எழவூடு

ஜாதி என்பது எப்படி இயங்குகிறது. ஒரே ஜாதியில்தான் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்பது முதல் விதி. பிறகு, சில ஜாதிகளுடன் குறிப்பிட்ட எல்லை வரை பழகலாம், இயங்கலாம், உண்ணலாம் உறங்கலாம் என்று நீளும். ஜாதி பல வகையில் வெளிப்படும். அதில் ஒன்றுதான் இறப்பு வீட்டில் தாழ்த்தப் பட்டவர்கள் துக்கம் கேட்கும் விதம்.

எழவு வீடு என்றால், வயதாகி இறந்தவர் என்றால் பெரிய அளவில் துக்கம் வழிந்தோடாது. வீட்டிற்குள் மட்டும் பெண்களின் அழுகைச் சத்தம் கேட்கும். ஆண்கள் யாரும் வரும் உறவினர்களிடம் கட்டிப் பிடித்து அழுவதில்லை. வெளியே உட்கார்ந்து கொண்டு அன்றைய சூடான அரசியல் விவாதங்களையும், வேறு ஏதாவதும் பேசிக் கொண்டிருப்பார்கள்.

துக்கம் விசாரிக்க யாரேனும் வந்தால், இறந்தவரின் மகனோ அல்லது அவரது உடன் பிறந்தவரின் மகனோ, தம்பியோ முன்னால் அமர்ந்து வருபவருக்கு வணக்கம் சொல்லி விசாரிப்பார்கள். வணக்கம் சொல்வது எப்படியென்றால், இழவு கேட்க வருபவர், இழவு வீட்டாரின் கையைத் தொட்டு வணங்கிக் கொள்வார்கள். அவர் கையைத் தொடும்போது இவர் (இறப்பு வீட்டுக்காரர்) கையை ஏந்தியவாறு வைப்பார் (துக்கம் கேட்க) வருபவர் அதைத் தொட்டுக் கும்பிடுவார்கள். பின்பு இருவரும் அருகருகே அமர்ந்து என்ன ஏது எப்படி நடந்தது, இறந்தவர் எத்தனை நாட்களாகப் படுக்கையில் இருந்தார், எந்தெந்த மருத்துவமனைக்குச் சென்றீர்கள், எத்தனை செலவாச்சு என்றெல்லாம் பேசிக் கொள்வார்கள். பின்பு பேச்சு அவரவர்களின் சொந்தப் பிரச்சனை குறித்தோ, அல்லது தொழில் குறித்தோ திரும்பி விடும். முதல் நாள் இழவு வீட்டில் இருக்கும் துக்கம் இரண்டாவது நாள் இருக்காது. வெறுமனே ஒரு திருமண வரவேற்பு முடிந்த பின்னர் இருப்பது போல்தான் இருக்கும்.

இப்படி ஒரு நாளில்தான் நானும் சென்றேன். கெக்கே பிக்கே என்று அரட்டையடித்துக் கொண்டும் சிரித்துக் கொண்டும் இருந்தார்கள். இறந்தவரின் தம்பிதான் துக்கம் கேட்க வருகிறவர்களை வரவேற்றுக் கொண்டிருந்தார். அப்போது ஒரு பெண் வந்தார். வந்தவர் அழுகையுடன் இறந்தவரின் தம்பியின் காலில் விழுந்து அழுதார்.

"அந்த மகராசன் எங்களுக்கு எத்தனை பண்ணினார், கேக்கறப்பெல்லாம் எத்தனை தடவை எங்களுக்குக் காசு குடுத்தார்"  என்றெல்லாம் என்று என்னென்னவோ சொல்லி, இழுத்து இழுத்து  அழுதார். (காலில் விழுந்தவாறேதான்). அதற்கு அந்த மனிதரோ,  "சரி சரி விடு விடு, வயசாயிடுச்சு போயிட்டார். எல்லாரும் ஒரு நாளு சாகறதுதானே. எல்லாரும் ஒரு நாள் போய்த்தானே ஆகணும்' என்றார். பின்பு அதே போல் இன்னும் ஒரு மொக்கையான வசனத்தைப் பேச அதையும் நகைச்சுவையென்று ஆதரித்து இரண்டொருவர் சிரித்து வைத்தனர். பின்னர் அந்தப் பெண் போய் அந்த வீட்டின் மாட்டுத் தொழுவத்தைக் கூட்டிப் பெருக்கத் தொடங்கினார்.

நான் என்ன சொல்ல வருகிறேன் என்று புரிகிறதா ? அந்த வீடு ஒரு மேல்ஜாதிக்கார (கொங்கு வேளாளக்கவுண்டர்கள்) வீடு. அந்தப் பெண் தாழ்த்தப்பட்ட ஜாதியைச் சேர்ந்தவர். இப்படி இழவு வீட்டிலும் அந்தப் பெண் வந்து செத்துப் போனவனின் சொந்தக்காரன் காலில் விழுந்துதான் "துக்கம் கேட்க" வேண்டியிருக்கிறது.  என்ன கேவலம். இப்படி துக்கம் கேட்க வருவோரே காலில் விழுந்துதான் எழவேண்டும் என்பது என்ன வகை உணர்வு ? சடங்கு சம்பிரதாயம் ? ஆண்ட பரம்பரைக் கனவில் மிதப்பவர்கள் இது போன்ற இழிசெயல்களை எப்படி நியாயப்படுத்துகிறார்கள். இந்த மேல் ஜாதி உணர்வு என்பது ? இப்படி அடுத்த மனிதனை பிறப்பிலிருந்து இறப்பு வரைக்கும் தள்ளி வைத்து, அவனை அவமானப்படுத்து உணர்வே ஜாதி. 

நன்றி - புகைப்படம்  ஃபேஸ்புக்கில் சங்ககிரி ராஜ்குமார் (திரைப்பட இயக்குநர்) பகிர்ந்தது. இந்தப்படத்திற்கும் நான் எழுதியிருக்கும் கருத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. ஆனால் ஜாதி என்பது எப்படி இருக்கும் என்பதற்கு இது ஒரு உதாரணம். ஏனென்றால் பலரும் ஜாதியை ஏன் எதிர்க்கிறார்கள், அது வெறும் அடையாளம்தானே இருந்துவிட்டுப் போகட்டுமே என்றும் நினைக்கக்கூடும். ஆனால் அது எந்த வகையிலும் ஏற்கத் தக்கதல்ல என்பதற்கு இந்தப் படமே உதாரணம். கிராமங்களில் மேல்ஜாதிக்காரர்களின் தேநீர் கடையோ வீடோ, இன்றும் இப்படித்தான் தாழ்த்தப்பட்டவர்கள், தண்ணீர் குடிக்க வேண்டுமெனில் இப்படித்தான் இரு கைகளாலும் வாயில் வைத்துக் குடிக்க வேண்டும். மேல்ஜாதிக்காரர்களின் பாத்திரத்தில் குடிக்கக் கூடாது. இல்லையெனில் அவர்களுக்கென்று கொட்டாங்குச்சியையோ, தனிக் குவளையோ தனியாக எடுத்து வைத்திருப்பார்கள். யூஸ் அன்ட் த்ரோ காகிதக் குவளைகள் வந்ததால் இது அதிகமாக வெளியே தெரியாமல் நடக்கிறது. எங்கள் ஜாதிக்காரர்கள் இப்படி ஒரு மனிதனை நடத்த மாட்டார்கள் என்று எந்த ஆண்ட பரம்பரை ஜாதி வெறியனாவது சொல்ல முடியுமா ? இல்லை இது எங்கள் ஊரில் இல்லை என்று மறுக்கத்தான் முடியுமா ?
இதற்கெல்லாம் என்ன மரியாதை வேண்டிக் கிடக்கிறது. இந்த இழிபிறவிகளின் வக்கிர உணர்வே ஆண்ட பரம்பரைப் பெருமையெல்லாம். இல்லாதப் பட்டவர்களை அதிகாரம் செய்து திரியும் இவர்கள் தங்களை மேல் ஜாதியினர் என்று பீற்றீக் கொள்கிறார்கள். எல்லா மேல் ஜாதிகளின் உணர்வும் இப்படித்தான் இருக்கிறது. இந்த "உணர்வு"க்குப் பேரும் "உணர்வுதான்". இதையெல்லாம் வேடிக்கை மட்டும் பார்க்கும் என்னையும் சேர்த்துத்தான் சொல்கிறேன். ஜாதி என்பது எந்தக் கோணத்திலும் மன்னிக்க இயலாதது. இவர்களுடன்தான் நானும் வாழ்ந்து இறக்கவேண்டும் என்பது எனக்கொரு தண்டனை.

ஆனால் எந்தக் கவுண்டரும் (மற்றெல்லா மேல் ஜாதிக்காரர்களும்தான்), கீழ்ஜாதிக்காரன் விவசாய வேலை செய்து விளைந்த காய்கறிகளை நான் உண்ண மாட்டேன், அவன் தொட்ட பணத்தை
தொட மாட்டேன் என்று சொல்ல மாட்டான். தனக்கு சாத்தியமான எல்லா விதங்களிலும் முற்போக்காக நடப்பான். ஆனால் தாழ்த்தப்பட்ட ஜாதியில் பிறந்த மனிதனை மட்டும் மனிதனாகவே மதிக்க மாட்டான்.

Download As PDF
Bookmark and Share
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

கேட்கிறார்கள் கேட்கிறார்கள் கேட்டுக் கொண்டே இருக்கிறார்கள்

பள்ளிக்குச் செல்லும் வயதில் வீட்டுக்கு வருகின்றவர் போகின்றவர் எல்லோரும் இப்படிக் கேட்பார்கள்

எத்தனாவது படிக்கற ? எத்தனாவது ரேங்க் வாங்கற ?

நல்லாப் படிக்கணும் என்ன !! ? ஃபர்ஸ்ட் ரேங்க் வாங்கணும் உங்கம்மாப்பா எவ்வளவு சிரமப்பட்டுப் படிக்க வைக்கிறாங்க. படிச்சாத்தான் நல்ல வேலை கிடைக்கும், அப்பறம் எங்கள மாதிரி கஷ்டப்படத் தேவையில்லை. இதெல்லாம் எங்கள் காலம்.

பதில் : ??!!!

இப்போது இக்கேள்விகள் இப்படி மாறியிருக்கும்.

எந்த ஸ்கூல்ல படிக்கற ?  சிபிஎஸ்சியா இல்ல மெட்ரிக்கா ? (இப்பல்லாம் யார் அரசுப் பள்ளியைத் தேடுகிறார், இல்லாதப்பட்டவர்களைத் தவிர) ஹாஃப்ஏர்லில என்ன க்ரேடு வாங்கின ?

அடுத்து கல்லூரிக்குப் போகும் வயதில், வந்து அப்பாவிடம் கேட்பார்கள். அப்படியே நம்மிடமும்.

பையன எந்த கோர்ஸ்ல சேத்தீங்க ? எந்த காலேஜ் ? அது படிச்சா ஃப்யூச்சர் நல்லா இருக்குமா ? ஸ்கோப் இருக்குமா ? வெளிநாடெல்லாம் போக முடியுமா ? என்ன மாதிரி வேலை கிடைக்கும் ?

பதில்: ஃபைனல் இயர்லதான் தெரியும்.

எவனுக்குத் தெரியும் அதெல்லாம், இப்போதைக்கு இதுதான் வளரும் துறை என்று "நம்பி" அதைத் தேர்ந்தெடுத்துப் படிக்கிறோம். வயித்தில் நெருப்பைக் கட்டிக் கொண்டு இருக்க வேண்டியதுதான். என்று நினைத்துக் கொள்ள முடியும் வெளிய சொல்ல முடியாது.

படித்து முடித்தவுடன் வந்து கேட்பார்கள்.

இன்னும் வேலைக்குப் போகலையா ? கேம்பஸ்ல செலக்ட் ஆகலையா ? எத்தனை அரியர் இன்னும் இருக்கு ? பார்ட்டைமா போலாம்ல ? இல்ல அப்பா பிஸினஸையே பாத்துக்கப் போறயா ?

பதில்: தேடிக்கிட்டே இருக்கேன், ஒரு கம்பெனில கூப்டறேன்னு சொல்லிருக்காங்க. பாக்கணும் !

வேலை தேடிக் கொண்டிருக்கிறேன் என்று சொன்ன பிறகும், அல்லது தெரிந்து கொண்டபின்னும் இத்தனை வீச்சுக்கள் !

தக்கி முக்கி ஒரு அடிமை வேலையில் சேர்ந்த பின் வருவார்கள்.

எந்த கம்பெனி ? என்னா மாதிரி வேலை ? எவ்வளவு சம்பளம் ? போகப் போக சம்பளம் ஏறுமா ? வேலை பர்மனென்ட்டா ?

பதில்: ஒரு டொன்டி(20) வரும் என்று பொய் சொன்னால்,

இவ்வளவுதானா ? ரொம்பக் கம்மியா இருக்கே ? இத்தன படிச்சும் இவ்வளவுதான் குடுக்கிறானா ? இதுக்குப் பேசாம தொழிலையே பார்த்துக்கலாமே ? என்பார்கள்

சம்பளம் ஐந்திலக்கத்திற்குக் குறைவு என்றால் கௌரவக் குறைவு என்பதால், பெரும்பாலும் வாங்கும் ஊதியத்தின் இருமடங்காகவே சொல்வார்கள் இளைஞர்கள். இருந்தாலும் கேள்வி கேட்கும் சொந்தக் காரரோ, பக்கத்து வீட்டுக் காரரோ அல்லது வேறு யாருமோ என்ன சொல்வார்கள் தெரியுமா ? எனக்குத் தெரிந்த பையன் ஒருவன் இந்த வேலையில் இருக்கிறான். அவனுக்கு சம்பளம் ஒரு இலட்சத்துக்கும் மேலையாம் என்று சொல்வார்கள். நமக்கோ வருடாந்திரமே அதை விட குறைவாக இருக்கும். விப்ரோ மாதிரி நிறுவனங்களிலேயே அப்ரசண்டிகளாக குப்பை கொட்டுகிறவர்கள் இருக்கிறார்கள்.

வாலிப வயது நெருங்கியவுடன் மீண்டும் வருவார்கள்.

பையனுக்கு/பொண்ணுக்கு கல்யாணம் பண்ற மாதிரி எண்ணமே இல்லையா ? வயசாயிட்டே போகுதுல்ல ? அப்பறம் கொஞ்சம் வயசு தாண்டிட்டா கல்யாணம் நடக்கறது கஷ்டமாயிடும்.

திருமணம் நடந்த பின்னரும் வருவார்கள். விட மாட்டார்கள்

கல்யாணம் ஆயி இத்தன நாள் ஆயிடுச்சு ஒரு விசேசமும் இல்லையா என்று ஆரம்பிப்பார்கள்.

பிறகு குழந்தை பிறந்து வளர்ந்தவுடன் முதலிலிருந்து தொடங்கும் கேள்விகள். ஒரு நாள் வந்து நீ இன்னும் சாகவில்லையா என்று கூட கேட்பார்களாயிருக்கும்.
Download As PDF
Bookmark and Share
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

உலக அன்னையர் நாள்

என்னிடம் ஒரு நண்பர்(பெண்) கூறினார். "என்ன இருந்தாலும் எனக்கு ஜெயலலிதாவை ஒரு விசயத்தில் பிடிக்கும்." எத்தனை ஆம்பளைகளை கால்ல விழ வைக்கிறா !. அதுக்கு எத்தனை கெத்து இருக்கணும் என்றார்.  அது தவறு என்று சொல்ல நினைத்து பின்பு அமைதியாகி விட்டேன். அவர் ஒரு கோணத்தில் சொல்கிறார். அது சரியாகவே தோன்றியது. எல்லா இடத்திலும் அவர்கள்தான் வளைந்து கொடுக்க வேண்டியிருக்கிறது. ஜெயலலிதாவின் மூலம் அவர்கள் தங்கள் "எதிரிகளை" பழிவாங்கிவிட்டதாக நினைத்துக் கொள்கின்றனர் போலும், நாமெல்லாம் திரைப்பட நடிகனை நாமாகக் கற்பனை செய்து கொண்டு மகிழ்கிறோமே அது போல. இதற்கும் அன்னையர் தினத்துக்கும் எந்தத் தொடர்புமில்லை. ஆனால் உண்மையில் அன்னையர்களை அடிமைகளைப் போலத்தான் நடத்தி வருகிறோம். இதில் ஆண் பெண் பேதமில்லை. அம்மா என்றால் நாம் என்ன வேண்டுமானாலும் சொல்லலாம், ஆத்திரத்தையும் காட்டலாம். அவர்கள் அருகாமையை நாம் இழக்கும் போதுதான் தெரிகிறது. நாமெல்லாம் எதற்கும் உதவாதவர்கள் என்று. வீட்டில் ஒரு பொருளை நம்மால் தேடி எடுக்க முடிகிறதா ?

ஒரு முறை ஜக்கி வாசுதேவ் கூறினார். நான் பல பெண்மணிகளிடம், "நீங்கள் என்ன செய்கிறீர்கள் ? என்று கேட்டிருக்கிறேன். அதற்கு அவர்கள், "ஓ, நான் வெறும் குடும்பத் தலைவிதான்" (just housewife) என்பார்கள். "ஏன் நீங்கள் வெறும் இல்லத்தரசிதான் என்று சொல்கிறீர்கள் ?!" என்று நான் கேட்பேன். இரண்டு அல்லது மூன்று புதிய உயிர்களை ஊட்டி வளர்ப்பதன் முக்கியத்துவன் அவர்களுக்குப் புரிவது போலத் தோன்றவில்லை. இது ஒரு மிக முக்கியமான வேலை. என் தாயார் என்னிடம் ஒரு போதும் "எனக்கு உன்மேல் கொள்ளை பிரியம்" என்றெல்லாம் எதுவும் சொன்னதில்லை. அவர் சும்மா வாழ்ந்தார். அவருக்கு எங்கள் மேல் பிரியம் இருக்கிறதா இல்லையா என்றெல்லாம் எங்களுக்குத் தோன்றியதே இல்லை. அவர் வாழ்க்கை முழுவதையும் எங்களுக்காக அர்ப்பணித்திருந்ததால் எங்களுக்குள் அந்தக் கேள்வியே எழுந்ததில்லை. அவர் எங்களுக்காகவே வாழ்ந்தார் என்பது எங்களுக்குத் தெரியும். அவர் என்னுடன் வாழ்ந்த காலகட்டத்தில் இல்லாத ஒரு வாழ்க்கையை என்னால் நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை. நான் இப்போது இருக்கும் நிலைக்கு என் தாயாரின் நேரடியான பங்களிப்பு எதுவும் இல்லை. ஆனால் எனக்காக அவர் உருவாக்கிய சூழ்நிலை இல்லாமல், நான் இப்போது இந்த நிலையில் இருந்திருக்க மாட்டேன். இது ஏதோ ஒரு கட்டத்தில் வெளிப்படும் என்பதை நன்கு உணர்ந்து, அந்த சூழ்நிலையை உருவாக்க அவர் தன் உயிரையே கொடுத்தார். அதுதான் அவர் எனக்காகச் செய்திருப்பதில் முக்கியமானது. இது முக்கியமானதல்ல என்று எவரும் ஏன் நினைக்கப் போகிறார்கள் ? வாழ்வின் ஆரம்பக் கட்டத்தில், எதைப் பற்றியும் நாங்கள் நினைக்க வேண்டிய தேவை எங்களுக்கு இருந்ததில்லை. சரியான பின்னணி எப்போதும் இருப்பதை அவர் உறுதி செய்தார். எங்களைச் சுற்றி என்ன நடக்கிறது என்பது குறித்த கவலையே இல்லாமல் நாங்கள் வாழ்ந்தோம். பல நாட்களுக்குத் தொடர்ந்து கண்மூடி அமர்ந்திருக்கும் சாத்தியத்தையும் எனக்கு இதுவே அளித்தது.

இதிலிருந்து அவர் என்ன சொல்ல வருகிறார் என்பது புரிந்திருக்கும். அவர்கள் (அம்மாக்கள்தான்) என்ன செய்கிறார்கள் என்பதையே நாம் கவனிக்கத் தேவையில்லை. அம்மா செய்யும் எல்லாச் செயல்களுமே குடும்பத்துக்காக அன்றி அவளுக்காக இல்லை. இன்னும் சோறாகலையா என்று கேட்கத்தான் நமக்குத் தெரியும். ஒரு நாள் அம்மா வீட்டில் இல்லையென்றால் என்ன பாடு பட வேண்டியிருக்கிறது ?

அன்னைகளுக்குத் தெரியவில்லை
நமக்கான நாளை "உலகமே" கொண்டாடுகிறது
மற்றவர்க்கான தினங்களைப் போல மற்றவர்களைப் போல
இன்றும் அவர்களுக்கு விடுமுறை கிடையாது
அன்றாட வேலைகளையே இன்றும் செய்கிறார்கள்
அன்னையர்களின் புதல்வர்களோ
அன்னையர் தினமென்று தொலைக்காட்சிகளில் வாழ்த்துகிறோம்
வெட்கச்சிரிப்புடைய அம்மாவுடன் எடுத்த கைப்படத்தையும் பகிர்கிறோம்
நிலைத்தகவல் போடுகிறோம்
கவிதை புனைகிறோம்
அடுக்களையில் இருக்கும் அம்மாவிடம்
அலட்டலாக ஒரு தேநீரும் கேட்கிறோம்
Download As PDF
Bookmark and Share
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

"ஜி" போடாதீங்க "ஜி"

நான் சில நாட்களுக்கு முன்னர் எழுதிய இடுகை - ஜி போடுது கொங்கு நாடு - அதில் தமிழ்நாட்டில் வேகமாகப் பரவி வரும் நச்சுக் கலாச்சாரமான "ஜி" போட்டுப் பேசுவது பற்றி எழுதியிருந்தேன். ஜி போடுது கொங்கு நாடு என்பதற்குப் பதிலாக ஜி போடுது தமிழ் நாடு என்று தலைப்பு வைத்திருக்க வேண்டும். ஏனெனில் அது கோவைப் பகுதிகளில் மட்டும்தான் இருப்பதாக எண்ணியிருந்தேன். நாம் இருக்கும் பகுதிதானே நம் உலகம். ஆனால் தமிழகம் முழுவதுமே இப்படித்தான் பேசத் துவங்கியிருக்கிறார்கள். இனி நானும் வெட்கப்படாமல் ஜி போட்டுப் பேசும் ஒவ்வொருவருடனும்  ஜி போட்டுப் பேசாதீங்க (டா போட்டுப் பேசாதே என்பதைப் போல்) என்று கூறியாக வேண்டும் போல் இருக்கிறது. 

நான் ஈரோட்டில்தான் கல்லூரிப் படிப்பை முடித்தேன். அங்கே இருக்கும் வரை நண்பர்களை அழைப்பதும், நண்பர்கள் என்னை அழைப்பதும் "மாப்ள", "மாப்பி" என்றுதான் இருந்தது. நாங்கள் முடித்த பின்னர் வேலை தேடியலையும் படலம் வந்துவிட முக்கால்வாசிப் பேர் சென்னைக்குப் பொட்டியைக் கட்டினோம். அங்கே போய் இருந்த சில வருடங்களில் இந்த "மாப்பிள்ளை" என விளிப்பது போய் "மச்சான்" என்று அழைத்துக் கொள்ள ஆரம்பித்திருந்தோம். அதற்குப் பிறகு என்னாலும் இந்த மாப்பி என்றழைக்கும் பண்பாட்டை மீட்டெடுக்க முடியவில்லை.

வெள்ளுடை மேன்மக்கள் தொடங்கி அம்மா, ஆத்தா, ஆயா என்பவற்றை மாற்றி மூன்றெழுத்துக்  கெட்ட வார்த்தைகளாக அன்றாடம் பயன்படுத்தும் கீழ்மக்கள் வரை வரையறை இல்லாமல் ஜி போட்டுத் தாளிக்கிறார்கள். கேட்டாலே பற்றிக் கொண்டு வருகிறது. திரைப்படம், நாளிதழ்கள், வார இதழ்கள், நெடுந்தொடர்கள், நேர்காணல்கள் என எல்லா மக்கள் திரள் ஊடகங்களிலும் இந்தப் பண்பாடு படுவிரைவாகப் பரவி வருகிறது. குறிப்பாக தமிழை தமிழாக எழுத முனையும் இணையத் தமிழர்கள், தமிழை சரியாகப் பேசாதவர்கள், தமிங்கில தத்திகள், தமிழை சரியாக பேச முயலாதவர்கள், இடையிடையே தமிழில் பேசுகிறவர்கள் இப்படி எல்லாத் தரப்பினரும் ஜி போடுகின்றனர். 


ஃபேஸ்புக் - ஐ முகநூல் என்று அழைப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. ஆனால் அது தவறாயிற்றே. என்ன செய்ய ? இது வரை எத்தனையோ ஆங்கிலச் சொற்களுக்கு இனிய தமிழாக மொழிபெயர்த்துள்ளார்கள். ஆனால் அதையெல்லாம் பயன்படுத்தத் தொடங்கவில்லை தமிழ்நாட்டினர். வானத்துக்கும் பூமிக்கும் இடையே உள்ள யாவற்றையும் கிண்டலடித்து மகிழும் தமிழர்கள், கொஞ்ச வருடங்களுக்கு முன்பு வரை குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவரான நடிகை நமீதா தமிழில் பேசுவதை கண்டமேனிக்குக் கிண்டலடித்தவர்கள், நடிகர் ரஜினிகாந்த் கலைஞர்ஜி என்று அழைத்ததையும் கிண்டலடித்தவர்கள். அதாவது தமிழ் தெரியாதவர்கள் தமிழில் பேச முயற்சி செய்தால் அதையும் கிண்டல் செய்வார்கள். ஆனால் இவர்கள் மட்டும் ஒழுங்காகப் பேச மாட்டார்கள். வெட்டி பந்தாவுக்காக சார் போட்டும், ஜி போட்டும் பேசுவார்கள். ஆனால் தமிழ்த் திரையில் பாருங்கள் அரைவாசி நடிகர்களின் தாய்மொழி தெலுங்காகவோ, மலையாளமாகவோ இருக்கும். அவர்கள் எவ்வளவு சரளமாகத் தமிழ் பேசுகிறார்கள். ஆனால் தமிழ் நடிகர்களில் மற்ற மொழி பேசத் தெரிந்தவர்கள் எத்தனை பேர் ? மற்ற மொழிப் படங்களில் நடிப்பவர்கள் எத்தனை பேர் ? நமக்கு அடுத்தவர்களை ஓட்டுவதுதான் பிடிக்கும். நமது மொழியையே ஒழுங்காகப் பேசத் தெரியாமல் அடுத்த மொழியை எங்கே கற்பதாம் ?

அணு உலை எதிர்ப்பாளரும், தமிழ்தேசியவாதியுமான சுப. உதயகுமார் அவர்களும் ஃபேஸ்புக் - இல் "ஜி" குறித்துப் பதிந்த நிலைக் கூற்று

 
அடுத்ததாக நமது முதன்மை எதிரிகளான இந்துத்துவவாதிகள் சமீபத்தில் திறந்து வைத்த கொள்கை முழக்கங்கள் பொறிக்கப்பட்ட சுவர்(பெரியாருக்குப் பதிலடியாம்). இதில் இந்து மக்கள் கட்சியின் தலைவர் தமிழ் திரு. அர்ஜூன் சம்பத் என்று எழுதியிருப்பதை மனதாராப் பாராட்டுகிறேன். ஏனென்றால் இவர்கள்தான் சுவரொட்டிகளில் கூட பெயருக்குப் பின்னால் "ஜி"யைச் சேர்த்து எழுதுகிறவர்கள். அந்த "ஜி" யை இங்கே பொறிக்காமல் தமிழ் திரு என்று போட்டிருப்பது பாராட்டத்தக்கது. ஆனால் அதற்கு மேலே ஒரு சின்னம் வைத்திருக்கிறார்கள் பாருங்கள் ஒரு இந்தி "ஓம்". தமிழில் கூட ஓம் என்பதை எழுதலாம் என்று இவர்களுக்கு யாரும் சொல்லித் தரவில்லையா ? அல்லது ஹிந்திதான் "மேல்"  என்று "குறி"ப்பால் உணர்த்த விரும்புகிறார்களா ? 


இவரது பங்காளியான இந்து முன்னணித் தலைவர் ராம கோபாலன் "கோபால்ஜி ஹிந்து முன்னணி" என்றுதான் ஃபேஸ்புக்கில் வைத்திருக்கிறார்.  இது என்ன கேலிக் கூத்து ? கருணாநிதியின் ஃபேஸ்புக் பெயர் "கலைஞர் கருணாநிதி அவர்கள்" என்று எழுதியிருந்தால் எப்படி சிரித்திருப்பார்கள் ? அவரே அவரை அவர்கள் என்று அழைத்துக் கொள்வாரா என்று கேட்பது போல் ராம கோபாலன்"ஜி" - யே ராமகோபாலன்"ஜி" - யை ராமகோபாலன்"ஜி" என்று அழைத்துக் கொள்வாரா என்று கேட்கலாம். ஜி ! என்ன ஜி நீங்க இப்படிப் பண்றீங்களே ஜி !

வெளி மாநிலத்தார் யாரேனும் தமிழ்செல்வன் என்றோ தேன்மொழி என்றோ பெயர் வைக்கிறார்களா ? இல்லை டெல்லியில் யாரேனும் அர்விந்த் கேஜ்ரிவால் அவர்கள், அண்ணன் அமித் ஷா என்றோ அழைக்கிறார்களா ? தமிழர்களுக்கு மட்டும் என்னத்துக்கு இந்தப் பிழைப்பு ? "அக்கா தமிழிசை அவர்கள்" என்றுதான் வட மாநிலத்தலைவர்களும் கூப்பிட வேண்டும் என்று உங்க தேசியச் செயற்குழுவில் தீர்மானம் போடுங்கள் பார்ப்போம். இல்லை அக்காவையும் உங்கள் வடமாநிலப் பங்காளிகளைப் போல அக்கா"ஜி" என்றோ, தமிழிசை"ஜி" என்றோ அழைக்கப் போகிறீர்களா ? 

அடுத்ததாக நமது மதிப்பு மிக்க "நிமிர்ந்த நன்னடையும் நேர்கொண்ட பார்வையும்" கொண்ட தினமணி ஆசிரியர் ராகுல்"ஜி" என்று தலைப்பிட்டு தலையங்கமே எழுதி விட்டார். தனது நாளிதழில் எப்படி தமிழ் எழுத்தின் மூலமாகவே ஹிந்தித் திணிப்பை பணிவாகப் பரப்பி வருகிறார் என்பதைப் பாருங்கள். 

தினமணி கடைசிப்பக்கம்  - 09- 05 - 2015
 இப்படியே விட்டால் தமிழை ஹிந்திக்கும் ஆங்கிலத்துக்கும், தமிங்கிலத்துக்கும் இடையே தேடிப்பார்த்தாலும் கிடைக்காது போகும். தயவு செய்து ஜி போட்டுப் பேசாதீர்கள், பேசாதீர்கள். இதையெல்லாம் நம் போன்ற இணையப் போராளிகள்தான் முன்னின்று செய்ய வேண்டும்.

Download As PDF
Bookmark and Share
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

அரை கிலோ பகுத்தறிவு


பகுத்தறிவு = பகுத்து + அறிவது

எதையுமே பகுத்துப் பாய்த்து ஆராய்ந்து அறிந்து புரிந்து கொள்வதுதான் பகுத்தறிவு. இது ஒரு 80 ஆண்டுகளுக்கு முன்பு வெறும் இறைமறுப்பு என்ற பொருளில் மட்டுமே கொள்ளப்பட்டது. ஏனெனில் இந்தச் சொல்லைப் பயன்படுத்தியவர்கள் இறைமறுப்பாளர்கள் எனவே அந்தப் பொருளிலேயே முன்னிறுத்தப்பட்டது. இன்றோ எல்லோராலும் பயன்படுத்தப்படுகிறது. இன்றைய நிலையில் பகுத்தறிவு எனப்படுவது அவரவர் கொள்கைகுத் தேவையான தகவல்களைத் தேடித் திரட்டி அதை நிரூபிப்பதே பகுத்தறிவு என்றாகிவிட்டது. சரி தவறு என்று விருப்பு வெறுப்பு பாராமல் ஏற்றுக் கொள்வதெல்லாம் கிடையாது. இதில் யாரும் தோற்றதாகத் தெரியவில்லை, வென்றதாகவும் தெரியவில்லை. இன்றோ எல்லாரும் பகுத்தறிவுவாதிகள்தான். பகுத்தறிவு என்ற சொல்லை எல்லா சமய நூல்களிலும் பயன்படுத்துகின்றனர். குறிப்பாக சமயவாதிகள் மிகத் தெளிவாகவும், திறமையாகவும் அறிவியல் அறிஞர்களாகவும், வரலாற்றறிஞர்களாகவும் இருக்கிறார்கள் என்பதையும் ஒத்துக் கொள்கிறேன்



மீம்கள்(memes) என்றாலே சரியாக இருக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை என்பதற்கு இது ஒரு சான்று. ஆனா ஆவன்னா இன்னா ஈயன்னா என்றால் அது கலாய்த்ததாகிவிடுமா ? இந்த மீமில் என்ன சொல்ல வருகிறார்கள். இறைமறுப்பாளரான - பார்ப்பன எதிர்ப்பாளரான கருணாநிதியின் மனைவி ஐயரிடம் ஏதோ சாமி பிரசாதம் வாங்குகிறார். இதனால் கருணாநிதி கலாய்க்கப்பட்டார் என்று புரிந்து கொள்ள வேண்டுமாம். ஏன் சாமி கருணாநிதி சாமி கும்பிடாதவர் என்றால் அவர் மனைவி கும்பிடக் கூடாதா ? சரி இப்படி வைத்துக் கொள்ளலாம். கருணாநிதி அவரது மனைவிகளை சாமி கும்பிட அனுமதிக்கவில்லை என்றால் என்ன சொல்லியிருப்பார்கள். "பாருய்யா நாத்திகனின் சர்வாதிகாரத்தை, மனைவியின் கடவுள் நம்பிக்கைக்குக் கூட அனுமதியில்லை". இப்படி மனைவியின் இறை நம்பிக்கையை அங்கீகரித்ததால் "சொந்த மனைவி கூட கருணாநிதியை மதிப்பதில்லை, இவரெல்லாம் ஊருக்கு உபதேசம் செய்ய வந்து விட்டார்" என்று கூறுவார்கள். வேறு எப்படித்தான் இறை மறுப்பாளர்கள் தமது கற்பை நிரூபிக்கச் சொல்கிறார்கள்.

ஒரே ஜாதியில் திருமணம் செய்து கொண்டவர்களுக்கு ஜாதி ஒழிப்பு பேசத் தகுதியில்லை. ஆங்கில வழியில் குழந்தைகளைப் படிக்க வைப்பவர்களுக்கு தாய்மொழிக்கல்வி பற்றிப் பேசத் தகுதியில்லை. இது போன்று பல விமர்சனங்கள் தத்தமது எதிரிகளை தாக்கப் பயன்படுத்துகிறார்கள். சரி இப்படிக்
சொல்கிறவர்கள் பெரும்பாலும் இறை நம்பிக்கை உடையவர்களே. இந்த இறை நம்பிக்கை உடையவர்களின் மனைவிகள் திடீரென்று மனம் மாறி, நான் வேறு மதத்துக்கு மாறுகிறேன் எனக்கு அந்த மதமே உண்மையாகத் தெரிகிறது, எனக்கு தாலி அணியப் பிடிக்க வில்லை என்றெல்லாம் சொன்னால் உடனே இறைநம்பிக்கையாளர்கள் ஆகட்டும் அப்படியே என்று வாழ்த்தி ஆரத்தி எடுத்து வரவேற்பீர்கள் இல்லையா ?

மே 1 தொழிலாளர் ஊர்வலத்தில் செங்கொடி ஏந்திச் செல்பவர்கள் அனைவரும் மார்க்சியத்தைக் கரைத்துக் குடித்தவர்களா என்ன ?

நம் கொள்கை சரிதான் என்று உறுதிபட நம்பினாலும், அதை அடுத்தவர்க்கு புரியவைத்து ஏற்றுக் கொள்ள வைப்பது எத்தனை கடினம் என்று தெரியாதா ? அது தோல்வியிலே கூட முடியும். அதற்குக் கருணாநிதியே  உதாரணம். வீட்டுப் பெண்களைக் கட்டாயப் படுத்தி நம் கொள்கைக்கு ஏற்றவாறு நடக்கச் செய்ய கூட முடியும். ஆனால் அது ஒரு இழிசெயல். மனைவி கோயிலுக்குச் செல்ல வேண்டும் என்று கூறினால் கணவன்தானே கூட்டிச் செல்ல வேண்டும். நான் இறைவனை நம்பாதவன் என்று விறைத்துக் கொண்டு நிற்க முடியுமா ? அடுத்தவர் நம்பிக்கைய ஆதிக்கம் கொண்டு தடுப்பவர்கள் மருட்டுகிறவர்கள் மதவாதிகளும், ஜாதி வெறியர்களும்
தான்.

சரி அந்த ஐயரை ஏன் விமர்சிக்க வில்லை, காலம் பூராவும் தன்னைத் திட்டிய கருணாநிதியின் மனைவிக்கு இவர் ஏன் பிரசாதப் பையை வழங்க வேண்டும் என்று யாருக்கும் தோன்றவில்லையே. ஒரு வேளை அவரது பெருந்த
ன்மையை ஆராதிக்கும் பொருட்டு அதை விட்டுவிட்டீர்களா ? கருணாநிதி நாத்திகம் பேசுகிறார், இந்துக்களை விமர்சிக்கிறார் ஆனால் சன் டிவியில்தான் முதன் முதலில் ராமாயணத்தை ஒளிபரப்பினார்கள் என்று விமர்சனம் செய்தார்கள். ஆனால் கருணாநிதிக்கே சன் டிவியின் மீது முழு அதிகாரம் இல்லாமல் இருந்தது. இருப்பினும் இதற்குக் கருணாநிதியையே விமர்சித்தார்கள். ஏன் கருணாநிதியின் தொலைக்காட்சியில் போய் ராசி பலன் சொல்கிறார்கள், ஏன் ராமாயண, மகாபாரத ஒளிபரப்பு உரிமையைக் கொடுத்தார்கள் இறை நம்பிக்கையாளர்கள் என்று யாரும் கேட்கவில்லையே !!

எனக்கு கருணாநிதியை ஆதரிக்க வேண்டுமென்ற விருப்பமில்லை. கருணாநிதியை விமர்சிக்க நூறு காரணங்கள் இருக்கின்றன. அவரை விமர்சிக்கப் பயன்படுத்து காரணம் கருத்து தவறானது. ஏனென்றால் அது என்னையும் சேர்த்துத்தான் விமர்சிக்கிறது. அதனால்தான் பதில் சொல்ல வேண்டியிருக்கிறது.
Download As PDF
Bookmark and Share
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

வாட்ஸ்-ஆப் அந்தரங்கக் காணொளிகள் - பகிர்தலும் குற்றமே !

இந்த வாட்ஸ் அப் என்பதை கட்செவிஅஞ்சல் என்று தமிழ்ப்படுத்தியிருக்கிறார்கள். இந்த கட்செவி அஞ்சலோ மனிதனைப் படுத்தி எடுக்கிறது. குறுஞ்செய்திகளுக்குக் கட்டணம் செலுத்தி காய்ந்து போயிருந்த நமக்கு, திறன் பேசியுடன் வந்த சீதனமே இந்தக் கட்செவி அஞ்சல். இதில் நாம் குறுஞ்செய்திகள் மட்டுமன்றி, நெடுஞ்செய்திகள், புகைப்படங்கள் ஆகியவற்றை அனுப்பவும் இயலும். இது இணைய இணைப்பின் வழி இலவசமாகக் கிடைத்ததால் குறுஞ்செய்தி சேவை நமக்குத் 99 % தேவையில்லாமலே போய்விட்டது. இது ஒரு மக்கள் ஊடகமாக அற்புதமாகப் பயன்படுத்துகின்றனர். சின்னச் சின்ன சாதனைகள், அட போட வைக்கும் கவனிப்பாரற்ற மனிதர்களின் சாகசங்கள் என காணொளிகள் களைகட்டுகின்றன. ஊடகங்களில் வராத செய்திகள் கூட இதில் மிகவேகமாகச் சென்று சேர்கிறது. ஆனால் என்ன ஒன்று திறன்பேசி+வாட்ஸ் அப் + இணைய இணைப்பு இருக்க வேண்டும்.

நம் மனிதர்கள் எப்படிப் பயன்படுத்துவார்கள் என்பதைப் பார்க்கிறோமல்லவா ?  இலவசமாகக் கிடைக்கிறது என்பதற்காக ஆளாளுக்கு ஒரு குழுவை உருவாக்கிக்கொண்டு கண்டதையும் பகிர்கின்றனர். இதில் நன்மை இல்லாமலும் இல்லை. ஆனால் ஒரு செய்தியின் உண்மைத்தன்மையைப்பற்றி எந்த வித முன்னெச்சரிக்கையும் பொறுப்புமின்றி வெளியிடுகின்றனர். சரி இலவசமாகக் கிடைப்பதால் அதை எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்தலாமல்லவா ? அதை யார் கேட்கப்போகின்றார்  ? முன்பு ஃபேஸ்புக் பரபரப்பாக இருந்த போது ஒரு செய்தி பொய் எனில் அதை ஒருவர் சொன்னால் எல்லார்க்கும் தெரியும் இன்றோ மூடிய கதவுக்குள் இருக்கும் கட்செவி அஞ்சலில்(Whatsapp) கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்று அலைகின்றனர். நான் இதில் நம் மக்கள் எவ்விதம் சீரழிக்கிறார்கள் என்று சொல்ல வருகிறேன்.

இதில் கொடுமையின் உச்சம் என்னவென்றால் வெவ்வேறு நாடுகளில் இருக்கும் பயங்கரவாதிகளின் காணொளிகள் கூட மிக எளிதாக நம்மை வந்தடைகிறது. தலையை வெட்டுவது, அடித்துத் துன்புறுத்துவது, கையை வெட்டுவது, சுட்டுக் கொல்வது என்ற மனித இனத்தின் இழிவை அப்படியே காட்சியாக்கிக் குழந்தைகள் வரை அதை சாதரணமாகக் கொண்டு எவ்வித உணர்ச்சியுமின்றி வந்து நம்மிடம் காட்டுகின்றனர். அவைகளைப் பார்த்தால் நமக்கு ஈரல் குலை நடுங்குகிறது. ஏனெனில் குழந்தைகள்தான் திறன்பேசியை அதிகம் வைத்துப் பயன்படுத்தி வருகின்றனர். அதிலுள்ள டெம்பிள்ரன், சப்வேசர்ஃப் வகை விளையாட்டுக்களில்தான் அவர்கள் திளைத்துக் கிடக்கின்றனர்.

அடுத்து நான் முக்கியக் குற்றவாளியாகக் குறிப்பிட விரும்புவது ஆண்களை, குறிப்பாக இளைஞர்களை. இவர்கள் எவ்வகைக் காணொளிகளை எவ்விதமான குற்ற உணர்ச்சியோ அறவுணர்ச்சியோ இன்றிப் பகிர்ந்து கொள்கின்றனர் என்று நான் சொல்லாமலேயே புரிந்திருக்கும். பெண்களின் குளியளறையிலும், கழிவறையிலும் எடுக்கப்பட்ட புகைப்படங்கள், காணொளிகள் கணக்கற்ற வகையில் பரவி வருகின்றன. இதை எல்லா வயது ஆண்களும் ரசித்தும், கேட்டு வாங்கியும், பரப்பியும் வருகின்றனர்.

வாட்ஸ் அப்பில் பெண்கள் பற்றி அவதூறு பரப்புபவர்களுக்கு 7 ஆண்டு சிறை: போலீஸ் எச்சரிக்கை என்று அறிவிப்பு வந்தாலும் அதனால் இது வரை தண்டிக்கப் பட்டவர் யாருமில்லை. ஆனால் பரவும் காணொளிகளுக்கு மட்டும் குறைச்சலில்லை.  இது எப்படி நிற்கும். பரப்புகிறவர் திருந்தினாலொழிய நிற்கப் போவதில்லை. அந்தப் பெண்களின் மனநிலை குறித்து கொஞ்சமாவது மனசாட்சியைக் கொண்டு சிந்திக்க வேண்டும். சிந்திப்பார்களா ?

ஒரு பெண்ணை கொடூரமாக பாலியல் வன்முறை செய்து கொன்று, தூக்கு தண்டனைக்காகக் காத்திருப்பவனே அந்தப் பெண் மீதுதான் குற்றம் சாட்டுகிறான்(டெல்லி பாலியல் குற்றவாளி முகேஷ் சிங்). ஆக பாலியல் வன்முறை செய்தவனே, கொன்றவனே அதைக் குற்றமாகக் கருதாமல், அப்பெண்ணையே குற்றவாளி ஆக்கும் சமூகத்தில் இது போன்ற நிர்வாணப் படங்களை பரப்பி இன்பம் காண்பவர்கள் ஏற்றுக் கொண்டு நிறுத்தவா போகிறார்கள். ஊர் தவறாமல் சாராயக்கடை இருக்கும்போது கோக் குடிக்காதே உடலுக்குத் தீங்கு என்றால் எள்ளி நகையாடத்தானே செய்வார்கள்.

அவர்கள் ஏன் தங்களைத்தானே குளியலறையில் வைத்து தற்படம் () கைப்படம் (selfie) எடுத்துக் கொள்ள வேண்டும் ? அவர்களாகத்தான் எடுத்து மற்றவர்களுக்கு அனுப்பியிருப்பார்கள். எனவே இது அவர்களின் தவறு.

இவர்கள் கள்ளக்காதல் செய்யும் எடுத்ததைப் பரப்பினால் என்ன வந்துவிடும், அவர்களே தவறு செய்தவர்கள்தானே அவர்கள் மீது என்ன மரியாதை வேண்டிக் கிடக்கிறது.

இது எல்லார்க்குமே தெரியும். எவனோ ஒருவன் எனக்கு அனுப்பினான் நானும் அனுப்புகிறேன். மற்றதைப் பற்றியெல்லாம் எனக்குக் கவலையில்லை. நான் அனுப்பாததால் இது பரவாமல் இருக்கப் போகிறதா ?

அவர்கள் ஏன் படுக்கையறையில் இருக்கும் போது உடலுறவு கொள்வதைப் பதிவு செய்ய வேண்டும் இப்போது வருந்த வேண்டும்.

அதெல்லாம் எனக்குத் தெரியாது. நான் அப்படித்தான் அனுப்புவேன் உனக்கென்ன ?

இப்படியெல்லாம் பதில் வரும். இவையனைத்தையும் ஒரே கேள்வியில் மடக்கி விடலாம். அந்தக் குறிப்பிட்ட வீடியோவிலோ, ஆடியோவிலோ இருக்கும் பெண் உங்களது வீட்டுப் பெண்ணாகவோ, உங்களுக்கு வேண்டிய பெண்ணாகவோ இருந்து விட்டால் என்ன செய்வார்கள். "என்ன" செய்ய வேண்டுமோ அதைத்தானே செய்வார்கள். நம் வீட்டுப் பெண்கள் என்றால் ஒரு நியாயம் தெரியாத பெண் என்றால் ஒரு நியாயமா ? என்றுதான் கேட்கிறேன். தன் வீட்டுப் பெண் பத்தினியாக இருக்க வேண்டும். அடுத்த வீட்டுப் பெண் பரத்தையாக இருக்க வேண்டும் என்று எண்ணும் ஆண்கள்தான் திருந்த வேண்டும். இது தவறு என்று ஒவ்வொருவரும் உணரவேண்டும். மனசாட்சியுள்ள ஒவ்வொருவருக்கும் இது நிச்சயம் புரியும்.

சரி அவர்கள் வாதத்தின் படி வைத்துக் கொண்டால், அந்தப் பெண்ணோ ஆணோ குற்றம் செய்தவர்களாக இருந்தாலும் அவர்களுக்கும் குடும்பம் என்று ஒன்று இருக்குமல்லவா ? அவர்கள் எத்தகைய சங்கடத்தை எதிர் கொள்வார்கள் என்றாவது யோசிக்க வேண்டாமா ? நமது குடும்ப உறுப்பினர் செய்யும் தவறுக்கு நாம் பொறுப்பாக முடியாது, அவரைக் கட்டுப் படுத்தவும் முடியாது. ஆனால் அந்தத் தவறுக்கு நாமும் சேர்ந்தல்லவா பாதிக்கப் படுவோம் ?

இதற்கு முன்பு இணைய வெளியெங்கும் பல்வேறு தளங்களில் இது போன்ற வீடியோக்கள் வெளிவந்தன. சைபர் க்ரைமும் இதற்கு ஒரு தடை போட முடியாமல் திணறின. இன்றும் திணறிக் கொண்டிருக்கின்றனர். ஏனென்றால் இங்கிருந்து எடுக்கப்படும் வீடியோக்கள் வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டு அங்கிருக்கும் அயோக்கிய நாதாரிகள் மூலமாக இணையத்தில் ஏற்றப்பட்டு வெளியாகின. இதனால் அவர்களைப் பிடிப்பது இயலாத செயலானது. இன்றோ வாட்ஸ் - அப் மூலமாக இது பல மடங்கு அதிகமாகி விட்டது.

இதை பெண்களின் தவறாக/திமிராக சித்தரிப்பதே தவறானது. ஒருவருக்குத் தெரியாமலே அவரது மடிக்கணினி கேமராவின் மூலமாகவே இதை எடுக்கவும் முடியும். யாருடைய வீட்டின் குளியலறையிலும், படுக்கையறையிலும் ஸ்பை கேமரா வைத்து படம் பிடிக்க முடியும். வீட்டு வேலை செய்பவர், வயரிங் வேலை, ப்ளம்பர், கேபிள் ஆப்ரேட்டர் என்றெல்லாம் சொல்லி வீட்டுக்குள் நுழையும் தெருப்பொறுக்கிப் பன்னாடைகள் இந்தக் கேமராவை ஒளித்து வைத்து எடுக்கின்றனர். எடுக்கப்பட்ட வீடியோவை வைத்து சம்பந்தப்பட்ட பெண்களிடம் வேண்டியவற்றை கறந்து விட்டுப் பின்னர் வீடியோக்களையும் இணையத்தில் ஏற்றி விடுகின்றனர்.

தன்னையே நிர்வாணமாகவோ அரை நிர்வாணமாகவோ படம் எடுத்துக் கொள்பவர்கள் எல்லாரிடமும் அனுப்புவதற்காக எடுப்பதில்லை. திரைப்படம், விளம்பரங்களில் வரும் பெண்களைப் போலவே தங்களை ஒப்பனை, பாவனை செய்து கொள்பவர்கள் தம்மீது கொண்ட குறுகுறுப்பு உணர்வினால் புகைப்படம் எடுப்பர், (அவரவர் படுக்கையறையில், என்னென்ன செய்கிறார்கள் என்று அவரவர்க்குத் தெரியுமல்லவா இதில் என்ன வேடிக்கை இருக்கிறது)

இன்னும் சிலர் விளையாட்டுத்தனமாக ஆபாசமாகப் படம் பிடித்தது எனப் பல வகை வீடியோக்கள் உலாவருகின்றன. பர்தாவுடன் இருக்கும் பெண்கள் கூட இந்த வீடியோக்களில் சிக்கியுள்ளனர்.

உங்கள் வீட்டின் அடுத்த தெருவில் அப்படி ஒரு பெண் இருப்பதே உங்களுக்குத் தெரியாமல் இருக்கலாம். அவள் வெளியேகூட வந்திருக்க மாட்டாள். ஆனால் அவளுடைய பெயரும் அலைபேசி எண்ணும் அடுத்த ஊரின் பொதுக்கழிவறைச் சுவற்றில் எழுதப்பட்டிருக்கும் "மேட்டர்" என்ற அடைமொழியுடன். அவள் நண்பனுடன் ஏதாவது பிரச்சனை வந்து விட்டால், அவனும் ஒரு மாதிரியான ஆளாக இருந்தும் விட்டால் மேலே நான் சொன்னபடிதான் நடக்கும்.

அலைபேசியில் பெண்களை வேண்டுமென்றே உடலுறவு, கைமைதுனம் குறித்துப் பேசவைத்து அதைப் பதிவு செய்து எல்லோர்க்கும் பரப்பி அதை ஒரு வைரல்-ஆக மாற்றி பரபரப்பூட்டி மகிழ்கின்றனர். இவர்களை நம்பி தமது அந்தரங்கம், உணர்வுகள், படுக்கையைப் பகிர்ந்து கொள்பவர்களை ஏமாற்றி அவர்கள் மானத்தை வாங்குகின்றனர். ஆனால் பெண்கள்தான் காசுக்காக ஏமாற்றுகிறார்கள் என்று  நடிகர்களும் வசனம் பேசுகிறார்கள். எல்லோரும் அதை வரவேற்று சிரிக்கிறார்கள்.

அது போன்ற வீடியோக்கள், புகைப்படங்கள் எடுத்தவர்கள் அதை அழித்து விட்டாலும், அந்த அலைபேசியோ, மெமரி கார்டோ இதற்கென்றே அலையும் நபர்களின் கையில் கிடைத்தால் ரெட்ரைவல், ரிகவரி மென்பொருட்களைப் பயன்படுத்தி, அந்த வீடியோக்களையும், புகைப்படங்களையும் மீட்டு எடுத்து அவைகளைத் தக்கவாறு பயன்படுத்திக் கொள்கின்றனர்.

சராசரிப் பெண்களின் நிலையே இப்படியென்றால் நடிகைகளைப் பற்றிக் கேட்கவே வேண்டாம். மாதம் ஒரு நடிகையின் நிர்வாண வீடியோக்கள் வருகின்றன. அதை ஊடகங்களே தலைப்பிட்டுப் பரப்பி அவர்களின் மானத்தை வாங்குகின்றன. நடிகை ஆபாசமாக நடிக்கிறாள் என்று அவளுடைய படம், வீடியோ க்ளிப்பிங்க்ஸ் களைப் பார்த்துப்,  பகிர்ந்து பழகிய ஆட்கள், நடிகையாக இல்லாத சாதாரணப் பெண்ணாக இருந்தாலும் எந்தவித குற்றவுணர்ச்சியும் இன்றிப் பரப்பியும், பேசியும் மகிழ்கின்றனர். அவர்களுக்கு ஒரு நிர்வாண உடல் மட்டும் போதுமாக இருக்கிறது. யார் எக்கேடு கெட்டால் என்ன என்று இருக்கின்றனர். ஏதாவது ஒரு நாள் அவரவர் வீட்டுப் பெண்கள் இதில் மாட்டினால் தெரியும். ஆனால் அப்போது நாம் வருந்துவதைப் போல மற்றவர்கள் வருந்தாமல் வீடியோ பகிர்ந்து கொள்ளப்பட்டுக் கொண்டே இருப்பார்கள். அப்போது பகிராதே எனது குடும்பத்தைப் பாதிக்கிறது என்று சொல்லும் தகுதியையே இழந்திருப்பார்கள். 

இதனால் கொலை, தற்கொலைகள், பணம் பறிப்புகள் எனப் பல நிகழ்வுகளை நாம் செய்தியாகப் படிக்கிறோம். ஆனால் இது போன்ற வீடியோக்கள் வாட்ஸ் அப்பில் வந்தால் பரப்புவது தவறு என்றோ நாமும் அச்செயலுக்குத் துணை புரிகிறோம் என்றோ யாரும் உணர்வதில்லை. என்னுடைய வேண்டுகோளெல்லாம் ஒன்றுதான். உங்களுக்கு வரும் எவ்விதமான செய்தியோ, வீடியோ, ஆடியோ- வாக இருந்த போதிலும் அதை மற்றவருக்குப் பகிராதீர்கள். அதை உங்களுக்கு அனுப்பும் நபருக்கும் புரிய வைக்க முயற்சி செய்யுங்கள். நம்மால் பாலியல் வன்முறை நடப்பதைத் தடுக்க முடியாது, ஆனால் நாம் பாலியல் வன்முறை நடபெறுவதற்குத் துணை புரியாமல் இருக்க முடியும். அதில் பங்கெடுக்காமல் இருக்க முடியும். இது அவரவர் அறவுணர்ச்சி சார்ந்தது. அவர்கள் தவறு செய்கிறார்கள் என்று சாக்கு சொல்லிவிட்டு நீங்களும் தவறு செய்ய முடியாது. சாராயக்கடை எல்லா ஊரிலும் இருக்கிறது என்பதற்காக எல்லாரும் குடிப்பதில்லையே, வைராக்கியத்துடன் இருக்கத்தானே செய்கிறார்கள். ஊரெல்லாம் கறிக்கடை இருக்கிறது என்பதற்காக சைவ உணவுக்காரர்கள் போய் வாங்கிவிடுகிறார்களா ?


Download As PDF
Bookmark and Share
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment