வெளியே வந்த பூனை - நாம் தமிழர் கட்சியினரின் அடுத்த இலக்கு கீற்று


 தமிழர்களின் முதன்மை எதிரியான திராவிடத்தை எதிர்க்கும் போராட்டத்தைத் தொடங்கியிருக்கின்றனர் நாம் தமிழர் கட்சிக்காரர்கள், அந்தக் கருத்துப்புரட்சியின் முதல் இலக்காகக் கீற்று இணையத்தைத் தேர்ந்தெடுத்துள்ளனர். நாம் தமிழர் கட்சிக்காரர் ஒருவர் ஃபேஸ்புக்கில் ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்திருந்தார். அது கீற்று இணையத்தின் தற்போதைய முகப்பின் "screen shot" ஆகும். அதில் நாம் தமிழர் கட்சியின் கொள்கை ஆவணம் வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து, அதற்கு எதிர்வினையாக பெரியாரியவாதிகளால் வெளியிடப்பட்ட எதிர்ப்புக்கட்டுரைகளாகும். இதை வைத்து தமிழர்க்கு எதிரான திராவிடத்திற்கு கடை விரிக்கிறது கீற்று தளம் என்று சொல்கிறார்கள். அவர்கள் வெளியிட்ட கட்சியின் கொள்கைக்கு எதிரான கருத்துக்கள் வலுவாக இருக்கக் கண்டு அதற்கு பதில் சொல்லாமல் அவதூறு மழையைப் பொழியத் தொடங்கியுள்ளனர்.

கீற்று இணையத்தைப் பற்றி எல்லோர்க்கும் தெரிந்ததுதான். இவர்கள் ரமேசை தெலுங்கர் என்று வசை பாடுகிறார்கள். இதற்குமுன் இவர்கள் கீற்றுவைப் பார்த்ததே இல்லையா என்று தெரியவில்லை. கீற்றுவைப் போல மாற்று அரசியல் கருத்துக்கள் புழங்கிய இணையம் வேறு உண்டா எனத் தெரியவில்லை. மார்க்சிய வாதிகள், பெரியாரியவாதிகள், தமிழ்தேசியவாதிகள், தலித்தியம், இசுலாமியர் எனப் பலவையினரும் தமது கட்டுரைகளை வெளியிட்டு வந்தனர். அங்கு அதிகமாக வெளியானதே தமிழ் சார்ந்த, தமிழீழம், மற்றும் விடுதலைப்புலிகள் ஆதரவுக் கட்டுரைகள்தான். கீற்று ரமேசே விடுதலை புலிகளின் ஆதரவாளர்தான், இதனால்தான் தமிழ்தேசியவாதிகள் எழுதிய பல அபத்தமான கட்டுரைகள்,  விடுதலைப் புலிகளை மிகைப்படுத்திப் பேசும் கட்டுரைகள் போன்றவைதான் அங்கே அதிகமாக உலவுகின்றன.

போதாக்குறைக்கு தமிழ்த்தேசியவாதிகள் புகழும் யூத இன எழுச்சி என்ற பெயரில் இசுரேல் ஆதரவுக் கட்டுரைகள் கூட சில அதில் உண்டு. இதைத் தமிழ் இன உணர்வின் பெயரால் கீற்று வெளியிட்டிருந்தது. இதெல்லாமே ஏற்றுக் கொள்ளமுடியாதைவையாகும். என்னதான் கருத்து சுதந்திரம் என்றாலும் இசுரேலை ஆதரிக்கவெல்லாம் நடுநிலையாளர்களால் முடியாது. ஈழ ஆதரவாளார்களினால் ஈழத்துடன் ஒப்பிட்டு எழுதப்பட்ட ஒரே காரணத்துக்காக  யூதர்களைப் புகழ்ந்து அவர்களைப் போல ஈழத்தமிழரும் எழுச்சி பெறல் வேண்டும் என்ற நோக்கில் இசுரேல் என்ற மனிதகுலப் பகைவரான ஒரு நாட்டைப் புகழும் கட்டுரை கூட வெளியிடப்பட்டதாக நினைவு. இதெல்லாம் அவர்களுக்குத் தெரியவில்லை.

இதில் புலி எதிர்ப்பு என்றும் ஒரு பகுதியும் உள்ளது. ஆனாலும் மற்ற புலி எதிர்ப்பாளர்களின், தமிழ்த்தேசிய எதிர்ப்பாளர்களின் இணையத்தளங்களில் வெளியிடப்படுவது போன்று கடுமையான விமர்சனங்கள் அதில் இல்லை. நானே ஒரிரு முறை ஐயமுற்றேன் கீற்று இணையத்தில் வெறும் தமிழ்தேசியக் கட்டுரைகளே வெளிவருகின்றன என்று. அதில் சீமானைப் புகழும் கட்டுரைகள் கூட இடம் பெற்றிருந்தன. அப்போதெல்லாம் அவர் தெலுங்கராகத் தெரியவில்லை. ஈழ ஆதரவு, புலி ஆதரவுக் கட்டுரைகள் கீற்று இணையம் அளவுக்கு வந்திருக்குமா வேறு எங்காவது என்று தெரிந்தவர்கள் சொல்லவும்.

