தேர்வில் காப்பியடித்தலும் சுயவிமர்சனமும்

திருவண்ணாமலையில் ஒரு பள்ளியில் ஆசிரியர்களே மாணவர்களுக்கு பிட் வழங்கிக் கொண்டிருந்த போது பிடித்து விட்டார்கள். பள்ளியிலுள்ள நகலெடுக்கும் இயந்திரத்திலேயே தயாரிக்கப்பட்ட துண்டுக் காகிதங்களுடன். இதென்ன பெரிய செய்தியா ?. நிறைய இடங்களில் நடப்பதுதானென்றாலும் கேள்விப்படுபவர்களுக்கு புதிதெனில் அதிர்ச்சியும் உண்டாகும். இதைக் கேட்டு ஆத்திரப்படக்கூடும். அந்த ஆசிரியர்களைத் திட்டக் கூடும். எப்பாடு பட்டாவது அனைத்து மாணவர்களையும் தேர்வில் வெற்றி பெறச் செய்யாவிட்டால் பள்ளி நிர்வாகம் அவர்களை ஒரு வழியாக்கி விடும். 100% தேர்ச்சி அடையும் பள்ளி என விளம்பரம் செய்து நன்கொடை வாங்க முடியாது. வாங்கும் சில ஆயிரம் சம்பளத்துக்கு வருடம் முழுவதும் கத்தினாலும் மண்டையில் ஏறாத மரமண்டைகளை என்ன செய்வதாம் ? வருடம் முழுவதும் திட்டினாலும் தேர்வு நேரத்தில்தான் இது போன்ற ஆசிரியர்கள் மாணவர்களுக்கு தெய்வமாகத் தெரிவார்கள். அவர்கள் தன்மானத்தை விட்டு பிட்டுக் கொண்டு வந்து தராவிட்டால் என்னைப் போன்ற ஆயிரக்கணக்கான பேர் முக்காட்டைப் போட்டிருப்போம். 

அந்த எழவை மனப்பாடம் செய்து வாந்தி எடுப்பதால் என்ன அறிவு வரப்போகிறது ? என்ன படித்தாலும் கல்லூரியில் படிக்கப் போவதற்கும் அல்லது வேலை கிடைத்துப் போனாலும் அல்லது எதிர்கால வாழ்க்கையிலும் அது என்ன வகையில் பயன்படப் போகிறது அந்த ஏட்டு படிப்பு ? என்ன படித்தாலும் தகவல் தொழில் நுட்ப நிறுவனத்தில் வேலை பார்க்கவே விரும்புகிறார்கள். இல்லையென்றால் சேவைத்துறை அதற்கு ஏதாவதொரு பட்டப்படிப்பு மட்டும் தேவை. பிறகு எதற்கு இத்தனை ஆர்ப்பாட்டங்கள் ? தேர்வில் தோல்வியடைந்தால் தற்கொலை வேறு செய்கிறார்கள். பிட்டடித்து சிக்கினாலும் தற்கொலை முயற்சி. தாழ்வு மனப்பான்மை, குற்ற உணர்வு, புறக்கணிப்பு என எதிர்கொள்ள நேரிடும். பணம் கொடுத்தால்தான் கல்வி, மனப்பாடம் செய்து எழுதினால் மதிப்பெண், etc கிடைக்கும் உலகில் பிட்டடித்து தேறிட எண்ணுவது இயல்புதான்.

நான் பள்ளியில் படிக்கிற காலத்தில் சுமாராகப் படிப்பேன். தேர்வு எழுதும் போது வருகின்ற கண்காணிப்பாளர் கொஞ்சம் பெரிய மனதுக்காரராக இருந்தால் எழுதி முடித்த தாளை தேர்வு அறையிலேயே பரிமாறிக் கொள்ள வேண்டும் என்பது வழக்கம். ஒரு அறையில் ஒருவர் இருவர் நன்றாகப் படிப்பவராக இருந்தால் போதும். ஒரு மதிப்பெண் வினாக்கள் எப்படியாவது ஏறக்குறைய அனைத்து விடைகளும் சரியாக கண்டு பிடிக்கப்பட்டு பரிமாறப்படும். முடிந்தால் எல்லாருக்கும் விடைத்தாளை அனுப்பி அனைவரும் எழுதியவுடன் திரும்ப கைக்கு வந்து விடும். 10 ஆம் வகுப்பில் அறிவியல்தான் மிகவும் சிரமாமானது 12 வருடங்களுக்கும் முன்பாக. கேள்வித்தாளை வாங்கியவுடன் எல்லோருக்கும் கிழிந்து விட்டது. மிகவும் கடினமாக இருந்தது. (நான் வழக்கமாக 80 மதிப்பெண் வாங்கியது கூட இல்லை. ஆனால் 90 க்கும் மேலாக பொதுத்தேர்வில் எடுக்க வேண்டுமென சூளுரை எடுத்திருந்தேன் அது முடியாது எனத் தெரிந்தும்) எனக்கு ஒரு 60 வரை மட்டுமே வரும் என்று புரிந்தது. மற்றவர்க்கோ 30 கூட வராது. பிற்பாடு துண்டுக்காகிதங்களில் விடையை எழுதி அனுப்பி வைத்து ஆசிரியர்கள் மற்ற தேர்வில்லாத மாணவர்கள் உதவினார்கள். எனது தாளை வாங்கியெழுதிய நண்பன் மிகவும் சென்டிமென்டாக எனது புகைப்படத்தை வாங்கியும் வைத்துக் கொண்டான். 10 ஆவது படிக்கும் போது 10 வகுப்பு பொதுத்தேர்வுதான் உலகமகா சிரமம் என்று நினைப்பது இயல்புதானே. (இப்போது ஒரு பதிவு எழுதி பின்னூட்டம் வாங்குவது சிரமம்) எனக்கோ சிரிப்பாக இருந்தது.

அடுத்து பிட்டை தேர்வறைக்கு எடுத்துச் செல்லும் நுட்பம்தான். உள்ளாடை, உள் பாக்கெட் எனப் பலவகையில் எடுத்துச் செல்வோம். சிலர் பேண்ட்டில் காலின் உள்புறமாக தொடைப்பகுதியில் தையல் இருக்குமல்லவா அங்கே ஒரு 7 செமீ அளவு கிழித்து விட்டு உள்ளாக ஒரு பாக்கெட்டைத் தைத்து அதில் அள்ளிக் கொண்டு போனார்கள். சிலர் தேர்வு அறைக்குள்ளேயே முதல் நாளிலேயே சென்று தமது இருக்கையின் கீழாக் கத்தையாக செல்லே டேப்பைக் கொண்டு ஒட்டினார்கள். எனக்கு பிட்டடுக்கும் அளவு துணிச்சல் கிடையாது. சிறு குற்ற உணர்வும் உண்டு. கண்காணிப்பாளர் கண்டிப்பாக இல்லாத பட்சத்தில் ஒரு சில முறை செய்தேன். மற்ற எல்லாப் பாடங்களிலும் ஏறக்குறைய 70 % வரை மதிப்பெண்கள் பெற முடிந்த என்னால் கணிதத்தில் தேறுவதே மிகவும் சிரமம். நல்ல வேளையாக என்னுடைய நண்பி நான் எட்டிப் பார்த்து எழுதும் தொலைவில் இருந்தாள். அவள் புண்ணியத்தில்தான் நான் பிழைத்தேன். இல்லையென்றால் கூவியிருக்கும். அந்தக் கணிதத்திற்குத்தான் நான் (இன்னொரு நண்பனும்) பிட் கொண்டு சென்றது நல்ல வேளையாக அந்தக் கேள்விகளைக் கேட்டிருந்தார்கள். அதற்கு முன்பு ஒரு முறை பிட் எடுத்துச் சென்று தேர்வு அறைக்கு நுழையும் முன்பாகவே வெளியே வீசி விட்டேன். வீரம்தான் !!

இன்னுமிரண்டு நண்பர்கள் வேறொரு தேர்வு அறையில் நடந்த நிகழ்வு இது. தமது விடைத்தாளை மாற்றிக் கொண்டிருக்கிறார்கள். ஒருவன் எழுதிய விடையை மற்றவன் பார்த்து எழுதிக் கொள்வது. ஒருவர் முதலில் 2 மதிப்பெண் வினாக்களும், மற்றவர் 1 மதிப்பெண் அல்லது 5 மதிப்பெண் வினாக்களையும் எழுதுவது (சரியான விடைகள்தான் துண்டுக் காகிதங்களைப் பார்த்துத்தான், ஒரு அறையில் குறிப்பிட்ட நேரம் மட்டுமே பார்த்து எழுத அனுமதிப்பார்கள் கண்காணிப்பாளர்கள் அதற்கு மேல அவர்களுக்கு ரிஸ்க் எடுக்க மாட்டார்கள்) பின்பு அவருக்கே தெரியாமல் நாங்களாக நுட்பமாக எழுதிக் கொள்ள வேண்டும்). இப்படியாக இருக்கும்போது விடைத்தாளை மாற்றிக் கொண்டவர்கள் இரண்டு பேர். இதில் விடைத்தாளைக் கொடுத்தவனும் மறந்து விட்டான், வாங்கியவனும் மறந்து விட்டான். பறக்கும் படை வந்தால் எப்போதும் ஏதாவது ஒரு அறையில் இருக்கும் ஒரு சிலரின் விடைத்தாளை வாங்கி ஆய்வு செய்வார்கள், ஏதேனும் மாற்றிக் கொண்டிருக்கிறார்களா அல்லது துண்டுக் காகிதமேனும் வைத்திருக்கிறார்களா என்று. அவர்களைக் கையும் களவுமாகப் பிடித்தும் விட்டார்கள். பின்பு அறிவுரை சொல்லி விட்டுப்போனார்கள். இது போன்ற ஈரமான மனிதர்கள் இருப்பதால்தான் எத்தனையோ  மாணவர்கள் (மக்குகள்) 10 வதாவது தேற முடிந்தது. இவர்களையெல்லாம் சும்மா விடக்கூடாது என்று என்கவுன்டர் ஆதரவாளர்கள் போல் யாராவது வாதாட முற்பட்டால் என்னிடம் அதற்கு விடையில்லை. காசு கொடுத்தால் கல்வி, 8 வகையான பள்ளிக்கல்விகள், ஆங்கில, தமிழ்வழி, மனப்பாடக் கல்வி, தேவையற்ற பாடச்சுமை, மன அழுத்தம், சமூக அங்கீகாரம், வேலையின்மை என கல்வித்துறையில் ஆயிரம் ஓட்டைகள் இருக்கின்றன. அதை விட்டு விட்டு இதை ஒரு பெரிய பிரச்சனையாக்குவது பார்வைக் குறைபாடு மட்டுமே.

இறுதியாக சுயவிமர்சனம். அந்தத் தேர்வுகளின் போதுதான் வேண்டா வெறுப்பாக சாமி கும்பிட்டேன். நீ இருந்தா என்னைக் காப்பாத்து புள்ளையாரப்பா என்று. கேள்வித்தாள் எளிமையாக வரவேண்டுமென வேண்டுதலில்லை. மாறாக தேர்வறைக்கு வரும் கண்காணிப்பாளர் கண்டிப்பானவராக இருக்கக் கூடாதென்றுதான் கடவுளை வேண்டினோம். இப்படியெல்லாம் காப்பியடித்து  வந்த நான் கல்லூரியில் நன்கு அனுபவித்தேன். இரு பட்டங்களை வாங்கும் முன்பு ஒரு வருடம் வீணாக்கி மொத்தம் 11  அரியர்கள். வேலை கிடைக்காமல் தெருத்தெருவாக அலைந்தும் பெரிதாக ஒன்றும் நடக்க வில்லை. 

இது நியூட்டனின் மூன்றாம் விதியாக இருக்கலாம். என்னுடைய புகைப்படத்தை நன்றியுணர்வுடன் வாங்கிக்கொண்ட என்னுடைய நண்பன் 12 வதுடன் படிப்பை நிறுத்திக் கொண்டான். இப்போது நடந்த உள்ளாட்சித் தேர்தலில் நின்று வெற்றி பெற்றுக் கவுன்சிலர் ஆகிவிட்டான் என்று கேள்விப்பட்டேன்.  நான் வாங்கும் சம்பளத்தைக் கேட்டு அவன் வாயைப் பொத்திக் கொண்டு சிரிக்கிறான்.
Download As PDF
Bookmark and Share

Post Comment

இந்தியான்னா இந்தியாதான் !!

இதை எதற்கு எழுதுகிறேனென்றால் நேற்று முதல் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் ஆரம்பமாகி விட்டன. அந்தக் கொடுமையை எதிர்க்க வேண்டும். எந்தக் கேவலமான சிறிய மொன்னைக் காரணம் கிடைத்தாலும் கூட அதை வைத்து கிரிக்கெட்டை விமர்சிக்க வேண்டும் அல்லது எதிர்க்க வேண்டும் என்ற கொள்கை வைத்திருக்கிறேன். அதற்காகத்தான் இதை எழுதுகிறேன். தற்போது முகநூலில் ஒரு புகைப்படமானது பகிரப்பட்டு வருகிறது. 


இதுதான் அது. ஒரு வில்வித்தை வீராங்கனை நிஷா ராணி தத்தா என்பது அவரது பெயர். அவர் இந்தியாவிற்காக உலக அளவிலான வில்வித்தைப்  போட்டிகளில் சில பட்டங்களையும் வென்றவர். 

நிஷா ராணி தத்தா
அவர் வென்ற பட்டங்கள்

*  2006 - இல் ஓவரால் சிக்கிம் சாம்பியன்
*  தெற்காசிய சாம்பியன் போட்டியில் வெள்ளிப்பதக்கம்
* 2006 பாங்காக்கில் நடந்த கிராண்ட் பிரிக்ஸ் போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்ற இந்திய அணியிலும் இடம் பிடித்திருந்தார்.
*  2007 - இல் தைவானில் நடந்த ஆசிய கிராண்ட் பிரிக்ஸ் போட்டியில் சிறந்த வீரருக்கான விருதும் பெற்றார்

இவரையெல்லாம் நாம் கொண்டாடவோ அல்லது நினைவு கொள்ளவோ முடியுமா ? இல்லை நமது அரசுதான் இவர்களுக்கு உதவ முடியுமா ? இவருக்கேன் இந்த வேண்டாத வேலை ? போய் கல்யாணங்கட்டிக் கொண்டு புள்ளையைப் பெத்து உப்புமாவைக் கிண்டிவிட்டு காலத்தை ஓட்டுவதை விட்டு இந்தியாவுக்காக விளையாடுகிறாராம். இவருக்கெல்லாம் இது தேவையா ?

தற்போது வறுமையின் காரணமாக தனது பொக்கிஷமாய்ப் பாதுகாத்த உலகத்தரம் வாய்ந்த அம்பையும் வில்லையும் விற்று விட்டாராம். 4 இலட்சம் ரூபாய் மதிப்புள்ள அதை எப்படி அவரால் வாங்க முடிந்தது. விளையாட்டுத் துறை கொடுத்ததா இல்லை இல்லை, அவரது திறமையைக் கண்டு அவரை ஊக்கப்படுத்தும் விதமாக அவரது பயிற்சியாளர் கொடுத்தது. 4 இலட்சம் ரூபாய் பெறுமானமுள்ள அதை வெறும் 50000 க்கு விற்றிருக்கிறார். அவர் கொரியர். நல்லவேளை இந்தியாவில் பிறக்கவில்லை அவர். கூடவே அவரது வில்வித்தையில் செய்ய விரும்பிய சாதனைகளையும். ஏன் தெரியுமா களிமண்ணால் கட்டப்பட்ட அவரது வீடு இடிந்து விட்டதாம். அதை சரி செய்ய அவருக்குக் காசு இல்லையாம். எடுபட்ட ரவீந்திர ஜடேஜா என்னும் வீராதி வீரர் 9 கோடி ரூபாய்க்கு ஏலம் போன திருநாட்டில் நிஷாவுக்கு ஒரு வீடும், வேலையும், ஊக்கத் தொகையும், பயிற்சியும் கொடுப்பது நம் அரசாங்கத்தால் இயலாது அல்லவா ? அதற்கு நாமெப்படி கிரிக்கெட்டையும், அரசையும் குறை சொல்வது ?

அவரது தங்கை திருமணம் செய்து கொண்ட போதும் சாதனை செய்ய வேண்டுமென்ற வேட்கையினால் மட்டுமே இன்னும் திருமணம் செய்யாமல் (21 வயது) அரசை நம்பிக் கொண்டிருக்கிறார். இவரது செயல் துரதிருஷ்டவசமானது என, விளையாட்டுத்துறை அமைச்சர் அஜய் மேகன் தெரிவித்தார். இல்லை இந்தியாவில் இதுதான் நியாயமானது. 





அடுத்ததாக கபடியில் உலக சாம்பியன் மகளிர், ஆடவர் என இரு பிரிவிலும் இந்தியாதான் சாம்பியன். ஆனால் அவர்களுக்கு நடந்ததைப் பார்ப்போமா ? 12 நாடுகள் விளையாடிய உலக மகா சோம்பேறி மொக்கை விளையாட்டிற்கு சாம்பியன் பட்டம் வென்ற சோதாவிற்கு எத்தனை ஆர்ப்பாட்டங்கள் !!(கபடியும் நிறைய நாடுகள் விளையாடவில்லைதான்). உலக சாம்பியன் பட்டம் வென்ற கையோடு அப்பெண்கள், அவர்கள் தங்கள் கோப்பைகளையும், பதக்கங்களையும், விளையாட்டுச் சான்றிதழ்களையும் ஏந்திக் கொண்டு ரிக்ஷாவிற்காகக் காத்திருந்தார்கள். சிலர் நடந்து சென்றனர். அவர்களுக்கு மகிழுந்து பரிசாகத் தரவேண்டுமென்பதல்ல, போட்டியில் வாகை சூடியதற்காகவாவது ஒரு நாளுக்கு அவர்களுக்கு அந்த வசதியைச் செய்து தந்திருக்கக் கூடாதா ? 

உலக சாம்பியனான இந்தியப் பெண்கள் கபடி அணி
அவர்கள் தங்கியிருந்த விடுதியின் காசைக்கூட போட்டி நிர்வாகிகள் செலுத்தவில்லை. அவர்கள் விடுதியின் பணியாளர்களால் ரூ 22,000 பணம் செலுத்தாததற்காகத் 2 மணி நேரங்களாகத் தடுத்து நிறுத்தப்பட்டிருந்தனர்.

ஒரு சிறிய தீ விபத்தின் காரணமாக அவர்களது சீருடைகள் எரிந்து விட்டன. இது அரை இறுதிப் போட்டிக்கு முன்பாகவே நிகழ்ந்து விட்டது. போட்டி நடந்தது இந்தியாவின் பஞ்சாப்தான் என்றாலும் ஒரு வாரமாக அவர்கள் ஒரே சீருடையை வைத்து சமாளிக்க வேண்டியிருந்தது. இதுதான் இந்தியாவில் விளையாட்டுப் போட்டிகளில் சாதனை செய்தவர்கள் நடத்தப்படும் விதம்.

இதே கிரிக்கெட் என்றால் இந்த மூஞ்சிகளைத்தான் நாம் ஆணுறை விளம்பரத்தைத் தவிர அனைத்திலும் பார்க்க வேண்டியிருக்கிறது. சச்சின், டோனி சகாப்தம் முடிந்து இனி கோலி கோடி கோடியாக அள்ளப் போகிறார். 10 வருடங்கள் முன்பு மேற்கிந்தியத் தீவுகள், தற்போது ஆஸ்திரேலியா என பெரிய அணிகளெல்லாம் போண்டியான நிலையில் இனி இந்தியாதான் வெற்றிகளைக் குவிக்கப் போகிறது. இதில் பரவசமடையும் இந்திய தேசபக்தர்கள் எப்படி ஐபிஎல்லையும் அதே பரவச மாநில உணர்வுடன் ரசிக்கிறார்கள் என்பதுதான் தெரியவில்லை. எப்படியோ தேசபக்தி ஒழிந்தால் சரி.

இந்தியா பாகிஸ்தான் போட்டிகளை நடத்தி வருமானத்தை அள்ள முடியாமல் அதை விட பல மடங்கு அள்ளும் ஐபிஎல் போட்டியை நடத்தி வெற்றியும் பெற்று விட்ட போட்டியை நடத்தும் முதலாளிகள், வெளிநாடுகள் போலவே இன்னும் cheerleaders - களின் பாவாடையின் உயரத்தைக் இன்னும் மேலே குறைக்க முடியாமல் கையைப் பிசைந்து கொண்டிருக்கிறார்கள். அதையும் குறைத்து விட்டால் அவர்களது போர்னோகிராபிக் கலாச்சாரத்தை இந்தியாவில் நிறுவிய பெருமையும் சேரும். அது சரி இப்போது மட்டும் என்ன வாழுதாம் ?

மாணவர்களின் தேர்வை முன்னிட்டும், தமிழகத்தின் மின்பற்றாக்குறையை முன்னிட்டும் இதை தடை செய்ய வேண்டுமென்கிறார்கள். பிராந்திய உணர்வை வளர்த்து தேசத்திலேயே பிரிவினைவாத உணர்வை வளர்க்கும் இந்த ஐபிஎல் போட்டிகளை தடை செய்ய வேண்டும் என்று ராம கோபாலன் மாதிரி யாராவது தேசபக்தரகள் குரல் கொடுத்தால் தேவலை.
Download As PDF
Bookmark and Share

Post Comment

நந்திகிராமை நினைவூட்டும் வகையில் கூடங்குளம் போராட்டத்தின் மீது அடுத்த அவதூறு - நக்சல்கள் தொடர்பாம்

கூடங்குளம் போரட்டத்தில் நக்சல் தொடர்பு என நாராயணசாமி சொல்லியிருக்கிறார். அடுத்து நேரடியாகவே பாகிஸ்தான் தொடர்பு மாவோயிஸ்டுகள் மற்றும் சீனாவின் சதி என்று தொடங்கினாலும் ஆச்சரியமில்லை. இடிந்த கரையில் உதயகுமாருக்குப் பதிலாக உபயதுல்லாவோ உமர் முகமது என்ற பெயரில் தலைவரும், கிறித்தவர்களுக்குப் பதிலாக இசுலாமியர்களும் இருந்திருந்தால் மிக எளிமையாக வேலையை முடித்திருப்பார்கள் ஐ எஸ் ஐ உளவாளிகள் பாகிஸ்தான் சதி என்று. இன்னும் எத்தனையெத்தனை அவதூறுகள் கொண்டுவந்து கொட்டினாலும் இவர்கள் வெற்றி பெறப்போவதில்லை. இது போன்ற மக்களின் வாழ்வாதாரத்தைக் கேள்விக்குள்ளாக்கும் எந்த வகையான திட்டங்களைக் கொண்டுவரும்போதும் வெளிப்படும் பரவலான மக்கள் எதிர்ப்பை ஊடகங்கள் மறைத்தே வருகின்றன. போராட்டம் வலுவாக இருக்கும்போது பேச்சுவார்த்தை, வேலைவாய்ப்புக்கான உறுதிப்பாடு, நலத்திட்ட உதவி, இழப்பீடு என்ன அனைத்துப் பித்தலாட்டங்களையும் செய்து ஆசை காட்டுவார்கள். மசியவில்லையெனில் போராட்டக்காரர்களின் கோரிக்கைகளுக்கு நேரடியாகப் பதில் சொல்லாமல் வேறு ஒரு தளத்திலிருந்து பேசுவது வேறுவகையில் செய்தியை வெளியிடுவது வேலைக்கு உத்தரவாதமளிப்பது, பாதுகாப்புக்கு உத்தரவாதமளிப்பது என்ற பொய் வாக்குறுதிகள், அணு உலை பாதுகாப்பானது என்ற பொய்யைத் திரும்பத் திரும்பச் சொல்வது.
பேஸ்புக்கில் ஒருவரிடமிருந்து எடுத்தது


அடுத்து உளவியல் போரை நிகழ்த்த வேண்டியது. போராளிகளை ஆளுமைக் கொலை செய்வது. வெளிநாட்டுப் பண உதவி, மதவாதம், தீவிரவாதம், தேசதுரோகம், பொருளாதார வளர்ச்சி என்று ஊடகங்கள் மூலமாக அவதூறுகளையே வெளியிட்டு அதைப் பொதுக்கருத்தாக்கிப் பின்பு காவல்துறையையும் இராணுவத்தையும் விட்டு வன்முறை வெறியாட்டங்களை நடத்த வேண்டியது. இதுதான் நந்திகிராமில் நடந்தது. இடிந்தகரையிலும் நடக்கிறது. இது காந்தி நாடு இல்லை என்று எப்போதும் ஆட்சியாளர்கள் நிரூபித்துக் கொண்டேயிருக்கிறார்கள், எதில் என்றால் காந்திய வழியில் நடக்கும் போராட்டங்களைக் கூட நாங்கள் எப்படி எதிர்கொளவோம் என்று இராணுவத்தையும் துப்பாக்கிகளையும் வைத்துப் பதில் சொல்லுகிறார்கள். கொலை செய்து விட்டு கலவரத்தில் இறங்கினார்கள் சுட்டோம் என்று முடிப்பார்கள். மிச்சத்தை தினமலம் பார்த்துக் கொள்ளும். நந்திக்கிராம் போராட்டம் நடந்த போது மாவோயிஸ்டுகள் சதி என்றார்கள், மகிழுந்து தயாரிக்கும் தொழிற்சாலைகள் அமைக்கவும், சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் அமைக்கவும் விவசாயிகளிடமிருந்து முப்போகம் விளைந்த விவசாய நிலங்களைப் பிடுங்கவென்று வெறியாட்டம் போட்டார்கள். அங்கு பெருமளவில் முஸ்லிம்கள் இருந்தார்கள் நந்திகிராம் வெறியாட்டம் முடிந்தபின்பு சிபிஎம் இல்லாத மற்றக் கட்சித்தலைவர்கள் மக்களைப் "பார்வையிட" சென்றார்கள். அங்கிருந்த பாதிக்கப்பட்ட முஸ்லிம் தாய்மார்கள் சிபிஎம் கட்சியினராலும் காவல்துறையினராலும் நடந்த கொடுமைகளை அத்வானியிடம் சொல்லி அழுதார்களாம்.

இப்படி எதிரியிடமே சென்று அவர்களைக் கதற வைத்த கொடுமையைச் செய்தனர் அன்றைய மேற்கு வங்க ஆட்சியாளர்கள். இன்று அம்மா அவர்கள் தமது கொடுங்கரங்களை ஏவியுள்ளார். அதற்கு ஒத்தூதிய தோழர் தா பாண்டியன் கூடங்குளம் மக்கள் பண்த்தை  வாங்கிக்கொண்டு வெளியேற வேண்டும் என்று வெறிபிடித்துக் கத்தியுள்ளார். இதனால் மனம் நொந்த எழுத்தாளர் பொன்னீலன் கட்சியிலிருந்து வெளியேறியுள்ளார். இது மிகத் தாமதம் என்றாலும் இது சரியான முடிவுதான். இதே தா பாண்டியன் இரு வருடங்களுக்கு முன்பு பேசியதை மறக்க முடியாது. ஈழப்போரின் போது அம்மா திடீரென்று ஈழ ஆதரவ அவதாரமெடுத்தார் வரப்போகும் தேர்தலை மனதில் கொண்டு. அப்போது ஒரு நாள் உண்ணாநிலைப் போராட்டத்தையும் நடத்தினார். அதில் கலந்து கொண்ட வைகோ, தா. பாண்டியன் ஆகியோர் அம்மாவுக்குப் புகழாரம் சூட்டினார்கள். அதில் பாண்டியன் ஒரு உலகமகா வக்கிரம் பிடித்த ஒரு பொய்யைச் சொன்னார். அது "அம்மா உண்ணாநிலைப் போராட்டம் தொடங்கினார் என்று தெரிந்த ஒரு ஈழப்பெண் வவுனியாவிலிர்ந்து தொலைபேசியில் இவரிடம் பேசினாராம். அவர் சொன்னாராம் அம்மா உண்ணாவிரதம் கேட்டு மிகவும் மகிழ்ந்த அவர் இனிமேல் என் தலையில் குண்டு விழுந்தாலுமே பரவாயில்லை என்று. என்ன ஒரு வக்கிரம் இது போலெல்லாம் பொய்யடிக்க யாரால்தான் முடியும்.

உள்ளம் பதைக்க வைக்கிறார்கள் என்னவாகுமோ என்று. உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த நிலையில் ஒரு பெண்ணுக்குப் பிரசவமாகிவிட்டதாம். இது போன்று போராட்டங்களெல்லாம் கொச்சைப் படுத்தப்படுகின்றன. ஊடகங்கள் அடுத்து அண்ணா ஹசாரேயின் போராட்டத்திற்கு முரசு கொட்டத் தொடங்கிவிட்டன. 200 நாட்களுக்கும் மேலாக துளி வன்முறையில்லாமல் நடந்து வரும் போராட்டத்திற்கு முடிந்த வர கேவலப்படுத்தும் வேலைகளும் எதிர்க்கருத்து உருவாக்கும் வேலைகளும் செவ்வனே நடக்கின்றன. தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத தினமலம் தொடர்ந்து வேலையைக் காட்டி வருகின்றது. அரசியல் கட்சிகள் வழக்கம் போ உயிர்நாடியான பிரச்சனையான கூடங்குளம் போராட்டத்தை ஆதரிப்பதை விட்டு தமது வேலையில் ஆழ்ந்துள்ளன. வாக்கு வங்கிக் கட்சிகள் ஆயிரமாவது முறையாக தமது புத்தியைக் காட்டியுள்ளன. சுரணை கெட்ட தமிழர்கள் கூடங்குளம் போராட்டத்தை தமது வயித்தெரிச்சல்களால் கரித்துக் கொட்டுகிறார்கள். என்னவோ உலை திறந்தவுடன் ஒரு பொத்தானை அமுக்கியவுடன் நாளையே மின்வெட்டு நீங்கி விடும் என்று கனவு காண்கிறார்கள். நாளையே உலை வெடித்து ஆயிரம் பேர் இறந்தாலும் குற்ற உணர்வு கொள்ள மாட்டார்கள் இவர்கள். அடுத்து அம்மா துரோகம் செய்து விட்டார்கள் என்று அங்கலாய்க்கிறார்கள் சிலர். நிச்சயம் அம்மா துரோகம் செய்ய மாட்டார். அதில் அவர் நேர்மையானவர். கருணாநிதியைப் போல அல்ல அவர். அவரை நம்பியது யாருடைய தவறு. ஈழமாகட்டும் கூடங்குளமாகட்டும் அவர் இப்படித்தான் செய்வார். ஈழ ஆதரவாளர்களுக்கு இடிந்த கரை ஒரு பாடம்தான் ஆனால் அதற்குக் கொடுக்கும்  விலைதான் அதிகம். ஒருவேளை 2009 - இல் நடந்த தேர்தலில் கருணாநிதி தோற்று அம்மா வென்றிருந்தால் இப்படித்தான் ஆப்படித்திருப்பார். ஈழப்போர் வழக்கம் போலவே நடந்து முடிந்திருக்கும்.
Download As PDF
Bookmark and Share

Post Comment

கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிரான போராட்டத்தில் கன்னடர்கள், மலையாளிகள் மற்றும் பினாயக் சென்

முல்லைப் பெரியாறு பிரச்சனையின் போது எனது மலையாள நண்பர்கள் தமிழ்நாட்டின் இரட்டை விளையாட்டு என்று தலைப்பிட்டு ஒரு புகைப்படத்தினைப் பகிர்ந்திருந்தார்கள். அதில் 100 ஆண்டுகள் பழமையான அணையை வலுவானது பாதுகாப்பானது என்றும், அதி நவீன தொழில் நுட்பத்துடன் கூடிய அனல் மின்நிலையத்தை (இந்தியாவின் பெருமிதமான திட்டம் என்ற அடைமொழியுடன்) பாதுகாப்பில்லாதது என்றும் இரட்டை வேடம் போடுகிறது தமிழ்நாடு என்ற செய்தியுடன் இருந்தத்டு அப்புகைப்படம். அவர்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை தமிழர்கள் எந்தளவுக்கு அல்லது எந்தளவுக்கு முல்லை பெரியாறு விவகாரத்திற்கு ஆதரவளித்தார்கள் என்று. பாதித் தமிழர்கள் மலையாளிகளைத் திட்டுவதற்கே முல்லைப் பெரியாறு விடயத்தைக் கையிலெடுத்தார்கள் மாறாக முல்லைப் பெரியாற்றினால் பயன்பெறும் மக்களின் எதிர்காலம்  குறித்த கவலையிலல்ல.

முல்லை பெரியாற்றில் புதிய அணை கட்ட வேண்டுமென்பது ஒவ்வொரு கேரளத்தைச் சார்ந்தவனின் எண்ணமாக இருந்தது. ஏனெனில் அரசாங்கமே அப்படி ஒரு கருத்தைச் சார்ந்துதான் இயங்கியது. நாளிதழ்கள், வார இதழ்கள் இக்கருத்தைப் பரப்பின. சில இலட்சம் மக்களின் உயிருக்கு ஆபத்து என்று அனைவருமே நம்பினார்கள். அணை எந்நேரமும் உடையலாம் என்ற நிலையில்தான் இருந்தது. இதன் அடிப்படியில் தான் இனவெறியும் இருந்தது. ஆனால் சில தமிழர்கள் தமிழ்நாட்டிலுள்ள மலையாளிகளை விரட்ட வேண்டும் கடைகளைத் தாக்க வேண்டும் என்ற நிலையில் வெறித்தனமாக இருந்தனர். இதில் முல்லைப் பெரியாற்றைக் காக்க வேண்டும் என்பதற்கான நோக்கத்தில் அல்ல.

அதே வகையில் கூடங்குளம் எதிர்ப்பில் தமிழகம் ஒற்றுமையாக இல்லை. அப்பகுதி மக்கள் சில அறிவாளர்கள், சுற்றுச் சூழல் ஆர்வலர்கள்,  எழுத்தாளர்கள் என்ற சிறு அளவிலான தரப்பே இதை எதிர்த்து வருகின்றனர். பின்பு திட்டமிட்ட மின்வெட்டு அமல்படுத்தப்பட்டு கூடங்குளம் எதிர்ப்பாளர்கள் மீது இலக்கு வைத்து எதிர்ப்பரப்புரை திட்டமிட்டு நடுவண் அரசு தினமலர் போன்ற பார்ப்பன இதழ்களால் தொடர்ந்து அவதூறுகளாகப் பரப்பப்பட்டு வந்தது. அணுமின் நிலைய ஆதரவாளர்கள் என்றால் நாட்டு பற்றாளர்கள், அறிவியல் வளர்ச்சிக்கு ஆதரவாளர்கள் என்றும் எதிர்த்தரப்பினரோ தேசத்துரோகிகள், அறிவியல் வளர்ச்சிக்கு எதிரானவர்கள், மதவாதிகள், அமெரிக்கக் கைக்கூலிகள் என்ற சித்தரிப்புகள் ஆரம்பம் முதலே வைக்கப்பட்டு வந்தன. இந்தப் போரட்டத்தின் வீச்சாகத்தான் நடுவண் அரசால் முல்லைப் பெரியாறு அணை விவகாரம் ஊதிப் பெருக்கப்பட்டது. இதன் மூலம் கூடங்குளம் போராட்டத்தில் அம்மக்களுக்குத் துணை நின்ற மலையாளிகள், கேரள அறிவாளர்கள் (Intellectuals) முல்லைப் பெரியாறு அணைக்கு ஆதரவாக இதிலிருந்து பிரிந்து கேரளாவிற்கு ஆதரவாகச் சென்று விட்டனர்.

தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டிருக்கும் ஒரு அணையை எந்நேரமும் உடைந்து விடும் என்ற நிலையில் அணைகள் என்பவை தண்ணீர் வெடிகுண்டுகள் என்ற பரப்புரை கேரளாவின் அனைத்துத் தரப்பினரும் ஏற்றுக் கொண்டு புதிய அணை கட்டப்படவேண்டும் என்றே கருதுகின்றனர். அரசியல் கட்சிகள், திரைப்படத் துறையினர், அறிவாளர்கள் ஒன்றாக இருக்கின்றனர். இதில் சில விதிவிலக்குகள் நேர்மையான தீர்வுக்காகப் போராடுகின்றனர் அது வேறு. ஆனால் தமிழகத்திலோ காலாவதியாகிப் போன அணுகுண்டுகளை மடியில் கட்டிக் கொண்டிருப்பதற்கு இணையான அனல் மின் நிலையங்களை எதிர்க்கும் உணர்வில்லாமல் தன்னலவாதிகளாக மாறியிருக்கின்றனர். இதற்காக அப்பகுதி மக்கள் மட்டுமே போராடுகின்றனர். இது தமிழகத்தின் பிரச்சனை என்ற அளவில் இது கவனம் பெறவில்லை. அரசியல் கட்சிகள் மக்களுக்கு எதிராக இருக்கின்றனர். அதே போல் மக்களுக்கும் கூடங்குளம் திறந்தால் போதும் என்ற அளவில் மாற்றப்பட்டு விட்டனர் மாதக்கணக்காக செயற்கையாக மின்வெட்டு உருவாக்கப்பட்டு இக்கருத்தை உருவாக்குவதில் வெற்றி பெற்று விட்டனர். அதன் ஒரு பகுதியாகத்தான் கூடங்குளம் விவகாரத்தில் ஆதரவு எதிர்ப்பு என இல்லாமல் நடுநிலை என்ற போர்வையில் போராட்டத்திற்கு எதிராக இருந்த ஜெயலலிதா தேர்தல் முடிந்தவுடன் காவல் துறையை ஆயிரக்கணக்கில் அனுப்பி தனது பாணியில் போராட்டத்தை முடக்கக் காத்திருக்கிறார் எவ்விலை கொடுத்தேனும்.

இத்தனை கேவலங்களுக்கு மத்தியிலும் அண்டை மாநிலங்களில் கூடங்குளம் மக்களுக்கு ஆதரவாகவும், போராட்டக்காரர்களின் மீதான அரசின் ஒடுக்கு முறைக்கெதிராகவும் அணு உலை எதிர்ப்பாளர்கள் இனம் கடந்து தமது ஆதரவைத் தெரிவித்துள்ளனர். திருச்சூரில் மனித உரிமைப் போராளி பினாயக் சென் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டுள்ளார். திருச்சூரிலுள்ள சாகித்ய அகாடமி நிறுவனத்தில் இது நடத்தப்பட்டது அணு உலைக்கு எதிரானவர்கள் அமைப்பு இதை நடத்தியுள்ளது. மனித உரிமை ஆர்வலர்கள், அணு உலை எதிர்ப்பாளர்கள் எனப் பலரும் இதில் கலந்து கொண்டுள்ளனர்.


பினாயக் சென்


பெங்களூரில் நடந்த மெழுகுவர்த்தி ஏந்திய ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக் கணக்கானோர் கலந்து கொண்டு தமிழக அரசுக்கெதிராகவும், போராட்டக் காரர்களுக்கு தமது ஆதர்வைத் தெரிவித்துள்ளனர்.  இதில் உரை நிகழ்த்திய மனோஹர் என்ற சமூக ஆர்வலர் "இப்போராட்டத்தினை கூடங்குளத்து மக்கள் போராட்டமென்றோஎன்றோ அல்லது தமிழர்கள் போராட்டமென்றோ சுருக்கக் கூடாது, இது மனித குலத்துக்கெதிரான அணுவாற்றல் அரசியலால் திணிக்கப்படும் அநீதி. தமிழக நடுவண் அரசுகள் ஏகாதிபத்திய அரசுகளின் வழிகாட்டலின் அடிப்படையில் செயல்படுகின்றன, சட்டப்பூர்வமான மக்களின் போராட்ட வடிவத்தைக் குற்றம் சாட்டுகின்றனர். இது அனைவராலும் கண்டிக்கப்பட வேண்டும்" என்றார். இந்தியாவில் இயங்கும் அனைத்துவிதமான அணுவாற்றல் அடிப்படையிலான திட்டங்கள் திரும்பப் பெறப்படவேண்டும் என்றும், அணு உலையை இயக்கக் கோரும் தமிழக அரசின் திட்டம் திரும்பப் பெறப்பட வேண்டுமென்றும், கைது செய்யப்பட்ட அணு உலை எதிர்ப்பாளகள் விடுவிக்கப்படவேண்டுமென்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது. அப்துல்கலாமுக்கும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. 



மாணவர்கள், சமூக ஆர்வலர்கள், அறிவாளர்கள், உரிமை ஆர்வலர்கள் எனப்பலரும் கலந்து கொண்ட மெழுகுவர்த்தி ஏந்திய ஆர்ப்பாட்டம் டவுன் ஹாலில் நடந்தது. குடிமக்கள் விடுதலைக்கான மக்கள் ஒன்றியம் (People’s Union for Civil Liberty ) என்ற அமைப்பு Vimochana, SICHREM, People’s Democratic Forum, Sangama, New Socialist Alternative ஆகிய அமைப்புகள் என பலருடன் சேர்ந்து நடத்தினார்கள்.

Download As PDF
Bookmark and Share

Post Comment