இந்துத்துவம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இந்துத்துவம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வணிக நிறுவனங்களுக்குப் பெயர் சூட்டுவதில் முஸ்லிம்களின் மதச்சார்பின்மை

முகமதியர்களின் மதச்சார்பின்மை பற்றிய இந்துத்துவவாதிகளின் ஒப்புதல் கருத்துக்கள்.

முஸ்லிம்கள் மதச்சார்பற்றவர்கள், அடுத்தவர் பண்பாட்டை மதிக்க மாட்டார்கள் என்று குற்றம் சொல்வோரின் வாயிலிருந்தே முஸ்லிம்களின் மதச்சார்பின்மையும், அவர்கள் இஸ்லாம் மதத்திற்கு நேர் எதிரான கொள்கைகளின் படியும் பெயர் வைத்தும் வாழ்கின்றனர் என்று தெரிய வந்தது. 

இந்துக்கள் செறிவாக இருக்கும் பகுதியில் கடை வைக்கும் முஸ்லிம்கள், தங்களது பெயரையோ முஸ்லிம் மதம் சார்ந்த அரபுப் பெயர்களையோ வைப்பதில்லை. மாறாக பொதுவான பெயர்களையே வைக்கிறார்கள். காவிகளுக்குப் பிடிக்காத தமிழில் கூட வைக்காமல் ஆங்கிலத்தில் வைக்கிறார்கள். இதன் மூலம் இந்துக்களின் மனம் புண்படாமல் தான் முஸ்லிம் கடைகளில் வாங்குகிறோம் என்ற குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்காமல் இருக்கிறார்கள்.

மதச்சார்பற்ற ஆங்கிலப் பொதுச் சொற்களில் பெயர் வைக்கிறார்கள்.
எ. கா :
நியூ சிட்டி லெதர், ராயல் ட்ரேடர்ஸ், சூப்பர் மெடிக்கல்ஸ், ரிலீப் மெடிக்கல்ஸ், ஸ்டார் தியேட்டர், சூப்பர் வாக், நியூ மைனா ஹோட்டல், ஆரஞ்சு டிபார்ட்மெண்ட் ஸ்டோர், ஸ்டார் ஜெனரல் ஸ்டோர்

தூய தமிழிலும் வைக்கிறார்கள்
எடுத்துக்காட்டு - சங்கம், சீமாட்டி சில்க்ஸ், பாரி மளிகை, வசந்தம் டிபார்ட்மென்டல் ஸ்டோர், நலம் மெடிக்கல்ஸ், காவேரி மெடிக்கல்ஸ், ஹோட்டல் செல்லப்பா

செங்கிருதத்திலும் இந்தியிலும் வைக்கிறார்கள்.
எடுத்துக்காட்டு -  மகாராஜா டெக்ஸ்டைல்ஸ், சர்க்கார் மளிகை, ராஜ்கமல் பட்டாசு கடை, மஜா மஜா உணவகம் (ஜம் ஜம் தண்ணீர் ஐத்தான் மஜா மஜா என்று திருப்பி எழுதியிருப்பார்கள் என்று ஒரு தேசபக்தருக்காவது தோன்றும்), பவித்ரா ஹோட்டல்

இந்தியா, தமிழ்நாடு,  ஆகிய பெயர்களையும் சேர்த்து வைக்கிறார்கள்.
எடுத்துக்காட்டு - தமிழ்நாடு துணிக்கடை, இந்தியன், ஜெய்ஹிந்த் சீமாட்டி புட்வேர், நேஷனல் ஸ்டோர், இந்தியா ஸ்டோர், இந்தியன் பேக்கரி 

ஊர்ப்பெயர்களிலும் வைக்கிறார்கள். 
கொடைக்கானல் ஹோட்டல்

முஸ்லிம் பெரும்பான்மை இல்லாத வேறு நாட்டுப் பெயர்களையும் வைக்கிறார்கள்.
லண்டன் ஹார்டுவேர், சிங்கப்பூர் ஹார்டுவேர், பர்மா ஹார்டுவேர்

அதற்கும் மேலாக இந்துப் புராணத்தில் வரும் பெயர்கள், இந்துக் கடவுள்களின் பெயர்களையும் தமது வணிக நிறுவனங்களுக்கு வைக்கிறார்கள். 
எடுத்துக்காட்டு - கிஷ்கிந்தா ட்ரெஸ்ஸஸ், லட்சுமி ஸ்டோர்ஸ், கணபதி ஸ்டோர்ஸ்

இன்னும் சில  
பாவா மெடிக்கல்ஸ், ரெங்கா டிபார்ட்மென்டல் ஸ்டோர்,  ரோஜா டிபார்ட்மெண்ட் ஸ்டோர், ராயல்

இதெல்லாம் போதாதென்று தங்களது பெயர் கண்டு சிறுமை கொள்ளும் பெரும்பான்மையினரை மதித்து சுமையா பானு, சபியா பானு, கதிஜா பானு என்ற பெயர்களில் வைக்காமல் முஸ்லிம் என்று உறைக்காத பானு ட்ரென்ட்ஸ் என்று வைக்கிறார்கள்.

முகமது அமித்சா என்று முழுப்பெயர் இடாமல் M.A. ட்ரேடர்ஸ் என்றும், வானதி பீவி மகளிர் தையலகம் என்பதற்குப் பதிலாக V.B. தையலகம் என்றும் பெரும்பான்மை உணர்வுக்கு மதிப்பளித்து பெயர் வைக்கிறார்கள். 

எல்லாவற்றுக்கும் மேலாக இந்துக்களின் பூஜைகளுக்குப் பயன்படும் விளக்குகள், திரி, எண்ணெய்கள், இன்ன பிற பொருட்களையும் விற்கிறார்கள். தீபாவளிப் பட்டாசுகளையும் விற்கிறார்கள். 

என்ன செய்வது பாய் கடை பிரியாணி மாதிரி வருமா என்று எல்லா இந்துக்களும் பிரியாணிக்கு அடிமையாகி விட்டதால் அதை மட்டும் ஐய்யங்கார் பிரியாணிக் கடை என்று போடுவதற்கு முஸ்லிம்கள் விரும்புவதில்லை.

திரையடிகளின் ஆதாரம் இந்த இணைப்பில் உள்ள இடுகையில் வந்த கருத்துக்கள் 












அன்பு இருக்கையில் வெறுப்பைத் தேர்ந்தெடுத்த இந்துத்துவா அன்பர்கள் இதை 1600 தடவை பகிர்ந்துள்ளார்கள். இதை எப்படித் தடுக்க முடியும் ?


Download As PDF
Bookmark and Share

Post Comment

இஸ்லாமோஃபோபியா வேறு இஸ்லாமிய மதவாத எதிர்ப்பு வேறு

இஸ்லாமோபோபியாவை எதிர்ப்பது வேறு. இஸ்லாமிய மதத்தை விமர்சிப்பதை எதிர்ப்பது வேறு. அதைக் காரணம் காட்டி இதை ஆதரிக்க முடியாது.

                                         

பகுத்தறிவுவாதிகள் என்பவர்கள் இஸ்லாமிய மதவாதத்தை விமர்சிக்காததால்தான் இப்பிரச்சனை வருகிறது. விமர்சிக்காவிட்டாலும் தாழ்வில்லை ஆனால் மதவாதத்தை ஆதரிப்பதுதான் எரிச்சலை ஏற்படுத்துகிறது.

ஒரு இந்துத்துவர் என்பதாலே அவர் சொல்வதெல்லாம் தவறானது ஆகாது. சில நியாயமான விசயங்களை வைத்துத்தான் அவர்கள் தனது தவறுகளையும் நியாயப்படுத்த முடிகிறது.

இந்த பாடகர் சோனு நிகம் காவியா ?

காவியாக இருந்தாலும் ஒரு தவறுக்கு இன்னொரு தவறு சரியாகாது.

இவர் ட்விட்டரில் கேட்ட இரு கேள்விகள் என்ன ?

பள்ளிவாசல் ஒலிப்பெருக்கிகளைக் குறிக்கும்விதமாக,

"முகமது காலத்தில் மின்சாரம் இல்லை. எடிசனுக்குப் பின்னர் ஏன் இந்த இரைச்சல் ? "

"நான் முஸ்லிம் இல்லை. நான் ஏன் பாங்கு ஒலித்து காலையில் எழ வேண்டும். இந்தியாவில் எப்போது இந்த மதத்தன்மை திணிக்கப்படுவது ஒழியும் ?"

இக்கேள்விகளில்என்ன தவறு இருக்கிறது. இரண்டுமே நியாயமான கேள்விகளே. இதற்கு நியாயமான பதில்கள் இருக்கலாம்.

ஆனால் இந்த இரு கேள்விகளை ஒரு பெரிய இஸ்லாமோபோபியா ஆதாரமாக திரையடி (screenshot) களை எடுத்துக் கொண்டு திரிவது நீ எப்படி எங்களைப் பற்றிப் பேசலாம் என்ற இஸ்லாமிய மதவெறி.

இதை எப்படி பகுத்தறிவுவாதிகளோ, மத எதிர்ப்பாளர்களோ ஆதரிக்கிறார்கள். ? மிகவும் தவறு.

நாம் இஸ்லாமோஃபோபியாவைத்தான் எதிர்க்க வேண்டுமே தவிர முஸ்லிம் மதத்தை, முஸ்லிம்களை மத நம்பிக்கைகளை ஒருவர் விமர்சிப்பதை எப்படி எதிர்க்க முடியும் ? இதையெல்லாம் எதிர்த்தால் அவர் இஸ்லாமோபோபியாதான் சரி என்று முடிவெடுப்பார்.

முஸ்லிம்கள் மீது வெறுப்பைத் தூண்டுவதைத்தான் கண்டிக்க வேண்டுமே தவிர முஸ்லிம் மதத்தைப் பற்றிப் பேசியதால் ஒருவர் தனது ட்விட்டரை முடக்கினால் அது அவருக்கு சிறுமையாகாது, மாறாக மதத்தைப் பற்றிப் பேசுவதற்கு தண்டனை கொடுக்கும் முஸ்லிம் மதவாதத்துக்குத்தான் இழுக்கு.

இஸ்லாமோஃபோபியா உருவாவது முஸ்லிம்களின் மதத்தைப் பற்றிப்பிறர் பேச முடியாது பேசுவதும் இல்லை என்ற காரணத்தை முக்கியமாகக் காட்டித்தான். முஸ்லிம் மதநாடுகள் தங்கள் நாடுகளில் முஸ்லிம்கள் மதம் மாறுவதை கடும் தண்டனைக்குரிய குற்றமாக்கி சட்டங்கள் வைத்துக் கொண்டு மதத் தேர்வு சுதந்திரமுள்ள மற்ற நாடுகளில் இஸ்லாமைப் பரப்ப பணத்தை வாரியிறைக்கின்றனர்.

முகமது நபியைப் பற்றிப் பேசுவதோ, முஸ்லிம் மதத்தைப் பற்றிப் பேசுவதையோ முஸ்லிம் நாடுகளில் சாத்தியமில்லை. ஆனால் ஜனநாயக நாடுகளில் முஸ்லிம்கள் மதப்பரப்புரை நிகழ்த்தும் சுதந்திரம் உண்டு.

அதுவும் எப்படி ?

நீங்கள் வணங்குவது கடவுள் (சிலைகள் - முஸ்லிம்கள் தவிர மற்ற மதத்தவர் யாவரும் சிலைகளை வணங்குகிறவர்களே) இல்லை, நாங்கள் சொல்வதுதான் கடவுள் என்று மற்ற நாடுகளின் பெரும்பான்மை நம்பிக்கையைப் புண்படுத்தித்தான் மதத்தையே பரப்ப முடியும் என்பதுதான் வாடிக்கை.

அப்படியிருக்க முஸ்லிம் மதவாதம்தான் கடுமையான கேள்விகளுக்குள்ளாக்கப்பட வேண்டியது.

எப்படி இந்துமத நம்பிக்கையுடன் இருந்து கொண்டே பாஜகவை எதிர்க்கும் இந்துக்களைப் போல, முஸ்லிம் மத நம்பிக்கைகளை ஏற்றுக் கொண்டே முஸ்லிம் மதவாதத்தை எதிர்க்கும் முஸ்லிம்கள் உண்டு தானே ? ஒரு பகுத்தறிவுவாதியோ ஜனநாயகத்துக்காகப் போராடுகிறவரோ யாராக இருந்தாலும் இஸ்லாமோபோபியாவை எதிர்ப்பது போல இஸ்லாமிய மதவாதத்தையும் எதிர்க்க வேண்டும்.

Download As PDF
Bookmark and Share

Post Comment

ஆகாவென்றெழுந்தது பார் மார்கழிப் புரட்சி !

வைரமுத்து விளக்கம்.
       
       

கண்ணதாசன் மாதங்களில் அவள் மார்கழி என்று பாட்டெழுதினால் அது பகவத் கீதைய ஆன்மிகத்தை பரப்புவதாகப் பேருவகை அடையவேண்டும். அதே வைரமுத்து அற்றைத் திங்கள் அந்நிலவில் எழுதினால் அதை சங்க இலக்கியத்திலிருந்து திருடிச் சம்பாதித்தான் என்றும் சொல்ல வேண்டும் இல்லையென்றால் நீங்கள் மார்கழிப் புரட்சித் துரோகியாவீர்கள். வைரமுத்து திருடி எழுதியதைக் கண்டு பிடிக்க முடிந்த ஆண்டாள் பக்தர்களால், வேறொருவரின் ஆண்டாள் குறித்த கருத்தை எச்சரிக்கையோடும் பெருமைப்படுத்தும் விதமாகவும் மேற்கோள் காட்டிய வைரமுத்துவை, ஆண்டாளை வைரமுத்துவே வேசி என்று சொன்னதாகவும் நீங்கள் நம்ப வேண்டும். இல்லையென்றால் நீங்கள் இந்துவாக இருக்கத் தகுதியில்லாதவர்.

இந்துச் சாமியார்கள் வெள்ளைகாரிகளை மடக்கிப் போட்டு யோகாவும், ஆன்மிகமும் கலந்து அடித்தால், இந்துக்கலாச்சாரம் மேலை நாட்டில் பரவுகிறது என்று சொல்ல வேண்டும். அதே நேரம் இங்கே நடக்கும் கிறித்தமதமாற்றத்தை கிறித்தவ சதி என்றும் சொல்ல வேண்டும். ஆகவே நீங்கள் இந்தப் புரட்சியில் நடுநிலை வகிக்கமுடியாது. உங்களால் இந்து மதத்தைக் காப்பாற்றவே முடியாது.

கிறித்தவர்களை வைத்து தமிழை, ஆண்டாளைப் புகழும் வைரமுத்துவை தமிழில் தரக்குறைவான கொச்சையான மொழியில் திட்டுவதை இந்துக்களின் எதிர்வினை என்று ஏற்க வேண்டும். ஆண்டாள் பெருமாளைக் காதலானகப் பாவித்துப் பாடுவது பெண்ணியப் புரட்சி என்று சொல்ல வேண்டும். அதே வேளை வைரமுத்து திரைப்படக் குத்துப் பாடல்களை ஆபாசம் என்றும் வகை பிரிக்க வேண்டும்.

இதைப் புரட்சியாக அங்கீகரிக்கக் காரணமும் நியாயமும் உண்டு. பொதுவாக திராவிடக் கழக்த்தவர், திராவிட முன்னேற்றக் கழகத்தவர்தான்,  நாத்திகர்கள்தான் இழிவாகப் பேசுவார்கள், ஆபாசமாகப் பேசுவார்கள் என்று காலங்காலமாக இருந்த கருத்தை உடைத்த ஆத்திகர்களுக்கு, பக்தர்களுக்கு, குறிப்பாக ஆன்மிகவாதிகளுக்கு புரட்சிகர வாழ்த்துகளை இணையப் போராளிகள் வாயிலாகத் தெரிவித்துக் கொள்கிறோம்.

கடந்த வருடம் நடந்த மஞ்சுவிரட்டுக்கு ஆதரவான போராட்டத்தைப் போலவே பிரபலமாகும் என்று எண்ணி எச். ராசா தொடங்கி வைத்த இந்த மார்கழிப் புரட்சியில் எதிர்பாரா விதமாக நித்யானந்தரின் பக்தர்கள் இடையே வந்து தன்னிச்சையாக இணைந்து புரட்சிக்குத் தோள் கொடுத்து போராளிகளான ஆண்டாள் பக்தர்களையே ஓரங்கட்டி இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளனர். கடந்த ஆண்டு நடந்த மஞ்சுவிரட்டு ஆதரவான போராட்டத்தில் இறுதியில் போராட்டக்காரர்கள் கெட்ட வார்த்தை பேசினார்கள் என்று முக்கியமான குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. அதே போல் இங்கும் கெட்டவார்த்தை பேசப்படுகிறது. தேவதாசி என்று வைரமுத்து சொன்னார் என்பதை இந்தக் கூட்டம் வேசி என்று சொல்லிவிட்டார் என்று எத்தனை முறை சொல்லி இன்பமடைகிறார்கள். உண்மையில் ஆண்டாள் மேல் என்ன ஆத்திரம் இவர்களுக்கு.

  ஆனால் இங்கே வைரமுத்துவை ஆபாசமாகத் திட்டியதிலிருந்து புரட்சி வேகம் கண்டுள்ளது. தமிழுக்காகப் போராடுகிறோம் என்று மார்தட்டப்படுகிறது, கலாச்சாரம் என்று என்னென்னவோ சொல்லி முட்டுக் கொடுக்கிறார்கள். எச்.ராசா இரண்டாவது முறையாகத் தீக்குளிப்பேன் என்று சொல்லியிருக்கிறார். ஜீயர் இரண்டாவது முறையாக சாகும்வரை பட்டினிப் போராட்டத்தை அறிவிக்கிறார். ஒருவர் இரண்டு முறை சாகும் வரை பட்டினிப் போராட்டம் நடத்துவது உலகில் இது வரை நடக்காதது.

ஆண்டாள் பக்தர்களின் திருவாய் மொழியினைக் கேளச் சகியாத ஆண்டாள் காதைப் பொத்திண்டா பாருங்கோ !

ஆண்டாள் இன்று இருந்திருந்தால் அல்லது ஆண்டாளின் ஆன்மா இருந்து இன்று நடக்கும் கூத்துக்களையெல்லாம் பார்த்தால் பெருமாளே பெருமாளே இவாகிட்ட இருந்து என்னக் காப்பாந்துங்கோ பெருமாளே என்று ஆண்டாளே புதிய பாசுரங்களைப் பாடியிருப்பார். ஆண்டாள் பக்தர்களின் நாறவாய் மொழிகளை முடிந்தால் காது பொத்தாமல் கேளுங்கள். நித்யானந்தம் !!

         

இன்னொரு முக்கியமான காணொலியைத் தேடினேன் யூட்யூபில் கிடைக்கவில்லை. அதனுடைய இரண்டாம் பாகமே கிடைத்தது. இந்தப் பெண் பேசியவைதான் அனைவரையும் போய் சேர்ந்துள்ளது. இதில் பேசுகிறவர்கள் யாருமே தானாகப் பேசியது போல் தெரியவில்லை. மிகவும் சிரமப்பட்டு நடித்தது அப்பட்டமாகத் தெரிகிறது. இவர்கள் பேசும்போது பார்த்தால் இவர்களுக்கே சிரிப்பை அடக்க முடியாமல் தவிக்கிறார்கள். முடிந்தால் பார்ப்பவர்களும் சிரியுங்கள். வழிபாடு என்பதையே வழிப்பாடு என்கிறார். பொழுது போகலையாம், பூஜை எல்லாம் முடிச்சுட்டு ஒரு ஸ்பெஷலாக் குடுக்கலாம்னு...

          

இங்கே பாருங்கள்  மேலைநாட்டவர்கள் நம் பெருமைகளைப் பேசுவதை. நித்யானந்தர் ஆன்மிகம் மட்டுமல்லாமல் நமது தமிழையும் மேலைநாட்டு வெள்ளையர்கள் வாயிலாகப் பேச வைத்து தமிழை உலக அளவில் பெருமைப்படுத்தியிருக்கிறார். இதையே நம் தமிழர்கள் செய்தால் பல்லாயிரம் லைக்ஸ் ஃபேஸ்புக்கில் வரும் வெளிநாட்டுக்காரர் செய்ததால் இதற்கு எத்தனை லைக்ஸ் வரும் ஃப்ரண்ஸ் ! விக்டர் ஜேம்ஸ் என்று வைரமுத்துவுக்கு ஞான்ஸ்நானம் செய்து வைத்த மார்கழிப் போராளிகள் இந்தக் கிறித்தவர்களை ஒரே அடியில் தமிழர்களாகவும் இந்துவாகவும் மாற்றி வைத்த நம்ம நித்யானந்தரிடன் நாம் கடமைப் பட்டுள்ளோம். ஒரு வேளை இந்து மதத்திற்கு ஆதரவளிப்பது நடித்து இந்துக்களுக்குக் கெட்ட பெயர் உண்டாக்கும் நோக்கத்தில் பக்தர்கள் போல் நித்யானந்தா ஆசிரமத்தில் நுழைந்து இந்துக்களுக்கு எதிராக கிறித்தவமிசனரிகள் சதி செய்யும் வாய்ப்புள்ளதால் தருமப் போராளிகள் உஷாராக இருக்கவும்.


சூத்திரன் பார்ப்பான் ஆலய நுழைவு பற்றிய எச்.ராசா அவர்களின் கருத்து


புரட்சியை அடுத்த கட்டத்திற்குக் (அதாவது வேற Level) கொண்டு சென்ற ஆன்மிகவாதிகள்.


Download As PDF
Bookmark and Share

Post Comment

ஆண்டாள் பெயரால் தருமப் போராளிகளின் போலிப் போராட்டம்

தமிழை ஆண்டாள் என்ற பெயரில் வைரமுத்து சொன்ன ஒரு கருத்துக்காக ஒரு பெரிய போராட்டம் நடைபெறுகிறது. இது நாள் வரையிலும் எதற்காகவும் போராடியிராதவர்கள், வேறு யாரேனும் எதற்காகப் போராடினாலும் நக்கலடித்தவர்கள் இப்போது போராளிகளாக மாறியிருக்கின்றனர். 

தமிழ்நாட்டில் மோடி எதிர்ப்பாளர்கள் அனைவரையும் போராளிகள் என்று நக்கலடிப்பது இந்துத்துவர்கள் மரபு. அதே மோடி ஆதரவாளர்களை நாம் "பக்தாள்" என்று அன்போடு அழைப்போம். இப்போது இன்ப அதிர்ச்சியாக பக்தாளே போராளியாக விஸ்வரூபம் எடுத்துள்ளனர். ஓ அவர்களுக்கு தருமப் போராளிகள் என்று இன்னொரு பெயரும் உண்டு என்று நமக்கு உணர்த்தியுள்ளனர்.

வைரமுத்து 100 கோடி இந்துக்கள் வணங்கும் ஆண்டாள் ஒரு தேவதாசின்னு சொன்ன மாதிரி கதறித் தீர்த்தார் ராசா. இந்த தேவதாசி முறை என்ன பிரிட்டிஷ்காரனோ இல்ல முசல்மானோ கொண்டு வந்ததோ இல்லையே. இருக்கற பண்பாடுகள் எல்லாத்தையும் சொந்தம் கொண்டாடற இந்து மதத்தின் ஒரு அங்கம்தானே தேவதாசி முறை. அது இந்துக் கோயில்ல இருந்த முறைதானே. அதில் சிக்கியவர்கள் இந்துப் பெண்கள்தானே. அதை ஒழிக்க இந்து எதிர்ப்பாளர்கள் முயன்றபோது எதிர்த்தவர்களும் இவர்கள்தானே. 

இந்தப் போராட்ட/எதிர்ப்புக் கூத்தில் கொஞ்சமும் அடிப்படையே இல்லை. தேவதாசி முறை இந்து மதத்தில் இருந்ததால் குற்ற உணர்வு இல்லை. ஆனால் ஆண்டாள் தேவதாசி என்றால் புண்படுகிறதாம். ரொம்ப நல்ல மனசு.

ஆண்டாள் ஒரு தேவதாசி என்று சொன்னதால் எப்படி அவரை இழிவுபடுத்துவதாகும் என்று சொன்னால் நலம். இராமன் ஒரு குடிகாரன் என்று ராமாயணத்திலேயே இருக்கிறது என்று கருணாநிதி சொன்னால், அதை எப்படித் திரிப்பார்கள் மதவாதிகள் ?.  கருணாநிதி ராமனைக் குடிகாரன் என்று பழித்தார் என்பார். அதாவது கருணாநிதி தனது சொந்தக் கருத்தினைச் சொன்னது போல் மாற்றினார்கள். அது போலவே இங்கும் வைரமுத்தையும் தினமணி வைத்திநாதனையும் சொல்கிறார்கள். ஆனால் ஆண்டாள் தேவதாசியாக இருந்தார் என்ற வரலாறு மிகவும் சராசரியான செய்திதான்.



வைரமுத்துவை பேச வைத்து அதை வெளியிட்டவர் யார் ? தினமணி ஆசிரியர் வைத்தியநாதன். தினமணியில் ஆன்மிகத்தை தூக்கிப் பிடிப்பவர், தமிழையும் தூக்கிப் பிடிப்பவர். தீவிரமான ஜெயலலிதா ஆதரவாளர். காந்தியவாதி. மோடியின் ஆதரவாளர்.  இந்துத்துவா ஆதரவாளர். ஆன்மிகவாதி, தமிழ் ஆர்வலர்.  இவர் இந்து மதத்தையோ, பக்தி இலக்கியத்தையோ ஆன்மிகத்தையோ இழிவு செய்யும் செயலை 101% விழுக்காடுகள் உறுதியாக செய்ய மாட்டார் என்று சொல்ல முடியுமே. ஆனாலும் இதை விடாமல் பிரச்சனையாக்கி குளிர்காய வேண்டுமே மதவாதிகளுக்கு. அதற்கு தினமணி ஆசிரியர் வைத்தியநாதனையும் சேர்த்து திட்டித் தீர்க்கிறார்கள். 

இந்து முன்னணியினர் நிர்வாகிகள் 10 பேர் சேர்ந்து விநாயகர் சதுர்த்திக்கு கூட்டம் நடத்தினாலே அதை செய்தியாகப் போடுவார். இவர் மீதே இந்து முன்னணியினர் தற்போது வழக்குப் பதிவு செய்திருக்கின்றனர். எதற்காகவோ ஜெயமோகனைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் இந்து மக்கள் கட்சியைப் போல இப்போது வைணவர்கள் தினமணி வைத்தியநாதனையும் நையப்புடைக்கிறார்கள்.

இது ஹேராம் படத்தில் வரும் காட்சி. மனைவியைப் பெரிதாகக் கண்டுகொள்ளாத கணவனிடம் மனைவி சொல்வது போல் இருக்கிறது. என்னை ஆம்படையாளா ஏத்துக்காட்டியும் பரவால்ல ஆண்டாளாவாவது ஏத்துக்கலாம்ல என்ற ரீதியில் வரும் இந்த உரையாடல் ஹேராம் படத்தில் வருவதாகும். இந்த மாதிரி வசனம் இப்போது வந்திருந்தால் ஆண்டாளை இழிவு செய்கிறார் கமல் என்று கூட போராட்டம் நடத்தியிருப்பார்கள். ஆணால் கமல் கொஞ்சம் வைணவ அடையாளங்களை தனது திரைப்படங்களில் அதிகம் பயன்படுத்துவதால் வழக்கமாக சைவ சமயத்தவரே அதிகமாக அவரை விமர்சனம் செய்வார்கள். ஆண்டாளை விட பெரிய சர்ச்சைகள் ஹேராமில் இருந்ததால் அதிகமாகத் தெரியவில்லை.
இந்தியாவையே (தமிழகத்தையும்) கைப்பற்றி விட்ட காவி பயங்கரவாதக் கூட்டத்துக்கு இன்னும் தமிழகத்தில் மதவெறியும் ஜாதிவெறியும் அது சார்ந்த கலவரங்களும் (பெருமளவில்) இல்லாமல் இருப்பது எரிச்சலாக இருக்கிறது. 

இங்கே நடக்கும் போராட்டங்கள் அனைத்தும் தமிழினம் சார்ந்ததாகவும், ஈழத்தமிழர் ஆதரவு, ஜல்லிக்கட்டு போன்றவை (அதுவும் இனவெறி இல்லாமல்), நீட் எதிர்ப்பு போன்ற சமூக நீதி சார்ந்தும் தான் நடக்கிறது. ஊடகங்களிலும் அவைதான் முதன்மைச் செய்திகளாக வருகிறது. விநாயகர் சதுர்த்தியிலும் பெரிய கலவரமாக மாற்ற முடியவில்லை. இந்து முன்னணித் தலைவர்களில் படுகொலையையும் பெரிதாக்கிக் கலவரம் தூண்டப் பார்த்தார்கள். எதிலும் இவர்கள் எதிர்ப்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. இருந்தும் விடுதாயில்லை. 

திமுகவின் திராவிட இந்து மத எதிர்ப்பினால திமுகவின் மீது கடும் வெறுப்பு கொண்ட இந்துக்கள்/ஜாதிவெறியர்கள் காட்டும் அதிகபட்ச எதிர்ப்பு கருணாநிதிக்கு அம்மா பரவால்ல என்று அதிமுக ஆதரவுடன் நின்று விட்டது. 

இங்கே திராவிடக் கட்சிக்கு எதிராக நடக்கும் போராட்டம் என்றால் அது டாஸ்மாக் எதிர்ப்பு ஒன்றுதான். அதிலாவது இவர்கள் திராவிட எதிர்ப்பை வலுவாகப் பதிய வைக்கலாம். அந்தளவுக்கு அவர்கள் யோக்கியர்களும் இல்லை. இந்து முன்னணிக்கு ஆட்களுக்கு மது இல்லாமல் எப்படி ஆட்டம் போட, எப்படிக் கலவரம் பண்ணுவதாம். 

இவர்களுக்கு மக்கள் நலத்தில் துளியும் அக்கறையில்லாததால் போராடுவதற்கோ காலூன்றுவதற்கோ எந்தக் களமும் இல்லை. கலவரம் செய்வதைத் தவிர வேறு அரசியல் தெரியாது. எனவே மதவெறியைக் கிண்டி விடத் தனக்குக் கிடைத்த சிறு சந்துகளில் பூந்து பயங்கரமாக performance பண்ணுகின்றனர். அதில் தோல்வியுற்றாலும் மதவெறி சிறுகச் சிறுகப் பரவிக் கொண்டுதான் இருக்கிறது.

மெர்சல் படத்தில் வந்த மிகச் சராசரியான கோயிலை இடித்து பள்ளி கட்ட வேண்டும் என்பது போல ஒரு வசனத்தை வைத்து மதவெறியைத் தூண்டினார்கள்.  அது ஏற்கெனவே பாரதியார் சொன்னதுதான். உன்னால் முடியும் தம்பி என்ற பாலச்சந்தரின் படத்தில் ஒரு பாடலில் கூட அவ்வரிகள் வந்தன.  ஆனாலும் அதை ஒரு காரணமாகச் சொல்லி மதவெறியைத் தூண்டி மதவெறிக் கருத்துக்களை அனைவரிடமும் ஊடக விவாதங்கள் வாயிலாக விதைத்தனர்.

பாபர் மசூதி இருந்த இடத்தில் ராமர் கோயில் கட்ட வேண்டும் என்பது நியாயமெனில். புத்த விகாரைகள் இருந்த இடம் தற்போது கோயில்களாக மாற்றப்பட்டுள்ளன, எனவே கோயில்களை இடித்து விட்டு புத்த விகாரைகள் கட்ட வேண்டும் என்று சொல்ல முடியுமா என்று தர்க்கமாகப் பேசியதை மாற்றி இந்துக் கோயிலை இடிக்கச் சொல்லும் திருமா என்று புரளியைக் கிளப்பிக் குளிர் காய்ந்தனர்.  திருமாவளவன் பாபர் மசூதி இடிப்புக்கு எதிராக வெளியிட்ட ஒரு கருத்தை மாற்றி மதவெறியைத் தூண்டுகிறார்கள்.

அதே வகையில் இப்போது ஆண்டாளை அவமானப்படுத்தி விட்டதாக அடித்து விடுகிறார்கள்.  ஆனால் சில வருடங்களுக்கு முந்தைய நிகழ்வு இங்கே ஒரு உதாரணம் பாருங்கள். நடிகர், நாடக இயக்குநர் எஸ்.வி. சேகர் "மகாபாரதத்தில் மங்காத்தா" என்று ஒரு நகைச்சுவை நாடகம் போட்டிருக்கக் கூடும். அதை எப்படி மதவெறியாக மாற்றுகிறார்கள். சேகர் ஒர் இந்துத்துவாவாதி, அவர் இந்து மதத்தை இழிவு செய்வாரா ? மகாபாரத்தைப் பயன்படுத்தி ஒரு நகைச்சுவைப் பாத்திரத்தைப் புகுத்தி ஒரு சிரிப்பு நாடகத்தை அரங்கேற்றியிருக்கிறார் போலிருக்கிறது. அதை என்னவோ பயங்கரமான தெய்வகுத்தமாகக் கருதி இம்மாதிரி பதாகை தயாரித்தவருக்கும் இப்போது ஆண்டாளுக்காகப் போராடுகிறவர்களுக்கும் ஏதாவது வேறுபாடு இருக்கிறதா ? இது மாதிரியெல்லாம் இந்து மதத்தை இழிவு செய்வதற்கு எதிராகப் போராட்டம்/பிரச்சனை செய்யத் தொடங்கினால் நூறு காரணங்கள் கண்டுபிடிக்கலாம். போராடிக் கொண்டே இருக்கலாம்.


வைரமுத்துவும், தினமணியும் வெளிப்படையாக மன்னிப்புக் கேட்ட பிறகும் இது போன்ற போராட்டங்கள் நடப்பது வெறும் விளம்பரத்துக்காகவும், மதவெறியை விதைக்கவும் என்பதே தெளிவு. இதுமாதிரியெல்லாம் இவர்கள் செய்வது பொய் என்றும் வரலாற்றுப் பிழை என்றும் நமக்குத் தெரியும். சராசரி மக்களிடம் அறியாமையால் எழும் கேள்விகளையே நியாயமாக மாற்றி அதை மதவெறியாக மாற்றுகிறார்  எச். ராசா.

இப்படி இவர்கள் பொய்யாக பரபரப்பைக் கிளப்பி விவாதம் நடந்து கொண்டிருக்கும் நாள்களில் மக்களுக்கு முட்டாள்தனமான வரலாற்றுப் புரட்டுக்களுடன் கூடிய இந்துக்களை கிருஸ்தவ மிஷனரிகள், திராவிட ஆட்சியாளர்கள், முஸ்லிம்கள், காங்கிரஸ், கம்யூனிஷ்டுகள் என அனைத்துத் தரப்பினரும் இந்து மதத்தை அழிக்கிறார்கள் என்கிற ரீதியில் வாட்சப் வதந்திகள் பரவும். இதில் உள்ள ஒரே நல்ல விடயம், இது போன்ற கூத்துக்களை இந்துக்களே பரபரப்புச் செய்தியைப் போல மறந்து விடுகிறார்கள்.
Download As PDF
Bookmark and Share

Post Comment

கலாம் சிலையில் மதத்திணிப்பு

ராமேஸ்வரத்தை அடுத்த பேய்க்கரும்பில் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் நினைவிடத்தில், மத்திய அரசின் பாதுகாப்புத்துறை சார்பில் 15  கோடி ரூபாய் செலவில் அப்துல் கலாம் மணிமண்டபம் கட்டப்பட்டுள்ளது.

இதில் அவருக்குப் பக்கத்தில் பகவத் கீதையையும் சேர்த்து சிலையில் வடித்திருக்கிறார்கள். இதை விடக் கேவலம் உண்டா ? அவர் வீணை வாசிப்பார் அதனால் கையில் வீணை சரி. அவர் பகவத் கீதையில் இருந்து மேற்கோள் காட்டுவார் அதனால் கீதையை சிலையில் வடித்தது சரியா ? அவர் என்ன சாகும் வரை கீதையையா பிரச்சாரம் பண்ணினார் ? மாணவர்களிடம் கல்வி குறித்துதானே பேசினார். 

அவரைப் பற்றி நினைத்தால் என்ன நினைவுக்கு வருகிறது. குழந்தைகள், கல்வி, இந்தியா, வல்லரசு, போக்ரான் அணுகுண்டு இத்யாதிகள். இப்பேர்ப்பட்டவரின் சிலை அருகில் ஒரு மதத்தைச் சார்ந்த நூல் எதற்கு ? அறிவியலுக்கும் மத நூலுக்கும் என்ன தொடர்பு. அவர் அடிக்கடி சுட்டிக் காட்டும் (ஓரளவிற்கு அனைவரும் ஏற்கக்கூடிய மதச்சார்பற்ற)திருக்குறள் கூட அங்கே வைத்திருக்கத் தேவையில்லை. இதற்கும் பகவத் கீதைக்கும் என்ன தொடர்பு. இந்த பகவத் கீதை எல்லா இந்துக்களின் புனித நூலும் அல்ல. இந்து மதத்திலிருக்கும் ஒரு புனித நூல். அது பைபிள் போன்றதோ, குரான் போன்றதோ அன்று. இந்து மதம் பன்மைத்தன்மை வாய்ந்தது இதுதான் இந்து மதம் இது இந்து மதம் இல்லை என்று குறிப்பிட்டுச் சொல்ல முடியாத பழக்கவழக்கங்களைக் கொண்டது. ஆனால் அதன் பன்மைத் தன்மையை மறுத்து இஸ்லாமிய, கிறித்தவ, பௌத்த மத பாணியில் கொண்டு சென்று இந்து மத ஆட்சியை அமைக்க முயல்பவர்கள் இந்துத்துவாவாதிகள். 
    
                                  

அவர் உயிருடன் இருக்கும் போது இந்துமத சாமியாரின் கீழ் அமர்ந்திருந்தது, கோல்வால்கர் சிலையில் வணக்கம் வைத்தது போன்றவை பதிவு செய்யப்பட்டு ஊடகங்களில் வெளியாகியது. அதன் மூலம் இந்துமதவாதிகள் அவரை தங்களுடையவராகக் காட்டிக் கொண்டனர். குஜராத்தில் நடந்த இஸ்லாமியர் மீதான படுகொலைகளை மறைத்து வேடம் போடவே பாஜக பிறப்பால் இஸ்லாமியரான அப்துல் கலாமை ஜனாதிபதியாக்கி அவரை பிரபலமும் ஆக்கியது. அவர் பெரும்பான்மையான இந்தியர்களால் போற்றுதலுக்கு உரியவரானார். அவரை மக்கள் பாஜவின் அடையாளமாகப் பார்க்கவில்லை. எந்த மதமும் சாராதவராகவே இருந்தார் மக்களின் பார்வையில், ஆனால் இந்த பகவத் கீதையை அவர் அருகில் வைத்தது மதத் திணிப்பாகவே கொள்ளப்படும். இறந்த பிறகும் ஒரு மனிதனுக்கு மதம் திணிக்கப்படுகிறது. 

இதைப் பலரும் கண்டித்தனர். பின்பு அப்துல் கலாமின் அண்ணன் பேரன் சலீம் என்பவர் கலாம் சிலையருகில் குரானையும், பைபிளையும்(ஒரு முஸ்லிம் பைபிளையும் சேர்த்து எடுத்துக் கொள்வது உண்மையில் பாராட்டத்தக்கதே) வைத்தார். உடனே இந்து மக்கள் கட்சி என்ற முட்டாள் மதவெறிக்கட்சியினர் வந்து அவர் மீது புகார் கொடுத்தனர். இந்து மதம் இழிவு படுத்தப்பட்டது என்கின்றனர். இந்த முட்டாள்களுக்கு ஒரு முஸ்லிம் சிலைக்கு முன்னர் பகவத் கீதையை வைத்தது தவறாகப்படவில்லை. ஆனால் குரானையும் பைபிளையும் வைத்தது இந்து மதத்தை இழிவு படுத்துகிறது என்கிறார்கள். ஒரு மதச்சார்பற்றவர் சிலை என்றால் எந்த நூலையும் வைக்கக்கூடாது இல்லையென்றால் எல்லா நூலையும் வைக்க வேண்டும்தானே அதுதான் நியாயம். மதவெறியர்கள் ஆளும் நாட்டில் இது போன்ற சில்லரைப் பிரச்சனைகளை வைத்தும் கலவரம் செய்ய முடியும், மக்களைக் குழப்ப முடியும். மதவெறியைத் தூண்டி ஆட்சியைப் பிடிக்கவும் முடியும். கொடுமை !

இன்னொன்றையும் சொல்ல வேண்டும். இந்து மதத்தைச் சார்ந்தவர்கள் முஸ்லிம் தொப்பி அணிவது, தர்காவிற்குச் செல்வது, நோன்புக் கஞ்சி குடிப்பது, ரம்ஜான் பிரியாணியை அருந்துவது போன்றவை மதச்சார்பின்மையாகப் பார்க்கப்படுகிறது. அப்படியிருக்க ஒரு முஸ்லிமின் அருகில் பகவத் கீதையை வைப்பதை ஏன் மதச்சார்பின்மையாக, மத நல்லிணக்கமாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்ற கேள்வி வருகிறது. இந்துக்கள் அவர்களாக விரும்பிச் செய்வது. அத்வானி முஸ்லிம் குல்லாவை மாட்டியிருக்கிறார். மோடியே முஸ்லிம்களுடன் கையை ஏந்தியவாறு நின்றிருக்கிறார். ஜெயலலிதா நின்றிருக்கிறார். இப்படிப் பல உதாரணங்கள் சொல்லலாம். சரி மோடிக்கு சிலை வைக்கும்போதோ, அத்வானிக்கு சிலை வைக்கும்போதோ, வல்லபாய் படேலுக்குச் சிலை வைக்கும்போதோ பக்கத்தில் குரானை வைத்து விட்டு அது முஸ்லிம்களைப் போல அ அவர்கள் நடந்திருக்கிறார்கள், எனவே இப்படிச் சிலை வைப்பது மதச்சார்பின்மையின் அடையாளம் என்றால் அதை ஒத்துக் கொள்ள முடியுமா ? முடியாதல்லவா. மேலும் இப்போது நடப்பது இந்துத்துவா ஆட்சி என்பதாலும், ஒற்றைப் பண்பாடு, ஒரு மொழி போன்றவற்றை வெறித்தனமாகத் திணிக்கும் அரசாக இருக்கும் காரணத்தாலும்தான் இதை எதிர்க்க வேண்டியிருக்கிறது. 

Download As PDF
Bookmark and Share

Post Comment

முஸ்லிமாக இருந்தால் போதும் கொலை செய்யப்படலாம்

கடந்த வியாழக்கிழமை (22-06-2017) ஒரு கொலை நடந்திருக்கிறது. மோடியின் இந்தியாவில் இது மிகவும் சாதாரணமாக நடக்கும் கொலைதான். ஏனென்றால் ஆட்சி செய்பவர்கள் அத்தகையவர்களாக இருக்கின்றனர். இதுவும் நாம் சாதாரணமாகக் கடந்து விடுகிற மாதிரியான நிகழ்வுதான். 

1. செப் 2015 : முஹம்மது அஹ்லக் வீட்டில் மாட்டிறைச்சி வைத்திருந்ததாக அடித்தே கொல்லப்பட்டார். ஆனால் அவர் வைத்திருந்தது ஆட்டுக்கறி. கொன்றவனின் தந்தை ஒரு மாட்டிறைச்சி ஏற்றுமதி நிறுவனம் வைத்திருப்பவர்.

2. அக் 2015 : உத்தம்பூரில் ஜாஹித் ரசூல் பட் என்னும் 16 வயது சிறுவன் மாடுகள் ஏற்றிய வண்டியில் இருந்த குற்றத்திற்காக அடித்து கொல்லபட்டான்.

3. மார்ச் 2016 : லத்திஹரில், முஹம்மது மஜ்லும், ஆசாத் கான் இருவரும் மாடுகளை விற்பனை செய்த காரணத்திற்காக தூக்கிலிடபட்டு கொலை செய்யபட்டனர்.

4. ஏப்ரல் 2017 : அஸாம் மாவட்டம் அபூ ஹனீஃபா, ரியாஸூதீன் அலி இருவரும் மாடு விற்பனை செய்பவர்கள் என சந்தேகபட்டு அடித்தே கொலை செய்யபட்டனர்.

5. ஏப்ரல் 2017 : பெஹ்லு கான் பசு காவலர்கள்!? என்னும் பயங்கரவாதிகளால் அடித்து துன்புறுத்தபட்டு கொல்லபட்டார்.

6. மே 2017 : மாலீகன், மஹாராஸ்ட்ராவில் இரண்டு இஸ்லாமிய வியாபாரிகள் மாட்டிறைச்சி விற்பனை செய்ததற்காக வெட்டி கொலை செய்யப்பட்டனர்.

சில மாதங்களுக்கு முன்பு உத்தரப் பிரதேசத்தில் ஒருவர் பால் பண்ணைக்கு மாடுகளைக் கொண்டு சென்றபோது இந்துவெறி மாட்டுவெறி பயங்கரவாதிகளால் தாக்கப்பட்டு இறந்தார்.  

(தகவல்கள் ஃபேஸ்புக்கில் சித்திக் என்பவரின் பதிவிலிருந்து)

ஏன் இப்படிச் சொல்கிறேன் என்றால் கொல்லப்பட்டவன் ஒரு முஸ்லிம். கொல்லப்பட்ட காரணமும் நமக்கு ஆர்வமூட்டுவதாக இல்லை. ஏனென்றால் அவன் "தேசப்பகைவன்" அல்லது "மாட்டிறைச்சி உண்பவன்" அல்லது "முல்லா" அல்லது அம்மூன்றுமே எனக் கொள்ளலாம். அதனால் அவனைக் கொல்லலாம். இத்தனைக்கும் அவன் 16 வயதுச் சிறுவன். ரம்ஸானைக் கொண்டாடுவதற்காக பொருட்களை வாங்கி வரக் கடைக்குச் சென்றிருக்கிறான், ஹரியாணாவிலிருந்து டெல்லிக்கு. திரும்பி வருகையில் பயணியர் ரயிலில் வந்திருக்கிறான். அவனுடன் அவனது சகோதரர்கள் மூவரும் வந்திருக்கின்றனர். 

அப்போது ஒரு கும்பலும் ரயிலில் ஒரு நிறுத்தத்தில் ஏறியிருக்கிறது. இவர்களுடன் இருக்கையில் அமர்வது தொடர்பாக சண்டை வந்திருக்கிறது. இவர்களின் முஸ்லிம் அடையாளமான தாடியும் குல்லாவும் சேர்ந்து இவர்களை பலியாக்கியிருக்கிறது. தவிரவும் ஜுனைத் மாட்டுக்கறி வைத்திருந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டது. இவர்களுடன் சண்டையிட்ட அக்கும்ப்பல் இவர்களை, இவர்களின் மதத்தை அவமானப்படுத்தி ஏசியிருக்கிறது, குல்லாவைப் பிடுங்கி வீசியது, தாடியைப் பிடித்து இழுத்திருக்கிறது. "தேசப்பகைவன்", "மாட்டிறைச்சி உண்பவன்", "முல்லா" என்றெல்லாம் அவர்களை வசைபாடிய கும்பல் அவர்களைத் தாக்கியுள்ளது. இச்சண்டையில் இச்சிறுவனை நான்கு பேர் பிடித்துக் கொள்ள, கத்தியால் குத்தப்பட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளான். இந்தக் கொடிய நிகழ்வு நடக்கும் போது சுற்றியிருந்தவர்கள் இவர்களை "தொலைத்துக் கட்டச்" சொல்லி ஆரவாரம் செய்துள்ளனர். இது ஆர் எஸ் எஸ் இயக்க பயங்கரவாதிகள் செய்ததா அல்லது அந்த கொடிய பயங்கரவாதக் கொலைக் கொள்கைகாளால் சைக்கோவான கும்பலால் செய்யப்பட்ட கொலையா என்று தெரியவில்லை. இது ஒரு வெறுப்புணர்ச்சியால் விளைந்த கொடூரக் கொலையாகும். 

இந்துக்கள் பசுக்களை வணங்குகிறார்கள், அதைக் கொல்வது பாவம் என்பது எல்லா இந்துக்களுக்கும் பொதுவான நம்பிக்கையல்ல. இங்கே பசுவை வணங்கும் ஜாதியைச் சேர்ந்தவர்களே அதுவும் மாமிச உணவு உண்ணாதவர்களே மிகப்பெரிய ஏற்றுமதி நிறுவனங்கள் நடத்தி, மாட்டிறைச்சி, தோல் ஏற்றுமதி மூலமாக பணக்காரர்களாக விளங்குகிறவர்கள். ஆனாலும் பசு இந்துக்களின் தெய்வம் என்ற போலிக் கருத்தை உற்பத்தி செய்து அதை சமூகம் முழுவது பரவச் செய்ய முடியும், அதைக் கொல்பவர்களை, உண்பவர்களை, விற்பவர்களை, வாங்குபவர்களை கொலை செய்ய பசுக் காவலர்களால் முடியும். இதெல்லாம் ஒரு நாடா ! உண்மையில் அவர்கள் பசுக் கறியை வைத்திருக்கக் கூடத் தேவையில்லை, அப்படி ஒரு வதந்தியையும் அவர்களே உண்டாக்குவார்கள், அவர்களை அடித்தே கொல்லவும் செய்வார்கள். அப்பேர்ப்பட்ட யோக்கியர்கள் இந்த நாட்டை அப்பேர்ப்பட்ட கொள்கையுடன் ஆள்கிறார்கள். கேவலம் ! என்ன சொல்வதென்றே தெரியவில்லை. மிகப்பெரும் அவநம்பிக்கையாக உணர்கிறேன் இந்த நாட்டைப் பற்றி !

ஒரு முஸ்லிமைக் கொல்ல இனிக் காரணம் எதுவும் பெரியதாக வேண்டியதில்லை. அவன் மாட்டுக்கறி வைத்திருந்தான் என்று சொன்னால் போதும். இன்னும் பத்தாயிரம் முஸ்லிம்கள் கோரமாகக் கொல்லப்பட்டாலும் இந்து சமூகம் எந்தக் குற்ற உணர்ச்சியும் கொள்ளப்போவதில்லை. இந்துக்களின் மௌனம் ஆர்எஸ்எஸ் பயங்கரவாதிகளுக்குக் கொடுக்கப்படும் ஆதரவே அன்றி வேறில்லை. அந்தளவுக்கு சமூகமே வக்கற்று தந்நலமேறி, அலட்சியமயமாக உள்ளது. இந்து பயங்கரவாதமோ இந்துக்கள் பெயராலேயே அனைத்து வன்முறைகளையும் முஸ்லிம்களின் மீது செலுத்திக் கொண்டு வருகிறது. நாமெல்லாம் 2017 ஆம் ஆண்டில் இதை மௌனசாட்சிகளாகப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். மோடி துலுக்கனுக்கு பாடம் புகட்டினார் என்றுதானே பாஜகவை ஆதரிக்கும் மனநிலை பலருக்கு, அவர்களுக்கு மத்தியில் வாழும் நாம் என்ன செய்ய முடியும் ?

ஜுனைத்

ஜுனைத் பிணமாக
ஜுனைத்தின் இல்லத்தில்

நன்றி - http://www.newsjs.com/url.php?p=http://www.hindustantimes.com/delhi-news/how-could-they-hate-us-so-much-family-in-shock-after-16-year-old-muslim-boy-stabbed-to-death-on-train/story-TEzAfE9atfWv0EHaXJm6JJ.html
Download As PDF
Bookmark and Share

Post Comment