திமுக லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
திமுக லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

 7.5 விழுக்காடுகள் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவக் கல்லூரிகளில் இட ஒதுக்கீட்டுக்கு ட்வீட் போட்டதைத் தவிர்த்து என்ன செய்தார் சூர்யா ? - ரவிசங்கர்

இப்போதும் சரி அப்போதும் சரி ட்வீட் போட்டதைத் தவிர ஒன்றும் செய்யவில்லை. ஸ்டாலின் ஆதரிக்கும் முன்பு வரை சூர்யா செய்தது தவறாக இருந்தது. இப்போது சூர்யா என்ன செய்துவிட்டார் என்று கேள்வி வருகிறது. உங்க தவறை ஒப்புக்கொள்ளாமல் அடுத்தவன் அருகதையைக் கேள்வி கேட்டால் என்ன செய்வது ?

நடிகர் சூர்யா 8 கோடி பேருடன் கோட்டைக்கு ஊர்வலம் சென்று முதலமைச்சருக்கு நன்றி சொல்லவில்லை. அவர் போட்ட ஒரே ட்வீட்டை வைத்துத்தான் என்னவோ தமிழ்நாட்டுக்கே துரோகம் செய்ததாக சித்தரித்தனர் சில திமுகவினர்.  தமிழ்நாடே சூர்யாவின் ட்வீட்டைப் பார்த்துத்தான் அதிமுகவை ஆதரிப்பது போன்றும் இல்லையென்றால் அப்போதே புரட்சி வெடித்து அதிமுக அரசு கலங்கியிருக்கும் என்பது போல பேசினார்கள். ஜோதிகா பேசியதை வைத்து காவிகள் கூத்தடித்ததைப் போலவே இவர்களும் செய்தனர்.

யாரை எதிர்க்க வேண்டும் என்று தெரிந்தவர்கள் யாரை ஆதரிக்க வேண்டும் என்று தெரியாமல் இருக்கிறார்கள் என்று சொன்னவர், ஏதாவது ஒரு கட்சியை ஆதரித்துத் தொலையுங்கள் என்றால் பாஜகவையும் அதிமுகவையும் ஆதரிக்கலாமா ? உங்கள் கட்சியை ஆதரிக்காமல் இருப்பதற்குக் காரணம் என்ன உங்கள் கட்சியின் குறைகள்தானேயன்றி நாங்கள் அல்லவே. 

NEET எதிர்ப்பாளர் என்றாலே அது திமுக சார்பாகத்தான் பார்க்கப்படும். எப்படி திமுக சாராத மற்றவர்களின் தவறுகளும், அவதூறுகளும் திமுகவின் மீது திருப்பப்படுகிறதோ அது போலவே NEET உட்பட தமிழ்நாட்டின் நலன் சார்ந்த எந்த ஒரு அரசியலுமே திமுக சாராதவர்கள் பேசினாலும் போராடினாலும் அது திமுகவின் ஆதரவாக மாறும், திமுகவின் மீதான பொதுபுத்தி வெறுப்பின் ஒரே நன்மை இதுதான்.

அதிமுகவை நேரடியாகக் கண்டிக்காவிட்டால் அதை ஏற்கமாட்டோம் என்று தூய்மைவாதம் பேசினால் எப்படி ? திமுகவை ஆதரித்து விட்டோ, திமுகவில் இருந்து கொண்டோ திமுக கொள்கைக்கு நேர் எதிரான அரசியலை/செயல்களைச் செய்தால் அது ஒரு பொருட்டே இல்லாதது போலவும், கட்சிசாராதவன் திமுக ஆதரவு கொள்கையைப் பேசினால் அவனை எதிரியிடம் தள்ளி விடுவது ஏன் ?

ஒரு முறை திமுக பாஜகவுடன் கூட்டணி வைத்ததையே தவறென்று ஒத்துக்கொள்ளாமல் அவர்களின் ஆதரவை நமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்வதில் என்ன தவறு என்று சொல்லியிருந்தார் ரவிசங்கர். ஆனால் யாருடைய ஆதரவை யார் தமக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டார்கள் ? அதன் விளைவுகள் என்ன என்பதையும் நாம் இன்று பார்த்துக் கொண்டுதானே இருக்கிறோம் ? 

எப்படி தேர்தல் அரசியலில் ஈடுபடும் உங்கள் கட்சிக்குக் குறிப்பிட்ட எல்லைகள் உள்ளனவோ அது போலத்தான் அரசியலிலும் பொதுவாகக் கருத்து சொல்லும் கட்சி சாராத நபர்களுக்கும் சில எல்லைகளும் தொல்லைகளும் உள்ளன, அவர்களால் ஒரு கட்சியை வெளிப்படையாக ஆதரித்தோ எதிர்த்தோ பேச முடியாது. இது உங்களைப் போன்றவர்கள் அறியாததன்று என்றாலும் நீங்கள் இப்படி குற்றம் சொல்லிப் பேசுவது எதற்காக என்பதும் எங்களுக்குத் தெரியாமலில்லை. 

நாளை NEET ஆதரவு நிலைப்பாடு எடுத்து, NEET பயிற்சி நிலையங்களால் வேலை வாய்ப்பு அதிகரித்துள்ளது, தமிழ்நாட்டின் பொருளாதாரம் வளர்கிறது என்றும் சொல்வார் போலிருக்கிறது.

Download As PDF
Bookmark and Share

Post Comment

பக்தர்களின் பகுத்தறிவும் பகுத்தறிவுகளின் மூடநம்பிக்கையும்


ஏம்பா பக்தர்கள் கோயிலுக்குப் போகும் போது வீடு வண்டி எல்லாம் பகுத்தறிவோட பூட்டிட்டு போறீங்களா இல்ல கடவுள் பாத்துக்குவார்ன்னு அப்படியே விட்டுட்டு போயிருவீங்களா?

பக்தர்கள் மட்டும் 100 % பகுத்தறிவோட இருக்கலாம். பெரியாரியர்களுக்கு மட்டும் பக்தி கொஞ்சம் இருக்கப் படாதோ?

என்னவோ பெரிய கண்டுபிடிப்பு மாதிரி வட்டம் போட்டு காட்றீங்க ! திமுககாரன் கோயிலுக்கு போனா பல்லிளிக்கும் பகுத்தறிவும்பீங்க இல்ல ?!

இந்துப் பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்லாத திமுக இந்துக்களின் எதிரின்னும் சொல்வீங்க ?

உலகத்திலேயே கோயிலுக்குப் போனாலும் திட்டும் போகாவிட்டாலும் திட்டும் ஒரே இழிபிறவிகள் இவர்கள்தான். 

ஒரு பயங்கரவாதியை, கொலைகாரனை, பாலியல் வன்கொடுமை செய்தவனை, ஊழல் செய்தவனை, கொள்ளை அடிப்பவனைப் பார்த்து என்ன நீ இன்னும் பாஜகவில் சேரவில்லையா என்று கேட்பது எப்படி இயல்பாக இருக்கிறதோ அது போலத்தான் ஒரு கடவுள் நம்பிக்கை உடையவன் திமுகவில் இருப்பதும்.
Download As PDF
Bookmark and Share

Post Comment

கருப்பர் கூட்டத்தைக் கண்டிக்கும் திமுக

 மோதி திருக்குறளைச் சொல்லி நமது நெஞ்சை நக்குவது போல் இதை, காவிகளின் நெருக்குதல் காரணமாக சடங்குக்கு வரும் அறிக்கையாகக் கொள்ளலாம்.

                                   

கொள்கையைப் பேசினால் காவிகள் கட்டம் கட்டி திசைதிருப்பி இந்து விரோதப் பட்டம் கட்டுவார்கள். இந்துக்களுக்காகப் பேசினால் நம்மளை மாதிரி போராளிகள் திமுகவிற்கு கொள்கை போதவில்லை/கைவிட்டுவிட்டது என்று மொத்துவார்கள். ஆக என்ன செய்தாலும்/செய்யாவிட்டாலும் திமுகவுக்கு அடிதான்.

திக தலைவர் ஆசிரியர் வீரமணியே கருப்பர் கூட்டத்துக்கு ஆதரவில்லை என்று சொன்ன பிறகும் திமுக காசு கொடுத்துத்தான் கறுப்பர் கூட்டம் நடக்கிறது என்று சொல்வார்கள்.

திமுககாரன், திமுக தலைவர்களின் குடும்ப உறுப்பினர்களோ கோயிலுக்குப் போனால் ஆகா இந்து மதத்தைப் பின்பற்றுகிறான் என்று சமாதானமாக மாட்டார்கள்.
பகுத்தறிவு பல்லிளிக்கிறது என்பார்கள்.

ரம்ஜான்/கிறிஸ்துமஸ் வாழ்த்துச் சொன்னால், இந்துப் பண்டிகைக்கு வாழ்த்து சொல்வதில்லை மற்ற மதத்துக்கு மட்டும் வாழ்த்து சொல்லும் இந்து விரோதி, கிறித்தவக் கைக்கூலி என்றுதான் சொல்வார்கள்.

முருகனை அவமதித்ததற்காகக் திமுக கண்டிக்கிறது என்ற செய்தியை 99 % காவிகள் வேண்டுமென்றே பார்க்காததுபோல் இருந்து விட்டு திருட்டு திமுக இந்து விரோத திமுக என்பார்கள்.

திராவிடம், கடவுள் மறுப்புப் பேசாமலேயே இந்துக்கள் மனதை புண்படுத்தாமலேயே காவி பயங்கரவாதிகளை அம்பலப்படுத்த முடியும். அவர்கள் பாணியிலேயே போய் அவர்களைத் திரை கிழிக்க முடியும்.

பாஜக ஆட்சி நடத்தும் இலட்சணம் இந்துக்களுக்குத் தெரியாதா ? பிடி எதுவும் கிடைக்காமல்தான் இவர்கள் திமுக எதிர்ப்பை/மதவாதத்தைக் கையில் எடுக்கிறார்கள்.

மருத்துவத்தில் பெரும்பான்மை இந்துக்களின் இட ஒதுக்கீடைப் பறிக்கும் பாஜக என்று சொல்லியிருக்கலாம். காவிகளின் ஓட்டை வாயை அடைத்திருக்கலாம். திருடனுக்குத் தேள் கொட்டியது போல் முழித்திருப்பார்கள்.
Download As PDF
Bookmark and Share

Post Comment

யாரைத் தேர்ந்தெடுத்தால் சேதாரம் குறையும் ?

குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்
மிகைநாடி மிக்க கொளல்

குறள் - 504

மக்களுக்கு எதிராக என்ன கிறுக்குத்தனம் செய்தாலும், அவர்களின் வாழ்வையே பறித்துக் கொண்டாலும் இந்து மதம் ஆபத்தில் இருக்கிறது, பாகிஸ்தான் சதி, பொருளாதாரம் வளர்கிறது, ஊழல் ஒழிந்து விட்டது, ராமன் கோயில் கட்டுவோம் என்றெல்லாம் அடித்து விட்டால் போதும் அவர்கள் தப்பித்துக் கொள்ளலாம்.

மக்கள் எந்த லட்சணத்தில் இருக்கிறார்களோ அந்த அளவில்தானே கட்சிகளும் இருக்கும். 

காவி பயங்கரவாதிகளுக்கு எதிரான ஃபாசிசத்துக்கு எதிராக வாக்களிப்போம் என்பதை நக்கலடிப்பவர்கள் என்ன சொல்கிறார்கள் என்றால், பேராயக் கட்சி (congress) என்ன யோக்கியமா அவர்களும் ஃபாசிஸ்ட்டுகள்தான் என்று அவர்களுடைய பழைய குற்றங்களை எடுத்துக் காட்டுகின்றனர். இப்போது பாஜகவில் இருப்பவர்கள் பேசுவதைப் போலத்தான் 75 வருடங்களுக்கு முன்பிருந்த காங்கிரஸ் ஆட்கள் பேசிக்கொண்டிருந்தனர். இன்னமும் காங்கிரஸ் கட்சி அப்படியேதான் இருக்கிறதா ?. திமுகவின் காங்கிரஸ் கூட்டணிக்கும், முன்பு பாஜவுடன் கூட்டணி வைத்ததற்கும் எதிர்ப்பது நியாயம்தான். ஆனால் நிலவரம் எப்படி இருக்கிறது ? 

இல்லை நாம்தான் புரட்சி செய்து கொண்டிருக்கிறோமா ? இல்லையே அப்படி இருவரையும் சமமாக எதிர்ப்பதாக இருந்தால் இந்நேரம் மாஓ-இயர்களாக, நக்சல்களாக துப்பாக்கி ஏந்தி காட்டுக்குள் வாழவில்லையே. சுகமாக ஃபேஸ்புக்கில் வடிவேலு படம் போட்டு அரசியல் பேசிக்கொண்டிருக்கிறோம்தானே ? 

பாஜக தோல்வியடைந்து காங்கிரஸ் வந்தால் எல்லாப் பிரச்சனைகளும் தீர்ந்து விடும் என்று யாரும் நம்பவில்லை. இதற்கு முந்தைய தேர்தலில் காங்கிரசுக்கு மாற்றாக பாஜகவை சொன்னவர்களல்ல இப்போது பாஜகவிற்கு மாற்றாக காங்கிரசை சொல்பவர்கள். காங்கிரசை எதிர்த்தனரே அன்றி பாஜகவை பரிந்துரை செய்யவில்லை. அது சில அரை வேக்காடுகள் தந்நலவாதிகள் செய்ததுதான். 

நமது அச்சம் என்ன ? நமக்கிருக்கும் சில உரிமைகளும் பண்பாடும் பறிபோய், கீழ்த்தரமான மனிதர்களால் ஆளப்படுவோம் என்பதுதான். இப்போது இருக்கும் ஆட்சி தொடர்ந்தால் என்ன ஆகும் மொழி, தேசிய இன உரிமைகள் பறிக்கப்பட்டும், சீனாவைப் போன்ற ராணுவ சர்வாதிகாரமும், முஸ்லிம் நாடுகளைப் போன்ற மதவாத அடக்குமுறைகளும், ஜாதிய அடிமைத்தனங்களும் இன்ன பிற ஒழிக்கப்பட வேண்டிய மனித குலத்திற்கு எதிரான அனைத்தும் தலைவிரித்தாடும் என்ற அச்சமும்தான். இது ஒன்றன்பின் ஒன்றாக நம் மீது கட்டப்படும். 

பாஜக/ஜாதிக் கட்சிகள் வன்முறை செய்வதற்கும் மற்ற கட்சியினரின் வன்முறைக்கு என்ன வேறுபாடு இருக்கின்றது ? பாஜக அல்லது ஜாதிக் கட்சிகள் அடையாள அரசியல் செய்பவை. நாம் அவர்கள் என்று உணர்வுப் பூர்வமாக பிரித்து அதன்மூலம் பூசல் வெறுப்புணர்வு வளர்த்து அதன் மூலம் வன்முறை செய்பவை. இது அரசியல் சாராத பொதுமக்களையும் உணர்வுரீதியாக இணைத்து மற்றொரு பிரிவினர் மீது வன்முறை செய்பவை. இந்தியாவில் பொதுவாகவே பெரும்பான்மை மக்கள் தம்மை ஜாதியுடனும் மதத்துடனும்தான் இணைத்து தம்மை அடையாளப்படுத்த விரும்புகின்றனர். இப்படி இருக்க இவர்கள்து பொருளாதார ரீதியான பிரச்சினைகள் திசை திருப்ப மதவாதம் ஜாதியம் தேசப்பற்று என கவர்ச்சியான காரணங்கள் போதும் இதைக் கொண்டே மற்றவர்கள் மீதும் வன்முறையை ஏவவும் முடியும். 

மதவாதம்/ஜாதி/ இனவாதம் அல்லாத கட்சிகள் செய்யும் வன்முறை என்பது அக்கட்சியின் அதிகாரப் போட்டி காரணமாக குழுக்களுக்கிடையே போட்டி பொறாமை தனி நபர்களுக்கிடையேயான போட்டி பொறாமை காரணமாக விளைவது, அல்லது தனிநபரின் பொறுக்கித்தனம் ரௌடித்தனம் காரணமாக விளைவது இதனால் மிகச்சில பொதுமக்கள் மட்டுமே பாதிக்கப்படுகின்றனர். இது நியாயம் என்றோ சாதாரணம் என்றோ சொல்ல வரவில்லை. இது போன்ற கட்சியிலிருப்பவர்களும் கூட ஜாதி மத வெறியின் காரணமாக கொலைகள் செய்வதுண்டு என்றாலும், இது கட்சியின் கொள்கை காரணமாக விளைவதில்லை என்பதுதான் இங்கே முக்கியமானது.

10 வருடங்களுக்கு முன்பு ஈழப் படுகொலைக்கு எதிராக தமிழ்நாட்டில் பரவலாகப் போராட்டம் நடந்த போது இந்திய அரசுக்கு எதிராகவும், இறையாண்மைக்கு எதிராகவும் பரவலான முழக்கங்கள் எழுந்தன. தமிழ்நாட்டு காங்கிரஸ் தலைவர்கள் ராஜிவ் படுகொலையை முதன்மைப் படுத்தியும், விடுதலைப் புலிகளுக்கு (தீவிரவாத எதிர்ப்பாம்) எதிராகவும் பேசினர். அதற்காக தமிழ்நாட்டை இழிவும் செய்தோ வெறுப்போ காட்டவில்லை. அவர்கள் கட்சிக்கு விசுவாசமாக என்ன செய்ய வேண்டுமோ அதை செய்தனர். 

தற்போது பாருங்கள். தமிழ்நாட்டில் எந்தவொரு வாழ்வாதாரப் போராட்டம் நடந்தாலும் கட்சியிலேயே இல்லாத காவி பயங்கரவாதிகள் டுமிலன், போராளீஸ் என்றெல்லாம் என்னமா நக்கலடிக்கிறார்கள் ? இத்தனைக்கும் தேர்தலில் ஈடுபடும் கட்சிகள் கூட இது போன்ற போராட்டங்களில் முன்னிறுத்தப்படவில்லை. இப்படி சராசரி மக்களின் போராட்டத்தையே இப்படி வெறுப்பு காட்டி நக்கலடிக்கும் காவி இழிபிறவிகள், தமிழ்நாட்டின் இறையாண்மைக்கு எதிரான நாக்பூர் பயங்கரவாதிகளின் காலை நக்கி தமிழ்நாட்டுக்கு எதிராக செயல்படும் சங்கிகளை எதிர்க்க வேறு என்ன வழி ? இங்கே பெரும்பான்மை மக்களும், ஏன் படித்து முடித்த அறிவாளிகளே ஜனநாயக உணர்வற்ற, அரை வேக்காடுகளாக சங்கிகளாக ஜாதி வெறியன்களாக இருக்கும் நிலையில் நாம் வேறு என்ன செய்ய முடியும் ?

காங்கிரஸ் மட்டுமல்ல இங்கு மூன்று தேசியகட்சிகளுமே இந்தியாவின் ஏதோ ஒரு இனப்படுகொலையில் கைநனைத்தவைதான். 

இப்போது காங்கிரஸை எதிர்ப்பவர்கள் சொல்லும் காரணங்கள் என்னென்னா ? காஷ்மீர் வடகிழக்கு மாநிலங்கள் தேசிய இனங்கள் மீதான ராணுவ கொடூரங்கள், மாநிலங்களின் தன்னாட்சி உரிமை இன்ன பிற குறித்து காங்கிரசின் நிலையும் பாஜக நிலையும் ஒன்றுதான் என்கின்றனர். 

இந்திரா காந்தி வெறியாட்டம் போட்ட அவசர நிலை ஆட்சி, பிந்த்ரன்வாலே காலத்தில் பொற்கோயில் ராணுவ நடவடிக்கை, பஞ்சாப் படுகொலைகள் மற்றும் பல. இந்திரா படுகொலையைத் தொடர்ந்து சீக்கிய இனப்படுகொலையுடன் அரசியலில் இறங்கிய ராஜீவ் நடத்திய ஃபாசிச ஆட்சி, இந்திய அமைதிப்படை நடத்திய ஈழப்படுகொலை இப்படி எல்லாமே இருக்கின்றன. 30 ஆண்டுகள் முந்தைய நிலை இது. 

அதாவது 30 ஆண்டுகளுக்கு முன்பு பாஜக தலையெடுக்கும் முன்பு காங்கிரஸ் ஆடிய வெறியாட்டம் இப்போது இருக்கும் பாஜகவுக்கு நிகரானது அல்லது அதிகமானது. இந்தியாவின் நிலை, இந்தியாவின் ஆளும் கட்சியின் நிலை இப்படியிருக்க இலங்கையில் சிங்கள-புத்த பேரினவாத தமிழ் வெறுப்பு நச்சு இலங்கை முழுவதும் பரவலாக ஈழத்தமிழினத்தை குதறி எடுத்துக் கொண்டிருந்தது. தமிழ் ஆயுதக் குழுக்கள் எழுச்சி இராணுவத் தாக்குதலையும் ஈழத்தமிழனை கொன்று குவிக்கத் தொடங்கியிருந்தது. இப்படி இலங்கையின் பயங்கரவாத ஃபாசிஸத்திற்கு எதிரான ஆயுதமேந்திய தமிழர்கள் 

ஏன் ஏன் ஏன் 

இந்தியாவின் தேசிய இனங்களை வேட்டையாடியும், அடக்கியும் வைத்துள்ள இந்தியாவிடம், ஆளும் காங்கிரஸ் கட்சி தலைவர்களிடம், இந்திய ராணுவத்திடம், உளவுத் துறையிடம் வந்து, ஆயுதமும் பணமும் பயிற்சியும் பெற்றார்கள் என்பதை விளக்கினால் நலம். அப்படி வந்தவர்களிடம் ஏன் காங்கிரசின் யோக்கியதை விளக்கிக் கூறி தடுக்க வில்லை. 

ஃபாசிச எதிர்ப்பிற்காகத்தானே?

அப்படி வந்து ஆயுதப் பயிற்சி பெற்றவர்களை ஆதரிப்பவர்கள் ஏன் இதை எதிர்க்கிறார்கள் என்று புரியவில்லை. இல்லை புலிகள் ராஜபக்சேவுக்கு ஆதரவாக தேர்தலைப் புறக்கணித்து, ரணிலைத் தோற்கடித்து தனக்குத்தானே குழி தோண்டியதைப் போல பெரிய திட்டத்தோடேவா ?
Download As PDF
Bookmark and Share

Post Comment

டெசோ மாநாட்டுக்கு முன்னர் தமிழ் ஈழத்துக்கு இந்தியா விதித்த தடை !!


இது கருணாநிதிக்கு சோதனைக்காலம். பேசாமல் இந்த மாநாட்டை அறிவிக்காமலே இருந்திருக்கலாம். உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு போன்றே இதையும் நடத்தி சரிந்திருக்கும் தனது செல்வாக்கை உயர்த்துவதற்காக தமிழீழ ஆதரவாளர்கள் கூட்டமைப்பு (Tamil Eelam Supporters Organisation) மாநாட்டை அறிவித்தார். ஆனால் கெடுவாய்ப்பாக இந்திய உள்துறை அமைச்சகத்தின் அறிக்கையின் படி விடுதலைப்புலிகளின் மீதான தடையை நீட்டித்த அமைச்சகம், அதோடு நில்லாமல் தமிழீழம் என்ற கோரிக்கையோ கருத்தோ கூட இந்தியாவின் இறையாண்மைக்கு எதிரானது என்று அறிவித்திருக்கிறது. 

இதற்குப் பின்னர் பேட்டியளித்த கருணாநிதி தமிழீழக் கோரிக்கை வைக்கப்படாது என்று கூறிவிட்டார். மற்ற கேள்விகளும் மடக்கி மடக்கி கேட்கப்பட, எல்லாவற்றுக்கும் சமாளிப்பாகப் பதில் அளித்திருக்கிறார். ஒரு வேளை கொஞ்சம் மாற்றிச் சொல்லியிருந்தால் மத்திய அரசுக்கு எதிராக கருணாநிதி மாநாடு என்று தினமலர் தலைப்புச் செய்தியில் தீட்டு தீட்டென்று தீட்டித் தள்ளியிருக்கும்.

இதற்குப் பின்னர் வழக்கம் போலவே கருணாநிதி காய்ச்சி எடுக்கப்படுகிறார். இதைத் தொடர்ந்து கருணாநிதி மட்டும் குறி வைத்து குதறப்படுகிறார். இப்படிக் கருணாநிதியைக் கேவலபடுத்துகிறவர்கள் உண்மையில் ஈழத்திற்கு ஆதரவான நிலையின் காரணமாக செய்கிறார்கள் என்றால் இல்லையென்றே தோன்றுகிறது. ஏனென்றால் இந்த மாநாடே  பொது வாக்கெடுப்பு நடத்தி தமிழீழம் அமைய, இந்திய அரசுக்குகோரிக்கை வைப்பதற்காகத்தான் நடத்தப் போவதாகக் கருணாநிதி கூறியிருந்தார். 

அப்படியிருக்க இந்திய அரசே தமிழீழம் என்ற கோரிக்கை இந்திய இறையாண்மைக்கு எதிரானது என்று அறிவித்து அதைத் தடை செய்தும் விட்டது. இதற்காக ஈழ ஆதரவாளர்கள் உண்மையில் இந்தியாவின் மீதுதானே கோபப்பட வேண்டும். அதுதானே நியாயம். இதற்கு கருணாநிதியைத் திட்டி என்ன செய்யப்போகிறோம். ஈழத்தை வைத்து அரசியல் செய்கிறவர்கள் அனைவருமே தமது தன்னல அடிப்படையிலேயே செய்கிறார்கள்.  இதில் கருணாநிதி மட்டும் விதிவிலக்கா என்ன ? 

இந்தியாவையும், அமெரிக்காவையும் ஈழத்தில் தலையிடச் சொல்லும் இவர்கள் கருணாநிதியை மட்டும் எதிர்க்கிற காரணம்தான் என்ன ? கோட்சே தமிழ்ஈழத்தை ஆதரித்தால் ஆதரிப்போம், காந்தி எதிர்த்தால் அவரை எதிர்ப்போம் என்ற சீமான் கருணாநிதியை ஏன் ஆதரிக்க மறுக்கிறார். ஜெயலலிதாவை பெரிதாக விமர்சிக்கும் திராணியற்ற இவர்கள் கருணாநிதியைப் போட்டுத்தாக்கிக் கொண்டே இருப்பதேன். தமிழர்க்காக கட்சி தொடங்கிய சீமானும் இந்திய இறையாண்மையைக் காப்பதாகத்தானே அறிக்கையில் சொன்னார். அப்படியிருக்க கருணாநிதி மட்டும் எப்படி இந்தியாவை எதிர்த்து மாநாடு நடத்த வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள் என்பது புரியவில்லை.  தற்போது சிறைநிரப்பும் போராட்டம் நடத்தி கெத்துக் காட்டியுள்ள திமுகவினர் பெரிய எழுச்சியை உருவாக்கி விடுவார்கள் என்று அஞ்சி, திமுக மாநாட்டின் எழுச்சிக்கு பயந்துதான் அரசு தமிழீழத்தைத் தடை செய்தது என்று சொல்லலாமல்லவா ?

