காதல் காட்சிகள், பாடல்கள், நம்ப முடியாத சண்டைக்காட்சிகள் அதிகம் இல்லாத தொய்வில்லாத விறுவிறுப்பான திரைப்படம். படம் பார்க்காதவர்கள், விறுவிறுப்புடன் கதை தெரியாமல் படத்தை சுவைக்க நினைப்பவர்கள் மேற்கொண்டு இதைப் படிக்க வேண்டாம்.
இருந்தாலும் தமிழ்ப்படங்களில் தொடர்ந்து வரும் அபத்தங்களை காண முடிந்தது.
விஜியிடம்(அமலா பால்) இருக்கும் குழந்தை அவருடையது இல்லை. அவளுடைய அக்காவுடைய குழந்தை. இதன் மூலம் நாயகியின் கன்னித்தன்மை உறுதி செய்யப்பட்டு, தமிழ்ப்படநாயகன்/தமிழ் ரசிகர்களின் மனம் கோணாமல் கதை செய்யப்பட்டுள்ளது.
ஷர்மியை மருட்டி அனுபவித்தது போல் நம்ம கதாநாயகன் அருணின் மாமா மகளான அம்முவையும் அனுபவிக்க நினைக்கிறான் இன்பராஜ். கதாநாயகனின் மாமா மகள் என்பதற்காக கதவைச் சாத்தியவுடன் தொடங்காமல் அச்சிறுமி அழுவதையும் சம்மதிக்கவும் 1 லிருந்து 5 வரை எண்ணுகிறான். அப்பதானே நாயகன் வந்து மாமா மகளின் கற்பைக் காக்க முடியும். அதே போல் நாயகன் வந்து காப்பாற்றியும் விடுகிறார்.
கொலையாளியின் ஃப்ளாஷ்பேக்கில், தொடர்கொலைகளுக்கான காரணம் பிடிபடவேயில்லை. கிறிஸ்டோபர் ஹார்மோன் குறைபாட்டினால் ஏற்பட்ட தனது அழகற்ற தோற்றத்தினால் பள்ளியில் அனைவராலும் ஒதுக்கப்பட்டாலும், தன்னை நட்புடன் ஆதரிக்கும் சோஃபியா என்ற பெண்ணிடம் காதல் வயப்படுகிறான். அதை அவளிடம் சொல்ல அவள் மறுக்கிறாள். அவனிடமிருந்து விலகுகிறாள். அவன் திரும்பத் திரும்ப அவளிடம் வற்புறுத்த பொறுமையை இழக்கும் அவள் கிறிஸ்டோபர் ஆண்மையற்றவன், திருமணம் செய்ய தகுதி இல்லாதவன் என்று அழுது கொண்டே ஆத்திரத்தின் உச்சியில் கூறிவிடுகிறாள்.
அவன் வீட்டில் தனது உடலைக் கண்ணாடியில் கண்டு அழுகிறான். அவனது அம்மா மேரி அவனைத் தேற்றி பள்ளிக்கு அனுப்புகிறார். பள்ளியில் அவனது வகுப்பு மாணவர்கள் சுவரிலும் கரும்பலகையிலும் அவனைக் கேலியாக வரைந்து அவனை மொட்டை (ஆண்மையற்றவன்) என்று பரிகசித்துக் கைகொட்டிச் சிரித்து அவனை அவமானப்படுத்தி துரத்துகின்றனர். இப்படி எல்லா ஆண்களும் பெண்களும் ஒன்று கூடி நின்று ஒரு உடல் குறைபாடுடையவனைக் கிண்டல் செய்வார்கள் என்று நம்ப முடியவில்லை.
அந்த மனநோயாளி கிறிஸ்டோபர் எதற்கு பள்ளி மாணவிகளைக் கொலை செய்கிறான் என்பதே புரியவில்லை. அவனை அவமானப்படுத்தியவர்கள் அவனுடம் படித்த மாணவ மாணவிகளே. அவர்களைத் தேடிப்போய்க் கொல்லாமல் இந்தச் சிறுமிகளைக் கொல்வது ஏன் என்றுதான் புரியவில்லை. ஆறாது சினம் படத்தில் கொலையாளி தனக்குக் கேடு செய்தவர்களின் இணையர்களைக் கொல்வான். அதிலாவது ஒரு சிறிய "அடிப்படை (அ)நியாயம்" இருந்தது. இவனை ஆண்மையற்றவன் என்று கேலி செய்தவர்கள் மாணவிகள் மட்டுமல்ல மாணவர்களும் கூடத்தான். மாணவர்கள்தான் இவனை அவமானப்படுத்தி உடையை உருவி ஓட விடுவார்கள். அதற்கு சிறுவர்களைத்தானே கடத்த வேண்டும், கொல்ல வேண்டும்.
சிறுமிகள் என்றால்தானே அதிக பதட்டத்தையும் ஆத்திரத்தையும் பார்ப்பவர்களுக்கு ஏற்படுத்த முடியும் என்பதற்காக இருக்கலாம்.
மேரி ஏன் அந்தச் சிறுமியைக் கொல்வதற்கு மகனைத் தூண்டினார் என்பதும் இவனும் இவளுடைய அம்மாவும் ஒரு சிறுமியைக் கொன்ற குற்றத்திலிருந்து எப்படி வெளியே வந்தார்கள் என்பதும் புரியவில்லை. இவன் காதலை மறுத்த அந்த சோபியாவை கொலை செய்வதற்கு இவனது அம்மா மேரியும் உதவுகிறார். அவன் கொல்வதை ரசிக்கிறாள். என்ன அம்மாவோ ? பள்ளியில் மற்றவர்கள் கிறிஸ்டோபரை அவமானப்படுத்தியதற்கு சோஃபியா காரணம் என்பதாகவும் தெரியவில்லை. இத்தனைக்கும் அந்த சோபியா தான் ஆத்திரத்தில் பேசிவிட்டதாகவும், அடுத்த நாள் காய்ச்சல் காரணமாகத்தான் பள்ளிக்கு வரவில்லை என்றும் கூறுகிறாள். இருப்பினும் மேரியும், கிறிஸ்டோபரும் அவளைக் கொல்கின்றனர். ஆண்களின் கோபத்திற்கும், புறக்கணிப்புக்கும் இப்படியெல்லாம் பெண்களைக் கொல்ல வேண்டுமென்றால் எத்தனை பெண்கள் சாக வேண்டுமோ ?
அந்த மேஜிக் நடத்தும் மேரியைப் பாக்க ரெமோ படத்தில் வரும் நர்சைப் போலவே இருக்கிறார். இன்னும் எத்தனை ஃப்ளாஷ்பேக்-களில்தான் ஊட்டி கான்வென்ட் பள்ளியைக் காட்டப் போகிறார்களோ ?
அந்த மேஜிக் நடத்தும் மேரியைப் பாக்க ரெமோ படத்தில் வரும் நர்சைப் போலவே இருக்கிறார். இன்னும் எத்தனை ஃப்ளாஷ்பேக்-களில்தான் ஊட்டி கான்வென்ட் பள்ளியைக் காட்டப் போகிறார்களோ ?
அருண் (விஷ்ணு விஷால்) வெங்கட்டின் துப்பாக்கி முனையில் கொலையாளி சிக்கி இருக்கும்போது யோசிக்காமல் சுடச் சொல்கிறான். ஆனால் அவனே கையில் துப்பாக்கி வைத்துக்கொண்டே அந்தக் கொலையாளிடம் பேச்சு நடத்துகிறான் அருண். அப்பதான க்ளைமாக்ஸ் சண்டை வைக்க முடியும் என்று தோன்றுகிறது.
இவன் மேஜிக் செய்பவன் பியானோ வாசிப்பவன் என்றெல்லாம் திறமை வாய்ந்த கலைஞனாக இருந்தாலும், ஆறாத சிறுவயது அவமானங்களை அனுபவித்திருந்தாலும் சிறுமிகளைக் கொடூரமாக கொலை செய்வதால் இவன் மீது கரிசனமே கொள்ள முடியாத கதை மாந்தனாக இருக்கிறான் ராட்சசன் கிறிஸ்டோபர்.
0 பின்னூட்டங்கள்:
கருத்துரையிடுக
நான் படைப்பாளியோ, விமர்சகனோ அல்லன். வாசகன் மட்டுமே. எனவே உங்கள் கருத்தின்றி எனது இடுகை முழுமை பெறாது. நிறைகளை விடவும் குறைகள் அதிகம் எதிர்பார்க்கிறேன்