சீமானும் ஜெயாவுக்கு ஆதரவாக மாறியதிலிருந்து சீமானையோ நாம் தமிழர் கட்சியையோ குறிப்பிட்டு விமர்சித்து பெரிய அளவில் கட்டுரைகளோ யாரும் கீற்றுவில் எழுதியிருக்க வில்லை. தற்போது கட்சியின் ஆவணம் வெளியிடப்பட்ட பின்புதான் அதற்கெதிரான எதிர்கட்டுரைகள் வரத் தொடங்கின. முதலில் மணிசெந்தில் மட்டும் ஒரு எதிர்கட்டுரை வெளியிட்டார். அதற்குப் பின்பு சீமானின் தமிழக அரசியல் இதழில் பேட்டி கொடுத்ததை மறுத்தார். நாங்கள் பெரியாருக்கு எதிரி இல்லை என்று சொல்கிறார். ஆனால் அவரது ஆதரவாளர்கள் தொடர்ந்து தூய தமிழ் தேசியம் பேசி கோவை பெரியார்திக தலைவர் தெலுங்கர் என்று சொல்லும் அளவுக்கு வந்திருக்கிறார்கள். இவர்கள் யாழ்ப்பாண வேளாள ஜாதி ஆதிக்கம் நிரம்பிய ஈழத்துத் தமிழ்த்தேசியவாதிகளை நினைவூட்டுகிறார்கள். வாழ்க தமிழ் தேசியம்.

எதிர்வினைக்கு பதில் சொல்வதற்கு இயலாமல் கீற்று ரமேசை தெலுங்கர் என்றும், ப்ரியாதம்பியை மலையாளி என்றும் வசைபாடுவது கண்டனத்திற்குரியதாகும்.
 

Download As PDF
Bookmark and Share
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

பெண்கள் எதை இழக்கிறார்கள் ?

பொதுவாக ஆணாகட்டும் பெண்ணாகட்டும் இருவருக்குமே வேறுபாடுகளின்றி விரும்பியதைப் பெற இயலாமலும், பெற்றதைக் காத்துக் கொள்ள இயலாமலும் இழப்புகளை சந்திக்க வேண்டியுள்ளது. ஆண்கள் அனுபவிக்கும் சுதந்திரம் பெண்களுக்கு இருப்பதில்லை. குழந்தையாக இருப்பதிலிருந்து பார்த்தால் ஊர்சுற்ற, விளையாட ஆண் குழந்தைகளுக்கு இருக்கும் சுதந்திரம் பெண் குழந்தைகளுக்கு இல்லை. நகர்ப்புறத்திலிருக்கும் வசதியான வீட்டுப் பெண்கள் சிலர் விதிவிலக்காக இருக்கலாம். பெரும்பான்மையான நடுத்தரக் குடும்பங்களில் வீட்டில்தான் அடைந்து கிடக்கின்றனர். பெண்கள் கல்வியில் சிறந்தவர்களாக இருப்பதற்கு இதுவே காரணம் என்று நினைக்கிறேன். தொலைக்காட்சியைத் தவிர்த்து (தற்போது)அவர்களுக்கென்று வேறு எல்லைகள் எதுவுமில்லாததால் கவனம் செலுத்தில் படிக்கவும் இந்த சமூகக் காரணி வழிவகுக்கிறது.

இப்படியாக இருக்கையில் எனக்கு சுற்றத்திலிருக்கும் பெண்களின் வாழ்க்கையில் என்ன நடக்கிறது என்று பார்த்தால் ஏமாற்றமே எஞ்சுகிறது. எனது வீட்டிலிருந்து எனது உறவினர்கள், நண்பர்கள் அறிந்தவர்கள் என எங்கு பார்த்தாலும் ஏறக்குறைய ஒரே மாதிரியான நிலைதான். யாராவது பேசிக்கொண்டிருந்தால் இப்படியான பேச்சை அடிக்கடி கேட்கவியலும். குழந்தைகள் எப்படிப் படிக்கிறாங்க என்று ஒருவர் கேட்டால் மற்றொருவரின் பதில் இப்படி இருக்கும். பொண்ணு நல்லாப் படிக்கறா ஆனா பையன் கொஞ்சம் சுமார்தான் என்பார்கள். விதிவிலக்காக சில இடங்களில் இது மாறுபடும்