தமிழீழத் தடையின் காரணமாக இனிமேல் ஈழத்தைப் பற்றிப் பேசினாலே குற்றம் என்று கூறி சிறையில் அடைப்பார்கள். தமிழீழம், தனித் தமிழ்நாடு என்பதெல்லாம் சாத்தியமே இல்லை என்பது கண்கூடாகவே தெரிகிறது. இதற்காக இந்தியாவை எதிர்க்குமளவிற்கு தமிழர்களுக்கு தெம்பு இருக்கிறதா ?; ஈழத்தமிழர்களை நிம்மதியாக வாழவிட தமிழ்நாட்டு அரசியல் வாதிகள் சும்மா இருந்தாலே போதும். தமிழர்களுக்கு சம உரிமை வழங்கத்தான் இந்தியாவும் இலங்கையும் போரை நடத்தினார்களா ? இவர்கள் திரும்பத் திரும்ப இந்தியாவை வலியுறுத்துவதன் நோக்கம்தான் என்ன ? போரை நடத்த ஆயுதமும் பணமும், உளவுத் தகவலும் வழங்கிய உலக நாடுகள் போர் முடிந்த பின்பு போர்க்குற்ற விசாரணை என்ற பெயரில் பொருளாதார ஆதிக்க நோக்குடன்தான் இலங்கையைத் தம்பக்கம் திருப்ப நெருக்கடி கொடுக்கிறார்களே அன்றி தமிழர்கள் நலனோ போர்க்குற்றமோ அவர்களின் இலக்கு இல்லை. 

போர் நடந்த போது இலங்கையின் இறையாண்மையில் தலையிட முடியாது என்று கூறி போரை நிறுத்தாத இந்தியா தற்போது தமிழீழம் இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கும் இறையாண்மைக்கும் எதிரானது என்று சொல்கிறது. அதனால்தான் அதைத் தடை செய்திருக்கிறது என்று கூறுகிறது. இப்போதுதான் முறைப்படி தடையை அறிவித்திருந்தாலும், இதற்கு முன்பிருந்தே தமிழீழம் என்றதை இந்தியாவோ அதன் அரசியல் கட்சிகளோ ஆதரித்ததோ இல்லை. முன்பு புலிகளுக்கு பயிற்சி கொடுத்ததே இலங்கை அரசைப் பணியவைக்கத்தான். விடுதலைப் புலிகள் இந்தியாவுடன் முரண்பட்டபோது 25 வருடங்களுக்கு முன்பே இந்திய ஈழப்போர் மூண்டது. பின்பு 3 வருடங்களுக்கு முன்பு அதற்காகத்தான் கொடிய போரை ஏவி விடுதலைப் புலிகளை அழித்தது. இன்று வரை தமிழக மீனவர்கள் கொல்லப்படுகிறார்கள். இலங்கையில் சிங்கள இனவெறியர்கள் இந்திய எதிர்ப்பு பேசுகிறார்கள், காந்தி சிலையை உடைக்கிறார்கள். இந்தியாவிடமிருந்து எதிர்வினையே இல்லை. 

யாரோ சொன்னார்கள் தமிழீழம் அமைவதை இலங்கை அனுமதித்தாலும் இந்தியா அனுமதிக்காது என்று. அதுதான் உண்மை. இந்தியத் துணைக்கண்டத்தில் தேசிய இன விடுதலையை இந்தியா அனுமதிக்கவே செய்யாது. இந்தியாவே பல தேசிய இனங்களின் சிறைக் கூடமாக இருக்கிறது. இதில் காஷ்மீர், சில வடகிழக்கு மாநிலங்களில் இருப்பவர்கள் இந்தியாவிற்கு எதிரானவராகத்தான் இருக்கின்றனர். இவர்களுக்கென்று மற்ற மாநிலங்களுக்கு இருப்பதை காட்டிலும் சலுகை சட்டங்கள் உள்ளன. இம்மாநிலங்களில் தொடர்ந்து இராணுவக் கண்காணிப்பு நடைபெறுகிறது. ஒரு வேளை இந்திய ஆதரவுடன் இலங்கையில் தனிநாடு அமைகிற பட்சத்தில் இம்மாநிலங்கள் பற்றி எரியும். இது இந்தியா தனக்குத்தானே கொள்ளி வைத்துக் கொள்வதற்கு ஒப்பாகும்.

சீனாவிற்கு எதிரி என்ற நிலையிலிருந்தே தலாய் லாமாவை இந்தியா ஆதரித்து வருகிறது. அதற்கு பதிலடியாக சீனா காஷ்மீருக்கு தனி விசா அளிக்கிறது. அதே எதிரி என்ற நிலையில்தான் வங்க தேசத்தையும் உருவாக்கியது. ஆனால் இலங்கையோ ஒரு சீனாவையும் பாகிஸ்தானையும் ஒத்ததல்ல. அது கிட்டத்தட்ட இந்தியாவின் கட்டுப்பாட்டிலுள்ளது போலத்தான். இலங்கை மசியாமல் போக்குக் காட்டியதால்தான் விடுதலைப்புலிகளை ஆதரித்தது, புலிகள் தமக்கு ஒத்துவராத போது அவர்கள் மீதும் போர் தொடுத்தது. 

உலகமயக் காலமான இன்று நாடுகளின் எல்லைகளே கிட்டத்தட்ட இல்லாமல் ஆகி வருகின்றன. இந்நிலையில் தனி ஈழமே தமிழ்நாடோ எந்தளவு சாத்தியமென்று தெரிந்தும் இன்னும் அதையே பேசி வருகின்றனர். தெற்கு சூடான் அது வேறுகதை. சொல்லப்போனால் விடுதலைப் புலிகள் இருந்த காலத்திலேயே தமிழ் ஈழம் சிற்சில குறைகளுடன் அமைந்தேதான் விட்டது. அதற்கு அங்கீகாரம் மட்டும்தான் இல்லாமலிருந்தது. தனிநாட்டைப் போலவே பல நிறுவனங்களையும் நடத்திவந்தது புலிகள் இயக்கம். போரினால் அனைத்தும் அழிக்கப்பட்டது. பிரபாகரன் கொல்லப்பட்டதை நான் சதாம் உசேனும், முவம்மர் கடாஃபியும் அழிக்கப்பட்டதைப் போலவே பார்க்கிறேன். என்ன அவர்கள் இறையாண்மை உடைய ஒரு நாட்டின் அதிபர்களாக இருந்தவர்கள். பிரபாகரனோ அங்கீகாரமில்லாத நாட்டின் அதிபர் என்பதே எனது கணிப்பு. 

இராஜீவோ, இந்திரா காந்தியோ, ம.கோ. இராமச்சந்திரனோ உயிருடனிருந்திர்ந்தாலும் தமிழீழம் அமைந்திருக்காது. ஏனென்றால் அது இந்தியாவின் இறையாண்மைக்கு எதிரானது. இது தெரிந்தும் சிலர் நம்பாதது மாதிரியே நடிக்கிறார்களா அல்லது அவர்களுக்கு புரிவதே இல்லையா என்பது அவர்களுக்கு வெளிச்சம். இப்படி கருணாநிதி எதிர்ப்பாளர்கள் யாரும் தமிழ் ஈழத்தைத் தடை செய்த இந்தியாவின் மீது கோபப்படாமல் கருணாநிதியை மட்டும் இந்திய இறையாண்மையை மீறச் சொல்கிறார்கள்
Download As PDF
Bookmark and Share

Post Comment

கண்டுகொள்ளப்படாத மக்கள் போராட்டங்களும் கொட்டி முழக்கப்படும் கோமான்களின் போராட்டமும் !!

இன்று நடைபெற்ற திமுகவினரின் சிறைநிரப்பும் போராட்டம்தான சூடாக விவாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. திமுகவினரைப் பிடிக்காதவர்கள் இந்தப்போராட்டத்தை நக்கலடித்து நாறடிக்கிறார்கள். திமுகவினரோ தமது கட்சியின் வலிமையைக் காட்டி விட்டதாக சிலாகிக்கிறார்கள். தமிழகம் முழுவதும் கைது செய்யப்பட்ட திமுகவினரின் எண்ணிக்கை ஒரு இலட்சத்தைத் தாண்டிவிட்டது. ஒன்றரை இலட்சம் இருக்கலாம் என்றும் தெரிகிறது. தோராயமாக ஒரு திமுககாரர் தினமலரிலும் தினமணியிலும் போட்ட கருத்திலிருந்து எடுத்த எண்ணிக்கை.

"ஈரோடு மாவட்டத்தில் 5000 பேரும், விழுப்புரத்தில் 20,000 பேரும், திண்டுக்கல்லில் 25,000 பேரும், திருவண்ணாமலையில் 5000 பேரும், திருவள்ளூரில் 5000 பேரும், திருச்சியில் 7000 பேரும், கிருஷ்ணகிரியில் 5000 பேரும், தேனியில் 5000 பேரும் கைதாகியுள்ளனர். அதேபோல கடலூரில் 10,000 பேரும், தஞ்சையில் 15,000 பேரும், நாகையில் 10,000 பேரும், கன்னியாகுமரியில் 2000 பேரும், வேலூரில் 15,000 பேரும் கைதாகியுள்ளனர். திருப்பூரில் 10,000, தர்மபுரியில் 10,000, தூத்துக்குடியில் 5000 பேரும் கைதாகியுள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் 20,000 திமுகவினர் கைது செய்யப்பட்டுள்ளனர். மு.க.அழகிரியின் கோட்டையாக கூறப்படும் மதுரையில் 10,000 திமுகவினர் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைநகர் சென்னையில் மட்டும் 50,000 பேர் கைதாகியுள்ளனர். இதில் வட சென்னையில்தான் அதிகபட்சமாக 25,000 பேர் கைதாகியுள்ளனர். தென் சென்னையில் 15,000 பேர் கைதாகியுள்ளனர்.மத்திய சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டு கைதானவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரம்"
 

இதே போராட்டத்தை அதிமுக நடத்தியபோது 20000 பேர்கள் கூட தேறியிருக்கவில்லை என்று கூறுகின்றனர்.

ஆக இவ்வளவு பெரிய மக்கள் திரளைக் கொண்டுள்ள ஒரு கொள்கையுடைய இயக்கம் தனது கட்சிக்காரர்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதை எதிர்த்து நடத்தியுள்ள போராட்டத்தில் தமது வலிமையைக் காட்டியுள்ளது. அதுவும்  கலைஞரின் போராட்ட அறிவிப்பைத் தொடர்ந்து தன்னிச்சையாக போராட்டத்தில் ஈடுபட விரும்பிய தொண்டர்களின் எண்ணிக்கையே இவ்வளவு. முதலில் கருணாநிதி போராட்டம் தொடங்கிய போது அறிவித்தது > 50000 பேர்கள் வரையே!! ஆனால் கைது எண்ணிக்கை ஏறக்குறைய இலட்சத்தைத் தாண்டி விட்டது என்ற நிலையில் அவருக்கே இது இன்ப அதிர்ச்சிதான். இவர்கள் இன்னும் தீவிரமாக ஈடுபட்டால் இதைப்பொன்று சில மடங்கு கூட்டத்தைத் திரட்ட முடியும், திரட்டிப் போராடினால் தமிழகத்தில் சில பிரச்சனைகளைத் தீர்க்க விரைவில் அது வழிவகுக்கும் ஆனால் அதை மட்டும் செய்ய மாட்டார்கள் இவர்கள். இதில் தயாநிதி மாறனெல்லாம் கலந்து கொண்டு சிறை சென்றிருக்கிறார். நம்மைப் போன்ற நடுத்தர வர்க்க மங்காணிகளைப் போலல்லாமல் பணக்காரராக இருந்தும் போராடி சிறை சென்று வரலாற்றில் இடம் பிடித்திருக்கிறார். 



இத்தனை பேரின் போராட்டம் எதற்காக சேலம் புதிய பேருந்து நிலையத்தின் அருகே 30 ஏழைகளின் நிலங்களை அபகரித்த வழக்கில் திமுகவின் வீரபாண்டி ஆறுமுகம் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதற்காக. ஏறக்குறைய 50 கோடிகள் தேறும் அந்த நிலத்துக்காக கடந்த திமுக ஆட்சியிலிருந்தே அப்பகுதியைச் சார்ந்தவர்கள் போராடி வந்தனர். வீரபாண்டி ஆறுமுகத்தையும் அவரது சக போராளிகளையும் ஏழைப் போராளிகளையும் எதிர்த்துப் போராடிய அம்மக்களுக்கு 4 வருடங்களுக்குப் பிறகே சட்டரீதியிலான நீதிமன்றத் தீர்ப்பு  அவர்களுக்கு சாதகமாக வந்து விட்டது. இதன் பின்னணியில்தான் வீரபாண்டியார் கைது செய்யப்பட்டார். இதில் அரசியல் உள்நோக்கம், பழிவாங்கல் என்பதும் இருக்கலாம். ஆனால் அபகரிக்கப்பட்டது மக்கள் நிலம் நிலத்தை மீட்கப் போராடியது வென்றது பொதுமக்கள்தானே அன்றி அதிமுகவினர் இல்லை.  இதில் என்ன தவறு இருக்கிறது. ஈழத்தில் தமிழர்களின் நிலங்களை சிங்கள அரசு பேரினவாத விரிவாக்கலுக்கு அபகரிக்கிறது. இங்கே தமிழினத்தலைவரின் கட்சிக்காரர்கள் ஏழைத்தமிழர்களின் நிலங்களை அபகரிக்கிறார்கள். இந்த ஏழைப் பங்காளனைக் காக்க மிகப்பெரும் போராட்டம் நடத்தும் திமுகவினர் மக்களுக்காகப் போராடியதுண்டா ?

மூன்று வருடங்களுக்கு முன்பு இந்த வலிமையைக் காட்டியிருக்க வேண்டியதுதானே ? ஈழப்போர் உக்கிரமான நிலையை எட்டியபோது கலைஞர் தொலைக்காட்சியின் கிளையான சிரிப்பொலி தொடக்கப்பட்டது வரலாறு. சரி அங்கு பல அரசியல் சிக்கல்கள் உள்ளன தொலையட்டும். தற்காலத்திய மக்கள் பிரச்சனைகளில் எத்தகைய போராட்டங்களை நடத்தியிருக்கிறது திமுக. தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் நிகழ்வதே அப்போதைய ஆளுங்கட்சியின் மீதான வெறுப்பில் எதிர்க்கட்சியினருக்கு வாக்களிக்கின்றனர். வெறுப்பை வடிகட்டி அப்போதைய எதிர்கட்சி ஆட்சியைப் பிடிக்கிறது. ஒரு வருடத்தில் அம்மாவின் ஆட்சியில் தமிழகம் மூச்சுத் திணறுகிறது. இதில் வெறும் அறிக்கைகள் மட்டுமே வெளியிட்ட மாபெரும் கட்சி, மக்களுக்காக என்ன செய்தது ? பேருந்துக் கட்டணம், பால் உட்பட இன்னபிற இன்றியமையாப் பொருட்கள் விலையுயர்வு ஒரு எடுத்துக்காட்டு.

சரி அதையும் விடுவோம். தமிழ்வெறுப்பு ஜெயலலிதா தற்போது அண்ணா நூலகத்தை திருமணத்திற்காகத் திறந்து விட்டதற்காக இரத்தக் கண்ணீர் மட்டும் வடிக்கிறார். பார்ப்பன ஜெயலலிதா சித்திரை மாதத்தை தமிழ்ப் புத்தாண்டு என அறிவித்தை எதிர்த்து என்ன போராட்டம் நடந்தது ? சமச்சீர் கல்விக்கு எதிராக ஜெயலலிதாவின் நடவடிக்கைகளுக்கு என்ன எதிர்ப்பைத் திமுக காட்டியது ? ஒரு வருடத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் வரலாற்றுச் சிறப்பு மிக்க, உறுதிமிக்க அணு உலை எதிர்ப்புப் போராட்டமாம் இடிந்தகரைப் பிரச்சனையில், திமுக கூடங்குளம் அணு உலையும் திறக்கப்பட வேண்டும் என்கிறது. இந்த இரு கட்சிகளில் எது ஆண்டால் தமிழகத்துக்கு என்ன பெரிய மாற்றம் வந்து விடப்போகிறது. 



இப்படி மக்களின் எல்லாப் பிரச்சனைக்கும் தள்ளியிருந்து விட்டு, தமது கட்சிக்காரரின் கைதுக்கு மட்டும் போராட்டம் நடத்துகிறது திமுக. ஆனால் மற்றொரு புறத்தில் மக்களுக்கான போராட்டம் தொடர்ந்து நடக்கிறது, இடிந்த கரை, ஈழ அகதிகள் போராட்டம், முல்லைப்பெரியாறு, சிறுவாணி அணைக்கு எதிராக, தனியார் பள்ளிகளுக்கு எதிராக என எல்லா இடங்களிலும் மக்களின் தன்னிச்சையான போராட்டம் தொடர்கிறது. உதயகுமாரும், முத்துக்குமாரும், செங்கொடிகளும் தமிழர்களாகப் பிறந்தவர்கள்தான். இவர்களெல்லாம் இழிவு செய்யப்பட்ட போது போராடாத தமிழர்கள்தான் தற்போது தலைப்புச் செய்திகளில் தெரிகிறார்கள். இவர்கள் என்ன செய்தாலும் பேசப்படு பொருளாகின்ற நிலையில் சமகாலப் பிரச்சனைகளுக்கு இவர்கள்தானே பொறுப்பு. இனத்தலைவர் என்று பட்டப் பெயர் போட்டுக் கொள்பவர் இனத்தின் பிரச்சனைகளுக்குப் போராட தமது தொண்டர்களுக்குக் கட்டளையிடுவதில்லை.

இதே கேரளாவில் எடுத்துக் கொள்வோம்!! முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சனையில் அது தமிழகத்திற்கு எதிரான நிலைப்பாடு என்பது தனிக்கதை. அதில் அனைத்துக் கட்சியினரும் மக்கள் பிரச்சனை என்ற வகையில் ஒன்று பட்டு நிற்கிறார்கள். மேற்கு வங்கத்தில், கேரளத்தில் மக்களையும், மற்ற அரசியல் கட்சிகளையும் மீறி அணு உலை கட்ட இயலாது. ஆனால் தமிழகத்தில் ??!!

Download As PDF
Bookmark and Share

Post Comment

தமிழ்த்தேசியத்திடமிருந்து பிரிக்க முடியாத இந்திய இறையாண்மை !!

திராவிட எதிர்ப்புக்கு மறுப்பு வரும்போதெல்லாம் தமிழ்நாட்டில் தமிழர் என்றாலே பலருக்குப் பிடிப்பதில்லை என்கிற பாணியில் புலம்பலும், காழ்ப்பும் நிரம்பிய வகையில் பதிலடி வருகிறது. தமிழுணர்வை திராவிட வெறியர்கள் எதிர்த்து நிற்பதைப் போல காட்டுகிறார்கள். பெரியாரியத்தை பார்ப்பனர்கள் எதிர்க்கிறார்கள், ஜாதிவெறியர்கள் எதிர்க்கிறார்கள், மதவாதிகள் எதிர்க்கிறார்கள் அந்தோ மறத்தமிழர்களும் எதிர்க்கிறார்கள்.

தற்போது நாம் தமிழர் இயக்கத்தினரால் வெளியிடப்பட்ட கட்சி செயல்திட்டத்தில் இந்திய இறையாண்மையை காக்க வேண்டும் என்ற உறுதிமொழி வெளியிடப்பட்டத்தைத் தொடர்ந்து அக்கட்சியின் மீது பலரும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். வழக்கம் போலவே நாம் தமிழர் கட்சியும் திமுக எதிர்ப்பு, கருணாநிதி எதிர்ப்பு, பின்பு திராவிட எதிர்ப்பு இறுதியாக வேறு வழியின்றி பெரியார் எதிர்ப்புடன் முடித்து பெரியார் தமிழினத் துரோகி என்ற முழக்கத்தின்படியே தமது திட்டத்தை வெளியிட்டுள்ளனர். இதில் பார்ப்பனியம் என்ற சொல் கவனமாகத் தவிர்க்கப்பட்டுள்ளது. பார்ப்பனர் என்ற சொல்லுக்கு ஆய்வாளர் என்று புதிய அருஞ்சொற்பொருளும் தரப்பட்டுள்ளது. அதற்குப் பதிலாக ஆரியம், பார்ப்பனீயம் என்ற வடமொழிச் சொற்களுக்கு மாறாக மனுவியம் என்பதைப் பயன்படுத்தியதாகக் கூறுகிறது நாம் தமிழர் இயக்கம். செய்திகளை வெளியிட்ட பின்பு முன்னுக்குப் பின் முரணாகத் தற்போது சீமான் தமிழக அரசியல் இதழுக்கு பேட்டி வழங்கவேயில்லை என்று மறுத்திருக்கிறார்.

தமிழர் விடுதலைக்காக போராடக் கிளம்பிய கட்சியினர் ஏன் இந்திய இறையாண்மையக் காப்பதாக உறுதி மொழி எடுத்துக்கொள்ளவேண்டும். இந்திய இறையாண்மையைக் காப்பதற்குத்தான் எத்தனையோ பேர் இருக்கின்றனர். பொதுவாக ஈழத்தமிழர் விடுதலை தனித் தமிழ்நாடு என்றாலே இந்திய இறையாண்மைக்கு எதிராகப் பேசினார்கள் என்று போட்டுக் கொடுக்க தினமலர், பேராயக் கட்சி என்று பலர் இருக்கின்றனர். இதுவரை தமிழ்நாட்டிலிருக்கும் எந்தத் தமிழ்தேசியக் கட்சியும் இந்திய இறையாண்மையைக்காப்பதாகக் கூறவில்லையே என்று எதிர்ப்பவர்கள் கூறுகிறார்கள். நாம் தமிழர் இயக்கத் தமிழர் சீமானை மேடையேற்றி அவரை அறிமுகப்படுத்திய பெரியார் திகவினர். ஈழப்போரின் போது தமிழகத்தில் நடைபெற்ற போராட்டத்தின்போது நாம் தமிழர் இயக்கம் தொடங்கப்பட்டது. இவர்கள் நாம் தமிழர் இயக்கத்தின் தொடக்கத்திலிருந்தே எதிர்த்து வந்தனர். இப்போது பெரியார் ஈழத்தந்தை செல்வாவுக்ககு ஒரு அடிமை மற்றொரு அடிமைக்கு எப்படி உதவ முடியும் என்று கைவிரித்ததை வைத்து திராவிடத்தால் ஏதும் முடியாது ஏய்த்துவிட்டதாக என்று சொல்கின்றனர். சுவாரசியமாக இவர்கள் சிங்களத்தையும் திராவிடப்பட்டியலில் சேர்த்திருக்கின்றனர். பேசாமல் பார்ப்பனியத்தையும் திராவிடப்பட்டியலில் சேர்த்திருக்கலாம், ஏனென்றால் சிங்கள இனவாதிகள் தம்மை ஆரியர்களாகக் கருதிக் கொள்கிறவர்கள்.

கேட்டுக் கேட்டு சலித்துபோன பழைய வாதங்களே மீண்டும் கேரளாவிலோ ஆந்திராவிலோ, கர்நாடகாவிலோ எவனும் திராவிடன் என்று சொல்வதில்லை என்று, இதற்கென்ன சொல்வது, பெரியார் அன்றே சொல்லி விட்டார் இவர்களுக்கு எந்த சுயமரியாதையும் இல்லை என்று, இவர்களெல்லாம் பார்ப்பனியத்திற்கு அடிமையானவர்கள் என்று. அவர்கள் திராவிடன் என ஒத்துக் கொள்ள வேண்டுமென்றால் தமிழ்தான் திராவிட மொழிகளின் தாய் என்று ஒத்துக் கொள்ள வேண்டும். இதற்கு பார்ப்பனியத்திற்கு அடிமையான அவர்கள் தயாரில்லை. ஏன் 60 வருடங்களாக போராடியே தமிழ்நாட்டில் எத்தனை பேர் ஒத்துக் கொண்டார்கள், அங்கே விழிப்புணர்ச்சி ஊட்ட யாரும் பெரியார்போலப் பிறக்க வில்லை. கன்னடராக இருந்தாலும் தமிழர்களுக்குப் போராடியதால்தான் பெரியார் இன்னும் பெரியாராகிறார்.

தற்போதுள்ள தமிழ்தேசிய வாதிகள் வைக்கும் எந்த வாதமும் மராட்டிய இனவெறியன், இந்துத்துவாவாதி பால் தாக்கரே, ராஜ் தாக்கரே ஆகியோரின் இனவாத வன்முறை அரசியலுக்கும் எந்தளவும் மாறியதில்லை, கூடவே வாட்டாள் நாகராஜ் என்ற தலைவரும்தான். தமிழ்நாட்டிலுள்ள பிற மொழியினர் மீதான் வெறுப்புணர்வை வளர்ப்பது, வந்தேறிகள் வாழ்கிறார்கள் தமிழர்கள் வீழ்கிறார்கள் என்பது, இவர்களின் அரசியலுக்கு அவ்வப்போது ஈழத்தமிழர்களை இழுத்து பச்சாதாபம் தேடிக்கொள்வது என்று தொடர்கிறார்கள். தமிழ்தேசியவாதிகளில் பல வகையினர்  இருக்கிறார்கள். சமனியவாதிகள்(சோஷலிஷ்டுகள்) தொடங்கி இனவாதிகள், மத அடிப்படைவாதிகள் வரை. இவர்களுக்குள் பல வேறுபாடுகள், இவர்களுக்குள் எந்த கருத்து மோதல்களும் காணோம். உதாரணத்துக்கு ஒன்று. பொதுவில் (தமிழக) தமிழ்தேசியம் இந்தியாவை ஒத்துக் கொள்ளாது. அதன் கொள்கை தனித் தமிழ்நாடு, தனி ஈழம். அதே ஈழத் தமிழ்தேசியம் இத்தனை பட்ட பின்பும் இந்தியாவை தந்தை நாடு என்கிறது, தமிழீழம் அமைவது ஈழத்தமிழர்களுக்குப் பாதுகாப்பு என்பதை விட இந்தியாவுக்கு பாதுகாப்பு என்று இந்தியாவின் காலைச் சுற்றி வருகிறது. இதெல்லாம் ஏன் பேசப்படுபொருளாகவில்லை ? பெரியாரியமல்லாத தமிழ்தேசியம் என்ன கொள்கையை வைத்திருக்கும் என்பதற்கு ஈழத்தமிழ்த்தேசியமே உதாரணம். இலைங்கையிலிருந்தாலும் தமிழ்தேசியம் கடல் தாண்டி பார்ப்பன இந்தியாவின் காலில் விழும்.

சீமான்

சீமான் வெறும் உணர்ச்சிவயப்படும் மனிதராகத்தான் இருந்தார். தமிழுணர்வாளர்கள் அனைவராலும் கருணாநிதி வெறுக்கப்படக் காரணமாக இருந்தது, ஈழபோர்தான். ஆனால் ஈழப்போரின்போது நடந்த தேர்தலில் திமுக விற்கு எதிராகவும், அதிமுகவிற்கு ஆதரவாகவும் இருந்த சீமான், தேர்தல் முடிந்தவுடன் ஏதோ ஒரு வார இதழுக்கு வழங்கிய பேட்டியில் இப்படிக் கூறியிருந்தார். நம்மை எதிரி சுற்றி வளைத்துவிட்டால் கையில் கிடைப்பதை நாம் ஆயுதமாகப் பயன்படுத்துவதுபோலத்தான் நாங்கள் அதிமுகவை ஆதரித்தோம், ஆனால் கலைஞர்தான் தலைவர் என்பதில் மாற்றமில்லை, இப்போதும் என் அலுவலகத்தில் திமுக கொடியைக் காணலாம் என்றார். பின்பு ஜெயா தொலைக்காட்சியில் பேசினார். அப்படியே அம்மா ஆதரவாளராக மாறிவிட்டார்.

10 வருடங்கள் இருக்கலாம் நானும் என்னுடைய நண்பனும் ஈரோட்டில் பெரியார் வாழ்க்கையைப் பற்றி ஒரு படம் திரையிட இருந்தார்கள். அந்தத் திரைப்படம் ஞாநி இயக்கியதாகும். அந்தத் திரைப்படம் தொடங்கும் முன் சீமானின் உரையைக் காண நேர்ந்தது. அதில் பார்ப்பனிய, தீண்டாமை எதிர்ப்பு, பகுத்தறிவு தன்மான சீமான்தான் உணர்ச்சிகரமாகப் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அவர் சொன்ன வாசகம் இன்னும் நினைவிலிருக்கிறது. நண்பர்களே !! ஒரு சினிமாக்காரன் வந்து இங்கு பகுத்தறிவு பேசுகிறேன் என்று எண்ண வேண்டாம். சினிமா என்பது எனது தொழில். இங்கே நான் உங்களில் ஒருவனாக உணர்வுடன் வந்திருக்கிறேன். எனக்கு சினிமாத் தொழில் இல்லையென்றால் கள்ளச் சாராயம் காய்ச்சுவேன். (தொழில் கொண்டு பார்க்க வேண்டாம் உணர்வு கொண்டு பார்க்கவும்) என்று சொன்னார். கூட்டத்தில் கைதட்டல் அதிகமாக இருந்தது. இதற்கும் அவர் இப்போது நடந்து கொள்வதற்கும் ஏதாவது வேறுபாடு இருக்கிறதா ?

இதே போலத்தான் ஒருமுறை தமிழீழத்தை கோட்சே ஆதரித்தால் அவரை ஆதரிப்போம் ஆனால் காந்தி எதிர்த்தால் அவரையும் எதிர்ப்போம் என்றார். பிரபாகரன் படம்போட்ட சட்டையுடன் போய் பசும்பொன்தேவரின் விழாவில் கலந்து கொண்டு ஏன் தேவரைப் போராளியாக பார்க்க மறுக்கிறீர்கள் என்றார். பெரியார் தாழ்த்தப்பட்டவர்களுக்கு என்ன செய்தார் என்றார். மற்ற திராவிட எதிர்ப்பாளர்களின் கேட்டுக் கேட்டுக் சலித்துப் போனதையே இவரும் பேசுகிறார்.

திராவிட எதிர்ப்பு

திராவிட எதிர்ப்பு என்றாலே கருணாநிதியை விமர்சிக்க வேண்டியது கருணாந்தி, திமுகவின் தவறையெல்லாம் திராவிடத்தின் தவறாகவும் பெரியாரே மூலகாரணம் என்பதைப் போல பேச வேண்டியது இறுதியில் பெரியார் எதிர்ப்பில் முடிக்க வேண்டியது. திராவிடத்தால்தான் தமிழன் வீழ்ந்தான் என பிதற்ற வேண்டியது.

ஃபேஸ்புக்கில் கருணாநிதியின் பெயர் தட்சிணாமூர்த்தி, அவர் ஒரு தெலுங்கு வந்தேறி தமிழின் வெறுப்பாளர் என்ற ரீதியிலெல்லாம் செய்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. பகுத்தறிவு கருணாநிதி மஞ்சத் துண்டு அணிவது இந்து மதப் பண்டிகைகளுக்கு சிறப்பு நிகழ்ச்சிகள் ஒளிபரப்புவது பற்றியெல்லாம் எல்லோரும் கருணாநிதியைக் குதறி எடுப்பவர்கள், ஒரு கன்னடப் பார்ப்பனர் எப்படி திராவிடக் கட்சியில் தலைவராக இருக்கலாம் என்று ஒருவரும்  கேட்பதேயில்லை. அதுதான் தமிழக நாளிதழ்கள் தமிழர்களின் மண்டையில் திணித்திருக்கும் கருத்தின் தன்மை. முன்னாள் இன்னாள் பேராயக் கட்சியினர் என அனைவரும் தினமணியில் எழுதுவார்கள் என்ன பிரச்சனையென்றாலும் அதிலே நாலுவரியாவது கருணாநிதிதான் இதற்கெல்லாம் காரணம் என்ற பெயரில் எழுதுவார்கள், அப்படியே சந்தடி சாக்கில் திராவிடக் கட்சிகள் என்று பன்மையில் எழுதிவிட்டு திராவிடக்கட்சிகள் என்றாலே கருணாநிதி என்ற பெயர் வரும்படி பார்த்துக் கொள்வார்கள். இதில் கருணாநிதியை மட்டுமே கொள்கை ரீதியில் விமர்சிப்பார்கள், ஜெயலலிதாவை அப்படி விமர்சிக்க மாட்டார்கள் வெறும் நிர்வாகக் குளறுபடிகள், ஊழல் என பொதுவில் மட்டுமே விமர்சிப்பார்கள்.

தினமணி, தினமலர் ஞாநி என அனைவரும் இவ்வகையினரே. இம்மாதிரியானவர்கள் திராவிடக் கட்சிகளை அதிகம் திறனாய்வு (விமர்சனம்) செய்வார்கள், அதே நேரம் அதிமுகவின் பழ.கருப்பையா தினமணியில் எழுதுவார், அவர் இதுவரையில் எழுதியது கருணாநிதி எதிர்ப்புதான் அதேபோல் கருணாநிதியை வைத்து கொள்கையையும் நடத்தையையும் ஒப்பிட்டு எழுதுவார். ஆனால் தான் சார்ந்திருக்கும் திராவிடக் கட்சியைப் பற்றி நெல்லை கண்ணன், பழ. நெடுமாறன் இன்னும் பலர் எழுதுவதை கண்டுகொள்ள மாட்டார். இங்கு கருணாநிதியை நல்லவராக்கும் என்று சொல்லவில்லை. கருணாநிதியின் பெயரால் திராவிட வெறுப்பை ஊட்டும் விதத்தைச் சொன்னேன். அதற்கேற்றார்போல் கருணாநிதியும் அவரது பாதந்தாங்கி வீரமணியும் நோபால்களாக வீசுகிறார்கள். அதை அரசியலே தெரியாத பச்சைப் பிள்ளைகள் கூட சிக்ஸராக்குகிறார்கள். இதற்கெல்லாம் கருணாநிதியே காரணம்.

பார்ப்பன எதிர்ப்பு என்றால் அதிகம் போராட வேண்டும் கொள்கைப் பிடிப்பு வேண்டும். காசு பார்க்க முடியாது. இருப்பதிலேயே எளிதானது, கருணாநிதி எதிர்ப்பு, திமுக எதிர்ப்பு, திராவிட எதிர்ப்பு, இந்திய இறையாண்மை, ஈழத்தமிழர் என்பது இன்னும் இலாபம் தரும், அரசியல் செல்வாக்கை உயர்த்தும் என்பது நிலவரமாக இருக்கிறது. திராவிடம் மட்டுமல்ல, மார்க்சியம், தமிழ்த்தேசியம், தலித்தியம் என என்ன கொள்கையானாலும் மக்கள் அமைப்புகளிலிருந்து தேர்தல் அரசியலுக்குச் சென்றாலே அது யாருக்குப் பயனளிக்கும் என்பது வெள்ளிடை மலை.
Download As PDF
Bookmark and Share

Post Comment

திமுகவில் முளைத்த சுயமரியாதைச் சிங்கங்கள் !

இந்த அதிசயம் தமிழ்நாட்டின் அதிசயமான கூடங்குளத்தில் நடந்துள்ளது. இந்த சுயமரியாதை எனும் சொல் ஒரு காலத்தில் தமிழ்நாட்டைப்பிடித்து உலுக்கியது. இன்று வரை அது வீரியம் மிக்க சொல்லாக உள்ளது. தற்போது திராவிட இயக்கத்தின் நூற்றாண்டு விழாக் கொண்டாடிய இத்தருணத்திலோ அந்தக் கட்சியும் அதன் தலைவருக்கும் உள்ள மதிப்பு எந்தளவுக்கானது என்பது தெரியும். திராவிடம் என்றாலென்னவென்ற தலைமுறையும் உருவாகியிருக்கிறது இதற்குப் பெரியார் காரணமல்ல. திராவிட இயக்கம் சிறு சிறு மாற்றங்கள் முதல் பெரிய மாற்றங்கள் வரை அனைத்து வகையிலும் ஓரளவு வெற்றியீட்டியுள்ளது என்பதையும் மறுக்க இயலாது.

எடுத்துக்காட்டாக தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்களுக்கு கல்வி, அரசுப் பணி மற்றும் ஆட்சிப் பொறுப்புகளில் உரிய பிரதிநிதித்துவம், பிராமணரல்லாத மற்ற சமுதாய மக்களுக்கும் இவ்விஷயங்களில் சட்ட ரீதியிலான அங்கீகாரத்தையும் உரிமையையும், மாநில மற்றும் மத்திய அரசு இரண்டிலும் பெற்றுத் தந்ததில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் பங்கு அளப்பறியது. அதிலும் மத்திய அரசுப் பணிகளில் மண்டல் கமிஷன் பரிந்துரைகளை நிறைவேற்றி பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு உரிய பிரதிநிதித்துவத்தை சட்ட ரீதியாக பெற்றுத் தந்ததில் டாக்டர் கலைஞர் அவர்களுடைய உழைப்பும், பங்களிப்பும் வேறு எவரையும் விட முன்னிலை வகிப்பதாகும். (நன்றி
). இதெல்லாம் அண்ணா பெரியாருடன் முரண்பட்டு திராவிடர்கழகத்திலிருந்து பிரிந்து திமுகவைக் உருவாக்கி ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றாமல் சாத்தியமாகியிருக்காது. சமச்சீர் கல்விக்கான தொடக்கப்புள்ளியாக கொண்டுவரப்பட்ட பாடத்திட்டம், இப்படி இன்னும் எத்தனையோ சொல்லிக் கொண்டே போகலாம்.

அதே நேரம் திராவிட இயக்கம் பெரியாரால் எந்த நோக்கத்துடன் துவங்கப்பட்டதோ அதற்கு நேரெதிரான விளைவுகளுக்கும் காரணமாக இருந்தது திமுக தான் என்பதையும் மறுக்கவியலாது. எடுத்துக்காட்டாக ஜாதிக்கட்சிகளை வளர்த்து விட்டதைச் சொல்லலாம். இன்னும் எத்தனையோ உண்டு. இருப்பினும் எத்தனை வகையில் பித்தலாட்டம் செய்தும், மற்ற எந்த மாநிலத்தைச் சேர்ந்த சராசரிக் கட்சிகள் செய்யும் அத்தனை அயோக்கியத்தனங்களையும் செய்தாலும் அதற்கென்று ஒரு தனித்துவமிருந்தது. பெரியாரின் வழிவந்த கட்சி என்பதுதான் அது. ஓரளவிற்கு பார்ப்பன எதிர்ப்புடன் இருந்தே வந்தாலும் 30 வருடங்களுக்கு முன்பிருந்தளவுக்கு வீரியமில்லாமல் பல்லில்லாப் பாம்பாகவே இருக்கிறது. அதுவும் கருணாநிதி, பாஜகவுடன் கூட்டணி வைக்குமளவுக்கு ஆனபின்பு எல்லாவற்றுக்கும் கொள்கையை உரிமையை விட்டுக் கொடுத்து தனது அரசியல் அதிகாரத்தை, ஆதாயத்தைத் தேடிக்கொள்ளத் தவறியதேயில்லை.

இப்படியான சமரசப்போக்கிலான அரசியல்தான், எல்லா தீமைகளுக்கும் காரணமாக இருந்து, திமுகவின் நிறுவனராகிய அண்ணாவின் பெயரிலேயே அதற்கு எதிரான அரசியல் கட்சி உருவாகி, பார்ப்பனர் ஒருவரே அதன் தலைமையைக் கைப்பற்றியிருப்பது பெரியாரிய அரசியலுக்கே ஒரு நெத்தியடிதான். அடுத்து பெரியாரின் கொள்கைக்கு நேரெதிர் கொள்கைகளைப் ஊடகங்களின் வழியாகப் பரப்பி கல்லா கட்டுன் கருணாநிதி உறவினரின் சன் குழுமம், அழகிரியின் தாதா ராச்சியம், காங்கிரசுடன் கூட்டணி வைத்ததுக் கொண்டு, ஊழல்கள் உட்பட எந்த ஒரு தேர்தல் அரசியலில் ஈடுபடும் கட்சிகளின் கீழ்த்தரமான செய்கையில் ஈடுபடுவது. உலகெங்குமில்லாதவகையில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கும் முறையை அறிமுகப்படுத்தியது, இலவசத்தின் பெயரால் மக்களை ஏமாளியாக்குவது என இன்னும் நீள்கிறது. இது பெரியாரின் தோல்வியல்ல. சமரசப்போக்கில்லாமல் தேர்தல் அரசியலில் தாக்குப் பிடிக்க முடியாது என்று சமாதானம் பேசும் கருணாநிதி ஆதரவுக் குரல்கள், இதற்குப் பதில் சொல்ல முடியாது. எதை வைத்துக் கொண்டு கருணாநிதியை ஆதரிப்பது என்றால் அதிமுக ஜெயலலிதாவின் செயல்களோடு ஒப்பிட்டு இந்தளவுக்கு திமுக மோசமில்லை என்றளவில்தான் இருக்கிறது. அடுத்து ஓரளவு பார்ப்பன எதிர்ப்பாளர்களாக இருப்பது போல் காட்டிக் கொள்வது.

இபடியாக இருக்கும்போத, இதற்கெல்லாம் மகுடம் சூட்டியது போல் 3 வருடங்களுக்கு முன்பு ஈழப்போர் நடந்த போது காங்கிரசுடன் சேர்ந்து நடத்திய நாடகங்கள் உச்சகட்ட வெறுப்பை திமுகவை சம்பாதிக்க வைத்தன. ஈழப்போர் உச்சத்திலிருந்த போதுதான் கலைஞர் தொலைக்காட்சியின் நகைச்சுவைப் பதிப்பான சிர்ப்பொலி அலைவரிசை தொடங்கப்பட்டது. போரை நிறுத்துவதற்காக 6 மணிநேரம் உண்ணாநிலை இருந்த கருணாநிதி போர் நிறுத்தப்பட்டதாக அறிவித்து உண்ணாநிலையை முடித்தார் பின்பு போர் நிற்கவில்லையே என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு மழை நின்ற பின்பு நீடிக்கும் தூறலைப் போன்றே இதையும்(போர் நிறுத்தப்படாததை) கருத வேண்டுமென்றார். இது போன்ற செய்கைகள் மிகவும் எரிச்சலூட்டியதாகும். தனது வாய் சாமர்த்தியத்தை இராமன் எந்தப் பொறியியல் கல்லூரியில் படித்தான் என்று இந்துத்துவாக்களைக் கேட்ட போது ரசித்து சிலிர்த்தேன் ஆனால் அதையே ஈழப்போரின் போது தனது நக்கலைக் காட்டிய போது எரிச்சல்தான் வந்தது. இப்படித் தனது பித்தலாட்டங்களுக்கெல்லாம் சாமர்த்தியமாகப் பதிலளித்து சமாளிப்பவர்தான் கலைஞர். இவர் என்ன செய்தாலும் ஆதரிப்பார்கள் திமுகவினர். இத்தனைக்கும் அவர்கள் சாமானியர்கள் அல்ல. வரலாறு, பெரியாரியம் அறிந்த சுயமரியாதைக்காரர்கள், இப்படி சுயமரியாதைக்கெதிராக எந்த செயலைச் செய்தாலும், அதை ஆதரிப்பார்கள் தனது திறமையான வாதத்தைக் கொண்டு, இதை ஜெயலலிதா என்ன செய்தாலும் அதை நியாயப்படுத்தும் சோ வைப் போன்றவர்கள்தான். மக்களின் சராசரியான நாளும் சந்திக்கும் பிரச்சனைகளுக்காக போராடாதா ஒரு கட்சியாகவே திமுக சராசரி மக்களிடமிருந்தே தனிமைப்பட்டுப் போய்விட்டது.

தற்போது தலைப்புக்கு வருவோம். இப்படியாக சுயமரியாதையையும் கொள்கையையும் தமது ஆட்சிக்காகவும், பதவிகளுக்காகவும் துறந்த திமுகவினரில் சில பேர்கள் தமது சுயமரியாதையை மீண்டும் காட்டியுள்ளனர்கள், முத்தாய்ப்பாக திமுக தலைவருக்கெதிராகவே. காரணம் தமது பிரச்சனைக்கு ஆதரவு தராத தலைவர் எதிர்களுக்கு ஆதரவாகப் பேசியதால்தான் கட்சியைத் துறந்து கண்டனத்தையும் தெரிவித்துள்ளார்கள் கூடங்குளம் சுற்று வட்டாரப்பகுதியைச் சேர்ந்த போராட்டக் குழுவில் இடம்பெற்றிருந்த திமுகவினர். பொதுவாக வாக்குக் கட்சிகளின் தொண்டர்கள் கூட்டம் கூட்டமாகக் கட்சியிலிருந்து விலகுவதும், மற்றொரு கட்சியில் சேர்வதும் இயல்பானதுதான். ஆனால் இங்கோ தமது வாழ்வாதாரப் பிரச்ச்னைக்கு எதிராக தலைவர் குரல் கொடுத்ததால் கட்சி கொடியை அரைக்கம்பத்தில் பறக்க விட்டார்களாம், கரை வேட்டியை எரித்தார்களாம்,. தமது ஆரம்பகால சுயமரியாதையை மீட்ட சிங்கங்களுக்கு வாழ்த்துக்கள். 

நன்றி கீற்று

தமது ஆரம்பகால சுயமரியாதையை மீட்ட சிங்கங்களுக்கு வாழ்த்துக்கள். இது குறித்த கட்டுரையைக் கீற்று இணையத்தில் வாசிக்கலாம்.

Download As PDF
Bookmark and Share

Post Comment