விஸ்வரூபம் - கமல் : இஸ்லாமியர்கள் எதிர்ப்பு சரியா ?

விஸ்வரூபம் இவ்வளவு பெரிய பிரச்சனைக்கு உள்ளாகும் என்று எதிர்பார்க்கவில்லை. படம் தொடங்கியதிலிருந்தே பிரச்சனைகள். இறுதியாக இந்த எதிர்ப்பும் அதைத் தொடர்ந்த விவாதங்களும். எல்லோரையும் எழுதவோ அல்லது கருத்து சொல்லவோ வேண்டிய அளவுக்கு பிரச்சனை ஆகியுள்ளது.

மத நம்பிக்கை, மனதை புண்படுத்தும் காட்சிகளுக்காக போராடினால் அது எதிர்க்கப்பட வேண்டியதுதான்.  ஆனால் ஒரு தரப்பை குற்ற உணர்வுக்குள்ளாக்கும் சித்தரிப்புக்கள் எதிர்க்கப்பட வேண்டியவை. அதற்காக படம் தடை செய்யப்பட வேண்டும் என்ற பொருளில்லை. இஸ்லாமியர்கள் ஏன் இதை எதிர்க்கின்றனர் என்பதும் மற்றவருக்குப் புரியவில்லை. அவர்கள் எதிர்ப்பு தெரிவிப்பது முஸ்லிம்கள் திரைப்படங்களில், எவ்விதம் சித்தரிக்கப்படுகின்றனர் அதனால் சமூகத்தில் ஏற்பட்ட விளைவுகள் குறித்தது.

இப்போது படமே தடை செய்யப்பட்டதில் அனைவரது ஆத்திரமும் அவர்களுக்கு எதிரானதாக மாறிவிட்டது. முஸ்லிம்கள் சிலர் இதை ஒரு வெற்றியாகக் கொண்டாடுகின்றனர். இவர்கள் போட்ட போடில் இன்று பலர் இஸ்லாமியர் மீது கடும் வெறுப்புக் கொண்டதைக் காணமுடிகிறது.  கமலின் உன்னைப் போல் ஒருவன் வெளிவந்த போது பல இணைய விமர்சகர்கள் படம் பச்சையான இந்துப் பாசிசம் என்று கடுமையாக விமர்சித்தனர்.

இவர்கள் போன்ற இருக்கும் கொஞ்ச நஞ்ச நடுநிலைகளையும் இந்துத்வ மனநிலைக்கு மாற்றியதற்கு வலைப்பூக்கள், ஃபேஸ்புக்கில் இருக்கும் சவூதி ஆதரவாளர்களே காரணம்.

இது வரை படம் பார்க்காதவர்கள் திரையரங்கம் போகாதவர்களெல்லாம் இந்தத் தடைக்கு எதிராக திரையரங்கம் போய் எதிர்ப்புக் காட்டுகிறார்கள். விஸ்வரூபம் தடை செய்யப்பட்டது மிகவும் எதிர்க்கப்படவேண்டியதே.

முஸ்லிம்களுக்கு சகிப்புத்தன்மை இல்லை போன்ற விமர்சனங்கள் வருகின்றன. இந்தப் பிரச்சனை அது குறித்ததல்ல.

# இஸ்லாமியருக்கு எதிரான மனநிலை சமூகத்தில் எப்படி இருக்கிறது என்பதற்கு உதாரணமாக, ஒரு வாரத்திற்கு முன்பு சென்னையில் ஏதோ ஒரு பகுதியில் இருக்கும் ஒருவர் வீட்டில் சிலிண்டர் வெடித்து விட்டது. அதை தினகரனில் வெளியிட்ட விதம் வேறுமாதிரியாக இருந்தது. சிலிண்டர் வெடித்தது, வெடிகுண்டு தயாரிப்பின்போது விபத்தா என்று காவல்துறை விசாரணை. இதுதான் அந்த செய்தியின் சாரம். காரணம் அந்த சிலிண்டர் வெடித்தது ஒரு முஸ்லிமின் வீட்டில் என்பதால்தான். சிலிண்டர் வெடிப்பது என்பது அங்கங்கே இயல்பாக நடக்கும் விபத்துக்கள்தான் ஆனால் இது இஸ்லாமியன் வீட்டில் நடப்பதால் இப்படி ஆகியிருக்கிறதே இந்த நிலைக்குக் காரணம் என்ன ?

# குண்டு வெடித்தாலே குல்லாவும், தாடியும் நினைவுக்கு வருவதன் மர்மம் என்ன ?

ஊடகங்கள் திரைப்படங்கள் சித்தரிப்புதான். அதற்குத்தான் இந்த எதிர்ப்பு. பல ஹிந்திப்படங்கள், தமிழ் தெலுங்குப்படங்கள் தீவிரவாதத்தை எதிர்ப்பது போலவும், நாட்டுப்பற்றை ஆதரிப்பது போலவும் வெளிவந்தன. வருகின்றன. ஹாலிவுட் படங்கள் என்றால், ரஷ்யாவை எதிரியாக சித்தரித்து அமெரிக்காவை நாயகனாகக் காட்டும். உலகையே காப்பது போலவும் கதையமைப்பு இருக்கும். அதே நம்ம ஊர்ப்படங்களோ பாகிஸ்தான் தீவிரவாதிகளை வில்லனாகவும் நம்மை நாயகனாகவும் காட்டுகின்றவை. பாகிஸ்தானியருக்கு உதவுவதாக நம்ம ஊர் ஆட்களைக் காட்டுகின்றனர். இந்தியாவில் நிலவும் அரசியல் சூழலும், நிகழ்வுகளும் முஸ்லிம்களுக்கு எதிரான மனநிலையை நன்கு கட்டமைத்து விட்டன.

இது இஸ்லாமியர் மட்டுமல்ல பல சமூகங்களுக்கும் பொருந்தும் உண்மைதான்.

# சில வருடங்கள் முன்பு வரை விடுதலைப்புலிகள் குறித்துப் பீதிகள் கிளப்பப்பட்டு வந்தது, காங்கிரஸ், அதிமுக காரர்கள் அதிகம் செய்வார்கள். இலங்கைக்கு ஏதாவது சட்டவிரோதமாக கடத்தப்பட்டு, யாராவது பிடிபட்டால் விடுதலைப்புலி உளவாளியா, புலிகள் ஊடுருவல், ஆயுதக் கடத்தலா என்று பீதியைக் கிளப்புவார்கள். இன்று வரை ஈழ அகதிகள் எப்படித் தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள் விடுதலைப்புலிகள் இல்லாத நிலையிலும்.

ராஜீவ் படுகொலையைப் பயன்படுத்தி இந்திய அரசால் உருவாக்கப்பட்ட விடுதலைப்புலிகள், பயங்கரவாத எதிர்ப்பு என்ற காரணத்தைப் பயன்படுத்தி உருவான மனநிலையால் 40000 பேர்கள் படுகொலை செய்யப்பட்ட போதும் தமிழகம் தவிர பிற மாநிலங்களில் எந்த ஒரு சலசலப்பும் எழவில்லை.

 #தற்போது வட இந்தியத் தொழிலாளர்கள் கட்டுமானப் பணிக்காக தமிழகத்திற்குப் பெருமளவில் இடம் பெயர்ந்துள்ளனர். இவர்கள் சிலர் திருட்டு உட்பட சில குற்றங்களில் ஈடுபட்டுக் கைதான பின்பு இவர்கள் மீது அனைவரும் வெறுப்படைந்து விட்டனர். இவர்கள் அனைவரும் தமது அடையாளங்களைக் காவல்துறையிடம் பதிவு செய்ய வேண்டும் கண்காணிப்பில் இருக்க வேண்டும் என்ற நிலை. வேளச்சேரியில் காவல்துறை நிகழ்த்திய மோதல் கொலையில் பீஹாரிகள் 5 பேர் கோரமாகக் கொல்லப்பட்டதற்கு பெரிய அளவிலான ஆதரவும் தமிழகத்தில் இருந்தது. இது ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் மீதான வெறுப்புணர்வு, சந்தேகம் ஆகியவற்றின் பேரில் வருவதுதான்.


# ஏறக்குறைய 30 வருடங்கள் முன்பு இந்திராகாந்தி பிரதமராக இருந்த போது பஞ்சாப்பில் காலிஸ்தானிகள் பிரச்சனையின் காரணமாக இந்திய அளவில் பொதுமக்கள் பஞ்சாப்பியர், சீக்கியர் மீது வெறுப்பில் இருந்தனர். இந்திரா காந்தி கொல்லப்பட்ட பின்னர். 3000 சீக்கியர்கள் டெல்லியில் கொன்று வீசப்பட்டனர்.  அனுதாப அலையும் சீக்கியப் படுகொலையின் மீதான அங்கீகாரமும், சீக்கிய எதிர்ப்பு மனநிலையும் கொண்டு தொடர்ந்த தேர்தலில் காங்கிரஸ் மிகப்பெரும் வெற்றி பெற்றது.

இப்படிப் பலவும் சொல்லிக்கொண்டே போகலாம். ஒரு சிலரோ அல்லது அச்சமூகத்தின் அரசியல்வாதிகளோ செய்யும் செயலுக்கு மொத்த சமூகத்தின் மீதும் வெறுப்பைக் கற்றுத் தருவது தவிர்க்கப்பட வேண்டும்.

மேலும் இது போன்று படத்தைத் தடை செய்யக் கோருவது, போராட்டம் நடத்துவது இஸ்லாமிய அமைப்புக்கள் மட்டுமல்ல. இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி, பாமக, நாம் தமிழர் என தமிழகம் சார் கட்சிகளும், ராம்சேனா, ஆர் எஸ் எஸ், பஜ்ரங்தள், சிவசேனை ஆகிய இந்திய அளவிலான கட்சிகளும் இதில் அடக்கம். விஸ்வரூபம் தவிர இதற்கு முன்பு பல படங்களுக்கும் நடந்துள்ளது. சிறிய அளவிலும் பெரிய அளவிலும். இதில் சில நியாயமானவை, முக்கால்வாசி கேலிக்கூத்துதான்.

கமல்ஹாசனின் இலட்சியப் படைப்பான மருதநாயகம் நிறுத்தப்பட்டதும் ஒரு ஜாதிக்கட்சி போராட்டத்தினால்தான். கண்ணோடு கண்ணை என்ற மன்மதன் அம்பு படப்பாடல் இந்துக்களை புண்படுத்துகிறது என்று கூறி நீக்கப்பட்டது, திடீர் தமிழ்க்காவலர்களாக உருமாறி தமிழ்ப்பாதுகாப்பு இயக்கம் தொடங்கி மூன்றாம் மொழிப்போர் நடத்திய திருமா-ராமதாஸ் கூட்டணி மும்பை எக்ஸ்பிரஸ் படத்திற்குத் தமிழ்ப்பெயர் சூட்ட வேண்டும் என்று எதிர்ப்புதெரிவித்து திரையரங்கம் வரை பிரச்சனை செய்தனர். சண்டியர் பெயர் விருமாண்டியாக மாற்றப்பட்டது உபயம் தலித் போராளி கிருஸ்ணசாமி. படப்பிடிப்பு நடத்த விடமாட்டோம் என்றெல்லாம் பிரச்சனை பண்ணினார்கள். வசூல்ராஜா என்ற பெயர் மருத்துவர்கள் குறித்து தவறான எண்ணத்தை ஏற்படுத்துகிறது என்று பிரச்சனை செய்தார்கள் இதுவும் மருத்துவர் கிருஸ்ணசாமி தலைமையில் என்று நினைக்கிறேன். தெய்வத்திருமகன் படத்தின் பெயர் தெய்வத் திருமகளானது. சிவகாசி படம் வழக்கறிஞர்களை இழிவு படுத்துகிறது என்று சொல்லி விஜய், அசின், பேரரசு ஆகியோரின் மீது வழக்கு போடப்பட்டது. (ஷகிலா மீது கூட ஒரு வழக்கு நடந்தது சரியாக நினைவில்லை) நடிகர் விஜய்  கீதை என்ற படம் தொடங்கினார், திருச்சியில் அவரது ரசிகர்கள் அதைக் கொண்டாடும் வகையில் அதற்கு முன்பு நடித்த பகவதி படம், வெளிவரப் போகின்ற கீதையையும் இணைத்து பகவத் கீதை என்றும் விஜயை கிருஷ்ணனைப் போலவும் சுவரொட்டிகளை ஒட்டினார்கள். பிறகு இந்து முன்னணி கோதாவில் இறங்கி கீதையின் பெயர் புதிய கீதை என்றானது. தனுஷின் உத்தமபுத்திரன் படம் கொங்கு வேளாளர்கள் சமூகத்தை இழிவு செய்வதாக கவுண்டர்கள் போராட சில காட்சிகள் நீக்கப்பட்டன.

இதெல்லாம் பார்த்துவிட்டு, நான் இனிமேல் ரவுடிகள் கூட தங்களைப் புண்படுத்தும் காட்சிகளை நீக்கச் சொல்லிப் போராடக் கிளம்பிடுவானுக போல என்று நக்கலடித்துக் கொண்டிருந்தேன்.

தீபா மேத்தாவின் வாட்டர் படம் எதிர்க்கப்பட்டது, தடை செய்யப்பட்டது. குழந்தை விதவைகள் குறித்த படம் எனவே இந்துக்களைப் புண்படுத்துகிறது என்று எதிர்த்தவர்கள் சொன்னார்கள்.

சரிகா நடித்த பர்சானியா குஜராத்தில் திரையிடப்படவில்லை. அது குஜராத் கலவரத்தில் தொலைந்த ஒரு சிறுவன் குறித்த மனிதாபிமானப்படம் மட்டுமே.

மேலே சொன்னது போலவே இப்போதைய எதிர்ப்பையும் புரிந்து கொள்ளலாம். மேலே சொன்னது போலவோ அல்லது விஸ்வரூபம் போலவோ திரைப்படங்களின் மூலமாக ஒரு குறிப்பிட்ட சமூகத்தைத் தவறாக எண்ணுவதற்கு அந்தத் திரைப்படங்களைக் காணும் சராசரி ரசிகனால் சிந்திக்க முடியாது என்பது சரிதான். இஸ்லாமியர் எதிர்ப்பை மிக எளிதாக எள்ளி நகையாடி இவனுகளுக்கெல்லாம் வேலையெ இல்லையா என்று நம்மால் புறந்தள்ள முடியும். திரைப்படம் என்பதால் அதிக விளம்பரத்தின் காரணமாக அதை எதிர்ப்பவர்கள் மற்றவர்களால் அதிகமாக வெறுக்கப்படுவர்.

அதே நேரம் திரைப்படங்கள் அடிப்படைக் காரணங்களை மறக்கச் செய்து விட்டு, வெறும் பரபரப்பான செய்திகளை வைத்து மட்டும் காட்சிகள் திரைக்கதைகளை அமைக்கிறார்கள். அதை நாம் கேள்விகளின்றி ஏற்றுக் கொள்ளக் கூடாது. அதற்காக படத்தை ஓட விடக்கூடாது வெளியிடக்கூடாது என்பது பாசிசம்.

ஜேம்ஸ்பாண்ட் என்பவன் இங்கிலாந்து உளவாளி, அவன் மற்ற நாடுகளுக்குச் சென்று சகட்டு மேனிக்கு சுட்டுத் தள்ளி நாச வேலைகளைச் செய்கிறார். அதை இங்கிலாந்துக் காரர்கள் ரசிக்கலாம் நாம் ஏன் ரசிக்கிறோம்.

காஷ்மீர் என்றாலே தீவிரவாதம் என்ற சொல்லும் இலவச இணைப்பாகவே விவேக்கின் நகைச்சுவை வசனம் வரை சாதாரணமாகக் கையாளப்படுகிறது. இதற்கு அடித்தளமிட்ட படம் ரோஜா. அது பலவருடங்களாக குடியரசு நாளில் தூர்தர்ஷனில் ஒளிபரப்பட்டது.

பம்பாய் படத்தில் இஸ்லாமியர்-இந்துக்கள் கலவரம் என்று சண்டை போலக் காட்டப்பட்டது. ஆனால் நடந்தது இஸ்லாமியர் மீதான கலவரம் மட்டுமே. அந்தப் படத்தைப் பாராட்டியவர் கலவரத்தைக் காவல்துறையின் உதவியுடன் நடத்திய சிவசேனாவின் தலைவர் பால்தாக்கரே.

விஜயகாந்த், அர்ஜுன் படங்கள் பற்றி சொல்லவே தேவையில்லை.

சரி இஸ்லாமியர்கள் தீவிரவாதத்தில் ஈடுபடுவதே இல்லையா ? மதவெறியர்கள் இல்லையா ? அவர்களுக்கு மட்டும்தான் கருத்து சுதந்திரமா ? இந்துக்கள் திரைப்படங்களில் இழிவு செய்யப்பட வில்லையா ? தீவிரவாதிகளா இந்துக்கள் காட்டப்படவில்லையா ? எல்லாவற்றுக்கும் பதில் ஆம்.

இஸ்லாமியத் தீவிரவாதம் நிகழ்த்திய குண்டுவெடிப்புகள் மும்பை, கோவை ஆகியவை. அதற்குக் காரணம் அவர்கள் மீது நடத்தப்பட்ட கலவரம் அதற்குப் பின்னும் அவர்களுக்கு நீதி கிடைக்காமல் அலைக்கழிக்கப்பட்டதுதான். தூக்கு தண்டனை தரவேண்டிய மும்பைக் கலவரக் குற்றவாளிகளுக்கு, தூக்கு கூட வேண்டாம் ஆயுள் தண்டனை கிடைத்திருந்தால் கூட குண்டு வெடித்திருக்காது. அது போலவே பாபர் மசூதி இடிப்பும் அதைத் தொடர்ந்த வன்முறையும். அதற்குப் பின்பும் பல குண்டு வெடிப்புகள் நிகழ்ந்தன. அவை எதுவும் இஸ்லாமியரால்தான் வைக்கப்பட்டன என்பதற்கு உரிய ஆதாரங்கள் இல்லை. மாலெகானில் மசூதியில் வைக்கப்பட்ட குண்டுகள் கூட இஸ்லாமியத் தீவிரவாதிகளால் வைக்கப்பட்டடது என்ற ஊகமும் உண்மை வெளிப்படுவதற்கு முன்பு வெளிப்பட்டது. பின்பு இந்து இயக்கங்கள் பலவும் இது குண்டு வெடிப்பில் ஈடுபட்ட உண்மை தெரியவந்தது. பெண் சாமியார் ஒருவர் கைது செய்யப்பட்டது வரை பலவும் நடந்தன. செய்திகள் தொலைக்காட்சிகள் என அனைத்து ஊடகங்களும் வெளியிட்டன. ஆனால் யாரும் இந்துக்கள் என்ற சமூகத்தின் மீதோ, இந்து இயக்கங்கள் மீதோ இந்து அடையாளங்கள் மீதோ பயங்கரவாத பிம்பம் விழுந்துவிடவில்லை. காவல்துறையின் வன்முறை அவர்கள் மீது பாய்வதில்லை. சிறுபான்மை பயங்கரவாதமும் பெரும்பான்மை பயங்கரவாதமும் ஒன்றல்ல ஏன் என்றால் பெரும்பான்மையாக இருப்பதே இந்துக்கள்தான். நாமே நம்மை பயங்கரவாதிகள் என்று எண்ணிக் கொள்ளப் போவதில்லை. தானல்லாத அடுத்த குழுவினரை குற்றம் சொல்வது மிக எளிதல்லவா ? இஸ்லாம் இல்லாத பல இடங்களிலும் நீதி கிடைக்காத நிலையில் பயங்கரவாதம் தலைதூக்குவது இயல்பல்லவா ? குஜராத் கலவரத்தில் கூட முஸ்லிம்கள் முதலில் எரித்துக் கொன்றார்கள் என்றுதான் சொல்கின்றனர். பாஜக ஆளும் மாநிலத்தில் என்ன எதிர்வினை வரும் என்று கூடத் தெரியாமல் 50 இந்துக்களை எரித்துக் கொல்லும் அளவிற்கு முஸ்லிம்கள் துணிச்சல்காரர்கள் என்று கூட சிந்திக்க முடியாத அளவிற்கு வெறுப்பு. குஜராத் கலவரம், பாபர் மசூதி இடிப்பு என்றாலே எல்லோருக்கும் கொட்டாவி வருகிறது, குண்டு வெடிப்பு என்றால் மட்டும் கோபம் வருகிறது.

உலக அளவில் 2011 ஆம் ஆண்டில்தான் இஸ்லாமோஃபோபியா உருவானது. ஆனால் இந்தியாவிலோ அதற்கு பல ஆண்டுகள் முன்பே உருவானதையும் கணக்கில் கொள்ள வேண்டும்.

விஸ்வரூபம்

நான் படங்கள் பார்ப்பதை நிறுத்தி விட்டேன். விஸ்வரூபமும் பார்ப்பேனா என்று தெரியவில்லை. இருந்தாலும் படம் பார்த்தவர்கள் சொல்வதைக் கொண்டு ஓரளவுக்கு கணிக்க முடிகிறது. படத்தில் கமலே ஒரு முஸ்லிம். ஆப்கன் மக்கள் தாலிபன் போராளிகள் வாழ்க்கையை அழகாகக் காட்டியிருக்கிறார். அமெரிக்கன் கூட ஆயில் கிடைத்தால் அல்லாஹூ அக்பர் என்பான் என்று  வசனம் இருக்கிறது. அமெரிக்கர்களையும் கிண்டல், விமர்சனம் செய்கிறார். இது ஒரு ஆப்கன் அமெரிக்கப் படை குறித்த விறுவிறுப்புப் படம். இதில் இஸ்லாமியரைப் புண்படுத்துவதெல்லாம் ஒன்றும் இல்லை. சராசரி ரசிகன் இதைத்தாண்டி சிந்திக்கப் போவதில்லை. ஹாலிவுட் பாணி சண்டைப்படம். பரவால்லை பாக்கலாம் என்பதுடன் அவனுடன் முடியும். 

குரானைப் படித்து விட்டுப் போய் குண்டு வைக்கிறான். குண்டுவெடித்த பின்பு தொழுவதைக் காட்டுகிறார்கள், சிறுவன் ஆயுதங்களை எடுத்துச் செல்கிறான். மசூதியில் ஆயுதங்களை வைத்திருக்கிறார்கள், முஸ்லிம் மனைவியைக் கூட்டிக் கொடுக்கிறான்.  இவையெல்லாம் இஸ்லாமியர் வைக்கும் குற்றச்சாட்டுக்களில் சில.

இதெல்லாம் ஒரு தடை செய்ய ஒரு காரணமாக முடியாது. தாலிபான்களின் வாழ்க்கையில் இதெல்லாம் அன்றாட நிகழ்வுகள்தான். அதை அப்படித்தான் காட்ட முடியும். இதற்கெல்லாம் மனம் வருந்தினால் ஒன்றும் செய்ய இயலாது. எதிர்ப்பின் காரணமே வேறு


இங்கு என்ன பிரச்சனை என்றால், அமெரிக்காவை குண்டு வெடிப்பிலிருந்து காக்கிறார் எஃபிஐ அதிகாரி கமல். ஆப்கனை படையெடுத்து ஆக்ரமித்திருக்கும், அமெரிக்கா அமெரிக்காவாகவே இருக்கிறது, ஆப்கனின் விடுதலைக்குப்போராடும் தாலிபன் தீவிரவாதிகள் வில்லன்கள் என்பது சரியா ?. தாலிபன் ஆதரவெல்லாம் இல்லை. அவர்கள் கொடூரமானவர்கள் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் அநியாயமாக ஒரு நாட்டை இன்னொரு நாடு ஆக்ரமித்திருக்கிறது. அந்த நாட்டில் நடக்கும் பயங்கரவாதத் தாக்குதலை ஒருவர் தடுக்கிறார். இதில் யார் குற்றவாளி ? அமெரிக்கா ஆப்கன் மட்டுமல்லாமல் பாகிஸ்தான் எல்லையைத் தாண்டியும் தாக்குகிறது. இங்கிலாந்து இளவரசர் ஹாரி தற்போது ஆப்கனில் ராணுவப்பயிற்சியில் ஈடுபட்டபோது வீடியோகேமில் வருவது போல் தாலிபன்களை வானூரிதியிலிருந்து சுட்டேன் என்று சொல்லி சர்ச்சையில் சிக்கியிருக்கிறார். ஆப்கனில் தாலிபன்களை விடக் கொடியவர்கள் இவர்கள்தான் என்பது படம் பார்ப்பவனுக்குப் புரியுமா ? தாலிபன் உருவானதற்கும் (ரஷ்யாவும்)அமெரிக்காதானே காரணம் என்பதையெல்லாம் படம் பார்க்கிறவர்களுக்குப் புரியுமா ? அதையெல்லாம் யோசிக்கப் போகிறார்களா ? வில்லன்களான தாலிபன்களை தீவிரவாதிகள் என்றுதானே அவன் எடுத்துக் கொள்வான். ஹாலிவுட் படங்கள் போலவே இதுவும் ஒரு அமெரிக்கா சார்பு படம்தானே ?

(நான் முதன்முறையாக தாலிபன்கள் பாமியன் புத்தர் சிலைகளை இடித்ததைத் தொலைக்காட்சியில் கண்டபோது அவர்களை வெறுத்தும், அமெரிக்கா ஆப்கானில் படையெடுத்த போது மகிழ்ச்சியும் அடைந்தவன். போர் என்றால் மக்கள் அடையும் துன்பங்கள் குறித்து கூட நான் சிந்திக்க வில்லை. தாலிபான்கள் அழிய வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே மேலோங்கியிருந்தது. கூடவே இரட்டைக் கோபுரத் தகர்ப்பின் காரணமாக எழுந்த பயங்கரவாத எதிர்ப்புணர்வும்.

2008 - இல் ஈழப்போர் உச்சத்தை அடைந்து கொண்டிருந்த போது, நான் மிகவும் நொந்து போயிருந்தேன். அப்போதுதான் இணையத் தமிழ் ஊடகங்கள் படிக்கத் தொடங்கியிருந்தேன். ஈழப் போரின் செய்திகள் உடனடியாகக் கிடைத்துக் கொண்டிருந்த காலம். என்னிடம் ஒரு மலையாளி நண்பன் கூறினான். பிரபாகரனை சுட்டுக் கொல்ல வேண்டும். நம்ம பிரதமர் ராஜீவைக் கொன்றவன், அவன் ஒரு பயங்கரவாதி என்றான். மேலும் இந்தப் போரில் புலிகள் உறுதியாகத் தோற்று விடுவார்கள் என்றான். நான் புலிகள் ஆதரவாளனோ பிரபாகரனைத் தலைவனாக ஏற்றுக் கொண்டவனோ இல்லை இருப்பினும் அன்று நான் அடைந்த ஆத்திரத்திற்கு அவனை அடித்தே கொல்லலாமா என்று ஆகிவிட்டது. ஈழம் குறித்த மற்றவர்களது பார்வை அவ்வளவுதான். இந்த முரண்பாட்டின் காரணமாகவே இதை எழுத நேர்ந்தது)

சரி இப்போது கற்பனையாக, விஸ்வரூபம் படத்திற்கு பதிலாக மலையாள இயக்குநரின் ஒரு பாலிவுட் படம் கமலுக்குப் பதிலாக சல்மானும் அமெரிக்க இராணுவத்திற்குப் பதிலாக இந்திய அமைதிகாக்கும் ராணுவம், தாலிபனுக்கு பதிலாக புலிகள், ஆப்கனுக்குப் பதிலாக ஈழத்தை ஆகிரமிக்கிற கதைக்களன், "இந்திய ராணுவம் பெண்களை பாலியல் வன்முறை செய்யாது" என்று ஒரு ஈழத்தமிழன் பேசுகிற மாதிரி வசனமும் வைத்து இருந்தால் நாம் எதிர்ப்போமா மாட்டோமா ? நாம் எதிர்த்தால் அதை மற்ற மாநிலத்தவர் எப்படி எதிர்கொள்வர் ? அவர்களைப் பொறுத்தவரை பின்லேடனுக்கும் பிரபாகரனுக்கும் பெரிய வேறுபாடு காணமாட்டார்கள். நம்மைப் போன்றவர்க்கு மட்டும்தானே ஈழ வரலாறு தெரிந்தவர்க்குத்தானே தீவிரவாதம், பிரபாகரன் பின்னுள்ள காரணம் நியாயம் புரியும் ? 

தென் ஆஃப்ரிக்க கிரிக்கெட் வீரர் ஹஷிம் ஆம்லா வை ஆஸி வரணனையாளர் டீன் ஜோன்ஸ் "பயங்கரவாதி மற்றுமொரு விக்கெட்டை எடுத்து விட்டார்" என்று கூறி பின்னர் மன்னிப்புக் கேட்டார். ஆம்லாவின் நீளமான தாடியும் காரணாமாக இருந்திருக்கும்.

நடிகை ஷபானா ஆஸ்மி தான் ஒரு முஸ்லிம் என்பதாலேயே மும்பையில் எனக்கு வீடு கிடைக்கவில்லை என்றார். அதற்கு முன்பு இம்ரான் ஹாஸ்மியும் சொன்னார்.

அப்துல் கலாம் ஷாரூக் கான் ஆகியோர்க்கு அமெரிக்காவில் அவர்களது பெயரால் மட்டுமே நடந்த கெடுபிடிகள்

இப்படியாக சொல்லிக் கொண்டே போகலாம். இந்து முஸ்லிம் கலப்பு மணம் செய்து கொண்டவருகளும் மிகவும் பிரபலமானவர்களுக்கே இந்த நிலமையென்றால் சராசரி குடிமகன்களுக்கு நடப்பதைப் பற்றிக் கேட்கவே வேண்டாம். சமூகப் புறக்கணிப்பின் வேதனை கொடுமையானது. நம்மால் அதை உணர முடியாது.

எனவே ஊடகங்களில் அவர்கள் சித்தரிக்கப்படுவதற்கெதிரான ஜனநாயக கருத்தியல் ரீதியான எதிர்ப்புக்கள் முன்னெடுக்கப்படுவது தேவையானதும் நியாயமானதும் ஆகும்.

இது மதவாதத்தை ஆதரிப்பதாகக் கருதத் தேவையில்லை. மத அடிப்படைவாதத்தை விமர்சிப்பது, எதிர்ப்பது இதில் வராதது. அதற்கும் இதற்கும் தொடர்பில்லை. மத அடிப்படைவாத எதிர்ப்பு, விமர்சனம், விவாதங்களை நான் வரவேற்கிறேன். 


வஹாபி, சௌதி, பிஜே, பர்தா, ஷரியா, தலைவெட்டிகளின் ஆதரவுக் கருத்துக்கள் இவைகளையெல்லாம் இடது கையால் ஒதுக்கி வைக்கிறேன். இதற்கெல்லாம் நான் ஆதரவாளன் இல்லை. மனிதனை கொன்று மதம் வளர்ப்பதை எதிர்ப்போம். மதம் கொன்று மனிதம் வளர்ப்போம் என்பதே என் கொள்கை. 

இக்காரணங்களைக் கொண்டு சிறுபான்மையினர் மீதான வெறுப்பை விளைவிக்கும் சித்தரிப்புகளை எதிர்ப்பதை புரிந்து கொள்வோம்.

விஸ்வரூபம் படம் தடை செய்யப்பட்டதும் மிகக் கடுமையாக எதிர்க்கப்பட வேண்டியதுமாகும். அது கருத்துரிமைக்கு எதிரான நடவடிக்கையே.

அதன் பின்னால் திமுக, அதிமுக என்று வேறு அரசியல் இருக்கிறது. சவுக்கில் படிக்கவும். 

தொடர்பான இன்னொரு பதிவு

விஸ்வரூபமும் என் ரிஷிமூலமும்
Download As PDF
Bookmark and Share

Post Comment

கற்பழிப்பு என்ற சொல்லின் பொருள்தான் என்ன ?

தற்போது  டெல்லி நிகழ்வு பரபரப்பான பேசப்படு பொருளாகியிருப்பதால் அச்சு ஊடகங்கள், காட்சி ஊடகங்கள் வரை எல்லா இடத்திலும் கற்பழிப்பு என்ற சொல்லைக் காணவும் கேட்கவும் வேண்டியிருக்கிறது. எல்லோரும் சொல்லி  வைத்த மாதிரி கற்பழிப்பு கற்பழிப்பு என்று எழுதித் தள்ளுகிறார்கள். அதன் பொருள்தான் என்ன ? ஒரு சொல்லின் பொருள் தவறு என்று தெரிந்த பின்னும் இன்னும் திரும்பத்திரும்பப் பயன்படுத்துவதன் நோக்கம் என்ன ? அறியாமையா இல்லை அலட்சியமா ?

ஒரு சொல்லில் மூலம் வரலாற்றையெ மாற்றிச் சொல்லி விட முடியும். பல உதாரணங்கள் இதற்குக் குறிப்பிடலாம்.

ஆரியர் வருகை முகலாயர் படையெடுப்பு - ஆரியரும் படையெடுத்துத்தானே வந்தார்கள் ?

கொலம்பஸ் அமெரிக்காவைக் "கண்டுபிடித்தார்" - அது அங்கேதானே இருந்தது பிறகென்ன கண்டு பிடிப்பது. இந்த கவர்ச்சியான செய்தியில் கொலம்பஸ் என்ற கொலைகாரன் வரலாறு வரை பல செய்திகள் மறைக்கப்படுகின்றன.

அன்னை இந்திரா காந்தி - இவரது உண்மையான பெயர் இந்திரா கான் என்று இருந்திருக்க வேண்டும். இவர் மணந்தது ஒரு பார்சி முஸ்லிமை. இவரது கான் என்ற (முஸ்லிம்) குடும்பப் பெயர் இந்தியாவை ஆள்கின்ற குடும்பத்திற்கு வரக்கூடாது என்பதற்காக காந்தி தனது பெயரை விட்டுக்கொடுத்தார்.

அடுத்து அண்ணல் காந்தியடிகள் மஹாத்மா காந்தியடிகள் என்று பல இடங்களில் பெயர் சொல்லி புகழ்கிறார்கள். காந்தியை இந்தியாவுக்கு சுதந்திரம் வாங்கிக் கொடுத்தவர், ஜாதியை ஒழிக்கப் பாடுபட்டவர் என்றும் பல பிரச்சனைகளுக்கு சர்வரோக நிவாரணியாக எடுத்துக் காட்டுகிறார்கள். மராட்டியத்தைச் சேர்ந்த ஜாதி எதிர்ப்பாளர் ஜோதிராவ் பூலே என்பவரைத்தான் முதன் முதலில் மகாத்மா என்று அழைத்தனர். அதே போல் அம்பேத்கர் அண்ணல் என்று அழைக்கிறோம். இவர்களது பட்டப்பெயரை காந்திக்குத் தாரை வார்த்து விட்டதால் மேற்கண்டவர் யாரேன்றே எவருக்கும் தெரியாது. அதன் மூலம் இது போன்ற பிரச்சனைகளுக்குப் போராடிய பல போராளிகளை இருட்டடிப்பு செய்கின்றனர்.

ஜப்பானில் அணு குண்டு வீசியதை மறக்கடிக்க கொண்டாடப்படும் உலக நட்பு நாள்.

இப்படிப் பலவாறு சொல்லிக் கொண்டே போகலாம். இப்போது கற்பழிப்புக்கு வருவோம்.

                                                         

இதைத் தெரிந்துதான் பயன்படுத்துகிறீர்களா இல்லை அறியாமலா ? நான் சொல்வது பாலியல் வன்முறை, வன்புணர்ச்சி, வன்கலவி, வல்லாங்கு என்று பல சொற்கள் இருக்கின்றன. இருப்பினும் தொடர்ந்து கற்பழிப்பு என்றே எல்லாரும் சொல்கின்றனர்.

ஃபேஸ்புக் என்பதை முகநூல் என்று எழுதுவது தேவையில்லாததும், தவறானதும் ஆகும். ஆனால் ஆர்வத்தினால் அப்படி எழுதுகின்றனர். இதை மட்டும் ஏன் இப்படி ? இன்னொன்று பெண்களை ஃபிகர் என்றுதான் எழுதுவேன் என்று அடம் பிடிக்கின்றனர். ஒவ்வொருவரிடமும் போய் கற்பழிப்பு என்று சொல்ல வேண்டாமே என்று சொல்ல சலிப்பாக இருக்கிறது.

இந்த கற்பு என்பதே பெண்களை அடக்கி வைத்து ஆண்கள் ஊர்மேய்வதற்கு உருவான ஒரு கருத்து. இதை இன்னும் பயன்படுத்துவதன் உள்நோக்கம் என்ன ? ஒரு பெண் பாலியல் வன்முறைக்கு உள்ளாகும் போது அவளை ஒரு விபத்தைச் சந்தித்தவளாகவே நடத்த வேண்டும் அல்லாது களங்கப்பட்டவள் என்ற குற்ற உணர்ச்சிக்கு உள்ளாக்கக் கூடாது. ஒரு வெறிநாய் கடித்து விட்டால் ஏற்படும் பரிதாப உணர்ச்சி மட்டுமே ஏற்பட வேண்டும். அய்யய்யோ வாழ்க்கையே போச்சே என்ற நிலையை ஏற்படுத்துகிறார்கள்.

முதலில் கற்பு என்றால் என்ன ? அதை எப்படி அழிக்க முடியும். கன்னித்தன்மை பறிபோனதைச் சொல்கிறார்களா ? கன்னித்தன்மை போனால் அது எப்படி கற்பழிப்பாகக் கருத முடியும். சரி பருவமடையாத குழந்தைகள் கூட வன்முறைக்கு ஆளாகிறார்கள் அதை எப்படி கற்பழிப்பு என்று சொல்கிறார்கள். கற்பு என்பது மனம் தொடர்பானது என்று கதை சொல்வார்கள். குழந்தைகளுக்கு பாலியல் குறித்தும் அதன் ஒழுக்கும் நேர்மை கலாச்சாரம், கற்பு இதெல்லாம் என்னவென்றே தெரியாது. பிறகெப்பப்படி பாலியல் வன்முறையின் போது அவர்களின் கற்பு அழியும்.

கற்பு, ஒழுக்கம், நடத்தை, கள்ளக்காதல் எனப் பல சொற்களும் பெண்களைக் குறிவைத்தே எழுதப்படுகின்றன. இந்த டெல்லி நிகழ்வு பெரிய பரபரப்பானதால், பலரும் உச் கொட்டினார்கள். இதில் நாளும் பார்வைகளாலும், பேச்சுக்களாலும் பெண்களை வன்முறை செய்து வரும் பலரும் இதைப் பற்றி பேசினார்கள் கோபப்பட்டார்கள்.

என்னுடைய நட்பு வட்டாரத்தில் ஒரு உள்ளம் இனிமே அந்தப் பொண்ணு வாழ்றதே வேஸ்ட்(மானம் போயிடுச்சாம் எல்லாருக்கும் தெரிஞ்சிரிச்சாம்) என்று திருவாய் மலர்ந்தது. இதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. பாதிப்பேராவது இப்படித்தான் நினைத்திருப்பார்கள். இப்படிச் சொல்ல வைப்பது என்ன வகையான மனப்பான்மை. கற்பழிப்பு என்ற கருத்துப் பொதிந்த சொல்லை பயன்படுத்துவதும் ஒரு காரணமில்லையா ?

ஆணுக்கும் கற்பு உண்டு என்று காளை மாட்டில் பால் கறக்கச் சொல்கிறார்கள். குப்புசாமி கற்பழிக்கப்பட்டார் என்று செய்தியைத் தலைப்பாகப் போட்டால் எல்லாரும் சிரிப்பானுகளா இல்லையா ? பிறகெதற்கு இந்த நோக்காடு ?

மாற்றுத்திறனாளர்களை ஊனமுற்றவர் என்றும், திருநங்கைகளை அலி என்றும் எழுதுங்களேன் பார்ப்போம், அதை மட்டும் பக்குவமாக மாற்றிக் கொண்டு எழுதும்போது இதை எழுதுவதற்கு மட்டும் ஏன் வலிக்கிறது.

ஏதோ ஒரு இடத்தில் தூய தமிழ்ப்பெயர்கள் பட்டியல் பார்த்தென் அதில் பெண்களுக்கான பெயர்களில் கற்பு என்று இருந்தது.

கற்பழிப்பு என்று எழுதுவதை நிறுத்துவது அவ்வளவு கடினமா என்ன ? நிறுத்துங்களேன். எத்தனை முறைதான் மெனக்கெட்டுச் சொல்வது.
Download As PDF
Bookmark and Share

Post Comment

ஆகையினால் பெண்ணுடலை சிதைக்கிறோம்


உன்னை வன்புணர்ந்தது என் குற்றமல்ல
நீ இரவில் சுற்றுவது எனக்கு உறுத்துகிறது
நீ உடலைக் காட்டுவது எனக்கு விறைக்கிறது

உன்னை இடிப்பதென்னுரிமை
இரவு விடுதிக்குச் செல்வது உனதுரிமை என்றால்
உன்னை உரசுவது எனதுரிமை
ஊர்சுற்றுவது உனதுரிமை என்றால்


உன்னை வன்புணர்ந்தது என் குற்றமல்ல
நீ எதிர்த்துப் பேசியதால் எனக்குக் கோபம் வந்தது
உன்மேல் அமிலம் ஊற்றியது என் குற்றமல்ல
நீ காதலை மறுத்ததால் எனக்கு எனக்கு வெறி வந்தது
மகளாய் இருந்தாலும் உன்னை வெட்டுவது என் குற்றமல்ல
நீ மாற்றானை காதலித்ததால் என் மானம் போனது

நீ ஏமாந்ததற்கு நான் பொறுப்பல்ல
இசைந்ததால் உன்னை மென்புணர்ந்தேன்
மறுத்தால் வன்புணர்வேன்

என் கண்கள் உன்னை மேய்வதற்கு நான் காரணமல்ல
நீ தெருவில் நடப்பதே காரணம்
நீ வயதுக்கு வராத சிறுமியாய் இருப்பது என் குற்றமல்ல
மதுவில் மயங்கியிருந்த என்னிடம் சிக்கியதே உன் குற்றம்

நாங்கள் இச்சை தீர்க்க உங்களைப் புணரவும்
மானம் காக்க உங்களைக் கொல்லவும்
வரம் பெற்றவர்கள்

எங்கள் கொண்டாட்டத்தை காஸநோவா 
என்று சிறுமைப்படுத்திக் கொண்டோம்
உங்கள் திண்டாட்டத்தையோ தேவடியா
என்று பெருமைப்படுத்தினோம்

நீங்கள் பாதுகாப்பாய் இருக்க கற்பை உங்களுக்காக
விட்டுக் கொடுத்திருக்கிறோம் நாங்கள்
கால்களுக்கிடையில் வைத்து காத்துக் கொள்ளுங்கள்
என்றாவதொருநாள் என்னினத்தைச் சார்ந்த ஒருவன்
உங்கள் உயிரை எடுத்தாவது அதை அழிக்கும் வரையில்

யான் கற்றதன் சாரம் இதுவே
எங்களால் மாற்றவியலாததாகும்
ஆம் இயற்கையாக
நீங்கள் பெண்கள் நாங்கள் ஆண்கள் 

ஆகையினால் வன்கலவி செய்கிறோம்
எம்மைப் பிறப்பித்த உம் உறுப்பை சிதைப்பதில்
உம்மீதான எம் உரிமையை
நாங்கள் உயிர்ப்பிக்கிறோம்


Download As PDF
Bookmark and Share

Post Comment

கருத்து சுதந்திரமும் கார்த்தி சிதம்பரமும்


கொள்கைக்கும் செயலுக்கும்தான் எத்தனை தொலைவு. ரவி ஸ்ரீனிவாசன் என்ற் ட்விட்டர் ஒருவர் கைது செய்யப்பட்டார். அவர் செய்த குற்றம் ஒரு செய்தியை பகிர்ந்தது மட்டுமே. இது என்ன சைனாவா இல்லை இந்தியாவா என்ற ஐயமே வந்து விட்டது. இந்த செய்திக்குத்தான் வலைப்பூவினரும், கீச்சருமாகிய நாம் பதறியிருக்க வேண்டும். அவர் வெறும் 16 பேரை மட்டுமே பின்தொடர்பாளர்களாக வைத்திருந்தாராம். இப்போது 2000 ஆயிரத்தைத் தாண்டி விட்டது.  

ரவி ஸ்ரீனிவாசன்

நீ சொல்வதை நான் ஏற்கவில்லை, ஆனால் அதை சொல்வதற்கான உனது உரிமையைக் காக்க என் உயிரையும் கொடுப்பேன் - என்ற வால்டேரின் மேற்கோளை முகப்பில் வைத்து

சமூகம் ஒரு மேம்படுத்துதளை நோக்கி பயணிக்க யத்தனிக்கும்போது முதலில் கருத்தளவிலான ஜனநாயகத்திற்குமான கதவுகளைத் திறந்து வைத்து இருக்க வேன்டும். அதற்கான சூழலை உருவாக்கி காப்பது நம் ஒவ்வொருவரின் கடமை - என்ற கடமையை அனைவருக்கும் வலியுறுத்தி

இந்திய அரசியல் சாசனத்தின் பிரிவு 19 -(1)(ஏ) எல்லோருக்கும் கருத்து மற்றும் வெளிப்பாட்டிற்கான உரிமையை உறுதிப்படுத்துகிறது. பெரும்பாலும் எல்லா ஜனநாயக நாடுகளின் அரசியல் சட்டங்களும் இதை வலியுறுத்துகின்றன. என்ற சட்டத்தினை எடுத்துக் காட்டி ஆரம்பிக்கப்பட்ட கருத்து.காம் என்ற இணையதளத்தில் உள்ள வாசகங்கள்.

இந்த இணையதளத்தை கி.பி 2005 ஆம் ஆண்டில் இறுதியில் கருணாநிதியின் மகள் கவிஞர் கனிமொழி, ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி ஆகியோர் இணைந்து உருவாக்கினர். எதற்காக எந்தக் கருத்தையும் வெளியிடுவதற்கு அஞ்சும் சூழல் உருவாகியிருக்கிறது. அதைப் போக்க ஒரு அமைப்பு தேவை. அனைவரும் தங்களது கருத்துக்களை சுதந்திரமாகவும்,வெளிப்படையாகவும் வெளியிடும் வகையில் ஒரு அமைப்பைத் தொடங்கினால் என்ன என்று இருவரும் சேர்ந்துபேசியதன் விளைவாக உருவானதே, கருத்து என்ற புதிய அமைப்பு.

அமைப்பு தொடங்கப்படுவதற்கு முன்னர் தமிழகத்தில் நடந்த நிகழ்வுகள் குறிப்பிடத்தக்கவை. 2005 இல் நடிகை குஷ்பு திருமணத்திற்கு முன்னர் உடலுறவு தவறில்லை எனவும், ஆண்கள் மனைவியாக வரும் பெண் கன்னித் தன்மையுடன் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதில்லை என்கிற பாணியில் ஒரு கருத்து வெளியிட்டார். இது இந்தியாடுடே வார இதழுக்காக எடுக்கப்பட்ட ஒரு புள்ளி விபரத்திற்காக எடுக்கப்பட்டது. இது போன்ற புள்ளி விபரங்கள் இந்தியாடுடே வார இதழில் அடிக்கடி, மேல்தட்டு மக்களின் பாலியல் நுகர்வுப் பண்பாட்டை ஆதரித்து ஊக்குவிக்க எழுதப்படுபவை.

குஷ்பு வெளியிட்ட இந்தக் கருத்தை, தினமலரின் தரத்தை விஞ்சும், செய்திகளை 150% சரியாகவும் நேர்மையாகவும் வெளியிடும் நாளிதழான சன் குழுமத்தின் தினகரன் தமிழ்நாட்டுப் பெண்களுக்குக் கற்பில்லையா என்று குஷ்பு சொன்னதால் பரபரப்பு என்று நீட்டி முழக்கி விட்டது. ராமதாஸும் தொல்.திருமாவளவனும் அப்போதுதான் முதல் முதலாக கூட்டணி சேர்ந்திருந்தனர். அப்போது ரஜினி திரைப்படங்களில் சிகரெட் குடிப்பது, திரைப்படங்களுக்கு தமிழ்ப் பெயர் வைப்பது(மும்பை எக்ஸ்பிரஸ்) என திரையுலகை எதிர்க்கும் விளம்பரப் போராட்டங்களை நடத்தி வந்தனர். காற்று வாங்கிக் கொண்டிருந்த அவர்களின் அரசியல் களத்திற்கு குஷ்புவின் இக்கருத்து வராது வந்த மாமணியாய் வந்து விழ குஷ்புக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களை தமிழ் அரசியல், தமிழ்ப்பெண்களின் கற்பு என்ற உணர்ச்சிகர நிலையில் நடத்தினர். குஷ்புவுக்கு வந்த எதிர்ப்பைப் பார்த்து நடிகை சுஹாசின் தமிழர்களுக்கு என்ன கொம்பா முளைத்திருக்கிறது என்று வாய் விட்டு விட்டார். இதன் பின்பு குஷ்புக்கு எதிராக நடந்த போராட்டங்களை விட சுஹாசினிக்கு எதிராக அதிகமான போராட்டங்கள் செருப்பு, துடைப்பக்கட்டை, கழுதை ஊர்வலங்கள் நடந்தன. விலங்கு நல வாரியங்கள் அதைக் கண்டித்தனர். குஷ்புவின் மீது 20க்கும் மேற்பட்ட வழக்குகள் பதியப்பட்டன. பின்பு அதே குஷ்பு, ராமதாஸும் திருமாவளவனும் கூட்டணி வைத்திருந்த திமுகவில் சேர்ந்தது முத்தாய்ப்பான நிகழ்வு.

இந்த நிலையில்தான் கருத்து சுதந்திரம் பற்றிய விவாதங்கள் நடந்தன. இதன் பின்புதான் கனிமொழியும் கார்த்தியும் இணைந்து கருத்து என்ற அமைப்பைத் தொடங்கினர்.

இதைத் தொடங்கியவ நடுவண் அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் பற்றி ஒரு மிகச் சாதாரணமான கருத்து ஒன்றைப் பகிர்ந்த குற்றத்திற்காக ஒரு ட்விட்டர் கைது செய்யப்பட்டிருக்கிறார். அவர் அன்னா ஹஸாரே இயக்க ஆதரவாளர் போல் தெரிகிறது. அன்னா ஹஸாரே, அரவிந்த் கேஜ்ரிவால் குறித்து பெரிய அளவில் எனக்கு நம்பிக்கை இல்லையெனிலும் இக்கைது ஜனநாயகத்திற்கு எதிரானதாகும். கூடவே கருத்துரிமைக்கும்.

அதிகாலையில் 5: 30 மணியளவில் வீடு வரை சென்று ஸ்ரீனிவாசனைக் கைது செய்ய வேண்டிய அளவுக்கு அவர் என்ன ட்விட்டரில் சொல்லி விட்டார் என்றால் இதுதான்.

"got reports that karthick chidambaram has amassed more wealth than vadra"

கார்த்தி அவரது நற்பெயருக்குக் களங்கம் விளைவிப்பதாக காவல்துறைக்கு மின்னஞ்சல் அனுப்பியதும் கைது செய்திருக்கிறது.

சொல்லுக்கும் செயலுக்கும் எத்தனை தூரம் ? அலட்சியத்தால் சாவு நிகழ்ந்தால் இருவருட தண்டனை அதே நேரம் ட்விட்டர், மின்னஞ்சல் ஆகியவற்றுக்கு 3 வருட தண்டனை ? இந்தச் சட்டம் யாருக்காக வைத்திருக்கிறார்கள் என்பது புரிகிறதா ? (நன்றி: தி ஹிந்து செய்திகள்)

இவ்வாறு செய்தித் தாட்களில் வந்த செய்திகளை நம் பதிவுகளில் மேற்கோளிடுவதும் கூட இச்சட்டத்தினால் தவறாகக் கருத்தப்படும் என்ற நிலையே இப்போது உள்ளது. இது தனி மனித உரிமைகளையே பறிக்கும். நம் கருத்துக்களை சுதந்திரமாக வெளியிடும் உரிமை நமக்கு வேண்டும். இந்த உரிமை நம்மிடம் இருக்குமளவிற்கு I-T ACT திருத்தப்பட வேண்டும்.

*
இதனோடு, பிரபலங்கள் கொடுக்கும் வழக்குகளுக்கு முன்னுரிமை கொடுக்கும் காவல் துறையின் அவசரப் போக்கும் நமக்கு தேவையில்லாத அச்சத்தை மட்டுமே தரும். சரியான விசாரணை வேண்டும்; தேவையற்ற கைது தவிர்க்கப்பட வேண்டும் என்பவைகளைக் காவல் துறையின் கவனத்திற்குக் கொண்டு செல்கிறோம்.

*
முறையான விசாரணை மூலம் உண்மைகள் வெளிவரும் முன்பே வெகு கோரமான ஊடகச் செய்திகள் குற்றமற்றவர்களையும் பாதிக்கும் என்ற எண்ணம் ஊடகங்களிடம் இல்லை என்பதும் வேதனையான செய்தி. ஊடகங்கள் இன்னும் பொறுப்போடு செயல்பட வேண்டும்.


நம் உரிமையையும், சுதந்திரத்தையும் காப்போம். 

இதற்காக பதிவர்கள் ஒன்று படுவோம். 

 

Download As PDF
Bookmark and Share

Post Comment