மலையாளம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மலையாளம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சகாவு - தோழர் - Comrade

சகாவு (தோழர்) என்ற மலையாளப்படம் பார்த்தேன். ஒரு பொதுவுடமைவாதியின் படம். இல்லை இரண்டு பொதுவுடமைவாதிகள் பற்றிய கதை. பொதுவுடமை கம்யூனிச படம் என்றதுமே படம் பார்த்துவிட வேண்டும் என்ற ஆர்வம் அதிகமானது. ஆனால் நிவின் பாலியின் படம் என்றதும் ஒரு தயக்கம் ஏற்பட்டது. இதுவே துல்கர் சல்மான் என்றால் அந்தத் தயக்கம் வந்திருக்காது. இந்தப் படம் பொதுவுடமை பற்றிய படம் என்றாலும் பொதுவுடமை என்ற உலகின் மிக முக்கிய சித்தாந்தத்தின் மீதான மதிப்பை ஏற்படுத்தத் தவறியிருக்கிறது என்றே சொல்ல வேண்டும். இந்திய அளவில் மூன்றாவது பெரிய கட்சியாகவும், பல சிறு கட்சிகளையும் கொண்டிருக்கும் சித்தாந்தம்தான் பொதுவுடமை. 

இந்தியாவில் தெற்கே கேரளத்திலும், வடக்கே (கிழக்கு?) மேற்கு வங்கத்திலும் பொதுவுடமைவாதிகள் அரசியல் ஆதிக்கம் செலுத்துகிறார்கள். அதன் தாக்கம் அந்த மக்களிடமும் இருக்கிறது. ஜாதிக்கொடுமை மிகுந்த கேரளம் 60 வருடங்களில் கல்வியில் இந்தளவுக்கு முன்னேறி இருக்கிறது என்றால் அது கம்யூனிசவாதிகளின் ஆட்சியின் விளைவினால்தான். இன்று கூட ஏறக்குறைய ஒட்டு மொத்த இந்தியாவும் இந்துத்துவா ஃபாசிசவாதிகளிடம் வீழ்ந்து விட்ட போது கேரளா இன்னும் மண்டியிடாமல் இருக்கிறது, கம்யூனிச தலைமையில் இந்துத்துவாவை எதிர்த்து நிற்கிறது. இத்தனைக்கும் மேலாக அங்கே இரண்டு மதவாதிகளின் வளர்ச்சியும் இருக்கிறது. இந்த நிலையில் கம்யூனிசம் பற்றிய மதிப்பீடுகளை அதிகரிக்கும் படங்கள் வர வேண்டும். 

ஆனால் இது போன்ற திரைப்படங்களால் என்ன பெரிய மாற்றம் இளைய தலைமுறையிடம் வரும் என்று தெரியவில்லை. ஏனென்றால் இத்திரைப்படத்தினை நிவின் பாலி என்ற ப்ரேமத்தின் நாயகன் என்ற புகழ் வெளிச்சத்திலேயே பார்ப்பார்கள். ப்ரேமம் போன்ற விடலைகளின் அற்ப உணர்ச்சியை சொறிந்து விட்ட படத்தில் தன்னைக் கண்டு மயங்கிய இளசுகள் இதை ரசிக்கவோ, ஏற்றுக் கொள்ளவோ போவதில்லை. அய்யோ கம்யூனிச படமா என்று அஞ்சுவார்கள் (கம்யூனிசம் என்றாலே சலிப்புதான்). ஏனென்றால் இது உண்மையில் நிவின் பாலியின் நாயகத்தனத்தை போற்றுவது போலவே சித்தரிக்கப்பட்டுள்ளது. 

இக்கதை இரண்டு பொதுவுடமைவாதிகளைப் பற்றியதாகும். இரண்டு வேடத்திலும் நிவின் பாலியே நடித்துள்ளார். சகாவு கிருஷ்ண குமார் என்ற கிச்சு, சகாவு கிருஷ்ணன். சகாவு கிச்சு அல்லது கிருஷ்ண குமார் என்ற, மாணவர் இயக்கத்தில் (கேரள மாணவர் இயக்கம்- SFK) மாவட்ட பொறுப்பில் இருக்கும் சகாவு (தோழர் அல்லது Comrade) கிருஷ்ண குமார் என்கிற கிச்சுவிடமிருந்து படம் தொடங்குகிறது. 

அவன் வீட்டில் அம்மாவிடம் சினந்து கொண்டு உணவை அருந்தாமல் வெளியில் சென்று உணவை உண்கிறான், அவன் நண்பன் அழைக்கும் போது அவனுக்கும் சேர்ந்து இறைச்சி வாங்க வேண்டும் என்று அவனிடம் தான் உண்டு முடித்து விட்டதாகவும், தானே வாங்கி வருவதாகக் கூறுகிறான். தான் இறைச்சி உண்டதை நண்பன் மோப்பம் பிடித்து அறியாமல் இருக்க சௌகாரம் (soap) கொண்டு கழுவுகிறான். வெறும் தோசையை வாங்கி வரும் கிச்சுவிடம் அவனது நண்பன் ஒரு ஹாம்லெட் கூட வாங்க முடியாதா என்று கேட்கிறான். எல்லாம் தீர்ந்து விட்டது என்று பொய் சொல்கிறான். அவனுக்கு தங்க இடம் கொடுக்கும் அந்த நண்பனுடனான உரையாடலுடனேதான படத்தின் ஆரம்பக் காட்சிகள் கழிகின்றன. அதில் அவன் எப்பேர்ப்பட்ட பொய்யனாகவும், அயோக்கியத்தனமாகவும் இருக்கிறான் என்பதை நகைச்சுவையாகக் காட்டுகிறார்கள். அவன் தற்போது இருக்கும் பதவியிலிருந்து படிப்படியாக முன்னேறும் திட்டம் வைத்திருக்கிறான். அதில் எந்த வித நேர்மையும் இல்லாமல் அடுத்தவனை ஏமாற்றுவது, கையூட்டு வாங்குவது, போட்டுக் கொடுப்பது, மக்களிடம் ஏமாற்றி நல்ல பெயர் வாங்குவது எப்படியாவது அமைச்சராவது என்ற வரையில் இருக்கிறது. 

அதில் முதல் கட்டமாக அரசியலில் இருக்கும் அவனுடைய உற்ற நண்பனையே அடியாட்களை வைத்து அடித்து விரட்டி அரசியலில் நகர்வதைப் போல ஒரு திட்டத்தைச் சொல்கிறான். இது போல் பல பத்து குறிக்கோள்களை வைத்து ஒவ்வொரு இடங்களிலும் அவனது நண்பனிடம் சொல்கிறான். (மலையாளப் படங்களில் இது போன்ற ஒரு நண்பன் பாத்திரத்தை வைத்து அவனை பேக்காகவும், அய்யே என்று வாயை அழுத்தி அதிர்ச்சியடையும் வகையில் நாயகனைப் பேச வைத்தும் நகைச்சுவைக் காட்சிகளை வெற்றிகரமாகவே படைக்கிறார்கள்). பிறகு அவர்கள் குருகிக்கொடை கொடுப்பதற்காக மருத்துவமனைக்குச் செல்கிறார்கள்.  அங்கே தனது கட்சியின் பெரிய தலைவர்கள் வந்து செல்வதையும் பார்க்கிறான் கிச்சு. 

கிச்சுவின் குருதியை வேண்டியிருக்கும் நோயாளியுடன் வந்திருப்பவரிடம் பேசி அவரிடமிருந்தே கிச்சுவும் அவனது நண்பனும் உணவை உண்கிறார்கள், பழச்சாற்றை அருந்துகிறார்கள். காவல்துறையினர் வந்து மருத்துவரிடம் அந்நோயாளியின் உடல் நிலையை அறிந்து செல்கின்றனர். அவனுடைய கட்சியின் ஒரு தலைவரிடமிருந்து தான் குருதிக் கொடை அளிக்க வேண்டிய நோயாளி ஒரு (தமது கட்சிக்கு வேண்டப்பட்ட) சகாவு என்று சொல்கிறார். எனவே அங்கே இருந்து குருதியை அளிக்க வேண்டும் என்று வற்புறுத்துகிறார். அப்போது அங்கே தன்னுடையை பள்ளித்தோழி ஐஸ்வர்யாவை மருத்துவமனையில் காண்கிறான். அதே மருத்துவமனையில் செவிலியராக பணிபுரியும் அவள் விடுப்பில் இருக்கும் அவள் அந்த படுக்கையில் இருக்கும் (கிச்சுவின் குருதியை வாங்கப் போகும்) சகாவைக் காண வந்ததாகக் கூறுகிறாள். யார் அந்த சகாவு என்று கேட்கும் கிச்சு, அவர்தான் அவனது தோழியான அந்த ஐஸ்வர்யாவை படிக்க வைத்தவர் என்று அறிகிறான். அவருக்குக் குருதிக் கொடை அளிப்பதால் பல பேருடைய அன்பும், நன்றியும், வேண்டுதலும் கிச்சுவுக்கு உரித்தாகும் என்று கூறுகிறாள். தனிப்பட்ட முறையில் அவனுக்கு ஒரு பெரிய நன்றியையும் நவில்கிறாள் ஐஸ்வர்யா. 

அங்கே தனக்கு வேலை வாங்கித் தந்தேன் என்பதற்காகாக நோயாளியைப் பார்த்துக் கொண்டிருக்கும் ஒரு எளியவரிடம் பணத்தை வற்புறுத்திப் பெறுகிறான். அரசியலில் இருப்பவர்கள் எத்தனை கீழ்த்தரமாக இருப்பார்கள் என்பதை கிச்சுவின் பாத்திரம் மூலமாகப் புரிய வைக்கிறார்கள். பின்பு படுக்கையிலிருக்கும் சகாவு உடன் இருப்பவர் வந்து சகாவுவின் கதையைச் சொல்லத் தொடங்குகிறார். அவர் தனது இளமைக்காலத்தில் கிச்சுவைப் போலவே இருந்ததாகவும் கூறுகிறார். கம்யூனிசக் கட்சியை வளர்ப்பதற்காக வந்த ஒரு கொள்கைப் பற்றுள்ள இளைஞர் என்கிறார். 


சகாவு கிருஷ்ணன்.

சகாவு கிருஷ்ணன் ஒரு அரசியல்வாதி. அரசியல்வாதி என்பதைக்காட்டிலும் வயதைத் தாண்டிய பக்குவமுடைய, கொள்கைப் பற்றுடைய சமூக சேவகர், மக்கள் தொண்டர். தான் முதலில் பீர்மேட்டில் சகாவைக் கண்டதாகக் கூறுகிறார். அங்கே தான் உதவி ஆய்வாளராகப் பணியாற்றியதாகக் கூறுகிறார். இங்கே சகாவு கிருஷ்ணன் அறிமுகம் தமிழ் தெலுங்கு படங்களின் மாஸ் நாயகர்களின் அறிமுகத்தைப் போல நிகழ்கிறது. அந்த உதவி ஆய்வாளர் (கிச்சுவிடம் கதை சொல்பவர்) ஒருவரை அடித்துத் தள்ளுகிறார். அவர் வந்து சகாவின் காலடியில் உருண்டு விழுகிறார். அவரை எழுப்புகிறார் சகாவு, இக்காட்சியில் சகாவை பின்புறமிர்ந்து மேல் வரை காட்டுகிறார். கைமுட்டியை முறுக்குவதாகக் காட்டுகிறார்கள். என்னவோ பட்டையைக் கிளப்பப் போகிறார் என்று பார்த்தால் ஒன்றுமில்லை. அந்த அடிவாங்கியவரை வண்டியில் ஏற்றிக் காவல்துறை செல்கிறது. சகாவு பெட்டிக் கடையில் சோடாவை வாங்கிக் குடித்து விட்டுச் செல்கிறார். 

இது எனக்கு மிகுந்த ஏமாற்றமாக இருந்தது. ஒரு கம்யூனிஸ்ட் என்பவனை பற்றிய ஒரு சித்திரத்தை இது போன்ற காட்சிகள் மூலமாக என்ன பதியவைக்க முடியும். எந்த மொழித் திரைப்படத்தை எடுத்துக் கொண்டாலும் சினம் கொண்ட இளைஞன் கதையின் நாயகன், தான் வந்த இடத்தில் நடக்கும் அராஜகத்தை எதிர்த்துப் போராடுவான். அப்படியிருக்க உலகில் எங்கு அராஜகம் நடந்தாலும் அதைக் கண்டு சினம் கொள்ளும் ஒரு கம்யூனிச பாத்திர அறிமுகம் இப்படி ஒரு மௌனமாக நிகழ்ந்திருக்கிறது. பின்பு அங்கே சக தோழர்களுடன் அறிமுகமாகிறார். மொத்தம் ஐவர் மட்டுமே அங்கே கட்சியாக இருக்கிறார்கள். தொழிலாளிகளுக்கான சங்கம் அங்கே இல்லை, யாரும் இணைவதில்லை என்கிறார்கள் மற்ற தோழர்கள். தொழிலாளர்களின் மனதில் நம்பிக்கையை விதைக்க வேண்டும் அதுதான் முக்கியமானது என்று தோழர்களுக்கு விளக்குகிறான் கிருஷ்ணன். மற்ற ஐந்து தோழர்களும் கிருஷ்ணனை விட பத்து பதினைந்து வருடங்கள் மூத்தவர்களாக இருக்கிறார்கள் அவர்களுக்கு பிள்ளைகளுக்குச் சொல்வதைப் போல கட்சியைப் பற்றியும் கம்யூனிசத்தைப் பற்றியும் சொல்கிறான் கிருஷ்ணன். (அதாவது பாரவையாளர்களுக்குச் சொல்கிறான்)

பின்பு அங்கே தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களிடம் சென்று கேட்கிறார்கள். யாரும் இவர்களுடன் இணைய முதலில் மறுக்கிறார்கள். பின்பு இணைகிறார்கள். இரவில் அவர்கள் வீடுகளின் முன்பு சென்று தீப்பந்த வெளிச்சத்தில் அவர்களது உரிமைகள் பற்றியும், அரசாங்கத்தில் அறிக்கைகள் பற்றியும் போராடுவதன் அவசியம் குறித்தும் உரையாற்றுகிறான். அவர்களுடன் இணைந்து வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுகிறான். காவல்துறையால் கைதாகிறான். அடிவாங்குகிறான். கட்சியால் விடுவிக்கப்படுகிறான் பின்பும் போராடுகிறான், தொழிலாளிகளின் நியாயமான கூலியை போராடிப் பெற்றுத் தருகிறான். தொழிலாளர் சங்கத்தைக் கட்டுகிறான். இவை திரைப்பட பாணியில் படமாக்கப்பட்டுள்ளதை கம்யூனிஸ்டுகள் ஒத்துக் கொள்ள மாட்டார்கள். ஏனெனில் அவர்களின் போராட்டம் இன்னும் இன்னல் மிக்கது, நீண்டது. வெறும் உண்டியல் குலுக்கிகள், உண்ணா நோன்பு இருப்பவர்கள் என்று புரிந்து கொண்டிருப்பவர்களுக்கு அது தெரியாது. இதைப் போன்றே விவசாயத் தொழிலாளர்களுக்கும் வரவேண்டிய நியாயமான கூலியைப் போராட்டங்களின் மூலம் பெற்றுக் கொடுக்கிறான். ஒரு இடத்தில் பாண்டிக்கார ஆட்கள் என்ற இனவெறிச் சொல்லும் வருகிறது சகாவின் வாயிலிருந்தே.

இந்த இடத்தில் ஒரு காட்சியைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். நிலவுடமையாளரான அம்பட்டரிடம் பேசிவிட்டு அவர் வீட்டிலிருந்து தோழர்களுடன் வெளியேறுகிறான் கிருஷ்ணன். அப்போது அம்பட்டர் கேட்கிறார்

உன் பெயரென்ன ?

கிருஷ்ணன்.

கிருஷ்ணன். கிருஷ்ணன் மட்டும்தானா ? பேருக்கு ஒரு வாலில்லையா ? கிருஷ்ணன் நம்பூதிரி, கிருஷ்ணன் நாயர் என்றெல்லாம் இல்லையா ? 

என்னுடைய ஜாதியயும் நம்பிக்கையயும் அறிய வேண்டுமென்றால் அது என்னுடைய பெயரின் வாலில் இல்லை. என்னுடைய பேரின் முன்னர் உள்ளது. தோழர் (சகாவு) !  சகாவு கிருஷ்ணன் ! 

இந்தக் காட்சி ஜாதியை எதிர்ப்பவர் அனைவராலும் கொண்டாடப்படும். 

சகாவின் தொல்லை தாங்காமல் அம்பட்டர், அந்த உதவி ஆய்வாளரை ஏவி அவனை கொல்வதற்கு முயல்கிறார். ஆனால் அவர் சகாவின் நண்பராகி விடுகிறார். அவர்தான் கிச்சுவிடம் இதுவரையான கதையைச் சொல்கிறார். அப்போது அங்கே வழக்கறிஞர் ஒருவரும், இன்னும் சில தோழர்களும் வருகிறார்கள். அங்கே வெளியே காத்திருக்கும் ஆட்களிடமும் அந்த கதை சொல்லும் ஆளிடமும் இது வரை இயங்காமல் இருந்த டீ எஸ்டேட் மீண்டும் திறக்கப்படப் போகிறது என்ற நற்செய்தியைச் சொல்கிறார். அங்கிருப்பவர்கள் அவருக்கு நன்றி தெரிவித்து மகிழ்கின்றனர். அதற்குக் காரணமான சகாவு அங்கே உள்ளே இருக்கிறார் என்று சொல்கிறார் அந்தக் காவலர். இதையெல்லாம் பார்க்கும் கிச்சு தன்னை ஒரு சகாவு போல உணர்கிறான். 

பின்பு சகாவு கிருஷ்ணனின் மனைவியும் மகளையும் பார்க்கிறான். அவர்களும் அங்கேதான் இருக்கிறார்கள். அங்கே சகாவுவின் திருமணம் பற்றி அறிகிறான். அது ஒரு நயமான கதை. லஷ்மி அங்கே தேயிலைத் தோட்டத்தில் பணி புரிந்தவர். அங்கே கட்சியை வளர்க்க வந்த கிருஷ்ணனுடன் போராடுகிறாள் லக்ஷ்மி. அவள் போராடுவதால் அவளுக்கு திருமணம் தள்ளிப் போவதாக அவளது பெற்றோர் அவளை அதிலிருந்து தடுக்கின்றனர். இவள் போராட்டத்தில் ஈடுபடுவதால் யாரும் திருமணம் செய்ய மறுத்தால் தானே திருமணம் செய்வதாக கிருஷ்ணன் அப்போதைக்கு சொல்லி வைக்கிறான். ஆனால் ஒரு வருடம் கழித்து அதை மீண்டும் ஒரு தோழர் நினைவூட்ட பின்னர் சம்மதிக்கிறான். ஆனால் லக்ஷ்மி அவன் விரும்பாவிட்டால் திருமணம் வேண்டாம் என்கிறாள். ஆனால் கிருஷ்ணன் திருமணம் செய்ய சம்மதம் என்கிறான். திருமணத்தன்று வெளியே ஒரு பிரச்சனைக்காக முன்னிரவு சென்றவன் திருமண நேரம் கடந்தும் வரவில்லை. சென்ற இடத்தில் ஒரு உடன்படிக்கை ஏற்பட்டு பிரச்சனை தீர்ந்தவுடன் திரும்பச் செல்ல எத்தனிக்கிறான். அப்போது அவனுடன் இருக்கும் தோழர் இனி வேறொன்றும் முக்கியமான வேலை இல்லையே என்று கேட்கிறார். அப்போதுதான் அப்போது அவனுக்குத் திருமணம் செய்ய வேண்டிய நேரம் என உறைக்கிறது. சகாவுக்கள் இப்படி தன்னை மறந்து சமூகத்திற்காக உழைக்கிறார்கள் என்று சொல்கிறார்கள். 

பின்பு திருமணம் செய்யுமிடத்திற்குச் செல்ல அங்கே அனைவரும் சென்று விட்டிருக்கின்றனர். லக்ஷ்மி அவனைப் புன்னகையுடன் வரவேற்கிறாள். தான் ஏமாற்றி ஓடிவிட்டதாக நினைத்துக் கொண்டாயா என்கிறான் கிருஷ்ணன். லக்ஷ்மி தான் அப்படி நினைத்திருந்தால் இவ்வளவு நேரம் அவனுக்காக காத்திருக்க மாட்டேன் என்கிறாள். பின்பு அங்கே கட்டியிருக்கும் சிவப்புத் துணியொன்றை எடுத்து தாலியாகக் கட்டுகிறான் கிருஷ்ணன். இப்படியாகக் கவிதையாக இருக்கிறது அவர்களது திருமணக்கதை. 

இப்படிப்பட்ட சகாவுவின் மகளும் ஒரு அரசியல் ஊட்டப்பட்டதாகவே வளர்கிறாள். அவள் விபச்சாரம் செய்த பெண்களை காவல்துறையின் பிடியிலிருந்து மறுவாழ்வுக்காக மீட்கிறாள். அதில் தனது பாலய காலத் தோழியும் இருந்தது கண்டு அறிகிறாள். அவளது குடும்பம் அவர்கள் பகுதியிலிருந்த டீ எஸ்டேட் மூடப்பட்டதால் பிழைக்க வழியின்றி பலரும் வெளியேறினர். பட்டின் காரணமாக அவள் விபச்சாரம் செய்ய நேர்ந்ததை அவளது தந்தை சகாவு கிருஷ்ணனிடமும், அவரது மகளிடமும் சொல்கிறாள். அதனால் கிருஷ்ணன் அங்கே சென்று பார்க்கிறார். பல வருடங்களுக்கு முன்பு ஒருவர் என்ன உதவி வேண்டுமானாலும் செய்வதாக கிருஷ்ணனுக்கு வாக்கு கொடுத்திருக்கிறார். அவரிடம் சென்று அந்த எஸ்டேட்டை வாங்கி நடத்த முடியுமா என்று கேட்கிறார். இதனால் பல பேர் வாழ்வு பெறுவார்கள் என்பதற்காக அவர் சம்மதிக்கிறார். ஆனால் அப்பகுதியில் ரிசார்ட் வைத்திருக்கும் டோன் என்பவன் அதற்கு இடையூறு செய்கிறான். அவனுடன் நடந்த சண்டையில்தான் கத்திக்குத்து வாங்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் சகாவு கிருஷ்ணன். 

இதையெல்லாம் கேட்கும் கிச்சு, தனது நண்பனையே அடியாள்களைக் கொண்டு தாக்கும் திட்டத்தைக் கைவிடுகிறான். தனது அம்மாவிடம் தான் உணவருந்த விரைவில் வருவதாகவும் அலைபேசியில் கிச்சு சொல்கிறான். அவரைக் கத்தியால் குத்திய டோனியை எதிர்த்து போராடச் செல்கிறான். படம் முடிகிறது. ஒரு சகாவு தொடங்கிய போராட்டத்தை இன்னொரு சகாவு தொடர்வான் என்று முடிக்கிறார்கள். மற்ற திரைப்படங்களில் சித்தரிப்பதைப் போன்றே உடை கசங்காத, ஒப்பனை மிக்க நாயகத்தனமான பாத்திரத்தில் ஒரு தோழனை, பொதுவுடமைவாதியை சித்தரித்திருப்பது அயற்சியை ஏற்படுத்துகிறது என்ற போதிலும் ஓரளவு நிறைவான படமாக இருக்கிறது சகாவு.

Download As PDF
Bookmark and Share

Post Comment

ப்ரேமம் பிரமாதமா ?

ப்ரேமம் படம் எல்லாரும் புகழும் படமாக இருக்கிறது. இது வரை மலையாளப்படங்கள் இந்தளவுக்கு நம்மாட்களிடம் எட்டியிருப்பதாக எனக்குத் தெரியவில்லை. அதிகமாக அறியப்பட்ட படங்கள் என்றால் அது மறு உருவாக்கப் படங்களே. அதுவும் தமிழில் அது எடுக்கப்படுவதால் மட்டுமே அந்தப் பெயரைத் தெரிந்து கொண்டிருப்பார்கள். இவையில்லாமல் தமிழில் மிகக்குறைந்த அளவான ரசிகர்களே மலையாளப்படத்தை விரும்பிப் பார்க்கின்றனர். அவை ஆஹா ஓஹோ என்ற ஆர்ப்பாட்டமின்றி, எதார்த்தமாகவும், எளிமையாகவும், மென்மையாகவும் இருப்பதால், அதைப் பார்க்கும் பொறுமை தமிழர்களுக்கு இல்லை. அதே நேரம் சிறந்த மலையாளப்படங்களை ஏறக்குறைய எல்லாப் படங்களுமே உரிய அங்கீரத்தைப் பெற்று விடுகின்றன. அதைத் தந்து விடுகின்ற மலையாள ரசிகர்கள் தமிழ்ப்படங்களை பார்க்கின்றனர், தமிழ்ப்படங்களுக்கான சந்தையாகவும் இருக்கின்றனர் என்பது முரண்நகை. 


சமீபத்தில் திருஷ்யம் என்ற மலையாளப்படம் அதிகமான தமிழ்நாட்டு ரசிகர்கள் பார்த்திருக்கக் கூடும் என்று கருதுகின்றேன். ஆனால் அதைவிட பலரும் கொண்டாடும் படமாக இருக்கிறது ப்ரேமம். நிறையப் பேர் பேசுவதயும், சொல்வதையும் கேட்டேன். பாடலைக் கேட்பதும், முணுமுணுப்பதுமாகவும் இருந்தனர். அடடா தமிழர்களின் ரசனையும், தரமும் இவ்வளவு மெருகேறிவிட்டதா என்றும் வியந்தேன். என்ன எல்லாரும் புகழும் அளவுக்கு அந்தப் படம் இருக்கிறதா என்று, அந்தப் படம் பார்க்க வேண்டிய பட்டியலில் இணைந்து விட்டது. இது போலவே செல்லுலாய்ட், உஸ்தாத் ஹோட்டல் போன்ற சில புகழ் பெற்ற படங்களையும் சேகரித்து வைத்திருக்கிறேன். இது வரை பார்ப்பதற்கான பொறுமை எனக்கு வரவில்லை. ஆனால், ப்ரேமம் படம் ஒரு நண்பரின் மூலமாகக் கிடைக்கப் பெற்றதும், அதைப் பார்த்தும் விட்டேன். இதை உடனே பார்த்து விட இன்னொரு காரணம் இது தமிழிலும் மறு உருவாக்கம் செய்யப்போகிறார்களென்றும், அதில் தனுஷ் நடிக்கிறார் என்றதும் அந்தக் கொடுமையை அனுபவிக்கும் வாய்ப்பு இருப்பதாலும் அதைத் தவிர்க்க வேண்டியும்தான். 

எல்லாரும் நன்றாக இருக்கிறதாகக் கூறி வந்தாலும் ஒரே ஒரு தோழி மட்டும் பிடிக்கவில்லை என்று கூறியிருந்தார். பரவாயில்லையே பிடிக்காத ஒருவரும் இருக்கிறாரே என்று தோன்றியது. படம் பார்த்தேன். எனக்கு அவ்வளவாக மனதைத் தொடவில்லை. படம் நன்றாக இல்லை என்று சொல்ல மாட்டேன். பெரும்பான்மையினருக்கு மிகவும் பிடிக்கவும் கூடும். ஆனால் என்னைப் போன்ற சிலருக்குப் பிடிக்காமல் போகும் வாய்ப்பும் இருக்கிறது. எனக்கு அவ்வளவாகப் பிடிக்காமல் போனதன் காரணம் என்ன ? ஒரு படம் மிகவும் சிறந்த கதை, திரைக்கதை, வசனங்களால் நிரப்பப்பட்டிருக்கலாம். ஆனால் கதை, அதிலிருக்கும் கதை மாந்தர்கள், அவர்களை சித்தரித்த விதம் போன்ற சில காரணங்களால்தான் ஒரு படம் பிடித்து விடும் படம் மிகவும் மெதுவாக நகர்ந்தாலும், பொறுமையை சோதித்தாலும் கூட. ஆனால் எல்லாமே சிறப்பாக இருந்தாலும் மிகப்பெரிய வெற்றி பெற்றாலும் கூட நமக்குப் பிடிக்காமல் போகும். தோல்வியடைந்த உத்தம வில்லன் படம் கமல் ரசிகர்களில் ஒரு தரப்பினரால் மிகவும் ரசிக்கப்பட்டது. பாலா படங்கள் என்றால் ஒரு சிலர் வெறுப்பது மாதிரி உதாரணம் சொல்லலாம்.

சரி ப்ரேமம் படம் எதைப் பற்றியது. ஒரு இளைஞனின் மூன்று பருவங்களில் வந்த காதல்கள் பற்றியது.  ஜோசப் என்ற ஆணின் வாழ்வில் வரும் காதல்- அவனால காதலிக்கப்படுவதாக வருகின்ற மேரி, மலர் மற்றும் செலின் ஆகிய மூன்று பெண்கள். அவன் பள்ளி மாணவனாக இருக்கும் போதும், கல்லூரியில் இருக்கும் போதும், பின்பு முப்பது வயதில் பணியிலிருக்கும்போதும் வரும் காதல், ஈர்ப்பு பற்றிய கதையை மிகவும் சுவையாகச் சொல்லியிருக்கிறார்கள். மலையாளத்தின் சிறந்த இளம் நடிகரான நிவின் பாலிதான் நாயகன். இந்த மூன்று பருவக் கதை என்றாலே நமக்கு ஆட்டொகிராஃப் நினைவுக்கு வரும். இன்னும் பல படங்கள் தமிழில் வந்திருக்கின்றன. அட்டக் கத்தி படம் போலவும் இருந்ததாக சிலர் கூறினார்கள். நான் அந்தப் படம் பார்க்கவில்லை. 

மூன்று பருவக் காதல் கதையில் மூன்று அழகான பெண்கள் வருகின்றார்கள். இது போதாதா நம் இளைஞர்களுக்கு நடக்கறத அப்படியே காட்டிருக்காங்கடா என்று உருகுகிறார்கள். அதில் அவன் கல்லூரிப் பருவக் காதலியாக வருகிறவர் ஒரு தமிழ்ப் பெண் (படத்திலும் தமிழ்ப்பெண்ணாகவே). படத்தில் அவரது பெயர் மலர். நம் தமிழ்நாட்டு விடலைகள், வாலிபங்கள் ப்ரேமம் படத்தைக் கொண்டாடுவதற்கும், மலர் மிஸ், மலர் மிஸ் என்று கசிந்துருகுவதற்கும், மலரே நின்னைக் காணாதிருந்நால் பாடலை முதல் வரியை மட்டும் முக்கி முக்கி முணுமுணுப்பதற்கும், திரும்பத் திரும்ப படத்தை பார்த்துத் தீர்ப்பதற்கும் காரணம் மலர் ஆக வரும் சாய் பல்லவிதான் காரணம். சாய் பல்லவியின் இயல்பான நடிப்பும், நடனமும் அற்புதம். இந்தக் கல்லூரிக் காதல் பருவக் காட்சிகள், மலரை மயமாகக் கொண்ட காட்சிகளில் தமிழில்தான் வசனம் வருகிறது. அது போக இரண்டு தமிழ்ப்பாடல்கள் இருக்கின்றன. இதெல்லாம் சேர்ந்து தமிழ் ரசிகர்களிடம் இந்தப்படத்தை ரசிக்க வைத்திருக்கிறது. 

இது வரை மலையாள நடிகைகளே கனவுக் கன்னிகளாக இருக்கின்றார்கள் தமிழ்நாட்டில். பெரும்பான்மை நடிகைகளாவும், கதாநாயகிகளாகவும் இருப்பவர்கள் மலையாளிகளே. போதாக்குறைக்கு நடிகர்களும் ஒருபாடு மலையாளிகளே. இப்படி இருக்கையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு பெண் தமிழ்ப்படத்தில் நடிகையாக வெற்றி பெறுவதே நடக்காது. இந்நிலையில் மலையாளப்படத்தில் நடித்து மலையாளிகளை மலரே மலரே என்று ஏங்க வைத்த இயக்குநருக்கு நன்றி. இதே சாய் பல்லவி தமிழில் நடித்திருந்தால் கதாநாயகனுக்கு தங்கையாகவோ, இரண்டாவது கதாநாயகியாகவோ நடித்து நாசமாகப் போயிருப்பார். மலையாளப் படத்தில் நடித்ததால் சொல்லிக் கொள்ளும்படி ஒரு படம் கிடைத்தது. இதற்கு மகிழ்கிறேன். 

படத்தின் கதை 2002- இல் பள்ளிப்படிப்பும் 2005 - இல் கல்லூரிப் படிப்பும் முடித்த ஒரு இளைஞனின் கதை. அதாவது பத்து/15 வருடங்களுக்கு முன்னர் நடந்ததிலிருந்து காட்டுகிறார்கள். பள்ளிப்பருவக் கதையில் வரும் பள்ளி மாணவி மேரி. புட்டுக் கன்னமும், கேரளத்திற்கே உரித்தான பரந்த கருங்கூந்தலும் இவரது அழகின் சிறப்பம்சம். அவளைக் காதலிக்கும் பத்துக்கணக்கான மாணவர்கள். அதில் ஒருவனாக நம் நாயகன் ஜோசப். அந்தக் காதல் புட்டுக் கொள்கிறது. இந்தக் காட்சிகள் அழகான நகைச்சுவை. மலையாளம் தெரிந்தால் வேகமாக பேசிச் செல்லும் நகைச்சுவை நறுக்குகளைப் புரிந்து அள்ளிப் பருகலாம் சிரித்து மாயலாம். பச்சை நிற பின்புலமும், பட்டாம் பூச்சிகளும் கண்களுக்குத் தெவிட்டாத இன்பம், இசை செவிக்கு இன்பம். 

அடுத்து கல்லூரிக் காதல் காட்சிகள், மலரின் வருகை, காதல், இனிய பாடல், கல்லூரிச் சண்டைகள், படத்தின் மிகச்சிறந்த காதல் காட்சிகள், பாடல்கள், நகைச்சுவைக்காட்சிகள் இதில் வருகின்றன. இதில் எனக்குப் பிடித்த ஒரு கதாபாத்திரம், விமல் சார்- ஆக வரும் கல்லூரி விரிவுரையாளர். காஞ்சனா - 2 கோவை சரளாவுக்குப்பிறகு என்னைத் தொண்டை வலிக்கச் சிரிக்க வைத்தவர் இவரே. இங்கே முற்றிலும் சாய் பல்லவியின் ஆதிக்கம். இவர் மிகவும் சிறிய பெண்ணாக இருக்கிறார். இவரை பள்ளி மாணவியாக நடிக்க வைத்திருக்கலாமோ என்ற உலக யோசனையும் தோன்றியது. முகப்பருவும் சிரிப்பும் இவரது சிறப்பு. நடிப்போ அதனினும் சிறப்பு. 

விமல் சார்
ஒரு பெண் எப்போது அழகாக இருப்பாள் ?. காலையில் குளித்து விட்டு கோயிலுக்கு, பள்ளிக்கு, கல்லூரிக்கு, பேருந்துக்குக் காத்திருக்கும்போதோ, அல்லது பணியிடத்துக்குச் செல்லும் போதுதான். இல்லையென்றால் ஒப்பனையில்லாத மற்ற சராசரி நாட்களிலும்தானே. ஒரு பெண் எப்போது அழகாக இருக்கமாட்டாள் என்றால் அவளது திருமணத்தின் போது போடப்படும் ஒப்பனையினால்தான். பெண்களை அவர்களாகவே காட்டினால்தான் எவ்வளவு அழகு. கிறுக்குகளாகவும், அசடுகளாகவும், "ஹலோ" என்ற வசனத்தை எல்லாப் படங்களிலும் பேசும், சற்றும் பொருந்தாத நவீன உடைகளும், அவிழ்த்து விட்ட கூந்தலை தேவையே இல்லாமல் காதோரம் ஒதுக்கி விட்டுக் கொண்டு பேசும் தமிழ்ப்பட தவளைகள் நினைவுக்கு வருகிறார்கள். அதனால் மலையாளப் படத்தில் வரும் பெண்கள் இயல்பாக அழகாக இருக்கிறார்கள். ப்ரேமத்தின் மலரும் அப்படியே. 

அடுத்ததாக 30 வயதான ஜோசப் ஒரு கேக் கடையில் வேலை செய்கிறான். அங்கே வரும் ஒரு பெண்ணுடன் ஏற்படும் நட்பு, ஈர்ப்பு. பின்பு அந்த உறவும் உடையும் நிலையில் இறுதியில் அவன் யாரை மணக்கிறான் என்பதெல்லாம் சுவையான திருப்பங்கள். இந்த மூன்று பருவக் காதல்கள்தான் ப்ரேமம்.

இந்தப் படம் எனக்கு ஏன் பிடிக்கவில்லை என்று சொல்கிறேன். சில வருடங்களாகத் தமிழ்ப்படங்களில் முகச்சவரம் கூட செய்யாமல் இருக்கும் பொறுக்கிகளையே கதாநாயகனாகக் காட்டுகிறார்கள். அவனைக் காதலிப்பதற்கென்றே கதாநாயகி என்ற ஒரு பாத்திரம் வருகிறது. அடுத்த சீர்கேடாக தொடர்ந்து குடிக்கும் காட்சிகளும், சாராயக்கடையில் போதையைப் போற்றிப் பாடும் குத்துப்பாடல்களும் இருக்கின்றன. அடுத்ததாக எந்தவொரு அடிப்படையும் இல்லாம பெண்களை விமர்சித்துப் பாடப்படும் காதல் தோல்விப் பாடல்கள். இவையெல்லாம் என்னால் அறவே ஏற்றுக்கொள்ளாத விடயங்கள் இவை மூன்றுமே ப்ரேமம் படத்திலிருக்கின்றன. 

கல்லூரி விடுதியில்/ நண்பர்களது அறையில் எப்போதும் குடித்துக் கொண்டும் ஊதிக் கொண்டும் இருக்கிறார்கள். இடையிடையே மாணவர்கள் குழுச்சண்டையிலும் (Cangwar) ஈடுபடுகிறார்கள். அது முறுக்கேற்றும் பின்னணிப் பாடலுடன் நாயகத்தனமாகக் காட்டப்படுகிறது. ரசிகர்கள் பூரிக்கிறார்கள். முதல் வருட இளைய மாணவர்கள் கல்லூரிக்கு முதல்நாளில் வரும்போது பகடி வதை(Ragging) செய்கிறார்கள். நாயகனே இவையனைத்தையும் முன்னின்று செய்கிறான். அவனுக்கு மலரின் அறிமுகமே இந்தப் பகடி வதையின் போதுதான் நிகழ்கிறது. போதாக்குறைக்கு வகுப்பிலேயே குடித்து விட்டு வந்தமர்கிறார்கள். மிகவும் தெளிவானவராகவும், பக்குவமானவராகக் காட்டப்படும் மலர் இந்தப் பொறுக்கியிடம் காரணமே இல்லாமல் காதல் வயப்படுகிறார். அதுவும் குடிபோதையில் "நீங்க ரொம்ப அழகாக இருக்கிறீர்கள்" என்று சொல்லிவிட்டு விழுந்து விடுகிறான். அவ்வளவுதான் மலருக்கு மலர்கிறது காதல். இதைத்தான் என்னால் ஏற்க முடியவில்லை. ஒரு மலையாளப்படம் தமிழ்ப்படத்தளவுக்கு தாழ்ந்து விட்டதா ? 
பொறுக்கித்தனம் ரசனைக்குரியதல்ல
எப்படி மாணவர்களுக்கு இளைஞர்களுக்கும் அந்த வயதில் பீடி, சிகரெட், சரக்கு, கஞ்சா பழக்கங்கள், முரட்டுத்தனம் போன்றவை நாயகத்தனமாக இருக்கிறதோ, அது போலவே காதலும் இருக்கிறது. அது இயல்பான காதலாக இல்லை, ஒரு பெண்ணை கரெக்ட் செய்யும் வீரமாகவே செய்கிறார்கள். இப்படித்தான் இந்தப் படத்திலும் காட்டியிருக்கிறார்கள். இந்தப் படத்தில் காட்டப்படும் ஜோசப்பின் வயதில்தான் நானும் பள்ளி, கல்லூரி படித்தேன். என்னுடன் படித்த நண்பர்களை இந்தப் படம் நினைவூட்டியது. அவர்களும் இவர்களைப் போலத்தான் திரிந்தார்கள். அதையெல்லாம் இனிய போழுதுபோக்காக என்னால் கருத முடியவில்லை. தாங்கமாட்டாத எரிச்சலுடன்தான் அவர்களுடனெல்லாம் கழிக்க வேண்டி வந்தது. அதையெல்லாம் படத்தில் காட்டினாலும் எனக்குப் பிடிப்பதில்லை. மற்றபடிக்கு படம் குப்பை என்றெல்லாம் சொல்ல வில்லை. எனக்கு இது மாதிரியான காட்சியமைப்புகளில் உடன்பாடில்லை. அதை ரசிக்கும் மனநிலை எனக்கு இல்லை. நாயகன் என்றால் என்ன செய்தாலும் சரியாகாது. என்னுடைய உறுத்தல் இது மட்டுமே. மற்றபடிக்கு படம் எல்லோரும் ரசிக்கும்படிதான் இருக்கிறது. 

இந்தப் படத்தை தமிழில்/தெலுங்கில் எடுக்கக் கூடாது என்று சமூக வலைத்தளங்களில், மீம் (meme) போராளிகள் கூவி வருகின்றனர். மலையாளப்படம் தமிழிலோ அல்லது தெலுங்கிலோ எடுத்தால் அதைக் குதறிக் கொன்றுவிடுவார்கள் தமிழ் தெலுங்கு இயக்குநர்கள் என்பது உண்மைதான். இருந்தாலும் மலையாள வெற்றிப்படங்களை நம்பித்தான் தமிழகத்தின் எல்லா நடிகர்களுமே தமது சரிந்த சந்தையைத் தூக்கி நிறுத்திக் கொண்டிருக்கிறார்கள். காலங்காலமாக மலையாளப்படக் கதைகள்தான் தமிழ்நாட்டின் பல நாயக பிம்பங்களை விழுந்துவிடாமல் காத்து வருகின்றன. எல்லாவகை நடிகர்களுக்குமான கதைகள் அங்கே உருவாகின்றன. அதைக் காசு கொடுத்து வாங்கித்தான் பல நட்சத்திரங்கள் இங்கே மின்னுவதைப் போலக் காட்டிக் கொண்டிருக்கின்றன. 

அதே நேரம், How Old Are You ? படத்தை தமிழில் எடுக்காவிட்டால் எத்தனை பேர் அந்தப் படத்தை பார்க்கும் வாய்ப்பு பெற்றிருப்பார்கள். ப்ரேமம் ஒன்றும் தமிழில் எடுக்கக் கூடாத அளவுக்கு புனிதமான படமில்லை. மாதம் ஒரு அற்புதமான படத்தை மலையாளிகள் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். நமக்கு அதெல்லாம் காண்பதற்கு நல்வாய்ப்பு இல்லை. அவைகளுடன் ஒப்பிடும்போது ப்ரேம் பத்தோடு பதினொன்றுதான். மலையாளப்படம் என்றாலே பலான படம் என்றளவுக்கு தெரிந்து வைத்திருந்த தமிழ்த் தவளைகள் இப்போதுதான் விழிக்கத் தொடங்கியிருக்கின்றன. கடைசியாக ஷகிலாவின் கிண்ணாரத் தும்பிகள் பார்த்துவிட்டுத் தூங்கியவை, ப்ரேமம் பார்த்து விட்டு தமிழ் ப்ரேமம் வேண்டாம் என்கின்றன. அதே நேரம் நிவின் பாலிக்குப் பதிலாக நம்ம தமிழ் நடிகர்களை இதில் என்னால் நினைத்துப் பார்க்கவும் முடியவில்லை. 
Download As PDF
Bookmark and Share

Post Comment

எனதுடலை எரியூட்டுங்கள் - "BURN MY BODY" - மலையாளக் குறும்படம்



இறந்தாலும் அவர்களுக்குப் பிரச்சனை தீராது.  உடைகளோ நடைகளோ, நடத்தைகளோ காரணமில்லை. காரணம் அவர்களே அல்ல. நீங்கள்தான்




Download As PDF
Bookmark and Share

Post Comment

பெண்களுக்கான ஒரு படம், ஆண்களுக்கான, அனைவருக்குமான ஒரு பாடம் - How old are you

ஏதாவது ஒரு மலையாளப்படம் தமிழில் மறுஉருவாக்கம் (remak) செய்யப்படுகிறது என்று கேள்விப்பட்டால், முடிந்தவரை அதை உடனே பார்த்துவிடுவேன். இல்லையெனில் தமிழில் பார்க்க நேரிட்டால் மலையாளப் படத்தின் உயிர்ப்பு நமக்குக் கிடைக்காது என்ற எண்ணம்தான். சந்திரமுகி படம் பார்த்த மலையாளிகளுக்குத் தெரியும். போக்கிரி பார்த்த தெலுங்கர்களுக்குத் தெரியும். ஓரளவுக்கு மலையாளமும் தெரியும் என்பதால் 90% வசனங்களும் புரிந்து விடும்.  இதுதான் (How old are you) தமிழில் 36 வயதினிலே என்று வரப்போகிறது என்று அறிந்தவுடன் முன்பே அதைப்பார்த்து விடவேண்டும் என்று பார்த்து விட்டேன்.


இந்தப் படமும் இங்க்லிஷ் விங்கிலிஷ் போன்றதொரு பெண்ணைச் சுற்றி நடக்கும் கதைதான். பெண்களின் பார்வையில் எடுக்கப்பட்ட படமும் ஆகும். இங்க்லிஷ் விங்க்லிஷ் படத்தில் ஒரு வேலைக்குப் போகாத இல்லத்தரசி என்றால் இதில் வேலைக்குப் போகும் இல்லத்தரசி. அதே புரிந்து கொள்ளாத கணவன், மறுக்கப்பட்ட வாய்ப்புகள்,  தொடரும் கணவன், குழந்தைகளின் கிண்டல்கள் இறுதியில் அவளது திறமையால் அனைவரது முன்னிலையில் உயர்ந்து நிற்கிறாள் என்று முடியும் கதை.

பெண்களுக்கு மிகவும் பிடிக்கும். ஆண்களுக்கும் பிடிக்கும்,  படத்தின் சில இடங்களில் தங்களையே அந்த இடத்தில் வைத்துப் பார்ப்பார்கள். எனக்கு அப்படித்தான் இருந்தது. ஆண்கள் தங்கள் வசதிக்காக ஆண்/கணவன் என்ற காரணத்தினால் பெண்களை எப்படி பயன்படுத்திக் கொள்கிறார்கள், அவளது ஆசைகள் எளிதாக நிராகரித்து அவளை முடக்குகிறார்கள் என்று வெவ்வேறு வழிகளில் யோசித்தால் புரிந்து கொள்ளலாம்.

படத்தின் ஆரம்பக் காட்சி ஒரு நேர்காணலில் தொடங்குகிறது. அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த INIRISH -  நிறுவனத்தின்  அதிகாரி கேட்கும் முதல்வசனத்துடன் ஆரம்பிக்கிறது. அந்தக் கேள்விதான் "How old are you ?"


அதன் பின்புதான் நாயகியின் (மஞ்சு வாரியர்) முகம் காட்டப்படுகிறது. 36 என்று பதிலளிக்கிறாள். தமது நிறுவனத்தில் வேலை செய்ய வயது வரம்பு 35 தான் என்று அவள் நிராகரிக்கப்படுகிறாள். தான் ஒரு வருடம் மட்டுமே அதிகமான வயதுடையவள் என்று வாதிடுகிறாள். கணவன் மட்டுமே வேலைக்குச் சென்று மூன்று பேர் கொண்ட தனது குடும்பத்தால் சமாளிக்க முடியாது என்றும் கூறுகிறாள். அவளது நிலை தனக்குப் புரிந்தாலும் தன்னால் ஏதும் செய்ய முடியாது என்று அந்த அதிகாரி கைவிரித்து விடுகிறார்.

இதற்கிடையில் காவல்துறை நிருபாமாவின் செல்பேசி அழைப்புகளை ஒட்டுக்கேட்கிறது. அவள் குறித்த விவரங்களை ரகசியமாக அவள் வேலை செய்யும் சார்பதிவாளர் அலுவலகம் வரை சென்று சேகரிக்கிறது.

அவளது கணவன் ராஜீவ் ஒரு சிறுவனின் மீது தனது வண்டியில் மோதி விடுகிறான். அதனால் அவன் மீது வழக்கு போட்டு விடுகிறார்கள். அவன்  இரு ஆண்டுகள் தேடிப் பிடித்த வேலைக்காக அயர்லாந்து செல்ல வேண்டும். எனவே ராஜீவ் இரண்டு நாட்களில் தனது வசிப்பிடஉரிமம்(Visa) தொடர்பான நேர்காணலுக்காக சென்னை செல்ல வேண்டியிருப்பதால், அவ்வழக்கு விசாரணையிலிருந்து எப்படியாவது தப்பிவிட வேண்டுமென்று தனக்குத் தெரிந்த காவலரிடம் கூறுகிறான். ராஜீவின் மனைவி நிருபமா (மஞ்சு வாரியர்) ஓட்டுநர் உரிமம் வைத்திருக்கிறாளா என்று கேட்கிறார் காவலரான நண்பர்.

பின்பு ராஜீவ் தனது மனைவியிடம் வந்து நடந்த விபத்து குறித்தும், அயர்லாந்து நேர்காணல் குறித்தும் கூறுகிறான். பணம் கட்டினால் போதும் என்றும் கூறுகிறான். நிருபமா - நான்தான் வண்டியை ஓட்டினேன் என்று கூறிவிடலாம என்று கேட்கிறாள். அதற்காகவே காத்திருந்த ராஜீவ் அதற்கு சம்மதிக்கிறான். அதை தனது காவலர் நண்பரிடம் சொல்கிறான். பின்பு இருவரும் அடுத்த நாள் போக்குவரத்துக் காவல் அலுவலகம் செல்கின்றனர்.


அங்கே போக்குவரத்துக் காவலரிடம் நிருபமாவின் ஓட்டுநர் உரிமம் கலாவதியானது தெரியவருகிறது. தண்டனை நிச்சயம் என்று அச்சுறுத்துகிறார் அந்த அதிகாரி. இதனால் ராஜீவுக்கும் நிருபமாவுக்கும் இடையில் விவாதம் நடக்கிறது இல்லம் திரும்புகையில். இவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போது இடையிடையே கைபேசி சிணுங்கிக் கொண்டே இருக்கிறது. விவாதத்தின்போது சிணுங்கிக் கொண்டே இருப்பதால் அதை எடுத்துத் தொலை என்று எரிச்சலாகிக் கத்துகிறான் ராஜீவ். அந்த அழைப்பில் வந்த தகவல் மற்ற நாள் காலை 10 மணிக்கு காவல்துறை ஆணயர் அலுவலத்தில் ஆஜராக வேண்டும் என்று கட்டளை வந்திருப்பதாகக் கூறுகிறாள்.

அங்கே அவளுக்கு இன்ப அதிர்ச்சி காத்திருக்கிறது. அது என்ன ? அதைப் படத்தில் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். அதுவே அதன் மதிப்பாகும். நான் இங்கேயே எழுதி விட்டால் அதன் #களிநயம்(interst) குன்றி விடும். அதற்குப் பிறகு நடக்கும் காட்சிகள் இனிமையோ இனிமை. தொடர் கேலிகளாலும், சலிப்பூட்டும் வாழ்க்கையிலும் அல்லற்படும் ஒரு பெண் எப்படி தன்னைத் தானே உயரத்தில் வைக்கிறாள். ஒரு விழிப்புணர்வையும் புத்துணர்வையும் ஊட்டுகிறாள் என்பதே படம். இதன் இயக்குநர் ஒரு ஆண் என்பது ஒரு இனிய முரண்நகை.

படத்தின் சிறப்பம்சங்களாக,

நிருபாவின் மெலிய நகைச்சுவையூட்டும் நடத்தைகள், புறக்கணிப்புகள் பின்பு அதை எதிர்கொள்ளும் விதம் குறிப்பாக ஃபேஸ்புக்கில் தனது பெயரில் பரவியிருக்கும் நகைச்சுவைத் துணுக்குகளுக்கு நிருபமா பதிலளிப்பது

நிருபமாவின் வளரிளம் பருவத்து மகளுடனான உரையாடல்களில் எப்போதும் எடுத்தெரிந்து பேசுவதும், எள்ளி நகையாடுவதும், ஆத்திரமடைந்து பேசாமலிருக்கும்போதும் காணும் நிருபமாதான் நாம் நித்தமும் எடுபிடி வேலைக்குப் பயன்படுத்தி அவர்களை மட்டம் தட்டும் நம்முடைய அம்மாக்கள்.

கல்லூரியில் படிக்கும் போதிலிருந்தே கொஞ்சம் வயதானவர்களை பெருசு என்றும் அங்கிள் ஆன்ட்டி என்றும் கிண்டலடிக்கும் கீழ்த்தரமான ஒரு செயல்பாடு எல்லாவிடங்களிலும் நிரவியிருக்கிறது. கொஞ்சம் வயதானவர்கள் எனில் 20 வயது கல்லூரிமாணவன், 25 வயதுப் பட்டதாரியை பெருசு என்பான், 25 வயதில் வேலை செய்கிறவன், 30 வயதான மூத்தவனை அங்கிள் என்பான். 30 வயதுக்காரன் 35 வயதான் மேலாளரை கெழவன்/கெழவி என்று பழிப்பார்களல்லவா ? அதையும் இந்தப் படத்தில் சிறிய அளவில் காட்சிப்படுத்தியிருக்கிறார்கள்.

40 வயதிலும் வாழ்க்கை இருக்கிறது. துவண்டு போகாமல் சாதிக்க முடியும் என்று ஊக்கப்படுத்துகிறார்கள்.

முக்கியமாக இந்தப் படம் சொல்லும் செய்தி, செயற்கை மருந்துகள் கொண்டும், பூச்சிக்கொல்லிகள் கொண்டும், இரசாயங்கள் செலுத்தியும் விற்கப்படும் காய்கறிகளுக்கு எதிராகப் பேசுகிறது. இயற்கை முறையில் தயாரிக்கும் காய்கறிகள், பழங்களை ஏற்றிப் போற்றி அதற்காக நம்மை மாற்றச் சொல்கிறது.

இங்கே நாயகர்கள் எனப்படும் நடிக்கவே தெரியாத நடிகர்கள் படத்தி வீர வசனம் பேசிவிட்டு, விளம்பரங்களில் இயற்கைக்கு எதிரான குளிர்பானத்தின் தூதுவர்களாக விளக்குப் பிடிப்பதையும் ஒப்பிட்டுப் பார்த்தால், புரியும். ஒரு பெண்ணை முதன்மை பாத்திரமாக வைத்து நெடுந்தொடர்களை போன்ற காட்சிகளையும் வைத்தே இது போன்றதொரு திரைப்படம் எடுக்க முடியும் என்பதே சிலிர்ப்பாக இருக்கிறது. இது போன்ற படங்களினால்தான் எனக்கு மலையாளப் படங்களின் மீதான மதிப்பு எப்போதும் குறைவதே இல்லை.

தவற விடக்கூடாத படங்களில் ஒன்று.
Download As PDF
Bookmark and Share

Post Comment