குமுதம் திருந்தாது !!


ஒரு நடிகையின் படத்தைப் போடுவதற்கு ஏதாவது ஒரு கருத்தோ அல்லது கிசு கிசுவோ அல்லது பயோடேட்டாவோ போடுவார்கள்.

ஆனால் ஒரு பொம்பள இறந்தால் கூட அவள் சின்ன வயசுல ஜட்டியுடன் இருக்கும் படத்தைப் போடுமளவிற்கு தரம் தாழ்ந்த அச்சு இதழ்கள் தமிழ்நாட்டில் இருக்கின்றன. ஒரு வேளை பிணம் நிர்வாணமாக இருந்து விட்டால் அதையும் வெளியிடத் தயங்குவதில்லை இவர்கள்.

இவர்கள் வெளியிடும் செய்திகள் திரைப்பட நடிகர்களைக் குறித்ததாக இருப்பின் முடிக்கும் போது ஆம் ஆம் என்றுதான் முடிப்பார்கள். சொல்லிவிட்டாராம், பேசிவிட்டாராம், முடித்துவிட்டாராம் என்று ஒரே ராம் புராணாமாக இருக்கும். இப்படிச் சொன்னால்தான் கிசு கிசு பரவும்.

அதற்கு தற்போதைய உதாரணம்; தோழர் காஜல் அகர்வால் அவர்கள் தமிழ் படத்தை விடவும் தெலுங்குப் படத்தில்தான் பெண்களுக்கு மரியாதை கொடுக்கிறார்கள் என்று சொல்லிவிட்டார். பாரதிராஜா உணர்ச்சி வசப்பட்டு, காஜலை அறிமுகப்படுத்தியதற்காக வெட்கப்படுகிறேன் என்று அவரது எதிர்வினையை வெளியிட்டிருக்கிறார்கள்.

இந்தச் செய்தியில் பாரதிராஜா வின் படத்தையும், கூடவே ஒரு நடுநிலை கருத்துச் சொன்ன ஜனனியின் புகைப்படத்தையு சிறிய அளவில், பிரசுரித்து விட்டு, காஜலின் சேலை விலகி வயிறு தெரியுமாறு இருக்கும் செக்ஸியான படத்தையும் போட்டிருக்கிறார்கள். நான் படம் பாடல்கள் பார்ப்பதை ஏறக்குறைய நிறுத்தி விட்டதால், எது எந்தப் படம் என்பது குறித்த பொது அறிவு குறைவு. ஆனால் காஜலின் அந்தப்புகைப்படம் தெலுங்குப் படத்தில் வருவதாக இருக்கலாம். ஒரு வேளை இதைத்தான் தெலுங்குப் படத்தில் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் என்றும் சொல்லியிருக்கலாம்.

எனக்கு என்ன ஐயமென்றால், இங்கே தமிழர்களைக் கேவலப்படுத்திய காஜல் மீது ஆத்திரம் வரவேண்டுமா அல்லது காஜலின் புகைப்படத்தைப் பார்த்து வேறெதாவது உணர்ச்சி வர வேண்டுமா? அந்த உணர்ச்சி வந்த பின் ஏதாவது நடக்க வேண்டுமா? என்ன விரும்புகிறது குமுதம்.

இதே பதிவு கொஞ்ச நாளுக்கு முன்புதான் எழுதினேன் எந்த மாற்றமுமில்லாமல். குமுதம் அப்படியேதான் இருக்கும். எனக்கு மீண்டும் பல முறை இதே பதிவை எழுதவைக்கும். 

குமுதம் ரிப்போர்ட்டர் என்ற புலனாய்வு வார இதழ் குஷ்புவையும், முகவையும் பெரியார் மணியம்மையாகச் சித்தரித்து நூறாவது தடவையாக தனது இயல்பை வெளிப்படுத்தியிருக்கிறது. அப்படியெல்லா
ம் யோசிப்பதற்கு, வெளியிடுவதற்கு, இது போன்ற நடிகைகளின் செக்ஸியான படங்களைப் போட்டு இல்லாததும் பொல்லாததுமான செய்திகளை நாட்டு நடப்புக்கு இணையான செய்திகளாக்குவதும்தான் காரணம். இறுதியில் அஃசல் குருவின் தூக்குத் தண்டனையை ஆதரித்து தனது பொது மனசாட்சியைக் காட்டியிருக்கிறது.

இது மட்டுமல்ல, ஆர்யா தமிழ் ரசிகர்களைக் கேவலப்படுத்தியது மாதிரியான தமிழகத்தின் மானம் காக்கும் முக்கியமான செய்திகளைச்சொல்வது பிரச்சனையைக் கிளப்புவது. இப்படியாக குமுதம் கிளப்பிய பிரச்சனைதான் ஜெயராம் கருத்த தமிழ்ப் பொண்ணு என்று தனது பணிப்பெண்ணை வர்ணித்ததை, தமிழர்களைக் கேவலப்படுத்தி விட்டதாகத் திரித்து பிரச்சனையாக்கியது.

ஆனால் இது வெளியிடும் பெண்கள் யாரும் தமிழ்ப் பெண்களாக இருக்க மாட்டார்கள், வட இந்திய, மலையாளப் பெண்களின் படங்களை மட்டுமே வெளியிடும் ஏனென்றால் அவர்கள்தான் பெருந்தன்மையாக உடையணிபவர்கள், குமுதத்திற்கு அந்த மாதிரியான படங்கள்தான் தேவை. என்னதான் ஃபாரின் பிகர்ஸ் பார்த்தாலும், நம்ம ஊரு ஃபிகருகளை சைட்டடிப்பதுதான் சுகமே என்று கருதும் வாசகர்களும் இருப்பதால், அப்பப்ப ஏதாவதொரு கல்லூரியில் சென்று 10 கல்லூரி மாணவிகளின் கருத்துக்கள் என்று இந்தியா முன்னேற்றமோ அல்லது, பிடித்த நடிகர்கள் குறித்த கருத்துக்களை விவாதங்கள் என்று போட வேண்டியது வெறும் படங்களைப் போடக்கூடாதல்லவா இதென்ன வலைப்பூவா இல்லை ஃபேஸ்புக்கா வெறும் பொம்பளப் படங்களை பகிரவும், வெளியிடவும் ஒரு நியாயம் வேண்டாமா. ஏதாவது மாடலிங், மிஸ் சென்னை, மிஸ் ஆசியா, அல்லது ஏதாவதொரு விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற பெண் தமிழகத்திற்கும், தமிழர்களுக்கும் பெருமை சேர்த்திருக்கிறார், அவர் சென்னையைச் சேர்ந்த சுத்தத் தமிழ்ப் பெண் என்று பல பேரைப் போட்டிருக்கிறார்கள். அதில் எத்தனை பேர் தமிழ்ப் பெண்கள் என்றுதான் தெரியவில்லை.

சிறுகதையில் கூட வரையப்படும் படங்களில், முந்தானை நூல் மாதிரிதான் சுருண்டு கிடக்கும், ரவிக்கை தாழ்வாகவும் இருக்கும் நடுவில் ஒரு கோட்டை தவறாமல் வரைந்திருப்பார்கள். தொப்புளையும் வரைந்திருப்பார்கள், யார்தான் உலகத்தில் அப்படியெல்லாம் சேலை கட்டுவார்களோ தெரியவில்லை. சுடிதாராக இருந்தால் நன்றாக உடலைக் கவ்விப் பிடித்து வடிவைக் காட்டும்படி இறுக்கமாக இருக்கும். க்லீவேஜ் நிச்சயம்.

விளையாட்டு வீராங்கனகளின் படங்களைப் போடுகிறார்கள். அவர்கள் ஸ்போர்டி அல்லது மினி ட்ரொசர் மாதிரியான உடைகளுடன் இருக்கும் படங்கள் போடுகிறார்கள். இதை தவறானதாக சொல்ல வில்லை. குமுதத்தின் வாசகர்களாக இருப்பவர்களுக்கு குமுதம் எதனைப் பழக்கப்படுத்தி வைத்திருக்கிறது. நடிகைகளின் அந்தரங்க வாழ்க்கை குறித்து கிசுகிசுக்களை மானாவாரியாகப் பரவவிடுவது, ஏதாவதொரு படத்தில் பிகினியில் நடித்தைப் படமாகப் போடுவது, இல்லை செய்தியாக முடியாவிட்டால் இரு அனுமானமாகவாவது போடுவது. இதையெல்லாம் படிக்கும் காணும் குமுதம் வாசகனுக்குப் பெண்ணைப் பார்த்தாலே சைட்டடிக்கவும், மார்க் போடவும், அளவெடுக்கவும், கேலி செய்யவும், கமெண்ட் அடிக்கவும்தான் கற்றுக் கொடுக்கிறது. அந்த மன்நிலையுள்ளவன் சானியாவையோ சாய்னாவையோ, தீபிகா பல்லிகலையோ அல்லது வேறு யாராவது விளையாட்டு வீராங்கனையையோ பற்றிய செய்திகளையும், புகைப்படத்தையும் வெளியிடும்போது அவைகளை என்ன கோணத்தில் பார்ப்பான் என்று குமுதம்தான் சொல்ல வேண்டும்.

இன்னொரு பிரச்சனையை சில நாட்களுக்கு முன்பு கிளப்ப முயன்றது குமுதம். நடிகை சுஹாசினி சொன்னார். கதாநாயகன் முடிவெட்டாமல், சவரம் பண்ணாமல் எப்படி இருந்தாலும் கதாநாயகி மட்டும் அனுஷ்கா மாதிரி அழகாக இருக்கிறார்கள். எங்களுக்கு மட்டும் அழகான ஹீரோக்களைப் பார்க்கணுன்னு ஆசையிருக்காதா ? எம்ஜிஆர், கமல், அரவிந்த் சாமிக்கு அப்பறம் ஹேண்ட்சம் ஆன ஹீரோக்களையே பாக்க முடியல என்று சொல்லியிருந்தாராம். அதை அப்படியே தமிழ்ப்படங்களில் அவர் சொன்னதையே செய்து கொண்டிருக்கும் சில் இயக்குநர்கள், நடிகர்களிடம் சொல்லி அவர்களின் கருத்தை வாங்கி அதை, சுஹாசினிக்கு எதிராகப் பொங்கும் தமிழ் ஹீரோக்கள் என்று ஒரு பிரச்சனையாக சித்தரிக்க முயன்றது. அப்புக் குட்டி, தருண்கோபி, விதார்த், இன்னும் யாரோ இருவர். இவர்களெல்லாம் சொன்னது சுஹாசினி அப்படியெல்லாம் சொல்லியிருக்கக்கூடாது, தமிழ்நாட்டில் இருக்கும் பெரும்பான்மையான ஆண்கள் சராசரியான தோற்றம் கொண்டவர்கள்தான் என்ற பொருளில் என்று சொல்லி வருத்தப்பட்டிருந்தார்கள். இதில் யார் சொன்னது சரி தமிழ் திரை ரசிகர்கள் எல்லாரும் சொல்வதைத்தான் சுஹாசினி சொன்னார். இந்த நடிகர்கள் எல்லாம் சராசரியான ஆணின் தோற்றம் அல்லது பொறுக்கியாக இருக்கும் ஒருவன் அந்த வட்டாரத்திலேயே அழகான கதாநாயகியைக் காதலிப்பதாக அல்லது ஆசைபடுவதாகக் காட்டி அந்தக் காதலை வெற்றி பெற வைத்து ஆண்களை பரவசப்படுத்தும் கதைகளை எடுப்பவர்கள் அல்லது நடிப்பவர்கள். இதை என்னவோ பெரிய சண்டையாக கோர்த்து விட முயன்றது குமுதம்.

குமுதம் கிளப்பி விட்டு கதையெழுத நினைத்த பல கிசுகிசுக்கள் பிசுபிசுத்துப் போயின. காஜல் - கார்த்தி காதல், விஷால்- ரீமா காதல், மாதவன் - பூஜா காதல், சித்தார்த்- ஷ்ருதி காதல், இருப்பதிலேயே மிகவும் மோசமாக எழுதப்பட்ட கிசு கிசு கமல் - சிம்ரன் காதல்தான். குமுதம் மட்டுமல்லா எல்லா இதழ்களும் செய்தன.. அதை விடவும் கேவலமாக எழுதப்பட்டது ஷ்ருதி ஹாசன் - தனுஸ் காதல்தான். அதற்கு ஷ்ருதி மறுப்பு வெளியிட்டு அதையே குமுதம் வெளியிடுமளவுக்கு கீழ்த்தரமாக இறங்கியது குமுதம். நன்கு காசு பார்த்த கிசுகிசுக்கள் நயன் - பிரபுதேவா, நித்யானந்தா - ரஞ்சிதா.

ரஜினி படையப்பா படம் முடிந்து 5 வருடங்கள் கழித்து நடித்த பாபா படம் தோல்வி அடைந்திருந்த நிலையில் ரஜினி படத்தில் மீண்டும் நடிப்பாரா அல்லது நிறுத்தி விடுவாரா என்ற சந்தேகம் இருந்தது, ரஜினி இமயமலைக்குக் கீது சென்று விட்டால் ஏதாவது கதை கிதை எழுதி காசுபாக்க முடியாது, எனவே அடுத்த சூப்பர் ஸ்டார் யார் விஜய்யா விக்ரமா,தனுசா என்ற முக்கியமான பிரச்சனையை எழுப்பியது. இப்படியாக குமுதத்தின் சேவை தமிழ்நாட்டுக்குத் தேவை.

அரசியல் ரீதியான விமர்சனத்தில், இப்படி பாலியல் ரீதியாக விமர்சிப்பது எந்த வகை நியாயமென்று தெரியவில்லை. இதற்கு முன்பு கனிமொழி-ராசாவை இணைத்து நகைச்சுவைக்காகக் பேசப்படும் கிசுகிசுக்கள், மன்மோகச் சோனியாவை இணைத்துப் பேசப்படும் கிசுகிசுக்கள் என்று சொல்லிக் கொண்டே போகலாம்.

குமுதம் மட்டுமல்ல தினகரன், நக்கீரன், தினத் தந்தி, தினமலர் என்ற எதுவும் இதற்கு விதி விலக்கல்ல. இதில் முதலிடம் தினகரனுக்கே. கடந்த திமுக ஆட்சியின் போது தினகரனில் ஜெயலலிதாவின் தனிப்பட்ட வாழ்க்கையை சோபனுடன் இணைந்து வாழ்ந்த (Living together) ஜெயலலிதாவின் யோக்கியதையைப் பாரீர் என்று திராவிட அறிவாளிகளுக்கே உரிய தரத்துடன் வெளியிட்டிருந்தது. இதுதான் இவர்களின் யோக்கியதையே.
Download As PDF
Bookmark and Share

Post Comment

கடந்து சென்ற போது ............


மறக்க எத்தனித்துக் கொண்டிருக்கும் என்னிடம்
இத்தனை நாட்களுக்குப் பின் நீ ஏன் என் பார்வையில் மோத வேண்டும்
என் ஊழ்வினை
விநாடிகளில்  தொலைவில் கடந்து போய்விட்ட உன்னைக் காணத்தான் நான் 
காரணமின்றி அனிச்சையாய்த் திரும்பியது
ஆலயம் சென்று கொண்டிருந்த
உன் தரிசனத்தை
பெரிய அதிர்வுகளின்றி என் மனம் ஏற்றுக் கொண்டது
ஆயினும் என்னென்னவோ சொல்லி நச்சரிக்கிறது
பேருந்திருலிருந்து இறங்கி ஓடி உன்னிடம் வந்திருக்கலாம்
நம்மிடையே இடைவெளியும் உறவுகளும்
தடுப்பணைகளாய் இல்லாவிடில்
அல்லது உன் குரல் பழைய நேசத்துடனில்லை என்று
என் பேராசை சொல்லும்
பின்பெனது நிம்மதி கொல்லும்
உண்மை மறந்து உரிமை மறந்து எனது அறம் மாறும்
நினைவில் மட்டும் உன் சஞ்சாரம் போதும்
இன்றைக்கொரு கவி மட்டும் போதும்

Download As PDF
Bookmark and Share

Post Comment

விநோதினிக்கு அஞ்சலி - ஆணாதிக்கத்துக்கு எப்போது அஞ்சலி செலுத்துவது ?

விநோதினி இறந்து விட்டாள். கொல்லப்பட்டுவிட்டாள். மிகவும் கொடிய வதையை அனுபவித்துவிட்டு இறந்து விட்டாள். தன்னை இந்நிலைக்கு ஆளாக்கியவனும் தன்னைப்போலவே துன்பத்த்தை அனுபவிக்க வேண்டும் என்ற இறுதி ஆசையுடன் உயிரை விட்டு விட்டாள். 


டெல்லி கொடூரத்தால் இறந்த ஜோதியைப் போலவே விநோதினியும் நான் வாழவேண்டும், தன்னை இந்த நிலைக்கு ஆளாக்கியவர்கள் வாழக்கூடாது என்ற ஆசையை வெளிப்படுத்தினார்கள். தாம் அனுபவித்த கொடிய இன்னலிலிருந்து வெடித்த ஆத்திரம்தான் அது.

ஒரு வேளை ஜோதி உயிர் பிழைத்திருந்தாலோ, அவளது சிறுகுடல் பாதிக்கப்பட்டதால், நீர் ஆகாரம் மட்டுமே அருந்தி உயிர் வாழ்ந்திருக்க முடியும். விநோதினிக்கோ பார்வையே பறிபோய் விட்டது. வன்முறையை எதிர்கொண்ட போதே அவர்கள் பாதி செத்து விட்டார்கள். மீதியும் மருத்துவர்களின் தோல்வியில் போனது.

இந்த கேடுகெட்ட வெறிபிடித்த உலகத்தில் பிறந்ததால் ஆயிரமாயிரம் பெண்கள் அனுபவிக்கும் துன்பங்களின் எடுத்துக் காட்டுகள்தான் ஜோதி சிங் பாண்டேக்களும், விநோதினிகளும்.

பாலியல் வன்முறையும், ஆணாதிக்க வெறியும் சேர்ந்து பழிவாங்கிய உயிர்கள், ஆணாகப் பிறந்ததற்காக எத்தனை முறைதான் வெட்கப்படுவதும், வேதனைப்படுவதும் ?

இனிமேல் மரண தண்டனை எதிர்த்துப் பேசவும் வெட்கமாயிருக்கிறது. அதைத் தவிர்த்து விட்டு, இனி விநோதினிகள், ஜோதிகள் பாதிக்கப்படாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்று மட்டுமே கவலைப் பட வேண்டும் என்று நினைக்கிறேன்.

பெண்கள் மீதான வன்முறைகளுக்குக் காரணமாக இருப்பது, அவர்களை உணர்வுடையவர்களாகக் கருதாததே ஆகும். அவர்களை வெறும் பொருளாகவே காண்கிறார்கள் ஆண்கள். இதற்கு ஆணாதிக்க சிந்தனையே முதற்காரணமாகும். இதை போற்றி வளர்க்கும் சமூகமும் அதை ஊற்றி வளர்க்கும் ஊடகங்கள், வணிகங்கள், சடங்குகள் என அனைத்துமே இதற்கான காரணிகளே ஆகும்.

 ஒரு ஆணின் அல்லது ஒரு பெண்ணின் அன்பு, ஆசை, காதல், காமம், நட்பு, நேசம், மோகம், விரகம் முதலாகியவைகளைப்பற்றி மற்றொரு பெண்ணோ, ஆணோ மற்ற மூன்றாமவர்கள் யாராவதோ பேசுவதற்கோ, நிர்ணயிப்பதற்கோ, நிர்பந்திப்பதற்கோ - சிறிதுகூட உரிமையே கிடையாது என்று சொல்லுகிறோம்.
-பெரியார் (குடிஅரசு, 18.1.1931)


பாலியல் வன்முறையாகட்டும், அமிலம் ஊற்றுவதாகட்டும், அல்லது கருணைக் கொலையாகட்டும் எல்லாவற்றுக்கும் அடிப்படை ஆணாதிக்க உணர்வு மட்டுமே. பாலியல் வன்முறை என்பது கலவி அல்லது உடலுறவு என்பதை மட்டும் கொண்டு உடைதான் காரணம் நடத்தை தான் காரணம் என்று அளவிடக் கூடாது. அது ஆதிக்க உணர்வு வன்முறை ஆகியவற்றையும் உள்ளடக்கியது.

இவை வெவ்வேறு மத கலாச்சார சமூகங்களிலும் நீக்கமற நிறைந்துள்ளன. ஒரு ஆண் தன் மகள் கீழ்ஜாதிக்காரனை மணந்து கொண்டதால் பெற்ற மகளென்றும் பாராமல் கொல்கிறான். அவளது உயிரை விட தனது, கௌரவம் என்று தான் நம்பும் ஜாதிப்பெருமை அவன் கண்ணை மறைக்கிறது. அதற்காக மகளைக் கொன்ற தந்தை என்ற பட்டத்தை சுமக்கவும் பெருமிதத்துடன் கொல்கிறான். ஜாதிகள் நிறைந்த இந்து மதத்தில் மட்டுமல்ல, பாகிஸ்தான், ஈராக், வங்கதேசம் போன்ற முஸ்லிம்கள் சமூகத்திலும், சீக்கிய சமூகத்திலும் கேள்விப்படுகிறோம். இதில் பெண் ஒருவனை மணக்க் விரும்புவது அவர்கள் குடும்பத்திற்கு இழுக்கு என்று கருத வைப்பது எது ? தான் சொன்னவனை, தகுதிக்கு உட்பட்டவனாகக்கருதும் ஒருவனை மட்டுமே மணமுடிக்க வேண்டும் என்று பெண்ணின் உரிமையை மறுக்கும் ஆணாதிக்கம். அதற்காக பெற்றவளென்றும் பாராமல் கொலை செய்யக் கூடத் தயங்குவதில்லை.

அடுத்து அமிலம் ஊற்றும் அசிங்கம் பிடித்த எண்ணங்கள் ஏன் வருகின்றன. இது போன்று அமிலத் தாக்குதலுக்குப் பெரும்பாலும் பெண்களே ஆளாகின்றனர். பெரும்பாலும் திருமணமாகாத இளம்பெண்கள். செய்கிறவர்கள் இளைஞர்கள். இவர்களிருவருக்கும் என்ன கொடுக்கல் வாங்கல் தகராறா இருக்கப்போகிறது, காதல், பாலியல் உறவு, திருமணம் உறவுச் சிக்கல் அரிதாக வேறு பிரச்சனைகள். இதில் முக்கியமானது காதல், ஒரு பெண் காதலிக்கும் உரிமைக்கு அப்பா என்ற ஆண் குடும்பம், கௌரவம் என்ற ஆணாதிக்கக் கருத்தியல்களால் எதிர்க்கும் அதே நிலையில், ஒரு ஆண் தன்னைக் காதலிக்காத பெண் அடுத்தவனுக்குக் கிடைக்கக் கூடாது என்ற வெறியில் அவள் மீது அமிலத்தை ஊற்றுகிறான். அவளுக்குத் தன்னை ஏற்றுக் கொள்ளவோ, நிராகரிக்கவோ கூட உரிமை இருப்பதாக எண்ணிப் பார்ப்பதில்லை. அல்லது ஆணாதிக்கம் அதை ஏற்றுக் கொள்வதில்லை. கொலை செய்வதில் இருக்கும் வக்கிரத்தை விடப் பல மடங்கு கொடூரமானதும், கேவலமானதுமான  பெண்ணின் முகத்தில் அமிலத்தை ஊற்றி அவள் தனது தன்னம்பிக்கையாகக் கருதும் அழகைச் சிதைப்பதில் இன்பமடைகிறது இந்து கருமாந்தரங்கள்.

தெருவில் போகும் தனக்கு தொடர்பில்லாத உரிமையில்லாத ஒரு பெண் தனியாளாக இருப்பதால் சீக்கியடிப்பதும், கேலி பேசுவதும் உரிமை நினைக்கும் ஆணாதிக்க ஓநாய்கள், இரவு நேரமென்றால் அவளை வன்புணர்ந்து கூடப் பாடம் கற்பிக்க தனக்கு அதிகாரமிருப்பதாய் நினைப்பது எத்தகைய கேவலமான மனநோய்.

சமூகத்தின் தாக்கமின்றி வெளியில் வாழும் ஒரு மனிதனுக்குப் பெண் மீது எத்தகைய கண்ணோட்டம் இருக்கிறதோ அதே கண்ணோட்டம்தான் ஒரு சிறந்த பண்பட்ட குடும்பத்தில் பிறந்து வளரும் ஒவ்வொரு ஆணுக்கும் இருக்கிறது. ஒரு இளைஞனோ, சிறுவனோ பெண்கள், பாலியல் குறித்த கருத்துக்களை சமூகத்திலிருந்தே, ஊடகங்கள், திரைப்படங்கள் மூலமே கற்கிறான். அவை என்ன கற்பிக்கின்றனவென்று நமக்குத் தெரியும். பாலியல் குறித்த அறிவியல் கண்ணோட்டமின்றி அவை வெறும் கிளுகிளுப்பாகவும், அருவருப்பானதாகவும், பெண்களுக்கு ஒழுக்கக் கேடாகவும், ஆண்கள் மறைவாக அன்பவித்துக் கொள்ளவும் ஏற்றவாறே இருக்கிறது.

திரைப்படங்களை இதற்கு ஒரு முக்கியமான காரணமாகச் சொல்லலாம். திரைப்படங்கள் நம்மை நேரடியாகத் தாக்குவதில்ல. அதை நாம் அப்படியே பின்பற்றுவதில்லை. ஆனால் எல்லா வகையிலும் நம்மை ஆக்ரமித்திருக்கிறது. ஏன் தமிழ்மணத்திலேயே பெருமாலும் திரைப்படம், அதனைச் சார்ந்த செய்திகள்தான்.

திரைப்படப் பாடல்கள், நடிகர்கள், வசனங்கள், பட்டப் பெயர்கள் எல்லா இடத்திலும் மக்களால் பயன்படுத்தப்படுகின்றன.

திரைப்படத்தில் என்னத்தைக் காட்டுகிறார்கள் பெண்களைப் பற்றி.

பெண்கள் திரைப்படத்தில் வருவதே ஆண்கள்/ நாயகர்களால் காதலிக்கப்படுவதற்குத்தான், அவர்கள் செய்யும் அனைத்துச் செயல்களும், அழுவதும், சிரிப்பதும், துடிப்பதும், ஓடுவதும் காதலுக்காகவே/காதலனுக்காகவே/

காதலன் என்பவன் அயோக்கியனாக இருந்தாலும், அவனிடமிருந்து ஒரு நல்ல காரணத்தைக் கண்டுபிடித்து அவனைக் காதலிப்பாள்

அவளைக்கவர்வதற்காக நாயகன்/ என்ன பொறுக்கித்தனம் செய்தாலும் அது நாயகத்தனமாகவே சித்தரிக்கப்படுகிறது. அவன் அவளைத் துரத்தலாம், கடத்தலாம், துன்புறுத்தலாம், புணரலாம், ஏன் கொலை செய்யக் கூட முயலலாம். இது பருத்தி வீரன், பாலாவின் அனைத்துப் படங்களும், தனுஸ், சிம்பு, கார்த்தி படங்கள். புதிய பாதை மூவேந்தர்.

பெண்களைக் கேலி செய்யும் ஈவ் டீஸிங், உடலைக் கிண்டல் செய்வது என்பது போல பெண்களைக் கிண்டல் செய்வது, மேலும் கீழும் தொட்டு விளையாடுவது, உரசுவது, இடிப்பது, உடைகளை பிடித்து இழுப்பது போன்ற பாடல்கள் சிவாஜி, மகோராமச்சந்திரன் காலத்திலிருந்து மாஸ்டர் மகேந்திரன் காலம் வரை தொடரும் பாரம்பரியம். அது நகைச்சுவையாம். பெண்கள் மீது ஒழுக்கத்தை வலியுறுத்தவும் தயங்குவதில்லை.

பாடல் காட்சிகள் பாதி செமிபோர்ன். இடுப்பில் முத்தம் கொடுப்பது, மார்பில் முகத்தை மோதுவது, மொத்த உடலையும் மோப்பம் பிடிப்பது தடவுவது இன்னும் பலதும்.

விவேக், விஜய், சிம்பு, தனுஷ், சந்தானம் வகையறாக்கள் சொல்லும் பெண்களுக்கான வியாக்கியானங்களை எல்லாம் ஆண்களுக்கு தம் ஆணாதிக்க அரிப்பை சொறிந்து கொள்ள நல்ல சந்தர்ப்பம் கொடுக்கின்றன. பீயை மிதிச்சது போல முகத்தைச் சுளித்துக் கொண்டு சந்தானம் "மச்சா இந்தப் பொண்ணுங்க இருக்காளுங்களே" என்று தொடங்கினான் என்றால் பெண்கள் உட்பட அனைவரும் சிரிக்கத் தொடங்கினால் அந்தக் கருத்தைக் கேள்விகளின்றி நாம் ஏற்றுக் கொண்டோமென்றுதானே பொருள்.

கொல்றா அவள, வெட்றா அவள, கொலவெறி வகைப் பாடல்களெல்லாம் ஆண்களைத் தியாகியாகவும் பெண்களுக்கு எதிரான வன்முறையையும், வெறுப்பையும் எவ்வளவு அழகாகச் சொல்கின்றன. காதல் தோல்விப் பாடல்கள் என்றால் காதலியை நோக்கிப் பாடுவதாக இல்லாமல் "பெண்கள் என்றால் பொய்யா" என்று மொத்தப் பெண்களையே கேள்வி கேட்கிறதே. வெறுப்பைக் காட்டுகிறதே

அதே நேரம் ஆண்களின் பொறுக்கித் தனத்தைக் கொண்டாடுகிறது.

பெண்களிடமிருது ஒதுங்கியிருக்கும் ஆண் சமூகம் இது போன்ற திரைப்படங்களிலிருந்து எதைக் கற்கும் ? பெண்கள் என்றால் காதலிக்க, செக்ஸ், ஒழுக்கம் என்பதைத்தவிர வேறு என்னதான் இவை சொல்கின்றன.

பாலியலிலிருந்து எல்லாவற்றையும் தேவைப்படும் ஏற்ற இறக்கங்களுடன் வெளிப்படையாக விவாதிப்பதே ஒரே வழியாக இருக்கும். பெற்றோர்க்கு தனது மகன் தம்மடிப்பதோ, தண்ணியடிப்பதோ எப்படித் தெரிவதில்லையோ அது போலவே அவன் பொது இடங்களில் பெண்ணிடம் எப்படி நடந்து கொள்கிறான் என்பதையும் அவர்கள் அறிவதில்லை.

என் மகன் ஒரு போதும் திருட மாட்டான், கொலை செய்ய மாட்டான் என்பது எல்லாப் பெற்றோரின் நம்பிக்கை. அது பெரும்பான்மையாக உண்மையாக இருக்கலாம். ஆனால் பெண்கள் பற்றி என்ன நினைக்கிறான், தன் தங்கை, அக்கா, அம்மா வயதிலிர்க்கும் பிற பெண்கள் மீது அவன் நடவடிக்கை எப்படி இருக்கிறது என்று எண்ணிப்பார்த்தால், ஒவ்வொரு அம்மாவும் நொந்து போவாள்.

பெண்கள் மீதான ஆண்கள் கொண்டிருக்கும் கருத்துகளே வன்முறைகளுக்கு மூலமாகக் கருதுகிறேன். பெண்குழ்ந்தைகளை வளர்ப்பது போல் ஆண் குழந்தைகளையும் ஒழுக்கமுடன் வளர்க்க வேண்டும். பெண்களை மதிக்கக் கற்றுக் கொடுக்க வேண்டும். இதையும் பெண்களால் மட்டுமே செய்ய முடியும். என் மகனால் எந்தப் பெண்ணுக்கும் துன்பம் நேராது என்று நம்பிக்கையுடன் சொல்லும்படி வளர்க்க வேண்டும்.

இந்த விநோதினி காதலிக்க மறுத்ததால் மட்டுமல்ல, ஏற்கெனவே இவர்களிருவரும் காதலர்களாக இருந்தவர்கள்தான் என்றும் சொல்கிறார்கள். காதலர்களாக இருந்தாலும் ஒரு நபருக்குப் பிடிக்க வில்லை என்றால் விலகிவிடுவதுதான் முறை அது கசப்பாக இருந்தாலும். விநோதினி செய்தது தவறில்லையா என்றால், எத்தனையோ ஆண்கள் வயிற்றில் புள்ளையைக் கொடுத்து விட்டு கம்பி நீட்டுகிறார்கள். பெண்கள் என்ன அமிலத்தையா ஊற்றிக் கொண்டிருக்கிறார்கள். அப்படி ஊற்றுவதென்றால் எத்தனை ஆண்கள் மீது ஊற்ற வேண்டும்.

டெல்லி வன்புணர்வுக்காக வாழ்க்கையிலேயே முதன்முறையாக பாலியல் வன்முறைக்கு எதிராக வாயைத் திறந்தவர்கள், உச் கொட்டி விட்டுப் பின்னர் இவளுங்க ஒழுங்கா இருந்தாத்தான ? என்று வெறியேற்றுகிறார்கள். கணவனாக இருந்தாலும் பெண் விருப்பமின்றி உடலுறவு கூடாது என்பதுதான் நியாயம். பெண் ஆபாசமாய் உடையணிந்தால் வன்முறை செய்யலாம் என்று உரிமை கோரும் மனநோயாளிகளுக்கு இதுதான் பதில்.

பெண்களுக்கு எதிரான எல்லா வகையான கருத்துக்களையும் இயன்ற வழியிலெல்லாம் எதிர்க்க வேண்டும். ஒரு கருத்து சமூக அளவில் ஏற்றுக் கொள்ளப்படும்பொது ஏனென்றால் அது வன்முறைகளையும் குற்றங்களையும் நியாயப்படுத்தும்.
Download As PDF
Bookmark and Share

Post Comment

அற்பம் !!

மாலை அலுவலகம் முடியும் தறுவாயில் ஒரு டீம் லீட்கள் சந்திப்பு நடக்க வேண்டியிருந்தது. அனைவரும் கூடினோம். மேலாளர் பேசத் துவங்கினார். 

பொங்கலுக்கு ஒரு நாள் மட்டும்தான் லீவ். லீவ் முடிஞ்ச அடுத்த ஒரு வாரத்துக்கு மார்னிங் ஒன் ஆர் அன்ட் ஈவ்னிங் ஒன் அவ்ர் வொர்க் பண்ணி காம்பன்செட் பண்ணனும். யாருக்காச்சும் ஏதாவது சொல்லணுமா ?
 

எங்களிடையே சலலப்பு தொடங்கியது தொடர்ந்தது. பின்பு மேலாளரே தொடர்ந்தார்.

ஆஃபீஸ்ல இருக்கற 40 பேர்ல 27 பேர் ஹிந்தூஸ்தான். 10 பேர் கிறிஸ்டியன், மூணு பேர் முஸ்லிம்ஸ். இத்தனை பேர் வேலையும் பத்துபேர் காம்பன்சேட் பண்ண முடியாது. இந்த ஈமெயில் ப்ரோஜக்ட் ஒரு வாரம் முன்னாடியே டெலிவரி பண்ண வேண்டியது. இப்பவே க்ளையண்ட் ஏத்தறான். அதனால டீம் லீட் 7 பேரும் கண்டிப்பா வந்தே ஆகணும் வேற வழியே இல்லை. கிறிஸ்துமஸ்க்கும் நியூ யெர்க்கும் சேர்த்து ஒரு வாரம்  வீட்லதான இருந்தீங்க.


.......

நான் நேந்து விட்ட விலங்கைப் போல அமர்ந்திருந்தேன் என்ன சொன்னாலும் தலையாட்டுவது தவிர ஒன்றும் செய்ய முடியாது. கழுதைக்கு வாழ்க்கைப் பட்டால் ...... என்ன செய்ய ?

ஆர்த்தி உங்களுக்கு ஓக்கேதான ?

.சார்...........

சொல்லுங்க..

எனக்கு ஊருக்குப் போக கடைசி பஸ் எட்டு மணிக்கு, அதுக்கு அப்புறம் ஒம்பதே முக்காலுக்குத்தான். போக ரொம்ப லேட்டாகிடும்.

நீ
ங்க அவினாசி தான ?

இல்ல சார் அவினாசிலிருந்து இன்னொரு பஸ் மாறணும். ..

ஒரு வாரம் அட்ஜஸ்ட் பண்ணலாம்ல.

முடியாதுங் சார்.

இல்லமா நீங்கதான் சீனியர், இல்லன்னா முடிக்க முடியாது.

"அவ்வளவு லேட்டா போனா எங்க வீட்ல தொரத்தி விட்றுவாங்க"
   


என்று அழாத குறையாக சொல்லி விட்டு தலையைக் குனிந்து கொண்டாள். அன்றுதான் அவளைப் பார்த்தேன்.

ஆர்த்தி வேறு டீம். நான் வேறு டீம் என்பதால் எப்போதாவது பேசவும் பார்க்கவும் முடியும். சிறிது நாட்களுக்குப் பின்பு கிடைத்த சந்தர்ப்பங்கள் சந்திப்புகள் மூலம் என்னுடன் நட்பாகி விட்டாள். அலைபேசி எண்கள் பரிமாறிக் கொள்ளுமளவுக்கு நெருங்கியிருக்க வில்லை. நான் அவளுடன் பழகியதை அனைவரும் கிண்டலடிப்பார்கள். அது உண்மையில்லை என்ற போது
ம் அவர்கள் ஆர்த்தியை என்னுடைய ஆள் என்று என்னிடம் அல்லது என்னுடன் இணைத்துப் பேசுவது எனக்கு மகிழ்ச்சியைத் தந்தது. சில மாதங்களில் நான் வேறொரு நிறுவனத்திற்கு மாற்றலாகிப் போய்விட்டேன்.

ஒரு நாள் இதே நிறுவனத்தில் வேலை பார்த்த நிரஞ்சனுடன் அலைபேசியில் பேசினேன். பலதும் பேசிய பின்பு, 


ஆமா ஆர்த்தி இன்னும் அங்கதான் இருக்கா ?  என்றேன்.

ஆமாமா. லவ்வெல்லாம் ஓடிட்டிருக்கு.

லவ்வா யாரை ?


அவன் சொன்ன அந்த நபரின் பெயரைக் கேட்டதும் எரிச்சல் வந்தது. நமக்குப் பிடித்த ஒருத்தி வேறொருவனை விரும்புகிறாள் என்ற போது வரும் அதிர்ச்சி அல்ல. உங்களால் சகித்துக் கொள்ளவே முடியாத இயல்பைக் கொண்ட ஒருவனை அவள் விரும்பினால், அவள் ஏற்படும் பரிதாபம்  பச்சாதாபத்தினால் வந்தது.

யாரு ஃபெலிக்ஸ் ஆ அவனையா ? அது எப்பிடிடா ? எப்பிருந்து ?

என்னது இந்தியா சுதந்தரம் வாங்கிருச்சா !! ஹஹஹா !! அது வருசக் கணக்கா நடக்குது நீ இங்க இருந்தப்பவே இந்தப் படமெல்லாம் ஓடிச்சு. உன் ஃப்ரெண்டப் பத்தி உனக்கே தெரியலையா ?

இதெப்படி உனக்குத் தெரியும் ?

ம்கும். நாங்கல்லாம் யாரு ? யாரு என்ன பண்ணாலும் கண்டு பிடிச்சிருவம்.

அவன் யாரையோ லவ் பண்ணிட்டிருந்தான்னு தெரியும், அது இவளத்தான்னு தெரியாதே. ஒரு தடவை திடீர்னு இவளத் திரும்பிப் பார்த்தான். அவ்ளோதான் எனக்குத் தெரியும். அது சும்மாதான்னு நினைச்சு விட்டேன். ம்ம். அது சரி அவன எப்படின்னுதான் தெரியல. இவ தொட்டாலே அழுதிருவா, அவனப் பாத்தாலே நமக்கெல்லாம் பயமாருக்கும். வாயத்தொறந்தா ஒரு நல்ல வார்த்த வராதே.


டேய் !! நீ எந்த உலகத்தில இருக்க. இப்பல்லாம் பொண்ணுகளுக்கு இந்த மாதிரி பசங்களத்தான் புடிக்குது. யோக்கியனா இருந்தா எவ பாக்கறா ? இவளுங்களுக்கு அறிவே கிடையாது. எக்கேடோ கெட்டுப் போகட்டும். பட்டுத் திருந்தட்டும். எங்க வீட்டுப் பக்கத்திலயும் இது மாதிரி நெறயாப் பேரு அப்பனுக்குத் தெரியாமப் போய் கல்யாணம் பண்ணிட்டாளுங்க. கொஞ்ச நாள் வச்சிருந்திட்டு என்ஜாய் பண்றானுங்க அப்றம் இவளுங்களா புடிக்காம வந்திருவாளுக. அப்பன ஏமாத்திட்டு போறவளுக்கெல்லாம் இப்படித்தான் வேணும். அப்பத்தான் புத்தி வரும். 

 
இன்னொரு நாள் ஃபெலிக்ஸிடம் பேச வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

சம்பிரதாய கேள்விகளுக்குப் பின் அவனாகவே கேட்டான்.

என்ன பாஸ் அப்றம் விஷயம் கேள்விப்பட்டு ஷாக்காயிட்டீங்களாமே ?

அப்படியெல்லாம் இல்ல. உலகத்தில நடக்காததா என்ன ?

உங்க ஃபிரண்ட கரெக்ட் பண்ணிட்டன்னு எம்மேல கோபப்படாதீங்க பாஸ். ஹி ஹி !!" உன்னுடைய ஆளை நான் மடக்கிட்டேன் பார்த்தியா என்ற நக்கல் தொனித்தது.

அப்படியெல்லாம் ஒண்ணுமில்ல. எப்படியோ நல்லா இருந்தா சரிதான். 

 
ஃபெலிக்ஸின் இலட்சியம் குடிப்பது, ரகளை பண்ணுவது, அரைமணிக்கொருமுறை ஐந்து பைசாவுக்கு பெறாத நடப்புக்களுக்கு ஆத்திரப்படுவது, மிகவும் அழகான பெண்ணை மணம் முடிப்பது மட்டுமே. அவன் உடற்பயிற்சிக் கூடத்தில் முறுக்கேறிய உடலும், சிடுமூஞ்சித்தனமும், எப்போதும் அவன் கை நீட்டிவிடக் கூடிய அபாயமும் இருந்ததால் அவனை அவனது பின்னால் மட்டுமே எங்களால் விமர்சிக்க முடிந்தது. அவன் வீட்டில் ஒரே செல்லப் பிள்ளை பணக்காரன் என்பதாலும் அவன் வீட்டில் சம்மதித்து விட்டார்கள். அவன் கிறித்தவன் என்பதால் திருமணத்திற்குப் பிறகு மருமகளும் மதம் மாற வேண்டும் என்ற விதிமுறையுடன் சம்மதித்திருந்தார்கள். இவள் சாதாரண நடுத்தரக் குடும்பத்துக் கவுண்டர் வீட்டுப் பெண் என்பதாலும் இன்னும் வீட்டில் சொல்ல பயப்பட்டுக் கொண்டிருந்தாள். அவன் மணக்க விரும்பும் பெண்ணாக இருக்க வேண்டியவள் என்று வர்ணித்த அளவுக்கு ஆர்த்தி பேரழகியாகவோ வெள்ளை நிறமாகவோ இல்லாமல், இருந்தாள். காதலில் எதுவும் சாத்தியம்தான் என்று புரிந்தது. திருமணம் செய்தால் இவனது இயல்பு மாறி விடும் பக்குவமடையலாம் என்றும் நினைத்தேன்.

9 மாதங்களுக்குப் பின்பு மீண்டும் ஒரு முறை நிரஞ்சனுடன் பேசினேன்.

டேய் விசயந் தெரியுமா ? அவங்க லவ்வப் பத்தி ? போன தடவையே சொல்லலாம்னு நெனச்சேன். வேற பேச்சுல மறந்திட்டேன்.

என்னாச்சாமா ?

புட்டுக்கிச்சாம்.

ஏற்கெனவே எதிர்பார்த்ததுதான ? இவங்கூடல்லாம் சரியா வராதுன்னு தெரியாதா ?

அதெல்லாம் இல்ல. இவன் ஸ்ட்ராங்காதான் இருந்தான். ஆர்த்திதான் வீட்டுக்கு பயந்துட்டாளாம். வேற இடத்துல கல்யாணமும் ஆயாச்சு. இப்ப கன்சீவா இருக்காளாம்.

........

என்னடா பேச்சக் காணோம் ?

இல்ல. ஃபெலிக்ஸ் கூட பேசினியா என்ன சொன்னான் ?

நான் ஃபெலிக்ஸ் கிட்ட கேட்டேன். எதுவும் பண்ணலியான்னு. ஒரு தடவை மட்டும் மேட்டர் முடிச்சிட்டானாம். ரெண்டு தடவை மிஸ்ஸாயிடுச்சாம். ஃபெலிக்ஸ் கிட்ட அப்பறேன்டா கவலப்படறன்னு சொன்னேன். நமக்கு தோலா முக்கியம் பழத்த சாப்டமா போனமான்னு இல்லாம. இவளுங்க நம்மள விட பெஸ்டா ஒருத்தங் கெடச்சா டாட்டா காட்டிட்டு போயிருவாளுக, நம்ம உக்காந்து ஃபீல் பண்ணணுமா ? ஒருத்திய லவ் பண்றயா அவ மேல கைய வைக்காம விடக் கூடாது. கைய வச்சபிறகு அவ போனாக் கூட கவலயில்ல. எல்லாப் பசங்ககிட்டயும் அப்படித்தான் சொல்லிட்டிருக்கேன்.
 


அதற்குப்பிறகும் கால் மணி நேரம் அவனிடம் பேசிக் கொண்டிருந்தேன். என்ன பேசினேன் என்பது மட்டும் நினைவில் இல்லை. 
Download As PDF
Bookmark and Share

Post Comment