ப்பு மூலம் #Metoo வை எதிர்த்துக் கொண்டே சமாளித்து விடலாம். 

நடிகை ஸ்ரீரெட்டி #Metoo சொன்னபோது சிரித்தவர்கள் சின்மயிக்கு மட்டும் பொங்குகிறார்கள்

அதைச்செய்தவர்கள் இதைச்செய்கிறார்கள், அதைச் செய்யாதவர்கள் இதைச் செய்கிறார்கள் என்ற எதுகை மோனை தனக்குப் பிடிக்காத எல்லோரையும் ஒரே கோட்டில் நிறுத்தப் பயனபடும் வசனம். ஸ்ரீரெட்டிக்கு சிரித்தவர்கள் இப்போதும் சின்மயி சொன்ன #Metoo வுக்கு சிரிக்கிறார்கள். ஸ்ரீரெட்டிக்கு ஆதரித்தவர்கள்தான் சின்மயிக்கும் ஆதரிப்பார்கள். ஸ்ரீரெட்டி ஆந்திரா என்பதால் இங்கே பெரிதாகத் தெரியவில்லை. வைரமுத்து, சின்மயி நம்ம ஊர் பிரபலம் என்பதால் இங்கே பரபரப்பானது. ஸ்ரீரெட்டி மட்டுமல்ல தனுஸ்ரீ தத்தா சொன்ன போதும் யாரும் இங்கே கண்டுகொள்ளவில்லை.


இது பார்ப்பன சதி. மேலும் படுக்கையைப் பகிர்ந்து விட்டு காரியம் சாதித்துக் கொண்டு இப்போது புகார் சொல்வது தேவிடியாத்தனம். வைரமுத்து மீது வன்மம் கொண்ட பார்ப்பன சதி.

RSS ஆதரவாளராக மட்டுமன்று, அவர் ஒரு RSS பயங்கரவாதியாகவோ, ISIS பயங்கரவாதியாகவோ இருந்தால் கூட ஒரு பெண்ணாக அவர் மீது பாலியல் வன்முறையை ஏற்க/ஏவ முடியாது. அவர் பார்ப்பனப் பெண்ணாக இருப்பதால் பாலியல் சீண்டல்களை எதிர் கொண்டிருக்க முடியுமா ? அவர்களுக்கு மட்டும் என்ன கொம்பா இருக்கிறது ? இவ பாப்பாத்தி இவளை நாம சீண்டக்கூடாது என்றுதான் ஆண்கள் நினைக்கிறார்களா ? மேலும் சின்மயி வைரமுத்து மட்டுமன்றி பிற 5 பார்ப்பனக் கலைஞர்கள் மீதும் குற்றம் சாட்டியிருக்கிறார். அதே போல் சின்மயி அல்லாது வேறு சில பெண்களும் வைரமுத்து மீது குற்றம் சாட்டியுள்ளனர். இது பார்ப்பன சதி என்பது சொல்பவர்களின் தனிப்பட்ட வன்மத்துக்கான சாதகமான பொய்.  வைரமுத்து ஒன்றும் திராவிட சித்தாந்தவாதியல்ல. கலைஞருக்கு நெருக்கமாக இருந்தார். ஆனால் திராவிடப் பகைவர்களான பாஜக வின் தருண் விஜய், பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோருடன் மேடையைப் பகிர்ந்து பாராட்டித் தள்ளியவர். இவருக்கு முதன் முதலாக ஆதரவு தெரிவிக்கிறேன் என்று தேவையில்லாமல் சின்மயிக்கு எதிராக கருத்து சொல்லி இதை ஆரிய திராவிட பிரச்சனையாக மாற்றியவர் சுப. வீரபாண்டியன். எனவே இப்பிரச்சனையில் முதலிலேயே சின்மயிக்கு எதிராக பார்ப்பன/மேட்டுக்குடி/வேசி என்ற கருத்துக்களை நம்பியவர்கள் அதை நிரூபிக்கவே முனைகின்றனர். 


#Metoo என்பது படுத்து காரியம் சாதித்துவிட்டு பின்னர் கூவும் தேவிடியாத்தனமல்ல. மிகவும் நெருங்கியவர்களால் ஏற்படுவது, காதலர்கள், நண்பர்கள், அயலவர்கள், அண்டை வீட்டினர், பொது இடங்கள், பணியிடங்கள், கல்வியகங்கள், அரசுதனியார் அலுவலகங்களில், இணையர்களால் அவர்களது அண்ணன், தம்பி, அப்பா, சிற்றப்பா, மாமா, தாத்தாக்களால் ஏற்பட்ட சிறிய பாலியல் சீண்டல்கள், தொல்லைகள், வற்புறுத்தல்கள், மருட்டல்கள், ஏமாற்றி துய்ப்பது, ஆசை வார்த்தை காட்டித் துய்ப்பது, போர்ன் படங்கள், வீடியோக்கள் அனுப்புவது, அனுப்பச் சொல்வது இப்படிப் பல வகையும் அடங்கும். சிறு குழந்தையாக இருந்த போது ஏற்பபட்ட மோசமான அனுபவம், பெண்களால் ஆண் குழந்தைகளுக்கு ஏற்பட்ட பாலியல் சீண்டல் என்று பலவும் இதில் அடங்கும். 

இது ஆண்களுக்கு எதிரான "பெண்ணியம்" இல்லை. பாலியல் வன்முறைக்கு ஆளானவர்கள் + பாலியல் வன்முறைக்கு ஆளாக்கியவர்கள் என்ற பிரச்சனை மட்டுமே. பாலினம் குறித்ததல்ல. இதைச் செய்தவர்கள் கண்டந் துண்டமாக வெட்டிக் கொல்லப்பட வேண்டியவர்களும் அல்ல. ஆளானவர்கள் நம் பரிதாபத்துக்கு உரியவர்களும் அல்ல. எல்லா இடத்திலும் நீக்கமற நடக்கும் ஒரு இழிசெயலுக்கு எதிரான விழிப்புணர்வு, செய்பவர்களுக்கு ஒரு அச்சத்தையும், செய்யப்படுகிறவர்களுக்கு ஒரு ஆறுதலையும் தரக்கூடிய கருத்தாக்கத்தின் பரவல். செய்தவர்கள் சிறைக்குச் செல்வது மட்டுமல்லாமல், வருத்தம் தெரிவித்தல், மன்னிப்பு கோருதல், சமரசம் போன்ற தீர்வுகளும் வருகின்றன.

அப்பவே சொல்லாமல்  இத்தனை வருடங்கள் கழித்து சொல்வதால் இது பொய் ?