நாமும் வருடந்தோறும் கேட்கிறோம் வழக்கம்போலவே இவ்வருடமும் மாணவர்களை விட மாணவிகளே அதிகம் தேர்ச்சி பெற்றனர் என்று. ஆனால் அத்தனை பேர் தேர்ச்சி பெறுகிறார்களே படிக்கும்போது இலட்சியத்துடன் இருந்த பெண்கள் அனைவரும் என்னவாகிறார்கள் என்று பார்த்தால் ஏமாற்றமே மிஞ்சுகிறது. எல்லோரும் திருமணம் முடிந்து இல்லத்தரசிகளாகவே மாறிவிடுகின்றனர். சொற்பமான எண்ணிக்கையிலேயே வேலைக்குப் போகின்றனர். அவர்களில் சிலரும் குழந்தை பிறந்த பிறகு வேலைக்குச் செல்வதை நிறுத்தியும் விடுகின்றனர்.

இப்போது நான் சொல்ல வந்தது எனது சுற்றத்திலிருக்கும் பெரும்பான்மையான பெண்குழந்தைகளின் வரலாறு எப்படியிருக்கின்றதென்றால், அவர்கள் சிறுமியாக இருப்பதிலிருந்தே நன்றாகப் படிக்கக் கூடியவர்கள். ஆனால் பத்தாவது முடித்த பிறகு அவர்கள் முதல் பிரிவான அறிவியலில் சேராமல் மூன்றாம் பிரிவான வணிகவியலில்தான் சேர்வார்கள். விரும்பி சேர்வது வேறுவகை, இந்த விரும்பல் என்பது ஒருவகை கட்டாயம். ஏனென்றால் முதலாவதாக அவர்கள் பொறியியல் படிக்கப்போவதில்லை, காரணம் அது நான்கு வருடம். செலவு அதிகம். கல்யாணம் பண்ணப்போற பெண்ணுக்கு பொறியியல் எதற்கு என்ற கணக்குதான். பெண்களின் எல்லை எதுவாக இருக்கிறதென்று பார்த்தால் 20 வயதுகளில் திருமணம் செய்துவிட வேண்டும் என்ற கட்டாயம் இருக்கிறது பெற்றோருக்கு. அதற்கு மூன்று வருட பட்டப்படிப்புதான் சரியாக வரும். மீறிப்போனால 22 அல்லது 23 தான் அதிகபட்சம், அதுவரை மாப்பிள்ளை சிக்காவிட்டால் முதுகலைப் பட்டமும் படிக்க வாய்ப்புண்டு. படிக்கும்போதே நல்ல வரன் அமைந்துவிட்டாலோ படிப்புக்கு முழுக்குதான். திருமணமே முடிந்தாயிற்று பின்பெதற்கு படிப்பெல்லாம் என்றுதான் எண்ணுகிறார்கள்.

முன்பு இளவயதில் திருமணம் தேவையில்லை என்றே நினைத்திருந்தேன், ஆனால் எவ்வளவு விரைவாக திருமணம் நடக்க வேண்டுமோ அவ்வளவு விரைவாக நடப்பது நல்லது என்று தற்போது தோன்றுகிறது. ஆண்களின் பணியோ மாறுவதில்லை. சரி திருமணமாகிவிட்டால் பெண்ணின் வாழ்க்கையானது இல்லத்தரசி என்ற அளவில் சுருங்கி விடுகிறது. அவள் 15 வருடக் கல்வித் தகுதியானது திருமண அழைப்பிதழில் போடுவதற்காக மட்டும் என்ற அளவில் மாறிவிடுகிறது. அதற்குப் பிறகு கல்விக்கும் அவளுக்குமான தொடர்பே இல்லாமல் போய்விடுகிறது. பின்பு குழந்தைக்குப் பாடம் சொல்லிக் கொடுக்கும் போதுதான் அது ஓரளவுக்கு உதவுகிறது.

வேலையில்லாமல் சிங்கியடித்து, தகுதியான வேலையும் ஊதியமும் இல்லாமல் சிங்கியடிக்கும் சொந்த அனுபவம் காரணமாக பேசாம பெண்கள் திருமணம் செய்து கொண்டு இருப்பது பாதுகாப்பாகவும், நிம்மதியாகவும் வாழ வழிவகுக்கும் என்பது எனது ஒரு எண்ணமாக இருந்தாலும், வேலைக்குச் செல்ல வேண்டும் அல்லது சொந்தக் காலில் நிற்க வேண்டும் என்ற உறுதியுடன் இருக்கின்ற பெண்களுக்கு அது சாத்தியப் பட வேண்டும் என்று விரும்புகிறேன். ஆனால் நிலவரம் எப்படி இருக்கிறது என்றால் வேலை பார்க்கும் பெண்கள் திருமணத்திற்குப் பிறகு வேலையை விட்டு விடும் நிலைதான் இருக்கிறது. தன்னை விட மேலான வேலையிலிருக்கும் ஆணைத் திருமணம் செய்து கொண்டால், கணவரின் பணியிடம் வேறிடமென்றால் பெண் வேலையை விட வேண்டியிருக்கிறது.

