கேட்கிறார்கள் கேட்கிறார்கள் கேட்டுக் கொண்டே இருக்கிறார்கள்

பள்ளிக்குச் செல்லும் வயதில் வீட்டுக்கு வருகின்றவர் போகின்றவர் எல்லோரும் இப்படிக் கேட்பார்கள்

எத்தனாவது படிக்கற ? எத்தனாவது ரேங்க் வாங்கற ?

நல்லாப் படிக்கணும் என்ன !! ? ஃபர்ஸ்ட் ரேங்க் வாங்கணும் உங்கம்மாப்பா எவ்வளவு சிரமப்பட்டுப் படிக்க வைக்கிறாங்க. படிச்சாத்தான் நல்ல வேலை கிடைக்கும், அப்பறம் எங்கள மாதிரி கஷ்டப்படத் தேவையில்லை. இதெல்லாம் எங்கள் காலம்.

பதில் : ??!!!

இப்போது இக்கேள்விகள் இப்படி மாறியிருக்கும்.

எந்த ஸ்கூல்ல படிக்கற ?  சிபிஎஸ்சியா இல்ல மெட்ரிக்கா ? (இப்பல்லாம் யார் அரசுப் பள்ளியைத் தேடுகிறார், இல்லாதப்பட்டவர்களைத் தவிர) ஹாஃப்ஏர்லில என்ன க்ரேடு வாங்கின ?

அடுத்து கல்லூரிக்குப் போகும் வயதில், வந்து அப்பாவிடம் கேட்பார்கள். அப்படியே நம்மிடமும்.

பையன எந்த கோர்ஸ்ல சேத்தீங்க ? எந்த காலேஜ் ? அது படிச்சா ஃப்யூச்சர் நல்லா இருக்குமா ? ஸ்கோப் இருக்குமா ? வெளிநாடெல்லாம் போக முடியுமா ? என்ன மாதிரி வேலை கிடைக்கும் ?

பதில்: ஃபைனல் இயர்லதான் தெரியும்.

எவனுக்குத் தெரியும் அதெல்லாம், இப்போதைக்கு இதுதான் வளரும் துறை என்று "நம்பி" அதைத் தேர்ந்தெடுத்துப் படிக்கிறோம். வயித்தில் நெருப்பைக் கட்டிக் கொண்டு இருக்க வேண்டியதுதான். என்று நினைத்துக் கொள்ள முடியும் வெளிய சொல்ல முடியாது.

படித்து முடித்தவுடன் வந்து கேட்பார்கள்.

இன்னும் வேலைக்குப் போகலையா ? கேம்பஸ்ல செலக்ட் ஆகலையா ? எத்தனை அரியர் இன்னும் இருக்கு ? பார்ட்டைமா போலாம்ல ? இல்ல அப்பா பிஸினஸையே பாத்துக்கப் போறயா ?

பதில்: தேடிக்கிட்டே இருக்கேன், ஒரு கம்பெனில கூப்டறேன்னு சொல்லிருக்காங்க. பாக்கணும் !

வேலை தேடிக் கொண்டிருக்கிறேன் என்று சொன்ன பிறகும், அல்லது தெரிந்து கொண்டபின்னும் இத்தனை வீச்சுக்கள் !

தக்கி முக்கி ஒரு அடிமை வேலையில் சேர்ந்த பின் வருவார்கள்.

எந்த கம்பெனி ? என்னா மாதிரி வேலை ? எவ்வளவு சம்பளம் ? போகப் போக சம்பளம் ஏறுமா ? வேலை பர்மனென்ட்டா ?

பதில்: ஒரு டொன்டி(20) வரும் என்று பொய் சொன்னால்,

இவ்வளவுதானா ? ரொம்பக் கம்மியா இருக்கே ? இத்தன படிச்சும் இவ்வளவுதான் குடுக்கிறானா ? இதுக்குப் பேசாம தொழிலையே பார்த்துக்கலாமே ? என்பார்கள்

சம்பளம் ஐந்திலக்கத்திற்குக் குறைவு என்றால் கௌரவக் குறைவு என்பதால், பெரும்பாலும் வாங்கும் ஊதியத்தின் இருமடங்காகவே சொல்வார்கள் இளைஞர்கள். இருந்தாலும் கேள்வி கேட்கும் சொந்தக் காரரோ, பக்கத்து வீட்டுக் காரரோ அல்லது வேறு யாருமோ என்ன சொல்வார்கள் தெரியுமா ? எனக்குத் தெரிந்த பையன் ஒருவன் இந்த வேலையில் இருக்கிறான். அவனுக்கு சம்பளம் ஒரு இலட்சத்துக்கும் மேலையாம் என்று சொல்வார்கள். நமக்கோ வருடாந்திரமே அதை விட குறைவாக இருக்கும். விப்ரோ மாதிரி நிறுவனங்களிலேயே அப்ரசண்டிகளாக குப்பை கொட்டுகிறவர்கள் இருக்கிறார்கள்.

வாலிப வயது நெருங்கியவுடன் மீண்டும் வருவார்கள்.

பையனுக்கு/பொண்ணுக்கு கல்யாணம் பண்ற மாதிரி எண்ணமே இல்லையா ? வயசாயிட்டே போகுதுல்ல ? அப்பறம் கொஞ்சம் வயசு தாண்டிட்டா கல்யாணம் நடக்கறது கஷ்டமாயிடும்.

திருமணம் நடந்த பின்னரும் வருவார்கள். விட மாட்டார்கள்

கல்யாணம் ஆயி இத்தன நாள் ஆயிடுச்சு ஒரு விசேசமும் இல்லையா என்று ஆரம்பிப்பார்கள்.

பிறகு குழந்தை பிறந்து வளர்ந்தவுடன் முதலிலிருந்து தொடங்கும் கேள்விகள். ஒரு நாள் வந்து நீ இன்னும் சாகவில்லையா என்று கூட கேட்பார்களாயிருக்கும்.
Download As PDF
Bookmark and Share
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

0 பின்னூட்டங்கள்:

கருத்துரையிடுக

நான் படைப்பாளியோ, விமர்சகனோ அல்லன். வாசகன் மட்டுமே. எனவே உங்கள் கருத்தின்றி எனது இடுகை முழுமை பெறாது. நிறைகளை விடவும் குறைகள் அதிகம் எதிர்பார்க்கிறேன்