கூடங்குளம் போராட்டத்தைக் கொச்சைப் படுத்தியவர்கள் கேட்ட கேள்விதான் இது. ஏன் அப்போதே எதிர்க்காமல் இப்போது எதிர்க்கிறீர்கள் என்றார்கள். எதையும் எதிர்ப்பதற்கு உகந்த காலமும் வேண்டுமே. அதற்கான உளவியல் பலம் வேண்டுமே. இப்போது புகார் சொல்பவர்களுக்கு நடந்ததெல்லாம் நேற்று நடந்தததில்லை. பல வருடங்களுக்கு முன்னர் நடந்ததே. 

14 வருடக்கணக்கில் ஒத்துக்கொண்டு ஒரு நாள் எதிர்த்தால் அது தவறா ? விருப்பமில்லாமல் நம் மீது நடக்கும் எல்லாவற்றையும் உடனே எதிர்த்து விடும் வலிமையும் சூழலும் எல்லாருக்கும் வாய்க்கிறதா ? கணவனாக இருந்தால் கூட அது விருப்பமில்லாமல் தொடர்ந்து செய்தால் பெண் சட்டத்தை நாடலாம் அல்லவா ? ஒரு முறை விருப்பமில்லாமல் நடந்த உடனே ஒரு பெண் போய் சட்டத்தில் முறையிடுவாரா ? பல நாட்கள் பார்த்து சலித்த பின்னர் வேறு வழியின்றி பொறுக்க முடியாமல்தானே வழக்கு போட முடியும் ?. அவர்களால் உடனே சொல்ல முடியவில்லை, அதற்கான இடமும் பக்குவமும் சமூகத்திடம் இருப்பதாக அவர்களும் நம்பவில்லை என்பதற்கு இந்த சமூகம்தான் வெட்கப்பட வேண்டும்.

2000 வருடங்கள் பார்ப்பன அடிமைத்தனத்தை எதிர்த்துப் போராடாமல் பார்ப்பனியத்தை அனுபவித்துக் கொண்டு இருந்த திராவிடர்கள் ஏன் கடந்த 150 வருடங்களாக மட்டும் போராடுகின்றனர் ?. இலங்கை சுதந்திரமடையும் முன்பே சிங்கள இனவெறிக்கு ஆளான ஈழத்தமிழர்கள் ஏன் 1970 க்கும் மேல்தான் ஆயுத இயக்கங்களைத் தொடங்கினார்கள் ?. இந்து மதத்துக்குள்ளையே இருந்து இந்து மத விடுமுறை நாட்களில் விடுமுறையையும் அனுபவித்துக் கொண்டு/ ஜாதி சலுகைகளையும் அனுபவித்துக்கொண்டு ஜாதியை/இந்து மதத்தை எதிர்ப்பது எப்படி நேர்மையோ அப்படியே காலம் கடந்து வெளிப்படும் பாலியல் வன்முறைக் குற்றச்சாட்டும் சரியானதே. ஊதியம் கொடுக்கும் முதலாளிக்கு எதிராக தொழிலாளிகள் சங்கம் அமைத்துப் பல வருடங்களுங்களுக்குப் பின்னர் போராடுவதில்லையா ?

உண்மையான நேர்மையான பெண்ணாக இருந்தால் அப்போதே அறைந்திருக்க வேண்டும்.

அதாவது பொண்ணுன்னா நெருப்பு மாதிரி இருக்கோணும். சுருக்கமா நம்மூர்ல கற்புக்கரசி, கண்ணகி, உத்தமி என்ற பெயர்படி எல்லோராலும் எதிர்பார்க்கப்படுகிறது. எதிர்க்கக் கூடத் தேவையில்லாமல் கொடூரமாகக் கொல்லப்பட்ட பெண்கள் எத்தனையோ இருக்க எப்படி இவர்களால் மனசாட்சி இல்லாமல் கேட்க முடிகிறதோ. அது நேரும் போது உடனே எதிர்வினை ஆற்றுமளவிற்கா எல்லா பெண்களும் இருக்கிறார்கள். அந்த அதிர்ச்சியிலிருந்தும், அவமானத்திலிருந்தும் மன அளவில் மீள்வதற்கே காலம் எடுக்கும். உயிர், உடல், உடைமை, பணி, மானம் என்ன எல்லாவற்றிற்கும் ஆபத்து நேரும். அச்சுறுத்தல் வரும். ஒவ்வொருவரும் சூழ்நிலைக் கைதிகளே. 

சில வருடங்களுக்கு முன்னர் டெல்லியில் ஓடும் பேருந்தில் தன்னை கிண்டலடித்ததை ஒரு பெண்(இந்தியாவின் மகள்) துணிச்சலுடன் எதிர்த்தாள். அவளை விட 7 குறைந்த ஒரு வெறிநாய் உட்பட 4 பேர் அவளை கொடூரமாக வன்கலவி செய்து அம்மணமாக வீதியில் வீசிச்சென்றனர். அவள் உயிருக்குப் போராடி இறந்தாள். குற்றம் செய்த போது அவனுக்கு 17 வயது நிரம்பவில்லை என்று 3 வருடங்கள் அவனைச் சிறையில் வைத்து சிறுவன் என்று அவனை விடுவித்து தையல் இயந்திரம் ஒன்றையும் பிழைப்புக்குக் கொடுத்து அனுப்பியது இந்திய நீதி. அவன் இந்நேரம் எத்தனை பேரின் முலைகளை ரவிக்கைக்கு அளவெடுக்கிறேன் என்று பிடித்தானோ தெரியவில்லை. இந்தக் கேவலத்தில் சமூக இருக்கும் போது நல்ல பெண்ணாக இருந்தால் உடனே எதிர்த்திருக்க வேண்டுமாம்.

ஆளுநர் மீதான பாலியல் புகார், எழுவர் விடுதலை, ரஃபேல் ஊழல், தூத்துக்குடி படுகொலை, குத்கா ஊழல், எடப்பாடி ஊழல் ஊடகங்கள் திசை திருப்புகின்றன.

தான் பொங்கும்போது அனைவரும் பொங்க வேண்டும். தான் கலாய்த்து நக்கலடிக்கும்போது எல்லோரும் சிரிக்க வேண்டும் என்று எல்லா இணையப் போராளிகளும் சொல்வதுதான். தனக்குப் பிடிக்காத விடயம் ஒன்று பொதுவான விவாதமாகும்போது இது ஊடகங்களின் விபச்சாரம், பணக்காரர்களுக்கு நடந்தால் மட்டுமே ஊடக வெளிச்சம் கிடைக்கிறது என்று பினாத்துவது இந்துத்துவர், திராவிடர், தமிழ்தேசியர், நடுநிலையர்கள், அரசியல் சார்பற்றவர்கள், நடிகர்களின் ரசிகர்கள் என்று எல்லாத் தரப்பினர்க்கும் கைவந்த கலை. ஊடகங்கள் எப்போதும் எதையுமே பரபரப்பாக்குவது தெரிந்ததுதான். எல்லா நாளிலும் ஊடக செய்திகளின் மூலமாகத்தானே நமது அரசியலைப் பேசுகிறோம். நாட்டின் பிரச்சனைகள் மக்களின் பிரச்சனைகள் எப்போதும் இருக்கின்றன. அவைகளை ஊடகங்களின் மூலமாகத்தான் அறியப்பெறுகிறோம். 

ஆனால் தனக்குப் பிடிக்காத ஒரு தலைப்பையோ, நபரையோ குறித்து ஒரு செய்தியோ விவாதமோ ஒரு வாரத்துக்கு செய்தி ஊடகங்களிலோ சமூக வலைத்தளங்களிலோ முன்னிலையில் இருந்தால், இந்த விபச்சார ஊடகங்களுக்கு வேறு வேலையே இல்லை என்று சலித்துக் கொள்வார்கள். ஆனால் இவர்கள் எப்போதுமே புரட்சிகரமாக மக்கள் பிரச்சனைகளை மட்டும் பேசிக் கொண்டிருப்பதில்லை. அதே விபச்சார ஊடகங்கள் தரும் பொழுது போக்குத்தனமான செய்திகளை தனது நகைச்சுவைக்கும் பயன்படுத்திக் கொள்வார்கள். அப்போது மட்டும் நாட்டின் இன்ன பிற பிரச்சனைகளை மறந்து ஹா ஹா என்று எமோஜிகள் போட்டுக் கொண்டு வடிவேலு படம் போட்டு கருத்து சொல்வார்கள். 

உதாரணத்துக்கு நடிகர் சிவகுமார் தற்படம் எடுக்க முயன்ற ஒரு இளைஞனின் அலைபேசியைத் தட்டி விட்டது, அமைச்சர் ஜெயகுமாருக்கு குழந்தை பிறந்தது, சபரிமலையில் பெண்கள் மறுக்கப்பட்டது, எச். ராசா எகத்தாளம் பேசுவது, தமிழிசையைக் கலாய்ப்பது, ரஜினி, கமல், உளறல்களையெல்லாம் பொருட்படுத்தி விமர்சிப்பது, அஜித், விஜயைய்க் கலாய்ப்பது, டீசர்களுக்கும், முன்னோட்டக் காட்சிகளுக்கும், பாடல் வெளியீட்டிற்கும், கருத்து சொல்வது, ஷகிலா, சன்னி லியோன் ஆகிய ஓய்வு பெற்ற போர்ன்ஸ்டார்களைப் பற்றிப் பேசி நான் ரசனையான ஆளாக்கும் என்று காட்டிக் கொள்வது இந்த மாதிரி அலப்பரைகளெல்லாம் எதில் வரும் ? செய்தியை முழுவதும் கூட படிக்காமல் எதுகை மோனையாக நிலைத்தகவல்/ட்விட் இடுவது, பொய்களைப் பரப்புவது, அரசியல் தலைவர்கள், பிரபலங்களை ஒருமையில் பேசுவது, த்தா, ஓத்தா, ங்கொம்மா, ங்கோத்தா, தேவிடியா என்றெல்லாம் கூச்சப்படாமல் எழுதுவது, இப்படியெல்லாம் செய்யும் சமூக வலைத்தள புரட்சியாளர்கள் எப்படி ஊடகங்களை மட்டும் நேர்மையாக இருக்க வேண்டுகிறார்கள்? 

இவர்கள் ஏன் எழுவர் விடுதலை, ரஃபேல் ஊழல், தூத்துக்குடி படுகொலை, குத்கா ஊழல், எடப்பாடி ஊழல் பற்றிப் பேசாமல் ஏன் இதைப் பேசுகிறார்கள் ? எழுவர் விடுதலை, ரஃபேல் ஊழல், தூத்துக்குடி படுகொலை, குத்கா ஊழல், எடப்பாடி ஊழல் போன்ற செய்திகள் மக்களிடமிருந்து திசை மாற்றப்படவில்லையா ? எல்லோரும் ஆயுத பூஜையைக் கிண்டலடித்துக் கொண்டும்,  பட்டேல் சிலையை, அய்யப்பனைக் கிண்டலடித்துக் கொண்டும் இருக்கவில்லையா ?

திரைப்படத்துறையில் இதெல்லாம் சாதாரணம். திரைப்படத்துறையில் இருக்கும் பெண்கள் படுக்கையில் விழுந்தால் மட்டுமே முன்னேற முடியும். எல்லாவற்றையும் அனுபவித்துக் கொண்டு இப்போது விளம்பரத்துக்காக கூவுகிறாள்கள்.

திரைப்படத்துறையில் பெண்கள் பாலியல் ரீதியாக சுரண்டப்பட்டால் அதை எதிர்க்க வேண்டுமா இல்லை ஆதரிக்க வேண்டுமா ? அதனால் பாதிக்கப் பட்டவர்கள்தானே அதை எதிர்த்துப் போராட குரல் கொடுக்கவோ முடியும் ? பாலியல் மட்டுல்ல வேறு எந்த புகார் சொன்னாலே சொல்லும் பெண்களுக்கு முதலில் கிடைப்பது வேசிப் பட்டமே. அதிலும் திரைப்படத் துறையைப் பற்றி சொல்லவே தேவையில்லை. அதில் ஈடுபடும் எல்லாப் பெண்களையுமே வேசிகள் என்றுதான் பெரும்பான்மையினர் நினைக்கின்றனர். எனவே ஒருவர் வேசிப்பட்டம் கிடைக்கும் என்று தெரிந்தும் விளம்பரத்தை விரும்புவாரா ? இல்லை நான் விபச்சாரத்தை எதிர்ப்பதை உயிர் மூச்சாகக் கொண்டவன் என்றால் விபச்சாரிகள் பங்குபெறும் திரைப்படங்களைப் பார்க்காதீர்கள். அதை வைத்து பகிரப்படும் கருத்துக்கள், பாடல்கள், மீம்களை புறக்கணியுங்கள். விபச்சாரம் செய்தால்தான் திரையுலகம் அதில்தானே கவுண்டமணி, வடிவேலு எல்லாம் வந்தார்கள். வடிவேலுவை வைத்துத்தானே நாம் மோடியைப் பொளந்து கட்டுகிறோம். 

#Metoo இயக்கம் மேலை நாடுகளில் நடிகைகளால்தான் அறியப்பட்டது. மேலை நாட்டு நடிகைகள் எப்படிப் பட்ட பண்பாடு கொண்டவர்கள் என்று சொல்ல வேண்டியதில்லை. ஹாலிவுட் நடிகைகள் மட்டுமல்ல, போர்ன்ஸ்டார்கள் கூட கூறியிருக்கிறார்கள். இங்க இன்னமும் சினிமாக்காரின்னா தேவிடியாளுங்க என்ற கதையைப் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

ஆதாரம் இல்லாமல்தான் சொல்கிறார்கள். இதில் பொய் புகார்களில் ஆண்கள் பழிவாங்கப்படலாம்.

பாலியல் சீண்டல்களை எல்லாம் ஆதாரத்துடன் நிறுவ முடியாது என்பதால்தான் இந்த #Metoo இயக்கமே வருகிறது. எத்தனையோ ஆதாரங்கள் இருந்தும் கொடுங்குற்றவாளிகள் அதிகாரம் மிக்க பதவிகளில் தலைவர்களாக வலம் வரவில்லையா ? ஆம். விரும்பி இசைந்து விட்டு ஆண்களை மாட்டி விடும் வாய்ப்பும் இருக்கிறது. இதில் அப்பாவி ஆண்கள் பாதிக்கப்படும் வாய்ப்புகள் உண்டு. இதில் மட்டுமல்ல தீண்டாமை வன்கொடுமைச் சட்டம், வரதட்சணை கொடுமை, பாலியல் கொடுமை புகார் என அனைத்திலும் பொய்க் குற்றச்சாட்டுக்கள் உண்டு. அதற்காக அச்சட்டங்கள், குற்றங்கள் இல்லை, கூடாது என்று சொல்லலாமா? சிலர் பொய் சொல்லிப் பழி வாங்குவதால் எல்லாரும் அப்படி என்றாகுமா ?

அதிகமாக பாலியல் வன்முறைக்கு உள்ளாகும் விளிம்பு நிலைப் பெண்களை விட்டு மேட்டுக்குடி பெண்களுக்குத்தான் #Metoo கைகொடுக்கிறது.

நாங்கள் #Metoo சொல்கின்ற பெண்களை ஆதரிக்க மாட்டோம். #Metoo சொல்லாத பெண்களை ஆதரிப்போம். ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது சிலர் பீட்டா என்றால் என்னவென்றே தெரியாமல், அடிமாடுகளை வாகனங்களில் ஏற்றிக் கொண்டு போகும் படத்தை வைத்துக் கொண்டு இதையெல்லாம் பீட்டா எதிர்க்காமல் ஜல்லிக்கட்டை எதிர்க்கிறது என்று கூத்தடித்தனர். பீட்டா ஜல்லிக்கட்டை மட்டுமா எதிர்த்தது ? மாடு மட்டுமல்ல எவ்வித அசைவ உணவுகளையும் எதிர்ப்பவர்கள்தான் பீட்டா இயக்கத்தினர். அதைப்போலவே #Metoo வெறுப்பாளர்களும் வசை பாடுகின்றனர். இது பார்ப்பன மேட்டுக் குடியினரின் பொழுதுபோக்கு. உழைக்கும் பெண்களுக்கு இது ஒத்து வராது என்று தள்ளி விடுகின்றனர். 

ஜாதிவெறியாலோ, மதவெறியாலோ பாலியல் வன்கொடுமைக்கு ஆட்பட்டு தூக்கில் தொங்கவிடப்பட்டாலோ, வெட்டிக் கொல்லப்பட்டாலோ இல்லை தற்கொலை செய்து கொண்டாலோதான் அதை ஒரு குற்றமாகக் கருதி இந்த முற்போக்குவாதிகள் ஆதரிப்பார்கள். நாளும் நடக்கும் சிறிய அளவிலான நிகழ்வுகளை ஒரு பொருட்டாக ஏற்க மாட்டார்கள். இவர்களின் ஆதரவைப் பெற நீங்கள் கொடூரமாகக் கொல்லப்பட்டிருக்க வேண்டும் போலும். #Metoo வை ஆதரித்தால் விளிம்பு நிலைப் பெண்கள் பாலியல் கொடுமை செய்யப்பட்டால் வரவேற்கிறோம் என்று பொருளா ? பிரபல/மேட்டுக்குடி பணக்காரப் பெண்களே தங்கள் கொடுமைகளை வெளியே சொல்லும் நிலையே இப்போதுதான் வந்திருக்கிறது. அதற்கே விலைமகள் பட்டம்தான் கிடைக்கிறது. அந்த லட்சணத்தில் இருக்கிறது பாலியல் சமத்துவம். தயாரிப்பாளருடன் படுத்தால்தான் பட வாய்ப்பு என்பதும், மேஸ்திரியுடன் படுத்தால்தான் செங்கல் சுமக்கும் சித்தாளாக வாய்ப்பு என்பது ஒன்றுதான். அதை விட்டு விட்டு #Metoo சொல்பவர் உத்தமியா ? தமிழச்சியா ? தலித் பெண்கள் கொல்லப்பட்டதைக் கண்டித்தாரா ? தூத்துக்குடி படுகொலையைக் கண்டித்தாரா ? ஜப்பானில் அணுகுண்டு வீசியதைக் கண்டித்தாரா என்று அவரது கற்பைக் கண்டுபிடித்துக் கொண்டிருக்க வேண்டாம். #Metoo சொல்பவர் பாலியல் சீண்டலால் பாதிக்கப்பட்டவர் என்ற "தகுதி"யை மட்டும் கொண்டிருந்தால் போதும்.

Download As PDF
Bookmark and Share
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

வரவேற்கப்படவேண்டிய சபரிமலை தீர்ப்பு ஏன் எதிர்க்கப்படுகிறது ?


மோடி தலைமையிலான பாஜக அரசு ஆட்சி செய்யும் நிலையில் கேரளாவில் உள்ள சபரிமலையில் நுழைய இந்துப் பெண்களுக்கு உரிமை உண்டு என்ற நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதை இந்துக்களின் எதிரிகள், துரோகிகள் என்று சொல்லப்படுகின்றவர்கள் வரவேற்கின்றனர். 

இந்துப் பெண்கள் இந்துக் கோயிலுக்குள் செல்ல ஒரு நீதி மன்றம் தீர்ப்பு வழங்கியது. இதை நியாயமாகப் பார்த்தால் கொண்டாட வேண்டியதுதானே ? மசூதிக்குள் பெண்கள் செல்ல முடியுமா ஆனால் கோயிலுக்குள் இந்துப் பெண்கள் செல்ல முடியும் என்று மார்தட்டுவதை விட்டு விட்டு ஏன் இப்படி எதிர்க்கிறார்கள் என்று புரியலையே ?

முதன் முதலில் உடன்கட்டை ஏற்றும் பழக்கம், விதவைகள் மறுமணம், தேவதாசி முறை ஒழிப்பு தடை செய்யப்படும்போதும் மதம் பண்பாடு கலாச்சாரம் ஆகியவற்றுக்கு எதிரானது என்று கூறி எதிர்க்கப்பட்டவைதான். 

