அன்பில்லா கணவா

அப்படியென்னதான் உன்னிடம் கேட்டுவிட்டேன்
முகம் கொடுத்தாவது பேசேன் என்றுதானே
அதற்கும் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டால்
நானெங்கே போவது இல்லை என்னை என்ன செய்வது ?
உனக்கோ எனதன்பின் பதிலாக எரிச்சலேன் வருகிறது
கொஞ்சிப் பேச மாட்டாயாவென கெஞ்சியே கேட்கிறேன்
உன்னிடம் நான் கேட்பது அன்பைத் தவிர வேறென்ன

உன்னைப் போலவே நானும் வேலைக்குச் செல்கிறேன்
உன்னைப் போலவே வெளியில் எனக்கும் தொல்லைகள்
மனத்தின் அழுத்தத்துடன்தான் வீட்டிற்கு வருகிறேன்
உன்னைப் போல் உண்ணும் உணவுக்குக் காத்திருப்பதில்லை
நீ உண்ணும் உணவை உண்டாக்கிக் காத்திருக்கிறேன்
உன்னைக் காணும் ஆசையில் அழுத்தம் ஆனந்தமாகிறது
உன்னைக் கண்டதும் களைப்பு களிப்பாகிறது
ஊனெங்கும் உற்சாகமாகி காதல் களைகட்டுகிறது
உனக்கோ களைப்புதான் பெரிதாகத் தெரிகிறது

உன்னை அனைவரும் நல்லவன் என்கிறார்கள்
நான் கொடுப்பினை செய்தவளென்று உனைக்காட்டி ஊரார் சொல்ல
என்பதில் எனக்கு மகிழ்ச்சிதான் குறையில்லை
அதனால்தானென்னவோ எனக்கு உன்மேல்
அன்பு குறைவில்லாம் ஊற்றெடுக்கிறது
குறை எனதன்பிலா உன் புரிதலா உன் மனநிலையா
எதுவாயினும் மிகத்துயரம் என் நிலை
என் மீது சாய்வு கொள்ளுமோ உன் நிலை ?
அள்ளித் தராவிட்டாலும் தாழ்வில்லை
என் ஏக்கத்திற்கு ஏனென்ற கேள்வி கூட இல்லையா ?
இப்படி என் துக்கத்திற்கு அடித்தளமாகிறாயே ?

நீ எல்லோருடனும் அன்பாய் இருக்கிறாயாம்
எனக்கும் பெருமைதான் கசக்கவா செய்யும் கணவனின் நற்பெயர்
ஆனால் என்னிடம் மட்டும் ஏன் அப்படி இல்லை ?
எனக்கு மட்டும் நீ ஏன் அப்படித் தோன்றவில்லை
என்னிடம்தானே எரிந்து விழுகிறாய்
எரிசொற்களை வீசுகிறாய்
கேள்விக்கணைகளைத் தொடுக்கிறாய்
சிறுதவறுகளையும் பொருட்படுத்துகிறாய் குற்றம் காண்கிறாய்
என்னை ஏசுகிறாய் குறை சொல்கிறாய்
எனக்குத்தானே தெரிகிறது நீ எத்தனை நல்லவனென்று ?
உன் கோபக்கொடுக்கை அறிந்தவள் யானே
நான்கு சுவர்களுக்கு நடுவிலும் நான்கு பேருக்கு அருகிலும்
என்னிடம் அன்பாக பேசமாட்டாய் புன்னகை பூக்க மாட்டாய்
இத்தனையும் தெரிந்தும் உன்னை நல்லவனென 
ஊரார் சொல்வது எனக்கு உவப்பாகவே இருக்கிறதே
இதுதான் நான் என்று புரிகிறதா ?
என் அன்பு எத்தகையதென்று தெரிகிறதா
உன்னிலும் சிறந்தவள் நானன்றோ ?

 உனது நீதியும் நேர்மையும் எனக்குத் தேவையில்லை
உனது சாக்குகளும் போக்குகளும் நான் பொருட்படுத்துவதில்லை
உனது கொள்கையும் கோட்பாடும் எனக்குக் குப்பைகள்
உனது மனநிலையும் தோல்வியும் எனக்கு புரளிகள்
உனது இன்பமும் துன்பமும் மட்டுமே நான் காண்பவை
உனது தீண்டல் மட்டுமே
உனது அணைப்பு மட்டுமே
உனது முத்தம் மட்டுமே
உனது ஆசைப்பேச்சு மட்டுமே
என்னைக் கொஞ்சுவது மட்டுமே
அவை அனைத்தும் எனக்கு மட்டுமே
நான் வேண்டுவது இவை மட்டுமே
அன்புக்கு ஏங்குவதே என் பிறவிக்குணம்

அன்பு செய்வதெப்படியென
சமையல் செய்வதெப்படியென
சமர்த்தாக நடந்து கொள்வதெப்படியென
சினந்து பேசாமல் சிரித்து பேசுவதெப்படியென
பொங்கியெழாமல் பொறுமை காப்பதெப்படியென
என்பதெல்லாம் கற்றுக்கொள் என்னிடம்

திருமணமான ஆண்களுக்குக் காதல் சற்றே கடினம்தான்
மனைவியைக் காதலிப்பது என்னவோர் சாதனை பாரேன் கணவா
உனக்கு வேறுவழியில்லையே என்ன செய்ய ?
என்னை நேசிக்கக் கொஞ்சம் முயன்றுதான் பாரேன்
அதில் கிடைக்கும் தெவிட்டாத இன்பம் நான் உத்தரவாதம்
இயலாத காலத்தில் இன்பம் அனுபவிக்காது போனோமே
என்றெண்ணி ஏங்கி வாடும் நிலை உனது முதுமைக்கு
வேண்டாமே என் கணவா புரிந்து கொள்வாய் என் கணவா
அன்றேல் என் வாழ்க்கை போய்விடும் வெறும் கனவா
Download As PDF
Bookmark and Share
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

கூகிளின் அடுத்த அருட்கொடை - நமது குரல்/பேச்சு எழுத்துக்களாக மாறும் அதிசயம்

அடுத்த அற்புதத்தை நிகழ்த்தி விட்டது கூகிள். ஆம். நாம் பேசினால் அது எழுத்துக்களாக மாறுகிறது. இதற்காக நாம் எழுத்துக்களை குரலாக மாற்றித்தான் வாழ்கிறோம். ஆனால் குரலையே எழுத்துக்களாக மாற்றும் தொழில்நுட்பம் ஆங்கிலத்தில் ஏற்கெனவே வந்து விட்டது. கூகிள் நிறுவனத்திற்கும் அதன் ஊழியர்களுக்கும் எத்தனை நன்றி சொன்னாலும் தகும். உங்களது ஆண்ட்ராய் திறன் பேசியில் இதைப் பயன்படுத்தலாம். தட்டச்சு செய்யும் வாய்ப்பில்லாதவர்கள், நேரமும் வாய்ப்பும் கிடைக்காதவர்கள் கூட இதைப் பயன்படுத்தி தனது கருத்துக்களை வெளியிடும் வாய்ப்பை இந்த கண்டுபிடிப்பு நமக்கு அளித்திருக்கிறது. தமிழ் கூறும் நல்லுலகம் கூகிளுக்கு கடமைப்பட்டுள்ளது. இதன் வேகம் தட்டச்சு செய்வதைக் காட்டிலும் மும்மடங்கு வேகத்தில் இருக்கிறது என்று கூறுகிறது கூகிள். 

கையால் ஒரு பலகையில் எழுதுவது போல் எழுதினால் கூகிள் அதை எழுத்தாக மாற்றித் தரும் வசதியான தமிழ் ஈர்த்தறி வசதி (Tamil Handwriting Recognition Facility) என்ற அற்புதத்தின் அடுத்த மைல்கல்லாக விளங்கப் போகிறது இந்த கண்டுபிடிப்பு. இதற்கு மேலும் என்னதான் வேண்டும் சொல்லுங்கள். 

இதைப் பயன்படுத்துவது மிகவும் எளிதானது. நாம் செய்ய வேண்டியதெல்லாம், ஆண்ட்ராய்ட் அலைபேசியில் Gboard - எனப்படும் கூகிளின் தட்டச்சுப் பலகை செயலியை நிறுவ வேண்டியதுதான். பின்பு languages - என்ற பகுதியில் சென்று தமிழை தேர்ந்தெடுக்கவேண்டும். பின்பு பேசிக் கொண்டே இருக்கலாம். இதைக் கொண்டு இணைய உலாவிகளில் தேடல்களை நிகழ்த்தலாம். மின்னஞ்சல், ஃபேஸ்புக், கட்செவி அஞ்சல் (whatsapp) என அனைத்து செயலிகளிலும் பயன்படுத்தலாம். அதிகம் மெனக்கெட்டு தட்டச்சு செய்து அழித்துக் கொண்டிருக்கத் தேவையில்லை.        இவ்வாறு தன்னால் இயன்ற வரையில் எல்லாம் மொழிகளுக்கு தனது கடமையை ஆற்றிக் கொண்டிருக்கின்றன சில நிறுவனங்கள். ஆனால் இன்னும் தமிழை எந்த இடத்திலும் பயன்படுத்தக் கூடாது என்று இறுமாப்பாக இருப்பவர்கள் இதைப் பயன்படுத்துவார்கள் என்று நம்பலாம். இனிமேல் தமிழில் தட்டச்ச முடியாமல்தான் ஆங்கில எழுத்துக்களைப் பயன்படுத்தி, தமிழில் உரையாடும் அட்டூழியம் இனியாவது ஒழிய வேண்டும். ஆயிரம் நன்றிகள் இதை சாத்தியமாக்கிய கூகிள் ஊழியர்களுக்கு. 
     தமிழ் வாழ்க ! தொழில்நுட்பம் வாழ்க ! கூகிள் வாழ்க !


Download As PDF
Bookmark and Share
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

மீண்டும் நானாக

உனது ஊர் எனக்கும் உறவாக இருந்தது
எனது உறவு உனக்கு ஊராக இருந்தது
நாம் இயங்கும் இடம் நமக்கான பாலமாய் இருந்தது
இருந்தும் எனக்கில்லை அந்தக் கொடுப்பினை
உனது இயல்பே எனது அன்பானது
உனது புறக்கணிப்பே பதிலானது
நீயோ எனது உலகமாக இருக்கிறாய்
நானோ உனதுலகத்தில் கூட இல்லாதவனாய்
எனது சொற்களில் அன்பை நிறைத்து அனுப்புகிறேன் 
நீயோ உன் பதில்களில் சலிப்பைக் காட்டுகிறாய்
உன்னைக் கண்டு புன்னகைக்கவே காத்திருக்கிறேன்
என்னைக் கண்டதால் வேறுவழியின்றி புன்னகைக்கிறாய்
நீ எனக்கு மற்றவரில் ஒருவரல்ல என்று நிறுவ முனைகிறேன்
நான் உனக்கு மற்றவராகக் கூட இல்லை என்று நிறுவுகிறாய்
எதிர்ப்பட்டால் கூட ஏறெடுத்தும் பார்க்காத நீ
எப்பொழுதும் ஏங்கிக் கொண்டிருக்கும் நான்
எதற்காக நம் சந்திப்பு நிகழ வேண்டும்
உன் அலட்சியம் உன்னையே இலட்சியமான
எனை ஏன் இகழ வேண்டும்
என்ன விந்தை இது ?
என்ன கொடுமை இது ?
ஓர் உயிர் இன்னோர் உயிரை ஓயாது நினைக்க
இன்னோர் உயிர்க்கோ இப்படியோர் உயிர் இருப்பதே
அறியாமல் இருக்க நம்பிக்கையற்ற ஒன்றிற்காக
கிடைக்காத ஒரு வரத்திற்காக 
இல்லாத கடவுளிடம் தவமெதற்கு
விரும்பாத ஒருவரைக் கூட நான் இப்படி விட்டதில்லை
ஆம் இப்படியே செல்லட்டும் என் காலம்
இப்படியெல்லாம் நினைந்திருந்தவன் மாறிவிட்டேன்
உனது நீண்ட கூந்தல் ஈர்ப்பு தரவில்லை
உனது வடிவான உடல் சிலிர்க்க வைக்கவில்லை
கூரிய புருவங்களும் கண்களும் கலக்கம் தரவில்லை
உனது கொலுசொலி இதயத்துடிப்பை அதிகரிக்கவில்லை
உனது உடைகளின் நேர்த்தியில் அதிசயிக்கவில்லை
உன்னுடன் பேசும் தருணத்திற்கு ஏங்கவில்லை
உன்னுடைய பேச்சுக்களை அசைபோட்டு களிக்கவில்லை
உன்னுடைய சிரிப்பின் அழகை நினைத்துப்பார்க்கவில்லை
உன்னை சிரிக்க வைத்தேன் என்று பெருமிதப்படவில்லை
உன்னுடன் பழகிவிட்டேனே என்று பெருமைப்படவில்லை
உன்னை வெல்லவில்லை என வருத்தப்படவில்லை
முன்பு போல் உனது வருகையும் செல்கையும் சலனப்படுத்தவில்லை
நீ யாரோவாக மாறி விட்டாய்
நான் நானாகவே திரும்பி விட்டேன்
உன்னைப் போலவே இயல்பானவனாக மாறிவிட்டேன்

Download As PDF
Bookmark and Share
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

சகாவு - தோழர் - Comrade

சகாவு (தோழர்) என்ற மலையாளப்படம் பார்த்தேன். ஒரு பொதுவுடமைவாதியின் படம். இல்லை இரண்டு பொதுவுடமைவாதிகள் பற்றிய கதை. பொதுவுடமை கம்யூனிச படம் என்றதுமே படம் பார்த்துவிட வேண்டும் என்ற ஆர்வம் அதிகமானது. ஆனால் நிவின் பாலியின் படம் என்றதும் ஒரு தயக்கம் ஏற்பட்டது. இதுவே துல்கர் சல்மான் என்றால் அந்தத் தயக்கம் வந்திருக்காது. இந்தப் படம் பொதுவுடமை பற்றிய படம் என்றாலும் பொதுவுடமை என்ற உலகின் மிக முக்கிய சித்தாந்தத்தின் மீதான மதிப்பை ஏற்படுத்தத் தவறியிருக்கிறது என்றே சொல்ல வேண்டும். இந்திய அளவில் மூன்றாவது பெரிய கட்சியாகவும், பல சிறு கட்சிகளையும் கொண்டிருக்கும் சித்தாந்தம்தான் பொதுவுடமை. 

இந்தியாவில் தெற்கே கேரளத்திலும், வடக்கே (கிழக்கு?) மேற்கு வங்கத்திலும் பொதுவுடமைவாதிகள் அரசியல் ஆதிக்கம் செலுத்துகிறார்கள். அதன் தாக்கம் அந்த மக்களிடமும் இருக்கிறது. ஜாதிக்கொடுமை மிகுந்த கேரளம் 60 வருடங்களில் கல்வியில் இந்தளவுக்கு முன்னேறி இருக்கிறது என்றால் அது கம்யூனிசவாதிகளின் ஆட்சியின் விளைவினால்தான். இன்று கூட ஏறக்குறைய ஒட்டு மொத்த இந்தியாவும் இந்துத்துவா ஃபாசிசவாதிகளிடம் வீழ்ந்து விட்ட போது கேரளா இன்னும் மண்டியிடாமல் இருக்கிறது, கம்யூனிச தலைமையில் இந்துத்துவாவை எதிர்த்து நிற்கிறது. இத்தனைக்கும் மேலாக அங்கே இரண்டு மதவாதிகளின் வளர்ச்சியும் இருக்கிறது. இந்த நிலையில் கம்யூனிசம் பற்றிய மதிப்பீடுகளை அதிகரிக்கும் படங்கள் வர வேண்டும். 

ஆனால் இது போன்ற திரைப்படங்களால் என்ன பெரிய மாற்றம் இளைய தலைமுறையிடம் வரும் என்று தெரியவில்லை. ஏனென்றால் இத்திரைப்படத்தினை நிவின் பாலி என்ற ப்ரேமத்தின் நாயகன் என்ற புகழ் வெளிச்சத்திலேயே பார்ப்பார்கள். ப்ரேமம் போன்ற விடலைகளின் அற்ப உணர்ச்சியை சொறிந்து விட்ட படத்தில் தன்னைக் கண்டு மயங்கிய இளசுகள் இதை ரசிக்கவோ, ஏற்றுக் கொள்ளவோ போவதில்லை. அய்யோ கம்யூனிச படமா என்று அஞ்சுவார்கள் (கம்யூனிசம் என்றாலே சலிப்புதான்). ஏனென்றால் இது உண்மையில் நிவின் பாலியின் நாயகத்தனத்தை போற்றுவது போலவே சித்தரிக்கப்பட்டுள்ளது. 

இக்கதை இரண்டு பொதுவுடமைவாதிகளைப் பற்றியதாகும். இரண்டு வேடத்திலும் நிவின் பாலியே நடித்துள்ளார். சகாவு கிருஷ்ண குமார் என்ற கிச்சு, சகாவு கிருஷ்ணன். சகாவு கிச்சு அல்லது கிருஷ்ண குமார் என்ற, மாணவர் இயக்கத்தில் (கேரள மாணவர் இயக்கம்- SFK) மாவட்ட பொறுப்பில் இருக்கும் சகாவு (தோழர் அல்லது Comrade) கிருஷ்ண குமார் என்கிற கிச்சுவிடமிருந்து படம் தொடங்குகிறது. 

அவன் வீட்டில் அம்மாவிடம் சினந்து கொண்டு உணவை அருந்தாமல் வெளியில் சென்று உணவை உண்கிறான், அவன் நண்பன் அழைக்கும் போது அவனுக்கும் சேர்ந்து இறைச்சி வாங்க வேண்டும் என்று அவனிடம் தான் உண்டு முடித்து விட்டதாகவும், தானே வாங்கி வருவதாகக் கூறுகிறான். தான் இறைச்சி உண்டதை நண்பன் மோப்பம் பிடித்து அறியாமல் இருக்க சௌகாரம் (soap) கொண்டு கழுவுகிறான். வெறும் தோசையை வாங்கி வரும் கிச்சுவிடம் அவனது நண்பன் ஒரு ஹாம்லெட் கூட வாங்க முடியாதா என்று கேட்கிறான். எல்லாம் தீர்ந்து விட்டது என்று பொய் சொல்கிறான். அவனுக்கு தங்க இடம் கொடுக்கும் அந்த நண்பனுடனான உரையாடலுடனேதான படத்தின் ஆரம்பக் காட்சிகள் கழிகின்றன. அதில் அவன் எப்பேர்ப்பட்ட பொய்யனாகவும், அயோக்கியத்தனமாகவும் இருக்கிறான் என்பதை நகைச்சுவையாகக் காட்டுகிறார்கள். அவன் தற்போது இருக்கும் பதவியிலிருந்து படிப்படியாக முன்னேறும் திட்டம் வைத்திருக்கிறான். அதில் எந்த வித நேர்மையும் இல்லாமல் அடுத்தவனை ஏமாற்றுவது, கையூட்டு வாங்குவது, போட்டுக் கொடுப்பது, மக்களிடம் ஏமாற்றி நல்ல பெயர் வாங்குவது எப்படியாவது அமைச்சராவது என்ற வரையில் இருக்கிறது. 

அதில் முதல் கட்டமாக அரசியலில் இருக்கும் அவனுடைய உற்ற நண்பனையே அடியாட்களை வைத்து அடித்து விரட்டி அரசியலில் நகர்வதைப் போல ஒரு திட்டத்தைச் சொல்கிறான். இது போல் பல பத்து குறிக்கோள்களை வைத்து ஒவ்வொரு இடங்களிலும் அவனது நண்பனிடம் சொல்கிறான். (மலையாளப் படங்களில் இது போன்ற ஒரு நண்பன் பாத்திரத்தை வைத்து அவனை பேக்காகவும், அய்யே என்று வாயை அழுத்தி அதிர்ச்சியடையும் வகையில் நாயகனைப் பேச வைத்தும் நகைச்சுவைக் காட்சிகளை வெற்றிகரமாகவே படைக்கிறார்கள்). பிறகு அவர்கள் குருகிக்கொடை கொடுப்பதற்காக மருத்துவமனைக்குச் செல்கிறார்கள்.  அங்கே தனது கட்சியின் பெரிய தலைவர்கள் வந்து செல்வதையும் பார்க்கிறான் கிச்சு. 

கிச்சுவின் குருதியை வேண்டியிருக்கும் நோயாளியுடன் வந்திருப்பவரிடம் பேசி அவரிடமிருந்தே கிச்சுவும் அவனது நண்பனும் உணவை உண்கிறார்கள், பழச்சாற்றை அருந்துகிறார்கள். காவல்துறையினர் வந்து மருத்துவரிடம் அந்நோயாளியின் உடல் நிலையை அறிந்து செல்கின்றனர். அவனுடைய கட்சியின் ஒரு தலைவரிடமிருந்து தான் குருதிக் கொடை அளிக்க வேண்டிய நோயாளி ஒரு (தமது கட்சிக்கு வேண்டப்பட்ட) சகாவு என்று சொல்கிறார். எனவே அங்கே இருந்து குருதியை அளிக்க வேண்டும் என்று வற்புறுத்துகிறார். அப்போது அங்கே தன்னுடையை பள்ளித்தோழி ஐஸ்வர்யாவை மருத்துவமனையில் காண்கிறான். அதே மருத்துவமனையில் செவிலியராக பணிபுரியும் அவள் விடுப்பில் இருக்கும் அவள் அந்த படுக்கையில் இருக்கும் (கிச்சுவின் குருதியை வாங்கப் போகும்) சகாவைக் காண வந்ததாகக் கூறுகிறாள். யார் அந்த சகாவு என்று கேட்கும் கிச்சு, அவர்தான் அவனது தோழியான அந்த ஐஸ்வர்யாவை படிக்க வைத்தவர் என்று அறிகிறான். அவருக்குக் குருதிக் கொடை அளிப்பதால் பல பேருடைய அன்பும், நன்றியும், வேண்டுதலும் கிச்சுவுக்கு உரித்தாகும் என்று கூறுகிறாள். தனிப்பட்ட முறையில் அவனுக்கு ஒரு பெரிய நன்றியையும் நவில்கிறாள் ஐஸ்வர்யா. 

அங்கே தனக்கு வேலை வாங்கித் தந்தேன் என்பதற்காகாக நோயாளியைப் பார்த்துக் கொண்டிருக்கும் ஒரு எளியவரிடம் பணத்தை வற்புறுத்திப் பெறுகிறான். அரசியலில் இருப்பவர்கள் எத்தனை கீழ்த்தரமாக இருப்பார்கள் என்பதை கிச்சுவின் பாத்திரம் மூலமாகப் புரிய வைக்கிறார்கள். பின்பு படுக்கையிலிருக்கும் சகாவு உடன் இருப்பவர் வந்து சகாவுவின் கதையைச் சொல்லத் தொடங்குகிறார். அவர் தனது இளமைக்காலத்தில் கிச்சுவைப் போலவே இருந்ததாகவும் கூறுகிறார். கம்யூனிசக் கட்சியை வளர்ப்பதற்காக வந்த ஒரு கொள்கைப் பற்றுள்ள இளைஞர் என்கிறார். 


சகாவு கிருஷ்ணன்.

சகாவு கிருஷ்ணன் ஒரு அரசியல்வாதி. அரசியல்வாதி என்பதைக்காட்டிலும் வயதைத் தாண்டிய பக்குவமுடைய, கொள்கைப் பற்றுடைய சமூக சேவகர், மக்கள் தொண்டர். தான் முதலில் பீர்மேட்டில் சகாவைக் கண்டதாகக் கூறுகிறார். அங்கே தான் உதவி ஆய்வாளராகப் பணியாற்றியதாகக் கூறுகிறார். இங்கே சகாவு கிருஷ்ணன் அறிமுகம் தமிழ் தெலுங்கு படங்களின் மாஸ் நாயகர்களின் அறிமுகத்தைப் போல நிகழ்கிறது. அந்த உதவி ஆய்வாளர் (கிச்சுவிடம் கதை சொல்பவர்) ஒருவரை அடித்துத் தள்ளுகிறார். அவர் வந்து சகாவின் காலடியில் உருண்டு விழுகிறார். அவரை எழுப்புகிறார் சகாவு, இக்காட்சியில் சகாவை பின்புறமிர்ந்து மேல் வரை காட்டுகிறார். கைமுட்டியை முறுக்குவதாகக் காட்டுகிறார்கள். என்னவோ பட்டையைக் கிளப்பப் போகிறார் என்று பார்த்தால் ஒன்றுமில்லை. அந்த அடிவாங்கியவரை வண்டியில் ஏற்றிக் காவல்துறை செல்கிறது. சகாவு பெட்டிக் கடையில் சோடாவை வாங்கிக் குடித்து விட்டுச் செல்கிறார். 

இது எனக்கு மிகுந்த ஏமாற்றமாக இருந்தது. ஒரு கம்யூனிஸ்ட் என்பவனை பற்றிய ஒரு சித்திரத்தை இது போன்ற காட்சிகள் மூலமாக என்ன பதியவைக்க முடியும். எந்த மொழித் திரைப்படத்தை எடுத்துக் கொண்டாலும் சினம் கொண்ட இளைஞன் கதையின் நாயகன், தான் வந்த இடத்தில் நடக்கும் அராஜகத்தை எதிர்த்துப் போராடுவான். அப்படியிருக்க உலகில் எங்கு அராஜகம் நடந்தாலும் அதைக் கண்டு சினம் கொள்ளும் ஒரு கம்யூனிச பாத்திர அறிமுகம் இப்படி ஒரு மௌனமாக நிகழ்ந்திருக்கிறது. பின்பு அங்கே சக தோழர்களுடன் அறிமுகமாகிறார். மொத்தம் ஐவர் மட்டுமே அங்கே கட்சியாக இருக்கிறார்கள். தொழிலாளிகளுக்கான சங்கம் அங்கே இல்லை, யாரும் இணைவதில்லை என்கிறார்கள் மற்ற தோழர்கள். தொழிலாளர்களின் மனதில் நம்பிக்கையை விதைக்க வேண்டும் அதுதான் முக்கியமானது என்று தோழர்களுக்கு விளக்குகிறான் கிருஷ்ணன். மற்ற ஐந்து தோழர்களும் கிருஷ்ணனை விட பத்து பதினைந்து வருடங்கள் மூத்தவர்களாக இருக்கிறார்கள் அவர்களுக்கு பிள்ளைகளுக்குச் சொல்வதைப் போல கட்சியைப் பற்றியும் கம்யூனிசத்தைப் பற்றியும் சொல்கிறான் கிருஷ்ணன். (அதாவது பாரவையாளர்களுக்குச் சொல்கிறான்)

பின்பு அங்கே தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களிடம் சென்று கேட்கிறார்கள். யாரும் இவர்களுடன் இணைய முதலில் மறுக்கிறார்கள். பின்பு இணைகிறார்கள். இரவில் அவர்கள் வீடுகளின் முன்பு சென்று தீப்பந்த வெளிச்சத்தில் அவர்களது உரிமைகள் பற்றியும், அரசாங்கத்தில் அறிக்கைகள் பற்றியும் போராடுவதன் அவசியம் குறித்தும் உரையாற்றுகிறான். அவர்களுடன் இணைந்து வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுகிறான். காவல்துறையால் கைதாகிறான். அடிவாங்குகிறான். கட்சியால் விடுவிக்கப்படுகிறான் பின்பும் போராடுகிறான், தொழிலாளிகளின் நியாயமான கூலியை போராடிப் பெற்றுத் தருகிறான். தொழிலாளர் சங்கத்தைக் கட்டுகிறான். இவை திரைப்பட பாணியில் படமாக்கப்பட்டுள்ளதை கம்யூனிஸ்டுகள் ஒத்துக் கொள்ள மாட்டார்கள். ஏனெனில் அவர்களின் போராட்டம் இன்னும் இன்னல் மிக்கது, நீண்டது. வெறும் உண்டியல் குலுக்கிகள், உண்ணா நோன்பு இருப்பவர்கள் என்று புரிந்து கொண்டிருப்பவர்களுக்கு அது தெரியாது. இதைப் போன்றே விவசாயத் தொழிலாளர்களுக்கும் வரவேண்டிய நியாயமான கூலியைப் போராட்டங்களின் மூலம் பெற்றுக் கொடுக்கிறான். ஒரு இடத்தில் பாண்டிக்கார ஆட்கள் என்ற இனவெறிச் சொல்லும் வருகிறது சகாவின் வாயிலிருந்தே.

இந்த இடத்தில் ஒரு காட்சியைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். நிலவுடமையாளரான அம்பட்டரிடம் பேசிவிட்டு அவர் வீட்டிலிருந்து தோழர்களுடன் வெளியேறுகிறான் கிருஷ்ணன். அப்போது அம்பட்டர் கேட்கிறார்

உன் பெயரென்ன ?

கிருஷ்ணன்.

கிருஷ்ணன். கிருஷ்ணன் மட்டும்தானா ? பேருக்கு ஒரு வாலில்லையா ? கிருஷ்ணன் நம்பூதிரி, கிருஷ்ணன் நாயர் என்றெல்லாம் இல்லையா ? 

என்னுடைய ஜாதியயும் நம்பிக்கையயும் அறிய வேண்டுமென்றால் அது என்னுடைய பெயரின் வாலில் இல்லை. என்னுடைய பேரின் முன்னர் உள்ளது. தோழர் (சகாவு) !  சகாவு கிருஷ்ணன் ! 

இந்தக் காட்சி ஜாதியை எதிர்ப்பவர் அனைவராலும் கொண்டாடப்படும். 

சகாவின் தொல்லை தாங்காமல் அம்பட்டர், அந்த உதவி ஆய்வாளரை ஏவி அவனை கொல்வதற்கு முயல்கிறார். ஆனால் அவர் சகாவின் நண்பராகி விடுகிறார். அவர்தான் கிச்சுவிடம் இதுவரையான கதையைச் சொல்கிறார். அப்போது அங்கே வழக்கறிஞர் ஒருவரும், இன்னும் சில தோழர்களும் வருகிறார்கள். அங்கே வெளியே காத்திருக்கும் ஆட்களிடமும் அந்த கதை சொல்லும் ஆளிடமும் இது வரை இயங்காமல் இருந்த டீ எஸ்டேட் மீண்டும் திறக்கப்படப் போகிறது என்ற நற்செய்தியைச் சொல்கிறார். அங்கிருப்பவர்கள் அவருக்கு நன்றி தெரிவித்து மகிழ்கின்றனர். அதற்குக் காரணமான சகாவு அங்கே உள்ளே இருக்கிறார் என்று சொல்கிறார் அந்தக் காவலர். இதையெல்லாம் பார்க்கும் கிச்சு தன்னை ஒரு சகாவு போல உணர்கிறான். 

பின்பு சகாவு கிருஷ்ணனின் மனைவியும் மகளையும் பார்க்கிறான். அவர்களும் அங்கேதான் இருக்கிறார்கள். அங்கே சகாவுவின் திருமணம் பற்றி அறிகிறான். அது ஒரு நயமான கதை. லஷ்மி அங்கே தேயிலைத் தோட்டத்தில் பணி புரிந்தவர். அங்கே கட்சியை வளர்க்க வந்த கிருஷ்ணனுடன் போராடுகிறாள் லக்ஷ்மி. அவள் போராடுவதால் அவளுக்கு திருமணம் தள்ளிப் போவதாக அவளது பெற்றோர் அவளை அதிலிருந்து தடுக்கின்றனர். இவள் போராட்டத்தில் ஈடுபடுவதால் யாரும் திருமணம் செய்ய மறுத்தால் தானே திருமணம் செய்வதாக கிருஷ்ணன் அப்போதைக்கு சொல்லி வைக்கிறான். ஆனால் ஒரு வருடம் கழித்து அதை மீண்டும் ஒரு தோழர் நினைவூட்ட பின்னர் சம்மதிக்கிறான். ஆனால் லக்ஷ்மி அவன் விரும்பாவிட்டால் திருமணம் வேண்டாம் என்கிறாள். ஆனால் கிருஷ்ணன் திருமணம் செய்ய சம்மதம் என்கிறான். திருமணத்தன்று வெளியே ஒரு பிரச்சனைக்காக முன்னிரவு சென்றவன் திருமண நேரம் கடந்தும் வரவில்லை. சென்ற இடத்தில் ஒரு உடன்படிக்கை ஏற்பட்டு பிரச்சனை தீர்ந்தவுடன் திரும்பச் செல்ல எத்தனிக்கிறான். அப்போது அவனுடன் இருக்கும் தோழர் இனி வேறொன்றும் முக்கியமான வேலை இல்லையே என்று கேட்கிறார். அப்போதுதான் அப்போது அவனுக்குத் திருமணம் செய்ய வேண்டிய நேரம் என உறைக்கிறது. சகாவுக்கள் இப்படி தன்னை மறந்து சமூகத்திற்காக உழைக்கிறார்கள் என்று சொல்கிறார்கள். 

பின்பு திருமணம் செய்யுமிடத்திற்குச் செல்ல அங்கே அனைவரும் சென்று விட்டிருக்கின்றனர். லக்ஷ்மி அவனைப் புன்னகையுடன் வரவேற்கிறாள். தான் ஏமாற்றி ஓடிவிட்டதாக நினைத்துக் கொண்டாயா என்கிறான் கிருஷ்ணன். லக்ஷ்மி தான் அப்படி நினைத்திருந்தால் இவ்வளவு நேரம் அவனுக்காக காத்திருக்க மாட்டேன் என்கிறாள். பின்பு அங்கே கட்டியிருக்கும் சிவப்புத் துணியொன்றை எடுத்து தாலியாகக் கட்டுகிறான் கிருஷ்ணன். இப்படியாகக் கவிதையாக இருக்கிறது அவர்களது திருமணக்கதை. 

இப்படிப்பட்ட சகாவுவின் மகளும் ஒரு அரசியல் ஊட்டப்பட்டதாகவே வளர்கிறாள். அவள் விபச்சாரம் செய்த பெண்களை காவல்துறையின் பிடியிலிருந்து மறுவாழ்வுக்காக மீட்கிறாள். அதில் தனது பாலய காலத் தோழியும் இருந்தது கண்டு அறிகிறாள். அவளது குடும்பம் அவர்கள் பகுதியிலிருந்த டீ எஸ்டேட் மூடப்பட்டதால் பிழைக்க வழியின்றி பலரும் வெளியேறினர். பட்டின் காரணமாக அவள் விபச்சாரம் செய்ய நேர்ந்ததை அவளது தந்தை சகாவு கிருஷ்ணனிடமும், அவரது மகளிடமும் சொல்கிறாள். அதனால் கிருஷ்ணன் அங்கே சென்று பார்க்கிறார். பல வருடங்களுக்கு முன்பு ஒருவர் என்ன உதவி வேண்டுமானாலும் செய்வதாக கிருஷ்ணனுக்கு வாக்கு கொடுத்திருக்கிறார். அவரிடம் சென்று அந்த எஸ்டேட்டை வாங்கி நடத்த முடியுமா என்று கேட்கிறார். இதனால் பல பேர் வாழ்வு பெறுவார்கள் என்பதற்காக அவர் சம்மதிக்கிறார். ஆனால் அப்பகுதியில் ரிசார்ட் வைத்திருக்கும் டோன் என்பவன் அதற்கு இடையூறு செய்கிறான். அவனுடன் நடந்த சண்டையில்தான் கத்திக்குத்து வாங்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் சகாவு கிருஷ்ணன். 

இதையெல்லாம் கேட்கும் கிச்சு, தனது நண்பனையே அடியாள்களைக் கொண்டு தாக்கும் திட்டத்தைக் கைவிடுகிறான். தனது அம்மாவிடம் தான் உணவருந்த விரைவில் வருவதாகவும் அலைபேசியில் கிச்சு சொல்கிறான். அவரைக் கத்தியால் குத்திய டோனியை எதிர்த்து போராடச் செல்கிறான். படம் முடிகிறது. ஒரு சகாவு தொடங்கிய போராட்டத்தை இன்னொரு சகாவு தொடர்வான் என்று முடிக்கிறார்கள். மற்ற திரைப்படங்களில் சித்தரிப்பதைப் போன்றே உடை கசங்காத, ஒப்பனை மிக்க நாயகத்தனமான பாத்திரத்தில் ஒரு தோழனை, பொதுவுடமைவாதியை சித்தரித்திருப்பது அயற்சியை ஏற்படுத்துகிறது என்ற போதிலும் ஓரளவு நிறைவான படமாக இருக்கிறது சகாவு.

Download As PDF
Bookmark and Share
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

தஸ்லிமா நஸ்ரின் விரட்டியடிப்பு, அப்ப ஜனநாயகம் ? அதுவும்தான் !

கடந்த மாதம் வியாழக்கிழமை வங்கதேச எழுத்தாளர் தஸ்லிமா அஜந்தா, எல்லோரா பகுதிக்கு சுற்றுலாவுக்கு வந்தார். அதை அறிந்த ஆல் இன்டியா மஜ்லிஸ் - இ - இட்டேஹதுல் முஸ்லிமீன் என்ற அமைப்பைச் சார்ந்த சயித் இம்தியாஸ் அலி என்ற முன்னாள் என்டிடிவி இன் நிருபர்/சட்டப் பேரவை உறுப்பினர் தலைமையில் ஔரங்காபாத் விமான நிலையத்தின் வெளியே நின்று ஏறக்குறை 500 பேர்களுடன் வந்து முழக்கங்களை எழுப்பியது. இதனால் பாதுகாப்புக் காரணங்கள் கருதி அவர் விமான நிலையத்திலேயே இருந்து அடுத்த விமானத்தில் மும்பை நோக்கித் திரும்ப வேண்டியதாயிற்று. இதைப் பற்றி வருந்திய தஸ்லிமா ஒரு பெரும் ஜனநாயக நாட்டில் இங்கனம் நடந்திருப்பது வருத்தத்திற்குரியது என்று கூறினார். 

அவர் உயிருக்குப் பாதுகாப்பு இல்லாத காரணத்தால், ஆயுதம் ஏந்திய பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாட்டிலும் அவர் தனது கருத்து காரணமாக உயிருக்கு உத்தரவாதம் இல்லாத நிலையில் இருக்கிறார். இதனால் அவரால் எங்கும் தனித்துச் செல்ல இயலாது. பாதுகாவலர்களுடன்தான் பயணம் மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. இதை தனிப்பட்ட முறையில் தம் மகிழ்ச்சிக்காக எங்கும் தனித்துச் செல்ல முடியாத துயரநிலையாகக் கருதுகிறார். 

நான் பல வருடங்களாக கனவும் கண்டேன் அது பலிக்க வேண்டுமென்றும் விரும்பினேன். அஜந்தாவின் சிறப்புகளையும், எல்லோராவின் மாயாஜாலங்களையும் பார்க்கபோகிறேன் என்று நினைத்தேன். நான் இந்தியா கொண்டிருக்கின்ற பல வரலாற்று அற்புதங்களை கண்டிருக்கிறேன். அதில் சிலவற்றைக் காணும் சந்தர்ப்பங்கள் கிடைத்த போதும் என் மீதான கட்டுப்பாடுகள் காரணமாக இழந்திருக்கிறேன். இங்கே இந்தியாவில் ஆயுதமேந்திய பாதுகாவலர்களைக் கொண்டிருக்கிறேன். தனிச்சிறப்பான அரசின் அங்கீகாரத்தைப் பெற்றிருக்கிறேன். பாதுகாப்பு சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டே நான் முடிவெடுக்க வேண்டியிருக்கிறது. 2007 இல் என் மீதான தாக்குதல் தொடங்கியதிலிருந்து இது தொடர்கதையானது. நான் நிகழ்ச்சிகளில் எங்காவது கலந்து கொள்ளப் போகிறேன் என்றால் அது செய்தியாகிவிடும். விளம்பரமாகி விடும். நான் தாக்குதல் அச்சமின்றி கலந்து கொண்டிருப்பேன். ஆனால் தாக்குதல் முதன் முறை நடந்த பின்னர் அது தொடர்கிறது. ஒரு தொற்று நோயைப் போலப் பரவி விட்டது. நான் எனது மகிழ்ச்சிக்காகப் பயணம் செய்ய முடிவதில்லை. விடுமுறையைக் கொண்டாட முடியவில்லை. என்னுடைய பாதுகாவலர்களிடம் எல்லாவற்றையும் தெரிவித்தாக வேண்டியிருக்கிறது. எங்கே, எதற்கு, எப்போது என்றெல்லாம்.  பின்பு அவர்கள் அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்வர். 

நான் அஜந்தா செல்வதை யாருக்கும் அறிவிக்க வில்லை. விமானப் பயணம் தொடர்பாக நான் கொடுக்க வேண்டிய அனைத்து உண்மையான ஆவணங்களையும் சம்மந்தப்பட்ட அலுவலர்களிடம் கொடுத்து விட்டேன். அவர்களும் அதை மகாராஷ்ட்ராவிற்கு அனுப்ப வேண்டிய இடத்திற்கு அனுப்பி எனது பாதுகாப்பை உறுத் செய்தனர். நான் மகாராஷ்ட்ராவில் பாதுகாவலர்களைப் பெற்று விட்டேன். தங்குவதற்கு விடுதியிலும் பதிந்து விட்டேன் என்னுடன் வருபவரது பெயரில். துணையாக எனது பெயரை சேர்த்துக் கொண்டேன். என்னுடன் துணையாக வந்த இளம்பெண் எனது மகள் போன்றவர். ஜூலை 29 ஆம் நாள் நான் டெல்லியிலிருந்து ஔரங்காபாத் சென்றேன். அங்கே விமான நிலையத்திலிருந்து வெளியே செல்லும்போதே ஒரு அதிகாரி என்னைத் தடுத்தார். 

"இங்கே நிலைமை சரியில்லை. உங்களுக்கு எதிராக 500 பேர் நீங்கள் தங்கப் போகிற விடுதியின் முன் போராடிக் கொண்டிருக்கிறார்கள்" என்றார். 

என்னால் அதை நம்ப முடியவில்லை. என்னுடைய வரவு மிகவும் இரகசியமாக டெல்லி காவல்துறையால் மராட்டிய காவல்துறைக்கு அனுப்பப்பட்ட செய்தி கடும்போக்குவாதிகளுக்கு எப்படித் தெரிந்தது ?. அந்த அதிகாரிக்கும் எப்படி இந்த செய்தி கசிந்தது என்று தெரியவில்லை. தாங்க முடியாத வேதனையுடனும், உதவியற்றவளாகவும் உணர்ந்த நான் அவரிடம் நான் 

"இப்போது என்ன செய்ய வேண்டுமெனக் கேட்டேன். "நீங்கள் திரும்பிச் செல்ல வேண்டும்" என்றார். 

எப்போது ? எப்படி ? என்றேன். 

நாளை காலையில் டெல்லிக்கு ஒரு ஏர் இன்டியா விமானம் இருக்கிறது.

நாளைக் காலை வரை என்ன செய்வது ? நான் எங்கே தங்குவது ?"

விமான நிலையத்தில்.

பின்பு நான் ஏர் இன்டியா பயணச்சீட்டு வழங்குமிடத்திற்குச் சென்று மும்பைக்கு இரண்டு சீட்டுகள் வாங்க வேண்டியிருந்தது. அதற்குள் போராட்டக்காரர்கள் விமானநிலையத்திற்குள்ளும் வந்து விட்டார்கள். என்னுடைய பாதுகாப்பு அதிகாரி எனக்கு எதுவும் ஆகாது என்று ஆறுதல் கூறினார். நான் அங்கிருந்து செல்லும் போது 200 பேர் காது கிழியும் அளவுக்கு "தஸ்லிமா திரும்பிப் போ" "தஸ்லிமா ஒழிக" "இறைவன் மிகப் பெரியவன்" என்ற முழக்கங்களை எழுப்பிக்கொண்டிருந்தனர். மும்பைக்குச் சென்ற பிறகு எங்காவது கலவரம் நடந்திருக்கிறதா என்று இணையத்தில் பார்த்து விட்டு இல்லையென்று நிம்மதியடைந்தேன். இது அவர் எழுதிய அஜந்தா எல்லோர அனுபவக் கட்டுரையின் ஒரு பகுதி. முழுவதும் படிக்க விரும்புகிறவர்கள் இங்கே செல்லவும்

ஒரு தனி நபர் அதுவும் இந்தியாவின் ஜனநாயகத்துக்காக இங்கே அடைக்கலம் தேடி வந்தவர் உயிருக்கு உத்தரவாதமில்லாமல் ஒடி ஒளிய வேண்டிய நிலையில் இருக்கிறார். இங்கே கருத்துரிமைக்கான பாதுகாப்பு என்பது அந்த அளவில் இருக்கிறது . சில நாட்களுக்கு முன்பு நடந்த இந்நிகழ்வு வட மாநிலங்களில் தலைப்புச் செய்தி அளவுக்கு தெரிந்திருக்கிறது. இங்கே பெரிதாக எதுவும் கண்டு கொள்ளப்படவில்லை. கண்டிக்கப்படவுமில்லை. 

இந்தியாவில் உண்மையில் ஜனநாயகம் இருக்கிறதா என்றால் இல்லை என்றே சொல்லலாம். அந்தளவுக்கு மதவாதிகள்/மதவெறியர்கள் கொட்டம் அடிக்கிறார்கள். ஜனநாயகத்தின் முழு சுதந்திரத்தையும் திகட்டத் திகட்ட அனுபவிப்பவர்கள் மதவாதிகள். ஆனால் இறைமறுப்பாளர்களை மட்டும் நிம்மதியாக வாழ விடமாட்டார்கள். மதத்தை விமர்சிப்பவர்கள், மதவாதத்தை எதிப்பவர்களுக்கு படுகொலையைத்தான் பரிசளிக்கிறார்கள். 


ஜாகிர் நாயக் என்ற இஸ்லாமிய மதவாதிக்கு யாராவது எதிர்ப்புத் தெரிவிக்கிறார்களா ? உலகத்தின் எல்லா இஸ்லாமல்லாத நாடுகளுக்கும் செல்கிறார். அங்கே யாரும் எதிர்ப்புத் தெரிவிப்பதில்லை. அதே போல் ஒரு இஸ்லாமிய எதிர்ப்பாளர் இஸ்லாமல்லாத ஜனநாயக நாட்டில் கூட சுதந்திரமாக தனது கருத்தை வெளியிட முடியவில்லை. நிம்மதியாக நடமாட முடிவதில்லை.

இஸ்லாமிய மதவாதிகள், விவாதத்துக்கு வா நேரடி விவாதத்துக்கு வா என்று அழைக்கிறார்கள். அதே விவாதத்தை இணையத்தில் நடத்துவது வீண் என்கிறார்கள். இணைய விவாதம் வீண் என்று சொல்கிறவர்கள் இணையத்திலிருந்து வெளியேறி களத்தில் மட்டும் இயங்குவதில்லை, தொடர்ந்து இணையத்திலேயேயும் இயங்குகிறார்கள், ஏன்?. இஸ்லாமிலிருந்து வெளியேறி இஸ்லாமிய மதத்தை விமர்சிப்பவர்களுக்கு உயிர் பாதுகாப்பு இந்தியா போன்ற ஜனநாயக நாட்டிலேயே இல்லை. பகுத்தறிவு பேசும் தமிழ்நாட்டிலும் இல்லை. இஸ்லாமிய மார்க்க அறிஞர்களால் பதில் சொல்ல முடியாத அளவுக்கு யார் விமர்சனம் செய்கிறார்களோ அவர்களை இஸ்லாமிய எதிரிகள் என்று வகைப்படுத்தி வருகிறார்கள். இதன் மூலம் எல்லா முஸ்லிம்களுக்கும் எதிரானவராக அவரை நிறுத்தி விடுகிறார்கள். கருத்தை விமர்சனம் செய்ய முடியாத பட்சத்தில் அவர் எதிரி ஆக்கப்படுகிறார்.

ஏன் இஸ்லாமை விமர்சனம் செய்ய வேண்டும் என்ற கேள்வி வருகிறது. ஏன் எங்கள் மீது வன்மம் என்றும் கூட நினைக்கக்கூடும். இஸ்லாமியர்கள் தாங்கள் உண்டு தங்கள் மதம் உண்டு என்று வாழ்வதில்லை, அதைப் பரப்புரை செய்கிறார்கள் மற்றவர்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று பரிந்துரைக்கிறார்கள். அவர்கள் வெறும் மார்க்கமாக மட்டுமல்லாமல் அறிவியல் கண்டுபிடிப்புகள் இருப்பதாகவும் சொல்கின்றனர். இப்படி அறிவியல் ரீதியாக விவாதிக்கும் துணிச்சல் தங்கள் மதத்தில் இருப்பதாகக் கருதினால் எல்லாவகை எதிர்க்கருத்துக்களையும் எதிர்கொள்ளவேண்டும். கருத்தால்தான் எதிர்கொள்ள வேண்டுமே ஒழிய போராட்டங்களால் அல்ல. வன்முறைகளால் அல்ல. ஆனால் என்ன செய்கிறார்கள் ? எங்கே அவர்கள் விமர்சனத்தை எதிர்கொள்ள முடியவில்லையோ அங்கே விமர்சனம் செய்பவரை அவதூறு செய்கிறார், வெறுக்கிறார், விதண்டாவாதம் செய்கிறார், இஸ்லாமிய எதிரி, துரோகி என்கின்றனர். மற்றவர் மீதான வெறுப்பை விதைக்காத வரை விமர்சனம் என்பது எந்த ஒரு எல்லையும் அற்றது. 

இவர்கள் மதத்தை மட்டும் பரப்புரை செய்வதில்லை, அது சார்ந்த சட்டத்தையும் (ஷரியத்) உலகத்திற்கே பொதுவானதாகக் காட்டுகின்றனர். படைப்புக் கொள்கையை மறுக்கும் பரிணாமக் கொள்கையையும் கடுமையாக விமர்சனம் செய்கின்றனர். இப்படி அறிவியல் அறிஞர்கள் போல் விவாதம் செய்பவர்கள், அதே போல் இஸ்லாமை அறிவியல் பூர்வமாக வரலாற்றுத் தரவுகளுடன் விமர்சனம் செய்பவர்களுடன் எதிர் விவாதம் செய்யும் போது அதை எப்படி எதிர்கொள்கின்றனர். அவரை இஸ்லாமிய சமூகத்தின் எதிரியாகப் பிரகடனம் செய்து விடுகின்றனர். இறை மறுப்பாளர்களின் கருத்துக்கள் நம்பிக்கையைப் புண்படுத்துகின்றது, மனதைப் புண்படுத்துகிறது, மத நிந்தனை செய்கிறது என்ற அயோக்கியத்தனமான கருத்துக்களைக் கொண்டு வந்து பாமர மக்களைத் துணைக்கு அழைத்து இறைமறுப்பாளர்களை எதிர்கொள்கின்றனர். குறிப்பாக இஸ்லாமியராகப் பிறந்து இறைமறுப்பாளராக மாறியவர்கள், மதவாதத்தை எதிர்த்து நிற்பவர்களுக்கு இந்த நிலைதான்.

யூத விஞ்ஞானி இஸ்லாத்தை ஏற்றார்
ரஷ்ய கன்னிகாஸ்த்ரி இஸ்லாத்தைத் தழுவினார்
அமெரிக்க ராணுவ வீரர் இஸ்லாத்தை ஏற்றார்
பாபர் மசூதியை இடித்தவர் இஸ்லாத்தை ஏற்றார்
பெரியாரியவாதி ஏகத்துவத்தை ஏற்றார்
ஐரோப்பாவில் இஸ்லாம் வளர்கிறது
அமெரிக்காவில் இஸ்லாம் பரவுகிறது
ஆஸ்திரேலியாவில் இஸ்லாம் பரவுகிறது
இஸ்லாமை நோக்கி படையெடுக்கும் பிரிட்டன் பெண்கள்

என்றெல்லாம் பெருமை பேசுகின்றனர். இதெல்லாம் எப்படி நடக்கிறது ? அந்தக் குறிப்பிட்ட நபர் இஸ்லாமை ஏற்பதை அந்த நாட்டின் அரசோ அல்லது சமூகமோ தடை செய்வதில்லை. யாரும் இஸ்லாத்தைப் பரப்பக்கூடாது என்று போராடவில்லை. பிறகு ஏன் இஸ்லாமிய மதவாதிகள் இஸ்லாமிய மதத்தை விமர்சிப்பவர்களுக்கு எதிராக போராட வேண்டும். அவர்கள் மதத்தைப் பரப்புவதற்கு ஜனநாயகம் தரும் சுதந்திரத்தைப் பயன்படுத்திக் கொள்வார்கள். அதே போல் சுதந்திரத்தை இறைமறுப்பாளர்கள் பயன்படுத்தி மதத்தை விமர்சித்தால் அதற்கெதிராக போராடுவார்கள். தமக்கு அதிகாரம் உள்ள நாடுகளில், பகுதிகளில் சட்டத்தின் மூலமாகவே மத எதிர்ப்பைத் தடுத்து வைப்பார்கள். 

மதவாதம் அற்ற நாடுகளில், அதாவது சட்டத்தில் மதம் என்பது தனிமனித உரிமையாக உள்ள நாடுகளில், மதம் என்பது தனி நபர் சார்ந்தது. அரசாங்கம் அதைத் தடை செய்வதில்லை. பெரும்பான்மை கிறித்தவர்கள் வாழும் மேற்கத்திய நாடுகளில் கிறித்தவ மதத்தை விமர்சனம் செய்ய உரிமை, பாதுகாப்பு எல்லாம் உண்டு. இந்துக்கள் பெரும்பான்மையாக வாழும் இந்தியாவிலும் விமர்சனம் செய்ய உரிமை, பாதுகாப்பு இருக்கின்றன. ஆனால் இஸ்லாமிய நாடுகளில் இருக்கிறதா ? இஸ்லாமியர் பெரும்பான்மையாக வாழும் இஸ்லாமிய மதச் சட்டம் நடைபெறும் நாடுகளில் எந்தளவுக்கு இறைமறுப்பாளர்களுக்கு இருக்கிறது. நான் கேட்பது இஸ்லாமிலிருந்து விலகி இறைமறுப்பாளராக வாழ்பவர்க்கு. இறைமறுப்பை பரப்புரை செய்பவர்க்கு. இல்லையென்றால் அதற்கு இஸ்லாமைத்தானே விமர்சிக்க வேண்டும் ? 


நான் ஃபேஸ்புக்கில் விவாதமொன்றில் ஒருவரிடம் இந்தக் கேள்வியை சற்று வேறு மாதிரி கேட்டிருந்தேன். நீங்கள் இஸ்லாமைப் பரப்புவதைப் போல் இஸ்லாமிய நாடுகளில் வேறு கொள்கையைப் பரப்பு முடியுமா என்று கேட்டேன். அதற்கு அவர் இஸ்லாமை அவர்கள் சட்டமாக வைத்திருக்கிறார்கள். நீங்கள் பிழைக்கபோன இடத்தில் உங்கள் சித்தாந்தத்தைச் சொன்னால் யார் சம்மதிப்பார்கள் என்றார். இஸ்லாமியர்களும் அமெரிக்க, ஐரோப்பிய, ஆஸ்திரேலிய நாடுகளுக்கு பிழைக்கத்தான் சென்றார்கள். படியளக்கச் செல்லவில்லை. அங்கே அவர்கள் தமது சித்தாந்தத்தைப் பரப்பவில்லையா ? நான் கேட்பது மதவாத நாடுகளில் இருக்கும் இஸ்லாமிய மதத்திலிருந்து விரும்பாமல் வெளிவருகிறவர்களுக்கு என்ன உரிமை உள்ளது என்பதை ?

இஸ்லாமியப் பரப்புரை எப்படித் தொடங்குகிறது. சிலைகள் யாவும் கடவுளல்ல. இணை வைத்தல் கூடாது. படைப்பினங்களை வணங்கக் கூடாது. இஸ்லாமைத் தவிர அனைத்து மதங்களும் சிலையை வைத்து வணங்குகின்றன. அதைத்தான் முதலில் மறுக்கிறது இஸ்லாம். இஸ்லாம் பரப்புரையே மற்றவர்களின் முதல் நம்பிக்கையான (மாற்று மதங்களின்) "அவர்களின் கடவுள்" உண்மையான கடவுள் இல்லை நாங்கள் சொல்வதுதான் உண்மையான கடவுள். ஆக இவர்கள் ஒரு குறிப்பிட்ட மதத்தவரின் நடுவில் நின்று உங்கள் நம்பிக்கை பொய் நாங்கள் சொல்வதுதான் மெய் என்கிறார்கள். உங்கள் கடவுள் வெறும் சிலை அது கடவுள் இல்லை" என்கிறார்கள். பிழைக்க வந்த நாட்டில் அங்கே இருக்கும் மக்களின் நம்பிக்கையைப் புண்படுத்துகிறோம் எந்தவித தயக்கமும் அச்சமும் இல்லாமல் இஸ்லாமிய மதவாதிகள் எல்லா நாடுகளிலும் செய்கிறார்கள்.  அது எப்படி சாத்தியமாக இருக்கிறது, மிக இயல்பாக இருக்கிறது ? அந்த நாட்டின் ஜனநாயகமும் அதனால் பண்பட்ட அந்நாட்டினரின், அச்சமயத்தவரின் சகிப்புத்தன்மையின் காரணமாகத்தானே. 

அதே நேரம் இவர்களை சுதந்திரமாக மதம் பரப்பச் செய்ய அனுமதிக்கும் ஜனநாயகத்தை, அதைப் பின்பற்றும் மேற்கத்தியப் பண்பாட்டை விமர்சனமும் செய்கிறார்கள். விபச்சாரம், அவிழ்த்துப் போட்டு அலையும் கலாச்சாரம் என்பார்கள். அவிழ்த்துப் போடும் சுதந்திரம் இருப்பதால்தானே அவர்கள் வேறுமதத்தையும் தழுவும் சுதந்திரமும் இருக்கிறது. 

இவர்கள் தமது மதக்கருத்துக்களைத்தான் எல்லா நிகழ்வுகளின் மீதும் கருத்துக்களாக வைக்கிறார்கள். உதாரணத்திற்கு ஒன்று. உணர்வு (இஸ்லாமிய) என்ற வார இதழைப் பார்க்க நேர்ந்தது. அதில் ஒரு கல்லூரியில் விரிவுளையாளரும், கல்லூரி மாணவியும் திருமணம் செய்திருந்த செய்தியைப் போட்டு அதில் விமர்சனமும் இருந்தது. ஆண்களும் பெண்களும் சேர்ந்து கல்வி கற்பது இதுமாதிரியான செயல்களைத் தூண்டும். எனவே இருபாலருக்கும் தனித்தனியான கல்வி நிலையங்களைக் குறித்து அரசு சிந்திக்க வேண்டும் என்று முடித்திருந்தார்கள். இது மாதிரிதான் சமூகத்தில் நிகழும் பலவகையான நிகழ்வுகளில் தமது மதம் சொல்லும் கருத்துக்களைச் சொல்லி அதைத் தீர்வாக முன்வைக்கிறார்கள். 

காதல் தவறானது, கலப்புத் திருமணம் தவறானது போன்ற தனி மனித உரிமைகளுக்கு எதிரான மதக் கருத்துக்களை சொல்கிறார்கள்  காதலர் தினம் விபச்சாரம், கற்புக்கொள்ளை என்றெல்லாம் சொல்கிறார்கள். ஆணும் பெண்ணும் சேர்ந்து பயிலக் கூடாது என்கிறார்கள். ஆக இவர்கள் இப்படியெல்லாம் விமர்சனம் செய்வது தான் சாராத சமூகத்தையும் சேர்த்துத்தான். இதே போல் இஸ்லாமிய எதிர்ப்பாளர் தரப்பு பர்தாவை விமர்சனம் செய்யும் போது மொத்த சமூகத்தையும் சமூகப்பெண்களையும் வன்மம் கொண்டும் வெறுப்பு கொண்டும்வி மர்சனம் செய்கிறீர்கள் என்கிறார்கள். இது எப்படி நியாயம் ?

இதே போல் இஸ்லாமிய நாடுகளில் இஸ்லாமியர்கள் மத்தியில் ஒருவன் நின்று கடவுள் இல்லை, முகமது தூதர் இல்லை என்று சொல்லிவிட்டு தனது விளக்கத்தைத் தொடர முடியுமா ?. அவ்வளவு தூரம் போகவேண்டியதில்லை. ஒருவன் மத நிந்தனை செய்துவிட்டான் என்ற புரளியைக் கிளப்பி விட்டாலே போதும். வங்க தேசம், பாகிஸ்தான் என்று பார்த்துக் கொண்டுதானே இருக்கிறோம். அவன் உயிருடன் இருக்க மாட்டான். ஏன் இந்த பாகுபாடு ? ஏன் இஸ்லாமிய மதத்துக்கு மட்டும் இந்த சலுகை ?. உங்களை எப்படி புண்படுத்தாமல் விமர்சிக்க முடியும். நாங்கள் அறிவியல் பூர்வமானவர்கள், புரட்சிகரமானவர்கள் என்று சொல்பவர்கள் ஏன் "மதத்தைப் புண்படுத்தும்" என்ற நேர்மையான விவாதத்திற்கு எதிரான கருத்தைப் பயன்படுத்த வேண்டும் ?

இஸ்லாமிய மதவாதம் நிறைந்த நாடுகளில் மட்டும் இருக்கும் இஸ்லாமிய எதிர்ப்பாளர்களுக்கான பாதுகாப்பின்மை இந்தியா போன்ற ஜனநாயக நாடுகளிலும் வந்து விட்டதுதான் நம் ஜனநாயகத்தின் சாதனை. ஏனென்றால் மதவாதிகளுக்காக தஸ்லிமாவை மேற்கு வங்கத்திலிருந்து வெளியேற்றியதே இடதுசாரிகள் என்றிருக்கையில் அதற்கு மேல் நாம் என்ன சொல்ல முடியும். கருத்தை எதிர்கொள்ளும் பொறுமையோ பக்குவமோ மதவாதிகளுக்கு இருந்ததே இல்லை. இங்கே மதச்சார்பின்மை என்பதே போலி மதச்சார்பின்மை என்றும், மதச்சார்பின்மைவியாதிகள் என்றும், சிக்குலரிஸ்டுகள், சூடோ செக்குலரிஸ்டுகள் என்றும் நல்ல பெயர் வாங்கியவர்கள்தான் மதச்சார்பின்மை பேசுகிறவர்கள். அப்படி இருக்க மதவாதிகள் மட்டும் எப்படி இருப்பார்கள். மத உணர்வைத் தூண்டி அரசியல் செய்கிறவர்களாகத்தானே இருப்பார்கள். அதனால்தான் தமிழ்நாட்டில் இது பெரிய செய்தியாகவில்லை.
Download As PDF
Bookmark and Share
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment