எனக்கு இசையைத் திறனாய்வு செய்யுமளவுக்கு பேரறிவெல்லாம் இல்லை. எனக்குப் பிடித்த பாடல்கள் அல்லது இசை ஆகியவற்றை நான் நேசிக்கிறேன். அதை எல்லோரும் என்னைப்போலவே ரசிக்க வேண்டும் என்ற நப்பாசையெல்லாம் எனக்கில்லை. குறிப்பிட்ட இசையமைப்பாளரின் பாடலைக் கேட்டால் உணர்வுப்பூர்வமாக இனிமையாக இருக்கும். ஒவ்வொருவருக்கும் ஒருவரிருப்பார். எனக்கு இளையராஜா. நான் எல்லோருடைய இசையையும் கேட்பது வழக்கம். இன்னாரின் இசையமைப்பில் வெளிவந்த பாடல் என்று அதை வெறுப்பது கிடையாது. பரத்வாஜ், வித்யாசாகர் ஆகியோரும் பிடித்தவர்கள்.
தற்போதுதான் நீதானே என் பொன் வச்ந்தம் பாடல்கள் கேட்டேன். இரண்டு பாடல்கள் நான் எதிர்பார்த்தபடியும் வழக்கமாக நான் விரும்பும் பாடல்களைப் போலவும் இருந்தது. பெண்கள் என்றால் பொய்யா வகைப் பாடல்களையெல்லாம் நான் எப்போதும் விரும்புவது இல்லை, கருத்திலும் சரி இசையிலும் சரி. பலரும் பாடல்கள் எதிர்பார்த்தபடி இல்லை என்று சொல்லி விட்டார்கள்.
நீதானே என் பொன்வசந்தம் பாடல்கள் நான் எதிர்பார்த்தபடிதான் இருந்தது. இதில் போதாமை என்று கருதினால் இளையராஜாவின் காலத்தை வென்ற சில பாடல்களைக் கொண்டு இதனுடன் ஒப்பிட்டால் அப்படித்தான் தோன்றும். அதே நேரம் இளையராஜா தான் இசையமைக்கும் ஒவ்வொரு படங்களிலும் ஒரிரு பாடல்களை நான் மிகவும் விரும்பிக் கேட்பதுண்டு. மற்ற பாடல்கள் படத்தின் காட்சிக்குத் தோதாக அமைக்கப்பட்டிருக்கும்.
நாம் இசையைத் திரைப்படத்தின் வாயிலாகவே கேட்கிறோம். உண்மையில் இசை என்பதே திரைப்படங்களுக்கு உயிர் கொடுப்பவை. திரைப்படங்கள் என்பவை பெரும்பாலும் வணிக ரீதியிலானவை. ரசிகனுக்கு அலுப்புத் தட்டக்கூடாது என்பதற்காக சொல்ல வந்ததை நேரடியாகச் சொல்லாமல், சண்டைக்காட்சிகள், நகைச்சுவைக் காட்சிகள் பாடல் காட்சிகள் என நவரசமத் துண்டுகள் சேர்க்கப்பட்டு, மசாலாவாகப் பரிமாறப்படுகிறது. இது போன்ற பல அற்பமான படங்களின் துணையாகவே இசை இருக்கிறது. அதையே நாம் கேட்க முடிகிறது. எல்லாக் கலைஞர்களும் பாடலாசிரியர்கள், கதை ஆசிரியர்கள் என அனைவருமே மசாலா திரைப்படங்களுக்காக தமது தனித்தன்மைய விட்டு வணிகத் திரைப்படத்திற்குத் தேவையானதைத் தர வேண்டியுள்ளது. அக்குறிப்பிட்ட வட்டத்துக்குள் தமது திறமையை வெளிக்காட்ட வேண்டியுள்ளது.
இப்படியான பல நூற்றுக்கணக்கான திரைப்படங்களுக்கு இசையமைத்த இளையராஜா அப்படங்கள் மறந்து போனாலும் பாடல்கள் இன்னும் நிற்கின்றன. ரஹ்மானும் வேதனைப்பட்டார் ஒரு முறை இசை என்றாலே திரைப்படங்கள் மட்டும்தானா என்று. வெளிநாடுகளில் இசைக்கென்று ஒரு தனி இண்டஸ்ட்ரியே இருக்கிறது என்று யுவன் சொன்னார். அது உண்மைதான் வெளிநாடுகளில்தான் இசைக்கலைஞர்களுக்கு தனி ஒளி வட்டம் இருக்கிறது. அது கொஞ்சம் அதிகம்தானென்றாலும், ஆட்டுவிக்கப்படும் பொம்மை நடிகர்களுக்கிருக்கும் புகழை விட அது பொய்யானதில்லை. ரஹ்மானுக்கு ஆஸ்கர் கிடைத்ததால்தான் அவர் சிறந்த இசையமைப்பாளர் என்பது இசையை இழிவு படுத்துவதாகும். ஆஸ்கர் என்பவை அமெரிக்க ஹாலிவுட் படங்களுக்கு கொடுக்கப்படும் விருது மட்டுமே. ஒரிரு வெளிநாட்டுப்படங்களுக்கும் கொடுப்பார்கள். அது அமெரிக்காவின் விருது என்பதால் மட்டும் அது பெரிதாகப் புகழப்படுகிறது. ரஹ்மான் சிறந்த இசையமைப்பாளர் ஆனால் ஆஸ்கர் என்பது அதற்குரிய அங்கீகாரமல்ல. நடிகர்களுக்கு அதிகமான புகழ் நிறைந்த இந்தியாவில் ரஹ்மான் மட்டுமே நடிகரல்லாமல் அதிகம் பேரை கவர்ந்த கலைஞராக இருக்கிறார்.
ஒருவரைப் பிடிக்கிறது என்பதற்காக மற்றவரை மட்டம் தட்டி அவரை விட இவர் சிறந்தவர் என்ற சண்டைக்கெல்லாம் நான் போவதில்லை. இளையராஜாவின் இசை எனக்குத் தனித்துவமாகத் தெரிகிறது அவ்வளவே.
இளையராஜா பழைய அளவுக்கு இசையமைப்பதில்லை, சரக்கு தீர்ந்து விட்டது என்று சொல்வதையும் நான் ஏற்கவில்லை. அவரது முத்திரையை அவ்வப்போது அவர் பதித்துதான் வருகிறார். 80 களில் இருந்த இசை வேறு, 90 களில் வேறு 2000 களில் வேறு தற்போது வேறு. இசை திரைப்படத்தைச் சார்ந்துதான் வெளியாகிறது. திரைப்படங்களைப் பொறுத்தும் இசையின் தன்மை மாறுபடுகிறது. வேகமாக வந்து போகும் காலத்தில் தாம் தூமென்று தட்டிப் போட்டால்தான் இசை இப்போது இறக்குமதியாகும் ஒரு மாதம் முடியும் முன்பு மறக்கப்பட்டு காற்றில் போய்விடும். இங்குதான் இளையராஜாவின் சரக்கு விற்பனையாவதில்லை. அதனால் அது தாழ்ந்தது என்று பொருளில்லை.
அன்னக்கிளி உன்னைத் தேடுதே - அன்னக்கிளி - 1976 - ஒரு காலம்
நீதானே என் பொன்வசந்தம் - நினைவெல்லாம் நித்யா - 1982 - ஒரு காலம்
சுந்தரி கண்ணால் ஒரு சேதி - தளபதி - 1991 - ஒரு காலம்
இளங்காத்து வீசுதே - பிதாமகன் - 2003 - ஒரு காலம்
என்னோடு வா வா - நீதானே என் பொன்வசந்தம் - 2012 - ஒரு காலம்
இதில் என்னைத் தாலாட்ட வருவாளா என்ற பாடல்தான் எனக்குத் தெரிந்து நீண்ட நாட்களாக விரும்பிக் கேட்கப்பட்டது.
இளையராஜாவின் பழைய சாதனைகளுடன் ஒப்பிடும்போது இது நிறைவில்லை என்றாலும் எனக்கு பெரிய குறையொன்றுமில்லை. இதற்கு முன்பு நான் கேட்ட பாடல்கள் படத்திற்கு ஒன்று வீதம் என்னைக் கவர்ந்தது.
நண்பர்களுடன் FM கேட்டுக் கொண்டிருந்த போது தில் படத்திலிருந்து உன் சமையலறையில் நான் உப்பா சர்க்கரையா - பாடல் போட்டார்கள். அதைக்கேட்ட நண்பர்கள் இதைக் கேட்டாலே எரிச்சல் வருகிறது என்றார்கள். அது எனக்கு மிகவும் பிடித்த பாடல், கவிதையைப் போன்று எழுதப்பட்டது. இப்படிச் சொன்னவுடன் எனக்கு எரிச்சலே வந்து விட்டது இவர்களுக்கெல்லாம் ரசனையே இல்லை என்று. அவர்களோ "முப்பொழுதும் உன் கற்பனைகள்" பாடல் வரிகளை மிகவும் சிலாகித்துப் பேசிக் கொண்டிருந்தார்கள். அது எனக்குக் கொஞ்சம் கூட ஒட்ட வில்லை. இசை அவரவர் விருப்பம் சார்ந்தது.
எந்த இசை உங்களை மயக்குகிறதோ அதில் கரையுங்கள். நானும் அப்படியே எனக்கு இளையராஜாவின் இசை. பவதாரிணி, சுஜாதா, ஷ்ரேயா கோஷல் போன்றோரின் குரல்வளத்துக்கு நானடிமை.
நீதானே என் பொன்வசந்தம் படத்தில் எனக்கு பிடித்த பாடல்கள்.
என்னோடு வா வா .
வானம் மெல்லக் கீழிறங்கி வந்ததே