நன்கு குறித்து வைத்துக் கொள்ளுங்கள் இப்போது இதை எதிர்ப்பவர்கள் இன்னும் சில வருடங்கள் கழித்து சபரிமலை போன்ற கோயில்களில் இந்துப் பெண்கள் வழிபாடு செய்ய முடியும். ஆனால் மசூதிகளில் முஸ்லிம் பெண்கள் தொழுகை நடத்த முடியுமா ? இந்து மதத்தில் இருக்கும் ஜனநாயகம் மற்ற மதத்தில் இல்லை என்று பெருமை பேசுவார்கள். இப்படித்தான் எல்லாக் காலத்திலும் சீர்த்திருத்தவாதிகள், இந்து மத எதிர்ப்பாளர்கள், மனித்நேயர்கள், ஜனநாயகவாதிகள், முற்போக்கு வாதிகளால் போராடிக் கொண்டு வந்த மாற்றங்களையெல்லாம் இந்துமதம் தன்னகத்தே கொண்டுள்ள பெருமையைப் போல் பார்த்தாயா எங்க மதத்தின் ஜனநாயகத்தை என்று சொல்லி நம் முதுகிலேயே குத்துவார்கள். 

மோடியின் ஆட்சி படுதோல்வியடைந்து விட்டது. மோடியின் ஆதரவாளர்களே என்ன சொல்லி ஆதரிப்பது என்று தெரியாமல் சக மோடி ஆதரவாளர்களிடம் கூட மோடியின் மகிமையை விளக்கிச் சொல்லி அதாவது தற்போதைய மொழியில் சொன்னால் முட்டுக் குடுக்க வேண்டிய நிலையில் அதை அவர்களும் நம்பினாலும் நம்ப முடியாத நிலையிலும் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் விருப்பக் குறியைச் சொடுக்கும் நிலையிலும் வாட்ஸப்பில் பகிரவும் வேண்டிய நிலையிலும் உள்ளனர். 

எனவே இது போன்ற எந்த ஒரு சிறு பிடி கிடைத்தாலும் அதைப் பிடித்து ஒரு ஆட்டு ஆட்டி விட்டுத்தான் வேறு வேலையைப் பார்க்க முடிகிறது. ஏனென்றால் அதைத் தவிர அவர்களுக்கு வேறு அரசியல் தெரியாது. தெரிந்தாலும் உண்மையான இந்துக்களின் பிரச்சனைகளுக்காகப் போராட அவர்களும் விரும்புவதில்லை. 

சில செய்திகளைத் தொடர்ந்து சொல்வதன் மூலம் அதை உண்மையென நம்ப வைக்கிறார்கள். 

* இந்து மதம் ஆபத்தில் உள்ளது. (எனவே இந்து மத்தைக் காப்பாற்ற பாஜகவை ஆதரிக்க வேண்டும்)

* தீராவிடர்கள், நாசகார கம்யூனிஸ்டுகள், மதமாற்றும் கிறித்தவ மிஷனரிகள், முஸ்லிம் ஜிகாதிகள் ஆகியோர் இந்து மதத்தை அழிக்கிறார்கள். 

* நாட்டின் வளர்ச்சிக்காக போடும் திட்டங்களை சீனாவிடம் பாகிஸ்தானிடம் பணம் வாங்கிக் கொண்டு எதிர்க்கிறார்கள், போராட்டத்தைத் தூண்டுகிறார்கள்.

மதமாற்றம் என்பதினை என்னவோ இந்திய இறையாண்மைக்கே எதிரானது போல் ஏற்றி விடுகிறார்கள். 
ஊடகங்கள் எல்லாம் மோடிக்கு எதிரானவை, கிறித்தவர்கள் வசம் இருக்கின்றன. எல்லாமே இந்துக்களுக்கு எதிராக நடக்கிறது. 

இந்துக்கள் இளிச்சவாயர்களாக இருக்கிறார்கள். முஸ்லிம்களும் கிறித்தவர்களும் எல்லா உரிமைகளையும் சிறுபான்மை என்ற பெயரில் இந்துக்களை அவர்களின் கலாச்சாரத்தை அழிக்கிறார்கள் இந்த நாட்டுக்கே எதிரான செயல்களைச் செய்கின்றனர்.

இவை பற்றிய கருத்துக்களைச் சுற்றித்தான் சாமானியர்களிடம் அவர்களின் அரசியல் கட்டுரைகளைப் பரப்புகிறார்கள். இப்படி இருப்பவர்கள் சபரிமலை தீர்ப்பைக் கண்டால் விடுவார்களா பிடித்துக் கொண்டார்கள். மதவெறியைத் தூண்டுவதைத் தவிர இவர்களுக்கு கவனத்தைப் பெறும் அறிவோ அறமோ இல்லை.

எனவே இந்துக்களின் பாரம்பரிய வழக்கங்களில் நீதிமன்றம் தலையிடலாமா ? முஸ்லிம்களின் மசூதிகளில் பெண்களை அனுமதிக்க நீதி மன்றம் தீர்ப்பு வழங்குமா என்று எதுகை மோனையாக கேட்டு அனத்துகிறார்கள். சில மாதங்களுக்கு முன்னர்தான் முத்தலாக் தீர்ப்பு கூட வந்தது நீதிமன்றம்தான் வழங்கியது. முஸ்லிம்கள் ஒன்றும் இப்படிக் குதிக்கவில்லையே. இதெல்லாம் மக்களுக்கு நினைவிருக்காது என்ற துணிச்சலில்தான் இவர்கள் இப்படி முஸ்லிம்களுக்கு தீர்ப்பு சொல்ல முடியுமா கிறித்தவர்களுக்குச் சொல்ல முடியுமா என்று கத்துகிறார்கள். 

தமிழ்நாட்டில் பெரும்பான்மையான மக்கள் பங்கெடுத்த ஜல்லிக் கட்டு ஆதரவுப் போராட்டத்தைக் கூட இவர்களால் நேர்மையாக ஆதரிக்க முடியவில்லை. எல்லாப் போராட்டத்தையும் கொச்சைப் படுத்துவதையே வழக்கமாகக் கொண்டுள்ளனர். இதனால் திமுக அதிமுக கட்சியை வெறுப்பவர்களைக் கூட இவர்களால் ஆதரவாளர்களாக வெல்ல முடியாமல் மக்களிடமிருந்து அவர்களது கொள்கைகளைப் போலவே அந்நியப் பட்டு நிற்கின்றனர் 

Download As PDF
Bookmark and Share
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

வினை செய்த விநாயகர் சதுர்த்தி

சற்றே நானும் தினமலர் பாணியில் ஒரு தலைப்பை முயன்று பார்த்தேன். விநாயகர் சதுர்த்தியை வைத்து வினை விதைக்க முயன்றவர்களுக்கு வினை தீர்க்கப்பட்டிருக்கிறது. விநாயகர் வினை தீர்ப்பாரா ? அதாவது கொலைகாரனை காவல்துறையிடம் சிக்க வைப்பாரா ? 

பரவலாக ஒரு சொல்வடை உண்டு. எதிரியை விட துரோகிதான் தீயவன். விநாயகர் சதுர்த்தியை வைத்து தமிழகத்தில் நடத்தப்படும் அரசியல். எப்போதும் இந்து மதத்தையே விமர்சிக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு உண்டு. இந்து மதத்தை விமர்சிப்பது என்பது மதவாதத்திற்கும், மூட நம்பிக்கைக்கும் எதிரான குரல். இது எல்லா நாட்டிலும் அந்தந்த நாட்டில் நிலவும் மூடத்தனத்திற்கு எதிரான குரல். இங்கே பெரும்பான்மை மதமான இந்து மதத்திற்கு எதிராக எழுகிறது, ஏனெனில் பெரும்பான்மை இந்து மதத்திலிருந்தே இறைமறுப்பாளர்கள் உருவாகின்றனர் அவர்கள் தமது மதத்தால் பாதிக்கப்படுவாலும், தமது மதத்தவர் மூடத்தனத்திலிருந்து விடுபட வேண்டும் என்ற முனைப்பிலிருந்தும் உருவாகிறது. ஏன் என் மதத்தை மட்டும் விமர்சிக்கிறாய் என்பது எவ்வளவு அபத்தமான கேள்வியென்றால், நீ ஏன் உன் மதக் கடவுளை மட்டும் வணங்குகிறாய் என்ற கேள்வியே இதன் பதில். சரி உங்கள் நம்பிக்கையை எதிர்ப்பவர்கள் உங்கள் எதிரியாகவே இருக்கட்டும். உங்கள் மதத்தை காக்கிறோம், கலாச்சாரத்தைக் காக்கிறோம் என்பவர்களின் அருகதையைப் பார்க்கலாம். 

குறிப்பாக விநாயகர் சதுர்த்தியை எதிர்த்து குரல் எழுப்பப்படும்போதெல்லாம் அது அதிகமாகக் கேட்கும் குற்றச்சாட்டு. என்னவோ இந்துக்கள் பன்னிரண்டு வருடங்களுக்கு ஒரு முறைதான் விநாயகர் சதுர்த்தி கொண்டாடுவது போலவும், தமது வீடுகளில் விநாயகர் படத்தை வைத்து வணங்குவதற்குக் கூட அரசு தடை செய்வது போலவும் மதவெறி ஏற்றி விடப்படுகிறது. 

இவ்வருடத்தில் விநாயகர் சதுர்த்தியின்போது கிடைத்த இரண்டு நெகிழ்ச்சியான புகைப்படங்கள். 

யாரை எதிர்த்து ஊர்வலம் நடக்கிறதோ அவர்களே தன்முனைப்பாக கலந்து கொண்டது கலவர வெறியர்களுக்கு தொண்டையைக் கவ்வியிருக்கும். இனி அடுத்தது என்ன கேட்பார்கள் ? ஏன் முஸ்லிம்கள் சும்மாதான் வருவார்களா ஆட மாட்டார்களா மோளம் அடிக்க மாட்டார்களா ? சிலையை தூக்க மாட்டார்களா ? வணங்க மாட்டார்களா ? அதானே ?

அவசரத்துக்கு வேற வண்டி கிடைக்கல. பாய் வண்டிதான் கிடைச்சது என்று கொண்டு போகிறார்கள். இவர்களுக்கோ இல்லை இந்த வாடகை வண்டிக்கார்களுக்கோ இன்னும் கலவர நஞ்சு பாயவில்லை என்று நிம்மதியடையலாம்

மற்ற மதத்தை வம்புக்கு இழுத்து கலவரம் செய்யும் நோக்கம் ஒன்றையே குறியாகக் கொண்டு நடத்தப்படும் விநாயகர் சதுர்த்தியின் நோக்கம் பல்வேறு வீடியோக்களால் அவ்வப்போது அம்பலப்படுகிறது.  பதினைந்து வயது கூட நிரம்பாத சிறுவர்கள் காவல்துறையின் முன்னிலையிலேயே கற்களால் கடைகளைத் தாக்குவது, விநாயகர் சிலையின் அடியிலே அமர்ந்து மது அருந்துவது ஆகிய வீடியோக்கள் இவ்வருட விநாயகர் சதுர்த்தியின் சிறப்பம்சங்கள். ஒரிரு வருடங்களுக்கு முன்னர் சிலை வைக்கும் தகராறில் ஒருவர் கொல்லப்பட்டார் அது பெரிய அளவில் பரபரப்பாகவில்லை. ஊரும் மறந்து விட்டது. 



தமிழகத்தில் எல்லா ஊர்களிலும் விநாயகர் சதுர்த்தி என்ற பெயரில் உள்ளூர் வேலையில்லா உத்தமர்கள் அனைவரும் வெவ்வேறு குழுக்களாக அல்லது RSS- இன் ஏதாவது ஒரு பெயரில் ஒரு குறிப்பேட்டை எடுத்துக் கொண்டு வீடு வீடாகவும் கடை கடையாகவும் சென்று எல்லாருடைய உயிரையும் வாங்கி பணம் வசூலிப்பர். சில இடங்களில் மிரட்டல் செய்தும் "நன்கொடை" பெறப்படும். பணம் தராத கடை உரிமையாளர்கள் குறித்து வைத்துக் கொள்ளப்பட்டுப் பின்னர் ஏதாவது ஊர்வலத்தின் போது கல்வீசித் தாக்கப்படும் இல்லையெனில் சூறையாடப்படும் அபாயமும் உண்டு. இவர்களுக்குள் போட்டி மோதல் இருக்கும். எந்தக் குழு எவ்வளவு பெரிய சிலை வைக்கிறது என்கிற போட்டி எப்போதும் இருக்கும். இதற்கு பெயர் இந்துக்களின் எழுச்சி விழா. கடைசி நாளில் விநாயகர் சிலை கரைப்பு என்ற பெயரில் பல பத்து வாகனங்களில் போக்குவரத்து இடையூறு ஏற்படுத்திக் கொண்டு ஊரே மலம் கழித்து சாக்கடை நீரால் நிரம்பியிருக்கும் குளங்களில் கொண்டு போய் விநாயகர் சிலைகளைக் கரைப்பார்கள். இதற்கு காவல்துறை காவல்காத்து நிற்கும். 

இவர்களின் நோக்கமே மதக் கலவரத்தினைத் தூண்ட வேண்டும் என்பதால் காவல்துறை பல்வேறு கெடுபிடிகளை விதிக்கிறது. தொடர்ந்து காவலுக்கு ஆட்களை நிறுத்துகிறது. எனவே இவர்களின் மதக்கலவரத்தைத் தூண்டும் திட்டம் தோல்வியடைகிறது. நீதிமன்றமும் இவர்களுக்கு சில இடங்களில் மற்ற மத்தவர் செறிந்து வாழும் இடங்களில் ஊர்வலம் செல்வதை மறுக்கிறது. இதன் காரணமாகத்தான் ஹெச். ராஜா என்ற மகாத்மா ஹைக்கோர்ட்டாவது மயிராவது என்று பொங்கினார். 

எடுத்துக்காட்டாக தற்போது கோவையில் நடந்த ஒரு கொலை பற்றிப் பார்ப்போம். விநாயகர் சதுர்த்திக்கு வசூலான தொகையில் கிடா விருந்து வைத்து இருக்கிறார்கள் அதில் நடந்து வரவு செலவுத் தகராறில் ஒருவர் கண்ணாடி புட்டியால் குத்தி இன்னொருவர் இறந்து விட்டார். விநாயகர் சதுர்த்திக்கி இவர்கள் இந்துக்களிடம் பெற்ற பணத்தில் இவர்கள் கறியும் மதுவும் உண்டு களிக்கின்றனர் என்றால், விநாயகர் சிலை வைக்க என்று நம்பி காசைக் கொடுத்து இதைக் கொண்டாடும் இந்துக்கள்தான் இளிச்சவாயர்களா ? இப்படித்தால் எல்லா ஊர்களிலும் விநாயகர் சதுர்த்தி வசூல் ராஜாக்கள் கும்மியடிக்கிறார்கள் போலும். 


//கோவை நல்லாம்பாளையம் பகுதியை சார்ந்த இளைஞகள் விநாயகர் சதுர்த்திக்காக பல இடங்களில் பணம் வசூல் செய்து விழாவை கொண்டாடியுள்ளனர். பின்னர் விநாயகர் சதுர்த்தி முடிந்தவுடன், ஆலாந்துறை பகுதியில் விநாயகர் சதுர்த்தியின் போது வசூலான மீதி பணத்தில் கடந்த 30ம் தேதி பாஜக வினர் மதுவுடன் கிடா விருந்து வைத்துள்ளனர். விருந்தின் போது விநாயகர் சதுர்த்தி வரவு செலவு கணக்கு பார்ப்பதில் ஏற்பட்ட தகராறில் பாஜக உறுப்பினர் நாகராஜ் என்பவரை, குடி போதையில் இருந்த  பாஜக இளைஞர் அணி  நல்லாம்பாளையம் பகுதி தலைவர் குட்டி (எ) கந்தசாமி பாட்டிலால் குத்தியதில் நாகராஜ் படுகாயம் அடைந்துள்ளார். பின்னர் அவரை சக நண்பர்கள் மீட்டு கோவையில் உள்ள  கே.ஜி.மருத்துவமனையில்  சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்நிலையில் தொடர் சிகிச்சையில் இருந்த  நாகராஜ் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு உயிரிழந்தார். இதனையடுத்து ஆலாந்துறை போலிசார் கொலை முயற்சி வழக்கை கொலை வழக்காக மாற்றினர். மேலும், தலைமறைவான பாஜக மாவட்ட இளைஞரணி தலைவர் கந்தசாமிக்கு ஆலாந்துறை போலீசார் தேடி வருகின்றனர்.//

இன்னும் ஒரு செய்தி.

பாஜகவின் தேசியச் செயலாளர் அமித் ஷா கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் ராஜஸ்தானில் சமூக வலைத்தள உறுப்பினர்களுக்கான கூட்டத்தில் பேசும் போது பொய்த்தகவலைகளைப் பரப்புவதை வெளிப்படையாகவே (எதிர்ப்பதைப் போல் பேசி ஜாடைமாடையாக அதை வரவேற்றுள்ளார்). வரும் தேர்தலில் சமூக வலைத்தளங்களை வைத்தே வெற்றி பெற வேண்டும் என்று கூறியுள்ளார். இவர் இவர் கட்சியினர் இப்படிச் செய்வது அதிசயமோ ஆச்சரியமோ பட வைப்பதில்லை. அறியாத மக்களை இவர்கள் எப்படியெல்லாம் ஏமாற்றுகின்றனர் பாருங்கள். 

ஆதார இணைப்பு
https://www.thequint.com/news/politics/amit-shah-real-fake-can-make-messages-viral

இன்னுமோர் முக்கியமான செய்தி

சபரி மலைக்கு பக்தர்கள் சென்ற பேருந்தின் மீது செங்கோட்டை அருகே கல் எரிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கல் எரிந்தவர்களை விரட்டி பிடித்து விசாரித்ததில் அவர்கள் இந்து முன்னணியினர் என்பதும், செங்கோட்டையில் விநாயகர் சிலை மீதும் கல் எரிந்தவர்கள் அவர்கள் தான் என்பதும் தற்போது தெரிய வந்துள்ளது.

http://goodnewstamil.com/hindu-munnai-people-arrested-for-stone-throwing-to-vijayanagar-statue/


இந்த வருடம் விநாயகர் சதுர்த்தியின் நோக்கத்தை அப்பட்டமாகக் காட்டியுள்ளது ஒரு கொலை. அது என்ன நோக்கம் விநாயகர் சதுர்த்திக்கு அந்தந்த வட்டாரங்களில் பிள்ளையார் சிலை வைக்க வேண்டி பணத்தை வசூல் செய்து, ஒரு சிலையை வைத்து விட்டு மீதிக்காசில் கும்பல் கும்பலாக குடித்து கூத்தடிப்பதுதான். அதுவும் வசூல் அதிகமாக இருந்தால் கிடா வெட்டி கறியும் மதுவுமாக வெறியாட்டம். அற்புதமான வளர்ச்சி.

இங்கே இரண்டு பாஜகவினர் இடையேயான மோதலால் எதுவும் நிகழவில்லை. இதுவே கொலை செய்தவர் ஒரு முஸ்லிமாக இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும் ? இக்கொலைக்குக் காரணம் மதப்பிரச்சனை இல்லை வெறும் பணப் பிரச்சனை என்றாலும் கொன்றவர் முஸ்லிமாக இருந்தால் அது மதப்பிரச்சனை ஆக்கப்பட்டிருக்கும். இதனால்தான் விநாயகர் சதுர்த்தி என்ற அயோக்கியத்தனம் தொடர்ந்து கடுமையாக எதிர்க்கப்படுகிறது. இதை தங்கள் நம்பிக்கையின் பெயரால் பயங்கரவாத்தை வளர்க்கும் ஒரு தீயவர் கூட்டம் என்பதை இந்துக்கள் புரிந்து கொள்வார்களா ? 

Download As PDF
Bookmark and Share
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

கலைஞருக்கு அஞ்சலி



மெரினாவில் அடக்கம் செய்ய மறுக்கப்பட்ட போது கருணாநிதிக்கே இந்நிலையா என்று எண்ண வைத்து விட்டது ஆதிக்கத்தின் வன்மம். இது சாதாரண ஊழல், குடும்ப அரசியல், எதிர்கட்சி என்ற எதிர்ப்பால் வரும் வன்மம் அன்று என்று உங்கள் உடலுக்குக் கிடைத்த மதிப்பு எடுத்துக் காட்டி விட்டது. அடக்கம் செய்வதற்கே நீதி மன்றம் சென்றுதான் வெல்ல வேண்டியிருக்கிறது. இந்த உரிமைக்காக கருணாநிதியே போராட வேண்டியிருக்கிறது என்றால், இன்னும் எத்தனை போராட்டத்தை சந்திக்க வேண்டுமோ இச்சமூகம் ?

உங்கள் ஆன்மா என்றும் எங்களிடம் சாந்தி அடையக் கூடாது என்று சொல்வதே உங்களுக்கு அஞ்சலி செலுத்தும் முறை. இன்னும் செய்திருக்க முடியும் என்ற போதிலும் இதெல்லாம் செய்தே இருக்கக் கூடாது என்ற போதிலும் தவிர்க்க முடியாத ஆளுமையாகவே இருந்தீர்கள். உங்களிடம் கற்றுக் கொண்டதும் கற்றுக் கொள்ள வேண்டியது நிறைய உள்ளன. எதிரிகள் உங்களைத் தாக்கும் போதெல்லாம் என்னைப் போன்றவர்களின் பெரும்பான்மைக் கொள்கையை(
திராவிடம்) நீங்கள் தாங்கி இயங்கியதால் எங்களையும் சேர்ந்த்தே தாக்கியதாக உணர்ந்தோம். உங்களைத் தாக்குகிறவர்கள் கருணாநிதி என்ற தனி மனிதரையல்ல ஒரு சித்தாந்தத்தையே அதை ஏற்கும் எங்களையே தாக்குகிறார்கள். எனவே உங்களைத் தாங்கி ஏந்த வேண்டியது எங்களுக்குக் கடமையாகிறது. உங்களை விமர்சித்ததும் விமர்சிப்பதும் எங்கள் கடமை. உங்களை ஆதரிப்பதும் எங்களுக்குக் கடமை.
#ThankYouMK 

Download As PDF
Bookmark and Share
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

மீண்டும் ஒரு கடைசிக் கவிதை

கடைசியாக ஒரு முறை அழுது விட வேண்டும் 
கடைசியாக ஒரு முறை உன்னுடன் என் காதலுடன் பேசிட வேண்டும் 
பின்பு இயல்பான வாழ்க்கையில் கரைந்து போய்விட வேண்டும்
கடைசியாக ஒரு முறை நம்முடைய காதல் பற்றிக்
கவிதையில் எழுதி விட வேண்டும்

என்னுடைய கடைசி ஆயுதமாக கவிதையைத் தேர்ந்தெடுத்தேன்
அதில் உன் நினைவினை நிரந்தரமாகப் புதைத்து விடத் துணிந்தேன்
அக்கவிதை முடிவது போலவே நீயும் உன் நினைவுகளும்
என்னிடமிருந்து அகல வேண்டும் என்று வேண்டியும் கொண்டேன்

ஒரே ஒரு கவிதையில் நீ என்னில் செலுத்திக் கொண்டிருக்கும் 
வேதனைகளை எல்லாம் சொற்களில் வடித்து இறக்கி வைத்து 
விடலாம் என்றெண்ணி எழுத முயன்று கொண்டிருந்தேன்

அந்தக் கவிதையோ முடியாமல் நீண்டு கொண்டே சென்றது
நான் இதுவரை எழுதிய கவிதைகளில் அழகானதாகவும் இருந்தது 
அந்த உணர்வுகளைக் கொடுத்த உனது நினைவுகள் மீண்டும்
எய்ந்தவனையே பதம் பார்க்கும் அம்பாக என் மீதே பாய்கின்றன

அக்கவிதையின் வாயிலாக நான் என்னுடைய காதல்
புது பரிமாணம் கிடைக்கப் பெற்றதாக உணர்கிறேன் 
இதோ இன்னொரு சாக்குக் கிடைத்து விட்டது 
உன்னை நினைத்துக் கொண்டிருக்க

இத்தகைய உணர்வினைக் கொடுத்தவள் இவள் என்றே 
உன் மீது மீண்டும் காதல் கணக்கில்லாமல் ஏறுகிறது
என்னையும் கவிஞனாக்கி விட்டாளிவள் என்று ஏற்றத் தோன்றுகிறது
அட இவள் இல்லாமல் போனால்தான் என்ன ?
இவள் தந்த காதல் இல்லை இவளை நினைத்ததால் வந்த காதல்
அது கொடுத்த பேரின்பத் திளைப்புகள்தான் போதாதா வாழ்நாள் முழுதும்

எதிர்காலத்தில் உன் கணவன் உன்னைக் கண்டுகொள்ளாத பொழுதில்
ஒரு காலத்தில் என்னை ஒருவன் எப்படியெல்லாம் காதலித்தான்
தெரியுமா என்று வெறுப்பேற்றக் கூட நானும் என் காதலும் பயன்படலாம் 

உன் மீதான இந்தக் காதல் இருக்கிறதே இல்லை இல்லை
உன் மீதான போதை இருக்கிறதே 

ஏன் இப்படி கொஞ்சம் கூட வெட்கமில்லாமல் இருக்கிறது ?
ஏன் கொஞ்சம் கூடக் குறையவே மாட்டேன் என்கிறது ?
ஏன் என்னை நிம்மதியாய் இருக்க விடாமல் செய்கிறது ?
ஏன் கற்பனையின் உச்சத்தில் என்னை ஏந்திச் செல்கிறது ?

இந்தக் காதல் ஏன் எனது மற்றக் காதல்களைப் போலக் காலத்தால்
காணாமல் போக முடியவில்லை ?
ஏன் என்னுடைய மற்ற மையல்களைப் போல உன் மேல் கொண்ட மையல்
மட்டும் மறைந்து போகவில்லை ? 

மற்றவை எனது உடலுணர்ச்சியின் விளைவாய வந்திருக்கக் கூடும்
உன் மீதான மையலோ என் உயிரிலிந்தே வந்திருக்க வேண்டும்

அப்படி என்னதான் உன்னிடம் கண்டு விட்டேன் நான் 
என்னால் விண்டு விடவே முடியவில்லையே !
தயவு செய்து என்னை விட்டு விடக் கூடாதா
நான் பிழைத்துப் போகிறேன்

இல்லாத கடவுளிடம் வேண்டுவதைப் போல உனக்குத் தெரியாத
உன்னிடமே கேட்டுக் கொண்டிருக்கிறேன் நான்

Download As PDF
Bookmark and Share
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment