பெண்கள் எதை இழக்கிறார்கள் ?

பொதுவாக ஆணாகட்டும் பெண்ணாகட்டும் இருவருக்குமே வேறுபாடுகளின்றி விரும்பியதைப் பெற இயலாமலும், பெற்றதைக் காத்துக் கொள்ள இயலாமலும் இழப்புகளை சந்திக்க வேண்டியுள்ளது. ஆண்கள் அனுபவிக்கும் சுதந்திரம் பெண்களுக்கு இருப்பதில்லை. குழந்தையாக இருப்பதிலிருந்து பார்த்தால் ஊர்சுற்ற, விளையாட ஆண் குழந்தைகளுக்கு இருக்கும் சுதந்திரம் பெண் குழந்தைகளுக்கு இல்லை. நகர்ப்புறத்திலிருக்கும் வசதியான வீட்டுப் பெண்கள் சிலர் விதிவிலக்காக இருக்கலாம். பெரும்பான்மையான நடுத்தரக் குடும்பங்களில் வீட்டில்தான் அடைந்து கிடக்கின்றனர். பெண்கள் கல்வியில் சிறந்தவர்களாக இருப்பதற்கு இதுவே காரணம் என்று நினைக்கிறேன். தொலைக்காட்சியைத் தவிர்த்து (தற்போது)அவர்களுக்கென்று வேறு எல்லைகள் எதுவுமில்லாததால் கவனம் செலுத்தில் படிக்கவும் இந்த சமூகக் காரணி வழிவகுக்கிறது.

இப்படியாக இருக்கையில் எனக்கு சுற்றத்திலிருக்கும் பெண்களின் வாழ்க்கையில் என்ன நடக்கிறது என்று பார்த்தால் ஏமாற்றமே எஞ்சுகிறது. எனது வீட்டிலிருந்து எனது உறவினர்கள், நண்பர்கள் அறிந்தவர்கள் என எங்கு பார்த்தாலும் ஏறக்குறைய ஒரே மாதிரியான நிலைதான். யாராவது பேசிக்கொண்டிருந்தால் இப்படியான பேச்சை அடிக்கடி கேட்கவியலும். குழந்தைகள் எப்படிப் படிக்கிறாங்க என்று ஒருவர் கேட்டால் மற்றொருவரின் பதில் இப்படி இருக்கும். பொண்ணு நல்லாப் படிக்கறா ஆனா பையன் கொஞ்சம் சுமார்தான் என்பார்கள். விதிவிலக்காக சில இடங்களில் இது மாறுபடும்

நாமும் வருடந்தோறும் கேட்கிறோம் வழக்கம்போலவே இவ்வருடமும் மாணவர்களை விட மாணவிகளே அதிகம் தேர்ச்சி பெற்றனர் என்று. ஆனால் அத்தனை பேர் தேர்ச்சி பெறுகிறார்களே படிக்கும்போது இலட்சியத்துடன் இருந்த பெண்கள் அனைவரும் என்னவாகிறார்கள் என்று பார்த்தால் ஏமாற்றமே மிஞ்சுகிறது. எல்லோரும் திருமணம் முடிந்து இல்லத்தரசிகளாகவே மாறிவிடுகின்றனர். சொற்பமான எண்ணிக்கையிலேயே வேலைக்குப் போகின்றனர். அவர்களில் சிலரும் குழந்தை பிறந்த பிறகு வேலைக்குச் செல்வதை நிறுத்தியும் விடுகின்றனர்.

இப்போது நான் சொல்ல வந்தது எனது சுற்றத்திலிருக்கும் பெரும்பான்மையான பெண்குழந்தைகளின் வரலாறு எப்படியிருக்கின்றதென்றால், அவர்கள் சிறுமியாக இருப்பதிலிருந்தே நன்றாகப் படிக்கக் கூடியவர்கள். ஆனால் பத்தாவது முடித்த பிறகு அவர்கள் முதல் பிரிவான அறிவியலில் சேராமல் மூன்றாம் பிரிவான வணிகவியலில்தான் சேர்வார்கள். விரும்பி சேர்வது வேறுவகை, இந்த விரும்பல் என்பது ஒருவகை கட்டாயம். ஏனென்றால் முதலாவதாக அவர்கள் பொறியியல் படிக்கப்போவதில்லை, காரணம் அது நான்கு வருடம். செலவு அதிகம். கல்யாணம் பண்ணப்போற பெண்ணுக்கு பொறியியல் எதற்கு என்ற கணக்குதான். பெண்களின் எல்லை எதுவாக இருக்கிறதென்று பார்த்தால் 20 வயதுகளில் திருமணம் செய்துவிட வேண்டும் என்ற கட்டாயம் இருக்கிறது பெற்றோருக்கு. அதற்கு மூன்று வருட பட்டப்படிப்புதான் சரியாக வரும். மீறிப்போனால 22 அல்லது 23 தான் அதிகபட்சம், அதுவரை மாப்பிள்ளை சிக்காவிட்டால் முதுகலைப் பட்டமும் படிக்க வாய்ப்புண்டு. படிக்கும்போதே நல்ல வரன் அமைந்துவிட்டாலோ படிப்புக்கு முழுக்குதான். திருமணமே முடிந்தாயிற்று பின்பெதற்கு படிப்பெல்லாம் என்றுதான் எண்ணுகிறார்கள்.

முன்பு இளவயதில் திருமணம் தேவையில்லை என்றே நினைத்திருந்தேன், ஆனால் எவ்வளவு விரைவாக திருமணம் நடக்க வேண்டுமோ அவ்வளவு விரைவாக நடப்பது நல்லது என்று தற்போது தோன்றுகிறது. ஆண்களின் பணியோ மாறுவதில்லை. சரி திருமணமாகிவிட்டால் பெண்ணின் வாழ்க்கையானது இல்லத்தரசி என்ற அளவில் சுருங்கி விடுகிறது. அவள் 15 வருடக் கல்வித் தகுதியானது திருமண அழைப்பிதழில் போடுவதற்காக மட்டும் என்ற அளவில் மாறிவிடுகிறது. அதற்குப் பிறகு கல்விக்கும் அவளுக்குமான தொடர்பே இல்லாமல் போய்விடுகிறது. பின்பு குழந்தைக்குப் பாடம் சொல்லிக் கொடுக்கும் போதுதான் அது ஓரளவுக்கு உதவுகிறது.

வேலையில்லாமல் சிங்கியடித்து, தகுதியான வேலையும் ஊதியமும் இல்லாமல் சிங்கியடிக்கும் சொந்த அனுபவம் காரணமாக பேசாம பெண்கள் திருமணம் செய்து கொண்டு இருப்பது பாதுகாப்பாகவும், நிம்மதியாகவும் வாழ வழிவகுக்கும் என்பது எனது ஒரு எண்ணமாக இருந்தாலும், வேலைக்குச் செல்ல வேண்டும் அல்லது சொந்தக் காலில் நிற்க வேண்டும் என்ற உறுதியுடன் இருக்கின்ற பெண்களுக்கு அது சாத்தியப் பட வேண்டும் என்று விரும்புகிறேன். ஆனால் நிலவரம் எப்படி இருக்கிறது என்றால் வேலை பார்க்கும் பெண்கள் திருமணத்திற்குப் பிறகு வேலையை விட்டு விடும் நிலைதான் இருக்கிறது. தன்னை விட மேலான வேலையிலிருக்கும் ஆணைத் திருமணம் செய்து கொண்டால், கணவரின் பணியிடம் வேறிடமென்றால் பெண் வேலையை விட வேண்டியிருக்கிறது.

இதுவரை நான் பல தனியார் நிறுவனங்களில் (சேவைத்துறை, மென்பொருள்துறை) கண்டிருக்கிறேன், நான் பணிபுரியும், பணிபுரிந்த இடங்களிலும் கண்டிருக்கிறேன். பெண்களைத்தான் அதிகமாக வேலைக்கு எடுக்கிறார்கள். அவர்களை வைத்து வேலை வாங்குவது எளிது திறமையானவர்களாகவும் இருக்கிறார்கள். இதில் திருமணத்திற்குப் பின்பு வேலைக்கு வருபவர்கள் மிகச் சிலரே. இதற்காக ஆண்கள் அவர்களைத் திட்டித் தீர்க்கிறார்கள். இவளுக 2 வருசம் வேலைக்கு வந்துட்டு, பெரிய வேலையிலிருக்கறவனாப் பாத்துக்  கல்யாணம் பண்ணிட்டுப் போறதுக்கு வராம இருந்தால் 2 பசங்களுக்கு வேலை கிடைக்கும்ல என்கிறார்கள். பெண்கள் வாழ்க்கையின் அடுத்தபடி திருமணமாக இருக்கிறது, ஆண்களுக்கு வேலைக்குப் போயே ஆக வேண்டிய கட்டாயம். எனச் சொல்கிறார்கள் அது உண்மையாக இருந்தாலும் இப்படிப் பேசுவதற்கு இவர்களுக்கு உரிமையோ நேர்மையோ அதிகாரமோ இல்லை. அது தலைவிதியாக இருப்பதால்தான் அவர்கள் விட்டுச் செல்ல வேண்டியிருக்கிறது.

படிக்கும் நாட்களில் பழக்கப்பட்ட வாசகமொன்று நினைவுக்கு வந்தது, பெண்கள் ஏன் நன்றாகப் படிக்கிறார்கள் என்றால் அவர்கள் எல்லாவற்றையும் மனப்பாடம் செய்து கொள்வார்களாம் ஆண்கள் புரிந்து படிப்பார்களாம். இது ஓரளவுக்கு உண்மையும் இருக்கிறது. எனது தங்கை ஒருத்தி துணைப்பாடத்தில் வரும் சிறுகதையே மனப்பாடம் செய்துதான் எழுதுவாள். அப்படியே மனப்பாடம் செய்தாலும் கணக்குப்பாடத்தில் தேறமுடியாதே, சரி கல்வியே மனப்பாடக் கல்விதான் அதை எப்படிச் செய்தால் என்ன. மனப்பாடம் செய்து எழுதுவதாலோ அல்லது அதிக மதிப்பெண் பெரும் பெரும்பான்மையான மாணவர்கள் வெறும் திறமையற்றவர்கள் சொல்வதைச் சொல்லும் கிளிப்பிள்ளைகளுமல்ல. சரி அப்படியே அவர்கள் மனப்பாடம் செய்து படித்தாலும் வேலைக்கு எடுப்பவர்கள் அதிகமாக மாணவிகளையே எடுப்பது ஏன்.

சிரமப்பட்டு படித்து பல்கலைக்கழகத்தில் இடம் பிடித்து, அல்லது நல்ல வேலை கிடைத்தும் திருமணத்தின் பின்பு அதை துக்கியெறிய வேண்டிய நிலையும் வருகிறது. அதற்குப் பின்பு சமையல் குழந்தை வளர்ப்பு என்று குண்டுச் சட்டியில் சுழலும் சலிப்புத் தட்டும் வாழ்க்கையை பெண்கள் தேர்ந்தெடுக்க வேண்டி வருகிறது. என்னுடன் 12 ம் வகுப்பில் படித்த ஒரு மாணவிதான் எங்கள் வகுப்பில் முதலாக வருவாள். அவள் ஒரு பேருந்து நடத்துனரின் மகள். மருத்துவம் படிப்புக்கேற்ற வகையில் திறமையும் மதிப்பெண்ணும் பெற்றிருந்தாள். அவள் ஒரு தாழ்த்தப்பட்ட ஜாதியைச் சேர்ந்தவளென்பதால் ஏதாவது ஒரு மருத்துவக் கல்லூரியில் இடம்பிடித்துவிடும் நிலையும் இருந்தது. ஆனால் அவளது அப்பாவோ ஒரு வேளை மருத்துவம் படித்தால் மாப்பிள்ளை கிடைக்காது என்று சொல்லி அவளது தந்தை ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் சேர்த்து விட்டார்.

என்னுடைய உறவினரில் ஒரு பெண் இருக்கிறாள் அவள் தற்போதுதான் கல்லூரியில் 3ம் ஆண்டு படிக்கிறாள். அவளுக்கு எம்பிஏ படித்து விட்டு கொஞ்ச நாள் வேலைக்குப் போக வேண்டுமென்பது விருப்பமாக இருக்கிறது. அந்தக் கொஞ்ச நாள் ஏனென்றால் அதற்குப் பிறகு திருமணம் பின்பு அவ்வளவுதான் என்பது அவளது விதியாக இருக்கிறது. தற்போது ஒரு உறவினர் வீட்டுத் திருமணம் வருகிறது. திருமணத்தின்போது நான் சேலை கட்ட மாட்டேன், சுடிதார்தான் போடுவேன் என்கிறாள். காரணம் ஜீன்ஸ் அணிவதை ஏற்குமளவுக்கு பெரியவர்கள் பக்குவப்படவில்லை. சுடிதார் என்றால் பிரச்சனையில்லை. சேலை கட்டினால் பெரிய பெண்ணாகத் தெரிவாள். (போதாக்குறைக்கு அழகாக வேறு இருப்பதால்) திருமணத்திற்கு வரும் யாராவது பார்த்து பெண்கேட்டு தூதுவிடுவார்கள், எப்போது என்று காத்திருக்கும் பெற்றோரும்  பேசி முடித்து விடுவார்கள், பிறகு எம்பிஏ கூட படிக்க முடியாது என்று அச்சப்படுகிறாள். எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. பெண்களின் சிறு சிறு ஆசைகளும் பெரிய ஆசைகளும் கூட நிறைவேறும் வாய்ப்புகள் இப்படி இருக்கிறது .
Download As PDF
Bookmark and Share
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

5 கருத்துகள்:

  1. நல்ல பதிவு நன்றி நண்பா
    நீங்கள் இப்பதிவை வாசிக்கும் வது நபர்(some error)

    பதிலளிநீக்கு
  2. நன்றி யாழ் மஞ்சு அனுப்புகிறேன்

    பதிலளிநீக்கு
  3. பெயரில்லா26/6/12 6:51 PM

    நியாயமான பெண்களின் மனநிலையை இப்பதிவு பிரதிப்பலிக்கின்றது.

    பதிலளிநீக்கு

நான் படைப்பாளியோ, விமர்சகனோ அல்லன். வாசகன் மட்டுமே. எனவே உங்கள் கருத்தின்றி எனது இடுகை முழுமை பெறாது. நிறைகளை விடவும் குறைகள் அதிகம் எதிர்பார்க்கிறேன்