இதுவரை நான் பல தனியார் நிறுவனங்களில் (சேவைத்துறை, மென்பொருள்துறை) கண்டிருக்கிறேன், நான் பணிபுரியும், பணிபுரிந்த இடங்களிலும் கண்டிருக்கிறேன். பெண்களைத்தான் அதிகமாக வேலைக்கு எடுக்கிறார்கள். அவர்களை வைத்து வேலை வாங்குவது எளிது திறமையானவர்களாகவும் இருக்கிறார்கள். இதில் திருமணத்திற்குப் பின்பு வேலைக்கு வருபவர்கள் மிகச் சிலரே. இதற்காக ஆண்கள் அவர்களைத் திட்டித் தீர்க்கிறார்கள். இவளுக 2 வருசம் வேலைக்கு வந்துட்டு, பெரிய வேலையிலிருக்கறவனாப் பாத்துக்  கல்யாணம் பண்ணிட்டுப் போறதுக்கு வராம இருந்தால் 2 பசங்களுக்கு வேலை கிடைக்கும்ல என்கிறார்கள். பெண்கள் வாழ்க்கையின் அடுத்தபடி திருமணமாக இருக்கிறது, ஆண்களுக்கு வேலைக்குப் போயே ஆக வேண்டிய கட்டாயம். எனச் சொல்கிறார்கள் அது உண்மையாக இருந்தாலும் இப்படிப் பேசுவதற்கு இவர்களுக்கு உரிமையோ நேர்மையோ அதிகாரமோ இல்லை. அது தலைவிதியாக இருப்பதால்தான் அவர்கள் விட்டுச் செல்ல வேண்டியிருக்கிறது.

படிக்கும் நாட்களில் பழக்கப்பட்ட வாசகமொன்று நினைவுக்கு வந்தது, பெண்கள் ஏன் நன்றாகப் படிக்கிறார்கள் என்றால் அவர்கள் எல்லாவற்றையும் மனப்பாடம் செய்து கொள்வார்களாம் ஆண்கள் புரிந்து படிப்பார்களாம். இது ஓரளவுக்கு உண்மையும் இருக்கிறது. எனது தங்கை ஒருத்தி துணைப்பாடத்தில் வரும் சிறுகதையே மனப்பாடம் செய்துதான் எழுதுவாள். அப்படியே மனப்பாடம் செய்தாலும் கணக்குப்பாடத்தில் தேறமுடியாதே, சரி கல்வியே மனப்பாடக் கல்விதான் அதை எப்படிச் செய்தால் என்ன. மனப்பாடம் செய்து எழுதுவதாலோ அல்லது அதிக மதிப்பெண் பெரும் பெரும்பான்மையான மாணவர்கள் வெறும் திறமையற்றவர்கள் சொல்வதைச் சொல்லும் கிளிப்பிள்ளைகளுமல்ல. சரி அப்படியே அவர்கள் மனப்பாடம் செய்து படித்தாலும் வேலைக்கு எடுப்பவர்கள் அதிகமாக மாணவிகளையே எடுப்பது ஏன்.

சிரமப்பட்டு படித்து பல்கலைக்கழகத்தில் இடம் பிடித்து, அல்லது நல்ல வேலை கிடைத்தும் திருமணத்தின் பின்பு அதை துக்கியெறிய வேண்டிய நிலையும் வருகிறது. அதற்குப் பின்பு சமையல் குழந்தை வளர்ப்பு என்று குண்டுச் சட்டியில் சுழலும் சலிப்புத் தட்டும் வாழ்க்கையை பெண்கள் தேர்ந்தெடுக்க வேண்டி வருகிறது. என்னுடன் 12 ம் வகுப்பில் படித்த ஒரு மாணவிதான் எங்கள் வகுப்பில் முதலாக வருவாள். அவள் ஒரு பேருந்து நடத்துனரின் மகள். மருத்துவம் படிப்புக்கேற்ற வகையில் திறமையும் மதிப்பெண்ணும் பெற்றிருந்தாள். அவள் ஒரு தாழ்த்தப்பட்ட ஜாதியைச் சேர்ந்தவளென்பதால் ஏதாவது ஒரு மருத்துவக் கல்லூரியில் இடம்பிடித்துவிடும் நிலையும் இருந்தது. ஆனால் அவளது அப்பாவோ ஒரு வேளை மருத்துவம் படித்தால் மாப்பிள்ளை கிடைக்காது என்று சொல்லி அவளது தந்தை ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் சேர்த்து விட்டார்.

என்னுடைய உறவினரில் ஒரு பெண் இருக்கிறாள் அவள் தற்போதுதான் கல்லூரியில் 3ம் ஆண்டு படிக்கிறாள். அவளுக்கு எம்பிஏ படித்து விட்டு கொஞ்ச நாள் வேலைக்குப் போக வேண்டுமென்பது விருப்பமாக இருக்கிறது. அந்தக் கொஞ்ச நாள் ஏனென்றால் அதற்குப் பிறகு திருமணம் பின்பு அவ்வளவுதான் என்பது அவளது விதியாக இருக்கிறது. தற்போது ஒரு உறவினர் வீட்டுத் திருமணம் வருகிறது. திருமணத்தின்போது நான் சேலை கட்ட மாட்டேன், சுடிதார்தான் போடுவேன் என்கிறாள். காரணம் ஜீன்ஸ் அணிவதை ஏற்குமளவுக்கு பெரியவர்கள் பக்குவப்படவில்லை. சுடிதார் என்றால் பிரச்சனையில்லை. சேலை கட்டினால் பெரிய பெண்ணாகத் தெரிவாள். (போதாக்குறைக்கு அழகாக வேறு இருப்பதால்) திருமணத்திற்கு வரும் யாராவது பார்த்து பெண்கேட்டு தூதுவிடுவார்கள், எப்போது என்று காத்திருக்கும் பெற்றோரும்  பேசி முடித்து விடுவார்கள், பிறகு எம்பிஏ கூட படிக்க முடியாது என்று அச்சப்படுகிறாள். எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. பெண்களின் சிறு சிறு ஆசைகளும் பெரிய ஆசைகளும் கூட நிறைவேறும் வாய்ப்புகள் இப்படி இருக்கிறது .
Download As PDF
Bookmark and Share
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

தமிழ்த்தேசியத்திடமிருந்து பிரிக்க முடியாத இந்திய இறையாண்மை !!

திராவிட எதிர்ப்புக்கு மறுப்பு வரும்போதெல்லாம் தமிழ்நாட்டில் தமிழர் என்றாலே பலருக்குப் பிடிப்பதில்லை என்கிற பாணியில் புலம்பலும், காழ்ப்பும் நிரம்பிய வகையில் பதிலடி வருகிறது. தமிழுணர்வை திராவிட வெறியர்கள் எதிர்த்து நிற்பதைப் போல காட்டுகிறார்கள். பெரியாரியத்தை பார்ப்பனர்கள் எதிர்க்கிறார்கள், ஜாதிவெறியர்கள் எதிர்க்கிறார்கள், மதவாதிகள் எதிர்க்கிறார்கள் அந்தோ மறத்தமிழர்களும் எதிர்க்கிறார்கள்.

தற்போது நாம் தமிழர் இயக்கத்தினரால் வெளியிடப்பட்ட கட்சி செயல்திட்டத்தில் இந்திய இறையாண்மையை காக்க வேண்டும் என்ற உறுதிமொழி வெளியிடப்பட்டத்தைத் தொடர்ந்து அக்கட்சியின் மீது பலரும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். வழக்கம் போலவே நாம் தமிழர் கட்சியும் திமுக எதிர்ப்பு, கருணாநிதி எதிர்ப்பு, பின்பு திராவிட எதிர்ப்பு இறுதியாக வேறு வழியின்றி பெரியார் எதிர்ப்புடன் முடித்து பெரியார் தமிழினத் துரோகி என்ற முழக்கத்தின்படியே தமது திட்டத்தை வெளியிட்டுள்ளனர். இதில் பார்ப்பனியம் என்ற சொல் கவனமாகத் தவிர்க்கப்பட்டுள்ளது. பார்ப்பனர் என்ற சொல்லுக்கு ஆய்வாளர் என்று புதிய அருஞ்சொற்பொருளும் தரப்பட்டுள்ளது. அதற்குப் பதிலாக ஆரியம், பார்ப்பனீயம் என்ற வடமொழிச் சொற்களுக்கு மாறாக மனுவியம் என்பதைப் பயன்படுத்தியதாகக் கூறுகிறது நாம் தமிழர் இயக்கம். செய்திகளை வெளியிட்ட பின்பு முன்னுக்குப் பின் முரணாகத் தற்போது சீமான் தமிழக அரசியல் இதழுக்கு பேட்டி வழங்கவேயில்லை என்று மறுத்திருக்கிறார்.

தமிழர் விடுதலைக்காக போராடக் கிளம்பிய கட்சியினர் ஏன் இந்திய இறையாண்மையக் காப்பதாக உறுதி மொழி எடுத்துக்கொள்ளவேண்டும். இந்திய இறையாண்மையைக் காப்பதற்குத்தான் எத்தனையோ பேர் இருக்கின்றனர். பொதுவாக ஈழத்தமிழர் விடுதலை தனித் தமிழ்நாடு என்றாலே இந்திய இறையாண்மைக்கு எதிராகப் பேசினார்கள் என்று போட்டுக் கொடுக்க தினமலர், பேராயக் கட்சி என்று பலர் இருக்கின்றனர். இதுவரை தமிழ்நாட்டிலிருக்கும் எந்தத் தமிழ்தேசியக் கட்சியும் இந்திய இறையாண்மையைக்காப்பதாகக் கூறவில்லையே என்று எதிர்ப்பவர்கள் கூறுகிறார்கள். நாம் தமிழர் இயக்கத் தமிழர் சீமானை மேடையேற்றி அவரை அறிமுகப்படுத்திய பெரியார் திகவினர். ஈழப்போரின் போது தமிழகத்தில் நடைபெற்ற போராட்டத்தின்போது நாம் தமிழர் இயக்கம் தொடங்கப்பட்டது. இவர்கள் நாம் தமிழர் இயக்கத்தின் தொடக்கத்திலிருந்தே எதிர்த்து வந்தனர். இப்போது பெரியார் ஈழத்தந்தை செல்வாவுக்ககு ஒரு அடிமை மற்றொரு அடிமைக்கு எப்படி உதவ முடியும் என்று கைவிரித்ததை வைத்து திராவிடத்தால் ஏதும் முடியாது ஏய்த்துவிட்டதாக என்று சொல்கின்றனர். சுவாரசியமாக இவர்கள் சிங்களத்தையும் திராவிடப்பட்டியலில் சேர்த்திருக்கின்றனர். பேசாமல் பார்ப்பனியத்தையும் திராவிடப்பட்டியலில் சேர்த்திருக்கலாம், ஏனென்றால் சிங்கள இனவாதிகள் தம்மை ஆரியர்களாகக் கருதிக் கொள்கிறவர்கள்.

கேட்டுக் கேட்டு சலித்துபோன பழைய வாதங்களே மீண்டும் கேரளாவிலோ ஆந்திராவிலோ, கர்நாடகாவிலோ எவனும் திராவிடன் என்று சொல்வதில்லை என்று, இதற்கென்ன சொல்வது, பெரியார் அன்றே சொல்லி விட்டார் இவர்களுக்கு எந்த சுயமரியாதையும் இல்லை என்று, இவர்களெல்லாம் பார்ப்பனியத்திற்கு அடிமையானவர்கள் என்று. அவர்கள் திராவிடன் என ஒத்துக் கொள்ள வேண்டுமென்றால் தமிழ்தான் திராவிட மொழிகளின் தாய் என்று ஒத்துக் கொள்ள வேண்டும். இதற்கு பார்ப்பனியத்திற்கு அடிமையான அவர்கள் தயாரில்லை. ஏன் 60 வருடங்களாக போராடியே தமிழ்நாட்டில் எத்தனை பேர் ஒத்துக் கொண்டார்கள், அங்கே விழிப்புணர்ச்சி ஊட்ட யாரும் பெரியார்போலப் பிறக்க வில்லை. கன்னடராக இருந்தாலும் தமிழர்களுக்குப் போராடியதால்தான் பெரியார் இன்னும் பெரியாராகிறார்.

தற்போதுள்ள தமிழ்தேசிய வாதிகள் வைக்கும் எந்த வாதமும் மராட்டிய இனவெறியன், இந்துத்துவாவாதி பால் தாக்கரே, ராஜ் தாக்கரே ஆகியோரின் இனவாத வன்முறை அரசியலுக்கும் எந்தளவும் மாறியதில்லை, கூடவே வாட்டாள் நாகராஜ் என்ற தலைவரும்தான். தமிழ்நாட்டிலுள்ள பிற மொழியினர் மீதான் வெறுப்புணர்வை வளர்ப்பது, வந்தேறிகள் வாழ்கிறார்கள் தமிழர்கள் வீழ்கிறார்கள் என்பது, இவர்களின் அரசியலுக்கு அவ்வப்போது ஈழத்தமிழர்களை இழுத்து பச்சாதாபம் தேடிக்கொள்வது என்று தொடர்கிறார்கள். தமிழ்தேசியவாதிகளில் பல வகையினர்  இருக்கிறார்கள். சமனியவாதிகள்(சோஷலிஷ்டுகள்) தொடங்கி இனவாதிகள், மத அடிப்படைவாதிகள் வரை. இவர்களுக்குள் பல வேறுபாடுகள், இவர்களுக்குள் எந்த கருத்து மோதல்களும் காணோம். உதாரணத்துக்கு ஒன்று. பொதுவில் (தமிழக) தமிழ்தேசியம் இந்தியாவை ஒத்துக் கொள்ளாது. அதன் கொள்கை தனித் தமிழ்நாடு, தனி ஈழம். அதே ஈழத் தமிழ்தேசியம் இத்தனை பட்ட பின்பும் இந்தியாவை தந்தை நாடு என்கிறது, தமிழீழம் அமைவது ஈழத்தமிழர்களுக்குப் பாதுகாப்பு என்பதை விட இந்தியாவுக்கு பாதுகாப்பு என்று இந்தியாவின் காலைச் சுற்றி வருகிறது. இதெல்லாம் ஏன் பேசப்படுபொருளாகவில்லை ? பெரியாரியமல்லாத தமிழ்தேசியம் என்ன கொள்கையை வைத்திருக்கும் என்பதற்கு ஈழத்தமிழ்த்தேசியமே உதாரணம். இலைங்கையிலிருந்தாலும் தமிழ்தேசியம் கடல் தாண்டி பார்ப்பன இந்தியாவின் காலில் விழும்.

சீமான்

சீமான் வெறும் உணர்ச்சிவயப்படும் மனிதராகத்தான் இருந்தார். தமிழுணர்வாளர்கள் அனைவராலும் கருணாநிதி வெறுக்கப்படக் காரணமாக இருந்தது, ஈழபோர்தான். ஆனால் ஈழப்போரின்போது நடந்த தேர்தலில் திமுக விற்கு எதிராகவும், அதிமுகவிற்கு ஆதரவாகவும் இருந்த சீமான், தேர்தல் முடிந்தவுடன் ஏதோ ஒரு வார இதழுக்கு வழங்கிய பேட்டியில் இப்படிக் கூறியிருந்தார். நம்மை எதிரி சுற்றி வளைத்துவிட்டால் கையில் கிடைப்பதை நாம் ஆயுதமாகப் பயன்படுத்துவதுபோலத்தான் நாங்கள் அதிமுகவை ஆதரித்தோம், ஆனால் கலைஞர்தான் தலைவர் என்பதில் மாற்றமில்லை, இப்போதும் என் அலுவலகத்தில் திமுக கொடியைக் காணலாம் என்றார். பின்பு ஜெயா தொலைக்காட்சியில் பேசினார். அப்படியே அம்மா ஆதரவாளராக மாறிவிட்டார்.

10 வருடங்கள் இருக்கலாம் நானும் என்னுடைய நண்பனும் ஈரோட்டில் பெரியார் வாழ்க்கையைப் பற்றி ஒரு படம் திரையிட இருந்தார்கள். அந்தத் திரைப்படம் ஞாநி இயக்கியதாகும். அந்தத் திரைப்படம் தொடங்கும் முன் சீமானின் உரையைக் காண நேர்ந்தது. அதில் பார்ப்பனிய, தீண்டாமை எதிர்ப்பு, பகுத்தறிவு தன்மான சீமான்தான் உணர்ச்சிகரமாகப் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அவர் சொன்ன வாசகம் இன்னும் நினைவிலிருக்கிறது. நண்பர்களே !! ஒரு சினிமாக்காரன் வந்து இங்கு பகுத்தறிவு பேசுகிறேன் என்று எண்ண வேண்டாம். சினிமா என்பது எனது தொழில். இங்கே நான் உங்களில் ஒருவனாக உணர்வுடன் வந்திருக்கிறேன். எனக்கு சினிமாத் தொழில் இல்லையென்றால் கள்ளச் சாராயம் காய்ச்சுவேன். (தொழில் கொண்டு பார்க்க வேண்டாம் உணர்வு கொண்டு பார்க்கவும்) என்று சொன்னார். கூட்டத்தில் கைதட்டல் அதிகமாக இருந்தது. இதற்கும் அவர் இப்போது நடந்து கொள்வதற்கும் ஏதாவது வேறுபாடு இருக்கிறதா ?

இதே போலத்தான் ஒருமுறை தமிழீழத்தை கோட்சே ஆதரித்தால் அவரை ஆதரிப்போம் ஆனால் காந்தி எதிர்த்தால் அவரையும் எதிர்ப்போம் என்றார். பிரபாகரன் படம்போட்ட சட்டையுடன் போய் பசும்பொன்தேவரின் விழாவில் கலந்து கொண்டு ஏன் தேவரைப் போராளியாக பார்க்க மறுக்கிறீர்கள் என்றார். பெரியார் தாழ்த்தப்பட்டவர்களுக்கு என்ன செய்தார் என்றார். மற்ற திராவிட எதிர்ப்பாளர்களின் கேட்டுக் கேட்டுக் சலித்துப் போனதையே இவரும் பேசுகிறார்.

திராவிட எதிர்ப்பு

திராவிட எதிர்ப்பு என்றாலே கருணாநிதியை விமர்சிக்க வேண்டியது கருணாந்தி, திமுகவின் தவறையெல்லாம் திராவிடத்தின் தவறாகவும் பெரியாரே மூலகாரணம் என்பதைப் போல பேச வேண்டியது இறுதியில் பெரியார் எதிர்ப்பில் முடிக்க வேண்டியது. திராவிடத்தால்தான் தமிழன் வீழ்ந்தான் என பிதற்ற வேண்டியது.

ஃபேஸ்புக்கில் கருணாநிதியின் பெயர் தட்சிணாமூர்த்தி, அவர் ஒரு தெலுங்கு வந்தேறி தமிழின் வெறுப்பாளர் என்ற ரீதியிலெல்லாம் செய்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. பகுத்தறிவு கருணாநிதி மஞ்சத் துண்டு அணிவது இந்து மதப் பண்டிகைகளுக்கு சிறப்பு நிகழ்ச்சிகள் ஒளிபரப்புவது பற்றியெல்லாம் எல்லோரும் கருணாநிதியைக் குதறி எடுப்பவர்கள், ஒரு கன்னடப் பார்ப்பனர் எப்படி திராவிடக் கட்சியில் தலைவராக இருக்கலாம் என்று ஒருவரும்  கேட்பதேயில்லை. அதுதான் தமிழக நாளிதழ்கள் தமிழர்களின் மண்டையில் திணித்திருக்கும் கருத்தின் தன்மை. முன்னாள் இன்னாள் பேராயக் கட்சியினர் என அனைவரும் தினமணியில் எழுதுவார்கள் என்ன பிரச்சனையென்றாலும் அதிலே நாலுவரியாவது கருணாநிதிதான் இதற்கெல்லாம் காரணம் என்ற பெயரில் எழுதுவார்கள், அப்படியே சந்தடி சாக்கில் திராவிடக் கட்சிகள் என்று பன்மையில் எழுதிவிட்டு திராவிடக்கட்சிகள் என்றாலே கருணாநிதி என்ற பெயர் வரும்படி பார்த்துக் கொள்வார்கள். இதில் கருணாநிதியை மட்டுமே கொள்கை ரீதியில் விமர்சிப்பார்கள், ஜெயலலிதாவை அப்படி விமர்சிக்க மாட்டார்கள் வெறும் நிர்வாகக் குளறுபடிகள், ஊழல் என பொதுவில் மட்டுமே விமர்சிப்பார்கள்.

தினமணி, தினமலர் ஞாநி என அனைவரும் இவ்வகையினரே. இம்மாதிரியானவர்கள் திராவிடக் கட்சிகளை அதிகம் திறனாய்வு (விமர்சனம்) செய்வார்கள், அதே நேரம் அதிமுகவின் பழ.கருப்பையா தினமணியில் எழுதுவார், அவர் இதுவரையில் எழுதியது கருணாநிதி எதிர்ப்புதான் அதேபோல் கருணாநிதியை வைத்து கொள்கையையும் நடத்தையையும் ஒப்பிட்டு எழுதுவார். ஆனால் தான் சார்ந்திருக்கும் திராவிடக் கட்சியைப் பற்றி நெல்லை கண்ணன், பழ. நெடுமாறன் இன்னும் பலர் எழுதுவதை கண்டுகொள்ள மாட்டார். இங்கு கருணாநிதியை நல்லவராக்கும் என்று சொல்லவில்லை. கருணாநிதியின் பெயரால் திராவிட வெறுப்பை ஊட்டும் விதத்தைச் சொன்னேன். அதற்கேற்றார்போல் கருணாநிதியும் அவரது பாதந்தாங்கி வீரமணியும் நோபால்களாக வீசுகிறார்கள். அதை அரசியலே தெரியாத பச்சைப் பிள்ளைகள் கூட சிக்ஸராக்குகிறார்கள். இதற்கெல்லாம் கருணாநிதியே காரணம்.

பார்ப்பன எதிர்ப்பு என்றால் அதிகம் போராட வேண்டும் கொள்கைப் பிடிப்பு வேண்டும். காசு பார்க்க முடியாது. இருப்பதிலேயே எளிதானது, கருணாநிதி எதிர்ப்பு, திமுக எதிர்ப்பு, திராவிட எதிர்ப்பு, இந்திய இறையாண்மை, ஈழத்தமிழர் என்பது இன்னும் இலாபம் தரும், அரசியல் செல்வாக்கை உயர்த்தும் என்பது நிலவரமாக இருக்கிறது. திராவிடம் மட்டுமல்ல, மார்க்சியம், தமிழ்த்தேசியம், தலித்தியம் என என்ன கொள்கையானாலும் மக்கள் அமைப்புகளிலிருந்து தேர்தல் அரசியலுக்குச் சென்றாலே அது யாருக்குப் பயனளிக்கும் என்பது வெள்ளிடை மலை.
Download As PDF
Bookmark and Share
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment