தூக்கு தண்டனை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தூக்கு தண்டனை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

கௌசல்யா - தமிழ்நாட்டின் மகள்

சமீபத்தில் திருப்பூர் நீதி மன்றம் உடுமலை சங்கர் ஆணவக்கொலை வக்கில் தொடர்புடைய 6 பேருக்கும் தூக்கு தண்டனை விதித்தது. நம் ஜனநாயகத்தின் மீது வைத்துள்ள மிகச்சிறிய நம்பிக்கையின் ஒளிக்கீற்றாக இதைப் பார்க்க வேண்டும். இன்னும் எத்தனையோ வழக்குகளுக்கு தீர்ப்பு வராத நிலையிலும் இந்தத் தீர்ப்பை ஒரு சிறந்த முன்னோடியாகப் பார்க்க வேண்டும். எத்தனையோ ஆணவக் கொலைகள் நாளிதழ்களிலும் வருகின்றன. இந்த வாட்சப் காலத்தில் ஒரு கூட்டமே கூடி ஒருவரயோ அல்லது இருவரையுமோ அடித்துக் கொல்வதைக் கூட சுற்றி நின்று ஜாதிவெறி பிடித்த மனநோயாளிகள் கூட்டம் படம்பிடித்துக் கொண்டு இருக்கும் காட்சிகளைக் கூட காண்கிறோம். அப்படி இருக்கும் நிலையில் இந்தியாவிலே ஜாதிய எதிர்ப்பு சிந்தாந்தம் வலுவாக இருக்கும் (ஜாதிவெறியும் வலுவாகத்தான் இருக்கிறது) தமிழ்நாட்டில் வழங்கப்பட்டுள்ள ஆணவக் கொலைக்கு தூக்கு தண்டனை என்பதையும் நாம் பார்க்கிறோம். இந்தியாவில் இது வரை இப்படி ஒரு தீர்ப்பு ஆணவக் கொலைக்கு எதிராக வழங்கப்பட்டுள்ளதா என்று தெரியவில்லை. தமிழகம் அதில் முதல் படியை எடுத்து வைத்திருக்கிறது.

இதற்கு மூலகாரணமாக இருந்தது கண்காணிப்புக் கருவியில் பதிவாகி வெளியான சங்கரும் கௌசல்யாவும் வெட்டப்படும் காணொலிக் காட்சிகள் மட்டுமல்ல, மறுபிறவி எடுத்து அதற்காகப் போராடிய கௌசல்யா என்ற அற்புதமான பெண்ணின் துணையும் கூட. தனது கண்ணெதிரே கணவனைப் பறிகொடுத்து, தானும் வெட்டுக்களை வாங்கி, உயிர் காப்பாற்றப்பட்டு, பின்னர் தற்கொலைக்கு முயன்று தன்னைத் தேற்றிக் கொண்டு பெரியாரிய, தன்னார்வக் குழுக்களின் உதவியால் புது மனிதியாக மாறி தன் கணவனை கூலிப்படை வைத்துக் கொலை செய்த, தனது தந்தைக்கே தூக்கு தண்டனை பெற்றுக் கொடுக்கும் மனித நேயப் போராளியாக மிளிர்கிறார், ஆளுமையாக வரலாறு படைத்திருக்கிறார் கௌசல்யா. அவரின் செயல்களை நினைக்கையில் அவர் மேல் நமக்கு பேரன்பும், பாசமும், பெருமிதமும் பெருகி வருகிறது. 

இந்தத் தூக்கு தண்டனை அறிவிப்புக்கு எதிராக மேல் முறையீடு செய்வதற்குக் கூட வழியில்லாமல் இருக்கிறது கௌசல்யாவின் குடும்பம். இப்படி ஒரு குடும்பத்தை நாசமாக்கியிருக்கிறது ஜாதி வெறி. இதற்கெல்லாம் கொஞ்சமும் கவலையில்லாமல் கூச்சப்படாமல் கௌசல்யாவை அசிங்கப்படுத்து வேலையை ஜாதி வெறி இழிபிறவிகள் செய்து வருகின்றனர். ஒரு பிற்படுத்தப்பட்ட ஜாதியிலிருக்கும் குடும்பப் பெண் ஒரு பட்டியலினத்தைச் சேர்ந்த ஜாதி ஆணைத் திருமணம் செய்வது உயிருக்கே உத்தரவாதமில்லாத செயலாக இன்றும் இருக்கிறது. இப்படி ஒரு குடும்பம் ஜாதிவெறியில் ஆணவக் கொலை செய்து தூக்கு தண்டனை வாங்கியிருக்கிறது, இதற்காக கொஞ்சமும் கவலையோ துயரமோ இல்லாமல் கௌசல்யாவை இழிவு செய்து மீம்களையும் கருத்துக்களையும் ஃபேஸ்புக்கிலும் வாட்சப்பிலும் பரப்பி வருகின்றனர். 

இது மாதிரியான மன நோயாளிகள்தான் கௌசல்யாவின் தந்தை சின்னச்சாமி மாதிரியான ஆட்களை தற்கொலைக்கோ அல்லது சொந்த மகளையே ஆள் வைத்து வெட்டுவதற்கோ தூண்டி விடுகிறவர்கள். இந்தமாதிரியான ஆட்களின் ஏச்சுக்கும் பேச்சுக்கும் பயந்துதான் ஜாதியை, தான் கௌரவம், குடும்ப மானம் என்றெல்லாம் கருதி அடிப்படை மனிதநேயத்தைத் தொலைத்து ஜாதிவெறி மனநோயை சரி என்று நம்பி கொலை செய்யத் துணிகிறார்கள். ஜாதிய சமூகத்தில் ஜாதிக்கு பயப்படும் மனிதர்கள், தான் சமூகம் என்றும் ஊர் உலகம் என்று நம்பும் இது மாதிரியான ஆட்கள்தான் ஜாதி வெறியை வாழவைக்கும் இழிபிறவிகள். இவர்கள் பக்கத்து வீட்டுக்காரர்களாக இருக்கலாம், பக்கத்து ஊர்க்காரர்களாக இருக்கலாம், அங்காளி பங்காளிகளாக இருக்கலாம். இவர்கள்தான் அடுத்தவர்களை தூண்டிவிடுவது, சீர் செனத்தி கொடுப்பதை பெருமை பேசுவது, பொண்ணு வயசுக்கு வந்துட்டாளா இல்லையா என்று கேட்பது முதல், பையன் என்ன சம்பளம் வாங்கறான், பையனுக்கு இன்னும் கல்யாணமில்லையா, கல்யாணமாய் இத்தனை நாளாயும் குழந்தை இல்லையா, அந்தக் கோயிலுக்குப் போகணும், இந்த டாக்டரைப் பாக்கணும், நான் சொல்றா ஜோசியகாரரைப் பாருங்க என்றெல்லாம் ஆலோசனை சொல்வது,  அடுத்தவன் குடும்பத்தைப் பற்றி கிசுகிசு பேசுவது, இது போன்று பெண்ணின் தனிப்பட்ட படங்களை சமூகத்தில் தனது கழிவுக் கருத்துக்களுடன் பகிர்ந்து கொள்வது, போலித்தனமாக உச் கொட்டுவது இப்படிப் பல வகைப்படுவர். 

இது மாதிரியான ஊருக்கு 4 பேர்களாக இருக்கும் ஜாதிவெறி மனநோயாளிகள் இல்லாமல் இருந்தால் எப்படி இருக்கும் ? சின்னச்சாமி போன்றவர்கள் ஊர் என்ன சொல்லுமோ ?, நம்ம சனம் என்ன சொல்லுமோ ? சொந்தக்காரவுக என்ன சொல்லுவாகளோ என்றெல்லாம் மன அழுத்தம் கொள்ளாமல், சிறிது காலத்தில் கௌசல்யாவின் முடிவை அங்கீகரித்திருக்கக் கூடும். இப்போது கொலைகார சின்னச்சாமி மட்டும் தூக்கு மேடையில், சின்னச்சாமியின் ஜாதிவெறியைக் கூட்டிய ஜாதிக்காரர்கள் எல்லாம் கௌசல்யாவைத் திட்டிக் கொண்டும் சின்னச்சாமியின் ஈகத்தை மெச்சிக் கொண்டும் பாதுகாப்பாக இருக்கிறார்கள் தங்கள் ஜாதி சனத்துடன். 

இப்படியெல்லாம் திரியும் ஒரு பெண், தனது பெத்த தகப்பனுக்கே தூக்கு தண்டனை வாங்கித் தந்து விட்டாள் என்று பொருமுகின்றனர். அனைவரும் சங்கர் வெட்டப்பட்ட அதிர்ச்சியில் இருக்கும்போதே, மேல் ஜாதிப் பெண்களைத் தொடுகின்றவனுக்கு அப்படித்தான் வேண்டும் என்ற எண்ணமுடையவர்கள் அதிகமாக இருந்தனர். இப்போது கௌசல்யாவின் அப்பாவுக்கு தூக்கு உறுதியானவுடன் கௌசல்யாவை ஏசுவதற்கு வசதியாகப் போய்விட்டது. ஆனால் உண்மையென்ன ? சின்னச்சாமி தூக்குமேடைக்குச் செல்லக் காரணமே இது மாதிரி அவர் சார்ந்த சொந்தங்களும், சமூகமும்தான். இந்த எடுபட்ட ஜாதிய சமூகம்தான் அவரை அனைத்து வகையான உறவுகளையும் இப்படித்தான் இருக்க முடியும் என்று கட்டாயப்படுத்துகிறது. தனது மகள் அதை மீறியதால் சமூகத்தில் தனக்கு மரியாதை போய்விடும் என்று எண்ண வைக்கிறது. எனவே ஒரு தனி மனிதன் ஜாதியால், ஜாதிவெறியால், ஜாதிப்பாசத்தால் நிகழ்த்தும் வன்முறைக்கு ஜாதிதான் பொறுப்பேற்க வேண்டும். ஆனால் ஜாதி இங்கே புனிதமாகி கௌசல்யாவை ஏசுகிறது. 

நம் முன்னோர்களெல்லாம் பொறியியல் படிக்கவில்லை என்பதற்காக கௌசல்யாவின் தந்தை சின்னச்சாமி கௌசல்யாவை பொறியியல் படிக்க வைக்காமல் இருக்கவில்லை. நாம்தான் படிக்காத தற்குறியாக இருந்து விட்டோம் தம் பிள்ளைகளாவது படிக்கட்டும் என்று படிக்க வைக்கிறார்கள். ஆனால் படித்து விட்டு, பட்டம் வாங்கி விட்டு வேலைக்கும் போய் விட்டு இருந்தாலும் நம்மைப் போலவே ஜாதியச் சாக்கடையில்தான் வாழவேண்டும் என்று நினைக்கும் பெற்றோர்களின் மனநோய் விந்தையிலும் விந்தையல்லவா ?. நம் மகனோ மகளோ நம்மைப் போல் படிக்காத தற்குறியாக இருக்கக் கூடாது, ஆனால் நம்மைப் போல் ஜாதிவெறியனாகவே இருக்க வேண்டும். இப்படியெல்லாம் புரிந்து கொள்ளவோ ஏற்றுக் கொள்ள முடியாத நம்பிக்கைகளால் நிறைந்ததுதான் ஜாதி. அதன் அடிப்படை தந்நலமும், போலிப் பெருமையும், மனிதநேயம் இல்லாமையும்தான். 

தேவர் ஜாதியினர்தான் தனது ஜாதிக்காரனுக்கு தூக்குதண்டனை வாங்கித்தந்ததால் கௌசல்யாவைத் திட்டுகின்றனர் என்று பார்த்தால், கொங்கு வேளாளக் கவுண்டர்கள், வன்னியர்கள், மாதிரி இன்ன பிற ஆண்ட பரம்பரைப் போலிப் பெருமையில் மூழ்கி இருக்கும் மனநோயாளிகளும் சேர்ந்து கௌசல்யாவை அசிங்கப்படுத்துவதாக நினைத்துக் கொண்டு தன்னுடைய கீழ்மையைக் காட்டி வருகின்றனர். 

கௌசல்யா தனது நண்பர்களுடன் சுற்றுலா சென்ற புகைப்படங்கள் இருக்கின்றன. அதை தூக்குதண்டனை வெளியான அன்று "சங்கர் இறந்ததிலிருந்து நான் நிம்மதியின்றி இருந்தேன். இத்தீர்ப்பு எனக்கு நிம்மதி அளித்தது என்று கௌசல்யா கூறியிருந்தார். இந்த செய்தியின் கீழே கௌசல்யா நிம்மதியின்றித் தவித்தபோது க்ளிக்கியது" என்று கீழ்க்காணும் படங்களைப் பகிர்ந்திருந்தார்கள். அதை எல்லா ஜாதியிலிருக்கும் நாடகக் காதல் என்ற கதையை நம்புகிற, தலித்கள் மேல் ஜாதிப் பெண்களை மணந்து கொண்டு பெண் வீட்டாரிடம் பணம் பறிக்கின்றனர் என்று நம்பும் ஜாதிவெறியர்கள் தத்தமது ஃபேஸ்புக்கில், வாட்சப் குழுமங்களில் பகிர்ந்து தனது இழிவைப் பதிவு செய்து கொண்டனர். இங்கே இருக்கும் புகைப்படங்களைப் பாருங்கள். அவர் முகத்தில் சிரிப்பையும் தாண்டி ஒரு சோகம் தெரிந்துகொண்டுதான் இருக்கிறது. 

                                                      

                                                 

                                                  

அதாவது கௌசல்யா இப்போது ஜீன்ஸ் அணிகிறார். கூந்தலை வெட்டி விட்டார். அதாவது கெட்டுப்போய்விட்டாராம்.  ஆண்களுடன் ஊர் மேய்கிறார். அதற்கும் மேல் அவர் மகிழ்ச்சியாக இருக்கிறாராம். இப்படி ஒரு பிம்பத்தை ஏற்படுத்துகிறார்கள். அதாவது இன்னும் முக்கால்வாசி ஆண்களுக்கு பெண்கள் ஆண் நண்பர்களுடன் பழகுவது, கைகோர்ப்பது, சேர்ந்து புகைப்படம் எடுப்பது, நெருங்கி நின்று தற்படம் (Selfie) எடுப்பது இதிலெல்லாம் ஒவ்வாமை ஏற்படுகிறது. இந்தக் கொடுமையையெல்லாம் எங்கே போய் சொல்லி அழ ?.

பின்னே என்ன ஒரு கணவனை இழந்த பெண் எப்படி இருக்க வேண்டுமாம் ? மொட்டை அடித்து, வெள்ளைச் சேலை உடுத்தி, முக்காடு போட்டு மூலையில் அமர்ந்து கொண்டு மூக்கைச் சிந்திக் கொண்டு இருக்க வேண்டுமோ ? பெண்களை அடக்கி வைக்க நினைக்கும் உங்கள் புத்தி அப்படித்தானே போகும்.

அவர் பொறியியல் பயின்றவர், செத்துப் பிழைத்த பின்னர் பெரியாரியம் பயின்றவர். அவர் அப்படித்தான் இருப்பார். அப்படி மகிழ்ச்சியாக இருந்ததால்தான், துணிவாக இருந்ததால்தான், சராசரிப் பெண்களின் அடையாளமான நீண்ட கூந்தலைத் துறந்து, ஜீன்ஸ் அணிந்து மனிதநேயராக சிந்திக்கத் தொடங்கியதால்தான் இப்படி அவர்களுக்கு தண்டனை வாங்கித்தந்து இன்று அதை நியாயப்படுத்தி பேசவும் முடிகிறது. அவர் அப்படித்தான் உடையணிவார், நண்பர்களுடன் ஊர் சுற்றுவார், சிரித்துக் கொண்டே புகைப்பத்திற்குக் காட்சி தருவார். மேடைகளில் பேசுவார், நடனம் ஆடுவார் இதற்கு மேல் அவர் திருமணமும் கூட செய்து கொள்வார். அதற்கு இப்போது என்ன ? அதனால் உங்களுக்கு என்ன பிரச்சனை என்று சொல்ல முடியுமா ? என்ன நடந்தாலும் ஜாதிவெறியால மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் திருந்த முடியாது. உங்களிடம் நல்ல பெயர் எடுக்க தன் வாழ்க்கையை ஏன் அவர் வீணாக்க வேண்டும். முடிந்தால் மனிதர்களாக மாற முயற்சி செய்யுங்கள். யார் யாரை காதலிக்க வேண்டும் யார் யாரை காதலிக்கக் கூடாது என்று சொல்வதெல்லாம் ஒரு பண்பாடாம் அதுதான் மதமாம் கலாச்சாரமாம். இதையெல்லாம் இவர்கள் கட்டிக் கொண்டு அழ இருப்பவர்கள் சாக வேண்டுமாம். 

இந்த மாதிரி அயோக்கியர்கள் தம் திருமண உறவுகளில் எப்படி நடந்து கொள்வார்கள் ? ஏங்க பொண்ணு ஏழையா இருந்தா பரவால்லை, நம்ம சாதியா இருந்தா போதும் என்றா சொல்கிறார்கள். அது தமது பையனுக்கோ/பெண்ணுக்கோ வரன் அமையாமல் பல வருடங்கள் இருந்தால் மட்டுமே இறுதியாக சொல்லும் வாக்கியம். இதுவும் இல்லையென்றால் இருக்கவே இருக்கிறது கேரளா. அங்கே போய் பெண் எடுத்தால் யாரும் ஜாதி கேட்க மாட்டார்கள், கல்யாணப் பொண்ணு கேரளா என்றால் அத்துடன் கேள்விகள் முடிந்து விடும். 

பொண்ணுக்கு எத்தனை பவுன் போட்டாங்க ? பையனுக்கு என்ன சம்பளம் ? எத்தனை ஏக்கரா தேறும்? தாய்மாமன் என்ன செய்தார் ? என்றுதானே எல்லா சாதிசனமும் கேட்கிறது. ஆக இங்கே ஜாதிக்கு மரியாதை இல்லை. பணத்துடன் கூடிய ஜாதிதான் மதிப்புப் பெறுகிறது. பணத்தால்தான் ஜாதியே மதிப்புப் பெறுகிறது. சில மாதங்களுக்கு முன்னர் ஒருவர் தனது குடும்ப்பத்துடன் கந்துவட்டிக் கொடுமை தாளாமல் மாவட்ட ஆட்சிய அலுவலகத்தில் தீக்குளித்தார். குடும்பமே அழிந்தது. அந்த இறந்தவரின் குடும்பமும், கந்து வட்டி கொடுத்தவரும் ஒரே ஜாதி என்று கேள்விப்பட்டேன். இதனால் அந்தக் குறிப்பிட்ட ஜாதியினரின் மானம் போனதாக எந்த ஜாதிவெறியனும் கவலை கொள்ளவில்லை. ஆனால் ஒரு பெண் தான் விரும்பிய வேறு ஜாதிக்காரனுடன் திருமணம் செய்தால் மட்டும் ஜாதி மானம் போய்விடும். அதற்கு அவர்களைக் கொன்று தானும் தூக்கு மேடைக்குச் சென்று செத்தால்தான் ஜாதி கௌரவம் காப்பாற்றப்படும். அடுத்த ஜாதிக்காரன் கரு தன் ஜாதி வயிற்றில் வளர்வது கேவலம் என்றால் அடுத்த ஜாதிக்காரன் விடும் மூச்சைக் கூடத்தான் சுவாசிக்கிறார்கள். வேற சாதிக்காரன் விட்ட காத்தை நான் சுவாசிக்க மாட்டேன் என்று சொல்லி விட்டு மூச்சை நிறுத்திப் பாருங்களேன். 

என் பங்குக்கு நானும் ஏதோ என்னால் முடிந்த மீம்கள்

                  


                  

Download As PDF
Bookmark and Share

Post Comment

அச்சமற்றவளின் சாவுக்கு நீதி கிடைக்கவில்லை


நான்கு வருடங்களுக்கு முன்னர் இந்தியாவையே தலைகுனிய வைத்த டெல்லி பேருந்து பாலியல் வன்முறை வழக்கில் குற்றவாளிகள் நான்கு பேருக்கும் தூக்கு தண்டனை தீர்ப்பாக வந்திருக்கிறது. இதுவே சரியான நீதியாகும். ஆனால் ஒரு அநீதி இந்தக் கொடுங்குற்றத்தில் பங்கெடுத்த ஒரு அயோக்கியப் பிறவி 3 மாதங்கள் சிறியவன் என்பதால் சிறுவனாக பாவிக்கப்பட்டு 3 வருடத்தில் வெளிவந்து விட்டான். இதைத்தான் சகிக்க முடியவில்லை. அவனுக்கு சராசரி மனிதர்களுக்குக் கிடைக்கும் சுதந்திரமான வாழ்வு சமூகத்தில் அனுமதிக்கப்படவே கூடாது அவனையும் சேர்த்துத் தூக்கில் போட்டிருக்க வேண்டும். இப்பேர்ப்பட்ட ஒருவன் வெளியில் சுதந்திர மனிதனாக உலாவுவதைத்தான் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

                                                 

நிர்பயாவின் வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் நான்கு பேரின் மீதான தூக்கு தண்டனை தீர்ப்பு. இந்த வழக்கில் மொத்தம் ஆறு பேர் தொடர்புடையவர்கள். அதில் ஏற்கெனவே குற்றவாளிகளில் ஒருவனான ராம் சிங் சிறையிலேயே ஒரிரு வருடங்களுக்கு முன்னர் தூக்கு மாட்டி இறந்து விட்டான். இன்னொருவன் சிறுவன் என்று ஒரு வருடத்துக்கு முன்னர் விடுவிக்கப்பட்டு விட்டான். இது சகிக்கவே முடியாத அவமானம். இதைக் கேட்டாலே பற்றிக் கொண்டு வருகிறது. இந்தக் குற்றத்தைச் செய்த போது அவனுக்கு 17 வயது முடிய 3 மாதங்கள் இருந்தன. எனவே அவனை ஒரு குற்றவாளியாகக் கருத முடியாது என்று 3 வருடங்கள் சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் வைக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டு விட்டான். இந்தக் கேவலைத்தை எங்கே போய் சொல்வது. அவனுக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டிருக்க வேண்டும். சிறுவனாக இருப்பவன் எப்படி பெரியவர்கள் செய்யும் பாலியல் வன்முறையைச் செய்திருக்க முடியும். பாலியல் வன்கொடுமை செய்தவர்களிலேயே அதிகமாக செய்தவன் அந்தக் கொடியவன்தான். 
                                                
                                                    இந்தியாவின் மகனான உத்தமச் சிறுவன்

நடந்த கொடுமையைப் பாருங்கள். ஜோதிசிங் பாண்டே தனது நண்பனுன் படம் பார்த்துவிட்டு 9 மணி இரவில் இந்தப் பேருந்தில் ஏறியிருக்கிறாள். அந்தப் பேருந்திலிருந்த 5 பேர் (ஓட்டுநருடன் 6 பேர்) தனியாக ஒரு பெண் ஆடவனுடன் இருப்பதைப் பற்றி கிண்டலடிக்க, அந்தப் பெண் அதை எதிர்த்துப் பேச அதனால ஆத்திரமுற்ற இந்தக் கயவர்கள் அந்தப் பெண்ணையும் ஆணையும் தாக்கியுள்ளனர். அந்தப் பெண்ணை பாலியல் வன்முறை செய்திருக்கின்றனர். ஒரு 24 வயதுடைய பெண் ஒரு ஆணுடன் தனியாக இரவில் வருவது தவறாம் அதை எதிர்த்துக் கேட்டால் அந்தப் பெண்ணுக்கு பாலியல் வன்முறைதான் பதிலாம். அதிலும் அந்த உத்தமச் சிறுவன் 17 வயது நிரம்பாத ஒரு --------------- தன்னை விட 6 வயது மூத்த பெண்ணை வன்முறைக்கு உள்ளாக்கி, அவள் பெண்ணுறுப்புக்கள் இரும்புக் கம்பியை விட்டு கொடுமை செய்து நிர்வாணமாக வெளியில் எறிந்து விட்டுப் போயிருக்கிறான். இந்த ஜென்மம் சிறுவன் என்று 3 வருடத்தில் விடுதலை செய்யப்பட்டிருக்கிறான் கூடவே அவனது பிழைப்புக்கு தையல் எந்திரத்தையும் வழங்கியிருக்கிறது அரசாங்கம். இந்தக் கேவலைத்தை எங்கே போய் சொல்லி அழ !?. அச்சமற்றவளின் சாவுக்கு நீதி கிடைக்கவில்லை அவளின் ஆசையும் நிறைவேறவில்லை. அவள் அந்தக் குற்றவாளிகளை உயிருடன் எரிக்கவேண்டும் என்று கூறியிருந்தாள்.
                                    
அவனுக்கு தண்டனை கிடைக்காதது மட்டுமன்றி, ஒரு பெண் தனியாக ஆணுடன் செல்லக்கூடாது என்ற சமூகக் கட்டுப்பாட்டை எப்பேர்ப்பட்ட பொறுக்கிகளும் கூட கையிலெடுக்கலாம், பெண் ஆணுடன் செல்வதைக் காட்டிலும் கொடிய குற்றமான பாலியல் வன்முறையை ஏவலாம் என்ற துணிவை சமூகம் ஆண்களுக்கு அளித்திருக்கும் பண்பாட்டை, மனநிலையை மக்கள் மாற்றிக் கொண்டதாகத் தெரியவில்லை. ஒரு ஆணும் பெண்ணும் இணைந்திருப்பதை, செல்வதை சமூகம் கண்டு கொள்ளாமல் எளிதாகக் கடக்கும் நாளே பண்பாட்டில் சிறந்த நாள். 

அந்தக் கயவனுக்கு தண்டனை கிடைக்காதது மட்டுமல்ல. நிர்பயாவுக்கு நடந்தது போலவே கொடுமைகள் இந்தியாவெங்கும் அதற்குப் பிறகும் நடந்தேறின. நிர்பயாவுக்குக்கிடைத்த ஊடக வெளிச்சம் மற்ற பெண்களுக்குக் கிடைக்கவில்லை நீதியும் கிடைக்கவில்லை.
Download As PDF
Bookmark and Share

Post Comment

இப்படியும் இருக் 'கலாம்' அப்படியும் இருக் 'கலாம்'


அப்துல் கலாம் கொலை தண்டனைக்கு எதிரானவர். அது கிடக்கட்டும் நான் சொல்ல வந்தது வேறு.  அப்துல் கலாம் விரும்பிகள் சைவ உணவுக்கு மாறுவார்களா ? இல்லை நான் இதையும் சொல்ல வரவில்லை.

எங்கள் ஊரில் கலாமுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ஒரு பதாகை வைத்திருந்தார்கள் பேராயக்(Congress) கட்சிக்காரர்கள். அதில் இப்படி எழுதியிருந்தார்கள். ராஜீவ் காந்திக்குப் பிறகு இந்தியாவில் வல்லரசுக் கனவை விதைத்துச் சென்றவர் கலாம். அடக் கண்றாவியே என்று தோன்றியது. அடுத்தவன் சாவுக்கு அஞ்சலி செலுத்தும் போது கூட தன் தலைவரை முன்னிலைப்படுத்தும் ஈன ஜென்மங்களாக இருப்பதால் தான் இவர்களின் கட்சியும் இந்த இலட்சணத்தில் இருக்கிறது.

தொலைக்காட்சியில் பார்த்தேன். இறுதி அஞ்சலி நடந்து கொண்டிருந்தது. ஒரு கூட்டம் பாரத் மாதாகி ஜே என்று ஊளையிட்டுக் கொண்டிருந்தது. அப்போது எனக்குத் தோன்றியது. இந்தக்  கூட்டம்தானே இவரை அதிகாரமில்லாத பொம்மைப் பதவியான குடியரசுத் தலைவராக நிறுத்தியது. இவ்வளவு பெரிய அறிவாளியை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தியதற்குப் பதில் ஏன் பிரதமர் வேட்பாளராகவோ அல்லது அதிகாரம் மிகுந்த பதவிக்கோ பரிந்துரைத்திருக்கக் கூடாது ?இல்லை இவரை விடவும் அறிவாளிகள் அதிகமாக அந்தக் கட்சியில் இருக்கிறார்களா ? யாருக்காவது பதில் தெரியுமா இந்த அறிவிலியின் கேள்விக்குப் பதில் ? 

மூன்று வருடங்களுக்கு முன்னர் கலாமுடன் இருக்கும் மோடியின் புகைப்படத்திலிருந்துதான் மோடியை பிரதமர் வேட்பாளர் விளம்பரப்படலம் ஆரம்பமாகியது. 2 வருடங்களாக முக்கி முக்கி ஊடகங்களின் தொடர்ந்த பரப்புரைகளின் காரணமாகத்தான் ஃபோட்டோஷாப் புகழ் பிரதமராகவும் முடிந்தது. அதற்குப் பதிலாக அப்துல் கலாமையே நிறுத்த வைத்திருந்தால் இன்னும் எளிமையாக வென்றிருக்கலாமே பாஜக ? அவரை பிரதமர் வேட்பாளராக நிறுத்தாதற்கு வேறு உன்னதமான காரணம் ஏதேனும் இருக்குமா ?

பாபர் மஸ்ஜீத் இடிப்பு, மும்பை கலவரம், தொடர்ந்த வட இந்தியக் கலவரங்கள் குறித்து அப்துல் கலாம் வாய் திறந்திருந்தால் பாரத மாதாவின் காவல் காவிகள் இவரை இப்படிப் புகழ்வார்களா ?

இவர் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்படுவது அரசல் புரசலாக வரும் முன்னரே இவர் ஹிந்தி கற்றுக் கொள்ளுமாறு வட இந்தியாவின் ஹிந்தி வெறியர்களால் நிர்பந்தப்படுத்தப்பட்டாராம். இப்படி இருக்கும் போது ஒரு முஸ்லிம்+தமிழன் பிரதமராவது என்பது சாத்தியமா என்று புரியவில்லை. 

அதே நேரம் இந்தி வெறியர்களுக்கும், இந்தி கத்துக்காமல் விட்டேன் என்று புலம்பும் பத்தாம் பசலிகளுக்கும் செருப்பாலடித்த மாதிரி ஹிந்தி தெரியாமலேயே விஞ்ஞானியும் ஆகி, இந்தியர்களின் அன்புக்கும் பாத்திரமாகி விட்டார். அதை நினைத்துப் பெருமையாக இருக்கிறது.

சரி. யார் யார்தான் இவருக்கு அஞ்சலி செலுத்துவது என்றில்லாமல், ஜாதி வெறியர்கள், மதவெறியர்கள் எல்லாரும் போட்டி போட்டுக் கொண்டு உருகி ஒழுகுவதைப் பார்த்தால் எரிச்சலோ எரிச்சலாக இருக்கிறது.

ஆனால் பெரும்பான்மை இந்து மதவெறி பிடித்தவர்களுக்கு ஒரு வயித்தெரிச்சல் வராமல் இருக்காது. அதென்ன ? ஒரு இந்துவுக்கு இப்படி இந்தியா முழுதும் அனைத்து மக்களும் வணக்கம் செலுத்த முடியாது. முஸ்லிமான அப்துல் கலாமுக்குத்தான் அது நடந்தது. வட இந்திய ஹிந்தி வெறியர்கள் இன்னும் பாவம். ஒரு மட்ராஸிக்கு இவ்வளவு மரியாதையா என்று புழுங்குவார்கள். இதை நினைத்து எனக்கு ரொம்பவும் இனிமையாக இருக்கிறது. :)

இது எப்படி சாத்தியம் என்று புரியவில்லை. அத்தனை அயோக்கியர்களும் தேசபக்தி பொங்க இவருக்கு அஞ்சலி அட்டென்டன்ஸ் போடுகிறார்கள். இன்னும் இரண்டு நாட்கள் கழித்து இவர்களின் வழக்கமான வேலைகளுக்குத் திரும்புவார்கள். இந்தியா முழுவதும் இந்த இரண்டு நாட்கள் தேசபக்தி கரை புரண்டு ஓடுகிறது.

ஒரு முஸ்லிமை நாடே ஏற்றிப் போற்றுகிறது. இன்னொரு முஸ்லிமை நாடே தூற்றுகிறது. இதற்கு மேலும் நான் ஒரு டெம்ப்ளேட் செக்குலர் பதிவை எழுதுவதாக இல்லை. ஏனென்றால் அதை எழுதி என்னவாகப் போகிறது. அது இந்துக்களுக்கு எதிரானது, இந்தியாவுக்கு எதிரானது, தேசபக்திக்கு எதிரானது என்றெல்லாம் தோன்றும். கலாம் ஆதரவாளர்களை விமர்சித்து ஒரு கவிதையும் எழுதினேன். அதை வெளியிடாமல் சேமித்து வைத்து விட்டேன். அதைப் படித்தால் புரிந்து கொள்வதற்குப் பதில் புண்பட்டுக் கொள்வார்கள். என் மீதும் வெறுப்பே மிஞ்சும். எனவே அதை விட்டு வேறொரு பதிவை எழுத வேண்டிய நிலை.

யாகூப் மேமன்
அஜ்மல் கஸாப்
அஃப்சல் குரு

இப்பெயர்களைக் கேட்டவுடன் அனைவருக்கு ஏற்படும் உணர்ச்சிகள் என்ன ?

தீவிரவாதி. பயங்கரவாதி. தேசவிரோதிகள். பலர் கொல்லப்படக் காரணமாக இருந்தவர்கள். இன்னும் இத்யாதி உணர்ச்சிகள். கூடவே முஸ்லிம் என்பது வரும் என்று சொல்லத் தேவையில்லை. 

லஷ்கர்-இ-தொய்பா
இந்தியன் முஜாஹிதீன்
ஜிஹாதி

இப்போது என்ன நினைவுக்கு வந்தது. சரி அந்த உணர்ச்சியைக் கணக்கிட்டுக் கொள்ளுங்கள்

பாபு பஜ்ரங்கி
அஸீமானந்தா
மாயா கோட்னானி

இப்போது என்ன உணர்ச்சி வந்திருக்கும். யாரு இவங்கெல்லாம் என்றா ? சரி. 

ஆர்எஸ்எஸ்
பஜ்ரங் தள்
சிவசேனா

இப்போது என்ன நினைவுக்கு வருகிறது. என்னது மறந்து போச்சா ? சரி. இதற்கு மேல் நான் என்ன சொல்வது. இவர்கள் இரண்டு தரப்பு தனிநபர்களையும், இயக்கங்களையும் சமமாக யாரும் வெறுக்க மாட்டார்கள் என்று உறுதியாக நம்புகிறேன். அதுதான் பிரச்சனையே. 

படம் - நன்றி ஃபேஸ்புக்

தேசபக்திக்கு இன்னொரு காரணமாக, யாகூப் மேமனின் தூக்கு தண்டனையும் வலு சேர்த்திருக்கிறது. ஒரு குற்றவாளியைத் தண்டிப்பது, தூக்கில் போடுவது, அல்லது சுட்டுக் கொல்வது இவற்றை வெறித்தனமாக ஆதரிப்பது தேசபக்தியாகிவிடுகிறது. இதில் என்ன கூத்து என்றால் தூக்கிலிடப்பட்டவர்கள் தீவிரவாதிகள் - இவர்களால் சில நூறு பேர்கள் கொடூரமாக இறந்தார்கள் (என்று சொல்கிறார்கள்). ஆனால் இவர்கள் தூக்கிலிடப்படும் போது இருக்கும் ஆட்சியாளர்கள் இவர்களை விடப் பன்மடங்கு கொடியவர்களாக, அதிக உயிர்களைப் பலியெடுத்த இனப்படுகொலையாளர்களாகவும் இருக்கின்றனர். ஆட்சியாளர்களாக இல்லாமல் வெறும் கட்சிகளையும் இயக்கங்களையும் நடத்தும் தலைவர்களும் சிறைக்குச் செல்லாமல் தங்களின் வன்முறை அரசியலைத் தொடர்ந்து கொண்டும் இருக்கின்றனர். 

இந்த இனப்படுகொலைத் தலைவர்கள் தூக்கிலிடப்பட்டாலோ, அல்லது ஆயுள் தண்டனை கிடைத்தாலோ இப்போது வெறி கொண்டு ஆதரிப்பவர்கள் அப்போதும் ஆனந்தக் கூத்தாடுவார்களா ? இல்லை எந்த சலனமும் இல்லாமல் ஒதுங்கிக் கொள்வார்கள். எனென்றால் அவர்களுக்கு இருப்பது அறவுணர்ச்சியே அன்று. அது வெறும் மதவெறியால் விளைந்த வெறுப்பே ஆகும். அந்த இனப்படுகொலைத் தலைவர்கள் நெஞ்சு வலி வந்தோ வயித்து வலி வந்தோ இயற்கையாகத்தான் செத்துப் போவார்கள். மகிந்தவைப் போல கோயிலுக்குச் செல்லலாம், சாமி கும்பிடலாம். அதிபரும் ஆகலாம், பிரதமரும் ஆகலாம். கைது கூட ஆகத் தேவையில்லை. நான் எப்போதும் இந்தப் போலிக் கொண்டாட்டத்தில் இணைந்து கொள்வதே இல்லை. தனித்தீவாக நின்று விடுவதுதான் பாவியாகாமல்  இருக்க ஒரே வழி. சில நேரம் போலி எழவுகளுக்கும் போகாமல் இருப்பதே சிறந்தது போலும். 



Download As PDF
Bookmark and Share

Post Comment

ஜனநாயகத்தின் இரண்டகம்

அராஜகம் நடந்திருக்கிறது. காலையில் ரகசியமாக தூக்கிலடப்பட்டு பின்பு அறிவிக்கப்பட்டிருக்கிறது. காஷ்மீரிகள் மீதான அடுத்த உளவியல் தாக்குதல் இது.

அஜ்மல் கஸாப் தூக்கில் இடப்பட்டது போலவே அஃப்ச
ல்குருவும் ஒரு அதிகாலையில் தூக்கிலிடப்பட்டிருக்கிறார். கொலைகார பயங்கரவாதி அஜ்மல் கஸாப்பிற்கு அளிக்கப்பட்ட தண்டனைக்கு நாம் எதிர்ப்பு சொல்ல முடியாது. தூக்கு தண்டனை எதிர்ப்பு என்ற நிலையிலிருந்து வெறும் கோரிக்கை, அல்லது கண்டனம் மட்டுமே சொல்ல முடிந்தது. ஆனால் குற்றமே நிரூபிக்கப்படாத அல்லது போலி வழக்குகளால் சூழப்பட்ட ஊடக வெள்ளத்தில் பயங்கரவாதியாக்கப்பட்டு, தூக்கு தண்டனைக்குத் தகுதியானவர் என்ற கருத்து வலுவாக்கப்பட்டு, இப்போது அவசர அவசரமாகத் தூக்கிலிடப்பட்டிருக்கிறார்.

இவரும் ராஜீவ் கொலை வழக்கில் தொடர்புடையவர்கள் போலத்தான். நேரடியாக குற்றம் செய்யவில்லை. குற்றம் செய்தவர்கள் அங்கேயே கொல்லப்பட்டார்கள். அவர்களுடன் தொடர்புடையவர்கள்.

இதற்கு தேசத்தின் மனசாட்சியைத் திருப்திப் படுத்துவதற்காக என்று சொல்லியிருக்கிறார்கள். இந்த தேசத்தின் மனசாட்சி என்பது நாடாளுமன்றக் கட்டிடத்தின் மீது பயங்கரவாதத் தாக்குதல், 9 பேர் கொலை, இந்தியாவுக்கு அவமானம் எனவே இவனைத் தூக்கிலிட வேண்டும் என்பதாகத்தான் இருக்கிறது. அவன் குற்றவாளியா என்று ஆராயக் கூடத் தேவையில்லை. வெறும் அனுமானம் மட்டுமே போதுமாக இருக்கிறது. அதே நியாயம்தான் ராஜீவ் கொலைவழக்கில் தண்டனை பெற்றவர்களுக்கும். இன்று வரையிலும் அவர்களை ராஜீவ் கொலையாளிகள் என்றே எல்லா நாளிதழ்களும், தொலைக்காட்சி செய்திகளும் சொல்லி வருகின்றன.

இந்திய ஜனநாயக்த்தின் கோயிலின் மீது தாக்குதல் நடத்திய பயங்கரவாதி என்று மிகையுணர்ச்சி ஊட்டும் தலைப்புக்கள் இவன்தான் குண்டை வீசியவன் என்றே நம்ப வைக்கப் போதுமானவை.

இந்த தேசத்தின் மனசாட்சி, தேசபக்தி என்பதே இவர்கள் கட்டமைக்கு போலியான ஒன்றுதான். இதைக் கட்டமைப்பவர்கள்தான் தேசபக்திக்கும், தேசத்தின் மனசாட்சிக்கும் எதிரானவர்களாக இருக்கிறார்கள். இதையெல்லாம் ஒரு காரணமாக ஏற்க முடியாது.

மோடியின் குற்றத்தை மறைக்க குஜராத் வளர்கிறது, திறமையான முதல்வர் என்ற போலி பிம்பம் கட்டப்படுவதைப் போலவே அஃப்சல் போன்றவர்கள் மீதான பயங்கரவாத முத்திரையும் தொடர்ந்து குத்தப்படுகிறது. தண்டனைகள் நியாயப்படுத்தப்படுகின்றன.

இவர்களையெல்லாம் தூக்கில் போடாமல் வைத்திருப்பது இந்திய அரசின் கையாலாகாத்தனம் என்றும் சட்டம் இன்னும் கடுமையாக வேண்டுமென்றும் இருக்கும் கொஞ்சநஞ்ச ஜனநாயகத்தையும் தூக்கிலிட்டுவிடத் துடிக்கிறார்கள்.

அஜ்மல் கஸாப் தூக்கிலிடப்பட்ட போது, அப்சல் குருவுக்கு எப்போது தூக்கு என்று கேட்டவர் வாழும் புத்தரான மோடி அவர்கள். பால்தாக்கரே சிறைக்குக் கூடச் செல்லாமல் இயற்கையாக செத்துப் போனார். அது போல அத்வானியும் சாவார். மோடி பிரதமர் ஆகிவிடுவார். அப்சல் குரு போன்றவர்கள் தூக்கில் தொங்கி செத்த மனசாட்சிகளைத் திருப்திப் படுத்துகிறார்கள். இந்தியாவின் ஜனநாயகம் என்பது சிலருக்கு மட்டுமே அனுபவிக்கக் கூடியதாக இருக்கிறது. நம்மைப் போன்ற மாநிலங்களில் இருக்கும் ஜனநாயகம், வட கிழக்கில் இல்லை. அங்கே ராணுவ ஆட்சியே நடைபெறுவதாக அறிகிறோம். அது போன்ற சூழலில் ஒரு குண்டு வெடிப்பை நடத்தியோ அல்லது குண்டு வெடிப்பு நடந்தாலோ பயங்கரவாதிகள் கைது செய்யப்படுவது குற்றம் சாட்டப்பட்டு நிரூபிக்காமலே சிறையில் வாடுவது, அல்லது தூக்கில் தொங்குவது வரை நடக்கிறது. காஷ்மீர் தொடங்கி தமிழகம் வரை முஸ்லிம்களின் நிலை இதுதான். இலங்கையில் தமிழனின் நிலை போல.

தூக்கு தண்டனை நியாயமானதாக இருந்தால்

அத்வானி, மோடி, தாக்கரே இவர்களையெல்லாம் சட்டம் நெருங்கவே முடிவதில்லை. இன்னும் கொஞ்ச நாள் போனால் இவர்களெல்லாம் என்ன செய்தார்கள் என்று கேட்பார்கள். பால் தாக்கரே சாவை ஒரு போராளியின் சாவைப் போலவே செய்திகள் வெளியிட்டன. அதே போல் மோடியின் வெற்றியையும் ஒரு வித கொண்டாட்டத்துடனே தலைப்புச் செய்தியாக்கி வெளியிட்டன. இது போன்ற கொலைகாரர்கள் எல்லாம் பிரதமராகவும், தலைவர்களாகவும் நீடிக்க முடிகிறது, மற்றொரு பக்கம் முஸ்லிம்கள் மீதான வன்முறைகள், கலவரங்கள், என்கவுண்டர்கள், தூக்குதண்டனைகள், சிறைத்தண்டனைகள், கைதுகள், பிணை மறுப்புக்கள், அடையாள அரசியல் என்று சீரழிக்கின்றன.

ஒரு புறம் தூக்கு தண்டனைக்குத் தகுதியானவர்கள் பிரதமராகத் தகுதியானவர்களாகிறார்கள். இன்னொரு புறம் சராசரிக் குடிமகனாக வாழ்ந்தவர்கள் சிறையாளிகளாகவும், நிரூபிக்கப்படாத குற்றத்தைச் செய்தவர்கள் தூக்கிலும் தொங்குகிறார்கள். இதுதான் குடிநாயகத்தின் இரண்டகம்.

தேசபக்தி என்பது பயங்கரவாதி என்று முத்திரை குத்தப்பட்ட ஒருவனை தூக்கில் போட வேண்டும் என்று துடிப்பது மட்டும்தானா ? அதிலும் அவனொரு முஸ்லிமாக இருந்து விட்டால் ? இன்னும் தேசபக்தி அதிகமாகி விடுகிறது.

கோவையில் இரண்டு வருடங்களுக்கு முன்பு இரு குழந்தைகளை வன்கலவிக்கு உள்ளாக்கிய இருவரை காவல்துறை மோதல் கொலைகள் மூலம் படுகொலை செய்தது. சட்டத்திற்கு புறம்பான காவல்துறையின் இக்கொலைக்கு பொதுமக்கள் ஆதரவு பெருமளவில் இருந்தது. சட்டத்திற்குள்ளானது என்று இல்லாத போதும், அதில் கொல்லப்பட்டவர்கள் மிகவும் கொடிய குற்றவாளிகள் என்ற நியாயம் இருந்தது.

அதே போல் சென்னையில் 5 வட இந்திய இளைஞர்கள் திருட்டுக் குற்றச்சாட்டின் பேரிலும், காவல்துறையினரால் போலி என்கவுண்டர் செய்யப்பட்டுக் கொலை செய்யப்பட்டனர். பொது மக்களிடம் அதற்கும் குறிப்பிடத் தக்க ஆதரவு இருந்தது.

கூடங்குளத்தில் கூட சுட்டுத் தள்ள வேண்டும் அந்த தேசதுரோகிகளை என்று கருத்துச் சொன்னவர்கள் இருக்கிறார்கள்.

அது போலவே இதையும் பார்க்கிறேன். முதலில் ஒரு பயங்கரவாதியை தூக்கில் ஏற்றி விட்டு பின்பு, போலியாகக் குற்றம் சாட்டப்பட்ட ஒருவனையும் தூக்கில் ஏற்றும் போது அவனுக்கான நியாயமும் செத்து விடுகிறது.

காங்கிரஸை எதிர்த்து அரசியல் செய்வதற்கு ஒன்றுமில்லை என்ற நிலையை பாஜகவுக்கு ஏற்படுத்தியிருக்கிறது இந்தத் தூக்கு. இனி காங்கிரஸின் கையாலாகாத்தனம் என்று எந்த பாஜக தலைவனும் விமர்சிக்க முடியாது என்பதற்காக குருவைத் தூக்கிலிட்டிருக்கிறார்கள்.

சதாமுக்கு தூக்கு சரி - புஷ் - க்கு என்ன தண்டனை

பின் லேடன், கடாஃபி, பிரபாகரன் படுகொலை சரி - ஒபாமாவுக்கும், மஹிந்தவுக்கும், சர்கோஸிக்கும் என்ன தண்டனை

இதுதான் உலக ஜனநாயகமாக இருக்கிறது. கசாப், அப்சல் குருவுக்கு தூக்கு - மோடி, அத்வான் இவர்களுக்கெல்லாம் என்ன தண்டனை. இவர்கள் நெஞ்சு வலி வந்தோ, சிறுநீரகம் பழுதாகியோ சாவதுதான் ஜனநாயம் இவர்களுக்கு வழங்கும் தண்டனை.

ஈழத்து அகதிகளை முகாம்களுக்குள் அடைத்து வைத்து விட்டு, மஹிந்தவை திருப்பதிக்குள் விடுவதுதான் ஜனநாயகம். கோத்ரா வுக்கு தூக்கு பெஸ்ட் பேக்கரிக்கு ஆயுள் என்பதும் ஜனநாயகம்.

தேசபக்தி என்பது அயோக்கியர்களின் கடைசிப் புகலிடம் என்ற பொன்மொழிதான் நினைவுக்கு வருகிறது.

டெல்லி பாலியல் வன்முறைக்கு பிறகு வன்கலவி கொலையில் ஈடுபடும் நபர்களுக்கு அவர் யாராக இருப்பினும் அரசியல் தலைவர், ராணுவ வீரர், அதிகாரி, காவலர் என மரண தண்டனை அல்லாமல் / கடுமையான தண்டனைகள் வழங்கும் படிக்கு வர்மா ஆணையம் கேட்டுக் கொண்டது. ஆனால் அரசோ பெண்களுக்கு சாதகமான கருத்துக்களை ஒதுக்கி விட்டு, வெறும் மரண தண்டனை என்று ஆரவாரமான தண்டனைக்கு மட்டும் அனுமதித்துள்ளது. இங்கு மரண தண்டனை கூடாது வேண்டும் என்ற விவாதத்திற்கு சொல்லவில்லை. பாலியல் வன்முறையில் ஈடுபடும் இராணுவ, காவல்துறை, அரசு அதிகாரிகள் மீதான சலுகைகள அந்த சட்டம் பரிசீலிக்க வில்லை என்பது முக்கியமானது.

இதன்மூலம் வன்புணர்ச்சி போன்ற குற்றங்களுக்காக தெருப்பொறுக்கிகள் மட்டுமே தூக்கிலிடப்படுவார்கள். பாலியல் வன்முறையை ஒரு ஆயுதமாகவே பயன்படுத்தும் ராணுவத்தினர், அரசியல்வாதிகள், காவல்துறை உயர் அதிகாரிகள் போன்றவர்களுக்கு இது போன்ற தண்டனைகள் செல்லாது என்ற நிலை நீடிக்கிறது.

அதே போல்தான் இந்த பயங்கரவாத எதிர்ப்பில் பயங்கரவாதிகளை, அல்லது அப்படி சொல்லப்படுகிறவர்களைத் தூக்கில் போடுவதை முன்னிலைப்படுத்தும் அரசு, கூட்டம் கூட்டமாகக் கொலை செய்வது கலவரம் செய்வது போன்ற குற்றங்களுக்கு தூக்கு தண்டனை வழங்கக் காணோம். குஜராத் படுகொலைகளைப் பற்றி காங்கிரஸ் பேசினால் பாஜக வினர் சீக்கியர் படுகொலை பற்றிப் பேசி ஆப்படிப்பார்கள். தான் முதலில் யோக்கியனாக இருந்தாலல்லவா குற்றங்களை நேர்மையாகப் பரிசீலிப்பதற்கு ?

Download As PDF
Bookmark and Share

Post Comment