தேர்வில் காப்பியடித்தலும் சுயவிமர்சனமும்

திருவண்ணாமலையில் ஒரு பள்ளியில் ஆசிரியர்களே மாணவர்களுக்கு பிட் வழங்கிக் கொண்டிருந்த போது பிடித்து விட்டார்கள். பள்ளியிலுள்ள நகலெடுக்கும் இயந்திரத்திலேயே தயாரிக்கப்பட்ட துண்டுக் காகிதங்களுடன். இதென்ன பெரிய செய்தியா ?. நிறைய இடங்களில் நடப்பதுதானென்றாலும் கேள்விப்படுபவர்களுக்கு புதிதெனில் அதிர்ச்சியும் உண்டாகும். இதைக் கேட்டு ஆத்திரப்படக்கூடும். அந்த ஆசிரியர்களைத் திட்டக் கூடும். எப்பாடு பட்டாவது அனைத்து மாணவர்களையும் தேர்வில் வெற்றி பெறச் செய்யாவிட்டால் பள்ளி நிர்வாகம் அவர்களை ஒரு வழியாக்கி விடும். 100% தேர்ச்சி அடையும் பள்ளி என விளம்பரம் செய்து நன்கொடை வாங்க முடியாது. வாங்கும் சில ஆயிரம் சம்பளத்துக்கு வருடம் முழுவதும் கத்தினாலும் மண்டையில் ஏறாத மரமண்டைகளை என்ன செய்வதாம் ? வருடம் முழுவதும் திட்டினாலும் தேர்வு நேரத்தில்தான் இது போன்ற ஆசிரியர்கள் மாணவர்களுக்கு தெய்வமாகத் தெரிவார்கள். அவர்கள் தன்மானத்தை விட்டு பிட்டுக் கொண்டு வந்து தராவிட்டால் என்னைப் போன்ற ஆயிரக்கணக்கான பேர் முக்காட்டைப் போட்டிருப்போம். 

அந்த எழவை மனப்பாடம் செய்து வாந்தி எடுப்பதால் என்ன அறிவு வரப்போகிறது ? என்ன படித்தாலும் கல்லூரியில் படிக்கப் போவதற்கும் அல்லது வேலை கிடைத்துப் போனாலும் அல்லது எதிர்கால வாழ்க்கையிலும் அது என்ன வகையில் பயன்படப் போகிறது அந்த ஏட்டு படிப்பு ? என்ன படித்தாலும் தகவல் தொழில் நுட்ப நிறுவனத்தில் வேலை பார்க்கவே விரும்புகிறார்கள். இல்லையென்றால் சேவைத்துறை அதற்கு ஏதாவதொரு பட்டப்படிப்பு மட்டும் தேவை. பிறகு எதற்கு இத்தனை ஆர்ப்பாட்டங்கள் ? தேர்வில் தோல்வியடைந்தால் தற்கொலை வேறு செய்கிறார்கள். பிட்டடித்து சிக்கினாலும் தற்கொலை முயற்சி. தாழ்வு மனப்பான்மை, குற்ற உணர்வு, புறக்கணிப்பு என எதிர்கொள்ள நேரிடும். பணம் கொடுத்தால்தான் கல்வி, மனப்பாடம் செய்து எழுதினால் மதிப்பெண், etc கிடைக்கும் உலகில் பிட்டடித்து தேறிட எண்ணுவது இயல்புதான்.

நான் பள்ளியில் படிக்கிற காலத்தில் சுமாராகப் படிப்பேன். தேர்வு எழுதும் போது வருகின்ற கண்காணிப்பாளர் கொஞ்சம் பெரிய மனதுக்காரராக இருந்தால் எழுதி முடித்த தாளை தேர்வு அறையிலேயே பரிமாறிக் கொள்ள வேண்டும் என்பது வழக்கம். ஒரு அறையில் ஒருவர் இருவர் நன்றாகப் படிப்பவராக இருந்தால் போதும். ஒரு மதிப்பெண் வினாக்கள் எப்படியாவது ஏறக்குறைய அனைத்து விடைகளும் சரியாக கண்டு பிடிக்கப்பட்டு பரிமாறப்படும். முடிந்தால் எல்லாருக்கும் விடைத்தாளை அனுப்பி அனைவரும் எழுதியவுடன் திரும்ப கைக்கு வந்து விடும். 10 ஆம் வகுப்பில் அறிவியல்தான் மிகவும் சிரமாமானது 12 வருடங்களுக்கும் முன்பாக. கேள்வித்தாளை வாங்கியவுடன் எல்லோருக்கும் கிழிந்து விட்டது. மிகவும் கடினமாக இருந்தது. (நான் வழக்கமாக 80 மதிப்பெண் வாங்கியது கூட இல்லை. ஆனால் 90 க்கும் மேலாக பொதுத்தேர்வில் எடுக்க வேண்டுமென சூளுரை எடுத்திருந்தேன் அது முடியாது எனத் தெரிந்தும்) எனக்கு ஒரு 60 வரை மட்டுமே வரும் என்று புரிந்தது. மற்றவர்க்கோ 30 கூட வராது. பிற்பாடு துண்டுக்காகிதங்களில் விடையை எழுதி அனுப்பி வைத்து ஆசிரியர்கள் மற்ற தேர்வில்லாத மாணவர்கள் உதவினார்கள். எனது தாளை வாங்கியெழுதிய நண்பன் மிகவும் சென்டிமென்டாக எனது புகைப்படத்தை வாங்கியும் வைத்துக் கொண்டான். 10 ஆவது படிக்கும் போது 10 வகுப்பு பொதுத்தேர்வுதான் உலகமகா சிரமம் என்று நினைப்பது இயல்புதானே. (இப்போது ஒரு பதிவு எழுதி பின்னூட்டம் வாங்குவது சிரமம்) எனக்கோ சிரிப்பாக இருந்தது.

அடுத்து பிட்டை தேர்வறைக்கு எடுத்துச் செல்லும் நுட்பம்தான். உள்ளாடை, உள் பாக்கெட் எனப் பலவகையில் எடுத்துச் செல்வோம். சிலர் பேண்ட்டில் காலின் உள்புறமாக தொடைப்பகுதியில் தையல் இருக்குமல்லவா அங்கே ஒரு 7 செமீ அளவு கிழித்து விட்டு உள்ளாக ஒரு பாக்கெட்டைத் தைத்து அதில் அள்ளிக் கொண்டு போனார்கள். சிலர் தேர்வு அறைக்குள்ளேயே முதல் நாளிலேயே சென்று தமது இருக்கையின் கீழாக் கத்தையாக செல்லே டேப்பைக் கொண்டு ஒட்டினார்கள். எனக்கு பிட்டடுக்கும் அளவு துணிச்சல் கிடையாது. சிறு குற்ற உணர்வும் உண்டு. கண்காணிப்பாளர் கண்டிப்பாக இல்லாத பட்சத்தில் ஒரு சில முறை செய்தேன். மற்ற எல்லாப் பாடங்களிலும் ஏறக்குறைய 70 % வரை மதிப்பெண்கள் பெற முடிந்த என்னால் கணிதத்தில் தேறுவதே மிகவும் சிரமம். நல்ல வேளையாக என்னுடைய நண்பி நான் எட்டிப் பார்த்து எழுதும் தொலைவில் இருந்தாள். அவள் புண்ணியத்தில்தான் நான் பிழைத்தேன். இல்லையென்றால் கூவியிருக்கும். அந்தக் கணிதத்திற்குத்தான் நான் (இன்னொரு நண்பனும்) பிட் கொண்டு சென்றது நல்ல வேளையாக அந்தக் கேள்விகளைக் கேட்டிருந்தார்கள். அதற்கு முன்பு ஒரு முறை பிட் எடுத்துச் சென்று தேர்வு அறைக்கு நுழையும் முன்பாகவே வெளியே வீசி விட்டேன். வீரம்தான் !!

இன்னுமிரண்டு நண்பர்கள் வேறொரு தேர்வு அறையில் நடந்த நிகழ்வு இது. தமது விடைத்தாளை மாற்றிக் கொண்டிருக்கிறார்கள். ஒருவன் எழுதிய விடையை மற்றவன் பார்த்து எழுதிக் கொள்வது. ஒருவர் முதலில் 2 மதிப்பெண் வினாக்களும், மற்றவர் 1 மதிப்பெண் அல்லது 5 மதிப்பெண் வினாக்களையும் எழுதுவது (சரியான விடைகள்தான் துண்டுக் காகிதங்களைப் பார்த்துத்தான், ஒரு அறையில் குறிப்பிட்ட நேரம் மட்டுமே பார்த்து எழுத அனுமதிப்பார்கள் கண்காணிப்பாளர்கள் அதற்கு மேல அவர்களுக்கு ரிஸ்க் எடுக்க மாட்டார்கள்) பின்பு அவருக்கே தெரியாமல் நாங்களாக நுட்பமாக எழுதிக் கொள்ள வேண்டும்). இப்படியாக இருக்கும்போது விடைத்தாளை மாற்றிக் கொண்டவர்கள் இரண்டு பேர். இதில் விடைத்தாளைக் கொடுத்தவனும் மறந்து விட்டான், வாங்கியவனும் மறந்து விட்டான். பறக்கும் படை வந்தால் எப்போதும் ஏதாவது ஒரு அறையில் இருக்கும் ஒரு சிலரின் விடைத்தாளை வாங்கி ஆய்வு செய்வார்கள், ஏதேனும் மாற்றிக் கொண்டிருக்கிறார்களா அல்லது துண்டுக் காகிதமேனும் வைத்திருக்கிறார்களா என்று. அவர்களைக் கையும் களவுமாகப் பிடித்தும் விட்டார்கள். பின்பு அறிவுரை சொல்லி விட்டுப்போனார்கள். இது போன்ற ஈரமான மனிதர்கள் இருப்பதால்தான் எத்தனையோ  மாணவர்கள் (மக்குகள்) 10 வதாவது தேற முடிந்தது. இவர்களையெல்லாம் சும்மா விடக்கூடாது என்று என்கவுன்டர் ஆதரவாளர்கள் போல் யாராவது வாதாட முற்பட்டால் என்னிடம் அதற்கு விடையில்லை. காசு கொடுத்தால் கல்வி, 8 வகையான பள்ளிக்கல்விகள், ஆங்கில, தமிழ்வழி, மனப்பாடக் கல்வி, தேவையற்ற பாடச்சுமை, மன அழுத்தம், சமூக அங்கீகாரம், வேலையின்மை என கல்வித்துறையில் ஆயிரம் ஓட்டைகள் இருக்கின்றன. அதை விட்டு விட்டு இதை ஒரு பெரிய பிரச்சனையாக்குவது பார்வைக் குறைபாடு மட்டுமே.

இறுதியாக சுயவிமர்சனம். அந்தத் தேர்வுகளின் போதுதான் வேண்டா வெறுப்பாக சாமி கும்பிட்டேன். நீ இருந்தா என்னைக் காப்பாத்து புள்ளையாரப்பா என்று. கேள்வித்தாள் எளிமையாக வரவேண்டுமென வேண்டுதலில்லை. மாறாக தேர்வறைக்கு வரும் கண்காணிப்பாளர் கண்டிப்பானவராக இருக்கக் கூடாதென்றுதான் கடவுளை வேண்டினோம். இப்படியெல்லாம் காப்பியடித்து  வந்த நான் கல்லூரியில் நன்கு அனுபவித்தேன். இரு பட்டங்களை வாங்கும் முன்பு ஒரு வருடம் வீணாக்கி மொத்தம் 11  அரியர்கள். வேலை கிடைக்காமல் தெருத்தெருவாக அலைந்தும் பெரிதாக ஒன்றும் நடக்க வில்லை. 

இது நியூட்டனின் மூன்றாம் விதியாக இருக்கலாம். என்னுடைய புகைப்படத்தை நன்றியுணர்வுடன் வாங்கிக்கொண்ட என்னுடைய நண்பன் 12 வதுடன் படிப்பை நிறுத்திக் கொண்டான். இப்போது நடந்த உள்ளாட்சித் தேர்தலில் நின்று வெற்றி பெற்றுக் கவுன்சிலர் ஆகிவிட்டான் என்று கேள்விப்பட்டேன்.  நான் வாங்கும் சம்பளத்தைக் கேட்டு அவன் வாயைப் பொத்திக் கொண்டு சிரிக்கிறான்.
Download As PDF
Bookmark and Share
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

0 பின்னூட்டங்கள்:

கருத்துரையிடுக

நான் படைப்பாளியோ, விமர்சகனோ அல்லன். வாசகன் மட்டுமே. எனவே உங்கள் கருத்தின்றி எனது இடுகை முழுமை பெறாது. நிறைகளை விடவும் குறைகள் அதிகம் எதிர்பார்க்கிறேன்